அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவது என்றால் படைத்துப் பரிபாலிப்பதிலும் அவனை வணங்குவதிலும் அவனுடைய திருநாமங்கள் பண்புகளிலும்; அல்லாஹ்வை அவனுடைய படைப்புகளை விட்டும் தனித்துவப்படுத்தி, தூய்மைப்படுத்தி ஒருமைப்படுத்துவதாகும்.
மேலும் அவன் தான் அகிலமனைத்தையும் படைத்துப் பரிபாலிப்பவன், அகில உலகத்தையும் ஆட்சி செய்பவன், வணங்குவதற்குத் தகுதியானவன் என்று நம்புவதுமாகும். மேலும் அவனுக்கே உரித்தான சொல் அல்லது செயல் ரீதியான வணக்கமனைத்தையும் அல்லாஹ்விற்கே உரித்தாக்குவதும் தவ்ஹீது ஆகும்.
தவ்ஹீது தான் இஸ்லாத்தின் அடிப்படையாகும். இதிலிருந்துதான் இஸ்லாத்தினுடைய ஏனைய சட்ட திட்டங்களும் ஏவல் விலக்கல்களும் உருவாகின்றன.
தெளஹீதின் சிறப்பு
1- சுவர்க்கத்தில் நுழைவதற்கும் நரகில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கும் தெளஹீத் ஓர் அடிப்படைக் காரணமாகும்.
இறைவன் கூறுகிறான் :
நிச்சயமாக அல்லாஹ் அவன் தான் மர்யமுடைய மகன் மஸீஹ் என்று கூறியவர்கள் திட்டமாக நிராகரிப்போராகி விட்டார்கள். (எனினும்) அந்த மஸீஹோ, இஸ்ராயீலின் மக்களே! என்னுடைய இரட்சகனும் உங்களுடைய இரட்சகனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள் என்றே கூறினார். நிச்சயமாக எவர் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றாரோ அவர் மீது திட்டமாக அல்லாஹ் சுவனபதியை தடுத்துவிடுகிறான். மேலும் அவர் தங்குமிடம் நரகம் தான் இன்னும் (இத்தகைய) அநியாயக்காரர்களுக்கு (மறுமையில்) உதவி செய்வோர் இல்லை.” (அல் மாயிதா : 72)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “யார் எந்த வித இணைகளும் வைக்காதவர்களாக அல்லாஹ்வை சந்திக்கிறார்களோ அவர்கள் சுவனம் நுழைவார்கள். யார் இணை வைத்தவர்களாக அவனை சந்திக்கிறார்களோ அவர்கள் நரகம் செல்வார்கள்”. (அறிவிப்பவார்: ஜாபிர் (ரலி). ஆதாரம் முஸ்லிம் 93)
மேலும் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: “அல்லாஹ்வை நாடி யார் லாஇலாஹா இல்லல்லாஹ் என்று சொல்கிறாரோ அவர் மீது அல்லாஹ் நரகத்தை ஹராமாக்குகிறான்”. (அறிவிப்பவர் : மஹ்மூத் பின் ரபீ. (ரலி). ஆதாரம் : புகாரி 425 முஸ்லிம் 263)
2-நல்ல செயல்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு தெளஹீத் ஒரு நிபந்தனையாகும். இணை வைத்தல் அவற்றை பாழாக்கி விடும்.
இறைவன் கூறுகிறான் :
(நபியே) நீர் இணைவைத்தால் நிச்சயமாக உம்முடைய செயல்கள் யாவும் அழிந்து விடும், நிச்சயமாக நீர் நஷ்டமடைபவர்களிலும் ஆகிவிடுவீர் என உமக்கும் உமக்கு முன்னிருந்தவர்களுக்கும் (வஹி) அறிவிக்கப்பட்டது.” (அல் ஜுமர் : 65)
மேலும் இறைவன் கூறுகிறான் :
யார் தன் இரட்சகனைச் சந்திக்க ஆதரவு வைக்கிறாரோ அவர் நற்கருமங்களைச் செய்யட்டும். தன் இரட்சகனின் வணக்கத்தில் அவர் எவரையும் இணையாக்க வேண்டாம். (அல்கஹ்ப் : 110)
மேலும் இமாம் அபூஅப்தில்லாஹ் அல் தஸ்தரி கூறுகிறார்கள்: ஈமான் என்றால் மொழிதல், செயல், தூய எண்ணம், நபி வழி ஆகியவையாகும். எனவே செயல் இல்லாமல் மொழிதல் மாத்திரம் இருந்தால் அது நிராகரிப்பாகும். தூய எண்ணம் இல்லாமல் சொல்லும் செயலும் இருந்தால் அது நயவஞ்சகமாகும். இன்னும் நபியின் வழிகாட்டி இல்லாமல் சொல்லும், செயலும் தூய எண்ணமும் இருந்தால் அது (பித்அத்) வழிகேடாகும்.
3-தெளஹீத் தவறுகளை நீக்கி கெட்டவைகளைப் போக்கும்.
அல்லாஹுதஆலா ஹதீஸில் குத்ஸியில் கூறுகிறான்: “ஏ ஆதமின் மகனே, நீ பூமியளவு தவறுகள் செய்து விட்டு இணை வைக்காத நிலையில் என்னை நெருங்கினால் பூமியளவு மன்னிக்கும் தன்மையுடன் நான் உன்னை நெருங்குவேன்'' என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி). ஆதாரம் : திர்மிதீ 3540)
தெளஹீத் ருபூபிய்யா
படைத்துப் பரிபாலிப்பதில் இறைவனை ஒருமைப்படுத்துதல்
தெளஹீத் ருபூபிய்யா என்பது: அல்லாஹ் அடியார்களைப் படைத்து அவர்களுக்கு உணவளிப்பவன், அவர்களை உயிர்ப்பித்து மரணிக்கவும் செய்பவன் என நம்பிக்கை கொள்வதாகும். அல்லது அல்லாஹ்வின் செயல்களில் அவனை ஒருமைப்படுத்துவதாகும்.
உதாரணம் அவனே படைப்பவன், உணவளிப்பவன்.
இந்த தவ்ஹீதை இணைவைப்பாளர்களும் யூதர்களும், கிறிஸ்தவர்களும், நட்சத்திரத்தை வணங்கக்கூடியவர்களும், நெருப்பு வணங்கிகளும் ஏற்றுக் கொண்டனர். தற்போதுள்ள பகுத்தறிவு வாதிகள் மாத்திரமே இதனை ஏற்க மறுக்கின்றனர்.
தெளஹீத் ருபூபிய்யாவிற்கான ஆதாரங்கள்:
இறைவனை மறுக்கக் கூடிய இம் மடையர்களுக்கு நாம் கூறுவது யாதெனில்: உருவாக்கியவன் இல்லாமல் எந்த அடிச்சுவடும் உருவாகும் என்றோ, செய்தவன் இல்லாமல் எந்தச் செயலும் நடைபெறும் என்றோ, படைத்தவன் இல்லாமல் எந்தப் படைப்பும் உருவாகிவிடும் என்றோ அறிவுடைய எவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
கருத்து வேறுபாடில்லா விஷயம் என்னவென்றால் சாதாரண ஓர் ஊசியை உற்று நோக்கினாலே அதைச் செய்தவன் ஒருவன் இருக்கிறான் என்பது தெளிவாகின்றது. அப்படியானால் மனித அறிவையே திகைக்கச் செய்யக்கூடிய இப்பிரம்மாண்டமான உலகம், அதை உருவாக்கியவன் இல்லாமல் உருவாகியிருக்க முடியுமா? திட்டமிட்டவன் இல்லாமல் திட்டமிட்டு இயங்க முடியுமா? அதிலே இருக்கின்ற நட்சத்திரங்கள், முகில் கூட்டங்கள், இடி, மின்னல், பாலைவனங்கள், கடல்கள், இருள், ஒளி, மரங்கள், பூக்கள், மனிதர்கள், ஜின்கள், விலங்குகள் இன்னும் இது போன்ற எண்ணிலடங்காதவைகள் அனைத்தும் உருவாக்கியவன் இல்லாமல் உருவாகியிருக்க முடியுமா?
சிறிதளவு அறிவு இருக்கக்கூடியவன் கூட, சிறிதளவு விளக்கம் இருக்கக்கூடியவன் கூட இவ்வாறு கூற மாட்டான். மொத்தத்தில் அல்லாஹ்தான் படைத்துப் பரிபாலிப்பவன்.
இறைவன் கூறுகிறான் :
"படைப்பாளன் யாருமின்றி இவர்கள் பிறந்து விட்டார்களா? அல்லது இவர்கள் தங்களுக்குத் தாங்களே படைப்பாளர்களாய் இருக்கின்றார்களா”? (அத்தூர்:35)
மேலும் இறைவன் கூறுகிறான் :
அல்லாவற்வே ஓவ்வொரு பொருளையும் படைக்கிறவன் அவனே ஓவ்வொரு பொருளின் மீதும் பொறுப்பாளனுமாவான். ” (அல் ஜுமர்:62)
இதற்கு அறிவுப்பூர்வமான ஓர் ஆதாரம் என்னவென்றால் இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுவதாவது, தர்க்கக் கலை உடையவர்களில் ஒரு கூட்டம் இறைவன் இருக்கிறானா, இல்லையா என்று விவாதம் புரிய விரும்பினார்கள். அப்போது அபூஹனீபா (ரஹ்) அவர்கள், இந்த விஷயத்தைப் பற்றி நாம் பேசுவதற்கு முன்னால் நதியில் செல்லக்கூடிய ஒரு கப்பலைப் பற்றி எனக்குக் கூறுங்கள். அதாவது அக்கப்பல் தானாகச் சென்று உணவுப் பொருட்கள், சரக்குகள் இன்னும் இது போன்ற பொருட்களை தானாகவே ஏற்றிக் கொண்டு, தானாக திரும்பிச் சென்றுவிடுகிறது. பிறகு தானாகவே நங்கூரமிட்டு அனைத்துப் பொருட்களையும் தானாகவே இறக்கி வைத்து விட்டு தானாகவே திரும்பி வந்து விடுகிறது. இவ்வனைத்தும் வழிநடத்துவதற்கு யாரும் இல்லாமலேயே நடந்திருக்கிறது என்றால் இது எப்படி முடியும்? அதற்கு அவர்கள் இது சாத்தியமாகாது என்று கூறினார்கள். அதற்கு அபூஹனீபா (ரஹ்) அவர்கள் இது சாத்தியமாகாது என்று சொன்னால் இவ்வுலகம் எப்படி ஒரு வழிநடத்துபவன் இல்லாமல் இருக்க முடியும்? என்று கேட்டார்கள். இந்தச் செய்தி அபூஹனீபா (ரஹ்) அவர்கள் தவிர மற்றவர்களிடமிருந்தும் அறிவிக்கப்படுகிறது. (தப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 1 பக் 197)
நிராகரிப்பாளர்கள் தெளஹீத் ருபூபிய்யாவை ஏற்றார்கள் என்பதற்கான ஆதாரங்கள்
இறைவன் கூறுகிறான் :
மேலும் வானங்களையும் பூமியையும் சிருஷ்டித்தவன் யார்? என்று (நபியே), நீர் அவர்களை கேட்பீராயின், அதற்கவர்கள் அல்லாஹ் என்று நிச்சயமாக கூறுவார்கள். அல்ஹம்துலில்லாஹ் எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே என்று நீர் கூறுவீராக எனினும் அவர்களில் பெரும்பாலோர் அறியமாட்டார்கள்.” (லுக்மான்:25)
மேலும் இறைவன் கூறுகிறான் :
வானத்திவிருந்தும், பூமியில் இருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? அல்லது உங்களிடமுள்ள கேட்கும் மற்றும் பார்க்கும் ஆற்றல் யாருடைய அதிகாரத்தில் உள்ளன? இறந்ததிவிருந்து உயரிருள்ளதை வெளிப்படுத்துபவனும் உயிருள்ளதிலிருந்து இறந்ததை வெளிப்படுத்துபவனும் யார்? (அகிலத்தாரின்) சகல காரியங்களைத் திட்டமிட்டு நிகழ்த்துபவன் யார்? என (நபியே) நீர் அவர்களிடம் கேட்டால், அதற்கவர்கள் அல்லாஹ் தான் என்று கூறுவார்கள். அவ்வாறாயின், (அவனுக்கு) நீங்கள் பயப்படமாட்டீர்களா.” என்று நீர் கூறுவீராக.
(இத்தகைய தகுதிக்குரிய) அவன் தான் உங்களுடைய உண்மையான இரட்சகனாகிய அல்லாஹ், இந்த உண்மைக்கு பின்னர், வழிகேட்டைத் தவிர வேறு (எஞ்சியிருப்பது) யாது. (இவ்வுண்மையை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகிறீர்கள்.? (என்றும் நபியே நீர் கேட்பராரக.) (யூனுஸ்:31-32)
மேலும் இறைவன் கூறுகிறான் :
(நபியே) அவர்களிடம் வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று நீர் கேட்டால், (யாவற்றையும்) மிகைத்தவன் நன்கறிகிறவன் ஆகிய அல்லாஹ் தான் அவற்றைப் படைத்தான் என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள். ” (அல்ஜூக்ரூப்: 9)
குறிப்பு : தெளஹீத் ருபூபிய்யா மாத்திரம் ஒருவனை இஸ்லாத்தில் நுழைய வைக்காது. அதனுடன் தெளஹீத் உலுஹிய்யாவையும் அவன் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இந்த வகைத் தெளஹீதை ஏற்றுக் கொண்டு வாழ்ந்த குரைஷிகளுடன் நபி (ஸல்) அவர்கள் பல முறை போரிட்டுள்ளார்கள்.
தெளஹீத் உலூஹிய்யா
இதற்கு தவ்ஹீதுல் இபாதா என்றும் சொல்லப்படும். இது வணக்கத்தில் இறைவனை ஒருமைப்படுத்துவதாகும். ஏனெனில் அவன்தான் வணங்கப்படுவதற்குத் தகுதியானவன். இதற்கு அவனைத் தவிர வேறு எவரும் இல்லை. அவ்வாறு வணங்கப்படுவருடைய அந்தஸ்து உயர்ந்தாலும் அவருடைய மதிப்பு கூடினாலும் சரியே!
இந்தத் தெளஹீதைத்தான் தூதர்கள் தத்தமது சமூகத்தினருக்கு எடுத்துச் சொன்னார்கள். அத்தோடு அவர்கள் சமூகத்தினர் ஏற்றுக் கொண்ட தவ்ஹீத் ருபூபிய்பயாவை உறுதிப்படுத்தவும் வந்தார்கள். அத்தூதர்கள் அம்மக்களை தவ்ஹீத் உலுஹிய்யாவின் பக்கம் அழைத்தார்கள்.
இது பற்றி அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான். நபி நூஹ் (அலை) அவர்களைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது பின் வருமாறு குறிப்பிடுகிறான் :
மேலும் நிச்சயமாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பி வைத்தோம். நிச்சயமாக நான் உங்களுக்குப் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றவன் அல்லாஹ்வைத் தவிர (மற்றெதையும்) நீங்கள் வணங்காதீர்கள் துன்புறுத்தும் நாளின் வேதனையைப் பற்றி நிச்சயமாக உங்களின் மீது பயப்படுகிறேன். (என்று கூறினார்)” (ஹுத் : 25, 26)
நபி மூஸா (அலை) அவர்கள் பிர்அவ்னுடன் விவாதித்ததைப் பற்றி குறிப்பிடும் போது இவ்வாறு கூறுகிறான்:
"மூஸாவைப் பார்த்து பிர்அவ்ன் அகிலத்தாரின் இரட்சகன் என்றால் என்ன? என்று கேட்டான் அதற்கு நீங்கள் உறுதி கொண்டவர்களாக இருப்பின் வானங்கள் மற்றும் பூமி இன்னும் அவை இரண்டிற்கும் மத்தியலுள்ளவை ஆகியவற்றின் இரட்சகன் தான் (அகிலத்தாரின் இறைவன் ஆவாண்) என்றூ (மூஸா) கூறினார். “(அஷ்ஷுஅரா : 23,24)
நபி ஈஸா (அலை) அவர்களைப் பற்றி குறிப்பிடும் போது:
நிச்சயமாக அல்லாஹ் தான் என் இரட்சகனும், உங்கள் இரட்சகனும் ஆவான், ஆகவே அவனையே நீங்கள் வணங்குங்கள். இதுதான் நேரான வழி (என்றும் கூறினார்)" (ஆல இம்ரான்: 51) என்று கூறுகின்றான்.
அல்லாஹ் அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை நோக்கி வேதம் கொடுக்கப்பட்டவர்களுக்கு பின்வருமாறு கூறும்படி கட்டளையிட்டான் :
(நபியே அவர்களிடம்) “வேதத்தையுடையோரே.! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள் (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையம் வணங்க மாட்டோம். அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம் அல்லாஹ்வை விட்டு தம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” எனக் கூறும் (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால் “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” என்று நீங்கள் கூறிவிடுங்கள், (ஆல இம்ரான் : 64)
எல்லா மனிதர்களையும் அழைத்து அல்லாஹ் கூறுகிறான்:
மனிதர்களே! உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோர்களையும் படைத்த உங்களுடைய இரட்சகனை நீங்கள் வணங்குங்கள், (அதனால்) நீங்கள் பயபக்தியுடையோராகலாம், (அல்பகரா:21).
மொத்தத்தில் எல்லா இறைத்தூதர்களும் தவ்ஹீத் உலூஹிய்யாவுக்காகவும் வணக்க வழிபாடுகளை அல்லாஹ் ஒருவனுக்கு மாத்திரமே செய்ய வேண்டும், சிலை வணக்கம் மற்றும் அல்லாஹ் அல்லாதவர்களை வணங்குவதை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்பதன் பக்கம் தம் மக்களை அழைப்பதற்காகவுமே அனுப்பப்பட்டார்கள்.
அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்:
ஒவ்வொரு சமூகத்திலும் திட்டமாக நாம் ஒரு தூதரை அனுப்பியிருக்கிறோம். (அத்தூதர் அச்சமூகத்தவர்களிடம்) அல்லாஹ்வையே வணங்குங்கள். (அல்லாஹ் அல்லாத வணங்கப்படும் ஷைத்தான்௧ளாகிய அனைத்து) தாகூத்திலிருந்தும் நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். (என்று கூறினார்கள்). (அந்நஹ்ல்:36)
அனைத்து தூதர்களும் தம் சமூகத்தினரை அழைத்ததை செவியுறுவோமெனில் தம் சமூகத்தினரின் செவிகளை தட்டக் கூடிய முதல் அழைப்பாக இருப்பது, என் சமூகத்தினரே! நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள் அவனையன்றி வேறு இறைவன் உங்களுக்கு இல்லை என்றே இருக்கும்.
வணக்கம் என்பதின் விளக்கம்
அகராதியில் இபாதத் என்றால் பணிதல், வழிப்படுதல் என்பதாகும்.
சன்மார்க்கப்படி இபாதத் என்றால், தூதர்கள் வாயிலாக அல்லாஹ் ஏவியவைகளை ஏற்று நடப்பதன் மூலமாக அல்லாஹ்வை வழிப்படுதல் என்பதாக இமாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
மேலும் அவர்கள் கூறினார்கள், இபாதத் என்பது அல்லாஹ் விரும்பக் கூடிய அவன் பொருந்திக் கொள்ளக் கூடிய வெளிப்படையான அந்தரங்கமான சொல், செயல்களாகும்.
எனவே அனைத்து வகையான வணக்க வழிபாடுகளிலும் அல்லாஹ் ஒருவனை மாத்திரம் ஒருமைப்படுத்தி அவனுக்காக வேண்டி மனதைத் தூய்மைப் படுத்தி இபாதத்தை நபி (ஸல்) அவர்களின் சொல் செயல் அடிப்படையில் செயல்படுத்துவதே ஒரு முஸ்லிமின் கடமையாகும்.
அல்லாஹ் வெறுக்கக் கூடிய வெளிப்படையான அந்தரங்கமான சொல், செயல்கள் அனைத்தையும் தவிர்ந்து கொள்வதும் வணக்கத்திலுள்ளதென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இபாதத் உள்ளடக்கும் வகைகள் பின்வருமாறு:
இபாதத் என்பது தொழுகை, தவாப், ஹஜ், நோன்பு, நேர்ச்சை, பள்ளியில் (இஃதிகாப்) தங்கியிருத்தல், அறுத்துப் பலியிடுதல், (சுஜுது) சிரம்பணிதல், ருகூஃ செய்தல், உள்ளச்சம், ஆவல் கொள்வது, பயம், (தவக்குல்) நம்பிக்கை, இரட்சிப்புத் தேடுவது, ஆதரவு வைப்பது மற்றும் அல்லாஹ் திருமறைக் குர்ஆனிலும் நபி (ஸல்) அவர்கள், ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களிலும் காட்டிய பல்வேறு வணக்கங்களையும் உள்ளடக்கியிருக்கின்றது.
எவர் இவைகளில் ஏதாவதொரு வணக்கத்தை அல்லாஹ் அல்லாதவைகளுக்கு நிறைவேற்றுகின்றாரோ அவர் இறைவாக்கின் படி(முஷ்ரிக்) இணை கற்பித்தவராகி விடுவார்.
இதைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது பின்வருமாறு கூறுகிறான் :
எவன் அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறு இறைவனை அழைக்கிறானோ அவனிடம் அதுபற்றி யாதொரு சான்றும் இல்லை. அவனுடைய கணக்கு அவனுடைய இறைவனிடமே உண்டு நிச்சயமாக நிராகரிக்கக்கூடியவர்கள் வெற்றி பெற மாட்டார்கள்.” (அல் முஃமினூன்:117)
மேலும் இறைவன் கூறுகிறான்:
நிச்சமமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்கு உரியனவாகும். ஆகவே (அவைகளில்) அல்லாஹ்வுடன் மற்றெவரையும் நீங்கள் பிரார்த்தித்து அழைக்க வேண்டரம். “ (அல்ஜின்:18)
இந்த வசனத்தில் (மற்றெவரையும்) என்பது அனைத்து படைப்பினங்களையும் உள்ளடக்கும். இறைத்தூதர் அல்லது மலக்கு அல்லது நல்லடியார் யாராக இருந்தாலும் சரியே !
இணைவைத்தலின் ஆரம்ப நிலை
இணைவைத்தலின் ஆரம்பம் நபி நூஹ் (அலை) அவர்களின் சமூகத்திலே தான் ஆரம்பமானது. அல்லாஹ் நபி நூஹ் (அலை) அவர்களை, அல்லாஹ் ஒருவனை மாத்திரமே வணங்குவதற்கும், அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த விக்கிரக வழிபாடுகளை விட்டுவிடுமாறு அழைப்பதற்கும் தூதராக அனுப்பிய போது, வேண்டுமென்றே மறுத்து அவர்கள் செய்து வந்த காரியங்களில் தொடர்ந்து இருந்து வந்தார்கள். மேலும் நபி நூஹ் (அலை) அவர்களை மறுப்பதன் மூலமும் முன்னோக்கினார்கள். அவர்கள் சொன்னதை குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது:
மேலும் அவர்கள் (தம் சமூகத்தாரிடம்) உங்களுடைய (வணக்கத்திற்குரிய) தெய்வங்களை நிச்சயாமாக நீங்கள் விட்டு விடாதீர்கள் வத்து, சுவாஉ, யகூஸ், யஊக், நஸ்ர் ஆகிய விக்கரகங்களையும் நிச்சயமாக நீங்கள் விட்டு விடாதர்கள் என்றும் கூறினார்கள். (நூஹ்:23)
இவ்வசனத்தைப் பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறிய விடயம் புகாரியில் பின் வருமாறு இடம் பெற்றுள்ளது. அப்பெயர்கள் நபி நூஹ் (அலை) அவர்களுடைய சமூகத்தில் வாழ்ந்த சாலிஹான நல்லடியார்கள். அவர்கள் இறந்த பின் ஷைத்தான் அம்மக்களிடம் தோன்றி அந்நல்லடியார்கள் அமர்ந்திருந்த அமர்விடங்களில் அவர்களுடைய சிலைகளை நாட்டுமாறும் அவர்களுடைய படங்களை மாட்டி வைக்குமாறும் அதற்கு அவர்களின் பெயர்களை பெயரிடுமாறும் கூறினான். அம்மக்களும் அதன்படி செய்து வைத்தார்கள். எனினும் அம்மக்கள் அதனை வணங்கவில்லை, ஆனால் அவர்கள் மரணித்த பின் அவர்களுக்குப் பின் வந்த சமுதாயம் அவர்களை வணங்க ஆரம்பித்தார்கள். (புகாரி 4920)
ஹாபிழ் பின் கையூம் அவர்களும், அதிகமான சலபுஸ்ஸாலிஹீன்களும் கூறியதாவது : அந்த நல்லடியார்கள் மரணித்த போது அவர்களின் கப்ருகளின் முன் ஆராதனை புரிந்து கொண்டிருந்தார்கள். பின் அதிக காலம் கழிந்த பின், பின்னர் வந்தவர்கள் அச்சிலைகளை வணங்கினார்கள்.
ஷிர்க் ஏற்படக் காரணம் நல்லடியார்கள் விடயத்தில் வரம்பு மீறுவதே:
இங்கு நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் ஆதமுடைய சந்ததியினரிடையே (ஷிர்க்) இணைவைத்தல் ஏற்பட்டதற்கான காரணம் நல்லடியார்கள் விடயத்தில் வரம்பு மீறியதே !
வரம்பு மீறுவது என்றால் சொல்லிலும் நம்பிக்கையிலும் கண்ணியப்படுத்துவதிலும் அளவுக்கதிகமாக செல்வதாகும். இதனால்தான் அல்லாஹ் கூறுகிறான்:
வேதக்காரர்களே.! உங்கள் மார்க்கத்தில் நீங்கள் அளவு கடந்து செல்லாதர்கள், இன்னும் அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள் நிச்சயமாக மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹ் அல்லாஹ்வுடய தூதரும் அவனுடைய வாக்கும் ஆவர். அல்லாஹ் மர்யமின் பால் அந்த வாக்கைப் போட்டான். (எனவே) அவரும் அவனிடமிருந்து வந்த ஓர் ஆன்மாதான் (அந்நிஸா : 171)
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் மரண தருவாயில் இருக்கும் போது தம்முடைய போர்வையை தம் முகத்தின் மீது போடலானார்கள். அது முகத்தை மறைத்த போது அதனை நீக்கி விட்டு பின் வருமாறு சொன்னார்கள்:
“யூத கிறிஸ்த்தவ்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக, அவர்கள் தங்கள் நபிமாரகளுடைய அடக்கஸ்தலங்களை வணக்கஸ்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள்”. அவர்கள் செய்ததை தம் சமுதாயத்தினருக்கு நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். அவர்கள் அப்படி செய்திராவிட்டால் நபி (ஸல்) அவர்களுடைய அடக்கஸ்தலத்தையும் அவ்வாறு செய்திருப்பார்கள். ஆனாலும் அவர்கள் அது வணக்கஸ்தலமாக ஆக்கப்படுவதை பயந்துள்ளார்கள். (புகாரி 435, 4441 முஸ்லிம் 529, 531)
எனினும் பின்னால் வந்தவர்கள் ஏராளமான பாடல்கள், கவிதைகள் மூலம் நல்லடியார்கள் விடயத்தில் வரம்பு மீறினார்கள். அல்லாஹ்விடம் மாத்திரம் உதவி தேடவேண்டிய விடயங்களில் நபி (ஸல்) அவர்களிடமும் ஏனைய நல்லடியார்களிடமும் உதவி தேடுமளவுக்கு எல்லை கடந்து சென்றார்கள். மேலும் மறைவான விடயங்களை அறிவதை நபி (ஸல்) அவர்களுடன் இணைத்துக் கூறலானார்கள். எந்தளவுக்கு என்றால் நபி (ஸல்) அவர்கள் நடந்த இனி நடக்கவிருக்கின்ற அனைத்து விடயங்களையும் அறியாமல் இவ்வுலகத்தை விட்டும் பிரிந்து செல்லவில்லை என்று வரம்பு மீறக்கூடிய சிலர் கூறினார்கள். தெளிவான குர்ஆனுக்கே இவர்கள் மாற்றம் செய்தார்கள்.
அவனிடமே மறைவானவற்றின் சாவிகள் இருக்கின்றன அவற்றை அவனையன்றி வேறெருவரும் அறிமயமாட்டாரர். (அல் அன்ஆம் :59)
மேலும் இறைவன் கூறுகிறான்.
நிச்சயமாக அல்லாஹ்விடமே மறுமை நாள் பற்றிய அறிவு இருக்கறது, அவனே மழையையும் இறக்கி வைக்கிறான் அவனே கர்ப்பங்களில் உள்ளவற்றை அறிகிறான் எந்த ஆன்மீவும் நாளை எதைச் சம்பாதிக்கும் என அறியாது, மேலும் எந்தப் பூமியில் தனக்கு மரணாம் ஏற்படும் என்பதை எந்த அத்மாவும் அறியாது நிச்சயமாக அல்லாஹ் நன்கறிகிறவன், நுட்பம் மிக்கவன். (லுக்மான்:34)
மேலும் நபி (ஸல்) அவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்:
மறைவானவற்றை நான் அறிந்திருந்தால் நன்மைகளையே அதிகமாக தேடிக் கொண்டிருப்பேன் தீமை என்னைத் தொட்டிருக்காது. (அல் அஃராப் : 188)
மேலும் இறைவன் கூறுகிறான்:
நபியே கூறுவீராக, வானங்கள் மற்றும் பூமியில் உள்ள மறைவான விடயங்களை அல்லாஹ்வையன்றி வேறு எவரும் அறியமாட்டார். (அந்நம்ல்:65)
தவ்ஹீத் அஸ்மா வஸிபாத்
பெயர்கள் மற்றும் பண்புகளில் அல்லாஹ்வை ஏகத்துவப்படுத்தல்.
அல்லாஹ் தன் திருமறை மூலமும் தன் தூதர் (ஸல்) அவர்கள் வாயிலாகவும் தனக்கு உறுதிப்படுத்தியிருக்கின்ற பெயர்களையும் பண்புகளையும் மறுக்காமல், மாற்றாமல், உருவகப்படுத்தாமல், ஒப்பாக்காமல் அப்படியே உறுதிப்படுத்த வேண்டும். அது பற்றிய வரைவிலக்கணங்கள் பின்வருமாறு:
1-அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் அவனது உயர்ந்த பண்புகளும் பரிபூரணமானது. இறைவன் கூறுகிறான்:
எவர்கள் மறுமையின் மீது ஈமான் கொள்ளவில்லையோ அவர்களுக்கே கெட்ட தன்மை இருக்கறது - அல்லாவற்வுக்கு மிக உயர்ந்த தன்மை இருக்கிறது மேலும் அவன் மிகைத்தவன் ஞானம் மிக்கவன் (அந்நஹ்ல்:60)
மேலும் அவன் கூறுகிறான்:
அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள், அவனுடைய திருநாமங்களை தவறாக பயன்படுத்துவோர்களை (பறக்கணித்து) விட்டு விடுங்கள் - அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் (தக்க) கூலி கொடுக்கப்படுவார்கள். (அல் அஃராப்: 180)
2- அல்லாஹ்வின் பெயர்களும் பண்புகளும் ஆதாரத்தின் அடிப்படையில் அமைந்தவையாகும். குர்ஆன் ஹதீஸ் மட்டுமே அவற்றுக்கு ஆதாரம். அவை இவ்வளவுதான் என்று திட்டமாக இல்லை. இன்னும் சொல்லப்போனால் அவற்றில் சில மட்டுமே அறியப்பட்டுள்ளன.
இறைவன் கூறுகிறான்.
ஏன்னுடைய இரட்சகன் (ஆகாதென்று) தடுத்திருப்பதெல்லாம் மானக் கேடான செயல்களை அவற்றில் வெளிப்படையானதையும் மறைமுகமானதையும் (இதர) பாவத்தையும் உரிமையின்றி வரம்பு மீறுதலையும் அல்லாஹ்விற்கு நீங்கள் இணைவைப்பதையும் அதற்கு எந்த வித ஆதாரத்தையம் அவன் இறுக்கி வைக்காதிருக்க இன்னும் நீங்கள் அறியாதவற்றை அல்லாவற்வின் மீது (பொய்யாகக்) கூறுவதையும் தான் என்று (நபியே) நீர் கூறுவீராக.” (அல்அஃராப்:33)
மீண்டும் இறைவன் கூறுகிறான்:
நபியே, எதைப்பற்றி உமக்குத் தீர்க்கமான அறிவில்லையோ அதை நீர் பின்பற்றாதீர் (ஏனெனில்) நிச்சயமாக செவி பார்வை இதயம் (அகிய) இவை ஒவ்வொன்றும் விசாரிக்கப்படக்கூடியதாக இருக்கிறது. (அல் இஸ்ரா:33)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “இறைவா! நிச்சயமாக நான் உனது அடியான், உன்னுடைய அடிமையின் (ஆதமின்) மகன். உன்னுடைய அடிமையின் (ஹவ்வாவின்) மகன். என்னுடைய நெற்றிமுடி உன்னுடைய கையிலே இருக்கிறது. என்னிலே உன்னுடைய தீர்வே அமுல்படுத்தப்படுகிறது. என் விடயத்தில் உனது தீர்ப்பு நீதமானதே. ஆகவே உனக்கு நீயே சூட்டிக்கொண்ட அல்லது உனது வேதத்தில் இறக்கி வைத்த அல்லது உனது படைப்புகளில் எதற்காவது நீ அறிவித்துக் கொடுத்த அல்லது உனது மறைவான ஞானத்தில் நீ தக்க வைத்திருக்கும் ஒன்வொரு பெயரைக் கொண்டும், குர்ஆனை எனது இதயத்திற்கு குளிர்ச்சியாகவும் எனது உள்ளத்திற்கு ஒளிமயமாகவும் என் கவலையை நீக்கக்கூடியதாகவும் என் இடரையும் பதட்டத்தையும் போக்கக்கூடியதாகவும் ஆக்குவாயாக! என்று கேட்கிறேன்”. (அஹ்மத் 3712)
3-அல்லாஹ்வுடைய பெயரையோ, வர்ணனையையோ உதாரணம் காட்டி சொல்லக் கூடாது.
அல்லாஹ் கூறுகிறான்:
அவனைப் போன்ற எப்பொருளும் இல்லை. அவனே (யாவற்யுறைம்) செவியேற்கிறவன் பார்க்கிறவன் (அஷ்ஷரா: 11)
மேலும் இறைவன் கூறுகிறான்:
அல்லாஹ்வுக்கு நீங்கள் உதாரணங்களைக் கூறாதீர்கள், நிச்சயமாக அல்லாஹ் (சகலவற்றையும்) அறிவான் நீங்களோ அறிய மாட்டீர்கள். (அந்நஹ்ல்:74)
அதே போன்று குர்ஆன் ஹதீஸில் வந்திருக்கும் அல்லாஹ்வினுடைய எந்தப் பெயரையோ அல்லது பண்பையோ மறுக்கக் கூடாது.
ஏனெனில் இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும் அவனுடைய பெயர்களையும் பண்புகளையும் ஒன்றுமில்லாமல் ஆக்குவதுமாகும்.
இது குர்ஆன் ஹதீஸில் கையாடல் செய்வதாக அல்லது அவற்றை பொய்யாக்குவதாக அமையும். அதுமட்டுமல்லாமல் அல்லாஹ்வை குறைத்து மதிப்பிடுவதாகவும் குறைபாடுள்ள மற்ற படைப்பினங்களோடு அவனை ஒப்பாக்குவதாகவும் அமையும்.
4-அல்லாஹ்வுடைய பெயர்கள் மற்றும் பண்புகளுடைய பொருள் அறியப்பட்டவையாகும். எனினும் அதன் யதார்த்த நிலை அறியப்படாதவையாகும். அதனை அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அறியார்.
அல்லாஹ் கூறுகிறான்:
“அவர்கள் அவனைத் தங்கள் கல்வியால் தீர அறிந்து கொள்ள மாட்டார்கள்” (தாஹா:110)
5-இரண்டு பெயர்கள் ஒன்றாக இருப்பதால் அவ்விரண்டு பெயர்களுக்குரியவர்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது அவசியமல்ல
என்வாறெனில் அல்லாஹ் அவனுடைய படைப்புகளின் சில பெயர்களை தனக்குப் பெயராக சூட்டியுள்ளான். அதே போல் அவனுடைய படைப்புகளின் சில பண்புகளை தனது பண்பாக வர்ணித்துள்ளான்.
உதாரணமாக: கேள்வி, பார்வை. எனினும் அவனுடைய கேள்வி படைப்புகளின் கேள்வியைப் போலன்று. அவனுடைய பார்வை படைப்புகளின் பார்வையைப் போலன்று.