அல்லாஹ்வே படைப்பினங்கள் அனைத்திற்கும் அதிபதி எனவும், நன்மை, தீமை, இன்பம் துன்பம் அனைத்தும் அவனது நாட்டப்படியே நிகழ்கின்றன எனவும் ஈமான் கொள்ளலாகும். மேலும் அவனே நேர்வழியையும், வழிகேட்டையும், நல்லவற்றையும், தீயவற்றையும் உண்டு பண்ணியுள்ளான். வாழ்வு, மரணம் போன்றவற்றையும் அவனது கைவசமே உள்ளது. எனவே கத்ர் என்றால் அல்லாஹ்வின் அறிவும், ஞானமும் முந்திக் கொண்ட பிரகாரம் திட்டமிட்டவைகளாகும்.
கத்ரை ஈமான் கொள்ளுதல் நான்கு அம்சங்களை உள்ளடக்குகிறது:
1. சிறிய பெரிய விடயங்கள் அனைத்தையும் பொதுவாகவும் விவரமாகவும் அல்லாஹ் நன்கறிகிறான் என ஈமான் கொள்ளல். அவன் சார்ந்ததும் அவனது அடியார்கள் சார்ந்ததுமான அனைத்து விடயங்களையும் நன்கறிகிறான்.
2. அவற்றை அல்லாஹ் பாதுகாக்கப்பட்ட பலகை மீது எழுதி வைத்துள்ளான் என ஈமான் கொள்ளல் இந்த இரண்டு விடயங்களையும் அல்லாஹ் கீழ்வருமாறு கூறுகிறான்.
(நபியே) வானத்திலும், பூமியிலும் இருப்பவற்றை நிச்சயமாக அல்லாஹ் அறிவான் என்பதை நீர் அறியவில்லையா? நிச்சயமாக இது (லவ்ஹுல் மஹ்ஃபூல் எனும்) புத்தகத்தில் இருக்கின்றது. நிச்சயமாக இது அல்லாஹவுக்கு மிக்க சுலபமானதேயாகும். (அல் ஹஜ் : 70)
3. அனைத்து செயல்களும் அவனது நாட்டப்படியே நடை பெறுகின்றன என ஈமான் கொள்ளல். அவன் சார்ந்ததும் அவனது படைப்பினங்கள் சார்ந்ததுமான அனைத்தும் அவனது நாட்டப்படியே நடைபெறுகின்றன. அவன் சார்ந்த செயல்களைப் பற்றி கூறும் போது:
மேலும், உம்முடைய இறைவன், தான் நாடியதைப் படைக்கிறான் தூதராகத் தான் (நாடியோரைத்) தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். (அல்கஸஸ்: 68)
அவனது படைப்பினங்கள் சார்ந்த செயல்பாடுகள் பற்றி கூறும் போது!
மேலும் அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை உங்கள் மீது சாட்டியிருப்பான் அப்போது உங்களை எதிர்த்து அவர்கள் போர் செய்திருப்பார்கள். (அந்நிஸா : 90)
4. அனைத்துப் பொருட்களும், அவற்றின் யதார்த்தம், பண்பு, அசைவுகள் உட்பட எல்லாமே அல்லாஹ்வினால் படைக்கப்பட்டுள்ளன என நம்ப வேண்டும். இதனையே அல்குர்ஆனில் இவ்வாறு கூறுகிறான் :
அல்லாஹ்வே ஒவ்வொரு பொருளையும் படைக்கிறவன், அவனே ஒவ்வொரு பொருளின் மீதும் பொறுப்பாளனுமாவான். (அஸ்ஸுமர் : 62).
அவனே எல்லாப் பொருட்களையும் படைத்து, அவற்றை அதனதன் அளவுப் படி அமைத்தான். (அல் புர்கான் : 2)
நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் சொன்னதாக அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:
உங்களையும், நீங்கள் செய்கின்றவற்றையும் அல்லாஹ்வே படைத்தான். (அஸ்ஸாபாத் : 96)
நாம் இதுவரை கத்ர் பற்றி கூறியதிலிருந்து ஓர் அடியானுக்கு அவனது செயல்களை நிர்ணயிக்கும் ஆற்றலோ, அல்லது அதனை செய்வதற்கான ஆற்றலோ இல்லை என்ற பொருள் கிடையாது. ஏனெனில் அல் குர்ஆனும், சுன்னாவும், நடைமுறையும் மனிதனுக்கென்று ஆற்றல், விருப்பம், நாட்டங்கள் இருப்பதனையே எடுத்துக்காட்டுகின்றன.
இறைவழிகாட்டல்:
நாட்டம் பற்றி அல்லாஹ் கூறும் போது:
எனவே எவர் நாடுகிறாரோ அவர் தம் இரட்சகனிடம் மீளும்பாதையை எடுத்துக் கொள்வாராக. (அந்நபஃ : 39)
உங்கள் விளைநிலங்களுக்கு நீங்கள் விரும்பியவாறு வாருங்கள். (அல்பகரா : 223)
ஆற்றல் சக்தி பற்றி அல்லாஹ் கூறும் போது:
ஆகவே இயன்ற அளவிற்கு அல்லாஹ்வை நீங்கள் பயந்து கொள்ளுங்கள், (அவனின் கட்டளைகளுக்கு) செவியும் சாயுங்கள், அவனுக்கு வழிப்படுங்கள். (அத்தகாபுன் : 16)
மேலும் இறைவன் கூறுகிறான்:
அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவிற்கும் அதன் சக்திக்குட்பட்டதைத் தவிர சிரமம் கொடுப்பதில்லை. அது சம்பாதித்துக் கொண்ட நன்மை அதற்கே. அது சம்பாதித்த தீமையும் அதற்கே. (அல்பகரா: 286)
நடைமுறை :
ஒவ்வொரு செயலிலும் நாட்டமும், அதற்கான ஆற்றலும் இருப்பதை ஒவ்வொரு மனிதனும் நன்கறிகிறான். இதைக் கொண்டு ஒரு செயலைச் செய்யவோ, அல்லது செய்யாது விடவோ முடியும். அவனது நாட்டத்திற்குண உதாரணமாக அவன் நடப்பதைக் கூறலாம்.
அவனது நாட்டமின்றி நடைபெறுவதற்கு உதாரணமாக அவனையறியாமல் அவனது உடம்பில் ஏற்படும் நடுக்கத்தைக் கூறலாம். எனினும் ஓர் அடியானின் நாட்டமும் அதைச் செயல்படச் செய்யும் ஆற்றலும் அல்லாஹ்வின் நாட்டத்தாலும், சக்தியாலும் தான் இடம் பெறுகின்றன என்பதே உண்மை. அவனே
மனித நாட்டத்தையும், ஆற்றலையும் படைத்ததுடன், அனைத்து அடியார்களையும் அவர்களது செயற்பாடுகளையும் அவனே படைத்தான். இதனையே குர்ஆன் இவ்வாறு கூறுகிறது
உங்களில் (நேர்வழி) நிலைத்திருக்க நாடுகிறவருக்கு (இது ஒரு அறிவுரையாகும்) இன்னும் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ் நாடினாலன்றி, நீங்கள் (நல்லறிவு பெற) நாட மாடடீர்கள். (அத்தக்வீர் : 28,29)
ஏனெனில் இப்பிரபஞ்சம் அனைத்தும் அல்லாஹ்வின் அதிகாரத்தின் கீழ்பட்டதாகும். அவனது அறிவும் நாட்டமும் படைப்புமின்றி எதுவொன்றுமே நடைபெறாது.
நாம் இது வரை கத்ர் பற்றி கூறியதிலிருந்து ஒருவனுக்கு கடமையாக்கப்பட்டவற்றை விடுவதற்கோ, அல்லது தடுக்கப்பட்டவற்றை செய்வதற்கோ அந்த கத்ர் ஆதாரமாக அமையமாட்டாது. இந்த எண்ணம் தவறானது என்பதை கீழ்வரக் கூடியவைகள் விளக்குகின்றன:
1. அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களும் எங்களுடைய மூதாதையர்களும் (அல்லாஹ்வுக்கு எதையும் இணை வைத்திருக்க மாட்டோம். (உண்ணக்கூடிய) யாதொன்றையும் (ஆகாதென்று) விலக்கியிருக்கவும் மாட்டோம் என்று இணைவைத்துக் கொணடிருப்போர் கூறுவார்கள். இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் நம்முடைய வேதனையைச் சுவைக்கும் வரையில் இவ்வாறே (தூதர்களைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தனர். (ஆகவே நீர் உங்கள் கூற்றுக்கு) உங்களிடம் ஏதும் அறிவார்ந்த ஆதாரமுண்டா? (அவ்வாறு இருந்தால்) அதனை நமக்கு வெளிப்படுத்திக் காட்டுங்கள், (உங்களது அர்த்தமற்ற வீணான) எண்ணத்தையல்லாது வேறு எதையும் நீங்கள் பின்பற்றவில்லை. இன்னும் நீங்கள் அனுமானம் கொள்கிறவர்களேயன்றி வேறில்லை என்று கூறுவீராக. (அல்அன்ஆம் : 148)
விதியைக் கொண்டு அவர்களுக்கு ஆதாரம் காட்ட முடியுமாயின் அல்லாஹ் அவர்களை (இன்விணைவைப்பின் மூலம்) தண்டித்திருக்கமாட்டான். மறைவான அறிவைக் காரணம் காட்டி அவர்கள் அவனை நிராகரித்தார்கள்.
2. அல்லாஹ்வின் மீது மனிதர்களுக்கு (சாதகமாக) யாதொரு ஆதாரமும் இல்லாதிருப்பதற்காக, இத்தூதர்களுக்குப் பின்னரும், தூதர்கள் பலரை சுவர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் கூறுகின்றவர்களாகவும் (நரகத்தைக் கொண்டு) அச்சமூட்டி எச்சரிக்கின்றவர்களாகவும் (அல்லாஹ் அனுப்பி வைத்தான்)
மேலும் அல்லாஹ் (நாவரையும்) மிகைத்தோனாக, தீர்க்கமான அறிவுடையோனாக இருக்கின்றான். (அந்நிஸா : 165)
விதி ஓர் ஆதாரமாக இருப்பின் அல்லாஹ் எவ்வாறு தன் தூதர்களை அனுப்பிக் கொண்டே இருப்பான்?. ஏனெனில் அவர்களது வருகைக்குப் பின்னரும் அல்லாஹ்வின் ஆற்றலுடன் பாவங்கள் நிகழவே செய்கின்றன.
கத்ரை ஈமான் கொள்வதால் ஏற்படும் மாற்றங்கள்:
1. ஒரு செயல் நடைபெறும் போது அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளல். நடந்த அச்செயலை காரணமாகக் கருதாமல் அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றன என்ற முடிவிற்கு வர முடிகிறது.
2. ஒரு நாட்டம் நிறைவேறும் போது மனிதன் தற்பெருமை கொள்ளாமல் இருக்கச் செய்கிறது. ஒருவனது நாட்டம் நிறைவேறுவது அல்லாஹ் அவன் மீது புரிந்துள்ள அருளினாலேயாகும். இதுவே அவனது வெற்றியினதும், நல்லவிடயங்களினதும் காரணங்களாகும். எனவே தற்பெருமை கொள்வது அல்லாஹ்வின் அருளுக்கு நன்றி செய்வதை மறக்கடிக்கச் செய்யும்.
3. அல்லாஹ்வின் நாட்டப்டியே செயல்படுவதால் மனநிம்மதியும், ஆறுதலும் கிடைக்கின்றன. தனக்கு விருப்பமான ஒன்றை இழப்பதாலோ வெறுப்பான ஒன்று நிகழ்வதாலோ கலக்கமடையாதிருக்கச் செய்யும். ஏனெனில் இவை அல்லாஹ்வின் நாட்டப்படியே நிகழ்கின்றன. தனக்கு அதில் அதிகாரம் இல்லையென மன அமைதி கொள்வான் இதனையே அல்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:
எந்தத் துன்பமும் அதனை நாம் சிருஷ்டிப்பதற்கு முன்னதாக (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) புத்தகத்தில் (பதியப்பட்டு) இருந்தே தவிர பூமியிலோ அல்லது உங்களிலோ ஏற்படுவதில்லை, நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதாகும். உங்களுக்கு தவறிவிட்டதின் மீது நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், (அல்லாஹ்வாகிய) அவன் உங்களுக்கு கொடுப்பதைப் பற்றி நீங்கள் (வரம்பு மீறி) மகிழ்ச்சி கொள்ளாதிருப்பதற்காகவும் (இதனை உங்களுக்கு அறிவிக்கிறான்) கர்வங்கொண்டு, தற்பெருமையடிப்போர் ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல் ஹதீத் : 22-23)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ஒரு முஃமினது செயல்கள் அனைத்தும் அவனுக்கு நலவாக அமைவது ஆச்சரியமானதேயாகும். ஒரு நல்ல செயல் நடந்தால் அவன் நன்றியுடன் நடந்து கொள்வான். அது அவனுக்கு நல்லதாக அமையும். ஒரு கெட்ட செயல் நடந்தால் பொறுமையுடன் இருப்பான். அது அவனுக்கு நல்லதாக அமையும். இது ஒரு முஃமினுக்கன்றி வேறொருவருக்கும் கிடையாது.(ஆதாரம் முஸ்லிம் 2999)
கத்ர் விடயத்தில் இரு பிரிவினர் வழிதவறி விட்டனர்:
1- ஜபரிய்யாக்கள்: மனிதன் அவனது செயல்களில் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளான் அதிலே அவனுக்கு சக்தியோ சுயவிருப்பமோ இல்லை.
2- கதரிய்யாக்கள்: இவர்கள் கூறுகின்றனர் மனிதர்கள் ஒரு செயலைச் செய்வதிலும் அதனை நாடுவதிலும் பூரண சுதந்திரம் பெற்றுள்ளனர். அதிலே அல்லாஹ்வின் நாட்டமோ, சக்திக்கோ இடமில்லை என்கின்றனர்.
ஜபரிய்யா என்ற முதல் பிரிவினர்க்கு மார்க்க அடிப்படையிலும், நடைமுறை அடிப்பிடையிலும் மறுப்பு:
இறைவழிகாட்டல்:
அல்லாஹுதாலா மனிதனுக்கு நாட்டத்தை உறுதிப்படுத்தியுள்ளான். மேலும் செயலையும் இணைத்துள்ளான். இறைவன் கூறுகிறான்.
உங்களில் இம்மையை விரும்புவோரும் உண்டு உங்களில் மறுமையை விரும்புவோரும் உண்டு. (ஆல இம்ரான் : 152)
நடைமுறை:
ஒவ்வொரு மனிதனும் அவனுடைய நாட்டத்தோடு செய்யும் செயல்களையும், நாட்டமில்லாமல் நடைபெறும் நிகழ்வுகளையும் பிரித்தறிகிறான்.
உதாரணமாக உண்ணல், பருகல், வியாபாரம் செய்தல், வாங்குதல் போன்றவை அவனுடைய நாட்டத்தில் நடைபெறுகின்றன.
காய்ச்சலால் நடுக்கம் ஏற்படல், உயர்ந்த இடத்திலிருந்து விழுதல் போன்றவை அவனது நாட்டம் விருப்பமின்றி நடைபெறுகின்றன.
முதல் உதாரணத்தில் எந்த நிர்ப்பந்தமும் இல்லாமல் அவனுடைய சுயவிருப்பத்தில் நிறைவேற்றுகிறான்.
இரண்டாவது உதாரணத்தில் அவனுடைய விருப்பமோ நாட்டமோ இல்லாமலேயே அவை நிகழ்கின்றன.
கதரிய்யா என்ற இரண்டாவது பிரிவினருக்கு அறிவு, மார்க்கம் சார்ந்த மறுப்பு:
இறைவழிகாட்டல்:
அல்லாஹ்வே அனைத்தையும் படைத்தான். அவனுடைய நாட்டபடியே அனைத்தும் நடக்கின்றது மனிதர்களுடைய செயல்கள் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கிறது என்பதை அவனது திருமறையில் கூறியுள்ளான்.
இன்னும் அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களுக்குப் பின் உள்ளவர்கள் தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னரும், சண்டையிட்டுக் கொண்டிருந்திருக்க மாட்டார்கள். ஆயினும் அவர்களோ (தங்களுக்குள்) வேறுபாடு கொண்டனர். ஆகேவே அவர்களில் விசுவாசம் கொண்டவரும் உள்ளனர். அவர்களில் நிராகரித்து விட்டவரும் உள்ளனர். மேலும் அல்லாஹ் நாடினால் அவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்திருக்க மாட்டார்கள். எனினும் அல்லாஹ் தான் நாடியதை செய்கிறான். (அல் பகரா : 253)
மேலும் நாம் நாடியிருந்தால் (இவர்களில் உள்ள) ஒவ்வோர் ஆத்மாவிற்கும் அதற்குரிய நேர்வழியை நாம் கொடுத்திருப்போம். எனினும் ஜின்களாலும், மனிதர்களில் உள்ள குற்றவாளிகள் யாவராலும் நிச்சயமாக நான் நரகத்தை நிரப்புவேன் என்று என்னிடமிருந்து வாக்கு (முன்னரே) ஏற்பட்டுவிட்டது. (ஸஜ்தா 13).
அறிவு சார்ந்த மறுப்பு:
இந்த பிரபஞம் முழுவதிற்கும் இறைவனே பொறுப்பானவன். மனதனும் இப்பிரபஞத்திற்குள் அடங்குகிறான். எனவே அவனுக்கும் பொறுப்பாளன் அல்லாஹ்வே. எனவே பொறுப்பாளனின் அனுமதியோ நாட்டமோ இன்றி, அவனது கட்டுப்பாட்டிலுள்ளவனுக்கு எந்தவொன்றும் செய்ய முடியாது.
இறைவனுக்கே எல்லாப் புகழும்