நம்மிடம் புகுத்தப்படும் நவீன சூதாட்டங்கள்!


சூதாட்டம் என்றால் என்ன?

ஒருவர் தம்முடைய பணம் அல்லது பொருளை பந்தயப் பொருளாக வைத்து விளையாடுவதை சூதாட்டம் என்கிறோம். அதாவது, இத்தகைய விளையாட்டுகளில் பங்குபெறுபவர்கள் அனைவரும் தங்களின் பணத்தையோ அல்லது வேறு ஏதேனும் பொருளையோ கொடுத்து, பின்னர்அதில் வெற்றி பெறுவோர் அதனை எடுத்துக் கொண்டு தோல்வியடைந்தவர்களுக்கு ஒன்றும் கிடைக்காமல் செய்வதற்கு சூதாட்டம் எனப்படுகின்றது.

இத்தகைய சூதாட்டங்களில் விளையாட முனைவோரின் நோக்கம் குறுகிய காலத்தில், உடல் உழைப்பின்றி பணத்தை அடைவதேயாகும். இது போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவோருக்கு இவைகள் ஒருவித போதையைத் தந்து அதிலிலேயே அவர்களை தொடர்ந்து உழலச்செய்கின்றது! அதனால் தான் இது போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டவர்கள் அதில் சிக்கி அதிலிருந்து மீளமுடியாமல் தங்களின் பொருளாதாரத்தை இழப்பதோடு மட்டுமல்லாமல் தாங்கள் கடுமையாக உழைத்து ஆசை, ஆசையாகச் சேர்த்த வீடு மற்றும் இன்னபிற சொத்து சுகங்களையும் இழந்து, பெரும் கடனளாகியாகி அதன் நெருக்கடிக்குள்ளாகி இறுதியில் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

பல ஆண்டுகளாக நாம் பார்த்தும் சூதாட்டங்களான,

– விளையாட்டுகளில் நேரடியாக பணம் கட்டி விளையாடுவது!

– பிறர் விளையாடும் போது யார் வெற்றி பெறுவர்? யார் தோல்வியுறுவர்? என்று பணம் கட்டி பந்தயம் செய்வது!

– குதிரை ரேஸ், ஒட்டக ரேஸ் மற்றும் இது போன்ற ரேஸ்களில் பணம் கட்டி எது வெற்றி பெறும் என பந்தயம் கட்டுவது!

– லாட்டரி சீட்டுகளில் பணம் கட்டி குலுக்கல் முறையில் வெற்றி பெற்றவர்களுக்கு அந்தப் பணம் கிடைப்பதும் மற்றவர்கள் தங்களின் பணத்தை இழப்பதும்!

– கேசினோ போன்ற சூதாட்டக் கிளப்புகளில் பணத்தைக் கட்டி விளையாடுவது; அதில் வெற்றி பெற்றால் கூடுதல் பணமும் தோல்வியடைந்தால் பணத்தை இழப்பது!

– தாயம், ஆடு புலி ஆட்டம், சீட்டுக் கட்டு மூலம் ரம்மி போன்ற எந்தவொரு விளையாட்டிலும் பணம் கட்டி விளையாடுவது; வெற்றி பெற்றவர் பணத்தை பெறுவதும் தோல்வியடைந்தவர் பணத்தை இழப்பதும்!

இவை போன்று இன்னும் பலவகை சூதாட்டங்கள் இருக்கின்றன!

பண்டைய காலம் முதல் இந்த சூதாட்டங்கள் இருந்து வருகின்றது! மக்களின் கலாச்சாராத்திற்கேற்ப பல்வேறுறு இடங்களில் மாறுபாடுகளுடன் காணப்பட்ட சூதாட்டங்கள் தற்போது காலத்திற்கேற்பவும் பலவித பரிணாம வளர்ச்சியை அடைந்திருக்கின்றன!

தகவல் தொழில்நுட்பம் மேம்பாடு அடைந்து மொபைல் புரட்சி நடந்துவரும் நவீன யுகத்தில் இத்தகைய சூதாட்டங்கள் நம் விரல் நுனியில் கிடைக்கின்றது! ஆம்! முன்பெல்லாம், சூதாட்டக் கிளப்புகளில் நடைபெற்ற சூதாட்டங்களை நமது இல்லங்களுக்கே வந்து நமது விரல் நுணியில் தருகின்றார்கள்! அதையும், தற்போதைய மிகப்பிபலமான கிரிக்கெட் மற்றும் திரையுலக நட்சத்திரங்களைக் கொண்டு விளம்பரம் செய்து அதைப் பற்றிய ஆவலை உண்டு பண்ணி இத்தகைய சூதாட்டங்களில் ஈடுபட நம்மைத் தூண்டுகின்றனர்.

அதுமட்டுமின்றி கிரிக்கெட் போன்ற பிலபலமான விளையாட்டுகளிலும் கூட இத்தகைய சூதாட்டங்கள் ஊடுருவியிருப்பதை அன்றாடச் செய்தகளில் பார்க்கின்றோம்.

– ஆன்லைன் ரம்மி,
– போக்கர்,
– ஐபில்பெட்,

இதுபோன்ற எண்ணற்ற பல ஆன்லைன் கேம்ஸ் தற்போது மக்களிடையே திணிக்கப்படுகின்றன. (இன்னும் பல ஆன்லைன் சூதாட்டங்கள் இருக்கின்றன. அவைகளின் பெயரைக் குறிப்பிட்டு நாமே அவைகளுக்கு விளம்பரம் தேடித்தர விரும்பவில்லை)

இத்தகைய ஆன்லைன் விளையாட்டுகளுக்குப் பல இளைஞர்கள் அடிமையாகி தங்களின் பொருளாதாரத்தை இழப்பதோடு இறுதியில் தங்களின் உயிரையும் மாய்த்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுபதை அன்றாடச் செய்திகளில் பார்க்க முடிகின்றது!

சிறுவர், சிறுமிகளிடம் புகுத்தப்படும் சூதாட்டங்கள்!

இந்த சூதாட்டங்கள் பெரியவர்களை மட்டுமின்றி நமது சிறுவர், சிறுமியர்களையும் கூட விட்டுவைக்கவில்லை! பெரிய மால்களிலும், திருவழிhக்களில் போடப்படும் கடைகளிலும் விளையாட்டுகள் என்ற போர்வையில் பலவிதமான சூதாட்டங்கள் நமது சிறார்களிடம் புகுத்தப்படுகின்றன!

பணம் கட்டி பொம்மையை எடுக்கும் விளையாட்டு, வளையங்களை பொருட்களின் மீது வீசச்செய்யும் விளையாட்டு, பொருட்கள் வரையப்பட்ட லக்கி வீலை சுற்றிவிடும் விளையாட்டு போன்ற பல குழந்தைகள் விளையாடும் கேம்ஸ்களைப் பற்றிக் கூறலாம்!

இவைகள் அனைத்திலும் குழந்தைகளுக்கு அங்கு வைக்கப்பட்டிருக்கும் பொம்மைகள் மற்றும் இன்னபிற பொருட்களின் மீது ஆசைக் காட்டி பணம் கட்டி விளையாட வைத்து தோல்வியடைந்தவர்களுக்கு ஒன்றும் கிடைக்காமல் ஏமாற்றப்படுகின்றனர். இதுவும் சூதாட்டமேயன்றி வேறில்லை!

இன்சூரனஸ் மற்றும் வாரண்டி பெயர்களில் சூதாட்டம்!

இந்த சூதாட்டங்கள் விளையட்டு மூலமாக மட்டுமின்றி தற்போது பல்வேறு விதமாக நம்மிடையே திணிக்கப்படுகின்றது!

– ஜெனரல் இன்சூரன்ஸ்

– பொருள்களுக்கான வாரண்டி

போன்ற நவீன சூதாட்டங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

ஜெனரல் இன்சூரன்ஸைப் பொருத்தவைர, உனக்கு ஏதேனும் ஒன்று நடந்தால் நீ கட்டிய பணத்துடன் மேலதிகமாக உனக்கோ அல்லது உன் குடும்பத்தாருக்கோ கிடைக்கும்! உனக்கு எந்தவித விபத்தும் நேரவில்லையெனில் நீ கட்டிய பணம் எனக்கு! என்ற இந்த அடிப்படையில் நடக்கும் இந்த நிச்சயமற்ற தன்மையின் அடிப்படையில் நடக்கும் இந்த வியாபாரம் தான் சூதாட்டத்தின் ஒரு அங்கமாகும்!

இதுபோலவே வாரண்டி என்ற பெயரில் நடைபெறும் சூதாட்டம்!

தற்போது, நாம் எந்தவித மின் மற்றும் மின்னனு சாதனங்களை வாங்கினாலும் நம்மிடம் அதிகப்படியான வாரண்டி காலக்கெடு என்ற பெயரில் நம்மிடம் ஆசை வார்த்தையைக் காட்டி அதிகம் பணம்பெற முயற்சிப்பர்! அதாவது, நாம் வாங்கும் பொருளுக்கு ஒரு வருடம் வாரண்டி இருந்தால் மேற்கொண்டு ஒரு வருடம் வரை அந்த வாரண்டியை நீட்டிக்கலாம் என்றம் அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்த வேண்டும் என்றும் கூறி அதிக தொகையை வசூலிக்க முயற்சிப்பர்.

அதாவது, குறிப்பிட்ட இந்தக் காலக்கெடுவில் நீங்கள் வாங்கிய பொருள் பழுமடைந்தால் அதை பணம் ஏதுமின்றி நாங்கள் சரிசெய்து தருவோம்! அவ்வாறு பழுதாகவில்லையென்றால் நீங்கள் கட்டிய பணம் முழுவதும் எங்களுக்கு தான் என்பது தான் இந்த வாரண்டியின் சாரம்சம்.

இத்தகைய வியாபாரமும் ஒரு சூதாட்டமேயன்றி வேறில்லை!

சூதாட்டம் குறித்த இறைவனின் எச்சரிக்கைகள்!

(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்: “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது” (அல்-குர்ஆன் 2:219)

இறைவன் மது, சூதாட்டம், சிலை வணக்கம், ஜோதிடம் இந்நான்கையும் இணைத்து கூறும் அல்லாஹ், இவைகளனைத்தும் மக்களை வழிகெடுக்கும் ஷைத்தானின் சூழ்ச்சிகள் என நம்மை எச்சரிக்கைச் செயகின்றான்!

“ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.” (அல்-குர்ஆன் 5:90)

“நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?” (அல்-குர்ஆன் 5:91)

சூதாட்டம் குறித்த நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகள்!

“மதுவும், சூதாட்டமும் இருமுகம் கொண்ட மத்தளங்களாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அம்ருப்னு ஆஸ் (ரலி) நூல்: அபூதாவூத்

“மக்களுக்கு ஒரு காலம் வரும் அக்காலத்தவர் தமது சம்பாத்தியம் ஹலாலானதா, ஹராமானதா, முறையானதா, முறையற்றதா என்பவனவற்றைப் பொருட்படுத்தாது இருப்பர்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி

சிலை வணக்கத்துடன் இறைவன் இணைத்துக் கூறிய இந்த சூதாட்டங்களின் எந்த வடிவமும் நமது வாழ்வில் கலந்துவிடாதவாறு நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.
Previous Post Next Post