இபாதத் என்றால் என்ன?

                                                
 "இபாதத்" என்பதை வணக்கவழிபாடு என்று நாம் மொழி பெயர்ப்பதுண்டு. இதைவிட இபாதத் என்று கூறுவது தான் மிகப் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் அரபியில் இபாதத் என்பதற்கு அதில்லு, ஹுளுஅ என்பதாகும். இதன் பொருள் பணிதல், கீழ்ப்படிதல், கட்டுப்படுதல் என்பதாகும். 
                                                
 இபாதத் என்பதை இமாம் இப்னு தைமியா (ரஹ்) இவ்வாறு விளக்கினார்கள்: 

 இபாதத் என்பது வெளிப்படையான, மறைவான வார்த்தைகளிலும், செயல்களிலும் அல்லாஹ் விரும்புகின்ற, அவன் பொருந்திக் கொள்கின்ற அனைத்திற்குமுரிய ஒட்டு மொத்த பெயராகும். 

 தொழுகை, ஸகாத், நோன்பு, ஹஜ்ஜு இன்னும் உண்மை பேசுவது, அமானிதத்தை நிறைவேற்றுவது, பெற்றோருக்கு நல்லுபகாரம் செய்வது, உறவைப் பேணுவது, உடன்படிக்கையை நிறைவேற்றுவது, நன்மையை ஏவுவது, தீமையை தடுப்பது, நிராகரிப்பாளர்கள், நயவஞ்சகர்களுடன் போர் புரிவது, அண்டை வீட்டாருக்கும், அநாதை, ஏழைகள், வழிப் போக்கர்கள், அடிமைகள் மற்றும் கால்நடைகளுக்கும் உபகாரம் செய்வது, துஆ, திக்ர், குர்ஆன் ஓதுவது போன்றவைகளும் இபாதத் ஆகும். இதே போன்று அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நேசிப்பது, அல்லாஹ்வை அஞ்சுவது அல்லாஹ்வின் பால் திரும்புவது, மார்க்கத்தை கலப்படமில்லாமல் அவனுக்கு சமர்ப்பிப்பது, அவனது விதியில் பொறுமை காப்பது, அவனது அருளுக்கு நன்றி செலுத்துவது, அவன்மீது (தவக்குல்) பொறுப்பு சாட்டுவது ஆகிய அனைத்தும் இபாதத் ஆகும். 

 நூல்: மஜ்மூஃல் ஃபதாவா - 10/149 
                                                
 மேற்கூறப்பட்ட செயல்கள் அனைத்தையும் அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி உளத்தூய்மையுடன் நிறைவேற்றும்போது இபாதத்தாக மாறிவிடும். 
                                                
 وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ 

 இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. 

 (அல்குர்ஆன் : 51:56) 
                                                
 அல்லாஹ்தான் முழுமையான வணக்கத்திற்கும், அடிபணிதலுக்கும் தகுதி படைத்தவன். அல்லாஹ்வை விடுத்து வேறு ஒருவருக்கு அடிபணிவதும், வணக்கம்புரிவதும் இணைவைப்பாகும். 
                                                
 முஆத்(ரலி) அறிவித்தார்கள்: 

 நான் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் 'உஃபைர்' என்றழைக்கப்பட்ட கழுதையின் மீது அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், 'முஆதே! அல்லாஹ்வுக்கு மக்களின் மீதுள்ள உரிமை என்ன, மக்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா?' என்று (என்னிடம்) கேட்டார்கள். நான், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்' என்று பதில் கூறினேன்.   நபி(ஸல்) அவர்கள், 'மக்களின் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்னவென்றால், அவர்கள் அவனை(யே) வணங்கிட வேண்டும், அவனுக்கு எதனையும் (எவரையும்) இணை கற்பிக்கக் கூடாது என்பதாகும்.   அல்லாஹ்வின் மீது மக்களுக்குள்ள உரிமை, அவனுக்கு இணை கற்பிக்காமலிருப்பவரை அவன் வேதனைப்படுத்தாமல் இருப்பதாகும்' என்று பதில் கூறினார்கள்.   நான், 'இறைத்தூதர் அவர்களே! நான் மக்களுக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கட்டுமா?' என்று கேட்டேன்.   அதற்கு அவர்கள், 'அவர்களுக்கு (இந்த நற்செய்தியை) அறிவிக்காதீர்கள்.   அவர்கள் இதையே நம்பி (நற்செயல்களில் ஈடுபடாமல்) இருந்து விடுவார்கள்' என்று பதிலளித்தார்கள். 

 நூல்: ஸஹீஹுல் புகாரி : 2856, 5967. 

இபாதத்தின் வகைகளில் எந்தவொன்றையும் அல்லாஹ் அல்லாதவர்களுக்கு செலுத்தக்கூடாது. அல்லாஹ் மட்டும்தான் இபாதத்துக்குரியவன், அல்லாஹ்வுடைய ருபூபியத்திலும், உலூஹியத்திலும், அஸ்மா, ஸிஃபாத்திலும் அல்லாஹ்வுக்கு இணை துணை இல்லை. இபாதத்தின் வகைகளை சார்ந்த துஆ, நேர்ச்சை செய்தல், அறுத்து பலியிடுதல், தவக்கல் வைத்தல், அச்சம் கொள்வது, ஆதரவு வைப்பது போன்றவைகளை அல்லாஹ் அல்லாதவருக்கு செலுத்தும் ஒருவர் திண்ணமாக இணை வைத்து விட்டார். 
                                                
 தவ்ஹீத் (توحيد) என்றால் என்ன? (1) 
                                                
 தவ்ஹீத் என்பது நம்மை படைத்து பரிபாலிப்பவன் ஏகனாகிய அல்லாஹ் மட்டும் தான் என்று அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதாகும். மேலும், அவனையே நாம் வணங்க வேண்டும். அவனுக்கு உயர்ந்த பல பெயர்களும், பண்புகளும் உள்ளன. அப்பெயர்கள், பண்புகளை அவனது தகுதிக்கேற்ப நம்பிக்கை கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள், அவனது குணாதிசயங்கள் விஷயத்தில் அவன் தனித்தவன் இணை, துணை இல்லாதவன் என்று அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதற்குத்தான் "தவ்ஹீத்" என்று கூறுவோம். 
                                                
 தவ்ஹீத் ருபூபியா (تو حيد الربوبية) (2) 
                                                
 தவ்ஹீதுர் ருபூபியா என்பது நம்மைப் படைத்து பரிபாலிப்பவன் ஏகனாகிய அல்லாஹ் மட்டும் தான். அனைத்து பொருளுக்கும் அரசன் எவ்வித இணை, துணை இல்லாமல் தனித்து பிரபஞ்சத்தை நிர்வகிப்பவன், படைப்பினங்கள் அனைத்தின் விவகாரங்களுக்கும் பொறுப்பேற்பவன் என்று உறுதியாக நம்பிக்கை கொள்வதாகும். 
                                                
 வானம், பூமி மற்றும் அவ்விரண்டுக்கும் இடைப்பட்டவைகளையும் எவ்வித முன்மாதிரியுமின்றி படைத்தவன், பரிபாலிப்பவன், உணவளிப்பவன், அனைத்து உயிர்களுக்கும் உயிர் அளிப்பவனும், அவைகளை மரணிக்கச் செய்பவனுமாவான். 
                                                
 இப்பிரபஞ்சத்தை மிக நுணுக்கமாக திட்டமிட்டு செயற்படுத்துபவன். இதில் அவனுக்கு துணையாக இணையாக எந்தவொன்றுமில்லை என்ற நம்பிக்கையின் மூலம் அல்லாஹ்வை இறைமைத்துவத்தில் ஒருமைப்படுத்துவதாகும். 
                                                
 اِنَّ رَبَّكُمُ اللّٰهُ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَ الْاَرْضَ فِىْ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ يُغْشِى الَّيْلَ النَّهَارَ يَطْلُبُهٗ حَثِيْثًا ۙ وَّالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُوْمَ مُسَخَّرٰتٍ بِاَمْرِهٖ  اَلَا لَـهُ الْخَـلْقُ وَالْاَمْرُ‌  تَبٰرَكَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِيْنَ 

 நிச்சயமாக உங்கள் இரட்சகனான அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மேல் உயர்ந்தான் - அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கின்றது; இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு -  கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); அறிந்து கொள்ளுங்கள் படைப்பும், கட்டளை யிடுதலும் அவனுக்கே உரியதாகும். அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன். 

 (அல்குர்ஆன் : 7:54) 
                                                
 اَللّٰهُ خَالِقُ كُلِّ شَىْءٍ‌ وَّ هُوَ عَلٰى كُلِّ شَىْءٍ وَّكِيْلٌ 

 அல்லாஹ்தான் அனைத்துப் பொருட்களையும் படைப்பவன்; இன்னும், அவனே எல்லாப் பொருட்களின் பாதுகாவலனுமாவான். 

 (அல்குர்ஆன் : 39:62) 

 தவ்ஹீதுல் உலூஹிய்யா (توحيد الألوهية) (3) 
                                                
வணக்கங்கள் அனைத்துக்கும் தகுதியானவன் அல்லாஹ் மட்டுமேயாகும். அவனல்லாத எவரும் எந்த பொருளும் வணங்குவதற்கு தகுதியானவையல்ல என்று உறுதிப்படுத்துவதே தவ்ஹீதுல் உலூஹிய்யா என்பதாகும். 

 உதாரணமாக தொழுகை, நோன்பு, நேர்ச்சை, பிரார்த்தனை, பாதுகாவல் தேடுதல், உதவி கோரல் போன்ற இபாதத்களை (வணக்கங்களை) அல்லாஹ்வுக்கே செலுத்திட வேண்டும். இந்த இபாதத்களுக்காகவே அல்லாஹ் நம்மைப் படைத்துள்ளான். 
                                                
 وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ 

 இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. 

 (அல்குர்ஆன் : 51:56) 
                                                
 قُلْ اِنَّنِىْ هَدٰٮنِىْ رَبِّىْۤ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ دِيْنًا قِيَمًا مِّلَّةَ اِبْرٰهِيْمَ حَنِيْفًا‌  وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِيْنَ قُلْ اِنَّ صَلَاتِىْ وَنُسُكِىْ وَ مَحْيَاىَ وَمَمَاتِىْ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ لَا شَرِيْكَ لَهٗ‌ وَبِذٰلِكَ اُمِرْتُ وَاَنَا اَوَّلُ الْمُسْلِمِيْنَ 

 (நபியே!) நீர் கூறும்: “மெய்யாகவே என் இறைவன் எனக்கு நேரான பாதையின் பால் வழி காட்டினான் - அது மிக்க உறுதியான மார்க்கமாகும்; இப்ராஹீமின் நேர்மையான மார்க்கமுமாகும், அவர் இணைவைப்பவர்களில் ஒருவராக இருக்கவில்லை. 

 நீர் கூறும்: “மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும். 

 “அவனுக்கே யாதோர் இணையுமில்லை - இதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன் - (அவனுக்கு) வழிப்பட்டவர்களில் - முஸ்லிம்களில் - நான் முதன்மையானவன் (என்றும் கூறும்). 

 (அல்குர்ஆன் : 6:161-163) 
                                                
 இந்த இபாதத்களில் ஏதேனும் ஒன்றை அல்லாஹ் அல்லாத படைப்புகளுக்கு (நபிமார்களுக்கோ, மலக்குகளுக்கோ, வலிமார்களுக்கோ) செய்வது அல்லாஹ்வுக்கு செய்யும் பெரும் துரோகமாகும். மாபெரும் இணைவைப்புமாகும். 
                                                
 وَمَنْ يَّدْعُ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَۙ لَا بُرْهَانَ لَهٗ بِهٖۙ فَاِنَّمَا حِسَابُهٗ عِنْدَ رَبِّهٖ اِنَّهٗ لَا يُفْلِحُ الْـكٰفِرُوْنَ 

 மேலும், எவன் அல்லாஹ்வுடன் வேறு கடவுளை பிரார்த்திக்கின்றானோ அவனுக்கு அதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை, அவனுடைய விசாரணை அவனுடைய இரட்சகனிடமே இருக்கிறது. நிச்சயமாக நிராகரிப்போர் வெற்றி அடையமாட்டார்கள். 

 (அல்குர்ஆன் : 23:117) 
                                                
 தவ்ஹீதுல் அஸ்மாயி வஸிஃபாத் (توحيد الأسماء والصفات) (4) 
                                                
 அல்லாஹ்வுக்கென்று அழகிய பெயர்கள், பண்புகள் உள்ளன. அவைகளுக்கு ஒப்புவமானம் கூறாது, அதன் கருத்துக்களை திரித்துக் கூறாது, அதன் கருத்துகளை சிதைக்காது அப்படியே நம்ப வேண்டும். 
                                                
 அதாவது அல்லாஹ் தன்னைப் பற்றி எப்படி குர்ஆனில் வர்ணித்துள்ளானோ, அல்லாஹ்வுடைய தூதர் நபி முஹம்மத் (ஸல்) எப்படி அல்லாஹ்வைப்பற்றி வர்ணித்து கூறினார்களோ அப்படியே நம்ப வேண்டும். 
                                                
 அல்லாஹ்வின் கை, 
 அல்லாஹ்வின் முகம், 
 அல்லாஹ்வின் பாதம், 
 அல்லாஹ்வின் கண், 
 அல்லாஹ்வின் பேச்சு 
                                                
 போன்ற பண்புகள் குர்ஆனிலும் ஸுன்னாவிலும் சொல்லப்பட்டுள்ளன. அவைகளுக்கு மனித படைப்புகளுக்கு ஒப்பாக்கி அல்லது உவமானம் கூறி கருத்துக்களை திரித்து கூறிவிடக்கூடாது. அதுபோல் அல்லாஹ் கேட்கிறான், அல்லாஹ் பார்க்கிறான், அல்லாஹ் சிரிக்கிறான், அல்லாஹ் அடிவானத்திற்கு வருகிறான், அல்லாஹ் பெருமை கொள்கிறான், அல்லாஹ் கோபம் கொள்கிறான், அல்லாஹ் இரக்கம் காட்டுகிறான் போன்ற பண்புகளையும் திரித்து கூறாது எந்தவொன்றோடும் உதாரணம் கூறாது நம்பவேண்டும். 
                                                
 மேன்மையும், கண்ணியமுமிக்க அல்லாஹ் தனக்குரிய விதத்தில் தன்னுடைய பண்புகளுக்குரியவனாக இருக்கிறான் என்று நம்பிக்கை கொள்ள வேண்டும். 
                                                
 அல்லாஹ் கூறுகிறான்: 

 هُوَ اللّٰهُ الَّذِىْ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌ اَلْمَلِكُ الْقُدُّوْسُ السَّلٰمُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيْزُ الْجَـبَّارُ الْمُتَكَبِّرُ‌ سُبْحٰنَ اللّٰهِ عَمَّا يُشْرِكُوْنَ هُوَ اللّٰهُ الْخَـالِـقُ الْبَارِئُ الْمُصَوِّرُ‌ لَـهُ الْاَسْمَآءُ الْحُسْنٰى‌ يُسَبِّحُ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ 

 அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவிர, வேறு யாரும் இல்லை; அவனே பேரரசன்; மிகப்பரிசுத்தமானவன்; சாந்தியளிப்பவன்; தஞ்சமளிப்பவன்; பாதுகாப்பவன்; (யாவரையும்) மிகைப்பவன்; அடக்கியாள்பவன்; பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன். 

 அவன்தான் அல்லாஹ்; படைப்பவன்; ஒழுங்குபடுத்தி உண்டாக்குபவன்; உருவமளிப்பவன் - அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன; வானங்களிலும், பூமியிலும் உள்ளவையாவும் அவனையே தஸ்பீஹு (செய்து துதி) செய்கின்றன - அவனே (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன். 

 (அல்குர்ஆன் : 59:23,24) 
                                                
 அவ்வாறே அல்லாஹ் தன்னைப் பற்றி கூறும் போது: 

 اَلرَّحْمٰنُ عَلَى الْعَرْشِ اسْتَوٰى 

 அர்ரஹ்மான் அர்ஷின் மேல் உயர்ந்தான். 

 (அல்குர்ஆன் : 20:5) 
                                                
 என்று கூறுகிறான். அல்லாஹ் அர்ஷின் மேல் எப்படி உயர்ந்திருக்கிறான் என்று தெரியாது. குர்ஆனில் கூறப்பட்டவாறு நம்பவேண்டும். 
                                                
 இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடம் அல்லாஹ் அர்ஷின் மேல் எப்படி இருக்கிறான் என ஒருவர் கேட்டார். அதற்கு இமாமவர்கள் அல்லாஹ் அர்ஷின் மேல் உயர்ந்திருக்கின்றான் என்பது அறியப்பட்ட விடயம். எப்படி இருக்கின்றான் என்பது அறியப்படாத விடயம். அது பற்றி கேள்வி கேட்பது பித்அத்தாகும் என்றார்கள். 

 நூல்: ஹில்யதுல் அவ்லியா பாகம் 6. பக்கம் - 325 
                                                
 அல்லாஹ்வின் தூதர் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அழகிய பெயர்களையும், பண்புகளையும் எப்படி ஸஹாபாக்களுக்கு கற்றுக் கொடுத்தார்களோ அதே அடிப்படையிலே ஒவ்வொரு முஸ்லிமும் நம்ப வேண்டும். இதை விடுத்து உவமான உவமைகள் கூறக்கூடாது. 
                                                
 இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய முஃதஸிலாக்கள் மற்றும் ஜஹ்மியாக்கள் என்போர் அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகளுக்கு தங்களுடைய பகுத்தறிவிற்கேற்ப விளக்கம் கொடுத்து மனித சிந்தனைக்கேற்ப புரிந்து கொள்ள முற்பட்டதன் காரணமாக பெரும் சீர்கேட்டை விளைவித்தார்கள். எனவே இவர்களை வழிகேடர்களாக இமாம்கள் அடையாளம் காட்டினார்கள். 
                                                
 கீர்த்தியும் மகத்துவமுமிக்க அல்லாஹ் தன்னுடைய பெயர்களை சிதைப்பதை வன்மையாக கண்டிக்கிறான். 
                                                
 وَلِلّٰهِ الْاَسْمَآءُ الْحُسْنٰى فَادْعُوْهُ بِهَا‌ وَذَرُوا الَّذِيْنَ يُلْحِدُوْنَ فِىْۤ اَسْمَآٮِٕهٖ‌  سَيُجْزَوْنَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ 

 அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன; அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள், அவனுடைய திருநாமங்களை தவறாக பயன்படுத்துவோர்களை (புறக்கணித்து) விட்டு விடுங்கள் - அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் (தக்க) கூலி கொடுக்கப்படுவார்கள். 

 (அல்குர்ஆன் : 7:180) 
                                                
 அழகிய பெயர்களுக்கும், பண்புகளுக்கும் உரிய இரட்சகனான அல்லாஹ் தனக்கு ஒப்பாக எதுவுமில்லை என்று தெளிவாக கூறிய பிறகும் பகுத்தறிவைக் கொண்டு புரிந்து கொள்ள முனைவது வழிகேட்டைத் தவிர வேறில்லை. 
                                                
 لَيْسَ كَمِثْلِهٖ شَىْءٌ ‌ وَهُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ 

 அவனைப் போன்று எப்பொருளும் இல்லை; அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன். 

 (அல்குர்ஆன் : 42:11) 
                                                
 وَلَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ 

 அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. 

 (அல்குர்ஆன் : 112:4) 
                                                
 இணைவைப்பு என்பது தவ்ஹீதை தகர்க்கின்ற செயலாகும். அல்லாஹ்வுக்கே உரிய பண்புகள் விஷயத்திலோ, அவனது ஆற்றலிலோ பிறரை அல்லாஹ்வுக்கு இணையாக ஏற்படுத்துவது தான் (ஷிர்க்) இணைவைப்பு என்பதாகும். பெரும்பாவங்களில் முதன்மையானதும், மனிதனின் ஒட்டுமொத்த நன்மைகளையும் பாழக்கக்கூடியதும் இன்னும் பாவச்செயல்களில் அல்லாஹ் மன்னிக்காத குற்றமும் இணைவைப்பு மட்டும்தான். 
                                                
 ذٰ لِكَ هُدَى اللّٰهِ يَهْدِىْ بِهٖ مَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖ‌ وَلَوْ اَشْرَكُوْا لَحَبِطَ عَنْهُمْ مَّا كَانُوْا يَعْمَلُوْنَ 

 இதுவே அல்லாஹ்வின் நேர் வழியாகும், தன் அடியார்களில் அவன் யாரை விரும்புகிறானோ, அவர்களுக்கு இதன்மூலம் நேர்வழி காட்டுகிறான்; (பின்னர்) அவர்கள் இணைவைப்பார்களானால், அவர்கள் செய்து வந்ததெல்லாம், அவர்களை விட்டு அழிந்துவிடும். 

 (அல்குர்ஆன் : 6:88) 
                                                
 وَاِذْ قَالَ لُقْمٰنُ لِا بْنِهٖ وَهُوَ يَعِظُهٗ يٰبُنَىَّ لَا تُشْرِكْ بِاللّٰهِ ؔ اِنَّ الشِّرْكَ لَـظُلْمٌ عَظِيْمٌ 

 இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு: “என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே; நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,” என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக). 

 (அல்குர்ஆன் : 31:13) 
                                                
 اِنَّ اللّٰهَ لَا يَغْفِرُ اَنْ يُّشْرَكَ بِهٖ وَيَغْفِرُ مَا دُوْنَ ذٰ لِكَ لِمَنْ يَّشَآءُ‌  وَمَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدِ افْتَـرٰۤى اِثْمًا عَظِيْمًا 

 நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள். 

 (அல்குர்ஆன் : 4:48) 
                                    

அச்சத்தோடும், ஆதரவோடும் இபாதத் செய்வது :
                                                
இபாதத்தானது, அன்பு, அச்சம், எதிர்பார்ப்பு (ஆதரவு) ஆகியவற்றின் அடிப்படையில் அமைய வேண்டும். 

 எவரொருவர் வெறும் அன்புடன் மட்டுமே அல்லாஹ்வை வணங்குகின்றாரோ, அவர் ஸிந்தீக் ஆவார். 

 எவரொருவர் வெறும் அச்சத்துடன் மட்டுமே அல்லாஹ்வை வணங்குகின்றாரோ, அவர் ஹரூரியாக்களைச் சார்ந்தவர் ஆவார். 

 எவரொருவர் வெறும் ஆதரவு வைத்தலுடன் மட்டுமே அல்லாஹ்வை வணங்குகின்றாரோ, அவர் முர்ஜியாக்களைச் சார்ந்தவர் ஆவார். 
                                                
 ஸிந்தீக் என்பது அல்லாஹ்வுடைய ஏகத்துவத்தையும், மறுமையையும் நம்பிக்கை கொள்ளாதவனுக்கு சூட்டப்பட்ட பெயராகும். 

 நூல்: அத் தஹ்தீப் 
                                                
 உள்ளத்தில் நிராகரிப்பை மறைத்து வைத்து வெளியில் இஸ்லாமை காட்டிக் கொள்ளக்கூடிய நயவஞ்சகர்கள் தான் ஸிந்தீக் என்று சில ஃபுகஹாக்கள் கூறியுள்ளார்கள். 

 நூல்: மவ்சூஆ அல்ஃபிக்ஹியா அல்குவைத்தியா - 24/48 
                                                
 ஹரூரியா என்பது, கூஃபாவிற்கு அருகில் உள்ள ஒரு நகரமாகும். அந்த ஊரில் இருந்து தான் அலி(ரலி) அவர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்த ஹவாரிஜ்கள் தோன்றினார்கள். அச்சத்தோடு மட்டுமே அவர்கள் அல்லாஹ்வை வணங்குவார்கள். இன்னும் பாவம் புரிவோர்களை இவர்கள் காஃபிர்களாக ஆக்குவார்கள். 
                                                
 முர்ஜியா என்றால் பிற்படுத்துபவன். இர்ஜாஅ என்றால் பிற்படுத்துதல், தாமதப்படுத்துதல் என்று பொருள். 
                                                
 قَالُوْۤا اَرْجِهْ وَاَخَاهُ وَابْعَثْ فِى الْمَدَآٮِٕنِ حٰشِرِيْنَۙ 

 அதற்கவர்கள் “அவருக்கும், அவருடைய சகோதரருக்கும் சிறிது தவணை கொடுத்து விட்டு பல பட்டிணங்களுக்கு(ச் சூனியக்காரர்களைத்)திரட்டிக் கொண்டு வருவோரை அனுப்பி வைப்பீராக- 

 (அல்குர்ஆன் : 26:36) 
                                                
 முர்ஜியாக்கள் யார்? 
                                                
 முதலாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய நூதன கொள்கையைக் கொண்ட கூட்டத்தார்கள் தான் முர்ஜியாக்கள் என்பவர்கள். 
                                                
 இமாம் இப்னு உயைய்னா (ரஹ்) அவர்கள் முர்ஜியாக்கள் குறித்து கூறும்போது அவர்கள் இரண்டு வகையினராவார்கள். ஒரு கூட்டம் அலீ(ரலி) மற்றும் உஸ்மான் (ரலி) அவர்களுடைய விவகாரங்களை பிற்படுத்தினார்கள். இக்கூட்டத்தார்கள் சென்றுவிட்டார்கள். 

 இன்றைய காலத்தின் முர்ஜியாக்கள், ஈமான் என்பது வெறும் சொல் மட்டும் தான் அமல் இல்லை என்று கூறுபவர்கள் ஆவார்கள். 

 அவர்களுடன் நீங்கள் அமர வேண்டாம், உணவருந்தவோ, நீர் பருகவோ வேண்டாம் இன்னும் அவர்களுடன் தொழ வேண்டாம், அவர்களுடைய ஜனாஸாவிற்கு தொழுகை நடத்த வேண்டாம் என்று கூறினார்கள். 

 நூல்: தஹ்தீபுல் ஆஸார் - 2/659. 
                                                
 அலீ(ரலி) மற்றும் உஸ்மான் (ரலி) அவர்கள் ஆட்சிக்கு வந்தபோது அவர்களை ஏற்றுக் கொள்ளாமல் அவர்களை விட்டு விலகியிருந்தார்கள். அவ்விருவருடைய விவகாரத்தையும் அல்லாஹ்விடம் ஒப்படைப்போம் என்றிருந்தார்கள். 
                                                
 இவர்கள் நரகவாசிகள் ஆவார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளார்கள். 
                                                
 நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

 எனது சமுதாயத்தில் இரண்டு கூட்டத்தார்கள், எனது ஹவ்ளிற்கு வரமாட்டார்கள். இன்னும் சுவனத்திலும் நுழைய மாட்டார்கள். அவர்கள் கத்ரியாக்கள் மற்றும் முர்ஜியாக்கள் ஆவார்கள். 

 அறிவிப்பாளர்: அனஸ் (ரலி) 
 நூல்: அல்முஃஜமுல் அவ்ஸத் லி தப்ரானி - 4204. 
                                                
 இறை நம்பிக்கையாளர்களின் இபாதத்தை பொறுத்தவரையில் அல்லாஹ்வின் மீதுள்ள நேசம், அவனது தண்டனையைக் குறித்த அச்சம், அவனிடம் கிடைக்க இருக்கும் நற்கூலியின் மீதான எதிர்பார்ப்பு இவற்றின் அடிப்படையில் அமைய வேண்டும். 
                                                
 இமாம் இப்னுல் கய்யிம் அல்ஜவ்சி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

 அல்லாஹ்வை நோக்கி நெருங்குவதில், உள்ளம் ஒரு பறவைக்கு ஒப்பாகும். 

 நேசம் என்பது அதன் தலையாகும். அச்சமும் ஆதரவும் அதன் இறக்கைகள் ஆகும். அதன் தலையும், இறக்கைகளும் பாதுகாப்பாக இருந்தால், பறவை நன்றாக பறக்கும். தலை துண்டிக்கப்பட்டால் பறவை இறந்துவிடும். எப்போது அது தன் இரண்டு இறக்கைகளையும் இழந்து விடுமோ, அப்போது அது வேட்டையாடப்படும். 

 நூல்: மதாரிஜுஸ்ஸாலிக்கீன் - 1/513 
                                                
 முஃமின், நேசம், அச்சம், எதிர்பார்ப்பு ஆகியவற்றிற்க்கு மத்தியில் தான் அமல் செய்ய வேண்டும். 
                                                
 நபிமார்களைக் குறித்து அல்லாஹ் கூறுகிறான்: 

 وَ يَدْعُوْنَـنَا رَغَبًا وَّرَهَبًا ‌ وَكَانُوْا لَنَا خٰشِعِيْنَ 

 நிச்சயமாக இவர்கள் யாவரும் நன்மைகள் செய்வதில் விரைபவர்களாக இருந்தார்கள் - இன்னும், அவர்கள் நம்மை ஆசை கொண்டும், பயத்தோடும் பிரார்த்தித்தார்கள். மேலும், அவர்கள் நம்மிடம் உள்ளச்சம் கொண்டவர்களாக இருந்தார்கள். 

 (அல்குர்ஆன் : 21:90) 
                                                
 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

 இறைநம்பிக்கையாளர் அல்லாஹ்விடமுள்ள தண்டனையைப் பற்றி நன்கறிவாரானால், (அதிலிருந்து தப்பித்தால் போதும் என்று கருதுவாரே தவிர,) அவனது சொர்க்கத்தின் மீது (இறைநம்பிக்கையாளர்களில்) யாரும் ஆசை கொள்ளமாட்டார்கள். இறைமறுப்பாளர் அல்லாஹ்விடமுள்ள கருணையைப் பற்றி நன்கறிவாரானால், அவனது சொர்க்கத்தைப் பற்றி (இறைமறுப்பாளர்களில்) யாருமே நிராசை கொள்ளமாட்டார்கள். 

 அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) 
 நூல்: ஸஹீஹ் முஸ்லிம் : 5316. 
                                            

 - உஸ்தாத். M. பஷீர் ஃபிர்தௌஸி. 
                                                

أحدث أقدم