தல்பியாவின் ஆறு பகுதிகள்

ஹஜ் அல்லது உம்ராவுக்காக நீங்கள் இஹ்ராமுடைய நிலைக்குள் நுழைந்தவுடன், தல்பியா சொல்ல ஆரம்பித்து விடுவீர்கள்.  நூற்றுக்கணக்கான முறைகள் அதை உச்சரித்துக் கொண்டிருப்பீர்கள்.  அதனால், அதன் அழகிய பரிமாணங்களை அறிந்து கொள்வது மிகவும் பயனுள்ளதும், முக்கியமானதும் கூட.  அதன் மூலம், ஒவ்வொரு முறை தல்பியாவை சொல்லும் போதும், அல்லாஹ்(சுபஹ்)விடம் உரையாடுவதன் வித்தியாசமான இனிமையை நீங்கள் சுவைப்பீர்கள்.  நீங்கள் அதை நேசம், பாசம், ஆவலுடன் திரும்பத் திரும்பக் கூறுவீர்கள்.

தல்பியாவின் ஒவ்வொரு வாக்கியத்திற்குள்ளும் அடுக்கடுக்கான கருத்துக்கள் பொதிந்துள்ளன.  அவற்றை சொல்லும்போது, கருத்தையும் நினைவு கூரும்போது, அல்லாஹ்வுடன் உங்களுக்குள்ள தொடர்பு உறுதியாவதுடன், உங்களுடைய ஹஜ் அல்லது உம்ரா உண்மையிலேயே நினைவில் நிற்கக்கூடியதாக ஆகி விடும்.

தல்பியா என்றால் என்ன?

ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுடைய ஹஜ்ஜை வர்ணிக்கும்போது, “பிறகு (நபி ஸல்) அவர்கள் லப்பைக்க அல்லாஹும்ம லப்பைக், லப்பைக்க லா ஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த, வந்நி’மத லக வல் முல்க், லா ஷரீக லக் என்ற தவ்ஹீதின் வார்த்தைகளை உச்சரிக்க ஆரம்பித்தார்கள்.” என்று கூறினார்கள். [முஸ்லிம்]

பெரும்பாலான மக்கள் கீழேயுள்ளது போல் அதை ஆறு பாகங்களாக, சிறிது இடையிடையே சிறிது நிறுத்தி கூறுவார்கள்:

லப்பைக்க அல்லாஹும்ம லப்பைக், (இதோ, உன் அழைப்பை ஏற்று வந்து      விட்டேன், யா அல்லாஹ், இதோ வந்து விட்டேன்)
லப்பைக்க லா ஷரீக லக லப்பைக். (இதோ நான் வந்து விட்டேன், உனக்கு இணையில்லை, இதோ நான் வந்து விட்டேன்)
இன்னல் ஹம்த (நிச்சயமாக புகழும், நன்றியும் உனக்கே உரியவை)
வந்நி’மத (… மேலும், எல்லா அருள்வளங்களும் உன்னுடையவையே…)
லக வல் முல்க் (… மேலும், அனைத்து ஆட்சியதிகாரமும் உனக்கே)
லா ஷரீக லக். (உனக்கு இணை எவரும் இல்லை.)
தல்பியாவின் நன்மைகள்

இந்த அழகிய ஹதீஸ் தல்பியா கூறுவதனால் கிடைக்கும் நன்மைகளை விளக்குகிறது:  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘ஒரு முஸ்லிம் தல்பியா சொல்லும்போது, அவருடைய வலது மற்றும் இடது பக்கங்களில், கிழக்கு மற்றும் மேற்கில் எட்டிய தூரம்வரை உள்ள கற்கள், பாறைகள், மண்கட்டிகள், அவரோடு சேர்ந்து ஓதாமல் இருப்பதில்லை.” [திர்மிதி, இப்னு குஸைமா, பைஹக்கீ].

எனவே, நீங்கள் ஓதும்போது, உங்களுடைய கற்பனையை பயன்படுத்தி, பள்ளத்தாக்குகளிலும், மலைகளிலும், சமவெளிகளிலும், உங்களைச் சுற்றியுள்ள அனைத்தும் நீங்கள் கூறும் தல்பியாவைத் திருப்பிச் சொல்வது போல் உணருங்கள்.  நீங்கள் தல்பியா ஓதும்போது உங்களைச் சுற்றியுள்ள படைப்புகள் அனைத்தும் உங்களுடன் சேர்ந்து கூட்டாக ஓதுவதை உணருங்கள், அல்லாஹு அக்பர்!!

தல்பியாவின் ஆறு பகுதிகள்

இந்த ஆறு பகுதிகளையும் பற்றி பல அறிஞர்களின் விளக்கங்களை ஒவ்வொன்றாக பார்ப்போம். ஏனென்றால்,

1. லப்பைக்க அல்லாஹும்ம லப்பைக், (இதோ, உன் அழைப்பை ஏற்று வந்து      விட்டேன், யா அல்லாஹ், இதோ வந்து விட்டேன்)

“இதோ வந்து விட்டேன்” என்பது மீண்டும் மீண்டும் கூறப்படுவதன் காரணம், இப்ராஹீம் (அலை) அவர்கள் மூலமாக, படைத்தவனின் அழைப்புக்கு பதில் கூறுவது நிரந்தரமானதும், தொடர்ந்து நிகழ்வதும் தான்.  குர்’ஆனில் அல்லாஹ் (சுபஹ்) குறிப்பிடுகிறான்,  “ஹஜ்ஜை பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் நடந்தும் வெகு தொலைவிலிருந்து வரும் மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் வருவார்கள் (எனக் கூறினோம்).” [அல் குர்’ஆன் 22:27]

லப்பைக்…லப்பைக் என திரும்பத் திரும்ப கூறுவதன் பொருள், ‘நான் கீழ்ப்படிகிறேன், மீண்டும் கீழ்ப்படிகிறேன்.’ என்பதாகவும் கொள்ளலாம்.  நான் என்றென்றும் உனக்கு கீழ்ப்படிதலுடன் இருப்பேன், யா அல்லாஹ்!

‘லப்ப பில் மகான்’ என்ற அரபி சொற்றொடருக்கு, ஒரு இடத்தில் தங்கியிருப்பது என்று பொருள்.  அதனால், லப்பைக் என்பதன் கருத்து, ‘உனக்கு கீழ்ப்படிவதில் நான் உறுதியுடன் இருப்பேன், யா அல்லாஹ்!  உன்னிடம் கீழ்ப்படிதலுடன் சரணடைகிறேன்.”

“லப்பைக் (இதோ உனக்கு பணி செய்ய வந்திருக்கிறேன்)” என்பது நம்முடைய அன்பிற்கும், மரியாதைக்கும் உரியவரிடம் சொல்லக்கூடியது.  அதனால், நீங்கள் திரும்பத் திரும்ப உறுதி மொழிவது, உங்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்துகிறது.  இவ்வார்த்தையின் மற்ற கருத்துக்களைக் கூட அறிஞர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

லப்பைக்க லா ஷரீக லக லப்பைக். (இதோ நான் வந்து விட்டேன், உனக்கு இணையில்லை, இதோ நான் வந்து விட்டேன்)
இப்பகுதி, இணை வைப்பிலிருந்து (ஷிர்க்) விலகியிருக்க நீங்கள் ஆவலுடன் இருப்பதை வலியுறுத்துகிறது.  ஷிர்க், அல்லாஹ் (சுபஹ்) என்றும் மன்னிக்காத ஒரு பெரும்பாவமாகும்

இதைச் சொல்லும்போது ஒருவருக்கு வரக்கூடிய உணர்வுகள்: ‘யா அல்லாஹ், நான் உனக்காகவே இருக்கிறேன்!  உன்னை மகிழ்விப்பதைத் தவிர வேறு எந்த நோக்கமும் எனக்கு இல்லை.  ஏனென்றால், உனக்கு இணை எவரும் இல்லை. ‘  இன்னும், எத்தனையோ பரிமாணங்களில் இதைப்பற்றி நீங்கள் யோசிக்கலாம்.

3. இன்னல் ஹம்த (நிச்சயமாக புகழும், நன்றியும் உனக்கே உரியவை)

ஹம்த் என்றால் புகழ் மற்றும் நன்றி.  புகழ் என்று வரும்போது, நீங்கள் எத்தனையோ விஷயங்களைப் பற்றி யோசிக்கலாம்.  அல்லாஹ்(சுபஹ்)வுக்கு 99க்கு மேற்பட்ட அழகிய திருநாமங்கள் உள்ளன.  அவனுடைய ஒவ்வொரு பெயருக்கும் நீங்கள் அவனைப் புகழலாம்.  அதனால், இதோ உங்களுக்கு  அல்லாஹ்வைப் புகழ்வதற்கு 99 வழிகள் உள்ளன.  உதாரணமாக, ‘யா அல்லாஹ், தீவிரமான அன்பு (அர்ரஹ்மான்), மற்றும் இடைவிடாத கருணையையும் (அர்ரஹீம்) காட்டுவதில் நீயே மிகச் சிறந்தவன், மிகச் சிறந்த படைப்பாளன் (அல் காலிக்), போன்ற பல வார்த்தைகளால் புகழலாம்.

அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும்போது, பட்டியல் மிக நீளமாக  முடிவேயில்லாமல் போகலாம்.  அவற்றில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

4. வந்நி’மத (… மேலும், எல்லா அருள்வளங்களும் உன்னுடையவையே…)

முதலில், உங்களுக்கு ஹஜ் அல்லது, உம்ரா செய்யும் அருட்கொடையை அளித்த அவனுடைய அருளைப் புகழுங்கள்.  இன்னும், ‘உன்னுடைய எண்ணிலடங்கா அருட்கொடைகளுக்காக நன்றி, யா அல்லாஹ்.  நான் பாவங்கள் மற்றும் குறைகள் நிறைந்தவனாக இருந்தும், எனக்கு ஹஜ் செய்யும் வாய்ப்பளித்தது, அதற்குத் தேவையான செல்வத்தை எனக்கு அளித்தது, என்னை ஆரோக்கியமாக வைத்திருப்பது, என்னை தடைகள் மற்றும் நெருக்கடி எதுவுமில்லாமல் வைத்திருப்பது, அதற்காக நான் திட்டமிட எனக்கு உதவி செய்தது, என்னுடைய வசதியான பயணத்திற்கும், தங்குமிடத்திற்கும் உதவி செய்தது,  பாதுகாப்பான வாகனம் மற்றும் வழியை எனக்கு வசப்படுத்திக்கொடுத்தது, உனக்கு நன்றி செலுத்துவதற்காக எனக்கு நாவையும், குரலையும் கொடுத்தது, என் இதயத்திலிருந்து உனக்கு நன்றி செலுத்த வாய்ப்பை எனக்கு அளித்தது….’ என பட்டியல் நீண்டு கொண்டே போகலாம்.

உங்களுக்கு ஹஜ் அல்லது உம்ரா செய்யும் வாய்ப்பளித்த அல்லாஹ் (சுபஹ்)வுக்கு நன்றி செலுத்துவதுடன்,  உங்களிடம் உள்ள அனைத்திற்கும் நன்றி சொல்லத் தொடங்கலாம்.  உதாரணமாக,

-       கண், காது, மூக்கு போன்ற உங்களுடைய ஆரோக்கியமான உடலுறுப்புகள், தாய், தந்தை, சகோதரர்கள், சகோதரிகள், உங்களுடைய துணைவர், குழந்தைகள், ஆசிரியர்கள், உடன் பணி செய்பவர்கள், நண்பர்கள் போன்ற அனைத்து அருட்கொடைகளுக்கும்;
- பாதுகாப்பான வீடு, பாதுகாப்பான நாடு, பாதுகாப்பான சூரிய மண்டலம், பாதுகாப்பான பிரபஞ்சம், போன்றவைகளுக்காக;

-       பெரும் பாக்கியங்களான இஸ்லாம், ஈமான், முஹம்மது நபி (ஸல்) அவர்களுடைய உம்மத்தில் பிறந்தது, இஸ்லாத்தைப் பற்றிய புரிதல், போன்றவற்றிற்கு நன்றி தெரிவியுங்கள்

இவ்வகை நன்றி செலுத்துதலை தினமும் ஐவேளைத் தொழுகைக்குப் பிறகும், 33 முறை அல்ஹம்துலில்லாஹ் என திரும்பத் திரும்ப சொல்லும்போதும் சமர்ப்பிக்கலாம்!

5. லக வல் முல்க் (… மேலும், அனைத்து ஆட்சியதிகாரமும் உனக்கே)

அருட்கொடைகள் மாத்திரம் உன்னுடையவை அல்ல, அதிகாரம், ஆட்சி, அனைத்தும் உனக்கு மட்டுமே உரியவை.  அது தான் உண்மை, ஏனென்றால்,

-       இந்த நாடு

-       இந்த பூமி அதன் ஆற்றல் மற்றும் வளத்துடன்

-       காற்று, மழை, ஒளி, இருள்

-       சந்திரன், சூரியன், நட்சத்திரங்கள்,  கோள்கள், கருப்பு துளைகள், விண்மீன்கள்

-       தரையிலும், நீரிலும், வானிலும் உள்ள படைப்பினங்கள்; மனிதர்கள், ஜின்கள், வானவர்கள்.

அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவை.

 

யா அல்லாஹ்!  எல்லாவற்றின் முழுமையான, பூரணமான கட்டுப்பாடு உன் கையிலேயே உள்ளது.

லா ஷரீக லக். (உனக்கு இணை எவரும் இல்லை.)
புகழிலும், நன்றியிலும், ஆட்சியதிகாரத்திலும் உனக்கு இணை எவருமில்லை.  என்னிடம் உள்ள ஏல்லாமே உன்னிடமிருந்து பெற்றவை தான்.  நான் என்றென்றும் உன்னுடைய, அடிமையாக மட்டுமே இருப்பேன்.  நான்

-       உன்னைத் தவிர எவர் மீதும் நம்பிக்கை வைக்க மாட்டேன்

-       உன்னைத் தவிர எவருக்கும் அஞ்ச மாட்டேன்

-       உன்னைத் தவிர வேறு எவரிடமும் எதையும் யாசிக்க மாட்டேன்

-       உன்னைத் தவிர வேற் எவராலும் கவரப்பட மாட்டேன்.

-       உன்னை விட எவரையும் நேசிக்க மாட்டேன்.

ஏகனாக இருப்பதன் அழகு

ஒவ்வொரு முறை தல்பியா கூறும்போதும், இந்த வேறுபட்ட கருத்துக்களைப் பற்றி நீங்கள் சிந்தித்துக் கொண்டே இருக்கலாம். அதை திரும்பத் திரும்ப கூறும்போது, அதன் ஆழமான பொருளை அறிந்து கொள்ள அல்லாஹ்விடம் உதவி கேட்கத் தவறி விடாதீர்கள்.

‘லா ஷரீக லக்’ (உனக்கு இணை எவருமில்லை) தல்பியாவின் முதல் மற்றும் இறுதிப் பகுதியில் கூறப்படுகிறது.  ஷிர்க்கின் அபாயத்தை உணர்ந்து இதை நாம் சொல்ல வேண்டும்.  தவ்ஹீதில் உண்மையாளர்களாக இருக்க அல்லாஹ்விடம் யாசிப்போம்.

அரஃபாத்திலிருந்து, மினாவுக்கு செல்லும்போதுஒரு இளைஞன் தன் பார்வையை சாலையில் பதித்து, தல்பியாவை பாசத்துடனும், நேசத்துடனும், உரக்கச் சொல்லிக் கொண்டு சென்றது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது.  அவரைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அவருக்கு ஒரு கவலையும் இல்லை.   அவர், அவரைப் படைத்தவன் மட்டுமே இருந்தார்கள்,  அவருடைய ஓதுதலில் இருந்த பாசமும், இதமும் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.  நம் அனைவராலும், தல்பியாவை இந்த பாசம் மற்றும், நேசத்துடன், அதை விட அதிகமாக,   சொல்ல முடிய வேண்டும் என விரும்பி நான் இறைவனிடம் வேண்டுகிறேன்.

உங்களுடைய பாசத்தைப் பிரகடனப்படுத்துங்கள்!

சிலர் தேவையில்லாமல் தல்பியாவை உரக்கச் சொல்வதற்கு வெட்கப்படுகிறார்கள்; உரக்கச் சொல்ல வேண்டாம் என உங்களைத் தடுப்பது ஷைத்தானுடைய ரகசிய பேச்சே.  நீங்கள் ஹஜ் அல்லது உம்ரா செய்யும்போது, அல்லாஹ்வுக்கு முன்னால் இருக்கிறீர்கள்.  அல்லாஹ், அவனுடைய இல்லாத்துக்கு வரக்கூடிய மாபெரும் கொடையை உங்களுக்கு அருளியிருக்கிறான்.  உரக்கச் சொல்லாமல், இந்த பெரும் சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள்.

நீங்கள் மென்மையாகச் சொல்லும்போது, ஒரு வேளை உங்களைச் சுற்றியுள்ள கற்கள், பாறைகள், மண் அனைத்தும் உங்களுடன் இணைந்து தல்பியா கூறுவதையும், உங்களுக்கு அவை சாட்சியாக இருப்பதையும் தவற விட்டுவிடுவீர்கள், ஏனென்றால், நீங்கள் கூறுவதை அவைகள் கேட்கவில்லை!  மறந்து விடாதீர்கள்,  இந்த கற்கள், பாறைகள், மண் அனைத்தும், நிலங்களிலேயே மிகச் சிறந்த மக்காவைச் சேர்ந்தவை என்பதை.  இருப்பினும், பெண்கள் தேவைக்கதிகமாக தங்கள் குரலை உயர்த்தக்கூடாது.

அல்லாஹ் (சுபஹ்) உங்களுடைய ஹஜ்ஜை ஹஜ் மப்ரூராகவும், உங்களுடைய உம்ராவை மக்பூலாகவும் ஏற்றுக் கொள்வானாக.  உங்களுடைய பிரார்த்தனைகளில் எங்களையும் நினைவு வைத்துக் கொள்ளுங்கள்.

-டாக்டர். அப்துல் அஸீஸ் அப்துர்ரஹீம்
Previous Post Next Post