எழுதியவர்: மெளலவி எம். அப்துர் ரஹ்மான் மன்பஈ
கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவது மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஓன்று, மனிதர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் கடன் வாங்காமல் இருக்க முடிவதில்லை. எனவே அல்லாஹுவும் அவனது தூதரும் கடன் கொடுக்கல் வாங்கலுக்கான சட்டங்களையும் முறைகளையும் நமக்கு வகுத்துத் தந்துள்ளனர். அவற்றை அறிந்து செயல்படுவது இம்மையிலும் மறுமையிலும் நமக்கு பயனளிக்கும்.
கண்ணீர் இல்லாத வாழ்க்கைக் கூட சிலருக்கு அமைந்துவிடுகிறது ஆனால் கடன் இல்லாத வாழ்க்கை எல்லோருக்கும் அமையுமா என்பது சந்தேகம் தான்.
கடன் அன்பை முறிக்கும் என்பது நமக்கு மட்டும்தான் பொருந்தும், நாட்டுக்குப் பொருந்தாது போலும்.
அவசரத்திற்கு ஒரு பத்தாயிரம் ரூபாயை கடனாக வாங்கிவிட்டு, அதை திருப்பிக் கட்டுவதற்குள் படாதபாடு படவேண்டியிருக்கிறது. இதுகூட, கூத்தடிக்கவோ, கும்மாளமடிக்கவோ வாங்குகின்ற கடன் அல்ல, குடும்பத்தேவைக்காக வாங்குவதுதான்.
ஆனால் நம்ம நாடு இந்தியா அப்படியா இருக்கிறது?
யாரெல்லாம் கடன் தருவார்களோ, அவர்கள் அத்தனை பேரிடமும் கைநீட்டிக் கடன் வாங்குவதற்குத் தயக்கமே காட்டாத நாடு.
இப்படி வாங்கி இப்போது இந்தியாவின் கடன்சுமை 35 லட்சம் கோடியை நெருங்கிவிட்டது. வருடத்திற்கு மூன்று லட்சம் கோடியை வஞ்சகமில்லாமல் கடன் வாங்கிக் கொண்டிருக்கிறது இந்தியா. இதன் விளைவே, பெருமைமிக்க ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் தலையிலும் சராசரியாக 30ஆயிரம் ரூபாய் கடன்சுமை விழுந்திருக்கிறது.
தேவையில்லா திட்டங்களுக்கும், வீண் ஆடம்பரங்களுக்கும் மந்திரிகள் முதல் அரசாங்கத்தின் கடைநிலை ஊழியர்கள் வரை ஊழல் செய்வதற்கும் இப்படிக் கடனாக வாங்கப்படும் பணம் பயன்படுத்தப்படுகிறது.
எனக்குக் கடன் என்றாலே பிடிக்காது, நான் கடன் வாங்குறதும் இல்லை கொடுக்குறதும் இல்லை என்று வைராக்கியமாகச் சொல்கிற சிலரும் இருக்கிறார்கள். நீங்கள் வாங்காவிட்டால் என்ன? உங்களுக்கும் சேர்த்துதான் நாங்கள் வாங்குகிறோமே என்று அரசாங்கம் செய்கிறது. இந்தியன் என்றாலே இன்னொரு பொருள், கடன்பட்டவன் என்பதுதான். கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்று சின்ன வயதில் படித்தது. நல்ல வேளையாக இந்திய வேந்தர்களுக்கு அது இல்லாமல் போனது.
மார்க்க அனுமதி:
கடன் வாங்குவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது என்பதற்கும் தேவைப்படுபவருக்குக் கடன் கொடுத்து உதவுவது ஆர்வமூட்டப்பட்ட நற்செயல் என்பதற்கும் குர்ஆனிலும், ஹதீஸிலும் அதிகமான ஆதாரங்கள் உள்ளன.
அல்லாஹ் கூறுகிறான்:
“நம்பிக்கைக் கொண்டோரே! ஒரு குறிப்பிட்டத் தவணையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்துகொண்டால், அதை எழுதிவைத்துக் கொள்ளுங்கள், எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்.எழுதுபவன் எழுதுவதற்கு மறக்கக் கூடாது. (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக்கொடுத்தபடி அவன் எழுதட்டும், இன்னும் யார்மீது (திருப்பிக் கொடுக்க வேண்டிய கடன்) பொறுப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும், அவன் தன் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளட்டும், மேலும் அ(வன் வாங்கிய)தில் எதையும் குறைத்துவிடக் கூடாது. இன்னும் யார்மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ, அவன் அறிவு குறைந்தவனாகவோ, அல்லது பலவீனனாகவோ, அல்லது வாசகத்தைக் கூற இயலாதவனாகவோ இருப்பின் அவனுடைய பொறுப்பாளர் நீதமாக வாசகத்தைச் சொல்லட்டும். தவிர (நீங்கள் சாட்சியாக இரக்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள், ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சிகளில் நீங்கள் பொருந்தக் கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள். (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி மறந்துவிட்டால் இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும். அன்றியும், சாட்சிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கலாகாது, தவிர சிறிதோ, பெரிதோ அதை அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இருக்காதீர்கள். இதுவே அல்லாஹ்விடம் மிகவும் நீதமானதாகும். சாட்சியத்திற்கு உருதியுண்டாக்குவதர்க்காகவும், இன்னும் இது உங்களுக்குச் சந்தேகம் ஏற்ப்படாமல் இருக்க சிறந்த வழியாகவும் இருக்கும், எனினும் உங்களுக்கிடையே உடனுக்குடன் நடைபெறும் வியாபாரமாக இருந்தால் தவிர அதை எழுதிக் கொள்ளாமல் இருப்பது உங்கள் மீது குற்றமில்லை. ஆனால் (அவ்வாறு) நீங்கள் வியாபாரம் செய்யும்போதும் சாட்சிகளை வைத்துக் கொள்ளுங்கள் அன்றியும் எழுதுபவனுக்கும் சாட்சிக்கும் (உங்களுக்குச் சாதகமாக இருப்பதற்காகவோ, வேறு காரணத்திற்காகவோ) எவ்வித இடையூறும் அளிக்கப்படக் கூடாது. நீங்கள் அப்படிச் செய்வீர்களாயின் அது உங்கள் மீது நிச்சயமாகப் பாவமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். அல்லாஹ் தான் உங்களுக்கு (நேரிய இவ்விதிமுறைகளைக்) கற்றுக்கொடுக்கின்றான், தவிர அல்லாஹ்வே எல்லா பொருட்களையும் பற்றி நன்கறிபவன்.” திருக்குர்ஆன் 2:282.
இந்த திருக்குர்ஆன் வசனம் கடன் கொடுக்கல் வாங்கல் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது என்பதை உணர்த்துவதுடன் அது தொடர்பான சட்டங்களையும் கூறுகிறது.
நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கடன் பெற்றிருந்தார்கள், அதை எனக்குத் திருப்பித் தரும்போது சற்று அதிகமாகவும் கொடுத்தார்கள்
அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: புகாரி 2394.
இதுபோன்ற பல ஹதீஸ்கள் நபி(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டதற்கு ஆதாரங்களாக உள்ளன.
கடன் வாங்குபவர் கவனிக்க வேண்டியவை:
கடன் வாங்குவது நிர்பந்தம் கருதி அனுமதிக்கப்பட்டது, ஆகவே இயன்றவரை கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் வாங்கியக் கடனைத் திருப்பி கொடுப்பதற்குத் தாமதமானாலும் அல்லது கொடுக்க இயலாமல் போனாலும் இம்மையிலும் மறுமையிலும் மனிதன் பாதிப்புக்குள்ளாக வேண்டியது ஏற்படும்.
நபி(ஸல்) அவர்கள் “அல்லாஹ்வே பாவத்திலிருந்தும் கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்” என்று தொழுகையில் துஆ செய்து கொண்டிருந்தார்கள், அப்போது ஒருவர் அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அதிகமாக கடனிலிருந்து பாதுகாவல் தேடுகிறீர்களே! என்றார். அதற்க்கு நபியவர்கள் ஒரு மனிதன் கடன்பட்டுவிட்டால் பொய் பேசவும், வாக்குறுதிக்கு மாறு செய்யவும் ஆரம்பித்துவிடுகிறான் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: புகாரி 2397
கடன் வாங்கிவிட்டு அதை திருப்பிக் கொடுக்க தாமதமானாலோ அல்லது கொடுக்க முடியாத நிலைக்கு ஆளானாலோ மனிதன் பொய் பேசியும் பொய்யான வாக்குறுதிகள் கொடுத்தும் தீமையை சம்பாதிக்க ஆரம்பித்துவிடுகிறான்.
கடன் வாங்குவதால் பல தீமைகளை செய்யவேண்டிய நிலை மனிதனுக்கு ஏற்ப்படுவதால் தன்னால் இயன்றவரை மனிதன் கடன் வாங்குவதிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்பதை இந்த ஹதீஸ் உணர்த்துகிறது.
வாங்கியக் கடனை திருப்பிக் கொடுக்காமல் மரணித்துவிட்டால் பிற மனிதனுக்கு கொடுக்க வேண்டிய உரிமையை கொடுக்காத குற்றம் வந்து சேரும்.
ஸஃத் பின் அல்அத்வால் (ரலி) அவர்களின் சகோதரர் மரணிக்கையில் முன்னூறு திர்ஹமை விட்டுச் சென்றார். அந்த தொகையை மரணித்தவரின் பிள்ளைகளுக்காக செலவழிக்க வேண்டுமென்று வைத்திருந்தார் ஸஃத், அவரை நோக்கி நபி(ஸல்) அவர்கள் உன் சகோதரர் அவர் வாங்கிய கடனால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். எனவே அவருக்காக அதனை அடைத்து விடு! என்றார்கள். அதற்கவர் அல்லாஹ்வின் தூதரே அவருடைய கடனெல்லாம் நான் அடித்துவிட்டேன். ஆனால் ஒரு பெண்மணி தனக்கு இரண்டு தீனார்கள் அவர் கொடுக்க வேண்டுமென்று வாதிட்டார், அவரிடம் ஆதாரம் எதுவுமில்லை என்பதால் நான் கொடுக்கவில்லை என்றார். அதற்க்கு நபியவர்கள் அப்பெண் உண்மைதான் சொல்கிறார் அந்தக் கடனையும் அடைத்து விடு! என்றார்கள்.
நூல்கள்: அஹ்மத் 20088, இப்னுமாஜா 2433.
கடன் வாங்கி அதை அடைக்காமல் இறந்து போகிறவருக்கு நபி(ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்த மாட்டார்கள். இந்நிலையில் ஒரு மய்யித் கொண்டுவரப்பட்டது. அவர்மீது கடன் திருப்பிக் கொடுக்க வேண்டியிருக்கிறதா? என்று நபியவர்கள் கேட்டார்கள். அதற்க்கு, ஆம் இரண்டு தினார்கள் என்று மக்கள் பதிலளித்தனர், அப்படியானால் உங்கள் தோழருக்கு நீங்களே தொழுதுகொள்ளுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூகதாதா(ரலி) அல்லாஹ்வின் தூதரே அதை அடைப்பது என் பொறுப்பு என்றார். அதன் பின் நபி(ஸல்) அந்த மய்யித்திற்காக தொழுகை நடத்தினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்கள்: அஹ்மத் 14192, அபூதாவூத் 3345
இது மட்டுமின்றி அல்லாஹ்வின் வழியில் போர் செய்து உயிர் தியாகம் செய்தவருக்கு தவறுகளெல்லாம் மன்னிக்கப்பட்டாலும் கடன் மட்டும் மன்னிக்கப்படாது.
நபி(ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து அல்லாஹ்வின் தூதரே நான் பொறுமையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் (எதிரிகளை) முன்னோகியவாறும் புறமுதுகு காட்டாமலும் அல்லாஹ்வின் வழியில் போரிட்டுக் கொல்லப்பட்டால் என் தவறுகளெல்லாம் மன்னிக்கப்படுமல்லவா? என்று கேட்டார். அதற்க்கு ஆம் என்று பதிலளித்தார்கள். நபியவர்கள் அம்மனிதர் திரும்பிச் செல்கையில் அவரை அழைத்து மீண்டும் அவரது கேள்வியைக் கேட்கும்படி கூறினார்கள். முன்பு கேட்டதையே அவர் மீண்டும் கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஆம் கடனைத் தவிர! இவ்வாறு ஜிப்ரீல் எனிடம் இப்போது கூறினார்கள் என்றார்கள்.
நூல்கள்: நஸஈ 3156, (இதன் கருத்து முஸ்லிம், திர்மிதியிலும் உள்ளது)
அனுமதிக்கப்பட்ட காரணங்களுக்காக கடன் வாங்குவதற்க்கே இந்த எச்சரிக்கை என்றால் அனுமதிக்கப்படாத காரியங்களுக்காகவும் ஆடம்பரத்திற்காகவும் கடன் வாங்கினால் எவ்வளவு பெரிய தவறாகும் என்பதைப் புரியலாம்.
கடன் வாங்கி அதை வாங்கிய விதத்தில் திருப்பிக் கொடுக்க இயலாத நிலை ஏற்ப்பட்டால் எதையாவது விற்றாவது அந்தக் கடனை அடைக்கிற நிலையில் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
கடன் கொடுப்பவர் கவனிக்கவேண்டியவை
கடன் கொடுப்பது ஒருவருக்கு ஏற்ப்பட்டிருக்கும் இக்கட்டிலிருந்து விடுவிப்பதாயிருப்பதால் அது அல்லாஹுவிடம் நன்மையை பெற்றுத் தரக்கூடிய நற்செயலாக உள்ளது.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான், அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கின்றாரோ, அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹுவும் ஈடுபட்டிருக்கின்றான். எவர் ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகின்றாரோ அவரை விட்டு அல்லாஹுவும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகின்றான். எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிராரோ அவரது குறைகளை மறுமை நாளில் அல்லாஹுவும் மறைக்கிறான்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி), நூல்: புகாரி 2442
மேலும் கடன் வாங்கியவர் அதை திருப்பித் தருவதற்கு தாமதம் ஏற்பட்டாலோ அல்லது ஏதேனும் குறை செய்தாலோ பெருந்தன்மையாக நடந்துகொள்ள வேண்டும். அதுவும் அல்லாஹ்வின் கிருபையைப் பெற்றுத்தரும்.
“வாங்கும் பொழுதும் விற்கும் பொழுதும் கடனைத் திரும்பப் பெறும்போதும் பெருந்தன்மையாக நடந்துகொள்ளும் மனிதருக்கு அல்லாஹு அருள்புரிவானாக.” அறிவிப்பவர்: அப்தில்லாஹ் (ரலி), நூல்: புகாரி 2076
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “(முன் காலத்தில்) மக்களுக்குக் கடன் கொடுக்கக் கூடிய ஒரு வியாபாரி இருந்தார். கடனைத் திருப்பிச் செலுத்த சிறமப்படுபவரை அவர் கண்டால், தனது பணியாளர்களிடம் இவரது கடனைத் தள்ளுபடி செய்யுங்கள், அல்லாஹ் நமது தவறுகளைத் தள்ளுபடி செய்யக் கூடும் என்று கூறுவார். அல்லாஹ்வும் அவரது தவறுகளைத் தள்ளுபடி செய்தான்.”
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி 2078
எழுதி வைத்தல்:
அல்லாஹ் கூறுகிறான்:
“நம்பிக்கைக் கொண்டோரே! ஒரு குறிப்பிட்ட தவணையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல்செய்து கொண்டால் அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.” அல்குர்ஆன் 2:282
கடன் கொடுக்கல் வாங்கல் தொடர்பான பல சட்டங்களையும் முறைகளையும் விளக்கும் இந்த வசனத்தில் அதை எழுதி வைத்துக் கொள்வதை ஒரு முதன்மையான சட்டமாக அல்லாஹு குறிப்பிடுகிறான்.
கடன் கொடுக்கல் வாங்கலின் ஒப்பந்தம் எதுவும் பேச்சின் அடிப்படையில் மட்டும் இருந்தால் சச்சரவுகளும் சிக்கல்களும் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
கடன் வாங்கியவர், பின்பு தான் வாங்கியதையே மறுக்கலாம் அல்லது தான் வாங்கியதை விட குறைந்த தொகை வாங்கியதாகக் கூறலாம் அல்லது வாங்கும்போது சொல்லிய தவணையை மாற்றலாம். இதே போல் கொடுத்தவரும் மாற்றிப் பேசலாம். அல்லது கொடுக்கும் போது பேசிக் கொண்ட தவணைக்கு முன்பே திருப்பிக் கேட்கலாம்.
இதுபோல் பல்வேறு பிரட்சனைகள் ஏற்ப்படலாம். எழுதிக் கொள்வதன் மூலமாக இவ்வாறான பிரச்சனைகளும் சச்சரவுகளும் ஏற்ப்படுவதைத் தடுத்துக் கொள்ளலாம்.
கொடுப்பவரும் வாங்குபவரும் நல்லவர்களாக இருந்தால் கூட மறதியின் காரணமாக மாற்றிப் பேச வாய்ப்புள்ளது. அவ்வாறான விரும்பத்தகாத நிகழ்வு ஏற்ப்படுவதை எழுத்து தடுக்கிறது.
அல்லாஹ் கடனை எழுதிக் கொள்ளச் சொல்வதானால் விவரமாகவும் முழுமையாகவும் எழுதிக் கொள்ள வேண்டும். கடனின் அளவு, திருப்பிக் கொடுக்க வேண்டிய காலம், பல தவணைகள் என்றால் அது பற்றிய விவரம், இது போன்ற அனைத்து விவரங்களும் எழுதப்பட வேண்டும்.
பிற்காலத்தில் இருதரப்புக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் இந்தப் பத்திரமே தீர்ப்பளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். மட்டுமின்றி இருவருக்கும் சச்சரவு ஏற்ப்பட்டு நீதிமன்றம் வரை செல்ல வேண்டிய நிலை ஏற்ப்பட்டால் நீதிபதிக்கு தெளிவான ஆதாரமாகவும் அவர் சரியான தீர்ப்பளிப்பதற்கு வழிகாட்டுவதாகவும் அந்தப் பத்திரம் இருக்க வேண்டும்.
எழுதிக் கொள்வது முக்கியமானது என்பதை வலியுறுத்த இந்த வசனத்தின் பிற்பகுதியிலும் எழுதுங்கள் என்று அல்லாஹ் உத்தரவிடுகிறான். அது:
“தவிர (கொடுக்கல் வாங்கல்) சிறிதோ பெரிதோ அதை அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இருக்காதீர்கள், இதுவே அல்லாஹ்விடம் மிகவும் நீதமானதாகும். சாட்சியத்திற்கு உறுதியுண்டாகுவதாகவும் இன்னும் இது உங்களுக்கு சந்தேகங்கள் ஏற்ப்படாமல் இருக்க சிறந்த வழியாகவும் இருக்கும்.” அல்குர்ஆன் 2:282
இங்கு சிறிய தொகையையும் கூட எழுதி வைத்துக் கொள்ளுமாறு அல்லாஹ் அறிவுறுத்துகிறான்.
எழுதிக் கொள்ள வேண்டியதன் காரணங்களையும் இங்கு விவரிக்கிறான்.
மிகவும் நீதமான செயல் என்பது ஒரு காரணம். எத்தனையோ விஷயங்களை மனிதன் எழுதி வைத்துக் கொள்ளும்போது கடன் கொடுத்து உதவியவர் பாதிப்புக்குள்ளாகாமல் இருப்பதற்காக எழுதிவைப்பது தான் நீதி.
அடுத்து சாட்சியத்திற்கு உறுதியை ஏற்ப்படுத்தும் என்பது இன்னொரு காரணம். மனிதர்கள் சொல்லும் சாட்சியை சரிபார்த்துக் கொள்வதற்கு இந்தப் பத்திரம் உதவுகிறது. மட்டுமின்றி இதுவே ஒரு தனி சாட்சியைப் போலவும் இருக்கும்.
கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுபவர்களுக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்கு எழுத்து பேருதவியாக இருக்கிறது என்பது மற்றொரு முக்கியக் காரணம்.
எழுதி வைக்காமல் கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவோருக்கு சந்தேகம் ஏற்ப்படுவது என்பது பலருக்கும் ஏற்ப்படும் அனுபவம்.
குறிப்பாக தொகை சிறியதாக இருந்தால் கொடுத்தோமா கொடுக்கவில்லையா என்கிற சந்தேகம் ஏற்ப்படும், அல்லது பல தவணைகளில் திருப்பிக் கொடுத்துக் கொண்டிருந்தாலும் இருதரப்பில் யாரிடமும் சந்தேகம் ஏற்ப்பட அதக வாய்ப்புள்ளது.
ஆகவே தான் அல்லாஹுதஆலா கடனை எழுதிவைத்துக் கொள்வதை வலியுறுத்துகிறான்.
இங்கு சிறிய தொகையாக இருந்தாலும் கூட அல்லாஹ் எழுதிக் கொள்ளச் சொல்கிறான். சிறு தொகையையும் கூட இந்த வசனத்தில் அல்லாஹ் கட்டளையிடும் முறையில் எழுதிக் கொண்டிருப்பது நடைமுறைப் படுத்த மிகச் சிரமமானது. ஆனால் நினைவூட்டலுக்காக இருதரப்பாரும் தனித் தனியாக எழுதி வைத்துக் கொள்வது சிறந்தது.
எழுத்தர்:
கடன் ஒப்பந்தத்தை எழுதுவதற்கு மூன்றாம் நபர் ஒருவரை ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். மேற்கண்ட வசனத்தில் அல்லாஹு கூறுகிறான்:
“… எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும், எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக் கூடாது, (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்கு கற்றுக்கொடுத்தபடி அவன் எழுதட்டும்.”
இந்த வசனத்தின் வாசக அமைப்பை கவனிக்கும்போது மூன்றாம் நபர் ஒருவரைத் தான் எழுதச் சொல்ல வேண்டும் என்பதும், கடன் கொடுக்கல் வான்களில் ஈடுபடுபவர்களில் ஒருவர் எழுதுவது முறையல்ல என்பதும் தெரிகிறது.
அத்துடன் பத்திரங்கள், ஒப்பந்தங்கள் எழுதுவதற்கென்றே இருக்கக் கூடிய எழுத்தாளர்களை வைத்துதான் எழுத வேண்டும் என்பதும் கவனிக்க வேண்டிய ஓன்று. ஒருவேளை அப்படிப் பட்டவர்கள் அமையாவிட்டால் பொதுவாக எழுதத் தெரிந்த ஒருவரை வைத்து எழுதிக் கொள்ளலாம்.
அத்துடன் எழுத்தர் நீதி, நேர்மை உடையவராக இருக்க வேண்டும். நேர்மையில்லாத ஒருவர் ஒப்பந்தம் எழுதும்போதும் சரி அல்லது பிற்காலத்திலும் தனக்கு வேண்டப்பட்டவருக்கு சாதகமாக இன்னொரு தரப்புக்கு அந்நியாயம் செய்ய வாய்ப்புள்ளது. அதனால் தான் அல்லாஹ் இந்த வசனத்தில் ‘நீதியுடன்’ என்று கூறுகிறான்.
பொதுவாகவே இந்த எழுத்தர் வேலையில் அப்படிப்பட்டவர்கள் இருக்கக் கூடாது. இருந்தால் அவர்களை அணுகக் கூடாது என்பது மட்டுமன்றி அவர்களை அந்த வேலை செய்வதற்கு விடக் கூடாது.
பத்திர வாசகத்தைச் சொல்பவர்:
அல்லாஹ் தொடர்ந்து கூறுகிறான்:
“யார் மீது (திருப்பிக் கொடுக்க வேண்டிய கடன்) பொறுப்பு இருக்கிறதோ அவனே பத்திரத்தின் வாசகத்தைச் சொல்லட்டும். அவன் தனது இரட்சகனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். மேலும் அவன் வாங்கியதில் எதையும் குறைத்துவிடக் கூடாது.” அல்குர்ஆன் 2:282
கடன் ஒப்பந்தத்தை எழுதிக் கொள்ளும்படி வழிகாட்டிய அல்லாஹ் எழுத வேண்டிய வாசகத்தை கடன் வாங்குபவரே சொல்லவேண்டுமென அறிவுறுத்துகிறான். வாங்குபவர் தன் வாயினாலே இவ்வளவு தொகை வாங்குகிறேன் என்றும் இத்தனை நாளில் திருப்பிக் கொடுத்துவிடுவேன் என்றும் கூறிவிடுவதால் பத்திரத்தில் எழுதப்படும் விஷயத்திற்கு கூடுதல் வலு சேர்ந்துவிடுகிறது. வாங்கிய தொகையை குறிப்பிட்ட தினத்தில் கொடுப்பதற்கு கூடுதல் நிர்பந்தமும் ஏற்ப்பட்டுவிடுகிறது.
இதற்க்கு மாற்றமாக கடன் கொடுப்பவரோ அல்லது வேறு ஒருவரோ பத்திர வாசகத்தைச் சொல்லி எழுதப்பட்ட பின் கடன் வாங்கியவர் திருப்பிக் கொடுக்க தாமதப் படுத்திவிட்டு இந்தத் தவணை நீங்கலாக சொல்லி எழுதிக் கொண்டது நான் சொல்லவில்லை என்று பேச வாய்ப்புள்ளது. அப்படிப்பட்ட தேவையில்லாத சட்டங்களைத் தவிர்க்க சரியான முறையை அல்லாஹ் இங்கு கற்றுத் தருகிறான்.
அதோடு கடன் வாங்குபவருக்குத் தான் தன்னால் எப்போது திருப்பிக் கொடுக்க முடியும் என்பது நன்றாகத் தெரியும். அவர் வாசகங்களைக் கூறுவதே சரியானது.
எனவே முதலில், எழுத வேண்டியதை இருதரப்பினரும் பேசிக்கொண்டு இருவருக்கும் உடன்ப்பாடானதை கடன் வாங்குபவரே எழுத்தரிடம் கூற வேண்டும்.
இதோடு தொடர்புடைய இன்னொரு விஷயம் பத்திர வாசகத்தைச் சொல்ல இயலாத நிலையில் கடன் பெறுபவர் இருந்தால் என்ன செய்வது என்பது. இதற்க்கான விளக்கத்தை அல்லாஹ் தருகிறான்:
“யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவன் அறிவு குறைந்தவனாகவோ, அல்லது பலவீனனாகவோ அல்லது வாசகத்தைக் கூற இயலாதவனாகவோ இருப்பின் அவனுடைய பொறுப்பாளர் நீதமாக வாசகங்களைச் சொல்லட்டும்.” அல்குர்ஆன் 2:282
இங்கு கடன் ஒப்பந்த வாசகத்தை தாமாகச் சொல்ல இயலாத மூன்று வகையினரை அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
ஒருவகை, “அறிவு குறைந்தவன்” அதாவது பணம் கொடுக்கல் வாங்கலில் விவரமில்லாதவர். இந்த நிலை சிறு பிராயத்தின் காரணமாகவும் இருக்கலாம்.அல்லது பெரியவராக இருந்தாலும் காசு பணத்தைக் கையாளத் தெரியாததின் காரணமாகவும் இருக்கலாம்.
இப்படி பெரியவர்களாயிருந்தாலும் வியாபாரம் மற்றும் கொடுக்கல் வாங்கலில் விவரமில்லாதவர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு உதாரணமாக ஒரு ஹதீஸ் உள்ளது அது:
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு மனிதர் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார் அவர் விவரம் குறைந்தவராக இருந்தார். எனவே அவரது குடும்பத்தார் நபி(ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! இவர் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவதைத் தடை செய்யுங்கள் என்று சொன்னார்கள். எனவே நபியவர்கள் அவரை அழைத்து வியாபார கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவதிலிருந்து அவருக்கு தடை விதித்தார்கள். ஆனால் அவர் அல்லாஹ்வின் தூதரே! வியாபாரத்தில் ஈடுபடாமல் இருக்க எனக்கு பொறுமை இல்லை என்றார். அப்போது, நீ வியாபாரம் செய்வதை விடமாட்டாய் என்றால் வியாபாரத்தின் போது ‘ஏமாற்றம் இருக்கக் கூடாது’ என்று சொல்லிக்கொள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இன்னொரு அறிவிப்பில் இப்படிச் சொலிக் கொள்வதன் மூலமாக தான் அந்த வியாபாரத்தில் ஏமாற்றப்பட்டது தெரிந்தால் மூன்று நாட்களுக்குள் அவ்வியாபாரத்தை ரத்து செய்ய உரிமை கிடைக்கிறது என்று நபி(ஸல்) அவர்கள் விளக்கமளித்ததாக உள்ளது.
நூல்கள்: அபூதாவூத் 3503, திர்மிதி 1250, இப்னுமாஜா 2355
கொடுக்கல் வாங்கலில் விவரம் குறைந்தவர்கள் பற்றிய ஒரு தகவலுக்காக மட்டுமே இந்த ஹதீஸை நாம் இங்கு குறிப்பிட்டுள்ளோம்.
கடன் பத்திர வாசகத்தை தாமாகச் சொல்ல இயலாத இன்னொரு வகை ‘பலவீனன்’ அதாவது முதுமையில் அதிகம் தளர்ச்சி அடைந்தவர், மனநோய் பாதிப்புக்கு ஆளானவர் போன்றவர்கள்.
மூன்றாவது வகை, ‘வாசகத்தைக் கூறவே இயலாதவர்’ அதாவது ஊமையாக இருக்கலாம் அல்லது அங்கு வரமுடியாத சூழலில் இருக்கலாம்.
இம்மூன்று வகையினர் பெயரிலும் கடன் வாங்கும்போது அவர்களின் பொறுப்பாளரே பத்திர வாசகத்தைக் கூற வேண்டும்.
இப்போது ஒரு கேள்வி எழலாம். இதுபோன்ற பலவீனமான நிலையில் உள்ளவர் பெயரில் ஏன் கடன் வாங்க வேண்டும்? இப்படிப்பட்டவர்களுக்காக யார் கடன் கொடுக்க முன்வருவார்?
இப்படிப்பட்டவர்களுக்காக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்ப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. தேபோல் இவர்களுக்கு தயக்கமின்றி கடன் கொடுக்கக் கூடிய சூழ்நிலையும் உண்டு.
உதாரணத்திற்கு ஒரு சிறுவனுக்கு வாரிசுரிமை அடிப்படையில் ஒரு நிறுவனமும் சில சொத்துக்களும் கிடைத்து அவை அவன் பெயரில் இருக்கிறது.
அப்போது அவனது நிறுவனத்திற்கு கடன் தேவைப்பட்டால் அவன் சார்பில் அவனது பொறுப்பாளர் பிறரிடம் கடன் கேட்கலாம். அந்த நிறுவனத்தில் நஷ்டம் ஏற்ப்பட்டால் கூட அவனது வேறு சொத்திலிருந்து தான் கொடுக்கும் கடனைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்பதைத் தெரிந்தவர்கள் கடன் கொடுக்க முன்வருவதற்கு வாய்ப்புள்ளது.
இதுபோல் இம்மூன்று வகையினருக்கும் ஏதேனும் சந்தர்ப்பத்தில் இவ்வாறு கடன் வாங்கும் நிலை ஏற்ப்படலாம். அப்போது அவர்களின் பொறுப்பாளர்கள் கடன் பத்திர வாசகத்தைச் சொல்ல வேண்டும்.
அல்லாஹ் இவ்வசனத்தில் எழுதிக்கொள்ள வேண்டும் என்று கட்டளை வார்த்தையில் கூறியிருப்பதால் எழுதிக் கொள்வது கடமை என்கின்றனர் சில அறிஞர்கள். கட்டளை வார்த்தையில் அமைந்திருந்தாலும் எழுதிக் கொள்வது நல்லது என்ற அடிப்படையில் ஆர்வமூட்டும் விதத்தில் சொல்லப்பட்டது தான் என்பது வேறு அறிஞர்களின் கருத்து.
நபி(ஸல்) அவர்களின் நடைமுறை மற்றும் நபித்தோழர்கள் காலத்திலிருந்து இன்று வரையுள்ள முஸ்லிம்களின் நடைமுறையையும் வைத்துப் பார்க்கும் போது எழுதுவது கடமையல்ல என்பதையும் எழுதிக்கொண்டால் மிகவும் நலமாக அமையும் என்பதற்கான உத்தரவு தான் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து இப்னு கஸீர் உள்ளிட்ட பிரபல குர்ஆன் விளக்கவுரைகளில் பேசப்பட்டுள்ளது.
அல்லாமா அஷ்ஷன்கைத்தீ (ரஹ்) அவர்கள் இந்த வசனத்தின் விளக்கத்தில் மேற்கண்ட கருத்து வேறுபாடுகளையும் ஆதாரங்களையும் கூறியபின் எழுதுகிறார்கள்:
“இதுவரை நாம் எடுத்தெழுதியவற்றில், சாட்சியை ஏற்ப்படுத்துவதும் எழுதிவைப்பதும் ஆர்வமூட்டப்பட்டது தான்; இப்னு ஜரீரும் வேறு சிலரும் கூறுவது போல் அவசியமான கடமை இல்லை என்பதற்கு தெளிவான ஆதாரமுள்ளது.”
நூல்: தஃபஸீர் அள்வாஉல் பயான்.
ஆகவே கடனை எழுதிவைக்க வேண்டும் என்ற உத்தரவு பல நன்மைகளைக் கருத்தில் கொண்டு ஆர்வமூட்டப்பட்ட விரும்பத்தக்க செயல் என்று புரிந்துகொள்ள வேண்டும்.
தவணை:
கடன் கொடுக்கல் வாங்கலில் தேவையென்று கருதினால் தவணை குறிப்பிட்டுக் கொள்ளலாம்.
கொடுக்கல் வாங்கல் முறை பற்றிப் பேசும் திருக்குர்ஆனின் 2:282 வசனத்தில் துவக்கத்திலேயே, குறிப்பிட்ட தவணையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்துகொண்டால்… என்று அல்லாஹ் கூறுகிறான்.
இந்த வசனத்தின் பிறப்பகுதியிலும் சிறிதோ பெரிதோ அதை அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இருக்காதீர்கள் என்றும் கூறுகிறான்.
தவணைக் குறிப்பிடும் போது திருப்பிக் கொடுக்கும் நாள் பற்றிய விவரத்தை தெளிவாக விளக்க வேண்டும். அதே போல் ஒன்றுக்கு மேற்பட்ட தவணைகளில் திருப்பிக் கொடுப்பதாக இருந்தால் எத்தனைத் தவணைகள் என்பதும் கடைசித் தவணை எப்போது என்பதும் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது மக்கள் இரண்டு, மூன்று வருடங்களில் பேரச்சம் பழத்தைப் பெற்றுக் கொள்வதாக (ஒப்புக் கொண்டு அதற்காக) முன்பணம் கொடுத்து வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் “ஒருவர் ஒரு பொருளுக்கு முன்பணம் கொடுத்தால் அளவும் எடையும் தவணையும் குறிப்பிடப்பட்ட பொருளுக்காக (மட்டுமே) கொடுக்கட்டும்!” என்றார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி), நூல்: புகாரி 2240
மேலும் தெளிவற்ற முறையில் தவணை குறிப்பிடப்படுவதை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.
நபி(ஸல்) அவர்கள் பிறக்காத உயிரினத்தை விற்பதற்கு தடை விதித்தார்கள். அறியாமைக் கால மக்கள் இத்தகைய வியாபாரம் செய்து வந்தனர்! இந்த ஒட்டகம் குட்டிப் போட்டு அந்த குட்டிக்குப் பிறக்கும் குட்டியை நான் வாங்கிக் கொள்கிறேன்! (அல்லது விற்கிறேன்!) என்று செய்யப்படும் வியாபாரமே இது!
அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி), நூல்: புகாரி 2143
இழுத்தடிப்பது அநீதம்:
தவணைக் குறிப்பிட்டு கடன் பெற்றிருந்தாலும் குறிப்பிடாமல் பெற்றிருந்தாலும் இயன்ற அளவு விரைவாக கடனைத் திருப்பிச் செலுத்திவிட வேண்டும். நிர்பந்தமின்றி இழுத்தடிப்பது குற்றமாகும்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “செல்வந்தன் (வாங்கியக் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் தவணைக் கேட்டு) இழுத்தடிப்பது அநியாயமாகும்! உங்களில் ஒருவரது கடன் ஒரு செல்வந்தன் மீது மாற்றப்பட்டால் அவர் (அதற்கு) ஒத்துக் கொள்ளட்டும்!”
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி 2287, 2288.
வசதியுள்ளவர் கடனைத் திருப்பிக் கொடுக்காமல் இருப்பது அவரது மானத்தை(பங்கப் படுத்துவதை)யும், அவரை தண்டிப்பதையும் ஆகுமானதாக்கிவிடும் என்றும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்கள்: நாஸஈ 4690, அபூதாவூத் 3630.
கடன் பெறும்போது தவணையை ஏற்றுக்கொள்வது ஒரு வாக்குறுதியாகும், வாக்குறுதியை சரியாக நிறைவேற்றுவது ஒரு கடமை, அதை நிறைவேற்றுவதில் அலட்சியமாக இருந்தாலும் அதுவும் மறுமையில் விசாரிக்கப்படும்.
அல்லாஹ் கூறுகிறான்: “வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்! நிச்சயமாக வாக்குறுதி விசாரிக்கப்படக் கூடியதாக இருக்கின்றது.” (அல்குர்ஆன் 17:34)
அல்லாஹ் பொறுப்பேற்கிறான்:
வாங்கிய கடனை முறையாகவும் குறிப்பிட்ட தவணையிலும் திருப்பிக் கொடுக்க வேண்டுமென்ற நல்லெண்ணமும் ஆர்வமும் உள்ளவருக்கு அவரது எண்ணம் நிறைவேற அல்லாஹ் பொறுப்பெற்றுக்கொள்கிறான்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இஸ்ரவேலர்களில் ஒருவர் மற்றொருவரிடம் தமக்கு ஆயிரம் தங்கக் காசுகள் கடனாகக் கேட்டார். கடன் கேட்கப்பட்டவர் ‘சாட்சிகளை எனக்குக் கொண்டுவா! அவர்களை சாட்சியாக வைத்துத் தருகிறேன்’ என்றார். கடன் கேட்டவர் ‘சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்!’ என்றார் ‘அப்படியானால் ஒரு பிணையாளியை என்னிடம் கொண்டுவா!’ என்று கடன் கேட்கப்பட்டவர் கூறினார். அதற்க்கு கடன் கேட்டவர் ‘பிணை நிற்க அல்லாஹ்வே போதுமானவன்’ என்று கூறினார். கடன் கேட்கப்பட்டவர் ‘நீர் கூறுவது உண்மையே!’ என்று கூறி, குறிப்பிட்ட தவணைக்குள் திருப்பித்தர வேண்டும் என்று ஆயிரம் தங்கக் காசுகளை அவருக்குக் கொடுத்தார். கடன் வாங்கியவர் கடல் மார்க்கமாகப் புறப்பட்டு, தமது வேலைகளை முடித்துக் கொண்டு, குறிப்பிட்ட தவணையில் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதற்காக வாகனத்தைத் தேடினர்.எந்த வாகனமும் கிடைக்கவில்லை, உடனே ஒரு மரக்கட்டையை எடுத்து, அதைக் குடைந்து அதற்குள் ஆயிரம் தங்கக் காசுகளையும் கடன் கொடுத்தவருக்கு ஒரு கடிதத்தையும் உள்ளே வைத்து அடைத்தார். பிறகு கடலுக்கு வந்து, ‘இறைவா! இன்னாரிடம் நான் ஆயிரம் தங்கக் காசுகளைக் கடனாகக் கேட்டேன் அவர் பிணையாளி வேண்டுமென்றார், நான் ‘அல்லாஹுவே பிணை நிற்கப் போதுமானவன்!’ என்றேன், அவர் உன்னைப் பிணையாளியாக ஏற்றுக்கொண்டார். என்னிடம் சாட்சியைக் கொண்டுவரும்படி கேட்டார், ‘சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்!’ என்று கூறினேன், அவர் உன்னை சாட்சியாக ஏற்றுக் கொண்டார். அவருக்குரிய(பணத்)தை அவரிடம் கொடுத்து அனுப்பி விடுவதற்காக ஒரு வாகனத்திற்கு நான் முயற்சிசெய்தும் கிடைக்கவில்லை என்பதெல்லாம் நீ அறிவாய்! எனவே, இதை உரியவரிடத்தில் சேர்க்கும் பொறுப்பை உன்னிடத்தில் ஒப்படைக்கிறேன்!’ என்று கூறி அதைக் கடலில் வீசினார். அது கடலுக்குள் சென்றதும் திரும்பிவிட்டார், அத்துடன் தமது ஊருக்குச் செல்வதற்காக வாகனத்தய்ம் அவர் தேடிக் கொண்டிருந்தார். அவருக்குக் கடன் கொடுத்த மனிதர், தமது செல்வத்துடன் ஏதேனும் வாகனம் வரக்கூடும் என்று நோட்டமிட்ட வண்ணம் புறப்பட்டார். அப்போது பணம் அடங்கிய அந்த மரக்கட்டையைக் கண்டார். தமது குடும்பத்திற்கு விறகாகப் பயன்படும் என்பதற்காக அதை எடுத்தார். அதை பிளந்து பார்த்தபோது பணத்தையும் கடிதத்தையும் கண்டார். பிறகு கடன் வாங்கியவர் ஆயிரம் தங்கக் காசுகளை எடுத்துக் கொண்டு இவரிடம் வந்து சேர்ந்தார். ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! உமது பணத்தை உமக்குத் தருவதற்காக வாகனம் தேடும் முயற்சியில் நான் ஈடுபட்டிருந்தேன். இப்போது தான் வாகனம் கிடைத்து வந்திருக்கிறேன்!’ என்று கூறினார். அதற்கு கடன் கொடுத்தவர், “எனக்கு எதையாவது அனுப்பி வைத்தீரா?” என்று கேட்டார். கடன் வாங்கியவர் “வாகனம் கிடைக்காமல் இப்போது தான் வந்திருக்கிறேன் என்று உமக்கு நான் தெரிவித்தேனே!” என்று கூறினார். கடன் கொடுத்தவர், “நீர் மரத்தில் வைத்து அனுப்பியதை உம் சார்பாக அல்லாஹ் என்னிடம் சேர்ப்பித்துவிட்டான். எனவே ஆயிரம் தங்கக் காசுகளை எடுத்துக் கொண்டு (சரியான) வழியறிந்து செல்வீராக!” என்று கூறினார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 2291.
இந்த ஹதீஸில் வாங்கியக் கடனை பேசிய தவணையை தாண்டிவிடாமல் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் நடந்துகொண்ட மனிதரின் நாட்டம் நிறைவேற அல்லாஹ் அற்ப்புதமான வழியில் உதவி செய்துள்ளான் என்ற தகவலை நபி(ஸல்) அவர்கள் நமக்குத் தெரிவிக்கிறார்கள்.
இதே விதத்தில் நமக்குக் கூட அல்லாஹ் உதவி செய்வானா?
ஒவ்வொருவருக்கும் இதே மாதிரியான அற்புத வழியில் அல்லாஹ் உதவி செய்வான் என்பதில்லை, ஆனால் அந்த நல்ல மனிதரிடம் இருந்த நல்லெண்ணம் நம்மிடமும் இருந்தால் ஏதேனும் ஒரு வழியில் குறிப்பிட்ட தவணையில் நிறைவேற்ற அல்லாஹ் உதவி செய்வான். அல்லது அந்த இக்கட்டிலிருந்து விடுபடுவதற்கு நல்வழி காட்டுவான்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருளை) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகின்றானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனை திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்துவிடும் எண்ணத்துடன் கடன் வாங்குகின்றானோ அல்லாஹ்வும் அவனை அழித்துவிடுவான்.”
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 2387.
சாட்சி:
எந்த ஒரு முக்கிய காரியத்திற்கும் சாட்சியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக கொடுக்கல் வாங்கலுக்கு இது மிக அவசியம், இந்த அடிப்படையில் கடன் கொடுக்கல் வாங்கலின் போதும் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
இது பற்றி “உங்கள் ஆண்களில் இருவரை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள். ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால் சாட்சிகளில் நீங்கள் பொருந்தக் கூடியவர்களில் ஆடவர் ஒருவரையும் பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்.” அல்குர்ஆன் 2:282
கடன் கொடுக்கல் வாங்கலை எழுதிக் கொண்டால் எழுத்திலுள்ளதை வலுப்படுத்த சாட்சிகள் தேவை. எழுதிக் கொள்ளாவிட்டால் சாட்சிகள் இருப்பது மிக முக்கியமாகும். சாட்சிகள் நீதி நேர்மை மிக்கவர்களாக இருக்க வேண்டும். விவாகரத்துக்கு ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய சாட்சிகளின் தன்மையை குறிப்பிடும் போது
“உங்களில் நியாயமுடைய இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்.” அல்குர்ஆன் 65:2.
என்று அல்லாஹ் கூறுகிறான்.
இரண்டு ஆண்கள் சாட்சிகளாக இருக்க வேண்டும், அவ்வாறு இரண்டு ஆண்கள் இல்லாத சூழ்நிலையில் ஒரு ஆணும் இரண்டு பெண்களும் சாட்சிகளாக இருக்க வேண்டும்.
ஒரு ஆணின் இடத்தில் ஏன் இரண்டு பெண்கள் என்பதற்கும் அல்லாஹ் அதே தொடரில் காரணம் கூறுகிறான்.
“(பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறிவிட்டால் இருவரில் மற்றொருத்தி நினைவூட்டும் பொருட்டேயாகும்.”
பெண்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்கள், தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்குச் சாதகமாக கூடுதல் குறைவாக பேசிவிடலாம் என்பதற்காக இந்த ஏற்பாடு.
“சாட்சிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கலாகாது” என்றும் அல்லாஹுதஆலா தொடர்ந்து கூறுகிறான்.
இதற்கு, இந்த கொடுக்கல் வாங்கலுக்கு சாட்சிகளாய் இருங்கள் என்று கூப்பிடும்போது அதை ஏற்று அதற்க்கு சாட்சியாக இருக்க வரவேண்டும் என்ற கருத்தும் வருகிறது. அல்லது கொடுக்கல் வாங்கல் முன்பு நடந்த போது அங்கிருந்து அதை நன்றாக அறிந்த சாட்சியாக இருந்தால், பின்னாளில் பிரச்சினை என வரும்போது தான் அறிந்து வைத்துள்ள விவரங்களை சாட்சியமாக வழங்க வேண்டும் என்ற கருத்தும் வருகிறது.
குறிப்பாக நடந்து முடிந்த கடன் ஒப்பந்தத்திற்கு சாட்சியாக இருந்துவிட்டால் பிறகு அந்த சாட்சியம் தேவைப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் கூப்பிட்டால் இவர் சென்று சாட்சியம் வழங்குவது அவசியம்.
சாட்சிகள் வைத்துக் கொள்வது எந்த அளவு முக்கியமென்றால், “நீங்கள் வியாபாரம் செய்யும்போதும் சாட்சிகளை வைத்துக் கொள்ளுங்கள்.” என்று அல்லாஹ் கூறுகிறான். பெரிய அளவில் கொடுக்கல் வாங்கல் நடைபெறும் முக்கிய வியாபாரத்திற்கு சாட்சிகள் இருக்க வேண்டிய தேவையிருக்கிறது.
அடுத்து, சாட்சிகள் தங்கள் சாட்சியை சுதந்திரமாகச் சொல்வதற்கு உரிமை கொடுக்க வேண்டும். கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுபவர்கள் தங்களுக்கு சாதகமாக பேசவேண்டுமென்று கூறி அவர்களுக்கு இடையூறு செய்வது கூடாது. இது பற்றி அதே வசனத்தில் “எழுதுபவனுக்கும் சாட்சிக்கும் எவ்வித இடையூறும் அளிக்கப்படக் கூடாது. நீங்கள் அப்படிச் செய்வீர்களாயின் அது உங்கள் மீது பாவமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.” என்று அல்லாஹ் கூறுகிறான்.
அத்துடன் சாட்சியமளிக்கத் தேவை ஏற்ப்படும்போது அல்லது சாட்சியம் அளிக்கும்போது எதையும் மறைக்கக் கூடாது. “சாட்சியத்தை மறைக்காதீர்கள். எவன் அதை மறைக்கிறானோ நிச்சயமாக அவனுடைய இதயம் பாவத்திற்குள்ளாகிறது.” அல்குர்ஆன் 2:283
அடமானம்:
கடன் கொடுப்பவர் தன் பொருள் திரும்பக் கிடைக்க உத்தரவாதம் வேண்டும் என்பதற்காக கடன் பெறுபவரிடமிருந்து அடமானமாக ஏதேனும் பொருளை வாங்கிக் கொள்ளலாம். கடன் வாங்கியவரால் கடனைத் திருப்பிக் கொடுக்க இயலாமல் போனால் இந்தப் பொருள் மூலம் தன் உரிமையை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
இது பற்றி அல்லாஹ் கூறுவது:
“நீங்கள் பயணத்தில் இருந்து (அச்சமயம்) எழுதுபவனை நீங்கள் பெற்றுக் கொள்ளாவிட்டால் (கடன் கொடுத்தவன்) அடமானப் பொருளை பெற்றுக் கொள்ள வேண்டும். உங்களில் ஒருவர் மற்றவரை நம்பினால் நம்பப்பட்டவன் தன்னிடமுள்ள அமானிதத்தை நிறைவேற்றட்டும், அவன் தன் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சட்டும்.” அல்குர்ஆன் 2:283
இங்கு அல்லாஹ் பிரயாணத்தின் போது அடமானம் பெற்றுக் கொள்வது பற்றி பேசுவதால் பிரயாணத்தில் இருக்கும்போது மட்டும்தான் அடமானப் பொருள் பெற்றுக் கொள்ள முடியும் என்று கருதக் கூடாது. பிரயாணத்தில் எழுத்தரை தேடுவது சிரமம் என்பதால் அப்போதைய கடன்களுக்குத் தான் பெரும்பாலும் அடமானம் தேவைப்படும் என்பதால் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
எனவே உள்ளூரில் இருக்கும்போதும் அடமானம் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு நபி(ஸல்) அவர்களின் வழிமுறையும் ஆதாரமாக உள்ளது.
“நபி(ஸல்) அவர்கள் யூதர் ஒருவரிடம் குறிப்பிட்ட தவணையில் (குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பெற்றுக் கொள்வதாக) உணவுப் பொருளை வாங்கினார்கள் (அதற்காக) அந்த யூதர் நபி(ஸல்) அவர்களிடமிருந்து இரும்புக் கவசத்தை அடமானமாகப் பெற்றார்!” அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி), நூல்: புகாரி 2252.
தன் குடும்பத்தினருக்காக வாங்கிய முப்பது ‘ஸாஉ’ கோதுமைக்காக ஒரு யூதரிடம் தனது கவச ஆடையை அடமானம் வைத்த நிலையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மரணமடைந்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி), நூல்: நஸஈ 4651
அடமானப் பொருளை பயன்படுத்துதல்:
அடமானமாகப் பெற்றப் பொருளை பயன்படுத்துதல் கூடாது. ஏனெனில் கடன் கொடுத்ததை வைத்து கூடுதல் பலன் அடைந்ததாக ஆகும்.
ஆனால் அடமானமாகப் பெற்ற பொருள் கால்நடையாக இருந்தால் அதைப் பராமரிப்பதற்கு ஈடாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
“அடமானம் வைக்கப்பட்டதாக இருந்தால் பிராணியின் முதுகில் வாகனிக்கலாம், பால் தரும் பிராணி அடமானம் வைக்கப்பட்டிருந்தால் பாலை அருந்தலாம். வாகனிப்பவர், பால் அருந்துபவர் மீதே அப்பிராணிக்காக செலவு செய்வது கடமையாகும்.” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்கள்: திர்மிதி 1254, அபூதாவூத் 3528.
மறைமுக வட்டி:
கடன் வாங்கியவர், தான் கடன் வாங்கியதன் காரணத்தால் கடன் கொடுத்தவருக்கு ஏதேனும் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்றால் அது ஒரு விதத்தில் வட்டியாகத்தான் ஆகும். அப்படி நடப்பதை தவிர்க்க வேண்டும்.
தேநீர் வாங்கிக் கொடுப்பது உட்பட அவர்களுக்குள் முன்பு அவ்வாறான பழக்கம் இல்லாதிருந்தால் இந்த வகையில் தான் சேரும்.
அடமானம் வைக்கப்பட்ட கால்நடைக்கு பராமரிப்பு செலவு செய்வதால் அதை பயன்படுத்திக் கொள்ள அனுமதி உண்டு எனக் கூறும் மேற்கண்ட நபிமொழி, நாம் இப்போது பேசும் கூடுதல் பயன்பெறுதல் கூடாது என்று உணர்த்துகிறது. அதை கீழ்வரும் செய்தியும் விளக்குகிறது.
“நான் மதீனாவிற்கு வந்து அப்துல்லாஹ் இப்னு சலாம் (ரலி) அவர்களைச் சந்தித்தேன். அவர்கள் (என்னிடம்) ‘நீங்கள் (என்னுடன்) வர மாட்டீர்களா? உங்களுக்கு நான் மாவையும் பேரீச்சம் பழத்தையும் உண்ணத்தருவேன். நீங்கள் நபி(ஸல்) அவர்கள் வருகைதந்த என் வீட்டிற்கு வந்ததாகவும் இருக்குமே’ என்று கேட்டார்கள். பிறகு, ‘நீங்கள் வட்டி மலிந்துள்ள (இராக்) நாட்டில் வசிக்கிறீர்கள். உங்களுக்கு ஒருவர் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்து, அவர் ஒரு வைக்கோல் போரையோ வாற்கோதுமை மூட்டயையோ கால்நடைத் தீவன மூட்டயையோ அன்பளிப்பாகக் கொடுத்தாலும் அதுவும் வட்டியாகும்.’ என்று கூறினார்கள்.” அறிவிப்பவர்: அபூ புர்தா ஆமிர்(ரஹ்), நூல்: புகாரி 3814.
ஆனால் கடன் வாங்கியவர் கடனைத் திருப்பிச் செலுத்தும் போது தானாக முன்வந்து (முன்பே பேசப்படாமல்) தான் பெற்றப் பொருளை விடச் சிறந்ததையோ அல்லது சற்று கூடுதலாகவோ கொடுப்பது தவறல்ல. இதற்க்கு நபி( ஸல்) அவர்களின் நடைமுறையே ஆதாரமாக உள்ளது. அது:
நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதருக்கு குறிப்பிட்ட வயதுடைய ஒட்டகம் ஒன்றை (கடனாகப் பெற்றதை திருப்பிச் செலுத்தும் வகையில்) கொடுக்க வேண்டியிருந்தது. அதை அவர் (திருப்பிச் செலுத்தும்படி) கேட்டு வந்தார். நபி(ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்) ‘அவருக்கு அதை கொடுத்துவிடுங்கள்’ என்றார்கள்.அந்த வயதுடைய ஒட்டகத்தைத் தேடிய போது அதைவிட அதிக வயதுடைய ஒட்டகத்தைத் தான் தோழர்கள் கண்டார்கள். ‘அதையே கொடுத்துவிடுங்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு அம்மனிதர் ‘எனக்கு நீங்கள் நிறைவாகத் தந்துவிட்டீர்கள். அல்லாஹுவும் உங்களுக்கு நிறைவாகத் தருவான் என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர்’ என்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 2305.
ஹவாலா:
ஹவாலா எனும் வார்த்தைக்கு திருப்புதல் என்பது பொருள். ஒருவர் தான் வாங்கியக் கடனை இன்னொருவரிடம் பெற்றுக்கொள்ளுமாறு பொறுப்பை திருப்பி விடுவதற்கு மார்க்கத்தில் இவ்வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
யாரிடம் அந்த பொறுப்பு புதிதாக ஒப்படைக்கப்பட்டிருக்கிறதோ அவர் அப்பொறுப்பை ஏற்கிற அளவிற்கு வசதி படைத்தவராக இருக்க வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “செல்வந்தன் (வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் தவணை கேட்டு) இழுத்தடிப்பது அநியாயமாகும். உங்களில் ஒருவரது கடன் ஒரு செல்வந்தன் மீது மாற்றப்பட்டால் அவர் (அதற்கு) ஒத்துக் கொள்ளட்டும்.” அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி 2287, 2288.
கடன் பெற்றவர் ஏதோ ஒரு காரணத்தினால் இவ்வாறு சொல்லும்போது கடன் கொடுத்தவர் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒருவேளை புதிதாக பொறுப்பு கொடுக்கப்பட்டவருக்கு அதை திருப்பிக் கொடுக்க இயலாத நிலை ஏற்பட்டுவிட்டால், கடன் பெற்றவரே திருப்பிக் கொடுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஒரு பகுதியில் பெற்றத் தொகையை இன்னொரு பகுதியில் இன்னொருவரால் திருப்பிக் கொடுக்கும் முறைக்கு தற்காலத்தில் ஹவாலா என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ஹதீஸ் நூல்களிலும், ஃபிக்ஹ் நூல்களிலும் இடம்பெறும் கடன் தொடர்பான ஹவாலாவும் இதுவும் ஒரு விதத்தில் ஒத்திருப்பதால் இவ்வாறு அதே வார்த்தையை பயன்படுத்துகின்றனர்..
கஃபாலா:
கஃபாலா என்றால் பொறுப்பேற்றுக் கொள்வதாகவும். எந்த ஒரு உடன்படிக்கை, பேச்சுவார்த்தையிலும் பொறுப்பை நிறைவேற்றக் கடமைப் பட்டவருக்காக ஒருவர் பொறுப்பேற்றுக் கொள்வது மார்க்க அங்கீகாரம் பெற்ற செயல்தான்.
முற்காலத்தில் இரண்டு நல்ல மனிதர்கள் செய்துகொண்ட கடன் கொடுக்கல் வாங்கல் ஒப்பந்தத்தைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறும் பொது:
“.. கடன் கேட்கப்பட்டவர் ‘சாட்சிகளை எனக்குக் கொண்டுவா! அவர்களை சாட்சியாக வைத்துத் தருகிறேன்’ என்றார். கடன் கேட்டவர், ‘சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்!’ என்றார். ‘அப்படியானால் ஒரு பிணையாளியை என்னிடம் கொண்டுவா!’ என்று கடன் கேட்கப்பட்டவர் கூறினார். அதற்க்கு கடன் கேட்டவர் ‘பிணை நிற்க அல்லாஹ்வே போதுமானவன்’ என்று கூறினார். கடன் கேட்கப்பட்டவர் ‘நீர் கூறுவது உண்மையே!’ என்று கூறினார்” என சொல்லிக்காட்டினார்கள். (நபிமொழி சுருக்கம்) நூல்: புகாரி 2291
இதன் மூலம் கடனுக்குப் பொறுப்பாளரை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்பது புரிகிறது. இமாம் புகாரி (ரஹ்) அவர்கள், “கடனில் பொறுப்பேற்றுக் கொள்வது பற்றிய பாடம்” எனும் தலைப்புக்குக் கீழேயே மேற்கண்ட நபிமொழியைப் பதிவுசெய்துள்ளார்.
பொறுப்பேற்பவர், கடன் பெறுபவர் தான் பெற்ற கடனை திருப்பிக் கொடுப்பார் என்பதற்கு உத்தரவாதம் கொடுக்க வேண்டும், ஒருவேளை அவர் திருப்பிக் கொடுக்காவிட்டால், தானே கொடுப்பதாக உறுதியளிக்க வேண்டும்.
கடன் அடைத்த பின்பே சொத்து பிரித்தல்:
ஒருவர் மீது கடன் இருக்கும் நிலையில் மரணமடைந்துவிட்டால், அவருடைய சொத்தைப் பிரிப்பதற்கு முன்பே கடனை அடைத்துவிட வேண்டும்!
ஒருவர் விட்டுச் சென்ற சொத்தில் யார் யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை விவரித்துவிட்டு, “(இவ்வாறு பிரித்துக் கொடுப்பது) அவர் செய்துள்ள மரண சாசனத்தையும், கடனையும் நிறைவேற்றியப் பின்னர் தான்” என்று அல்லாஹ் கூறுகிறான். அல்குர்ஆன் 4:11
கடன் வாங்கியவர் அதை அடைப்பதற்கு எந்த சொத்தையும் விட்டுச் செல்லாமல் மரணித்துவிட்டால் அதை அடைப்பது அவரது வாரிசுதாரர்களின் பொறுப்பு.
ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்துவிட்டு அதை நிறைவேற்றுவதற்குள் மரணித்துவிட்ட தன் தாய்க்காக தான் ஹஜ்ஜு செய்யலாமா? என்று கேள்வி கேட்ட பெண்ணிடம், “ஆம் அவர் சார்பாக ஹஜ் செய்” என்று கூறிய நபி(ஸல்) அவர்கள், “உன் தாயார் மீது கடன் இருந்தால் நீ அதை நிறைவேற்றுவாய் அல்லவா?” என்று கேட்டார்கள், அந்தப் பெண் “ஆம்” என்று பதிலளித்தார். நபி(ஸல்) “அப்படியென்றால் அல்லாஹ்வுக்குச் செய்யவேண்டியதை நிறைவேற்றுங்கள், வாக்கு நிறைவேற்றப்பட அல்லாஹ்வே மிகவும் அருகதையுடையவன் என்று சொன்னார்கள். நூல்: புகாரி 7315.
வாரிசுதாரர்கள் அவ்வாறு நிறைவேற்றுகிற நிலையில் இல்லாவிட்டால் அல்லது வாரிசுதாரர்களே இல்லாவிட்டாலும் எந்த முஸ்லிமும் பொறுப்பேற்றுக் கொள்ளலாம்.
நபி(ஸல்) அவர்கள் முன்னிலையில் ஒரு ஜனாஸா கொண்டுவரப்பட்டபோது, “அவர் ஏதேனும் விட்டுச் சென்றிருக்கிறாரா?” என்று கேட்டார்கள். அதற்கு “இல்லை” என்று பதிலளிக்கப்பட்டது. அடுத்து “அவர் மீது கடன் உள்ளதா?” என்று கேட்டதற்கு “ஆம்” என்று சொல்லப்பட்டது. உடனே நபியவர்கள் “உங்கள் தோழருக்கு நீங்களே தொழுது கொள்ளுங்கள்” என்றார்கள். அப்போது அபூகதாதா(ரலி), “அவர் கடனுக்கு நான் பொறுப்பு, நீங்கள் தொழுகை நடத்துங்கள்” என்றதும் நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். நூல்: புகாரி 2289
பொதுவாக கடன் வாங்காமல் இருப்பதே இம்மைக்கும் மறுமைக்கும் நிம்மதியைத் தரும். இயன்றவரை கடன் வாகுவதைத் தவிர்க்க வேண்டும்!
கடன் வாங்கிவிட்டால் அதை எளிதாக நிறைவேற்றுவதற்கு அல்லாஹ்விடம் உதவி தேடுவதற்காக நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தந்த பிரார்த்தனை:
“அல்லாஹும்மஃபினீ ஃபி ஹலாலிக்க அன் ஹராமிக்க வஅக்னினீ ஃபீ ஃபாள்லிக அம்மன் ஸிவாக்க”
(பொருள்: இறைவா! உனது ஹலாலைக் கொண்டே உன்னால் ஹராமாக்கப்பட்டதின் தேவை ஏற்ப்படுவதிலிருந்து என்னை போதுமானவனாக்கி விடு! உன் கிருபையைக் கொண்டு பிறரை விட்டு என்னைத் தேவயற்றவனாக்கி விடு!) நூல்: திர்மிதி 3563
கடனிலிருந்து பாதுகாவல் தேடி நபி(ஸல்) அவர்கள் செய்த துஆ:
“அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல் ஹம்மி வல் ஹஸனி வல் அஜ்ஸி வல் கஸலி வல் புக்லி வல் ஜுப்னி வளலஇத்தய்னி வகலபத்திர் ரிஜால்.”
(பொருள்: இறைவா! துக்கத்திலிருந்தும், கவலையிலிருந்தும், இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும், கஞ்சத்தனத்திலிருந்தும், கடன் சுமையிலிருந்தும், பிற மனிதர்களின் அடக்குமுறையிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.) நூல்: புகாரி 2893
கடன் கொடுக்கல் வாங்கலில் அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய வழிமுறையை பின்பற்றிச் செயல்பட வேண்டும்!
எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்கு நல்லுதவி செய்வானாக! ஆமீன்!
முற்றும்.