நிய்யத் - எண்ணத்தில் ஏற்படும் தவறுகள்:
1. பெயருக்காகவும் புகழுக்காகவும் ஹஜ் அல்லது உம்றஹ் செய்வதற்குச் செல்லல். இது நன்மைகளை அழித்து விடும் ஒரு செயல் மாத்திரமல்லாமல் பாவத்தை சம்பாதிக்கும் ஒரு வழியாகும்.
கடமையை நிறைவேற்றச் செல்வதற்கு முன்னால் நடைபெறும் தவறுகள்:
2. ஹறாமான முறையில் சம்பாதித்த செல்வத்தை இக்கடமையை நிறைவேற்றுவதற்காகப் பயன்படுத்துதல். அல்லாஹுதஆலா ஹறாமானதை ஏற்றுக் கொள்ள மாட்டான்.
3. வசதி இருந்தும் உம்றஹ் அல்லது ஹஜ் கடமையை நிறைவேற்றாமல் பிற்படுத்துதல்.
பயணத்தில் ஏற்படும் தவறுகள்:
4. அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நடக்காத கெட்டவர்களுடன் பயணத்தை மேற்கொள்ளல்.
5. அல்லாஹ்வின் மீது தவக்குல் வைப்பதாகக் கூறிக்கொண்டு தேவையான கட்டுச் சாதனங்களை எடுத்துச் செல்லாமல் மற்றவர்களுக்குச் சுமையாக இருத்தல்.
6. ஒரு பெண் மஹ்றம் இல்லாமல் பயணித்தல்.
7. பயணத்தில் தொழுகை விடயத்தில் கவனயீனமாக நடந்து கொள்ளல்.
8. பயணத்தின் போது புகைத்தல், இசை செவிமடுத்தல், புறம் பேசுதல், கோள் சொல்லுதல், மற்றவர்களை நையாண்டி செய்தல் போன்ற பாவமான காரியங்களில் ஈடுபடுதல்.
9. அதிக நகைச்சுவையில் ஈடுபடுதல் போன்ற செயல்பாடுகளினால் நிறைவேற்றப் போகும் வணக்க வழிபாட்டின் மகிமையை உணராமல் நடந்து கொள்ளல்.
இஹ்றாமில் நடைபெறும் தவறுகள்:
10. இஹ்றாம் என்பது வெறும் ஆடை என்று சிலர் நம்புவது தவறாகும். இஹ்றாம் என்பது உம்றஹ்வை அல்லது ஹஜ்ஜை ஆரம்பிப்பதற்கான நிய்யத் - எண்ணமாகும்.
11. மீகாத்தைத் தாண்டியதற்குப் பிறகு இஹ்றாம் செய்தல்.
உம்றஹ் / ஹஜ் செய்யச் செல்பவர் இஹ்றாம் செய்யாமல் மீகாத்தைத் தாண்டிச் சென்றால் அவர் மீண்டும் மீகாத்திற்குத் திரும்பி வந்து இஹ்றாம் செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு அவர் செய்யாமல் மீகாத்தைத் தாண்டி இஹ்றாமை ஆரம்பித்தால் பெரும்பாலான அறிஞர்களின் கருத்தின் படி இத்தகையவர் ஃபித்யஹ் கொடுக்க வேண்டும். அதாவது மக்கஹ்வில் ஒரு பலிப் பிராணியை அறுத்து அங்குள்ள ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும். வசதியுள்ளவர்களுக்கு அதனைக் கொடுக்கக் கூடாது. அதில் அவர் எதுவும் சாப்பிடக் கூடாது. அது ஒரு குற்றப் பரிகாரத்தின் இடத்தில் இருக்கிறது.
ஒருவர் விமானத்தில் மீகாத்தைத் தாண்டும் பொழுது இஹ்றாமை ஆரம்பிக்கவில்லையானால் அவர் ஜித்தஹ் விமான நிலையத்தில் இறங்கியதற்குப் பிறகு அங்கிருந்து இஹ்றாம் செய்ய முடியாது. அவர் திரும்பவும் தரை வழியாகவேனும் அவர் தாண்டி வந்த மீகாத்திற்குச் சென்று அங்கிருந்து இஹ்றாமை ஆரம்பிக்க வேண்டும்.
12. இஹ்றாமிற்குரிய ஆடை கைவசம் இல்லை என்பதனால் இஹ்றாமை ஆரம்பிக்காமல் மீகாத்தைத் தாண்டிச் செல்லல் தவறாகும். சிலர் விமானத்தில் பயணிக்கும் பொழுது இஹ்றாமுக்குரிய ஆடை இல்லை என்பதனால் ஜித்தஹ்வுக்குச் சென்று இஹ்றாமை ஆரம்பிக்கின்றனர். இது தவறாகும். அவர் தன்னிடம் இருக்கும் உடல் உறுப்புக்கள் அளவுக்குத் தயாரிக்கப்படாத துணியைக் கொண்டு தனது அவ்றத்தை மறைத்துக் கொண்டு இஹ்றாமை ஆரம்பிக்க வேண்டும். தன்னிடம் எந்தத் துணியும் இல்லை என்றால் தான் அணிந்திருக்கும் பேன்ட்டுடன் இஹ்றாமை ஆரம்பிக்க வேண்டும். உடல் உறுப்புக்களின் அளவுக்கு உருவாக்கப்பட்டுள்ள ஷேர்ட், டி-ஷேர்ட், பனியன் போன்ற ஆடைகளைக் கலைந்து, தலையையும் திறந்து கொள்ள வேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: யாரிடம் வேஷ்டி இல்லையோ அவர் ஸறாவீலை அணிந்து கொள்ளட்டும். (முஸ்லிம்) ஸறாவீல் என்பது பேன்ட் போன்ற ஆடையாகும். ஒருவர் ஷேர்ட் போன்ற மேலாடையுடன் இஹ்றாமை ஆரம்பித்தால் கஃப்பாறஹ்வாக - குற்றப் பரிகாரமாக ஆறு ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் அல்லது மூன்று நாட்கள் நோன்பு பிடிக்க வேண்டும் அல்லது ஒரு ஆட்டை அறுத்துப் பலியிட வேண்டும்.
13. இஹ்றாமை ஆரம்பிக்க முன்னால் தொழுவது கட்டாயம் அல்லது நிபந்தனை என்ற நம்பிக்கை தவறானதாகும். ஃபர்ளான தொழுகைக்குப் பின்னால் அல்லது வுளுவின் சுன்னத் தொழுகைக்கு அல்லது தஹிய்யதுல் மஸ்ஜிதிற்குப் பின்னால் இஹ்றாமை செய்து கொள்வது விரும்பத்தக்கது என்று பெரும்பாலான அறிஞர்கள் கருதுகின்றனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஜ் செய்ய சென்ற பொழுது மதீனஹ்வின் துல்ஹுலைபஹ் மீகாத்திருந்து ளுஹர் தொழுகைக்குப் பின்னர் இஹ்றாமை ஆரம்பித்தார்கள்.
14. இஹ்றாமிற்கு என்று ஒரு தொழுகை இருப்பதாக நம்புவதும் தவறாகும். அதற்கென்று எந்த ஒரு விசேடமான தனித் தொழுகையும் கிடையாது.
15. இஹ்றாம் ஆடைக்கு மேல் மனம் பூசிக் கொள்வது தவறாகும். இஹ்றாமை ஆரம்பிப்பதற்கு முன்னால் உடம்பில் மாத்திரம் மணம் பூசிக் கொள்வது சுன்னத் ஆகும். இஹ்றாமை ஆரம்பித்ததற்குப் பிறகு உடம்பிலும் மனம் பூசிக் கொள்வது தடையாகும்.
16. ஒரு ஆண் இஹ்றாமில் இருக்கும் நிலையில் காலுறைகள் போன்றவை அணியக்கூடாது. ஆனால் அவரிடத்தில் பாதனி இல்லை என்றால் அவ்வாறு அணிவதற்கு அனுமதி இருக்கிறது.
17. இஹ்றாமிற்காகக் குளித்துக்கொண்டதிலிருந்து இஹ்றாமுடைய நிலையில் தடை செய்யப்படக்கூடியவைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று சிலர் நம்புவது தவறாகும். எப்போது இஹ்றாம் ஆரம்பிக்கப்படுகிறதோ அப்போதிலிருந்துதான் அவை தடைசெய்யப்படும்.
18. இஹ்றாமிற்காகக் குளித்துக் கொள்வதோ அல்லது வுளூ செய்வதோ கட்டாயம் என்ற நம்பிக்கை தவறானதாகும். அது மார்க்கத்தில் விரும்பத்தக்கதே தவிர கட்டாயமானதல்ல. மாதவிடாய் அல்லது நிபாஸ் நிலையிலுள்ள பெண்கள் கூட குளித்துக் கொள்வது சுன்னத் ஆகும். இஹ்றாமிற்காகக் குளித்துக் கொள்வது சுன்னத் என்று இப்னு உமர் (றளியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
19. வாகனத்தில் ஏறி உட்கார்ந்து இருந்துதான் இஹ்றாமை ஆரம்பிக்க வேண்டும் என்று சிலர் கருதுவது தவறானதாகும். வாகனத்தில் ஏறுவதற்கு முன்னரும் இஹ்றாமிற்குள் நுழைந்து விட்டேன் என்று ஒருவர் நிய்யத்தை வைத்துக்கொள்ள முடியும். அந்த நிய்யத்தை நபி ஸல்லால்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்ததைப் போன்று வாகனத்தில் ஏறி அமர்ந்து ஆரம்பித்து, தல்பியஹ் கூறுவது சிறந்தது. எனினும் மீகாத்தைத் தாண்டுவதற்கு முன்னர் இஹ்றாமை ஆரம்பித்து விட்டேன் என்ற நிய்யத் - எண்ணம் வந்துவிட வேண்டும்.
20. இஹ்றாமை ஆரம்பிக்கும் போது ஹதீஸில் வராத வார்த்தைகளைக் கொண்டு நிய்யத்தை வாயால் மொழிதல் கூடாது. எந்த ஒரு வணக்கத்தின் போதும் நிய்யத்தை வாயினால் மொழிதல் நபி ஸல்லால்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித்தராத பித்அத்தான செயலாகும். தல்பியஹ் என்பது நிய்யத் அல்ல. இஹ்றாமை ஆரம்பிக்கும் போது அதன் வகைக்கேட்ப லெப்பைக உம்றதன், லெப்பைக ஹஜ்ஜதன் போன்ற வார்த்தைகளைச் சொல்வது சுன்னத்தாகும். அவை அல்லாமல் நிய்யத் என்ற பெயரில் வேறு வார்த்தைகளை மொழிவது கூடாது.
21. சிலர் இஹ்றாமை ஆரம்பிக்க முன்னர் தாடியை மழிக்கின்றனர். எந்த நேரத்திலும் தாடியை மழிப்பது ஹறாமாகும்.
22. அதேபோன்று இஹ்றாமை ஆரம்பிப்பதற்கு முன்னர் தலை முடிகளை வெட்டிக் கொள்வது சுன்னத்தல்ல.
23. விமானத்தில் இருக்கும் பொழுது மீகாத்திற்கு நேராக வரும் போது இஹ்றாமை ஆரம்பிப்பதற்குரிய நிய்யத் தவறிவிடலாம் என்ற அச்சம் ஏற்பட்டால் மீகாத்திற்குச் சற்றுத் தொலைவில் இருக்கும் போதே இஹ்றாமை ஆரம்பித்துக் கொள்ள முடியும்.
24. உம்றஹ் அல்லது ஹஜ் செய்யும் நோக்கம் இல்லாத ஒருவர் ஏதேனும் தேவைக்காக மக்கஹ்விற்குள் இஹ்றாம் இல்லாமல் வந்து விட்டுச் செல்ல முடியும். இதுவே பலமான கருத்தாகும். ஆனாலும் மக்கஹ்வுக்குச் செல்பவர் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி உம்றஹ் செய்து கொள்வது ஏற்றமானது.
25. ஜித்தஹ் ஒரு மீகாத் என்ற சிலருடைய நம்பிக்கை தவறானதாகும். ஜித்தஹ் மீகாத் எல்லைக்கு உள்ளே இருப்பதால் ஜித்தஹ்வில் வாழக்கூடியவர்கள் அவர்களின் இடங்களில் இருந்து இஹ்றாமை ஆரம்பிக்க முடியும். ஆனால் மீகாத் எல்லைக்கு வெளியே இருந்து வரக்கூடியவர்கள் அவரவர்களுடைய மீகாத்தைத் தாண்டுவதற்கு முன்னர் இஹ்றாமை ஆரம்பித்து விட வேண்டும்.
26. இஹ்றாமில் நுழைந்தவர் வெண்ணிற ஆடைகளைத் தவிர வேறு நிற ஆடைகளை அணியக்கூடாது என்ற நம்பிக்கை தவறானதாகும். வெண்மை நிறமல்லாத பொதுவாகத் தடைவராத வேறு எந்த நிறத்திலுள்ள துணிகளையும் இஹ்றாமிலிருப்பவர் அணிந்து கொள்வது குற்றமில்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஹ்றாமுடைய நிலையில் பச்சை நிறப் போர்வையை அணிந்திருக்கிறார்கள்.
27. இஹ்றாமில் பெண்களுடைய ஆடைகளுக்கென்று குறிப்பிட்ட எந்த ஒரு நிறமும் கிடையாது. அவர்கள் வெள்ளை அல்லது பச்சை அல்லது கருப்பு துணியில் இஹ்றாம் ஆடை அணிய வேண்டும் என்ற நம்பிக்கை தவறானது. அலங்காரமற்ற, அங்கங்களை வெளிப்படுத்தும் இறுக்கமற்ற, ஆடைக்கு வெளியில் உடல் தெரியாத, மார்க்கம் அனுமதித்த சாதாரணமான எந்த ஆடையையும் பெண்கள் அணிந்து கொள்ள முடியும்.
28. மாதவிடாயிலுள்ள பெண்கள் இஹ்றாமில் நுழையக்கூடாது என்று கருதுவது தவறாகும். அவர்களும் மீகாத்தைத் தாண்டுவதற்கு முன்னால் இஹ்றாமுக்குரிய நிய்யத் செய்து கொள்ள வேண்டும். தவாஃபைத் தவிர ஹஜ்ஜுக்குரிய ஏனைய கிரிகைகளில் மாதவிடாய்ப் பெண் ஈடுபட முடியும். சுத்தமானதற்குப் பிறகு தவாஃப் செய்து கொள்ள வேண்டும்.
29. மீகாத்தில் அணிந்த இஹ்றாம் ஆடை அழுக்கடைந்தாலும் அதனை மாற்றிக்கொள்ளக் கூடாது என்று சிலர் நினைப்பது தவறாகும். இஹ்றாமின் நிலையில் தடை செய்யப்படாத எந்த ஆடைகளைக் கொண்டும் இஹ்றாம் ஆடையை மாற்றிக் கொள்ளலாம்.
30. தைக்கப்பட்ட எந்த ஆடையையும் அணியக்கூடாது என்று நம்பிக்கை தவறாகும். தைக்கப்பட்ட ஆடை அணியக்கூடாது என்று சில ஃபுகஹாக்கள் சொல்லி இருப்பதன் அர்த்தம் யாதெனில் உடல் உறுப்புக்களின் அளவுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட ஆடைகளை அணியக்கூடாது என்பதாகும். அவை தைக்கப்படாமல் வேறு ஒரு பொருட்களால் அல்லது வேறு முறையில் உருவாக்கப்பட்டிருந்தாலும் சரியே. அதேபோன்று வேஷ்டி கிழிந்திருந்தால் அதனைத் தைத்து மூட்டிக் கொள்வது பிரச்சினையில்லை. வேஷ்டி கிடைக்கவில்லை என்றால் உடல் அளவுக்குத் தைக்கப்பட்ட ஒரு ஆடையைக் கூட வேஷ்டி போன்று அணிந்து கொண்டால் தவறில்லை.
நிய்யத்:
31. ஒருவர் தனக்காக ஹஜ்ஜோ உம்றஹ்வோ செய்வதற்கு இஹ்றாமை ஆரம்பிக்கின்ற நிய்யத்தை வைத்ததற்குப் பிறகு, அதனை இன்னொருவருக்குச் செய்வதற்காக நிய்யத்தை மாற்ற முடியாது. அதனை தனக்காகவே செய்து முடிக்க வேண்டும். அதேபோன்றுதான் இன்னொருவருக்காக செய்வதாக நிய்யத் வைத்தாலும் பின்னர் தனக்காக என்று அதனை மாற்றிக் கொள்ள முடியாது.
32. ஆனால், ஒருவர் தனக்காக ஹஜ் செய்வதற்கு முன்னால் இன்னொருவருக்கு ஹஜ் செய்ய முடியாது. அவ்வாறு இன்னொருவருக்காக என்று அவர் நிய்யத் வைத்தால் அது அது தனக்குரியதாகவே நிறைவேறும்.
33. தமத்துஃ முறையில் ஹஜ் செய்பவர் வேறு முறைக்கு நிய்யத்தை மாற்றிக் கொள்வது தவறாகும். சிலர் பணத்தைத் தொலைத்ததின் காரணமாக ஹதீ கொடுக்க வசதியில்லாததனால் தமத்துஃ முறையில் இருந்து இஃப்றாத் முறைக்கு நிய்யத்தை மாற்றிக் கொள்கின்றனர். இவ்வாறு செய்ய முடியாது. தமத்துஃ முறையில்தான் அவர் ஹஜ் செய்து முடிக்க வேண்டும். அல்லாஹ் அல்குர்ஆனில் ஹஜ்ஜையும் உம்றஹ்வையும் பூரணப்படுத்தச் சொல்லி இருக்கின்றான். அவரிடம் ஹதீ கொடுப்பதற்குப் பணம் இல்லாவிட்டால் பத்து நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். அதாவது ஹஜ்ஜில் இருக்கும் போது மூன்று நாட்களும் அவர் தனது குடும்பத்துக்கு திரும்பியதிற்குப் பிறகு ஏழு நாட்களும் நோன்பு நோற்றுக் கொள்ள வேண்டும். அறஃபஹ் தினத்துக்கு முன்னர் அம்மூன்று நோன்புகளையும் நோற்றுக்கொள்வது சிறந்தது. ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்ததைப் போன்று அறஃபஹ் தினத்தில் அறஃபஹ்வில் நோன்பு நோற்காமல் இருப்பது சிறந்தது.
34. ஆனால், இஃப்றாத் முறையில் இருந்து தமத்துஃ முறைக்கு மாறுவது கூடாது என்ற நம்பிக்கை தவறானதாகும். ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஃப்றாத் மற்றும் கிறான் முறைகளில் ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கு வந்த தன்னுடைய தோழர்களிடம் மக்கஹ்வுக்கு நெருங்கும் போது ஹதீ எனும் பலிப் பிராணி கொண்டு வராதவர்களுக்கு தங்களுடைய ஹஜ்ஜை தமத்துஃ முறைக்கு மாற்றிக் கொள்ளுமாறு கட்டளையிட்டார்கள்.
35. நோய் அல்லது வேறு காரணங்களுக்காக உம்றஹ்வை அல்லது ஹஜ்ஜைப் பூரணப்படுத்த முடியாமல் போய்விடும் என்ற அச்சம் இருந்தால் இஹ்றாமை ஆரம்பிக்கின்ற பொழுது நிபந்தனையிட்டுக் கொள்வது சிறந்தது. சிலர் தேவையுள்ள நிலையிலும் இவ்வாறு செய்யாமல் இருப்பது நல்லதல்ல. எனக்கு தடங்கள் ஏற்படும் பொழுது நான் எனது இஹ்றாமை முறித்துக் கொள்கிறேன் என்று நிபந்தனை இடுவதன் மூலமாக உம்றஹ் அல்லது ஹஜ் வணக்கத்தை நிறைவேற்ற முடியாமல் போனால் அவர் எந்த ஒரு பரிகாரமும் செய்யாமல் அந்த வணக்கத்தில் இருந்து விடுபட முடியும். அதே நேரத்தில் தேவையில்லாமல், அச்சமில்லாமல் இருக்கும் பொழுது இவ்வாறு நிபந்தனை இடுவதும் சரியானதல்ல.
36. தமத்துஃ முறையில் ஹஜ் செய்பவர் அவர் தங்கியிருக்கும் இடத்திலிருந்து ஹஜ்ஜுக்காக இஹ்றாமை ஆரம்பிப்பார். இதற்காக மஸ்ஜிதுல் ஹறாமுக்கு சிலர் செல்கின்றனர். இச்செயல் தவறானதாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருந்த அவர்களது தோழர்கள் அவர்கள் தங்கியிருந்த அப்தஹ் என்ற இடத்திலிருந்துதான் இஹ்றாமை ஆரம்பித்தார்கள்.
தல்பியஹ்:
37. தல்பியஹ் சொல்லாமல் இருப்பது அல்லது அதில் பொடுபோக்காக நடந்து கொள்வது அல்லது தல்பியஹ் சொல்லும் போது சப்தத்தை உயர்த்தாமல் இருப்பது சுன்னஹ்வுக்கு மாற்றமானதாகும்.
38. ஹஜ்ஜுக்குரிய இஹ்றாமில் இருப்பவர் பத்தாவது நாள் ஜம்றதுல் அகபஹ்வுக்குக் கல்லெறியும் வரையில் தல்பியஹ் சொல்வது சுன்னத் ஆகும். சிலர் இதில் பொடுபோக்காக நடந்து கொள்கின்றனர்.
39. சில பெண்கள் சப்தமிட்டுத் தல்பியஹ் சொல்வதும் தவறானதாகும். ஒரு பெண் தனக்குக் கேட்கும் அளவிற்கு தல்பியஹ் சொல்லிக் கொள்ள வேண்டும்.
40. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன தல்பியஹ்வை சொல்வது சிறந்ததாகும். அதில் வார்த்தைகளைக் கூட்டாமல் இருப்பது நல்லது. எனினும் அர்த்தம் தவறானதாக இல்லாத வார்த்தைகளைத் தல்பியஹ்வில் கூட்டுவது குற்றமுமல்ல. ஏனெனில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், மக்கள் வெவ்வேறு விதமான வார்த்தைகளைக் கூறி தல்பியஹ் சொல்லும் பொழுது தடுக்கவில்லை.
தயாரிப்பு:
*Sunnah Academy:*
facebook.com/Sunnah.Acad
instagram.com/sunnah_academy
youtube.com/@Sunnah_academ
Telegram:
t.me/sunnah_academy
WhatsApp:
chat.whatsapp.com/E1aiTCVMAzL9u1N1vGRKdp