உலகை உலுக்கிவிடும் ஏதாவதொரு நிகழ்வு நடைபெறும் போது முஸ்லிம்களில் சிலர் இதோ மஹ்தியின் வருகை நெருங்கிவிட்டது மறுமை நாள் வந்தவிட்டது என ஒரு புரளியைக் கிளப்பிவிடுவது வழமை.
அண்மையில் ஏற்பட்ட துருக்கி, ஸிரிய பூமியதிர்ச்சியிலும் அவ்வாறே நடைபெற்றது. ஆனால் ஆச்சரியம் என்னவெனில் கோவிட் 19 கொரொனா வைரஸ் நோய்ப்பரவலின் போதும் இதே கருத்துக்கள் பகிரப்பட்டு அவைகள் அனைத்தும் பொய்யென நிரூபினமாகி சற்று நிலமை சுமூகமாகி சில காலத்தினுள் மீண்டும் சூடுபிடித்திருப்பதுதான்.
மறுமை வந்துவிட்டது, மஹ்தியின் வருகை நெருங்கிவிட்டது என்ற பிரச்சாரம் இதுதான் வரலாற்றில் முதல்தடவையாக இடம்பெறுகின்றதா என்றால், இல்லை என்பதே மிகத் தெளிவான பதிலாகும்.
பொதுவாக அட்டூழியங்களும்அராஜகங்களும் தலைவிரித்தாடும் சந்தர்ப்பத்தில் அவற்றிலிருந்து நம்மை விடுவிக்க மஹ்தி வரமாட்டாரா என்ற அவாவில்தான் பெரும்பான்மையான மக்கள் இதனை நம்புகின்றனர்.
உண்மையில் நாம்தான் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அல்லாஹ்வின் உதவியுடன் முயற்சிக்க வேண்டும் என்ற எண்ணமும் ஆர்வமும் இதனால் இல்லாமல் சென்றுவிடுகின்றது. எனவே இவ்வாறான பிரச்சாரங்களுக்கு இஸ்லாமிய விரோத சக்திகள் ஆதரவளித்தாலும் ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லை. அவர்களே திட்டமிட்டு ஒருவரை மஹ்தியாக பிரகடனம் செய்து ஊடகப் பலத்தின் மூலம் மக்களை நம்ப வைக்கவும் வாய்ப்புண்டு.
போலி மஹ்திகள்
நபித்தோழர்கள் காலம் முதல் போலி மஹ்திகள் தோன்றி மறைந்து கொண்டிருப்பதை வரலாற்றைப் படிப்பவர்களால் இலகுவாகப் புரிந்துகொள்ள முடியும். ஆனால் நமது அறியாமையையும் மறதியையும் மூலதனமாகப் பயன்படுத்தியே இந்தப் போலிகள் சமூகத்தில் தற்காலத்தில் மக்களைக் குழப்புகின்றனர். அறிஞர்கள் இதில் சிக்குவது மிகவும் குறைவே.
2ம் நூற்றாண்டில் தோன்றி மறைந்த தாபிஉத்தாபிஈன்களில் ஒருவரான பெரும் அறிஞர் ஸுப்யானுஸ் ஸவ்ரி ரஹ் அவர்களிடம் ”மக்கள்அதிகமாக மஹ்தியின் வருகையைப் பற்றி பேசிக்கொள்கின்றனர், உங்கள் கருத்து என்ன?” என வினவப்பட்டபோது ”மக்களனைவரும் ஒன்றிணைந்து அவரை ஏற்கும் வரை அவர் உனது வாயிலைக் கடந்து சென்றாலும் அவரை நீ பொருட்படுத்தாதே” எனக் கூறினார்கள். நூல் ஸியரு அஃலாமிந் நுபளா
அவருடைய காலத்தில்தான் பரிசுத்த ஆன்மாவுடையவர் என்ற பட்டப்பெயருக்கு உரிமை கொண்டாடும் அளவுக்கு தனது வணக்கங்களால் மக்களைக் கவர்ந்த ஹஸன் ரழி அவர்களின் பேரனான முஹம்மத் இப்னு அப்தில்லாஹ் இப்னில் ஹஸன் என்பவர் அப்பாஸிகளுக்கெதிராக மதீனாவில் புரட்சி செய்து தானே நீதியை நிலைநாட்ட வந்த மஹ்தி என வாதிட்டார். அவரது நன்நடத்தையின் கவர்ச்சியினால் சில ஹதீஸ்கலை மேதாவிகள் கூட அவரை நம்பி ஏமாந்தனர். பின்னர் தனது தவறை உணர்ந்து இதற்குப் பின் யாரிடமும் நான் ஏமாறப்போவதில்லை எனக் கூறியதாக இமாம் தகபி அவர்கள் தனது ஸியரு அஃலாமின் நுபளா என்ற நூலில் பதிவுசெய்துள்ளார்கள்.
இதே போன்று 4ம் நூற்றாண்டில் உபைதுல்லாஹ் அல்கத்தாஹ் என்ற வழிகேடனும் 6ம் நூற்றாண்டில் இப்னு தொமர்த் என்பவனும் 14ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சூடான் நாட்டில் முஹம்மத் அஹ்மத் என்ற ஒரு ஸூபி மகானும் தற்காலத்தில் 1980களில் சவூதி அரேபியாவைச் சேர்ந்த முஹம்மத் அப்துல்லாஹ் அல்கஹ்தானி என்ற நபரும் தம்மை மஹ்தி என போலிப் பிரகடனம் செய்துள்ளதை வரலாற்றில் நம்மால் பார்க்க முடியும். கஹ்தானி என்பவன் மக்கா மஸ்ஜிதுல் ஹராமை சில நாட்கள் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இறுதியில் கொலை செய்யப்பட்டான்.
இவர்களின் வாதங்கள் போலியானவையே என்பதைக் காலவோட்டத்தில் எல்லோரும் பரிந்துகொண்டாலும் அறிஞர்கள் குறித்த நேரத்திலே புரிந்துகொண்டு அவர்களின் வாதங்களை மறுத்தே வந்துள்ளனர். இறுதியில் அறிஞர்களின் நிலைப்பாடே சரியென்பது எல்லோருக்கும் தெளிவாகியது. எனவேதான் இன்றும் நாம் இது போன்ற சந்தர்ப்பங்களின் போது சர்வதேச ரீதியாக மூத்த அறிஞர்கள் என்ன நிலைப்பாட்டை எடுக்கின்றனர் என்பதை அவதானித்து நிதானமாக செயற்பட வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு முடிவுகளை எடுத்துவிட்டு பின்னர் கைசேதப்படக்கூடாது. சில வேளை ஆரம்பத்தில் அறியாமையினால் இக்குழப்பத்தில் சிக்கினாலும் தனது சுயகௌரவம் கெட்டுவிடக் கூடாது என்பதற்காகவேனும் குறித்த வழிகேட்டை தொடர்ந்து ஆதரிக்கவும் நியாயங்கள் கூறவும் நிர்ப்பந்திக்கப்படலாம். ஏனெனில் வழிகேடுகள் சானிலே ஆரம்பித்து மைல்கணக்கில் வளர்வதே இயல்பாகும். எனவே ஆரம்பத்தில் சுதாரித்துக்கொள்வதே அறிவுடைமையாகும்.
அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
-அப்துல்லாஹ் உவைஸ் மீஸானி