அல் அகீதா அல் வாஸிதிய்யா - நூல்



ஆசிரியர்‌: ஷைகுல்‌ இஸ்லாம்‌ இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்)


தமிழில்‌: முப்தி அ. உமர்‌ ஷரீப்‌ காஸிமி

வெளியீடு: தாருல் ஹூதா



பொருளடக்கம்‌:

பதிப்புரை 

நூலாசிரியர்‌ அறிமுகம்‌

முன்னுரை

அடிப்படை விளக்கம்

அல்லாஹ்வின்‌ அழகிய பண்புகள்‌

அல்லாஹ்‌ ஒவ்வொன்றையும்‌ நன்கறிந்தவன்‌

அல்லாஹ்‌ மிக்க ஆற்றலுள்ளவன்‌;

அனைத்தையும்‌ கேட்பவன்‌; பார்ப்பவன்‌

அல்லாஹ்விற்கு ஆற்றலும்‌ நாட்டமும்‌ உண்டு...

அல்லாஹ்‌ நாடுகிறான்‌

அல்லாஹ்‌ மன்னிப்பவன்‌; சக்திமிக்கவன்‌;

கண்ணியமிக்கவன்‌; அனைத்தையும்‌ மிகைத்தவன்‌

வானங்கள்‌ பூமி மற்றும்‌ அகிலங்கள்‌ அனைத்தின்‌ அரசாட்சி அவனுக்கே உரியது 

அல்லாஹ்‌ அளவற்ற அருளாளன்‌; நிகரற்ற அன்புடையோன்‌ 

அல்லாஹ்தான்‌ உயிர்ப்பிக்கின்றான்‌; மரணிக்கச்‌ செய்கின்றான்‌ 

அல்லாஹ்‌ பேசும்‌ ஆற்றலுடையவன்‌

அல்லாஹ்வின்‌ கிதாபாகிய அல்குர்‌ஆன்‌ அவனது பேச்சாகும்‌

அல்குர்‌ஆன்‌ அல்லாஹ்வின்‌ புறத்திலிருந்து இறக்கப்பட்ட கிதாப்‌ (நூல்‌)

அல்லாஹ்விற்கு அழகிய பெயர்கள்‌ உண்டு; அவனுக்கு நிகரானவரும்‌ ஒப்பானவரும்‌ எவருமில்லை

அல்லாஹ்வின்‌ செயல்களைக்‌ குறிக்கும்‌ வசனங்கள்‌ மற்றும்‌ நபிமொழிகள்‌

அல்லாஹ்‌ கேட்கின்றான்‌; பார்க்கின்றான்‌ 

நல்லோர்களை நேசிக்கின்றான்

நல்லோர்களையும்‌ அவர்களுடைய நற்செயல்களையும்‌ பற்றி மகிழ்ச்சியும்‌ திருப்தியும்‌ அடைகின்றான்

அல்லாஹ்‌ தன்னை எதிர்ப்பவர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்கின்றான்‌

பாவத்தையும்‌ பாவிகளையும்‌ கோபிக்கின்றான்‌

அல்லாஹ்‌ வருவான்‌

ஒவ்வோர்‌ இரவும்‌ முதல்‌ வானத்திற்கு இறங்குகிறான்‌

அல்லாஹ்‌ மகிழ்ச்சி அடைகிறான்

அல்லாஹ்‌ சிரிக்கின்றான்‌

அல்லாஹ்‌ ஆச்சரியமடைகிறான்‌

அல்லாஹ்‌ நரகத்தின்‌ மீது தனது பாதத்தை வைப்பான்‌

அல்லாஹ்‌ பேசுவான்‌

அல்லாஹ்‌ நம்மிடம்‌ பேசுவான்‌

அல்லாஹ்வின்‌ 'தாத்‌தை’ (உள்ளமையை) குறிக்கும்‌ வசனங்கள்‌

அல்லாஹ்‌, சங்கைமிக்க முகமுடையவன்‌

அல்லாஹ்விற்கு இரு கைகள்‌ உண்டு

அல்லாஹ்விற்கு இரு கண்கள்‌ உண்டு

அல்லாஹ்‌ அர்ஷுக்கு மேல்‌ அவனுடைய கண்ணியத்திற்குத்‌ தக்கவாறு உயர்ந்து விட்டான்

அல்லாஹ்வுடைய “தாத்‌'-உள்ளமை

அல்லாஹ்‌ தன்னுடைய மகத்தான ஆற்றலால்‌ பிரபஞ்சத்தைச்‌ சூழ்ந்துள்ளான்‌

மிக அருகில்‌ இருக்கின்றான்‌; பதில்‌ அளிக்கின்றான்‌.

அல்லாஹ்வைப்‌ பார்ப்பது

அல்லாஹ்வின்‌ தன்மைகள்‌ நிறைவானவை; முழுமையானவை

கவனத்தில்‌ வைக்க வேண்டியவை

இறைமொழியிலோ, நபிமொழியிலோ முரண்பாடுகள்‌ எதுவுமில்லை.

மலக்குகள்‌ மீது நம்பிக்கை

மலக்குகள்‌ உண்டென நம்ப வேண்டும்‌...

மலக்குகளுக்குப்‌ பணிக்கப்பட்ட செயல்கள்

மலக்குகளின்‌ எண்ணிக்கை

இறைநூல்கள்‌ மீது நம்பிக்கை

ஒவ்வொரு ரஸூலுக்கும்‌ ஒரு கிதாப்‌

நாம்‌ அறிந்த கிதாபுகள்‌

முஹம்மது (ஸல்‌) அவர்களுக்குக்‌ குர்‌ஆன்‌

முந்தைய இறைநூல்களின்‌ நிலைமை

இறைத்தூதர்கள்‌ மீது நம்பிக்கை

மனிதர்களுக்காக அனுப்பப்பட்டனர்‌

நூஹ்‌ (அலை) அவர்களே முதல்‌ தூதர்‌

முஹம்மது (ஸல்‌) அவர்களது ஷரீஅத்‌ முழுமை பெற்றது

தூதர்கள்‌, மனித இனத்தவர்களே

தூதர்கள்‌ அனைவரும்‌ அல்லாஹ்வின்‌ அடிமைகளே

இறுதித்‌ தூதர்‌ முஹம்மது

மறுமை நாள்‌ மீது நம்பிக்கை

இஸ்ராஃபீல்‌ (அலை) 'சூர்‌' ஊதுவார்கள்

செயலேடுகள்‌ வெளிப்படுத்தப்படும்‌

விசாரணைக்காக முதல்‌ ஷஃபாஅத்‌

அல்லாஹ்‌ விசாரணை செய்வான்‌

கவ்ஸர்‌ தடாகத்தில்‌ நபி (ஸல்‌)

நரகத்தின்‌ மீது ஒரு பாலம்‌

மூன்று இடங்களில்‌ நபி (ஸல்‌) அவர்களின்‌ ஷஃபாஅத்‌

மறுமை நாளின்‌ அமளிகள்‌

'கப்ர்‌' - மண்ணறையில்‌ சோதனை

விதியின்‌ மீது நம்பிக்கை

விதியின்‌ இரு நிலைகள்‌

அல்லாஹ்வின்‌ நாட்டமும்‌ அடியானின்‌ சுயவிருப்பமும்

அடியான்‌ நிர்ப்பந்திக்கப்படுவதில்லை

அல்லாஹ்‌ தீங்கிழைப்பதில்லை

நம்பிக்கை (ஈமான்‌) என்பது சொல்‌, செயல்‌

நம்பிக்கை கொள்வதின்‌ பலன்கள்

நம்பிக்கையாளர்களிடம்‌ இருக்கக்‌ கூடாதவை

அல்‌ஃபிர்கத்துன்‌ நாஜியா - நேர்வழியும் பாதுகாப்பும்‌ பெற்ற ஒரே கூட்டம்‌

நபிவழியையும்‌ நபித்தோழர்களையும்‌ பின்பற்றுகிற நடுநிலையாளர்கள்‌

கண்ணியமிக்க ஸஹாபாக்கள்‌

அன்ஸாரிகளைவிட முஹாஜிர்களின்‌ சிறப்பு

நேர்வழி பெற்ற கலீஃபாக்கள்‌

நபி (ஸல்‌) அவர்களின்‌ குடும்பத்தாரை நேசிக்க வேண்டும்‌

நபி (ஸல்‌) அவர்களின்‌ மனைவிமார்கள்‌ நம்‌ தாய்மார்கள்‌ 

நபித்தோழர்களும்‌ அவர்களைப் பின்பற்றியவர்களுமே சிறந்தவர்கள்‌

தாருல்‌ ஹுதா (பதிப்பகம்) - ஓர்‌ அறிமுகம்‌ 




பதிப்புரை:

எல்லாப்‌ புகழும்‌ அல்லாஹ்‌ ஒருவனுக்கே! இறையருளும்‌ ஈடேற்றமும்‌ நபி முஹம்மது (ஸல்‌) அவர்களுக்கும்‌, அவர்களது குடும்பத்தார்‌, தோழர்கள்‌, நல்லோர்‌ அனைவருக்கும்‌ உண்டாகட்டும்‌.

இமாம்‌ இப்னு தைமிய்யாவின்‌ நூலுடன்‌ அதற்கு விரிவுரையாக அஷ்ஷைக்‌ உஸைமீன்‌ அவர்கள்‌ எழுதியிருக்கும்‌ பல விஷயங்கள்‌ இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

இமாம்‌ இப்னு தைமிய்யா (ரஹ்‌) அவர்கள்‌ கொள்கை சார்ந்த விஷயங்களில்‌ முற்றிலும்‌ குர்‌ஆனையும்‌, ஹதீஸையும்‌ அவற்றின்‌ வழி நடந்த நபித்தோழர்கள்‌, தாபியீன்கள்‌ கூற்றுகளையும்‌ பின்பற்றுபவர்களாக இருந்தார்கள்‌. அவற்றை பரப்புவதற்காகவே தங்களது வாழ்வைப்‌ பயன்படுத்தினார்கள்‌. அதற்காகப்‌ பல இன்னல்களையும்‌ சோதனைகளையும்‌ சந்தித்தார்கள்‌. சமுதாயத்தில்‌ ஊடுருவி இருந்த பல சீர்கேடுகளையும்‌ அனாசாரங்களையும்‌ தெளிவான ஆதாரங்களுடன்‌ அடையாளங்காட்டி எதிர்த்தார்கள்‌. அவர்களை விரும்பாத, அவர்களின்‌ சத்தியப்‌ பணியால்‌ பாதிப்புக்குள்ளான - மார்க்கத்தைக்‌ கொண்டு வயிற்றைக்‌ கழுவும்‌ சிலரோ அவர்கள்‌ மீது பல அவதூறுகளை அள்ளி வீசினர்‌: பொய்‌ பிரசாரங்கள்‌ செய்தனர்‌; இன்றும்‌ செய்து வருகின்றனர்‌.

“இப்னு தைமிய்யா (ரஹ்)‌ அவர்கள்‌ ஒருமுறை தமது ஜுமுஆ, உரையின்‌ போது அங்கிருந்தோரை நோக்கி 'அல்லாஹ்‌, அர்ஷின்‌ மீது எப்படி அமர்ந்தான்‌ தெரியுமா? என்று கூறி, 'இப்படித்தான்‌’ என்றவாறு மிம்பரின்‌ மீதே உட்கார்ந்து காட்டியதாகவும்‌, அதை உலகப்‌ பயணி இப்னு பதூதா பார்த்து தம்‌ பயண நூலில்‌ எழுதியிருப்பதாகவும்‌ சிலர்‌ கதை கட்டி வருகின்றனர்‌.”

அல்லாஹ்‌ பாதுகாக்கட்டும்‌! நிச்சயமாக இவர்களின்‌ பிரசாரம்‌ ஓர்‌ அபாண்டமான அவதூறாகும்‌. அல்லாஹ்வின்‌ உயர்‌ தன்மைகளைப்‌ பற்றிய இமாமவர்களின்‌ நிலைப்பாட்டிற்கு இந்த நூல்‌ ஆணித்தரமான அத்தாட்சி. அல்லாஹ்‌, தனது கண்ணியத்திற்கும்‌ மகத்துவத்திற்கும்‌ ஏற்ப அர்ஷின்‌ மீது உயர்ந்துவிட்டான்‌' என்ற குர்‌ஆனின்‌ சத்தியச்‌ செய்தியை அப்படியே இமாமவர்கள்‌ ஈமான்‌ கொண்டிருந்தார்கள்‌. அல்லாஹ்வின்‌ உயர்‌ தன்மைகளில்‌ தனது சுயக்கற்பனைகள்‌ எதையும்‌ இமாமவர்கள்‌ கூறவில்லை; அந்தத்‌ தன்மைகளுக்கு உதாரணங்களையும்‌ கூறவில்லை. அவதூறு பரப்புவோரின்‌ செவிளில்‌ அறைந்தாற்போல்‌ இந்நூலில்‌ உண்மைகள்‌ நிறைந்திருக்கின்றன.

குர்‌ஆன்‌ ஹதீஸை அணுகும்போது நமது கண்ணியமிக்க நபித்தோழர்கள்‌ அவற்றை அணுகியது போன்றே நாமும்‌ அணுக வேண்டும்‌. புதிதாக ஏற்டட்ட குழப்பங்களையும்‌, வதிகேடுகளையும்‌ முற்றிலும்‌ புறக்கணிக்க வேண்டும்‌.

இந்நூலில்‌ இமாம்‌ அவர்கள்‌ குறித்த ஓர்‌ அறிமுகமும்‌ இணைக்கப்பட்டுள்ளது. அவசியம்‌ அதையும்‌ படியுங்கள்‌. ஒரு நம்பிக்கையாளரிடம்‌ இருக்க வேண்டிய கொள்கைகளைத்‌ தக்க ஆதாரங்களுடன்‌ இந்நூல்‌ விவரிக்கின்றது.

இந்நூல்‌ குறித்த உங்கள்‌ மேலான கருத்துகளை வரவேற்கிறோம்‌. இந்நூலை வெளியிடுவதில்‌ எனக்கு உதவியாக இருந்த சகோதரர்‌ எம்‌. எஃப்‌. அலீ, DTBல்‌ உதவிய ஹைதர்‌ அலீ மற்றும்‌ தாருல்‌ ஹுதாவின்‌ மார்க்கப்‌ பணிகளில்‌ தங்களால்‌ முடிந்த அளவு பங்கு பெறும்‌ அனைவருக்கும்‌ அல்லாஹ்‌ அவனது அன்பையும்‌ அருளையும்‌ வழங்குவானாக ஆமீன்‌!

எல்லாப்‌ புகழும்‌ அல்லாஹ்விற்கே! அவன்‌ நம்‌ அனைவருக்கும்‌ நேர்வழி காட்டுவானாக! நம்‌ பாவங்களை மன்னிப்பானாக! ஆமீன்‌!

அ. உமர்‌ ஷரீஃப்‌,

(அல்குர்‌ஆன்‌ மற்றும்‌ நபிமொழிப்‌ பணியாளன்‌)

தாருல்‌ ஹுதா, சென்னை - 1.

 



நூலாசிரியர்‌ அறிமுக உரை:

வையகம்‌ போற்றும்‌ நல்லோர்களில்‌ அறிஞர்‌ ஷைகுல்‌ இஸ்லாம்‌ இமாம்‌ இப்னு தைமிய்யா (ரஹ்‌) அவர்கள்‌ குறிப்பிடத்தக்கவர்‌ ஆவார்கள்‌. அஹ்மது என்ற இயற்பெயரையும்‌, தகீயுத்தீன்‌ என்ற பட்டப்‌ பெயரையும்‌, அபுல்‌ அப்பாஸ்‌ என்ற புனைப்பெயரையும்‌ பெற்றிருந்த இமாமவர்கள்‌, இஸ்லாமிய உலகுக்கு (இப்னு தைமிய்யா) தைமிய்யாவின்‌ மகன்‌ என்ற பெயரால்‌ அறிமுகப்பட்டார்கள்‌.

ஹன்பலி மத்ஹபின்‌ முக்கியமான இமாமாக கருதப்படுகின்ற அறிஞர்‌ அப்துல்‌ ஹலீம்‌ இப்னு அப்துஸ்ஸலாம்‌ என்பவர்களின்‌ புதல்வராகப்‌ பிறந்த இமாமவர்களுக்கு, தைமிய்யாவின்‌ புதல்வர்‌ என்ற பெயர்‌ வரக்‌ காரணம்‌ என்னவென்பதை‌ பற்றி வரலாற்றாசிரியர்கள்‌ பலவாறாகக்‌ குறிப்பிடுகிறார்கள்‌.

அவர்களின்‌ பெரிய பாட்டனாரின்‌ தாயாருக்கு “தைமிய்யா” என்று பெயர்‌ வைக்கப்பட்டிருந்ததென்றும்‌; இம்மூதாட்டியார்‌ ஞானம்‌ மிக்க பெண்மணியாகவும்‌, நல்ல சொற்பொழிவாற்றும்‌ திறமையுள்ளவர்களாகவும்‌ அன்று விளங்கியதனால்‌ இப்பெண்மணியின்‌ வம்சத்தில்‌ தோன்றிய இமாமவர்களை இப்னு தைமிய்யா! (தைமிய்யாவின்)‌ மகன்‌ என்று அக்கால மக்கள்‌ அழைத்து வந்தார்கள்‌; இதனால்‌ இப்பெயரைக்‌ கொண்டே இமாமவர்கள்‌ இஸ்லாமிய உலகுக்கும்‌ அறிமுகப்பட்டார்கள்‌ என்று 'பவாத்துல்‌ வஃபிய்யாத்‌' என்ற நூலில்‌ குறிப்பிடப்படுகிறது. இப்னு தைமிய்யா என்று அழைக்கப்படுவதற்கு வேறு பல காரணங்களும்‌ வந்திருக்கின்றன. விரிவஞ்சி அவற்றையெல்லாம்‌ இங்கு குறிப்பிடவில்லை,

இமாமவர்கள்‌ அரேபியத்‌ தீபகற்பத்தின்‌ “ஹர்ரான்‌” என்ற ஊரில்‌ ஹிஜ்ரி 661-ம்‌ ஆண்டு ரபீஉல்‌ அவ்வல்‌ மாதம்‌ 10-ம்‌ நாள்‌ திங்கள்‌ கிழமையன்று பிறந்தார்கள்‌. தம்‌ நாட்டை தத்தாரியர்கள்‌ ஆக்கிரமித்த போது, இமாமவர்களின்‌ தந்தையான அப்துல்‌ ஹலீம்‌ அவர்கள்‌ தம்‌ புதல்வர்‌ இமாமவர்களையும்‌ அவர்கள்‌ தம்‌ இரு சகோதரர்களையும்‌ கூட்டிக்‌ கொண்டு ஹிஜ்ரி 667-ம்‌ ஆண்டு திமிஷ்கில்‌ (டமாஸ்கஸில்)‌ குடியேறினார்கள்‌. இமாமவர்கள்‌ தம்‌ வாழ்வின்‌ முழுப்பகுதியைக்‌ கல்விக்காகவே அர்ப்பணித்தார்கள்‌. தம்‌ தந்தையான இமாம்‌ அப்துல்‌ ஹலீம்‌ அவர்களிடமிருந்தும்‌, அக்காலத்திலுள்ள பிரபலமான கல்வி படைத்த மேதைகளிடமிருந்தும்‌ மகான்களிடமிருந்துமெல்லாம்‌ பல துறைகளிலும்‌ கல்வி கற்று எல்லாக்‌ கலையிலும்‌ தேர்ச்சி பெற்று விளங்கினார்கள்‌. தவ்ஹீதிலும்‌, ஹதீஸிலும்‌, சட்டக்கலையிலும்‌, உஸூலிலும்‌, மிகப்பெரிய மேதையாகத்‌ திகழ்ந்தார்கள்‌. மேலும்‌ ஹிஸாப்‌, (கணிதம்‌) அல்ஜிப்ரா, பராயில்‌, வாரிசுரிமைச்‌ சட்டம்‌, இலக்கியம்‌, மொழி போன்ற அனைத்துக்‌ கலைகளிலும்‌ மூதறிஞராக விளங்கிய இமாமவர்கள்‌ முஸ்லிமல்லாத இதர (மாற்றுமத) பண்டிதர்களுடன்‌ வாது பரிந்து அவர்களை வெல்வதிலும்‌ தலை சிறந்து விளங்கினார்கள்‌.

பல்ஸடாவி (பிலாஸஃபியிலும்)‌ நல்ல ஆழமான அறிவைப்‌ பெற்றிருந்தார்கள்‌. இமாமவர்களின்‌ தொகுப்புகளைப்‌ படிக்கின்ற ஒவ்வொரு மனிதனும்‌ அவர்கள்‌ எந்த அளவு பலதரப்பட்ட கலைகளில்‌ ஆழ்ந்த அறிவுள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள்‌ என்பதைப்‌ புரிந்து கொள்ள முடியும்‌.

எழுத்துத்‌ துறையில்‌ அவர்கள்‌ தன்னிகரற்று விளங்கியதால்‌ பற்பல நூற்களைத்‌ தொகுப்புகள்‌, தொகுப்புகளாக இயற்றினார்கள்‌. 'இப்னு தைமிய்யா அவர்கள்‌ ஐநூறுக்கும்‌ அதிகமான பெரும்‌, பெரும்‌ தொகுப்புகளைத்‌ தொகுத்து பன்னூலாசிரியராக விளங்கினார்கள்‌” என்று இமாம்‌ ஹாஃபிழ்‌ அத்தஹபீ அவர்கள்‌ குநிப்பிடுகிறார்கள்‌. இமாமவர்களின்‌ குறிப்பிடத்தக்க சில நூற்களில்‌ 37 - வால்யும்‌ (தொகுப்புகளைக்‌) கொண்ட “மஜ்மூஉல்‌ பதாவா” என்ற நூலும்‌, 12-தொகுப்புகளைக்‌ கொண்ட தல்கீஸீத்‌ தல்பீஸ்‌ என்ற நூலும்‌, 7-தொகுப்புகளைக்‌ கொண்ட “அல்‌ ஜம்மு பைனல்‌ அக்லிவந்நக்லி” என்ற நூலும்‌ 5-வால்யூம்களைக்‌ கொண்ட, “மின்ஹாஜுல்‌ இஸ்திகாமா” மேலும்‌ மின்ஹாஜுஸ்‌ ஸுன்னா என்ற நூற்களும்‌ குறிப்பிடத்‌ தக்கவையாகும்‌. மேலும்‌ ஐந்து வால்யங்கள்‌, நான்கு வால்யும்கள்‌, மூன்று வால்யூம்கள்‌ கொண்ட இதர பல தொகுப்புகளையும்‌ நூற்றுக்கணக்கில்‌ எழுதி குவித்திருக்கிறார்கள்‌.

இமாமவர்களின்‌ மாணவர்களில்‌ மிகப்பெரும்‌ அறிஞர்களும்‌, பிரபலமான மேதைகளும்‌ இருந்திருக்கிறார்கள்‌. இவர்களெல்லாம்‌ நாடெங்கும்‌ அறியப்பட்ட இமாம்களாகவும்‌, பன்னூலாசிரியர்களாகவும்‌ இவ்வையகத்துக்கு அறிமுகப்பட்டுள்ளார்கள்‌. இவர்களுள்‌ அறிஞர்‌ இமாம்‌ இப்னுல்‌ கைய்யிம்‌, இமாம்‌ ஹாஃபிழுத்‌ தஹபீ, இமாம்‌ இப்னு கதீர்‌, அல்‌ இமாமுல்‌ மக்தீஸீ, இமாம்‌ இப்னு ரஷீக்‌, இமாம்‌ இப்னு ஷரப்‌, இமாம்‌ இப்னு முப்லிஹி, இமாம்‌ ஷம்ஸுத்தீன்‌ அல்‌ ஸாரீரி, இமாம்‌ தாஜுத்தீன்‌ அல்பஸாரி, இமாம்‌ ஷம்ஸுத்தீனுல்‌ இஸ்பஹாளி போன்றவர்கள்‌ குறிப்பிடத்தக்க மேதைகளாவார்கள்‌.

இப்னு தைமிய்யா (ரஹ்)‌ அவர்களின்‌ மாணவர்களில்‌ பெரும்பாலானவர்கள்‌ அறிவுக்‌ கடல்களாகவும்‌, பன்னூலாசிரியர்களாகவும்‌ திகழ்ந்ததே இவர்களின்‌ கல்வித்‌ திறமைக்கு ஓர்‌ எடுத்துக்காட்டாகும்‌. 

இமாமவர்களைப்‌ பற்றி அவர்கள்‌ காலத்தில்‌ வாழ்ந்த பேரறிஞர்களெல்லாம்‌ அவர்களை ஓர்‌ அறிவுக்களஞ்சியமாகக்‌ கொண்டு, அவர்களைத்‌ தம்‌ இமாமாகவும்‌ ஏற்றிருந்தார்கள்‌. அனைத்து மார்க்கப்‌ பிரச்சினைகளுக்கும்‌ முடிவு காண்பதற்காக ஃபத்வா வழங்கும்‌ பொறுப்பு இமாமவர்களுக்கு அவர்களின்‌ பதினேழாம்‌ வயதிலேயே ஒப்படைக்கப்பட்டது.

அன்றிலிருந்தே அவர்கள்‌ நூற்கள்‌ தொகுக்கவும்‌ ஆரம்பித்தார்கள்‌.

இறை பக்தியிலும்‌, இறை வழிடாட்டிலும்‌, மற்றேனைய வணக்கங்களிலும்‌ இமாமவர்கள்‌ தன்னிகரற்று விளங்கினார்கள்‌. அல்லாஹ்வுக்கும்‌, ரஸூலுக்கும்‌ கீழ்ப்படிவதை தம்‌ வாழ்வின்‌ இலட்சியமாகக்‌ கொண்டிருந்தார்கள்‌. கூர்மையான அறிவு பரந்த சிந்தனை, ஆராய்ச்சித்திறன்‌, தன்னம்பிக்கை, சுயநிர்ணய ஆற்றல்‌, பற்றற்றிருத்தல்‌, பொறுமை, வீரம்‌, பணிவு, நினைவாற்றல்‌, பேணுதல்‌, ஈகை போன்ற அத்தனை நற்குணங்களுக்கும்‌ ஒப்புதல்‌ காண முடியாத மேதையாக விளங்கினார்கள்‌.

வாழ்நாளெல்லாம்‌ தீன்‌ தொண்டாற்றித்‌ தம்‌ உயிர்‌, பொருள்‌, அத்தனையையும்‌ தீனுக்காக தத்தம்‌ செய்த இமாம்‌ இப்னு தைமிய்யா (ரஹ்‌) அவர்கள்‌ சுய நிர்ணய ஆற்றலைப்‌ பெற்றிருந்தார்கள்‌. அல்குர்‌ஆனையும்‌ நபி ஸல்‌ அவர்களின்‌ பொன்னுரைகளையும்‌ ஆய்ந்து சட்டங்களையம்‌, விதிகளையும்‌ சுயமாக நிர்ணயித்து வெளிப்படுத்துகின்ற இஜ்திஹாதின்‌ நிலையை எய்திய ஓர்‌ முஜ்தஹிதாக, ஆராய்ச்சிப்‌ புலமை பெற்றவராகத்‌ திகழ்ந்தார்கள்‌.

இஜ்திஹாதின்‌ படித்தரத்தை எட்டிய அறிஞர்கள்‌ பலரை நமது இஸ்லாமிய வரலாற்றில்‌ காணலாம்‌. முஜ்தஹிதாக இருப்பவர்களுக்குச்‌ சட்டங்களை குர்‌ஆன்‌, ஹதீஸிலிருந்து நுணுக்கமாக ஆராய்ந்து, தம்‌ ஆய்வுக்கொப்ப நேர்மையான மார்க்க விதிகளைக்‌ கூறுவதற்கு உரிமையுண்டு. குறையற்ற நிறையறிவை அல்லாஹ்விடம்‌ மட்டும்தான்‌ காண முடியும்‌. பரிபூரண ஞானம்‌ அல்லாஹ்வுக்குச்‌ சொந்தமானது. இமாம்கள்‌, முஜ்தஹித்கள்‌ அனைவரும்‌ மனிதர்கள்தான்‌ என்ற உண்மையை யாரும்‌ மறந்துவிடக்‌ கூடாது.

இஜ்திஹாதில்‌ பண்டிதர்கள்‌ தவறினால்‌ கூட, அவர்கள்‌ பழிக்கப்படமாட்டார்கள்‌. மாறாக இஸ்லாமிய ஷரீஅத்தின்‌ மூல உரைகளில்‌ இஜ்திஹாத்‌ செய்கின்ற படித்தரத்தை எட்டிய ஆராய்ச்சிப்புலமை பெற்ற அநிஞர்கள்‌ தம்‌ இஜ்திஹாதில்‌ தவறினாலும்‌ அவர்கள்‌ அல்லாஹ்விடமிருந்து நல்ல கூலியைத்தான்‌ பெறுகிறார்கள்‌.

இது விஷயமாக நபி (ஸல்‌) அவர்கள்‌: “சட்டம்‌ கூறும்‌ அறிஞர்‌ தம்‌ ஆராய்ச்சியில்‌ (இஜ்திஹாதில்‌ தவறாமலிருந்தால்‌, அவருக்கு இரு கூலிகள்‌ வழங்கப்படுகின்றன என்றும்‌, அதில்‌ அவர்‌ தவறினால்‌ ஒரு கூலியுண்டு” என்றும்‌ கூறியிருக்கிறார்கள்‌. இது ஸஹீஹான ஹதீஸாகும்‌.

இறைவசனங்களையும்‌, நபி (ஸல்‌! அவர்களின்‌ பொன்னுரைகளையம்‌ ஆராய்ந்து விளக்கமும்‌, விரிவுரையும்‌ தருவதில்‌ பிற்காலத்தவரிடையே மட்டுமல்லாமல்‌, முற்காலத்து ஸஹாடாப்‌ பெருமக்கள்‌, தாபியீன்கள்‌ அவர்களைத்‌ தொடர்ந்தவர்கள்‌ மற்றும்‌ இமாம்கள்‌ அனைவரிடையேயும்‌ கருத்து வேறுடாடுகள்‌ காணப்பட்டிருந்தன. முஜ்தஹிதான அறிஞர்களுக்கிடையில்‌ கருத்துகள்‌ வேறுபடுவதினாலோ, அவர்களுள்‌ முன்னோர்‌ மொழியாத புதியவற்றை பின்னால்‌ தோன்றிய முஜ்தஹித்‌ ஒருவர்‌ மொழிவதினாலோ அவர்களைக்‌ குறை காண முடியாது.

ஆனால்‌ இஸ்லாமின்‌ அடிப்படைக்‌ கொள்கை, கோட்டாடுகளில்‌ கருத்து வேறுபாடுகளைச்‌ சொல்லாமலிருக்க வேண்டும்‌. திருமறையுடையவும்‌, நபிமொழியுடையவும்‌, நேர்‌ உரைகளுக்கு எதிரான ஒரு கருத்தை வெளிப்படுத்த எந்த முஜ்தஹிதிற்கும்‌ உரிமையில்லை. அப்படி யாராவது கருத்துத்‌ தெரிவித்தாலும்‌, அதனை முற்றிலும்‌ ரத்து செய்துவிட வேண்டுமென்பதே அறிஞர்களின்‌ தீர்மானமாகும்‌. இல்வுண்மைகளின்‌ அடிப்படையில்‌ இமாம்‌ இப்னு தைமிய்யா (ரஹ்‌) அவர்கள்‌ இஸ்லாமின்‌ கொள்கை கோட்டாட்டு விதிகளில்‌ குர்‌ஆன்‌. ஹதீஸுக்கு மாற்றமான எந்தக்‌ கருத்தையும்‌ வெளிப்படுத்தவில்லை என்பது அறிஞர்கள்‌ தரும்‌ சான்றாகும்‌.

தவ்ஹீதில்‌ (அகீதாவில்‌) ஸலஃபுஸ்‌ ஸாலிஹீனுடைய கொள்கையை எடுத்தியம்பி அதை நிலைநாட்டுவதிலேயே தம்‌ வாழ்நாளைச்‌ செலவழித்தார்கள்‌. இதுவும்‌ அவர்களின்‌ நூற்களிலிருந்து வெளிப்படுத்தப்பட்ட உண்மை. ஆனால்‌, 'தலாக்‌' போன்ற ஃபிக்ஹு சம்பந்தப்பட்ட ஒரு சில மஸ்‌அலாக்களில்‌ மட்டும்‌ சில கருத்து வேறுபாடுகள்‌ அவர்களிடம்‌ காணப்பட்டன. இதைக்‌ கண்டதும்‌ விரல்‌ விட்டு எண்ணப்படக்‌ கூடிய சிலர்‌ இமாமவர்கள்‌ ஸஹாபாக்களின்‌ ஏக மனதான தீர்மானங்களுக்கு (இஜ்மாஉக்கு! மாறு செய்து விட்டார்களென்று பிரசாரம்‌ செய்ய முற்பட்டார்கள்‌.

குர்‌ஆன்‌, ஹதீஸிலிருந்து ஷரீஅத்தின்‌ சட்டங்களை ஆய்ந்து வெளிப்படுத்துகின்ற இஜ்திஹாதின்‌ படித்தரத்தை எட்டியிருந்த இமாமவர்கள்‌, அதன்‌ அடிப்படையில்‌ ஃபத்வாவும்‌ வழங்கிக்‌ கொண்டிருந்தார்களென்றும்‌. ஸஹாபாக்களுடையவும்‌, சில தாபியீன்களுடையவும்‌ நான்கு மத்ஹப்களின்‌ இமாம்களில்‌ யாராவது ஒருவருடையவும்‌ மத்ஹபைத்‌ தழுவியுமே அவர்களின்‌ தீர்ப்புகள்‌ அத்தனையும்‌ அமைந்திருந்தன என்றும்‌ வரலாறு சான்று தந்து கொண்டிருக்கிறது. “இமாம்‌ இப்னு தைமிய்யா (ரஹ்‌) அவர்கள்‌ இஜ்மாஉக்கு மாறாகத்‌ தீர்ப்பு வழங்கினார்களென்று எங்களுக்கு தெரியவே இல்லையென்றும்‌, அவர்கள்‌ மீது இதைச்‌ சுமத்துகிறவன்‌ பொய்யனும்‌, அறிவிவியுமாகத்தான்‌ இருப்பான்‌'” என்றும்‌ அறிஞர்‌ இப்னுல்‌ கைய்யிம்‌ (ரஹ்‌) அவர்கள்‌ விளக்குகிறார்கள்‌.

அறிவாராய்ச்சியில்‌ ஈடுபடுகிறவர்களின்‌ ஆற்றல்களைப்‌ பற்றியும்‌, அவர்களின்‌ பொறுப்புகளைப்‌ பற்றியும்‌, சிந்திக்காமல்‌, அறிவிற்கும்‌ அறிவில்‌ தம்மை அர்ப்பணித்த பண்டிதர்களுக்கும்‌ மரியாதை செலுத்த வேண்டிய முறைகளை உணராமல்‌ தமக்குப்‌ பிடிக்காத அறிஞர்களைத்‌ திட்டி வசை மொழிகளால்‌ தாக்குகின்ற பழக்கத்தை-மரபைத்‌-தம்‌ பரம்பரைச்‌ சொத்தாக சிலர்‌ ஏற்படுத்திக்‌ கொண்டார்கள்‌. இப்னு தைமிய்யா (ரஹ்‌) அவர்களைப்‌ பழிக்கின்றவர்களிடம்‌ நாம்‌ கேட்கிறோம்‌: “இப்னு தைமிய்யா அவர்களைக்‌ குறைகாணும்‌ பட்சத்தில்‌, இமாமவர்களிடம்‌ காணுகின்ற குறைகளை அவர்களுக்கு முன்னர்‌ தோன்றிய முஜ்தஹிதீன்களான அத்தனை இமாம்களிடமும்‌ காண வேண்டியது வருகிறதே அதற்கு நீங்கள்‌ என்ன சொல்கிறீர்கள்‌?”

ஃபிக்ஹு சட்ட திட்டங்களில்‌ கருத்து வேறுபாடுகள்‌ கூறாத முஜ்தஹிதீன்கள்‌ இருந்ததே இல்லை என்பது சரித்திர உண்மையாகும்‌. எனவே ஆராய்ச்சித்‌ துறைக்குப்‌ பொருந்தாச்‌ சித்தாந்தங்களைக்‌ கூறிக்‌ காலத்தை வீணாக்குவது அறிவுடைமையல்ல. அறிஞர்‌ ஒருவர்‌ தம்‌ திறனாய்வால்‌ வெளிப்படுத்திக்‌ காட்டிய சட்டம்‌ உண்மைக்குப்‌ புறம்பானதென்று தெரிய வந்துவிட்டால்‌, நாம்‌ அவரிடமிருந்து அந்தச்‌ சட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. அவரும்‌ தம்‌ திறனாய்வுக்‌ கருத்துகளைப்‌ பிடிவாதத்துடன்‌, முரட்டுத்தனமாக மக்கள்‌ அவற்றைத்தாம்‌ பின்பற்ற வேண்டுமென்று பணிக்கவுமாட்டார்‌. தாம்‌ ஆராய்ந்து வெளிப்படுத்திய கருத்துத்தான்‌ முடிவான கருத்து என்றோ, அதுவே பின்பற்றத்‌ தகுந்த அபிப்பிராயமென்றோ சொல்லவுமாட்டார்‌.

ஹதீஸ்‌ கலையில்‌ இமாமவர்களுக்கு இருந்த ஆற்றலினால்‌ இமாம்‌ இப்னு தைமிய்யா அவர்கள்‌ அறியாத எந்த ஒரு ஹதீஸும்‌ நபி (ஸல்‌! அவர்களின்‌ ஹதீஸாக இருக்க முடியாது என்று சொல்லப்படுகிறது. அத்தனை தூரம்‌ இமாமவர்கள்‌ ஹதீஸில்‌ தேர்ச்சி பெற்றிருந்தார்கள்‌. தாபியீன்களுடைய நிலைமைகளையும்‌ விவரமாகத்‌ தெரிந்திருந்தார்கள்‌. “அவர்கள்‌ ஒரு மஸ்‌அலாவைப்‌ பற்றிப்‌ பேசினால்‌ அது விஷயத்தில்‌ நான்கு மத்ஹப்களுடைய இமாம்களின்‌ அபிப்பிராயங்களைச்‌ சொல்லாமல்‌ இருக்க மாட்டார்கள்‌" என்று இமாமவர்களைப்‌ பற்றி ஹாஃபிழுத்தஹபீ குறிப்பிடுகிறார்கள்‌.

உண்மையான ஏகத்துவக்‌ கொள்கையை உலகில்‌ பரவச்‌ செய்ய இமாமவர்கள்‌ பாடுபட்டதினால்‌ அவர்கள்‌ வாழ்க்கையின்‌ இறுதிக்‌ கட்டத்தில்‌ சிறைவாசம்‌ அனுபவிக்க வேண்டியதாயிற்று. “அல்லாஹ்வுடைய ஸிஃபத்துகளை(பண்புகளை) திரித்தும்‌, போக்கியும்‌, புரட்டியும்‌, மாற்றியும்‌ கூறுவது கூடாது" என்று இயம்பியதனால்‌ சிறையில்‌ தள்ளப்பட்டார்கள்‌. சிருஷ்டிகளின்‌ ஸிஃபத்துகளைச்‌ சிருஷ்டித்த அல்லாஹ்வின்‌ ஸிஃபத்துகளுடன்‌ (பண்புகளுடன்‌) ஒப்புதல்‌ காண்பது தப்பான கொள்கையாகுமென்று விளக்கினார்கள்‌. கொள்கை விஷயத்திலும்‌, மதக்‌ கோட்பாடுகள்‌ விஷயத்திலும்‌ ஸலஃபுஸ்‌ ஸாலிஹீனுடைய போக்கிற்கொப்பத்‌ தீர்ப்பு வழங்கினார்கள்‌. அல்லாஹ்வின்‌ ஸிஃபத்துகளில்‌ ஸலஃபுஸ்‌ ஸாலிஹீனின்‌ வழிமுறைக்குச்‌ சாதகமாகப்‌ பேசியதனால்தான்‌ அன்று இமாமவர்கள்‌ எதிரிகளிடமிருந்து சிறைவாசம்‌ அனுபவிக்க நேர்ந்தது.

ஆனால்‌, எல்லோரையும்‌ போல சிறையில்‌ அவர்கள்‌ தயங்கவில்லை: தத்தளிக்கவுமில்லை; சிறை வாழ்க்கையை அவர்கள்‌ துன்பமாகக்‌ கருதாமல்‌, பெரு மகிழ்ச்சியுடன்‌ ஏற்றுத்‌ தம்‌ சேவையை அங்கும்‌ தொடர்ந்தார்கள்‌. அதில்‌ இன்பமும்‌ கண்டார்கள்‌. சிறையில்‌ அகப்பட்டிருந்த கைதிகளுக்கு நல்ல பல கல்விகளைப்‌ புகட்டினார்கள்‌. சிறைவாசிகளுக்கு அதிலிருந்து விடுதலை கிடைத்தாலும்‌ சிறையை விட்டு வெளியேறாமல்‌ இமாமவர்களின்‌ போதனா வகுப்பில்‌ பங்கு பெறுவதற்காக அங்கேயே தங்கி விடுவார்களாம்‌. இதனால்‌ இமாமவர்கள்‌ அடைக்கப்பட்டிருந்த சிறைச்சாலையும்‌ கல்விக்‌ கூடம்போல்‌ காட்சியளித்தது என்று, “கவாகிபுத்தூர்‌ ரிய்யா"வின்‌ ஆசிரியர்‌ குறிப்பிடுகிறார்‌.

இப்படியாகத்‌ தம்‌ உயிர்‌, பொருள்‌, அனைத்தையும்‌ இஸ்லாமிற்காகவும்‌, தூய்மையான தவ்ஹீது (ஏக இறைக் கொள்கையை பரவச்‌ செய்வதற்காகவும்‌ அர்ப்பணம்‌ செய்த இமாமவர்கள்‌, ஹிஜ்ரி 728-ம்‌ ஆண்டு துல்கஅதா மாதம்‌ 20-ம்‌ நாள்‌ திங்கள்‌ திழமையன்று அதிகாலையில்‌ டமாஸ்கஸ்‌ (திமிஷ்கு) கோட்டையில்‌ சிறைவாசம்‌ அனுபலித்துக்‌ கொண்டிருந்த வேளையில்‌ மரணமடைந்தார்கள்‌.

இப்பேரிழப்பை அறிந்த நாடு முழுவதும்‌ துக்கத்தில்‌ மூழ்கிற்று. இமாமவர்களின்‌ வஃபாத்தின்போது அவர்களுக்கு ஜனாஸா தொழுவதற்கென அரபு நாட்டிலிருந்தும்‌ திரண்டெழுந்த மக்கள்‌ கூட்டத்தைப்‌ போன்று ஒரு கூட்டத்தை இஸ்லாமிய வரலாற்றில்‌ (இமாம்‌ அஹ்மதிப்னு ஹன்பல்‌ (ரஹ்‌) அவர்களைத்‌ தவிர) வேறு யாருக்கும்‌ காண முடியவில்லை என்று வரலாற்றாசிரியர்கள்‌ குறிப்பிடுகிறார்கள்‌. சுமார்‌ ஐந்து லட்சத்துக்கும்‌ அதிகமான ஆண்களும்‌, பதினைந்தாயிரத்துக்கும்‌ மேற்பட்ட பெண்களும்‌ அன்று இமாமவர்களின்‌ ஜனாஸா தொழுகையில்‌ கலந்து கொண்டார்கள்‌.

இமாமவர்களைப்‌ பற்றி அவர்கள்‌ காலத்தில்‌ வாழ்ந்திருந்த பெரியோர்கள்‌ அனைவரும்‌ ஒரு கலைக்களஞ்சியமாக அவர்களை ஏற்றிருந்தனர்‌. அவர்கள்‌ மரணித்ததற்குப்‌ பிறகு இன்று வரையிலும்‌ எண்ணற்ற இமாம்கள்‌ அவர்களைப்‌ பாராட்டி நூற்கள்‌ எழுதியிருக்கிறார்கள்‌. இமாமவர்களின்‌ வாழ்க்கை வரலாற்றையும்‌, அவர்கள்‌ வகுத்துக்‌ காட்டிய கல்வித்‌ திட்டத்தையும்‌ ஆய்வதற்கென்றே இன்று பல்கலைக்‌ கழக மாணவர்கள்‌ பலர்‌ தம்‌ திறனாய்வை இமாமவர்களின்‌ நூற்களை ஆராய்வதில்‌ ஈடுபடுத்தி வருகிறார்கள்‌.

இமாமவர்களின்‌ காலத்துக்குப்‌ பின்னர்‌ தோன்றிய எந்த இமாமும்‌ இமாம்‌ இப்னு தைமிய்யா (ரஹ்‌) அவர்களை வாழ்த்தாமல்‌ செல்லவில்லை.

(இந்த அறிமுக ஆக்கம்‌ 'ஷைக்‌ எம்‌. எஸ்‌. ஸெய்யிது முஹம்மது மதனீ அவர்களால்‌ எழுதப்பட்டதாகும்‌)



இமாம் இப்னு தைமிய்யா(ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் முன்னுரை:

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடயோனாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்..

அனைத்துப்‌ புகழும்‌ அல்லாஹ்வுக்கே! அவன்‌ தனது தூதருக்கு நேர்வழியையும்‌ உண்மையான மார்க்கத்தையும்‌ கொடுத்து அனுப்பினான்‌. அந்த உண்மையான மார்க்கத்தை ஏனைய மார்க்கங்களைக்‌ காட்டிலும்‌ உயர்வாக்குவதற்காகவே அவர்களை அவன்‌ தூதராக அனுப்பினான்‌. சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்‌! வணக்கத்திற்குரியவன்‌ அல்லாஹ்வைத்‌ தவிர வேறு யாரும்‌ அறவே இல்லை. அவன்‌ தனித்தவன்‌. அவனுக்கு இணையானவன்‌ யாரும்‌ இல்லை. இதை நான்‌ மனப்பூர்வமாக ஓப்புக்‌ கொண்டு சாட்சியம்‌ கூறுகிறேன்‌. மேலும்‌, முஹம்மது (ஸல்‌) அவனது அடியாரும்‌ அவனது தூதரும்‌ ஆவார்கள்‌ என்று சாட்சியம்‌ கூறுகிறேன்‌. அவர்கள்‌ மீதும்‌, அவர்களது குடும்பத்தார்‌, தோழர்கள்‌ அனைவர்‌ மீதும்‌ அல்லாஹ்‌ ஸலவாத்தும்‌ ஸலாமும்‌ அருள்வானாக!

மறுமை நாள்‌ வரை அல்லாஹ்வின்‌ உதவிக்கு உரியவர்களாகவும்‌, பாதுகாப்புப்‌ பெற்ற பிரிவினர்களாகவும்‌ குர்‌ஆனையும்‌ நபிவழியையும்‌ நபித்தோழர்களையும்‌ பின்பற்றக்கூடியவர்களாகவும்‌ இருக்கிற முஸ்லிம்கள்‌, அல்லாஹ்வையும்‌, அவன்‌ படைத்த வானவர்களையும்‌, அவன்‌ இறக்கிய கிதாபு(களான இறைநூல்‌)களையும்‌ அவனுடைய தூதர்களையும்‌, மரணத்திற்குப்‌ பின்‌ எழுப்பப்படுவதையும்‌, நன்மையோ தீமையோ அனைத்தும்‌ அல்லாஹ்‌ விதித்த விதியின்படியே நடக்கின்றன என்பதையும்‌ ஈமான்‌ (உறுதியான நம்பிக்கை) கொள்ள வேண்டும்‌.


அல் அகீததுல் வாஸிதிய்யா


அல்லாஹ்வின் மீது நம்பிக்கை

அடிப்படை விளக்கம்‌:

அல்லாஹ்வை ஈமான்‌ கொள்ள வேண்டும்‌ என்பதன்‌ விளக்கம்‌ என்னவென்றால்‌, அல்லாஹ்‌ தன்னைக்‌ குறித்து குர்‌ஆனில்‌ கூறியிருக்கும்‌ தன்மைகள்‌ (ஸிஃபத்துகள்‌), செயல்கள்‌ அனைத்தும்‌ உண்மையே என நம்புவதாகும்‌. அந்தத்‌ தன்மைகளையும்‌ செயல்களையும்‌ கொண்டுதான்‌ அல்லாஹ்வை ஈமான்‌ கொள்ள வேண்டும்‌. அத்துடன்‌, நபி (ஸல்‌) அவர்கள்‌ அல்லாஹ்வைப்‌ பற்றி கூறியுள்ள தன்மைகளையும்‌, செயல்களையும்‌ ஈமான்‌ கொள்ள வேண்டும்‌.

அல்குர்‌ஆனிலும்‌ ஆதாரமிக்க நபிமொழிகளிலும்‌ கூறப்பட்டுள்ள அல்லாஹ்வின்‌ தன்மைகள்‌, மற்றும்‌ செயல்களில்‌ நமது அறிவைக்‌ கொண்டு எவ்விதக்‌ கருத்து மாற்றத்தையோ, பொருள்‌ மாற்றத்தையோ செய்யக்‌ கூடாது.

அவனுடைய தன்மைகளுக்கும்‌ செயல்களுக்கும்‌ படைப்பினங்களின்‌ தன்மைகளையம்‌ செயல்களையும்‌ உதாரணமாக, உவமையாக கூறக்‌ கூடாது. 

படைப்பினங்களின்‌ தன்மைகளைக்‌ கொண்டும்‌ செயல்களைக்‌ கொண்டும்‌ அல்லாஹ்வின்‌ தன்மைகளையும்‌ செயல்களையும்‌ விவரிக்கக்‌ கூடாது.

அல்லாஹ்வின்‌ தன்மைகள்‌, செயல்கள்‌ பற்றி கூறப்பட்டுள்ள குர்‌ஆனின்‌ வசனங்களை 'பொருளற்றவை' என்று கூறக்‌ கூடாது.

அல்லாஹ்‌ தன்னைப்‌ பற்றி அல்குர்‌ஆனில்‌ கூறியிருக்கும்‌ பின்வரும்‌ வசனத்திற்கு ஏற்ப அவனுடைய தன்மைகளையும்‌, செயல்களையும்‌ ஈமான்‌ கொள்ள வேண்டும்‌.

அவனுக்கு ஒப்பானது ஒன்றுமில்லை. அவன்‌ (யாவற்றையும்‌) செவியுறுபவனாபவும்‌ உற்று நோக்கியவனாகவும்‌ இருக்கின்றான்‌. (ஸுரா அஷ்ஷூறா 42 ; 11)

இந்த அடிப்படையில்‌, அல்லாஹ்‌ தன்னைப்‌ பற்றி கூறியிருக்கும்‌ எந்த தன்மைகளையும்‌ அவை அவனுக்கு இல்லை என்று மறுக்கக்‌ கூடாது;

அல்லாஹ்வின்‌ வசனங்களை மாற்றக்‌ கூடாது; அவற்றைப்‌ புரட்டி, திருத்தி மாற்றுப்‌ பொருள்‌ கூறவும்‌ கூடாது அல்லாஹ்வின்‌ வசனங்களிலும்‌ அவனுடைய அழகிய பெயர்களிலும்‌ முரண்பட்ட பொருளைப்‌ புகுத்தக்கூடாது. எந்த நிலையிலும்‌ அல்லாஹ்வின்‌ தன்மைகளுக்குப்‌ படைப்பினங்களின்‌ தன்மைகளை உவமையாக கூறக்‌ கூடாது.

நிச்சயமாக அல்லாஹ்விற்கு நிகரானவர்‌ எவரும்‌ இல்லை. அவனுக்கு சமமானவரும்‌ எவரும்‌ இல்லை. அவனுடைய தன்மையைப்‌ பெற்றவரும்‌ எவருமில்லை.

அல்லாஹ்வை அவனுடைய படைப்பினங்களைக்‌ கொண்டு கணித்துவிடக்‌ கூடாது; கணித்துவிடவும்‌ முடியாது கற்பனை செய்யக்‌ கூடாது: கற்பனை செய்யவும்‌ முடியாது,

அல்லாஹ்‌ தன்னைப்‌ பற்றியும்‌ பிறரைப்‌ பற்றியும்‌ மிக அறிந்தவன்‌. அவன்தான்‌ முற்றிலும்‌ உண்மையை உரைப்பவன்‌. அவனது படைப்பினங்கள்‌ அனைத்தையும்‌ விட அவன்தான்‌ மிக அழகிய முறையில்‌ பேசுபவன்‌. ஆகவே, அவன்‌ தன்னைப்‌ பற்றி கூறியிருக்கும்‌ அனைத்தும்‌ சரியானவையும்‌, உண்மையானவையுமாகும்‌. ஆகவே, அவன்‌ தன்னைப்‌ பற்றி கூறியிருக்கும்‌ தன்மைகளுடன்தான்‌ நாம்‌ அவனை நம்பிக்கை கொள்ள வேண்டும்‌.

அடுத்ததாக அவனுடைய தூதர்கள்‌ அனைவரையம்‌ உண்மையாளர்கள்‌ என்றும்‌ அல்லாஹ்வால்‌ மெய்ப்பிக்கப்பட்டு உண்மையாக அவன்‌ புறத்திலிருந்தே அனுப்பப்பட்டவர்கள்‌ என்றும்‌ நம்பிக்கை கொள்ள வேண்டும்‌.

ஆகவே, இறைத்தூதர்கள்‌ அல்லாஹ்வைப்‌ பற்றி கூறியுள்ள அழகிய தன்மைகள்‌ அனைத்தும்‌ அவனுக்கு உரியன என ஈமான்‌ கொள்ள வேண்டும்‌.

அல்லாஹ்வைப்‌ பற்றி உறுதியான ஆதாரமும்‌, தெளிவான அறிவுமின்றி பேசுபவர்களின்‌ வழிமுறையை நாம்‌ பின்பற்றக்‌ கூடாது. இதைப்‌ பற்றி அல்லாஹ்‌

குர்‌ஆனில்‌ கூறுகிறான்‌:

(நபியே!) அவர்களுடைய (தவறான) வருணிப்புகளை விட்டும்‌ கண்ணியத்தின்‌ அதிபதியான உங்களது இறைவன்‌ மிகப்‌ பரிசுத்தமானவன்‌. (அவனால்‌) அனுப்பப்பட்ட தூதர்கள்‌ (உங்கள்‌ அனைவர்‌) மீதும்‌ அவனுடைய ஈடேற்றம்‌ உண்டாகட்டும்‌. புகழனைத்தும்‌ அகிலத்தார்‌ அனைவரையும்‌ படைத்து வளர்த்து பாதுகாக்கும்‌ அல்லாஹ்வுக்கே உரியது.(ஸுரா அஸ்ஸாஃப்‌ஃபாத்‌ 37 : 180-182)

இந்தச்‌ சங்கைமிகு வசனங்களிலிருந்து நாம்‌ விளங்க வேண்டியவை என்னவெனில்‌:

1. இறைத்தூதர்களுக்கு முரண்பட்டு அல்லாஹ்வைப்‌ பற்றி வருணிப்பவர்களின்‌ வருணனைகளை விட்டு அல்லாஹ்‌ மிகத்‌ தூய்மையானவன்‌.

2. இறைத்தூதர்கள்‌ அல்லாஹ்வைப்‌ பற்றி கூறிய அனைத்தும்‌ எல்லாக்‌ குறைகளை விட்டும்‌, தவறுகளை விட்டும்‌ பாதுகாக்கட்பட்டது. எனவேதான்‌, அவர்களுக்கு அவனது அருளும்‌ பாதுகாப்பும்‌ உண்டு என வாக்களிக்கின்றான்‌.

3. அல்லாஹ்‌, அவனுக்கு வைத்துக்‌ கொண்ட பெயர்களிலும்‌, அவன்‌ வருணிக்கும்‌ அவனது அழகிய பண்புகளிலும்‌ அவன்‌ கூறும்‌ முறை என்னவெனில்‌, அவன்‌ தனக்கு தகுதியற்றதை தன்னிடம்‌ இல்லையென்றும்‌, தனக்கு தகுதியானதை தனக்கு இருக்கின்றது என்றும்‌ கூறுகின்றான்‌.

எனவே, நபிவழியையும்‌ நபித்தோழர்களையும்‌ பின்பற்றும்‌ நன்மக்கள்‌ (அஹ்லுஸ்‌ ஸுன்னத்‌ வல்‌ ஜமாஆ) எந்த நிலையிலும்‌ அல்லாஹ்வின்‌ தூதர்கள்‌ கற்றுக்‌ கொடுத்த இறைக்கொள்கையை விட்டும்‌, ஈமானிய வழியை விட்டும்‌ திரும்பிவிடக்‌ கூடாது. நிச்சயமாக இதுவே மிக நேரான வழியாகும்‌. இது அல்லாஹ்‌ அருள்புரிந்த நபிமார்கள்‌, இறைத்தூதர்கள்‌, 'ஸித்தீக்‌' என்ற உண்மையாளர்கள்‌, 'ஷஹீத்‌' என்ற இறைப்‌ பாதையில்‌ உயிர்நீத்த தியாகிகள்‌, 'ஸாலிஹ்‌' என்ற நல்லோர்கள்‌ ஆகியோரின்‌ வழியாகும்‌.

அல்லாஹ்‌ தன்னைப்பற்றி வருணித்துள்ள வசனங்களில்‌ மிக முக்கியத்துவம்‌ வாய்ந்த - குர்‌ஆனின்‌ மூன்றில்‌ ஒரு பகுதிக்குச்‌ சமமானது என்று கூறப்பட்டுள்ள ஸூரத்துல்‌ இக்லாஸ்‌ இக்கருத்தைத்தான்‌ உறுதிப்படுத்துகிறது.

(நபியே! மனிதர்களை நோக்கி) நீங்கள்‌ கூறுங்கள்‌: அல்லாஹ்‌ ஒருவன்தான்‌. (அந்த) அல்லாஹ்‌ எவருடைய) தேவையுமற்றவன்‌. (அனைத்தும்‌ அவன்‌ அருளையே எதிர்பார்த்திருக்கின்றன). அவன்‌ (எவரையும்‌) பெறவுமில்லை(எவராலும்‌) பெறப்படவுமில்லை. (ஆகவே அவனுக்கு தகப்பனுமில்லை, சந்ததியுமில்லை. தவிர) அவனுக்கு நிகராகவும்‌ ஒன்றுமில்லை.(ஸுரா அல்‌இக்லாஸ்‌ 112 : 1-4)

மேற்கூறப்பட்ட இறை வசனங்களிலிருந்து நாம்‌ விளங்கிக்‌ கொள்ள வேண்டியவை

1. அல்லாஹ்‌ என்ற வார்த்தை அகிலத்தைப்‌ படைத்து வளர்த்துப்‌ பாதுகாத்து வருகிற ஏக இறைவனுக்குரிய பெயராகும்‌. இது 'இலாஹ்‌' என்ற பதத்திலிருந்து வந்ததாகும்‌. இதன்‌ பொருள்‌ 'உண்மையில்‌ வணக்கத்திற்குத்‌ தகுதியானவன்‌" என்பதாகும்‌.

2. அல்லாஹ்‌ ஒருவனே. அவனது உள்ளமை, அவனது பெயர்கள்‌, அவனது தன்மைகள்‌, அவனது செயல்கள்‌ அனைத்திலும்‌ - அவனுக்கு இரண்டாமவர்‌ இல்லை; அவனுக்கு நிகரானவர்‌ இல்லை; அவனுக்கு ஒப்பானவர்‌ இல்லை; அவனுக்கு சமமானவர்‌ இல்லை.

3. அஸ்ஸமது (தேவையற்றவன்‌) என்ற வார்த்தையின்‌ பொருள்‌ என்னவெனில்‌ “தனது ஆட்சி, அறிவு, கண்ணியம்‌, சிறப்பு அனைத்திலும்‌ அவன்‌ முழுமையானவன்‌. அவன்‌ யாருடைய தேவையுமற்றவன்‌; அவனைத்‌ தவிர யாவரும்‌ அவன்பால்‌ தேவையுடையவர்களே!

4. அவன்‌ யாரையும்‌ பெற்றெடுக்கவில்லை. அதாவது, அவன்‌ யாருடைய தகப்பனுமல்ல! அவன்‌ எவருக்கும்‌ பிறந்தவனுமில்லை. அதாவது, அவன்‌ எவரின்‌ பிள்ளையுமல்ல! அவன்‌ முழுக்க முழுக்க படைப்பினங்களுக்கு அப்பாற்பட்டவன்‌. அவனே முந்தியவனும்‌ முதலாமவனுமாவான்‌. படைப்பினங்களை விட்டும்‌ படைப்பினங்களின்‌ தன்மையை விட்டும்‌ முற்றிலும்‌ தூய்மையானவன்‌.

5. ஆகவே, அவனுக்கு நிகராக எவருமில்லை. அவனைத்‌ தவிர அனைத்தும்‌ அவனால்‌ படைக்கப்பட்டவையே! அந்தப்‌ படைப்பினங்களில்‌ எதுவும்‌ அவனுக்கு சமமாகவோ நிகராகவோ ஒப்பாகவோ இல்லவே இல்லை.


இதைத்தான்‌ குர்‌ஆனின்‌ மிக மகத்தான வசனம்‌ என்று வருணிக்கப்பட்ட 'ஆயத்துல்‌ குர்ஸி' உறுதிப்படுத்துகிறது.

அல்லாஹ்‌ (எத்தகைய மகத்துவம்‌ மிக்கவனென்றால்‌) அவனைத்‌ தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன்‌ (இல்லவே) இல்லை. அவன்‌ (மரணமில்லா) உயிருள்ளவன்‌; என்றும்‌ (அழிவில்லா) நிலையானவன்‌; அவனைச்‌ சிறு உறக்கமும்‌ பீடிக்காது; பெரும்‌ நித்திரையும்‌ பீடிக்காது. வானங்கள்‌, பூமியில்‌ உள்ளவை அனைத்தும்‌ அவனுடையதே! அவனுடைய அனுமதியின்றி, அவனிடத்தில்‌ (எவருக்காகிலும்‌) யார்தான்‌ பரிந்து பேசக்கூடும்‌? அவர்களுக்கு முன்‌ இருப்பவற்றையும்‌ அவர்களுக்குப்‌ பின்‌ இருப்பவற்றையும்‌ அவன்‌ நன்கறிவான்‌. அவனுடைய விருப்பமின்றி, அவனுக்குத்‌ தெரிந்தவற்றிலிருந்து யாதொன்றையும்‌ (மற்றெவரும்‌ தங்கள்‌ அறிவால்‌) அறிந்து கொள்ள முடியாது. அவனுடைய 'குர்ஸி வானங்கள்‌, பூமியைவிட விசாலமாயிருக்கின்றது. அவ்விரண்டையும்‌ பாதுகாப்பது அவனுக்குச்‌ சிரமமன்று, மேலும்‌, அவன்தான்‌ மிக உயர்ந்தவன்‌; மிக்க மகத்தானவன்‌. (ஸூரா அல்பகறா 2 : 255)


இந்த வசனத்திலிருந்து நாம்‌ விளங்கிக்‌ கொள்ள வேண்டியவை:

1. அல்லாஹ்வைத்‌ தவிர வேறு யாரும்‌ வணக்கத்திற்குரியவன்‌ இல்லை. எனவே, அல்லாஹ்வைத்‌ தவிர வேறு யாரையும்‌ வணங்கக்கூடாது. அல்லாஹ்விற்கு செய்யும்‌ வணக்க வழிடாடுகளை அவனைத்‌ தவிர வேறு யாருக்கும்‌ செய்யக்கூடாது.

2. அவனே என்றென்றும்‌ உயிருள்ளவன்‌; நிலையானவன்‌. அவனைத்‌ தவிர இவ்வுலகத்தில்‌ உள்ள அனைத்துப்‌ பொருள்களும்‌ அழியக்கூடியவையே! அவனுக்கு மரணமுமில்லை: சிறு தூக்கமுமில்லை. அவன்‌ எந்நேரமும்‌ படைப்பினங்கள்‌ அனைத்தையும்‌ கண்காணித்தவனாகவே இருக்கின்றான்‌. வானங்களில்‌ உள்ளவையும்‌ பூமியிலுள்ளவையும்‌ அவனுக்கே சொந்தமானவை. ஏனெனில்‌ அவனே அவற்றைப்‌ படைத்தான்‌. அவற்றைப்‌ படைக்கும்‌ விஷயத்தில்‌ அவனுக்கு வேறு எந்த உதவியாளரும்‌ இல்லை. அவ்வாறே படைப்பினங்களை நிர்வகிப்பதிலும்‌ அவனே முழு அதிகாரம்‌ பெற்றவன்‌.

3. அவன்‌ அனுமதி கொடுக்காமல்‌ எவரும்‌, எவருக்கும்‌ பரிந்துரை (சிபாரிசு) செய்ய முடியாது. படைப்பினங்கள்‌ எவ்வளவுதான்‌ அந்தஸ்தில்‌ உயர்ந்தாலும்‌ அவை அல்லாஹ்வின்‌ அடிமைகளே. அல்லாஹ்‌ மட்டுமே அனைத்தையும்‌ அடக்கி ஆண்டு, அகிலங்கள்‌ அனைத்திற்கும்‌ அரசனாக இருக்கின்றான்‌. அவனிடம்‌ எவரும்‌ துணிவுகொள்ளவோ, அதிகாரம்‌ செலுத்தவோ, அவனை நிர்ப்பந்திக்கவோ முடியாது. எவரும்‌ அல்லாஹ்விடத்தில்‌ தனக்குரிய அந்தஸ்தைக்‌ கொண்டு, தான்‌ விரும்பியவர்களுக்கெல்லாம்‌ அவனிடம்‌ பரிந்துரை செய்யலாம்‌ என்று துணிந்துவிட முடியாது. மாறாக, பரிந்துரை செய்வதற்கும்‌, யாருக்காக பரிந்துரை செய்யலாம்‌ என்பதற்கும்‌ அல்லாஹ்‌ அனுமதி வழங்க வேண்டும்‌. அப்போதுதான்‌ பரிந்துரை செய்யவும்‌ முடியும்‌ அந்தப்‌ பரிந்துரையையும்‌ அவன்‌ ஏற்றுக்‌ கொள்வான்‌.

4. அல்லாஹ்வின்‌ அறிவே முழுமையானது. எதையும்‌ அவன்‌ நாடிய அளவே படைப்பினங்கள்‌ அறிந்தகொள்ள முடியும்‌. படைப்பினங்களின்‌ அறிவு முழுமையானதல்ல!

5. அவன்‌ தன்னுடைய படைப்பினங்களை விட்டு உயர்ந்தவன்‌: மகத்தானவன்‌. ஏழு வானங்களுக்கு மேல்‌ அவன்‌ படைத்திருக்கும்‌ 'குர்ஸி' ஏழு வானங்களை விடவும்‌ ஏழு பூமிகளை விடவும்‌ மிக விசாலமானது. இதை அவனே கூறியதிலிருந்து அவனது மகத்தான ஆற்றலையும்‌ மாபெரும்‌ வல்லமையையும்‌ விளங்கிக்‌ கொள்ளலாம்‌.

6. வானங்களையும்‌ பூமிகளையும்‌ படைத்தது அவனுக்கு இலகுவானதே. அதில்‌ எவ்வித சிரமமும்‌ அவனுக்கு இருக்கவில்லை. அவ்வாறே அதில்‌ கோடானு கோடி படைப்பினங்களைப்‌ படைத்ததும்‌ அவனுக்குச்‌ சிரமமானதல்ல. வானங்களையும்‌ பூமிகளையும்‌ அதிலுள்ள அனைத்துப்‌ படைப்பினங்களையும்‌ பாதுகாப்பதும்‌ பராமரிப்பதும்‌ நிர்வகிப்பதும்‌ அவனுக்கு மிக இலகுவானதே.அவன்‌ அத்தகைய மாபெரும்‌ ஆற்றலும்‌ சக்தியும்‌ படைத்தவன்‌. 

'குர்ஸி' என்பது அல்லாஹ்வுடைய பாதத்தின்‌ ஸ்தலமாகும்‌' என்று ஆதாரப்பூர்வமான நபிமொழிகளில்‌ கூறப்பட்டுள்ளது. (முஸ்தத்ரகுல்‌ ஹாகிம்‌, முஸன்னஃப்‌ இப்னு அபீஷையா, தாரகுத்னி, முஃஜமுத்‌ தப்ரானி, ஸஹீஹ்‌ இப்னு குஸைமா)

நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌: “யார்‌ ஒருவர்‌ இரவில்‌ இவ்வசனத்தை ஓதுகிறாரோ அவருக்கு அல்லாஹ்வின்‌ புறத்திலிருந்து ஒரு பாதுகாவலர்‌ இருப்பார்‌. காலை வரை ஷைத்தான்‌ அவரை அணுகமாட்டான்‌".(ஸஹீஹுல்‌ புகாரி)

மேலும்‌ கூறினார்கள்‌: “யார்‌ ஒருவர்‌ ஒவ்வொரு ஃபர்ழான தொழுகைக்குப்‌ பின்பும்‌ ஆயத்துல்‌ குர்ஸியை ஓதுவாரோ அவர்‌ சுவர்க்கம்‌ நுழைய மரணத்தைத்‌ தவிர வேறெந்தத்‌ தடையும்‌ இல்லை”,(ஸுனனுன்‌ நஸாயி, அஸ்ஸில்ஸிலத்துல்‌ ஸஹீஹா)

அல்லாஹ்வின்‌ தூதர்‌ முஹம்மது (ஸல்‌) அவர்கள்‌ அல்லாஹ்வைப்‌ பற்றி வருணித்திருக்கும்‌ எல்லாத்‌ தன்மைகளையும்‌ நாம்‌ நம்பிக்கை கொள்ள வேண்டும்‌. நபி (ஸல்‌) அவர்களுடைய ஹதீஸ்கள்‌ அல்குர்‌ஆனின்‌ விளக்கவுரைகளாகும்‌. ஆகவே, நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறியதாக அறிஞர்களால்‌ ஏற்று கொள்ளப்டட்ட உறுதிமிக்க, ஆதாரப்பூர்வமான நபிமொழிகளில்‌ வந்துள்ள அல்லாஹ்வின்‌ தன்மைகள்‌, செயல்கள்‌, பண்புகள்‌ அனைத்தும்‌ அவனுக்கு உண்டு என நாம்‌ ஈமான்‌ கொள்ள வேண்டும்‌.

அல்லாஹ்வின்‌ தூதருக்குக்‌ கட்டுப்பட வேண்டும்‌ என்று வலியறுத்தும்‌ வசனங்கள்‌ குர்‌ஆனில்‌ ஏராளம்‌ உள்ளன. (பார்க்க-4:13, 4:60, 4:59, 34:367)



அல்லாஹ்வின்‌ அழகிய பண்புகளை விவரிக்கும்‌ அல்குர்‌ஆன்‌ வசனங்கள்‌ மற்றும்‌ நபிமொழிகள்‌



1. அல்லாஹ்‌ ஒவ்வொன்றையும்‌ நன்கறிந்தவன்‌ 

அவனே முதலாமவன்‌; அவனே இறுதியானவன்‌!; அவனே வெளிப்படையானவன்‌, அவனே மறைவானவன்‌; அவனே ஒவ்வொன்றையும்‌ நன்கறிந்தவன்‌. (ஸுரா அல்ஹதீது 57 : 3)

(அன்றி) மரணமற்ற என்றும்‌ நிரந்தாரமான அல்லாஹ்வையே நீங்கள்‌ நம்புங்கள்‌. அவனுடைய புகழைக்‌ கூறி அவனைத்‌ துதி செய்து கொண்டிருங்கள்‌. அவன்‌ தன்‌ அடியார்களின்‌ பாவங்களை அறிந்திருப்பதே போதுமானது. (அதற்குரிய தண்டனையை அவன்‌ கொடுப்பான்‌) (அல் புர்கான் 25: 58)

அவன்‌ (அனைவரையும்‌) நன்கறிந்தவனும்‌ ஞானமுடையவனுமாக இருக்கின்றான்‌. (ஸூரா அத்தஹ்ரீம்‌ 66 ; 2)

புகழனைத்தும்‌ அல்லாஹ்வுக்குரியனவே! வானங்களிலும்‌ பூமியிலும்‌ உள்ள அனைத்தும்‌ அவனுக்குச்‌ சொந்தமானவைகளே! மறுமையிலும்‌ எல்லா புகழும்‌ அவனுக்குரியதே! அவன்‌ ஞானமுடையவனும்‌ அனைத்தையும்‌ நன்கறிந்தவனாகவும்‌ இருக்கின்றான்‌. பூமிக்குள்‌ பதிகின்ற (வித்து போன்றவற்றையும்‌, அதிலிருந்து வெளிப்படும்‌ (மரம்‌, செடி ஆகிய) இவற்றையும்‌ வானத்திலிருந்து இறங்குபவற்றையும்‌ அதன்‌ பக்கம்‌ ஏறுகின்றவற்றையும்‌ அவன்‌ நன்கறிவான்‌... (ஸுரா ஸபா 34 : 1-2)

மறைவானவற்றின்‌ சாவிகள்‌ அவனிடமே இருக்கின்றன. அவற்றிலுள்ளவற்றை, அவனைத்‌ தவிர வேறெவரும்‌ அறியார்‌, தரையிலும்‌ கடலிலும்‌, உள்ளவற்றையும்‌ அவன்‌ நன்கறிவான்‌. அவன்‌ அறியாமல்‌ யாதொரு இலையும்‌ உதிர்வதில்லை. பூமியின்‌ (ஆழத்தில்‌) அடர்ந்த இருளில்‌ (புதைந்து) கிடக்கும்‌ (கடுகு போன்ற சிறிய) வித்தும்‌, பசுமையானதும்‌, உலர்ந்ததும்‌ அவனுடைய தெளிவான (பதிவுப்‌) புத்தகத்தில்‌ இல்லாமலில்லை. (ஸூரா அல்‌அன்ஆம்‌ 6 ; 59)

அவன்‌ அறியாமல்‌ யாதொரு பெண்‌ கார்ப்பமாவதுமில்லை, பிரசவிப்பதுமில்லை... (ஸூரா ஃபாதிர்‌ 35 : 11)

ஏழு வானங்களையும்‌, அவற்றைப்‌ போல்‌ பூமியையும்‌ அல்லாஹ்தான்‌ படைத்தான்‌. இவற்றில்‌ (தினசரி நிகழக்கூடிய) சகல விஷயங்களைப்‌ பற்றிய கட்டளை இறங்கிக்‌ கொண்டே இருக்கின்றது. (ஆகவே, நம்பிக்கையாளர்களே!) நிச்சயமாக அல்லாஹ்‌ சகலவற்றின்‌ மீதும்‌ ஆற்றலுடையவன்‌ என்பதையும்‌, நிச்சயமாக அல்லாஹ்‌ தன்‌ ஞானத்தால்‌, எல்லாப்‌ பொருள்களையும்‌ அழமாக அறிந்து கொண்டிருக்கின்றான்‌ என்பதையும்‌, நீங்கள்‌ திட்டமாக அறிந்து கொள்ள வேண்டும்‌ என்பதற்காக இவற்றைப்‌ படைத்தான்‌. (ஸூரா அத்தலாக்‌ 65 ; 12)

(நபியே!) உங்களது இறைவன்‌, அவர்களுடைய உள்ளங்கள்‌ மறைத்து வைத்திருப்பதையும்‌ (அதற்கு மாறாக) அவர்கள்‌ வெளியிடுவதையும்‌ நன்கறிவான்‌. (ஸுரா அல்கஸஸ்‌ 28 ; 69)

நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌: அல்லாஹ்வே ஏழு வானங்கள்‌, பூமியின்‌ இறைவனே! மகத்தான அர்ஷின்‌ இறைவனே! எங்களது இறைவனே! ஒவ்வொரு பொருட்களின்‌ இறைவனே! வித்துகளையும்‌, தானியங்களையும்‌ உடைப்பவனே! தவ்றாத்‌, இன்ஜீல்‌, குர்‌ஆனை இறக்கியவனே! உன்னிடம்‌, எனது நஃப்ஸின்‌ மன இச்சையின் தீங்கை விட்டும்‌, நீ உச்சி முடியை பிடித்துள்ள ஒவ்வொரு ஊர்ந்து செல்லும்‌ பிராணியின்‌ தீங்கை விட்டும்‌ பாதுகாவல்‌ தேடுகிறேன்‌. நீயே முதலாமவன்‌. உனக்கு முன்பு எதுவுமில்லை. நீயே முடிவானவன்‌. உனக்குப்‌ பின்பு எதுவுமில்லை. நீயே வெளிப்படையானவன்‌. உனக்கு மேல்‌ எதுவுமில்லை. நீயே மறைந்தவன்‌. உன்னை விட்டும்‌ மறைந்தது! எதுவுமில்லை. என்‌ சார்பாக கடன்‌ அனைத்தையும்‌ நிறைவேற்றிவிடு. ஏழ்மையிலிருந்து (இரட்சித்து) என்னைப்‌ பிறரிடமிருந்து‌ தேவையற்றவனாக ஆக்கிவிடு! (ஸஹீஹ்‌ முஸ்லிம்‌)

மேற்கூறப்பட்ட சான்றுகள்‌ மூலம்‌ தெரிந்துகொள்வதாவது:

1. அல்லாஹ்‌ அனைத்தையும்‌ அறிந்தவன்‌.

2. இப்பிரபஞ்சத்திலுள்ள எந்த ஒன்றும்‌ அவனது அறிவிலிருந்து தப்பமுடியாது.

3. வானங்களில்‌ உள்ளதையும்‌ வானங்களுக்குக்‌ கீழ்‌ உள்ளதையும்‌. பூமிக்கு மேல்‌ உள்ளதையும்‌ பூமிக்கு கீழ்‌ உள்ளதையும்‌, வானம்‌ பூமிக்கு இடையில்‌ உள்ளதையும்‌ அவன்‌ பூரணமாக அறிந்தே இருக்கின்றான்‌.



2. அல்லாஹ்‌ மிக்க ஆற்றலுள்ளவன்‌: அனைத்தையும்‌ கேட்டவன்‌; பார்ப்பவன்‌:

(நபியே! நீங்கள்‌ கூறுங்கள்‌?) நிச்சயமாக அல்லாஹ்தான்‌ அனைவருக்கும்‌ உணவளிப்பவனும்‌, அசைக்க முடியாத பலசாலியுமாவான்‌. (ஸூரா அத்தாரியாத்‌ 51 : 58)

அல்லாஹ்‌, எல்லாவற்றிற்கும்‌ நிச்சயமாக ஆற்றலுடையோன்‌ என்பதை நீங்கள்‌ அறியவில்லையா? (ஸுரா அல்பகறா 2 : 106)

எவர்கள்‌ அல்லாஹ்வை முற்றிலும்‌ நம்புகின்றார்களோ, அவர்களுக்கு அவனே (முற்றிலும்‌) போதுமானவன்‌. நிச்சயமாக அல்லாஹ்‌ தனது காரியத்தைச்‌ செய்தே முடிப்பான்‌. (ஸுரா அத்தலாக்‌ 65 : 3)

நிச்சயமாக அல்லாஹ்‌ மிகப்‌ பலவானும்‌, அனைவரையும்‌ மிகைத்தவனாகவும்‌ இருக்கின்றான்‌. (ஸுரா அல்ஹஜ்ஜு 22 : 40)

யாவற்றின்‌ மீதும்‌ அல்லாஹ்‌ ஆற்றலுடையோனாக இருக்கின்றான்‌. (ஸூராஅல்கஹ்‌ஃப்‌ 18 ; 45)

நிச்சயமாக அல்லாஹ்‌ நீங்கள்‌ செய்பவற்றை உற்று நோக்குபவனாக இருக்கின்றான்‌. (ஸுரா அல்பகறா 2 : 110)

எங்கள்‌ இறைவா...! நிச்சயமாக நீ செவியுறுபவனாகவும்‌, அறிந்தவனாகவும்‌ இருக்கின்றாய்‌. (ஸுரா அல்பகறா 2 : 127)

அவனுக்கு ஒப்பானது ஒன்றுமில்லை. அவன்‌ (யாவற்றையும்‌) செவியுறுபவனாகவும்‌ உற்று நோக்கியவனாகவும்‌ இருக்கின்றான்‌. (ஸுரா அஷ்ஷூறா 42 : 11)

உங்களுக்கு அல்லாஹ்‌ செய்யும்‌ இந்த உபதேசம்‌ மெய்யாகவே எவ்வளவு சிறந்தது! நிச்சயமாக அல்லாஹ்‌, செவியுறுபவனாகவும்‌ உற்று நோக்கியவனாகவும்‌ இருக்கின்றான்‌. (ஸுரா அன்னிஸா 4 : 58)


மேற்கூறப்பட்ட சான்றுகள்‌ நமக்கு உணர்த்துவதாவது:

1. அல்லாஹ்வின்‌ ஆற்றல்‌ முழுமையானது.

2. அவனை யாரும்‌ எதிர்க்க முடியாது.

3. அவன்‌ அனைவரையும்‌ தனது ஆற்றலுக்குள்‌ வைத்திருக்கின்றான்‌. அவனது படைப்பினங்களில்‌ எவரும்‌ அவனது ஆற்றலைவிட்டு தப்பிவிட முடியாது.

4. படைப்பினங்கள்‌ எவ்வளவு அதிகமாயினும்‌ சரி, எங்கிருப்பினும்‌ சரி அவை அனைத்தையும்‌ அவன்‌ பார்த்துக்‌ கொண்டிருக்கின்றான்‌. அவற்றின்‌ சப்தங்களையும்‌ அசைவுகளையும்‌ கேட்டுக்‌ கொண்டிருக்கின்றான்‌.



3. அல்லாஹ்விற்கு ஆற்றலும்‌, நாட்டமும்‌ உண்டு:

அன்றி, நீ உன்‌ தோட்டத்தில்‌ நுழைந்தபொழுது (இவை அனைத்தும்‌) அல்லாஹ்‌ (எனக்கு) நாடியவையே! அல்லாஹ்வின்‌ உதவியின்றி (நாம்‌) ஒன்றும்‌ (செய்து) விட முடியாது? என்று நீ கூறியிருக்க வேண்டாமா? (ஸூரா அல்கஹ்‌ஃப்‌ 18 : 39)

அல்லாஹ்‌ உங்களுக்கு இலகுவான கட்டளையைக்‌ கொடுக்க நாடுகின்றான்‌. கஷ்டத்தைக்‌ கொடுக்க அவன்‌ நாடமாட்டான்‌. (ஸுரா அல்பகறா 2 : 185)

ஆகவே அல்லாஹ்‌ நாடியிருந்தால்‌ (இவ்வாறு) அவர்கள்‌ சண்டையிட்டுக்‌ கொண்டிருக்கமாட்டார்கள்‌. ஆனால்‌, அல்லாஹ்‌ தான்‌ நாடியவற்றையே செய்வான்‌. (ஸூரா அல்பகறா 2 : 253)

கால்நடைகள்‌ அனைத்தும்‌, உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டிருக்கன்றன. (அவற்றை) எந்நேரத்திலும்‌ உண்ணலாம்‌; வேட்டையாடலாம்‌. எனினும்‌, நீங்கள்‌ இஹ்ராம்‌ (ஹஜ் பிரயாண உடை) அணிந்திருக்கும்‌ சமயத்தில்‌, (இவற்றை) வேட்டையாடுவது உங்களுக்கு ஆகுமானதல்ல. நிச்சயமாக அல்லாஹ்‌, தான்‌ நாடியதை (உங்களுக்குக்‌) கட்டளையிடுகின்றான்‌. (ஸூரா அல்மாயிதா 5 ; 1)

அல்லாஹ்‌ எவர்களுக்கு நேர்வழி காண்பிக்க நாடுகின்றானோ அவர்களுடைய உள்ளத்தை இஸ்லாமின்பால்‌ (செல்ல) விரிவாக்குகிறான்‌. எவர்களை, அவர்களுடைய வழிகேட்டிலேயே விட்டுவிட நாடிகின்றானோ அவர்களுடைய உள்ளத்தை (நிர்ப்பந்தத்தால்‌) வானத்தில்‌ ஏறுபவ(னின்‌ (உள்ளம்‌) போல்‌ கஷ்டப்பட்டு சுருங்கும்படியாக்கி விடுகிறான்‌. (ஸூரா அல்அன்ஆம் 6 ; 125)

மேற்கூறப்பட்ட சான்றுகள்‌ உறுதிசெய்வதாவது

1. அல்லாஹ்‌ நாடுகின்றான்‌, அவனது நாட்டமே மிகைத்தது.

2. அவன்‌ தான்‌ நாடியதை நுட்பத்துடன்‌ தனது அடியார்களுக்கு சட்டமாக ஆக்குகிறான்‌.

3. அல்லாஹ்வின்‌ செயல்கள்‌ அவனது நாட்டமில்லாமல்‌ நடைபெறுவதில்லை.

4. அவனது ஆற்றலையும்‌, அதிகாரத்தையும்‌ நாம்‌ முழு மனதுடன்‌ அங்கீகரிக்க வேண்டும்‌. அவன்‌ நமக்கு மார்க்கமாக்கிய சட்டங்களை முழுமையாக ஏற்று நடக்க வேண்டும்‌. அவனது சட்டங்கள்‌ அனைத்தும்‌ நமக்கு நன்மையானவையே என்று முழுமையாக நம்ப வேண்டும்‌.



4. அல்லாஹ்‌ நாடுகிறான்‌:

“நிச்சயமாக உமது இறைவன்‌; தான்‌ நாடியவற்றை (தடையின்றி) செய்து முடிப்பவன்‌. (ஸுரா ஹூது 11 : 107)

அல்லாஹ்வின்‌ நாட்டம்‌ இரு வகைப்படும்‌.

முதலாவது 'கவ்னிய்யா' - உலக நியதியைச்‌ சார்ந்தது. இது அல்லாஹ்வின்‌ நாட்டப்படியே நடக்கும்‌. ஆனால்‌, இந்த நாட்டம்‌ அல்லாஹ்வுக்கு விருப்பமானதாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இதுவே பின்வரும்‌ வசனத்தில்‌ கூறப்படும்‌ 'நாட்டம்‌' என்பதன்‌ பொருளாகும்.

“அல்லாஹ்‌ நாடியிருந்தால்‌ (இவ்வாறு) அவர்கள்‌ சண்டை செய்திருக்கமாட்டார்கள்‌. அனால்‌, அல்லாஹ்‌ தான்‌ நாடியவற்றையே செய்வான்‌.” (ஸூரா அல்பகரா 2 : 253)

“அன்றி நான்‌ உங்களுக்கு நல்லுபதேசம்‌ செய்யக்‌ கருதினாலும்‌, உங்களை வழிகேட்டிலேயே விட்டுவிட வேண்டும்‌ என்று அல்லாஹ்‌ விரும்பியிருந்தால்‌ என்னுடைய நல்லுபதேசம்‌ உங்களுக்கு யாதொரு பயனுமளிக்காது. அவன்தான்‌ உங்களைப்‌ படைத்து காப்பவன்‌; (மறுமையில்‌) அவனிடமே நீங்கள்‌ கொண்டு வரப்படுவீர்கள்‌” (என்றும்‌ கூறினார்‌.) (ஸூரா ஹூது 11 ; 34)

இரண்டாவது : ‘ஷர்யிய்யா' - மார்க்க நியதியைச்‌ சார்ந்தது. இந்த வகை நாட்டம்‌ நிச்சயமாக அல்லாஹ்வுக்கு விருப்பமானதாக இருக்கும்‌. எனினும்‌, இந்த நாட்டம்‌ நிகழாமலும்‌ போகலாம்‌. உதாரணம்‌, மனிதன்‌ தொழ வேண்டுமென அல்லாஹ்‌ நாடுகிறான்‌. (ஆனால்‌, சிலர்‌ தொழுவதில்லை)

“அல்லாஹ்‌ உங்களை மன்னிக்க நாடுகிறான்‌” (ஸுரா அன்னிஸா 4 : 27) என அல்லாஹ்‌ கூறுவது இவ்வகையே!

'ஷர்யிய்யா அடிப்படையில்‌ உள்ள நாட்டமும்‌' 'கவ்னிய்யா அடிப்படையில்‌ உள்ள நாட்டமும்’‌ அல்லாஹ்வின்‌ மாபெரும்‌ ஞானத்தை அடிப்படையாகக்‌ கொண்டதாகும்‌. அந்த ஞானத்தையும்‌ நுட்பத்தையும்‌ நாம்‌ அறிந்து கொண்டாலும்‌ சரியே; அறிய இயலவில்லையானாலும்‌ சரியே. ஏனெனில்‌, அல்லாஹ்‌ கூறுகிறான்:

“தீர்ப்பளிப்போரிலெல்லாம்‌ அல்லாஹ்‌ மிக மேலான தீர்ப்பளிப்பவனல்லவா?” (ஸூரா அத்தீன்‌ 95 :8)

“உண்மையாகவே உறுதியான நம்பிக்கை கொண்ட மக்களுக்கு அல்லாஹ்வை விட மிக அழகான தீர்ப்பளிப்பவன்‌ யார்‌?” (ஸூரா அல்மாயிதா 5 : 50)



5. அல்லாஹ்‌ மன்னிப்பவன்‌; சக்திமிக்கவன்‌: கண்ணியமிக்கவன்‌

நன்மையை நீங்கள்‌ வெளிப்படுத்தினாலும்‌, அல்லது அதனை மறைத்துக்‌ கொண்டாலும்‌, அல்லது (ஒருவர்‌ உங்களுக்குச்‌ செய்த) தீங்கை நீங்கள்‌ மன்னித்துவிட்டாலும்‌, (அது உங்களுக்கே மிக நன்று). ஏனென்றால்‌, நிச்சயமாக அல்லாஹ்‌, (குற்றங்களை) மிக மன்னிப்பவனாகவும்‌, மிக்க ஆற்றலுடையவனாகவும்‌ இருக்கின்றான்‌. (ஸூரா அன்னிஸா 4 ; 149)

(அவர்களால்‌ உங்களுக்கு ஏதும்‌ வருத்தம்‌ ஏற்பட்டிருந்தால்‌) அதனை நீங்கள்‌ மன்னித்துப்‌ புறக்கணித்துவிடவும்‌. அல்லாஹ்‌ உங்களுக்கு மன்னிப்‌பளிப்பதை நீங்கள்‌ விரும்பமாட்டீர்களா? அல்லாஹ்‌ மிக்க மன்னிப்பவனும்‌ கிருபையுடையவனுமாக இருக்கின்றான்‌. (ஸுரா அன்னூர்‌ 24 ; 22)

(நபியோ நீங்கள்‌ கூறுங்கள்‌) கண்ணியமெல்லாம்‌ அல்லாஹ்வுக்கும்‌, அவனுடைய தூதருக்கும்‌, நம்பிக்கையாளர்களுக்கும்‌ சொந்தமானது... (ஸூரா அல்முனாஃபிகூன்‌ 63 : 8)

வானங்களில்‌ உள்ளவையும்‌, பூமியில்‌ உள்ளவையும்‌ (சதா) அல்லாஹ்வைக்‌ துதி செய்து கொண்டே இருக்கின்றன. (இவற்றின்‌) ஆட்சியும்‌ அவனுக்குரியதே! ஆகவே, அவனுக்கே புகழ் அனைத்தும்‌ உரியது. தவிர, அனைத்தின்‌ மீதும்‌ அவன்‌ முழு ஆற்றலுடையவன்‌. (ஸூரா அத்தகாபுன்‌ 64 : 1)



6. வானம்‌, பூமி மற்றும்‌ அகிலங்கள்‌ அனைத்தின்‌ அரசாட்சி அவனுக்கே உரியது.

“வானங்கள்‌, பூமி ஆகியவற்றின்‌ ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே இவற்றைத்‌ தவிர, அவன்‌ நாடியவற்றையும்‌ படைக்கிறான்‌. ஆகவே, அவன்‌ நாடியவர்களுக்குப்‌ பெண்‌ சந்ததியை மட்டும்‌ கொடுக்கின்றான்‌. அவன்‌ நாடியவர்களுக்கு ஆண்‌ சந்ததியை மட்டும்‌ கொடுக்கின்றான்‌. அல்லது ஆணையும்‌, பெண்ணையும்‌ கலந்தே கொடுக்கின்றான்‌. மேலும்‌ அவன்‌ நாடியவர்களை (சந்ததியற்ற) மலடாகவும்‌ ஆக்கிவிடுகின்றான்‌. நிச்சயமாக அவன்‌ (அவர்களின்‌ தகுதியை) நன்கறிந்தோனும்‌ (தான்‌ விரும்பியவாறு செய்ய) ஆற்றலுடையோனுமாக இருக்கின்றான்‌.” (ஸுரா அஷ்ஷூறா 42 : 49, 50)

அவனுக்கு ஒப்பானது ஒன்றுமில்லை. அவன்‌ (அனைத்தையும்‌) செவியுறுபவனாகவும்‌ உற்று நோக்கியவனாகவும்‌ இருக்கின்றான்‌. வானங்கள்‌, பூமியின்‌ (பொக்கிஷங்களின்‌) சாவிகள்‌ அவனிடமே இருக்கின்றன. அவன்‌ நாடியவர்களுக்கு வாழ்வாதாரத்தை விரிவாக்குகிறான்‌. (அவன்‌ நாடியவர்களுக்குச்‌) சுருக்கி விடுகின்றான்‌. நிச்சயமாக அவன்‌ அனைத்தையும்‌ நன்கறிந்தவன்‌. (ஆகவே அவரவர்‌ தகுதிக்குத்‌ தக்கவாறு கொடுக்கின்றான்‌)” (ஸூரா அஷ்ஷூறா 42 : 11, 12)

“உணவளிக்க அல்லாஹ்‌ பொறுப்பேற்றுக்‌ கொள்ளாத எந்த உயிரினமும்‌ பூமியில்‌ இல்லை. அவை தங்கியிருக்குமிடத்தையும்‌ அவை இறந்து அடங்குமிடத்தையும்‌ அவன்‌ அறிந்தேயிருக்கின்றான்‌. இவை அனைத்தும்‌ (லவ்ஹுல்‌ மஹ்‌ஃபூள்‌ என்னும்‌) தெளிவான (அவனுடைய) பதிவுப்‌ புத்தகத்தில்‌ பதிவாகி இருக்கின்றன. (ஸூரா ஹூது 11 : 6)

“மறைவானவற்றின்‌ சாவிகள்‌ அவனிடமே இருக்கின்றன. அவற்றால்‌ உள்ளவற்றை அவனைத் தவிர வேறெவரும்‌ அறியமாட்டார்‌. தரையிலும்‌ கடலிலும்‌ உள்ளவற்றையும்‌ அவன்‌ நன்கறிவான்‌. அவன்‌ அறியாமல்‌ ஓர்‌ இலையும்‌ உதிர்வதில்லை. பூமியின்‌ (ஆழத்தில்‌) அடர்ந்த இருளில்‌ (புதைந்து) கிடக்கும்‌ (கடுகு போன்ற சிறிய) வித்தும்‌, பசுமையானதும்‌, உலர்ந்ததும்‌ அவனுடைய தெளிவான (பதிவுப்‌) புத்தகத்தில்‌ இல்லாமலில்லை. (ஸூரா அல்‌அன்‌ ஆம்‌ 6 : 59)

“நிச்சயமாக (உலக முடிவு) காலத்தைப்‌ பற்றிய ஞானம்‌ அல்லாஹ்விடத்தில்‌ (மட்டும்‌) தான்‌ இருக்கிறது. அவனே மழையை இறக்கி வைக்கிறான்‌; அவனே கர்ப்பங்களில்‌ தரிப்பதையும்‌ அறிவான்‌. எவரும்‌ நாளைக்கு அவர்‌ என்ன செய்வார்‌ என்பதை அறிய மாட்டார்‌. எந்த பூமியில்‌ இறப்பார்‌ என்பதையும்‌ எவரும்‌ அறியமாட்டார்‌. நிச்சயமாக அல்லாஹ்தான்‌ (இவற்றை) நன்கறிந்தவனும்‌ தெரிந்தவனுமாக இருக்கின்றான்‌.” (ஸூரா லுக்மான்‌ 31 ; 34)



7. அல்லாஹ்‌ அளவற்ற அருளாளன்‌: நிகரற்ற அன்புடையவன்‌

அளவற்ற அருளாளனும்‌ நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின்‌ பெயரால்‌... (ஸுரா அன்னம்ல்‌ 27 : 30)

எங்கள்‌ இறைவனே! நீ ஞானத்தாலும்‌ கருணையாலும்‌ யாவரையும்‌ விட மிக்க விசாலமானவன்‌. (ஸுரா அல்முஃமின்‌ 40 ; 7)

அல்லாஹ்‌, நம்பிக்கையாளர்‌( களாகிய உங்‌)களின்‌ மீது மிக்க அன்புடையோனாக இருக்கின்றான்‌. (ஸுரா அல்‌அஹ்ஸாப்‌ 33 : 43)

எனினும்‌ என்னுடைய கருணை அனைத்தையும்‌ விட மிக விரிவானது. (ஸுரா அல்அஃராஃப்‌ 7 : 156)

அவன்‌ (நம்பிக்கை கொண்டவர்களை) மிக்க மன்னிப்பவனும்‌, நேசிப்பவனுமாக இருக்கின்றான்‌. (ஸுரா அல்புரூஜ்‌ 82 : 14)

மேற்கூறப்பட்ட குர்‌ஆன்‌ வசனங்கள்‌, 'அல்லாஹ்‌ அவனது அடியார்களில்‌ அவன்‌ ஏவிய நல்ல பண்புகளுடைய நல்லோர்களை நேசிக்கின்றான்‌: அல்லாஹ்வின்‌ அடியார்களாகிய நாம்‌ அல்லாஹ்வின்‌ மீது நேசம்‌ வைக்க வேண்டும்‌. அவன்‌ மீது அன்புகொள்ள வேண்டும்‌. அவனை நேசிப்பவர்கள்‌ அவனது தூதர்‌ முஹம்மது (ஸல்‌) அவர்களையும்‌ நேசிப்பதுடன்‌. அவர்களது வழியை நடைமுறைப்படுத்தியும்‌ வாழ வேண்டும்‌' என்ற கருத்துகளை மிகத்‌ தெளிவாக உறுதிப்படுத்துகின்றன.

உங்களுடைய இறைவன்‌ (உங்களுக்கு) அருள்‌ புரிவதைத்‌ தன்மீது கடமையாக்கிக்‌ கொண்டான்‌. (ஸூரா அல்‌அன்‌ஆம்‌ 6 : 54)

அவன்‌ மிக்க மன்னிப்போனும்‌, மிக்க அன்புடையோனுமாக இருக்கின்றான்‌. ... (ஸுரா யூனுஸ்‌ 10 : 107)

பாதுகாப்பதில்‌ அல்லாஹ்‌ மிக்க மேலானவன்‌; அவனே அருள்‌ புரிபவர்களிலெல்லாம்‌ மிக்க அருளாளன்‌, (ஸுரா யூஸுஃப்‌ 12 : 64)

மேற்கண்ட இறைவசனங்கள்‌ “அல்லாஹ்வின்‌ அருள்‌ விசாலமானது. அவனது அருள்‌ அவனது அடியார்கள்‌, படைப்பினங்கள்‌ என அனைத்துக்கும்‌ பொதுவானது. மேலும்‌ அவனை நம்பிக்கை கொள்ளும்‌ முஃமின்களுக்கு மிக விசேஷமான கருணையையும்‌ அருளையும்‌ அவன்‌ வாரி வழங்குகிறான்‌” என்ற விஷயத்தை மிக ஆழமாக விவரிக்கின்றன.



8. அல்லாஹ்தான்‌ உயிர்ப்பிக்கின்றான்‌; மரணிக்கச்‌ செய்கின்றான்‌

அவனே என்னை மரணிக்கச்‌ செய்வான்‌; பின்னர்‌ அவனே என்னை (மறுமையில்‌) உயிர்ப்பிப்பான்‌. (ஸுரா அஷ்ஷூஅறா 26 : 81)

அவனே இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை வெளிப்படுத்துகின்றான்‌. அவனே உயிருள்ளவற்றிலிருந்து மரணித்தவற்றை வெளிப்படுத்துகின்றான்‌. அவனே இறந்த பூமிகளையும்‌ செழிப்பாக்குகின்றான்‌. இவ்வாறே (மரணித்த பின்னர்‌) மறுமையில்‌ நீங்கள்‌ வெளிப்படுத்தப்படுவீர்கள்‌. (ஸூரா அர்ரூம்‌ 30 : 19)

அவனே உயிர்ப்பிக்கின்றான்‌; மரணிக்கவும்‌ வைக்கின்றான்‌. அவனே உங்களின்‌ இறைவனும்‌ உங்கள்‌ முன்னோர்களின்‌ இறைவனுமாவான்‌. எனினும்‌, அவர்கள்‌ (இவ்விஷயத்திலும்‌ வீண்‌) சந்தேகத்தில்‌ விளையாடிக்‌ கொண்டிருக்கின்றனர்‌! (ஸூரா அத்துகான்‌ 44 : 8)

(மனிதர்களே!) நீங்கள்‌ (இறந்தபின்‌ உங்களை உயிர்ப்பிக்கமாட்டான்‌ என்று) அல்லாஹ்வை எவ்வாறு நிராகரிக்கிறீர்கள்‌? உயிரற்றவர்களாக இருந்த உங்களை அவனே உயிர்ப்பித்தான்‌. பின்னும்‌ அவனே உங்களை மரணிக்கச்‌ செய்வான்‌. பின்னும்‌ அவனே உங்களை உயிர்ப்பிப்பான்‌. அதன்‌ பின்னும்‌ நீங்கள்‌ (உங்கள்‌ செயல்களுக்குரிய கூலியை அடைவதற்காக) அவனிடமே (விசாரணைக்குக்‌) கொண்டு வரப்படுவீர்கள்‌. (ஸூரா அல்பகறா 2 : 28)

நிச்சயமாக அவன்தான்‌ மரணிக்கச்‌ செய்கின்றான்‌. (திரும்பவும்) உயிர்ப்பிக்கின்றான்‌. (ஸூரா அன்னஜ்ம்‌ 53 : 44)

அவன்தான்‌ படைப்புகளை ஆரம்பத்தில்‌ உற்பத்தி செய்பவன்‌. அவனே (அவை மரணித்த பின்னரும்‌ உயிர்கொடுத்து) அவற்றை மீள வைக்கிறவன்‌. இது அவனுக்கு மிக்க எளிது, வானங்களிலும்‌ பூமியிலும்‌ அவனுடைய (உதாரணமும்‌ பரிசுத்தத்‌) தன்மையும்‌(தான்‌) மிக்க மேலானதாகும்‌. அவன்‌ (யாவற்றையும்‌) மிகைத்தவனும்‌ ஞானமுடையோனுமாக இருக்கின்றான்‌. (ஸூரா அர்ரூம்‌ 30 : 27)



9. அல்லாஹ்‌ பேசும்‌ ஆற்றலுடையவன்‌

அல்லாஹ்‌, பேசும்‌ ஆற்றலுடையவன்‌. அவனுடைய பேச்சு முற்றிலும்‌ உண்மையானது நேர்மையானது. அவனது பேச்சில்‌ பொய்யோ, முரண்டாடோ இருக்காது.

அல்லாஹ்வைவிட உண்மை சொல்பவர்‌ யார்‌? (ஸூரா அன்னிஸா 4 ; 87)

அல்லாஹ்வைவிட உண்மை சொல்பவர்‌ யார்‌? (ஸூரா அன்னிஸா 4 ; 122)

அன்றி, அல்லாஹ்‌, (மறுமை நாளில்‌ ஈஸாவை நோக்கி) “மர்யமுடைய குமாரன்‌ ஈஸாவே! அல்லாஹ்வுடன்‌ என்னையும்‌, என்னுடைய தாயையும்‌ இரு கடவுள்களாக எடுத்துக்‌ கொள்ளுங்கள்‌ என்று மனிதர்களை நோக்கி நீங்கள்‌ கூறினீர்களா? என்று கேட்பான்‌ என்பதையும்‌ ஞாபமூட்டுங்கள்‌.

(ஸூரா அல்மாயிதா 3 : 16)

(நபியே!) உமதிறைவனின்‌ வாக்கு, உண்மையாகவும்‌ நீதியாகவும்‌ பூர்த்தியாகிவிட்டது. அவனுடைய வாக்குகளை மாற்றுவோன்‌ யாருமில்லை. அவன்‌ (அனைத்தையும்‌) செவியுறுபவனாகவும்‌, தன்கறிந்தவனாகவும்‌ இருக்கின்றான்‌. (ஸுரா அல்‌அன்‌ஆம்‌ 6 : 115)

மூஸாவு(க்கு வஹி அறிவித்தது)டன்‌ அல்லாஹ்‌, பேசியும்‌ இருக்கின்றான்‌. (ஸூரா அன்னிஸா 4 : 164)

(நம்மால்‌ அனுப்பப்பட்ட) அத்தூதர்கள்‌. (யாவரும்‌ ஒரே பதவியுடையவர்களன்று) அவர்களில்‌ சிலரை, சிலரைவிட நாம்‌ மேன்மையாக்கியுள்ளோம்‌. அவர்களில்‌ சிலருடன்‌ அல்லாஹ்‌ (நேரடியாகப்‌) பேசியிருக்கின்றான்‌. (ஸுரா அல்பகறா 2 : 253)

நாம்‌ (குறிப்பிட்ட இடத்திற்கு) குறிப்பிட்ட நேரத்தில்‌ மூஸா வருகை தந்து, அவருடைய இறைவன்‌, அவருடன்‌ பேசியபோது... (ஸூரா அல்‌அஃராப்‌ 7 : 143)

தூர்‌ (ஸீனாய்‌ என்னும்‌ பாக்கியம்‌ பெற்ற) மலையின்‌ வலது பக்கத்திலிருந்து அவரை நாம்‌ அழைத்தோம்‌. ரகசியம்‌ பேசுகிறவராக அவரை (நமக்கு) நெருக்கமாக்கினோம்‌. (ஸூரா மர்யம்‌ 19 : 52)

(நபியே!) உங்களுடைய இறைவன்‌ மூஸாவை அழைத்து, நீங்கள்‌ அநியாயக்கார (ஃபிர்‌அவ்னுடைய) மக்களிடம்‌ செல்லுங்கள்‌ எனக்‌ (கூறி) அழைத்ததை நீங்கள்‌ கவனித்துப்‌ பாருங்கள்‌. (ஸுரா அஷ்ஷூஅறா 26 : 10)

அது சமயம்‌ அவர்களின்‌ இறைவன்‌, 'இம்மரத்தின்‌ கனியை நீங்கள்‌ புசிக்கக்கூடாதென்று நான்‌ உங்களைத்‌ தடுத்திருக்கவில்லையா?... என்று (கூறி) அவ்விருவரையும்‌ அழைத்தான்‌. (ஸுரா அல்அஃராஃப்‌ 7: 22)

அவன்‌ (விசாரணைக்காக) அவர்களை அழைக்கும்‌ நாளில்‌, (அவர்களை நோக்கி, நம்முடைய நேரான வழியில்‌ அழைக்க உங்களிடம்‌ வந்த) நம்முடைய தூதர்களுக்கு நீங்கள்‌ என்ன பதில்‌ கூறினீர்கள்‌? என்று கேட்பான்‌. (ஸுரா அல்கஸஸ்‌ 28 : 65)

இவ்வாறான இறை வசனங்களின்‌ கூற்றுப்படி “அல்லாஹ்‌ பேசும்‌ ஆற்றலுடையவன்‌: அவன்‌ நாடியவருடன்‌, அவன்‌ நாடும்போது, நாடியபடி பேசுவான்‌. அவனது பேச்சு படைப்பினங்களின்‌ சப்தத்திற்கு ஒத்ததாக இருக்காது” என்று நாம்‌ நம்ப வேண்டும்‌.



10. அல்லாஹ்வின்‌ கிதாபாகிய அல்குர்‌ஆன்‌ அவனது போச்சாகும்‌

அல்லாஹ்வின்‌ கிதாபாகிய அல்குர்‌ஆன்‌ அவனது பேச்சாகும்‌. அது அவனால்‌ படைக்கப்பட்டதல்ல. அது அவனுடைய பேசும்‌ தன்மையால்‌ உருவானதாகும்‌. இவ்வாறு ஈமான்‌ கொள்ள வேண்டும்‌.

இதைப்‌ பற்றிய குர்‌ஆன்‌ வசனங்கள்‌:

(நபியே) இணைவைத்து வணங்குபவர்களில்‌ எவனும்‌ உங்களிடம்‌ பாதுகாப்பைக்‌ கோரினால்‌, அல்லாஹ்வுடைய பேச்சை அவன்‌ செவியுறும்‌ வரையில்‌ அவனுக்கு அபயமளியுங்கள்‌! (ஸூரா அத்தவ்பா 9 :6)

(நம்பிக்கையாளர்களே!) உங்கள்‌ வார்த்தைகளுக்காக இவர்கள்‌ நம்பிக்கை கொள்வார்களென நீங்கள்‌ எதிர்பார்க்கின்றீர்களா? அல்லாஹ்வின்‌ பேச்சைக்‌ கேட்டு அதை நன்கறிந்த பின்னரும்‌, அதை மாற்றிவிடும்‌ ஒரு பிரிவினரும்‌ அவர்களில்‌ இருந்தனர்‌. அவர்களும்‌ (இதனை) நன்கறிவார்கள்‌. (ஸூரா அல்பகறா 2 ;75)

(நபியே!) இவர்கள்‌. அல்லாஹ்வுடைய வசனத்தை மாற்றி விடவே கருதுகின்றார்கள்‌. ஆகவே, நீங்கள்‌ அவர்களை நோக்கி, நீங்கள்‌ எங்களைப்‌ பின்பற்றி வரவேண்டாம்‌. இதற்கு முன்னரே அல்லாஹ்‌ இவ்வாறு கூறிவிட்டான்‌' என்றும்‌ கூறுங்கள்‌! (ஸுரா அல்‌ஃபத்ஹ்‌ 48 : 15)

(நபியே!) வஹி மூலம்‌ உங்களுக்கு அறிவிக்கப்பெற்ற உங்கள்‌ இறைவனின்‌ கிதாபை நீங்கள்‌ (தொடர்ந்து) ஓதிக்‌ கொண்டேயிருங்கள்‌!அவனுடைய கட்டளைகளை எவராலும்‌ மாற்றிவிட முடியாது. (ஸூரா அல்கஃப்‌ 18 ; 27)

நிச்சயமாக இந்தக்‌ குர்ஆன்‌, இஸ்ராயீலின்‌ சந்ததிகள்‌ எவ்விஷயத்தில்‌ தர்க்கித்துக்‌ கொண்டிருக்கிறார்களோ அவற்றில்‌, பெரும்பாலானவற்றை அவர்களுக்கு விவரித்துக்‌ கூறுகிறது. (ஸூரா அன்னம்ல்‌ 27 : 76)



11. அல்குர்‌ஆன்‌ அல்லாஹ்வின்‌ புறத்திலிருந்து இறக்கப்பட்ட கிதாப்(நூல்)

(மனிதர்களே) இதுவும்‌ இறைநூலாகும்‌. இதனை நாமே இறக்கி வைத்தோம்‌. (இது) மிக்க பாக்கியமுடையது. ஆகவே, இதனையே நீங்கள்‌ பின்பற்றுங்கள்‌. அன்றி (அவனுக்குப்‌) பயந்து (பாவத்திலிருந்து விலகிக்‌) கொள்ளுங்கள்‌. அதனால்‌ அவனது அருளுக்குள்ளாவீர்கள்‌. (ஸுரா அல்அன்அம்‌ 6 : 155)

(நபியே) ஏதேனும்‌ ஒரு மலையின்‌ மீது நாம்‌ இந்தக்‌ குர்‌ஆனை இறக்கி வைத்திருந்தால்‌, அது அல்லாஹ்வின்‌ பயத்தால்‌ நடுங்கி வெடித்துப்‌ பிளந்து போவதை நிச்சயமாக நீங்கள்‌ காண்பீர்கள்‌. மனிதர்கள்‌ சிந்தித்துப்‌ பார்ப்பதற்காக இவ்வுதாரணங்களை நாம்‌ கூறுகின்றோம்‌. (ஸுரா அல்ஹஷ்ர்‌ 59 : 21)

(நபியே) நாம்‌ ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தைக்‌ கொண்டு மாற்றினால்‌, இவர்கள்‌ (உங்களை நோக்கி) நிச்சயமாக நீங்கள்‌ பொய்யர்‌ என்று கூறுகின்றனர்‌. எ(ந்தெந்த நேரத்தில்‌ எந்தெந்தக்‌ கட்டளைகளை் எந்தெந்த வசனத்)தை இறக்க வேண்டுமென்பதை அல்லாஹ்‌ நன்கறிவான்‌; இவர்களில்‌ பெரும்பாலோர்‌ (இந்த உண்மையை) அறியமாட்டார்கள்‌. மெய்யாகவே இதை உங்கள்‌ இறைவனிடமிருந்து, ரூஹுல்‌ குத்ஸ்‌ (என்னும்‌ ஜிப்ரயில்‌) தான்‌ இறக்கி வைத்தார்‌ என்று நீங்கள்‌ கூறுங்கள்‌! (இந்தக்‌ குர்‌ஆன்‌ இறைவனுக்கு) நம்பிக்கைகொண்டோரை உறுதிப்படுத்துவதற்‌காகவும்‌, முற்றிலும்‌ கீழ்ப்படிந்தோருக்கு நேரான வழியாகவும்‌ நற்செய்தியாகவும்‌ இருக்கிறது. (நபியே! இக்கிதாபின்‌ வசனங்களை ரோமிலிருந்து வந்திருக்கும்‌) ஒரு (கிறிஸ்தவ) மனிதன்தான்‌ நிச்சயமாக உங்களுக்கு கற்றுக்‌ கொடுக்கிறான்‌; (இறைவனல்ல) “என்று அவர்கள்‌ கூறுவதை நிச்சயமாக நாம்‌ அறிவோம்‌. எவன்‌ (உங்களுக்குக்‌) கற்றுக்‌ கொடுப்பதாக அவர்கள்‌ கூறுகிறார்களோ, அந்தக்‌ கிறிஸ்தவன்‌ (அரபி மொழியை ஒரு சிறிதும்‌ அறியாத) அஜுமி: இக்கிதாபோ மிக (நாகரிகமான) தெளிவான அரபி மொழியில்‌ இருக்கிறது. (ஆகவே அவர்கள்‌ கூறுவது சரியன்று) (ஸுரா அன்னஹ்ல்‌ 16 : 101-103)

மேற்கூறப்பட்ட குர்‌ஆன்‌ வசனங்களை நாம்‌ நம்பிக்கை கொள்ளும்போது ஏற்படும்‌ பலன்கள்‌ என்னவெனில்‌, அல்குர்‌ஆனை அல்லாஹ்வின்‌ பேச்சு, என்றும்‌ அவன்‌ இறக்கி வைத்த கிதாபு (நூல்‌) என்றும்‌ நம்புகிறோம்‌. அதன்‌ மூலம்‌ அதை கண்ணியப்படுத்துகிறோம்‌; அதன்‌ சட்டங்களை மதித்து நடக்கிறோம்‌; அதில்‌ விலக்கப்பட்டவற்றை விட்டு விலகிக்‌ கொள்கிறோம்‌; அதில்‌ உள்ள செய்திகளை உண்மைப்படுத்துகிறோம்‌.



அல்லாஹ்விற்கு அழகிய பெயர்கள்‌ உண்டு; அவனுக்கு நிகரானவரும்‌, ஒப்பானவரும்‌ எவருமில்லை

(நபியே மிக்க சிறப்பும்‌, கண்ணியமும்‌ உள்ள உங்களது இறைவனின்‌ பெயர்‌ மிக பாக்கியமுடையது. (ஸூரா அர்ரஹ்மான்‌ 55 : 74)

அவன்‌ ஒருவனையே நீங்கள்‌ வணங்குங்கள்‌. அவனை வழிபடுவதில்‌ (உங்களுக்கு ஏற்படும்‌ கஷ்டங்களையும்‌) நீங்கள்‌ சகித்துக்‌ கொள்ளுங்கள்‌. அவனுடைய தன்மைக்கு ஒப்பான எவரையும்‌ நீங்கள்‌ அறிவீர்களா?(ஸூரா மர்யம்‌ 19 : 65)

(தவிர) அவனுக்கு நிகராக ஒன்றுமில்லை. (ஸுரா அல்‌இக்லாஸ்‌ 112 ; 4)

ஆகவே, (இவற்றையெல்லாம்‌) நீங்கள்‌ தெளிவாக அறிந்து கொண்டே, அல்லாஹ்வுக்கு எதனையும்‌ இணையாக்காதீர்கள்‌. (ஸுரா அல்பகறா 2; 22)

அல்லாஹ்‌ அல்லாதவற்றை அவனுக்கு இணையாக எடுத்‌துக்கொண்டு, அல்லாஹ்வை நேசிப்பதுபோல அவற்றையும்‌ நேசிப்போர்‌ மனிதர்களில்‌ பலர்‌ இருக்கின்றனர்‌. (ஸூரா அல்பகறா 2 : 165)

(நபியே) நீங்கள்‌ கூறுங்கள்‌: புகழ்‌ அனைத்தும்‌ அல்லாஹ்வுக்குரியதே! அவனுக்கு யாதொரு சந்ததியுமில்லை. அவனுடைய ஆட்சியில்‌ அவனுக்குக்‌ கூட்டாளி ஒருவருமில்லை. அவன்‌ பலவீனனாக இருக்கிறான்‌ என்‌று (கூறுவதற்குமில்லை.) அவனுக்கு உதவியாளன்‌ ஒருவனுமில்லை. ஆகவே, அவனை மிக மிக பெருமைப்படுத்திக்‌ கூறுங்கள்‌! (ஸுரா பனீஇஸ்ராயில்‌ 17 ; 11)‌

(நன்மை தீமைகளைக்‌ தெளிவாகப்‌) பிரித்தறிவிக்கும்‌ இந்த இறை நூலைத்‌ தன்‌ அடியார்‌ (முஹம்மது (ஸல்‌) மீது இறக்கியவன்‌ மிக்க பாக்கியமுடையவன்‌. இது உலகத்தார்‌ யாவரையும்‌ அச்சமூட்டி, எச்சரிக்கை செய்வதாக இருக்கின்றது. (இதை அருளியவன்‌ எத்தகையவனென்றால்‌,) வானங்கள்‌ பூமியின்‌ ஆட்சி அவனுக்குரியதே! அவன்‌ யாதொரு சந்ததியை எடுத்துக்‌ கொள்ளவும்‌ இல்லை; அவனுடைய ஆட்சியில்‌ அவனுக்கு யாதொரு துணையுமில்லை. அவனே யாவற்றையும்‌ படைத்து அவற்றுக்குரிய இயற்கைத்‌ தன்மையையும்‌ அமைத்தவன்‌. (ஸூரா அல்‌ஃபுர்கான்‌ 25 : 1-2)

அல்லாஹ்‌ சந்ததி எடுத்துக்‌ கொள்ளவில்லை; அவனுடன்‌ வணக்கத்திற்குரிய வேறு இறைவனில்லை. அவ்வாறாயின்‌, ஒவ்வொரு இறைவனும்‌ தான்‌ படைத்தவற்றைக்‌ தன்னுடன்‌ சேர்த்துக்‌ கொண்டு ஒருவர்‌ மற்றவர்‌ மீது போர்‌ புரிய ஆரம்பித்துவிடுவர்‌. (நிராகரிக்கும்‌) இவர்கள்‌ வருணிக்கும்‌ இத்தகைய வருணிப்புகளை விட்டும்‌ அல்லாஹ்‌ மிக்க பரிசுத்தமானவன்‌. (ஸூரா அல்முஃமினூன்‌ 23 : 91, 92)

ஆகவே, (சர்வ வல்லமையுள்ள) அல்லாஹ்வுக்கு நீங்கள்‌ உதாரணங்கள்‌ கூறாதீர்கள்‌. அல்லாஹ்வுக்குரிய உதாரணத்தை நிச்சயமாக அல்லாஹ்தான்‌ அறிவான்‌; நீங்கள்‌ அறியமாட்டீர்கள்‌. (ஸூரா அன்னனஹ்ல்‌ 16 : 74)

அந்த அல்லாஹ்வைத்‌ தவிர, வணக்கத்திற்குரிய வேறொரு இறைவனில்லை. (அவனே) மறைவானதையும்‌ வெளிப்படையானதையும்‌ நன்கறிந்தவன்‌. அவனே அளவற்ற அருளாளன்‌; நிகரற்ற அன்புடையோன்‌. அந்த அல்லாஹ்வைக்‌ தவிர, வணக்கத்திற்குரிய வேறொரு இறைவனில்லை. அவன்தான்‌ மெய்யான அரசன்‌, பரிசுத்தமானவன்‌; ஈடேற்றம்‌ அளிப்பவன்‌, அபயமாளிப்பவன்‌: பாதுகாவலன்‌; (யாவரையும்‌) மிகைத்தவன்‌; அடக்கி ஆள்பவன்‌; பெருமைக்குரியவன்‌. இவர்கள்‌ கூறும்‌ இணை துணைகளைவிட்டு அல்லாஹ்‌ மிகப்‌ பரிசுத்தமானவன்‌. அந்த அல்லாஹ்தான்‌, படைப்பவன்‌. (அவனே) படைப்புகளை ஒழுங்கு செய்பவன்‌; (அவனே) படைப்புகளின்‌ உருவத்தையும்‌ அமைப்பவன்‌, அவனுக்கு அழகான பல பெயர்கள்‌ இருக்கின்றன. வானங்களிலும்‌, பூமியிலும்‌ உள்ளவை அனைத்தும்‌ அவனையே துதி செய்கின்றன. அவனே (யாவரையும்‌) மிகைத்தவன்‌; மிக ஞானமுடையவன்‌.(ஸூரா அல்ஹஷ்ர்‌ 59 : 22-24)

(நபியே!) நீங்கள்‌ கூறுங்கள்‌: நிச்சயமாக என்னுடைய இறைவன்‌ (ஆகாதென்று), தடுத்திருப்பதெல்லாம்‌, பகிரங்கமாகவோ இரகசியமாகவோ செய்யப்படும்‌ மானக்‌ கேடான. காரியங்களையும்‌, மற்ற பாவங்களையும்‌, நியாயமின்றி ஒருவர்‌ மீது (ஒருவர்‌) கொடுமை செய்வதையும்‌, யாதொரு ஆதாரமும்‌ இல்லாதிருக்கும்போதே அல்லாஹ்வுக்கு நீங்கள்‌ இணைவைப்பதையும்‌, நீங்கள்‌ அறியாதவற்றை அல்லாஹ்வின்‌ மீது (பொய்யாகக்‌) கூறுவதையும்தான்‌. (ஸூரா அல்‌அஃராப்‌ 7: 33)

மேற்கூறப்பட்ட குர்‌ஆன்‌ வசனங்கள்‌ அல்லாஹ்விற்கு நிகர்‌, ஒப்பானவர்‌ எவருமில்லை என்பதை மிகத்‌ தெளிவாகத்‌ தெரிவிக்கின்றன. இதை நம்பும்போது நமது உள்ளத்தில்‌ அல்லாஹ்வின்‌ வல்லமையும்‌. மகத்துவமும்‌ ஏற்படுகிறது. அவன்‌ மீதான அன்புடன்‌ அச்சமும்‌ உண்டாகிறது. மேலும்‌, கடைசி வசனத்தில்‌ கூறப்பட்டது “போல்‌ அல்லாஹ்வைப்‌ பற்றி ஆதாரமற்ற விஷயங்களை பேசுவதிலிருந்து நம்மைப்‌ பாதுகாத்துக்கொள்ள வேண்டும்‌ எனவும்‌ அறிய முடிகிறது.



அல்லாஹ்வின்‌ செயல்களைக்‌ குறிக்கும்‌ வசனங்கள்‌ மற்றும்‌ நபிமொழிகள்‌



1. அல்லாஹ்‌ கேட்கின்றான்‌; பார்க்கின்றான்

(நபியே) எவள்‌ தன்‌ கணவரைப்‌ பற்றி உங்களிடம்‌ தர்க்கித்து (அவரைப்‌ பற்றி) அல்லாஹ்விடமும்‌ முறையிட்டாளோ அவளுடைய முறையீட்டை அல்லாஹ்‌ நிச்சயமாகக்‌ கேட்டுக்‌ கொண்டான்‌. (அதைப்‌ பற்றி) உங்கள்‌ இருவரின்‌ தர்க்க வாதத்தையும்‌ அல்லாஹ்‌ செவியுற்றான்‌. நிச்சயமாக அல்லாஹ்‌ (அனைத்தையும்‌) செவியுறுபவனும்‌, (ஒவ்வொருவரின்‌ செயலையும்‌) உற்று நோக்கியவனுமாக இருக்கின்றான்‌. (ஸுரா அல்முஜாதலா 58 : 1)

எவர்கள்‌ 'நிச்சயமாக அல்லாஹ்‌ ஏழை; நாங்கள்தான்‌ சீமான்கள்‌' என்று கூறினார்களோ, அவர்களுடைய சொல்லை நிச்சயமாக அல்லாஹ்‌ கேட்டுக்‌ கொண்டான்‌. (ஸுரா ஆலஇம்ரான்‌ 3 : 181)

அல்லது அவர்கள்‌ (தங்கள்‌ மனதில்‌) மறைத்து வைத்திருப்பதையும்‌ அல்லது (தங்களுக்குள்‌) இரகசியமாகப்‌ பேசிக்‌ கொள்வதையும்‌ நாம்‌ கேட்கமாட்டோம்‌ என்று அவர்கள்‌ எண்ணிக்‌ கொண்டிருக்கின்றனரா? அன்று! அவர்களிடத்தில்‌ இருக்கும்‌ நம்முடைய மலக்குகள்‌ (ஒவ்வொன்றையும்‌) பதிவு செய்துகொண்டே வருகின்றனர்‌. (ஸுரா அஸ்ஸூக்ருஃப்‌ 43 : 80)

(அகுற்கு இறைவன்‌) கூறினான்‌: நீங்கள்‌ பயப்பட வேண்டாம்‌. நான்‌ உங்கள்‌ இருவருடன்‌ இருந்து (அனைத்தையும்‌) கேட்டுக்‌ கொண்டும்‌ பார்த்துக்‌ கொண்டும்‌ இருக்கின்றேன்‌. (ஸூரா தாஹா 20 : 40)

(அவன்‌ செய்யும்‌ இந்தத்‌ தீய காரியங்களை) நிச்சயமாக அல்லாஹ்‌ பார்க்கின்றான்‌ என்பதை அவன்‌ அறிந்து கொள்ளவில்லையா? (ஸுரா அல்அலக்‌ 96 : 14)

(நபியே!) நீங்கள்‌ (தனித்து) நின்று தொழுதாலும்‌, அல்லது மற்றவர்களுடன்‌ சேர்ந்து சிரம்‌ பணிந்து வணங்கினாலும்‌ உங்களை அவன்‌ பார்க்கின்றான்‌. நிச்சயமாக அவன்‌ அனைத்தையும்‌ செவியுறுபவனும்‌ நன்கறிபவனுமாக இருக்கின்றான்‌. (ஸூரா அஷ்ஷுஅறா 26 : 216-220)

(நபியே! அவர்களை நோக்கி) நீங்கள்‌ கூறுங்கள்‌: நீங்கள்‌ செய்பவற்றை செய்யுங்கள்‌. நிச்சயமாக அல்லாஹ்வும்‌ அவனுடைய தூதரும்‌ மற்ற நம்பிக்கையாளர்களும்‌ உங்கள்‌ செயலைப்‌ பார்த்துக்‌ கொண்டே இருக்கின்றார்கள்‌. (ஸூரா அத்தவ்பா 9 : 105)

இவ்வாறான வசனங்கள்‌ அனைத்தும்‌ உறுதிப்படுத்துவது என்னவெனில்‌ அனைத்து படைப்பினங்களின்‌ செயல்களையும்‌ அல்லாஹ்‌ பார்த்துக்‌ கொண்டு இருக்கின்றான்‌. அவற்றின்‌ பேச்சுகள்‌, சப்தங்கள்‌ அனைத்தையும்‌ கேட்டுக்‌ கொண்டு இருக்கின்றான்‌ என்று நம்ப வேண்டும்‌. அதன்‌ அடிப்படையில்‌ அவனை அஞ்சி அவனுக்கு மாறு செய்யாமல்‌ வாழ வேண்டும்‌.



2. நல்லோர்களை நேசிக்கின்றான்‌

அன்றி (பிறருக்கு உதவியும்‌) நன்மையும்‌ செய்யுங்கள்‌. நிச்சயமாக அல்லாஹ்‌ (பிறருக்கு) நன்மை செய்பவர்களை நேசிக்கின்றான்‌. (ஸுரா அல்பகறா 2 : 195)

நீதியாகத்‌ தீர்ப்பளியங்கள்‌. நிச்சயமாக அல்லாஹ்‌ நீதி செலுத்துபவர்களை நேசிக்கின்றான்‌. (ஸுரா அல்ஹுஜுறாத்‌ 49 : 9)

ஆயினும்‌ சிறப்புற்ற மஸ்ஜிதின்‌ முன்‌ உங்களுடன்‌ உடன்படிக்கை செய்து கொண்டவர்கள்‌, (தங்கள்‌ உடன்படிக்கையின்படி) உங்களுடன்‌ உறுதியாக இருக்கும்‌ வரையில்‌, நீங்களும்‌ அவர்களுடன்‌ உறுதியாகவே இருங்கள்‌. நிச்சயமாக அல்லாஹ்‌, இறையச்சமுடையவர்களை நேசிக்கின்றான்‌. (ஸூரா அத்தவ்பா 9 : 7)

நிச்சயமாக அல்லாஹ்‌ (பாவத்தைவிட்டு) வருத்தப்பட்டு மீளுகிறவர்களை நேசிக்கின்றான்‌ மேலும்‌, பரிசுத்தவான்‌களையும்‌ நேசிக்கின்றான்‌. ஸுரா அல்பகறா 2 : 222)

(நபியே! மனிதர்களை நோக்கி) நீங்கள்‌ கூறுங்கள்‌! நீங்கள்‌ மெய்யாகவே அல்லாஹ்வை நேசிப்பவர்களாயிருந்தால்‌, என்னைப்‌ பின்பற்றுங்கள்‌. உங்களை அல்லாஹ்‌ நேசிப்பான்‌... (ஸுரா ஆலஇம்ரான்‌ 3 : 31)

நம்பிக்கையாளர்களே! உங்களில்‌ எவரேனும்‌, தங்கள்‌ மார்க்கத்திருந்து மாறி விட்டால்‌, (உங்களைப்‌ போக்கி) வேறு மக்களை அல்லாஹ்‌ கொண்டு வருவான்‌. அவன்‌ அவர்களை நேசிப்பான்‌; அவர்களும்‌ அவனை நேசிப்பார்கள்‌... (ஸுரா அல்மாயிதா 5 : 54)

(நம்பிக்கையாளர்களே!) எவர்கள்‌ ஈயத்தால்‌ உருக்கி வார்க்கப்பட்ட பலமான அரணைப்‌ போல அணியில்‌ (இருந்து பின்வாங்காது) நின்று, அல்லாஹ்வுடைய பாதையில்‌ போர்‌ புரிகிறார்களோ அவர்களை, நிச்சயமாக அல்லாஹ்‌ நேசிக்கின்றான்‌. (ஸுரா அஸ்ஸஃப்‌ 61 : 4)



3. நல்லோர்களையும்‌, அவர்களுடைய நற்செயல்களையும்‌ பற்றி மகிழ்ச்சியும்‌, திருப்தியும்‌ அடைகின்றான்‌

அப்போது அல்லாஹ், “இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும்; கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள்; அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்; அல்லாஹ்வை அவர்களும் பொருந்திக் கொண்டார்கள் - இது மகத்தான பெரும் வெற்றியாகும். (ஸுரா அல்மாயிதா: 5:119)

உங்களுடைய இந்த இஸ்லாம்‌ மார்க்கத்தைப்‌ பற்றியும்‌ திருப்தியடைந்தோம்‌ (அங்கீகரித்துக்‌ கொண்டோம்‌). (ஸுரா அல்மாயிதா 5 : 3)

ஆயினும்‌, எவர்கள்‌ நம்பிக்கை கொண்டு நற்செயல்கள்‌ செய்கின்றார்களோ அவர்களே, நிச்சயமாக படைப்புகளில்‌ மிகச்‌ சிறந்தவர்கள்‌. அவர்களுடைய கூலி அவர்களின்‌ இறைவனிடத்தில்‌ உள்ள "அத்ன்' என்னும்‌ நிலையான சுவனபதியாகும்‌. அதில்‌ நீரருவிகள்‌ தொடர்ந்து ஒடிக்‌ கொண்டேயிருக்கும்‌. என்றென்றுமே அவர்கள்‌ அதில்‌ நிரந்தரமாக தங்கிவிடுவார்கள்‌. அல்லாஹ்வும்‌ அவர்களைப்‌ பற்றிக்‌ திருப்தி அடைவான்‌. அவர்களும்‌ அல்லாஹ்வைப்‌ பற்றி திருப்தி அடைவார்கள்‌. (ஸுரா அல்பய்யினா 98 : 8)

நீங்கள்‌ (அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாயின்‌ உங்களுக்காக அதனை அவன்‌ திருப்தியடைவான்‌. (ஸுரா அஸ்ஸுமர்‌ 39 : 7)

இவ்வசனங்களின்‌ கருத்து அல்லாஹ்‌, இஸ்லாமையும்‌ அதை ஏற்றுக்‌ கொண்ட முஸ்லிம்களையும்‌ பொருந்திக்‌ கொள்கிறான்‌ என்ற விஷயத்தை சுட்டிக்‌ காட்டுகிறது.



4. அல்லாஹ்‌ தன்னை எதிர்ப்பவர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்கின்றான்‌

அவனோ, (அவர்களைத்‌ தண்டிக்கக்‌ கருதினால்‌ அவர்கள்‌) நழுவ இயலாதபடி மிக்க பலமாகப்‌ பிடித்துக்‌ கொள்பவன்‌. (ஸுரா அர்ரஅது 13 ; 13)

(ஈஸாவை நிராகரித்த) அவர்கள்‌, சதி செய்தார்கள்‌. அல்லாஹ்‌ (அவர்களுக்குச்‌) சதி செய்துவிட்டான்‌. அல்லாஹ்‌ சதி செய்பவர்களை மிகைத்தவன்‌. (ஸூரா ஆலஇம்ரான்‌-3:54)

(இவ்வாறு) அவர்கள்‌ ஒரு சூழ்ச்சி செய்தார்கள்‌. நாமும்‌ ஒரு சூழ்ச்சி செய்தோம்‌. அவர்கள்‌ அதனை உணர்ந்துகொள்ள முடியவில்லை. (ஸுரா அன்னம்ல்‌ 27. : 50)

அவர்கள்‌ ஒரு சூழ்ச்சி செய்கின்றார்கள்‌. நானும்‌ ஒரு சூழ்ச்சி செய்வேன்‌. (ஸுரா அத்தாரிக்‌ 86 : 15-16)

இங்கு நாம்‌ நம்பிக்கை கொள்ள வேண்டிய அல்லாஹ்வின்‌ தன்மையைப்‌ பற்றி கூறப்பட்டுள்ளது. காஃபிர்களான நிராகரிப்பாளர்களும்‌, மாறு செய்யும்‌ பாவிகளும்‌ அல்லாஹ்வின்‌ மார்க்கத்திற்கும்‌, அதை ஏற்றுக்‌ கொண்டிருப்பவர்களுக்கும்‌ எதிராக சூழ்ச்சி செய்யும்போது அல்லாஹ்வும்‌ சூழ்ச்சி செய்கிறான்‌. இது அவனுக்கு இகழ்ச்சியான தன்மையல்ல. ஏனெனில்‌, அவனுக்கு எதிராக சூழ்ச்சி செய்யும்போது அவனும்‌ சூழ்ச்சி செய்து அவனுடைய ஆற்றலை உறுதிப்படுத்துகிறான்‌. இது அவனுடைய புகழுக்குரிய தன்மையே ஆகும்‌. அவனுக்கு இகழ்வை ஏற்படுத்தும்‌ ஒரு தன்மையுடன்‌ சேர்த்து அவனை நிச்சயமாக அவன்‌ வருணித்துக்‌ கொள்ளமாட்டான்‌.



5. பாவத்தையரம்‌, பாவிகளையம்‌ கோபிக்கின்றான்‌, அவர்களைத்‌ தண்டிக்கிறான்‌.‌

எவரேனும்‌ யாதொரு முஸ்லிமை (நன்கறிந்து) வேண்டுமென்றே கொலை செய்தால்‌, அவனுக்குரிய தண்டனை நரகம்தான்‌. அதில்‌ அவன்‌ என்றென்றும்‌ தங்கியும்‌ விடுவான்‌. அவன்‌ மீது அல்லாஹ்‌ கோபம்‌ கொண்டு அவனைச்‌ சபித்தும்‌ விடுவான்‌ மேலும்‌, அவனுக்கு மகத்தான தண்டனையையும்‌ தயாரித்து வைத்துள்ளான்‌. (ஸுரா அன்னிஸா 4 : 93)

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் இஹ்ராம் உடை உடுத்தியவர்களாக இருக்கும் நிலையில் வேட்டை(யாடி)ப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்; உங்களில் யாராவது ஒருவர் வேண்டுமென்றே அதைக் கொன்றால், (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளிலிருந்து அவர் கொன்றதற்கு சமமான ஒன்றை(ப் பரிகாரமாக) ஈடாகக் கொடுக்க வேண்டியது; அதற்கு உங்களில் நீதமுடைய இருவர் தீர்ப்பளிக்க வேண்டும்; அது கஃபாவை அடைய வேண்டிய குர்பானியாகும்; அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும், அல்லது (பரிகாரமளிக்க ஏதும் இல்லையாயின்) தனதுவினையின் பலனை அனுபவிப்பதற்காக அதற்குச் சமமான நோன்புகள் நோற்பது (அதற்கு ஈடாகும்;) முன்னால் நடந்ததை அல்லாஹ் மன்னித்து விட்டான், எவர் மீண்டும் (இதைச்) செய்வாரோ அல்லாஹ் அவரை வேதனை செய்வான், அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், (குற்றம் செய்வோருக்குத் தக்க) தண்டனை கொடுக்க உரியோனாகவும் இருக்கிறான்.(ஸூரா அல்மாயிதா 5 : 95)

அல்லாஹ்வுக்குக்‌ கோபமூட்டக்‌ கூடியவற்றையே இவர்கள்‌ பின்பற்றி, அவனுக்குத்‌ திருப்தி தரக்கூடியவற்றை வெறுத்து வந்தனர்‌. (ஸூரா முஹம்மது 47 ; 28)

( இவ்வாறு அவர்கள்‌) தமக்குக்‌ கோபமூட்டவே, அவர்களிடம்‌ நாம்‌ பழிவாங்கி விட்டோம்‌. (ஸூரா அஸ்ஸூக்ருஃப்‌ 43 : 55)

எனினும்‌ (உங்களுடன்‌) அவர்கள்‌ புறப்படுவதை அல்லாஹ்‌ வெறுத்து விட்டான்‌. எனவே, அவர்கள்‌ புறப்படாது தடை செய்துவிட்டான்‌. (ஸூரா அத்தவ்பா 9 : 46)

நீங்கள்‌ செய்யாத காரியங்களைச்‌ (செய்வேன்‌ என்று அல்லது) செய்ததாகக்‌ கூறுவது அல்லாஹ்விடத்தில்‌ பெரும்‌ கோபத்திற்குரியதாக இருக்கின்றது. (ஸுரா அஸ்ஸஃப்‌ 61: 3)

இவ்வசனங்கள்‌ அல்லாஹ்வின்‌ கட்டளைக்கு மாறு செய்பவர்கள்‌ மீது அல்லாஹ்‌ கோபிக்கிறான்‌; சபிக்கிறான்‌ என்று நமக்கு அறிவுறுத்துகின்றன.

எனவே, அவனுக்கு மாறு செய்வதிலிருந்து நாம்‌ நம்மைப்‌ பாதுகாத்துக்‌ கொள்ள வேண்டும்‌.



6. அல்லாஹ்‌ வருவான்‌

(நபியே! நிராகரிப்பவர்கள்‌) அல்லாஹ்வும்‌ மலக்குகளும்‌ (வெண்‌) மேகத்தின்‌ நிழலில்‌ அவர்களிடம்‌ வருவதையும்‌ அவர்களின்‌ வேலையை முடிப்பதையும்‌ தவிர (வேறெதையும்‌) அவர்கள்‌ எதிர்பார்க்கின்றனரோ? (ஸூரா அல்பகறா 2 : 210)

மலக்குகள்‌ அவர்களிடம்‌ (நேரில்‌) வருவதையோ, அல்லது உம்முடைய இறைவனே (அவர்களிடம்‌) வருவதையோ, அல்லது உம்முடைய இறைவனின்‌ பெரியதோர்‌ அத்தாட்சி வருவதையோ அன்றி (வேறெதனையும்‌) அவர்கள்‌ எதிர்பார்க்கின்றனரா?(ஸூரா அல்‌அன்ஆம்‌ 6 : 158)

ஆகவே, பூமி தூள்‌ தூளாக‌ தகர்க்கப்படும்‌ சமயத்தில்‌, உங்களது இறைவனும்‌ வருவான்‌; மலக்குகளும்‌ அணி அணியாக வருவார்கள்‌. (ஸூரா அல்பஜ்ர்‌ 89 : 21,22)

இந்த இறைவசனங்கள்‌ அல்லாஹ்வின்‌ வருகை என்ற செயலைக்‌ குறிப்பிடுகின்றன. அல்லாஹ்வை மறுப்பவர்கள்‌ உலகில்‌ அவன்‌ வரவேண்டும்‌ என்று எதிர்பார்க்கின்றனர்‌. ஆனால்‌, அவன்‌ உலகில்‌ வரமாட்டான்‌. மறுமையில்தான்‌ வருவான்‌ என்று உறுதியாக மேலே உள்ள இறுதி வசனம்‌ கூறுகிறது. இதை அப்படியே எவ்வித மாற்றுக்‌ கருத்து கூறாமல்‌ ஏற்றுக்‌ கொள்ள வேண்டும்‌. அவனின்‌ வருகை எப்படியிருக்கும்‌ என்று இவ்வுலகில்‌ இருந்து கொண்டு நம்‌ சக்திக்கு அப்பாற்பட்டதை நாம்‌ கற்பனை செய்யக்‌ கூடாது. அவனது வருகையை படைப்பினங்களின்‌ வருகைக்கு ஒப்பிடவும்‌ கூடாது. 

அல்லாஹ்‌ மறுமையில்‌ படைப்பினங்களுக்கு மத்தியில்‌ தீர்ப்பளிக்க வருவான்‌ என்பதை நம்பும்போது உள்ளத்தில்‌ அச்சமும்‌ பயமும்‌ ஏற்படுகிறது. அந்நாளைப்‌ பற்றிய திடுக்கம்‌ ஏற்படுகிறது. இதைத்தான்‌ பின்வரும்‌ அல்குர்‌ஆன்‌ வசனங்களும்‌, நபிமொழியம்‌ உணர்த்துகின்றன.

மகத்தான ஒரு நாளில்‌, நிச்சயமாக அவர்கள்‌ (உயிர்‌ கொடுத்து) எழுப்பப்‌ படுவார்களென்பதை அவர்கள்‌ நம்பவில்லையா? அந்நாளில்‌ மனிதர்கள்‌ அனைவருமே அகிலகத்தாரின்‌ இறைவன்‌ முன்‌ (விசாரணைக்காக) நின்று கொண்டிருப்பார்கள்‌. ' (ஸூரா அத்தத்‌ஃபீஃப்‌ 83 : 4,5,6)

எவன்‌ தன்‌ இறைவனின்‌ சந்நிதியில்‌ (விசாரணைக்காக) நிற்பதைப்‌ (பற்றிப்‌) பயந்து, (தப்பான) இச்சையை விட்டுத்‌ தன்னை தடுத்துக்‌ கொண்டானோ அவன்‌ செல்லுமிடம்‌ நிச்சயமாகச்‌ சுவனபதிதான்‌. (ஸுரா அன்னாஜிஆத்‌ 79 : 40,41)

நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌: “மனிதனை நாளை மறுமையில்‌ அல்லாஹ்‌ தனிமைப்படுத்துவான்‌. மனிதன்‌ தனது வலப்பக்கம்‌ பார்ப்பான்‌. அவன்‌ முற்படுத்தியதைத்‌ தவிர எதையும்‌ பார்க்க மாட்டான்‌. அவனது இடது பக்கம்‌ பார்ப்பான்‌. அவன்‌ முற்படுத்தியதைத்‌ தவிர எதையும்‌ பார்க்க மாட்டான்‌. அவனுக்கு முன்பு பார்ப்பான்‌. எனினும்‌, நரகத்தை தவிர தனக்கு முன்பு எதையும்‌ பார்க்க மாட்டான்‌. ஆகவே, ஒரு பேரீத்தம்‌ பழத்தின்‌ பகுதியைத்‌ தர்மம்‌ செய்தேனும்‌ நரகத்தை பயந்து கொள்ளுங்கள்‌.(ஸஹீஹால்‌ புகாரி, ஸஹீஹ்‌ முஸ்லிம்‌)



7. அல்லாஹ்‌ ஒவ்வோர்‌ இரவும்‌ முதல்‌ வானத்திற்கு இறங்குகிறான்‌.

நபி (ஸல்)‌ அவர்கள்‌ கூறினார்கள்‌: நமது ரப்பு, ஒவ்வோர்‌ இரவிலும்‌ மூன்றில்‌ ஒரு பகுதி மீதம்‌ இருக்கும்போது முதல்‌ வானத்தில்‌ இறங்குகிறான்‌. பின்பு, "என்னை அழைப்பவன்‌ யார்‌? அவருக்கு நான்‌ பதில்‌ தருகிறேன்‌. என்னிடம்‌ கேட்பவர்‌ யார்‌? அவருக்கு (அவர்‌ கேட்பதை) வழங்குவேன்‌. என்னிடம்‌ மன்னிப்பு வேண்டுபவர்‌ யார்‌? அவரை நான்‌ மன்னித்து விடுவேன்‌" என்று கூறுகிறான்‌. (ஸஹீஹுல்‌ புகாரி. ஸஹீஹ்‌ முஸ்லிம்‌!

'இறங்குதல்‌' எனும்‌ அல்லாஹ்வின்‌ செயலை அவ்வாறே நம்பிக்கை கொள்ள வேண்டும்‌. இதை பூமியின்‌ சுழற்சியைக்‌ கொண்டு கணக்கிடுவதோ. நம்‌ சிற்றறிவைக்‌ கொண்டு கற்பனை செய்வதோ கூடாது. மேலும்‌, இதற்கு மாற்றுப்‌ பொருள்‌ கூறி விவரிக்கவும்‌ கூடாது.



8. அல்லாஹ்‌ மகிழ்ச்சி அடைகிறான்‌

அல்லாஹ்‌, பாவமன்னிப்பு கோரும்‌ அவனது முஃமினான அடியானின்‌ பாவமன்னிப்பு கோருதலைக்‌ கொண்டு மிக அதிகமாகச்‌ மகிழ்ச்சி அடைகிறான்‌.(ஸஹீஹுல்‌ புகாரி, ஸஹீஹ்‌ முஸ்லிம்‌)



9. அல்லாஹ்‌ சிரிக்கின்றான்‌

அல்லாஹ்‌, இரண்டு மனிதர்களைப்‌ பார்த்து சிரிக்கின்றான்‌. அவ்விருவரில்‌ ஒருவர்‌ மற்றொருவரை கொலை செய்து விடுகிறார்‌. ஆனால்‌. இருவரும்‌ சுவனத்தில்‌ நுழைகிறார்கள்‌. (ஸஹீஹுல்‌ புகாரி, ஸஹீஹ்‌ முஸ்லிம்‌)



10. அல்லாஹ்‌ ஆச்சரியமடைகிறான்‌

நபி (ஸல்)‌ அவர்கள்‌ கூறினார்கள்‌: அல்லாஹ்‌ அவனது அடியார்கள்‌ நிராசை அடைவதைப்‌ பற்றி ஆச்சரியப்படுகிறான்‌. ஆனால்‌ அவனது நிலையோ மிக விரைவில்‌ மாற இருக்கிறது. சிரமப்பட்டவர்களாகவும்‌, நிராசை அடைந்தவர்களாகவும்‌ இருக்கும்‌ உங்களை அவன்‌ பார்க்கிறான்‌. அப்போது அவன்‌ சிரிக்கின்றான்‌. நிச்சயமாக உங்களின்‌ சிரமம்‌ வெகு சமீபத்தில்‌ உள்ளது என்பதை அவன்‌ அறிந்திருக்கிறான்‌. (தஃப்ஸீர்‌ இப்னு கஸீர்‌)



11. அல்லாஹ்‌ நரகத்தின்‌ மீது தனது பாதத்தை வைப்பான்‌

நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌: “நரகத்தில்‌ (நரகவாசிகளை) போடப்பட்டுக்‌ கொண்டிருக்கும்‌ போது அது இன்னும்‌ அதிகம்‌ வேண்டும்‌' என்று கோரும்‌. அப்போது கண்ணியத்தின்‌ அதிபதி அல்லாஹ்‌, அதில்‌ தனது காலை வைப்பான்‌. மற்றோர்‌ அறிவிப்பில்‌ வந்துள்ளதாவது, 'அதன்‌ மீது அவன்‌ தனது பாதத்தை வைப்பான்‌. அப்போது அது சுருங்கிவிடும்,‌ போதும்‌ போதும்‌ என்றும்‌ கூறும்‌. (ஸஹீஹுல்‌ புகாரி, ஸஹீஹ்‌ முஸ்லிம்‌)



12. அல்லாஹ்‌ பேசுவான்‌

நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌: “அல்லாஹ்‌ ஆதமே! என்று கூறுவான்‌, அப்போது ஆதம்‌, உன்னிடம்‌ ஆஜராகிவிட்டேன்‌; அர்ப்பணமாகிவிட்டேன்‌' என்று கூறுவார்கள்‌. சப்தத்துடன்‌ அல்லாஹ்‌ கூறுவான்‌. நிச்சயமாக நீங்கள்‌ உங்களது சந்ததிகளிவிருந்து நரகத்தின்பால்‌ (அனுப்ப வேண்டிய) கூட்டத்தை வெளியேற்றுங்கள்‌ என்று அல்லாஹ்‌ உமக்கு கட்டளையிடுகிறான்‌”.  (ஸஹீஹால்‌ புகாரி, ஸஹீஹ்‌ முஸ்லிம்‌)



13. அல்லாஹ்‌ நம்மிடம்‌ பேசுவான்‌

நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌: “உங்களில்‌ ஒவ்வொருவரிடமும்‌ அவரது இறைவன்‌ பேசுவான்‌. அவனுக்கும்‌ அவருக்குமிடையில்‌ மொழி பெயர்ப்பாளர்‌ எவரும்‌ இருக்க மாட்டார்‌". (ஸஹீஹுல்‌ புகாரி, ஸஹீஹ்‌ முஸ்லிம்‌)



அல்லாஹ்வின்‌ 'தாத்தை’ (உள்ளமையை) குறிக்கும்‌ வசனங்கள்‌



1. அல்லாஹ்‌ மிக சங்கைமிக்க முகமுடையவன்

மிக கண்ணியமும்‌ பெருமையும்‌ தங்கிய உங்களது இறைவனின்‌ முகம்‌ மட்டும்‌ அழியாது நிலைத்திருக்கும்‌. (ஸூரா அர்ரஹ்மான்‌ 55 ; 27)

அவனின்‌ முகம்‌ தவிர எல்லாப்‌ பொருள்களும்‌ அழிந்து விடக்கூடியவை. (ஸுரா அல்கஸஸ்‌ 28 : 85)

அவர்‌ பதில்‌ செய்யக்‌ கூடியவாறு எவருடைய நன்றியும்‌ தன்‌ மீது இல்லாதிருந்தும்‌, மிக்க மேலான தன்‌ இறைவனின்‌ முகத்தை விரும்பியே (தானம்‌ கொடுப்பார்‌. இறைவன்‌ அவருக்கு அளிக்கும்‌ கொடையைப்‌ பற்றிப்‌) பின்னர்‌ அவரும்‌ திருப்தியடைவார்‌. (ஸுரா அல்லைல்‌ 92 : 19,20,21)

கிழக்குத்‌ திசையும்‌, மேற்குத்‌ இசையும்‌ அல்லாஹ்வுக்கே (உரியன). எனவே, நீங்கள்‌ (தொழும்போது) எத்திசையை நோக்கினும்‌, அங்கே அல்லாஹ்வின்‌ (சங்கையான) முகம்‌ இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ்‌ விசாலமானவன்‌; மிக அறிந்தவன்‌. (ஸூரா அல்பகறா 2: 115)

(நம்பிக்கையாளர்களே!) நல்லதிலிருந்து நீங்கள்‌ எதைச்‌ செலவு செய்தபோதிலும்‌ அது உங்களுக்கே (நன்மை), அல்லாஹ்வின்‌ (சங்கையான) முகத்தை தேடியே அன்றி, (பெருமைக்காக) நீங்கள்‌ செலவு செய்யாதீர்கள்‌.(ஸுரா அல்பகறா 2 ; 272)

இன்னும்‌, அவர்கள்‌ தங்கள்‌ இறைவனின்‌ முகத்தை நாடி (எத்தகைய கஷ்டத்தையும்‌) பொறுமையுடன்‌ சகித்துக்‌ கொள்வார்கள்‌; தொழுகையையும்‌ கடைப்பிடித் தொழுகுவார்கள்‌. (ஸூரா அர்ரஅது 13 : 22)

(நபியே! உங்களது பொருளில்‌) உறவினருக்கு அவரின்‌ உரிமையைக்‌ கொடுத்து வாருங்கள்‌. அவ்வாறே ஏழைகளுக்கும்‌, வழிப்போக்கர்களுக்கும்‌ (அவர்களுடைய உரிமையைக்‌ கொடுத்து வாருங்கள்‌). எவர்கள்‌ அல்லாஹ்வுடைய முகத்தை நாடுகின்றார்களோ, அவர்களுக்கு இதுவே மிக்க நன்றாகும்‌. இத்தகையவர்கள்‌ நிச்சயமாக வெற்றி பெறுவார்கள்‌. (நம்பிக்கையாளர்களே! மற்ற) மனிதர்களுடைய பொருள்களுடன்‌ சேர்த்து (உங்கள்‌ பொருளும்‌) அதிகப்படுவதற்காக வட்டிக்கு நீங்கள்‌ கொடுக்கும்‌ பொருள்‌ அல்லாஹ்வினிடத்தில்‌ அதிகப்படுவதில்லை. எனினும்‌, அல்லாஹ்வின்‌ முகத்தை நாடி ஸகாத்தாக ஏதும்‌ நீங்கள்‌ கொடுத்தாலோ, கொடுத்தவர்கள்‌ அதனை இரட்டிப்பாக்கிக்‌ கொள்கின்றனர்‌. (ஸுரா அர்ரூம்‌ 30 : 38,39)

இவ்வசனங்கள்‌ அல்லாஹ்விற்கு கண்ணியமும்‌, சங்கையுமுடைய முகம்‌ உள்ளது என்று தெளிவுபடுத்துகின்றன. அதன்‌ பொருளை அல்லாஹ்‌ கூறியிருப்பது போன்றே ஏற்றுக்கொள்ள வேண்டும்‌. சுவனத்தில்‌ அல்லாஹ்வின்‌ முகத்தை நாம்‌ காணும்போதே விளங்கிக்‌ கொள்ளலாம்‌. அவனது முகத்தை படைப்பினங்களின்‌ முகத்துடன்‌ ஒப்பிட்டு கற்பனை செய்யக்‌ கூடாது.



2. அல்லாஹ்விற்கு இரு கைகள்‌ உண்டு‌

இப்லீஸே! நானே என்‌ இரு கரங்களால்‌ படைத்தவற்றிற்கு நீ சிரம்‌ பணியாது உன்னைத்‌ தடை செய்தது எது? (ஸூரா ஸாத்‌ 38 : 75)

‘அல்லாஹ்வுடைய கை கட்டப்பட்டிருக்கிறது' என்று இந்த யூதர்கள்‌ கூறுகின்றனர்‌. (அவ்வாறன்று,) அவர்களுடைய கைகள்தான்‌ கட்டப்பட்டிருக்கின்றன. அன்றி, இவ்வாறு அவர்கள்‌ கூறியதன்‌ காரணமாக அவர்கள்‌ சபிக்கப்பட்டும்‌ விட்டனர்‌. அல்லாஹ்வுடைய இரு கைகளோ (எப்பொழுதும்‌) விரித்தே இருக்கின்றன. அவன்‌ விரும்பியவாறெல்லாம்‌ (அள்ளி) அள்ளிக்‌ கொடுக்கின்றான்‌. (ஸூரா அல்மாயிதா 5:64)

(நபியே!) அல்லாஹ்வின்‌ (மேலான) தகுதிக்குத்‌ தக்கவாறு அவனை அவர்கள்‌ கண்ணியப்படுத்துவதில்லை. பூமி (இவ்வளவு பெரிதாக இருந்தபோதிலும்‌ அது) முழுவதும்‌ மறுமையில்‌ அவனுடைய ஒரு கைப்பிடியிலும்‌, வானங்கள்‌ யாவும்‌ சுருட்டப்பட்டு அவனுடைய வலது கையிலும்‌ இருக்கும்‌. இவர்கள்‌ இணைவைப்பதை விட்டு அவன்‌ மிக மேலானவன்‌; அவன்‌ மிக பரிசுத்தமானவன்‌, (ஸுரா அஸ்ஸுமர்‌ 39 : 67)



3. அல்லாஹ்விற்கு இரு கண்கள்‌ உண்டு

‌(நபியே!) உங்களது இறைவனின்‌ தீர்ப்பைப்‌ பொறுமையாக எதிர்பார்த்திருங்கள்‌. நிச்சயமாக நீங்கள்‌ நம்‌ கண்களுக்கு முன்பாகவே இருக்கின்றீர்கள்‌. (ஸுரா அத்தூர்‌ 52 ; 48)

நாம்‌ அவரையும்‌, அவரை நம்பிக்கை கொண்டவர்களையும்‌ பலகையினாலும்‌, ஆணியினாலும்‌ செய்யப்பட்ட கப்பலின்‌ மீது சுமந்து கொண்டோம்‌. அது நம்‌ கண்களுக்கு முன்பாகவே (பிரளயத்தில்‌ மிதந்து) சென்றது. (மற்றவர்களோ, மூழ்கி மாண்டனர்‌.) எவரை இவர்கள்‌ (மதிக்காது) நிராகரித்தனரோ, அவருக்காக இவ்வாறு கூலி கொடுக்கப்பட்டது. (ஸுரா அல்கமர்‌ 54 ; 13 14)

நீங்கள்‌ என்‌ கண்‌ பார்வையில்‌ வளர்க்கப்படுவதற்காக (இவ்வாறு) உங்கள்‌ மீது என்‌ அன்பை சொரிந்து உங்களைப்‌ பார்ப்பவர்கள்‌ விரும்பும்படி‌ செய்தோம்‌. (ஸூரா தாஹா 20 : 39)

நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌: “நிச்சயமாக அவன்‌ (தஜ்ஜால்‌) ஒற்றைக்‌ கண்‌ உடையவன்‌. உங்களுடைய இறைவன்‌ ஒற்றை கண்ணன்‌ அல்லன்‌."மற்றோர்‌ அறிவிப்பில்‌ “தஜ்ஜால்‌ வலது கண்‌ குருடானவன்‌” என வந்துள்ளது. (ஸஹீஹுல்‌ புகாரி, ஸஹீஹ்‌ முஸ்லிம்)‌

இந்த வசனங்களில்‌ கூறப்பட்டதின்படியும்‌, ஆதாரமிக்க நபிமொழிகளில்‌ வந்துள்ளதின்படியும்‌ அல்லாஹ்விற்கு இரு கரங்களும்‌, இரு கண்களும்‌ உள்ளன என்று நம்ப வேண்டும்‌. அல்லாஹ்‌, தன்னுடன்‌ இணைத்துக்‌ கூறியிருக்கும்‌ வார்த்தைகளுக்கு மாற்றுப்‌ பொருளைக்‌ கூறக்கூடாது. மேலும்‌, இப்பொருள்களுக்கு படைப்பினங்களின்‌ உறுப்புகளைக்‌ கொண்டு உவமை காட்டவும்‌ கூடாது. அல்குர்‌ஆனின்‌ பின்வரும்‌ வசனத்தின்‌ பொருளைப்‌ புரிந்து கொள்ள வேண்டும்‌.

ஆகவே, (எல்லா வல்லமையும்‌ மிக்க) அல்லாஹ்வுக்கு நீங்கள்‌ உதாரணங்கள்‌ கூறாதீர்கள்‌. அ(ல்லாஹ்வுக்குரிய உதாரணத்‌)தை நிச்சயமாக அல்லாஹ்தான்‌ அறிவான்‌; நீங்கள்‌ அறியமாட்‌டீர்கள்‌.(ஸூரா அன்னஹ்ல்‌ 16 : 74)



4. அல்லாஹ்‌ அர்ஷுக்கு மேல்‌ அவனுடைய கண்ணியத்திற்குத்‌ தக்கவாறு உயர்ந்து விட்டான்‌

நிச்சயமாக உங்கள்‌ இறைவனாகிய அல்லாஹ்தான்‌ வானங்களையும்‌, பூயையும்‌ ஆறு நாட்களில்‌ படைத்து, அர்ஷின்‌ மீது (தன்‌ கண்ணியத்திற்குக்‌ தக்கவாறு) உயர்ந்துவிட்டான்‌... (ஸூரா அல்அஃராப் 7:54)

(மனிதர்களே!) உங்கள்‌ இறைவனாகிய அந்த அல்லாஹ்தான்‌, வானங்களையும்‌, பூமியையும்‌ ஆறு நாட்களில்‌ படைத்து அர்ஷின்‌ மீது தன்‌ (கண்ணியத்திற்குத்‌ தக்கவாறு) உயர்ந்துவிட்டான்‌...(ஸுரா யூனுஸ்‌ 10 : 3)

வானங்களைத்‌ தூணின்றியே உயர்த்தியவன்‌ அல்லாஹ்வே! அதனை நீங்கள்‌ (உங்கள்‌ எண்களால்‌) காண்கிறீர்கள்‌. அன்றி, அர்ஷின்‌ மீது அவன்‌ (தன்‌ கண்ணியத்திற்குத்‌ தக்கவாறு) உயர்ந்துவிட்டான்‌...(ஸுரா அர்ரஅது 13 : 2)

ரஹ்மான்‌ (ஆகிய அல்லாஹ்‌) அர்ஷின்‌ மீது (தன்‌ கண்ணியத்திற்குத்‌ தக்கவாறு) உயர்ந்துவிட்டான்‌... (ஸாரா தாஹா 20; 5)

பின்னர்‌, அவன்‌ அர்ஷின்‌ மீது (தன்‌ கண்ணியக்கிற்குத்‌ தக்கவாறு) உயர்ந்துவிட்டான்‌... (ஸுரா அல்‌ஃபுர்கான்‌ 25 : 59)

அல்லாஹ்தான்‌ வானங்களையும்‌, பூமியையும்‌, அவற்றுக்கு மத்தியில்‌ உள்ளவற்றையும்‌ ஆறே நாட்களில்‌ படைத்து அர்ஷின்‌ மீது (தன்‌ கண்ணியத்திற்குத்‌ தக்கவாறு) உயர்ந்துவிட்டான்‌...(ஸுரா அஸ்ஸஜ்தா 32 : 4)

அவன்தான்‌ வானங்களையும்‌ பூமியையும்‌ அறு நாட்களில்‌ படைத்தான்‌. பின்னர்‌ அர்ஷின்‌ மீது (தன்‌ மேன்மைக்குத்‌ தக்கவாறு) உயர்ந்துவிட்டான்‌... (ஸுரா அல்ஹதீது 57 : 4)

இவ்வசனங்களில்‌ அல்லாஹ்‌, தன்னைப்‌ பற்றி தெளிவாகக்‌ கூறியுள்ளான்‌.

இவற்றில்‌ எவ்வித குழறுபடியும்‌ செய்யாமல்‌ நாம்‌ ஏற்றுக்‌ கொள்ள வேண்டும்‌.

பலவீனம்‌, தேவையாகுதல்‌ என்ற குறைகளை உணர்த்தும்‌ எவ்விதமான வார்த்தைகளையும்‌ அவன்‌ தனக்கு கூறவில்லை.

மேற்கூறப்பட்ட அல்குர்‌ஆன்‌ வசனங்களின்‌ அடிப்படையில்‌ நாம்‌ நம்பிக்கை கொள்ள வேண்டிய விஷயம்‌ என்னவெனில்‌, அல்லாஹ்‌ ஏழு வானங்களுக்கு மேல்‌ அர்ஷின்‌ மீது இருக்கிறான்‌. அதுபோன்றே அவன்‌ அவனது பார்க்கும்‌, கேட்கும்‌ ஆற்றலால்‌ நம்முடன்‌ இருக்கின்றான்‌. காஃபிர்கள்‌, முஷ்ரிக்குகள்‌ கூறுவது போல (அவன்‌ தூணிலும்‌ இருப்பான்‌. துரும்பிலும்‌ இருப்பான்‌) எங்கும்‌ நிறைந்தவன்‌ என்று கூறுவது முற்றிலும்‌ அல்லாஹ்விற்கு தகுதியற்றதை அவன்‌ மீது கூறுவதாகும்‌.  

அவன்‌ தனது படைப்பினங்கள்‌ அனைத்திற்கும்‌ அப்பாற்பட்டு இருக்கின்றான்‌. அவனது படைப்பினங்கள்‌ எங்கு இருப்பினும்‌, எதைச்‌ செய்தாலும்‌, அதை அவன்‌ பார்க்கின்றான்‌; கேட்கின்றான்‌; நல்லோர்களுக்கு உதவி செய்கின்றான்‌ என்ற ரீதியில்‌ அவன்‌ அவர்களுடன்‌ இருக்கின்றான்‌. இக்கருத்தையே பின்வரும்‌ வசனம்‌ உறுதி செய்கிறது.

(வித்து முதலியவை) பூமியில்‌ விதைக்கப்படுவதையும்‌ அவை முளைத்து வெளிப்படுவதையும்‌, வானத்திலிருந்து இறங்குபவற்றையும்‌, (பூமியிலிருந்து) ஏறுபவற்றையும்‌ அவன்‌ நன்கறிவான்‌. நீங்கள்‌ எங்கிருந்த போதிலும்‌, அவன்‌ உங்களுடன்‌ இருக்கின்றான்‌. நீங்கள்‌ செய்பவற்றையும்‌ (அந்த) அல்லாஹ்‌ உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்‌... (ஸுரா அல்ஹதீது 57 : 4)

இந்த வசனத்தில்‌ 'அல்லாஹ்‌ அர்ஷின்‌ மீது உயர்ந்துவிட்டான்‌ என்பது உறுதியாக கூறப்பட்டிருப்பதுடன்‌ நாம்‌ எங்கு இருப்பினும்‌ நம்முடனும்‌ அவன்‌ இருக்கின்றான்‌' என்ற விவரமும்‌ கூறப்பட்டுள்ளது. அதாவது, அவன்‌ நாம்‌ செய்யும்‌ அனைத்தையும்‌ நன்கு பார்த்துக்‌ கொண்டுள்ளான்‌. அவனை விட்டு எதுவும்‌, எங்கும்‌ மறைந்து கொள்ள முடியாது.

“அவன்‌ உங்களுடன்‌ இருக்கின்றான்‌” என்று கூறியிருப்பதன்‌ பொருள்‌, அவன்‌ படைப்பினங்களுடன்‌ கலந்து இருக்கின்றான்‌ என்ற அர்த்தத்தில்‌ அல்ல. சந்திரன்‌ அல்லாஹ்வின்‌ அத்தாட்சிகளில்‌ ஒன்று என்பதுடன்‌ அவனது படைப்புகளில்‌ சிறிய ஒரு படைப்புமாகும்‌. அது வானத்தில்‌ இருப்பதுடன்‌ நாம்‌ எங்கு சென்றாலும்‌ நம்முடன்‌ இருப்பதாகவும்‌ கருதுகிறோம்‌.

அல்லாஹ்‌ ஆர்ஷின்‌ மீது இருக்கின்றான்‌. அர்ஷின்‌ மீது இருப்பதுடன்‌ அவனது அனைத்து படைப்பினங்களையும்‌ கண்காணிக்கின்றான்‌; அனைத்தின்‌ மீதும்‌ ஆதிக்கம்‌ செலுத்துகிறான்‌; படைத்து நிர்வகிக்கின்றான்‌.

அவன்‌ தன்னைப்‌ பற்றி அர்ஷுக்கு மேல்‌ இருப்பதாக கூறியதும்‌ உண்மையே; மேலும்‌ நம்முடன்‌ அவன்‌ இருப்பதாக கூறியிருப்பதும்‌ உண்மையே! இதில்‌ எவ்வித முரண்பாடும்‌ இல்லை. இதை அதன்‌ கருத்துகளிலிருந்து மாற்றவும்‌ தேவையில்லை.



கவனிக்க வேண்டியவை:

தவறான கற்பனைகளிவிருந்து நமது ஈமானை (நம்பிக்கையைப்‌) பாதுகாத்துக்கொள்ள வேண்டும்‌. 'அல்லாஹ்‌ வானத்தில்‌ இருக்கின்றான்‌' என்பதற்கு வானம்‌ அவனைச்‌ சுமந்துள்ளது அல்லது வானம்‌ அவனை நிழலிட்டுள்ளது என்று கற்பனை செய்துவிடக்‌ கூடாது. இவ்வாறு கற்பனை: செய்வதும்‌, கூறுவதும்‌ அறிஞர்களின்‌ ஏகோபித்த முடிவின்படி அபத்தமான குற்றமாகும்‌.

நிச்சயமாக அல்லாஹ்வின்‌ குர்ஸி வானங்கள்‌ பூமி அனைத்தையும்‌ விட விசாலமாய்‌ இருக்கின்றது. அவனே வானங்கள்‌, பூமியை அதன்‌ இடத்தை விட்டும்‌ அகன்று விடுவதிலிருந்து தடுத்து வைத்துள்ளான்‌. வானத்தை அவன்‌ அனுமதியின்றி பூமியின்‌ மீது சாய்ந்து விடாமல்‌, விழுந்து விடாமல்‌ தடுத்து வைத்துள்ளான்‌. வானமும்‌ பூமியும்‌ அதன்‌ இடங்களில்‌ அல்லாஹ்வின்‌ உத்தரவு கொண்டு நிலைபெற்று இருப்பது அவனது அத்தாட்சிகளில்‌ உள்ளதாகும்‌.

அவனுடைய 'குர்ஸி' வானங்கள்‌, பூமியைவிட விசாலமாய்‌ இருக்கின்றது. அவ்விரண்டையும்‌ பாதுகாப்பது அவனுக்குச்‌ சிரமமன்று. மேலும்‌ அவன்தான்‌, மிக உயர்ந்தவன்‌; மிக மகத்தானவன்‌.(ஸுரா அல்பகறா 2 : 255)

(நபியே) நீங்கள்‌ பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ்‌ பூமியிலுள்ள யாவையும்‌ உங்களுக்கு வசப்படுத்திக்‌ கொடுக்கின்றான்‌. கப்பல்‌, அவனுடைய கட்டளைப்படி கடலில்‌ செல்கிறது. தன்னுடைய அனுமதியின்றி, பூமியின்‌ மீது வானம்‌ விழாது அவன்‌ தடுத்துக்‌ கொண்டிருக்கிறான்‌. நிச்சயமாக அல்லாஹ்‌ மனிதர்கள்‌ மீது மிக்க அன்பும்‌ கிருபையும்‌ உடையவனாக இருக்கின்றான்‌... (ஸுரா அல்ஹஜ்ஜு 22 ; 65)



5. அல்லாஹ்வுடைய 'தாத்‌” - உள்ளமை

அல்லாஹ்‌, அவனது 'தாத்‌'- உள்ளமையால்‌ அனைத்து படைப்பினங்களுக்கும்‌ மேல்‌ உயர்ந்து இருக்கின்றான்‌

(ஈஸாவை நோக்கி) அல்லாஹ்‌ கூறியதை (அவர்களுக்கு) ஞாபகமூட்டுங்கள்‌: ஈஸாவே! நிச்சயமாக நான்‌ உங்களுக்கு (உங்களுடைய ஆயுளைப்‌ பூர்த்தி செய்வேன்‌. உங்களை நமது பக்கம்‌ உயர்த்திக்‌ கொள்வேன்‌... (ஸுரா ஆலஇம்ரான்‌ 3 : 55)

எனினும்‌, அல்லாஹ்‌ அவரைத்‌ தன்‌ பக்கம்‌ உயர்த்திக்‌ கொண்டான்‌. அல்லாஹ்‌ (அனைவரையும்‌) மிகைத்தவனும்‌, ஞானமுடையவனுமாய்‌ இருக்கின்றான்‌. (ஸுரா அன்னிஸா 4 : 158)

(கலிமா தையிப்‌, ஸலவாத்து போன்று) நல்ல வாக்கியங்கள்‌ அவனளவில்‌ உயரே செல்லுகின்றன. நல்ல காரியங்களை அவனே உயர்த்துகின்றான்‌..(ஸுரா ஃபாதிர்‌ 35 : 10)

(அதற்குப்‌ பிர்அவ்ன்‌ தன்னுடைய மந்திரி ஹாமானை நோக்கி) ஹாமானே! நான்‌ வானத்தினுடைய வாசலை அடையக்கூடிய உயர்ந்ததொரு கோபுரத்தை நீ எழுப்பு, மூஸாவுடைய ஆண்டவனை தான்‌ பார்க்க வேண்டும்‌. அவர்‌ பொய்‌ சொல்கிறார்‌ என்றே நிச்சயமாக நான்‌ எண்ணுகின்றேன்‌ என்று கூறினான்‌... (ஸூரா அல்முஃமின்‌ 40 : 36,37)

வானத்தின்‌ மேல்‌ இருப்பவன்‌ உங்களைப்‌ பூமியில்‌ செருகிவிடமாட்டான்‌ என்று நீங்கள்‌ அச்சமற்றிருக்கின்றார்களா? அந்நேரத்தில்‌ பூமி அதிர்ந்து நடு நடுங்(கி‌) கு(முறு)ம்‌. அல்லது; வானத்தின்‌ மேல்‌ இருப்பவன்‌, உங்கள்‌ மீது கல்மழையைப்‌ பொழிய மாட்டான்‌ என்று நீங்கள்‌ பயமற்றிருக்கன்றீர்களா? அவ்வாறாயின்‌, எச்சரிக்கை (செய்யப்பட்ட வேதனை) எவ்வாறிருக்கும்‌ என்பதை நிச்சயமாக நீங்கள்‌ அறிந்து கொள்வீர்கள்‌. (ஸூரா அல்முல்க்கு 67 ; 16, 17)

மேற்கண்ட இறைவசனங்கள்‌ "அல்லாஹ்‌ அவனது படைப்பினங்களை பார்க்கிலும்‌ உயர்ந்தவனாக இருக்கின்றான்‌. அவன்‌ நமக்கு மேல்‌ இருக்கின்றான்‌: நம்மீது முழுமையான ஆதிக்கத்துடன்‌, ஆற்றலுடன்‌ இருக்கின்றான்‌" என்பதை மிகத்‌ தெளிவாக உறுதிப்படுத்துகின்றன.

நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌. “வானத்தின்‌ மேல்‌ உள்ள அல்லாஹ்வாகிய எங்கள்‌ அதிபதியே! உனது பெயர்‌ தூய்மையானது. உனது அதிகாரம்‌ வானம்‌, பூமியில்‌ உள்ளது. உனது கருணை வானத்தில்‌ உள்ளது போன்றே உனது கருணையை பூமியிலும்‌ வைப்பாயாக! எங்களின்‌ குற்றங்களையும்‌ தவறுகளையும்‌ எங்களுக்கு மன்னிப்பாயாக! நீ நல்லோர்களின்‌ இறைவன்‌, உனது கருணையிலிருந்து மகத்தான கருணையையும்‌, உனது நிவாரணத்திலிருந்து நிவாரணத்தையும்‌ இவ்வலியின்‌ மீது இறக்குவாயாக” (என்று துஆ செய்தால்‌ வலியுற்றவர்‌) குணமடைவார்‌. (ஸுனன்‌அபூதாவூது, முஸ்னது அஹ்மது, இப்னுஅதி, முஸ்னது அத்தாரமி, ஸுனனுன்‌ நஸாயி)

நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌: என்னை நீங்கள்‌ நம்பமாட்டீர்களா? நான்‌ வானத்திற்கு மேல்‌ உள்ளவனின்‌ நம்பிக்கைக்குரியவனாயிற்றே!”(ஸஹீஹுல்‌ புகாரி)

நபி (ஸல்‌) அவர்கள்‌ ஒரு பெண்ணிடம்‌ “அல்லாஹ்‌ எங்கே” என்று கேட்டார்கள்‌. அவள்‌ "வானத்திற்கு மேல்‌” என்று கூறினாள்‌. "நான்‌ யார்‌” என்று கேட்டார்கள்‌. அவள்‌ “அல்லாஹ்வின்‌ தூதர்‌” என்று கூறினாள்‌. அப்போது நபி (ஸல்‌) அவர்கள்‌ இவரை உரிமையிட்டு (விடுதலை செய்து) விடுங்கள்‌. நிச்சயமாக இவர்‌ முஃமின்‌ என்று கூறினார்கள்‌. (ஸஹீஹ்‌ முஸ்லிம்‌)



6. அல்லாஹ்‌ தன்னுடைய மகத்தான ஆற்றலைக்‌ கொண்டு பிரபஞ்சத்தை சூழ்ந்துள்ளான்‌

அவன்‌ தனது பார்க்கும்‌, கேட்கும்‌ சக்தியால்‌ நம்முடன்‌ நெருக்கமாக இருக்கின்றான்‌. எந்த ஒன்றும்‌ அவனுடைய அறிவையும்‌, ஆற்றலையும்‌ விட்டு மறையவோ தப்பிக்கவோ முடியாது. அவன்‌ தன்‌ புறத்திலிருந்து அருளுகிற உதவியால்‌ தனது நல்லடியார்களுடன்‌ இருக்கின்றான்‌.

அவன்தான்‌ வானங்களையும்‌ பூமியையும்‌ ஆறு நாட்களில்‌ படைத்தான்‌. பின்னர்‌, அர்ஷின்‌ மீது (தன்‌ மகிமைக்குத்‌ தகுந்தாற்போல்‌) உயர்ந்துவிட்டான்‌. (வித்து முதலியவை) பூமியில்‌ விதைக்கப்படுவதையும்‌ அவை முளைத்து வெளிப்படுவதையும்‌, வானத்திவிருந்து இறங்குபவற்றையும்‌, (பூமியிலிருந்து) ஏறுபவற்றையும்‌ அவன்‌ நன்கறிவான்‌. நீங்கள்‌ எங்கிருந்த போதிலும்‌ அவன்‌ உங்களுடன்‌ இருக்கின்றான்‌. நீங்கள்‌ செய்பவற்றையும்‌ (அந்த) அல்லாஹ்‌ உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்‌. (ஸூரா அல்ஹதீது 57 : 4)

(நபியே!) வானங்களிலும்‌, பூமியிலுமுள்ளவை அனைத்தையும்‌, நிச்சயமாக அல்லாஹ்‌ அறிகின்றான்‌ என்பதை நீங்கள்‌ கவனிக்கவில்லையா? அவர்களில்‌ மூன்று பேர்கள்‌ (கூடிப்பேசும்‌) ரகசியத்தில்‌ அவன்‌ நான்காவதாக இல்லாமலில்லை. ஐந்து பேர்கள்‌ (கூடிப்பேசும்‌) ரகசியத்தில்‌ அவன்‌ ஆறாவதாக இல்லாமலில்லை. இதைவிட குறைவாகவோ, அல்லது அதிகமாகவோ உள்ளவர்கள்‌ (கூடிப்‌ பேசும்‌) ரகசியத்திலும்‌ அவன்‌ அவர்களுடன்‌ இல்லாமலில்லை. இவ்வாறு அவர்கள்‌ எங்கிருந்த போதிலும்‌ (ரகசியம்‌ பேசினால்‌ அவன்‌ அவர்களுடைய ரகசியங்களை அறிந்து கொள்கின்றான்‌.) பின்னர்‌, அவர்கள்‌ செய்தவற்றைப்‌ பற்றி அவர்களுக்கு மறுமை நாளில்‌ அறிவித்து (அதற்குரிய கூலியைக்‌ கொடுக்கின்றான்‌.) நிச்சயமாக அல்லாஹ்‌ யாவற்றையும்‌ நன்கறிந்தவனாக இருக்கின்றான்‌. (ஸுரா அல்முஜாதலா 58 : 7)



7. மிக அருகில்‌ இருக்கின்றான்‌; பதில்‌ அளிக்கின்றான்

‌(நபியே) உங்களிடம்‌ என்னுடைய அடியார்கள்‌ என்னைப்‌ பற்றிக்‌ கேட்டால்‌, (அதற்கு நீங்கள்‌ கூறுங்கள்‌) நிச்சயமாக நான்‌ சமீபமாகவே இருக்கின்றேன்‌. (எவரும்‌) என்னை அழைத்தால்‌, அந்த அழைப்பாளரின்‌ அழைப்புக்கு விடையளிப்பேன்‌. ஆதலால்‌ அவர்கள்‌ என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்‌. என்னையே நம்பிக்கை கொள்ளட்டும்‌.(அதனால்‌) அவர்கள்‌ நேரான வழியை அடைவார்கள்‌.(ஸுரா அல்பகறா 2 : 186)

(நம்‌ தூதருக்கு) நீங்கள்‌ உதவி செய்யாவிட்டால்‌, (அதனால்‌ அவருக்கொன்றும்‌ நஷ்டம்‌ ஏற்பட்டுவிடாது. ஏனென்றால்‌) நிராகரிப்பவர்கள்‌ அவரை (ஊரைவிட்டு) வெளியேற்றிய சமயத்தில்‌, நிச்சயமாக அல்லாஹ்‌ அவருக்கு உதவி செய்தே இருக்கின்றான்‌. (மலைக்‌) குகையில்‌ இருந்த இருவரில்‌ ஒருவராக அவர்‌ இருந்த (போது எதிரிகள்‌ வந்து சூழ்ந்துகொண்ட) சமயத்தில்‌ தன்னுடன்‌ (குகையில்‌) இருந்த தோழ(ராகிய அபூபக்கரை நோக்கி, நீங்கள்‌ கவலைப்படாதீர்கள்‌, நிச்சயமாக அல்லாஹ்‌ நம்முடன்‌ இருக்கின்றான்‌ என்று கூறியபோதும்‌ அல்லாஹ்‌ அவருக்குத்‌ தன்னுடைய மனநிம்மதியை அளித்தான்‌... (ஸூரா அத்தவ்பா 9 : 40)

(அதற்கு இறைவன்‌) கூறினான்‌: நீங்கள்‌ பயப்படவேண்டாம்‌. நான்‌ (மூஸா, ஹாரூன்‌ ஆகிய) உங்கள்‌ இருவருடன்‌ இருந்து (அனைத்தையும்‌) கேட்டுக்‌ கொண்டும்‌ பார்த்துக்‌ கொண்டும்‌ இருப்பேன்‌.(ஸுரா தாஹா 20 : 40)

நிச்சயமாக எவர்கள்‌ மெய்யாகவே இறையச்சமுடையவர்களாக இருக்கின்றார்களோ அவர்களுடனும்‌, எவர்கள்‌ நன்மை செய்கின்றார்களோ அவர்களுடனும்தான்‌ அல்லாஹ்‌ இருக்கின்றான் ‌(ஸுரா அன்னஹ்ல்‌ 16 : 128)

ஆகவே நீங்கள்‌ (கஷ்டங்களைச்‌ சகித்துக்‌ கொண்டு) பொறுமையாக இருங்கள்‌. நிச்சயமாக அல்லாஹ்‌, பொறுமையுடையவர்களுடன்‌ இருக்கின்றான்‌. (ஸுரா அன்‌ஃபால்‌ 8 ; 40),‌

(எவ்வளவோ) பெருங்கூட்‌டத்தினரை, எத்தனையோ சிறு கூட்டத்தினர்‌, அல்லாஹ்வின்‌ உதவியைக்‌ கொண்டு வெற்றி அடைந்திருக்கின்றனர்‌. அல்லாஹ்‌, பொறுமையாளர்களுடன்‌ இருக்கின்றான்‌. (ஸூரா அல்பகறா 2 : 249)

நபித்தோழர்கள்‌ சப்தங்களை உயர்த்தி திக்ரு செய்தபோது நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌: “மக்களே! உங்களுக்கு இலகுவை ஏற்படுத்திக்‌ கொள்ளுங்கள்‌. ஏனெனில்‌, நிச்சயம்‌ நீங்கள்‌ செவிடனையோ, உங்களை விட்டு மறைந்து இருப்பவனையோ அழைக்கவில்லை. மிக நுட்பமாக கேட்பவனையும்‌ பார்ப்பவனையுமே நீங்கள்‌ அழைக்கின்றீர்கள்‌. நிச்சயமாக நீங்கள்‌ அழைப்பவன்‌ உங்களில்‌ ஒருவருக்கு அவரின்‌ வாகனத்தின்‌ கழுத்தைப்‌ பார்க்கிலும்‌ மிக அருகாமையில்‌ இருக்கின்றான்‌.” (ஸஹீஹுல்‌ புகாரி, ஸஹீஹ்‌ முஸ்லிம்‌)

நபி (ஸல்)‌ அவர்கள்‌ கூறினார்கள்‌: ஈமானில்‌ மிகச்‌ சிறந்தது, எங்கு இருப்பினும்‌ தன்னுடன்‌ அல்லாஹ்‌ இருக்கிறான்‌ என்று உறுதியாக அறிந்து கொள்வதாகும்‌. (அல்‌ பைஹகீ, அஸ்ஸில்ஸிலதுல்‌ ஸஹீஹா)

நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌: உங்களில்‌ ஒருவர்‌ தொழ நின்றால்‌ தனது முகத்தின்‌ முன்போ வலப்புறத்திலோ துப்ப வேண்டாம்‌. ஏனெனில்‌ அல்லாஹ்‌ அவரது முகத்துக்கு முன்‌ இருக்கிறான்‌. அவரது இடப்புறத்தில்‌ துப்பிக்‌ கொள்ளட்டும்‌. அல்லது அவரது பாதத்திற்கு கீழ்‌ துப்பிக்‌ கொள்ளட்டும்‌,(ஸஹீஹுல்‌ புகாரி, ஸஹீஹ்‌ முஸ்லிம்‌)

இந்த இறைவசனங்களை நம்பும்‌ முஸ்லிம்‌ அல்லாஹ்‌ நம்முடன்‌ இருக்கிறான்‌ என்பதற்குரிய பொருளை விளங்கிக்‌ கொள்வார்‌. மேலும்‌, அதை நினைவில்‌ கொண்டு அவன்‌ விரும்பாத காரியத்தின்பால்‌ நெருங்காமலும்‌, அவன்‌ தடுத்ததை செய்யாமலும்‌ தம்மைப்‌ பேணிக்‌ கொள்வார்‌.

அல்குர்‌ஆனிலும்‌, ஹதீஸ்களிலும்‌ அல்லாஹ்‌, அருகாமையில்‌ இருக்கின்றான்‌; நம்முடன்‌ இருக்கின்றான்‌ என்று கூறியிருப்பது அவன்‌ தனது படைப்பினங்களை விட்டு உயர்ந்து அர்ஷுக்கு மேல்‌ இருக்கின்றான்‌ என்று கூறியிருப்பதற்கு முரண்பட்டதல்ல. ஏனெனில்‌, அல்லாஹ்வின்‌ தன்மைகளில்‌ அவனுக்கு யாதொரு உவமையும்‌ கூற முடியாது. அவன்‌ அருகாமையில்‌ இருப்பதுடன்‌ உயர்ந்தும்‌ இருக்கின்றான்‌. அவன்‌ உயர்ந்து இருப்பதுடன்‌ அருகாமையிலும்‌ இருக்கின்றான்‌.



8. அல்லாஹ்வை‌ பார்ப்பது

இவ்வுலகில்‌ எவரும்‌ அல்லாஹ்வைப்‌ பார்த்ததில்லை; பார்க்கவும்‌ முடியாது. ஆனால்‌ முஃமின்கள்‌ (நம்பிக்கையாளர்கள்‌) அல்லாஹ்வை மறுமையில்‌ பார்ப்பார்கள்‌. அந்தப்‌ பாக்கியத்தை அடைவார்கள்‌. அல்லாஹ்வையும்‌, அவனது இறைநூல்களையும்‌, அவனது வானவர்களையும்‌, அவனது தூதர்களையும்‌ ஈமான்‌ கொள்வது கட்டாயமாக இருப்பது போலவே முஃமின்கள்‌ மறுமையில்‌ நேருக்கு நேர்‌ அவனைப்‌ பார்ப்பார்கள்‌ என்று ஈமான்‌ கொள்வதும்‌ கட்டாயமாகும்‌. மேகமூட்டம்‌ இல்லாதபோது சூரியனை தெளிவாகக்‌ காண்பது போலவும்‌, பெளர்ணமி அன்று சந்திரனைப்‌ பார்ப்பது போலவும்‌ எவ்வித மூடலும்‌, மறைதலும்‌, நெருக்கடியும்‌ இன்றி அவனை முஃமின்கள்‌ மறுமையில்‌ மஹ்ஷர்‌ மைதானத்திலும்‌, சுவர்க்கத்தில்‌ நுழைந்த பின்னும்‌ காண்பார்கள்‌.

இதைக்‌ குறிக்கும்‌ வசனங்கள்‌:

அந்நாளில்‌ சில(ருடைய) முகங்கள்‌ மிக்க மகிழ்ச்சியுடையவையாக தங்கள்‌ இறைவனை நோக்கிய வண்ணம்‌ இருக்கும்‌. வேறு (சிலருடைய) முகங்களோ, அந்நாளில்‌ (துக்கத்தால்‌) வாடியவையாக இருக்கும்‌. (ஸுரா அல்கியாமா 75 : 22, 23)

நன்மை செய்தவர்களுக்கு(க்‌ கூலி) நன்மைதான்‌. (அவர்கள்‌ செய்தவதைவிட) அதிகமாகவும்‌ கிடைக்கும்‌. (அதனால்‌ அவர்கள்‌ மிக்க மகிழ்ச்சியடைந்தவர்களாக இருப்பார்கள்‌.) (ஸுரா யூனுஸ்‌ 19 : 26)

இவ்வசனத்தில்‌ கூறப்பட்டுள்ள 'ஸியாதா' என்பதற்கு “அல்லாஹ்வைப்‌ பார்ப்பது' என நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறியுள்ளார்கள்‌. (ஸஹீஹ்‌ முஸ்லிம்‌)

அவர்கள்‌ விரும்பியதெல்லாம்‌ அதில்‌ அவர்களுக்குக்‌ கிடைக்கும்‌. அன்றி, நம்முடைய புறத்தாலும்‌ (அவர்கள்‌ கேட்காகதையும்‌) பின்னும்‌ அதிகமாகச்‌ கொடுக்கப்படும்‌. (ஸுரா காஃப்‌ 50 ; 35)

நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌: "நிச்சயம்‌ நீங்கள்‌ உங்களுடைய இறைவனை மறுமையில்‌ பெளர்ணமி அன்று, சந்திரனைப்‌ பார்ப்பது போன்று பார்ப்பீர்கள்‌. அவனைப்‌ பார்ப்பதில்‌ நீங்கள்‌ நெருக்கடிக்குள்ளாகமாட்டீர்கள்‌. சூரியன்‌ உதயமாவதற்கு முன்‌ உள்ள தொழுகையையும்‌, சூரியன்‌ மறைவதற்கு முன்‌ உள்ள தொழுகையையும்‌ முடிந்த அளவு தவறவிடாமல்‌ நிறைவேற்றி வாருங்கள்‌". (ஸஹீஹுல்‌ புகாரி, ஸஹீஹ்‌ முஸ்லிம்‌)

இதுபோன்ற இன்னும்‌ பல ஆதாரப்பூர்வமான நபிமொழிகள்‌ வந்துள்ளன. அவற்றில்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ நமது இறைவனாகிய அல்லாஹ்வைப்‌ பற்றி ஏராளமான செய்திகளைக்‌ கூறியுள்ளார்கள்‌. நபிவழியையும்‌, நபித்தோழர்களையும்‌ பின்பற்றும்‌ ஈடேற்றம்‌ பெற்ற கூட்டம்‌ அவை அனைத்தையும்‌ ஈமான்‌ கொள்ள வேண்டும்‌. அல்லாஹ்வின்‌ கிதாபில்‌ எப்படி வந்துள்ளதோ அவ்வாறே எவ்வித மறுப்பும்‌, மாற்றுக்‌ கருத்தும்‌ கூறாமலும்‌, அல்லாஹ்வின்‌ தன்மைகளைப்‌ படைப்பினங்களுடைய்‌ தன்மையுடன்‌ உவமைப்படுத்தாமலும்‌, அவற்றின்‌ வெளிப்படையான அர்த்தங்களுக்கு முரணாக விளக்கமளிக்காமலும்‌ நம்பிக்கை கொள்ள வேண்டும்‌.

இன்னும்‌ அல்லாஹ்வின்‌ தன்மைகளை விவரிக்கும்‌ அனேக வசனங்கள்‌ அல்குர்‌ஆனில்‌ உள்ளன. நேர்வழியை நாடி அதைச்‌ சிந்திப்பவர்களுக்கு உண்மையான வழி புலப்பட்டே தீரும்‌. இதையே பின்வரும்‌ இறைவசனங்கள்‌ தெளிவுபடுத்துகின்றன.

(நபியே) நீங்கள்‌ கூறுங்கள்‌: இது நம்பிக்கை கொண்டவர்களுக்கு நேரான வழியாகவும்‌, (அகத்திற்கும்‌ புறத்திற்கும்‌) நல்லதொரு நிவாரணியாகவும்‌ இருக்கின்றது. எவர்கள்‌ நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுடைய காதுகளுக்குச்‌ செவிடாகவும்‌, அவர்களுடைய பார்வையைப்‌ போக்கக்‌ கூடியதாகவும்‌ இருக்கின்றது. (ஸூரா ஹாமிம்‌ அஸ்ஸஜ்தா 41 ; 44)

அறிவுடையோர்‌ இதன்‌ வசனங்களை கவனித்து ஆராய்ந்து நல்லுணர்ச்சி பெறுவதற்காக (நபியே!) இந்தக்‌ கிதாபை நாமே உமக்கு இறக்கி வைத்தோம்‌. இது மிக பாக்கியம்‌ உள்ளது. (ஸூரா ஸாத்‌ 38 : 29)

(மனிதர்கள்‌) நல்லுணர்ச்சி பெறும்‌ பொருட்டே இந்தக்‌ குர்ஆனை நிச்சயமாக நாம்‌ மிக எளிதாக்கி இருக்கின்றோம்‌. ஆகவே, நல்லுணர்ச்சிபெறுவோர்‌ உண்டா? (ஸூரா அல்கமர்‌ 54 : 32)



அல்லாஹ்வின்‌ தன்மைகள்‌ நிறைவானவை முழுமையானவை. எனவே, அவனுக்கு ஒப்பாக எதுவுமில்லை.

“அவனுக்கு ஒப்பானது ஒன்றுமில்லை அவன்‌ (அனைத்தையும்‌) செவியுறுவோனாகவும்‌ உற்று நோக்கியவனாகவும்‌ இருக்கின்றான்‌.”(ஸூரா அஷ்ஷூறா 42 : 11)

அல்லாஹ்‌ என்றும்‌ உயிரோடு இருப்பவன்‌; நிலைத்திருப்பவன்‌. எனவே, “அவனைச்‌ சிறு தூக்கமும்‌ பெரும்‌ உறக்கமும்‌ பிடிக்காது”(ஸுரா அல்பகரா 2 : 255)

அல்லாஹ்‌ மிக நீதி செலுத்துபவனாக இருக்கிறான்‌. எனவே, அவன்‌ யாருக்கும்‌ அநீதியிழைக்க மாட்டான்‌.

அல்லாஹ்‌ தனது அடியார்களின்‌ செயல்களைக்‌ கண்டுகொள்ளாமல்‌ இருக்கமாட்டான்‌. அவன்‌ அடியார்களை நன்கு கவனித்தவனாகவும்‌ அவர்களை முழுமையாகச்‌ சூழ்ந்தவனாகவும்‌ அவன்‌ இருக்கின்றான்‌.

அவன்‌ மிக்க அறிந்தவனாகவும்‌ முழுமையான ஆற்றலுடையவனாகவும்‌ இருப்பதால்‌ வானம்‌. பூமியில்‌ உள்ள எதுவும்‌ அவளை இயலாமையில்‌ ஆழ்த்திவிட முடியாது.

“அவன்‌ ஏதேனுமொரு பொருளைப்ப்‌ படைக்கிக்‌ கருதினால்‌, அதனை ஆகு! எனக்‌ கூறுவதுதான்‌. உடன்‌ அது ஆகிவிடுகின்றது!” (ஸுரா யாஸீன்‌ 36 : 82)

அவன்‌ முழுமையான ஆற்றல்‌ பெற்றவன்‌. எனவே, அவனுக்குக்‌ களைப்போ சிரமமோ அறவே ஏற்படாது.

“நிச்சயமாக தாம்தான்‌ வானங்களையும்‌ பூமியையும்‌ அதற்கு மத்தியிலுள்ளவற்றையும்‌ ஆறே நாட்களில்‌ படைத்தோம்‌. (அதில்‌) தமக்கு எவ்வித களைப்பும்‌ ஏற்பட்டு விடவில்லை. (ஸூரா காஃப்‌ 50 : 38)



கவனத்தில்‌ வைக்க வேண்டியவை:

எந்தப்‌ பெயர்கள்‌ மற்றும்‌ பண்புகள்‌ தனக்கு உண்டு என அல்லாஹ்‌ உறுதி செய்தானோ அல்லது நபி (ஸல்‌) அவர்கள்‌ பெயர்கள்‌ மற்றும்‌ பண்புகளில்‌ அல்லாஹ்விற்கு எவை உண்டென உறுதி செய்தார்களோ அவை அனைத்தும்‌ அல்லாஹ்விற்கு உண்டு.

அல்லாஹ்வின்‌ பண்புகளைப்‌ பற்றி பேசும்‌ போது இரண்டு விஷயங்களில்‌ மிகுந்த எச்சரிக்கையுடன்‌ இருக்க வேண்டும்‌.

1. 'தம்ஸீல்‌' - உவமை கற்பிப்பது: அதாவது, வாயாலோ உள்ளத்தாலோ, அல்லாஹ்வின்‌ பண்புகளில்‌ ஏதேனும்‌ ஒரு பண்பு படைப்பினங்களின்‌ பண்பைப்‌ போல இருக்கிறது என்று கூறுவது.

2. 'தக்யீஃப்‌' - தன்மையை விவரிப்பது: அதாவது, அல்லாஹ்வுடைய பண்புகளின்‌ தன்மை இவ்வாறானது, இப்படிப்பட்டது என்று கூறுவது.

ஆகவே அல்லாஹ்வின்‌ பண்புகளுக்கு உவமை கற்பிப்பதோ அவற்றின்‌ தன்மையை விவரிப்பதோ அறவே கூடாது.

எந்த பண்புகள்‌ தன்னிடம்‌ இல்லை என அல்லாஹ்‌ மறுத்தானோ, அல்லது நபி (ஸல்‌) அவர்கள்‌, அல்லாஹ்விடம்‌ எந்தப்‌ பண்புகள்‌ இல்லை என மறுத்தார்களோ அவை அனைத்தும்‌ அல்லாஹ்விடம்‌ அறவே இல்லை.

ஏனெனில்‌, இவ்வாறு இல்லை என்று மறுப்பது, அதற்கு முரண்பட்ட தன்மைகள்‌ அல்லாஹ்விடம்‌ உண்டு என ஏற்றுக்‌ கொள்வதாகும்‌. அந்தத்‌ தன்மைகள்தான்‌ அல்லாஹ்விற்கு நிறைவானவையாகவும்‌ குறையற்றவையாகவும்‌ அமையும்‌.

அல்லாஹ்வும்‌ அவனது தூதரும்‌ எந்த விஷயத்தைப்‌ பற்றி விவரம்‌ கூறவில்லையோ அவற்றைப்‌ பற்றி நாமும்‌ மவுனம்‌ காக்க வேண்டும்‌.

அல்லாஹ்‌ தன்னிடம்‌ இருப்பதாகக்‌ கூறிய தன்மைகள்‌, அல்லது இல்லை என்று மறுத்த விஷயங்கள்‌ அனைத்தும்‌ அல்லாஹ்‌ தன்னைப்‌ பற்றி சொன்ன செய்திகளாகும்‌. 

அவன்‌ தன்னைப்‌ பற்றி நன்கறிந்தவன்‌; உண்மையே உரைப்பவன்‌; பேச்சில்‌ மிக அழகானவன்‌. அடியார்களாகிய நாம்‌ அல்லாஹ்வை முழுமையாக அறிய முடியாது. எனவே, அவன்‌ தன்னைப்‌ பற்றி கூறியதை அப்படியே ஏற்றுக்‌ கொள்ள வேண்டும்‌.

அவ்வாறே நபி (ஸல்‌) அவர்கள்‌ எந்தப்‌ பண்புகளை அல்லாஹ்வுக்கு இருப்பதாக அல்லது இல்லை என்பதாக கூறினார்களோ அவை நபியவர்களுக்கு அல்லாஹ்வால்‌ அறிவிக்கப்பட்ட செய்திகளாகும்‌. நபி (ஸல்‌) அவர்கள்‌ மனிதர்களில்‌ அல்லாஹ்வை மிகவும்‌ அறிந்தவர்‌; அவனுக்கு நன்மையை நாடுபவர்‌: மிக உண்மையாளர்‌; தெளிவாகப்‌ பேசுபவர்‌. ஆகவே அல்லாஹ்‌ மற்றும்‌ அவனது தூதர்‌ கூறியதில்தான்‌ முழுமையான அறிவும்‌ உண்மையும்‌ தெளிவும்‌ இருக்கிறது. எனவே அதை மறுப்பதற்கோ அதை ஏற்றுக்கொள்வதில்‌ தாமதிப்பதற்கோ எக்காரணத்தையும்‌ கூறக்‌ கூடாது.

அல்லாஹ்வின்‌ பண்புகளைப்‌ பற்றி எந்தப்‌ பண்பு அவனுக்கு உண்டு, எந்தப்‌ பண்பு அவனுக்கு இல்லை என்று அவனைப்‌ பற்றி விரிவாகவும்‌ சுருக்கமாகவும்‌ இதுவரை கூறப்பட்டதோ, அந்த அனைத்து விஷயங்களிலும்‌ நாம்‌ அல்லாஹ்வின்‌ கிதாபாகிய குர்‌ஆனையும்‌ அவனது நபி (ஸல்‌) அவர்களின்‌ வழிமுறையையும்‌ சார்ந்தே இருக்கிறோம்‌. 

இது விஷயத்தில்‌ நமது (ஸலஃப்‌ ஸாலிஹீன்‌) சிறப்பிற்குரிய முன்னோர்களும்‌ நேர்வழி பெற்ற இமாம்களும்‌ நடந்த வழியிலேயே நாமும்‌ நடக்கிறோம்‌.

இது விஷயத்தில்‌ குர்‌ஆன்‌, ஹதீஸின்‌ வசனங்களுக்கு அதன்‌ வெளிப்படையான அர்த்தத்தைக்‌ கொள்வதும்‌, அதில்‌ கூறப்பட்ட கருத்துகளை அல்லாஹ்வின்‌ தகுதிக்குத்‌ தக்கவாறு அதன்‌ நேரடி அர்த்தத்திலேயே கையாள்வதும்‌ அவசியமாகும்‌.

அல்லாஹ்வின்‌ தன்மைகள்‌ பற்றி வந்துள்ள குர்‌ஆன்‌ மற்றும்‌ ஹதீஸின்‌ வாசகங்களுக்கு அல்லாஹ்வும்‌ அவனது தூதரும்‌ நாடிய அர்த்தங்களுக்கு (தஹ்ரீஃப் செய்து) மாற்றமான அர்த்தம்‌ கொள்பவர்கள்‌, அல்லாஹ்வும்‌ அவனது தூதரும்‌ நாடிய கருத்துகளை (தஃதீல்‌ செய்து) மறுப்பவர்கள்‌, அல்லாஹ்வுடைய தன்மைகளுக்கு (தம்ஸீல்‌ செய்து) உவமானம்‌ கூறுபவர்கள்‌, அல்லாஹ்வுடைய தன்மைகளின்‌ அமைப்பை (தக்யீஃப்‌ செய்து) விவரிப்பவர்கள்‌ ஆகிய அனைவரிடமிருந்தும்‌ நாம்‌ முற்றிலும்‌ விலகி இருக்க வேண்டும்‌.



இறைமொழியிலோ, நபிவழியிலோ முரண்பாடுகள்‌ எதுவும்‌ இல்லை.

அல்குர்‌ஆனிலும்‌ நபி (ஸல்‌) அவர்களின்‌ (ஸுன்னா) வழிமுறையிலும்‌ வந்தவை அனைத்தும்‌ உண்மையாகும்‌. அவற்றில்‌ ஒன்று மற்றொன்றுக்கு முரண்படாது.

“இந்தக்‌ குர்‌ஆனை அவர்கள்‌ அழ்ந்து சிந்திக்க வேண்டாமா? இது அல்லாஹ்‌ அல்லாதவர்களிடமிருந்து வந்திருந்தால்‌ இதில்‌ அநேக (தவறுகளையும்‌) முரண்பாடுகளையும்‌ அவர்கள்‌ கண்டிருப்பார்கள்‌”(ஸூரா அன்னிஸா 4 ; 82)

ஏனெனில்‌, செய்திகளில்‌ ஒன்றுக்கொன்று முரண்பட்டு இருப்பது ஒன்றையொன்று பொய்ப்படுத்துவதாக அமையும்‌. இது அல்லாஹ்‌ மற்றும்‌ அவனது தூதரின்‌ செய்திகளில்‌ இருப்பது சாத்தியமற்றதாகும்‌.

அல்குர்‌ஆனில்‌ அல்லது நபி (ஸல்‌) அவர்களின்‌ ஹதீஸ்களில்‌ முரண்பாடுகள்‌ இருப்பதாகக்‌ கூறுபவர்கள்‌: அல்லது அல்குர்‌ஆனுக்கும்‌ ஆதாரமிக்க ஹதீஸ்களுக்குமிடையில்‌ முரண்பாடு இருக்கிறது என வாதிப்பவர்கள்‌ தீய சிந்தனையும்‌ வழிகெட்ட உள்ளத்தையும்‌ உடையவர்களாவர்‌.

இத்தகையோர்‌ உடனடியாக அல்லாஹ்விடம்‌ பாவ மன்னிப்புக்‌ கோரி தங்களது அசத்திய வாதத்திலிருந்து விலகிக்‌ கொள்ளவேண்டும்‌.

அல்குர்‌ஆனில்‌ முரண்பாடுகள்‌ இருக்கின்றன அல்லது நபிமொழிகளில்‌ முரண்பாடுகள்‌ இருக்கின்றன அல்லது அல்குர்‌ஆனுக்கும்‌ ஹதீஸ்களுக்குமிடையில்‌ முரண்பாடுகள்‌ இருக்கின்றன என்று எவரேனும்‌ வாதிட்டால்‌, அதற்குக்‌ காரணம்‌ அவர்களின்‌ எண்ணமும்‌ உள்ளமும்‌ கெட்டுக்‌ கோணலாகி விட்டதைத்‌ தவிர வேறொன்றும்‌ இல்லை. 

இவர்கள்‌ தங்களுக்கு சத்தியம்‌ தெளிவாகும்‌ வரை ஆழ்ந்து சிந்திக்கட்டும்‌; அதன்‌ விளக்கத்தைத்‌ தேடட்டும்‌. அப்படியும்‌ சத்தியம்‌ புலப்படவில்லையென்றால்‌ கல்வியில்‌ சிறந்தவர்களிடம்‌ அவ்விஷயத்தை ஒப்படைத்து விடட்டும்‌. அவர்கள்‌ கூறும்‌ கருத்தை ஏற்று, இறைச்சட்டங்களில்‌ முரண்பாடு இருப்பதாகச்‌ சந்தேகிப்பதிலிருந்து விலகிக்‌ கொள்ளட்டும்‌. பிறகு கல்வியில்‌ சிறந்தவர்கள்‌ கூறியது போன்று கூறி விடட்டும்‌!

கல்வியில்‌ சிறந்தவர்கள்‌ கூறுவார்கள்‌: “இதனையும்‌ நாங்கள்‌ நம்பிக்கை கொண்டோம்‌. அனைத்தும்‌ எங்கள்‌ இறைவனிடமிருந்து வந்தவைதாம்‌” (ஸூரா அலஇம்ரான்‌ 3 : 7)

ஆகவே அல்குர்‌ஆனிலும்‌ நபிமொழியிலும்‌ எவ்வித முரண்பாடோ வேற்றுமையோ கிடையாது. அவ்வாறே அவ்விரண்டுக்கும்‌ மத்தியிலும்‌ எவ்வித முரண்பாடோ வேற்றுமையோ கிடையாது.



மலக்குகளை மீது நம்பிக்கை

1. மலக்குகள்‌ - வானவர்கள்‌ உண்டென நம்பிக்கை கொள்ள வேண்டும்‌.

அவர்கள்‌ (மலக்குகள்‌) கண்ணியமிக்க அடியார்கள்‌. அவனை (அல்லாஹ்வை) மீறி அவர்கள்‌ எந்த வார்த்தையும்‌ பேச மாட்டார்கள்‌. அவன்‌ இட்ட கட்டளையை அவர்கள்‌ செய்து கொண்டிருப்பார்கள்‌.(ஸுரா அல்அன்பியா 21 : 25, 27)

அல்லாஹ்வே அவர்களைப்‌ படைத்தான்‌. அவனையே அவர்கள்‌ வணங்கி வருகிறார்கள்‌. மேலும்‌, அவனது கட்டளைகளுக்கு முற்றிலும்‌ அடிபணிகிறார்கள்‌.

அவர்கள்‌ அவனை வணங்காது பெருமை கொள்ளவும்‌ மாட்டார்கள்‌; சோர்வுறவும்‌ மாட்டார்கள்‌. அவர்கள்‌ இரவு பகல்‌ எந்நேரமும்‌ அவனைத்‌ துதி செய்து போற்றிக்‌ கொண்டேயிருக்கின்றனர்‌. (ஸுரா அல்அன்பியா 21 ; 19, 20)

நமது பார்வையிலிருந்து அல்லாஹ்‌ அவர்களை மறைத்து வைத்துள்ளான்‌; நாம்‌ அவர்களைக்‌ காண முடியாது. சில சந்தர்ப்பங்களில்‌ தனது அடியார்களில்‌ சிலருக்கு மட்டும்‌ அவர்களை வெளிப்படுத்திக்‌ காட்டுவான்‌.

ஜீப்ரீலை நபி (ஸல்‌) அவர்கள்‌ பார்த்தார்கள்‌. அவருக்கு 600 இறக்கைகள்‌ இருந்தன. (ஸஹீஹுல்‌ புகாரி - 3232, 4856)

ஈஸா (அலை) அவர்களின்‌ தாயார்‌ மர்யமிடம்‌ திடமான மனித உருவில்‌ ஜீப்ரீல்‌ (அலை) காட்சியளித்தார்‌; இருவரும்‌ உரையாடிக்‌ கொண்டார்கள்‌. (பார்க்க: ஸூரா மர்யம்‌ 19 : 15-27)

நபி (ஸல்) அவர்கள்‌ தங்களது தோழர்களுடன்‌ அமர்ந்திருந்த போது அந்தச்‌ சபைக்கு ஒருவர்‌ மனித உருவில்‌ பயணக்களைப்பு இல்லாதவராக, தூய வெண்மை நிற உடையில்‌, மிகவும்‌ கருத்த முடி உடையவராக வந்து நபி (ஸல்‌) அவர்களிடம்‌ அமர்ந்தார்‌. நபியவர்களின்‌ முட்டுக்காலுடன்‌ தனது முட்டுக்காலை இணைத்து வைத்து தனது இரு கைகளையும்‌ தமது தொடைகளின்‌ மீது வைத்தார்‌. பிறகு இருவரும்‌ பேசிக்‌ கொண்டார்கள்‌. அவர்‌ சென்ற பிறகு “வந்தவர்‌ ஜீப்ரீல்‌ (அலை)" என நபியவர்கள்‌ தோழர்களிடம்‌ கூறினார்கள்‌.(ஸஹீஹுல்‌ புகாரி - 50, 4777, ஸஹீஹ்‌ முஸ்லிம்‌ 1)



2. மலக்குகளில்‌ சிலருக்குச்‌ சில செயல்களை அல்லாஹ்‌ பணித்துள்ளான்‌.

ஜீப்ரீல்‌ (அலை) அவர்களுடைய பணி என்னவெனில்‌, நபிமார்கள்‌, ரஸூல்மார்களுக்கு வஹி - அல்லாஹ்வின்‌ செய்தியை எடுத்துரைப்பார்கள்‌.

மீகாயீல்‌ (அலை) அவர்களுடைய பணி அல்லாஹ்வின்‌ அனுமதி கொண்டு மழை பொழிய வைப்பது; தாவரங்களை முளைக்க வைப்பதாகும்‌. (தஃப்ஸீர்‌ இப்னு கஸீர்‌ - 1/135, 155)

இஸ்ராஃபீல்‌ (அலை) அவர்களுடைய பணி உலகம்‌ அழியும்‌ நேரத்திலும்‌ அனைத்துப்‌ படைப்பினங்கள்‌ உயிர்கொடுத்து எழுப்பப்படும்‌ நேரத்திலும்‌ 'சூர்‌' ஊதுவதாகும்‌. (ஜாமிவுத்‌ திர்மிதி)

‘மலக்குல்‌ மவுத்‌' மரண நேரத்தில்‌ உயிரைக்‌ கைப்பற்றுபவர்‌. (ஸூரா அஸ்ஸஜ்தா 32 ; 11)

 'மலக்குல்‌ ஜிபால்‌' மலைகளுக்கு என நியமிக்கப்பட்டவர்‌. (ஸஹீஹுல்‌ புகாரி, ஸஹீஹ்‌ முஸ்லிம்‌)

‘மாலிக்‌' நரகத்தின்‌ பாதுகாவலர்‌. (ஸூரா அஸ்ஸுக்ருஃப்‌ 43 : 77)

இவை அல்லாமல்‌ சில வானவர்கள்‌ கர்ப்பத்தில்‌ உள்ள சிசுக்களுக்காகவும்‌ சில வானவர்கள்‌ மனிதர்களைப்‌ பாதுகாப்பதற்காகவும்‌ சில வானவர்கள்‌ மனிதர்களின்‌ செயல்களை எழுதுவதற்காகவும்‌ நியமிக்கப்பட்டுள்ளனர்‌.

ஒவ்வொரு மனிதனிடமும்‌ இரண்டு மலக்குகள்‌ உள்ளனர்‌.

வலது புறத்தில்‌ ஒருவரும்‌ இடது புறத்தில்‌ ஒருவருமாக இருவர்‌ (அவன்‌ செய்யும்‌ செயலைக்‌) குறிப்பெடுத்துக்‌ கொண்டிருக்கின்றனர்‌. (மனிதன்‌) எதைக்‌ கூறிய போதிலும்‌ அதனை எழுதக்‌ காத்துக்‌ கொண்டிருக்கும்‌ ஒருவர்‌ அவனிடம்‌ இல்லாமலில்லை” (ஸுரா காஃப்‌ 50 ; 17, 18)

மற்றொரு பிரிவினர்‌ மனிதர்கள்‌ இறந்து மண்ணறையில்‌ அடக்கம்‌ செய்யப்பட்ட பிறகு கேள்வி கணக்கு கேட்கப்‌ பணிக்கப்பட்டுள்ளனர்‌. அல்லாஹ்வைப்‌ பற்றியும்‌ அவனது மார்க்கம்‌ மற்றும்‌ நபியைப்‌ பற்றியும்‌ மனிதனிடம்‌ கேள்வி கேட்பார்கள்‌.

“எவர்கள்‌ நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்களை மறுமையிலும்‌ சரி, இம்மையிலும்‌ சரி, (வணக்கத்திற்குரியவன்‌ அல்லாஹ்வைத்‌ தவிர வேறு யாரும்‌ இல்லை என்ற மெய்யான) இந்த வாக்கில்‌ அல்லாஹ்‌ உறுதிப்படுத்துகிறான்‌. அக்கிரமக்காரர்களை (அவர்களுடைய பாவத்தின்‌ காரணமாக) தவறான வழியில்‌ அல்லாஹ்‌ விட்டு விடுகிறான்‌. அல்லாஹ்‌ நாடியதைச்‌ செய்கிறான்‌.” (ஸுரா இப்றாஹிம்‌ 14 : 27)

மலக்குகளில்‌ சுவனவாசிகளுக்காகப்‌ பணிக்கப்பட்டவர்களும்‌ இருக்கிறார்கள்‌.

“நிலையான சுவனபதிகளில்‌ இவர்களும்‌ நன்னடத்தையுடைய இவர்களுடைய தந்தைகளும்‌ இவர்களுடைய மனைவிகளும்‌ இவர்களின்‌ சந்ததிகளும்‌ நுழைந்து விடுவார்கள்‌. ஒவ்வொரு வாசலிலும்‌ மலக்குகள்‌ இவர்களிடம்‌ வந்து, (இவர்களை நோக்கி) “நீங்கள்‌ (உங்கள்‌ வாழ்க்கையில்‌ கஷ்டங்களைப்‌) பொறுமையுடன்‌ சகித்துக்‌ கொண்டதன்‌ காரணமாக உங்களுக்கு ஈடேற்றம்‌ உண்டாவதாக! (உங்களுடைய இந்தக்‌) கடைசி வீடு மிக்க நல்லதாயிற்று” (என்று கூறுவார்கள்‌). (ஸூரா அர்ரஅது 13 : 23, 24)



3. மலக்குகளின்‌ எண்ணிக்கை

நபி (ஸல்)‌ அவர்கள்‌ கூறினார்கள்‌: “நிச்சயமாக வானத்தில்‌ 'அல்‌ பைத்துல்‌ மஃமூர்‌' எனும்‌ இறையில்லம்‌ உள்ளது. ஒவ்வொரு நாளும்‌ அதனுள்‌ எழுபதாயிரம்‌ மலக்குகள்‌ நுழைகிறார்கள்‌. (மற்றோர்‌ அறிவிப்பில்‌ 'அதில்‌ தொழுகிறார்கள்‌.) பின்பு அதிலிருந்து அவர்கள்‌ வெளியேறிய பிறகு அதற்குத்‌ திரும்ப வருவதே இல்லை.” (ஸஹீஹுல்‌ புகாரி - 3207)



இறைநூல்களின் மீது நம்பிக்கை

அகிலத்தாருக்கு தன்‌ ஆதாரத்தை நிலை நிறுத்துவதற்காக தூதர்கள்‌ மீது நூல்களை அல்லாஹ்‌ இறக்கி வைத்தான்‌. அதன்‌ மூலம்‌ நபிமார்கள்‌, மனிதர்களுக்கு கல்வியையும்‌ ஞானத்தையும்‌ கற்றுக்‌ கொடுத்தார்கள்‌; அவர்களைத்‌ தீயவற்றிலிருந்து பரிசுத்தப்படுத்தினார்கள்‌.

1. அல்லாஹ்‌ ஒவ்வொரு ரஸூலுக்கும்‌ ஒரு கிதாபை (நூலை)‌ கொடுத்துள்ளான்‌

“நாம்‌ நம்முடைய ரஸூல்களை (தூதர்களை)த்‌ தெளிவான அத்தாட்சிகளைக்‌ கொண்டே அனுப்பி வைத்தோம்‌. அத்துடன்‌ மனிதர்கள்‌ நீதியாக நடந்து கொள்வதற்காக அவர்களுக்கு கிதாபையும்‌ தராசையும்‌ கொடுத்தோம்‌. (ஸுரா அல்ஹதீது 57 : 25)



2. நாம்‌ அறிந்த கிதாபுகள்‌

1) ‘தவ்றாத்‌' - இது மூஸா (அலை) அவர்களுக்கு அல்லாஹ்‌ அருளிய நூலாகும்‌. இஸ்ரவேலர்களுக்கு வழங்கப்பட்ட நூல்களில்‌ மிக மகத்தான நூலாகும்‌.

‘தவ்றாத’தையும்‌ நிச்சயமாக நாம்தான்‌ இறக்கி வைத்தோம்‌. அதில்‌ நேர்வழியும்‌ பிரகாசமும்‌ இருந்தது (அல்லாஹ்வுக்கு) முற்றிலும்‌ வழிப்பட்டு நடந்த நபிமார்கள்‌, அதனைக்‌ கொண்டே யூதர்களுக்கு (மார்க்க)க்‌ கட்டளையிட்டு வந்தார்கள்‌. அவர்களுடைய (பண்டிதர்களாகிய) ரிப்பிய்யூன்களும்‌, (குருமார்களாகிய), அஹ்பார்களும்‌, அல்லாஹ்வுடைய கிதாபைக்‌ காப்போர்‌ என்ற முறையில்‌, (அதனைக்‌ கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள்‌. மேலும்‌ (இவர்கள்‌) அதற்குச்‌ சாட்சிகளாகவும்‌ இருந்தார்கள்‌. (ஸூரா அல்மாயிதா 5: 44)

2) 'இன்ஜீல்‌' - இது ஈஸா (அலை) அவர்களுக்கு அல்லாஹ்‌ அருளிய நூலாகும்‌. இந்த நூல்‌ தவ்றாத்தை உண்மைப்படுத்தியது: அதை முழுமைப்படுத்தியது.

“(முன்னிருந்த நபிமார்களாகிய) அவர்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமுடைய மகன்‌ ஈஸாவையும்‌ நாம்‌ அனுப்பி வைத்தோம்‌. அவர்‌ தன்‌ முன்‌ இருந்த தவ்றாத்தை உண்மையாக்கி வைப்பவராக இருந்தார்‌. மேலும்‌, இன்ஜீல்‌ என்னும்‌ நூலையும்‌ நாம்‌ அருளினோம்‌. அதிலும்‌ நேர்வழி மற்றும்‌ பிரகாசம்‌ இருந்தது. அது தன்‌ முன்னுள்ள தவ்றாத்தை உண்மையாக்கி வைத்தது. இறை  அச்சமுடையோருக்கு அது நேர்வழி காட்டக்கூடியதாகவும்‌ நல்லுபதேசமாகவும்‌ இருந்தது”(ஸுரா அல்மாயிதா 5 : 46)

“என்‌ முன்‌ இருக்கும்‌ தவ்றாத்தையும்‌ நான்‌ உண்மையாக்கி வைத்து (முன்னர்‌) உங்களுக்கு விலக்கப்பட்டவற்றில்‌ சிலவற்றை உங்களுக்கு ஆகுமாக்கி வைப்பகுற்காகவும்‌, உங்கள்‌ இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம்‌ கொண்டு வந்திருக்கின்றேன்‌. ஆகவே, நீங்கள்‌ அல்லாஹ்வுக்குப்‌ பயந்து என்னைப்‌ பின்பற்றுங்கள்‌. (ஸுரா அலஇம்ரான்‌ 3 : 50)

3. 'ஜபூர்‌' - இது நபி தாவூத்‌ (அலை) அவர்களுக்கு அல்லாஹ்‌ அருளிய நூலாகும்‌.

“தாவூதுக்கு 'ஜபூரை' நாமே கொடுத்தோம்‌”. (ஸூரா அன்னிஸா 4 ; 163)

4. இப்றாஹிம்‌ (அலை) அவர்களுக்கும்‌ மூஸா (அலை) அவர்களுக்கும்‌ அல்லாஹ்‌ சில நூல்களைக்‌ கொடுத்தான்‌.

“மறுமையின்‌ வாழ்க்கைதான்‌ மிக்க மேலானதும்‌ நிலையானதுமாகும்‌. நிச்சயமாக இது முன்னுள்ள நூல்களிலும்‌, இப்றாஹீம்‌, மூஸாவுடைய நூல்களிலும்‌ இருக்கின்றது.” (ஸுரா அல்‌அஃலா 87 : 17-19)



3. இறுதி நபியான முஹம்மது (ஸல்‌) அவர்களுக்குச்‌ சங்கை மிக்க ‘குர்ஆனை' அல்லாஹ்‌ இறக்கி வைத்தான்‌.

“ரமழான்‌ மாதம்‌ எத்தகைய (மகத்துவமுடைய)தென்றால்‌ அதில்தான்‌ அல்குர்‌ ஆன்‌ அருளப்பெற்றது. அது மனிதர்களுக்கு நேர்வழி காட்டியாகவும்‌ (நன்மை, தீமையைப்‌) பிரித்தறிவித்து நேரான வழியைத்‌ தெளிவாக்கக்கூடியதாகவும்‌ இருக்கின்றது.” (ஸுரா அல்பகரா 2 ; 185)

(நபியே! முற்றிலும்‌) உண்மையைக்‌ கொண்டுன்ள இந்த நூலையும்‌ (குர்ஆனையும்‌) நாம்தான்‌ உங்கள்மீது அருளினோம்‌. இது தனக்கு முன்னுள்ள (மற்ற) நூல்களையும்‌ உண்மையாக்கி வைக்கின்றது. அன்று, அவைகளைப்‌ பாதுகாப்பதாகவும்‌ இருக்கின்றது. ஆகவே (நபியே) நீங்கள்‌ அல்லாஹ்‌ (உங்களுக்கு) அருளிய இதனைக்‌ கொண்டே அவர்களுக்கிடையில்‌ தீர்ப்பு அளியுங்கள்‌. (ஸுரா அல்மாயிதா 5 ; 48)

எனவே, அல்லாஹ்‌ இந்தக்‌ குர்‌ஆனின்‌ மூலம்‌ இதற்கு முன்னுள்ள இறை நூல்கள்‌ அனைத்தையும்‌ மாற்றி (ரத்து செய்து) விட்டான்‌. அத்துடன்‌ இந்தக்‌ குர்‌ஆனில்‌ திருத்தம்‌ செய்வது மற்றும்‌ (முந்திய நூல்களில்‌ நடந்தது போன்று) மனிதக்‌ கரங்கள்‌ விளையாடுவது ஆகியவற்றை விட்டு பாதுகாப்பதாக அல்லாஹ்‌ பொறுப்பேற்றுக்‌ கொண்டான்‌.

“நிச்சயமாக நாம்தான்‌ இந்த நினைவூட்டலை (உங்கள்‌ மீது) இறக்கி வைத்தோம்‌. ஆகவே, (அதில்‌ எத்தகைய மாறுதலும்‌ அழிவும்‌ ஏற்படாதவாறு) நிச்சயமாக நாமே அதனைப்‌ பாதுகாக்கிறோம்‌.”(ஸுரா அல்ஹிஜ்ர்‌ 15 ; 9)

ஏனெனில்‌, இந்தக்‌ குர்‌ஆன்தான்‌ இறுதிநாள்‌ வரை அனைவர்‌ மீதும்‌ அல்லாஹ்வின்‌ ஆதாரமாக நிலைத்திருக்கும்‌.



4. முந்தைய இறைநூல்களின்‌ நிலை

முந்திய இறை நூல்கள்‌ அனைத்தும்‌ ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இறக்கப்பட்டவை. அடுத்த ஓர்‌ இறை நூல்‌ இறக்கட்படும்போது முந்திய இறை நூல்‌ ரத்தாகிவிடும்‌. பிந்திய இறை நூல்‌ முந்திய இறை நூலில்‌ மக்கள்‌ ஏற்படுத்திய கூடுதல்‌ குறைவுகளைத்‌ தெளிவுபடுத்திவிடும்‌. ஆகவே, முந்திய இறை நூல்களில்‌ எதுவும்‌ பாதுகாக்கப்படவில்லை. கூட்டுதல்‌, குறைத்தல்‌, மாற்றங்கள்‌ போன்றவை அவற்றில்‌ நிகழ்ந்து கொண்டே இருந்தன.

“யூதர்களில்‌ சிலர்‌ (இறை) வசனங்களைக்‌ கருத்து வேறுபடும்படிப்‌ புரட்டி வருகின்றனர்‌.” (ஸுரா அன்னிஸா 4 : 46)

“எவர்கள்‌ தங்கள்‌ கையைக்‌ கொண்டு (கற்பனையாக) எழுதிய புத்தகத்தை ஒரு சொற்பக்‌ கிரயத்தை அடைவதற்காக “இது அல்லாஹ்விடமிருத்து வந்ததுதான்‌' என்று கூறுகிறார்களோ அவர்களுக்குக்‌ கேடுதான்‌! ஆகவே, அவர்களுடைய கைகள்‌ எழுதியதாலும்‌ அவர்களுக்குக்‌ கேடுதான்‌! அவர்கள்‌ (அதைக்‌ கொண்டு பொருள்‌) சம்பாதிப்பதாலும்‌ அவர்களுக்குக்‌ கேடுதான்‌.” (ஸுரா அல்பகரா 2 ; 79)

“(நபியே!) நீங்கள்‌ கேளுங்கள்‌ : மனிதர்களுக்குப்‌ பிரகாசத்கையும்‌, நேர்வழியையும்‌ தரக்கூடிய “தவ்றாத்‌ (என்னும்‌) இறை நூலை மூஸாவுக்கு அருளியது யார்‌? நீங்கள்‌ அந்த இறை நூலைக்‌ தனித்தனி ஏடுகளாகப்‌ பிரித்து (அவற்றில்‌) சிலவற்றை வெளிப்படுத்துகிறீர்கள்‌; (உங்கள்‌ நோக்கத்திற்கு மாறான) பெரும்பாலானவற்றை நீங்கள்‌ மறைத்து விடுகிறீர்கள்‌.” (ஸுரா அல்அன்‌ஆம்‌ 6 : 91)

“நிச்சயமாக அவர்களில்‌ ஒரு பிரிவினர்‌ இருக்கின்றனர்‌. (அவர்கள்‌ இறைவனின்‌) நூலை ஓதும்போது (அத்துடன்‌ பல வாக்கியங்களைக்‌ கலந்து அதுவும்‌) நூலிலுள்ளதுதான்‌ என நீங்கள்‌ எண்ணிக்கொள்ளும்‌ பொருட்டு தங்கள்‌ நாவைக்கோணி உளறுகின்றனர்‌. எனினும்‌, அது நூலிலுள்ளது அல்ல. அன்றி, அவர்கள்‌ “அது அல்லாஹ்விடமிருந்து வந்தது” என்றும்‌ கூறுகின்றனர்‌. அது அல்லாஹ்விடமிருந்து வந்ததும்‌ அல்ல. அவர்கள்‌ நன்கறிந்து கொண்டே அல்லாஹ்வின்‌ மீது இவ்வாறு பொய்‌ கூறுகின்றனர்‌. ஒரு மனிதருக்கு நூலையும்‌ ஞானத்தையும்‌ நபித்துவத்தையும்‌ அல்லாஹ்‌ கொடுத்த பின்னர்‌ அவர்‌ மனிதர்களை நோக்கி “அல்லாஹ்வை விடுத்து என்னை வணங்குங்கள்‌” என்று கூறுவதற்கில்லை. (ஸுரா ஆலஇம்ரான்‌ 3: 78,79)

“இறைநூல்‌ கொடுக்கப்பட்டவர்களே! உங்களிடம்‌ நிச்சயமாக தம்முடைய ஒரு தூதர்‌ வந்திருக்கிறார்‌. இறை நூலில்‌ நீங்கள்‌ மறைத்துக்‌ கொண்ட அனேக விஷயங்களை, அவர்‌ உங்களுக்குத்‌ தெளிவாக எடுத்துக்‌ காண்பிக்கிறார்‌. மற்றும்‌ அனேக விஷயங்களை (அவர்‌ அறிந்திருந்தும்‌ உங்களுக்கு கேவலம்‌ உண்டாகாதிருக்கும்‌ பொருட்டு அவற்றைக்‌ கூறாது) விட்டு விடுகின்றார்‌. நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பிரகாசமும்‌ தெளிவுமுள்ள ஓர்‌ இறை நூல்‌ (இப்போது) உங்களிடம்‌ வந்திருக்கின்றது. (உங்களில்‌) எவர்கள்‌ அல்லாஹ்வின்‌ திருப்தியைப்‌ பின்பற்றுகிறார்களோ அவர்களை அதன்‌ மூலமாக, அல்லாஹ்‌ ஈடேற்றத்திற்குரிய வழியில்‌ செலுத்துகிறான்‌. மேலும்‌, இருள்களிலிருந்தும்‌ வெளிப்படுத்தி தன்‌ அருளால்‌ பிரகாசத்தின்‌பால்‌ கொண்டு வருகிறான்‌. தவிர, அவர்களை நேரான வழியில்‌ செல்லும்படியும்‌ செய்கிறான்‌. (ஸுரா அல்மாயிதா 5 ; 15, 16)



இறைதூதர்களின் மீது நம்பிக்கை

1. அல்லாஹ்‌ மனிதர்களுக்காகப்‌ பல தூதர்களை அனுப்பி வைத்தான்‌.

“அல்லாஹ்வின்‌ மீது (குற்றம்‌ கூற) மனிதர்களுக்கு யாதொரு ஆதாரமும்‌ இல்லாதிருக்கும்‌ பொருட்டு, இத்தூதர்களுக்குப்‌ பின்னரும்‌ (யஹ்யா போன்ற வேறு) பல தூதர்களை, (சொர்க்கத்தைப்பற்றி) நற்செய்தி கூறுகின்றவர்களாகவும்‌ (நரகத்தைப்பற்றி) அச்சமூட்டி எச்சரிக்கின்றவர்களாகவும்‌ (நாம்‌ அனுப்பி வைத்தோம்‌). அல்லாஹ்‌ (அனைவரையும்‌) மிகைத்தவனும்‌, ஞானமுடையவனுமாக இருக்கின்றான்‌. (ஸுரா அன்னிஸா 4 : 165)



2. அந்தத்‌ தூதர்களில்‌ முதலாமவர்‌ நூஹ்‌ (அலை) ஆவார்கள்‌. இறுதியானவர்‌ முஹம்மது (ஸல்‌) ஆவார்கள்‌.

“(நபியே) நூஹுக்கும்‌, அவருக்குப்‌ பின்னர்‌ வந்த நபிமார்களுக்கும்‌, நாம்‌ வஹி அறிவித்தவாறே உங்களுக்கும்‌, நிச்சயமாக நாம்‌ வஹி அறிவித்தோம்‌. மேலும்‌, இப்றாஹீம்‌, இஸ்மாயீல்‌, இஸ்ஹாக்‌ யஅகூப்‌ ஆகியவர்களுக்கும்‌, அவர்களுடைய சந்ததிகளுக்கும்‌, ஈஸா, ஐயூப்‌, யூனுஸ்‌, ஹாரூன்‌, ஸுலைமான்‌ ஆகியோருக்கும்‌ (இவ்வாறே) நாம்‌ வஹி அறிவித்திருக்கின்றோம்‌. தாவூதுக்கு 'ஜபூர்‌' என்னும்‌ இறைநூலை நாமே கொடுத்தோம்‌.” (ஸூரா அன்னிஸா 4 ; 163)

(நம்பிக்கையாளர்களே!) உங்களில்‌ உள்ள (வயதுவந்த) ஆண்களில்‌ ஒருவருக்கும்‌ முஹம்மது தந்தையாக இருக்கவில்லை. எனினும்‌, அவர்‌ அல்லாஹ்வுடைய தூதராகவும்‌, நபிமார்களில்‌ இறுதியானவராகவும்‌ இருக்கின்றார்‌.”(ஸுரா அல்அஹ்ஸாப்‌ 33 : 40)

அவர்களில்‌ மிகச்‌ சிறந்தவர்கள்‌ முஹம்மது (ஸல்‌), பிறகு இப்றாஹீம்‌, பிறகு மூஸா, பிறகு நூஹ்‌, பிறகு ஈஸா இப்னு மர்யம்‌ (அலைஹி முஸ்ஸலாம்)‌ இவர்கள்‌ அனைவரும்‌ பின்வரும் வசனத்தில்‌ குறிப்பிடப்பட்டுள்ளார்கள்‌.

“(நபியே!) நம்முடைய தூதை எடுத்துரைக்கும்‌ படி (பொதுவாக) நபிமார்களிடமும்‌ (சிறப்பாக) உங்களிடமும்‌, நூஹ்‌, இப்றாஹிம்‌, மூஸா, மர்யமுடைய மகன்‌ ஈஸாவிடமும்‌ வாக்குறுதி வாங்கிய சமயத்தை நினைத்துப்‌ பாருங்கள்‌. மிக்க உறுதியான வாக்குறுதியை இவர்களிடமும்‌ நாம்‌ எடுத்துக்‌ கொண்டிருக்கிறோம்‌” (அல்‌ அஹ்ஸாப்‌ 33 : 7)



3, சிறப்புக்குரிய இந்த ரஸுல்மார்களின்‌ மார்க்கச்‌ சட்ட அமைப்புகளிலுள்ள சிறப்புகள்‌ அனைத்தையும்‌ பெற்றதாக முஹம்றது (ஸல்‌) அவர்களின்‌ மார்க்கச்‌ சட்ட அமைப்பு (ஷரீஅத்‌) உள்ளது.

(நம்பிக்கையாளர்களே!) நூஹுவுக்கு எதனை அவன்‌ உபதேசித்தானோ அதனையே உங்களுக்கும்‌ அவன்‌ மார்க்கமாக்கி இருக்கின்றான்‌. ஆகவே (நபியே) நாம்‌ உமக்கு வஹி மூலம்‌ அறிவிப்பதும்‌ இப்றாஹிம்‌, மூஸா, ஈஸா ஆகியோருக்கு நாம்‌ உபதேசித்ததும்‌ (என்ன வென்றால்‌, நீங்கள்‌ ஒருமித்து ஒரிறைக்‌ கொள்கையுடைய உண்மையான) மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள்‌. அதில்‌ (பல பிரிவுகளாகப்‌) பிரிவினை செய்து கொள்ளாதீர்கள்‌ என்பதே அகும்‌.” (ஸூரா அஷ்ஷாறா 42 : 13)



4. அனைத்து (ரஸூல்‌) தூதர்களும்‌ அல்லாஹ்வால்‌ படைக்கப்பட்ட மனித இனத்தவர்களே! அவர்களுக்கு அல்லாஹ்வின்‌ இறைத்தன்மைகளில்‌ எந்தத்‌ தன்மையும்‌ கிடையாது. 

இறைத்தூதர்களில்‌ முதல்‌ தூதரான நூஹ்‌ (அலை) அவர்களைப்‌ பற்றி அல்லாஹ்‌ கூறுகிறான்‌:

(“நூஹ்‌ தனது மக்களை நோக்கி கூறினார்‌) அல்லாஹ்வுடைய பொக்கிஷங்கள்‌ என்னிடம்‌ இருக்கின்றன என்று நான்‌ உங்களிடம்‌ கூறவில்லை; நான்‌ மறைவானவற்றை அறிந்தவனுமல்லன்‌; நான்‌ ஒரு மலக்கு (வானவர்‌) என்றும்‌ கூறவில்லை.” (ஸூரா ஹுது 11 : 31)

இறைத்தூதர்களில்‌ இறுதித்‌ தூதரான முஹம்மது (ஸல்‌) அவர்களைப்‌ பற்றி அல்லாஹ்‌ கூறுகிறான்‌:

(முஹம்மதே! நீங்கள்‌ அவர்களை நோக்கி கூறுங்கள்‌) “அல்லாஹ்வுடைய பொக்கிஷங்கள்‌ என்னிடம்‌ இருக்கிறதென்று நான்‌ உங்களுக்குக்‌ கூறவில்லை. மறைவானவற்றை நான்‌ அறியவும்‌ மாட்டேன்‌. உண்மையாகவே நான்‌ ஒரு மலக்கு என்றும்‌ நான்‌ உங்களிடம்‌ கூறவில்லை. எனினும்‌, எனக்கு வஹியின்‌ மூலம்‌ அறிவிக்கப்பட்டவைகளை அன்றி (வேறொன்றையும்‌) நான்‌ பின்பற்றுவது இல்லை” என்று கூறி, “குருடனும்‌, பார்வையுடையவனும்‌ சமமாவார்களா? (இவ்வளவு கூட) நீங்கள்‌ சிந்திக்க வேண்டாமா? என்றும்‌ கேளுங்கள்‌. (ஸூரா அல்மாயிதா 6 : 50)

(முஹம்மதே) “நீங்கள்‌ அவர்களை நோக்கி கூறுங்கள்‌: அல்லாஹ்‌ நாடினால்‌ தவிர எனக்கு எந்த நன்மையும்‌ தீமையும்‌ செய்து கொள்ள நான்‌ சக்தி பெறமாட்டேன்‌. (ஸூரா அல்அஃராஃப்‌ 7 : 188)

(முஹம்மதே!) நீங்கள்‌ (அவர்களை நோக்கி) கூறுங்கள்‌: “உங்களுக்கு நன்மையோ தீமையோ செய்ய நிச்சயமாக நான்‌ ஒரு சிறிதும்‌ சக்தியற்றவன்‌”(ஸுரா அல்ஜின்னு 72 : 21)



5. இறைத்தூதர்களும்‌ அல்லாஹ்வின்‌ அடிமைகள்தாம்‌. அவர்களும்‌ படைக்கப்பட்டவர்களே. ஆனால்‌, இறைத்தூதர்களை 'ரிஸாலத்‌' எனும்‌ தூதுத்துவத்தைக்‌ கொண்டு மற்ற மனிதர்களைய்‌ பார்க்கிலும்‌ அல்லாஹ்‌ மேன்மைப்படுத்தி உள்ளான்‌.

அல்லாஹ்‌, அவர்களை உயர்வாகப்‌ பேசும்‌ போதும்‌ அவர்களின்‌ சிறப்பை விவரிக்கும்‌ போதும்‌ அவர்களைத்‌ தனது அடிமைகள்‌, அடியார்கள்‌ என்றே குறிப்பிடுகிறான்‌.

அவர்களில்‌ முதலாமவரான நூஹ்‌ (அலை) அவர்களைப்‌ பற்றி அல்லாஹ்‌ குறிப்பிடுகிறான்‌:

“நூஹ்வுடன்‌ தாம்‌ (கப்பலில்‌) சுமந்தவர்களின்‌ சந்ததிகளே! அவர்‌ நிச்சயமாக (அதற்கு) மிக்க நன்றி செலுத்தும்‌ அடிமையாகவே இருந்தார்‌ (ஸூரா பனீ இஸ்ராயீல்‌ 17 :3)

அவர்களில்‌ இறுதியானவரான முஹம்மது (ஸல்)‌ அவர்கள்‌ குறித்து அல்லாஹ்‌ கூறுகிறான்‌:

(“நன்மை தீமைகளைக்‌ தெளிவாகப்‌) பிரித்தறிவிக்கும்‌ இந்நூலை தன்‌ அடிமை (முஹம்மது (ஸல்‌)) மீது இறக்கியவன்‌ மிக்க பாக்கியமுடையவன்‌. இது உலகத்தார்‌ அனைவரையும்‌ அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாக இருக்கின்றது” (ஸூரா அல்‌ஃபுர்கான்‌ 25 ; 1)

ஏனைய ரஸூல்மார்கள்‌ குறித்து அல்லாஹ்‌ கூறுகிறான்‌:

(“நபியே) நமது அடிமைகள்‌ இப்ராஹீம்‌, இஸ்ஹாக்‌, யஅகூபையும்‌ நினைத்துப்‌ பாருங்கள்‌. இவர்கள்‌ கொடையாளிகளாகவும்‌, அகப்பார்வை உடையவர்களாகவும்‌ இருந்தார்கள்‌.” (ஸூரா ஸாத்‌ 38 : 45)

“மிக பலசாலியாகிய நமது அடிமை தாவுதை நினைத்துப்‌ பாருங்கள்‌! நிச்சயமாக அவர்‌ (எத்தகைய கஷ்டத்திலும்‌) நம்மையே நோக்கி நின்றார்‌. (ஸூரா ஸாத்‌ 38 : 17)

தாவூதுக்கு ஸுலைமானை நாம்‌ (மகனாகத்) தந்தருள்‌ புரிந்தோம்‌. அவர்‌ சிறந்த அடிமையாக இருந்தார்‌. நிச்சயமாக அவர்‌ அனைத்திலும்‌ (நம்‌ பக்கமே) திரும்பக்கூடியவர்‌.” (ஸுரா ஸாத்‌ 38 ; 30)

நபி ஈஸாவைப்‌ பற்றிக்‌ குறிப்பிடுகிறான்‌:

“அவரோ நாம்‌ அருள்புரிந்த ஒர்‌ அடிமையே தவிர வேறில்லை. இஸ்ராயிலின்‌ சந்ததிகளுக்கு அவரை நாம்‌ ஓர்‌ உதாரணமாக்கினோம்‌” (ஸுரா அஸ்ஸாக்ருஃப்‌ 43 ; 59)



6. அல்லாஹ்‌ தூதுத்துவத்தின்‌ தொடர்ச்சியை முஹம்மது (ஸல்‌) அவர்களின்‌ தூதுத்துவத்தைக்‌ கொண்டு நிறைவு செய்தான்‌: அவர்களை மனிதர்கள்‌ அனைவருக்கும்‌ ரஸுலாக - தூதராக ஆக்கினான்‌.

இதையே அல்லாஹ்‌ இவ்வாறு குறிப்பிடுகிறான்‌:

“(நபியே!) நீங்கள்‌ கூறுங்கள்‌: மனிதர்களே! (நீங்கள்‌ எந்த நாட்டவராயினும்‌, எவ்வகுப்பாராயினும்‌) நிச்சயமாக நான்‌ உங்கள்‌ அனைவருக்கும்‌ அல்லாஹ்வுடைய தூதராவேன்‌. வானங்கள்‌ பூமியின்‌ ஆட்சி அவனுக்குரியதே! வணக்கத்திற்குரியவன்‌ அவனைத்‌ தவிர வேறு ஒருவருமில்லை. அவனே உயிர்ப்பிக்கிறான்‌; மரணிக்கும்படி, செய்கிறான்‌. ஆகவே (மக்களே!) அந்த அல்லாஹ்வையும்‌, எழுதப்படிக்க அறியாத அவனுடைய இத்தூதரையும்‌ நீங்கள்‌ நம்பிக்கை கொள்வீர்களாக! அவரும்‌ அல்லாஹ்வையும்‌ அவனுடைய வசனங்களையும்‌ நம்பிக்கை கொள்கிறார்‌. ஆகவே, நீங்கள்‌ நேரான வழியை அடையும்‌ பொருட்டு அவரையே பின்பற்றுங்கள்‌.” (ஸுரா அல்அஃராஃப்‌ 7: 158)

இஸ்லாமை முஹம்மது (ஸல்‌) அவர்களுக்கு அல்லாஹ்‌ மார்க்கமாக ஆக்கினான்‌. அதையே தனது அடியார்களுக்கும்‌ மார்க்கமாகப்‌ பொருந்திக்‌ கொண்டான்‌. அது அல்லாத எந்த மார்க்கத்தையும்‌ யாரிடமிருந்தும்‌ அவன்‌ ஏற்கமாட்டான்‌.

“நிச்சயமாக அல்லாஹ்விடத்தில்‌ (அங்கீகரிக்கப்பட்‌ட மார்க்கம்‌) இஸ்லாம்தான்‌.” (ஸுரா ஆலஇம்ரான்‌ 3 : 19)

“இன்றைய தினம்‌ நான்‌ உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தைப்‌ பரிபூரணமாக்கி வைத்துவிட்டேன்‌. என்னுடைய அருளையும்‌ உங்கள்‌ மீது முழுமைப்படுத்திவிட்டேன்‌. உங்களுக்கு இந்த இஸ்லாமை மார்க்கமாக பொருந்திகொண்டேன்‌. (ஸூரா அல்மாயிதா 5 : 3)

“இஸ்லாமைத்‌ தவிர (வேறொரு) மார்க்கத்தை எவரேனும்‌ விரும்பினால்‌ நிச்சயமாக அவரிடமிருந்து (அது) அங்கீகரிக்கப்படாது. மறுமையில்‌ அவர்‌ நஷ்டமடைந்தவர்களில்‌ ஒருவராகவே இருப்பார்‌.” (ஸுரா ஆலஇம்ரான்‌ 3:85)

இஸ்லாமைத்‌ தவிர யூத, கிறிஸ்தவ அல்லது வேறு மதங்களில்‌ எந்த ஒன்றையாவது அல்லாஹ்விடம்‌ ஒப்புக்‌ கொள்ளப்பட்டதாக ஒரு முஸ்லிம்‌ கருதினால்‌ அவர்‌ காஃபிர்‌ - நிராகரிப்பாளர்‌ ஆகிவிடுவார்‌. அல்லாஹ்விடம்‌ பாவமன்னிப்பு கேட்டு தனது கொள்கையிலிருந்து விலகவில்லையென்றால்‌ இஸ்லாமிலிருந்து வெளியேறிவிடுவார்‌. 

ஏனெனில்‌, அவர்‌ குர்‌ஆனின்‌ மேற்கூறப்பட்ட வசனங்களை மறுத்தவராகிவிடுகிறார்‌. பிறகு, 'முர்தத்து' மதம்‌ மாறியவராக கருதப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுவார்‌. நபி (ஸல்‌) அவர்கள்‌ உலகின்‌ அனைத்து மக்களுக்கும்‌ அல்லாஹ்வின்‌ தூதராக அனுப்பப்பட்டார்கள்‌ என்பதை நிராகரிப்பவன்‌ அனைத்து தூதர்களையும்‌ நிராகரித்தவனாகவே ஆவான்‌. அவன்‌ தனது சமூகத்துக்கு அனுப்பப்பட்ட தூதரை நம்பிக்கை கொண்டு அவரைப்‌ பின்பற்றுவதாக தன்னைப்பற்றிக்‌ கருதினாலும்‌ சரியே. ஏனெனில்‌, அல்லாஹ்‌ கூறுகிறான்‌:

“நூஹ்வுடைய மக்கள்‌ (நம்முடைய) தூதர்களைப்‌ பொய்யாக்கினார்கள்‌.”(ஸூரா அஷ்ஷாஅறா 26 : 105)

நூஹ்‌ (அலை) அவர்களுக்கு முன்‌ எந்த ரஸூலும்‌ (தூதரும்‌) இல்லையென்றாலும்‌ நூஹ்‌ (அலை) அவர்களைப்‌ பொய்யாக்கியவர்களை அனைத்து ரஸூல்மார்களையும்‌ பொய்யாக்கியவர்களாகவே அல்லாஹ்‌ கூறியுள்ளான்‌.

“நிச்சயமாக எவர்கள்‌, அல்லாஹ்வையும்‌ அவனுடைய தூதர்களையும்‌ நிராகரித்துவிட்டு, அல்லாஹ்வுக்கும்‌ அவனுடைய தூதர்களுக்கும்‌ இடையில்‌ பிரிவினை செய்துவிடக்‌ கருதி (தூதர்களில்‌) “சிலரை நம்பிக்கை கொள்வோம்‌; சிலரை நிராகரிப்போம்‌" எனவும்‌ கூறி (நிராகரிப்புக்கும்‌ நம்பிக்கைக்கும்‌) மத்தியில்‌ ஒரு பாதையை ஏற்படுக்க விரும்புகின்றார்களோ இத்தகையோர்‌, நிச்சயமாக நிராகரிப்போர்தான்‌. நிராகரிப்போருக்கு நாம்‌, இழிவு தரும்‌ வேதனையையே தயார்படுத்தி வைத்திருக்கின்றோம்‌.(ஸூரா அன்னிஸா 4 : 150, 151)

முஹம்மது (ஸல்‌) அவர்களுக்குப்‌ பிறகு எந்த நபியும்‌ இல்லை. அவர்களுக்குப்‌ பின்‌ தன்னை நபி என வாதிப்பவன்‌; அல்லது நபி என வாதிப்பவனை உண்மைப்படுத்துபவன்‌ இஸ்லாமிலிருந்து வெளியேறிவிடுவான்‌. 'காஃபிர்‌' மறுப்பாளன்‌ ஆவான்‌. ஏனெனில்‌, அவன்‌ அல்லாஹ்வையும்‌ அவனது தூதரையும்‌ முஸ்லிம்களின்‌ ஏகோபித்த முடிவையும்‌ பொய்யாக்கியவனாவான்‌.



மறுமை நாள் மீது நம்பிக்கை

அல்லாஹ்வும்‌, அவனுடைய தூதரும்‌ கூறியபடி கியாமத்‌ எனும்‌ மறுமை நாள்‌ (உலக முடிவு நாள்‌) நிச்சயமாக நிகழும்‌. அதுவே இறுதிநாள்‌; அந்த நாளைக்குப்‌ பிறகு வேறொரு நாள்‌ இல்லை. அந்த நாளில்‌ மனிதர்கள்‌ உயிருடன்‌ எழுப்பப்படுவார்கள்‌. பிறகு சொர்க்கத்தில்‌ அல்லது நரகத்தில்‌ என்றென்றும்‌ நிரந்தரமாக தங்கி விடுவார்கள்‌.



1. இஸ்ராஃபீல்‌ (அலை)‌ இரண்டாவது முறையாக. 'சூர்‌’‌ ஊதிய உடன்‌ மரணித்தவர்களை அல்லாஹ்‌ உயிர்‌ கொடுத்து எழுப்புவான்‌.

'சூர்‌ (எக்காளம்‌) ஊதப்பட்டால்‌ வானங்களில்‌ இருப்பவர்களும்‌ பூமியில்‌ இருப்பவர்களும்‌ மூர்ச்சித்து மதி இழந்து (விழுந்து அழிந்து) விடுவார்கள்‌; அல்லாஹ்‌ நாடியவர்களைத் தவிர! மறுமுறை சூர்‌ ஊதப்பட்டால்‌ உடனே அவர்கள்‌ அனைவரும்‌ (உயிர்பெற்று) எழுந்து நின்று (இறைவனை) எதிர்நோக்கி நிற்பார்கள்‌.” (ஸூரா அஸ்ஸூமர்‌ 39 ; 68)

அப்போது அனைத்து மனிதர்களும்‌ 'கப்ர்’‌-புதைகுழிகளிலிருந்து எழுந்து அகிலங்களின்‌ இறைவனாகிய அல்லாஹ்வின்‌ முன்‌ ஒன்று கூடுவார்கள்‌.

அவர்கள்‌ காலணி அணிந்திருக்க மாட்டார்கள்‌. ஆடையின்றியும்‌, கத்னா(எனும்‌ விருத்தசேதனம்‌) செய்யப்படாதவர்களாகவும்‌ இருப்பார்கள்‌. சூரியன்‌ அருகிலிருக்கும்‌. அவர்களை‌ வியர்வை சூழ்ந்து கொள்ளும்‌. தராசுகள்‌ நிறுத்தப்பட்டு அடியார்களின்‌ செயல்கள்‌ எடை போடப்படும்‌. எவர்களுடைய நற்செயல்களின்‌ தட்டு கனமாக இருக்கிறதோ அவர்கள்‌ வெற்றி அடைவார்கள்‌. எவர்களது நன்மையின்‌ தட்டு இலேசாகிவிடுமோ அவர்கள்‌ நஷ்டம்‌ அடைந்து நரகில்‌ நிரந்தரமாகத்‌ தங்கி விடுவார்கள்‌.

“முதல்‌ தடவை நாம்‌ அவர்களைப்‌ படைத்த பிரகாரமே அந்நாளில்‌ நாம்‌ (அவர்களுக்கு உயிர்‌ கொடுத்து) அவர்களை மீள வைப்போம்‌. இது நம்மீது கடமையானதொரு வாக்குறுதியாகும்‌. நிச்சயமாக நாம்‌ இதனைச்‌ செய்தே தீருவோம்‌.” (ஸூரா அல்அன்பியா 21 : 104)



2. செயலேடுகள்‌ வெளிப்படுத்தப்படும்‌; தராசுகள்‌ நிறுவப்படும்‌: எவருக்கும்‌ அநீதி இழைக்கப்படாது

மனிதர்களின்‌ செயலேடுகள்‌ கொடுக்கப்படும்‌. நல்லவர்கள்‌ தமது வலக்கரத்தில்‌ அதைப்‌ பெற்றுக்‌ கொண்டு மகிழ்ச்சி அடைவார்கள்‌. பாவிகளுக்கு அவர்களுடைய முதுகுக்குப்‌ பின்‌ இடது கரத்தில்‌ கொடுக்கப்படும்‌. இவற்றை விவரிக்கும்‌ அல்குர்‌ஆன்‌ வசனங்களைப்‌ பார்ப்போம்‌.

மறுமை நாளில்‌ சரியான தராசையே நாம்‌ நாட்டுவோம்‌ எந்த ஓர்‌ ஆத்மாவுக்கும்‌ (நன்மையைக்‌ குறைத்தோ, தீமையைக்‌ கூட்டியோ) அநியாயம்‌ செய்யப்படமாட்டாது. (நன்மையோ தீமையோ) ஒரு கடுகின்‌ அளவு இருந்தபோதிலும்‌ (தராசில்‌ நிறுக்க) அதனையும்‌ கொண்டு வருவோம்‌. கணக்கெடுக்க நாமே போதும்‌. (வேறெவரின்‌ உதவியும்‌ நமக்குத்‌ தேவையில்லை.) (ஸூரா அல்‌அன்பியா 21: 47)

(ஒவ்வொருவரின்‌ நன்மை தீமைகளையும்)‌, அன்றைய தினம்‌ எடை போடுவது சத்தியம்‌. ஆகவே எவர்களுடைய (நன்மையின்‌) எடை கனத்ததோ அவர்கள்தாம்‌ நிச்சயமாக வெற்றி பெறுவார்கள்‌. எவர்களுடைய (நன்மையின்‌) எடை (கனம்‌ குறைந்து) இலேசாக இருக்கின்றதோ அவர்கள்‌, நம்முடைய வசனங்களுக்கு மாறு செய்து தங்களுக்குத்‌ தாமே நஷ்டத்தை உண்டு பண்ணிக்‌ கொண்டவர்கள்‌. (ஸுரா அல்‌அஃராஃப்‌ 7; 8,9)

ஒவ்வொரு மனிதனின்‌ செயலைப்‌ பற்றிய (விரிவான தினசரிக்‌ குறிப்பை) அவனுடைய கழுத்தில்‌ மாட்டியிருக்கிறோம்‌. மறுமை நாளில்‌ அதனை அவனுக்கு ஒரு புத்தகமாக எடுத்துக்‌ கொடுப்போம்‌. அவன்‌ (அதனை) விரித்துப்‌ பார்ப்பான்‌. (அச்சமயம்‌ அவனை நோக்கி) இன்றைய தினம்‌ உன்னுடைய கணக்கைப்‌ பார்க்க நீயே போதுமானவன்‌, ஆகவே, உன்‌ (குறிப்புப்‌) புத்தகத்தை நீ படித்துப்‌ பார்‌ (என்று கூறுவோம்‌. (ஸுரா பனீஇஸ்ராயில்‌ 17 : 13, 14)

“ஆகவே, எவர்‌ ஓர்‌ அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர்‌, (அங்கு) அதனையும்‌ கண்டு கொள்வார்‌. (அவ்வாறே) எவர்‌ ஒர்‌ அணுவளவு தீமை செய்திருந்தாரோ அதனையும்‌ அவர்‌ (அங்கு) கண்டு கொள்வார்‌.” (ஸூரா அஸ்ஸில்ஸால்‌ 99 : 7, 8)

“எவர்களுடைய (நன்மையின்‌) எடை குறைகிறதோ அத்தகையோர்‌ தமக்குக்‌ தாமே தஷ்டம்‌ விளைவித்தவர்கள்‌. அவர்கள்‌ எந்நாளுமே நரகத்தில்‌ தங்கிவிடுவார்கள்‌. அவர்களுடைய முகங்களை (நரகத்தின்‌) நெருப்பு பொசுக்கிக்‌ கொண்டிருக்கும்‌. அவர்கள்‌ (உதடுகளெல்லாம்‌ வெந்து சுருண்டு முகம்‌) விகாரமானவர்களாக இருப்பார்கள்‌.” (ஸூரா அல்முஃமினூன்‌ 23 : 103, 104)

“எவரேனும்‌ ஒரு நன்மையைச்‌ செய்தால்‌ அவருக்கு அதைப்‌ போல்‌ பத்து பங்கு (நன்மை) உண்டு. எவரேனும்‌ ஒரு தீமையைச்‌ செய்தால்‌ அதைப்‌ போன்றதே தவிர (அதிகமாக) அவருக்குக்‌ கூலி கொடுக்கப்படமாட்டாது. மேலும்‌ அவர்கள்‌ அநியாயம்‌ செய்யப்பட மாட்டார்கள்‌. (ஸுரா அல்‌அன்ஆம்‌ 6 : 160)



3. விசாரணைக்காக முதல்‌ ஷஃபாஅத்‌ - பரிந்துரை

மகத்தான 'ஷஃபாஅத்‌'” பரிந்துரை செய்யும்‌ தகுதி முஹம்மது நபி அவர்களுக்கு மட்டும்‌ வழங்கப்படும்‌. 

மனிதர்கள்‌ மறுமையில்‌ அல்லாஹ்வின்‌ முன்பாக தாங்க இயலாத துன்பத்திலும்‌ சிரமத்திலும்‌ சிக்கித்‌ தவித்துக்‌ கொண்டிருப்பார்கள்‌. அதுசமயம்‌ முதலில்‌ ஆதம்‌, பிறகு நூஹ்‌, பிறகு இப்றாஹிம்‌, பிறகு மூஸா, பிறகு ஈஸா (அலை) ஆகியோரிடம்‌ சென்று பரிந்துரை செய்யக்‌ கோருவார்கள்‌. அவர்கள்‌ மறுத்துவிடவே இறுதியாக நபி (ஸல்‌) அவர்களிடம்‌ வருவார்கள்‌. நபியவர்கள்‌ அல்லாஹ்விடம்‌ அனுமதி கோருவார்கள்‌. அல்லாஹ்‌ அனுமதி வழங்கியவுடன்‌ மக்களின்‌ விசாரணையை ஆரம்பிக்கக்‌ கோரி அல்லாஹ்விடம்‌ பரிந்துரை செய்வார்கள்‌. (ஸஹீஹுல்‌ புகாரி - 4712)

தங்கள்‌ பாவத்தின்‌ காரணமாக நரகில்‌ நுழைந்து விட்ட நம்பிக்கையாளர்கள்‌ (முஃமின்கள்‌), அதிலிருந்து வெளியேற்றப்பட சிபாரிசு செய்யப்படும்‌.

இந்த வகை 'ஷஃபாஅத்‌' முஹம்மது (ஸல்‌) அவர்கள்‌, மற்ற நபிமார்கள்‌, முஃமின்கள்‌, மலக்குகள்‌ ஆகிய அனைவருக்கும்‌ உரியதாகும்‌. மேலும்‌, அல்லாஹ்‌ முஃமின்களில்‌ பல கூட்டத்தினரை எவருடைய பரிந்துரையுமின்றியே தனது கருணையாலும்‌ கிருபையாலும்‌ மட்டும்‌ நரகிலிருந்து வெளியேற்றுவான்‌.



4. அல்லாஹ்‌ படைப்பினங்களிடம்‌ விசாரணை செய்வான்‌

ஆகவே, (அந்நாளில்‌) எவனுடைய வலது கையில்‌ அவனுடைய செயலேடு கொடுக்கப்படுகின்றதோ, அவன்‌ மிக்க இலகுவாகக்‌ கேள்வி கணக்குக்‌ கேட்கப்‌ படுவான்‌. (ஸூரா அல்‌இன்ஷிகாக்‌ 84: 7,8)

முஃமினான தனது அடியானிடம்‌ ரகசியமாக விசாரணை செய்து அவனுடைய குற்றங்களை ஒப்புக்கொள்ள வைப்பான்‌. பின்பு தன்னுடைய அருளால்‌ அவனை மன்னிப்பான்‌.

அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) கூறினார்கள்‌ நிச்சயமாக அல்லாஹ்‌ மறுமையில்‌ தனது அடியானைத்‌ தனிமைப்படுத்தி அவனது குற்றங்களை ஒப்புக்கொள்ள வைப்பான்‌: 'இவ்வாறு செய்தாய்‌, நீ இவ்வாறு செய்தாய்‌! என்று கூறுவான்‌. அவனும்‌ அதை ஏற்றுக்‌ கொள்வான்‌. பின்பு அல்லாஹ்‌ 'உன்னுடைய இந்தக்‌ குற்றங்களை உலகில்‌ நான்‌ மறைத்து விட்டேன்‌. இன்று உனக்கு அவற்றை மன்னித்து விடுகிறேன்‌' என்று கூறுவான்‌. (ஸஹீஹுல்‌ புகாரி, ஸஹீஹ்‌ மூஸ்லிம்‌)

ஆனால்‌ அல்லாஹ்வை நிராகரித்து வாழ்ந்தவர்களிடமும்‌ அல்லாஹ்வுக்கு இணை வைத்தவர்களிடமும்‌ இம்மாதிரியான விசாரணையின்றி அவர்கள்‌ செய்த குற்றங்கள்‌ எடுத்துக்‌ காண்பிக்கப்பட்டு இழிவுபடுத்தப்படுவார்கள்‌. பின்பு நரகத்தில்‌ வீசி எறியப்படுவார்கள்‌.



5. நபி (ஸல்‌) அவர்களுக்கு 'கவ்ஸர்‌' எனும்‌ விசேஷமான நீர்‌ தடாகத்தை மறுமை நாளில்‌ அல்லாஹ்‌ வழங்குவான்‌.

(நபியே!) நிச்சயமாக நாம்‌ உங்களுக்கு கவ்ஸரைக்‌ கொடுத்திருக்கின்றோம்‌." (ஸுரா அல்கவ்ஸர்‌ 108 : 1)

அதன்‌ நீர்‌ பாலைவிட மிக வெண்மையானது தேனைவிட மிக இனிப்பானது: கஸ்தூரியை விட மணமிக்கது. அந்தத்‌ தடாகத்தின்‌ நீளம்‌ ஒரு மாத நடைதூரம்‌ ஆகும்‌. அவ்வாறே அதன்‌ அகலமும்‌ ஒரு மாத நடைதூரம்‌ ஆகும்‌. அதன்‌ கோப்பைகள்‌ அழகாலும்‌ எண்ணிக்கையாலும்‌ வானில்‌ மிளிரும்‌ நட்சத்திரங்களுக்கு ஒப்பானதாகும்‌. 

நபி (ஸல்)‌ அவர்களின்‌ சமுதாயத்தினரில்‌ உள்ள முஃமின்கள்‌ அத்தடாகத்திலிருந்து நீர்‌ அருந்துவார்கள்‌. அந்த மதுரமான நீரை அருந்தியவருக்கு அதன்‌ பிறகு எப்போதும்‌ தாகம்‌ ஏற்படாது. (பார்க்க: ஸஹீஹுல்‌ புகாரி - 4964-66)



6. நாளை மறுமையில்‌ நரகத்தின்‌ மீது ஒரு பாதை அமைக்கப்படும்‌; அப்பாதை சுவர்க்கத்திற்கும்‌, நரகத்திற்கும்‌ இடையில்‌ உள்ள பாலமாகும்‌

மக்கள்‌ அவர்களின்‌ அமல்களுக்கு ஏற்ப அதைக்‌ கடந்து செல்ல சக்தி பெறுவார்கள்‌. (அது) முடியைவிட மெல்லியதாகவும்‌ வாளைவிடக்‌ கூர்மையாகவும்‌ இருக்கும்‌. (ஸஹீஹ்‌ முஸ்லிம்‌)

சிலர்‌ கண்‌ சிமிட்டும்‌ நேரத்திலும்‌, சிலர்‌ மின்னல்‌ வெட்டி மறையும்‌ நேரத்திலும்‌, சிலர்‌ காற்று வீசும்‌ வேகத்திலும்‌, சிலர்‌ வேகமாக ஒடும்‌ குதிரையின்‌ வேகத்திலும்‌, சிலர்‌ ஒட்டகத்தின்‌ வேகத்திலும்‌, சிலர்‌ ஓடியவர்களாகவும்‌ கடப்பார்கள்‌. சிலர்‌ நடந்தும்‌, சிலர்‌ தவழ்ந்தும்‌, சிலர்‌ திடீரென பிடிக்கப்பட்டு நரகில்‌ தள்ளப்படுவார்கள்‌. ஏனெனில்‌ அப்பாலத்தின்‌ மீது கொக்கிகள்‌ இருக்கும்‌. அவை மனிதர்களில்‌ சிலரைக்‌ கவ்வி நரகத்தில்‌ தள்ளிவிடும்‌. (ஸஹீஹுல்‌ புகாரி. ஸஹீஹ்‌ முஸ்லிம்‌)

மற்றோர்‌ அறிவிப்பில்‌, “நபி (ஸல்‌) அவர்கள்‌ அப்பாலத்தில்‌ நின்றவர்களாக 'இறைவனே! பாதுகாப்பாயாக, பாதுகாப்பாயாக!' என்று அல்லாஹ்விடம்‌ பிரார்த்தித்துக்‌ கொண்டிருப்பார்கள்‌' என வந்துள்ளது. (ஸஹீஹுல்‌ புகாரி-7437)

நரகம்‌ ஸஜ்தாவின்‌ உறுப்புகளைத்‌ தீண்டாது.(ஸஹீஹுல்‌ புகாரி, ஸஹீஹ்‌ முஸ்லிம்‌)

அப்பாதையைக்‌ கடந்துவிட்டவர்கள்‌ சுவர்க்கத்திற்கு முன்‌ உள்ள சிறிய பாலத்தில்‌ நிறுத்தப்பட்டு உள்ளங்களில்‌ நிறைந்துள்ள குரோதங்கள்‌ அகற்றட்டட்டு மனம்‌ தூய்மையானவர்களாக சுவர்க்கம்‌ நுழைய அனுமதிக்கப்படுவார்கள்‌. (ஸஹீஹுல்‌ புகாரி)

சுவனத்தின்‌ கதவை முதன்‌ முதலாக திறக்கக்‌ கூடியவர்‌ நபி முஹம்மது(ஸல்‌) ஆவார்கள்‌. (ஸஹீஹ்‌ முஸ்லிம்‌)

அவர்களுடைய சமுதாயமே முதலாவதாக சுவர்க்கத்தில்‌ நுழையும்‌. (ஸஹீஹ்‌ முஸ்லிம்)‌



7. மூன்று இடங்களில்‌ நபி (ஸல்‌) அவர்களின்‌ ஷபாஅத்

நபி (ஸல்‌) அவர்கள்‌ மறுமையில்‌ மூன்று இடங்களில்‌ ஷஃபாஅத்‌ செய்வார்கள்‌. 

1) அல்லாஹ்விடம்‌ தீர்ப்பளிக்க கோரி பரிந்துரை செய்வார்கள்‌. அதுவரை எவரும்‌ அல்லாஹ்விடம்‌ பேசத்‌ துணிவுகொள்ள மாட்டார்கள்‌. 

ஆதம்‌, நூஹ்‌, இப்றாஹீம்‌, மூஸா, ஈஸா (அலை) ஆகிய நபிமார்களிடம்‌ மக்கள்‌ பரிந்துரைக்காகச்‌ சென்று அவர்கள்‌ மறுத்துவிட்ட பின்‌ இது ஏற்படும்‌. (ஸஹீஹுல்‌ புகாரி, ஸஹீஹ்‌ முஸ்லிம்‌)

2) சுவர்க்கத்திற்குத்‌ தகுதி பெற்றவர்கள்‌ சுவர்க்கம்‌ நுழைய பரிந்துரை செய்வார்கள்‌. இவ்விரண்டு பரிந்துரையும்‌ நபி (ஸல்)‌ அவர்களுக்கு மட்டும்‌ விசேஷமாக வழங்கப்பட்ட சிறப்பாகும்‌.

3) நரகவாதிகளுக்கு ஷஃபாஅத்து செய்வார்கள்‌. அதாவது முஃமின்கள்‌ நரகில்‌ நுழைவிக்கப்படாமல்‌ இருக்க அல்லது நரகத்தில்‌ நுழைந்த முஃமின்கள்‌ நரகிலிருந்து வெளியேற ஷஃபாஅத்‌ செய்வார்கள்‌.

இந்த ஷஃபாஅத்‌ அனைத்து இறைத்தூதர்களுக்கும்‌, நல்லோர்களுக்கும்‌ கொடுக்கப்படும்‌.

அல்லாஹ்‌ தனது அருளாலும்‌ கருணையாலும்‌ எவரின்‌ ஷஃபாஅத்துமின்றியே பலரை நரகிலிருந்து வெளியேற்றுவான்‌. (ஸஹீஹுல்‌ புகாரி, ஸஹீஹ்‌ முஸ்லிம்)

‌ சுவர்க்கவாசிகள்‌ சுவர்க்கத்திற்குள்‌ நுழைந்த பின்பும்‌, அங்கு இடம்‌ மீதமாகி நிரப்பப்படாமல்‌ இருக்கும்‌. அல்லாஹ்‌ அப்போது சில கூட்டங்களைப்‌ புதிதாகப்‌ படைத்து சுவர்க்கத்தில்‌ நுழைவிப்பான்‌. (ஸஹீஹுல்‌ புகாரி, ஸஹீஹ்‌ முஸ்லிம்‌)



8, மறுமை நாளைப்‌ பற்றியும்‌ அதன்‌ அமளிகளைப்‌ பற்றியும்‌ குர்‌ஆனிலும்‌ ஸஹீஹான ஹதீஸ்களிலும்‌ வந்துள்ள அனைத்தும்‌ உண்மையான செய்திகள்‌:  நிச்சயமாக அவை நிகழக்கூடியனவயாகும்‌.

சொர்க்கம்‌, நரகம்‌ உண்மையே. நபி (ஸல்‌) அவர்களின்‌ பரிந்துரைக்குப்‌ பிறகுதான்‌ ௬வனவாசிகள்‌ அதில்‌ நுழைவார்கள்‌; இந்தத்‌ தகுதி நபி (ஸல்‌) அவர்களுக்கு மட்டும்‌ உரித்தானது.

சொர்க்கம்‌ என்பது அல்லாஹ்‌, தன்னை அஞ்சி வாழ்ந்த நம்பிக்கையாளர்களுக்கென தயார்‌ செய்து வைத்திருக்கும்‌ இன்பமிக்க இல்லமாகும்‌. அதன்‌ அருட்கொடைகளை எந்தவொரு கண்ணும்‌ கண்டிராது; எந்தச்‌ செவியும்‌ கேட்டிராது அவை எந்தவொரு மனிதரின்‌ கற்பனையிலும்‌ உதித்திருக்காது.

“அவர்கள்‌ செய்த ( 'நற்‌)காரியங்களுக்குக்‌ கூலியாக நாம்‌ அவர்களுக்காக (தயார்படுத்தி) மறைத்து வைத்திருக்கும்‌ கண்குளிரக்கூடிய (சன்மானத்)தை எவராலும்‌ அறிந்து கொள்ள முடியாது” (ஸூரா அஸ்ஸஜ்தா 32 : 17)

நரகம்‌ என்பது வேதனைகள்‌ நிறைந்த இடமாகும்‌. தன்னை நிராகரித்த அநியாயக்காரர்களுக்கென அல்லாஹ்‌ அதனைத்‌ தயார்‌ செய்து வைத்துள்ளான்‌. அதில்‌ உள்ள வேதனைகளும்‌ தண்டனைகளும்‌ மனித கற்பனைக்கு அப்பாற்பட்டதாகும்‌.

“அநியாயக்காரர்களுக்கு நிச்சயமாக நாம்‌ நரகத்தைத்தான்‌ தயார்படுத்தியுள்ளோம்‌. அந்நரகத்தின்‌ ஜுவாலைகள்‌ அவர்களைச்‌ சூழ்ந்து கொள்ளும்‌. அவர்கள்‌ (தண்ணீர்‌ கேட்டு) அபயமிட்டால்‌ காய்ந்து உருகிய செம்பைப்‌ போலுள்ள நீரே அவர்களுக்குக்‌ கொடுக்கப்படும்‌. (அவர்‌கள் அதனைக்‌ குடிப்பதற்கு முன்னதாகவே) அது அவர்களுடைய முகத்தைச்‌ சுட்டுக்‌ கருக்கிவிடும்‌. மேலும்‌, அது மிக்க (அருவருப்பான) கெட்ட பானமாகும்‌. அவர்கள்‌ இளைப்பாறும்‌ இடம்‌ மிகக்‌ கெட்டது. (ஸுரா அல்கஃஹ்ப்‌ 18 : 29)

சொர்க்கமும்‌ நரகமும்‌ படைக்கப்பட்டு இருக்கின்றன. அவை என்றென்றும்‌ அழியாது.

“ஆகவே (உங்களில்‌) எவர்‌ அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு நற்செயல்கள்‌ செய்கின்றாரோ அவரைச்‌ சொர்க்கங்களில்‌ புகச்செய்வான்‌. அதில்‌ தொடர்ந்து நீரருவிகள்‌ ஓடிக்‌ கொண்டிருக்கும்‌. என்றென்றும்‌ அவர்‌ அதில்‌ தங்கிவிடுவார்‌. நிச்சயமாக அல்லாஹ்‌ அவருக்கு (அங்கு) வாழ்க்கையை அழகுபடுத்திவிடுவான்‌." (ஸுரா அத்தலாக்‌ 65 : 11)

“நிச்சயமாக அல்லாஹ்‌ நிராகரிப்போரைச்‌ சபித்து, கொழுந்து விட்டெரியும்‌ நெருப்பை அவர்களுக்குத்‌ தயார்படுத்தி வைத்திருக்கிறான்‌. அவர்கள்‌ என்றென்றும்‌ அதில்‌ தங்கிவிடுவார்கள்‌. (அவர்களைக்‌) காப்பாற்றுவோரையும்‌ (அவர்களுக்கு) உதவி செய்வோரையும்‌ அங்கு அவர்கள்‌ காணமாட்டார்கள்‌. நரகத்தில்‌ அவர்களுடைய முகங்களைப்‌ புரட்டிப்‌ பொசுக்கும்‌ நாளில்‌ எங்களுடைய கேடே! நாங்கள்‌ அல்லாஹ்‌வுக்கும்‌ அவனுடைய தூதருக்கும்‌ கீழ்ப்படித்திருக்க வேண்டுமே? என்று கதறுவார்கள்‌. (ஸுரா அல்‌அஹ்ஸாப்‌ 33 : 64, 65, 66)

குர்‌ஆனும்‌ நபிமொழிகளும்‌ குறிப்பிட்டு அல்லது தன்மைகளை வைத்து யாரையெல்லாம்‌ சொர்க்கவாசிகள்‌ எனச்‌ சான்று பகர்கின்றனவோ அவர்கள்‌ அனைவரும்‌ சொர்க்கவாசிகள்‌ ஆவர்‌. அபூபக்ர்‌, உமர்‌, உஸ்மான்‌, அலீ (ரழியல்லாஹு அன்ஹாம்‌) ஆகியோரைப்‌ போன்று சொர்க்கவாசிகள்‌ என நபி (ஸல்‌) அவர்கள்‌ எந்தெந்தத்‌ தோழர்களைப்‌ பற்றிக்‌ கூறினார்களோ அவர்கள்‌ அனைவரும்‌ குறிப்பிட்டு நற்செய்தி சொல்லப்பட்டவர்கள்‌ ஆவர்‌.

அவ்வாறே ஒவ்வொரு நம்பிக்கையாளரும்‌, இறையச்சமுடையவர்களும்‌ அவர்களிடம்‌ காணப்படும்‌ நல்ல தன்மைகள்‌, பண்புகளின்‌ மூலம்‌ சொர்க்கவாசிகள்‌ என சான்றளிக்கப்பட்டவர்கள்‌.

குர்‌ஆனும்‌ நபிமொழிகளும்‌ குறிப்பிட்டு அல்லது தன்மைகளை வைத்து யாரையெல்லாம்‌ நரகவாசிகள்‌ என குறிப்பிடுகின்றதோ அவர்கள்‌ அனைவரும்‌ நரகவாசிகள்‌.

குறிப்பிட்டு கூறப்பட்டவர்கள்‌ அபூலஹப்‌, அம்ரு பின்‌ லுஹய்யி மற்றும்‌ இவர்களைப்‌ போன்றவர்கள்‌. 

நிராகரிப்பாளர்கள்‌, இணை வைப்பவர்கள்‌, மற்றும்‌ நயவஞ்சகர்கள்‌ போன்ற அனைவரும்‌ அவர்களின்‌ தன்மைகளை வைத்து நரகவாசிகள்‌ என சான்றளிக்கப்பட்டவர்கள்‌.



9. 'கபுர்‌'- மண்ணறையில்‌ சோதனை உண்டு. அந்தச்‌ சோதனையாவது, மரணித்தவரிடம்‌ அவரது இறைவனைப்‌ பற்றியும்‌ மார்க்கத்தைப்‌ பற்றியும்‌ நபியைப்‌ பற்றியும்‌ விசாரணை செய்யப்படும்‌.

“நம்பிக்கை கொண்டவர்களை இவ்வுலக வாழ்க்கையிலும்‌ மறுமையிலும்‌ (லா இலாஹ இல்லல்லாஹ்‌ என்னும்‌) உறுதியான வாக்கியத்தைக்‌ கொண்டு அல்லாஹ்‌ உறுதிப்படுத்துகிறான்‌.” (ஸுரா இப்றாஹீம்‌ 14 : 27)

“எனது இறைவன்‌ அல்லாஹ்‌, எனது மார்க்கம்‌ இஸ்லாம்‌, எனது நபி முஹம்மது (ஸல்‌)” என நம்பிக்கையாளர்‌ பதில்‌ கூறுவார்‌. நிராகரிப்பவர்களும்‌ நயவஞ்சகர்களும்‌ “எதைப்‌ பற்றியும்‌ எனக்குத்‌ தெரியாது. மனிதர்கள்‌ எதையோ கூறக்‌ கேட்டேன்‌.; அதையே நானும்‌ கூறிக்‌ கொண்டிருந்தேன்‌'' என்று பதிலளிப்பார்கள்‌.

நம்பிக்கையாளர்களுக்கு கப்ரில்‌ ஏராளமான்‌ அருட்கொடைகள்‌ வழங்கப்படும்‌.

“இத்தகையோரின்‌ உயிரை மலக்குகள்‌ அவர்கள்‌ பரிசுத்தவான்‌௧ளாக இருக்கும்‌ நிலையில்‌ கைப்பற்றுகின்றனர்‌. (அப்பொழுது அவர்களை நோக்கி) ஸலாமுன்‌ அலைக்கும்‌' (உங்களுக்கு ஈடேற்றம்‌ உண்டாவதாக!) நீங்கள்‌ (நற்செயல்‌) செய்து கொண்டிருந்ததன்‌ காரணமாக சொர்க்கத்திற்குன்‌ நுழையுங்கள்‌ என்று கூறுவார்கள்‌. (ஸுரா அன்னஹ்ல்‌ 16 : 32)

தீய வழியில்‌ சென்றவர்களுக்கும்‌ பாவிகளுக்கும்‌ நிராகரிப்பாளர்களுக்கும்‌ கப்ரில்‌ வேதனை செய்யப்படும்‌.

“இந்த அக்கிரமக்காரர்கள்‌ மரண வேதனையிலிருக்கும்‌ சமயத்தில்‌ நீர்‌ அவர்களைப்‌ பார்ப்பீராயின்‌ மலக்குகள்‌ (வானவர்கள்‌) தங்கள்‌ கைகளை நீட்டி (அவர்களை நோக்கி) “உங்களுடைய உயிர்களைக்‌ கொடுங்கள்‌. இன்றைய தினம்‌ இழிவு தரும்‌ வேதனையே உங்களுக்குக்‌ கூலியாக கொடுக்கப்படும்‌. நீங்கள்‌ உண்மையல்லாததை அல்லாஹ்வின்‌ மீது (பொய்யாகக்‌) கூறிக்‌ கொண்டிருந்ததும்‌, அவனுடைய வசனங்களை பெருமை கொண்டு புறக்கணிக்து வந்ததுமே இதற்குக்‌ “காரணமாகும்‌” என்று கூறுவதைக்‌ காண்பீர்‌” (ஸூரா அல்அன்ஆம்‌ 6 : 93)

இது குறித்த நபிமொழிகள்‌ ஏராளமாகக்‌ காணப்படுகின்றன. இந்த மறைவான விஷயங்கள்‌ பற்றி குர்‌ஆனிலும்‌ நபிமொழிகளிலும்‌ வந்துள்ள அனைத்தையும்‌ நம்பிக்கை கொள்வது ஒவ்வொரு நம்பிக்கையாளருக்கும்‌ கட்டாயமாகும்‌. 

அதன்‌ கருத்துகளில்‌ எதையும்‌ உலக நடைமுறையோடு ஒப்பிட்டுப்‌ பார்த்து ஆட்சேபனை செய்யக்‌ கூடாது. 

மறுமையின்‌ எந்த நடைமுறையையும்‌ உலகின்‌ நடைமுறையைக்‌ கொண்டு கணிக்க முடியாது. இரண்டுக்கும்‌ இடையில்‌ ஏராளமான வேறுபாடுகள்‌ உள்ளன.

மறுமையில்‌ நடக்க இருக்கும்‌ நிகழ்ச்சிகள்‌ பற்றிய விவரங்கள்‌ முந்தைய இறைநூல்களிலும்‌ கூறப்பட்டுள்ளன. மேலும்‌ இறுதி இறைநூல்‌ அல்குர்‌ஆனிலும்‌ நபிமொழிகளிலும்‌ தேவையான அளவு சொல்லப்பட்டுள்ளன. அவற்றைப்‌ படித்து அறிந்து கொள்ள வேண்டும்‌.



விதி

குர்‌ஆனையும்‌ நபிவழியையும்‌ நபித்தோழர்களின்‌ வழியில்‌ பின்பற்றும்‌ (அஹ்லுஸ்‌ ஸுன்னத்‌ வல்‌ ஜமாஅத்தினராகிய) நாம்‌, விதியை நம்ப வேண்டும்‌. நன்மையோ, தீமையோ அனைத்தும்‌ விதியின்படியே நடக்கின்றன என்று ஈமான்‌ கொள்ள வேண்டும்‌. விதியை நம்பிக்கை கொள்வது இரு வகையிலாகும்‌. அவை ஒவ்வொன்றிலும்‌ இருவகை உண்டு.

1. விதியின்‌ இருநிலைகள்‌

2. அல்லாஹ்னின்‌ நாட்டமும்‌ அடியானின்‌ சுயவிருப்பமும்‌



முதல்‌ நிலை - இது இரு வகைப்படும்‌.

1. அறிந்திருத்தல்‌.

அல்லாஹ்‌ தனது படைப்பினங்களை நன்கு அறிந்தவன்‌; அல்லாஹ்வின்‌ இல்மு (அறிவு)‌ 'கதீம்‌' ஆகும்‌. அது புதுமையானதல்ல. அத்தன்மை அவனுக்கு ஆதியிலும்‌ இருந்தது என்றென்றும்‌ அவனுக்கு அத்தன்மை இருக்கும்‌. அவன்‌ படைப்பினங்களின்‌ வணக்க வழிபாடுகள்‌, பாவச்‌ செயல்கள்‌, அவர்களின்‌ வாழ்வாதாரங்கள்‌, அவர்கள்‌ உலகில்‌ தங்கும்‌ கால அளவு என அனைத்து நிலைகளையும்‌ நன்கு அறிந்திருக்கின்றான்‌. படைப்பினங்கள்‌ அவனுடைய அறிவின்படியே செயல்படுகின்றன.

நிச்சயமாக அல்லாஹ்‌, யாவற்றையும்‌ நன்கறிந்தவனாக இருக்கின்றான்‌. (ஸூரா‌ அன்னிஸா 4: 32) 

எனவே அறியாமைக்குப்‌ பின்‌ அறிதல்‌ (ஒன்றை அறியாமல்‌ இருந்தான்‌; பின்பு அறிந்து கொண்டான்‌) என்பதும்‌ அறிந்த பின்‌ மறதி (ஒன்றை அறிந்து வைத்திருந்தான்‌; பின்பு மறந்துவிட்டான்‌) என்பதும்‌ அல்லாஹ்வுக்குக்‌ கிடையாது.

2. எழுதப்பட்டிருத்தல்‌.

அல்லாஹ்‌ படைப்பினங்களின்‌ விதிகள்‌ அனைத்தையும்‌ லவ்ஹுல்‌ மஃபூள்‌ என்ற பாதுகாக்கப்பட்ட பதிவுப்‌ புத்தகத்தில்‌ எழுதினான்‌. முதன்‌ முதலாக எழுதுகோலைப்‌ படைத்தான்‌. அதற்கு “எழுது” என்று உத்தரவிட்டான்‌. அது “எதை நான்‌ எழுத வேண்டும்‌” என்று கேட்டது. “மறுமை நாள்‌ வரை நடக்கும்‌ அனைத்தையும்‌ எழுது” என்று கூறினான்‌.(ஸுனன்‌ அபூதாவூது, ஸுனனுத்‌ திர்மிதி, முஸ்னது அஹ்மது)

மனிதனுக்குக்‌ கிடைக்க வேண்டுமென எழுதப்பட்ட எதுவும்‌ அவனை விட்டும்‌ தவறிவிடாது. அவனுக்கு இல்லை என்று எழுதப்பட்ட எதுவும்‌ அவனுக்குக்‌ கிடைக்காது. எழுதுகோல்கள்‌ காய்ந்துவிட்டன; ஏடுகள்‌ சுருட்டப்பட்டுவிட்டன.

அல்லாஹ்‌ கூறுகிறான்‌:(பொதுவாகப்‌) பூமியிலோ, அல்லது (சொந்தமாக) உங்களுக்கோ, ஏற்படக்‌ கூடிய எந்தக்‌ கஷ்டமும்‌ (நஷ்டமும்‌) அது ஏற்படுவதற்கு முன்னதாகவே (லவ்ஹுல்‌ மஹ்‌ஃபூள்‌ என்னும்‌) பதிவுப்‌ புத்தகத்தில்‌ பதிவு செய்யப்படாமல்‌ இல்லை. நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதே. (ஸுரா அல்ஹதீது 57 : 22)

(“நபியே) வானத்திலும்‌ பூமியிலும்‌ இருப்பவற்றை நிச்சயமாக அல்லாஹ்‌ நன்கறிவான்‌ என்பதை நீங்கள்‌ அறியவில்லையா? நிச்சயமாக இவை அனைத்தும்‌ ஒரு புத்தகத்தில்‌ இருக்கின்றன. நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிகச்‌ சுலபமானதே! (ஸுரா அல்ஹதஜ்‌ 22 : 70)

“லவ்ஹு மஹ்ர்பூளில்‌ பதிவு செய்யப்பட்‌டுள்ளது.”(ஸூரா அல்புரூஜ்‌ 85 : 22)

அல்லாஹ்வின்‌ இல்மின்படி அவன்‌ அமைத்த விதி எனும்‌ ஏற்பாடு பல இடங்களில்‌ மொத்தமாகவும்‌ விரிவாகவும்‌, தெளிவாகவும்‌ எழுதப்பட்டிருக்கும்‌.

அவன்‌ நாடிய அனைத்தையும்‌ அவன்‌ லவ்ஹுல்‌ மஹ்‌ஃபூள்‌ என்ற பதிவேட்டில்‌ எழுதிவிட்டான்‌. 'கருவில்‌ உள்ள சிசுவின்‌ உடல்‌ அமைப்பை நிறைவு செய்த‌ பின்‌ உயிர்‌ ஊதப்படுவதற்கு முன்‌ ஒரு வானவரை அனுப்புகிறான்‌. அவருக்கு நான்கு விஷயங்களை எழுத கட்டளை இடப்படுகிறது. அந்த சிசுவின்‌ வாழ்வாதாரம்‌, ஆயுள்‌ காலம்‌, அதன்‌ செயல்கள்‌, அது நற்பாக்கியம்‌ பெற்றதா அல்லது துர்ப்பாக்கியம்‌ பெற்றதா என்ற நான்கு விஷயங்களை அவர்‌ எழுதிச்‌ செல்கிறார்‌. (ஸஹீஹுல்‌ புகாரி, ஸஹீஹ்‌ முஸ்லிம்‌)


இரண்டாம்‌ நிலை - இது இரு வகைப்படும்‌.

1. நாடுதல்‌

அல்லாஹ்‌ நாடுகிறான்‌: அனைத்தையும்‌ மிகைக்கும்‌ அல்லாஹ்வின்‌ நாட்டத்தையும்‌ அனைத்தையும்‌ சூழ்ந்து கொள்ளும்‌ அவனுடைய ஆற்றலையும்‌நம்பிக்கை கொள்ள வேண்டும்‌. அவன்‌ நாடியதுதான்‌ நடந்தது; அவன்‌ நாடுவதுதான்‌ நடக்கும்‌, அவன்‌ நாடாதது நடக்கவில்லை; அவனது நாட்டத்தில்‌ இல்லாதது ஒருடோதும்‌ நடக்காது.

பூமியில்‌ இவர்கள்‌ சுற்றித்‌ திரிந்து பார்க்கவில்லையா? (அவ்வாறாயின்‌) இவர்களை விட பலசாலிகளான இவர்களுக்கு முன்னிருந்தவர்களின்‌ முடிவு எவ்வாறாயிற்று என்பதைக்‌ கண்டு கொள்வார்கள்‌. (அவர்கள்‌ எவ்வளவோ பலசாலிகளாக இருந்தும்‌ அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து தப்பித்துக்‌ கொள்ள முடியவில்லை. ஏனென்றால்)‌, வானத்திலோ பூமியிலோ உள்ள யாதொன்றுமே அல்லாஹ்வைத்‌ தோற்கடிக்க முடியாது. நிச்சயமாக அல்லாஹ்‌ (அனைத்தையும்‌) மிக அறிந்தவனும்‌ பெரும்‌ ஆற்றலுடையவனுமாக இருக்கின்றான்‌. (ஸூரா ஃபாதிர்‌ 35 ; 44)

எனினும்‌, அல்லாஹ்‌ நாடினாலே தவிர நீங்கள்‌ (எதையும்‌) விரும்ப முடியாது. நிச்சயமாக அல்லாஹ்‌ (உங்கள்‌ அனைவரின்‌ தன்மையையும்‌) நன்கறிந்தவனும்‌ ஞானமுடையவனுமாக இருக்கின்றான்‌.(ஸுரா அத்தஹ்ர்‌ 76 : 30)

வானங்களிலும்‌ பூமியிலும்‌ உள்ள எந்த ஒன்றின்‌ அசைவும்‌, அசையாமையும்‌, அல்லாஹ்வின்‌ நாட்டமின்றி உண்டாகாது. அவனது அரசாட்சியில்‌ அவன்‌ நாடாத எதுவும்‌ நடக்காது. உள்ளமையில்‌ உள்ள, உள்ளமையில்‌ இல்லாத சகல பொருட்கள்‌ மீதும்‌ அவன்‌ முழுமையான ஆற்றல்‌ உள்ளவன்‌. அவனைத்‌ தவிர படைக்கும்‌ ஆற்றல்‌ பெற்றவன்‌ எவனுமில்லை. அவனைத்‌ தவிர படைப்பினங்களைப்‌ பாதுகாப்பவன்‌ எவனுமில்லை.

நிச்சயமாக அல்லாஹ்‌ அனைத்தின்‌ மீதும்‌, (எவ்விதமும்‌ செய்ய) பேராற்றலுடையவன்‌. (ஸுரா அல்பகறா 2 ; 20)

2. படைத்தல்‌

அல்லாஹ்வே அனைத்து பொருட்களையும்‌ படைத்தவன்‌; அவனே (அந்த) அனைத்துப்‌ பொருட்களின்‌ பொறுப்பாளன்‌. (ஸூரா அஸ்ஸூமர்‌ 39 : 62)

"உங்களையும்‌, நீங்கள்‌ உருவாக்கியவற்றையும்‌ அல்லாஹ்வே படைத்தான்‌” (ஸூரா அஸ்ஸாஃப்‌ஃபாத்‌ 37 : 96)

அடியார்கள்‌ அவனை வணங்க வேண்டும்‌, அவனுக்கும்‌ அவனுடைய தூதருக்கும்‌ கட்டுப்பட வேண்டும்‌ என்று கட்டளையிட்டுள்ளான்‌. அவனுக்கு மாறு செய்வதற்குத்‌ தடை விதித்துள்ளான்‌. இறையச்சம்‌ உள்ளவர்களையும்‌, உபகாரம்‌ புரிபவர்களையும்‌, நீதியுடன்‌ நடப்பவர்களையும்‌ அவன்‌ நேசிக்கின்றான்‌.(பார்க்க -அல்‌ குர்‌ஆன்‌ 2:195, 9:7, 49:9)

நம்பிக்கை கொண்டு நற்செயல்கள்‌ செய்வோர்களை அவன்‌ பொருந்திக்‌ கொள்கிறான்‌. (பார்க்க-9:100, 96:7,8)

அவன்‌ பாவிகளை நேசிக்க மாட்டான்‌. பாவிகளைப்‌ பொருந்தி கொள்ள மாட்டான்‌. அவன்‌ இறைநிராகரிப்பை (குஃப்ரை தனது அடியார்களுக்குப்‌ பொருந்திக்‌ கொள்வதில்லை. பூமியில்‌ விஷமத்தனம்‌ புரிவதை விரும்புவதில்லை. (பார்க்க- 3:32, 9:95, 39:7, 2:205)

அடியார்கள்‌ செயல்களைச்‌ செய்கிறார்கள்‌. அல்லாஹ்‌ அவர்களின்‌ செயல்களைப்‌ படைக்கின்றான்‌. முஃமின்‌, காஃபிர்‌, நல்லவர்‌, பாவி அனைவரும்‌ அவனுடைய அடிமைகளே. அடியார்கள்‌ தங்களது செயல்களைச்‌ செய்ய சக்தியும்‌ நாட்டமும்‌ உடையவர்கள்‌. அல்லாஹ்‌ தனது அடியார்களைப்‌ படைத்தது போன்றே அவர்களின்‌ சக்தியையும்‌, அவர்களின்‌ நாட்டத்தையும்‌ படைக்கின்றான்‌. (பார்க்க- 81:28,29 19:93)

விதி விஷயத்தில்‌ அறிந்திருப்பது. எழுதப்பட்டிருப்பது, நாடுவது, படைப்பது ஆகிய நான்கும்‌ அல்லாஹ்வுக்கும்‌ அவனுடைய அடியார்களுக்கும்‌ இடையே உள்ள அனைத்தையும்‌ எடுத்துக்‌ கொள்ளும்‌. அடியார்களின்‌ சொல்‌, செயல்‌, அமைதி என அனைத்தையும்‌ அல்லாஹ்‌ அறிந்திருக்கிறான்‌. அனைத்தும்‌ அல்லாஹ்வின்‌ பதிவுப்‌ புத்தகத்தில்‌ பதிவாகியுள்ளன. அவை அனைத்தும்‌ அல்லாஹ்‌ நாடியே நடக்கின்றன. அவனே அவற்றைப்‌ படைக்கின்றான்‌.

“ஆகவே, உங்களில்‌ எவர்‌ நேரான பாதையில்‌ செல்ல விரும்புகிறாரோ அவருக்கு (இந்தக்‌ குர்‌அன்‌ ஓர்‌ உபதேசமாகும்‌.) எனினும்‌, அகிலகத்தாரின்‌ இறைவனாகிய அல்லாஹ்‌ நாடினால்‌ தவிர நீங்கள்‌ (நல்லுணர்ச்சி பெற) நாட மாட்டீர்கள்‌.” (ஸூரா அத்தக்வீர்‌ 81 : 25, 29)

“ஆகவே அல்லாஹ்‌ நாடியிருந்தால்‌ (இவ்வாறு) அவர்கள்‌ சண்டை செய்திருக்க மாட்டார்கள்‌. அனால்‌ அல்லாஹ்‌, தான்‌ நாடியவற்றையே செய்வான்‌.” (ஸூரா அல்பகரா 2 : 253)

“அல்லாஹ்‌ நாடியிருந்தால்‌ அவர்கள்‌ இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள்‌. ஆகவே (நபியே!) நீங்கள்‌ அவர்களையும்‌ அவர்களுடைய பொய்க்கூற்றுகளையும்‌ விட்டு விடுங்கள்‌” (ஸூரா அல்அன்ஆம்‌ 6 : 137)

“உங்களையும்‌ நீங்கள்‌ செய்பவற்றையும்‌ அல்லாஹ்வே படைத்தான்‌.” (ஸூரா அஸ்ஸாஃப்‌ஃபாத்‌ 37 : 96)



2. அல்லாஹ்னின்‌ நாட்டமும்‌ அடியானின்‌ சுயவிருப்பமும்‌

அல்லாஹ்வின்‌ நாட்டப்படியே அனைத்தும்‌ நடைபெறுகிறது என்பதை நம்பிக்கை கொள்வதுடன்‌ அல்லாஹ்‌ அடியார்களுக்கு சுய விருப்பத்தையும்‌ ஆற்றலையும்‌ வழங்கியிருக்கின்றான்‌; அவர்கள்‌ அவற்றைக்‌ கொண்டே தங்கள்‌ செயல்களைச்‌ செய்கிறார்கள்‌ என்றும்‌ நம்பிக்கை கொள்ள வேண்டும்‌.

அடியான்‌ செய்யும்‌ செயல்களில்‌ அவனது விருப்பமும்‌ ஆற்றலும்‌ உள்ளது என்பதற்குப்‌ பல ஆதாரங்கள்‌ உள்ளன.

ஒன்று:

“ஆகவே உங்கள்‌ விளைநிலங்களுக்கு நீங்கள்‌ நாடியவாறு வாருங்கள்‌. (ஸுரா அல்பகரா 2 : 223)

“அவர்கள்‌ (உம்முடன்‌ போருக்குப்‌) புறப்பட (உண்மையாகவே) நாடியிருந்தால்‌ அதற்கு வேண்டிய தயாரிப்புகளை (முன்னதாகவே) செய்திருப்பார்கள்‌.” (ஸுரா அத்தவ்பா 9 ; 46)

'வருவது' 'தயார்‌ செய்வது' குறித்த நாட்டம்‌ அடியார்களுக்கு இருப்பதை மேற்கண்ட குர்‌ஆன்‌ வசனங்கள்‌ உறுதிப்படுத்துகின்றன.



இரண்டு : 

ஏவல்‌ விலக்கலை அடியார்களுக்கு அல்லாஹ்‌ தந்திருக்கின்றான்‌. அடியார்களுக்கென சுய விருப்பமும்‌ வலிமையும்‌ இல்லையென்றால்‌ ஏவல்‌ விலக்கலை அவர்களுக்குத்‌ தருவது சக்தியில்லாதவரிடம்‌ ஒரு செயலைச்‌ செய்யுமாறு நிர்ப்பந்திப்பதாகி விடும்‌. 

ஆனால்‌, அல்லாஹ்‌ ஞானமிக்கவன்‌; அளவற்ற அருளாளன்‌. மேலும்‌, அவன்‌ இறக்கிய நூலும்‌ இதை மறுத்துரைக்கிறது.

அல்லாஹ்‌ யாதொரு ஆத்மாவையும்‌ அதன்‌ சக்திக்கு மேல்‌ நிர்ப்பந்திப்பதில்லை. அவை தேடிக்‌ கொண்ட நன்மை அவற்றுக்கே (பயனளிக்கும்‌). அவை தேடிக்‌ கொண்ட தீமை அவற்றுக்கே (கேடு விளைவிக்கும்‌), (ஸுரா அல்பகரா 2 : 286)



மூன்று : 

நன்மை செய்பவர்களை அல்லாஹ்‌ புகழ்கிறான்‌. அதற்காக அவர்களுக்கு நற்கூலி வழங்குகின்றான்‌. தீமை செய்பவர்களை இகழ்கிறான்‌. அவர்களுக்குத்‌ தண்டனை கொடுக்கின்றான்‌. இப்படி இரு விதமான செயலுக்கும்‌ ஏற்ப அல்லாஹ்‌ கூலி கொடுக்கிறான்‌. செயல்கள்‌ அடியார்களின்‌ விருப்பம்‌ மற்றும்‌ நாட்டத்தின்படி நடைபெறவில்லையெனில்‌ நன்மை செய்பவர்களைப்‌ புகழ்வது வீணானதாகவும்‌ தீமை செய்பவர்களைத்‌ தண்டிப்பது அநீதியாகவும்‌ ஆகிவிடும்‌. அல்லாஹ்‌ வீணானவற்றை விட்டும்‌ அநீதியிழைப்பதை விட்டும்‌ பரிசுத்தமானவன்‌.



நான்கு : 

அல்லாஹ்‌ தூதர்களை அனுப்பி வைத்தான்‌.“அல்லாஹ்வின்‌ மீது (குற்றம்‌ கூற) மனிதர்களுக்கு யாதொரு வழியும்‌ இல்லாதிருக்க இத்தூதர்களுக்குப்‌ பின்னரும்‌ (யஹ்யா போன்ற வேறு) பல தூதர்களை (சுவர்க்கத்தைக்‌ கொண்டு) நற்செய்தி கூறுகின்றவர்களாகவும்‌, (நரகத்தைக்‌ கொண்டு). அச்சமூட்டி எச்சரிக்கின்றவர்களாகவும்‌ (நாம்‌ அனுப்பி வைத்தோம்‌.) அல்லாஹ்‌ (அனைவரையும்‌) மிகைத்தவனும்‌, ஞானமுடையவனாகவும்‌ இருக்கின்றான்‌.” (ஸுரா அன்னிஸா 4 ; 165)

அடியார்களின்‌ செயல்கள்‌ அவர்களது நாட்டப்படியும்‌ விருப்பப்படியும்‌ நடைபெறவில்லையெனில்‌ தூதர்களை அனுப்பி அல்லாஹ்‌ நிலைநாட்டிய ஆதாரம்‌ வீணாகிவிடும்‌.



ஐந்து : 

செயல்‌ புரியும்‌ ஒவ்வொருவனும்‌ எந்தவொரு நிர்ப்பந்தமோ தூண்டுதலோ இன்றி தான்‌ செயல்படுவதாக உணர்கிறான்‌. அவன்‌ நாடினால்‌ நிற்கிறான்‌: அமர்கிறான்‌: நுழைகிறான்‌; வெளியேறுகிறான்‌. பயணிக்கிறான்‌; தங்கி விடுகிறான்‌. இவ்வாறான தனது செயல்களில்‌ தன்னை எவரும்‌ நிர்ப்பந்திப்பதாக அவன்‌ உணர்வதில்லை. மாறாக, தனது நாட்டப்படி செயல்படுவதற்கும்‌ பிறரின்‌ நிர்ப்பந்தத்தால்‌ செயல்படுவதற்குமிடையே தெளிவான வேறுபாட்டை உணர்கிறான்‌.

அவ்வாறே பிறரால்‌ நிர்ப்பந்திக்கப்பட்டு ஒரு செயலைச்‌ செய்வதற்கும்‌ தானே விரும்பிச்‌ செய்வதற்குமிடையேயான வேறுபாட்டை மார்க்கம்‌ சட்டரீதியாகவும்‌ தெளிவுபடுத்தியுள்ளது. அல்லாஹ்வுக்குரியதில்‌ தனது மனம்‌ விரும்பாமல்‌ நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையில்‌ ஒரு செயலைச்‌ செய்பவன்‌ தண்டிக்கப்படமாட்டான்‌.



3. அடியான்‌ நிர்ப்பந்திக்கப்படுவதில்லை

விதியைக்‌ காரணம்‌ காட்டி ஒரு பாவி தனது பாவச்‌ செயல்களை நியாயப்படுத்த முடியாது. ஏனெனில்‌, தன்‌ விஷயத்தில்‌ அந்தப்‌ பாவம்‌ தீர்மானிக்கட்பட்டுள்ளதை அறியாமல்‌ தனது சுயவிருப்பப்படியே அந்தப்‌ பாவச்‌ செயலை அவன்‌ செய்கிறான்‌. அல்லாஹ்‌ எதைத்‌ தீர்மானித்திருக்கிறான்‌ என்பது அந்தச்‌ செயல்‌ நடைபெற்ற பிறகுதான்‌ எவரும்‌ அறிந்து கொள்ள முடியும்‌.

“எந்த ஆத்மாவும்‌ நாளைக்கு அது என்ன செய்யும்‌ என்பதை அறியாது” (ஸூரா லுக்மான்‌ 31 : 34)

இந்த நிலையில்‌ “அல்லாஹ்‌ எனக்கு விதித்திருந்ததைத்தானே நான்‌ செய்கிறேன்‌; அதற்கு நான்‌ எப்படிப்‌ பொறுப்பாளியாக முடியும்‌?” என்று எவரும்‌ கூற முடியாது. காரணம்‌, அவன்‌ அந்தச்‌ செயலில்‌ ஈடுபடுவதற்கு முன்‌ விதியில்‌ தனக்கு என்ன விதிக்கப்பட்டுள்ளது என்பது அவனுக்குத்‌ தெரியாது. இவ்வாறு வாதிடுவது தவறு என அல்லாஹ்‌ குர்‌ஆனில்‌ தெளிவுபடுத்துகிறான்‌.

“அல்லாஹ்‌ நாடியிருந்தால்‌ நாங்களும்‌ எங்களுடைய மூதாதைகளும்‌ (அல்லாஹ்வுக்கு எதையும்‌) இணை வைத்திருக்க மாட்டோம்‌; (உண்ணுவதற்குரிய) எதையும்‌ (ஆகாதென) நாங்கள்‌ தடுத்திருக்க மாட்டோம்‌” என்று இணைவைத்து வணங்கும்‌ இவர்கள்‌ கூறுகின்றனர்‌.

இவ்வாறுதான்‌ இவர்களுக்கு முன்னிருந்தவர்களும்‌ நம்முடைய வேதனையைச்‌ சுகிக்கும்‌ வரையில்‌ (இறைதூதர்களைப்‌) பொய்யாக்கியே வந்தனர்‌. ஆகவே (நபியே) அவர்களை நோக்கி இதற்கு உங்களிடம்‌ ஏதும்‌ ஆதாரமுண்டா? (இருந்தால்‌) அதனை நம்மிடம்‌ கொண்டு வாருங்கள்‌. நீங்கள்‌ வீணான சந்தேகத்தைத்தான்‌ பின்பற்றுகிறீர்கள்‌. மேலும்‌, நீங்கள்‌ சுயமாகவே கற்பனைதான்‌ செய்து கொள்கிறீர்கள்‌” என்று கூறுங்கள்‌ (ஸூரா அல்அன்ஆம்‌ 6 : 148)

அல்லாஹ்வின்‌ 'கதீரை' தனது செயல்களுக்குக்‌ காரணம்‌ காட்டும்‌ பாவிகளுக்கு நாம்‌ கூறுவதெல்லாம்‌, 'நன்மையாயினும்‌ தீமையாயினும்‌ அதை நீ செய்வதற்கு முன்னால்‌ அல்லாஹ்‌ எதைத்‌ தீர்மானித்திருக்கிறான்‌ என்பது உனக்குத்‌ தெரியாது. இந்நிலையில்‌ நான்‌ நன்மை செய்வதைத்தான்‌ அல்லாஹ்‌ எனக்கு நாடி இருக்கிறான்‌ என்று நினைத்து நீ ஏன்‌ நன்மை செய்திருக்கக்‌ கூடாது?

இதனால்தான்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ தங்களது தோழர்களிடம்‌ “ஒவ்வொரு மனிதருக்கும்‌ சுவர்க்கத்தில்‌ அல்லது நரகத்தில்‌ அவரது வசிப்பிடம்‌ எழுதப்பட்டு விட்டது” என்று கூறினார்கள்‌. அப்போது தோழர்கள்‌ “நாங்கள்‌ (அதை நம்பி) ஆதரவு வைத்து எங்களுடைய அமல்களை விட்டு விடலாமா?” என்று வினவினார்கள்‌. நபி (ஸல்‌) அவர்கள்‌ “இல்லை; அமல்‌ செய்யுங்கள்‌ நிச்சயமாக ஒவ்வொருவரும்‌ (சொர்க்கம்‌ அல்லது நரகம்‌ இரண்டில்‌) எதற்காக படைக்கப்பட்டாரோ அது (நன்மை அல்லது தீமை செய்வது) அவருக்கு எளிதாக்கப்படும்‌" என்று கூறினார்கள்‌. (ஸஹீஹுல்‌ பகாரி, ஸஹீஹ்‌ முஸ்லிம்)‌

விதியைக்‌ காரணம்‌ காட்டும்‌ பாவிக்கு நாம்‌ சொல்லுவோம்‌:

1) நீ மக்காவுக்குப்‌ பிரயாணம்‌ செய்ய விரும்புகிறாய்‌; உன்‌ நம்பிக்கைக்குரிய நண்பர்‌, அதற்கு இரு வழிகள்‌ உள்ளன. அதில்‌ ஒன்று பாதுகாப்பற்ற, சிரமங்கள்‌ நிறைந்த பாதை; மற்றொன்று பாதுகாப்பான, எளிதான பாதை' என்று கூறுகிறார்‌. அப்போது முதல்‌ பாதையில்‌ செல்ல உனக்குத்‌ துணிவு பிறக்காது. இரண்டாவது பாதையிலேயே செல்வாய்‌. அவ்வாறில்லாமல்‌ 'முதல்‌ பாதையில்‌ செல்வதுதான்‌ எனது விதியில்‌ உள்ளது' என்று கூறி அதில்‌ நீ சென்றால்‌ மக்கள்‌ உன்னை 'பைத்தியக்காரன்‌' என்றுதான்‌ தீர்மானிப்பார்கள்‌.

2) உனக்கு இரண்டு வேலைகள்‌ வருகின்றன. ஒன்று, அதிக வருவாய்‌ தரக்கூடியது. மற்றொன்று, குறைந்த வருவாய்‌ தரக்கூடியது. இப்போது சிறந்ததைப்‌ பெறத்தானே நீ முயற்சி செய்வாய்‌? அவ்வாறிருக்க மறுமை விஷயத்தில்‌ சிறந்ததைப்‌ புறக்கணித்துவிட்டு, தாழ்ந்ததைச்‌ செய்து விதியின்‌ மீது நீ எப்படிப்‌ பழி போடுவாய்‌?

3) உனக்கு ஏதேனும்‌ உடல்‌ ரீதியான நோய்‌ ஏற்பட்டால்‌ பல மருத்துவர்களின்‌ கதவைத்‌ தட்டுகிறாய்‌; சிகிச்சையின்‌ போது ஏற்படும்‌ வலியையும்‌ சகித்துக்‌ கொள்கிறாய்‌. இதற்காக மருத்துவரிடம்‌ பல முறை செல்கிறாய்‌. இவை உனக்கு சிரமமாகத்‌ தோன்றுவதில்லை. அப்படி இருக்க பாவ நோயால்‌ பீடிக்கப்பட்ட உனது இதயத்துக்குச்‌ சிகிச்சை பெற இதே முயற்சியை நீ ஏன்‌ மேற்கொள்ளக்கூடாது?



4. அல்லாஹ்‌ தீங்கிழைப்பதில்லை

அல்லாஹ்வின்‌ ஞானத்தையும்‌, கருணையையும்‌ கவனித்து 'ஷர்ரூ' - தீமை அல்லாஹ்வின்‌ பால்‌ இணைக்கப்படுவதில்லை.

நபி (ஸல்) அவர்கள்‌ கூறினார்கள்‌: இறைவனே! தீமைகள்‌ உன்‌ பக்கம்‌ இணைக்கப்படாது'. (ஸஹீஹ்‌ முஸ்லிம்‌)

அல்லாஹ்வின்‌ விதிகளில்‌ எந்த நிலையிலும்‌ தீமை இருக்காது. ஏனெனில்‌, அல்லாஹ்வின்‌ விதிகள்‌ அவனது ஞானம்‌ மற்றும்‌ அருளின்‌ வெளிட்டாடாகும்‌.

தீமைகள்‌ உண்டாவதெல்லாம்‌ அந்த விதியால்‌ நடப்பவற்றில்தான்‌.

நபி (ஸல்‌) அவர்கள்‌, ஹஸன்‌ (ரழி) அவர்களுக்குக்‌ கற்றுக்‌ கொடுத்த 'குனூத்‌' பிரார்த்தனையில்‌ “அல்லாஹ்வே! நீ எதைத்‌ தீர்மானித்தாயோ அதன்‌ தீமையிலிருந்து என்னைக்‌ காப்பாயாக" என்று கூறினார்கள்‌.

அல்லாஹ்‌ எதைத்‌ தீர்மானித்தானோ அத்துடன்‌ தீமையை இணைத்துக்‌ கூறியுள்ளார்கள்‌.

அத்துடன்‌, தீர்மானிக்கப்பட்டவற்றில்‌ ஏற்படும்‌ தீமை முற்றிலும்‌ தீமையாக இருப்பதல்ல. மாறாக, ஒரு வகையில்‌ பார்த்தால்‌ தீமையாகத்‌ தென்படும்‌; அதே நேரத்தில்‌ மற்றொரு கோணத்தில்‌ அது நன்மையாக இருக்கும்‌. அவ்வாறே ஓர்‌ இடத்தில்‌ தீமையாக இருப்பது மற்றோர்‌ இடத்தில்‌ நன்மையாக இருக்கும்‌.

வறட்சி, வறுமை, நோய்‌, அச்சம்‌ போன்றவை தீமையே. இருப்பினும்‌ மற்றொரு கோணத்தில்‌ அவை நன்மையாகும்‌. அல்லாஹ்‌ கூறுகிறான்‌:

மனிதர்களின்‌ கைகள்‌ தேடிக்‌ கொண்டதன்‌ காரணமாக கடலிலும்‌ கரையிலும்‌ அழிவு வேலைகள்‌ (அதிகமாகப்‌) பரவிவிட்டன. அதிலிருந்து அவர்கள்‌ விலகிக்கொள்ளும்‌ பொருட்டு அவர்களின்‌ தீய செயல்களில்‌ சிலவற்றின்‌ தண்டனையை அவர்கள்‌ (இம்மையிலும்‌) சுகிக்கும்படி, அவன்‌ செய்ய வேண்டியதாகிறது. (ஸுரா அர்ரூம்‌ 30 : 41)

திருடனின்‌ கரத்தைத்‌ துண்டிப்பது, விபசாரம்‌ செய்தவனைக்‌ கல்லால்‌ எறிந்து கொலை செய்வது என்ற தண்டனைகளில்‌ கரம்‌ துண்டிக்கப்படுவதும்‌ உயிர்‌ பறிக்கப்படுவதும்‌ திருடன்‌ மற்றும்‌ விபசாரியைக்‌ தண்டிப்பதும்‌ தீமைதான்‌. இது மற்றொரு கோணத்தில்‌ நன்மையாகும்‌. அதாவது, அவர்களது குற்றத்துக்கான தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டால்‌ அது அக்குற்றங்களுக்குப்‌ பரிகாரமாகி விடுகிறது. ஏனெனில்‌, ஒரு குற்றத்துக்காக உலகிலும்‌ மறுமையிலும்‌ என இருமுறை தண்டனை நிறைவேற்றப்படாது. அது மட்டுமின்றி மற்றொரு கோணத்திலும்‌ நன்மையாகும்‌. தண்டனை நிறைவேற்றப்படுவதன்‌ மூலம்‌ சமூகத்தில்‌ பொருள்‌, கண்ணியம்‌ மற்றும்‌ உயிர்கள்‌ பாதுகாக்கப்படுகின்றன.

"இந்த மகத்தான அடிப்படைகளுடன்‌ கூடிய மேன்மைக்குரிய இக்கொள்கை, இதை ஏற்பவருக்கு எண்ணிலடங்கா சிறப்புகளை அளிக்கின்றது.



நம்பிக்கை(ஈமான்) என்பது சொல் செயல்

அஹ்லுஸ்‌ ஸுன்னத்‌ வல்‌ ஜமாஅத்தினரின்‌ அடிப்படைகளில்‌ ஒன்று, தீன்‌ (மார்க்கம்‌) மற்றும்‌ ஈமான்‌ (நம்பிக்கை) என்பது சொல்‌, செயல்‌ இரண்டையும்‌ ஒருங்கே உள்ளடக்கியதாகும்‌. உள்ளத்தாலும்‌, நாவாலும்‌ சொல்வதும்‌, உள்ளம்‌, நாவு, மற்றும்‌ உறுப்புகளின்‌ செயல்பாடுகள்‌ என அனைத்தும்‌ ஈமானுடன்‌ இணைந்ததாகும்‌.

நல்ல காரியங்கள்‌ செய்வதால்‌ ஈமான்‌ அதிகரிக்கும்‌; பாவத்தால்‌, ஈமான்‌ குறையும்‌. அந்தப்‌ பாவத்தின்‌ காரணமாக ஒரு முஃமின்‌ (நம்பிக்கையாளர்‌ காஃபிர்(நிராகரிப்பாளர்‌) ஆகிவிட்டார்‌ என்று கூறக்கூடாது. ஈமானால்‌ ஏற்பட்ட சகோதரத்துவம்‌ முஃமினான பாவியை விட்டும்‌ அகன்றுவிடாது. பின்வரும்‌ வசனங்களைச்‌ சிந்திக்கும்போது இதை அறிந்து கொள்ளலாம்‌.

ஆயினும்‌, பழி வாங்கும்‌ விஷயத்தில்‌ ஒரு சிறிதேனும்‌ அ(க்‌ கொலையுண்டவனுடைய) சகோதரரால்‌ மன்னிக்கப்பட்டுவிட்டால்‌, மிக கண்ணியமான முறையைப்‌ பின்பற்றி (அவனைக்‌ கொலை செய்யாது விட்டு) விடவேண்டும்‌. (ஸூரா அல்பகறா 2 : 178)

கொலை செய்வது பெரும்பாவமாக இருப்பதுடன்‌ கொலை செய்தவரை கொல்லப்பட்டவரின்‌ சகோதரன்‌ மன்னித்துவிட்டாலும் அல்லது நஷ்டஈட்டை பெற்றுக் கொண்டாலும் அல்லது பழிக்குப்பழி வாங்கினாலும் அதன்‌ மூலம்‌ அக்கொலையாளி மார்க்கத்தை விட்டும்‌ வெளியேறி விடவில்லை என்பதை இந்த இறைவசனம்‌ உணர்த்துகிறது.

நம்பிக்கையாளர்களிலுள்ள இரு வகுப்பார்‌ தங்களுக்குள்‌ சச்சரவு செய்து கொண்டால்‌, அவர்களைச்‌ சமாதானப்படுத்தி விடுங்கள்‌. அவர்களில்‌ ஒரு வகுப்பார்‌, மற்றொரு வகுப்பாரின்‌ மீது வரம்பு மீறி அநியாயம்‌ செய்தால்‌, அநியாயம்‌ செய்தவர்கள்‌ அல்லாஹ்வுடைய கட்டளையின்‌ பக்கம்‌ வரும்வரையில்‌, அவர்களுடன்‌ நீங்கள்‌ போர்‌ செய்யுங்கள்‌. அவர்கள்‌ (அல்லாஹ்வின்‌ கட்டளையின்பால்‌) திரும்பிவிட்டால்‌, நியாயமான முறையில்‌ அவ்விரு வகுப்பார்களுக்கிடையே சமாதானம்‌ செய்து நீதியாகத்‌ தீர்ப்பளியுங்கள்‌. நிச்சயமாக அல்லாஹ்‌ நீதி செய்பவர்களை நேசிக்கின்றான்‌. நிச்சயமாக நம்பிக்கையாளர்கள்‌ அனைவரும்‌ சகோதரர்களே! ஆகவே,உங்கள்‌ சகோதரர்களுக்கிடையில்‌ ஒழுங்கையும்‌ சமாதானத்தையும்‌ நிலைநிறுத்துங்கள்‌. (இதில்‌) அல்லாஹ்வுக்குப்‌ பயந்து நடங்கள்‌. (இதன்‌ காரணமாக) அவனுடைய அருளை நீங்கள்‌ அடைவீர்கள்‌. (ஸூரா அல்ஹுஜுறாத்‌ 49 : 9, 10)

முஃமினுடன்‌ முஃமின்‌ சண்டை செய்வது பெரும்‌ குற்றமாக இருந்தும்‌ அவர்கள்‌ அனைவரையும்‌ நமது சகோதரர்கள்‌ என அல்லாஹ்‌ கூறியுள்ளான்‌. ஒரு முஸ்லிம்‌, பாவம்‌ செய்வதால்‌ இஸ்லாமிலிருந்து வெளியேறிவிட மாட்டார்‌. நரகில்‌ நுழைந்தாலும்‌ நிரந்தரமாகத்‌ தங்கிவிட மாட்டார்‌. சங்கைமிகு குர்‌ஆனின்‌ சில இடங்களில்‌ பாவியையும்‌ முஃமின்‌(நம்பிக்கையாளன்)‌ என்று கூறப்பட்டுள்ளது. உதாரணம்‌, ஸூரா அன்னிஸாவின்‌ 4 : 92 வசனம்‌.

குற்றப் பரிகாரத்திற்கு முஃமினான அடிமையை விடுதலை செய்ய வேண்டும்‌ என்பதில்‌ முழுமையான முஃமினைத்‌ தேடி அவரை வாங்கித்தான்‌ விடுதலை செய்ய வேண்டும்‌ என்று கட்டாயம்‌ இல்லை. (பார்க்க - ஸூரா அன்னிஸா 4 : 92)

சில இடங்களில்‌ நல்லோரை மட்டுமே முஃமின்கள்‌ என்று கூறப்பட்டுள்ளது. பாவியானவன்‌ மூஃமின்தான்‌. ஆனால்‌ முழுமையான முஃமின்‌ அல்ல. நல்லோர்களே முழுமையான முஃமின்களாவர்‌.

நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌: விபசாரம்‌ செய்பவன்‌ முஃமினான நிலையில்‌ விபசாரம்‌ செய்ய மாட்டான்‌. திருடன்‌ முஃமினான நிலையில்‌ திருட, மாட்டான்‌. மது அருந்தும்போது முஃமினான நிலையில்‌ மது அருந்தமாட்டான்‌. மக்கள்‌ பார்க்கும்‌ அளவிற்கு பெரிய அளவில்‌ கொள்ளை அடிப்பவன்‌ முஃமினான நிலையில்‌ கொள்ளை அடிக்க மாட்டான்‌. (ஸஹீஹுல்‌ புகாரி, ஸஹீஹ்‌ முஸ்லிம்‌)

இவ்வாறான பெரும்பாவங்களில்‌ ஈடுபடுபவர்கள்‌ குறைவான ஈமான்‌ உள்ள முஃமின்களாவார்கள்‌. இவர்கள்‌ பெரும்‌ பாவம்‌ செய்ததால்‌ இவர்களை ஃபாஸிக்‌ - பாவிகள்‌ என்று கூறப்படும்‌. பாவியை முஃமின்‌ இல்லை என்று பொதுவாக கூறக்கூடாது. அவ்வாறே பாவியை முழுமையான முஃமின்‌ என்றும்‌ கூறக்‌ கூடாது.



நம்பிக்கை(ஈமான்) கொள்வதால் ஏற்படும் பயன்கள்


1. அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதின்‌ பலன்கள்

அல்லாஹ்வையும்‌ அவனது அழகிய பெயர்களையும்‌, பரிசுத்தத்தன்மையையும்‌ நம்பிக்கை கொள்ளும்‌ அடியானுக்கு அல்லாஹ்வின்‌ மீது அன்பும்‌ நேசமும்‌ அவனது மகத்துவமும்‌ உள்ளத்தில்‌ ஏற்படுகிறது. இதன்‌ காரணமாக அல்லாஹ்வின்‌ கட்டளைகளை ஏற்று அவன்‌ தடுத்தவற்றைத்‌ தவிர்த்து வாழும்‌ தன்மை உருவாகிறது. இந்த இரண்டின்‌ மூலம்தான்‌ இம்மையிலும்‌ மறுமையிலும்‌ தனி மனிதருக்கும்‌ சமூகத்திற்கும்‌ முழுமையான வெற்றியும்‌ இறை அருளும்‌ கிடைக்கின்றன.

“ஆண்‌ அல்லது பெண்களில்‌ யார்‌ நம்பிக்கை கொண்டு நற்செயல்கள்‌ செய்வாரோ அவரை நிச்சயமாக நாம்‌ (இம்மையில்‌) நல்வாழ்க்கை வாழச்‌ செய்வோம்‌. மேலும்‌ (மறுமையிலோ) அவர்கள்‌ செய்து கொண்டிருந்ததைவிட மிக்கு அழகான கூலியையே நிச்சயமாக நாம்‌ அவர்களுக்குக்‌ கொடுப்போம்‌. (ஸூறா அன்னஹ்ல்‌ 16 ; 97)


மலக்குகளை நம்பிக்கை கொள்வதின்‌ பலன்கள்

1. மலக்குகள்‌ எவ்வளவு பிரமாண்டமான படைப்பு என்பது நாம்‌ அறிந்ததே. அதிலிருந்து அவர்களைப்‌ படைத்த அல்லாஹ்‌ எத்தகைய மகத்துவமிக்கவன்‌; ஆற்றலுள்ளவன்‌; அதிகாரமிக்கவன்‌ என்பதை அறிந்து கொள்கிறோம்‌.

2. அடியார்களின்‌ உதவிக்காக அல்லாஹ்‌ மலக்குகளைப்‌ படைத்திருக்கின்றான்‌. அதற்காக அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துகின்றோம்‌. மனிதர்களைப்‌ பாதுகாப்பது அவர்களது செயல்களைப்‌ பதிவு செய்வது போன்ற பல்வேறு வேலைகளை மலக்குகளிடம்‌ அல்லாஹ்‌ ஒப்படைத்துள்ளான்‌.

3. அவர்கள்‌ அல்லாஹ்வை முழுமையாக வணங்கி வருகிறார்கள்‌. நம்பிக்கை கொண்டவர்களுக்காக அல்லாஹ்விடம்‌ பாவ மன்னிப்புக்‌ கேட்கிறார்கள்‌. எனவே, அவர்களை நாம்‌ நேசிக்கிறோம்‌.


3. இறைநூல்களை நம்பிக்கை கொள்வதின்‌ பலன்கள்

1. ஒவ்வொரு சமுதாயத்தையும்‌ நேர்வழிப்படுத்துவதற்காக அல்லாஹ்‌ கிதாபுகளை அருளினான்‌. இதிலிருந்து மனிதர்களுக்கு அல்லாஹ்‌ செய்த அருளையும்‌ பேருதவிகளையம்‌ அறிந்து கொள்கிறோம்‌.

2. முற்காலத்தில்‌ ஒவ்வொரு சமுதாயத்துக்கும்‌ அவர்களது சூழ்நிலைக்கேற்ற சட்டங்களை உடைய நூல்களை அல்லாஹ்‌ இறக்கி அருள்‌ புரிந்தான்‌. பிறகு எல்லாக்‌ காலத்துக்கும்‌ பொருந்தும்‌ வகையில்‌ இறுதி நூலான குர்‌ஆனை இறக்கி அருள்‌ புரிந்தான்‌. இதிலிருந்து அல்லாஹ்வின்‌ ஞானத்தையும்‌ அறிவையும்‌ நாம்‌ தெரிந்து கொள்கிறோம்

3. இதற்காக அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துகிறோம்‌.


4. இறைத்தூதர்களை நம்பிக்கை கொள்வதின்‌ பலன்கள்‌

1. மனிதர்களை நேர்வழியின்‌ பக்கம்‌ அழைப்பதற்காக சங்கைமிக்க தூதர்களை அல்லாஹ்‌ அனுப்பினான்‌. இதன்‌ மூலம்‌ மனிதர்களுக்கு அல்லாஹ்‌ செய்த அருளையும்‌ உதவியையும்‌ அறிந்து கொள்கிறோம்‌.

2. இதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறோம்‌.

3. இறைத்தூதர்களை நேசிக்கிறோம்‌. அவர்களைக்‌ கண்ணியப்படுத்துகிறோம்‌. அவர்களது தகுதிக்கேற்ப அவர்களைப்‌ புகழ்கிறோம்‌. ஏனெனில்‌, இறைத்தூதர்கள்‌ அல்லாஹ்வால்‌ தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்‌; அவனது அடியார்களில்‌ மிகச்‌ சிறந்தவர்கள்‌; அவனையே வணங்கி வந்தவர்கள்‌: அவனது தூதுச்‌ செய்தியை எடுத்துரைத்தவர்கள்‌; மக்களுக்கு நன்மையை நாடியவர்கள்‌; இழைக்கப்பட்ட துன்பங்களைச்‌ சகித்துக்‌ கொண்டவர்கள்‌.


5. மறுமை நாளை நம்பிக்கை கொள்வதின்‌ பலன்கள்

1. அந்த மறுமை நாளில்‌ அதிகமதிகம்‌ நன்மைகளை அடைந்து கொள்ளும்‌ ஆர்வத்தில்‌ அல்லாஹ்வுக்கு வழிப்படுவதில்‌ ஆர்வம்‌ கொள்கிறோம்‌. அந்நாளின்‌ தண்டனையைப்‌ பயந்து பாவங்களிலிருந்து விலகிக்‌ கொள்கிறோம்‌.

2. ஒரு நம்பிக்கையாளர்‌ தமக்கு இவ்வுலகில்‌ ஏற்படும்‌ இழப்புகள்‌ குறித்து கவலைப்படாமல்‌ மறுமையில்‌ அடையப்‌ போகும்‌ அல்லாஹ்வின்‌ அருட்கொடைகளையும்‌ நற்கூலியையும்‌ எண்ணி ஆறுதல்‌ அடைகிறார்‌.


6. விதியை நம்பிக்கை கொள்வதின்‌ பலன்கள்

1. காரணங்களைக்‌ கையாண்டாலும்‌ அல்லாஹ்வின்‌ மீதே நம்பிக்கை வைக்கிறோம்‌. ஏனெனில்‌, காரணமும்‌ அதன்‌ பலனும்‌ அல்லாஹ்வின்‌ விதி மற்றும்‌ ஏற்பாட்டைக்‌ கொண்டே நடக்கிறது.

2. ஆன்மா நிம்மதி பெறுகிறது இதயம்‌ அமைதியடைகிறது. தனக்கு ஏற்படும்‌ ஒவ்வொரு துன்பமும்‌ அல்லாஹ்வின்‌ விதியைக்‌ கொண்டு தான்‌ நடைபெறுகிறது என அறியும்போது அல்லாஹ்வின்‌ விதியை திருப்தியுடன்‌ ஏற்று மனம்‌ நிம்மதியடைகிறது. விதியை உறுதியாக நம்பிக்கை கொள்பவரைவிட நிம்மதியான வாழ்வும்‌, மன அமைதியும்‌ மகிழ்ச்சியும்‌ உடையவர்‌ வேறு எவரும்‌ இருக்க முடியாது.

3. தான்‌ நினைத்த காரியம்‌ நடந்து விட்டால்‌ தான்‌ விரும்பியதைச்‌ சாதித்து விட்டோம்‌ என எண்ணி தன்னைத்தானே பாராட்டிக்‌ கொள்வதிலிருந்து தவிர்ந்து கொள்ள முடிகிறது. ஏனெனில்‌, அல்லாஹ்‌ விதித்திருந்ததன்‌ காரணமாகவே அந்த நன்மைகள்‌ தனக்குக்‌ கிடைத்தன என்பதை உறுதிகொண்டு, அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவோம்‌. தற்பெருமை கொள்வதைத்‌ தவிர்த்துக்‌ கொள்வோம்‌.

4. எதிர்பாராத கஷ்டங்கள்‌, துன்பங்கள்‌ ஏற்படும்‌ போது நாம்‌ திடுக்கிடத்‌ தேவையில்லை; பயப்படத்‌ தேவையில்லை. ஏனெனில்‌, அவை அனைத்தும்‌ வானம்‌, பூமியின்‌ ஏக இறைவனாகிய அல்லாஹ்வின்‌ விதிப்படியே நடக்கின்றன. எது நடக்க வேண்டுமோ அது நிச்சயமாக நடந்தே தீரும்‌ என்ற உறுதியுடன்‌ பொறுமையை மேற்கொண்டு அல்லாஹ்விடம்‌ நற்கூலியை எதிர்பார்ப்போம்‌.

இதையே அல்லாஹ்‌ கூறுகிறான்‌:

“(பொதுவாக) பூமியிலோ அல்லது (சொந்தமாக) உங்களுக்கோ ஏற்படக்கூடிய எந்தக்‌ கஷ்டமும்‌ (நஷ்டமும்‌) அது ஏற்படுவதற்கு முன்னதாகவே (அல்லவ்ஹுல்‌ மஹ்‌ஃபூள்‌ என்னும்‌) புத்தகத்தில்‌ பதிவு செய்யப்படாமல்‌ இல்லை. நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதே! உங்களை விட்டும்‌ தவறிப்‌ போனதைப்‌ பற்றி நீங்கள்‌ கவலை கொள்ளாதிருக்கவும்‌, (அல்லாஹ்‌) உங்களுக்குக்‌ கொடுத்ததைப்‌ பற்றி நீங்கள்‌ கர்வம்‌ கொள்ளாதிருக்கவும்‌, (இதனை உங்களுக்கு அறிவிக்கின்றான்‌) அல்லாஹ்‌ கர்வம்‌ கொள்வோரையும்‌ பெருமையடிப்போரையும்‌ நேசிப்பதில்லை.” (ஸூரா அல்ஹதூது 57 : 22, 23)



நம்பிக்கையாளர்களிடம் இருக்கக் கூடாதவை

நம்பிக்கையாளர்‌ தமது நம்பிக்கையை குஃப்ர்‌ (நிராகரிப்பை), ஷிர்க்‌ (இணைவைத்தல்)‌. நிஃபாக்‌ (நயவஞ்சகம்‌) ஆகியவற்றை விட்டு பாதுகாக்க வேண்டும்‌. ஆகவே, இம்மூன்றுக்கும்‌ வழிவகுக்கும்‌ அனைத்து தன்மைகளையும்‌, சொல்களையும்‌, செயல்களையும்‌ மார்க்கம்‌ முற்றிலும்‌ தடை செய்துள்ளது. அவ்வாறு தடை செய்யப்பட்டவற்றின்‌ விவரங்கள்‌ கீழே கொடுக்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும்‌ அல்குர்‌ஆன்‌ மற்றும்‌ ஆதாரமிக்க நபிமொழிகளில்‌ தடை செய்யப்பட்டவையாகும்‌.

ஆகவே, ஒவ்வொரு நம்பிக்கையாளரும்‌ தமது நம்பிக்கையைப்‌ பாதுகாப்பதற்காக நிச்சயமாக இவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும்‌.

அல்லாஹ்விற்கு இணைவைப்பதின்‌ அனைத்து வகைகளும்‌.

குறி பார்ப்பவன்‌, ஜோஸியம்‌ பார்ப்பவன்‌, காணாமல்‌ போனதைக்‌ கண்டுபிடிப்பேன்‌ என்று சொல்பவன்‌ ஆகியோரிடம்‌ செல்வது அல்லது அவர்கள்‌ சொல்வதை உண்மையென்று நம்புவது.

அல்லாஹ்வைத்‌ தவிர மற்றவர்களுக்காக அறுப்பது. (அறுக்கும்போது அல்லாஹ்வின்‌ பெயர்‌ சொல்லி அறுத்தாலும்‌ சரியே)

அல்லாஹ்வின்‌ மீதும்‌ அவனுடைய தூதர்‌ மீதும்‌ ஆதாரமின்றிப்‌ பேசுவது.

அல்லாஹ்வுடைய மார்க்கத்தைத்‌ தவிர மற்ற வழிமுறைகளைச்‌ சட்டமாக எடுத்துக்‌ கொள்வது.

அல்லாஹ்வுடைய மார்க்கத்தைத்‌ தவிர மற்ற வழிமுறைகளைக்‌ கொண்டு பிரச்சினைகளுக்குத்‌ தீர்வு காண அழைப்பது.

கண்‌ திருஷ்டிகள்‌ மற்றும்‌ ஆபத்துகளைத்‌ தவிர்ப்பதற்காகத்‌ தாயத்துகள்‌, கயிறுகள்‌ அணிவது.

சூனியத்தின்‌ அனைத்து வகைகளும்‌.

நட்சத்திரங்களையோ அல்லது மற்ற கோள்களையோ கொண்டு நன்மை அல்லது தீமை நடக்கும்‌ என்று கூறுவது மற்றும்‌ நம்புவது.

அல்லாஹ்வுடைய (தாத்- உள்ளமையைப்பற்றி சிந்திப்பது (அவனுடைய படைப்புகளைப்‌ பற்றிதான்‌ சிந்திக்க வேண்டும்‌)

அல்லாஹ்வின்‌ மீது நல்லெண்ணம்‌ கொள்ளாமல்‌ மரணிப்பது.

இஸ்லாமிய மார்க்கத்தைப்‌ பின்பற்றுபவரை நரகவாசி என்று கூறுவது.

மார்க்க ஆதாரமில்லாமல்‌ ஒருவரைக்‌ காஃபிரென்று கூறுவது.

உலகக்‌ காரியங்களில்‌ ஒன்றைப்‌ பிறரிடத்தில்‌ கேட்கும்‌ போது அல்லாஹ்வின்‌ முகத்திற்காக கொடுங்கள்‌ என்று கேட்பது.

அல்லாஹ்வுக்காக கொடுங்கள்‌ என்று கேட்பவருக்குக்‌ கொடுக்காமலிருப்பது. (ஆனால்‌ அவர்‌ கேட்கும்‌ விஷயம்‌ பாவமான காரியமாக இருக்கக்‌ கூடாது)

காலத்தை ஏசுது.

சகுனம்‌ பார்ப்பது.

இணைவைப்பவர்கள்‌, காஃபிர்களுடன்‌ சேர்ந்து தங்குவது.

அல்லாஹ்வையும்‌ அவனது மார்க்கத்தையும்‌ எதிர்க்கக்கூடிய யூதர்கள்‌, கிறிஸ்தவர்கள்‌, இணைவைப்பவர்கள்‌, காஃபிர்கள்‌ (நிராகரிப்பாளர்கள்‌) ஆகியவர்களுடன்‌ உளப்‌ பூர்வமான நட்பு கொள்வது

அமல்களை வீணாக்குவது. உதாரணமாக: பிறர்‌ பார்க்க வேண்டுமென்பதற்காகவோ, பிறர்‌ புகழ வேண்டுமென்பதற்காகவோ ஓர்‌ அமலைச்‌ செய்வது அல்லது தனது அமல்களைச்‌ சொல்லிக்‌ காட்டுவது.

கஅபதுல்லாஹ்‌, மஸ்ஜிதுன்‌ நபவி, மஸ்ஜித்‌ அக்ஸா ஆகிய மூன்று இடங்களைத்‌ தவிர மற்ற இடங்களை புனிதமாகக்‌ கருதி அவற்றைத்‌ தரிசிக்கச்‌ செல்வது.

அடக்கஸ்தலங்களிலோ அல்லது அவற்றைச்‌ சுற்றியோ (தர்ஹா போன்ற கட்டடம்‌ அமைப்பது)

அடக்கஸ்தலங்கள்‌ இருக்குமிடத்தில்‌ விளக்கெரிப்பது.

நபித்தோழர்களை ஏசுவது அவர்களுக்கு மத்தியில்‌ நடந்த பிரச்சினைகளைப்‌ பற்றி தவறான கண்ணோட்டத்தில்‌ ஆராய்வது.

தக்தீர்‌ எனும்‌ விதியைப்‌ பற்றி ஆழ்ந்து சிந்திப்பது.

மார்க்கக்‌ கல்வி ஞானமின்றி அல்குர்‌ஆன்‌ கருத்துகளில்‌ தர்க்கம்‌, விவாதம்‌ செய்வது.

அல்குர்‌ஆன்‌ விஷயத்தில்‌ சர்ச்சை செய்பவர்களுடனோ அல்லது அதைப்‌ பரிகாசம்‌ செய்பவர்களுடனோ அமர்வது.

தக்தீர்‌ எனும்‌ விதியை மறுப்பவர்கள்‌, இன்னும்‌ இது போன்று கொள்கை ரீதியான பித்‌அத்கள்‌ (அனாசாரங்கள்‌) செய்பவர்களை நோய்‌ விசாரிக்கச்‌ செல்வது அல்லது அவர்களது ஜனாஸாவில்‌ கலந்து கொள்வது அல்லது அவர்களுக்காகக்‌ கவலைப்படுவது.

காஃபிர்களோ அல்லது பித்‌அத்தை சார்ந்தவர்களோ எழுதிய மத ரீதியான புத்தகங்களைப்‌ படிப்பது.

காஃபிர்கள்‌ எதிர்த்து அல்லாஹ்வை திட்டுவார்கள்‌ என்று இருந்தால்‌, அவர்களது பொய்யான கடவுள்களைத்‌ திட்டுவது.

அல்லாஹ்வுடைய அத்தாட்சிகளை, வசனங்களைப்‌ பரிகாசம்‌ செய்வது.

அல்லாஹ்‌ தடுத்தவற்றை ஆகுமாக்கிக்‌ கொள்வது அல்லது அனுமதித்தவற்றைத்‌ தடை செய்து கொள்வது.

அல்லாஹ்வைத்‌ தவிர பிறருக்கு (சிரம்‌ பணிவது) சுஜூது செய்வது அல்லது குனிவது.

நிஃபாக்‌ எனும்‌ நயவஞ்சகத்‌ தன்மை உள்ளவர்களுடனும்‌, பெரும்‌ பாவங்களை வெளிப்படையாக செய்பவர்களுடன்‌ கூடி உட்கார்ந்து பேசி மகிழ்வது.

மார்க்கத்தில்‌ பிரிவினை உண்டு பண்ணுவது சத்தியத்தில்‌ உள்ள ஜமாஅத்தை விட்டுப்‌ பிரிவது

யூதர்கள்‌, கிறிஸ்தவர்கள்‌, முஷ்ரிக்குகள்‌ இணைவைப்பவர்கள்‌, மஜூஸிகள்‌ (நெருப்பை வணங்குபவர்கள்‌) காஃபிர்கள்‌ ஆகியோரின்‌ மதச்சடங்குகள்‌ மற்றும்‌ அவர்களின்‌ கலாசாரத்தைப்‌ பின்பற்றுவது.

யூதர்கள்‌, கிறிஸ்தவர்கள்‌ தங்களின்‌ நூல்களிலிருந்து சொல்லும்‌ விஷயங்களை உண்மை அல்லது பொய்‌ என்று சொல்வது. (அதற்கு உண்மை அல்லது பொய்‌ என்பதற்கு நமது மார்க்கத்தில்‌ ஆதாரம்‌ இருந்தாலே தவிர)

பிள்ளைகள்‌, சிலைகள்‌, பெற்றோர்கள்‌ மீது சத்தியம்‌ செய்வது.

அல்லாஹ்வும்‌ நீங்களும்‌ நாடினால்‌ என்று சொல்வது.

அல்லாஹ்வைத்‌ தவிர மற்றவரை இறைவன்‌, கடவுள்‌, ஆண்டவர்‌ என்று சொல்வது.

நேரம்‌ சரியில்லை என்று சொல்வது.

உன்‌ மீது அல்லாஹ்வின்‌ சாபம்‌ உண்டாகட்டும்‌! அல்லாஹ்வின்‌ கோபம்‌ உண்டாகட்டும்‌! நீ நரகவாதி என ஒருவருக்கொருவர்‌ சபித்துக்‌ கொள்வது.




அல் ஃபிர்கத்துல்‌ நாஜியா - நேர்வழியும் பாதுகாப்பும் பெற்ற ஒரே கூட்டம்‌

1. நபிவழிகளையும்‌ நபித்தோழர்களையும்‌ பின்பற்றுகிற நடுநிலையாளர்கள்‌

இஸ்லாமிய சமுதாயம்‌ மற்ற சமூதாயங்களுக்கு மத்தியில்‌ நடுநிலை மிக்க சமுதாயமாக இருப்பது போன்று அஹ்லுஸ்‌ ஸுன்னத்‌ வல்‌ ஜமாஅத்‌ என்ற (நபிவழியையும்‌ நபித்தோழர்களையும்‌ பின்பற்றக்‌ கூடிய) கூட்டம்‌ ஏனைய இஸ்லாமியக்‌ கூட்டங்களுக்கு மத்தியில்‌ மிக நடுநிலை மிக்கவர்கள்‌. அல்லாஹ்வின்‌ பண்புகளை மாற்றி, அவனை வருணிக்கும்‌ கூட்டங்களுக்கும்‌, அவனது பண்புகளுக்கு உவமை கூறும்‌ கூட்டங்களுக்கும்‌ இடையில்‌ அஹ்லுஸ்‌ ஸுன்னத்‌ வல்‌ ஜமாஅத்தினரே நடுநிலையான கொள்கையுடையவர்களாக இருக்கின்றனர்‌.

இவ்வாறே அல்லாஹ்வின்‌ செயல்கள்‌ பற்றி விவரிக்கும்போது அவனுடைய விதியை மறுக்கும்‌ கூட்டங்களுக்கும்‌ படைப்பினங்கள்‌. 'விதி'யின்‌ “கீழ்‌ நிர்ப்பந்திக்கப்பட்டு, சுய விருப்பத்தை இழந்து இருக்கும்‌ கற்களைப்‌ போன்றவர்கள்‌ எனக்‌ கூறும்‌ கூட்டங்களுக்கு இடையிலும்‌ இவர்கள்‌ நடுநிலையை கொண்டுள்ளார்கள்‌.

ஈமான்‌ கொண்டால்‌ போதும்‌, அமல்‌ தேவையில்லை என்று கூறும்‌ கூட்டங்களுக்கும்‌, பாவம்‌ செய்தவன்‌ நிரந்தரமாக நரகில்‌ தங்கிவிடுவான்‌ என்று கூறும்‌ கூட்டங்களுக்கு இடையிலும்‌ இவர்கள்‌ நடுநிலையான கொள்கையை கொண்டுள்ளார்கள்‌.

நபித்தோழர்களை அவமரியாதை செய்து, அவர்களைக்‌ காஃபிர்‌ என்று ஏசும்‌ கூட்டங்களுக்கும்‌, நபியின்‌ குடும்பத்தாரை அளவு கடந்து புகழ்ந்து அல்லாஹ்வின்‌ அந்தஸ்திற்கு உயர்த்தும்‌ கூட்டங்களுக்கு இடையிலும்‌ இவர்கள்‌ நடுநிலையான கொள்கையை கொண்டுள்ளார்கள்‌.

பெரும்பாவம்‌ செய்தவர்‌ முஃமின்‌ அல்ல என்று சில கூட்டத்தினர்‌ கூறுகின்றனர்‌. வேறு சிலர்‌ பெரும்பாவம்‌ செய்தவர்‌ காஃபிராகி விட்டார்‌ என்று கூறுகின்றனர்‌. மற்றும்‌ சிலர்‌ ஈமான்‌ கொண்டதன்‌ பின்னர்‌ எவ்வளவுதான்‌ பெரும்பாவங்கள்‌ செய்தாலும்‌ ஈமான்‌ பூரணமாகவே இருக்கும்‌; அவரது பாவத்தால்‌ ஈமானில்‌ எவ்வித பாதிப்பும்‌ ஏற்படாது என்று கூறுகின்றனர்‌.

இம்மூன்று வழி தவறிய கூட்டத்தினர்‌ இடையே அஹ்லுஸ்‌ ஸுன்னத்‌ வல்‌ ஜமாஅத்தினரே நடுநிலைக்‌ கொள்கை உடையவர்களாக இருக்கின்றனர்‌.


நபிவழியையும்‌, நபித்தோழர்களையும்‌ பின்பற்றும்‌ கூட்டத்தினரின்‌ நடுநிலைக்‌ கொள்கை.

1. அல்லாஹ்வின்‌ அழகிய பெயர்களையும்‌, அப்பெயர்கள்‌ குறிக்கும்‌ பண்புகளையும்‌ அல்லாஹ்வும்‌, அவனது தூதர்‌ முஹம்மது (ஸல்)‌ அவர்களும்‌ கூறியதுபோல்‌ ஏற்றுக்கொள்ள வேண்டும்‌.

2. அவனது பெயர்களையும்‌, அப்பெயர்கள்‌ குறிக்கும்‌ பண்புகளையும்‌ படைப்பினங்களின்‌ பெயர்களுடனும்‌, தன்மைகளுடனும்‌ ஒப்பிடக்‌ கூடாது.

3. அல்லாஹ்வின்‌ நாட்டப்படியும்‌, அவனது படைக்கும்‌ ஆற்றலினாலும்‌ மனிதனின்‌ செயல்கள்‌ நிகழ்கின்றன என்று கூறுவதுடன்‌ மனிதன்‌ எந்த செயலின்‌ மீதும்‌ நிர்ப்பந்திக்கப்பட்டவன்‌ அல்லன்‌. அவனுக்கு சுய இஷ்டமும்‌, சுய விருப்பமும்‌ உண்டு. அதன்‌ மூலமே ஒரு செயலை செய்கிறான்‌; அல்லது செய்யாமல்‌ விடுகிறான்‌. ஆகவேதான்‌ நன்மைக்கு நற்கூலியும்‌, பாவத்திற்கு தண்டனையும்‌ கொடுக்கப்படுகின்றான்‌ என்று நம்பிக்கை கொள்ள வேண்டும்‌.

4. உள்ளத்தால்‌ உறுதியுடன்‌ நம்பிக்கை (ஈமான்‌) கொள்வதுடன்‌ அமல்களும்‌ செய்ய வேண்டும்‌. பெரும்பாவம்‌ செய்வது குற்றமாகும்‌. பெரும்பாவம்‌ செய்தவர்‌ பாவியாவார்‌. அவர்‌ தவ்பா செய்யாமல்‌ இறந்து விட்டால்‌ அல்லாஹ்வின்‌ நாட்டத்திற்கேற்ப சில காலம்‌ தண்டிக்கப்படலாம்‌. பின்பு சுவர்க்கத்தில்‌ அனுமதிக்கப்படுவார்‌. அல்லது அல்லாஹ்‌, அவனது அருளால்‌ மன்னித்து நரகத்தில்‌ நுழைய வைக்காமலேயே சுவர்க்கத்தில்‌ நுழைத்துவிடலாம்‌ என்று நம்பிக்கை கொள்ள வேண்டும்‌.

5. பெரும்பாவம்‌ செய்தவர்‌ முஃமின்‌ தான்‌. ஆனால்‌ பாவியாவார்‌. ஈமானை விட்டு வெளியேறி விடவும்‌ மாட்டார்‌: காஃபிராக ஆகிவிடவும்‌ மாட்டார்‌ என்று நம்பிக்கை கொள்ள வேண்டும்‌. பாவியை பரிபூரணமான முஃமின்‌' என்றோ 'காஃபிர்‌' என்றோ கூறமாட்டோம்‌.

6. நபித்தோழர்களில்‌ நபியின்‌ குடும்பத்தாரை அவர்களுக்குரிய கண்ணியமான அந்தஸ்தில்‌ வைக்க வேண்டும்‌. அவர்கள்‌ முஃமின்கள்‌, முஸ்லிம்கள்‌, நபியின்‌ குடும்பத்தார்கள்‌, உறவினர்கள்‌ என்று அவர்களை நேசிக்க வேண்டும்‌. அவ்வாறே மற்ற நபித்தோழர்களையும்‌ அவரவர்களுக்கு மார்க்கம்‌ வழங்கியுள்ள கண்ணியத்தைக்‌ கொடுத்து அவர்களுக்கு அல்லாஹ்வின்‌ பொருத்தமும்‌, பாவ மன்னிப்பும்‌ கிடைக்க துஆவும்‌ செய்ய வேண்டும்‌.


2. கண்ணியமிக்க ஸஹாபாக்கள்‌

நபி (ஸல்‌) அவர்களின்‌ 'உம்மத்‌ - சமுதாயம்‌' மனித சமுதாயங்களில்‌ மிகவும்‌ சிறந்தது; அல்லாஹ்விடம்‌ அதிகம்‌ கண்ணியத்திற்குரியது.

“(நம்பிக்கையாளர்களே.) நீங்கள்தான்‌, மனிதர்களில்‌ தோன்றிய வகுப்பார்களிலெல்லாம்‌ மிக மேன்மையானவர்கள்‌. (ஏனென்றால்‌) நீங்கள்‌ (மனிதர்களை) நன்மையான காரியங்களைச்‌ செய்யும்படி) ஏவி, பாவமான காரியங்களிலிருந்து (அவர்களை) விலக்கி, உண்மையாகவே அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கின்றீர்கள்‌.” (ஸுரா அல இம்ரான்‌ 3 : 110)

இந்த உம்மத்தில்‌ மிகவும்‌ சிறப்புக்குரியவர்கள்‌ ஸஹாபாக்கள்‌ -நபித்தோழர்கள்‌ ஆவர்‌. அடுத்து தாபியீன்‌ - நபித்தோழர்களைப்‌ பின்பற்றியவர்கள்‌. அடுத்து அந்தத்‌ தாபியீன்களைப்‌ பின்பற்றியவர்கள்‌ ஆவர்‌. இந்த உம்மத்தில்‌ ஒரு கூட்டத்தினர்‌ மறுமைநாள்‌ வரும்‌ வரை சத்தியத்திலேயே நிலைத்திருப்பார்கள்‌. அவர்களை ஆதரிக்காதவர்களும்‌, அல்லது அவர்களை எதிர்ப்பவர்களும்‌ அவர்களுக்கு எவ்வித நஷ்டத்தையும்‌ செய்து விடமுடியாது.

கண்ணியமிகு ஸஹாபாக்களிடையே சில பிரச்சினைகள்‌ நிகழ்ந்தன. அதற்கு காரணம்‌, அவர்களது மாறுபட்ட ஆய்வாகும்‌. அந்த ஆய்வில்‌ சரியான நிலைப்டாடு கொண்டிருந்தவர்களுக்கு இரண்டு நன்மைகள்‌ உண்டு. ஆய்வில்‌ தவறிழைத்தவர்களுக்கு ஒரு நன்மை மட்டும்‌ உண்டு. அத்துடன்‌ அவர்களது தவறுகளும்‌ மன்னிக்கப்பட்டவைதாம்‌.

நபித்தோழர்களைப்‌ பற்றி அவர்களுக்குத்‌ தகுதியான வகையில்‌ உயர்வாகப்‌ பேசவேண்டும்‌. அவர்களது தவறுகளைப்‌ பற்றி நாம்‌ விமர்சனம்‌ செய்வது கூடாது. அவர்களில்‌ எவரைப்‌ பற்றியும்‌ தப்பான எண்ணம்‌ கொள்வது வஞ்சகம்‌ கொள்வது; குரோதத்தை வெளிப்படுத்துவது போன்ற தீய குணங்களிலிருந்து நாம்‌ நமது உள்ளங்களைத்‌ தூய்மைப்படுத்திக்‌ கொள்ள வேண்டும்‌.

ஏனெனில்‌, அந்த ஸஹாபிக்கள்‌ குறித்து அல்லாஹ்‌ கூறுகிறான்‌:

“உங்களில்‌ எவர்‌ (மக்காவை) வெற்றி கொள்வதற்கு முன்னர்‌ தம்‌ பொருளைச்‌ செலவு செய்து போரும்‌ புரிந்தாரோ, அவர்‌ மகத்தான பதவி உடையவர்‌. ஆகவே, அதற்குப்‌ பின்னர்‌ தன்‌ பொருளைச்‌ செலவு செய்து போர்‌ புரிந்தவர்‌ அவருக்குச்‌ சமமாகமாட்டார்‌. எனினும்‌, இவ்விருவருக்கும்‌ அல்லாஹ்‌ நன்மையையே வாக்களித்திருக்கின்றான்‌. அல்லாஹ்‌ நீங்கள்‌ செய்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கின்றான்‌.” (ஸூரா அல்ஹதீது 57 : 10)

அந்த ஸஹாபாக்கள்‌ விஷயத்தில்‌ நாம்‌ பேண வேண்டிய ஒழுக்கத்தைப்‌ பற்றி அல்லாஹ்‌ இவ்வாறு குறிப்பிடுகின்றான்‌:

“எவர்கள்‌ இவர்களுக்குப்‌ பின்‌ வந்தார்களோ அவர்கள்‌ “எங்கள்‌ இறைவனே! எங்களையும்‌ நீ மன்னித்தருள்‌! எங்களுக்கு முன்‌ நம்பிக்கை கொண்ட எங்களுடைய சகோதரர்களையும்‌ மன்னித்தருள்‌! நம்பிக்கை கொண்டவர்களைப்‌ பற்றி எங்களுடைய உள்ளங்களில்‌ குரோதங்களை உண்டு பண்ணாதே! எங்கள்‌ இறைவனே! நிச்சயமாக நீ மிகக்‌ கிருபையுடையவனும்‌ இரக்கமுடையவனுமாக இருக்கின்றாய்‌!” என்று பிரார்த்தனை செய்து கொண்டே இருக்கின்றனர்‌. (ஸூரா அல்ஹஷ்ர்‌ 59 ; 10)


3. அன்சாரிகளைவிட முஹாஜிர்களுக்கு உயர்வில்‌ முன்னுரிமை அளிக்கப்படும்‌.

முஹாஜிர்களிலும்‌, அன்ஸார்களிலும்‌ எவர்கள்‌ (இஸ்லாத்தில்‌) முதலாவதாக முந்திக்‌ (கொண்டு, நம்பிக்கை) கொண்டார்களோ அவர்களையும்‌, மனத்தூய்மையில்‌ (மெய்யாகவே) இவர்களைப்‌ பின்பற்றியவர்களையும்‌ பற்றி அல்லாஹ்‌ திருப்தி அடைகின்றான்‌. இவர்களும்‌ அல்லாஹ்வைப்‌ பற்றி திருப்தி அடைகின்றனர்‌. அன்றி, தொடர்ந்து நீரருவிகள்‌ ஓடிக்‌ கொண்டிருக்கும்‌ சுவனபதிகளை இவர்களுக்கென தயார்படுத்தி வைத்திருக்கின்றான்‌. அவற்றிலேயே அவர்கள்‌ என்றென்றும்‌ தங்கி விடுவார்கள்‌. இது மகத்தான பெரும்‌ பாக்கியமாகும்‌. (ஸுரா அத்தவ்பா 9 : 100)

மேலும்‌, பார்க்க - அல்குர்‌ஆன்‌ 9:117, 59:8,9

பத்ரு போரில்‌ கலந்து கொண்ட ஏறக்குறை 313 தோழர்களை பார்த்து “நீங்கள்‌ நாடியதைச்‌ செய்யுங்கள்‌. நிச்சயமாக நான்‌ உங்களை மன்னித்து விட்டேன்‌" என்று அல்லாஹ்‌ கூறியதை நம்பிக்கை கொள்ள வேண்டும்‌. (ஸஹீஹுல்‌ புகாரி, ஸஹீஹ்‌ முஸ்லிம்‌)

ஹுதைபிய்யாவில்‌ மரத்திற்கு கீழ்‌ நபி (ஸல்‌) அவர்களிடம்‌ பைஅத்‌ (வாக்குப்பிரமாணம்‌) செய்து கொடுத்தவர்களில்‌ எவரும்‌ இன்ஷா அல்லாஹ் ‌நரகம்‌ புகமாட்டார்‌. (முஸ்னது அஹ்மது, ஸுனனுத்‌ திர்மிதி, ஸுனன்‌ அபூதாவூத்) 

அல்லாஹ்‌ அந்த நன்மக்களைப்‌ பொருந்திக்‌ கொண்டான்‌. அவர்களும்‌ அல்லாஹ்வை பொருந்திக்‌ கொண்டார்கள்‌. (பார்க்க - அல்குர்‌ஆன்‌ 48:10,18,19) இவர்களின்‌ எண்ணிக்கை 1400க்கும்‌ அதிகமாக இருந்தது (ஸஹீஹுல்‌ புகாரி, ஸஹீஹ்‌ முஸ்லிம்‌)

நபி (ஸல்‌) அவர்கள்‌ யாருக்கு சுவர்க்கம்‌ கடமையாகி விட்டது என்று குறிப்பிட்டுக்‌ கூறினார்களோ அதையும்‌ நம்பிக்கை கொள்ள வேண்டும்‌. உதாரணம்‌, அஷரதுல்‌ முபஷ்ஷரா என்னும்‌ பத்து நபித்தோழர்கள்‌. அவர்கள்‌ அபூபக்ர்‌ (ரழி), உமர்‌ (ரழி), உஸ்மான்‌ (ரழி), அலீ (ரழி), ஸயீது இப்னு ஜைது (ரழி), ஸஃதுப்னு அபீ வக்காஸ்‌ (ரழி), அப்துர்‌.ரஹ்மான்‌ பின்‌ அவ்‌ஃப்‌ (ரழி), தல்ஹா இப்னு அப்துல்லாஹ்‌ (ரழி), ஜுபைர்‌ இப்னு அல்‌அவ்வாம்‌ (ரழி), அபூ உபைதா (ரழி). (முஸ்னது அஹ்மது, ஸுனன்‌ அபூதாவூது, ஸுனனுத்‌ திர்மிதி)

மற்றும்‌, ஸாபித்‌ இப்னு கைஸ்‌ இப்னு ஷம்மாஸ்‌ (ரழி) அவர்களும்‌ சுவனவாசியாவார்கள்‌. (ஸஹீஹுல்‌ புகாரி, ஸஹீஹ்‌ முஸ்லிம்‌)

இவ்வாறு பொதுவாகவும்‌ குறிப்பாகவும்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ தங்களது தோழர்கள்‌ விஷயத்தில்‌ கூறிய அனைத்து சிறப்புகளையும்‌ ஏற்று, நம்பிக்கைகொள்ள வேண்டும்‌.

(இது குறித்து விரிவாக அறிய ஹதீஸ்‌ நூல்களில்‌ இடம்பெற்றுள்ள “ஸஹாபாக்களின்‌ சிறப்புகள்‌” என்ற பகுதியை அவசியம்‌ படிக்கவும்‌)


4, நேர்வழி பெற்ற கலீஃபாக்கள்‌

நபித்தோழர்கள்‌ மூலம்‌ வந்திருக்கும்‌ ஏராளமான அறிவிப்புகள்‌ மிக உறுதியாக தெரிவிப்பது என்னவெனில்‌, நபி (ஸல்‌) அவர்களுக்கு பின்‌ இந்த உம்மத்தின்‌ மிகச்‌ சிறந்த மனிதர்‌ அபூபக்ர்‌ (ரழி) ஆவார்‌. அடுத்து உமர்‌ (ரழி) அவர்களாவர்‌. இது தொடர்பான நபிமொழிகள்‌ ஸஹீஹுல்‌ புகாரியில்‌ இடம்‌ பெற்றுள்ளன. இது முஸ்லிம்களின்‌ ஏகோபித்த முடிவாகும்‌. இதில்‌ எவ்வித மாற்றுக்‌ கருத்தும்‌ நேரான கொள்கையில்‌ உள்ள எவருக்கும்‌ இருக்க முடியாது.

இந்த இருவருக்கு அடுத்து மூன்றாவது உஸ்மான்‌ (ரழி) அவர்கள்‌, நான்காவது அலி (ரழி) அவர்களாவர்‌. இந்த வரிசையையே அதிகமான சான்றுகள்‌ உறுதிப்படுத்துகின்றன.

சிலர்‌, உஸ்மான்‌ (ரழி) அவர்களைவிட அலீ (ரழி) அவர்களைச்‌ சிறப்பில்‌ முன்னிலைப்படுத்துகின்றனர்‌. எனினும்‌, நபிவழியைப்‌ பின்பற்றும்‌ கூட்டத்தினர்‌ உஸ்மான்‌ (ரழி) அவர்களுக்கு அடுத்ததாகவே அலீ (ரழி) அவர்களை வரிசைப்படுத்துகின்றனர்‌. 

நபி (ஸல்‌) அவர்களுக்கு பின்‌ அவர்களது கலீஃபா அபூபக்ர்‌ (ரழி) அவர்களே ஆவார்கள்‌. அடுத்து உமர்‌ (ரழி) அடுத்து உஸ்மான்‌ (ரழி), அடுத்து அலீ (ரழி) அவர்களாவர்‌. இவர்களின்‌ கிலாஃபத்தில்‌ (இஸ்லாமிய ஆட்சியில்‌) குறை காண்பவன்‌ கழுதையைவிட கேவலமானவன்‌ ஆவான்‌.


5. நபி (ஸல்‌) அவர்களின்‌ குடும்பத்தாரை நேசிக்க வேண்டும்‌: அவர்களை ஆதரிக்க வேண்டும்‌

நபி (ஸல்‌) கூறிய “உங்களுக்கு எனது குடும்பத்தார்‌ விஷயத்தில்‌ அல்லாஹ்வை நினைவூட்டுகிறேன்‌” (ஸஹீஹ்‌ முஸ்லிம்‌) என்ற உபதேசத்தை நாம்‌ பேணி நடக்க வேண்டும்‌.

குறைஷிகள்‌ சிலர்‌ ஹாஷிம்‌ குடும்பத்தாரை வெறுக்கிறார்கள்‌ என்று அப்பாஸ்‌(ரழி) அவர்கள்‌ கூறியபோது நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌: “எனது உயிர்‌ எவன்‌ கைவசம்‌ இருக்கிறதோ அவன்‌ மீது ஆணையாகி (பனூ ஹாஷிமாகிய) உங்களை அல்லாஹ்விற்காகவும்‌ எனது உறவு முறைக்காகவும்‌ அவர்கள்‌ நேசிக்கும்‌ வரை அவர்கள்‌ முஃமின்களாக மாட்டார்கள்‌.” (முஸ்னது அஹ்மது)

நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌: “நிச்சயமாக அல்லாஹ்‌ இஸ்மாயிலின்‌ சந்ததிகளை தேர்ந்தெடுத்தான்‌. பின்பு அவர்களில்‌ 'கினானா'வைத்‌ தேர்ந்தெடுத்தான்‌. கினானாவில்‌ குறைஷிகளைத்‌ தேர்ந்தெடுத்தான்‌. குறைஷிகளில்‌ ஹாஷிம்‌ குடும்பத்தாரைத்‌ தேர்ந்தெடுத்தான்‌. ஹாஷிம்‌ குடும்பத்தாரில்‌ என்னைத்‌ தேர்ந்தெடுத்தான்‌. (ஸஹீஹ்‌ முஸ்லிம்‌, ஸுனனுத்‌ திர்மிதி)


6. நபி (ஸல்‌) அவர்களின்‌ மனைவிமாரை நம்‌ தாய்மார்களாக நேசித்து மதிக்க வேண்டும்‌

அவர்கள்‌ முஃமின்களின்‌ தாய்மார்கள்‌ ஆவார்கள்‌; பூமியில்‌ அவர்களே சிறந்த பெண்கள்‌' எனவும்‌ நாம்‌ நம்பிக்கை கொள்ள வேண்டும்‌. இவர்கள்‌ மறுமையிலும்‌ நபி (ஸல்‌) அவர்களுக்கு மனைவிகளாக இருப்பார்கள்‌. 

அவர்களில்‌ முதல்‌ அந்தஸ்து வகிப்பவர்கள்‌ கதீஜா பின்த்‌ குவைலித்‌ (ரழி) அவர்களாவர்‌. நபி ஸல்‌ அவர்களின்‌ அதிகமானப்‌ பிள்ளைகளுக்கு இவர்களே அன்னையாவார்கள்‌. நபி (ஸல்‌) அவர்களை முதலில்‌ ஈமான்‌ கொண்டு அவர்களுக்கு உதவி செய்தார்கள்‌. அவர்களுக்கு நபி: (ஸல்‌) மிகுந்த உயர்வும்‌, அந்தஸ்தும்‌ கொடுத்து வந்தார்கள்‌.

அடுத்து, அபூபக்ர்‌ ஸித்தீக்‌ ரழி அவர்களது மகளாரான ஆயிஷா ஸித்தீகா (ரழி) அவர்கள்‌ ஆவார்கள்‌. இவர்கள்‌ விஷயத்தில்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌: “பெண்களில்‌ ஆயிஷாவின்‌ சிறப்பு ஏனைய உணவைவிட ஸரீது என்ற உணவக்குரிய சிறப்பை போன்றதாகும்‌". (ஸஹீஹால்‌ புகாரி, ஸஹீஹ்‌ முஸ்லிம்‌)

நபித்தோழர்கள்‌ மீது குரோதம்‌ கொண்டுள்ள 'ஷீஆ'க்கள்‌ அன்னையவர்களை ஏசுகின்றனர்‌. இவ்விதமான அனைத்து தவறான வழிகளை விட்டு நாம்‌ முற்றிலும்‌ விலகி இருக்க வேண்டும்‌.

அவ்வாறே நபி (ஸல்‌) அவர்களின்‌ குடும்பத்தாரை ஏசி, குறை கூறிவரும்‌ கூட்டங்களின்‌ கொள்கையை விட்டும்‌ விலகியிருக்க வேண்டும்‌.

நபித்தோழர்களுக்கு மத்தியில்‌ நடந்த நிகழ்ச்சிகள்‌ குறித்து நாம்‌ மவுனம்‌ காத்து நமது நாவையும்‌ ஈமானையம்‌ பேணிக்‌ கொள்ள வேண்டும்‌.


7. நபித்தோழர்களும்‌ அவர்களைப்‌ பின்பற்றியவர்களுமே சிறந்தவர்கள்‌

நபித்தோழர்கள்‌ குறித்து தவறாக வந்திருக்கும்‌ செய்திகளில்‌ பெரும்பாலானவை பொய்யாக இருக்கின்றன. இன்னும்‌, பல செய்திகள்‌ கூடுதல்‌ குறைவுடன்‌ கூறப்படுகின்றன. இவ்வாறான செய்திகளை நாம்‌ நம்பக்‌ கூடாது.

சில செய்திகள்‌ அவர்கள்‌ குறித்து சரியான ஆதாரங்களுடன்‌ வந்துள்ளன. இது குறித்து நாம்‌ கூற வேண்டியது என்னவெனில்‌, அவர்களின்‌ ஆய்வுகளில்‌ ஏற்பட்ட‌ தவறே அதற்குக்‌ காரணம்‌. 

மேலும்‌, நபித்தோழர்களுக்கும்,‌ நபி (ஸல்‌) அவர்களுக்குமிடையில்‌ அந்தஸ்தால்‌ வேறுபாடு உள்ளது. நபி (ஸல்‌) அவர்கள்‌ பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள்‌. ஆனால்‌, நபித்தோழர்களின்‌ தன்மை அவ்வாறு அல்ல. அவர்கள்‌ மூலம்‌ பாவங்கள்‌ நிகழலாம்‌. அவ்வாறு நிகழ்ந்தால்‌ அவர்கள்‌ இஸ்லாமுக்காகச்‌ செய்த தியாகங்களின்‌ காரணமாகவும்‌, மாபெரும்‌ உதவியின்‌ காரணத்தாலும்‌ அல்லாஹ்‌ அவர்களின்‌ குற்றம்‌ குறைகளை மன்னித்து விடுவான்‌: அவர்கள்‌ செய்த நன்மைகள்‌ அவர்களின்‌ தவறுகள்‌ மன்னிக்கப்பட காரணங்களாக அமைந்துவிடும்‌.

நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌: “மனிதர்களில்‌ சிறந்தவர்கள்‌ எனது நூற்றாண்டில்‌ வாழ்பவர்கள்‌.” (ஸஹீஹால்‌ புகாரி, ஸஹீஹ்‌ முஸ்லிம்‌)

மேலும்‌, “அவர்கள்‌ ஒரு கை அளவு அல்லது அதன்‌ பகுதி அளவு செய்த தர்மம்‌ அவர்களுக்குப்‌ பின்‌ வந்தவர்கள்‌ ஒரு மலையளவு செய்யும்‌ தர்மத்தைவிட உயர்வானது", (ஸஹீஹீல்‌ புகாரி, ஸஹீஹ்‌ முஸ்லிம்‌)

ஒரு நபித்தோழர்‌ தவறு செய்து விட்டார்‌ என்ற உறுதியான செய்தி நமக்கு கிடைத்தால்‌ அது விஷயமாக நாம்‌ கூற வேண்டியது,

“அவர்‌ அந்த தவறுக்காக அல்லாஹ்விடம்‌ மன்னிப்பு கோரியிருப்பார்‌; அந்தத்‌ தவறு நடந்தப்‌ பிறகு அதை அழிக்கும்படியான நன்மைகளைச்‌ செய்திருப்பார்‌. மேலும்‌, அவர்‌ மார்க்கத்திற்காகச்‌ செய்த பணியும்‌, ஈமானை முதன்‌ முதலில்‌ ஏற்றுக்‌ கொண்ட தன்மையும்‌ அவர்‌ மன்னிக்கப்படுவதற்கு காரணமாகலாம்‌; அல்லது மறுமையில்‌ நபி (ஸல்‌) அவர்களின்‌ பரிந்துரையினால்‌ அவருக்கு மன்னிப்பு வழங்கப்படும்‌. இவ்வுலகத்தில்‌ ஏற்பட்ட சோதனை ஏதேனும்‌ ஒன்றால்‌ அந்த குற்றம்‌ மன்னிக்கப்பட்டிருக்கலாம்‌. 

ஆராய்ச்சிக்கும்‌ கருத்து வேற்றுமைக்கும்‌ உட்பட்ட விஷயங்களில்‌ நாம்‌ கூறவேண்டியது, அதில்‌ தவறு ஏற்பட்டிருந்தாலும்‌ அவர்களுக்கு ஒரு நன்மை கண்டிப்பாக உண்டு; அதில்‌ அவர்கள்‌ குற்றம்‌ பிடிக்கப்படமாட்டார்கள்‌. அந்தத்‌ தவறும்‌ மன்னிக்கப்பட்டதாகிவிடும்‌.”

சில குற்றங்கள்‌ நபித்தோழர்களில்‌ சிலரிடம்‌ இருந்ததாக வந்திருக்கும்‌ அறிவிப்புகள்‌ பற்றி நாம்‌ கூற்வேண்டியது,

“அவர்கள்‌ அக்குற்றத்திற்காக நபி (ஸல்‌) அவர்களின்‌ காலத்திலேயே தண்டிக்கப்பட்டு விட்டார்கள்‌. அந்தத்‌ தண்டனையால்‌ அவர்கள்‌ தூய்மைப்படுத்தப்பட்ட பின்‌ அதைப்‌ பற்றி நாம்‌ அவர்களைக்‌ குறை சொல்லக்‌ கூடாது. மேலும்‌, அவர்கள்‌ செய்த நன்மைகளோ ஏராளமாகும்‌. இஸ்லாமின்‌ தொடக்கத்திலேயே அல்லாஹ்வையும்‌ அவன்‌ தூதரையும்‌ ஈமான்‌ கொண்டு அல்லாஹ்வின்‌ பாதையில்‌ தங்களது உயிர்‌, பொருளை அர்ப்பணித்துள்ளார்கள்‌;

அல்லாஹ்வுக்காக தங்களது ஊரையும்‌ தியாகம்‌ செய்தார்கள்‌. மார்க்கத்தை தாங்களும்‌ கற்று நற்செயல்‌ செய்து பிறருக்கும்‌ அதை எடுத்துரைத்தார்கள்‌.

அவர்களின்‌ வரலாறையும்‌ அல்லாஹ்‌ அவர்களுக்கு அளித்த சிறப்பியல்புகளையும்‌ ஆய்வு செய்பவர்கள்‌ “மனித சமுதாயத்தில்‌ அல்லாஹ்வின்‌ தூதர்களுக்கு அடுத்ததாக இவர்களே மிகச்‌ சிறந்தவர்கள்‌: இந்த உம்மத்திலும்‌ அவர்களே உயர்ந்தவர்கள்‌, அல்லாஹ்விடமும்‌ மிக கண்ணியத்திற்குரியவர்கள்‌” என்ற முடிவுக்கு வருவார்கள்‌.

அஹ்லுஸ்‌ ஸுன்னத்‌ வல்‌ ஜமாஅத்தின்‌ அடிப்படைகளில்‌ ஒன்று அல்லாஹ்‌, அவனுடைய நேசர்களுக்கு வழங்கும்‌ அற்புதத்தை நம்புவதாகும்‌. பொதுவாக மக்களுக்கு தெரியாதவற்றை அவர்கள்‌ அறிந்து கொள்வார்கள்‌. பொதுமக்கள்‌ ஆற்றல்‌ பெறாத காரியத்தை அவர்கள்‌ செய்து காட்டுவார்கள்‌. இதுபோன்ற நிகழ்வுகள்‌ நபித்தோழர்களிடமும்‌ ஏற்பட்டன; தாபிஃகளிடமும்‌ ஏற்பட்டன.
மறுமை நாள்‌ வரை வரும்‌ இறையச்சம்‌ மிகுந்த ஒவ்வொரு முஃமினிடமும்‌ இவ்வாறான நிகழ்வுகள்‌ ஏற்படலாம்‌.

நபி (ஸல்‌) அவர்களின்‌ உள்ரங்கமான, வெளிரங்கமான செயல்கள்‌ அனைத்தையும்‌ பின்பற்ற வேண்டும்‌. இவ்வாறே நபித்தோழர்களான முஹாஜிர்கள்‌, அன்சாரிகள்‌ சென்ற வழியிலே செல்ல வேண்டும்‌. இது குறித்து நபி (ஸல்‌) அவர்கள்‌ நமக்கு செய்த உபதேசத்தை உறுதியாகப்‌ பின்பற்ற வேண்டும்‌.

நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌: “நீங்கள்‌ எனது வழிமுறையையும்‌ எனக்குப்பின்‌ நேர்வழி பெற்ற உயர்ந்த, அறிவுடைய எனது கலீஃபாக்களின்‌வழிமுறையையும்‌ உறுதியாகக்‌ கடைப்பிடியுங்கள்‌; அதை உறுதியுடன்‌ பின்பற்றுங்கள்‌. அதனை விட்டு ஒருபோதும்‌ விலகி விடாதீர்கள்‌. புதிய காரியங்களை (பித்‌அத்தை) விட்டு விலகிக்‌ கொள்ளுங்கள்‌. ஒவ்வொரு புதிய அனுஷ்டானங்களும்‌ வழிகேடாகும்‌. (முஸ்னது அஹ்மது ஸுனன்‌ அபூ தாவூது, ஸனைனுத்‌ திர்மிதி)

அல்லாஹ்வின்‌ கிதாபே மிக உண்மையான பேச்சாகும்‌; வழிமுறைகளில்‌ முஹம்மது (ஸல்)‌ அவர்களின்‌ வழிமுறையே மிக சிறந்தது என்று நாம்‌ உறுதி கொள்ள வேண்டும்‌

மனிதர்களின்‌ பேச்சைவிட அல்லாஹ்வின்‌ பேச்சுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும்‌. மற்றெல்லா வழிமுறைகளைவிடவும்‌ முஹம்மது (ஸல்‌) அவர்களின்‌ வழிமுறைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்‌.

இந்தத்‌ தன்மையும்‌, இந்தக்‌ கொள்கையும்‌ உடையவர்களுக்கு அஹ்லுல்‌ கிதாபி வஸ்ஸுன்னாஹ்‌ (குர்‌ஆனையும்‌ நபிவழியையும்‌ பின்பற்றுபவர்கள்‌),(அல்குர்‌ஆன்‌, நபிவழியுடன்‌) (அஹ்லுல்‌ ஜமாஅஹ்‌) நபித்தோழர்களை(யும்‌) பின்பற்றுபவர்கள்‌ என்று பெயர்‌ கூறப்படும்‌.

நபித்தோழர்களின்‌ ஏகோபித்த முடிவை ஏற்றுக்‌ கொள்ள வேண்டும்‌. குர்‌ஆன்‌. நபிமொழி, நபித்தோழர்களது ஏகோபித்த கருத்து ஆகிய மூன்றும்‌ ஆதாரங்களாக ஏற்றுக்‌ கொள்ளப்படும்‌. மனிதர்களின்‌ அனைத்து செயல்களையும்‌, கோட்பாடுகளையும்‌ இம்மூன்றைக்‌ கொண்டே நிறுத்துப்‌ பார்த்து, இம்மூன்றுக்கு உட்பட்டதை ஏற்றுக்‌ கொண்டு, இம்மூன்றுக்கு உட்படாததை மறுத்துவிட வேண்டும்‌. 

இவர்களுக்கு பின்‌ கருத்து வேற்றுமை அதிகமாக தோன்றிவிட்டதால்‌ இதற்கு பின்னுள்ளவர்களிடம்‌ 'இஜ்மா' (ஒரே முடிவு) என்பது ஏற்பட வாய்ப்பில்லாமல்‌ ஆகிவிட்டது.

இதுவரை கூறட்பட்ட குர்‌ஆன்‌, ஹதீஸின்‌ போதனைகளை ஏற்றுக்‌ கொண்டு, அல்லாஹ்‌ நம்மீது கடமையாக்கியுள்ள நன்மையை மக்களுக்கு ஏவுவது; தீமையிலிருந்து தடுப்பது என்ற பணியையும்‌ செய்ய வேண்டும்‌. 

முஸ்லிம்‌ ஆட்சியாளர்களுக்கு கட்டுப்பட்டு அவர்களுடன்‌ ஹஜ்‌, ஜிஹாது, ஜுமுஆ, ஈத்‌ தொழுகை என்ற அனைத்து கடமைகளையும்‌ நிறைவேற்ற வேண்டும்‌.

அவர்கள்‌ நல்லவர்களாக அல்லது பாவம்‌ புரிபவர்களாக இருப்பினும்‌ கடமைகளை நிறைவேற்றுவதில்‌ அவர்களைவிட்டுப்‌ பிரிந்துவிடக்‌ கூடாது.

ஐங்கால தொழுகைகளை மஸ்ஜிதுகளில்‌ ஜமாஅத்துடன்‌ நிறைவேற்ற வேண்டும்‌. சமுதாயத்திற்கு எந்நேரமும்‌ நன்மையை நாட வேண்டும்‌. நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறியபடி தோழமையுடனும்‌, நேசத்துடனும்‌ சமுதாயத்தில்‌ ஒன்றுபட்டு வாழ வேண்டும்‌. .

ஒரு முஃமின்‌ மற்ற முஃமினுக்கு கட்டடத்தை போன்றவராவார்‌. கட்டடத்தின்‌ ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு உறுதி சேர்க்கிறது. (அதுபோல்‌ முஃமின்கள்‌ ஒருவருக்கொருவர்‌ உறுதுணை மிக்கவர்களாக இருக்க வேண்டும்‌) நபி (ஸல்‌) அவர்கள்‌ தங்களது விரல்களை ஒன்றோடு ஒன்று இணைத்து காட்டினார்கள்‌. (ஸஹீஹுல்‌ புகாரி, ஸஹீஹ்‌ முஸ்லிம்‌)

மூஃமின்கள்‌ தங்களுக்குள்‌ அன்போடும்‌, நேசத்தோடும்‌, கருணையோடும்‌ இணைந்திருப்பதற்கு உதாரணம்‌ ஒர்‌ உடலைப்‌ டோன்றதாகும்‌. ஓர்‌ உறுப்புக்கு வலி ஏற்பட்டால்‌ மற்ற உடல்‌ உறுப்புகளும்‌ இதற்காக விழித்து, உடல்‌ நலக்‌ குறைவை முறையிடுகின்றன. (ஸஹீஹுல்‌ புகாரி, ஸஹீஹ்‌ முஸ்லிம்‌)

சோதனைக்‌ காலங்களில்‌ பொறுமை காக்கவும்‌ வசதி ஏற்படும் போது நன்றி செலுத்தவும்‌ விதியைப்‌ பொருந்தி கொள்ளவும்‌ சமுதாயத்திற்கு உபதேசித்து வர வேண்டும்‌.

மேலும்‌ மக்களுக்கு நற்குணங்களைக்‌ கடைப்பிடிக்கவும்‌, நற்செயல்கள்‌ புரியவும்‌ அழைப்பு கொடுக்க வேண்டும்‌.

நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறியதை வாழ்வில்‌ கடைப்பிடிக்க வேண்டும்‌. முஃமின்களில்‌ முழுமை அடைந்தவர்கள்‌ யாரெனில்‌, அவர்களில்‌ குணத்தால்‌ மிக அழகானவரே (முஸ்னது அஹ்மது, ஸுனனுத்‌ திர்மிதி)

மேலும்‌, உறவினர்களுடன்‌ சேர்ந்து வாழ வேண்டும்‌; அவர்கள்‌ விலகினாலும்‌ சரியே! தனக்கு கொடுக்காதவருக்கும்‌ கொடுத்து வாழ வேண்டும்‌; அநியாயம்‌ செய்தவரை மன்னித்து வாழ வேண்டும்‌ என்றும்‌ மக்களுக்கு ஆர்வமூட்ட வேண்டும்‌.

பெற்றோர்களுக்கு உபகாரம்‌ செய்ய வேண்டும்‌; உறவுகளுடன்‌ சேர்ந்து வாழ வேண்டும்‌; அண்டை வீட்டாருடன்‌ அழகிய முறையில்‌ நடந்து கொள்ள வேண்டும்‌: அனாதைகளுக்கும்‌ ஏழைகளுக்கும்‌ வழிப்போக்கர்களுக்கும்‌ உதவ வேண்டும்‌. இந்தப்‌ பண்புகளை மக்களுக்கு ஏவ வேண்டும்‌. 

பெருமை, தற்பெருமை, அழிச்சாட்டியம்‌, படைப்பினங்கள்‌ மீது அத்துமீறி அக்கிரமம்‌ புரிவது, கலகம்‌ விளைவிப்பது ஆகியவற்றை விட்டு தாமும்‌ விலகி மக்களையும்‌ தடுத்திட வேண்டும்‌.

உயர்ந்த பண்புகளை மக்களுக்கு ஏவி, கெட்ட பண்புகளிலிருந்து மக்களைத்‌ தடுக்க வேண்டும்‌.

இவை அனைத்து விஷயங்களிலும்‌ நாம்‌ அல்லாஹ்வின்‌ கிதாபையும்‌, (குர்‌ஆனையும்)‌, தூதர்‌ முஹம்மது (ஸல்‌) அவர்களின்‌ வழியையும்‌ பின்பற்றி இருக்கிறோம்‌.

நமது வழியே அல்லாஹு தஆலா முஹம்மது (ஸல்‌) அவர்களுக்கு வழங்கிய இஸ்லாமிய மார்க்கத்தின்‌ வழியாகும்‌.

நபி (ஸல்)‌ அவர்கள்‌ முன்னறிவிப்பு செய்திருக்கிறார்கள்‌, “இந்தச்‌ சமுதாயம்‌ 73 கூட்டங்களாகப்‌ பிரியும்‌. அதில்‌ ஒரு கூட்டத்தை தவிர மற்ற அனைத்து கூட்டங்களும்‌ நரகத்திற்குச்‌ சென்றுவிடுவார்கள்‌. (சுவர்க்கத்திற்குச்‌ செல்லும்‌) அந்த ஒரு கூட்டம்‌ (எது என்றால்‌) இன்று நானும்‌ என்னுடைய தோழர்களும்‌ எந்த வழியில்‌ இருக்கிறோமோ அதே வழியில்‌ இருப்பவர்களே ஆவார்கள்‌. (முஸ்னது அஹ்மது, ஸுனன்‌ அபூதாவூது

எந்த வகையிலும்‌ கலப்பற்ற முறையில்‌ கூடுதல்‌ குறைவின்றி தூய்மையான இஸ்லாமிய மார்க்கத்தைப்‌ பின்பற்றி வாழ்பவர்கள்‌ அஹ்லுஸ்‌ ஸுன்னத்‌ வல்‌ ஜமாஅத்தினர்தாம்‌. இவர்கள்‌ நபிவழியையும்‌ நபித்தோழர்களையும்‌ பின்பற்றி வாழ்பவர்கள்‌. இவர்களில்தாம்‌ 'ஸித்தீக்‌' என்ற வாய்மையாளரும்‌, 'ஷஹீது' என்ற மார்க்கத்‌ தியாகிகளும்‌, 'ஸாலிஹ்‌' என்ற சான்றோர்களும்‌ இருக்கின்றனர்‌.

நேர்வழியைப்‌ பரப்பி, மக்களை இருளிலிருந்து வெளிச்சத்திற்குக்‌ கொண்டு வந்த சிறப்பிற்குரிய அறிஞர்களும்‌ இவர்களில்‌ இருக்கின்றனர்‌. முஸ்லிம்களின்‌ ஏகோபித்த முடிவின்படி நேர்வழி பெற்ற இமாம்களும்‌ இவர்களில்தாம்‌ இருக்கின்றனர்‌. இவர்களே மறுமை நாள்வரை அல்லாஹ்வின்‌ உதவிக்கு உரியவர்கள்‌. இவர்கள்‌ குறித்தே பின்வரும்‌ நபிமொழி அமைந்திருக்கின்றது.

நபி (ஸல்)‌ அவர்கள்‌ கூறினார்கள்‌: “என்னுடைய உம்மத்தில்‌ ஒரு கூட்டம்‌ உண்மையின்‌ மீது நிலைத்து உறுதியாக இருப்பார்கள்‌. அவர்கள்‌ உதவியளிக்கப்படுவார்கள்‌. அவர்களுக்கு முரண்படுபவரும்‌ அவர்களுக்கு உதவி செய்யாதவர்களும்‌ அவர்களுக்கு எவ்வித இடையூறும்‌ மறுமை வரை செய்திட முடியாது. (ஸஹீஹுல்‌ புகாரி, ஸஹீஹ்‌ முஸ்லிம்‌)

அல்லாஹ்‌ நம்மை அக்கூட்டத்தில்‌ ஆக்கிடுவானாக! அவன்‌ நமக்கு நேர்வழி காட்டியப்‌ பின்‌ நமது உள்ளங்களைக்‌ கோணலாக்காதிருப்பானாக அவன்‌ புறத்திலிருந்து அளவற்ற அருளைப்‌ பொழிவானாக!

நிச்சயமாக அவனே வாரி வழங்கும்‌ வள்ளலாவான்‌. அல்லாஹ்வே மிக அறிந்தவன்‌.

அல்லாஹ்‌ நமது நபி முஹம்மது (ஸல்‌) அவர்கள்‌ மீதும்‌, அவர்களுடைய குடும்பத்தார்கள்‌, தோழர்கள்‌ மீதும்‌ ஸலவாத்தும்‌ அதிகமதிகம்‌ ஸலாமும்‌ அருள்வானாக

(முற்றும்)





தாருல்‌ ஹுதா - ஓர்‌ அறிமுகம்‌:

எல்லாப்‌ புகழும்‌ அகிலங்களின்‌ இறைவன்‌ அல்லாஹ்‌ ஒருவனுக்கே! இறையருளும்‌ ஈடேற்றமும்‌ நபி முஹம்மது (ஸல்‌) அவர்களுக்கும்‌, அவர்களது குடும்பத்தார்‌, தோழர்கள்‌, அவர்களைப்‌ பின்பற்றும்‌ அனைவருக்கும்‌ உண்டாகட்டும்‌!

இஸ்லாமியச்‌ சகோதர சகோதரிகளே!

அஸ்ஸலாமு அலைக்கும்‌ வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

தாருல்‌ ஹுதாவை அறிமுகம்‌ செய்வதன்‌ வாயிலாக உங்களைச்‌ சந்திப்பதில்‌ பெரிதும்‌ மகிழ்ச்சி அடைகிறோம்‌. இதில்‌ தாருல்‌ ஹுதாவின்‌ நோக்கத்தையும்‌ அதன்‌ பணிகளையும்‌ விவரிப்பதுடன்‌ அதன்‌ இன்றைய தேவையையும்‌ தங்கள்‌ முன்‌ வைக்கிறோம்‌.

அல்லாஹு தஆலா கூறுகிறான்‌:

“நம்பிக்கை கொண்ட அண்களும்‌, நம்பிக்கை கொண்ட பெண்களும்‌ (தங்களுக்குள்‌) ஒருவருக்கொருவர்‌  உற்ற துணைவர்களாவர்‌. அவர்கள்‌, (ஒருவர்‌ மற்றவரை) தன்மைசெய்யும்படித்‌ தூண்டியும்‌, பாவம்‌ செய்யாது தடுத்தும்‌, தொழுகையைக்‌ கடைப்பிடித்து, ஸகாத்து கொடுத்தும்‌ வருவார்கள்‌. அல்லாஹ்வுக்கும்‌, அவனுடைய தூதருக்கும்‌ கட்டுப்பட்டு நடப்பார்கள்‌. இத்தகையவர்களுக்கு அதி சீக்கிரத்தில்‌ அல்லாஹ்‌ அருள்புரிவான்‌. நிச்சயமாக, அல்லாஹ்‌ மிகைத்தவனாகவும்‌, ஞானமுடையவனாகவும்‌ இருக்கின்றான்‌.” (ஸுரா அத்தவ்பா 9 : 71)

(நம்பிக்கையாளர்களே!) உங்களில்‌ ஒரு கூட்டத்தார்‌ (மனிதர்களை) சிறந்ததின்‌ பக்கம்‌ அழைத்து நன்மையைச்‌ செய்யும்படி. ஏவி, பாவமான காரியங்களிலிருந்து அவர்களை விலக்கிக்‌ கொண்டும்‌ இருக்கட்டும்‌. இத்தகையவர்கள்‌ தாம்‌ வெற்றி பெற்றவர்கள்‌.(ஸுரா அலுஇம்ரான்‌ 3 : 104)

நபி (ஸல்‌! அவர்கள்‌ கூறினார்கள்‌: “உங்களில்‌ யாராவது ஒரு தவறைக்‌ கண்டால்‌ அதைத்‌ தமது கரத்தால்‌ மாற்றட்டும்‌. அது இயலாவிட்டால்‌ தமது நாவால்‌ மாற்றட்டும்‌. அதுவும்‌ இயலாவிட்டால்‌ உள்ளத்தால்‌ (வெறுத்து விலகி விடட்டும்‌). இது ஈமானின்‌ (நம்பிக்கையின்‌) குறைந்தபட்ச அளவாகும்‌.” (ஸஹீஹ்‌ முஸ்லிம்‌)

மேலும்‌ கூறினார்கள்‌: “நம்பிக்கையாளர்கள்‌ தங்களிடையே நேசம்‌ கொள்வதற்கும்‌, கருணை காட்டுவதற்கும்‌, அன்பு செலுத்துவதற்கும்‌ உதாரணம்‌ ஓர்‌ உடலைப்போல. உடலில்‌ ஏதேனும்‌ ஓர்‌ உறுப்பு பாதிக்கப்பட்டால்‌ அனைத்து உறுப்புகளும்‌ காய்ச்சல்‌ மற்றும்‌ தூக்கமின்மையால்‌ முறையிடுகின்றன.” (ஸஹீஹுல்‌ புகாரி)

இன்று நமது சமுதாயத்தில்‌ சிறியோர்‌ முதல்‌ பெரியோர்‌ வரை பெரும்பாலோர்‌ சரியான மார்க்க ஞானத்திற்கும்‌ முறையான வழிகாட்டலுக்கும்‌ அதிகம்‌ தேவையுள்ளவர்களாக இருப்பதைப்‌ பார்க்கிறோம்‌. ஆகவே, மேற்கூறப்பட்ட இறை வசனங்கள்‌ மற்றும்‌ நபிமொழிகளுக்கிணங்க சமுதாயச்‌ சீர்திருத்தப்‌ பணியில்‌ ஈடுபடுவது மார்க்கக்‌ கடமை என்பதை உணர்ந்து, அல்குர்‌ஆன்‌ மற்றும்‌ நபிவழியின்‌ அடிப்படையில்‌ அந்த உயர்ந்த பணியை நிறைவேற்றி இறை திருப்தியை அடைய வேண்டும்‌ என்ற தூய எண்ணத்தில்‌ தொடங்கப்பட்டதுதான்‌ “தாருல்‌ ஹுதா”

தாருல்‌ ஹுதாவின்‌ பணிகளும்‌ தொண்டுகளும்‌:

அழைத்தல்‌: 

இதுவே இஸ்லாமின்‌ அடிப்படையாகும்‌. உலகில்‌ இப்பணி இறைத்தூதர்கள்‌ வாயிலாக நிலைநிறுத்தப்பட்டது. இறுதி இறைத்தூதர்‌ முஹம்மது (ஸல்‌) அவர்களுக்குப்‌ பின்‌ அவர்களுடைய சமுதாயத்தினர்‌ அனைவரின்‌ மீதும்‌ இப்பணி கடமையாக்கம்பட்டது. மேன்மைமிகு குர்‌ஆனும்‌, சிறப்புமிகு நபிமொழியும்‌ இதன்‌ அவசியத்தை வலியுறுத்துகின்றன. எனவே, இயன்ற அளவு அனைத்து வழிகளிலும்‌ மனித சமுதாயத்திற்கு இஸ்லாமை அறிமுகப்படுத்துவதும்‌ அதன்‌ உயர்வுகளை விளக்கிச்‌ சொல்லி அதன்‌ பக்கம்‌ அழைப்பதும்‌ தாருல்‌ ஹுதாவின்‌ முதல்‌ பணியாகும்‌.

கற்பித்தல்‌: 

இஸ்லாமை அறிய விரும்பும்‌ சிறுவர்கள்‌, வாலிபர்கள்‌, முதியவர்கள்‌, ஆண்கள்‌, பெண்கள்‌ என அனைவருக்கும்‌ மேன்மைமிகு குர்‌ஆன்‌, சிறப்புமிகு நபிமொழிகளை அவரவர்‌ தகுதிக்கேற்ப கற்றுத்‌ தருவது தாருல்‌ ஹுதாவின்‌ இரண்டாவது பணியாகும்‌.

நூல்‌ வெளியிடுதல்‌:

மேன்மைமிகு குர்‌ஆன்‌, சிறப்புமிகு நபிமொழி இரண்டையும்‌ அடிப்படையாகக்‌ கொண்டு சமுதாயப்‌ பேரறிஞர்களால்‌ அரபி மொழியில்‌ எழுதப்பட்ட நூற்களைத்‌ தமிழிலும்‌ ஏனைய உலக மொழிகளிலும்‌ மொழியாக்கம்‌ செய்து, அந்நூற்களைச்‌ சலுகை விலையில்‌ மக்களுக்கு வழங்குவது தருல்‌ ஹுதாவின்‌ மூன்றாவது பணியாகும்‌.

உதவுதல்‌:

அல்லாஹு தஆலாவே அனைவரின்‌ தேவைகள்‌, துன்பங்கள்‌ அனைத்தையும்‌ நிவர்த்தி செய்பவன்‌. மிகப்‌ பெரிய வள்ளலாகிய அல்லாஹ்‌ தன்‌ சார்பாக உலகில்‌ ஏழை, எளியோர்‌, நலிந்தோர்‌ ஆகியோரின்‌ துயர்‌ துடைக்கும்‌ வள்ளல்‌ பெருமக்களுக்கு பெரும்‌ வெகுமதிகளை ஈருலகிலும்‌ வழங்குவதாக வாக்களித்துள்ளான்‌. பிறர்‌ துன்பங்களில்‌ பங்கெடுப்பது, பிறர்‌ தேவைகளை நிறைவேற்ற இயன்றவரை உதவுவது முஸ்லிம்களுடைய அடிப்படைப்‌ பண்புகளாகும்‌.

இந்த உன்னத பணிக்காக 'பைத்துல்மால்‌' (பொது நிதி) ஏற்பாடு செய்து இரக்கச்‌ சிந்தையும்‌, மார்க்கப்பற்றும்‌ கொண்ட வள்ளல்‌ பெருமக்‌ களிடமிருந்து கடமையான, உபரியான தர்மங்களைப்‌ பெற்று அவற்றை தேவையுடையவர்களுக்கு வழங்குதல்‌ தாருல்‌ ஹுதாவின்‌ நான்காவது பணியாகும்‌.

இந்தப்‌ பணிகள்‌ மட்டுமின்றி, இஸ்லாம்‌ முழுமையாக ஒவ்வொருவரின்‌ வாழ்விலும்‌ வரவேண்டும்‌ என்பதற்காகவும்‌, மனித சமுதாயங்களுக்குள்‌ நல்லுறவும்‌, அன்பும்‌, கருணையும்‌, சமூகப்‌ புரிந்துணர்வும்‌ ஏற்பட வேண்டும்‌ என்பதற்காகவும்‌ இயன்றவரை அல்லாஹ்வுக்காகத்‌ தொண்டாற்ற வேண்டும்‌ என்பது தாருல்‌ ஹுதாவின்‌ குறிக்கோளாகும்‌.

இப்பணிகள்‌ அனைத்தும்‌ தொய்வின்றி தொடர்ந்து சிறப்பாக, திறம்பட நடைபெறவும்‌, அவற்றை அல்லாஹ்‌ அங்கீகரிக்கவும்‌, தாங்கள்‌ துஆ செய்யும்படி அன்புடன்‌ கேட்டுக்‌ கொள்வதுடன்‌, தங்களால்‌ இயன்றவரை இப்பணிகளில்‌ பங்குபெறுமாறும்‌ அழைக்கிறோம்‌.

மேற்கூறப்பட்ட பணிகளை விசாலப்படுத்தவும்‌ மேன்மேலும்‌ அவற்றைச்‌ சிறப்புடன்‌ நிறைவேற்றவும்‌ தாருல்‌ ஹுதாவிற்காக கீழ்க்காணும்‌ அடிப்படை வசதிகள்‌ தேவைப்படுகின்றன:

அதாவது, பள்ளிவாசல்‌, வகுப்பறைகள்‌, மிகப்பெரிய பொது நூலகம்‌, மொழி பெயர்ப்புப்‌ பணிகளுக்குரிய அறைகள்‌. மாநாடுகள்‌, கருத்தரங்கங்கள்‌ நடத்த சகல வசதிகளுடன்‌ கூடிய வளாகம்‌, மார்க்கக்‌ கல்விகள்‌ மூழுநேர வகுப்புகளாக நடத்துவதற்குத்‌ தேவையான கல்வி நிலையம்‌, மாணவர்கள்‌, விருந்தாளிகள்‌, ஊழியர்கள்‌ தங்குவதற்குரிய விடுதிகள்‌, புத்தக விற்பனை நிலையம்‌, பல மொழிகளில்‌ இஸ்லாமிய நூற்கள்‌ வெளியிடுவதற்குரிய மூலதனம்‌.. மாதாந்தரச்‌ செலவுகளைப்‌ பூர்த்தி செய்வதற்குரிய வசதிகள்‌ போன்ற தேவைகள்‌ உள்ளன.

நல்லுள்ளம்‌ கொண்ட மேன்மக்களே! நீங்கள்‌ கொடுக்கும்‌ தர்மங்கள்‌ அல்லாஹ்வின்‌ மார்க்கத்தைப்‌ பரப்புவதற்கு நிச்சயம்‌ பேருதவியாக இருக்கும்‌ என்பதை மறந்து விடாதீர்கள்‌.

உங்களால்‌ முடிந்த அளவு பங்குகொண்டு ஈருலக நற்பேறுகளை அடைந்து கொள்ளுங்கள்‌! மார்க்கத்திற்காகக்‌ கொடுக்கப்படும்‌ தர்மங்களுக்குச்‌ சிறப்புகளும்‌ நன்மைகளும்‌ ஏராளம்‌ உள்ளன என்பது உங்களுக்குத்‌ தெரிந்ததே! முடிந்த உதவிகளை மறுமையின்‌ வீட்டை நாடி, அல்லாஹ்வின்‌ பொருத்தத்திற்காக தந்துதவுங்கள்‌.

“நீங்கள்‌ உங்கள்‌ ஆன்மாக்களுக்காக நன்மையில்‌ எதை முற்படுத்திக்‌ கொள்கிறீர்களோ, அதைத்தான்‌ அல்லாஹ்விடத்தில்‌ மிகச்‌ சிறந்ததாகவும்‌, மகத்தான கூலியாகவும்‌ பெற்றுக்‌ கொள்வீர்கள்‌.” (ஸுரா அல்முஸம்மில்‌ 73 : 20)

பேராற்றலுடைய அல்லாஹ்‌ இந்த நல்ல திட்டங்களை நிறைவேற்றித்தர போதுமானவன்‌! அவனிடமே உதவி தேடுகிறோம்‌! அவனையே முன்னோக்கி திற்கிறோம்‌!

தாருல்‌ ஹுதாவின்‌ வெளியீடுகள்‌ தமிழில்‌:

1. முன்மாதிரி முஸ்லிம்‌

2. அலட்சியமாகக்‌ கருதப்படும்‌ ஆபத்தான குற்றங்கள்‌

3. தர்ஜமதுல்‌ குர்‌ஆன்‌ பி அல்தஃபில்‌ பயான்‌

4. சங்கைமிகு குர்‌ஆன்‌ & சிறப்புமிகு தமிழாக்கம்‌

5. தடுக்கப்பட்டவை

6. ரஹீக்‌

7. இயற்கை மதம்‌

8. தஃலீமுல்‌ குர்‌ஆன்‌

9. இறுதிப்‌ பேருரை

10. நம்பிக்கையின்‌ அடிப்படைகள்‌

11. முன்மாதிரி முஸ்லிம்‌ குடும்பம்‌

12. 1000 ஸுன்னத்துகள்‌

13. ஹிஸ்னுல்‌ முஸ்லிம்‌

14. பிரார்த்தனை

15. இறைநெறி கூறும்‌' இயற்கைக்‌ கடமைகள்‌



Darul Huda Publications in English:

1. Problems and Solutions 

2. Prohibited 

3. Woman and her Husband 

4. Hasband and his Wife 

5. Ways of developing inner fear in prayer 

6. Dangers that threaten the home 

7. 40 Guidelines for reforming the home 

8. What you should do in such situations?

9. How Islam touched their hearts?

10. Speeches for an inquiring mid

11. Historical sites of Madina Munawwara

12. Reminders 

13. What must be known about Islam 

14. The book of Tawheed

15. Explanation of Ayat Alkurshi

16. Funeral Rites in Islam 

17. The True Message of Jesus Christ 



உருது வெளியிடுகள்‌:

1. ஷாயத்‌ கே தேரே தில்மே

2. ஹம்னே இஸ்லாம்‌ கய்ஸே கபூல்‌ கியா

3 மதீனா முனவ்வரா

4. அஹ்லே ஃபிக்ர்‌ கே லியே யாத்‌ திஹானி

Previous Post Next Post