பிறைக் குழப்பத்தில் இருந்து வெளிவர கணிப்பீட்டை நோக்கிச் செல்வது வெப்ப மணலில் இருந்து தப்பிக்க நெருப்பில் புகுந்ததற்குச் சமமானதாகும். ஏனெனில் கணிப்பீட்டு பிறை தேசிய சர்வதேச பிறை போன்ற பிரச்சினையைத் தாண்டி இஜ்திஹாதுக்குட்படாத வழிகேடான, முன்சென்ற நல்லறிஞர்களின் ஏகமனதான முடிவான இஜ்மாவுக்கு மாற்றமான கருத்து என்பதே பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும். ஒரு நாடு கணிப்பீட்டை வைத்து முடிவு செய்தால் அதற்குக் கட்டுப்படக்கூடாது, அவ்வாறு கட்டுப்பட்டால் அது பாவம் எனக் கூறும் பல முக்கிய தலைசிறந்த அறிஞர்களின் பத்வாக்கள் உள்ளன.
ஆனால் இத்தீர்வை முன்வைப்போரில் பலருக்கும் -குறிப்பாக மார்க்கக் கல்வியில் புலமையற்றோருக்கு- உண்மையில் கணிப்பீடு எக்காரணம் கொண்டும் செல்லுபடியாகாது என பல அறிஞர்கள் கூறியுள்ள விபரங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவ்வாறு தெரிந்தும் இதனை ஒரு தீர்வாக முன்வைக்கின்றார்கள் என்றால் அவர்களின் அக்கருத்து சமூகத்தில் இன்னும் பிளவு அதிகரிக்க வழிவகுக்குமே தவிர பிரச்சினையைத் தீர்க்கமாட்டாது.
ஏனெனில் அதிகாரம்மிக்க ஒரு பிறைக்குழு கணிப்பீட்டின் படி செயற்பட்டால் கூட அதற்குக் கட்டுப்படக் கூடாது என்பதே அறுதிப்பெரும்பான்மை அறிஞர்களின் கருத்தாகும். அதாவது சர்வதேச, சேதிய பிறை போன்று சாதாரணமாகக் கடந்துசெல்லத்தக்க ஒரு விடயமல்ல அது. எனவே இந்த முடிவை அங்கீகரித்தால் தற்போதிருக்கும் கட்டுக்கோப்பும் கூட இல்லாமல் சென்றுவிடுவதற்கான வாய்ப்பே அதிகம் என்பதைப் புரிந்துகொள்ளுமாறு புத்திஜீவிகளிடம் வேண்டிக்கொள்கின்றோம்.
சில புத்தீஜீவிகள் கூறுவது போல் பிறைக்குழு கணிப்பீட்டை ஏற்காததற்குக் காரணம் அவர்களின் பிடிவாதமல்ல. மாறாக குறித்த அந்த நிலைப்பாடு நேரடி நபிமொழிக்கு மாற்றமானது. தற்காலம் வரை இஸ்லாமிய அறிஞர்களும் இஸ்லாமிய சமூகமும் கடைபிடித்து வரும் சுன்னாவுக்கு மாற்றமானதாகும் என்பதே அதற்குக் காரணமாகும்.
எனவே வாய்க்கு வந்தவற்றையெல்லாம் பேசாமல் சிந்தனையில் தோன்றியவற்றையெல்லாம் பதியாமல் சற்று ஆய்வு செய்து கருத்துத் தெரிவிப்பதே அறிவுடைமையாகும்.
மகாஸிதுகளை அடிப்படையாகக் கொண்டு சட்டங்களைப் பெறுவதில் நவீன காலத்தில் இடம்பெறும் தவறுகளுக்கான காரணிகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
1- மார்க்கம் இலக்காகக் கருதாதவற்றை இலக்காகக் கருதுதல்.
2- மார்க்கத்தின் நோக்கத்திற்கு முரணானவற்றை இலக்காகக் கருதுதல்
3- மார்க்கம் இலக்காகக் கொண்டுள்ள சாதனங்களை செயலிழக்கச் செய்தல்.
4- மார்க்கம் வகுத்த எல்லையைத் தாண்டுதல்.
5- இஸ்லாமிய சட்டதிட்டங்களின் நோக்கங்களைச் சிதைத்தல்
6- சட்டங்களை நடந்து முடிந்த ஒரு வரலாறாக மாத்திரம் பார்த்தல்.
பிறை பார்ப்பதற்குப் பதிலாக வானவியல் கணக்கை அடிப்படையாகக் கொண்டு மாதங்களை ஆரம்பிக்கலாம் என்பது நாம் மூன்றாவதாகக் குறிப்பிட்டுள்ள மார்க்கம் இலக்காகக் கொண்டுள்ள சாதனங்களை செயலிழக்கச் செய்தல் என்ற காரணத்தினால் ஏற்பட்ட தவறில் உள்ளடங்குகின்றது.
குறிப்பு
நாம் ஏற்றுக்கொள்ளும் சில முக்கிய அறிஞர்கள் கணிப்பீட்டை ஆதரிக்கும் விடயமும் தெரிந்தே இப்பதிவு இடப்படுகின்றது என்பதையும் கவனத்தில் கொள்ளவும். ஆனாலும் வஹியுடன் நேரடியாக முரண்படக் கூடிய அவர்களின் அந்த இஜ்திஹாத் ஏற்கத்தக்கதல்ல என்பதே நமது நிலைப்பாடாகும். எவ்வளவு பெரிய அறிஞராக இருந்தால் மனிதன் என்ற வகையில் தவறுகள் ஏற்படும் என்பதைப் புரிந்துகொண்டால் பிரச்சினை ஏற்படாது.