குற்றம் செய்வோரை வெறுத்து ஒதுக்குவோம் !

தவறு செய்யும் மனிதர்களை திருத்துவதற்காகவும் அவர்கள் தமது தவறுகளை உணர்வதற்காகவும் அவர்களை புறக்கணிப்பதும் வெறுத்து ஒதுக்குவதும் ஒரு நல்ல வழிமுறையாகும். இதற்கு மார்க்க வழிகாட்டல் உள்ளது.

     நபி (ஸல்) அவர்கள், தகுந்த காரணமின்றி தபூக் யுத்தத்தில் கலந்து கொள்ளாத மூன்று நபித்தோழர்களுடன் உறவாடுவதை குறிப்பிட்ட காலத்திற்கு தவிர்த்தார்கள் என்ற செய்தி ஹதீஸ் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

     அந்த ஹதீஸின் சாராம்சம்:

          கஅப் பின் மாலிக் (ரலி) கூறுவது: நபி (ஸல்) அவர்கள் தபூக் போருக்கு புறப்பட வேண்டுமென்று அறிவிப்புச் செய்தார்கள்.அனைவரும் போருக்கு புறப்படுவதற்கான ஏற்பாட்டில் ஈடுபட்டார்கள். நானும் புறப்பட ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தேன். ஆனால் (என் பொடுபோக்கினால்) தாமதமானது. நபி(ஸல்) அவர்களும் மக்களும் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுக்கு பின்னாலேயே சென்று விடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் நான் ஆயத்தமாகாததால் காலம் கடந்து விட்டது.

      இறுதியில் நபியும் நபித்தோழர்களும் தபூக் யுத்தத்திலிருந்து திரும்பி வந்து விட்டனர். அப்போது போரில் கலந்து கொள்ளாததற்கு பொய் காரணம் சொல்பவர்கள் நபியிடம் சென்று காரணங்கள் சொன்னார்கள். ஆனால் நான் போரில் கலந்து கொள்ளாததற்கு தகுந்த காரணம் இல்லை என்ற உண்மையை நபியிடம் கூறினேன். என்னை போன்றே வேறு இரு நபித்தோழர்களும் தகுந்த காரணம் இல்லை என்ற உண்மையை ஒப்புக் கொண்டனர். (அவர்கள் பத்ரில் கலந்து கொண்ட முராரா (ரலி), ஹிலால் (ரலி) ஆகியோர்.) 

       நபியவர்கள் எங்கள் மூவருடனும் உறவாடாமல் ஒதுக்கி வைத்தார்கள். நபித்தோழர்களும் எங்களிடம் பேசாமல் புறக்கணித்தனர். இதனால் மிகுந்த மனக்கவலைக்கும் நெருக்கடிக்கும் உள்ளானோம். இப்படியே நாற்பது நாட்கள் கடந்த போது மனைவியிடமிருந்தும் (தலாக் விடாமல்) விலகியிருக்க வேண்டுமென்று நபியிடமிருந்து உத்தரவு வந்தது. நான் என் மனைவியை அவள் தந்தை வீட்டுக்கு அனுப்பி வைத்தேன்.

      தாங்கிக் கொள்ள இயலாத துன்பத்துடன் நாட்கள் நகர்ந்தன. கடைசியில் ஐம்பதாவது நாள் காலையில் அல்லாஹு தஆலா எங்களை மன்னித்து விட்டதாக வசனங்களை இறக்கியிருப்பதாக நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்.

(புகாரி 4418, முஸ்லிம்)

     இது தொடர்பாக இறங்கிய வசனங்கள்: 

நிச்சயமாக அல்லாஹ் நபியையும் கஷ்ட காலத்தில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்களையும், அன்ஸாரிகளையும் மன்னித்தான் அவர்களில் ஒரு பிரிவினருடைய நெஞ்சங்கள் தடுமாறத் துவங்கிய பின்னர், அவர்களை மன்னித்(து அருள் புரிந்)தான் - நிச்சயமாக அவன் அவர்கள் மீது மிக்க கருணையும், கிருபையும் உடையவனாக இருக்கின்றான்.

                (அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்து) விட்டு வைக்கப்பட்டிருந்த மூவரையும், (அல்லாஹ் மன்னித்து விட்டான்;) பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும், அது அவர்களுக்கு நெருக்கமாகி அவர்கள் உயிர் வாழ்வதும் கஷ்டமாகி விட்டது - அல்லாஹ்(வின் புகழ்) அன்றி அவனைவிட்டுத் தப்புமிடம் வேறு அவர்களுக்கு இல்லையென்பதையும் அவர்கள் உணர்ந்து கொண்டார்கள் - ஆகவே, அவர்கள் பாவத்திலிருந்து அவர்கள் விலகிக் கொள்ளும் பொருட்டு, அவர்களை அல்லாஹ் மன்னித்தான்; நிச்சயமாக அல்லாஹ் (தவ்பாவை ஏற்று) மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும் உண்மையாளர்களுடன் நீங்களும் ஆகிவிடுங்கள்.       (அல்குர்ஆன் 9: 117-119)

     மேற்கண்ட ஹதீஸ் மூலம் தவறு செய்தவர்களை நபி (ஸல்) அவர்கள் புறக்கணித்து ஒதுக்கியிருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்கிறோம். அவ்வாறு ஒதுக்கப்பட்டவர்கள் தங்களின் தவறை உணர்ந்து அல்லாஹ்விடம் மன்னிப்புக்கோரி அவனுடைய அருளுக்குரியவர்களாக ஆகியிருக்கிறார்கள்.

    ஆக குற்றம் செய்பவர்களை புறக்கணித்து ஒதுக்குவதால் அவர்கள் திருந்த வேண்டும். நாம் அவர்களை புறக்கணிப்பதால் அவர்கள் முரண்டு பிடித்து இன்னும் கூடுதலாக தங்களின் தவறை தொடர்ந்து செய்வார்கள் என்றால் நாம் வழிமுறையை மாற்ற வேண்டும்.

    முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உசைமீன்(ரஹ்) அவர்கள் கூறுவது: பாவம் செய்யும் மனிதரை வெறுத்து ஒதுக்குவதால் நன்மை ஏற்படும் என்றிருந்தால் அவரை வெறுத்து ஒதுக்குங்கள். நன்மை ஏற்படாது என்றிருந்தால் அவரை வெறுத்து ஒதுக்காதீர்கள்.

     புகைப் பிடிப்பது ஒரு பாவமும் தடை செய்யப்பட்ட காரியமுமாகும். தொடர்ந்து இந்தக் காரியத்தைச் செய்பவர் பாவி என்ற நிலைக்குச் சென்று விடுவார். இது இப்படி இருக்கையில், புகை பிடித்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதரை நீங்கள் கடந்து செல்கிறீர்கள். அவரை நீங்கள் வெறுத்து ஒதுக்குவதால் உரிய பயன் ஏற்படாது என்று கருதினால் அவருக்கு நீங்கள் சலாம் சொல்லுங்கள். நீங்கள் அவருக்கு சலாம் சொல்லி அவருடன் நின்று, 'புகை பிடிப்பது மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட செயல் இது உங்களுக்கு தகுமான செயலல்ல' என்று எடுத்துச் சொல்லலாம். அதை ஏற்றுக்கொண்டு அவர் சிகரட்டை அணைத்து விட்டு அந்த தவறை அறவே விட்டு விடும் நிலை கூட ஏற்படலாம்.

      ஆனால் நீங்கள் (அவர் புகை பிடிப்பதால்) அவருக்கு சலாம் சொல்லாமல் சென்றீர்கள் என்றால் அவர் மனதில் அது பெரிய அவமதிப்பாக தோன்றிவிடும். அதனால் அவர் உங்களையும் நீங்கள் கூறும் நல்ல விஷயத்தையும் வெறுக்க ஆரம்பித்து விடுவார். அதனால் அவர் பாவத்தை தொடர்ந்து கொண்டிருந்தாலும் அவருக்கு சலாம் சொல்லுங்கள். அவருக்கு நன்மையை எடுத்துச் சொல்லுங்கள். (நூல்: லிகாஉல் பாபில் மஃப்தூஹ் - பகுதி: 165, பக்: 12 )

     தவறு செய்பவரை வெறுத்து ஒதுக்குவதால் அவர் திருந்த வேண்டும். அதற்கு மாறாக நாம் வெறுத்து ஒதுக்குவதால் அவர் கூடுதலாக தவறு செய்வார் என்றால் இந்த ஒதுக்கும் நடைமுறையை தவிர்க்க வேண்டுமென்று தகுந்த காரணத்துடன் விளக்குகிறார்கள் ஷெய்க் இப்னு உஸைமீன் அவர்கள்.

       நம்மைச் சுற்றியுள்ள உறவினர்களிலும் நண்பர்களிலும் பலவிதமான தவறுகளைச் செய்பவர்கள் இருப்பார்கள். தண்டனை கொடுத்தே ஆக வேண்டும் என்ற நிலையிலுள்ள தவறுகளையும் உடனடி நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்ற நிலையிலுள்ள தவறுகளையும் தவிர்த்து மற்ற தவறுகளை திருத்துவதற்காக புறக்கணிக்கும் வழிமுறையை கையாளலாம். இந்த வழிமுறையில் உரிய பயன் கிடைக்காது எனும் நிலையில் உறவாடிக்கொண்டே எடுத்துச் சொல்லி திருத்தும் வழிமுறையை கையாள வேண்டும்.

     ஒருவர் தவறு செய்கிறார் என்பதற்காக அவரை வெறுத்து ஒதுக்கினாலும் அந்த ஒதுக்குதலும் அழகிய முறையில் அமைய வேண்டும் என்பதும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலாகும். அல்லாஹு தஆலா கூறுகிறான்: அவர்கள் (உமக்கெதிராக) கூறுவதை பொறுத்துக் கொள்வீராக; மேலும் அழகிய முறையில் அவர்களை வெறுத்து ஒதுக்குவீராக.        (அல் குர்ஆன் 73: 10)  
Previous Post Next Post