தொழுகையில் சுத்ரா கடமையா?

بــــــــــــــــســـــم الله الرحـــــــمــــن الرحـــــــــيــم

الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده اما بعد

கேள்வி :

தொழுகையில் சுத்ரா கடமையா?

பதில் :

ஆம். தொழுகையில் சுத்ரா வைப்பது கடமையாகும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சுத்ரா இல்லாமல் தொழுவதைத் தடுத்துள்ளார்கள்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்,

لا تصلوا إلا إلى سترة - رواه ابن خزيمة والحاكم والبيهقي

நீங்கள் சுத்ராவை நோக்கியே தவிர தொழ வேண்டாம்.

(இப்னு ஹுஸைமா, ஹாகிம், பைஹகி)

இந்த ஹதீஸ், சுத்ரா இல்லாமல் தொழ வேண்டாம் என்பதை வலியுருத்திக் கூறுவதன் அடிப்படையில் சுத்ரா வைத்துத் தொழுவது கடமையாகும்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தொழுகையில், சுத்ராவுக்கு நெருக்கமாக நிற்பார்கள். நபிகளாருக்கும், அவரது சுத்ராவுக்கும் இடையில் மூன்று முழம் அளவுக்கு இடைவெளி இருக்கும். அன்னார் சுஜுது செய்யும் இடத்துக்கும், சுத்ராவுக்கும் இடையில் ஒரு ஆடு செல்லும் அளவுக்கு இடைவெளி இருக்கும்.

(முஸ்னத் அஹ்மத், நஸாஈ, புஹாரி, முஸ்லிம், பைஹகி, அபூ தாவூத்)

மேலும் பின்வருமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

لا تصلوا إلا إلى سترة ، ولا تدع أحدا يمر بين يديك ، فإن أبى فقاتله ، فإن معه القرين

நீங்கள் சுத்ராவை நோக்கியே தவிர தொழ வேண்டாம். எவரும் உங்களைத் தாண்டிச் செல்வதற்கு விட வேண்டாம். (அதாவது, சுத்ராவுக்கும் உங்களுக்கும் இடையில் தாண்டிச் செல்ல விட வேண்டாம்). அவ்வாறு தாண்டிச் செல்பவரோடு நீங்கள் போராடுங்கள். ஏனென்றால் அவருடன் (ஷைத்தான் தோழராக) அமைந்திருக்கிறான்.

(இப்னு ஹுஸைமா)

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒரு விடயத்தை செய்யுமாறு ஏவினால், அதனைச் செய்வது கடமை என்பதாகும்.

உஸுலுல் பிக்ஹில் உள்ள ஓர் அடிப்படைக்கு இணங்க

'ஒரு ஏவல் வந்துவிட்டால் அது கடமை என்ற நிலையை பரிபூரணமாக்கிவடும், அதனை இரத்துச் செய்யும் மற்றுமொரு அறிவிப்பு வராத பட்சத்தில்!'
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் ஏவல் வந்ததன் பின்னால், அதனை ரத்துச் செய்வதற்கு அல் குர்ஆனிலோ, சுன்னாவிலோ மற்றுமொரு அறிவிப்பு வர வேண்டும். அதுவரை, ஏவல் என்பது கடமையாக நிலைநாட்டப்படும்.

எனவே நபிகளாரின் ஏவலின் அடிப்படையில், தொழுகையில் சுத்ரா வைப்பது கடமையாகும்.

(இது பற்றி விரிவாகக் காண்பதற்கு - ஷெய்க் நாஸிருத்தீன் அல் அல்பானி றஹிமஹுல்லாஹ் அவர்களின் - ஸபதுஸ் ஸலாத் அந் நபி - என்ற நூலைப் பார்க்கலாம்)

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
أحدث أقدم