ஸலாமுக்குப்பின் இமாம் எங்கு நோக்கி அமர வேண்டும்?

 – எம். அப்துர் ரஹ்மான் மன்பஈ

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

ஸலாம் கூறி தொழுகையை முடித்ததும் சில இமாம்கள் கிப்லாவை நோக்கியவாறும் சிலர் வலது பக்கம் திரும்பியும் சிலர் மஃமூம்களை நோக்கியவாறும் அமர்கின்றனர்.இவற்றில் சரியான முறை எது என்பதை ஹதீஸ்களின் துணை கொண்டு பார்ப்போம்.

வலது பக்கம் திரும்பி உட்காருபவர்கள் ஆதாரமாக கருதும் ஹதீஸ்கள்:
வலப்புறம் தான் திரும்ப வேண்டும் என்று எண்ணிக் கொள்வதன் மூலம் தனது தொழுகையில் சைத்தானுக்குச் சிறிதளவும் இடமளித்திட வேண்டாம். நபி (ஸல்) அவர்கள் பல சமயங்களில் தம் இடப்புறம் திரும்பக் கூடியவர்களாக இருந்தனர் என்று இப்னு மஸ்வூது (ரலி) கூறினார்கள். (நூல்:புகாரி 852)

இந்த ஹதீஸில் திரும்புவதைக் குறிக்க “யன்ஸரிஃபு” எனும் அரபி வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வார்த்தை திரும்பிச் செல்வதைக் குறிப்பிடவே பயன்படுத்தப்படும். புகாரியில் 177,849,870,872,937 ஆகிய எண்களைக் கொண்ட ஹதீஸ்களில் இந்த அர்த்தத்திலேயே பயன்படுத்தப் பட்டுள்ளதைக் காணலாம்.சில சமயங்களில் உடல் மற்றும் முகத்தை திருப்புவதைக் குறிப்பிடவும் பயன்படுத்தப் படலாம்.

இக்கருத்து திர்மிதி தமிழாக்கத்தின் அடிக்குறிப்பிலும் எழுதப்பட்டுள்ளது. அது வருமாறு:
தொழுது முடித்து சலாம் கொடுத்தபின் தொழுத இடத்திலிருந்து எழுந்து செல்கையில் வலப்பக்கமாகவும் திரும்பலாம் இடப்பக்கமாகவும் திரும்பலாம். இது ஒரு விளக்கம். அல்லது தொழுது முடித்தபின் திக்ர் ஓதுவதற்காக திரும்பி அமர்கையில் வலப் பக்கமாகவும் திரும்பி அமரலாம். இடப் பக்கமாகவும் திரும்பி அமரலாம். (திர்மிதி தமிழாக்கம் அடிக்குறிப்பு 218 பக்கம் 500, ரஹ்மத் பதிப்பகம்)

திரும்பிச் செல்வது, திரும்புவது என்று இரு அர்த்தங்களுக்கு இந்த வார்த்தை இடமளித்தாலும் திரும்பிச் செல்லுதல் என்ற அர்த்தத்திலேயே இந்த ஹதீஸிலும் இக்கருத்தைத் தெரிவிக்கும் மற்ற ஹதீஸ்களிலும் ஸஹாபாக்களால் பயன்படுத்தப் பட்டுள்ளது.

அதாவது தொழுது விட்டு எழுந்து செல்பவர் வலது பக்கமாக திரும்பி விட்டுத்தான் தான் நாடும்திசையில் செல்ல வேண்டும் என்று நினைப்பது தவறு.தொழுது எழுந்திருப்பவர் தான் விரும்பும் பக்கமாக திரும்பிச் செல்லலாம் என்பதே இதன் கருத்து.

இப்படிச் சொல்வதற்கு இந்த (புகாரி 852) ஹதீஸே ஆதாரமாக உள்ளது. இதில் நபி (ஸல்) பல சமயங்களில் இடப்புறமாகவும் திரும்பியுள்ளதால் தொழக் கூடியவர்கள் இரண்டு விதத்தையும் செயல்படுத்த வேண்டுமென்று இப்னு மஸ்ஊத் (ரலி) வலியுறுத்துகிறார்கள்.

இதற்கு திரும்பி உட்காருவதுதான் பொருள் என்றால் தொழுகை முடிந்ததும் வரிசையில் இருப்பவர்கள் சிலர் வலது புறமாகவும் சிலர் இடது புறமாகவும் திரும்பி உட்கார வேண்டும். அப்போது ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க வேணடியது வரும். இது முறையல்ல. இவ்வாறு யாரும் சொல்லவுமில்லை நடைமுறையுமில்லை.(யாராவது மொழிபெயர்ப்பை வைத்து தவறாக புரிந்து செயல்படுத்தினாலே தவிர) அதோடு நாம் கீழே தரவிருக்கும் தெளிவான ஆதாரங்களுக்கு முரணாகவும் ஆகும்.

அலி(ரலி) அவர்கள் கூறினார்கள்:
ஒரு தேவையை நாடியவனாக நீ தொழுகையை முடித்தால் உன் தேவை வலதிலோ அல்லது இடதிலோ இருக்குமானால் உன் தேவை உள்ள திசையில் செல்! (நூல்:முஸன்னஃப் இப்னு அபீ ஸைபா, பாகம் 1,பக்கம் 339)

இந்த செய்தி தொழுது முடித்த பின் வலது, இடது புறமாக திரும்பிச் செல்வது தொடர்பான பாடத்திற்கு கீழே இடம் பெறுகிறது. ஆகவே மேற்கண்ட புகாரியின் 852 எண் ஹதீஸுக்கு திரும்பிச் செல்லக்கூடியவர்களாக இருந்தனர் என்று பொருள் கொள்வதே சரியாகும்.

இன்னொரு ஆதாரம், கழுதை வட்டமடிப்பது போல் ஒருவர் தன் தொழுகையில் வட்டமடிப்பதை அனஸ் (ரலி) அவர்கள் வெறுப்பார்கள் என்ற ஹதீஸ். இதுவும் இப்னு அபீ ஸைபாவில் மேற்கண்ட அலி(ரலி) அவர்களின் ஹதீஸ் இடம் பெறும் பாடத்தில்தான் இடம்பெற்றுள்ளது.

தொழுது முடித்ததும் ஒருவர் தன் வலது புறமாகவோ இடது புறமாகவோ திரும்பி உட்காருவது வட்டமடிப்பதாக ஆகாது. ஆனால் கிப்லாப் பக்கமோ அல்லது இடது புறமோ செல்ல வேண்டிய தேவை இருந்தாலும் முதலில் வலது புறம் திரும்பித்தான் தான் நாடிய திசையில் செல்ல வேண்டும் என்று செயல்படுவதன் மூலம் முழு வட்டமடிப்பதோ முக்கால் வட்டமடிப்பதோ ஏற்படும். ஆக ஸலாமுக்குப் பின் வலது இடது புறமாக திரும்புவது தொடர்பாக கூறப்படுவது திரும்பிச் செல்வது பற்றித்தான் என்பதைத் தெளிவாக புரிய முடிகிறது.

மேலும் மேற்கண்ட புகாரியின் 852 ஹதீஸ் அபூதாவூதிலும் இடம்பெற்றுள்ளது. அதில் கூடுதலாக, அறிவிப்பாளர்களில் ஒருவரான உமாரா(தாபிஈ) கூறுகிறார்: “இந்த ஹதீஸை செவியுற்ற பின் நான் மதீனா சென்றேன். நபி(ஸல்) அவர்களின் வீடுகள் இடது பக்கம் இருப்பதைக் கண்டேன்.” (அபூதாவூத் 878) வீடுகள் இடதுபுறம் இருந்ததால் தொழுத பின் இடதுபுறமாகத் திரும்பிச் சென்றுள்ளார்கள் என்று புரிய முடிகிறது.

ஸுத்தீ (ரஹ்) கூறுகிறார்கள்: தொழுது முடித்தால் நான் எப்படித் திரும்பிச் செல்ல வேண்டும் வலது புறமா? இடது புறமா? என்று அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் வலதுபுறம் திரும்பிச் செல்வதை நான் அதிகமாகப் பார்த்துள்ளேன் என்று பதிலளித்தார்கள். (நஸாஈ 1342).

இதற்கு விளக்கமாக இமாம் ஸிந்தீ (ரஹ்) எழுதுவதாவது:
“இந்த ஹதீஸ் இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவிக்கும் (புகாரி 852, நஸாஈ 1343) ஹதீஸுக்கு முரணல்ல. இவ்வாறு சில சமயங்களிலும் அவ்வாறு வேறு சில சமயங்களிலும் செய்துள்ளார்கள் என்று இரு ஹதீஸ்களையும் இணைத்து புரிந்து கொள்ள வேண்டும்.. .. .. . தகுதியான செயல் என்னவெனில் தனது தேவை இருக்கும் திசையில் திரும்பிச் செல்வதுதான். இல்லாவிட்டால் வலது புறம் சிறப்புக்குரியது. ஆனால் அது கடமையல்ல. மேலும் இங்கு வெளிப்படையாகத் தெரிவது என்னவென்றால், நபி (ஸல்) அவர்களுக்கு பெரும்பாலும் வீட்டுக்குச் செல்ல வேண்டிய தேவையிருந்தது. அவர்களின் வீடு இடது புறத்தில் இருந்தது.இதனாலேயே அவர்கள் மிக அதிகமாக இடது புறம் சென்றுள்ளார்கள்.” (ஹாசியத்துஸ்ஸின்தீ -நஸாஈ விளக்கவுரை- ஹதீஸ் 1342)

இந்த விளக்கத்தின் மூலம் மேற்கண்ட ஹதீஸ்கள் திரும்பிச் செல்வதையே குறிப்பிடுகின்றன என்பதை தெரிந்து கொள்கிறோம்.

தவறான புரிதலுக்கு காரணமாகும் மொழி பெயர்ப்பு:
புகாரியின் முதல்பாகம் 159 வது பாடத் தலைப்பு, “தொழுது முடித்த பின் வலப்புறமாகவும் இடப்புறமாகவும் திரும்பி அமர்ந்து கொள்வது” என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் அதன் மூலத்தை கவனித்தால் வேறு விதமாக உள்ளது. மூலத்தில் இடம்பெற்றுள்ள “இன்ஃபிதால்” எனும் வார்த்தை உட்கார்ந்தவாறு திரும்புவதையும் “இன்ஸிராஃப்” எனும் வார்த்தை திரும்பிச் செல்வதையும் குறிக்கும். அதாவது தொழுத பின்பு, கிப்லாவுக்கு நேர் எதிர் திசையை நோக்கி உட்கார்ந்தவாறு திரும்பினால் வலதுகை பக்கமாகவும் திரும்பலாம் இடதுகை பக்கமாகவும் திரும்பலாம். அதே போல் எழுந்து திரும்பிச் சென்றாலும் வலதுகை பக்கமாகவும் திரும்பலாம் இடதுகை பக்கமாகவும் திரும்பலாம்.

இப்படித்தான் ஹதீஸ் விளக்கவுரையாளர்கள் கூறியிருக்கிறார்கள். புகாரியின் பிரபல விளக்கவுரையாகிய ஃபத்ஹுல் பாரியில் இமாம் இப்னு ஹஜர் எழுதியிருப்பதாவது:

ஜைன் இப்னுல் முனீர் கூறுகிறார்கள், இமாம் புகாரி இப்பாடத்தலைப்பில் இன்ஃபிதால்,இன்ஸிராஃப் ஆகிய இரு வார்த்தைகளையும் சேர்த்து பயன்படுத்தியிருப்பதற்குக் காரணம், “தொழுத இடத்தில் இருந்து கொண்டே மஃமூம்களை முன்னோக்குவதற்காக திரும்பக்கூடியவருக்கும் தன் தேவை இருக்கும் திசையை நோக்கி திரும்பிச் செல்பவருக்குமிடையில் சட்டத்தில் வித்தியாசம் இல்லை என்பதை சுட்டிக்காட்டுவதே. “(ஃபத்ஹுல்பாரி, பா:3, ப:257)
ஆக மேற்கண்ட ஹதீஸ்கள் இமாமோ மஃமூமோ வலது அல்லது இடது புறம் திரும்பிப்பார்த்து உட்கார்ந்து கொண்டிருப்பதை குறிக்கவில்லை என்பதை அறிந்து கொண்டோம்.

மஃமூம்களை நோக்கியவாறு உட்காருவது:

ஸலாம் கொடுத்ததும் இமாம் மக்களை முன்னோக்கியவாறு அமர வேண்டும் என்பதற்கே ஆதாரங்கள் உள்ளன.

ஸஹீஹுல்புகாரியில் 156 வது பாடத்தலைப்பு: “ஸலாம் கொடுத்ததும் இமாம் மக்களை நோக்கித் திரும்புவது.” இவ்வாறு தமிழாக்கத்தில் எழுதப்பட்டிருந்தாலும் “திரும்புவார்” என்று மொழி பெயர்க்கப்படுவதே யஸ்தக்பிலு எனும் வார்த்தைக்கு நேரடியான பொருள். இதற்குக் கீழே வரும் ஹதீஸின் கருத்துக்கும் இந்த மொழி பெயர்ப்பே ஒத்துவருகிறது. ஏனென்றால் திரும்புவார் என்று கூறுவது திரும்புவதுதான் முறை என்பதை உணர்த்துகிறது.

மேற்கண்ட தலைப்பின் கீழ் இடம் பெறும் ஹதீஸ்:
ஸமுரா பின் ஜுன்துப்(ரலி) கூறியதாவது:
“நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் எங்களை நேராக நோக்கித் திரும்புவார்கள்.”

இந்த ஹதீஸின் வாசகம், இவ்வாறு மஃமூம்களை முன்னோக்கி இருப்பதுதான் நபியின் வழக்கம் என்று உணர்த்துகிறது. இது குறித்து இமாம் இப்னு ஹஜர் எழுதுவது:

நபியவர்களின் வழக்கம் இவ்வாறு இருந்தது என்பது தான் ஸமுரா(ரலி) அவர்களின் அறிவிப்பில் வெளிப்படையாகத் தெரிவது. இப்படி இமாம் மஃமூம்களை முன்னோக்கியவாறு உட்காருவதற்கு சில அறிவார்ந்த காரணங்கள் கூறப்பட்டுள்ளன. அவர்களுக்குத் தேவையானதைக் கற்றுக் கொடுக்கலாம் இவ்வாறு சிலரால் கூறப்பட்டுள்ளது. -இது நபியின் நிலை போன்று கற்பிக்க வேண்டிய நிலையில் இருப்பவர்களுக்குப் பொருந்தும்-

இமாம் மஃமூம்களை முன்னோக்கித் திரும்பியிருப்பதால் அப்போது மஸ்ஜிதுக்கு வருபவர் தொழுகை முடிந்து விட்டதென்பதை அறிந்து கொள்ள முடியும். இமாம் பழைய நிலையிலேயே இருந்து கொண்டிருந்தால் அவர் அத்தஹிய்யாத்தில் இருந்து கொண்டிருப்பதாக எண்ணம் ஏற்படலாம். இவ்வாறும் சிலரால் கூறப்பட்டுள்ளது.

மேலும் ஜைன் இப்னுல் முனீர் கூறுகிறார்: இமாம் மஃமூம்களுக்கு முதுகைக் காட்டுவது இமாமத்தின் நிலைக்காகத்தான். தொழுகை முடிந்துவிட்டால் அந்தக் காரணம் நீங்கிவிடுகிறது. இப்போது அவர்களை முன்னோக்கி இருப்பது மஃமூம்களை விட பெருமையும் உயர்வும் கொண்டவர் என்ற எண்ணத்தை நீக்கும். (பார்க்க: ஃபத்ஹுல்பாரி, பா: 3 பக்: 252 – புகாரி 156 வது பாடத்தலைப்பின் விளக்கம்)

இங்கு இமாம் மஃமூம்களை முன்னோக்கி உட்காருவதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் நபி (ஸல்) அவர்களின் வழக்கம் அவ்வாறு உட்காருவதுதான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. பொதுவாக அதுதான் நபி காலத்துக்கு பின்பும் நடைமுறையாக இருந்திருக்கிறது என்பதும் தெரிய வருகிறது.

புலூகுல் மராம் நூலின் விளக்கவுரையாகிய ஸுபுலுஸ்ஸலாமில் ஸன்ஆனீ (ரஹ்) எழுதியிருப்பதாவது:

மஃமூம்களுக்கு முதுகுகாட்டியவாறு கிப்லாவை முன்னோக்கி இமாம் துஆ செய்வது நபிவழியில் இல்லை. மாறாக ஸலாம் கொடுத்தால் நபி (ஸல்) மஃமூம்களை முன்னோக்கக் கூடியவர்களாக இருந்தார்கள் என்றே வந்துள்ளது. இமாம் புகாரி அவர்கள், “ஸலாம் கொடுத்ததும் இமாம் மக்களை முன்னோக்குவார்” என்று இது தொடர்பான பாடத்திற்கு தலைப்பிட்டிருக்கிறார்கள். அதன் கீழ் இடம்பெறும் ஸமுரா பின் ஜுன்துப்,ஜைத்பின் காலித் ஆகியோர் அறிவிக்கும் (புகாரி 845,846) ஹதீஸில், அதுதான் நபியின் நிரந்தரமான செயல்பாடு என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.(பார்க்க: ஸுபுலுஸ்ஸலாம் பாகம்:2, பக்கம்:201)

ஆகவே ஹதீஸ்களின் அடிப்படையில் ஸலாம் கொடுத்ததும் இமாம் மஃமூம்களை முன்னோக்கி அமருவதே நபிவழியாகும்.

அல்லாஹ் நன்கறிந்தவன்.

குறிப்பு: இக்கட்டுரையில் புகாரியைத்தவிர மற்ற நூல்களின் ஹதீஸ் எண்கள் மற்றும் பாக, பக்க எண்கள் “அல்மக்தபா அஸ்ஸாமிலா” மென்பொருள் பதிப்பில் உள்ளவை.

எம்.அப்துர்ரஹ்மான் மன்பஈ

Previous Post Next Post