நபியாக இல்லாத ஒருவரிடத்தில் வெளிப்படும் அற்புதங்களின் நிலை

بسم الله الرحمن الرحیم

நபியாக இல்லாத ஒருவரிடத்தில் வெளிப்படும் அற்புதங்களின் நிலை:

நபியாக இல்லாத ஒருவரின் கைகளின் மூலம் வழக்கத்திற்கு மாற்றமான அற்புதச் செயல்களை இறைவன் வெளிப்படுத்தினால் அது அவரது இறைநேசத்திற்கு அத்தாட்சியாக ஆகாது. (அவ்வாறுதான் வனவர்களுடன் இப்லீஸ் இருந்ததும்.) இது தொடர்பாக ராஃபிள்கள் மற்றும் சூஃபிகளில் சிலர் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர்.

இறைநேசர் அல்லாத ஒருவரின் கைகளின் மூலம்கூட அற்புதம் வெளிப்பட முடியும்; ஏன், கெட்டவன் மற்றும் இறைமறுப்பாளன் ஆகியோரின் கைகளில் இருந்தும்கூட அது வெளிப்படலாம் என்பதற்கு, இப்னு ஸய்யாத் (எனும் யூதச் சிறுவன்) தொடர்பாக வந்துள்ள நபிமொழி ஒரு சான்றாகும்.

"வானம் ஒரு பெரும் புகையைக் கொண்டு வரும் ஒரு நாளை (நபியே!) நீங்கள் எதிர்பாருங்கள்" (44:10) எனும் வசனத்தை நபி (ﷺ) அவர்கள் தமது மனத்தில் நினைத்துக் கொண்டபோது, "அது 'துக்' என்பதாகும்" என்று அவன் கூறினான்.

இதைப் போன்றே அவனிடம் இருந்து ஏற்பட்ட மற்றொரு நிகழ்ச்சியும் சான்றாகும். அதாவது இப்னு ஸய்யாதுக்குக் கோபம் வந்தால் (அவனது உடல் ஊதிப்போய்விடும்.) அவன் நடந்துவரும் பாதையை முழுமையாக அவன் உடல் அடைத்துக் கொள்ளும். (ஸஹீஹ் முஸ்லிம், முஸ்னது அஹ்மத்). அப்போது அவனை  அப்துல்லாஹ் இப்னு உமர் (رضی الله عنه) அவர்கள் அடிப்பார்கள்.

அவ்வாறே தஜ்ஜால் எனும் மகா பொய்யனால் ஏற்படும் ஏராளமான அற்புதச் செயல்கள் குறித்து இடம்பெற்றுள்ள நபி மொழிகளும் இதற்குச் சான்றாகும்.

அதாவது அவன் மழை பெய்யுமாறு வானத்திற்கு உத்தரவிட்டால் அது மழையைப் பொழியும். பூமியைப் பார்த்துப் பயிரை முளைவிக்கச் சொன்னால் அது முளைவிக்கும். பூமியின் கருவூலங்கள் அவனைத் தேனீக்களைப் போன்று பின்தொடர்ந்து செல்லும். அவன் இளைஞன் ஒருவனைக் கொன்றுவிட்டுப் பின்னர் அவனை உயிர்ப்பிப்பான். இன்னும் இவை போன்ற திடுக்கிடச் செய்யும் செயல்கள் பலவற்றை அவன் செய்து காட்டுவான்.

இதனால்தான் லைஸ் பின் சஅத் (رحمه الله) அவர்கள், "ஒரு மனிதர் நீரில் நடப்பதையோ, விண்ணில் பறப்பதையோ நீங்கள் பார்த்தால் அவரது நடத்தையை குர்ஆன் மற்றும் நபி வழியோடு ஒத்துப்பார்க்காமல் அவர் குறித்து நீங்கள் ஏமாற்றம் அடைந்துவிட வேண்டாம்" என்று கூறினார்கள்.

ஆதாரம்: தஃப்சீர் இப்னு கஸீர்
أحدث أقدم