அல் இஸ்திகாமா - மார்க்கத்தில் உறுதியுடன் நிலைத்திருத்தல்

بــــــــــــــــســـــم الله الرحـــــــمــــن الرحـــــــــيــم

الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده اما بعد

அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்தின் கொள்கையில் மிக முக்கியமானதொரு அம்சமே இஸ்திகாமத் என்பதாகும். இஸ்திகாமத் என்றால் மார்க்கத்தில் உறுதியாக நிலைத்திருத்தல் என்று பொருள்படும். 

இஸ்திகாமத்துடன் மார்க்கத்தைப் பின்பற்றுவதால் அல்லாஹ்விடமிருந்து வருகின்ற உதவியைப் பற்றி அல் குர்ஆனில் அல்லாஹு ஸூப்ஹானஹூவ தஆலா இவ்வாறு கூறுகிறான்,

إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ 

நிச்சயமாக எங்கள் இரட்சகன் அல்லாஹ்தான் என்று கூறி பின்னர் (அதன் மீது) உறுதியாக நிலைத்து இருந்தார்களே அத்தகையோர், அவர்கள் மீது மலக்குகள் (மரண வேளையில்) இறங்கி (செல்ல இருக்கும் மறுமையைப் பற்றி) நீங்கள் பயப்படாதீர்கள். (நீங்கள் இவ்வுலகில் விட்டுச் செல்லும் மனைவி, மக்கள், சொத்து சுகம் யாவற்றையும் பற்றி) கவலைப்படாதீர்கள். நீங்கள் வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்தீர்களே அத்தகைய சுவனபதியைக் கொண்டு நன்மாராயம் பெறுங்கள் ( என்று கூறுவார்கள் ). (41:30-32)

இஸ்திகாமத் - உறுதியாக நிலைத்திருத்தல் என்பதில் அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்தினருக்கும், மற்ற பிரிவினர்களுக்குமிடையில் வேறுபாடு காணப்படுகிறது. இதற்கான காரணம் என்னவென்றால், மார்க்கத்தை உறுதியாக எடுத்து நடப்பதில் அஹ்லுஸ்ஸுன்னாவைச் சேர்ந்தவர்களைப் போன்று மற்ற பிரிவுகள் உறுதித் தன்மையோடு நடந்து கொள்வதில்லை.

உதாரணமாக, ஈமானின் வரைவிலக்கணத்தைக் கூறலாம். அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்தினர் ஈமானுக்குக் கூறும் வரை விலக்கணம் என்னவென்றால்,

قَوْلٌ بِاللِّسَانِ وَتَصْدِيْقٌ بِالْقَلْبِ وَعَمَلٌ بِالْجَوَارِحِ يَزِيْدُ بِالطَّاعَةِ وَيَنْقُصُ بِالْمَعْصِيَةِ

ஈமான் என்பது நாவால் மொழிந்து உள்ளத்தால் நம்பி உடலுறுப்புகளால் செயற்படுத்துவது ஆகும். மேலும் அல்லாஹ்வுக்கு வழிப்படுவதைக்கொண்டு ஈமான் அதிகரிக்கும். அவனுக்கு மாறுசெய்வதைக்கொண்டு ஈமான் குறையும்.

இவ்வரைவிலக்கணத்தின் அடிப்படையில், நாம் “லாயிலாஹ இல்லல்லாஹ்” என்ற  கலிமாவை நாவினால் மொழிவது மட்டுமே ஈமான் பரிபூரணமாகாது. மாறாக நாம் எதனைச் மொழிகின்றோமே அதன் நம்பிக்கை நம் உள்ளத்தில் உறுதியாகப் பதிந்திருக்கவும் வேண்டும். அத்தோடு அதனை நமது வாழ்வில் நடைமுறைப்படுத்தவும் வேண்டும். இதுவே நமது ஈமானாக இருக்க வேண்டும்.இவ்வாறு ஈமானின் வரை விலக்கணத்தைப் புரிந்து நாம் வாழும் போதுதான் பூமியில் அல்லாஹ்வின் மார்க்கம் நிலைநாட்டப்படுகிறது. 
ஈமானின் வரைவிலக்கணத்தை அதன் சரியான வழிமுறையில் விளங்காததன் காரணமாகவே முர்ஜிஆ என்ற கூட்டம் வழிகெட்டுப் போனது. முர்ஜிஆவின் கொள்கையின் படி, “லாயிலாஹ இல்லல்லாஹ்” என்ற  கலிமாவை நாவால் மொழிந்து விட்டால் ஈமான் பரிபூரணமாகிவிடும். அதனை வாழ்வில் செயற்படுத்தினாலும், இல்லாவிட்டாலும் அது ஈமான் கொண்டதில் குறைபாடாக அமையாது என்பதே முர்ஜிஆக்களின் கொள்கையாகும். இதன் விளைவாக முர்ஜிஆக்களும், அக்கொள்கையின் தாக்கத்துக்குள்ளான பிரிவுகளும் தாங்கள் நம்பிக்கை கொண்டதை செயலில் கொண்டு வருவது அவசியமானதெனக் கருதவில்லை.

அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள், தங்கள் மார்க்கத்தை நிலைநாட்டுவதில் கவனக் குறைவாக நடந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் எதனைத் தங்களின் மார்க்கமென்றும், அல்லாஹ்வின் சட்டமென்றும், நபியின் வழிமுறையென்றும் தெரிந்து கொண்டார்களோ அதனை அவர்கள் தங்களின் வாழ்வில் நிலை நாட்டுவார்கள். அவ்வாறு செய்வதை விட்டும், அவர்களைத் தடுப்பதற்கும் உலகில் எதுவும் காரணமாக இருக்காது. அவர்களுக்கு வருகின்ற சோதனைகள் அவர்களின் செயற்பாடுகளை நிறுத்திவிட முடியாது. அவர்கள் அல்லாஹ்வின் பின் வரும் வசனத்தை நினைவு கூர்வார்கள்.

الم  أَحَسِبَ النَّاسُ أَن يُتْرَكُوا أَن يَقُولُوا آمَنَّا وَهُمْ لَا يُفْتَنُونَ  وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِن قَبْلِهِمْ ۖ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ

  أَمْ حَسِبَ الَّذِينَ يَعْمَلُونَ السَّيِّئَاتِ أَن يَسْبِقُونَا ۚ سَاءَ مَا يَحْكُمُونَ     

அலிப் லாம் மீம். மனிதர்கள் 'நாங்கள் விசுவாசம் கொண்டோம்' என்று அவர்கள் கூறுவது கொண்டு (மட்டும்) அவர்கள் விட்டுவிடப்படுவார்கள் என்றும், அவர்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட மாட்டார்கள் என்றும் எண்ணிக் கொண்டார்களா?. இவர்களுக்கு முன்னிருந்தோரையும் திட்டமாக நாம் சோதித்திருக்கி்ன்றோம். ஆகவே (விசுவாசம் கொண்டோம் என்று கூறும் இவர்களில்) உண்மை சொல்பவர்களை, நிச்சயமாக அல்லாஹ் அறிவான். (அவ்வாறே இவர்களில்) பொய்யர்களையும் நிச்சயமாக அவன் அறிவான். அல்லது தீமையைச் செய்கின்றார்களே அவர்கள் நம்மை விட்டும் தப்பித்துக் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டார்களா? (அவ்வாறாயின் இதைப் பற்றி) அவர்கள் தீர்மானம் செய்தது மிகக் கெட்டது. ( அன்கபூத் : 1— 4 )

நாம் உண்மையில் மார்க்கத்தைப் பின்பற்றுபவர்கள்  என்றால் இரட்சகன் நமக்குத் தந்துள்ள தெளிவை உறுதியோடு நிலை நாட்டுவதில் கவனமின்றி செயற்படக் கூடாது. ஏனெனில் நாம் செய்பவை அல்லாஹ்வுக்காக செய்யப்படுவதாகும். இப்பண்பில்தான் அஹ்லுஸ்ஸுன்னாவைச் சேர்ந்தவர்களும், அதனைச் சேராதவர்களும் வேறுபடுகின்றனர். எனவே நாம் மார்க்கத்தைத் தெளிவாக அறிந்த பின்பு, அதனை நாவால் சொல்வதோடும் உள்ளத்தால் நம்புவதோடும் நின்றுவிடாமல் அதனை நிலைநாட்டுபவர்களாகவும் இருக்க வேண்டும்.

அதன் மூலம்தான் தன்னிலும், சமூகத்திலும் மாற்றமும் முன்னேற்றமும் உருவாகும். அவ்வாறு அன்று ஸஹாபாக்கள் செயற்பட்டதனாலேயே அந்த சமூகத்தில் சீர்திருத்தமும், மாற்றமும், முன்னேற்றமும் ஏற்பட்டன. 
எனவேதான் அந்த ஸஹாபாக்களைப் பாராட்டி அல்லாஹு தஆலா பின்வருமாறு கூறுகிறான்,

  كُنتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ وَلَوْ آمَنَ أَهْلُ الْكِتَابِ لَكَانَ خَيْرًا لَّهُم مِّنْهُمُ الْمُؤْمِنُونَ وَأَكْثَرُهُمُ الْفَاسِقُونَ 

(விசுவாசம் கொண்டோரே) மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தவர்களிளெல்லாம்) மிக மேன்மையான சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள். (ஏனெனில்) நன்மையான காரியங்களை நீங்கள் ஏவுகிறீர்கள். தீமையை விட்டும் (அவர்களை) நீங்கள் விலக்குகிறீர்கள். மேலும் நீங்கள் அல்லாஹ்வை விசுவாசிக்கிறீர்கள்.  (ஆல இம்ரான் : 110)

மேற்கூறிய வசனத்தில் அல்லாஹு தஆலா ஸஹாபாக்களிடம் இருப்பதாகக் குறிப்பிட்டுக் காட்டுகின்ற பண்புகள் எமது வாழ்விலும் வர வேண்டுமெனில் நாம் நமது வாழ்வை ஈமானோடு பின்னிப் பிணைந்ததாக அமைத்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் நாம் நம்பிக்கை கொண்டதையும், நாம் சொல்வதையும் எமது வாழ்வில் நிலை நாட்டுபவர்களாக இருக்க வேண்டும்.

இதற்கு மாற்றமாக இயக்கவாதிகளைப் போன்று நடந்து கொள்ளக் கூடாது. ஏனெனில் அவர்களைப் பொருத்தவரை அவர்களின் வாழ்வில் மார்க்கத்தை நிலை நாட்டுவதை அவசியமாகக் கருதுவதில்லை. குறிப்பிட்ட சில விடயங்களைச் செய்வதாலும், அமல்களின் சிறப்புகளைப் பற்றி அவர்களின் சபைகளில் பேசுவதாலும் அவர்கள் மார்க்கத்தைப் பூரணமாக நிலைநாட்டிவிட்டதாகக் கருதுகின்றனர். அவர்கள் வரைந்துள்ள எல்லைக்கு வெளியே எந்த மார்க்க விடயங்களையும் கவனிக்க மாட்டார்கள். அதனை நிலைநாட்டுவதற்குப் பின்வாங்குவதோடு அதற்கென காரணங்களைக் கூறி நழுவியும் விடுகின்றனர். இதனையே அனைத்து இயக்கவாதிகளும், பிரிவினர்களும் தங்களின் வழிமுறையாக அமைத்துக் கொண்டனர். 

அஹ்லுஸ்ஸுன்னாவைச் சேர்ந்தவர்களை அல் குர்ஆன், ஸுன்னாவை நிலைநாட்டுவதை விட்டும் திசை திருப்ப முடியாது. அவர்கள் ஆதாரங்களை உறுதியாக அறிந்து கொண்டால் அதில் உறுதியுடன் செயற்படுவார்கள். அங்கும் இங்கும் வீசுகின்ற மயக்கமான காற்றுக்கு அவர்கள் வளைந்து கொடுப்பவர்களல்ல. அஹ்லுஸ்ஸுன்னாவைப் பொருத்தவரை இவ்வுலகில் அவர்களைச் சுற்றி என்ன நிகழ்ந்த போதும் மார்க்கத்தை உறுதியோடு நிலைநாட்டுவதற்கே முன்னுரிமை அளிப்பார்கள். அதன் பின்புதான் மற்ற விடயங்களுக்கு இடம் கொடுப்பார்கள். அனைத்துக் காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே உள்ளது என்பதை அவர்கள் உறுதியாக நம்புவார்கள். எனவே செயற்படுவதில் அவர்கள் பின்வாங்குவதில்லை.

இதனை அல்லாஹு தஆலா அவனது வேதத்தில் கூறுகிறான்,

  الَّذِينَ إِن مَّكَّنَّاهُمْ فِي الْأَرْضِ أَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ وَأَمَرُوا بِالْمَعْرُوفِ وَنَهَوْا عَنِ الْمُنكَرِ وَلِلَّهِ عَاقِبَةُ الْأُمُورِ 

அவர்கள் எத்தகையோரென்றால், நாம் அவர்களுக்கு பூமியில் (காரியங்களை நிர்வகிக்கும்) ஆற்றலை ஏற்படுத்திக் கொடுத்தால் அவர்கள் தொழுகையை முறையாக நிறைவேற்றுவார்கள். ஸகாத்தையும் கொடுத்து வருவார்கள். நன்மையை ஏவி தீமையை விட்டும் விலக்குவார்கள். மேலும் சகல காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது. (ஹஜ் : 41 )
அல்லாஹ் கூறுவதனடிப்படையில் ஸஹாபாக்களின் அடிச்சுவட்டில் செயற்படுகின்ற அஹ்லுஸ்ஸுன்னாவைச் சேர்ந்தவர்கள் தாங்கள் தொழுகையை நிலைநாட்டுவதிலும், ஸகாத் கொடுப்பதிலும், நன்மையை ஏவுவதிலும், தீமையைத் தடுப்பதிலும், அதன் பின் தங்களின் வாழ்வில் முகம்கொடுக்கின்ற சிரமங்களிலும், அல்லது தங்களை நோக்கி வருகின்ற மதிப்பும் சிறப்புகளிலும் இவையனைத்தையும் அல்லாஹ்வின் பொறுப்பில் விட்டவர்களாக தங்களின் மார்க்கத்தைப் பின்பற்றுவார்கள். அவ்வாறு உறுதியாகப் பின்பற்றுவதில் ஒருபோதும் பின்வாங்கமாட்டார்கள். 

இவ்வாறுதான் அன்றும் ஸஹாபாக்கள் செயற்பட்டனர். அந்த ஸஹாபாக்கள் பூமியில் எப்பகுதிக்குச் சென்றாலும் தொழுகையை நிலைநாட்டுபவர்களாகவும், ஸகாத்தைக் கொடுப்பவர்களாகவும் இருந்தார்கள்.அதே போன்று அவர்கள் வாழும் சமூகத்திற்கு நன்மையை ஏவுபவர்களாகவும், தீமையைத் தடுப்பவர்களாகவும் இருந்தார்கள். அதன் பின் அந்த சமூகத்தின் புறத்திலிருந்து வருகின்ற சர்ச்சைகளையும், பிரச்சினைகளையும் அல்லாஹ்வின் பொறுப்பில் விட்டுவிடுவார்கள். ஏனென்றால் இரட்சகன் அவர்களுக்குக் கொடுத்துள்ள வாக்குறுதியை அவன் பூரணமாக நிறை வேற்றுவான் என்பது அவர்களின் ஈமானாக  இருந்தது. 

இரட்சகனாகிய அல்லாஹ் அவனது வாக்குறுதியை அவனது வேதத்தில் கூறிக்காட்டுகின்றான்,

 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِن تَنصُرُوا اللَّهَ يَنصُرْكُمْ وَيُثَبِّتْ أَقْدَامَكُمْ 

விசுவாசம் கொண்டோரே ! நீங்கள் அல்லாஹ்வுக்கு வெற்றியைக் கொடுத்தால் அல்லாஹ் உங்களுக்கு வெற்றியைத் தருவான். மேலும் உங்களுடைய பாதங்களை நிலை பெறச் செய்வான். (முஹம்மத் : 07) 

இதனடிப்படையில் ஒரு முஃமின் அவன் அறிந்து வைத்துள்ள மார்க்கத்தை நிலைநாட்டுவதில் எவ்வாறான சிரமங்கள் ஏற்பட்டாலும், தான் அதனை நிலைநாட்டுவதிலிருந்து பின்வாங்காமல் அல்லாஹ்வின் வாக்குறுதியில் நம்பிக்கை கொண்டவனாக இருக்க வேண்டும். நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதியின் மீது நம்பிக்கை வைத்துள்ள ஒரு முஃமின் தான் எந்தவொரு சோதனைக்கு முகம் கொடுத்த போதும் தனக்கு அல்லாஹ் தெளிவாகத் தந்துள்ள மார்க்கத்தைப் உறுதியாகப் பின்பற்றுவதில் தயங்க மாட்டான். 

இப்பண்புகள் அஹ்லுஸ்ஸுன்னாவின் கொள்கையைச் சேர்ந்தவர்களின் அடையாளமாக இருப்பதன் காரணமாகவே அவர்கள் பூமியில் பல இடங்களில் பரந்து வாழ்ந்த போதும், மார்க்கத்தை நிலை நாட்டும் போதும் அவர்கள் அனைவரது பாதையும் ஒன்றாக அமைந்திருப்பதைக் காண முடிகிறது. ஏனெனில் அவர்கள் அனைவரும் இஸ்திகாமத் எனும் உறுதியுடன் மார்க்கத்தை நிலைநாட்டுகின்றனர். இதுவே அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்களின் சிறப்பம்சமாகும்.

அவர்கள் பேசும் மொழியும் அவர்கள் வாழும் நாடுகளும் வேறுபட்டாலும் இஸ்திகாமத் என்பதில் அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டவர்கள். அதில்தான் அவர்களின் ஒற்றுமையும், சகோதரத்துவமும் வளர்ச்சியடைகிறது. அதே போன்று இஸ்திகாமத் என்ற அளவுகோளைக் கொண்டுதான் அஹ்லுஸ்ஸுன்னாவின் எதிரிகளும், தோழர்களும இனங்காணப்படுகின்றனர். இஸ்திகாமத் என்பதே அவர்களை சேர்த்தும், பிரித்தும் வைக்கிறது. யாரெல்லாம் மார்க்கத்தை நிலைநாட்டுவதில் முந்திக் கொள்கிறார்களோ அவர்கள் அனைவரும் தோழர்களாகிவிடுவார்கள். அதே போன்று அவர்களின் எதிரிகள் யாரென்பதையும் கண்டு கொள்வார்கள்.
தாங்கள் உறுதியுடன் பின்பற்றுவதற்கு முன்வருகின்றபோது அதனை எதிர்த்து நிற்பவர்களை விட்டும் தங்களின் உள்ளங்களால் ஒதுக்கி விடுவார்கள். எதிர்க்கின்றவர்கள் பெற்றோராகவோ, பிள்ளைகளாகவோ இருப்பினும் சரியே. மார்க்கமும், அல்லாஹ்வின் திருப்தியுமே அவர்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் அளவுகோளாக அமையும். அல்லாஹ்வின் கட்டளைகளையும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டுதல்களையும் இஸ்திகாமத்துடன் நிலைநாட்டும் ஒரு அடியான் எதிலும் பின்வாங்கும் பண்பைக் கொண்டிருக்க மாட்டான். பின்வாங்குதலென்பது ஈமான் கொண்ட பின் அதனை வாழ்வில் செயற்படுத்துவது அவசியமில்லை எனக் கூறுவோரின் பண்பாகும். 

ஈமானுக்கு அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத் கொண்டுள்ள வரைவிலக்கணத்தின் அடிப்படையில் ஒவ்வொருவரும் அவரவர் சக்திக்கேற்ப மார்க்கத்தை நிலைநாட்டுவது தங்களின் கடமையென்பதைப் புரிந்திருப்பது அவசியமாகும். நம்மில் ஒவ்வொருவரும் ஈமானிலும். கொள்கையிலும் எந்தளவுக்கு மற்றவருடன் சகோதரத்துவம் பேணுகின்றோமோ அந்தளவுக்கு மார்க்கத்தை நிலைநாட்டுவதிலும் ஒருவருக்கொருவர் உதவியாளராகவும் இருக்க வேண்டும்.நிலைநாட்டுவதற்குத் தடையாக உள்ளவற்றை அகற்றுவதில் ஒருவருக்கொருவர் தோல் கொடுக்க வேண்டும். 

இப்பண்புகளைத் தன்னில் கொண்ட ஒரேயொரு மனிதன் மட்டும் இந்த சமூகத்தில் வாழ்ந்தாலும் அந்தத் தனி மனிதனுக்குப் பின்னால் ஆரோக்கியமானதொரு கூட்டம் உருவாகும்.அக்கூட்டத்தினரால் சமூகத்தில் மாற்றங்கள் தோன்றும். அது சிறியதொரு கூட்டமாக இருப்பினும் சரியே.அக்கூட்டத்தினர் நிலைநாட்டுகின்ற மார்க்கம் பூமியில் உறுதியானதாக இருக்கும். மக்கள் மார்க்கத்தின் தூய வடிவமென்று திரும்பிப் பார்க்குமளவுக்கு அவர்களின் பின்பற்றுதல் அமைந்திருக்கும்.

அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத் எனும் அக்கூட்டத்தைச் சேர்ந்தவர்களை அவர்களின் எதிரிகள் கூட நம்பி வாழ்வார்கள். ஏனென்றால் அந்தக் கொள்கைவாதிகளிடம் மார்க்கத்தினை உறுதியோடு பின்பற்றுகின்ற இஸ்திகாமத் என்ற பண்பு அமைந்திருக்கிறது. 

அல்லாஹ்விடம் நாம் பிரார்த்திக்கிறோம்! அவன் எங்கள் ஈமானை உறுதிப்படுத்தி எமக்கு அவன் தெளிவாகத் தந்துள்ள மார்க்கத்தை நிலைநாட்டுவதற்கான சக்தியையும் தருவானாக.

அல்லாஹ் மிக அறிந்தவனாக இருக்கின்றான்.

-அஷ்ஷெய்க் அபூ அப்திர் ரஹ்மான் யஹ்யா ஸில்மி ஹபிழஹுல்லாஹ்
أحدث أقدم