அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்) அவர்கள்‌ மீது ஸலவாத்தும்‌ ஸலாமும்‌ கூறுவது

நபி (ஸல்) அவர்களுக்கு அளிக்கவேண்டிய உரிமைகளில்‌ ஒன்றான ஸலவாத்தையும்‌, ஸலாமையும்‌ அவர்கள்‌ மீது கூற வேண்டும்‌ என அல்லாஹ்‌ கட்டளையிடுகிறான்‌.

நிச்சயமாக அல்லாஹ்வும்‌, அவனுடைய மலக்குகளும்‌ நபியின்‌ மீது ஸலவாத்து கூறுகிறார்கள்‌. (ஆகவே விசுவாசிகளே) நீங்கள்‌ அவர்‌ மீது ஸலவாத்துச்‌ சொல்லுங்கள்‌, ஸலாமும்‌ கூறுங்கள்‌. (33:56)

அல்லாஹ்‌ நபியின்‌ மீது ஸலவாத்‌ கூறுகிறான்‌ என்பது மலக்குகளிடம்‌ நபி (ஸல்) அவர்களை புகழ்ந்து கூறுவதையும்‌, மலக்குகள்‌ ஸலவாத்‌ கூறுவதென்பது நபி (ஸல்) அவர்களுக்காக துஆ செய்வதையும்‌, மனிதர்கள்‌ ஸலவாத்‌ கூறுவதென்பது நபி (ஸல்) அவர்களுக்காக பாவமன்னிப்பைத்‌ தேடுவதையும்‌ குறிக்கிறது. (‌ அறிவிப்பாளர்:‌ அபுல்‌ ஆலியா (ரலி), புஹாரி)

அல்லாஹ்‌ இந்த வசனத்தில்‌ தனது அடியாரும்‌ நபியுமான முஹம்மத் (ஸல்) அவர்களின்‌ அந்தஸ்தை உயர்ந்த இடத்தில்‌ தனக்கு நெருக்கமான மலக்குகளிடம்‌ புகழ்ந்து கூறுகிறான்‌. மேலும்‌ மலக்குகளும்‌ அவர்களுக்காக துஆ, செய்கிறார்கள்‌. இப்பூமியில்‌ உள்ளவர்களும்‌ நபி (ஸல்) அவர்கள்‌ மீது ஸலவாத்தும்‌, ஸலாமும்‌ கூற வேண்டும்‌ என அல்லாஹ்‌ கட்டளையிடுகிறான்‌.

ஆக, இவ்வாறாக அகிலமெங்கும்‌ உள்ளவர்கள்‌ ஒன்றிணைந்து நபி (ஸல்) அவர்களைப்‌ புகழ வேண்டும்‌ என்கிறான்‌.

ஸலாமைக்‌ கூறுங்கள்‌ என்றால்‌, இஸ்லாமிய முறையில்‌ ஸலாமை கூறுங்கள்‌ என்று பொருள்‌. நபி (ஸல்) அவர்கள்‌ மீது ஸலவாத்தைக்‌ கூறுவதாக இருந்தால்‌ ஸலவாத்தையும்‌, ஸலாமையும்‌ தனித்தனியாக கூறாமல்‌ இணைத்தே கூற வேண்டும்‌. ஏனெனில்‌ அல்லாஹ்‌ இந்த இரண்டையும்‌ இணைத்தே கூற வேண்டும்‌ என்கிறான்‌.

நபி (ஸல்) அவர்கள்‌ மீது ஸலவாத்‌ கூறும்‌ இடங்களை கவனித்தால்‌ அவற்றில்‌ சில இடங்களில்‌ கண்டிப்பாக கூற வேண்டும்‌ என்ற பொருளிலும்‌, சில இடங்களில்‌ வலியுறுத்தி சொல்லப்பட்ட சுன்னத்‌ என்ற பொருளிலும்‌ உள்ளது.

இப்னுல்‌ கய்யிம்‌ (ரஹ்) அவர்கள்‌, தனது ஜலாஹுல்‌ அஃப்ஹாம்‌ என்ற நூலில்‌ (பக்கம்‌ - 222, 223) நாற்பத்தோரு இடங்களில்‌ ஸலவாத்‌ சொல்ல வேண்டும்‌ என்று கூறுகிறார்கள்‌. அதில்‌ முதலாவதாக மிகவும்‌ வலியுறுத்திச்‌ சொல்லப்பட்ட இடமான கடைசி அத்தஹியாத்தின்‌ இருப்பில்‌. முஸ்லிம்கள்‌ தொழுகையின்‌ கடைசி இருப்பில்‌ ஸலவாத்‌ சொல்ல வேண்டும்‌ என்பதில்‌ ஒருமித்த கருத்தில்‌ இருக்கிறார்கள்‌. ஆனால்‌, அதைக்‌ கண்டிப்பாக ஓதியே ஆக வேண்டும்‌ என்பதில்‌ கருத்து வேறுபாடு கொண்டிருக்கின்றனர்‌. பிறகு குனூத்தின்‌ கடைசியில்‌, ஜும்‌ஆ, பெருநாள்‌, மழைத்‌ தொழுகை ஆகியவற்றின்‌ பிரசங்கங்களில்‌. மேலும்‌ பாங்கிற்குப்‌ பதில்‌ கூறும்போது, துஆ கேட்கும்‌ போது, மஸ்ஜிதில்‌ நுழையும்போது மற்றும்‌ வெளியேறும்போது நபி (ஸல்) அவர்களை நினைவு கூறும்போது ஆகிய இடங்களில்‌ ஸலவாத்‌ கூற வேண்டும்‌ எனக்‌ கூறுகிறார்கள்‌. பிறகு இப்னுல்‌ கய்யிம்‌ (ரஹ்) அவர்கள்‌ நபி (ஸல்) அவர்களின்‌ மீது ஸலவாத்‌ கூறுவதால்‌ ஏற்படும்‌ நாற்பது பலன்களை குறிப்பிட்டுள்ளார்கள்‌. (ஜலாஹுல்‌ அஃப்ஹாம்‌, பக்கம்‌ - 302)

அந்த பலன்களிலிருந்து சிலவற்றை இங்கு பார்ப்போம்‌:

அல்லாஹ்வின்‌ கட்டளையை செயல்படுத்துவது, 

ஒரு முறை ஸலவாத்‌ கூறுபவர்‌ மீது அல்லாஹ்‌ பத்து அருளை பொழிவது, 

துஆக்களை கேட்பதற்கு முன்‌ ஸலவாத்‌ கூறுவதால்‌ அந்த துஆக்கள்‌ அங்கீகரிக்கப்படும்‌ என்று ஆதரவு கொள்வது, 

நபி (ஸல்) அவர்களின்‌ வஸீலாவை அல்லாஹ்விடம்‌ கேட்கும்போது ஸலவாத்தையும்‌ இணைத்தால்‌ அது நபி (ஸல்) அவர்களின்‌ பரிந்துரைக்கு காரணமாக அமையும்‌ என்பது, 

பாவங்கள்‌ மன்னிக்கப்படுவதற்கு காரணமாக அமையும்‌ என்பது, 

நபி (ஸல்) அவர்களின்‌ மீது ஸலவாத்தும்‌, ஸலாமும்‌ கூறுபவருக்கு நபி (ஸல்) அவர்களும்‌ பதில்‌ அளிக்கிறார்கள்‌. என்பது ஆகிய பல பலன்கள்‌ ஸலவாத்‌ கூறுவதால்‌ ஏற்படுகின்றன எனக்‌ கூறுகிறார்கள்‌. 


ஸலவாத்தின் வாசகங்கள்:

அரபுமூலம் :

اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ ".

அரபு தமிழ் :

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லய்த அலா இப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீதுன் மஜீத்.

அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீதுன் மஜீத்.

பொருள் :

இறைவா! இப்ராஹீம் நபியின் மீதும், அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்தது போல் முஹம்மது(ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் அருள் புரிவாயாக. நீ புகழுக்குரியவன். மகத்துவமிக்கவன்.

இறைவா! இப்ராஹீம் நபிக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நீ பாக்கியம் செய்தது போல் முஹம்மது(ஸல்) அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் பாக்கியம் செய்வாயாக. நீ புகழுக்குரியவன். மகத்துவமிக்கவன்.

அல்லாஹ்வின்‌ ஸலவாத்தும்‌ ஸலாமும்‌ அந்த நபியின்‌ மீது உண்டாகட்டுமாக!

أحدث أقدم