بسم الله الرحمن الرحيم
இவ்வுலகில் நன்மை செய்பவர்களுக்கு அல்லாஹ் சுவனத்தைத் தயார் செய்து வைத்திருக்கின்றான். அந்த சுவனத்தைப் பற்றி அல்குர்ஆனில் பல இடங்களில் அவன் நன்மாராயம் கூறியிருக்கின்றான். அதேபோன்று இவ்வுலகில் தீமை செய்வோருக்கு அல்லாஹ் நரகத்தைத் தயார்செய்து வைத்திருக்கின்றான். மேலும், இந்நரகத்தைப் பயந்து கொள்ளுமாறும் அது விடயத்தில் எச்சரிக்கையாக இருக்குமாறும் அல்லாஹ் அல்குர்ஆனில் பல இடங்களில் கூறியிருக்கின்றான். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'விசுவாசம் கொண்டவர்களே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதன் எரிபொருட்கள் மனிதர்களும் கற்களுமேயாகும். அதிலே கடும்சித்தமுடைய வானவர்கள் இருப்பார்கள். அல்லாஹ் அவர்களுக்கு ஏவியவற்றில் அவர்கள் அவனுக்கு மாறுசெய்யமாட்டார்கள். அவர்கள் ஏவப்படுவதை செய்வார்கள்.” (அத்தஹ்ரீம்: 6)
இவ்வசனத்தில் நரகத்தைப் பயந்து கொள்ளுமாறு அல்லாஹ் எச்சரிக்கை விடுத்திருக்கின்றான். ஒரு மனிதனை நரகிற்கு இட்டுச்செல்லும் பாவகாரியங்களைத் தவிர்ந்து நடக்குமாறு அல்லாஹ்வும் அவனது தூதரும் கட்டளை பிறப்பித்திருக்கின்றார்கள். அல்குர்ஆனும் அஸ்ஸுன்னாவும் அதிகமான இடங்களில் நரகவாசிகளின் பண்புகளை இனம்காட்டியிருக்கின்றன.
நரகின்பால் இட்டுச்செல்லக்கூடிய பண்புகளில் ஒரு பண்பே பொய்யானவற்றைப் பேசுவதாகும். இன்று எமது முஸ்லிம்கள் பொய் பேசுவதின் விபரீதத்தை அறியாததின் காரணமாக அல்லது அறிந்தும் சிந்தனை பெறாததின் காரணமாக அதிகமாகப் பொய் பேசக்கூடியவர்களாக இருக்கின்றார்கள். பொய் பேசுவது பெரும்பாவமாகக் கருதப்படுகின்றது என்று இப்னுஹஜர், தஹபீ ரஹிமஹுமல்லாஹ் போன்ற இமாம்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள். இதனை அறியாத பலர் இந்தப் பொய்யை மக்களுக்கு மத்தியில் பேசிக்கொண்டிருக்கின்றார்கள்.
இன்று பல முஸ்லிம்கள் சிறுவர்களுக்கு பொய்யான கதைகளைக் கூறுகின்றார்கள், மனிதர்களை சிரிக்கவைக்கப் பொய் கூறுகின்றார்கள், சிறுவர்களை தூங்கவைப்பதற்கும் சாப்பிடவைப்பதற்கும் தாய்மார்கள் பொய் கூறுகின்றார்கள், வியாபாரத்தில் ஈடுபடும் சகோதரர்கள் அவர்களது வியாபாரத்தை வெற்றிகரமாக அமைப்பதற்குப் பொய் கூறுகின்றார்கள், மார்க்க அறிஞர்கள் மீது அவதூறையும் பொய்யையும் கூறுகின்றார்கள், தன்னுடைய குற்றம் கண்டு பிடிக்கப்பட்டால் அதிலிருந்து தப்புவதற்காகப் பொய் கூறுகின்றார்கள், பொய்யானவற்றைக் கூறிப் பிச்சை எடுக்கக்கூடியவர்களாக இருக்கின்றார்கள், இவ்வாறே தினம்தோறும் பொய்யானவற்றைப் பேசிப் பாவத்தை சம்பாதிக்கக் கூடியவர்களாக எமது முஸ்லிம் சகோதர சகோதரிகள் வாழ்க்கையை கடத்துகின்றார்கள்.
பொய் பேசுவதின் விளைவுகள்
பொய் பேசுவதால் ஏற்படும் விளைவுகளை இங்கு நான் கூறுவதன் மூலம் பொய் என்பது மிகப்பயங்கரமான குற்றம் என்பதை அனைவராலும் விளங்கிக் கொள்ள முடியும்.
சில மனிதர்கள் தம் காதில் விழக்கூடிய அனைத்தையும் பிறருக்கு எத்திவைப்பவர்களாக இருக்கின்றார்கள். தன் காதில் எட்டக்கூடிய அனைத்தையும் பிறருக்குக் கூறுவது பொய்யனுடைய மிகப்பெரிய அடையாளம் என்பதைப் பின்வரும் நபிமொழி எமக்கு உணர்த்துகின்றது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'ஒரு மனிதன் தான் செவிமடுப்பதையெல்லாம் பேசுவது அவன் பொய்யன் என்பதற்குப் போதுமானதாகும்.” (முஸ்லிம்)
யார் தனது காதில் விழக்கூடியவற்றை உறுதிசெய்து கொள்ளாமல் சரியா? தவறா? என்பதை ஆராயாமல் பிறருக்கு எத்திவைக்கின்றாரோ அவன் ஒரு பொய்யன் என்பதற்கு அது பிரதான அடையாளம் என்பதை இந்த ஹதீஸ் எமக்கு உணர்த்துகின்றது.
பொய் பேசுவது ஒரு மனிதனை நரகிற்கு இட்டுச்செல்லும் ஒரு பெரும்பாவம் என்பதனைப் பின்வரும் நபிமொழி எங்களுக்கு அழகாகக் கற்றுத்தருகின்றது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'நிச்சயமாகப் பொய் என்பது பாவங்களின் பால் வழிகாட்டும், நிச்சயமாகப் பாவங்கள் நரகின் பால் வழிகாட்டும்.” (புஹாரீ, முஸ்லிம்)
பொய் பேசுவது பல பாவங்களுக்கு வழிவகுக்கும் ஒரு மோசமான செயல் என்பதையும் அந்த மோசமான செயல் ஒரு மனிதனை நரகிற்கு இட்டுச்செல்லும் என்பதையும் இந்த ஹதீஸ் கூறுகின்றது. எனவே, பொய் பேசுவது நரகிற்கு இட்டுச்செல்லும் மிகப்பெரும் பாவமாகும் என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
பொய் பேசுபவர்களிடம் உண்மையான ஈமான் இல்லை என்பதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது. நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டிருக்கின்றாரோ அவர் நல்லதைக் கூறட்டும் அல்லது வாய்மூடி இருக்கட்டும்.” (புஹாரீ, முஸ்லிம்)
பொய் என்பது மோசமான வார்த்தை என்பதில் சந்தேகமில்லை. யாரெல்லாம் நல்ல வார்த்தைகளைப் பேசாமல் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றார்களோ அவர்கள் உண்மையான முறையில் அல்லாஹ்வையும் மறுமைநாளையும் ஈமான் கொண்டவர்களல்லர் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது. எனவே, பொய் பேசுவது ஈமான் கொண்டவர்களின் அடையாளமல்ல என்பதை இந்த ஹதீஸிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம்.
பொய் பேசுவதை நயவஞ்சகர்களுடைய அடையாளமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இனம் காட்டியிருக்கின்றார்கள். அவர்கள் கூறுகின்றார்கள்: 'நயவஞ்சகனுடைய அடையாளம் மூன்றாகும். அவன் பேசினால் பொய் பேசுவான், அவன் வாக்களித்தால் மாறுசெய்வான், அவன் நம்பப்பட்டால் மோசடி செய்வான்.” (புஹாரீ, முஸ்லிம்)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொய் பேசுவதை நயவஞ்சகனுடைய அடையாளமாக இச்செய்தியிலே கூறியிருக்கின்றார்கள். யார் பொய் பேசக்கூடியவராக இருக்கின்றாரோ அவரிடத்தில் நயவஞ்சகனுடைய ஓர் அடையாளம் காணப்படுகின்றது என்பதை இந்த ஹதீஸ் எமக்குக் கற்றுத்தருகின்றது.
முஸ்லிம்களில் இன்னும் சிலர் தமது உறவினர்களை அல்லது நண்பர்களை சிரிப்பூட்டுவதற்காக வேண்டிப் பொய் பேசக்கூடியவர்களாக இருக்கின்றார்கள். இது குறித்து வரக்கூடிய எச்சரிக்கையை நாம் பின்வரும் ஹதீஸிலிருந்து புரிந்து கொள்ளலாம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'ஒரு கூட்டத்தினரை சிரிப்பூட்டுவதற்காக வேண்டி பொய் பேசக்கூடியவனுக்கு 'வய்ல்” எனும் நரகம் உண்டாகட்டும். அவனுக்கு 'வய்ல்” எனும் நரகம் உண்டாகட்டும், 'வய்ல்” எனும் நரகம் உண்டாகட்டும்.” (ஸஹீஹு அபீதாவூத்)
விளையாட்டாக நாம் எம்மை அறியாமலேயே பலரை சிரிப்பூட்டுவதற்காக வேண்டி பொய் பேசுகின்றோம். ஆனால், இந்த ஹதீஸ் எங்களை இது விடயத்தில் கடுமையாக எச்சரித்திருக்கின்றது. எனவே, நாம் நகைச்சுவையாகப் பேசும் போது பொய்யான வார்த்தைகள் எமது நாவுகளிலிருந்து வெளிப்படாமல் இருப்பது அவசியமாகும். இது விடயத்தில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
இன்னும் பலர் தமது வியாபாரத்தின் போது பொய் பேசக்கூடியவர்களாக இருக்கின்றார்கள். பொருட்களை விற்பனை செய்யும் போது விற்பனைக்குத் தகுதியற்ற பொருட்களை சிறந்த பொருளாகக் காண்பித்து பொய்கூறி விற்பனை செய்யக்கூடியவர்கள் எமது சமூகத்தில் அதிகமாகக் காணப்படுகின்றனர். உடைந்த பொருட்களை உடையாததாகவும், அழுகிய மரக்கறி மற்றும் பழவகைகளை சிறந்ததாகவும், பழைய பொருட்களை புதியவைகளாகவும் ஏமாற்றி பொய்கூறி விற்பனை செய்பவர்கள் மலிந்து காணப்படுகின்றனர். இவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதற்கான காரணம் அவர்களுடைய வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்பட வேண்டும் என்ற நோக்கமேயாகும். ஆனால், பொய் கூறப்படுகின்ற, ஏமாற்றப்படுகின்ற வியாபாரத்தில் அல்லாஹ்வுடைய அபிவிருத்தி கிடைக்காது என்பதனைப் பின்வரும் செய்தி எமக்குத் தெளிவாக எத்திவைக்கின்றது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'வாங்கக் கூடியவருக்கும் விற்பனை செய்பவருக்கும் அவர்கள் பிரிந்து செல்லாமல் இருக்கும் வரை தெரிவுச் சுதந்திரம் இருக்கின்றது. அவர்கள் இருவரும் உண்மை கூறி (வியாபாரத்தில் உள்ள குறைகளை) தெளிவுபடுத்தினால் அவர்கள் இருவருடைய அந்த வியாபாரத்தில் அபிவிருத்தி அளிக்கப்படும். அவர்கள் இருவரும் பொய் கூறி (வியாபாரத்தில் உள்ள குறைகளை) மறைத்தால் அவர்கள் இருவருடைய அந்த வியாபாரத்தின் அபிவிருத்தி அழிக்கப்படும்.” (முஸ்லிம்)
ஏமாற்றம் செய்து பொய்கூறி வியாபாரம் செய்தால் அதில் அபிவிருத்தி இருக்காது, மாறாக விற்பனை செய்யப்படுகின்ற பொருட்களில் உள்ள குறைகளை வியாபாரி தெளிவுபடுத்தினால் இன்னும், கொடுக்கின்ற பணத்தில் உள்ள குறைகளை வாங்குபவர் தெளிவுபடுத்தினாலே அந்த அபிவிருத்தியை இருவரும் அவர்களுடைய வியாபாரத்தில் கண்டு கொள்வார்கள் என்பதை இந்த ஹதீஸ் எமக்குப் பாடமாகப் புகட்டுகின்றது.
எனவே, பொய் என்ற இந்த மோசமான பண்பு எம்மனைவரிடமிருந்தும் கலையப்பட வேண்டும். இல்லையெனில் பல எச்சரிக்கைளுக்கும் தண்டனைகளுக்கும் நாம் ஆளாகுவோம் என்பதைப் பல செய்திகள் எமக்கு உணர்த்துகின்றன. எமது நாவுகளைப் பொய் பேசுவதைவிட்டும் பாதுகாப்பது எமது பொறுப்பாக இருந்து கொண்டிருக்கின்றது. அல்லாஹ் எம்மனைவரையும் அவனுடைய எச்சரிக்கையிலிருந்தும் தண்டனைகளிலிருந்தும் பாதுகாப்பானாக!
- அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்