உலகில் மனிதன் வாழும்போது அவனது உறுப்புக்களை மறைப்பதற்கு ஆடைகளை சாதாரணமாக அமைத்துத்தந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அந்த ஆடைகளில் ஹராம் எவை? ஹலால் எவை? என சமூகத்திற்கு தெளிவுபடுத்தி மக்களை எப்பொழுதும் நரக நெருப்பிலிருந்து பாதுகாக்க அயராது பாடுபட்ட அருமைத் தூதர் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர் ஹலாலாக்கியவைகளை ஹலாலாக்கியும், ஹராமாக்கியவைகளை ஹராமாக்கியும் வாழ்ந்த ஸஹாபாக்கள் அனைவரின் மீதும் கருணையும் சாந்தியும் உண்டாகட்டும்.
அல்லாஹ் எமக்கு அருட்கொடையாக அளித்த உணவு, குடிபானம், ஆடை போன்றவைகள் மனித வாழ்க்கையின் அத்தியவசியத் தேவைகளாகக் காணப்படுகின்றன. ஆகவே, அவைகளை எமக்களித்த அல்லாஹ்வுக்கு நாம் எப்பொழுதும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
இவ்வாறு இருக்க, மார்க்கத்தில் அல்லாஹ் குடிபானங்கள், உணவுகள், ஆடைகள் போன்றவற்றில் சிலதை ஹராமாக்கியுள்ளான் என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அதிகமானவர்களுக்கு உணவுகளிலும் குடிபானங்களிலும் ஹராமாக்கப்பட்டவைகள் தெரிந்திருக்கும். குறிப்பாக பன்றி இறைச்சி, மதுபானம் போன்றவற்றின் சட்டம் ஹராம் என்பது அறிந்த விடயமே. ஆனால், ஆடைகளில் எது ஹராமாக்கப்பட்டுள்ளது என்பதை பலரும் அறியாதவர்களாக இருக்கின்றார்கள். சிலர் அறிந்தும் கவனமற்றவர்களா இருக்கின்றார்கள்.
ஆடைகளில் ஹராமாக்கப்பட்ட ஒரு விடயமே ஆண்கள் கரண்டைக் காலுக்குக் கீழ் ஆடையணிவதாகும். தெளிவாகவே இது ஹராம் என்பதை பல ஹதீஸ்கள் அறிவிக்கின்றன.
ஆனால், பன்றி இறைச்சி மற்றும் மதுபானம் ஆகியவைகள் ஹராம் எனப் பேசிக்கொள்பவர்கள் ஹராமான இந்த விடயத்தை மாத்திரம் தடுத்து நடக்காமை கவலைக்குரிய விடயமாகும். ஹராம் என்றால் எல்லாம் ஹராமே. ஹதீஸ்களிலிருந்து சாதகமானவற்றை மாத்திரம் பின்பற்றி தனக்குப் பாதகாகமானவைகளை விட்டுவிடுவது ஒரு முஃமினுக்கு அழகல்ல.
இக்கட்டுரையில் நான் கரண்டைக் காலின் கீழ் தொங்குமாறு ஆடையணிவது ஹராம் என்பது குறித்து இரண்டு அறிஞர்களின் கருத்துக்களை நுழைத்துள்ளேன். அக்கருத்துக்களைப் போதுமெனக் கருதியே அவ்விருவருடைய கருத்துக்களுடன் இக்கட்டுரையை நான் சுருக்கிக் கொண்டேன்.
ஆகவே, குர்ஆனையும் சுன்னாவையும் முழுமையாகப் பின்பற்றுபவர்களாக நாம் மாற வேண்டும். அதற்கு அல்லாஹுத்தஆலா எம்மனைவருக்கும் அருள்புரிவானாக!
அஷ்ஷெய்ஹ் முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்:
ஆடையைக் கரண்டையின் கீழ் தொங்கவிடுவதன் மூலம் பெருமை நாடப்பட்டால் அவருடைய தண்டனை மறுமை நாளில் அவரை அல்லாஹ் பார்க்கமாட்டான், அவருடன் பேசமாட்டான், அவரைத் தூய்மைப்படுத்தவுமாட்டான். அவருக்கு நோவினை தரும் வேதனையும் உண்டு. ஆனால், இதன் மூலம் பெருமை நாடப்படாவிட்டால் அவருடைய தண்டனை கரண்டையின் கீழ் இறங்கியதை அல்லாஹ் நரகில் இறக்குவான். ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: மூவர் உள்ளனர். மறுமை நாளில் அல்லாஹ் அவர்களுடன் பேசமாட்டான், அவர்களைப் பார்க்கமாட்டான், அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான், அவர்களுக்கு நோவினை தரும் வேதனை உண்டு. அவர்கள் யாரெனில் கரண்டைக்குக் கீழ் ஆடையணிபவர், செய்த நன்மையைச் சொல்லிகாட்டுபவர், பொய்ச்சத்தியம் செய்து தன் பொருளை விற்பனை செய்பவர் ஆகியோர்களாவார்கள்.
- முஸ்லிம்: 106
மேலும், அவர்கள் கூறினார்கள்: யார் பெருமைக்காகத் தன் ஆடையை இழுத்துச் செல்கிறாரோ மறுமை நாளில் அல்லாஹ் அவரைப் பார்க்கமாட்டான்.
- புஹாரீ: 5783, முஸ்லிம்: 2085
இந்த ஹதீஸ் யார் தன் ஆடையை பெருமைக்காக இழுத்துச் செல்கிறாரோ அவருடைய விடயத்தில் குறிப்பாகிறது. ஆனால், யார் பெருமையை நாடவில்லையோ அவர்கள் விடயத்தில் புஹாரியிலே அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் பின்வருமாறு ஒரு ஹதீஸ் இடம்பெற்றுள்ளது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஆடையில் கரண்டைக்குக் கீழ் இறங்கியது நரகத்திலாகும்.
- புஹாரீ: 5787
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் பெருமைக்கு என்ற வார்த்தையைக் குறிப்பாக்கவில்லை.
முன்சென்ற ஹதீஸை அடிப்படையாக வைத்து பெருமையைக் கொண்டு அதைக் குறிப்பாக்க முடியாது. ஏனெனில், அபூஸஈத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: முஃமினின் ஆடை முன்னம்காலின் நடுப்பகுதி வரையாகும். அதற்கும் கரண்டைக்காலுக்கும் மத்தியில் அது இருந்தால் குற்றமில்லை. எது கரண்டையின் கீழ் இறங்குகின்றதோ அது நரகத்திலாகும். யார் தன் ஆடையை பெருமைக்காக இழுத்துச் செல்கிறாரோ அவரை அல்லாஹ் மறுமையில் பார்க்கமாட்டான்.
- முஅத்தா: 2:914,1631 அஹ்மத்: 3:5,44,97 அபூதாவூத்: 4093 நஸாஈ: 9714-9717 இப்னுமாஜா: 3573 இப்னு ஹிப்பான்: 5446, 5447, 5450
மேலும், பெருமைக்கு அணிதல், பெருமையின்றி அணிதல் ஆகிய இரு செயல்களும் வேறுபடுகின்றன. சட்டமும் காரணமும் முரண்படும்போது பொதுவாக வந்த ஹதீஸைக் குறிப்பாக்குவது தடையாகும். ஏனெனில், அதனடிப்படையில் வைத்துப் பார்த்தால் முரண்பாடு சேர்ந்துவிடும்.
யார் அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய ஹதீஸை வைத்து ஆகும் என்பதற்கு ஆதாரம் பிடிக்கிறாரோ அவருக்கு நாம் கூறுவது என்னவெனில் உமக்கு அதிலே இரண்டு முறைகளின்படி எந்த ஆதாரமும் இல்லை.
முதல் முறையாவது, அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நான் கவனமாக இல்லாவிட்டால் எனது ஆடையின் ஒரு பக்கம் கீழே தொங்கிவிடுகின்றது என்று தான் கூறினார்கள்.
- புஹாரீ: 5784
அவர் அவராகவே பெருமைக்குத் தொங்கவிடவில்லை. மாறாக, அதுவே தொங்கியது. அத்துடன் அவரும் அது விடயத்தில் கவனமாகவே இருந்தார்கள். கரண்டைக் காலுக்குக் கீழ் அணிபவர்கள் தான் பெருமையை நாடவில்லையென்றே கருதுகின்றார்கள். அவர்களின் ஆடையை நாட்டம் கொண்டே தொங்கவிடுகின்றார்கள். அவர்களுக்கு நாம் கூறுவது என்னவெனில் பெருமையுடைய நாட்டம் இன்றி கரண்டையின் கீழ் உங்கள் ஆடைகளை நீங்கள் இறக்கினால் நரகத்தைக்கொண்டு இறங்கிய அளவின்படிக்கு வேதனை செய்யப்படுவீர்கள். பெருமைக்காக உங்கள் ஆடையை இழுத்தால் இதைவிடப் பெரிய ஒன்றின் மூலம் நீங்கள் வேதனை செய்யப்படுவீர்கள். அல்லாஹ் மறுமையில் உங்களோடு பேசமாட்டான், உங்களைப் பார்க்கமாட்டான், உங்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். உங்களுக்கு நோவினை தரும் வேதனையும் உண்டு.
இரண்டாவது வழிமுறையாவது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரைப் பரிசுத்தப்படுத்தினார்கள். இதைப் பெருமைக்காக நீங்கள் செய்யக்கூடியவரல்ல என அவருக்கு சான்றும் வழங்கினார்கள். இவர்களில் யாராவது ஒருவர் இப்பரிசுத்தத்தையும் சான்றையும் பெற்றவர்களா? ஆனால் ஷைத்தானோ மனிதர்கள் செய்கின்றவைகளை அவர்களுக்கு தூய்மையானதாக ஆக்குவதற்கு குர்ஆன், சுன்னா ஆதாரங்களில் விளங்கிக்கொள்ள முடியாத ஆதாரத்தைப் பின்பற்றும் வாசலை அவர்களுக்கு திறந்து கொடுக்கின்றான். நேரான பாதைக்குத் தான் நாடியவர்களை அல்லாஹ் நேர்வழி காட்டுகின்றான். அல்லாஹ் எங்களுக்கும் உங்களுக்கும் நேர்வழியைத்தர வேண்டும் என நான் பிரார்த்திக்கின்றேன்.
- அறபியில்: பதாவா உலமாஇ பலதில் ஹராம், பாடம்: ஒழுக்கங்கள் சம்பந்தப்பட்ட பத்வாக்கள், பிரிவு: ஆடை அலங்காரம், பக்கம்: 1545, 1546, பத்வா இலக்கம்: 43
அஷ்ஷெய்ஹ் பின் பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் பின்வருமாறு ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
பெருமைக்கோ அல்லது பெருமையின்றியோ ஆடையைத் தொங்கவிடுவதின் சட்டம் என்ன? ஒரு மனிதன் சிறியவனாக இருக்கும்போது தன் குடும்பத்தின் வற்புறுத்தலால் அல்லது வழமையின்படி அவன் இதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டால் அதன் சட்டம் என்ன?
அதற்கவர்கள் பின்வருமாறு பதிலளிக்கின்றார்கள்:
ஆண்களைப் பொருத்தளவில் அதனுடைய சட்டம் ஹராமாகும். ஏனெனில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஆடையில் கரண்டையின் கீழ் இறங்கியது நரகத்திலாகும்.
- புஹாரீ: 5787
அபூதர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: மூவர் உள்ளனர்;. மறுமையில் அல்லாஹ் அவர்களுடன் பேசமாட்டான், அவர்களைப் பார்க்கமாட்டான், அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான், அவர்களுக்கு நோவினை தரும் வேதனை உண்டு. அவர்கள் யாரெனில் கொடுத்த தர்மத்தை சொல்லிக்காட்டுபவர், கரண்டைக்குக் கீழ் ஆடையணிபவர், பொய்ச்சத்தியம் செய்து தன் பொருளை விற்பனை செய்பவர்.
இந்த இரண்டு ஹதீஸ்களும், இக்கருத்தையுடைய ஏனைய ஹதீஸ்களும் யார் பெருமைக்காக அல்லது வேறு காரணங்களுக்காக கரண்டையின் கீழ் அணிகிறாரோ யாவரையும் உள்ளடக்கும். ஏனெனில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொதுப்படையாகவே கூறியுள்ளார்கள், குறிப்பாக்கவில்லை. கரண்டையின் கீழ் அணிவது பெருமைக்காக இருந்தால் பாவம் பெரிதாகவும் தண்டனை கடுமையானதாகவும் இருக்கும். ஏனெனில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: யார் தன் ஆடையை பெருமைக்காக இழுத்துச் செல்கிறாரோ மறுமையில் அவரை அல்லாஹ் பார்க்கமாட்டான்.
- புஹாரீ: 3665, முஸ்லிம்: 2085
கரண்டைக்காலின் கீழ் அணிவது தடை என்பது பெருமையின் நாட்டத்தை வைத்தே குறிப்பாக்கப்பட்டுள்ளது என்று எண்ணிவிடக் கூடாது. மாற்றமாக பெருமையின் நாட்டம் குறித்த ஆடையை அணியும் போது இல்லாவிடினும் அச்செயற்பாடு பெருமையை அடிப்படையாகக் கொண்டதே என்பதைப் பின்வரும் ஹதீஸ் உணர்த்தி நிற்கின்றது.
ஆடையைக் கரண்டையின் கீழ் தொங்கவிடுவதை நான் உமக்கு எச்சரிக்கின்றேன். ஏனெனில், அது பெருமையைச் சார்ந்ததாகும்.
- அபூதாவூத்: 4084, நஸாஈ: 9691-9693
நபியவர்கள் கரண்டைக்காலின் கீழ் அணிவது பூராகவே பெருமையைச் சார்ந்ததாக ஆக்கியுள்ளார்கள். ஏனெனில், பெரும்பாலாக அத்தகைய ஆடைகள் அவ்வாறேயின்றி அணியப்படுவதில்லை. யார் பெருமைக்கு கரண்டையின் கீழ் அணியவில்லையோ அவருடைய செயல் அதற்கு சாதனமாக அமைகிறது. சாதனங்களுக்கு அவைகளின் நோக்கங்களுடைய சட்டம் கொடுக்கப்படும் என்பது அடிப்படை. மேலும், அதிலே வீண்விரயமும் உண்டு. அவருடைய ஆடை நஜீஸிலும் அழுக்குகளிலும் தொடுவதுண்டு. இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களைத் தொட்டும் பின்வருமாறு ஒரு செய்தி வந்துள்ளது: அவர் ஆடை தரையில் தொடும் ஒரு வாலிபனைக் கண்டபோது உன் ஆடையை உயர்த்து, அது உன் இறைவனுக்கு மிகப்பயந்ததாகவும் உன் ஆடைக்கு மிகத் தூய்மையானதாகவும் இருக்கும் என அவருக்குக் கூறினார்கள்.
- புஹாரீ: 3700
அல்லாஹ்வின் தூதரே! என்னுடைய ஆடை நான் கவனமாக இருந்தாலே தவிர தொங்கிவிடுகின்றது என அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: நீங்கள் அதைப் பெருமைக்காகச் செய்பவராக இல்லை என அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கூறியதின் நாட்டம் என்னவெனில்: யார் தன் ஆடை தொங்கும்போது அதை அவர் உயர்த்த கவனமெடுக்கின்றாரோ அவர் பெருமைக்காக தன் ஆடையை இழுப்பவர்களில் ஒருவராக கணிக்கப்படமாட்டார் என்பதேயாகும். ஏனெனில், அவர் அதைக் கரண்டைக் காலின் கீழ் தொங்கவிடவில்லை. மாறாக அது அவரையும் மீறி தொங்கிவிடுகின்றது. ஆகவே, அதை அவர் உயர்த்தி அதில் கவனமெடுக்கிறார். இது அனுமதிக்கப்பட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், யார் அவைகளை வேண்டுமென்றே தொங்கவிடுகின்றாரோ அது கனமான கம்பளியாக அல்லது சிறிய காட்சட்டையாக அல்லது வேட்டியாக அல்லது நீண்ட ஆடையாக இருந்தாலும் தண்டனைக்குள் நுழையக்கூடியவரே. அவர் தன் ஆடையைக் கரண்டையின் கீழ் தொங்கவிடுவதற்கு அனுமதிக்கப்பட்டவரல்ல. ஏனெனில், கரண்டையின் கீழ் அணிவதைத் தடை செய்யும் ஹதீஸ்கள் அவைகளின் மொழி, கருத்து, நாட்டங்களை வைத்து இந்த விடயத்தை பொதிந்துகொள்ளும். ஆகவே, ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கரண்டையின் கீழ் ஆடையணிவதில் எச்சரிக்கையாக இருப்பது கடமையாகும். ஸஹீஹான ஹதீஸ்களை நடைமுறைப்படுத்தவும் அல்லாஹ்வின் கோபத்தைவிட்டும், தண்டனையைவிட்டும் எச்சரிக்கையாக இருந்து கொள்ளவும் இது விடயத்தில் அல்லாஹ்வைப் பயந்து, ஒருவனுடைய ஆடை கரண்டையின் கீழ் இறங்காமலிருப்பது கடமையாகும்.
- அறபியில்: அஷ்ஷெய்ஹ் அப்துல் அஸீஸ் இப்னு அப்துல்லாஹ் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ்
- தமிழாக்கம்: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்