நபி (ஸல்) அவர்கள் ஒளியாக இருந்தார்களா?


கேள்வி : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒளியாக இருந்தார்களா? அல்லது மனிதரா?மற்றும் அவர்கள் வெளிச்சத்தில் இருந்தாலும் அவர்களுக்கு நிழல் என்பது இருக்கவில்லை என்பது உண்மையா?

பதில் : நமக்கு அனுப்பப்பட்ட தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆதமுடைய பிள்ளைகளில் தலைமையானவர் மற்றும் அவர் ஆதமுடைய சந்ததிகளிலுள்ள ஒரு மனிதர், (அவர் ஒரே) தாய் தந்தையிலிருந்து பிறப்பிக்கப்பட்டார், உணவு உண்டார், பெண்களை திருமணம் செய்தார், பசி இருந்தது இன்னும் நோய்வாய்ப்பட்டார், சந்தோஷமடைவதுடன் கவலையும் அடைந்தார், அத்துடன் மனிதத் தன்மையின் வெளிப்பாடுகளில் ஒன்றான உயிர்கள் மரணிப்பதைப்போன்று அவர்களையும் அல்லாஹுத்தஆலா மரணிக்கச் செய்தான். என்றாலும் நபித்துவம், தூதுத்துவம், வஹீ போன்றவைகள் தான் அவர்களை சிறப்பித்தது.

அல்லாஹுத்தஆலா கூறுகிறான் :

{قُلْ إِنَّمَا أَنَا بَشَرٌ مِّثْلُكُمْ يُوحَى إِلَيَّ أَنَّمَا إِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ} (الكهف/110)

“(நபியே!) நீர் கூறுவீராக; நிச்சயமாக நான் உங்களைப்போன்ற ஒரு மனிதனே! நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹி அறிவிக்கப்படுகிறது.” (அல்கஃப் – 110)

மேலும், மனிதத் தன்மையில் அனைத்து நபிமார்களினதும், இறைத்தூதர்களினதும் நிலைமையைப்போன்றே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய நிலைமையும்.

அல்லாஹுத்தஆலா கூறுகிறான் :

{وَمَا جَعَلْنَاهُمْ جَسَداً لا يَأْكُلُونَ الطَّعَامَ وَمَا كَانُوا خَالِدِينَ} (الأنبياء/8)

“அன்றியும் நாம் அவர்களுக்கு உணவு அருந்தாத உடலை அமைக்கவில்லை. மேலும், (பூமியில்) நிரந்தரமானவர்களாகவும் அவர்களிருக்கவில்லை.” (அல்அன்பியா -08)

றஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனிதத்தன்மையில் ஆச்சரியப்பட்டவர்களை அல்லாஹுத்தஆலா நிராகரிக்கின்றான்.

அல்லாஹுத்தஆலா கூறுகிறான் :

{وَقَالُوا مَالِ هَذَا الرَّسُولِ يَأْكُلُ الطَّعَامَ وَيَمْشِي فِي الأَسْوَاقِ} (الفرقان/7)

“மேலும் அவர்கள் கூறுகின்றனர் ; இந்தத் தூதருக்கென்ன? அவர் (மற்ற மனிதர்களைப் போன்றே) உணவு உண்ணுகிறார். இன்னும் கடைவீதிகளில் நடக்கிறார்.” (அல்புர்கான் -07)

எனவே, குர்ஆனில் நபியவர்களின் தூதுத்துவம், மனிதத்தன்மையில் எந்த விடயங்களைக் தீர்மானமாகக் கூறியுள்ளதோ அவற்றுக்கு அப்பால் நாங்களாகவே வர்ணனை செய்வது கூடாது. அந்த அடிப்படையில் நபியவர்கள் ஒளியானவர் அல்லது அவருக்கு நிழல் கிடையாது அல்லது அவர்கள் ஒளியினால் படைக்கப்பட்டார்கள் என்றெல்லாம் வர்ணிப்பது கூடாது. மாறாக இவைகளெல்லாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் மார்க்கத்தில் தடுக்கப்பட்ட மிதமிஞ்சிய செயற்பாடுகளாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : “மர்யமின் புதல்வர் ஈஸா எல்லை மீறிப் புகழப்பட்டதைப் போன்று என்னை நீங்கள் எல்லை மீறிப் புகழாதீர்கள். மாறாக, (என்னைக் குறித்து நான்) அல்லாஹ்வின் அடிமை என்றும் அவனுடைய தூதர் என்றும் செல்லுங்கள்” என்றார்கள். (ஆதாரம் : புஹாரி-6830)

மலக்குமார்கள் தான் ஒளியினால் படைக்கப்பட்டார்கள் என்றும், ஆதமுடைய சந்ததிகளில் எவரும் ஒளியினால் படைக்கப்படவில்லை என்றும் நபியவர்களின் கூற்று சான்று பகர்கின்றது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : “வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டனர். ‘ஜின்’கள் தீப்பிழம்பால் படைக்கப்பட்டனர். (ஆதி மனிதர்) ஆதம், உங்களுக்கு (குர்ஆனில்) கூறப்பட்டுள்ளதைப் போனறு (களிமண்ணால்) படைக்கப்பட்டார். (ஆதாரம் : முஸ்லிம்-2996)

இமாம் அல்பானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது “அஸ்ஸில்ஸிலா அஸ்ஸஹீஹா” (458)ல் குறிப்பிட்டார்கள்;
“மக்கள் மத்தியில் பிரபல்யமாக காணப்படுகின்ற ஹதீஸாகிய “ஜாபிரே! உமது நபியின் ஒளியை முதலாவதாக படைத்தான்” என்ற ஹதீஸும் இவைபோன்ற ஹதீஸ்களான நபியவர்கள் ஒளியினால் படைக்கப்பட்டார்கள் என்ற ஹதீஸ்களை நிராகரிக்கக் கூடியதாக மேற்கூறப்பட்ட ஹதீஸ் (முஸ்லிம் : 2996) ஆதாரமாக உள்ளது. ஏனெனில் இந்த ஹதீஸில் மலக்குமார்கள் மாத்திரமே ஒளியினால் படைக்கப்பட்டார்கள் என்றும் ஆதமோ, ஆதமுடைய சந்ததிகளோ ஒளியினால் படைக்கப்படவில்லை என்பதற்கு தெளிவான சான்றாக உள்ளது. எனவே, இந்த விடயம் தொடர்பாக எச்சரிக்கையாக இருப்பதுடன், பொடுபோக்காளர்களாக இருக்காதீர்கள்.”

பத்வாக்கள் வழங்குவதற்கான நிலையான குழுமத்திடம் பின்வருமாறு கேள்வி கேட்கப்பட்டது ;
இங்கே பாகிஸ்தானிலே “பர்லவீ”கள் எனும் அறிஞர் கூட்டம் உள்ளது. அவர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நிழல் இல்லை என்று உறுதியாக நம்பிக்கைகொள்கின்றார்கள். அவர்களின் இந்த நிலைப்பாட்டால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனிதத்தன்மை அற்றவர் என்பதை சுட்டிக்காட்டுகின்றது. எனவே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நிழல் இல்லை என்கின்ற ஹதீஸ் உண்மையாதா?

அவர்களுடைய பதில் பின்வருமாறு இருந்தது;
றஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனிதர்களை விட்டும் மனிதத் தன்மைக்கு வேறுபட்டவர்களல்ல என்பதை உணர்த்தும் அல்குர்ஆன் வசனங்கள் மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் மேற்கூறப்பட்ட (நபியவர்களுக்கு நிழலில்லை எனும்) கூற்றை நிராகரிக்கக் கூடியதாக இருக்கின்றது. அத்துடன் அவர்களுக்கு மற்ற மனிதர்களைப்போன்று நிழல் இருந்தது. அல்லாஹுத்தஆலா அவர்களை ஒரு தாய் தந்தையிலிருந்து படைத்து மனிதத்தன்மையிலிருந்து வேறுபடுத்தவில்லை. என்றாலும் அவர்களை தூதுத்துவத்தின் மூலம் கண்ணியப்படுத்தினான்.

அல்லாஹுத்தஆலா கூறுகிறான் ;

“(நபியே!) நீர் கூறுவீராக , நிச்சயமாக நான் உங்களைப்போன்ற ஒரு மனிதனே! நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹி அறிவிக்கப்படுகிறது.” (அல்கஃப் – 110)

மேலும் கூறுகிறான்;

{قَالَتْ لَهُمْ رُسُلُهُمْ إِنْ نَحْنُ إِلاْ بَشَرٌ مِثْلُكُمْ} (إبراهيم : 11)

“(அதற்கு) அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்களே தவிர வேறில்லை.” (இப்ராஹீம் 11)

எனவே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் ஒளியினால் படைக்கப்பட்டார்கள் என்பதைப் பொருத்தவரை அது ஒரு இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும்.” (பத்வாக்கள் வழங்குவதற்கான நிலையான குழு : 1/464)

யாவும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவன் மாத்திரமே

அரபியில் : https://islamqa.info/ar

தமிழில் : றஸீன் அக்பர் (மதனி)
அழைப்பாளன் : தபூக் அழைப்பு நிலையம் – சவுதி அரேபியா.

Previous Post Next Post