-இஹ்ஸானா பின்த் மனாப்(f)
வல்ல ரஹ்மானின் திருப்பெயரால்…
அல்லாஹ் தஆலா தன் அடியார்களுக்கு வழங்கியுள்ள அருட்கொடைகளில் மிகப் பெரும் அருட்கொடையான ஈமானுக்கு பின் இன்னுமொரு விலைமதிப்புள்ள ஒன்று இருக்குமாக இருந்தால் அது தான் அல்லாஹ் அவர்களுக்கு அளித்திருக்கும் பகுத்தறிவு எனும் அருட்கொடையாகும்.
அதைக்கொண்டே மனிதன் நலவு, கெடுதி, அழகு, அசிங்கம், பயன்மிக்கது, இடரளிக்கக்கூடியது என தன்னைச்சூழ இருக்கும் விடயங்களை பிரித்தறிகிறான்; கால்நடைகளை விட தன்னை சிறப்பித்தும் கொள்கிறான்.
அல்லாஹ் தஆலா தன் திருமறையிலும் கூட ஆங்காங்கே பல இடங்களில் பகுத்தறிவையும், பகுத்தறிவாளர்களையும் சிறப்பித்து கூறுவதோடு அதை உதாசீனப்படுத்துபவர்களை தூற்றியும் பேசுகிறான். அது மட்டுமல்லாமல் அவன் உலகில் அத்தாட்சியாக படைத்திருக்கும் படைப்பினங்களை பற்றி சிந்தித்து படிப்பினைப்பெறுமாறும் தன் அடியார்களை தூண்டுகிறான்.
ஆக, உலகிலே மனிதனால் பின்பற்றப்படும் கொள்கைகள், கோட்பாடுகள், மதங்கள், சித்தார்தங்கள் போன்றவற்றிலே சிந்தனைக்கும், பகுத்தறிவுக்கும் அதி முக்கியத்துவம் கொடுக்கும் ஒரே ஒரு மார்க்கம் இஸ்லாமெனும் சத்திய மார்க்கம் தான்.
என்றாலும்……………!
அப்பகுத்தறிவானது அதை நாம் வழிபடுமளவுக்கு உயர்ந்த அந்தஸ்த்துக்கு உயர்த்துவதையோ அல்லது மனிதன் விலங்குகளைப்போன்று கீழ்த்தரமாக செயலாற்றுமளவுக்கு அதை முற்றாக புறந்தள்ளுவதையோ இஸ்லாம் போதிக்கவில்லை.
மாறாக, அல்லாஹ் தஆலாஅந்த மனித பகுத்தறிவுக்கு, அதை எவ்வாறு பிரயோகிக்க வேண்டுமென்று ஒரு குறிப்பிட்ட எல்லையையும் மட்டிடப்பட்ட நிர்ணயத்தையும் விதித்திருக்கிறான்.
ஏனெனில், மனிதன் தான் சுதந்திரமாக சிந்திக்கும் சக்தியை பெற்ற போதிலும், மறைவான சில விடயங்களைப்பற்றி அவன் எல்லை மீறி சிந்திக்க தொடங்குவானானால் அவன் காரிருளில் செய்வதறியாது திண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டு அவனது புத்தி பேதலித்து விடும்.
அதற்காகத்தான், மனிதன் குறிப்பிட்ட சில விடயங்களில் மூழ்கி ஆழ்ந்து சிந்திப்பதை அல்லாஹ் தஆலா தடை விதித்திருப்பதைக்காணலாம்.
உதாரணமாக, காபிர்கள் நபி(ﷺ) அவர்களிடம் ரூஹ்-உயிரின் யதார்த்தத்தை பற்றி கேட்ட போது ‘நீங்கள் சொற்ப அறிவே கொடுக்கப்பட்டுள்ளீர்கள்’ எனக்கூறுமாறு அவனது தூதரை ஏவுகிறான்.
அதாவது அல்லாஹ் தஆலா அவர்களது கேள்விக்கு விளக்கம் கூறாமல், மனிதனுக்கு வழங்கப்பட்டிருக்கும் அறிவின் பிரமாணத்தை கூறுவதோடு, அதை அவன் உங்களுக்கு தெளிவுபடுத்தினாலும் அதை நீங்கள் விளங்கிவிட சக்தி பெறவேமாட்டீர்கள் என்பதை மனிதர்களுக்கு தெளிவு படுத்துகிறான்.
நபி(ﷺ) அவர்களும் ஒருமுறை பின்வருமாறு கூறினார்கள்:
உங்களில் ஒருவரிடத்தில் ஷைத்தான் வந்து, ‘இன்ன பொருளை படைத்தது யார்? இன்ன பெருளை படைத்தது யார்? எனக்கேட்டுக்கொண்டே வந்து, இறுதியாக உன் இறைவனைப்படைத்தவன் யார்? என்று கேட்பான். அந்த கட்டத்தை அவர் அடையும் போது அவர் அல்லாஹ்விடம் பதுகாப்பு தேடிக்கொள்ளட்டும்! (அது போன்ற சிந்தனையிலிருந்து) விலகிகொள்ளட்டும் (பார்க்க அல்புகாரி3276)
ஆகவே, மனிதனின் சிந்தனையும், அறிவும் சில வஹி அறிவிப்புக்களை விளங்கிக்கொள்ள முடியாமல் அதிலே தடுமாற்றம் காணும் போது அவ்விறைச்செய்திக்கு அவன் முற்றிலும் அடிபணிந்து, தான் குறுகிய அறிவு உடையவன் எனும் அடிப்படையில் அல்லாஹ்விடம் சரணடைய வேண்டும்.
இதையே இஸ்லாம் போதிக்கிறது; இல்லையெனின் அவன் வழிகேட்டில் விழுந்து விடுவான் என்பதை பின்வரும் வசனங்கள் உணர்த்துகின்றன.
‘அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஏதாவது ஒரு காரியத்தில் முடிவெடுத்து விட்டால், அவர்களுடைய அந்த விடயத்தில் சுயஅபிப்பிராயம் கொள்வது எந்த ஒரு முஃமினான ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமை கிடையாது. மேலும் யார் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்கிறாரோ அவர் தெளிவான வழிகேடாக வழிகெட்டு விட்டார்’ (அல்அஹ்ஸாப்:36)
ஆனால் ! ! !
துரதிஷ்டவசமாக இன்றைய புது நூற்றாண்டிலே இஸ்லாமிய அறிஞர்கள், சீர்திருத்தவாதிகள், சிந்தனையாளர்கள் எனும் பெயரிலிருக்கும் சில பிரச்சாரகர்கள் தம் பகுத்தறிவையும் சிந்தனைத்திறனையும் வஹியை அளந்து நிறுக்கும் நியம அளவு கோலாக முன்னிறுத்தி பல ஆதரபூர்வமான ஹதீஸ்களை தாறுமாறாக நிராகரிப்பதோடு சில அல்குர்ஆன் வசனங்களுக்கு பிழையான முறைகளில் விரிவுரை செய்யும் ஓர் அவல நிலையை கண்டு வருகிறோம்.
‘புத்தி ஏற்றுக்கொள்ளவில்லை’ , ‘இக்காலப்பகுதிக்கு பொருந்த மாட்டாது’ , ‘பகுத்தறிவுக்கு முரணானது’ ‘சந்தேகத்திற்கிடமானது’ ‘அதில் ஏதாவது குறை நிகழ்ந்து இருக்க வேண்டும்’ போன்ற அவர்களது வாதங்களால் இன்று அல்குர்ஆனுக்கும், ஆதரபூர்வமான ஹதீஸ்களுக்கும் முறையான கண்ணியமும் சங்கையும் கொடுக்கப்படாமல் அவை துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றன.
இதற்காக, ‘இஸ்லாம் பகுத்தறிவு ரீதியான மார்க்கமாகும்’ , ‘இஸ்லாம் நாகரிகமான மார்க்கமாகும்’ , ‘இஸ்லாத்தை முற்போக்கு சிந்தனையுடன் அணுகுவோம்; பிற்போக்கு சிந்தனையை ஒழிப்போம்’ , ‘இஸ்லாத்தை காபிர்களுக்கு அழகிய முறையில் சித்தரிப்போம்’ போன்ற கோஷங்களை அவர்களது பிரச்சாரங்கள் நெடுகிலும் காணலாம்.
உண்மையில் இது அல்குர்ஆனையும் சுன்னாவையும் முறையாக அணுகும் ஈமானிய ரோஷமுள்ள அடியார்களின் இரத்தத்தை கொதிக்கச்செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை..
எந்த அளவுக்கெனின், இன்று அந்த பிரச்சாரகர்களில் சிலரின் சிந்தனைத்திறன் பின்வரும் பத்வாக்களை கொடுத்து நவீன ஜாஹிலிய்யத்திற்கு மக்களை வழிநடாத்திக்கொண்டிருக்கிறது.
‘அஷ்அரிய்யாக்கள், மாதுருதிய்யாக்கள் போன்ற வழிகெட்ட பிரிவினர்கள் அஹ்லுஸ்-ஸுன்னாவை சேர்ந்தவர்கள்’, ‘கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களின் நெருங்கிய சகோதரர்கள்’, ‘அவர்களது பெருநாட்களில் முஸ்லிம்கள் அவர்களுக்கு வாழ்த்து சொல்வது நன்மையாகும்’, ‘சுதந்திரத்தை அமுலாக்குவது(تحقيق الحرية) மார்க்கத்தை நடைமுறைப்படுத்துவதை விட முற்படுத்த வேண்டிய அம்சமாகும்’ , ‘இணைவைப்பாளர்களின் வைபவங்களில் முஸ்லிம்கள் சென்று தன் எண்ணத்தை சரியாக்கிக்கொண்டு குத்து விளக்கு ஏற்றுவதில் குற்றமில்லை’ , ‘வங்கி நிர்வாகத்தின் சேவை எனும் அடிப்படையில் 1% 2% 3% வட்டி ஹலால் ஆகும்’ , ‘இசை ஹலால்; சினிமா ஹலால்; தொடர் நாடகங்கள் ஹலால்’ , ‘ஆண்கள்- பெண்கள் மத்தியில் ஏற்படுத்தப்படும் திரை பித்அத் ஆகும்’ , ‘வியாபாரங்களில் ஈடுபடும் திடகாத்திரமான பெண் ஒருவரது சாட்சி ஒரு ஆணின் சாட்சிக்கு சமனாகும்’ , ‘பெண்களை தலைமை பதவிக்கு அமர்த்த வேண்டும்’ , ‘ஹிஜாபை கட்டாயப்படுத்துபவர்கள் பெண்களின் ஒழுக்கத்தை போதிப்பவர்கள் ஆணாதிக்கவாதிகள்’ என இவர்களின் பத்வாக்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
இன்னும் சில பிரச்சாரகர்களின் பகுத்தறிவும், ஆய்வுத்திறனும், முஃதஸிலாக்கள் எவ்வாறு வஹி அறிவிப்புக்களை அணுகினார்களோ அதே முறையில் அணுகச்செய்து தானும் வழிகெட்டு பிறரையும் வழிகேட்டில் விழச்செய்து கொண்டிருக்கிறது.
“அல்லாஹ் கீழ் வானத்திற்கு இறங்குவதாக இருந்தால் புவிக்கோளம் சுழலும் காலமெல்லாம் அவன் கீழ் வானத்தில் தான் இருக்க வேண்டி ஏற்படும்! அவ்வாறெனின் அர்ஷ் மீது நிலை பெற்றான் என்பதை உணர்த்தும் அல்குர்ஆன் வசனங்களோடு இது மோதுகிறது! ஆகவே அல்லாஹ் கீழ் வானத்திற்கு இறங்குகிறான் என்பது சம்பந்தமாக வரும் இந்த ஹதீஸை எவ்வாறு மனித புத்தி ஏற்றுக்கொள்ளும்? ஆகவே அந்த ஹதீஸிலிருந்து நேரடி விளக்கம் பெறாமல் அதற்கு வியாக்கியானம் செய்ய வேண்டும்!”
‘சூனியம் எவ்வாறு சாத்தியமாகும்?’ , ‘அஜ்வா எவ்வாறு நோய்களுக்கு நிவாரணி அளிக்கும்?’ , ‘கண்ணூறு எவ்வாறு சாத்தியமாகும்?’ , ‘இப்றாஹீம் நபிக்கு எதிராக ஒரு பல்லி ஊதியதற்காக அதன் மொத்த இனத்தை அழிப்பது நியாயமாகுமா?’ , ‘மூஸா நபியும் மலகுல் மவ்த்தும் சம்பந்தமாக வந்திருக்கும் ஹதீஸை புத்தி ஏற்குமா?’ , ‘சுலைமான் நபி ஒரு இரவில் 100 பெண்களுடன் கூடியிருப்பது அசாத்தியமானதே!’ , ‘ஹுஸைமா இப்னு ஸாபித் எனும் நபித்தோழரின் சாட்சியம் எவ்வாறு இரு சாட்சியங்களுக்கு சமனாகும்?’
இந்த ஹதீஸ்கள் அனைத்தும் பகுத்தறிவுக்கு புலனாகவில்லை; அவை ஆதரபூர்வமானது எனக்கூறப்பட்டாலும் அதில் எங்காவது ஒரு குறை ஏற்பட்டிருக்க வேண்டும். அவை உறுதியான அறிவிப்புக்களாக இல்லை. அவற்றை மனித புத்தி ஏற்காது. அது இன்ன வசனத்துடன் அல்லது இன்ன ஹதீஸுடன் மோதுகிறது. ஆகவே அதை மறுக்க வேண்டும்; அதை தட்ட வேண்டும்; அதை நிராகரிக்க வேண்டும்……!!
என அவர்களது அசத்திய வார்த்தைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
உண்மையில், இன்றைய காலகட்டத்தில் முஹம்மத் அல்கஸ்ஸாலி, யூசுப் அல்கர்ளாவி, உஸ்தாத் மன்சூர், ஜைனுல் ஆப்தீன் போன்ற இன்னும் பல அழைப்பாளர்களின் பிரச்சாரங்கள் இந்த அமைப்பில் அமைந்திருப்து அனைவரும் அறிந்ததே!
தர்க்க ரீதியாகவும் தத்துவ ரீதியாகவும் அனைத்து விடயங்களையும் அணுக விரும்பும் இளைஞர்களையும், யுவதிகளையும், பெரும் பதவி வகிப்பாளர்களையும் அவர்களது இந்த பிரச்சாரம் ஈர்த்துக்கொண்டிருக்கிறது.
கேட்பதற்கும், சிந்திப்பதற்கும், இரசிப்பதற்கும் அது சுவாரஷ்யமாக இருப்பதற்காக இன்று பாமர மக்களில் பெரும் திரளானோர் இவர்களது கொள்கையின் பாரதூரம் அறியாது அதை சரிகாணத் தொடங்கியுள்ளனர்.
அன்பர்களே!
யதார்த்தம் என்னவெனில், அல்லாஹ் மனிதனுக்கு அளித்திருக்கும் சிந்திக்கும் ஆற்றலும், பகுத்தறிவும் ஒரு போதும் அல்குர்ஆன், ஹதீஸ்களை நிறுக்கும் கருவிகளாக அமையாது.
ஏனெனில் சட்டம் இயற்றும் அதிகாரமும் ஆற்றலும் அது அல்லாஹ்வுக்கு தனித்துவமானதாகும்.
இது ஹலால்; இது ஹராம்; இது கட்டாயக்கடமை; என மார்க்க விதிமுறைகளையும் வரையறைகளையும் விதிப்பவன் அவனே! இதில் மனித அறிவுக்கோ, சிந்தனைக்கோ, புத்திக்கோ எவ்வித பங்களிப்பும் கிடையவே கிடையாது..
இஸ்லாத்தில் மது ஹராம் ஆக்கப்படுவதற்கு முன் மக்களில் பலர் அதை அருந்தி வந்த போதிலும் அதன் கெடுதியையும், இடரையும் கருத்திற்கொண்டு மது பானங்களை தவிர்ந்து கொண்டோரும் அவர்களுக்குள் இருந்தனர். ஆனால், மனிதனுக்கு நன்மை தீமை எழுதப்பட்டதெல்லாம் அல்லாஹ் மது அருந்துவது ஹராம் என மார்க்கமாக்கியதன் பின்னரே! மேலும் ஹராம் ஆக்குவதற்கு முன்னர் அதை அருந்திய ஸஹாபாக்களை அல்லாஹ் குற்றம் பிடிக்கவுமில்லை.[பார்க்க அல்புகாரி2464)
ஆக, ஒரு மனிதனின் அறிவு, அனுபவம், சிந்தனை, பகுத்தறிவு என்பன மார்க்க சட்ட வரையறைகளை விதிக்கும் ஒரு அளவு கோலாக ஒரு போதும் திகழாது. மாறாக அது அல்லாஹ்வுக்குரிய அதிகாரமும் ஆற்றலுமேயாகும்.
உண்மையில் இன்று சிந்தனை ரீதியாகவும், பகுத்தறிவு ரீதியாகவும் மனிதனால் எடுக்கப்படும் தீர்வுகள் ஆளுக்காள், இடத்திற்கிடம், காலத்திற்குக்காலம் வித்தியாசப்படுவதை நாம் காண்கிறோம். அவனுக்குள்ளே அது பிளவுகளையும் பிணக்குகளையும் பிரச்சினைகளையும் உண்டாக்குகிறது.
அதுமட்டுமல்லாமல், புத்தி என்பது மறதி, தவறு, பேதலிப்பு போன்ற பலவீனங்களுக்கு உள்ளாகும் விதத்தில் தான் அல்லாஹ் அதை படைத்து வைத்திருக்கிறான்..
இப்படிப்பட்ட கோளாறுகளுள்ள பகுத்தறிவை, இறைச்செய்திகளை அளந்து நிறுக்கும் நியம கருவியாக கணக்கெடுப்பது எங்கனம் நியாயமாகும்?
இம்மனித அறிவை மாத்திரம் வைத்து மார்க்க விடயங்களை அணுகத்தொடங்கினால்;
தயம்மும் எனும் இபாதத்தை பகுத்தறிவு ஏற்குமா?
அல்லது
தொழுகைகளினது ரக்’அத்கள் 2,3,4 என வேறுபடுவதை பகுத்தறிவு ஏற்குமா? அல்லது
கஃபாவை ஏழு முறை தவாப் செய்வதை பகுத்தறிவு ஏற்குமா?
அல்லது
ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடுவதை பகுத்தறிவு ஏற்குமா?
அல்லது
குற்றவியல் தண்டனைப்படி மனிதனை நோவினை/கொலை செய்வதை பகுத்தறிவு ஏற்குமா?
இக்கேள்விகளுக்கு மனிதன் திருப்தியடையும் வகையில் அறிவு ரீதியான விளக்கங்கள் மூலம் பதில் சொல்வதற்கு உலகில் எந்த ஒரு சிந்தனைவாதியும் ஒருபோதும் சக்தி பெறமாட்டார்.
ஆக, ஒரு முஃமினானவன் தன் உள்ளம் ஏற்றுக்கொள்ளாத இது போன்ற விடயங்களை செவிமடுக்கும் போது, அதை இவ்வுலகத்தைப்படைத்து பரிபாலித்துக்கொண்டிருக்கும் வல்ல நாயனிடம் ஒப்படைத்து விடுவான்.
இதுதான், வஹி இறங்குவதை நேரடியாக பார்த்து, அதன்படி தம் வாழ்க்கையை அமைத்துகொண்டு அதற்காகவே மரணித்த ஸஹாபாக்களின் வழிமுறையாக இருந்த்தது.
ஒருமுறை முஆதா எனும் பெண் ஆயிஷா[றழி] அவர்களிடம் வந்து ‘மாதவிலக்கு ஏற்படும் பெண்ணின் நிலை என்ன? அவள் தொழுகையை கழா செய்யாமல் நோன்பை மட்டும் கழா செய்கிறாளே’ எனக்கேட்டபோது, ஆயிஷா(றழி) ‘நீ ஒரு ஹரூரிய்ய இனத்தைச்சார்ந்தவளா?’ எனக்கேட்டார்கள்.
அதற்கு அந்தப்பெண், ‘இல்லை, என்றாலும் நான் கேட்கிறேன்’ எனக்கூறினாள். அதற்கு ஆயிஷா[றழி] அவர்கள் ‘நாங்கள் நபி[ﷺ] அவர்களோடு இருக்கும் காலத்தில் எங்களுக்கு மாதவிலக்கு ஏற்படும். அப்போது நங்கள் நோன்பை கழா செய்யுமாறு மட்டுமே ஏவப்படுவோம். ஆனால், தொழுகையை கழா செய்யுமாறு ஏவப்படவில்லை.’ எனக்கூறினார்கள். (அல்புகாரி,முஸ்லிம்)
இங்கே, பகுத்தறிவு ரீதியாக ஹதீஸ்களை அணுகி மனித அறிவுக்கு எட்டாத விடயத்தைப்பற்றி சிந்திப்பவர்களுக்கு ஆயிஷா(ரழி) அவர்கள் “ஏவப்பட்டோம்’ ‘ஏவப்படவில்லை’ எனும் இரு வார்த்தைகளால் மாத்திரம் பதிலளிப்பதைக் காணலாம்.
அதுமட்டுமல்லாமல், சிந்தனை ரீதியான கேள்வியொன்று வருவதையே மறுக்கும் முகமாக ஒரு வழிகெட்ட அமைப்பினை ஆயிஷா(ரழி) சுட்டிக்காட்டியிருப்பது எந்தளவு இவர்கள் இறைத்தூதரின் வழிகாட்டலோடு நின்றுகொண்டார்கள் என்பதை உணர்த்துகிறது.
அதே போலத்தான் ஒருமுறை உமர்(றழி) அவர்கள் ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிட்டுவிட்டு ‘நீ மனிதனுக்கு பயனளிக்கவோ இடரளிக்கவோ முடியாத ஒரு கல் என்பதை நான் அறிவேன். ஆனால் நபி(ﷺ) அவர்களை உன்னை முத்தமிடுபவராக நான் கண்டிராவிட்டால் நான் உன்னை முத்தமிட்டிருக்க மாட்டேன்’ எனக்கூறினார்கள். (அல்புகாரி, முஸ்லிம் )
அதாவது, நபி(ஸல்) வணக்க வழிபாடாக காட்டித்தந்த மார்க்க விதிமுறைகள் அதை நம் உள்ளம் ஏற்றுக்கொள்ளாத போதிலும் அதற்கு நாம் கட்டுப்பட்டேயாக வேண்டும் என்பதை உமர்(றழி) அவர்களது இச்செயற்பாடு எமக்கு அழகாக உணர்த்துவதைக்காணலாம்.
மேலும், இம்ரான் இப்னு ஹுஸைன்(றழி) எனும் நபித்தோழர் ஒருமுறை ‘வெட்கம் என்பது நலவாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ எனக்கூற அதற்கு புஷைர் இப்னு கஃப் எனும் தாபிஈ அதிலே பலவீனமும் இயலாமையும் இருக்கிறது’ எனக்கூறினார்.
அதற்கு இம்ரான்(றழி) ‘நான் அல்லாஹ்வின் தூதரைத்தொட்டு ஒரு செய்தியை அறிவிக்க நீயோ அதற்கு முரணானவற்றை கூறிக்கொண்டிருக்கிறாய்! இனிமேல் உனக்கு தெரியாத, ஒரு ஹதீஸைக்கூட உனக்கு நான் அறிவிக்கமாட்டேன்’ எனக்கூறினார்கள். (அல்புகாரி, முஸ்லிம்)
இது போன்ற சம்பவங்கள் இன்னும் நிறையவே இருக்கின்றன.
ஆகவே, உத்தம ஸஹாபாக்கள் அல்லாஹ்வின் வஹி சார்ந்த விடயங்களை கையாண்ட விதம் இவ்வாறு தான் இருந்தது.
எனவே மனிதனின் குறுகிய சிந்தனையையும், பலவீனம் வாய்ந்த பகுத்தறிவையும் வைத்து வஹியை மட்டிடுவது வழிகேடாகும். மேலும் அது எம் முன்னோர்களும் நல்லோர்களும் எமக்கு காட்டித்தராத வழிமுறையுமாகும்.
உண்மையிலே, பகுத்தறிவு, சிந்தனைத்திறன் எனும் பதங்களைக்கொண்டு தான் இஸ்லாத்தின் சத்தியத்தன்மை புலப்படும் என்றிருந்தால், காபிர்கள் தம் நிரகரிப்பிலே இன்று வரை நீடித்தது இருக்க மாட்டார்கள். தமக்கிருக்கும் புத்தியைகொண்டு இஸ்லாத்தை முழுமையாக விளங்கி அதிலே தெளிவு பெற்றிருப்பார்கள்..
இன்று உலகளாவிய ரீதியில் முஸ்லிம்களில் அநேகமானோர் சில பிரச்சாரகர்களை தன் முன்னோடியாகவும், முன்மாதிரியாகவும், தலைச்சிறந்த சமூகத்தலைவராகவும் எடுத்துக்கொண்டு அவர் தான் சிறந்த சிந்தனையாளர், முற்போக்கு சிந்தனை உடையவர், தூர நோக்கோடு நவீன முறையில் பிரச்சாரம் செய்பவர், பகுத்தறிவு ரீதியாக அனைத்துக்கும் விளக்கம் கொடுப்பவர் என்றெல்லாம் கூறி அவர்களைப் போற்றி பின்பற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
அவ்வாறெனின் அத்தலைவர்களின் மரணத்தின் பின் எவரது சிந்தனையை நாம் பின்பற்றுவது? எவரது பகுத்தறிவை நாம் ஏற்பது?
என்னை பெற்ற தாய், நான் பெற்றெடுத்த மகள் எனப்பாராமல் அவர்களை மணந்து கொள்வதை சரிகாணும் நவீன மேற்கத்தேய பகுத்தறிவையா? அல்லது
பெண் குழந்தைகளை உயிரோடு கொலை செய்த பண்டைய ஜாஹிலிய்யத்தை பின்பற்றும் நவீன ஜாஹிலிய்ய பகுத்தறிவையா? அல்லது
அர்ரஹ்மான் தனக்கென ஒரு மகனை எடுத்துக்கொண்டான் எனக்கூறும் கிறிஸ்தவர்களின் பகுத்தறிவையா? அல்லது
சூரியன், சந்திரன், மரம், கல் என அனைத்தையும் கடவுளாகக் கருதும் இந்து மத பகுத்தறிவையா? அல்லது
புத்தபெருமானை முன்னிறுத்தி உலகத்தை துறந்து வாழும் பெளத்தர்களின் பகுத்தறிவையா? அல்லது
ஷாபிஇய்ய மத்ஹபை சார்ந்தவர்களின் பகுத்தறிவையா? அல்லது
சூபிய்ய கொள்கையை சார்ந்தவர்களின் பகுத்தறிவையா?
இன்று பகுத்தறிவு வாதம், சிந்தனைத்திறன் எனும் வார்த்தைகளால் ஈர்க்கப்படும் நாம் நாளை மேற்படி பகுத்தறிவாளர்களின் வாதங்களை ஏற்கமாட்டோம் என்பதில் என்ன நிச்சயம்?
கப்ர் வணக்கம், மூடநம்பிக்கை, சகுனம், குறி, சாஸ்திரம், கந்தூரி, கத்தம் போன்ற வழிகேடுகள் பித்அத்’களிலிருந்து மீண்டெழுந்து தூய மார்க்கத்தின் படி தம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என ஆர்வத்தோடு நாம் இருக்கும் இக்காலப்பகுதியில், எம்மை அறியாமலேயே இந்நவீன பிரச்சாரத்தால் கவரப்பட்டு மீண்டும் வழிகேட்டிலே சென்று கொண்டிருக்கிறோம்.
ஆகவே, அல்லாஹ் தஆலா நமக்கு அளித்திருக்கும் அறிவை அவன் ஏவியதன் பிரகாரம் நாம் பிரயோகித்திட வேண்டும்.
தவறும் பட்சத்தில் மனிதன் தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் அளவுக்கு ஒரு பாரதூரமான நிலைக்கு அவன் தள்ளப்படுவான் என்பதனையும் நாம் கருத்திற்கொள்ள வேண்டும்.
யா அல்லாஹ்! நீ எமக்கு சத்தியத்தை சத்தியமாகக் காண்பித்து அதை பின்பற்றும் பாக்கியத்தையும் அசத்தியத்தை அசத்தியமாக காண்பித்து அதிலிருந்து விலகி நடக்கும் பாக்கியத்தையும் தந்தருள்வாயாக!