மறுமை நாளின் 6 அடையாளங்கள் பற்றிய ஹதீஸ்

மறுமை நாளின் 6 அடையாளங்கள் பற்றிய ஹதீஸ் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் தவறான விளக்கமும், அதற்குரிய சரியான தெளிவும்!

 _பரப்பப்படும் ஹதீஸின் வாசகம் :_ 

'இறுதி நாள் வருவதற்கு முன்பு (அதற்குரிய) ஆறு அடையாளங்கள் நிகழும். அவற்றை எண்ணிக் கொள்:

1. என்னுடைய மரணம்.

2. பைத்துல் மக்திஸ் வெற்றி கொள்ளப்படுதல்.

3. ஆடுகளுக்கு வருகிற (ஒரு வகை) நோயைப் போன்று கொள்ளை நோய் ஒன்று வந்து உங்களைப் பீடிக்கும் (அதனால் ஏராளமானவர்கள் இறந்து போய் விடுவார்கள்)

4. பிறகு செல்வம் பெருகிவழியும். எந்த அளவிற்கென்றால் ஒருவருக்கு நூறு தீனார்கள் கொடுக்கப்பட்ட பின்பும் (அதனை அற்பமாகக் கருதி) அவர் அதிருப்தியுடனிருப்பார்.

 5. பிறகு தீமையொன்று தோன்றும். அரபுகளின் வீடுகளில் அது நுழையாத வீடு எதுவும் இருக்காது. 

6. பிறகு (ரோமர்களுக்கும்) உங்களுக்குமிடையே சமாதான ஒப்பந்தம் ஒன்று ஏற்படும் (அதை மதிக்காமல்) அவர்கள் (உங்களை) மோசடி செய்து விடுவார்கள். பிறகு உங்களை எதிர்த்துப் போரிடுவதற்காக எண்பது கொடிகளின் கீழே (அணி வகுத்து) அவர்கள் வருவார்கள். ஒவ்வொரு கொடிக்கும் கீழே பன்னிரண்டாயிரம் போர் வீரர்கள் இருப்பார்கள்.

ஆதாரம் : புகாரி  3176

முதலாவதாக ஸஹீஹுல் புகாரியில் வரும் இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால் பின்வரும் தவறான விளக்கமொன்றை சமூக வலைதளங்களில் பரப்பி கொண்டு வருகின்றனர்.

தவறான விளக்கம் :

ஃபலஸ்தீனில் இன்று நடக்கும் போராட்டம், கொரோனா நோய் என்பற்றையே இந்த ஹதீஸ் குறிக்கின்றது.  மற்றும் சில உலக நாடுகளைக் குறிப்பிட்டு அந்நாட்டின் நடவடிக்கைகளையே அரபுகளின் வீடுகளில் நுழையும் தீமை என்பதாகும். 

சரியான விளக்கம் :

ஸஹிஹுல் புகாரியில் உள்ள இந்த ஹதீஸிற்கு விளக்கம் அளித்த அறிஞர்கள், பைத்துல் முகத்தஸ் வெற்றி என்பது உமர் (ரழி) காலத்தில் பெறப்பட்ட வெற்றியையே குறிக்கும் என விளக்கமளித்துனர். கூறியுள்ளார்கள்.

மேற்கூறியவாறு தவறான விளக்கத்திற்கான பிரதான காரணம் மறுமை நாளின் அடையாளங்கள் நபியவர்களின் மரணத்திற்கு நீண்ட காலத்திற்குப் பின் நடைபெறும் என்ற நம்பிக்கையாகும். ஆனால் அது தவறாகும். சில அடையாளங்கள் நபியவர்களின் மரணத்தைத் தொடர்ந்தும் நடைபெறலாம். ஏனெனில் நபியவர்களின் மரணம் கூட மறுமையின் ஒரு அடையாளமே. அதற்கு இந்த நபிமொழியே சிறந்த ஆதாரமாகும்.

எனவே நபிகளாரின் மரணத்தை தொடர்ந்து நடைபெறக்கூடிய அனைத்து விஷயங்களும் இதில் உள்ளடங்கும். இப்போது நடந்து கொண்டிருக்கும் போரின் மூலம் இன்ஷா அல்லாஹ் வெற்றி கிடைத்தால் இது தான் நபிகளார் கூறிய வெற்றி எனக் கூற எவ்வித ஆதாரமும் ஹதீஸில் இல்லை, மாற்றமாக நபிகளாரின் மரணத்தை தொடர்ந்து உமர் ரழி காலத்தில் பெறப்பட்ட பைத்துல் முகத்தஸ் வெற்றியைக் குறிக்கும் என்பதுதான் மிகப் பொருத்தமான விளக்கமாக அமையும்.

உமர் ரழி அவர்களின் காலத்தின் பின்னர் ஸலாஹுத்தீன் அய்யூபி ரஹ் அவர்களின் மூலம் மீண்டுமொரு முறையும் அது வெற்றிகொள்ளப்பட்டது.
இந்த இரண்டு சந்தர்ப்பங்களில் முஸ்லிம்களால் வெற்றி கொள்ளப்பட்டுள்ளது. 

ஹதீஸில் இந்த இரண்டையும் கூறாமல் நபிகளார் மூன்றாவது வெற்றியை கூறியிருப்பார்கள் என்பது ஆதாரமற்ற, சாத்தியமில்லாத ஒன்று. அதுமட்டுமின்றி அந்த ஹதீஸில் நபிகளாரின் மரணம் குறித்த அறிவிப்பு, தற்காலத்தில் இவர்களின் விளக்கம் பிழை என்பதற்கு துணைச் சான்றாக உள்ளது. 

நபியவர்களின் காலத்தில் அந்நிய ஆதிக்கத்தில் காணப்பட்ட பைதுல் முக்கத்தஸை உமர் ரழி அவர்களின் காலத்தில் வெற்றிகொள்ளப்படும் என்பதைக் கூறுவதே நபியவர்களின் நோக்கமாகும் என்பதை இதன் மூலம் புரியலாம்.

மூன்றாவதாக கொள்ளை நோய், இந்த நோயைப் பொறுத்த வகையில் இதுவும் உமர் (ரழி) காலத்தில் பைத்துல் முக்கதஸ் வெற்றி கொள்ளப்பட்ட பின்பு ஷாம் தேசத்தில் தோன்றிய ஒரு வகையான நோய். தாவூன் அம்வாஸ் என கூறப்பட்ட அந்த நோய் தான் ஹதீஸில் கூறப்பட்ட நோயாக இருக்கின்றது. இந்த கொரோனா என்ற நோயை நாம் அவ்வாறு கூற முடியாது ஏனெனில் இது கொள்ளை நோயாக அறிஞர்களால் அடையாளப்படுத்தப்படவில்லை. மாறாக இது ஒரு தொற்று நோயாகத்தான் கருதப்படுகிறது.

ஏனெனில் எங்களுக்கு தெரியும் "மதீனாவிற்குள் எந்த கொள்ளை நோயும் நுழைய முடியாது" என்பது தெளிவான நபிமொழி. ஆனால் கொரோனாத் தொற்று மதீனாவிலும் நுழைந்துவிட்டது. எனவே மேலே உள்ள ஹதீஸ் அதனைக் கூறவில்லை என்பதை மிகத் தெளிவாக அறியலாம்.

நான்காவதாக செல்வம் பெருகி வழியும் என்பதற்கு, உஸ்மான் (ரழி) காலத்தில் பல நாடுகள் வெற்றி கொள்ளப்பட்டு   மக்கள் மத்தியில் பணப் புழக்கம் அதிகமாக இருந்ததைத்தான் அதிகமான அறிஞர்கள் கூறுகின்றனர். சில அறிஞர்கள் இது உஸ்மான் (ரழி) காலத்தையும் குறிக்கும், மறுமையின் நெருக்கத்தில் நடக்கும் காலத்தையும் குறிக்கும் என கூறுகின்றனர். ஆனால் Digital Currency என கூறுவது ஹதீஸில் இல்லாததை வலிந்து திணிப்பதாகும்.

ஐந்தாவது: தீமை ஒன்று தோன்றும் அரபுகளின் வீடுகளில் அது நுழையாத வீடு இருக்காது என்பதன் விளக்கம்,

நபித்தோழர்களின் இறுதி காலத்தில் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினைகளால் அவர்களுக்குள்ளாகவே சில போர்கள் ஏற்பட்டன. இந்த பித்னாவைத்தான் இது குறிப்பதாக அறிஞர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

இதில் சொல்லப்பட கூடிய ஆறாவது அம்சம்தான் இன்னும் நடைபெறவில்லை. இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் நடக்கும் என அறிஞர்கள் விளக்கம் அளித்துள்ளார்கள்.அது எப்படி நடக்கும் என்பதைப் பற்றி வேறு ஹதீஸ்களை வைத்து விளக்கம் அளித்துள்ளார்கள்.

எனவே சமூக வலைத்தளங்களில் உலாவரும் வதந்தியை வைத்து யாரும் பதட்டப்பட வேண்டிய அவசியம் இல்லை. இது தற்காலத்தில் நடைபெறக் கூடிய விஷயத்தைத்தான் குறிக்கிறது என்பதை நாம் சிந்தித்து குழம்பி கொள்ள அவசியம் இல்லை. மேலும்  சமூகவலைதளங்களில் பகிரப்படும் விளக்கமானது எவ்வித ஆதாரமும் அடிப்படையும் இல்லாத ஒரு தனிமனிதரின் சுயவிளக்கமாகும். குறித்த ஹதீஸுக்கு விரிவுரை வழங்கிய அறிஞர்களின் விளக்கங்களுக்கும் முரண்பட்டது என்பதையும் புரிந்துகொள்வோம்.

இது போன்ற தவறான விளக்கங்களால் குழப்பமடையாமல், தெளிவாக இருக்க கூடிய மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்குவானாக...

அல்லாஹ் மிக அறிந்தவன்...

- அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் உவைஸ் மீஸானி (M.A., Ph.D - King Saud University, Riyadh -KSA)
Previous Post Next Post