«اللَّهُمَّ رَبَّ السَّمَوَاتِ السَّبْعِ وَرَبَّ الْأَرْضِ وَرَبَّ الْعَرْشِ الْعَظِيمِ، رَبَّنَا وَرَبَّ كُلِّ شَيْءٍ، فَالِقَ الْحَبِّ وَالنَّوَى وَمُنْزِلَ التَّوْرَاةِ وَالْإِنْجِيلِ وَالْفُرْقَانِ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ كُلِّ شَيْءٍ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهِ، اللَّهُمَّ أَنْتَ الْأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَيْءٌ، وَأَنْتَ الْآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَيْءٌ، وَأَنْتَ الظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَيْءٌ، وَأَنْتَ الْبَاطِنُ فَلَيْسَ دُونَكَ شَيْءٌ، اقْضِ عَنَّا الدَّيْنَ وَأَغْنِنَا مِنَ الْفَقْرِ».
அல்லாஹ்வே! வானங்களின் இரட்சகனே! பூமியின் இரட்சகனே! மகத்தான அர்ஷ்-அரியணையின் இரட்சகனே! எங்கள் இரட்சகனே! அனைத்துப் பொருட்களின் இரட்சகனே! தானிய வித்துகளையும் விதைகளையும் பிள(ந்து முளைப்பி)ப்பவனே! (வேதங்களான) தவ்ராத், இன்ஜீல், ஃபுர்கான் (குர்ஆன்) ஆகியவையை இறக்கி(அருளி)யவனே! அனைத்தின் தீங்கிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடி ஒதுங்கிக்கொள்கிறேன்; அவற்றின் முன்நெற்றி ரோமங்களை நீயே பிடித்துள்ளாய் (யாவும் உன் அதிகாரத்திற்குள்ளே இருக்கின்றன). அல்லாஹ்வே! நீயே ஆரம்பமானவன்; உனக்கு முன்னர் வேறெதுவும் இல்லை. நீயே இறுதியானவன்; உனக்குப் பின்னர் வேறெதுவும் இல்லை. நீயே மேலானவன்; உனக்கு மேலே வேறொன்றுமில்லை. நீயே அடித்தளமானவன்; உனக்குக் கீழே வேறொன்றுமில்லை. எங்கள் கடன்களை நிறைவேற்றி வைப்பாயாக! வறுமையிலிருந்து (காத்து) எங்களைத் (தன்னிறைவடையச் செய்து) தேவையற்று இருக்கச் செய்வாயாக!
முஸ்லிம்: (6889), அறிவிப்பவர்: அபூ ஹுறைறஹ் (றளியல்லாஹு அன்ஹு).
விளக்கக் குறிப்புகள்:
நாம் தூங்கச் சென்றால் இந்தப் பிரார்த்தனையை ஓதிக் கொள்ளுமாறு நபி ﷺ அவர்கள் எங்களுக்குக் கூறினார்கள் என்று அபூ ஹுறைறஹ் (றளியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள்.
நபி ﷺ அவர்களின் அன்பு மகள் பாத்திமஹ் (றளியல்லாஹு அன்ஹா) அவர்கள் தனக்கு ஒரு பணியாளரை தருமாறு நபி ﷺ அவர்களிடம் கேட்டபோது இந்தப் பிரார்த்தனையைக் கூறுமாறும் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.
தபிஈன்களில் ஒருவரான 'அபூ ஸாலிஹ்' அவர்கள் தனது குடும்பத்தவர்களுக்கு, தூங்கும்போது வலப்பக்கமாக தூங்குமாறும் இந்த பிரார்த்தனையை ஓதிக் கொள்ளுமாறும் கூறுவார்கள். இதனை தனக்கு நபி ﷺ அவர்களிடம் இருந்து அபூஹுறைறஹ் (றளியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவித்ததாக கூறுவார்கள்.
அல்லாஹ்வின் மகத்துவத்தையும் அவனது பல பெயர்கள், பண்புகள், செயல்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்தப் பிரார்த்தனை அமைந்திருக்கின்றது. மேற்படி விடயங்களில் அவன் எவருக்கும் ஒப்பற்றவனாக; தனித்துவமானவனாக இருக்கின்றான்.
அவனது பெயர்களையும் பண்புகளையும் 'வஸீலஹ்'வாக வைத்து நாம் அதனிடத்தில் பிரார்த்தனை செய்வது மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்டு இருக்கின்றது. பொதுவாக பிரார்த்தனை செய்கின்ற பொழுது அவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு எமது கோரிக்கைகளை முன்வைப்பது சிறந்தது.
கடன் ஆபத்தானது; அதனை நீக்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வது அவசியம் என்பதை இந்த ஹதீஸ் எடுத்துக் காட்டுகின்றது.
எமது தேவையை மற்றவர்களிடம் கேட்கும் நிலைக்குத் தள்ளிவிடும் ஏழ்மையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கேட்க வேண்டும்.
-ஸுன்னஹ் அகாடமி