விசபச்சாரத்தை நெருங்காதீர்கள்!


பொதுவாக, மார்க்கப் போதனைகளுக்கு மாற்றம் செய்யக்கூடிய காரியங்கள் இழிவு மற்றும் அழிவு போன்றவற்றைத் தேடித்தரக்கூடியனவாக இருக்கின்றன. அப்படியான பாவச் செயல்களில் ஒன்றாக விபச்சாரம் உள்ளது. இவ்விபச்சாரமானது பெரும்பாவங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. மேலும், அது பரவலாகக் காணப்படுவது மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாகும்.

நபியவர்கள் கூறினார்கள்: "மறுமைநாளின் அடையாளங்களில் உள்ளனவாக அறியாமை வெளிப்படுவதும், மார்க்க அறிவு குன்றுவதும், விபச்சாரம் பரவலாகக் காணப்படுவதுமாகும்". (புகாரி)

உண்மையில் நாம் வாழும் சுற்றுச் சூழலை அவதானிக்கையில் விபச்சாரத்தினுடைய வெளிப்பாட்டைக் காண முடிகின்றது. பகிரங்கமாக அதனை நோக்கி அழைப்புக்கள் விடுக்கப்பட்ட வண்ணம் உள்ளது. அதனை நோக்கி இட்டுச் செல்லக்கூடிய வழிகள் இலகுபடுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. அல்லாஹ் எம்மனைவரையும் இப்பாதகச் செயலில் விழுவதைவிட்டும் காப்பாற்றுவானாக!

அல்லாஹுத்தஆலா இப்பாதகச் செயலை உச்சகட்ட வசனப்போக்குகளைக் கொண்டு எச்சரித்துள்ளான். அந்தவிதத்தில் அவன் பிரஸ்தாபிக்கும் போது:

"மேலும், நீங்கள் விபச்சாரத்தை நெருங்க வேண்டாம்! நிச்சயமாக அது மானக்கேடான காரியமாகவும் கேடுகளின் பக்கம் இழுக்கும் தீய வழியாகவும் இருக்கின்றது". (அல்இஸ்ரா: 32)

இமாம் இப்னு ஸஃதி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இத்திருக்குர்ஆன் வசனத்திற்கு வியாக்கியானம் செய்யும் போது: "இவ்வசனப்போக்கு நீங்கள் விபச்சாரம் செய்ய வேண்டாம்! என்று கூறுவதை விட உச்சகட்ட வசனப்போக்காக இருக்கின்றது" என்கிறார்கள்.

இன்னும், அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "மேலும், அத்தகையவர்கள் அல்லாஹ்வுடன் வேரொரு கடவுளை அழைக்கமாட்டார்கள்! இன்னும், அல்லாஹ் ஹராமாக்கிய எந்தவோர் ஆத்மாவையும் உரிமையின்றிக் கொலை செய்யமாட்டார்கள். விபச்சாரமும் செய்யமாட்டார்கள். எனவே, எவர் அதனைச் செய்கின்றாரோ அவர் தண்டனையை அடைய நேரிடும்!" (அல்புர்கான்: 68)

இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: "கொலைக்கு அடுத்து விபச்சாரத்தைப் போன்ற மகத்தான ஒரு பாவச்செயலை நான் அறியமாட்டேன். ஏனெனில், இச்செயல் இணைவைப்பு மற்றும் கொலையுடன் இணைத்தே கூறப்பட்டுள்ளது".

மேலும், இவ்விபச்சாரம் குறித்து விசுவாசம் கொண்ட பெண்கள் உறுதிமொழி அளித்தால் அதனை ஏற்றுக் கொள்ளுமாறும் அல்லாஹ் தன் நபிக்குக் கட்டளைபிறப்பித்துள்ளான்.

"நபியே! அல்லாஹ்விற்கு எப்பொருளையும் அவர்கள் இணை வைப்பதில்லை என்றும், திருடுவதில்லை என்றும், விபச்சாரம் செய்வதில்லை என்றும், தங்கள் (பெண்) பிள்ளைகளைக் கொலை செய்வதில்லை என்றும், தங்களுடைய கைகளுக்கும், கால்களுக்குமிடையில் எதனை அவர்கள் கற்பனை செய்கிறார்களோ அவ்வாறான அவதூறை இட்டுக்கட்டுவதில்லை என்றும், நன்மையானவற்றில் உமக்கு மாறுசெய்வதுமில்லை என்றும் உம்மிடம் வாக்குறுதி செய்ய விசுவாசிகளான பெண்கள் வந்தால், அவர்களுடன் நீர் வாக்குறுதி செய்து கொள்வீராக!" (அல்மும்தஹினா: 12)

விபச்சாரத்தின் விபரீதங்கள்

 விபச்சாரம் எனும் இப்பாவச்செயல் மிகக் கொடிய பாவங்களான இணை வைப்பு, கொலை செய்தல் ஆகியவற்றுடன் இணைத்துக் கூறப்பட்டுள்ளன.
விபச்சாரம் செய்பவரிடமிருந்து ஈமானின் பூரணத்துவம் பிடுங்கி எடுக்கப்படும். நபியவர்கள் கூறினார்கள்: "விபச்சாரம் செய்பவர் விபச்சாரம் செய்யும் போது விசுவாசியாக இருக்கமாட்டார்". (புகாரி, முஸ்லிம்)
விபச்சாரமானது மக்கள் வாழும் பிரதேசங்கள் மற்றும் பிரதேசவாசிகள் ஆகியோரைப் பாழ்படுத்தக்கூடியதாகும். ஸைனப் பின்த் ஜஹ்ஷ் ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்: "ஒரு நாள் தினம் நபியவர்கள் தூக்கத்திலிருந்து திடீரென விழித்தெழுந்தார்கள். அவ்வாறு விழித்தெழும் போது: அன்மித்துவரும் ஒரு தீங்கிலிருந்தும் அரேபியர்களுக்கு கேடு உண்டாவதாக! எனக் கூறினார்கள். அப்போது ஸைனப் ரழியல்லாஹு அன்ஹா அவர்கள்: அல்லாஹ்வின் தூதரே! எங்களில் நல்ல மனிதர்கள் இருக்கும் நிலையிலுமா நாங்கள் அழிக்கப்படுவோம்? என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள்: ஆம். மோசமான காரியங்கள் அதிகரித்தால்...!" என பதிலளித்தார்கள். இங்கு நபியவர்கள் குறிப்பிட்ட மோசமான காரியங்கள் என்பன விபச்சாரம், தன்னினச் சேர்க்கை போன்றனவாகும்.
விபச்சாரமானது அழிவிற்கும் காரணமாக அமைகின்றது. நபியவர்கள் கூறினார்கள்: "ஒரு கிராமத்தில் வட்டி, விபச்சாரம் ஆகியன வெளிப்பட்டுவிட்டால் அக்கிராமத்தில் உள்ளவர்கள் தங்களுக்குத் தாங்களே அல்லாஹ்வுடைய வேதனையை ஹலாலாக்கிக் கொண்டுவிட்டார்கள்". (தபராணி)
விபச்சாரமானது மரணம் உண்டாவதற்கும் காரணமாகத் திகழுகின்றது. நபியவர்கள் கூறினார்கள்: "மானக்கேடான காரியங்கள் ஒரு கூட்டத்திற்கு மத்தியில் வெளிப்பட்டால் அல்லாஹ் அவர்களுக்கு மத்தியில் மரணத்தை நிகழவைப்பான்". (ஹாகிம்)
மேலும் இவ்விபச்சாரமானது மிகக் கொடிய நோய்கள் உண்டாவதற்குக் காரணமாக அமைகின்றது. நபியவர்கள் கூறினார்கள்: "ஒரு கூட்டத்திற்கு மத்தியில் விபச்சாரம் வெளிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு மத்தியில் அவர்களுடைய முன்னோர்களிடத்தில் காணப்படாத கோள்ளை நோய் மற்றும் அழிவை உண்டாக்கும் நோய்கள் போன்றவை பரவிவிடும்”. (இப்னு மாஜா)
விபச்சாரமானது மறுமை வேதனையைத் தேடித்தரும். இதற்குச் சான்றாக நபியர்கள் கண்ட ஒரு நீண்ட கனவைக் குறிப்பிடலாம். அதில் நபியவர்கள் போரணை போன்ற அமைப்பையுடைய ஓர் இடத்தைப் பார்த்தார்கள். அதன் ஆழப்பகுதி விசாலமானதாவும் மேல்பகுதி ஒடுங்கியதாகவும் காணப்பட்டது. அதனுள் ஆண்களும் பெண்களுமாக நிர்வாணிகளாகக் காணப்பட்டார்கள். தீ மூட்டப்படும் போது அவர்கள் அனைவரும் மேல் நோக்கித் தள்ளப்படுவதையும் தீயின் தன்மை குறியும் போது மீண்டும் கீழ்நோக்கி மீளுவதையும் அவதானித்தார்கள். அது குறித்து நபியவர்கள் வினவியபோது, அதில் இருப்பவர்கள் விபச்சாரம் செய்த ஆண்களும் பெண்களுமாவர் என்று சொல்லப்பட்டது. (புகாரி)
இப்பாவமான காரியத்தில் ஈடுபடுபவர்கள் நல்ல பெயர்களுக்கு மாற்றமாக தீய பெயர்கள் கொண்டு அழைக்கப்படுவார்கள். அந்த அடிப்படையில் இத்தகையவர்களை முஃமின்கள், பத்தினித்தனமுடையவர்கள், மனிதாபிமானமுடையவர்கள் என்ற பெயர்களைக் கொண்டு அழைக்கப்படுவதற்கு மாற்றமாக விபச்சாரிகள், நடத்தை கொட்டவர்கள், பாவிகள் போன்ற பெயர்களால் விழிக்கப்படுவார்கள். மேலும், இத்தகையவர்களிடத்தில் நற்பண்புகள் விலாசமற்றுக் காணப்படும். அந்தவிதத்தில் வெட்கம், மனிதாபிமானம், மரியாதை செலுத்துதல் போன்ற பண்புகள் இத்தகையவர்களிடத்தில் காணப்படமாட்டாது.
இப்பாதகச் செயலில் ஈடுபடுவோர் தன்னுடைய குடும்பத்தினரையும் இதற்கு இலக்காக்குவார்கள். ஒரு குடும்பத்தில் கணவன் விபச்சாரியாக இருக்கும் போது அதனைக் கண்ணுறும் அவனுடைய மனைவி, பிள்ளைகளும் அச்செயலைப் புரியும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இமாம் ஷாபியி ரஹிமஹுல்லாஹ் அவர்களைத் தொட்டும் கூறப்படுவதாவது: "நீங்கள் பேணுதாலாக இருந்து கொள்ளுங்கள்! உங்களுடைய பெண்களும் ஹராமான விடயங்களில் பேணுதலாக இருப்பார்கள். ஒரு முஸ்லிமிற்கு பொருத்தமில்லாததைத் தவிர்ந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக விபச்சாரம் என்பது கடனாகும். நீ அதனைக் கடனாகக் கொடுத்தால் அதனை நிறைவேற்றுவது உன்னுடைய வீட்டில் இருப்பவர்களுடன் என்பதை தெரிந்து கொள்!"
விபச்சாரமானது அல்லாஹ்வுடைய கோபத்திற்குக் காரணமாகத் திகழுகின்றது. ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "சூரிய கிரகணம் ஏற்பட்ட போது நபியவர்கள் தன்னுடைய தோழர்களுக்கு நிகழ்த்திய உரையில்: முஹம்மதுடைய உம்மத்தினரே! அல்லாஹ் மீது ஆனையாக தன்னுடைய ஆணடிமை அல்லது பெண்ணடிமை விபச்சாரம் செய்யும் போது அல்லாஹ்வைவிட எவரும் ரோஷம் கொள்ள மாட்டார்! நிச்சயமாக அல்லாஹ் ரோஷம் கொள்கிறான். அவனுடைய ரோஷமானது அடியான் தன்மீது அல்லாஹ் ஹராமாக்கியதைச் செய்யும் போதாக இருக்கும்" எனக் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

விபச்சாரத்தை நோக்கி இட்டுச் செல்லக்கூடிய காரணிகள்

பார்வையைத் தாழ்த்தாதிருத்தல்.
நாம் வாழும் சூழலில் அலங்காரத்துடன் காட்சியளிக்கும் அன்னியப் பெண்களின் நடமாட்டம் பரவலாகக் காணப்படுகின்றது. திரையரங்குகள், கைபேசிகள் மற்றும் கடைத்தெருக்கள் எனப் பலவாறான இடங்களில் இந்நிலையைக் காண முடிகிறது. எனவே, இப்படியான நிலையில் அன்னியப் பெண்கள் எம்முன்னிலையில் தோன்றும் போது நாம் எம் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு நடந்துகொள்வது ஷைத்தானின் விபச்சாரத்திற்குரிய வாசலை அடைப்பதாக அமைகிறது.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "(நபியே!) விசுவாசிகளுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளவும், தங்கள் மர்மஸ்தானங்களையும் பேணிக்காத்துக் கொள்ளவும்,அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்". (அந்நூர்: 30)

இறைவிசுவாசியே! உன்னுடைய உள்ளம் பலவீனமானது. பார்வையானது இப்லீஸின் ஈட்டிகளில் ஒன்று என்பதை எப்போதும் உன் மனதில் கொண்டு செயற்படு!

ஆண்பெண் கலப்பு
ஆண்பெண் கலப்பும் விபச்சாரத்திற்கு வழி வகுக்கின்றது. ஆண்பெண் ஒன்றாக இணைந்து கற்பது,தொழில் புரிவது போன்றன பல தீய விளைவுகளை உண்டாக்குகின்றன. சமகால நிகழ்வுகள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

நபியவர்கள் கூறினார்கள்: "பெண்களுக்கு மத்தியில் நுழைவதை விட்டும் நான் உங்களை எச்சரிக்கின்றேன்! அப்போது ஒரு மனிதர்: அல்லாஹ்வின் தூதரே கணவனின் நெருங்கிய ஆண் உறவினர்களைப் பற்றி யாது கூறுகிறீர்கள்? என்று வினவ, கணவனின் நெருங்கிய ஆண் உறவினர்கள் மரணத்திற்கு ஈடாகும் என்றார்கள்". (புகாரி, முஸ்லிம்)

 அன்னியப் பெண்களுடன் தனித்திருத்தல்.
அன்னியப் பெண்களுடன் தனித்திருப்பதும் விபச்சாரத்தைத் தூண்டக்கூடியதாக உள்ளது. அவ்வாறு தனித்திருக்கும் செயல் இன்று எம்சமுகத்திற்கு மத்தியில் பலவாறான அமைப்புக்களில் காணப்படுகின்றது. அந்தவிதத்தில், வாகனத்தில் தனிமையாக சாரதியுடன் பயனித்தல், தொழில் புரியும் இடங்களில் சக தொழிலாளியுடன் தனித்திருத்தல், உறவினர்கள் வீடுகளில் திருமணம் முடிக்க அனுமதிக்கப்பட்ட பெண்களுடன் தனித்திருத்தல் என்று பட்டியல்படுத்திக் கொண்டே போகலாம். இத்தகைய செயலை எச்சரிக்கும் முகமாக நபியவர்கள் பின்வருமாறு நவின்றுள்ளார்கள்:

"உங்களில் ஒருவர் அன்னியப் பெண்ணொருத்தியுடன் அவளுடைய மஹ்ரமான ஆண் துணையின்றி தனித்திருக்க வேண்டாம்". (புகாரி, முஸ்லிம்)

ஏனெனில், பெண்களானவர்கள் பித்னாவுக்குரியவர்கள் அவர்கள் மூலம் பித்னா ஏற்படாதவாறு நாம் எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும்.

நபியவர்கள் கூறினர்கள்: "ஆண்களுக்கு மிகவும் தீங்களிக்கக் கூடியவர்களாக எனக்குப் பிறகு பெண்களை நான் விட்டுவிட்டுச் சென்றுள்ளேன்". (புகாரி)

மேலும் நபியவர்கள் கூறினார்கள்: "உலகவாழ்வைப் பயந்து கொள்ளுங்கள்! பெண்களையும் பயந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக பனூ இஸ்ரவேலர்களின் ஆரம்ப பித்னா பெண்கள் மூலமே ஏற்பட்டது". (முஸ்லிம்)

விபச்சாரத்தின் படித்தரங்கள்

விபச்சாரத்தின் படித்தரங்களை இமாம் அல்ஹய்ஸமி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் வகைப்படுத்திக் கூறியுள்ளார்கள்.

கணவன் இல்லாத அன்னியப் பெண்ணுடன் செய்யும் விபச்சாரம்.
கணவன் இருக்கக்கூடிய அன்னியப் பெண்ணுடன் செய்யும் விபச்சாரம்: இவ்வகை விபச்சாரம் ஆரம்பமாகக் கூறப்பட்ட விபச்சாரத்தைவிட அபாயகரமானது. ஏனெனில், இவ்வகை விபச்சாரத்தில் இரு வகையான உரிமைகள் மீறப்படுகின்றன. ஒன்று அல்லாஹ்வுடைய உரிமை, மற்றொன்று அவளுடைய கணவனின் உரிமையாகும்.
மஹ்ரமான பெண்ணுடன் செய்யும் விபச்சாரம்: இன்றைய கால சூழ்நிலையில் இவ்வகை விபச்சாரம் பரவிவருவதை அவதானித்திருப்பீர்கள்.
வயோதிபப்பருவத்தில் இருப்பவர் செய்யும் விபச்சாரம்: இத்தகைய பருவத்தில் இருப்பவர் செய்யும் விபச்சாரமானது இளம் பருவத்தில் உள்ளவர் செய்யும் விபச்சாரத்தை விடக் கடுமையானது. அதனால் தான் நபியவர்கள் இப்படிப்பட்ட விபச்சாரிகள் குறித்துக் கூறும் போது, அல்லாஹ் அவர்களுடன் மறுமை நாளில் போசமாட்டான் என்றும், அவர்களைப் பார்க்கமாட்டான் என்றும், அவர்களைத் தூய்மைப்படுத்தமாட்டான் என்றும், அவர்களுக்கு நோவினை தரும் வேதனை இருப்பதாகவும் கூறியுள்ளார்கள்.
அண்டை வீட்டார் மனைவியுடன் செய்யும் விபச்சாரம்: நபியவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவர் பத்துப் பெண்களுடன் விபச்சாரம் செய்வது, தனது அண்டை வீட்டாரின் மனைவியுடன் விபச்சாரம் செய்வதைவிட மிக இலகுவானதாக இருக்கும்". (அஹ்மத்)
சங்கை மிக்க மாதங்களில் செய்யும் விபச்சாரம்.
மக்கா, மதீனா ஹரம் எல்லைக்குள் செய்யும் விபச்சாரம்.
எனவே, விபச்சாரம் விடயத்தில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எங்களால் இப்பாவம் நிகழாமலும், எங்களது பொறுப்பில் உள்ளவர்களாலும் இப்பாவாம் நிகழாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும், விபச்சாரத்தை நாடுவோர் இப்பாவச் செயல் தனது தாய், மனைவி, பெண்மக்கள் மற்றும் குடும்பப் பெண்கள் ஆகியோரில் நிகழ்வதை விரும்புவோமா? என்பதைக் கேள்வியாகக் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டுள்ளனர் என்பதையும் நினைவில் கொள்க!

الحمد لله رب العالمين
-    அபூ ஹுனைப் (மதனி)

Previous Post Next Post