புஹாரியில் வருகின்ற அறிவிப்பின் படி ஆட்சியாளர்களிடம் தெளிவான குப்ரை காணாதவரை அவர்களுக்கெதிராக போராடுவதை நபிகளார் தடுத்துள்ளார்கள்.
முஸ்லிம் நாடொன்றில் தெளிவான குப்ரை ஆட்சியாளரிடம் நாம் காணதபோது அவருக்கெதிராக புரட்சி செய்வதோ கிளர்ந்தெழுவதோ மார்க்கம் தடை செய்த ஒன்றாகும் இந்த பின்னணியோடு பின்வரும் நபிமொழியையும் நோக்குவோம்.
முஸ்லிமின் அறிவிப்பில் ஒரு பாவத்தைக் கண்டால் கையால் வாயால் மனதால் என தமது சக்திக்கு ஏற்ப அதனை தடுக்கும் மூன்று படித்தரங்களை நபிகளார் குறிப்பிட்டுள்ளார்கள்..
சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப இதில் எது ஒருவருக்கு முடியுமோ அதனை செயல்படுத்தினால் அவர் தனது கடமையை நிறைவேற்றி விட்டார் என்பதுவே பொருளாகும், அப்படியிருக்க சவுதி அரசின் சில முடிவுகளை ஸலப் அறிஞர்களும் மேற்சொன்ன தமக்கு முடியுமான நிலையில் தடுத்திருக்கவோ அக்காரியத்தையோ வெறுத்திருக்கவோ முடியும் அது அவர்களது தனிப்பட்ட நிலைப்பாடு நாம் அவர்களது உள்ளங்களைத் தோண்டிப் பார்த்து பத்வா வழங்க வேண்டிய எந்த அவசியமும் எமக்கு இல்லை.
அடுத்து சவுதி அரசியல் என்பது வேறு, ஸலபி அகீதா என்பது வேறு.. இரண்டையும் சரியாக புரிந்து கொள்ளாது சவுதி அரசியலை விமர்சிக்கப் போய் நபிகளாரினால் நேரடியாக பயிற்றுவிக்கப்பட்ட ஸஹாபாக்கள் தாபிஈன்களினால் இந்த சமூகத்தை வந்தடைந்த தூய அகீதாவை கொச்சைப்படுத்துவதோ இதுவரை இஸ்லாமிய உலகில் அறியப்படாத மூன்றாம் தர மக்களின் பாசையில் இவ்வகீதாவை கொச்சைப்படுத்த பயன்படுத்தப்படும் வஹ்ஹாபிஸம் என்று பிரயோகிப்பதோ இஸ்லாத்தையும் அஹ்லுஸ் ஸுன்னா அறிஞர்களையும் கொச்சைப்படுத்துவதற்கு சமமானதாகும்.
ஸலபி அகீதாவின் ஸ்தாபகர் ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யாவோ இமாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபோ
கிடையாது, இதனை தைமிஸம் என்றோ வஹாபிஸம் என்றோ அழைப்பது மட்டரகமானவர்களின் வழிமுறையாகும்.
இந்த அகீதா தூய்மையானது இதனை கொள்கையாகக் கொண்டவர்கள் செய்யும் சிலரது தவறுகளுக்காக இவ்வகீதாவோடு இணைத்து ஆட்சியாளர்களையும் ஸலபிச அறிஞர்களையும் தூற்றுவதோ விமர்சிப்பதோ சுத்த வழிகேடாகும்.
சவுதி அரசியல் வாதிகள் ஸலபி அகீதாவையுடையவர்களாக இருப்பதனால் ஸலபி அறிஞர்கள் தான் சவுதியை ஆட்சி செய்கிறார்கள் என்றெண்ணி ஸலப் அறிஞர்களையும் சவுதி ஆட்சியாளர்களையும் இணைத்து பொத்தம் பொதுவாக விமர்சிப்பதுவும் பொருத்தமற்றதே..
சவுதி அறிஞர்கள் அரசாங்கத்துக்கு வால் பிடிப்பவர்கள் என்பது அப்பட்டமான ஓர் அவதூறு, மன்னர் பஹத் ஒரு முறை அமேரிக்கா சென்ற விடயத்தை அறிந்த அல்லாமா பின் பாஸ் அவர்கள் "இத்தகில்லாஹ் யா பஹத்" பஹதே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் என்று எச்சரித்த வரலாறு அறியப்பட்டதே.. இது மிகப்பெரிய ஜிஹாத் என்பதுவும் நபிமொழியே அவ்வாறிருக்க எப்படி இவர்களை அரசாங்கத்துக்கு வால் பிடிப்பவர்கள் என்று கூற முடியும்.
அல்லாமா ஸாலிஹ் அல் உதைமீன் ரஹ் அவர்கள் ஒரு நாள் ஒரு பயணம் சென்று கொண்டிருக்கையில் அவரது வாகனத்தை செலுத்திய சாரதி அனுமதிக்கப்பட்ட வேகத்தை விடவும் கூடுதலாக வண்டியை ஓட்டிச் சென்றார்.
அல்லாமா ஸாலிஹ் அல் உதைமீன் ரஹ் அவர்களுக்கு வேகத்தின் அளவு சரியாக புரியவில்லை. இடையில் பொலிஸார் அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி கடுமையாக சாரதிக்கு திட்டிவிட்டு வாகனத்தின் உள்ளே எட்டிப் பார்த்ததும் சஊதியின் முப்தி அல்லாமா ஸாலிஹ் அல் உதைமீன் ரஹ் அவர்கள் உள்ளே இருப்பதைக் கண்டனர்.
பொலிஸார் செய்வதறியாது அல்லாமா ஸாலிஹ் அல் உதைமீன் ரஹ் அவர்களே! நீங்கள் தான் உள்ளே இருக்கிறீர்கள் என எமக்குத் தெரியாது, நடந்த தவறுக்காக எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள் என கெஞ்சலாயினர்.
அல்லாமா ஸாலிஹ் அல் உதைமீன் ரஹ் அவர்கள் சிரித்தவர்களாக வெளியே வந்து எனது சாரதி நாட்டுச் சட்ட ஒழுங்கை மீறியமைக்காக முதலில் அவருக்கு தகுந்த நடவடிக்கை எடுங்கள் என்றார். பொலிஸார் அந்த கோரிக்கையை மறுத்து விட்டு , நீங்கள் உங்கள் பயணத்தை தொடருங்கள் என்று கெஞ்சிக் கேட்டனர்.
அதற்கு அல்லாமா ஸாலிஹ் அல் உதைமீன் ரஹ் அவர்கள் என் மீதுள்ள உங்கள் மரியாதை ஒரு புறமிருக்கட்டும். நாட்டுச் சட்டத்தை மீறியமைக்காக நடவடிக்கையெடுங்கள் இல்லையேல் நாம் இங்கிருந்து நகரப்போவதில்லை என்றதும் பொலிஸார் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் சாரதிக் கெதிராக நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அதன் பின்பே அல்லாமா ஸாலிஹ் அல் உதைமீன் ரஹ் அவர்கள் அங்கிருந்து நகர்ந்தார்கள்.
ஹரம் ஷரீபின் பல இமாம்கள் கூட அரசுக்கெதிரான தமது நிலைப்பாடுகளையும் அதிருப்தியையும் அவ்வப்போது வெளியிட்டு தமது கடமையை இயலுமான அளவு செய்துள்ளனர், சில அறிஞர்கள் தமது கடமைகளின் போது கடினப் போக்கை கையாண்டு சிறைச்சாலைகளையும் சந்தித்துள்ளனர்.
இப்படியான பல நிகழ்வுகள் அவர்களது வாழ்வில் பேணப்பட்ட தூய்மையையும் நேர்மையையும் நமக்கு விளக்குகிறது..
காழ்ப்புணர்வு கொண்ட கயவர்களின் நூற்களையோ இணையதளங்களையோ ஆதாரமாகக் கொண்டு ஒருவேளை அவர்கள் அநீதிக்கோ அசத்தியத்துக்கோ துணைபோனார்கள் என்று எமது கருத்தை அவர்கள் மீது திணித்து அவர்கள் மனதளவில் வெறுத்த சில காரியங்களையும் அவர்கள் விரும்பி ஏற்றுக் கொண்டார்கள் என்ற தொணியிலே பேசுகின்ற போது நமது நிலை என்னவாகும்?
அடுத்து ஆட்சியாளர்களுக்கு மறுப்புரைப்பதில் நபிகளாரின் வழிகாட்டல் என்ன என்பதனையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
யார் ஒருவர் ஆட்சியாளருக்கு அறிவுரை சொல்ல விரும்புகிறாரோ அவர் பகிரங்கமாக அதனை செய்யவேண்டாம், அவரது கையை பிடித்து தனிப்பட்ட முறையில் அதனை செய்துகொள்ளட்டும் அவர் அதனை அவரிடமிருந்து ஏற்றுக்கொண்டால் சரி இல்லையேல் அறிவுரை சொல்பவர் தன்மீதுள்ள கடமையை நிவர்த்தி செய்துவிட்டார்.
இந்த செய்தி முஸ்னத் அஹ்மத்- 15369, முஸ்தத்ரகுல் ஹாகிம்- 5271, பைஹகி- 8/164, தபராணி- 14415. போன்ற கிரந்தங்களில் பதிவாகியுள்ளது.
இமாம் அல்பானி அவர்கள் இந்த செய்தியின் அறிவிப்பாளர் வரிசை ஸஹீஹானது என தனது ழிலாலுல் ஜன்னாவில் குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்த வழிமுறையை சவுதி ஸலப் அறிஞர்கள் கடைப்பிடித்தால் அதுவே அவர்கள் செய்கின்ற மிகப்பெரும் பணியாகும், அதனை அவர்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதனை அல்லாமா இப்னு பாஸ் , ஸாலிஹ் அல் உஸைமீன், ஸாலிஹ் அல்பௌஸான் போன்றோரின் எழுத்துக்களிலிருந்தும் உரைகளிலிருந்தும் தாராளமாக புரிந்து கொள்ள முடிகிறது, உதாரணத்துக்கு ஒரு சின்ன லின்க்(https://youtu.be/t4NxpcYgTes)
அவ்வாறிருக்க மேடைகளில் பகிரங்கமாக கருத்துக்களை அள்ளி எறியவேண்டும், ஆட்சியாளர்களுக்கெதிராக மக்களை கிளர்ந்தெழச் செய்யவேண்டும் போன்ற ஜாஹிலிய்யத்தான இந்த வழிமுறையை அவர்கள் கடைபிடிக்காத பட்சத்தில் அவர்கள் ஆட்சியாளருக்கு வால் பிடிக்கிறார்கள் என்று கூறுவது நபிவழிக்கு முரணாக அவர்கள் செயல்படவேண்டும் என்ற கற்பிதத்தை நாமாக உருவாக்கி அந்த கற்பிதத்துக்கு அமைவாக அவர்களது செயல்பாடுகள் இல்லையே என்பதற்கு நாம் வழங்குகின்ற பரிதாபகரமான தீர்ப்பாகும்.
- அஷ்ஷெய்க் TM முபாரிஸ் ரஷாதி.