மகாஸிதுஷ் ஷரீஆ - ஷரீஆவின் இலக்குகள்

தவறாகப் புரியப்பட்ட மகாஸித் கலை:

மகாஸிதுஷ் ஷரீஆ என்பது மார்க்க சட்டங்களை காலத்திற்கேற்ப மாற்றுவதற்காக அல்ல. காலம் எப்படி மாறினாலும் சட்டத்தை உறுதியாக கடைபிடிப்பதற்கே. ஏனெனில் ஒரு சட்டத்தின் பின்னால் உள்ள இலக்குகளைப் புரிந்துகொள்ளும் மனிதன் எவ்வளவு தடைகள் ஏற்பட்டாலும் அதனை பின்பற்றுவதனால் உண்டாகும் சிறந்த பின்விளைவுகளைப் புரிந்துள்ளதனால் அதனை நடைமுறைப்படுத்த பின்வாங்கமாட்டான்.

அவ்வாறின்றி வெறும் ஷரீஆவின் இலக்குகளை வைத்து மார்க்கத்தீர்ப்பு வழங்க முடியுமென்றிருந்தால் குறித்த இலக்குகளை மாத்திரம் அறிந்துகொள்வதே போதுமானது. கிளைச் சட்டங்களையோ தனித்தனி ஆதாரங்களையோ தேட வேண்டிய அவசியம் இல்லாமல் சென்றுவிடும்.

உதாரணமாக இசை பற்றிய இஸ்லாமிய நிலைப்பாடு என்ன? என ஒருவர் கேட்டால் மகாஸிதுஷ் ஷரீஆவை மாத்திரம் வைத்துக்கொண்டு யாரும் பதில் கூறுவதில்லை. மாறாக இசை சம்பந்தமாக குர்ஆன் ஹதீஸில் என்ன இடம்பெற்றுள்ளது என்பதை ஆய்வு செய்துதான் பதில் கூறவேண்டும். மகாஸிதுகள்தான் சட்டத்தை தீர்மானிக்கும் என்றிருந்தால் வேறு ஆதாரங்களை ஆய்வு செய்வதில் என்னதான புண்ணியம் உண்டு.

இதனால் மகாஸிதுக் கலையின் முன்னோடியான இமாம் ஷாதிபி அவர்கள் மகாஸித் கலையை விரிவாக முன்வைத்த தனது முவாபகாத் எனும் நூலில் இந்த நூலை எல்லோரும் படிப்பது பொருத்தமல்ல. மாறாக மார்க்கக் கல்வியில் பாண்டித்தியம் பெற்றோரே இதனைப் படிப்பதற்குத் தகுதியானவர்கள். ஏனையவர்கள் இதனைப் படிப்பதற்கு குழப்பத்திற்கே வழிவகுக்கும் எனக் கூறியுள்ளார்கள்.

இன்றைய மகாஸிதிகளின் நடவடிக்கைகளைப் பார்க்கும் போது இமாம் ஷாதிபியின் எதிர்வுகூறல் நூற்றுக்கு நூறு நிறைவேறியதாகவே  எண்ணத்தோன்றுகின்றது. இமாம் அவர்கள் முன்வைத்த மகாஸித் கோட்பாடுகளில் மிக முக்கியமானதுதான் மகாஸித் என்ற பெயரில் கிளைச்சட்டங்களை மாற்றக்கூடாது என்பதாகும். ஒரு மகாஸிதுடன் ஒரு கிளைச் சட்டம் முரண்படுவது போல் தோன்றினால் அச்சட்டத்தைப் புறக்கணித்து விட்டு மகாஸிதைப் நடைமுறைப்படுத்தாமல் குறித்த மக்ஸதிலிருந்து அச்சட்டம் விதிவிலக்குப் பெற்றது என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும் என்நு மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள். 

ஆனால் இன்றைய நிலையோ தலைகீழாக உள்ளதுதான் கவலைக்குரிய விடயமாகும்.

மகாஸித் கலை முன்னோடி இமாம் ஷாதிபிக்கு முரண்படும் தற்கால சில மகாஸிதிகள்:

இன்று பெரும்பாலும் தமிழுலகில் மகாஸித் பிரச்சாரங்களில் ஈடுபடுவோரில் பெரும்பாலோர் எனக்குத் தெரிந்த வகையில் பித்அத்களை அந்நிய கலாச்சார ஊடுருவல்களைப் பெரிதுபடுத்துவதில்லை என்பது மாத்திரமின்றி அவற்றை விமர்சிப்போரையும் ஓரக்கண்கொண்டு பார்க்கின்றனர். இன்னுமொரு சாரார் மீலாத் விழா பிறந்த தினக் கொண்டாட்டங்கள் அந்நிய பண்டிகைகளுக்கு வாழ்த்துக்கூறுதல் போன்ற சில தவறான நிகழ்வுகளை ஆதரித்தும் பிரச்சாரம் செய்தும் வருகின்றனர். இவற்றை எதிர்ப்போரை மகாஸித் தெரியாதவர்கள் வாக்கியவாதிகள் என எள்ளி நகையாடுகின்றனர்.

ஆனால் இவர்கள் மதிக்கும் இமாம் ஷாதிபி அவர்கள் இவர்கள் யாரை விமர்சிக்கின்றனரோ அவர்களின் நிலைப்பாட்டிலே இருந்துள்ளார்கள். இதனால்தான் தமது சமூகத்தில் பெரும் தொல்லைகளுக்கு ஆளாகினார்கள். பெரிய அங்கீகாரத்தை அந்த மக்களிடம் பெற முடியவில்லை. 

குறிப்பாக தொழுகைக்குப் பின் கூட்டு துஆ விடயத்தில் பெரும் எதிர்ப்பை அவர்கள் சந்தித்தார்கள். இன்று இதனை பித்அத் எனக் கூறுவோருக்கு என்னென்ன பட்டங்கள் வழங்கப்பட்டனவோ அவை அவர்களுக்கும் வழங்கப்பட்டன. இவற்றை இமாமவர்கள் பித்அத்களைத் தெளிவுபடுத்துவதற்கென்று தனியாகத் தான் தொகுத்த அல்இஃதிஸாம் எனும் நூலில் மிக அருமையாக தெளிவுபடுத்தியுள்ளார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக இமாமவர்களின் இந்த நூலைப் பற்றி மகாஸித் போசும் பலர் பேசுவதாகத் தெரியவில்லை.  

அடுத்து இங்கு நான் குறிப்பிடும் மகாஸிதிகள் நபித்தோழர்கள் மற்றும் இமாம்களின் கருத்துக்களை அவர்களுடைய காலத்திற்குரியவை தற்போது நாம் அவற்றைப் புனர்நிர்மானம் செய்து காலத்திற்கேற்ற புதிய கருத்துக்களை வெளியிட வேண்டுமெனக் கூறுவார்கள். ஆனால் இமாம் ஷாதிபியோ நபித்தோழர்களின் கருத்துக்கு மாற்றமாக நமது கருத்தை முற்படுத்தக் கூடாது என்பதை மிகவும் உறுதியாகப் பிரச்சாரம் செய்தவராகக் கருதப்படுகின்றார்கள்.

அதிசயமான விடயம் என்னவென்றால் இன்றைய சில மகாஸிதிகளின் வாதம் தவறானது என்பதை மகாஸித் பற்றிய தனது அல்முவாபகாத் என்ற நூலிலே பின்வருமாறு தெளிவுபடுத்தியுள்ளார்கள். 

”கருத்து வேற்றுமை அருள் என இவர்கள் வாதிடுகின்றனர். அது மாத்திரமின்றி இவ்வாறு வாதிடுவோர் சில வேளை பிரபலமான அல்லது ஆதாரத்துடன் உடன்படும் அல்லது ஆய்வாளர்களிடம் பலமான அல்லது அதிகமான முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்ட கருத்தை ஏற்றுக்கொள்வோரைப் பார்த்து, விசாலமானதை இறுக்கமாக்கிவிட்டீர்கள், 
மக்களை சங்கடத்தில் ஆக்கிவிட்டீர்கள் மார்க்கத்தில் சங்கடம் இல்லை என்பது போன்ற வாதங்களை முன்வைக்கின்றனர். இவ்வாறு கூறுவது மிகத் தவறாகும். ஷரீஆ வழங்கப்பட்ட நோக்கத்தை அறியாமையாகும்.” அல்முவாபகாத் :5/94 

மேற்கூறிய இக்கூற்றை இமாம் ஷாதிபீ அவர்கள் கூறியதாகக் குறிப்பிடாமலிருந்திருந்தால் 
இது வாக்கியவாதிகளின் வாதம், சிந்தனை மழுங்கிய ஸலபிகளின் வாதம், மகாஸிதுஷ் ஷரீஆ பற்றிய அறிவற்றவர்களின் வாதம் என்றெல்லாம் பட்டங்கள் குவிந்திருக்கும். 

மகாஸிதிகளின் வாதங்களில் ஒன்றுதான் இமாம் ஷாபிஈ அவர்கள் கால இடத்திற்கு ஏற்ப தமது தீர்ப்புக்களை வழங்கியுள்ளார்கள். அதனால்தான் அவர்களுக்கு பழைய கருத்து புதிய கருத்து என காணப்படுகின்றது. எனவே நாமும் காலத்திற்கேற்ப மகாஸித்களின் அடிப்படையில் சட்டங்களில் மாற்றங்களைக் கொண்டுவரலாம் என்பதாகும். 

இது மிகத்தவறான வாதமாகும். ஏனெனில் இமாம் ஷாபிஈ அவர்கள் நடைமுறை அழுத்தங்களுக்குட்பட்டு தனது தீர்ப்புக்களை மாற்றிக்கொள்ளவில்லை. மாறாக தமக்கு புதிததாகக் கிடைத்த முன்பு அறியாமலிருந்த ஆதாரங்கள் கிடைத்தவுடன்தான் மாற்றிக்கொண்டார்கள். இதற்கு அவர்களது கூற்றே ஆதாரமாகும். 

“சில தீர்ப்புக்களைத் தவிர ஏனைய எனது பழைய கருத்துக்களை அறிவிப்பதை நான் அனுமதிக்கமாட்டேன். ” என்பதே அந்த கூற்றாகும். 

காலசூழ்நிலைக்குட்பட்டு தனது கருத்தை மாற்றியவர் ஒரு போதும் இவ்வாறு கூறுவதற்கு வாய்ப்பில்லை. மாறாக எனது முதல் கருத்து ஈராக் பிரதேசத்துக்கு உரியது புதிய கருத்து எகிப்துக்கு உரியது என்றுதான் கூறியிருப்பார்.

எனவே தயவு செய்து ஆய்வுகளிலும் உரைகளிலும் நம்பகத்தன்மையைக் கடைபிடிக்குமாறு மிகப்பணிவன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.

மகாஸித் எனும் பெயரில் மபாஸித்:

குர்ஆன் ஹதீஸ் வகுத்த மகாஸித்களின் அடிப்படையில் நவீன பிரச்சினைகளுக்கான தீர்வுகள் முன்வைக்கப்படுவதே தற்காலத்தின் தேவை. 

ஆனால் கவலைக்குரிய விடயம், சில சர்வதேச மற்றும் இலங்கை ஆய்வாளர்கள் நவீன சித்தாந்தங்களுக்கேற்ற மகாஸித்களை உருவாக்கும் முன்முடிவோடு, குர்ஆன் ஹதீஸை அணுகி, இஸ்லாத்துக்கு சேவை செய்கிறோம் என்ற பெயரில் அவப்பெயரை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றனர். 

இவர்களது வரம்புமீறல் எந்தளவுக்குச் சென்றுள்ளது என்றால், இதுவரைக்கும் தோன்றிய அனைத்து அறிஞர்களும் கூறிய மகாஸித்கள், சட்டதிட்டங்கள், நவீன சித்தாந்தங்களுக்கும் நடைமுறைக்கும் பொருந்தவில்லையென்பதால் அவைகள் அனைத்தும் தவறானவை அவற்றை மீள் பரிசீலனை செய்யவேண்டுமென வாய்க்கூசாமல் கூறுகின்றனர். அனைத்து அறிஞர்களும் இவர்களுக்கு மாற்றமான கருத்தில் உள்ளனர் என்பது எனது கூற்றல்ல. அவர்களேதான் அதனையும் கூறிக்கொண்டு அது தவறு எனவும் கூறுகின்றனர். 

ஆனால் இவர்கள்தான் நமது சமுதாயத்தின் சீர்திருத்தவாதிகள் என அறிமுகப்படுத்தப்படுவது அதைவிடப் பயங்கரமான செய்தியாகும்.

நவீன மகாஸிதிகளின் வீண் முயற்சிகள்:

உள்ஹிய்யா விடயத்தில் சில நவீன மகாஸிதிகள் விட்ட தவறை சுட்டிக்காட்டப்பட்டவுடன் சுட்டிக்காட்டியவர்களை பிற்போக்குவாதிகள், நவீன உலகைப் பற்றித் தெரியாதவர்கள் என சில சீடர்கள் சீறுகின்றனர். இன்னும் சிலர் சம்பந்தமற்ற வாதங்களை முன்வைக்கின்றனர். 

இனத்துவேசம் மற்றும் அந்நியர்களின் தவறான பிரச்சாரங்கள் என்பவையே, உள்ஹிய்யாவைப் பணமாகக் கொடுக்க வேண்டும் என்பதற்கு முக்கிய காரணி என்பதாகக் குறிப்பிடுகின்றனர். 

அந்நியர்களின் தவறான பிரச்சாரங்களுக்கு அஞ்சி மார்க்கத்தில் விட்டுக்கொடுப்புக்களை செய்வதற்கு ஆரம்பித்தால் குர்ஆன் ஹதீஸின் பல வசனங்களை நீக்க வேண்டியேற்படும். உதாரணமாக ஒவ்வொரு தொழுகையிலும் ஓதப்படும், யூத கிறிஸ்தவர்களை எச்சரித்து இடம்பெறும் ஸூரா பாதிஹாவின் இறுதி இரு வசனங்களையும் ஓதக் கூடாது அல்லது விளக்கக் கூடாது அல்லது அந்நியர்களைத் திருப்திப்படுத்தும் விளக்கத்தை வழங்க வேண்டியேற்படும்.

அது மாத்திரமன்றி ஒரு கருத்தை அந்நியர்கள் எதிர்க்கிறார்கள் என்றால் அதற்கு அறிவுபூர்வமான நியாயங்களைத் தெளிவுபடுத்தி, இஸ்லாத்தின் மகிமையைப் புரியவைப்பதே நமது கடமை. அதனை விட்டுவிட்டு இஸ்லாத்திற்கு நலவு செய்கிறோம் என்ற பெயரில், அந்நியர்களுக்கு திருப்தியேற்படும் விதத்தில் எங்காவது யாராவது கூறிய ஒரு கருத்தை வைத்து, குறிப்பிட்ட சட்டத்தை விட்டுக்கொடுப்பது, குளிக்கச் சென்று சேறு பூசியது போன்றாகும். ஏனெனில் அவர்கள் நம்மீது சுமத்திய “குர்பானிச் சட்டம் அநீதியே” என்ற குற்றச்சாட்டை நாமே ஏற்றுக்கொண்டவர்களாகிவிடுவோம். இஸ்லாத்தின் நற்பெயரைப் பாதுகாப்பதென்றால் குறிப்பிட்ட சட்டத்திற்கான அறிவியல் நியாயங்களைக் கூறவேண்டுமே அந்நியர்களுக்கு இன்னும் பொய்ன்ஸ்கள் வழங்கக்கூடாது. ஆரம்ப கட்டத்திலேயே பதிலீட்டைத் தேடிச் செல்லக் கூடாது. நாட்டில் மாடறுப்பதை உத்தியோகபூர்வமாகத் தடை செய்து எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது என்ற முடிவு வரும்போது பதிலீட்டை நோக்கிச் செல்வது ஓரளவு நியாயம் எனலாம்.

மற்றுமொரு வாதம்தான், போட்டோ எடுப்பதை ஒரு காலத்தில் ஹராம் என்றவர்கள் இன்று அதனை அங்கீகரித்துள்ளனர் என்ற வாதமாகும். அது போன்றே உள்ஹிய்யாவின் பெறுமதியை வழங்கலாம் என்பதை இன்று எதிர்ப்போர் நாளை ஆதரிக்க வாய்ப்புண்டு எனக் கூறுகின்றனர்.

ஆனால் இவ்வாதம் தவறாகும். நவீன பிரச்சினையில் இருவிதமான கருத்துக்கள் ஏற்படுவது சகஜமே. பேணுதலும் இறையச்சமும் உள்ளவர்கள் முதலில் தயக்கம் காட்டுவது இயல்பே. உதாரணமாக அல்குர்ஆனை ஒரு ஏட்டில் ஒன்று திரட்டவேண்டும் என உமர் ரழி அவர்கள், அபூபக்ர் ரழி அவர்களிடம் தெரிவித்ததும் நபியவர்கள் செய்யாததை நான் எவ்வாறு செய்யலாம் என முதலில் பின்வாங்கினார்கள். எனெனில் அது நேரடி ஆதாரம் இல்லாத ஒரு நவீன பிரச்சினை. 

ஆனால் உள்ஹிய்யா என்பது நவீன பிரச்சினையல்ல. நபியவர்கள் காலத்தில் இருந்த ஒரு காரியமே. அது மாத்திரமின்றி இன்று இருக்கும் ஏழைகளை விட அன்று ஏழைகள் காணப்பட்டனர். சில போது உள்ஹிய்யாக் கொடுப்பவர்கள் மாமிசங்களைக் கூட சேமித்து வைத்துக்கொள்ள வேண்டாம் என உத்தரவிடும் அளவுக்கு ஏழ்மை ஏற்பட்டது. அப்பொழுது கூட நபியவர்கள் உள்ஹிய்யாவுக்கு பகரமாக பெறுமதியை வழங்குங்கள் என ஆர்வமூட்டவில்லை. உள்ஹிய்யா என்பது ஏழைகளுக்கு உதவுவதற்கு முன்னால், அல்லாஹ்வுக்குச் செய்யும் பிரத்யேக வணக்கமாகும். பெறுமதியைக் கொடுப்பது தர்மம் எனும் இன்னுமொரு வணக்கமாகும். இவ்விரண்டு நல்லமல்களும் நடைபெற வேண்டும் என்பதே அல்லாஹ்வின் எதிர்பார்ப்பாகும். நமது உலோபித்தனத்துக்கு இஸ்லாத்தில் உள்ள நல்லமல்களை ஏன் பலிக்கடாவாக்க வேண்டும்! சமூக நலனில் அக்கறையுள்ளோர் அல்லாஹ்வுக்கு கொடுக்க வேண்டிய உரிமைகளைக் கொடுத்துவிட்டு தமது மேலதிகமான சொத்துக்களில் இருந்து தர்மம் செய்ய வேண்டுமே தவிர சில வணக்கங்களைப் பாழாக்கிவிட்டு சமூக சேவை செய்ய வேண்டும் என்ற எந்தத் தேவையும் இல்லை.

நேரடி ஆதாரம் உள்ள ஒரு விடயத்தில் மனித கருத்தை முற்படுத்துவது மிகவும் பாரதூரமான ஒரு விடயமாகும். இதனால்தான் குர்ஆனை ஒன்று திரட்டும் ஆலோசனை வந்தபோது தயங்கிய அபூபக்ர் (ரழி) அவர்கள், உஸாமா (ரழி) அவர்களின் படையை நபியவர்களின் மரணத்தின் பின் அனுப்ப வேண்டாம் என பெரும்பான்மையானோர் ஆலோசனை கூறியும் அதனைக் கண்டுகொள்ளாமல் நபியவர்கள் இட்ட கட்டளையை செயற்படுத்தியே ஆகுவேன் எனக் கூறி இஸ்லாமிய மகாஸித்களை எவ்வாறு அணுகவேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக இருந்தார்கள்.

இது போன்றே நாமும் கூறுகிறோம். நேரடி ஆதாரம் உள்ள ஒன்றில் மனித கருத்துக்களுக்கு முன்னுரிமை வழங்காதீர்கள். நேரடி ஆதாரம் இல்லாத மாற்றுக்கருத்துக்கு வாய்ப்புள்ள விடயங்களில் நெகிழ்வுத்தனமையுடன் நடந்துகொள்ளுங்கள். இரண்டையும் ஒன்றோடொன்று குழப்பி தாங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்ப வேண்டாம்.

மீலாத் விழாவும் ரைஸுனியின் தவறான வாதமும்:

தற்கால பிரபல மகாஸித் கலை வல்லுனர் அஹ்மத் அர்ரய்ஸூனி மீலாத் விழாவைக் கொண்டாடுவதற்கு ஆதாரமாக அல்குர்ஆனின் அல்லாஹ்வின் நாட்களை அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள் முன்னோர்களின் சம்பவங்களைக் கூறுங்கள் என்ற வசனங்களை ஆதாரமாக முன்வைத்துள்ளதாக உஸ்தாத் மன்ஸூரின் பதிவொன்றின் மூலம் அறியக் கிடைத்தது.

மேலோட்டமாகப் பார்க்கும் போது இது சரிபோன்று தோன்றினாலும் குறித்த வசனத்தை நபியவர்களும் அவரது நபித்தோழர்கள் மற்றும் இமாம்கள் இவ்வாறு புரியவில்லை என்பதைக் காணும் போது எவ்வளவு தவறானதொரு விளக்கம் இது என்பது புரிந்துவிடும்.

இவரது வாதப்படி நபி நேரடிக் கட்டளையிடப்பட்ட மூஸா அலை மற்றும் முஹம்மத் ஸல் அவர்கள் இந்த நபிமார்களின் பிறந்த தினம் வெற்றி பெற்ற தினம் என்பவற்றை வருடாந்தம் ஞாபகமூட்டி வந்திருக்க வேண்டும். 

அப்படி எதாவது நடந்ததா என்றால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. அவ்வாறு நடந்திருந்தால் நபியவர்கள் பிறந்த தினத்தில் கருத்து வேற்றுமையே ஏற்பட்டிருக்காது. இந்த ரபீஉல் அவ்வல் மாதம் இஸ்லாமிய பொற்காலத்தில் எவ்வித ஆரவாரமுமின்றி சர்வசாதாரணமாகவே கழிந்தது. 

எனவே மீலாத் விழாவை ஒரு சமூக செயற்பாடாக இந்த ரபீஉல் அவ்வல் மாதத்தில் குறிப்பிட்டு செய்வதற்கு மேற்கூறிய வசனத்தில் எவ்வித  முகாந்திரமும் இல்லை. குறித்த வசனங்கள் அல்லாஹ்வின் நிஃமத், நிக்மத், முன்னோர்களின் வரலாறுகளை தேவையேற்படும் போதெல்லாம் ஞாபகமூட்டி மக்களை நல்வழிப்படுத்துவதைக் குறிக்குமே தவிர குறிப்பிட்ட ஒரு மாதத்தில் நபிமார்கள் பிறந்த தினத்தைக் கொண்டாடுவதை எவ்விதத்திலும் குறிக்காது. அப்படிக் குறிக்குமென்றிருந்தால் அதனை நபியவர்களும் இஸ்லாமிய பொற்காலத்தைச் சேர்ந்த இமாம்களும் அறிஞர்களும் புரிந்துகொள்ளாமல் சென்றுவிட்டனர் நபியவர்கள் தனக்குக் கூறப்பட்ட ஒரு பொறுப்பைத் தவறவிட்டார்கள் என்பது போன்ற பாரிய பாரதூரமான விபரீத கருத்துகளுக்கு வழிகோலும்.

நிகாப் / முகத்திரை:

முகத்திரை அணியும் அன்புச் சகோதரிகளே! சில புத்திஜீவிகள் எனக் கூறிக்கொள்வோரின் மாயஜால வார்த்தைகளுக்கு மயங்காதீர்கள். முன்னுரிமைப்படுத்தல், மகாஸித் என்றெல்லாம் அடியும் நுனியும் தெரியாமல் ஏதாவதொன்றைக் கூறி தமது கருத்தைத் திணிக்க முற்படுகின்றனர். 

உலகில் தோன்றிய முன்சென்ற அனைத்து அறிஞர்களில் எவருமே முகத்திரை அணிவதை விமர்சனம் செய்யவில்லை. இந்த நூற்றாண்டில் தோன்றிய நவீன பித்அத்களில் ஒன்றே இந்த முகத்திரை விமர்சனம். 

முகத்திரை அணிவோர் நபியவர்களின் மனைவிமாரையும் நபித்தோழிகளையுமே பின்பற்றுகின்றனர்.

முஸ்லிம் சமூகம் பல நூற்றாண்டுகளாக பல நாடுகளில் முகம் மூடும் வழமையையே கடைபிடித்தொழுகியது.

நவீன காலத்தில் 19ம் நூற்றாண்டில் ஆரம்பத்தில் பிரான்ஸில் சென்று தங்கிவிட்டு அதன் வளர்ச்சியைப் பார்த்துப் பிரமித்துப்போன எகிப்தைச் சேர்ந்த ரிபாஆ தஹ்தாவீ எனும் ஒரு முஸ்லிம் போதகராலும் அதே நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் எகிப்தில் மர்குஸ் பஹ்மீ மற்றும் தார்கீர் எனும் இரு கிறிஸ்தவர்களினால்தான் இந்த முகத்திரை முதலில் விமர்சனம் செய்யப்பட்டது. அந்நேரத்தில் அதற்கு மறுப்பாக பிரஞ்சு மொழியில் காஸிம் அமீன் எனும் எகிப்தைச் சேர்ந்தவர் ஒரு மறுப்பை வெளியிட்டார். ஆனால் எகிப்தில் மேற்கத்தைய கலாச்சாரத்தைப் பின்பற்றிக்கொண்டிருந்த நாஸ்லீ எனும் ஒரு இளவரசிக்கு இது கோபத்தை ஏற்படுத்தவே அவள் தனது நண்பரான முஹம்மத் அப்துஹூ என்பவரை தூண்டிவிட்டு அச்சுறுத்தி காஸிம் அமீனைத் தனது கருத்திலிருந்து வாபஸ் பெறச்செய்தாள். 

அதன்பின் காஸிம் அமீம் முஹம்மத் அப்துஹூவின் உதவியுடன் தஹ்ரீருல் மர்ஆ என்ற ஒரு நூலை வெளியிட்டார். அதில்தான் இந்த முகத்திரைக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டார். 

குறித்த நூலுக்கு அக்காலத்தில் வாழ்ந்த பல அறிஞர்களும் மறுப்புக்களை வெளியிட்டனர். 

உண்மையில் முகத்திரைக்கான விமர்சனம் ஆதாரபூர்வமாக அமையாமல் மேற்குலல மோகம் கொண்டோரைத் திருப்திப்படுத்துவதற்காகவே எழுதப்பட்டது என்பதற்கு மிகச் சிறந்த ஆதாரம்தான் குறித்த நூலைத் தொடர்ந்து ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு அவர் வெளியிட்ட அல்மர்அதுல் ஜதீதா எனும் நூலாகும். 

இந்த நூலில் தெட்டத் தெளிவாக முஸ்லிம் பெண்கள் மேற்குலகப் பெண்களைப் போல் மாற வேண்டும் என அழைப்புவிடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்தே எகிப்தில் ஒழுக்க வீழ்ச்சி ஆரம்பமாகியது என்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இவருடைய கண்டுபிடிப்பே முகத்திரை அரேபிய கலாச்சாரம், இஸ்லாத்துக்கு அப்பாற்பட்டது என்பதெல்லாம். 
இன்னும் சில மிருக வைத்தியர்களும் முகத்திரை ஹராம் என்பதாகக் கூறியுள்ளனர்.

கீழைத்தேயமும் காலனித்துவமும் சேர்ந்து உருவாக்கிய சித்தாந்தமே முகத்திரை வெறும் ஒரு கலாச்சாரம் என்ற வாதமாகும்.

அப்படியென்றால் அல்பானி மற்றும் சில உலமாக்கள் முகத்திரை வாஜிப் இல்லை எனக் கூறியுள்ளார்களே என சிலர் சிந்திக்கலாம்.

ஆம் அவர்கள் வாஜிப் இல்லை என்பதாகத்தான் கூறியுள்ளனர். நவீனவாதிகளைப் போல் அரேபிய கலாச்சாரம், இஸ்லாத்துக்கு அப்பாற்பட்டது என்றெல்லாம் கூறவில்லை. மாறாக அது அணிவது மார்க்கமே. அது சுன்னத் நன்மையான காரியம் என்றுதான் குறிப்பிட்டுள்ளார்கள். அவர்களுடைய குடும்பப் பெண்மனிகளும் முகத்திரை அணிபவர்களே.

நவீன மகாஸிதிகளும் மஸ்லஹா முர்ஸலாவும்:

தற்காலத்தில் தனிமனித சமூக நலன்களைக் கவனத்திற்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்படுதல் மற்றும் கண்டுபிடிப்புக்களைப் பயன்படுத்துதல் போன்றவற்றை ஆராயும் போது இஸ்லாம் தடைசெய்யாத நலன்கள் (மஸ்லஹா முர்ஸலா) என்ற அடிப்படையிலேதான் அவற்றை நாம் அணுகி தீர்ப்புக்களை வழங்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. 

இப்பாடத்தை அறிஞர்கள் விளக்கும் போது சில விடயங்களில் பயன்கள் இருந்தாலும் அதனை இஸ்லாம் கவனத்தில் கொள்ளாது அதன் மூலம் ஏற்படும் தீமையைக் கருத்திற்கொண்டு அதனைத்தடைசெய்து விடும். அதனை (மஸ்லஹா முல்ஙா مصلحة ملغاة) இரத்துச்செய்யப்பட்ட நலன் என அழைக்கப்படும். 

உதாரணமாக மதுபானம் சூது ஆகியவற்றைக் குறிப்பிடலாம். அவற்றைப் பற்றி அல்குர்ஆன் குறிப்பிடும் போது, அவ்விரண்டிலும் பெரும் தீமையும் மனிதர்களுக்கு பயன்களும் உண்டு எனக் கூறுகிறது. 

இவ்வசனம் நவீன மகாஸிதிகள் மிக அதிகமாக சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். இஸ்லாம் ஒரு விடயத்தைத் தடைசெய்தால் அதில் எவ்வித நலன்களும் இருக்கக்கூடாது என நாம் நினைக்கக் கூடாது. சில வேளை நலவுகள் இருந்தாலும் நம்மால் அறியமுடியாத அதன் பாரிய பின்விளைவுகளைக் கவனத்தில் கொண்டு அல்லாஹ் சில விடயங்களைத் தடைசெய்வான் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். எனவே இஸ்லாம் தடைசெய்த ஒன்றில் உள்ள சில நலன்களை வைத்து அனுமதிக்க முற்படுவது மிகப்பெரும் அறிவீனமும் வழிகேடுமாகும். 

ஆனால் நவீன மகாஸிதிகள் விடும் முக்கியமான தவறு, இரத்துச் செய்யப்பட்ட இந்நலனை மஸ்லஹா முர்ஸலா என்ற தடைசெய்யப்படாத நலனுடைய இடத்தில் வைத்து தீர்ப்பு வழங்குவதாகும். அதன் அடிப்படையில்தான் சில மாதங்களுக்கு முன் நடந்த மகாஸித் சம்பந்தமான நிகழ்வில் உரை நிகழ்த்தியவர் இசையுடன் கூடிய சிங்களவர்களிடம் பிரபல்யமான விருதுப்பாட்டை அரபுக் கல்லூரி மாணவர்களுக்கு முன்னிலையில் தனது மொபைலிலிருந்து இயக்கிக்காட்டி, இதன் மூலம் பல சாதகமான விளைவுகளை எற்படுத்த முடியுமாக இருக்கும் போது எவ்வாறு இதனைத் தடைசெய்யலாம் என கேள்வி எழுப்புகிறார். 

இதனால்தான், அறிஞர்கள் மகாஸிதுஷ் ஷரீஆவைப் பற்றி பேசும் போது மார்க்கத்தை ஆழமாகக் கற்ற அறிஞர்களால் மாத்திரமே இதனை நடைமுறைப்படுத்த முடியும் எனக்குறிப்பிட்டுள்ளனர்.  அரபு மொழயில் சில நூட்களை படித்தவர்களெல்லாம் இதனை அணுகியதன் பாரதூரமான விளைவே இது

அனைத்து சட்டப்பிரச்சனைகளும் ஆய்வுக்குட்பட்டவையா?

இன்று படித்தவர்கள் பாமரர்கள் என்ற வேறுபாடின்றி பலரும் கொண்டிருக்கும் தவறான நிலைப்பாடுகளில் ஒன்றுதான்

“அகீதாவில் ஏற்படும் கருத்துவேற்றுமை மாத்திரமே வழிகேடு. பிக்ஹில் ஏற்படும் கருத்து வேற்றுமைகள் சரி அல்லது பிழை என்ற நிலையிலே உள்ளவைகள். அவற்றில் நேர்வழி வழிகேடு உருவாக முடியாது, எனவே பிக்ஹ் ரீதியாக யார் என்ன கருத்தைக் கூறினாலும் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் சாதாரணமாகக் கடந்துசென்றுவிட வேண்டும்.” என்ற நிலைப்பாடாகும்.

மேற்கூறிய வாதம் மிகப் பெரும் தவறாகும். 

ஏனெனில், இவ்வாதத்தின்படி பின்வரும் விபரீத முடிவுகள் உருவாகும்.

1- குர்ஆனில் இடம்பெற்ற பிக்ஹ் சட்டங்களையும் ஒருவர் மறுக்கமுடியும்.

2- பிக்ஹ் சம்பந்தமான குர்ஆன் ஹதீஸின் வார்த்தைகளுக்கு எவ்வித பெறுமானமும் இல்லையென்றாகிவிடும்.

3- ஒருவர் மூன்று நேரம் தொழுவது மாத்திரமே கடமை, விபச்சாரம், மதுபானம், கொலை, கொள்ளை போன்றவை அனுமதிக்கப்பட்டது என்றால் அதனை யாரும் கண்டிக்க முடியாது.

4- தெளிவான கருத்தை வழங்கும் ஆதாரம் உள்ளபோது இஜ்திஹாத் செய்ய முடியாது என்ற பிக்ஹ் கலை அடிப்படை தகர்க்கப்படும்.

5- மஹ்ரமான பெண்களைத் திருமணம் செய்யலாம், ஒருவர் ஒரே நேரத்தில் ஒன்பது பெண்களை வைத்துக்கொள்ளலாம் என்றெல்லாம் கூறுவதை யாரும் தட்டிக்கேட்க முடியாது.

6- குர்ஆனின் நடைமுறையும் நபியவர்களின் செயலும் தவறு என்றாகிவிடும்.

குர்ஆனின் நடைமுறை:

நபியவர்கள் சில ஸஹாபாக்களுக்கு உஹத் மலையில் இருந்து எக்காரணம் கொண்டும் கீழே இறங்க வேண்டாம் எனக் கூறியிருந்தும், அவர்களில் சிலர் நபியவர்களின் கட்டளை யுத்தம் நடக்கும் நேரத்துக்கு மாத்திரமே என இஜ்திஹாத் செய்து இறங்கினர். 

இது அகீதா ரீதியான ஒரு விடயமல்ல. ஆனாலும் இதனை அல்குர்ஆன் பாவம் என்பதாகவே குறிப்பிடுகிறது.   3:152

நபியவர்களின் செயல்:

ஒரு முறை தலையில் காயமுற்ற நபித்தோழரொருவர் குளிப்புக் கடமையாகி தயம்மும் செய்ய அனுமதி உள்ளதா என தனது தோழர்களிடம் கேட்டார். அதற்கவர்கள் இல்லை அவசியம் குளித்தே ஆக வேண்டும் என்றனர். காயத்துடன் குளித்ததனால் இறந்துவிட்டார். நபியவர்களுக்கு இத்தகவல் கிடைத்தவுடன் இது பிக்ஹ் ரீதியான கருத்துவேறுபாடு எனக் கூறி கடந்து சென்றுவிடவில்லை. தவறுவிட்ட ஸஹாபாக்களை கடுமையாக கடிந்துகொண்டார்கள். அவர்களை அல்லாஹ் சபிப்பானாக என்றார்கள். ஆதாரம் அபூதாவூத்

மேற்கூறிய இரு நிகழ்வுகளும் பிக்ஹ் ரீதியான கருத்து வேற்றுமைகளும் சில வேளை கண்டத்திற்குரியவையே என்பதை தெள்ளத்தெளிவாக நிரூபித்துள்ளன. 

இதனால்தான் காலுறையின் மீது நீரினால் தடவுதல் போன்ற விடயங்களைக் கூட அகீதா நூல்களில் இடம்பெறச் செய்துள்ளனர். ஏனெனில் அதனை மறுப்பது வழிகெட்ட ஷீஆக்களின் அடையாளமாகும். 

இதே போன்று ஷீஆக்கள் ஒரு பெண்ணையும் அவளது சகோதரி மற்றும் சாச்சி மாமிமார்களை ஒரே நேரத்தில் மனைவியாக வைத்திருக்க முடியும் எனக் கூறுகின்றனர்.  இதனைத் தடை செய்யும் ஹதீஸ் குர்ஆனுக்கு முரண் எனக் கூறி மறுத்துள்ளனர். இக்கருத்தையும் நாம் சாதாரணமாகக் கடந்து செல்ல வேண்டுமா?
அல்லது அவர்களது முத்ஆ திருமணம் ஆகுமானது எனக் கூற வருகிறீர்களா?

இக்கருத்துக்கள் வழிகேடு என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது என நினைக்கின்றேன். இவைகள் வழிகேடு என்பதற்குக் காரணம் என்ன?

அதற்கான காரணம் தெளிவான பலமான ஆதாரங்கள் இருந்தும் இவர்கள் தமது மனோஇச்சைப்படி மார்க்க ஆதாரங்களை வளைத்து சட்டம் இயற்றியதே. 

நஸ் இருக்கும் போது மாற்றுக் கருத்து கூறியதே முக்கிய காரணம். 

குறிப்பாக ஒரு சட்டத்தில் அறிஞர்களது ஏகமனதான தீர்ப்பு இருந்தால் அது சம்பந்தமான ஆதாரம் நஸ் என்ற தரத்தையுடையதாக இருக்கும். இதற்கு மாற்றம் செய்யும் எவரும் கண்டத்திற்குரியவரே. 

பிரச்சினைகளை பிக்ஹ், அகீதா எனப் பிரித்து கண்டிக்கப்படுவதில்லை. குறித்த பிரச்சினை ஆய்வுக்குட்பட்டதா இல்லையா என்பதை வைத்து கண்டிப்பதும் கண்டிக்காமையும் தீர்மானிக்கப்படும். 

பலர் அனைத்து பிக்ஹ் சட்டங்களும் ஆய்வுக்குட்பட்டவையே எனப் புரிந்துள்ளனர். இவர்கள் சற்று சிந்தித்தால் கூட அது தவறு என்பதைப் புரிந்துகொள்ளலாம். எனெனில் நவீன இஸ்லாமிய சிந்தனைவாதிகள் கூட தொழுகையின் ரக்அத்களின் எண்ணிக்கையில் இஜ்திஹாத் செய்ய முடியாது என்பர். இது அவர்களது வாதமான ”பிக்ஹ் ரீதியான கருத்து வேற்றுமைகளைக் கண்டிக்கக் கூடாது” என்பதற்கு முரணாகும். ஏனெனில் ரக்அத்களின் எண்ணிக்கையும் பிக்ஹ் ரீதியானவையே.

பிக்ஹ் கிதாப்களில் உள்ள அனைத்துமே ஆய்வுக்குட்பட்டதல்ல. இதனால்தான் மகாஸித் கலையின் முன்னோடியான இமாம் ஷாதிபி ரஹ் அவர்கள் ”அறிஞர்களின் கருத்துக்களில் இஜ்திஹாத் என்ற அந்தஸ்தை இழந்த கருத்துக்களும் உண்டு” எனக் குறிப்பிட்டுள்ளார்கள். அவற்றுக்கு அக்வாலுஷ் ஷாத்தா எனப்படும். இவற்றையே இன்றைய நவீனவாதிகள் மகாஸித் எனும் பெயரில் தூக்கிப்பிடித்து மகாஸித் கலைக்கே அவப்பெயர் ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.

ஆச்சரியம் என்னவென்றால் யாரெல்லாம் இன்று கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுகிறது என கண்ணீர் வடிக்கிறார்களோ அவர்களில் பெரும்பாலோர் தமது உரைகளில், எழுத்துக்களில் குர்ஆன் சுன்னா பேசுவோரை ஒற்றுமையைக் குழைப்போர் என மறைமுகமாகவேனும் சுட்டிக்காட்டிச் செல்வதற்கு மறப்பதில்லை என்பதே. 

நவீன சிந்தனைவாதிகளின் வசம் பலமான ஊடகங்கள் இருப்பதனால்தான் தமது சிந்தனையாளர்களுக்கு ஏதாவது எதிர்ப்புக்கள் ஏற்படும் போது, அது கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது போலவும், ஏனையோருக்கு  நடந்தால் உஸூலுத் தஃவா தெரியாததனாலும் நாகரீகம் இன்மையினாலும் ஏற்பட்டது போலவும் சித்தரிக்கின்றனர். எனவே ஊடகங்களை நவீன சிந்தனை நீக்கம் செய்யவேண்டும்.

மீள்வாசிப்பு எனும் பித்னா:

இவ்வளவு காலமும் முஸ்லிம் சமூகம் குர்ஆன் சுன்னாவுக்கு என்ன விளக்கங்களை அறிந்துவைத்திருந்ததோ அவற்றையெல்லாம் கேள்விக்குட்படுத்தி அவற்றை வேறு விதத்தில் பொருட்கோடல் செய்வதற்கான முயற்சியே மீள்வாசிப்பு எனும் நவீன கோட்பாடாகும். 

இது மேற்குலகில் அவர்களில் இலக்கியப்படைப்புக்கள் மற்றும் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட முரண்பாடான பல்வேறு கருத்துக்களைத் தாங்கியுள்ள அவர்களின் புனித உரைகள் விடயத்தில் பிரயோகிக்கப்பட்ட ஒன்றாகும். 

அவர்களுக்கு பல காரணங்களுக்காக அவை தேவைப்பட்டிருக்கலாம். ஆனால் முஸ்லிம்களாகிய எமக்கு அது பொருத்தமுமில்லை. தேவையுமில்லை. ஏனெனில் இஸ்லாம் பாதுகாக்கப்பட்டது என்பதன் கருத்து அதன் வார்த்தைகள் மாத்திரமல்ல அதன் கருத்துக்களும்தான். 

அதன் வார்த்தைகளைப் பாதுகாப்பதற்குரிய கலைதான் உலூமுல் ஹதீஸ். அதன் விளக்கத்தைப் பாதுகாப்பதற்கான கலைதான் உஸூலுல் பிக்ஹ். 

முதல் கலையில் இமாம் புகாரி அவர்கள் நிபுணர் என்பதைப் போல் இரண்டாம் கலையில் இமாம் ஷாபிஈ அவர்களே தலைசிறந்த நிபுணராகத்  திகழ்ந்தார்கள்.

இதனைப் புரிந்துகொண்டால் ஏன் இந்த இரு அறிஞர்களையும் இலக்கு வைத்து தாக்குதல் நடாத்தப்படுகின்றது என்பதைப் புரியலாம். 

யார் தமது மார்க்கத்தில் தெளிவோடு இருக்க வேண்டும் என விரும்புகின்றாரோ அவர் இவ்விரு கலைகளையும் ஓரளவாவது அறிந்திருக்க வேண்டும். இல்லையெனில் இலகுவாக ஏமாற்றப்படும் வாய்ப்புண்டு. 

அல்லாஹு அஃலம்.

-அப்துல்லாஹ் உவைஸ் மீஸானி
Previous Post Next Post