بسم الله الرحمن الرحيم
எல்லாம் வல்ல நாயன் அல்லாஹுத்தஆலாவைப் போற்றிப் புகழ்ந்து இறுதித்தூதர் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அன்னாரது குடும்பத்தினர் நல்லறத் தோழர்கள் மற்றும் முஃமினான முஸ்லிமான நல்லடியார்கள் அனைவர் மீதும் ஸலாத்தையும் ஸலாமையும் காணிக்கையாக்கியவனாக!
உலகில் மனித வாழ்க்கையானது குறுகிய காலப்பகுதியைக் கொண்டதாக இருக்கின்றது. அக்குறுகிய காலப் பகுதியில் வாழத்தலைப்பட்ட மனிதன் தனது வாழ்நாளில் பெரும்பாலான நேரத்தை தனது தேவைகளுக்காகப் பயன்படுத்துகின்றான். அந்நேரம் தவிர்ந்த மிகச் சொற்பமான காலத்தையே வணக்கவழிபாடுகளுக்கு ஒதுக்கியுள்ளான்.
அவ்வாறு அவன் ஒதுக்குகின்ற காலப்பகுதியை கூடிய பிரயோசனம் உள்ளதாக ஆக்குவதற்குத் தேவையான வழிகாட்டல்களை இஸ்லாம் எமக்குக் காட்டித்தந்துள்ளது. அவ்வழிகாட்டல்களில் பிரதான இடத்தை திக்ருகள் வகிக்கின்றன. அந்த விதத்தில் நபியவர்கள் எமக்குக் காட்டித்தந்த சில திக்ருகளை இங்கு சமர்ப்பிக்கின்றேன். அவற்றை நன்கு படித்து தங்களது வாழ்க்கையிலும் ஓதிப் பயன்பெற வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றேன்.
1. யார் سُبْحَانَ الله العَظِيْم وَبِحَمْدِهِ என்ற வார்த்தையை மொழிகிறாரோ அவருக்கு சுவனத்தில் ஒர் ஈச்சம் மரம் நடப்படுகின்றது. (ஸஹீஹுல் ஜாமிஇ)
2. எவரொருவர் ஒரு நாளைக்கு سُبْحَانَ الله وَبِحَمْدِهِ என்ற வார்த்தையை நூறு விடுத்தங்கள் மொழிகிறாரோ அவரது பாவங்கள் மன்னிக்கப்படும். அப்பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும் சரியே! (புகாரி முஸ்லிம்)
3. நாவுக்கு இலகுவான தராசியில் கனமான ரஹ்மானுக்கு விருப்பத்திற்குரிய இரு வார்த்;தைகள் இருக்கின்றன. (அவை) سُبْحَانَ الله وَبِحَمْدهِ سُبْحَانَ الله العَظِيْم; ஆகும். (புகாரி முஸ்லிம்)
4. நிச்சயமாக سُبْحَانَ الله الحَمْدُ لله لا إلهَ إلا الله என்ற வார்த்தைகளாகின்றன மரம் தனது இலைகளை உதிர்த்துவிடுவதைப் போல் பாவங்களை உதிர்த்துவிடும். (ஸஹீஹ் அல் அதபில் முப்ரத்)
5. சுத்தம் ஈமானின் ஒரு பாதியாகும். மேலும் الحَمْدُ لِلهِ என்ற வார்த்தை தாராசைப் பூர்த்தியாக்கும். سُبْحَانَ الله الحَمْدُ لِلهِ என்ற வார்த்தை அல்லது ஆகிய இரு வார்த்தைகள் வானம் பூமி ஆகியவற்றிக்கிடையிலான இடைவெளியை நிரப்பிவிடக்கூடியனவாக இருக்கும். (முஸ்லிம்)
6. நீ لا حَوْلَ وَلا قُوَّةَ إلا بِاللهِ என்று கூறு நிச்சயமாக அது சுவனத்தின் பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷமாகும். (புகாரி முஸ்லிம்)
7. ஒரு முறை நபியவர்கள் தன் தோழர்களை நோக்கி உங்களில் ஒருவருக்கு தினமும் ஆயிரம் நன்மைகளை சம்பாதிக்க முடியுமா? என வினவினார்கள். அதற்குத் தோழர்கள் அது எவ்வாறு முடியும் எனக் கேட்க தினமும் நூறு விடுத்தங்கள் தஸ்பீஹ் செய்வதால் ஆயிரம் நன்மைகள் எழுதப்படுகின்றன அல்லது ஆயிரம் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என பதிலளித்தார்கள். (முஸ்லிம்)
8. அல்லாஹுத்தஆலா வார்த்தைகளில் சிறந்ததாக நான்கைத் தெரிவு செய்துள்ளான். அவை: سُبْحَانَ الله لا إله إلا الله الحَمْدُ لله اللهُ أكبَر என்பனவாகும். மேலும் எவர் سُبْحَانَ الله என்று கூறுகிறாரோ அவருக்கு இருபது நன்மைகள் எழுதப்படுகின்றன. மற்றும் இருபது பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. இன்னும் எவர் اللهُ أكبْر என்று கூறுகின்றாரோ அவருக்கும் முன்பு குறிப்பிட்ட பிரகாரம் அதே பலன் கிடைக்கும். மேலும் எவர் لا إله إلا الله என்று கூறுகின்றாரோ அவருக்கும் முன்பு குறிப்பிட்ட பிரகாரம் அதே பலன் கிடைக்கும். இன்னும் எவர் உள்ளத்தால் உணர்ந்து الحَمْدُ لِلهِ رَبِّ العَالمِيْن என்று கூறுகின்றாரோ அவருக்கு முப்பது நன்மைகள் எழுதப்படுகின்றன. முப்பது பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. (ஸஹீஹுல் ஜாமிஇ)
9. யார் لا إله إلا الله وَحْدَهُ لا شَرِيْكَ لهُ لهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ وَهُوَ عَلى كلِّ شَيْيءٍ قَدِيْر என்று பத்து முறைகள் கூறுகின்றாரோ அவர் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சந்ததிகளில் நான்கு ஆத்மாக்களை விடுதலை செய்ததிற்குச் சமனாகும். (முஸ்லிம்)
10. நபியவர்கள் இஸ்ரா - இராப் - பயனத்தை மேற்கொண்ட போது இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைச் சந்தித்தார்கள். அதன் போது இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சில சுவனத்தின் சுகந்தங்களைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அதன் தொடரில் அவர் கூறும் போது நிச்சயமாக سُبْحَانَ الله الحَمْدُ لِلهِ لا إله إلا الله اللهُ أكبَر ஆகியன சுவனத்தின் விளைச்சல்களில் உள்ளனவாகும் எனப் பகர்ந்தார்கள். (ஸஹீஹ் அல் கலிமதித் தையிப்)
11. யார் ஒரு நாளில் لا إله إلا الله وَحْدَهُ لا شَرِيْكَ لهُ لهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ وَهُوَ عَلى كلِّ شَيْيءٍ قَدِيْر என்று கூறுகின்றாரோ அது பத்து அடிமைகளை விடுதலை செய்வதிற்குச் சமனாகும். மேலும் அதன் காரணமாக நூறு நன்மைகள் எழுதப்படுகின்றன. நூறு பாவங்கள் அழிக்கப்படுகின்றன. அன்றைய தினம் மாலை வரை ஷைத்தானில் இருந்தும் அவருக்குப் பாதுகாப்புக் கிடைக்கும். (புகாரி முஸ்லிம்)
12. பூமியின் ஒரு மனிதன் لا إله إلا الله اللهُ أكبْر سُبْحَانَ الله الحَمْدُ للهِ لاحَوْلَ وَلا قُوَّةَ إلا باللهِ என்று கூறினால் அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அவை கடல் நுரையளவு இருந்தாலும் சரியே! (ஸஹீஹுல் ஜாமிஇ)
13. யார் أسْتَغْفِرُ الله الذيْ لا إله إلا هُوَ الحَيُّ القيُّوْم وَأتُوْبُ إليْهِ என்று கூறுகிறாரோ அவருக்கு மன்னிப்பளிக்கப்படும். அவர் யுத்த களத்தைவிட்டும் விரண்டோடியவராக இருந்தாலும் சரியே! (ஸஹீஹ் அபீதாவுத்)
14. எவருடைய பட்டோலையில் அதிகமாக இஸ்திக்பார் இடம்பெற்றுள்ளதோ அவருக்கு சுபசோபனம் உண்டாவதாக. (ஸஹீஹுல் ஜாமிஇ)
15. யார் என் மீது ஒரு முறை ஸலவாத்துச் சொல்கிறாரோ அல்லாஹ் அவர் மீது பத்து முறைகள் ஸலவாத்துச் சொல்கிறான். (முஸ்லிம்)
16. சுவனத்தின் விளைச்சல்களை அதிகரித்துக் கொள்ளுங்கள்! என நபியவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே அதன் விளைச்சல்கள் எவை? என அவரின் தோழர்கள் வினவினார்கள். அதற்கு நபியவர்கள் لا حَوْلَ وَلا قوَّة إلا بالله (என்று கூறுவதே அதன் விளைச்சலாகும் என பதிலளித்தார்கள்.) (ஸஹீஹ் அத்தர்கீப் வத் தர்ஹீப்)
by: ABU HUNAIF MUHAMMAD HISHAM IBNU MUHAMMAD TOUFEEK