அஷ்ஷைஹ் டாக்டர் ஸாலிஹ் ஆல ஷைஹ் ஹஃபிழஹுல்லாஹ் அவர்களின் உரையிலிருந்து..
தலைப்பு-1
இமாம் அபுல் ஹஸன் அல்-அஷ்அரியின் ஆரம்பமும் மாற்றமும்:
இமாம் அபுல் ஹஸன் அல்-அஷ்அரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஆரம்பத்தில் முஃதஸிலா என்ற பகுத்தறிவுவாதக் கொள்கையில்தான் இருந்தார். பின்னர் அதிலிருந்து விலகி, சத்தியத்தைத் தேடி இல்முல் கலாமை (தர்கக் கலை)கற்றுத் தேர்ந்தார். அவர் மறைந்து சுமார் நூறு ஆண்டுகள் அல்லது அதற்கும் சற்று கூடுதல் காலம் வரை, அஷ்அரியாக்களுக்கும் ஹன்பலிகளுக்கும் இடையே எவ்விதக் கொள்கை வேறுபாடுகளும் இருக்கவில்லை; அவர்கள் சகோதரர்களாகவே வாழ்ந்தனர். பக்தாதில் உள்ள ஒரு மதராஸாவில் ஏற்பட்ட பிளவுக்குப் பின்னரே இவர்களுக்கிடையே பகைமையும் பிரிவினையும் உண்டானது.
இல்முல் கலாமின் (தர்க்க சாஸ்திரத்தின்) நோக்கம்:
அபுல் ஹஸன் அல்-அஷ்அரி அவர்கள் முஃதஸிலாக்கள் முன்வைத்த பகுத்தறிவு வாதங்களுக்குப் பதிலடி கொடுப்பதற்காகவும், அல்லாஹ்வின் இருப்பு, அவனது பண்புகள், நபித்துவம், மறுமை வாழ்வு போன்றவற்றை பகுத்தறிவு ரீதியாக நிரூபிப்பதற்காகவுமே 'இல்முல் கலாம்' (தர்க்க சாஸ்திரம்) எனும் கலையைக் கையாண்டார். இவரும் இவரைப் போன்ற மாதுரீதியாக்களும் சுன்னாவிற்கு ஆதரவாகவே இக்கலையைப் பயன்படுத்தினர்; ஏனெனில், அவர்கள் முஃதஸிலாக்களைப் போல இறைப் பண்புகளை முற்றிலும் மறுப்பவர்கள் அல்லர்.
இறுதி கட்ட நிலைப்பாடும் 'அல்-இபானா' நூலும்:
அபுல் ஹஸன் அல்-அஷ்அரி அவர்கள் பக்தாத் வந்தபோது, அக்காலத்து ஹன்பலிகளின் தலைவரான இமாம் அல்பர்பஹாரி ரஹிமஹுல்லாஹ் அவர்களைச் சந்தித்தார். பின்னர் அவர் தனது இறுதி கட்டத்தில் அஹ்லுஸ் ஸுன்னா கொள்கையை முழுமையாக ஏற்று, இமாம் அஹ்மத் பின் ஹன்பல் அவர்களின் அடியொற்றி 'அல்-இபானா' மற்றும் 'மகாலாத் அல்-இஸ்லாமிய்யீன்'
الإبانة و مقالات الاسلاميين
ஆகிய நூல்களை எழுதினார். அதில், "அஹ்லுஸ் ஸுன்னா எதைக் கூறினார்களோ அதையே நாமும் கூறுகிறோம், அவர்கள் எதை நோக்கிச் சென்றார்களோ அதை நோக்கியே நாமும் செல்கிறோம்" என்று தெளிவாகக் குறிப்பிட்டு, இறைவனின் உயர் குணங்களான 'இஸ்திவா' (அர்ஷின் மீது உயர்வாவது), அவனது பண்புகள் போன்றவற்றை இமாம் அஹ்மத் பின் ஹன்பல் விவரித்தபடியே உறுதி செய்தார்.
பிற்கால அஷ்அரியாக்களின் பிறழ்வு:
அபுல் ஹஸன் அல்-அஷ்அரியின் இறுதி கட்ட மாற்றத்தை பிற்கால அஷ்அரியாக்கள் ஏற்க மறுத்தனர். இப்னு பௌரக், அல்-பாகில்லானி, அல்-இஸ்ஃபராயீனி போன்ற பிற்காலத் தலைவர்கள் தர்க்க சாஸ்திரத்தை (இல்முல் கலாம்) கொள்கைக்கான அடிப்படை விதியாக மாற்றினர். இவர்கள் இறைப் பண்புகளை (ஸிஃபாத்) நேரடியாக ஏற்பதைத் தவிர்த்து, அவற்றுக்குச் சுயவிளக்கம்
(தஃவீல்- تأويل) மற்றும் பொருள் அறியாமை (தஃப்வீழ்- تفويض) ஆகியவற்றை புகுத்தினர்.
பண்புகளைக் குறுக்குதல்:
இந்த தர்க்க ரீதியான அணுகுமுறையால் அஷ்அரியாக்கள் இறைவனுக்கு 7 பண்புகளையும், மாதுரீதியாக்கள் 8 பண்புகளையும், முஃதஸிலாக்கள் 3 பண்புகளையும், ஜஹ்மியாக்கள் ஒரே ஒரு பண்பையும் மட்டுமே பகுத்தறிவின் அடிப்படையில் உறுதிசெய்து, மற்ற பண்புகளை மறுத்தனர் அல்லது அவற்றுக்குத் தவறான விளக்கம் அளித்தனர் .
(உதாரணமாக: குர்ஆனில் இடம் பெறும் 'இஸ்திவா' என்பதற்கு இஸ்தவ்லா- استولى-அர்ஷைக் கைப்பற்றுதல்/ஆதிகக்கம் செலுத்துதல் என்றும், அல்லாஹ்வின் 'கை' என்பதற்கு அவனது ஆற்றல் அல்லது கொடை என்றும் விளக்கம் அளித்தனர்).
சிந்தனை கலா பள்ளிகளின் - school of thoughts- ஆதிக்கமும் ஸலஃபிய மறுமலர்ச்சியும்:
இமாம் இப்னு அஸாகிர் தனது
'தப்யீன் கித்ப் அல்-முஃப்தரி'
تبيين كذب المفتري فيما نُسب إلى الإمام أبي الحسن الأشعري
என்ற நூலில், ஆரம்பத்தில் அஷ்அரியாக்கள் உம்மத்தில் மிகச் சிறுபான்மையினராகவே இருந்தனர் என்றும், பெரும்பான்மையான உம்மத்தினர் இறைப்பண்புகளை அவ்வாறே ஏற்கும் 'இத்பாத்' கொள்கையிலேயே இருந்தனர் என்றும் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆனால், மன்னர் சலாஹுத்தீன் அய்யூபி மற்றும் உதுமானியப் பேரரசு காலத்திற்குப் பின், அல்-அஸ்ஹர் எகிப்து பாரம்பரிய பல்கலைக்கழகம் தூனிஸியா (சைத்தூனா பல்கலைக்கழகம்), மொராக்கோ கரவய்யீன் பல்கலைக்கழகம் போன்ற கல்வி மையங்களின் பாடத்திட்டங்களில் அஷ்அரிய, மாதுரீதியக் கொள்கைகள் திட்டமிட்டு பரப்பப்பட்டு ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின. பிற்காலத்தில் இமாம் இப்னு தைமிய்யா மற்றும் இமாம் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் ஆகியோர் இந்த தர்க்க சாஸ்திரப் போக்கைக் கடுமையாகக் கண்டித்து, குர்ஆன் மற்றும் சுன்னாவின் தூய / அஹ்லுஸ் ஸுன்னா நெறிமுறைகளை மீண்டும் உயிர்ப்பித்தனர்.
மார்க்க கல்வியை படிக்கும் மாணவர்களுக்கான ஷைக்கின் முக்கிய அறிவுரைகள்:
1. பகுத்தறிவை விட குர்ஆனை முதன்மைப்படுத்துதல்:
மார்க்கத்தின் மறைவான (கைப்) விஷயங்களில் பகுத்தறிவைப் புகுத்தாமல், முதல் நூற்றாண்டில் வாழ்ந்த ஸஹாபாக்கள் மற்றும் தாபியீன்கள் குர்ஆனையும் சுன்னாவையும் எவ்வாறு எளிய முறையில் விளங்கிப் பின்பற்றினார்களோ, அவ்வாறு தூய எண்ணத்துடன் பின்பற்ற வேண்டும். தர்க்க சாஸ்திரத்தை (علم الكلام) மூளையிலிருந்து தூக்கியெறிய வேண்டும்.
2. அரசியல் சூழ்ச்சிகளுக்கு இரையாகாதிருத்தல்:
தற்காலத்தில் முஸ்லிம்களைப் பிரித்தாள நினைக்கும் ஸியோனிச, அமெரிக்க அல்லது உலகளாவிய அரசியல் சூழ்ச்சிகளுக்கு மார்க்க அறிஞர்களும் மாணவர்களும் பலியாகிவிடக் கூடாது. மார்க்கக் கருத்து வேறுபாடுகளைக் காட்டி முஸ்லிம்களிடையே பகையை வளர்ப்பதோ அல்லது மறைந்த மார்க்க அறிஞர்களைத் திட்டுவதோ கூடாது. கூலிக்கு வேலை செய்யும் அறிஞர்களாக மாறாமல் அல்லாஹ்வுக்காக மட்டுமே சத்தியத்தைத் தேட வேண்டும்.
3. அஹ்லுல் ஸுன்னா வல் ஜமாஅத்:
நாம் பிரிவினையற்ற உம்மத்தாக வாழ வேண்டும். மாற்றுக்கருத்துடைய முஸ்லிம்களுக்காகவும் அல்லாஹ் நேர்வழி காட்ட வேண்டும் என்று பிரார்த்திக்க வேண்டும்.
இஸ்திஆதா (பாதுகாப்புத் தேடுதல்) Vs துஆ அஸ்-ஸிஃபா (பண்புகளையே பிரார்த்தித்தல்) - தெளிவான வேறுபாடுகள்
(பக்கங்கள் 12-13)
இறைப் பண்புகள் மூலம் பாதுகாப்புத் தேடுதல் (استعاذة-இஸ்திஆதா):
படைக்கப்பட்ட எந்தவொரு பொருளைக் கொண்டும் மறைமுகமான முறையில் பாதுகாப்புத் தேடுவது மார்க்கத்தில் ஹராம் (தடுக்கப்பட்டது). ஆனால், இறைவனின் பண்புகள் (ஸிஃபாத்) அவனது படைப்புகள் அல்ல; அவை அவனது தூய தாத்-ذات (சாராம்சம்/பரிமாணம்) இலிருந்து உருவானவை, படைக்கப்படாதவை. இதனால்தான் இமாம் அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள், இறைவனின் வார்த்தைகள் படைக்கப்படாதவை அவை அல்லாஹ்விடம் இருந்து குர்ஆனாக அருளப்பட்டவை என்று வாதிட்டார், அதற்காக பல சிரமங்களையும் , எதிர்ப்புகளை எதிர்கொண்டார்.
எனவே, இறைத்தூதர் ﷺ அவர்கள் கற்றுத்தந்த "أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ" (அல்லாஹ்வின் முழுமையான வார்த்தைகளைக் கொண்டு நான் பாதுகாப்புத் தேடுகிறேன்) என்பது போன்ற பிரார்த்தனைகள் அனுமதிக்கப்பட்டவை. இதன் உண்மையான பொருள்: "நான் அல்லாஹ்வின் வார்த்தைகளை ஒரு 'தவஸ்ஸுல்' (இடைத்தர ஊடகம்) ஆகக் கொண்டு அல்லாஹ்விடமே பாதுகாப்புத் தேடுகிறேன்" என்பதாகும் இவை அனுமதிக்கப்பட்டவை ஆகும்.
இறைப் பண்புகளையே பிரார்த்தித்தல் (துஆ அஸ்-ஸிஃபா):
பிரார்த்தனை (துஆ) என்பது பண்புகளைக் கொண்ட இறைவனின் ذات (சாராம்சத்திற்கு) மட்டுமே செய்யப்பட வேண்டும். இறைவனின் பண்புகளை ஒரு தனிப் பொருளாகக் கருதி, அதை நேரடியாக அழைத்து எதையும் கேட்கக் கூடாது (உதாரணமாக: "யா ரஹ்மத் அல்லாஹ்" - அல்லாஹ்வின் அருளே எனக்கு உதவி செய் என்று கேட்பது முற்றிலும் கூடாது; தடுக்கப்பட்டவை ஆகும் ,ஏனெனில் பண்புகள் தன்னிச்சையாகச் செயல்படுபவை அல்ல, அல்லாஹ்வே தன் பண்புகளின் மூலம் செயல்படுகிறான்).
எனவேதான் நபிமொழியில் வந்துள்ளபடி:
"يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ"
(என்றென்றும் உயிருடன் இருப்பவனே! அகிலத்தைப் பரிபாலிப்பவனே! உனது அருளைக் கொண்டு உன்னிடம் உதவி தேடுகிறேன்) என்று கேட்க வேண்டும். இதன் பொருள், இறைவனின் அருளை இடை ஊடகமாகக் கொண்டு இறைவனிடமே உதவி தேடுவதாகும் (அல்குர்ஆன் 8:9 இன் படி உதவி தேடுதல் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது).
إِذۡ تَسۡتَغِيثُونَ رَبَّكُمۡ فَٱسۡتَجَابَ لَكُمۡ أَنِّي مُمِدُّكُم بِأَلۡفٍ مِّنَ ٱلۡمَلَٰٓئِكَةِ مُرۡدِفِينَ
(உங்களை) பாதுகாக்குமாறு நீங்கள் உங்கள் இறைவனிடம் கோரியபோது ‘‘அணியணியாக உங்களைப் பின்பற்றி வரக்கூடிய ஆயிரம் வானவர்களைக் கொண்டு நிச்சயமாக நான் உங்களுக்கு உதவி செய்வேன்'' என்று அவன் உங்களுக்குப் பதிலளித்தான்.
(அல்குர்ஆன் : 8:9)
தலைப்பு 3: பாவமான காரியங்களுக்கான நேர்ச்சைகளும் (நத்ருல் மஃஸியா) அதன் நிலைகளும் (பக்கங்கள் 13-15)
பாவமான காரியங்களுக்கு நேர்ச்சை செய்தல்:
ஒருவர் ஒரு பாவமான காரியத்தைச் செய்வதாக நேர்ச்சை செய்யும்போது (உதாரணமாக: "நான் அல்லாஹ்விற்காக இன்ன பாவத்தைச் செய்வேன்" என்று கூறுவது), அந்த நேர்ச்சை சட்டப்படி இணைந்து விடுகிறது (அதாவது அது கணக்கில் கொள்ளப்படும்). ஆனால், அது பாவமான காரியம் என்பதால் அதை நிறைவேற்றுவது முற்றிலும் ஹராமாகும். நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
*«مَنْ نَذَرَ أَنْ يُطِيعَ اللَّهَ فَلْيُطِعْهُ، وَمَنْ نَذَرَ أَنْ يَعْصِيَ اللَّهَ فَلَا يَعْصِهِ»
"அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிய நேர்ச்சை செய்தவர் அவனுக்குக் கீழ்ப்படியட்டும்; அல்லாஹ்வுக்கு மாறு செய்ய நேர்ச்சை செய்தவர் அவனுக்கு மாறு செய்ய வேண்டாம்."
மூலநூல்:
Sahih al-Bukhari – ஹதீஸ் எண் 6696, கிதாபுன் நுதூர் (كتاب النذور).
எனவே, அந்தப் பாவத்தைச் செய்யாமல் விட்டுவிட்டு, அதற்குப் பரிகாரமாக ஒரு சத்திய முறிவிற்கான பரிகாரத்தை (கஃப்பாரத் யமீன்) செய்ய வேண்டும்.
கஃப்பாரத்துல் யமீன் (كفارة اليمين) என்பது:
"சத்தியத்தை (உறுதிமொழியை) மீறியதற்காகச் செய்ய வேண்டிய பரிகாரம்."
குர்ஆன் (அல்-மாஇதா: 89) படி அதன் முறைகள்:
10 ஏழைகளுக்கு உணவளிப்பது, அல்லது
10 ஏழைகளுக்கு உடையளிப்பது, அல்லது
ஒரு அடிமையை விடுதலை செய்வது.
இவற்றில் எதுவும் முடியாவிட்டால் 3 நாட்கள் நோன்பு நோற்பது.
இணைவைப்பு சார்ந்த நேர்ச்சை (நத்ருஷ் ஷிர்க்கி):
அல்லாஹ் அல்லாத பிற தர்ஹாக்கள், கப்ருகள் அல்லது அவுலியாக்களின் பெயரால் அறுத்துப் பலியிடுவதாக நேர்ச்சை செய்வது வெறும் பாவமல்ல; அது மாபெரும் இணைவைப்பாகும் (ஷிர்க் அக்பர்). இது ஒருவரை மார்க்கத்தை விட்டே வெளியேற்றக்கூடிய பாவமாகும். இவ்வகையான நேர்ச்சைகள் ஆரம்பத்திலிருந்தே செல்லாதவை (பாதில்) ஆகும். இதனை நிறைவேற்றுவதும் முற்றிலும் ஹராமாகும், ஏனெனில் நேர்ச்சை என்பது ஒரு வழிபாடாகும்; வழிபாட்டை அல்லாஹ் அல்லாதவருக்குச் செலுத்துவது ஷிர்க் ஆகும்.
தலைப்பு 4:
அக உணர்வு ரீதியான பாதுகாப்புத் தேடுதலும்
(استعاذة في الباطن-இஸ்திஆதா ஃபில் பாதின்) பொறுப்படைத்தலும் (தவக்குல்) (பக்கங்கள் 15-16)**
அக உணர்வு இஸ்திஆதா:
நேரில் இருக்கும், ஒரு காரியத்தைச் செய்ய ஆற்றல் பெற்ற ஒரு மனிதனிடம் வெளிப்புறமாக உதவி கோருவது அனுமதிக்கப்பட்டது. ஆனால், நம் கண்முன்னே இல்லாத, மறைமுகமான (கைப்) விவகாரங்களில் ஒரு மனிதனையோ ஜின்னையோ மனதில் நினைத்து, உள்ளத்தால் பயந்து அவரிடம் பாதுகாப்புத் தேடுவது உள்ளம் சார்ந்த வழிபாடாகும். அல்குர்ஆனில் (ஸூரத்துல் ஜின்: 6) கூறப்பட்டுள்ளபடி, மனிதர்கள் ஜின்களிடம் இவ்வாறு பாதுகாப்புத் தேடியபோது அது ஜின்களுக்கு அகந்தையைத்தான் அதிகப்படுத்தியது. எனவே மறைமுகப் பாதுகாப்புத் தேடுதல் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது.
وَأَنَّهُۥ كَانَ رِجَالٌ مِّنَ ٱلۡإِنسِ يَعُوذُونَ بِرِجَالٍ مِّنَ ٱلۡجِنِّ فَزَادُوهُمۡ رَهَقًا
மனிதர்களிலுள்ள ஆண்கள் பலர், ஜின்களிலுள்ள பல ஆண்களிடம் மெய்யாகவே (தங்களை) பாதுகாக்கக் கோருகின்றனர். எனவே, மனிதர்கள் அந்த ஜின்களுக்கு கர்வத்தை அதிகப்படுத்தி விட்டனர்.
(அல்குர்ஆன் : 72:6)
தவக்குல் (பொறுப்படைத்தல்):
தவக்குல் என்பது முற்றிலும் உள்ளம் சார்ந்த ஒரு மாபெரும் வழிபாடாகும். உலகப் பிரகாரமான காரணங்களைச் செய்துவிட்டு, அதன் முடிவை அல்லாஹ்விடம் மட்டுமே ஒப்படைப்பதாகும். எனவே, "நான் அல்லாஹ்வை நம்புகிறேன், பிறகு உன்னை நம்புகிறேன்" என்று கூறுவது தவறானதாகும். ஏனெனில் உள்ளத்தின் முழுமையான நம்பிக்கை (தவக்குல்) என்பது பிரிக்கப்பட முடியாத தனித்துவமான வழிபாடாகும்; அது அல்லாஹ்வுக்கு மட்டுமே அர்ப்பணிக்கப்பட வேண்டும்.
தலைப்பு 5:
திவலா- التِّوَلَة (சூனியம்) மற்றும் தாயத்துகள் (தமாயிம்) மீதான மார்க்கத் தீர்ப்புகள்
(பக்கங்கள் 16-20)
திவலா (التولة):
கணவன்-மனைவிக்கிடையே செயற்கையாக அன்பை உண்டாக்க அல்லது பிரிக்கச் செய்யப்படும் ஒரு வகையான சூனியக் கலையாகும். இது முற்றிலும் ஹராமான, மார்க்க நிராகரிப்புக்குரிய செயலாகும்.
தாயத்துகள் (التمائم):
தாயத்துகளில் ஜின்களின் பெயர்களோ, இறந்துபோனவர்களின் பெயர்களோ எழுதப்பட்டிருந்தால் அது மாபெரும் ஷிர்க் ஆகும். ஒருவேளை குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்ட தாயத்தாக இருந்தாலும், பிற்காலத்தில் அது ஷிர்க்கிற்கு இட்டுச் செல்லும் நுழைவாயிலாக மாறிவிடும் என்பதால், سدالذريعة'ஸத்துத் தரீஆ' (தீமையின் வழிகளை அடைத்தல்) என்ற அடிப்படையில் அதுவும் தடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில், தோலால் மூடப்பட்ட தாயத்திற்குள் என்ன இருக்கிறது என்று யாரும் அறிய முடியாது என்பதால், மார்க்கம் வெளிப்புறத் தோற்றத்தை வைத்தே தீர்ப்பு வழங்கும்.
அலங்காரத்திற்காக அணிதல் / தொங்கவிடுதல்:
வாகனங்களிலோ அல்லது வீடுகளிலோ குதிரை லாடம், முயல் தலை, கண் திருஷ்டி உருவங்கள், அல்லது மாலைகளைத் தொங்கவிட்டு, "நான் அலங்காரத்திற்குத்தான் வைத்துள்ளேன், தீமையைத் தடுக்கும் என்று நம்பவில்லை" எனக் கூறினாலும் அது தடுக்கப்படும். ஏனெனில், அது ஷிர்க் செய்பவர்களின் செயலுக்கு ஒப்பாகும். தீமையின் வழியை அடைப்பதற்காக (ஸத்துத் தரீஆ) இது முற்றிலும் தடை செய்யப்படுகிறது.
நபி ﷺ அவர்கள் ஒரு மனிதரின் கையில் நூல் கயிறு இருந்தபோது "இது என்ன?" என்று வினவியது, ஒரு தீர்ப்பை வழங்கும் முன் தீர விசாரிப்பதன் (இஸ்திஃப்ஸால்) அவசியத்தைக் காட்டுகிறது.
"இது என்ன?" என்று முதலில் விசாரித்தார்கள். அதன் பிறகே அது நோயைத் தடுக்கும் நம்பிக்கையுடன் கட்டப்பட்டதாக அறிந்தபின், அதை அகற்றுமாறும், அது ஷிர்க் எனவும் எச்சரித்தார்கள்.
முஸ்னத் அஹ்மத் – ஹதீஸ் எண் 20000 (முஅஸ்ஸஸதுர் ரிஸாலா பதிப்பு: 33/204
தலைப்பு 6:
நபி மொழிகளில் அறிவிக்கப்படும் தனிநபர் அறிவிப்புகள்
(خبر الواحد-கபர் அல்-வாஹித்) மார்க்க ஆதாரமாவது எவ்வாறு?
(பக்கங்கள் 21-23)
முஃதஸிலாக்களின் வாதமும் அஹ்லுல் ஸுன்னாவின் பதிலும்:
தனிநபர் அறிவிக்கும் செய்திகள் (கபர் அல்-வாஹித்) வெறும் ஊகத்தையே (ழன்) தரும், எனவே கொள்கை (அகீதா) விவகாரங்களில் அவற்றை ஆதாரமாக ஏற்க முடியாது என்ற தவறான கொள்கையை முஃதஸிலாக்கள் தோற்றுவித்தனர்.
ஆனால் அஹ்லுல் ஸுன்னாவின் கொள்கைப்படி, நம்பகமான தனிநபர் அறிவிக்கும் செய்திகள் மார்க்கத்தில் சட்ட ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப்படுவது கட்டாயமாகும் (ஆதாரம்: ஸூரத் அத்-தவ்பா: 122 இல் 'தாஇஃபா' என்ற சொல் தனிநபரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது).
இந்தக் கருத்திற்கான குர்ஆன் வசனம்:
> **﴿وَمَا كَانَ الْمُؤْمِنُونَ لِيَنْفِرُوا كَافَّةً ۚ فَلَوْلَا نَفَرَ مِن كُلِّ فِرْقَةٍ مِّنْهُمْ طَائِفَةٌ لِّيَتَفَقَّهُوا فِي الدِّينِ وَلِيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ﴾
(ஸூரத்துத் தவ்பா: 122)
சுருக்கமான விளக்கம்:
அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத் அறிஞர்கள், இந்த வசனத்தில் வரும் "طائفة" (தாஇஃபா) என்ற சொல் ஒரு நபருக்கும் பயன்படுத்தப்படலாம் என்று கூறுகின்றனர். எனவே, மார்க்க அறிவைப் பெற்று வந்த ஒரு நம்பகமான நபர் தனது மக்களுக்கு அறிவித்தாலும், அவரது செய்தி ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று இந்த வசனத்திலிருந்து ஆதாரம் எடுத்துக் காட்டுகின்றனர்.
இதன் அடிப்படையில் அவர்கள் கூறும் கொள்கை:
"நம்பகமான ஒரே நபர் அறிவிக்கும் ஹதீஸ் (خبر الواحد) அகீதாவிலும் சட்டங்களிலும் ஆதாரமாகும்; அதை ஏற்றுக்கொள்வது கட்டாயம்."
இந்த விளக்கத்தை இமாம் அஷ்-ஷாஃபிஈ, இப்னு ஹஸ்ம், இப்னு தைமிய்யா, இப்னுல் கய்யிம் உள்ளிட்ட பல அஹ்லுஸ் ஸுன்னா அறிஞர்கள் தங்கள் நூல்களில் எடுத்துரைத்துள்ளனர்.
வரலாற்றுச் சான்றுகள்:
நபி ﷺ அவர்கள் யமன் தேசத்திற்கு மார்க்கத்தைப் போதிக்கவும் சட்டங்களை அமல்படுத்தவும் அபூ மூஸா அல்-அஷ்அரி ரழியல்லாஹு அன்ஹு மற்றும் அலி ரழியல்லாஹு அன்ஹு ஆகியோரைத் தனித்தனியாகவே அனுப்பினார்கள். மக்கள் அவர்களின் தனிநபர் அறிவிப்பை வைத்தே மார்க்கத்தை ஏற்றனர்.
மேலும், இஸ்லாத்தின் மிக முக்கியமான ஹதீஸான "செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன"
(إِنَّمَا الأعمال بالنيات) என்ற ஹதீஸ், ஆரம்ப காலத் தொடர்களில் (உமர் ரலியல்லாஹு அன்ஹு இலிருந்து அடுத்தடுத்த நிலைகளில்) தனிநபர்கள் மூலமாகவே அறிவிக்கப்பட்டு, பின்னர் உம்மத்தின் ஏகோபித்த ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
எனவே, தகுந்த ஆதாரங்களுடனும் நம்பகத்தன்மையுடனும் வரும் தனிநபர் செய்திகள் உறுதியான மார்க்க அறிவை (இல்ம் யகீனி) தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
ஷைஹ் ஸாலிஹ் ஆல ஷைஹ் அவர்களின் கருத்துக்கள் எவ்விதத்திலும் விடுபடாமல், மூல நூலின் ஆழமான விளக்கங்களுக்கு இணங்க இந்தத் தமிழாக்கம் முழுமையாக விவரிக்கப்பட்டுள்ளது.*
தமிழில்:
உஸ்தாத் SM .இஸ்மாயீல் நத்வி
உரையை அரபு மொழியில் முழுமையாக கேட்க:
அரபு மொழியில் உரை முழுவதையும் வாசிக்க: