ஷறஹ் அஸ்ஸுன்னா - நூல்



ஷறஹ் அஸ்ஸுன்னா

அரபி மூல ஆசிரியர்‌:
இமாம்‌ அல் ஹஸன்‌ பின்‌ அலி அல் பர்பஹாரி (ரஹ்‌) (ஹிஜ்ரி 329)

 
தமிழில்:
மெளலவி. எம்‌. எம்‌. ஸக்கி, B.A(Hons) மதினா


இஸ்லாத்தின் பால் எமக்கு வழிகாட்டிய இறைவனுக்கே புகழனைத்தும்.‌ அவன்‌ இஸ்லாத்தை எமக்கு அருளாக வழங்கினான்‌. மிகச்‌ சிறந்த சமுதாயமாக எம்மை ஆக்கினான்‌. எனவே, அவனுக்கு விருப்பமான அமல்களில் ஈடுபட அருள் புரியுமாறும், அவனது வெறுப்பு சாபம் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடிய பாவச்செயல்களிலிருந்து எம்மைப் பாதுகாக்குமாறும் அவனிடம் பிரார்த்திப்போமாக

1. இஸ்லாம் என்பது நபி வழியாகும், அது போல நபி வழி என்பது இஸ்லாமாகும். அவை இரண்டும் ஒன்றில் ஒன்று இணைந்துள்ளன (அதாவது அல்குர்ஆனும் நபி வழியும் ஒன்றை ஒன்று விளக்குகிறது) அல்குர்ஆன் நபி வழியை விளக்குவது போல நபிவழி அல்குர்ஆனை விளக்குகிறது.

2. (முஸ்லிம் ஜமாஅத்துடன்) சேர்ந்து வாழ்வது நபிவழியை சார்ந்ததாகும். எனவே யார் ஜமாஅத்தை புறக்கணித்து அதனை விட்டும் பிரிந்து விடுகிறாரோ, இவர் இஸ்லாம் எனும் வளையத்தை தமது கழுத்திலிருந்து களைந்தெறிந்து விட்டார். (அதாவது இஸ்லாத்தின் எல்லையை விட்டும் வெளியேறிவிட்டார்). இதனால் இத்தகையவர் வழிகெட்டவராகவும் பிறரை வழி கெடுப்பவராகவும் கருதப்படுவார்.

3. முஸ்லிம் ஜமாஅத்தின் அடிப்படை நபித்தோழர்களாவர். இவர்கள்தான் ‘அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்’ என அழைக்கப்படுகின்றனர். எனவே, இவர்களை பின்பற்றி நடக்காதவர்கள் வழிகெட்டு “பித்அத்” செய்தவராவார். “பித்அத்கள் அனைத்தும் வழிகேடுகளாகும், வழிகேடுகளும் அதனை செய்பவர்களும் நரகவாசிகளாவர்” (அறிவிப்பாளர் : ஜாபிர் மின் அப்துல்லாஹ் (ரழி) , ஆதார நூல்: நஸாஈ)

4. உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நேர்வழி எனக்கருதி வழிகேட்டில் ஈடுபடுவதற்கோ, வழிகேடு எனக்கருதி நேர்வழியை புறக்கணிப்பதற்கோ எவருக்கும் அனுமதி இல்லை. ஏனெனில் ஷரீஆவின் அனைத்து விடயங்களும் தெளிவுபடுத்தப்பட்டு விட்டன, அதற்கான ஆதாரங்களும் உறுதியாகி விட்டன. போலித்தனம் நீங்கி விட்டது. அதாவது ஸுன்னத் வல் ஜமாஅத்தினர் மார்க்கத்தின் அனைத்து விடயங்களையும் தெளிவுபடுத்தி விட்டனர். அவை மக்களுக்கும் தெளிவாகிவிட்டன. எனவே அவற்றை பின்பற்றுவது மக்களின் கடமையாகும்.

5. நிச்சயமாக இஸ்லாம் மார்க்கம் அல்லாஹ்விடமிருந்து வந்ததாகும். மனித சிந்தனையினாலோ பகுத்தறிவினாலோ ஏற்படுத்தப்பட்டதன்று. அதன் அறிவு அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் உண்டு. எனவே மனோ இச்சையின்படி எதனையும் பின்பற்ற கூடாது. இவ்வாறு மனோஇச்சைக்கு வழிபடுவது மனிதனை மார்க்கத்தின் எல்லையிலிருந்து நீக்கி, ஏன் இஸ்லாத்தின் எல்லையிலிருந்தே நீக்கிவிடும்.

மனிதன் தன் மனோ இச்சையை பின்பற்றுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஏனெனில் இறைதூதர் அவர்கள் தமது தோழர்களுக்கும், தம் உம்மத்தினருக்கும் ஸுன்னாவை தெளிவுபடுத்தி விட்டார். நபித்தோழர்களாகிய ஸஹாபா பெருமக்களே ‘அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்தினரின்’ முன்மாதிரிகளாவர்.

இவர்களே இஸ்லாமிய வரலாற்றில்‌ “அஸ்ஸவாதுல்‌ அஃளம்‌” என்று அழைக்கப்படுகின்றனர்.‌ “அஸ்ஸவாதுல்‌ அஃளம்‌” என்ற வார்த்தைகளின்‌ கருத்து, சத்தியத்தையும் அதனை பின்பற்றியவர்களையும் குறிக்கிறது. எனவே, எவரேனும்‌ மார்க்க விஷயத்தில்‌ மாற்றம்‌ செய்தால்‌ அவர்‌ நிராகரிப்பவர்‌ ஆகிவிடுவார்‌.

(ஒரு மனிதனைப்‌ பார்த்து 'காஃபிர்‌’ அதாவது நிராகரிப்பவன்‌ என்று குறிப்பிடுவது சாதாரண விஷயமன்று. மாறாக, அது ஒரு மார்க்கத்‌ தீர்ப்பாகும்‌. இறை நிராகரிப்பை ஏற்படுத்தக்கூடிய விஷயங்களைப்‌ பொதுவாகத்‌ தெளிவுபடுத்துவதற்கும்‌, ஒரு தனி மனிதனை 'நிராகரிப்பவன்‌’ என்று மார்க்கத்‌ தீர்ப்பு வழங்குவதற்குமிடையே மிகப் பெரிய வித்தியாசம் உண்டு. எனவே பொதுவாகத்‌ தெளிவுபடுத்தி, சமுதாயத்திற்கு அதனைப்‌ பற்றிய விளக்கத்தை வழங்குவது கடமையாகும்‌. இதன்‌ அடிப்படையில்‌ ஒரு தனி மனிதன்‌ மீது 'நிராகரிப்பவன்‌” என்று மார்க்கத்‌ தீர்ப்பு சொல்வதற்கான நிபந்தனைகளை அறிந்து கொள்வது அவசியமாகும்‌. அவையாவன:

அ) பருவ வயதை அடைந்தவர்களாகவும்‌, புத்தி சுவாதீன முள்ளவராகவும்‌ இருத்தல்‌,
ஆ) நிராகரிப்பை ஏற்படுத்தக்கூடிய சொல் அல்லது செயல் நிர்ப்பந்தம் இன்றி சுய விருப்பத்துடன் நடைபெறுதல்.
இ) நிராகரிப்பை ஏற்படுத்தக்‌ கூடிய சொல்‌ அல்லது செயல்‌ தெளிவான ஆதாரங்கள்‌ கிடைத்த பின்னரும்‌ அவ்விஷயங்‌களில்‌ ஈடுபடுதல்‌.
ஈ) குறிப்பிட்ட ஆதாரங்களுக்கு வேறு விளக்கங்கள்‌ சொல்லாதவராக இருத்தல்‌,

மேற்கூறப்பட்ட நான்கு நிபந்தனைகளின்‌ அடிப்படையில்‌ மாத்திரமே ஒரு மனிதர்‌ குறித்து 'நிராகரிப்பவர்‌’ என்று மார்க்கத்‌ தீர்ப்பு வழங்க அனுமதியுண்டு. இந்நிபந்தனைகளில்‌ ஏதேனும்‌ ஒன்று இல்லை என்னும்‌ பட்சத்தில்‌ இவ்வாறு 'நிராகரிப்பவர்‌’ என்று மார்க்கத்‌ தீர்ப்பு கூறுவது தடை செய்யப்பட்டதாகும்‌. இவ்விஷயத்தில்‌ இதுவே ஏகோபித்த முடிவுமாகும்‌.)

6. 'பித்‌அத்தான’ அமல்களில்‌ ஈடுபடும்‌ மனிதர்கள்‌ தாம்‌ நிறைவேற்ற வேண்டிய ஸுன்னத்தான காரியங்களை விட்டுவிடுகின்றனர்‌. புதிதாக ஏற்படுத்தப்பட்ட 'பித்‌அத்தான’ அமல்களில்‌ நாம்‌ மிகவும்‌ எச்சரிக்கையாக இருக்க வேண்டும்‌. ஏனெனில் புதிய விஷயங்கள்‌ அனைத்தும்‌ 'பித்‌அத்‌’களாகும்‌. 'பித்‌அத்‌’கள்‌ அனைத்தும்‌ வழிகேடுகளாகும்‌. வழிகேடுகளும் அவற்றை சார்ந்தோரும்‌ செல்லுமிடம்‌ நரகமாகும்‌.

7. புதிதாக ஏற்படுத்தப்பட்ட சிறிய “பித்அத்” ஆன செயல்களிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்‌. ஏனெனில்‌, சிறு “பித்‌அத்‌”களே காலப்போக்கில்‌ பெரிய ‘பித்‌அத்‌’களாக மாறிவிடுகனறன. இச்சமுதாயத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள எல்லா 'பித்‌அத்‌"களும்‌ ஆரம்பத்தில்‌ சிறியதாகவே தோன்றின. எனவே, இவற்றை வணக்க வழிபாடுகள்‌ என்று நம்பி பின்பற்ற ஆரம்பித்தவர்கள்‌ ஏமாற்றமடைந்து, பின்னர்‌ அவற்றிலிருந்து விடுபட முடியாத நிலைக்குத்‌ தள்ளப்பட்டனர்‌. எனவே, இவை வணக்க வழிபாடுகளாக மதிக்கப்பட்டு, காலப்போக்கில்‌ மக்கள்‌ பின்பற்றக்‌ கூடிய வழிமுறையாக மாறிவிட்டன. இதன்‌ காரணத்தால்‌ இத்தகையோர்‌ நேர்வழிக்கு மாறுசெய்து அல்லது முரண்பட்டு இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து வெளியேறியும்‌ விட்டனர்‌.

(பி‌த்அத்கள் இரண்டு வகைப்படும் முதலாவது வகை மனிதனை இஸ்லாத்திலிருந்து வெளியேற்றிவிடும்‌ பித்‌அத்‌கள்‌.
இரண்டாவது வகை பெரும்‌ பாவங்களைச்‌ சார்ந்த பித்‌அத்‌கள்‌. 
இத்தகைய 'பித்‌அத்”கள்‌ உடனடியாக மனிதனை இஸ்லாத்திலிருந்து வெளியேற்றாவிட்டாலும்‌ கூட, நாளடைவில்‌ மனிதனை இஸ்லாத்திலிருந்து வெளியேற்றும் நிலைக்கு கொண்டு செல்லும்)

8. (குறிப்பாக) சமகாலத்தில்‌ உள்ளவர்கள்‌, மார்க்கம்‌ சம்பந்தமாக அவசரப்பட்டு உடனடியாக அவற்றை ஏற்றுக்கொள்ளக்‌ கூடாது. அவற்றை ஏதாவது கருத்துக்கள்‌ முன்வைத்தால்‌, உடனடியாக செயல்படுத்த முனையவும்‌ கூடாது. நபித்தோழர்கள்‌ அல்லது உலமாக்களில்‌ யாராவது இதுபற்றிய கருத்துக்களைக்‌ கூறியுள்ளார்களா? என தீர விசாரித்து அல்லது ஆராய்ந்து பார்க்க வேண்டும்‌. அவ்வாறு விசாரிக்கும்போது அல்லது ஆய்வு செய்யும்போது அவர்கள்‌ கூறிய ஏதாவது விஷயங்கள்‌ கிடைக்கப்பெற்றால்‌ மாத்திரமே அவற்றைப்‌ பின்பற்ற வேண்டும்‌.

ஸலபுஸ்லாலிஹீன்களின்‌ முன்மாதிரிகளைப்‌ புறக்கணித்துவிட்டு செயல்படுவதும்‌, அவர்களது கருத்துக்களைவிட, நம்முடன்‌ வாழ்ந்து வரும்‌ சமகாலத்தவர்களின்‌ கருத்துக்களுக்கு முன்னுரிமை‌ வழங்குவதும்‌ மனிதனை நரகத்திற்கே இட்டுச்‌ செல்லும்

9. வழிகெட்டவர்கள் இரண்டு வகைப்படுவர்‌. முதலாமவர்‌ சத்தியத்தை அறிந்துகொள்ள முயற்சி செய்யும்‌ அதேவேளை, தவறான கருத்துக்களில்‌ சிக்கி வழிகெட்டுவிடுகிறார்‌. இந்நிலையில் இவருடைய தவறான கருத்துகளை பின்பற்ற கூடாது. ஏனெனில்‌, இவரும்‌ வழிகெட்டவராகவே கருதப்படுவார்‌.

வழிகெட்டவர்களில்‌ மற்றுமொரு வகையினர்‌ பிடிவாதமாக சத்தியத்தைப்‌ புறக்கணித்து, நேர்வழி நடந்த முன்னோர்களுக்கு மாற்றமாக நடப்பவர்‌. இவர்‌ தானும்‌ வழிகெட்டு, பிறரையும்‌ வழிகெடுப்பவர்‌. சமூகத்தில்‌ நடமாடும்‌ ஷைத்தான்களைப்‌ போன்றவர்‌. இத்தகையோரின்‌ 'பித்‌அத்‌"களில்‌ சிக்கி வழிகெட்டு விடாதிருப்பதற்காக, இவர்களை சமூகத்திற்கு அடையாளம்‌ காட்டுவதும்‌, இவர்களைப்‌ பற்றிய விஷயங்கள்‌ குறித்து மக்களுக்கு எச்சரிப்பதும் ‌உலமாக்களின்‌ கடமையாகும்‌. 

10. குர்‌ஆனையும்‌, ஹதீஸையும்‌ விசுவாசம்கொண்டு, அதனை மனப்பூர்வமாக ஏற்றுப்‌ பின்பற்றாதவரை ஒருவன்‌ 'முழுமையான முஸ்லிமாக மாட்டான்‌. இஸ்லாம்‌ சம்பந்தமான எல்லாச்‌ செய்திகளையும்‌ ஸஹாபாக்கள்‌ நமக்கு அறிவித்துத்‌ தராமல்‌ மறைத்துவிட்டனர்‌ என யாராவது கருதினால்‌, அவர்‌ ஸஹாபாக்களைப்‌ பொய்யர்களாக்கியவர்‌ ஆவார்‌. இவ்வாறு கருதுவதும்‌, நபித்தோழர்களை குறை கூறுவதும் இஸ்லாத்தின்‌ ஒற்றுமையைக்‌ குலைப்பதற்கான காரணிகளாகும்‌. இத்தகையவர்‌ தானும்‌ வழிகெட்டு, பிறரையும்‌ வழிகெடுக்கும்‌ 'பித்‌அத்‌"களை உருவாக்குபவராவார்‌.

11. இஸ்லாத்தில்‌ தெளிவான, நேரடியான ஆதாரங்கள்‌ இருக்கும்போது, 'கியாஸ்‌” என்னும்‌ வகையை ஆதாரமாகக்‌ கொள்வது நபிவழிக்கு முரணாகும். எனவே ஸுன்னாவை விட்டுவிட்டு, கியாஸுக்கு முன்னுரிமை அளிக்கக்‌ கூடாது. அவ்வாறே, கியாஸை ஆதாரமாகக்‌ காட்டி ஹதீஸ்களை மறுப்பதும்‌ தடைசெய்யப்பட்டதாகும்‌.

அல்லாஹ்வின் பண்புகளைப் பற்றி ஹதீஸ்களில் இடம்பெற்றுள்ளவைகளை விசுவாசிப்பது கடமையாகும்‌. மாறாக, உவமைகள்‌ கூறி, அல்லாஹ்வை அவனது படைப்புகளுக்குச்‌ சமமாக்கக்‌ கூடாது. மனோஇச்சைப்படி குர்‌ஆன்‌ வசனங்களுக்கு விளக்கம்‌ கொடுப்பதும்‌கூடாது. மேலும்‌, இவைபற்றி ஏன்‌?எதற்கு?எப்படி? என்று கேள்வி கேட்கவும்‌ கூடாது.

(அல்லாஹ்வின்‌ திருநாமங்கள்‌, அவனது பண்புகள்‌ பற்றி இடம்பெற்றுள்ள விபரங்களை அல்குர்‌ஆன்‌, ஹதீஸ்களில்‌ குறிப்பிடப்பட்டிருப்பது போன்று விசுவாசம்‌ கொள்ள வேண்டும்‌. அவற்றுக்கு சுயமாக வலிந்து கருத்துக்‌ கொடுக்கக்கூடாது. எனினும்‌, ஏனைய மார்க்க விஷயங்களைப்‌ பொறுத்தவரை, மக்கள்‌ அவற்றைப்‌ புரிந்து கொள்ளும்‌ வகையில்‌, விளக்கம் கொடுத்துத்‌ தெளிவுபடுத்துவது உலமாக்களின்‌ கடமையாகும்‌.)

12. (அல்லாஹ்வைப்‌ பற்றி அறிந்து கொள்வதற்காக) தத்துவ கருத்துக்கள்‌ கூறுவது, சர்ச்சையில்‌ ஈடுபடுவது, அவைபற்றி விவாதிப்பது, வாதிடுவது போன்ற அனைத்துமே பித்‌அத்‌-களாகும்‌. இச்செயல்கள்‌ மூலம்‌ குர்‌ஆனுக்கும்‌, ஸுன்னாவுக்கும்‌ உடன்பாடானதொரு கருத்துக்கு வந்தாலும்கூட இவற்றில்‌ ஈடுபடக்‌ கூடாது. ஏனெனில்‌, இவை மனித உள்ளங்களில்‌: அல்லாஹ்வைப்‌ பற்றிய சந்தேகங்களை ஏற்படுத்தக்‌ கூடியவையாகும்

13. அல்லாஹ்வைப்‌ பற்றி மனோஇச்சைப்படி பேசுவது, புதிதாக உருவாக்கப்பட்ட பித்‌அத்தான விஷயமாகும்‌. அத்துடன்‌ அது ஒரு வழிகேடுமாகும்‌. எனவே, அல்லாஹ்‌ தன்னைப்‌ பற்றி அல்குர்‌ஆனில்‌ விவரித்துள்ளபடியும்‌, நபி(ஸல்‌) அவர்கள்‌ அல்லாஹ்வைப்‌ பற்றி தன்‌ தோழர்களுக்கு விளக்கியுள்ளபடியுமே அல்லாமல்‌, அல்லாஹ்வின்‌ விஷயத்தில்‌ தன்‌ விருப்பப்படி எதையும்‌ பேசக்கூடாது. மகத்தான இறைவன்‌ தனித்தவன்‌. அவன்‌ தன்னைப்‌பற்றி அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்
அவனைப்‌ போன்று எப்பொருளும்‌ இல்லை. அவன்தான்‌ (யாவற்றையும்‌) செவியேற்பவன்‌: (யாவற்றையும்‌) பார்ப்பவன்‌." (அத்தியாயம்‌ 42 ஸுரா அஷ்ஷுரா -11ஆம்‌வசனத்தின்‌ இறுதிப்‌ பகுதி).

14. அல்லாஹ்‌ ஆரம்பமற்ற ஆதியானவன்‌. முடிவற்ற அந்தமானவன்‌. ரகசியங்களையும்‌, மறைவானவற்றையும்‌ அறிந்தவன்‌. அவன்‌ தன்‌ அர்ஷில்‌ இருக்கிறான்‌. அவனுடைய அறிவு அனைத்தையும்‌ சூழ்ந்து கொண்டதாகும்‌. அவனது அறிவுக்கு எட்டாத இடமே இல்லை.

15. அல்லாஹ்வின்‌ பண்புகளைப்‌ பற்றி ஏன்‌? எதற்கு? எப்படி? என்று கேள்வி கேட்பவர்‌ இறைவன்‌ மீது சந்தேகம்‌ கொண்டவரேயாவர்‌.

16. அல்குர்‌ஆன்‌ அல்லாஹ்வின்‌ வார்த்தைகளாகும்‌. அது அவன் இறக்கியருளியதும் அவனது ஒளியுமாகும். மாறாக அது இறைவனால்‌ படைக்கப்பட்டதன்று. ஏனெனில, அல்லாஹ்விடமிருந்து இறக்கிவைக்கப்பட்ட அல்குர்‌ஆன்‌, அவனது படைப்புகளில்‌ ஒன்றாக இருக்கமுடியாது. இவ்வாறே, இமாம்‌ மாலிக்‌ பின்‌ அனஸ்‌(ரஹ்‌), இமாம்‌ அஹ்மத்‌ பின்‌ ஹம்பல்‌(ரஹ்‌) போன்ற மார்க்க அறிஞர்களும்‌ குறிப்பிடுகின்றனர்‌. 'இந்த விஷயத்தில்‌ விவாதம்‌ புரிவது இறை நிராகரிப்பாகும்‌.

17. மறுமையில்‌ முஃமின்கள்‌ தங்கள்‌ கண்களால்‌ அல்லாஹ்வைப்‌ பார்ப்பார்கள்‌. அவன்‌ அனைவரையும்‌ விசாரிப்பான்‌. அப்போது இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் எந்தவித திரையோ எந்தவித மொழிபெயர்ப்பாளர்களோ காணப்படமாட்டாது போன்ற. விஷயங்களை நம்பிக்கை கொள்ள வேண்டும்‌.

18. மறுமை நாளில்‌ (மீஸான்‌ எனும்‌) தராசில்‌ நன்மைகள்‌, தீமைகள்‌ நிறுக்கப்படும்‌. அதற்கு இரு தட்டுகளும்‌, ஒரு நாவும்‌ உண்டு. என்றும்‌ நம்பிக்கை கொள்ள வேண்டும்‌.

(மீஸான்‌ தராசிற்கு நாவு உண்டு என்று இப்னு அப்பாஸ்‌(ரலி) கூறியதாக வந்துள்ள செய்தி இட்டுக்கட்டப்பட்டதாகும்‌. (நூல்‌: இப்னு தைமிய்யா, மஜ்மூஃ பதாவா 4-302).

19. மண்ணறையில்‌ வேதனை உண்டு என்றும்‌, முன்கர்‌ -நகீர்‌ ஆகிய மலக்குகள் அங்கே மனிதனை விசாரிப்பார்கள் என்றும் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

20. மறுமையில்‌ நபி(ஸல்‌) அவர்களுக்கு ஒரு நீர்த்தடாகம்‌ உண்டு. அவ்வாறே ஒவ்வொரு நபிக்கும்‌ ஒவ்வொரு நீர்த்தடாகம் ‌உண்டு. ஸாலிஹ்‌ நபியைத்தவிர, ஏனெனில் அவரது நீர்த்தடாகம் அவருக்கு அற்புதமாகக்‌ கொடுக்கப்பட்ட ஒட்டகத்தின்‌ பால்‌ மடியாகும்‌ போன்ற விஷயங்களை நம்பிக்கை கொள்ள வேண்டும்‌.

(ஸாலிஹ்‌ நபியின்‌ நீர்த்தடாகம்‌ அவருக்கு அற்புதமாக வழங்கப்பட்ட ஒட்டகத்தின்‌ பால்‌ மடியாகும்‌ என்ற செய்தி இட்டுக்கட்டப்பட்டதாகும்‌. (நூல்‌: அல்‌-ஜவ்ஸி, அல்‌ இப்னு மவ்லூஆத்‌ 3-244).

"(ஒவ்வொரு நபிக்கும்‌ ஒவ்வொரு நீர்த்தடாகம்‌ உண்டு நிச்சயமாக தண்ணீர்‌ குடிக்க அதிகமான உம்மத்தினர்‌ யாரிடம்‌ வருவார்களோ (அதன்‌ மூலம்‌) அவர்கள்‌ பெருமைப்பட்டுக்‌ கொள்வார்கள்‌. எனவே, நிச்சயமாக நான்‌ அதிக எண்ணிக்கையிலான உம்மத்தினர்‌ என்னிடம்‌ நீர்‌ குடிக்க வரவேண்டுமென்று அல்லாஹ்விடம்‌ ஆதரவு வைக்கிறேன்‌” என்று இறைத்தூதர்‌ நபி(ஸல்‌) அவர்கள்‌ நவின்றார்கள்‌.
(அறிவிப்பவர்‌: ஸமுரா (ரலி) அவர்கள்‌, நூற்கள்‌: திர்மிதி 4-628, தபரானி 7-212). .

21. மறுமைநாளில்‌ இறைத்தூதர்‌ (ஸல்‌) அவர்கள்‌ தவறிழைத்த பாவிகளுக்காக அல்லாஹ்விடம்‌்சிபாரிசு செய்வார்கள்‌. ஸிராத்‌ என்னும்‌ பாலத்தைக்‌ கடந்து செல்லவும்‌, நரகத்திலிருந்து பாவிகளை மீட்டெடுப்பதற்கும்‌ அவர்கள்‌ சிபாரிசு செய்வார்கள்‌.

ஒவ்வொரு நபிக்கும்‌ சிபாரிசு செய்ய அனுமதி வழங்கப்படும்‌. அவ்வாறே, ஸித்தீக்கீன்கள்‌ (உண்மையாளர்கள்‌), சுஹதாக்கள்‌ (உயிர்த்தியாகிகள்‌), ஸாலிஹீன்கள்‌ (நல்லடியார்கள்‌) போன்ற அனைவரும்‌ பரிந்துரை செய்வார்கள்‌. இப்பரிந்துரைகள்‌ அனைத்திற்கும்‌ பின்னர்‌ எல்லாம்‌ வல்ல அல்லாஹ்‌, தான்‌ நாடியவர்களுக்கு அருள்‌ செய்வான்‌. மேலும்‌, நரகில்‌, பாவிகள்‌ எரிந்து கரியான பின்னர்‌, இவர்களை விடுதலை செய்வான்‌ போன்ற விஷயங்களையும்‌ நம்ப வேண்டும்‌.

22. 'ஸிராத்‌” என்பது ஜஹன்னம்‌ எனும்‌ நரகத்தின்‌ மீது அமைக்கப்பட்டுள்ள ஒரு பாலம்‌. இதனைக்‌ கடந்து செல்லும்போது அல்லாஹ்‌ நாடியவர்கள்‌ அதனுள்‌ விழுந்து விடுவர்‌. மேலும்‌, அல்லாஹ்‌ நாடியவர்கள்‌ அதனைக்‌ கடந்து விடுவர்‌.அப்போது ஒவ்வொரு முஃமினுக்கும் அவனது ஈமானிய உறுதிக்கும்‌, ஈமானிய அளவுக்குமேற்ப ஒளி வழங்கப்படும்‌ போன்ற விஷயங்களையும்‌ நம்பவேண்டும்‌.

23. நபிமார்களையும்‌ மலக்குகளையும்‌ நம்பிக்கை கொள்ள வேண்டும்‌.

24. சொர்க்கம்‌, நரகம்‌ இரண்டுமே உண்மையானவை. இவை இரண்டும்‌ அல்லாஹ்வால்‌ படைக்கப்பட்டுள்ளன. சொர்க்கம்‌ ஏழாம்‌ வானத்தில்‌ உள்ளது. அதனுடைய கூரை அல்லாஹ்வின்‌ அர்ஷ்‌ ஆகும்‌. நரகம்‌ ஏழாவது பூமிக்கும்‌ கீழே உள்ளது. மேலும்‌ வானம்‌, பூமி இரண்டுமே அல்லாஹ்வின்‌ படைப்புக்களாகும்‌. நிச்சயமாக சொர்க்கவாசிகளின்‌ எண்ணிக்கையையும்‌, அதில்‌ நுழைபவர்களையும் அல்லாஹ் நன்கறிவான். அவ்வாறே நரகவாசிகளின் எண்ணிக்கையையும் அதில் வீழ்பவர்களையும் அல்லாஹ் நன்கறிவான். சுவர்க்கத்துக்கும் நரகத்துக்கும் அழிவில்லை. அவை என்றென்றும்‌ நிரந்தரமாக இருக்கும்‌. அவைகள்‌ அழியாது போன்ற அனைத்து விஷயங்களையும்‌ நம்புவது கடமையாகும்‌.

25. நிலையான படைக்கப்பட்ட சொர்க்கத்திலேயே ஆதம்‌(அலை) அவர்கள்‌ இருந்தார்கள்‌. பின்னர்‌, மகத்துவம்‌ மிக்க அல்லாஹ்வின்‌ கட்டளைக்கு மாறு செய்ததன்‌ காரணமாக அதிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள்‌.

26. (மறுமையின்‌ அடையாளங்களில்‌ ஒன்றான) தஜ்ஜாலின்‌ வருகையை நம்ப வேண்டும்‌. (இவன்‌ வலக்கண்‌ குருடனாவான்‌).

27. நபி ஈஸா(அலை) அவர்கள்‌ (வானத்திலிருந்து) இறங்கி, தஜ்ஜாலை கொல்வார்கள் மேலும் இவர் திருமணமும் செய்து கொள்வார்கள்‌. அத்துடன்‌ நபி(ஸல்‌) அவர்களின்‌ குடும்பத்தைச்‌ சார்ந்த ஒரு இமாமுக்குப்‌ பின்னால் நின்று தொழுகையை நிறைவேற்றுவார்கள். மேலும் இவர்கள்‌ மரணத்தைத்தழுவுவார்‌கள். மரணமுற்ற அவர்களை முஸ்லிம்கள் அடக்கம் செய்வார்கள் போன்ற விஷயங்களை நம்பிக்கை கொள்ள வேண்டும்‌.

28. ஈமான்‌ என்பது கலிமாவை நாவினால்‌ மொழிந்து, உள்ளத்தால்‌ நம்பிக்கை கொண்டு, உறுப்புக்களால் அமல் செய்வதாகும். நன்மையான அமல்களில் மனிதன் ஈடுபடும்போது அமல்கள் அதிகரிக்கும். அவ்வாறே பாவமான செயல்களில் ஈடுபடும்போது ஈமான் முற்றிலும் (சிறிதளவுகூட இல்லாத அளவுக்கு) குறைந்துவிடும் என்பதையும் நம்ப வேண்டும்.

29. மனிதர்களில் சிறந்தவர்கள் நபிமார்கள், நபிமார்களில் சிறந்தவர் முஹம்மது நபி(ஸல்‌) அவர்கள்‌. அவர்களுக்குப்‌ பின்‌ இந்த உம்மத்தில்‌ சிறந்தவர்கள்‌ கலீபாக்களான அபூபக்ர்‌(ரலி), உமர்‌(ரலி), உஸ்மான்‌(ரலி) போன்றோராவர்‌. இப்னு உமர்‌(ரலி) அவர்கள்‌ அறிவிக்கின்றார்கள்‌, “நபி(ஸல்‌) அடுத்ததாக அபூபக்ர்‌(ரலி), உமர்‌ ஆகியோர்தான்‌ மனிதர்களில்‌ சிறந்தவர்கள்‌ என்று இறைத்தூதர்‌ (ஸல்) அவர்கள் எங்கள் மத்தியில் இருக்கும்போது நாங்கள் கூறிக்கொண்டிருந்தோம் இதனை நபி(ஸல்) அவர்களும் கேட்டுக்கொண்டிருப்பார்கள் எனினும் இதனை அவர்கள் மறுக்கவில்லை”
ஆதாரம்‌: நூல்‌ புகாரி) 

மேற்கூறப்பட்டவர்களுக்கு அடுத்ததாக மனிதர்களிலே சிறந்தவர்கள்‌ (முறையே) அலி(ரலி), தல்ஹா(ரலி), ஸுபைர்‌(ரலி), ஸஃதுபின்‌ அபீவக்காஸ்‌(ரலி), ஸாத்‌ பின்‌ ஸைத்‌(ரலி), அப்துர்ரஹ்மான்‌ பின்‌ அவ்ப்‌(ரலி), அபூ உபைதா ஆமிர்‌ பின்‌ அல்ஜர்ராஹ்‌(ரலி) போன்ற நபித்தோழர்கள்‌ ஆவார்கள்‌. மேற்குறிப்பிட்ட அனைத்து நபித்தோழர்களும்‌ இஸ்லாமிய ஆட்சி நடத்தத்‌ தகுதியானவர்களாக விளங்கினர்‌ என்பதும் இங்கு கவனிக்கத் தக்கது. மேற்கூறப்பட்டவர்களுக்கு அடுத்ததாக மனிதர்களில்‌ சிறந்தவர்கள்‌ இறைத்தூதர்‌ (ஸல்‌), அவர்களுக்கு நபித்துவம்‌ கிடைத்தபோது வாழ்ந்திருந்த முதலாம்‌ நூற்றாண்டைச்‌ சார்ந்தவர்கள்‌ ஆவார்கள்‌. அதாவது, (மக்காவிலிருந்து மதீனாவிற்கு) ஹிஜ்ரத்‌ செய்த முதல்‌ முஹாஜிர்களும்‌, (மதீனாவில்‌ இருந்த) அன்ஸாரித்‌ தோழர்களும்‌ ஆவர்‌. அவர்கள்‌ அனைவரும்‌ ஆரம்பத்தில்‌ பைத்துல்‌ முகதிஸையும, பின்னர்‌ கஃபதுல்லாவையும்‌ முன்னோக்கித்தொழுத சிறப்பையும்‌ பெறுகின்றனர்‌. இதற்கடுத்ததாக மனிதர்களில்‌ சிறந்தவர்கள்‌ நபி(ஸல்‌), அவர்களுடன்‌ ஒரு வருடம்‌, ஒரு மாதம்‌, ஒரு நாள்‌, ஏன்‌ ஒரு சிறிதளவு நேரமேனும்‌ தோழமை கொண்டிருந்த நபித்தோழர்களாவர்‌.

இவர்கள்‌ அனைவருக்கும்‌ அல்லாஹ்வின்‌ அருளும்‌, திருப்பொருத்தமும்‌ கிடைக்க பிராத்தனை செய்ய வேண்டும்‌. அவர்களது சிறப்பை எடுத்துக்கூற வேணடும்‌. அவர்களுக்கிடையே ஏற்பட்ட குழப்பங்கள்‌, தவறுகள்‌ போன்றவற்றை விமர்சிக்காது மெளனமாக இருக்க வேண்டும்‌. (இவை அஹ்லுஸ்‌ ஸுன்னத்‌ வல்‌ ஜமாஅத்தின்‌ நிலைப்பாடாகும்‌. எனவே, ஸஹாபாக்களில்‌ யாரைப்‌ பற்றிப்‌ பேசினாலும்‌ அவர்களுடைய நன்மைகளை மாத்திரமே பேசவேண்டும்‌. தவறுகளை அலசக்கூடாது. ஏனெனில்‌ நபி(ஸல்‌) அவர்கள்‌ பின்வருமாறு நவின்றுள்ளார்கள்‌:
"என்னுடைய ஸஹாபாக்கள்‌ பற்றி உங்களுக்கு எடுத்துக்‌ கூறப்பட்டால்‌, உங்களுடைய நாவுகளை கட்டுப்படுத்திக்‌ கொள்ளுங்கள் (அறிவிப்பாளர்‌: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி) நூல்‌: தபரானி).

 "எவரேனும்‌ ஸஹாபாக்களை விமர்சித்து ஒரு வார்த்தையேனும்‌ பேசினால்‌, அவர்‌ மனோஇச்சைக்குக் கட்டுப்பட்டவராவார்‌” என்று ஸுஃப்யான்‌ பின் ‌உயைனா(ரஹ்‌) கூறியுள்ளார்கள்‌.

நபி(ஸல்‌) அவர்கள்‌ (தனது தோழர்களைப்‌ பற்றிப்‌ பின்வருமாறு) கூறினார்கள்‌:

"எனது தோழர்கள்‌ நட்சத்திரங்களைப்‌ போன்றவர்கள்‌. இவர்களில்‌ யாரை நீங்கள்‌ பின்பற்றினாலும் ‌(வழி தவற மாட்டீர்கள்‌) நேர்வழி பெறுவீர்கள்‌.” (நூல்‌ பைஹகி).

இச்செய்தி பலவீனமானது என்று பல ஹதீஸ்கலை அறிஞர்களும்‌ கருத்துத்‌ தெரிவித்துள்ளனர்‌. எனினும்‌, இதுபற்றிய ஆதாரபூர்வமான செய்திகளை இந்நூலின்‌ 134 ஆம்‌ பத்தியில்‌ காணலாம்‌).

30. அல்லாஹ்வின்‌ திருப்தியையும்‌, விருப்பத்‌தையும்‌ தேடித்தரக்கூடிய விடயங்களில் தலைவருக்கு கட்டுப்படுவது கடமையாகும். மக்களின் விருப்பத்துடனும் அவர்களது ஏகோபித்த ஆதரவுடனும்‌ ஆட்சிக்கு வருபவரே (அமீருல்‌ முஃமினீன்‌) முஃமின்களின்‌ தலைவராவார்‌.

31. தனக்கென்று ஒரு ஆட்சித்‌ தலைவர்‌ (அமீர்‌, அவர்‌ நல்லவரோ, கெட்டவரோ) இல்லை என்று கருதக்கூடிய நிலையில்‌ ஒரு மனிதர் ஒரு இரவேனும்‌ உறங்குவதும்‌ கூடாது.

32. ஹஜ்‌, ஜிஹாத்‌ போன்ற வணக்க வழிபாடுகள்‌ அமீருடன்‌ மேற்கொள்ளப்பட வேண்டும்‌. அமீருக்குப்‌ பின்னால்‌ நின்று மஃமூமாக ஜும்‌ஆத்‌ தொழுகையை நிறைவேற்றுவதும்‌ கூடும்‌. மேலும்‌, ஜும்‌ஆத்‌ தொழுகைக்குப்பின்‌, இரண்டிரண்டாக ஆறு ரக்‌அத்துகள்‌ தொழுவது நபிவழியாகும்‌. இது இமாம்‌ அஹ்மத்‌ பின்‌ ஹன்பல்(ரஹ்) அவர்களின் கருத்தாகும்.

33. ஈஸா(அலை) அவர்கள்‌ வானத்திலிருந்து இறங்கிவரும்வரை இஸ்லாமிய ஆட்சிமுறை குறைஷிகளிடம் காணப்படும்.

34. இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்கு எதிராகப்புரட்சி செய்பவர்‌ 'கவாரிஜ்‌ களைச்‌ சார்ந்தவராவார்‌. இத்தகையவர்‌ முஸ்லிம்‌களிள்‌ ஒற்றுமையைச்‌ சீர்குலைத்தவரும்‌, நபிவழிக்கு மாறு செய்தவருமாவார்‌. மேலும்‌, இவர்‌ ஜாஹிலிய்யத்திலேயே
(அறியாமையிலேயே) மரணிப்பார்‌. 

35. ஆட்சித்‌ தலைவர்‌ அநியாயக்காரராக இருந்தாலும் கூட அவ்வாட்சித்‌ தலைவருக்கு எதிராக யுத்தம்‌ செய்வதும்‌, 'கிளர்ச்சிகளில்‌ ஈடுபடுவதும்‌ தடைசெய்யப்பட்டதாகும்‌. ஏனெனில்‌ நபி(ஸல்‌) அவர்கள்‌ அபூதர்‌ அல்‌-கிபாரி(ரலி) அவர்களுக்கு(க்‌ கீழ்கண்டவாறு) கூறினார்கள்‌, "ஆட்சியாளரின்‌ அநியாயத்தைச் சகித்துக்‌ கொள்ளுங்கள்‌. அவர்‌ ஒரு எத்தியோப்பிய அடிமையாக: இருந்தாலும்‌ சரியே” (ஆதார நூல்‌: முஸ்லிம்‌, ஹதீஸ்‌ எண்‌: 1837).

மற்றுமொரு அறிவிப்பில்‌ (பின்வருமாறு) இடம்பெற்றுள்ளது. நபி (ஸல்‌) அவர்கள்‌ அன்ஸாரித்‌ தோழர்களை நோக்கி “மறுமையில்‌ 'அல்கெளஸர்‌' எனும்‌ சிறப்பு நீர்த்தடாகத்திற்கு அருகில்‌, என்னைச்‌ சந்திக்கும்வரை ஆட்சியாளர்களின்‌ கொடுமைகளைச்‌ சகித்துக்‌ கொள்ளுங்கள்‌." என்று கூறினார்கள்‌. (ஆதார நூல்கள்‌: புகாரி -ஹதீஸ்‌ எண்‌: 3793, முஸ்லிம்‌ -ஹதீஸ்‌ எண்‌ 1845).

எனவே, ஆட்சியாளருக்கு எதிராக யுத்தம்‌ செய்வது நபிவழிக்கு முரணாகும்‌. ஏனெனில்‌, அது மார்க்க விடயங்களிலும்‌, உலக விடயங்களிலும் குழப்பத்தை ஏற்படுத்துவதாகும்.

36. முஸ்லிம்களின்‌ உயிர்கள்‌, உடமைகள்‌, உறவுகள்‌ போன்றவைகளுக்கு எதிராக கவாரிஜ்கள்‌ யுத்தம்‌ மேற்கொண்டால்‌, இவர்களுக்கு எதிராக யுத்தம்‌ மேற்கொள்வது முஸ்லிம்களுக்கு ஆகுமானதாகும்‌. (இவ்வாறு யுத்தம்‌ செய்யும்போது) இவர்கள்‌ (கவாரிஜ்கள்‌) யுத்த களத்திலிருந்து விரண்டோடினால்‌, அவர்களை விரட்டிச்‌ செல்வதோ,  காயமுற்றவர்களை மீண்டும்‌ தாக்குவதோ கூடாது. மேலும்‌, யுத்த சமயத்தில்‌ இவர்கள்‌ விட்டுச்சென்ற பொருட்களை அபகரித்தல்‌, யுத்தத்தில்‌ பிடிபட்ட கைதிகளைக்‌ கொலை செய்தல்‌ போன்ற அனைத்தும் தடுக்கப்பட்ட செயல்களாகும்‌, அதேபோன்று, போரின்போது பின்வாங்கி ஓடுபவரை விரட்டிச்‌ செல்வதும்‌கூடாத செயலாகும்‌.

37. அல்லாஹ்வுக்கு மாறு செய்வதில்‌ எந்த ஒரு மனிதனுக்கும்‌. வழிப்படுவது கூடாது.

38. முஸ்லிம்களில்‌ எம்மனிதரைக் குறித்தேனும்‌ இவர்‌ நல்லவர்‌ இவர்‌ பாவி என்று சாட்சி கூறுவது கூடாது. ஏனெனில்‌, அவ்வாறு சாட்சி கூறப்பட்டவர்‌ மரணிக்கும்போது, அவருடைய இறுதி நிலை எப்படி அமையும்‌ என்று எவரும்‌ அறியமாட்டார்‌. எனவே, அவரது நற்செயலுக்காக அவருக்கு அல்லாஹ்வின்‌ அருள்‌ கிடைக்கவேண்டும்‌ என எண்ணம்‌ கொள்ள வேண்டும்‌. அவருடைய பாவச்செயல்களுக்காக, அவருக்கு அல்லாஹ்விடமிருந்து தண்டனை கிடைக்குமோ என அஞ்சிக் கொள்ள வேண்டும்‌.

39. ஒரு அடியான்‌ தான்‌ செய்கின்ற எல்லாப்‌ பாவங்களுக்கும்‌ இறைவனிடம்‌ பாவமன்னிப்புச்‌ செய்ய வேண்டும்‌.

‌40. திருமணமான ஒரு ஆண்‌, அல்லது ஒரு பெண்‌ விபச்சாரம்‌ செய்தால்‌, விபச்சாரம்‌ செய்த நபர்‌ கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும்‌ என இஸ்லாம்‌ வழங்கியுள்ள தண்டனை நியாயமானதாகும்‌.

41. (உள்ளூரில்‌ இருப்பவர்‌ ஒரு நாளைக்கும்‌, பயணத்தில்‌ இருப்பவர்‌ மூன்று நாட்களுக்கும்‌ என) காலுறையின்‌ மீது மஸ்ஹ்‌ செய்வது நபிவழியாகும்‌.

42. பயணத்தில்‌ லுஹா, அஸர்‌, இஷா போன்ற தொழுகைகளைச்‌ சுருக்கித்‌தொழுவது நபிவழியாகும்‌.

43. நோன்பு காலத்தில்‌ பயணத்தில்‌ இருப்பவர்‌ விரும்பினால்‌ நோன்பு நோற்கலாம்‌. அல்லது நோன்பை விட்டுவிட்டு, வேறு நாட்களில்‌, விடுபட்ட நோன்புகளை நோற்றுக்‌ கொள்ளலாம்‌.

44. காற்சட்டை அணிந்து தொழுவதில்‌ தவறேதுமில்லை.

45. நயவஞ்சகம்‌ என்பது (உள்ளத்தில்‌) “குப்ர்‌" என்னும்‌ நிராகரிப்பை மறைத்துக்‌ கொண்டு, வெளிப்படையாக முஸ்லிம்‌ போன்று நடிப்பதாகும்‌.

46. இஸ்லாமிய சட்டங்கள்‌ நடைமுறைப்‌ படுத்தப்பட்டு, ஈமானிய உள்ளம்‌ கொண்ட மக்கள்‌ இஸ்லாமிய ஆட்சியின்‌ கீழ்‌ வாழவேண்டிய இடமே உலகம்‌.

47. (இஸ்லாமிய ஆட்சி நடைபெறும்‌ நாடுகளில்‌) ஷரீஅத்‌ சட்டங்களை பின்பற்றுவதும், முறையாக பெற வேண்டிய சொத்துக்களை பெற்றுக் கொள்வதும், அனுமதிக்கப்பட்ட பிராணிகளை அறுத்துச் சாப்பிடுவதும், மரணித்தவருக்காக ஜனாஸ தொழுகை நடாத்துவதும் நபி(ஸல்) அவர்களின் உம்மத்துக்கு உத்தராவதம் அளிக்கப்பட்டுள்ளது.

48. இஸ்லாத்தின்‌ கடமைகள்‌ அனைத்தையும்‌ முழுமையாக செயல்படுத்தாதவரை, ஒருவரை முழுமையான ஈமான்‌ கொண்டவர்‌ என்று கூற முடியாது. மேலும்‌, இஸ்லாத்தின் கடமைகளை நிறைவேற்றாது அலட்சியம்‌ செய்பவர்‌ பாவமன்னிப்பு தேடிக் கொள்ளும்வரை குறைந்த ஈமான் உள்ளவராகவே கருதப்படுவார். எனினும், ஒருவர் ஈமானில் உறுதியுள்ளவரா அல்லது பலவீனமுள்ளவரா என்பதை இறைவன் மட்டுமே நன்கறிந்தவன். ஏனெனில் ஒருவர் இஸ்லாத்தின் கடமைகளை வெளிப்படையாக அலட்சியம் செய்தால் மாத்திரமே மனிதர்களால் அதனை காணமுடியும்.

49. மரணிக்கும் முஸ்லிமுக்காக ஜனாஸாத்‌ தொழுகை தொழுவது நபிவழியாகும்‌. எனவே, கல்லெறிந்து கொல்லப்பட்டவர்‌, விபச்சாரம்‌ செய்த ஆண்‌ மற்றும்‌ பெண்‌, தற்கொலை செய்துகொண்டோர்‌, போதையில்‌ மரணித்தவர்‌ போன்ற இஸ்லாத்தில்‌ தடுக்கப்பட்ட குற்றச்செயல்களைப்‌ புரிந்த எந்தவொரு முஸ்லிமாயினும்‌ அவருக்காக ஜனாஸாத்‌ தொழுகை தொழுவதும்‌ ஸுன்னத்தாகும்‌.

50. அல்‌-குர்‌ஆன்‌ வசனத்தை மறுத்தல்‌, நபிமொழியை மறுத்தல்‌, அல்லாஹ்‌ அல்லாதவருக்காக அல்லது அல்லாஹ்‌ அல்லாதவைகளுக்காக அறுத்துப்‌ பலியிடுதல்‌, தொழுகை போன்ற வணக்க வழிபாடுகளை அல்லாஹ்‌ அல்லாதவருக்காக நிறைவேற்றுதல்‌ போன்ற அனைத்து விடயங்களுமே 'குப்ர்‌’ எனும்‌ நிராகரிப்பை ஏற்படுத்தக்‌ கூடியவைகளாகும்‌. எனவே, ஏதேனும்‌ ஒன்றையேனும்‌ ஒரு மனிதன்‌ செய்தால்‌, அவர்‌ இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து மேற்கூறப்பட்டவைகளில்‌ வெளியேறிவிடுவார்‌. எனவே, இவ்வாறான செயல்களில்‌ ஈடுபடாதவரையில்‌, ஒரு மனிதரை முஸ்லிம்‌ என்றும்‌, முஃமின்‌ என்றுமே அழைக்க வேண்டும்‌. எனினும்‌, இவர்களது உண்மை நிலையை அல்லாஹ்‌ மாத்திரமே அறிந்தவன்.

51. மனிதனின்‌ பகுத்தறிவுக்கு எட்டாத சில நபிமொழிகள்‌ காணப்படுகின்றன. இவற்றின்‌ மீதும்‌ நம்பிக்கை கொள்ள வேண்டும்‌. கீழ்க்காணும்‌ நபிமொழிகளை மேற்கண்ட கருத்திற்கு உதாரணமாக எடுத்துக்‌ கொள்ளலாம்‌:

நபிகள்‌ நாயகம்‌(ஸல்‌) அவர்கள்‌ நவின்றார்கள்‌:
அடியார்களின்‌ உள்ளங்கள்‌ (எல்லாம்‌ வல்ல) அளவற்ற அருளாளனின்‌ விரல்களில்‌ இரண்டு விரல்களுக்கிடையே உள்ளன.” (அறிவிப்பவர்‌: அப்துல்லாஹ் பின்‌ உமர்‌ (ரலி), ஆதார நூல்கள்‌:
‌ முஸ்லிம்‌- ஹதீஸ்‌ எண்‌: 2654, அஹ்மத்‌:2: 168)

நிச்சயமாக அல்லாஹ்‌ கீழ்வானத்துக்கு இறங்குகிறான்‌." (அறிவிப்பவர்‌: அபூஹுரைரா (ரலி), ஆதார நூல்‌: புஹாரி, ஹதீஸ்‌ எண்‌: 1145).

நமது இறைவன்‌ ஒவ்வொரு இரவும்‌, இரவில்‌ மூன்றில்‌ ஒரு பகுதி இருக்கும்போது கீழ்‌ வானத்திற்கு இறங்கி, "என்னிடம்‌ பிரார்த்திப்பவர்கள்‌ யாரேனும்‌ உண்டா? அதை நான்‌ அங்கீகரிப்பதற்கு மேலும்‌, என்னிடம்‌ கேட்பவர்கள்‌ யாரேனும்‌ உண்டா? அதை நான்‌ கொடுப்பதற்கு. மேலும்‌, என்னிடம்‌ பாவமன்னிப்புக்‌ கேட்பவர்கள்‌ யாரேனும்‌ உண்டா? அவருக்கு மன்னிப்பு வழங்குவதற்கு” என்று கூறுவான்‌. (அறிவிப்பவர்‌: அபூ- ஹாரைரா(ரலி), நூல்‌: புஹாரி ஹதீஸ் எண்‌:1/45.)

“அறபா தினத்தில்‌ இறங்குவான்‌” (அறிவிப்பவர்‌: உம்முஸலமா (ரலி), ஆதார நூல்‌: இப்னு ஹிப்பான்‌.)

நிச்சயமாக எல்லாம்‌ வல்ல இறைவன்‌ (அறபா தினத்தில்‌) கீழ்‌ வானத்துக்கு இறங்கி, தனது மலக்குகளை நோக்கி, "எனது அடியார்களைப் பாருங்கள்‌! புழுதி படிந்தவர்களாக, தலைவிரிகோலமாக என்னிடம்‌ வந்துள்ளார்கள்‌.” என்று அறபாவாசிகளைப் பற்றி பெருமைப்‌ பட்டுக்கொள்வான்‌. (மேலும்‌, அவர்களை நோக்கி) அறபாவாசிகளே! நிச்சயமாக நான்‌ உங்களது பாவங்களை மன்னித்து விட்டேன்‌" என்றும்‌ கூறுவான்‌.) (அறிவிப்பவர்‌: உம்முஸலமா (ரலி), ஆதார நூல்‌: இப்னு ஹிப்பான்‌- ஹதீஸ்‌ எண்‌: 3853).

“மறுமைநாளில்‌ இறங்குவான்‌".

“மறுமை நாளில்‌ இறங்குவான்‌" என்று அல்‌-குர்‌ஆன்‌ மற்றும் நபிமொழிகளில்‌ இடம்பெறவில்லை. மாறாக, "மறுமையில்‌ தீர்ப்பு வழங்குவதற்கு இறைவன் வருவான்” என்றே இடம்பெற்றுள்ளது. "மறுமை நாளில்‌ இறங்குவான்‌” என்ற செய்தி சில நபித்தோழர்கள்‌ வாயிலாகவே இடம்பெற்றுள்ளது. (தப்ஸீர்‌
இப்னு கஸீர்‌ 3 -315 -326)

மாட்சிமை மிக்க இறைவன்‌ தனது பாதத்தை நரகின்‌ மீது வைக்கும்‌ வரைக்குமே நரகில்‌ (மக்கள்‌) போடப்பட்டுக்‌ கொண்டே இருப்பார்கள்‌." (அறிவிப்பவர்‌ அனஸ்‌ பின்‌ மாலிக் ரலி), நூல்கள்‌: புகாரி, ஹதீஸ்‌ எண்‌: 4848, முஸ்லிம்‌ ஹதீஸ்‌ எண்‌: 2848)

(நரகவாசிகள்‌) நரகத்தில்‌ போடப்படுவார்கள்‌. நரகம்‌. (நிரம்பாத காரணத்தால்‌) "இன்னும்‌ அதிகம்‌ இருக்கிறதா?” என்று கேட்கும்‌. இறுதியில்‌ அல்லாஹ்‌ தனது பாதத்தை (அதில்‌) வைப்பான்‌. அப்போது அது, "போதும்‌! போதும்‌!” என்று கூறும்‌. (ஆதார நூல்கள்‌: முஸ்லிம் ஹதீஸ் எண்‌: 2‌849 புகாரி ஹதீஸ்‌ எண்‌: 4849)

இறைவன்‌ அடியானை நோக்கி, "நீ என்னிடம்‌ நடந்து வந்தால்‌, நான்‌ உன்னிடம்‌ ஓடி வருவேன்‌.” (அறிவிப்பவர்‌: அபூஹாரைரா (ரலி), ஆதார நூல்கள்‌: புகாரி -ஹதீஸ்‌ எண்‌: 7405, முஸ்லிம்‌ ஹதீஸ்‌ எண்‌: 2657).

அல்லாஹ்‌ கூறுகிறான்‌: ஒரு அடியான்‌ என்னைப்‌ பற்றி நினைப்பதற்கேற்ப அவனிடம் நான்‌ நடந்து கொள்வேன்‌. அவன்‌ என்னை நினைவு கூறும்போது நான்‌ அவனுடன்‌ இருப்பேன்‌. அவன் என்னைத் தன்‌ உள்ளத்தில்‌ நினைவு கூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவு கூர்வேன்‌. அவன்‌ ஓர்‌ அவையோர்‌ மத்தியில்‌ என்னை நினைவு கூர்ந்தால்‌, அவர்களைவிடச் சிறந்த ஓர்‌ அவையோரிடம்‌ அவனை நான்‌ நினைவுகூர்வேன்‌. அவன்‌ ஒரு சாண்‌ அளவுக்கு என்னை நெருங்கினால்‌, நான்‌ ஒரு முழம் அளவுக்கு அவனை நெருங்குவேன்‌. அவன்‌ ஒரு முழம்‌ அளவுக்கு என்னை நெருங்கினால்‌ நான்‌ ஒரு பாகம்‌ அளவுக்கு அவனை நெருங்குவேன்‌. அவன்‌ என்னை நோக்கி நடந்து வந்தால்‌, நான்‌ அவனை நோக்கி ஓடிச்‌ செல்வேன்‌." (அறிவிப்பவர்‌: அபூஹுரைரா(ரலி), ஆதார நூல்கள்‌: புகாரி ஹதீஸ்‌ எண்‌: 7405, முஸ்லிம்‌ ஹதீஸ்‌ எண்‌: 2657).

நிச்சயமாக இறைவன்‌ ஆதம்‌(அலை) அவர்களை தனது அமைப்பிலேயே படைத்தான்‌. (அறிவிப்பவர்‌: அபூஹாரைரா(ரலி), நூல்கள்‌: புகாரி ஹதீஸ்‌ எண்‌: 6227, முஸ்லிம்‌ ஹதீஸ்‌ எண்‌: 4: 2017)

நான் (கனவில்‌) எனது இறைவனை அழகான தோற்றத்தில்‌ கண்டேன்‌. அறிவிப்பவர்‌: முஆத்‌ இப்னு ஜபல்‌(ரலி), ஆதார நூல்கள்‌: அஹ்மத்‌: 5: 243 ஹதீஸ்‌ திர்மிதி 5: 368).

இதுபோன்ற நபிமொழிகள்‌ பல உண்டு. அவற்றை எந்த அதிருப்தியும்‌ இல்லாமல்‌ உளப்பூர்வமாக நம்பிக்கை கொள்வதுடன்‌, உண்மைப்படுத்துவதும்‌, ஏற்றுக்கொள்வதும்‌ முஸ்லிமின்‌ கடமையாகும்‌. 

இதுபோன்ற ஹதீஸ்களுக்கு மனிதன் தம்‌  தன்‌ மனோஇச்சைப்படி விளக்கம் கூறுவது தடைசெய்யப்பட்டதாகும்‌. எனினும்‌, அவை எவ்வாறு எடுத்தியம்புகிறதோ, அவ்வாறே நம்பிக்கை கொள்வது (அனைத்து முஸ்லிம்களின்‌) கடமையாகும்‌. எனவே, எவரேனும்‌ மனோ இச்சைப்படி விளக்கம்‌ கூறினால்‌ அல்லது இதுபோன்ற ஹதீஸ்களை மறுத்தால்‌, அவ்வாறு மறுப்பவர்‌ 'ஜஹமிய்யாக்களைச்‌' சார்ந்தவராவார்‌.

(ஜஹமிய்யாக்கள்‌ என்போர்‌ யார்‌? அவர்களது கொள்கைகள்‌ என்ன? போன்றவற்றிற்கு விரிவான விளக்கம்‌ இறுதி இணைப்பாக எழுதப்பட்டுள்ளன.)

52. இறைவனை இவ்வுலகில்‌ காணமுடியும்‌ என்று நம்பினால்‌ அவர்‌ நிச்சயமாக நிராகரிப்பவராகிவிடுவார்‌.

53. அல்லாஹ்வைப்‌ பற்றிச்‌ சிந்திப்பது 'பித்‌அத்‌” ஆகும்‌. ஏனெனில்‌, நபி(ஸல்‌) அவர்கள்‌, “(அல்லாஹ்வின்‌) படைப்புகளைப்‌ பற்றிச்‌ சிந்தியுங்கள்‌: (எனினும்‌) அல்லாஹ்வைப்‌ பற்றிச்‌ சிந்திக்காதீர்கள்‌.” (அறிவிப்பவர்‌: இப்னு அப்பாஸ்‌(ரலி), நூல்கள்‌: அல்‌-அஸ்பஹானி: அத்தர்கீப்‌ ஹதீஸ்‌ எண்‌: 673)

“ஏனெனில்‌ அல்லாஹ்வைப்‌ பற்றிச்‌ சிந்திப்பது உள்ளத்தில்‌ சந்தேகத்தை உண்டுபண்ணும்‌" என கூறினார்கள்‌. (அல்பானி ஸில்ஸிலா
ஸஹீஹா: 1788).

54. சிற்றெறும்பு, எறும்பு, ஈ போன்ற (சின்னஞ்‌ சிறிய) உயிரினங்கள்‌ உட்பட விஷஜந்துக்கள்‌, வனவிலங்குகள்‌, கால்நடைகள்‌, பறவைகள்‌ போன்ற அனைத்து உயிரினங்களும்‌ மாட்சிமை மிக்க அல்லாஹ்வின்‌ கட்டளைப்படியே செயற்படுகின்றன. இவை அல்லாஹ்வின்‌ அனுமதியின்றி எதையும்‌ செய்யமாட்டாது.

55. நிச்சயமாக மகத்துவம்‌ மிக்க இறைவன்‌ காலத்தின்‌ ஆரம்பம்‌ முதல்‌ உலகில்‌ நடந்தவைகளையும் இதுவரை நடைபெறாதவைகளையும்‌ மிகத்‌ துல்லியமாக அறிந்து ‌வைத்துள்ளான்‌. மேலும்‌, உலகில்‌ இனிமேல்‌ நடைபெறவுள்ள அனைத்தையுமே அவன்‌ திட்டமிட்டுத்‌ தீர்மானித்தும்‌ வைத்துள்ளான்‌ என்பன போன்ற விஷயங்களையும்‌ நம்பிக்கை கொள்வது அவசியமாகும்‌. உலகில நடந்து முடிந்தவைகளையோ, அல்லது இனிமேல்‌ நடக்க இருப்பவைகளையோ அல்லாஹ்‌ அறிய மாட்டான்‌ என்று எவரேனும்‌ கூறினால்‌ அவர்‌ மகத்தான இறைவனை நிராகரிக்கும்‌ நிராகரிப்பவர்‌ ஆகிவிடுவார்‌.

56. ஒரு பெண்ணுடைய திருமணம்‌ ஒரு பொறுப்பாளர்‌, நீதியுள்ள இரண்டு சாட்சியாளர்கள்‌, மஹர்‌ எனும்‌ திருமணக்கொடை போன்றவையின்றி செல்லுபடியாகாது. மஹர்‌ சிறு தொகையாகவோ, பெருந்தொகையாகவோ தீர்மானிக்கப்படலாம்‌.

மேலும், வலி எனும் பொறுப்பாளர் இல்லாத பெண்களுக்கு ஆட்சியாளரே வலியாவார். 

57. ஒரு மனிதன் தனது மனைவியை மூன்று முறை தலாக்  சொல்லிவிட்டால்‌, அப்பெண்ணை அவன்‌ மீண்டும்‌ மறுமணம் செய்து கொள்ள முடியாது. ஆனால்‌, தலாக்‌ சொல்லப்பட்ட அப்பெண்‌ வேறு ஒரு மனிதரை மணந்து, அவரும்‌ அப்பெண்ணைத்‌ தலாக்‌ சொல்லிவிட்டால்‌, முதற்கணவர்‌ மீண்டும்‌ அப்பெண்ணை மணந்து கொள்ள முடியும்.

58. அல்லாஹ்வைத்‌ தவிர வணக்கத்திற்குரிய நாயன்‌ வேறு யாருமில்லை என்றும்‌, நிச்சயமாக முஹம்மத்‌ (ஸல்‌) அவர்கள்‌ அல்லாஹ்வின்‌ அடியாரும்‌, (இறுதித்‌) தூதருமாவார்‌ என்றும்‌ சாட்சி கூறும்‌ மனிதரை பின்வரும்‌ மூன்று விஷயங்களில்‌ ஏதாவது காரணங்கள்‌ தவிர, வேறு ஏதேனும்‌ காரணங்களுக்காக கொலை செய்வது இஸ்லாத்தில்‌ அனுமதிக்கப்படவில்லை. அவையாவன: திருமணத்திற்குப்‌ பின்‌ விபச்சாரம்‌ புரிந்தவர்‌, அல்லது நம்பிக்கை கொண்டதன்‌ பின்னர்‌ மதம்‌ மாறியவர்‌, அல்லது நியாயமின்றி ஒரு முஃமினைக்‌ கொலை செய்தவர்‌ போன்றோராவர்‌. இத்தகையோர்‌ மேற்‌ கூறப்பட்ட குற்றங்களுக்காகக் கொலை செய்யப்படுவர். அன்றி, மறுமைநாள்‌ வரைக்கும் ஒரு முஸ்லி‌மை மற்றொரு முஸ்லிம்‌ கொலைசெய்வது கண்டிப்பாகத்‌ தடைசெய்யப்பட்‌டுள்ளது.

நபி(ஸல்‌) அவர்கள்‌ நவின்றார்கள்‌: அல்லாஹ்வைத்‌ தவிர வணக்கத்திற்குரியவன்‌ வேறெவெரும் இல்லை என்றும், என்னை அல்லாஹ்வின் தூதர் என்றும்‌ நம்பி, ஏற்றுக்‌ கொள்ளும்‌ மனிதரை, அவர்‌ திருமணத்திற்குப்பின்பு விபச்சாரம்‌ புரிந்தவராக இருந்தாலோ, (நியாயமின்றி) எவரையேனும்‌ அவர்‌ கொலை செய்திருந்தால்‌ அதற்குப்‌ பழிவாங்கும்‌ விதத்திலோ, தன்‌ மார்க்கத்தை விட்டு ஜமாஅத்‌ அமைப்பை விட்டுப்பிரிந்து சென்றவராக இருந்தாலோ - ஆக, இந்த மூன்றில்‌ ஏதாவது ஒரு காரணத்திற்காகவே தவிர, அவரைக்‌ கொலை செய்வது அனுமதிக்கப்பட்டதல்ல. (அறிவிப்பவர்‌: அப்துல்லாஹ்‌ பின்‌ மஸ்‌ஊத்‌(ரலி), ஆதார நூல்கள்‌: புகாரி ஹதீஸ்‌ எண்‌: 6878, முஸ்லிம்‌ ஹதீஸ்‌ எண்‌: 1676).

59. அழிவு என்பதை அல்லாஹ்‌ எவற்றுக்கெல்லாம்‌ விதியாக்கியுள்ளானோ அவை அல்லாஹ் விதித்தபடி அழிந்துவிடும்‌. சொர்க்கம்‌, ‌ நரகம்‌, அல்லாஹ்வின்‌ அர்ஷ்‌, குர்ஸி, லவ்ஹுல்‌ மஹ்பூள்‌, கலம்‌, ஸூர்‌ போன்றவை ஒருபோதும்‌ அழியாது. பின்னர்‌ படைப்பினங்கள்‌ எந்நிலையில்‌ மரணித்தனவோ, அல்லாஹ்‌ அவற்றை அந்நிலையிலேயே எழுப்புவான்‌. பின்னர் அவைகளை அல்லாஹ் தான் விரும்பியவாறு விசாரிப்பான்‌. மனிதர்களில்‌ ஒரு சாராரை சொர்க்கத்திற்கும்‌, ஒரு சாராரை நரகத்திற்கும் அனுப்புவான். நிலைத்திருப்பதற்கென்று படைக்கப்படாத ஏனைய ஏனைய படைப்புகளை நோக்கி, "மண்ணாகி விடுக!” என்று கூறுவான்‌. (அவ்வாறே அவை ஆகிவிடும்)

60. மறுமை நாளில்‌ மனிதர்கள்‌, வனவிலங்குகள்‌, விஷஜந்துக்கள்‌, ஏன்‌ ஒரு சிற்றெறும்புகூட மற்றொரு சிற்றெறும்பிடத்தில்‌ பழிவாங்கிக்‌ கொள்ள அனுமதி வழங்கப்படும்‌.

மேலும்  சொர்க்கவாசிகள்‌ நரகவாசிகளுக்கும்‌, நரகவாசிகள்‌ சொர்க்கவாசிகளுக்கும்‌ செய்துள்ள குற்றங்களுக்காக அவர்கள்‌ இருசாராரும்‌ தமக்கிடையே பழிக்குப்பழி வாங்கிக்கொள்ள (இறைவன்‌ அனுமதியளிப்பான்‌. மேலும்‌, சொர்க்கவாசிகள்‌ (உலகில்‌ வாழ்ந்தபோது தமக்கிடையே நிகழ்ந்தவைகளுக்காகப்‌) பரஸ்பரம்‌ பழிவாங்கிக்கொள்ள அனுமதியளிக்கப்படுவர்‌. அவ்வாறே நரகவாசிகள்‌ (உலகில்‌ வாழ்ந்தபோது தமக்கிடையே நிகழ்ந்தவைகளுக்காகப்‌) பரஸ்பரம்‌ பழிவாங்கிக்கொள்ள அனுமதிக்கப்படுவர்‌ என்பதை நம்பிக்கை கொள்ள வேண்டும்‌.

61. அமல்கள்‌ யாவும்‌ அல்லாஹ்வுக்காக மாத்திரம்‌ என்ற தூய எண்ணத்துடனேயே நிறைவேற்றப்பட வேண்டும்‌.

62. அல்லாஹ்வின்‌ விதியைக்‌ கொண்டு திருப்தியடைவதும்‌, அல்லாஹ்வின்‌ கட்டளைப்படி தனக்கு நிகழும்‌ துன்பம்‌ மற்றும்‌ துயரங்களைப்‌ பொறுத்துக்‌ கொள்வதும்‌ அவசியமாகும்‌. (விதியை பற்றி) இறைவன்‌ கூறியுள்ள அனைத்து விஷயங்களையும்‌ விசுவாசிக்க வேண்டும்‌. நன்மை, தீமை, விருப்பு, வெறுப்பு என்று அல்லாஹ்வின்‌ விதியின்படி ஏற்படக்கூடிய சகல விஷயங்கள்‌ மீதும்‌ நம்பிக்கை கொள்ள வேண்டும்‌. மேலும்‌, தனது அடியார்கள்‌ எதனைச்‌ செய்தார்கள்‌, இனிமேல்‌ எதனைச்‌ செய்வார்கள்‌ போன்ற விஷயங்களை இறைவன்‌ நிச்சயமாக அறிவான்‌. (இவை எதுவும் ‌அல்லாஹ்வின்‌ அறிவுக்கு எட்டாமலில்லை). இறை அறிவின் எல்லையை விட்டும் எந்தப் படைப்பும் வெளியேறிவிட முடியாது. வானங்களிலும் பூமியிலும் நடைபெறும் அனைத்து விஷயங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் நன்கறிந்துள்ளான். இறைவனால் ஒரு மனிதனுக்கென்று தீர்மானிக்கப்பட்டவைகள்‌ அவனை வந்தடையாமல்‌ தவறிவிடமாட்டாது. அவ்வாறே, பிறருக்கென்று தீர்மானிக்கப்பட்டவைகள்‌ மற்றுமொருவரை ஒருபோதும்‌ வந்தடையமாட்டாது. எல்லாம்‌ வல்ல அல்லாஹ்வுக்கு நிகராக எந்த ஒரு படைப்பாளனும்‌ இல்லை.

63. ஜனாஸாத்‌ தொழுகையில்‌ நான்கு தக்பீர்கள்‌ உள்ளன. இதுவே இமாம்களான மாலிக்‌ பின்‌ அனஸ்‌(ரஹ்‌), ஸுஃப்யான்‌ அஸ்‌ஸவரி(ரஹ்‌), ஹஸன்‌ பின்‌ ஸாலிஹ்‌(ரஹ்‌), அஹ்மத்‌ பின்‌ ஹம்பல்‌(ரஹ்‌) போன்றோரதும்‌, 'புகஹாக்கள்‌” எனப்படும்‌ மார்க்க அறிஞர்களதும்‌ கருத்துமாகும்‌. இவ்வாறே நபி(ஸல்‌) அவர்கள்‌ நவின்றுள்ளார்கள்‌

நஜாஷி மரணித்ததும்‌, அன்றே அச்செய்தியை நபி(ஸல்‌), அவர்கள்‌ மக்களுக்கு அறிவித்துவிட்டு, (முஸல்லா) திடலில்‌ அனைவரையும்‌ ஒன்று கூட்டி, வரிசையாக நிறுத்தி, நான்கு தக்பீர்கள்‌ கூறி ஜனாஸாத்‌ தொழுகை நடத்தினார்கள்‌.
(அறிவிப்பவர்‌ அபூ ஹுரைரா(ரலி), நூல்‌ புகாரி ஹதீஸ்‌ எண்‌: 1333).

64. பொழிகின்ற ஒவ்வொரு மழைத்துளியுடனும்‌ மலக்குகள்‌ இறங்கி, அவைகளை அல்லாஹ்‌ கட்டளையிட்ட இடங்களில்‌ வைக்கின்றனர்‌ என்ற விஷயத்தையும்‌ நம்பிக்கை கொள்ள வேண்டும்.

65. பதர்‌ யுத்த களத்தில்‌ கொலை செய்யப்பட்ட நிராகரிப்போர்களுடன்‌ நபி(ஸல்‌) அவர்கள்‌ பேசியபோது, மரணித்த நிராகரிப்பவர்கள்‌, அதனைச்‌ செவியுற்றனர்‌ என்ற விஷயத்தை நம்பிக்கை கொள்வது அவசியமாகும்‌. பின்னர்‌ அவர்கள்‌ 'கழீப்‌” என்னும்‌ பாழ்‌ கிணற்றில்‌ எறியப்பட்டனர்‌.

(நிச்சயமாக இறைத்தூதர்‌(ஸல்‌) அவர்கள்‌ கொல்லப்பட்டவர்களை மூன்று தினங்கள்‌ அப்படியே பத்ர்‌ யுத்தத்திலே விட்டுவைத்தார்கள்‌. பின்னர்‌ அவர்களிடையே வந்து, அவர்களை அழைத்து (பின்வருமாறு) கூறினார்கள்‌:
"ஹிசாமின்‌ மகன்‌ அபூஜஹ்லே!, கலபின்‌ மகன் உமய்யாவே, ரபீஆவின்‌ மகன்‌ உத்பாவே!, ரபீஆவின்‌ மகன்‌ ஷைபாவே! உங்கள்‌ இறைவன்‌ உங்களுக்கு வாக்களித்ததைப்‌ பெற்றுக்‌ கொண்டீர்களா? நிச்சயமாக நான்‌, எனது இறைவன்‌ எனக்கு வாக்களித்ததைப்‌ பெற்றுக்கொண்டேன்‌." இவ்வாறு நபி(ஸல்‌) அவர்கள்‌ கூறியதைக்‌ கேட்ட உமர்‌(ரலி) அவர்கள்‌ (நபியவர்களை நோக்கி), 'இறைத்தாதரே! இவர்கள்‌ மரணித்து சடலங்களாகிவிட்ட பின்னர்‌, நீங்கள்‌ கூறுவதை இவர்களால்‌ செவியேற்று பதிலளிக்க முடியுமா?” என்று வினவினார்‌. அ(தற்கு நபிய)வர்கள்‌, "எனது ஆத்மா எவனது கைவசம் உள்ளதோ அவன்‌ மீது சத்தியமாக! நான்‌ கூறுவதை உங்களை விடவும்‌, அவர்கள்‌ நன்கு செவியேற்கின்றனர்‌. எனினும்‌, அவர்களால்‌ பதிலளிக்க முடியாது” என்று கூறினார்கள்‌. பின்னர்‌ அவர்களை இழுத்துச்‌ சென்று 'கழீபு பத்ர்‌” எனும்‌ இடத்தில்‌ போடும்படி ஏவவே, அவ்வாறு செய்யப்பட்டனர்‌. (அறிவிப்பவர்‌: அனஸ்‌பின்‌ மாலிக்‌(ரலி), ஆதார நூல்‌: முஸ்லிம்‌ ஹதீஸ்‌ எண்‌: 2874).

66. ஒரு மனிதன்‌ நோய்வாய்பட்டால்‌ அவருக்கு நோய்‌ ஏற்பட்டதற்காக இறைவன் நற்கூலி வழங்குகிறான்‌ என்பதை நம்பிக்கை கொள்ள வேண்டும்‌. (அப்துல்லாஹ்‌ பின்‌ மஸ்‌ஊத்‌(ரலி) கூறினார்கள்‌: நபி(ஸல்‌) அவர்கள்‌ நோய்வாய்ப்பட்டு காய்ச்சலால்‌ சிரமப்பட்டுக்‌ கொண்டிருந்தபோது நான்‌ அவர்களிடம்‌ சென்றேன்‌. 'தாங்கள்‌ கடும்‌ நோயால்‌ சிரமப்படுகிறீர்களே (அல்லாஹ்வின்‌ தூதரே!) தங்களுக்கு இதனால்‌, இரு (மடங்கு) நன்மைகள்‌ கிடைக்கும்‌ என்பதாலா?” என்று கேட்டேன்‌. அதற்கு அவர்கள்‌, 'ஆம்‌! எந்த ஒரு முஸ்லிமுக்கும்‌ எந்தத்‌ துன்பம்‌ நேர்ந்தாலும்‌, அதற்குப்‌ பதிலாக, மரத்தின்‌ இலைகள்‌ உதிர்வதைப் போன்று அவருடைய பாவங்களை அல்லாஹ்‌ உதிரச்‌ செய்யாமல்‌ இருப்பதில்லை” என்று கூறினார்கள்‌. (ஆதார நூல்‌: புகாரி ஹதீஸ்‌ எண்‌: 5647, முஸ்லிம்‌ ஹதீஸ்‌ எண்‌: 2571).

67. (ஷஹீதானவர்கள்‌) இறைவழி போராட்டத்தில்‌ மரணித்தவர்களுக்கான கூலியை இறைவன்‌(அவ்வேளையிலேயே) வழங்குகிறான்‌ என்பதை நம்பிக்கை கொள்ள வேண்டும்‌.

68. குழந்தைகள்‌ உலகில்‌ (வாழுகின்றபோது) நோய்‌, நொடிகள்‌ ஏற்பட்டால்‌ அதனால்‌ வேதனைப்படுகின்றன என்பதை நம்பிக்கை கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு இதனால்‌ எவ்வித வேதனையும்‌ ஏற்படுவதில்லை என்று அப்துல்‌ வாஹிதின்‌ சகோதரியின்‌ மகன்‌ பக்ர்‌ என்பவர்‌ கூறிய கருத்து பொய்யானதாகும்‌.

69. அல்லாஹ்‌ தனது அருளினால்‌ அரவணைத்துக்‌ கொண்டாலே தவிர, எவரும்‌ சுவனம்‌ செல்ல முடியாது. மேலும்‌, அவன்‌ பாவம்‌ செய்த மனிதனை அப்பாவத்திற்காக தண்டிக்கின்றபோது, பாவத்தின்‌ அளவைவிட அதிகமாக ஒருபோதும்‌ தண்டிக்க மாட்டான்‌. எனவே, வானங்கள்‌, பூமியிலுள்ள நல்லவன்‌, கெட்டவன்‌ என யாரை அவன்‌ தண்டித்தாலும்‌ அவர்களில்‌ யாருக்கும்‌ அவன்‌ அநியாயம்‌ செய்ய மாட்டான்‌. எனவே மகத்துவமிக்க இறைவனை அநியாயக்காரன்‌ என்று சொல்லக்கூடாது. ஏனெனில்‌ தனக்கு உரிமையில்லாதவைகளை அநியாயமாக எடுப்பவர்களை மாத்திரமே அல்லாஹ்‌ தண்டிப்பான்‌. படைத்து, பரிபாலித்து ஆட்சிசெய்தல்‌ ஆகிய இரண்டுமே அல்லாஹ்வுக்குச்‌ சொந்தமானவைகளே!”

எனவே, உலகமும்‌ அதிலுள்ள படைப்புகளும்‌ அவனுடையதாகும்‌. அவன்‌ செய்பவை பற்றி யாரும்‌ அவனைக்‌ கேட்க முடியாது. ஆனால், (அவர்கள்‌ செய்பவை பற்றி) அவர்கள்‌ கேட்கப்படுவார்கள்‌. எனவே, ஏன்‌? எதற்கு? எப்படி? என்று அல்லாஹ்வின்‌ ஏற்பாடுகள்‌, மற்றும்‌ அவனது விஷயங்களில்‌ கேள்விகள்‌ கேட்க யாருக்கும்‌ முடியாது. மேலும்‌, அல்லாஹ்வுக்கும்‌, அவனது படைப்புகளுக்கும்‌ மத்தியில்‌ நடைபெறுபவைகளில்‌ எவரும்‌ தலையிடவும்‌ முடியாது.

70. நபி(ஸல்‌) அவர்களது செய்திகளில்‌ ஒன்றையேனும்‌ புறக்கணித்தல்‌, அல்லது நபித்தோழர்களின்‌ செய்திகளை விமர்சித்து குறைகூறுதல்‌, அவற்றை ஏற்றுக்கொள்ளாதிருத்தல்‌ போன்ற விஷயங்களில்‌ ஒரு மனிதன்‌ ஈடுபட்டால்‌, அவர்‌ முஸ்லிமா என்று சந்தேகிக்கவேண்டும்‌.ஏனெனில் இவர்‌‌ மிகக்‌ கெட்ட பேச்சையும்‌, மிகக்‌ கெட்ட கொள்கையையும்‌ கொண்டவராவார்‌. ஏனெனில்‌, இவர்‌ விமர்சித்ததும்‌, குறை கூறியதும்‌ சாதாரண மனிதரை அல்ல. மாறாக இறைத்தூதரையும்‌, அவரது தோழர்களையுமே. மேலும்‌, அல்லாஹ் பற்றிய அறிவு, அல்குர்ஆன் பற்றிய விளக்கம், நன்மை தீமை பற்றிய விளக்கம்‌ ஏன்‌ இம்மை, மறுமை போன்ற சகல விஷயங்களையும்‌ நிச்சயமாக நாம்‌ கற்றுக்கொண்டது நபித்தோழர்களது அறிவிப்புகளைக்‌ கொண்டேயாகும்‌.

71. ஹதீஸ்களை விளங்கிக்‌ கொள்வதற்கு அல்குர்‌ஆன்‌ அவசியப்படுவதைவிட அல்குர்‌ஆனை விளங்கிக்‌ கொள்வதற்கு ஹதீஸ்கள்‌ மிக மிக அவசியமாகும்‌.

72. விதி என்பது அல்லாஹ்‌ மறைத்து வைத்துள்ள அவனுடைய ரகசியங்களில்‌ ஒன்று. எனவே, விதியைப்‌ பற்றி பேசுதல்‌, விவாதித்தல்‌, தர்க்கித்தல்‌ போன்ற அனைத்துமே தடைசெய்யப்பட்டதாகும்‌. இதனால்தான்‌ மகத்தான இறைவன்‌ விதிபற்றி பேசுவதை நபிமார்களுக்கே தடை செய்தான்‌. அதே
போன்று இறைத்தாதர்‌ (ஸல்‌) அவர்களும்‌ விதி பற்றித்‌ தர்க்கிப்பதை விலக்கியுள்ளார்கள்‌. மேலும்‌, ஸஹாபாக்கள்‌, தாபிஈன்கள்‌ உட்பட இஸ்லாமிய அறிஞர்களும்‌, மார்க்கத்தில்‌ பேணுதல்‌ உள்ளவர்களும்‌ விதிபற்றி விவாதிப்பதை வெறுத்துள்ளனர்‌. எனவே, விதியை ஏற்றுக்‌ கொள்வதும்‌, அதற்குக்‌ கட்டுப்படுவதும்‌, அதனை நம்புவதும்‌ கடமையாகும்‌. நபி(ஸல்‌) அவர்கள்‌ விதிபற்றி பொதுவாகக்‌ கூறிய விஷயங்களை (மனதில்‌ எவ்வித அதிருப்தியுமின்றி) நம்பிக்கை கொள்ள வேண்டும்‌. மாறாக, அவைகள்‌ பற்றி மேலதிகமாக சிந்திக்காமலும்‌, விவாதங்களில்‌ ஈடுபடாமலும்‌ இருப்பது அவசியமாகும்.

73. ஜிப்ரீல்‌(அலை) அவர்கள்‌ புறாக்‌ என்னும்‌ வாகனத்தில்‌ இறைத்தாதர்‌ ‌(ஸல்‌) அவர்களை அழைத்துக்‌ கொண்டு ஏழுவானங்களையும் தாண்டிச்‌ சென்றனர்‌. இப்பயணத்தில்‌ நபி(ஸல்) அவர்கள் அர்ஷ் வரை சென்று அல்லாஹ்வுடன் உரையாடினார்கள். மேலும் சுவனத்தில் நுழைந்தார்கள். நரகத்தைக்‌ கண்டார்கள்‌. மேலும்‌, இப்பயணத்திலே மலக்குகளை கண்டார்கள்‌. முந்தைய நபிமார்களால்‌ நல்வாழ்த்துக்கள்‌ கூறப்பட்டார்கள்‌. அர்ஷ்‌, குர்ஸீ போன்றவற்றின்‌ சுவர்கள்‌, வானங்கள்‌, பூமி போன்றவற்றில்‌ உள்ள அனைத்தையும்‌ தம்‌ கண்களால்‌ கண்டார்கள்‌. (இப்பயணத்தின்‌ போது) இவ்விரவில்தான்‌ தொழுகை கடமையாக்கப்பட்டது. இந்நிகழ்வுகள்‌ அனைத்தையும்‌ ஒரே இரவில்‌ முடித்துக்‌ கொண்டு, நபி (ஸல்‌) அவர்கள்‌ மக்காவிற்கு திரும்பினார்கள்‌. இந்நிகழ்ச்சி கனவிலன்றி நினைவிலேயே நிதர்சனமாக நடைபெற்றது என்பதையும்‌ நம்பிக்கை கொள்ள வேண்டும்‌.

74. இஸ்லாத்திற்காக தம்‌ உயிரை அர்ப்பணித்த தியாகிகளின்‌ (ஷுஹதாக்களின்‌) உயிர்கள்‌ அர்ஷுக்குக்‌ கீழே விளக்குகளில்‌ காணப்படும்‌. அவை சுவனத்தில்‌ பறந்து திரியும்‌. மேலும் முஃமின்களின்‌ உயிர்கள்‌ அர்ஷுக்குக்‌ கீழே (இல்லிய்யீனில்‌) காணப்படும்‌. இறை நிராகரிப்பாளர்களின்‌ உயிர்களும்‌, பாவிகளின்‌ உயிர்களும்‌ ஸிஜ்ஜீனில்‌ காணப்படும்‌.

அல்லாஹ்வின்‌ தூதர்‌ அண்ணல்‌ நபி(ஸல்‌) அவர்கள்‌ நவின்றார்கள்‌:
(ஷுஹதாக்கள்‌) அவர்களது உயிர்கள்‌ பசுமையான பறவைகளின்‌ வயிற்றுக்குள்ளே காணப்படும்‌. அவற்றுக்கு அர்ஷில்‌ தொங்கிக்‌ கொண்டிருக்கும்‌ விளக்குகள்‌ காணப்படும்‌. தாம்‌ விரும்பியவாறு அவை சுவனத்தில் பறந்து திரிந்துவிட்டு, பின்னர் அவ்விளக்குகளை நோக்கி வரும்‌. (அறிவிப்பவர்‌: அப்துல்லாஹ் பின்‌ மஸ்‌ஊத்‌(ரலி), ஆதார நூல்‌: முஸ்லிம்‌ -ஹதீஸ்‌ எண்‌: 1878).
‌ ‌
75. மரணித்தவர்‌ கப்ரில்‌ உயிர்கொடுக்கப்பட்டு எழுப்பி உட்கார வைக்கப்படுவார்‌. பின்னர்‌ முன்கர்‌, நகீர்‌ எனப்படும்‌ இரண்டு மலக்குகள்‌ அவர்களிடம்‌ வந்து ஈமான்‌, ஷரீஅத்‌ சார்ந்த விஷயங்களைப்‌ பற்றி விசாரிப்பார்கள்‌. பின்னர்‌, நோவினையில்லாமல்‌ (மீண்டும்‌) இலகுவாக உயிர்கள்‌ கைப்பற்றப்படும். மேலும் மரணித்தவர் தன்னை தரிசிக்க வருபவரை பற்றி அறிவார். முஃமின் சொகுசாக இன்பமனுபவித்துக் கொண்டிருக்கும் அதேவேளை இறைவனை நிராகரித்தோர்‌, பாவிகள்‌ போன்றோர்‌ அல்லாஹ்‌ நாடியவாறு தண்டிக்கப்பட்டுக் கொண்டிருப்பார்கள்‌ போன்ற விஷயங்களை விசுவாசிக்க வேண்டும்‌.

(தரிசிப்பவர்‌ பற்றி மரணித்தவர்‌ அறிவார்‌ என்பது பற்றி ஆதாரபூர்வமான எந்த செய்தியும்‌ இடம்‌ பெற்றுள்ளதாகக்‌ காண முடியவில்லை)

76. அல்லாஹ்‌ தன்‌ படைப்புகளுக்கு ஒரு குறிப்பிட்ட தவணையை விதித்துள்ளான். இத்தவணை முடிந்தவுடன் இயற்கை மரணத்தின் மூலமோ அல்லது விபத்துக்களின் மூலமோ அவைகள் உடல்களை விட்டுப் பிரிந்து விடுகிறன்றன.

77. நிச்சயமாக அல்லாஹ்‌ தூர்ஸீனா மலையில்‌ வைத்து இம்ரானின்‌ மகன்‌ மூஸா(அலை) அவர்களுடன்‌ நேரடியாகப்‌ பேசினான்‌. அல்லாஹ்‌ தன்னோடு உரையாடிய சப்தத்தை மூஸா(அலை) அவர்கள்‌ தமது காதுகளால்‌ செவியுற்றார்கள்‌. அவர்கள்‌ செவியுற்ற சப்தம்‌ அல்லாஹ்‌ அல்லாத வேறு எதனுடைய‌ சப்தமும்‌ அல்ல என்பதை ஒவ்வொரு இறைவிசுவாசியும் நம்பிக்கை கொள்ள வேண்டும்‌. மாறாக, அல்லாஹ்‌ அவர்களுடன்‌ பேசவுமில்லை, அல்லாஹ்‌ பேசிய சப்தத்தை மூஸா(அலை) அவர்கள்‌ கேட்கவுமில்லை என்று கூறுபவர்கள்‌ இறை நிராகரிப்பாளர்களே!

78. பகுத்தறிவு அல்லாஹ்‌ வழங்கிய அருட்கொடைகளில்‌ ஒன்று அல்லாஹ்‌ தான்‌ நாடிய அளவு சிந்திக்கின்ற ஆற்றலை ஒவ்வொரு மனிதனுக்கும்‌ வழங்கியுள்ளான்‌. இறைவனின்‌ படைப்புகளாகிய வானங்களுக்கும் ஒரு சிற்றெறும்புக்கும் இடையேயுள்ள அளவில் எவ்வளவு பெரிய வித்தியாசம் காணப்படுகின்றதோ அதுபோன்றே மனிதர்களும்‌ தத்தமக்கு வழங்கப்பட்டுள்ள ஆற்றலில்‌ வித்தியாசப்படுகின்றனர்‌. எனவே, ஒவ்வொரு மனிதனும்‌ தமக்கு வழங்கப்பட்டுள்ள பகுத்தறிவின்‌ அளவிற்கேற்ப அல்லாஹ்‌ விதித்த கடமைகளை நிறைவேற்றுவது அவசியமாகும். மேலும் பகுத்தறிவானது மனிதன் தேடிப் பெற்றுக் கொள்ளும் ஓர் ஆற்றல் அல்ல. மாறாக பகுத்தறிவானது மகத்துவம் மிக்க இறைவன் வழங்கிய பேரருளாகும்‌.

79. அல்லாஹ்‌ தனது அடியார்களில்‌ 'சிலரை ஏனையோரைவிட மார்க்க விஷயங்களிலும்‌, உலக விஷயங்களிலும்‌ மேன்மைப்படுத்தி வைத்துள்ளான்‌. இது இறைவன்‌ வகுத்தளித்த நீதியாகும்‌. அவன்‌ யாருக்கும்‌ அநியாயம்‌ செய்பவனல்ல. (இறைவனை அநியாயக்காரன்‌ என்றோ, துரோகமிழைப்பவன்‌ என்றோ கூறக்கூடாது. அல்லாஹ்‌ இறை விசுவாசிகளுக்கும்‌, இறை நிராகரிப்பாளர்களுக்கும்‌ சமமாகவே அருள்பாலிக்கிறான்‌ என்று கூறுவது வழிகேடாகும்‌. மாறாக, நிராகரிப்பாளார்களை விட இறை விசுவாசிகளையும், பாவிகளைவிட அவனுக்கு வழிபடுவோரையும், பாவத்தின் மூலம்‌ இழிவுக்குள்ளானவனைவிட, பாவத்திலிருந்து தன்னைப்‌ பாதுகாத்துக் கொண்டவனையும அல்லாஹ்‌ கண்ணியப்படுத்தியே வைத்துள்ளான். இது அல்லாஹ்வின் அருளாகும்‌. இதனை அல்லாஹ்‌ தான்‌ நாடியவர்களுக்கு வழங்குகிறான்‌. தான்‌ நாடியவர்களுக்கு வழங்காமல்‌ தடுத்தும்‌ கொள்கிறான்‌.

80. மார்க்க விஷயங்களை நல்லவர்‌, கெட்டவர்‌ என்ற பாரபட்சமின்றி முஸ்லிம்கள் அனைவருக்கும் உபதேசம் செய்வது கடமையாகும். எனவே நல்லுபதேசம் செய்யாதவர் முஸ்லிம்களுக்கு மோசடி செய்பவராவார். முஸ்லிம்களுக்கு மோசடி செய்பர் இஸ்லாமிய மார்க்கத்திற்கு மோசடி செய்பவராவார்‌. இஸ்லாமிய மார்க்கத்திற்கு மோசடி செய்பவர்‌ அல்லாஹ்வுக்கும்‌ அவனது தூதருக்கும் முஃமின்களுக்கும் மோசடி செய்பவராவார்‌.

81. எல்லாம்‌ வல்ல அல்லாஹ்‌ யாவற்றையும்‌ நன்கு செவியுறுவோனும்‌, அனைத்தையும்‌ நன்கு பார்ப்பவனும்‌ ஆவான்‌. மேலும்‌, அவன்‌ யாவற்றையும்‌ மிக்க அறிந்தவன்‌. அவனது இரு கரங்களும்‌ விரிந்துள்ள. அல்லாஹ்‌ படைப்பினங்களைப்‌ படைக்கும்‌ முன்னரே, அவை தனது கட்டளைகளுக்கு மாறு செய்யும்‌ என்பதை அறிந்திருந்தான்‌. அவனது முன்னறிவு பற்றி படைப்பினங்கள் நடைமுறை வாழ்வில் காணமுடிகிறது. இவ்வாறு அறிந்திருந்தும்‌, தனது படைப்பினங்களுக்கு இஸ்லாமிய மார்க்கத்தின்‌ மூலம்‌ நேர்வழி காட்டி தனது பேருதவியால்‌ எல்லா வகையான அருட்பாக்கியங்களையும்‌ அவர்களுக்கு வழங்கினான்‌. எனவே, எல்லாப்‌ புகழுக்கும்‌ உரியவன்‌ வல்ல அல்லாஹ்‌ ஒருவனே!

82. இப்னு அப்பாஸ்‌(ரலி) அவர்கள்‌ கூறினார்கள்‌: மரணத்தின்போது கூறப்படுகின்ற நற்செய்திகள்‌ மூன்று வகைப்படும்‌. அவையாவன:

(1)அல்லாஹ்வின்‌ அடியானே! அல்லாஹ்வின்‌ திருப்பொருத்தத்‌தையும்‌, சுவனத்தையும்‌ கொண்டு மகிழ்ச்சி பெறு! 
(2)அல்லாஹ்வின்‌ விரோதியே! அல்லாஹ்வின்‌ கோபத்தையும்‌, நரகத்தையும் கொண்டு மகிழ்ச்சி பெறு!
(3) அல்லாஹ்வின்‌ அடியானே! உனது பாவங்களுக்காகத்‌ தண்டிக்கப்பட்ட பின்னர்‌ சுவர்க்கம்‌ கிடைக்கும்‌ என்பது கொண்டு மகிழ்ச்சி பெறு!

83. சுவர்க்கத்தில்‌ முஃமீன்கள்‌ அல்லாஹ்வைக்‌ காண்பார்கள்‌. ஆண்கள்‌, பெண்கள்‌, கணர்பார்வையற்றவர்கள்‌ என்று அனைவரும்‌ தமது கண்களால்‌ அல்லாஹ்வைப்‌ பார்த்து மகிழ்வர்‌. இதனை நம்பிக்கை கொள்வது ஒவ்வொரு முஸ்லிமின்‌ மீதும்‌ கடமையாகும்‌. இதனை மறுப்பது இறை நிராகரிப்பாகும்‌.

இதுபற்றி நபி(ஸல்‌) அவர்கள்‌ பின்வருமாறு கூறினார்கள்‌:
"நீங்கள்‌ முழு நிலவுள்ள இரவில்‌ சந்திரனைக்‌ காண்பதுபோன்று, உங்கள்‌ இறைவனை நிச்சயமாகக்‌ காண்பீர்கள்‌. அவனை காண்பதில்‌ ஒருவரையொருவர்‌ நெருக்க(முந்திக்‌) கொள்ளத்‌ தேவையில்லை.” (அறிவிப்பவர்‌: ஜரீர்‌(ரலி), ஆதார நூல்: புகாரி - ஹதீஸ்‌ எண்‌: 554).

(இறைவனை முதன்‌ முதலில்‌ பார்ப்பவர்கள்‌ கண்பார்வையற்றவர்‌களே என்ற செய்தி பலவீனமானது. ஆதார நூல்‌: அல்லாலகாஈ, சுன்னா: 924.)

84. இஸ்லாமிய வரலாற்றில்‌ நாஸ்திகம்‌, இறை நிராகரிப்பு, சந்தேகம்‌, பித்‌அத்‌, வழிகேடு, மார்க்க விஷயங்களில்‌ தடுமாற்றம்‌ போன்ற அனைத்துத்‌ தீமைகளும்‌ ஏற்பட்டதற்குக்‌ காரணம்‌ தத்துவக்‌ கலையும்‌, தத்துவவாதிகளும்‌, வீண்விவாதங்களும்‌, வாதாட்டங்களும்‌, சர்ச்சைகளுமே என்று கூறினால்‌ மிகையாகாது. 'நிராகரிப்பவர்களைத்‌ தவிர (வேறு எவரும்‌) அல்லாஹ்வின்‌ அத்தாட்சிகளில்‌ தர்க்கம்‌ புரிய மாட்டார்கள்‌.” (அருள்மறை குர்‌ஆனின்‌ 40 வது அத்தியாயம் ‌ஸுரத்துல்‌ முஃமின்‌ -04வது வசனம்‌) என்று இறைவன்‌ அருள்மறை குர்‌ஆனில்‌ கூறியிருக்க, அதனை மீறி மனிதன்‌ தத்துவக்‌ கருத்துக்கள்‌ கூறவும்‌, அவைகளை விவாதிக்கவும்‌ துணிவது அதிசயமானதே! எனவே, மார்க்க விஷயங்களில்‌ இடம்பெறும்‌ ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மனதில்‌ எந்தவித அதிருப்தியுமின்றி ஏற்றுக் கொண்டு, அல்லாஹ்வின் வசனங்களில் தர்க்கம் புரியாமல் நாவைப் ‌பேணிக்‌கொள்ள வேண்டும்‌.

85. நரகத்தில்‌ அல்லாஹ்‌ படைப்பினங்களைத் தண்டிப்பான்‌. இதற்காக அவன்‌ விலங்குகள்‌, சங்கிலிகள்‌ போன்றவற்றைத்‌ தயார்‌ செய்து வைத்துள்ளான்‌. நரக நெருப்பானது நரகவாசிகளின்‌ மேல்புறத்தையும்‌, கீழ்புறத்தையும்‌, உட்புறத்தையும்‌ சுற்றி வளைத்துக்‌ கொள்ளும்‌. இக்கருத்தை ஜஹமியாக்கள்‌ எனப்படுவோர்‌ மறுக்கின்றனர்‌. ஏனெனில்‌, ஜஹமியாக்களைச்‌ சார்ந்த ஹிஷாம்‌ பின்‌ அம்ர்‌ அல்பூதி என்பவர்‌, 'அல்லாஹ்‌ மனிதனை நரகவாயிலில்‌ மாத்திரம்தான்‌ தண்டிப்பான்‌” என்ற ஒரு கருத்தைக்‌ கூறியுள்ளார்‌. இவரது இக்கருத்து அல்லாஹ்வும்‌, அவனது தூதர்‌(ஸல்‌) அவர்களும்‌ கூறியுள்ள கருத்துக்கு முற்றிலும் முரணானதாகும்.

86. தினமும்‌ ஐவேளை தொழுவது கடமையாகும்‌. இவற்றின்‌ எண்ணிக்கை மற்றும் நேரங்களை கூட்டுதல் குறைத்தல் செய்வதற்கு யாருக்கு அதிகாரம்‌ இல்லை. மேலும்‌, பிரயாணத்தின்போது மஃரிப் தவிர்ந்த ஏனைய தொழுகைகளை சுருக்கித் தொழுவது நபிவழியாகும். ஐவேளை தொழுகையின் எண்ணிக்கைகளை கூட்டுவதும் அல்லது குறைப்பதும் நூதனம் (பித்அத்) எனும் வழிகேடாகும். இவ்வாறு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ நிறைவேற்றப்படும் தொழுகைகளை இறைவன் ஏற்றுக்கொள்ள மாட்டான்‌. ஏனெனில்‌, கடமையான ஐவேளைத்‌ தொழுகைகள்‌ நேரம்‌ குறிக்கப்பட்ட தொழுகைகளாகும்‌. எனவே, இவற்றைக்‌ குறித்த நேரத்தில்‌ நிறைவேற்றுவது கடமையாகும்‌. எனினும்‌, இரண்டு சந்தர்ப்பங்களில்‌ மாத்திரம்‌ இக்கடமையான தொழுகைகளை குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்றுவதில் விதிவிலக்கு உண்டு; ஒன்று மறதி. ஞாபக மறதியின் காரணமாக கடமையான தொழுகையை குறிப்பிட்ட நேரத்தில நிறைவேற்றவில்லையெனில்‌, நினைவுக்கு வரும்போது
உடனடியாக அத்தொழுகையை நிறைவேற்ற வேண்டும்‌. இரண்டாவது பிரயாணி. இவர்‌ இரு மாறுபட்ட வேளைகளில்‌ தொழக்கூடிய தொழுகைகளை, தாம்‌ விரும்பும்‌ அல்லது அவருக்கு வசதியான நேரத்தில்‌ முற்படுத்தியோ, அல்லது பிற்படுத்தியோ தொழமுடியும்.

(அதாவது ளுஹர்‌, அஸர்‌ இரண்டையும்‌ சேர்த்து முற்படுத்தி ளுஹருடைய நேரத்திலோ, அல்லது பிற்படுத்தி அஸருடைய நேரத்திலோ தொழ அனுமதியுண்டு. மேலும்‌, மஃரிப்‌, இஷா ஆகிய தொழுகைகளையும்‌ சேர்த்து முற்படுத்தி மஹ்ரிபுடைய
நேரத்திலோ அல்லது பிற்படுத்தி இஷாவுடைய நேரத்திலோ தொழவும்‌ அனுமதியுண்டு.)

87. தங்கம்‌, வெள்ளி, கனிவர்க்கங்கள்‌, தானியங்கள்‌ போன்ற அனைத்திலும்‌ ஸகாத்‌ வாஜிபாகும்‌. இவைகள்‌ பற்றி இறைத்தூதர்‌ (ஸல்‌) அவர்கள்‌ நவின்ற ஏராளமான ஹதீஸ்கள்‌ காணப்படுகின்றன. எனவே, ஒரு மனிதன்‌ தனது சொத்துக்களுக்குரிய ஸகாத்தை தாமாகவே பகிர்ந்து கொடுக்கவோ, அல்லது இமாமிடம்‌ ஒப்படைத்துவிடவோ அனுமதியுண்டு.

88. இஸ்லாத்தின்‌ முதலாவது கடமை 'வணக்கத்திற்குத்‌ தவிர வேறு யாரும்‌ இல்லை என்றும்‌, முஹம்மது நபியவர்கள்‌ அல்லாஹ்வின்‌ அடியாரும்‌, தகுதியானவன்‌ அல்லாஹ்வைத்‌ தூதருமாவார்கள்’‌ என்றும்‌ சாட்சி சொல்வதாகும்‌.

89. அல்லாஹ்வின்‌ கட்டளைகளை அவன்‌ கூறியுள்ளவாறே, பின்பற்ற வேண்டும்‌. அவற்றுக்கு மாறு செய்யக்கூடாது. அல்லாஹ்வின்‌ கட்டளைகள்‌ யாவும்‌ அல்லாஹ்‌ மனிதனுக்கு இட்ட வரம்புகளாகும் அவற்றை மீறவும் கூடாது.

90. ஷரீஅத்தில்‌ இடம்பெற்றுள்ள அனைத்து விடயங்களையும்‌ முழுமையாக விசுவாசம்‌ கொள்வது கடமையாகும்‌.

91. கொடுக்கல்‌, வாங்கல்‌ சம்பந்தமான எல்லாச்‌ சட்டங்களும்‌ அருள்மறை குர்‌ஆனிலும்‌, அல்லாஹ்வின்‌ தூதர்‌ அண்ணல்‌ நபி(ஸல்‌) அவர்களின்‌ வழிமுறையிலும்‌ தெளிவாக உள்ளன. எனவே, இஸ்லாமிய கொடுக்கல்‌, வாங்கல்‌ சட்டங்களை மாற்றி
அமைத்தல்‌, வியாபாரத்தில்‌ மோசடி, அநியாயம்‌, துரோகம் செய்தல்‌ போன்றன அனுமதிக்கப்பட்டதன்று. அருள்மறை குர்ஆன் கூறும் இஸ்லாமிய கொடுக்கல் வாங்கல் சட்டங்களுக்கு. மாற்றமான வியாபாரம்‌ தடை செய்யப்பட்டதாகும்‌. எனவே, இஸ்லாமிய சட்டங்களுக்கு உட்பட்டு முஸ்லிம்களின்‌ சந்தைகளில்‌ நடைபெறும்‌ வியாபாரம்‌ அனைத்தும்‌ ஆகுமானவையாகும்‌.

92. ஒரு அடியான்‌ உயிருள்ளவரை அன்பு (கருணை) உள்ளவனாக இருத்தல்‌ அவசியமாகும்‌. ஏனெனில்‌, மனிதன்‌ எல்லா வகையான நற்செயல்களில்‌ ஈடுபட்டாலும்‌ கூட, தான்‌ எந்நிலையில்‌ மரணிப்பான்‌? தனது இறுதி முடிவு எப்படி அமையும்‌? எந்நிலையில்‌ அல்லாஹ்வை சந்திப்பான்‌? போன்ற விஷயங்களை அவன்‌ அறியாதவனாக உள்ளான்‌.

93. தனக்குத்தானே அநீதி இழைத்துக்கொண்ட பாவிகள்‌ எப்போதும்‌, அல்லாஹ்‌ தனது பாவங்களை மன்னிப்பான்‌ என்று இறைவனிடத்தில்‌ ஆதரவு வைக்க வேண்டும்‌. குறிப்பாக மரணப்படுக்கையில்‌ இருப்பவர்கள்‌ மேற்குறிப்பிட்டவாறு ஆதரவு வைப்பது அவசியமாகும்‌. மேலும்‌, அல்லாஹ்வைப்பற்றி எப்போதும்‌ அவன்‌ நல்லெண்ணத்துடனேயே இருக்க வேண்டும்‌. அதேபோன்று, தனது பாவங்களை எண்ணிக்‌ கவலைப்படுவதுடன்‌, அல்லாஹ்வின்‌ தண்டனையை எண்ணி பயப்படவும்‌ வேண்டும்‌. அல்லாஹ்‌ இத்தகைய மனிதனை மன்னித்து கருணை காட்டினால்‌, அது அல்லாஹ்வுடைய பேரருள்‌. அதேபோன்று, அல்லாஹ்‌ இவனை வேதனை செய்தால்‌, அது அம்மனிதனுடைய பாவத்திற்கான தண்டனையே தவிர வேறில்லை.

94. தனது உம்மத்தில்‌ மறுமை நாள்வரை ஏற்படக்கூடிய சில விஷயங்களை அல்லாஹ்‌ நபி(ஸல்‌) அவர்களுக்கு காண்பித்து கொடுத்தாள்‌ என்பதை நம்பிக்கை கொள்ளவேண்டும்‌.

95. நபி(ஸல்‌) அவர்கள்‌, “எனது உம்மத்தினர்‌ 73 பிரிவுகளாகப்‌ பிரிவர்‌. அவர்களில்‌ ஒரு கூட்டத்தினரைத்‌ தவிர, ஏனைய அனைவரும்‌ நரகம்‌ செல்வர்‌. அவர்கள்தான்‌ இக்கூட்டத்தைச்‌ சார்ந்தோர்‌” என்று கூறினார்கள்‌. அப்போது, 'அல்லாஹ்வின்‌ தாதரே! அவர்கள்‌ யார்‌? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள்‌, 'இன்று நானும்‌, எனது ஸஹாபாக்களும்‌ இருக்கின்ற இந்தக்‌ கொள்கையைப்‌ பின்பற்றி நடப்பவர்கள்‌” என்று பதிலளித்தார்கள்‌. (அறிவிப்பவர்‌: அபூ-ஹுரைரா(ரலி) அவர்கள்‌. ஆதார நூல்‌: திர்மிதி).

கலீபா உமர்‌(ரலி) அவர்களின்‌ ஆட்சிக்காலம்‌ வரை மார்க்க: விஷயங்கள்‌ அனைத்தும்‌ (பிரச்சினைகளின்றி) மிகச்‌ சிறப்பான நிலையில்‌ இருந்தன. இதேபோன்றுதான்‌ கலீபா உஸ்மான்‌(ரலி) அவர்களது ஆட்சிக்காலத்திலும்‌ காணப்பட்டது. எனினும்‌, அவர்கள்‌ கொலை செய்யப்பட்ட பின்னர்‌ கருத்து முரண்பாடுகளும்‌, நூதன அனுஷ்டானங்களும்‌ தோன்றின. அதனைத்‌ தொடர்ந்து மக்களுக்கு மத்தியில்‌ பிளவுகள்‌ ஏற்பட்டன. இந்நிலை ஏற்பட்ட போதும்கூட சத்தியத்தில் நிலைத்திருந்தவர்கள்‌ இருக்கவே செய்தனர்‌. இவர்கள்‌ சத்தியத்தின்படி செயற்பட்டுக்‌ கொண்டிருந்ததோடு மட்டுமின்றி, சத்தியத்தை எடுத்துக்கூறி, அதன்பால்‌ மக்களை அழைப்பவர்களாகவும்‌ காணப்பட்டனர்‌.

அப்பாஸியர்களின்‌ ஆட்சிக்காலம்‌ வரை மார்க்கத்தின்‌ நிலை சீராகவே காணப்பட்டது. காலம்‌ உருண்டோட, அதற்கேற்ப மக்களும்‌ மாறிவிட்டனர்‌. அதனைத்‌ தொடர்ந்து நிலைமைகள்‌ மோசமடைந்து பித்‌அத்கள்‌ மலிய ஆரம்பித்தின. அத்துடன்‌ அசத்தியத்தின்‌ பக்கமும்‌, பிரிவினைகளின்‌ பக்கமும்‌ மக்களை அழைக்கின்ற அழைப்பாளர்களும்‌ அதிகரித்தனர்‌.  இதன்‌ காரணத்தால்‌ எல்லா விஷயங்களும்‌ சோதனைகளுக்கும் குழப்பங்களுக்கும்‌ உள்ளாகின.

ஒவ்வொருவரும்‌ தாம்‌ கொண்ட கருத்தின்‌ பக்கம் மக்களை அழைக்கவும்‌, தமது கருத்தை மறுப்பவர்களை காபிர்‌ என்று கூறவும்‌ தொடங்கினர்‌. இதனால்‌ மார்க்க அறிவில்லாதவர்களும்‌, பாமரர்களும்‌, தெளிவில்லாதவர்களும்‌ வழிதவறினர்‌. இதன்‌ விளைவு சிலர்‌, சிலரை சர்வசாதாரணமாக (காபிர்‌ என்று கூறுகின்ற நிலை) உருவானது. இவ்வாறு வழிகெட்ட பிரிவினர்களால்‌ சில பொதுமக்கள்‌ உலகாசை ஊட்டப்பட்டனர்‌. மேலும்‌, சிலர்‌ வழிகெட்ட  ஆட்சியாளர்களின்‌ மிரட்டல்களுக்கு ஆளாகினர்‌. இவ்வாறு உலகாசையால்‌ கவரப்பட்டவர்களும்‌, ஆட்சியாளர்களின்‌ மிரட்டலுக்கு அஞ்சியவர்களும்‌ வழிகெட்ட பிரிவினரை பின்பற்றி வழிதவறினார்கள் இதன்‌ காரணத்தால்‌ நபி(ஸல்‌) அவர்களின்‌ முன்மாதிரிகளும்‌, நபிவழியைப்‌ பின்பற்றியோரும்‌ (சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டு) ஓரங்கட்டப்படனர்‌. எனவே, சமூகத்தில்‌ பித்‌அத்கள்‌ தோன்றி, அவை செல்வாக்குடன்‌ திகழ்ந்தன. மக்கள்‌ சர்வசாதாரணமாக, தம்மை அறியாமல்‌ நிராகரிப்பை ஏற்படுத்துகின்ற காரியங்களில்‌ ஈடுபடலானார்கள்‌. அத்துடன்‌, பகுத்தறிவுக்கு முன்னுரிமை வழங்கி, அதனை ஆதாரமாகவும் ஆக்கிக் கொண்டனர். அல்லாஹ்வின் வல்லமை அவனது அத்தாட்சிகள்‌, அவனது 'சட்டதிட்டங்கள்‌, ஏவல்‌, விலக்கல்கள்‌ அனைத்தையும்‌ தமது பகுத்தறிவுடன்‌ ஒப்புநோக்கி, பகுத்தறிவுக்கு எட்டியவைகளை ஏற்றுக்கொள்ளவும்‌, எட்டாதவைகளை மறுக்கவும்‌செய்தனர்‌.

எனவே, அல்குர்‌ஆன்‌, நபிவழி இரண்டும் ஆதரவற்று அந்நியமானது. மேலும்‌, ஸுன்னத்‌ வல்‌ ஜமாஅத்தினரும்‌. இஸ்லாமிய ஆட்சி நடைபெற்ற தம்‌ சொந்த மண்ணிலேயே அந்நியமானார்கள்‌.
96. “முத்‌ஆ” என்பது குறிப்பிட்ட ஒரு தவணைக்கு தற்காலிகமாக ஒரு பெண்ணைத்‌ திருமணம்‌ செய்து கொள்வதைக்‌ குறிக்கின்றது. இம்முறையில்‌ பெண்களைத்‌ திருமணம்‌ செய்வது மறுமை நாள்வரை தடைசெய்யப்பட்டுள்ளது.

97. இறைத்தாதர்‌ (ஸல) அவர்களின்‌ உறவினர்களாகிய
பனூஹாஷிம்‌ குலத்தவர்‌ சிறப்புக்குரியவர்களாவர்‌. அவ்வாறே, குறைசிக்‌ குலத்தவர்‌, அரேபியர்‌, ‌இவர்களின் வழித்தோன்றல்களும்‌, இவர்களின்‌ அடிமைகளாக இருந்தவர்கள்‌ போன்ற அனைவரும்‌ சிறப்புக்குரியவர்களே! எனவே, இவர்கள்‌ அனைவரது கண்ணியத்தையும்‌, இஸ்லாத்தில்‌ இவர்களுக்குச்‌ செய்ய வேண்டிய கடமைகளையும்‌ அறிந்து கொள்வது
அவசியமாகும்‌. இதுபோன்றே அன்ஸாரித்‌ தோழர்களது சிறப்பு அவர்களுடைய விஷயத்தில்‌ இறைத்தூதர்‌(ஸல்‌) அவர்கள்‌ கூறியுள்ள வஸிய்யத்‌ போன்றவற்றை அறிந்துகொள்வதும்‌ அவசியமாகும்‌. மேலும்‌, நபி (ஸல்‌) அவர்களின்‌ குடும்பத்தவர்களின்‌ சிறப்பையும்‌, கெளரவத்தையும்‌ அறிந்துகொள்வதுடன்‌ மதீனாவாசிகளில்‌, நபி(ஸல்‌) அவர்களின்‌ அண்டை வீட்டார்களாக இருந்தவர்களின்‌ சிறப்பை அறிந்து கொள்வதும்‌ அவசியமாகும்‌. மேலும்‌, ஒவ்வொருவரும்‌ இவர்கள்‌ அனைவரது உரிமைகளை மறவாது பேணிக்கொள்ள கட்டமைப்பட்டுள்ளனர்.

98. அப்பாஸியர்களின்‌ ஆட்சிக்காலம்‌ வரை ஜஹமியாக்களின்‌ கொள்கைகளுக்கு உலமாக்கள்‌ மறுப்புக்‌ கொடுத்து வந்தனர்‌. இவர்களின் ஆட்சிக்காலத்தில் அறிவில்லாதவர்கள். மார்க்க விஷயங்கள்‌ பற்றியும்‌, பொது (அரசியல்‌) விஷயங்கள்‌ பற்றியும்‌ பேச ஆரம்பித்ததுடன்‌ பகுத்தறிவுக்கு முன்னுரிமையும்‌ வழங்கலானார்கள்‌.

பகுத்தறிவை முன்வைத்து ஹதீஸ்களை மறுத்ததுடன்‌, தமது கொள்கையை ஏற்றுக் கொள்‌ளாதவா்களை நிராகரிப்பாளராக்கவும்‌ துணிந்தார்கள்‌. இந்நிலையில்‌ இவர்களது கொள்கையில்‌, சிந்திக்கும்‌ ஆற்றல்‌ இல்லாத பாமரர்களும்‌, மார்க்க விஷயங்களில்‌ அலட்சியப்போக்குடையவர்களும்‌ சிக்கி வழி கெடலாயினர்‌. இதன்‌ விளைவாக. தம்மை அறியாமலேயே நிராகரிப்பை ஏற்படுத்தக்கூடிய காரியங்களில்‌ மக்கள்‌ ஈடுபடலானார்கள்‌. இவ்வாறு முஸ்லிம்‌ சமுதாயத்தினர்‌ ஒருபுறம்‌ நிராகரிப்புக்குள்ளாயினர்‌. மறுபுறம்‌ கடவுளே இல்லை என்னும்‌ நாஸ்திக கொள்கையில்‌ சிக்கினர்‌. மற்றொருபுறம்‌ வழிகேட்டில்‌ வீழ்ந்தனர்‌. இன்னொரு புறம்‌ பல பரிவினராக பிரிந்து இஸ்லாமிய மார்க்கத்தில்‌ இல்லாத “பித்‌அத்‌” என்னும்‌ நூதனத்தில்‌ ஈடுபட்டனர்‌. இவ்வாறு இஸ்லாமிய சமுதாயத்தினர்‌ அழிவுப்பாதைக்கு இட்டுச்‌ செல்லப்பட்டனர்‌. எனினும்‌, இத்தகைய நிலைமையிலும்‌ சிலர்‌ சத்தியத்தில்‌ நிலைத்திருக்கவே செய்தனர்‌. இவ்வாறு சத்தியத்தில்‌ நிலைத்திருந்தோர்‌ நபி(ஸல்‌) அவர்களதும்‌, ஸஹாபாக்களதும் முன்மாதிரிகளைப்‌ பின்பற்றி நடந்தனர்‌. இஸ்லாமிய சட்ட திட்டங்கள்‌ அடங்கிய எல்லாத்‌ துறைகளிலும்‌ நபித்தோழர்களை முழுமையாகப்‌ பின்பற்றி நடந்தார்கள்‌. ஸஹாபாக்களின்‌ முன்மாதிரிகளைப்‌ புறக்கணிக்கவோ, அவர்களைக்‌ குறைகூறவோ இல்லை. ஹலால்‌, ஹராம்‌ விஷயங்களில்‌ முழுமையாக ஸஹாபாக்களைப்‌ பின்பற்றி நடந்தார்கள்‌.

ஸஹாபாக்கள்‌ உலகில்‌ வாழ்ந்தபோது நிறைவான ஈமானுடன்‌ இஸ்லாத்தின்‌ வரம்புகளை பேணி வாழ்ந்தார்கள்‌ என்ற நம்பிக்கையே இவர்களை வழிகேட்டிலிருந்து பாதுகாத்தது. எனவே, தமது மார்க்க விஷயங்களில்‌ நபித்தோழர்களைப்‌ பின்பற்றி நிம்மதியும்‌, சந்தோஷமும்‌ அடைந்தனர்‌. ஏனெனில்‌ மார்க்கம்‌ என்பது ஸஹாபாக்களின்‌ வழிமுறைகளைப்‌ பின்பற்றுவதை அடிப்படையாகக்‌ கொண்டுள்ளது.

99. ஒரு மனிதன்‌, தான்‌ அருள்மறை குர்‌ஆனை ஓதுகின்றபோது வெளிவரும்‌ சப்தம்‌ இறைவனின்‌ படைப்புகளில்‌ ஒன்று என்று கூறினால்‌ 'பித்‌அத்‌” என்னும்‌ நூதனத்தை செய்தவர்‌ ஆவார்‌. மாறாக, இவ்வாறு வெளிவரும்‌ சப்தம்‌ இறைவனின்‌ படைப்பு என்றோ அல்லது இறைவனின்‌ படைப்பல்ல என்றோ கூறாமல்‌ மெளனமாக இருந்தால்‌ அவர்‌ ஜஹமிய்யாக்களில்‌ ஒருவராவார்‌. இவ்விஷயத்தில்‌ மேற்கூறப்பட்ட கருத்தையே இமாம்‌ அஹ்மத்‌ பின்‌ ஹம்பல்‌(ரஹ்‌) அவர்கள் தெரிவித்துள்ளார்கள்

நபி(ஸல்‌) அவர்கள்‌ நவின்றார்கள்‌:
'எனக்குப்‌ பின்னர்‌ உங்களில்‌ உயிர்‌ வாழ்வோர்‌ நிறையக்‌ கருத்து வேற்றுமைகளைக்‌ காண்பீர்கள்‌. அவ்வேளையில்‌ மார்க்கத்தில்‌ உருவாக்கப்படும்‌ நூதன அனுஷ்டானங்கள்‌ பற்றி உங்களை நான்‌ எச்சரிக்கிறேன்‌. ஏனெனில்‌, ஒவ்வொரு நூதன அனுஷ்டானமும்‌ வழிகேடாகும்‌. எனவே, எனது வழிமுறைகளையும், நேர்வழி நடந்த குலபாஉர்‌ ராஷிதான்களின்‌ வழிமுறைகளையும்‌ மிக உறுதியாகப்‌ பற்றிப்‌ பிடித்துக் கொள்ளுங்கள்‌. (அறிவிப்பவர்‌: இர்பாழ்‌ பின்‌ ஸாரியா (ரலி), ஆதார நூல்கள்‌: அஹ்மத்‌, அபூதாவூத்‌, திர்மிதி).

100. ஜஹமியாக்களின்‌ அழிவுக்குக்‌ காரணம்‌: அவர்கள்‌ அல்லாஹ்வைப் பற்றி வரம்புமீறி சிந்திக்க ஆரம்பித்தனர் இதனடிப்படையில்‌ அல்லாஹ்வின்‌ விஷயத்தில்‌ ஏன்‌?எப்படி? என வினாக்கள்‌ தொடுத்ததுடன்‌ தமது அறிவுக்கெட்டாத ஹதீஸ்களையும் மறுத்தனர். மேலும், பகுத்தறிவு வாதத்துக்கு முன்னுரிமை வழங்கி, இஸ்லாமிய சட்ட திட்டங்கள்‌ அனைத்தையும்‌ பகுத்தறிவுடன் ஒப்பிட்டு நோக்கினர்‌. தாம் செய்யும்‌ காரியங்கள்‌ நிராகரிப்பை ஏற்படுத்துக்‌ கூடியவை என்று தெரிந்தும்‌ கூட தாம்‌ மிகத்‌ தெளிவான நிராகரிப்பில்‌ வீழ்ந்ததுடன்‌, பிறரையும்‌ நிராகரிப்பில்‌ வீழ்த்தினர்‌. இதுபோல்‌ பகுத்தறிவின் அடிப்படையில் அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களையும் பண்புகளையும் பாழாக்கினர். 

101. சில இஸ்லாமிய அறிஞர்கள்‌ (ஜஹமிய்யாக்களைப் பற்றி) பின்வருமாறு கூறியுள்ளனர்‌. அவ்வாறு கூறிய அறிஞர்களில்‌ அஹ்மத்‌ பின்‌ ஹம்பல்‌(ரஹ்‌) அவர்களும்‌ ஒருவர்‌, அவர்கள் கூறியதாவது: ஜஹமிய்யாக்கள்‌ நிராகரிப்பவர்கள்‌. ‌இவர்கள்‌ முஸ்லிம்கள்‌ அல்லர். இவர்களைக் கொலை செய்வது அனுமதிக்கப்பட்டதாகும்‌. இவர்களுக்கு அனந்திரச்‌ சொத்துக்களை வழங்குவதும்‌, இவர்களிடமிருந்து பிறர்‌ அனந்திரச்‌ சொத்துக்களைப்‌ பெறுவதும்‌ தடை செய்யப்பட்டதாகும் ஏனெனில், இவர்கள் ஜும்ஆ தொழுகை ஜமாஅத்து தொழுகை, இரண்டு பெருநாட்‌ தொழுகைகள்‌, ஸகாத்‌ போன்றவற்றை மறுத்துரைத்தனர்‌. மேலும்‌, அல்குர்‌ஆன்‌ அல்லாஹ்வின்‌ படைப்புகளில்‌ ஒன்று என்ற கருத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களை நிராகரிப்பாளர்கள்‌ என்றனர்‌. மேலும்‌, நபி(ஸல்‌) அவர்களின்‌ சமூகத்தினருக்கு எதிராக யுத்தம்‌ செய்வதை ஆகுமாக்கினார்கள்‌.

இறைத்தாதர்‌ (ஸல்‌) அவர்களும்‌, ஸஹாபாக்களும்‌ கூறாத, புதிய விஷயங்களைக் கூறி இவர்களுக்கு முற்றிலும் மாறு செய்து இஸ்லாமிய சமுதாயத்தில்‌ குழப்பத்தை ஏற்படுத்தியது மாத்திரமின்றி, தொழுகைகளை புறக்கணித்து, பள்ளிவாசல்களையும்‌ பாழ்படுத்தினர்‌.

மேலும்‌, இவர்கள்‌ இஸ்லாத்தின்‌ மகிமையை
இழிவுபடுத்தியதுடன்‌, ஜிஹாத்‌ என்னும்‌ அறப்போரையும்‌ புறக்கணித்தனர்‌. இஸ்லாமிய சமூகத்தில்‌ பிளவுகளையும்‌, குழப்பங்களையும்‌ ஏற்படுத்தியதோடு மட்டுமின்றி, இஸ்லாமிய முன்னோர்களின்‌ முன்மாதிரிகளையும்‌ அலட்சியம்‌ செய்தனர்‌. மன்ஸாகான(மாற்றப்பட்ட) வசனங்களை எடுத்துக்கூறியதுடன்‌, (பல கருத்துக்கு இடம்பாடான) முதஷாபிஹான வசனங்களையும்‌ ஆதாரமாக எடுத்துக்‌ கொண்டனர்‌. இதன்மூலம்‌ மார்க்க விஷயங்களிலும்‌, இன்னும்‌ ஏனைய கருத்துக்களிலும்‌ மக்களிடையே சந்தேகத்தைக்‌ கிளப்பி விட்டனர்‌. இதனால்‌ மக்கள்‌ அல்லாஹ்வைப்‌ பற்றிய விதண்டாவாதங்களில்‌ ஈடுபடலானார்கள்‌.

மேலும்‌, இவர்கள்‌ மண்ணறையில்‌ மனிதன்‌ தண்டிக்கப்படுதல்‌, நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள “ஹவலுல்‌கவ்ஸர்‌” எனும் ‌சிறப்பு நீ்ர் தடாகம்‌, மறுமையில்‌ இறைவன்‌ வழங்கும்‌ 'சபாஅத்‌” என்னும்‌ பரிந்துரை போன்றவற்றையும் மறுத்தனர்

நரகமும்‌, சொர்க்கமும்‌ இதுவரை படைக்கப்படவில்லை என்றும்‌. கூறினர்‌. இவ்வாறு ஏராளமான நபிமொழிகளைப்‌ புறக்கணித்தனர்‌.

மேலும்‌, 'ஜஹமிய்யாக்கள்‌ நிராகரிப்பவர்கள்‌, இவர்களை கொலை செய்ய வேண்டும்‌’ என மார்க்கத்‌ தீர்ப்பு வழங்கிய இஸ்லாமிய அறிஞர்களை கொலை செய்ய முற்பட்டனர்‌. (இவ்வாறு தீர்ப்பு வழங்குவதற்கு காரணம்‌) அல்குர்‌ஆனின்‌ ஒரு வசனத்தை மறுத்தாலும்‌, முழு குர்‌ஆனையும்‌ மறுப்பதற்குச்‌ சமமாகும்‌. அதுபோன்று ஒரு ஹதீஸை மறுப்பவர்‌ முழு ஹதீஸ்களையும்‌ மறுப்பவராவார்‌ என்பதே. எனவே.

அல்குர்‌ஆனின்‌ ஒரு வசனத்தை அல்லது ஒரு நபிமொழியை மறுப்பவர்‌ மகத்தான அல்லாஹ்வை மறுக்கும்‌ 'இறை நிராகரிப்பாளர்‌” ஆவார்‌. இவ்வாறு குழப்பத்திலும்‌, சந்தேகத்திலும்‌ காலம்‌ கடந்தது. ஜஹமிய்யாக்களுக்கு சமூகத்தில்‌ செல்வாக்கும்‌, ஆட்சியாளர்களின்‌ உதவியும்‌ கிடைத்தது. அவர்களை எதிர்த்தவர்களுக்கு அதிகாரபூர்வமான தண்டனைகளும்‌ வழங்கப்பட்டன.

இவ்வாறு சமூகத்தில்‌ 'பித்‌அத்‌"கள்‌ எனப்படும்‌ நூதன அனுஷ்டானங்கள்‌ செல்வாக்குப்‌ பெற்றதாலும்‌, சபைகளின்‌ ஆதரவாளர்கள்‌ எண்ணிக்கையில்‌ அதிகமாக இருந்ததாலும்‌ நபிவழியைப்‌ பற்றிய அறிவு இஸ்லாமிய சமூகத்தில்‌ மங்கிவிட்டது. உண்மையான இஸ்லாமிய மார்க்கத்தில்‌ நிலைத்திருந்த அஹ்லுஸ்‌ ஸுன்னத்‌ வல்‌ ஜமாஅத்தினர்‌ சமூகத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டனர்‌.

மேலும்‌, கல்விக்கூடங்களை தம்‌ கைவசப்படுத்திக்‌ கொண்ட ஜஹமிய்யாக்கள்‌ தம்‌ கொள்கைகளை வெளிப்படையாகப்‌ போதிக்க ஆரம்பித்ததுடன்‌, தம்‌ கொள்கைகளை அடிப்படையாகக்‌கொண்ட புத்தகங்களை எழுதிக்‌ குவித்தனர்‌. தமது கொள்கைகளின்பால்‌ மக்களை ஈர்த்ததுடன்‌ மட்டுமின்றி, தம்‌ கொள்கைகளைப்‌ பின்பற்றுவோருக்கு ஆட்சி அதிகாரத்தையும்‌ வழங்கினர்‌. இதனால்‌ சமூகத்தில்‌ பெரும்‌ குழப்பநிலை தலைவிரித்தாடியது அல்லாஹ்‌ பாதுகாத்தவர்களைத்‌ தவிர, எவருமே இவர்களின்‌ சதி வலையிலிருந்து தப்பவில்லை சிலர்‌ ஜஹமிய்யாக்களை முற்றிலும்‌ பின்பற்ற ஆரம்பித்தனர்‌. மேலும்‌ சிலர்‌ தமது மார்க்கத்தில்‌ சந்தேகம்‌ கொண்டனர்‌. மற்றும்‌ சிலரோ
ஜஹமிய்யாக்கள்‌ சத்தியத்தில்‌ இருக்கின்றனர்‌. தாம்‌ சத்தியத்தில்‌ இருக்கின்றோமா அல்லது அசத்தியத்தில் இருக்கி‌றோமா என்று தெரியாமல் தம் (ஈமான்) மீதே சந்தேகம் கொண்டவராக இருந்தனர். இவ்வாறு மக்கள் தமது மார்க்க விஷயத்தில் தெளிவின்றி சந்தேகத்தில் வீழ்ந்து அழிவுக்குள்ளாகினர்.

இந்நிலை அப்பாஸிய ஆட்சியாளர்களில்‌ ஒருவரான அல்‌-முதவக்கில்‌ என்றழைக்கப்படும்‌ கலீபா ஜஃபர் (ரஹ்) அவர்களின்‌ ஆட்சிக்காலம்‌ வரை நீடித்தது. இவரது ஆட்சிக்காலத்தில்‌ 'பித்‌அத்‌'க்கள்‌ எனப்படும்‌ நூதன அனுஷ்டானங்கள்‌ அனைத்தும்‌ அழிக்கப்பட்டன. சத்திய மார்க்கம்‌ புத்துயிர்‌ பெற்றது. அஹ்லுஸ்‌ ஸுன்னத்‌ வல்‌ ஜமாஅத்தினர்‌ சிறுபான்மையினராக இருந்தபோதும்‌, அவர்களுக்கு வலிமை மிக்க செல்வாக்குக்‌ கிடைத்தது. எனவே, அவர்களது (சத்திய) பிரச்சாரம் ‌எங்கும்‌ ஒலித்தது. எனினும்‌ ஸுபித்துவ சிந்தனைகளாலும்‌, 'பித்‌அத்"களாலும்‌ கவரப்பட்டவர்கள்‌ இன்றுவரை அதே கொள்கையில்‌ ஈடுபாடு கொண்டும் அக்கொள்கையின்பால் மக்களை அழைத்தும்‌ வருகின்றனர்‌. இவர்கள்‌ கூறும்‌ கருத்துக்கள்‌ மற்றும்‌ செயல்களைத்‌ தட்டிக்கேட்கவோ, தடுத்து நிறுத்தவோ சமூகத்தில்‌ எவருமில்லை.

102. “பித்‌அத்‌"கள்‌ என்னும்‌ நூதன அனுஷ்டானங்கள்‌ சமூகத்தில்‌ தோன்றியதற்குக்‌ காரணம்‌ சிந்தனையின்றிப்‌ புலம்பித் திரிந்தவர்களும்‌, கண்டதையெல்லாம்‌ பின்பற்றக்கூடிய மக்களுமேயாகும்‌. இந்நிலையில்‌ உள்ளவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கத்தில்‌ எந்தப்பங்கும்‌ இல்லை என்பதை அருள்மறை குர்‌ஆனில்‌ வல்ல அல்லாஹ்‌ தெளிவுபடுத்துகிறான்‌: எனினும்‌ அவர்களுக்கிடையே உண்டான பொறாமையினால்‌ (வேத) ஞானம்‌ வந்த பின்னரும்‌ அவர்கள்‌ அபிப்பிராய பேதம்‌ கொண்டார்கள்‌” (அத்தியாம்‌ 45 ஸூரத்துல்‌ ஜாஸியா 17வது வசனம்‌). இதுபற்றி வல்ல அல்லாஹ்‌ அருள்மறை குர்‌ஆனின்‌ மற்றொரு வசனத்தில்‌ கூறுகிறான்‌: எனினும்‌ அவ்வேதம்‌ கொடுக்கப்‌ பெற்றவர்கள்‌ தெளிவான தூதார்க்கள்‌ வந்த பின்னரும்‌ தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள்‌.” (அத்தியாயம்‌ 2 ஸுரத்துல்‌ பகரா 213ஆம்‌ வசனத்தின்‌ ஒருபகுதி).

103. மனிதர்களில்‌ ஒரு பிரிவினர்‌ எப்போதும்‌ சத்தியத்தில்‌ நிலைத்திருப்பார்கள்‌. இவர்களுக்கு அல்லாஹ்‌ நேர்வழி காட்டுவான்‌. மேலும் இவர்கள் மூலம் பிறருக்கும் நேர்வழி காட்டுவான்‌. ‌மேலும் இவர்கள்‌ மூலம்‌ நபி(ஸல்‌) அவர்களது வழிமுறைகளையும்‌ உயிர்ப்பிப்பான்‌. கருத்து முரண்பாடுகள்‌ வருகிறபோது இவர்கள்‌ எண்ணிக்கையில்‌ சிறிய அளவில்‌ இருந்தபோதும்‌ சத்தியத்திலேயே நிலைத்திருப்பார்கள்‌ என்று இவர்களைப்பற்றி இறைவன்‌ பின்வருமாறு விவரிக்கின்றான்‌: '..எனினும்‌, அவ்வேதம்‌ கொடுக்கப்‌ பெற்றவர்கள்‌ தெளிவான ஆதாரங்கள்‌ வந்த பின்னரும்
தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள்‌.” என்று கூறிய இறைவன்‌, தொடர்ந்து கூறுகிறான்‌: ஆயினும் அல்லாஹ்‌ அவர்கள்‌ மாறுபட்டுப்‌ புறக்கணித்துவிட்ட உண்மையின்‌ பக்கம்‌ செல்லுமாறு நம்பிக்கை கொண்டோருக்கு தன்‌ அருளினால்‌ நேர்வழி காட்டினான்‌: இவ்வாறே, அல்லாஹ்‌ தான்‌ நாடியோரை நேர்வழியில்‌ செலுத்துகிறான்‌ என இவர்களைப்பற்றி அல்லாஹ் ‌(‌ஸுரத்துல்‌ பகராவின் அத்தியாயம் 2, 213 வது வசனத்தின்‌ இறுதிப்பகுதி) (விவரித்துக்‌) கூறுகிறான்‌.

நபி (ஸல்‌) அவர்கள்‌ நவின்றார்கள்‌:
சத்தியத்தில்‌ நிலைத்திருக்கும்‌ ஒரு குழு எனது உம்மத்தினரிடையே எப்போதும்‌ இருந்துகொண்டே இருக்கும்‌. அவர்களை எதிர்ப்பவர்களால்‌ அவர்களை அழித்துவிடமுடியாது.. தீனை (இறை நெறியை) பாதுகாக்கின்ற இவர்கள்‌ இந்த நிலையில்‌ இருக்கும்போதே அல்லாஹ்வின்‌ தீர்ப்பு (மறுமை) வந்துவிடும்‌. அறிவிப்பவர்‌: உக்பா பின்‌ ஆமிர்‌ (ரலி) நூல்‌ முஸ்லிம்‌ 1924.

104. கல்வி (அறிவு) என்பது அதிகமான ஹதீஸ்களை அறிவிப்பதோ, நிறைய ஏடுகளைப்‌ படிப்பதோ அல்ல, மாறாக, ஒருவர்‌ கல்வியிலும்‌, வாசிப்பிலும்‌ குறைந்தவராக இருந்தாலும்கூட நபி(ஸல்‌) அவர்களுடைய வழிமுறைகளையும்‌, தான்‌ படித்தவைகளையும் பின்பற்றுபவரே அறிஞராவார்‌. ஒருவர்‌ ஏட்டுக்கல்வியிலும்‌, உலகக்கல்வியிலும்‌ உயர்ந்தவராக இருந்தாலும்‌, குர்‌ஆனுக்கும்‌ நபிவழிக்கும்‌ மாற்றமாக செயல்பட்டால்‌ அவர்‌ 'பித்‌அத்‌' காரர்‌ ஆவார்‌.

105. ஒருவர்‌ அருள்மறை குர்‌ஆன்‌ அல்லது நபிவழியிலிருந்து ஆதாரம்‌ எதுவுமின்றி தனது சொந்த சிந்தனையால்‌ மார்க்க விஷயங்களில்‌ கருத்துக்‌ கூறினால்‌, அவர்‌ தனக்குத்தெரியாத விஷயத்தை அல்லாஹ்வின்‌ மீது இட்டுக்கட்டியவர்‌ ஆவார்‌. தனக்குத்தெரியாத விஷயத்தை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுபவர் மார்க்க விஷயங்களில்‌ வலிந்து கருத்துக்கூறும்‌ வழிகெட்டவர்களைச்‌ சார்ந்தவரே!

106. சத்தியம்‌ என்பது மகத்தான அல்லாஹ்விடமிருந்து வந்தது. ஸுன்னத்‌ என்பது இறைத்தூதர்‌ (ஸல்‌) அவர்களுடைய வழிமுறை, ஜமாஅத்‌ (கூட்டமைப்பு) என்பது கலீபாக்களான அபூபக்கர்‌ (ரலி), உமர்‌(ரலி), உஸ்மான்‌ (ரலி) போன்றோரின்‌ ஆட்சிக்காலத்தில்‌ ஸஹாபாக்களின்‌ ஒன்றுபட்ட நெறிமுறைகளாகும்‌.

107. ஒரு மனிதன்‌ நபி(ஸல்‌) அவர்களின்‌ வழிமுறைகளையும்‌, ஸஹாபாக்களின்‌ வழிமுறைகளையும்‌ மாத்திரம்‌ பின்பற்றினால்‌ அவர்‌ 'பித்‌அத்‌' காரர்களிடமிருந்து தன்னை பாதுகாத்து கொண்டவராவார்‌. மேலும்‌, தனது மார்க்க விஷயங்களில்‌ ஈடேற்றம்‌ பெற்றவரும் நரகிலிருந்து தனது உடலைப் பாதுகாத்துக்‌ கொண்டவருமாவார்‌ இன்ஷா அல்லாஹ்‌. ஏனெனில்‌, நபி(ஸல்‌) அவர்கள்‌ தமது சமூகத்தில்‌ ஏற்படும்‌ பிரிவுகளைப்‌ பற்றி முன்னறிவிப்புச் செய்துவிட்டு இவர்களில் நேர்வழி நடப்பவர்களை அடையாளப்படுத்திக் காட்டுகின்றபோது “இன்றைய தினம்‌ நானும்‌, எனது தோழர்களும்‌ இருந்த வழிமுறைகளைப் பின்பற்றி நடப்பவர்கள்‌" என்று கூறினார்கள்‌. எனவே, இவர்கள்‌ பின்பற்றி வாழ்ந்த வழிமுறைகள்‌ மாத்திரமே தெளிவான முன்மாதிரிகளும்‌, பிரச்சினைகளுக்கான தீர்வுகளும்‌, ஒளியூட்டும்‌ ஒளிவிளக்குகளுமாகும்‌. மேலும்‌, நபி(ஸல்‌) அவர்கள்‌ (பின்வருமாறு) கூறினார்கள்‌: மார்க்க விஷயங்களை அளவுக்கு மீறி ஆராய்வதையும்‌, அவற்றை அளவுக்குமீறி பின்பற்றுவதையும்‌, உங்களுக்கு நான்‌ எச்சரிக்கை செய்கிறேன்‌.” இவ்விஷயத்தை நபி(ஸல்‌) அவர்கள்‌ கூறியுள்ளதாகக்‌ காணமுடியவில்லை. இது இப்னு மஸ்‌ஊத்‌(ரலி) அவர்களது கூற்றாகும்‌. (ஆதார நூல்‌: அல்மர்வஸீ: அஸ்ஸுன்னாஹ்‌: 85), இப்னு அப்தில்‌ பர்‌ :ஜாமிவு பயானில்‌ 1 : 152).

108. மனிதனை நரகத்திலிருந்து விடுதலை செய்யக்கூடிய ஒரே மார்க்கம்‌ நபி(ஸல்‌) அவர்களின்‌ மரணம்‌ முதல்‌ கலீபா உஸ்மான்‌(ரலி) அவர்கள்‌ கொலை செய்யப்பட்ட காலம்‌ வரை ஸஹாபாக்கள்‌ பின்பற்றி வந்த வழிமுறைகளே! உஸ்மான்‌(ரலி) அவர்கள்‌ கொலை செய்யப்பட்டமையே இஸ்லாமிய உம்மத்தில்‌ பிளவுகளும் பிரிவினைகளும் ஏற்பட முதற் காரணமாகும் இதன்‌ காரணமாக இஸ்லாமிய சமூகத்தில்‌ மோதல்‌ உண்டாகி சமூகம்‌ மேலும்‌ பிளவுற்றது. இச்சந்தர்ப்பத்தில்தான்‌ மக்களிடம்‌ போராசை, மனோ இச்சைக்கு வழிப்படுதல்‌, உலகாசை போன்ற தீய பழக்கங்கள்‌தோன்றின. ஸஹாபாக்கள்‌ காட்டித்தராத நூதன அனுஷ்டானங்களை அல்லது பிறர் ஏற்படுத்திய பித்அத்துகளின் பக்கம் மக்களை அழைப்பதற்கோ இஸ்லாமிய மார்க்கத்தில்‌ யாருக்கும்‌ அனுமதியில்லை. மேலும்‌, பித்‌அத்களின்‌ பக்கம்‌ மக்களை அழைப்பவர்‌ அவைகளை புதிதாக ஏற்படுத்தியவர்‌ போன்றவராவார்‌. எனவே, எவரேனும்‌ பித்‌அத்துக்களை ஏற்படுத்துதல்‌, அல்லது அவைகளின்பால்‌ மக்களை அழைத்தல்‌ போன்றவற்றில்‌ ஈடுபட்டால்‌ அவர்‌ நபி(ஸல்‌) அவர்களின்‌ வழிமுறையை மறுப்பவராவார்‌. மேலும்‌, அஹ்லுஸ்‌ ஸுன்னத்‌ வல்‌ ஜமாஅத்தினருக்கு மாற்றம்‌ செய்தவரும்‌ ஆவார். சமூகத்தில் பித்அத்துக்களை ஏற்படுத்திய இவர் இப்லீஸை விட இந்தச் சமூகத்துக்கு தீங்கிளைப்பவராகவே கருதப்படுவார்.

109. பித்‌அத்துக்களில்‌ ஈடுபடுவோர்‌ ஏராளமான ஸுன்னத்துக்களை, விட்டுவிட்டனர்‌. எனவே, யார்‌ இவர்கள்‌ விட்டுவிட்ட ஸுன்னத்துக்களைக்‌ கண்டறிந்து அவற்றைச்‌ செயல்படுத்துகிறாரோ அவரே,‌ அஹ்லுஸ்‌ ஸுன்னத்‌ வல்‌ ஜமாஅத்தைச்‌ சார்ந்தவராவார்‌, இவரைப்‌ பின்பற்றுதல்‌, இவருடன்‌ பரஸ்பரம்‌ ஒத்துழைத்தல்‌, இவருக்குப்‌ பாதுகாப்பு வழங்குதல்‌ போன்ற அனைத்தும் வலியுறுத்தப்‌ பட்டுள்ளதுடன்‌, இத்தகையோருக்குரிய உரிமைகளையும்‌, கடமைகளையும்‌ நிறைவேற்றும்படி நாயகம்‌(ஸல்‌) அவர்கள்‌ வஸிய்யத்‌ செய்துள்ளார்கள்‌ 

பித்‌அத்துக்களின்‌ அடிப்படைகள்‌ நான்கு வகைப்படும்‌. இந்த நான்கும்‌ 72 ஆக பரிணாமம் பெற்றன. இ‌ந்த72ம்‌ பல்கிப்பெருகி 4800 பிரிவினைகள்‌ உண்டாயிற்று. இவையனைத்தும்‌ வழிகெட்ட பிரிவினைகள்‌ ஆகும்‌. இப்பிரிவினைகளைச் சார்ந்தவர்களில்‌ ஒரேயொரு பிரிவினர்‌ தவிர, ஏனைய அனைவரும்‌ நரகத்திற்குச்‌ சொந்தமானவர்களே!
இந்நூலில்‌ சொல்லப்பட்ட கருத்துக்களை உள்ளத்தில்‌ எந்தவித சந்தேகமும்‌ அதிருப்தியுமின்றி நம்பிக்கை கொள்பவர்‌ அஹ்லுஸ்‌ ஸுன்னத்‌ வல்ஜமாஅத்தைச் சார்ந்தவராவார்‌. மேலும்‌, அல்லாஹ்‌ நாடினால்‌ : தன்னை நரகத்திலிருந்து பாதுகாத்துக்‌ கொண்டவருமாவார்‌.

111. மனிதர்கள்‌ பித்‌அத்தான செயல்களில்‌ ஈடுபடாமலும்‌, நபி(ஸல்‌), அவர்களுடைய அல்லது அவர்களின்‌ தோழர்களுடைய முன்மாதிரிகளுக்கு முரணான விஷயங்களைப்‌ பேசாமலும்‌ இருந்தால்‌ பித்‌அத்கள்‌ தோன்றவோ, ஏற்கெனவே தோன்றிய பித்‌அத்கள்‌ வளர்ச்சி பெறவோ மாட்டாது.

112. அருள்மறை குர்‌ஆனின்‌ வசனங்களில்‌ ஒன்றையேனும்‌ புறக்கணித்தல்‌, அல்லது அதில்‌ கூடுதல்‌ குறைவு செய்தல்‌ போன்ற அனைத்து செயல்களும்‌ இறை நிராகரிப்பை ஏற்படுத்தக்‌ கூடியவைகளே! அவ்வாறே அல்லாஹ்‌ கூறிய ஒரு விஷயத்தை அல்லது இறைத்தூதர்‌ (ஸல்‌) அவர்கள்‌ கூறிய ஒரு விஷயத்தை மறுப்பதும்‌ இறை நிராகரிப்பை ஏற்படுத்தும்‌.

எனவே, ஒவ்வொரு மனிதனும்‌ அல்லாஹ்வைப்‌ பயந்து கொள்வதுடன்‌, தன்னை (நரகத்திலிருந்து) பாதுகாத்துக்கொள்ள வேண்டும்‌. இஸ்லாமிய மார்க்க விஷயங்களில்‌ எல்லை மீறுதல்‌ கூடாது. ஏனெனில்‌, எல்லை மீறுதல்‌ இஸ்லாமிய மார்க்கத்தில்‌ தடைசெய்யப்பட்டுள்ளது.

113. இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள எல்லா விஷயங்களையும் இஸ்லாத்தின்‌ அடிப்படை ஆதாரங்களான குர்‌ஆன்‌ ஹதீஸிலிருந்தும்‌, ஸலபுஸ்ஸாலிஹீன்களான ஸஹாபா பெருமக்கள், தாபிஈன்கள், மூன்றாம் மற்றும் நான்காம் நூற்றாண்டுகளில் வாழ்ந்து மறைந்த போன்றோரின்‌ முன்மாதிரிகளிலிருந்தும்‌ தொகுத்துத்‌ தந்துள்ளேன்‌. எனவே, இதிலுள்ள விஷயங்களைப் பூரண திருப்தியுடன்‌ உண்மைப்படுத்தி ஏற்றுக்கொள்வதும்‌, நம்பிக்கை கொள்வதும்‌ கடமையாகும்‌.

மேலும்‌, இந்நூல்‌ முஸ்லிம்கள்‌ அனைவருக்கும்‌ கிடைக்க வழிசெய்வீர்கள்‌ என எதிர்பார்க்கின்றேன்‌. இதன்‌ மூலம்‌ மார்க்க விஷயங்களில்‌ தெளிவின்றி தடுமாறிக்‌ கொண்டிருப்பவர்கள்‌ தமது தடுமாற்றத்திலிருநது விடுதலை பெறவும்‌, பித்அத்களில் ஈடுபடுவோர் அவைகளிலிருந்து மீண்டு பாவமன்னிப்புத்தேடிக்‌ கொள்ளவும்‌ வழிகேட்டில்‌ இருப்பவர்கள்‌ நேர்வழியின்பால்‌ திரும்பிவரவும்‌ வாய்ப்புக்கள்‌ உண்டு என நம்புகிறேன்.

எனவே, ஒவ்வொரு மனிதனும் நரகத்திலிருந்து தம்மை விடுதலை செய்யக்கூடிய சத்திய மார்க்கத்தின்‌ அடிப்படையான கொள்கையாம்‌ ‘அல்லாஹ்வைத்‌ தவிர வணக்கத்திற்குரியவன்‌ வேறு எவருமில்லை’ என்ற சாட்சியத்தைப் பற்றிப்‌ பிடித்துக்‌ கொள்ள வேண்டும்‌. சத்திய மார்க்கம்‌ என்பது இப்புத்தகத்தில்‌ நான்‌ தொகுத்து வழங்கியுள்ள விஷயங்களாகும்‌.

மேலும் இப்புத்தகத்தைப் படித்து அதன்படி செயல்பட்டு அதன்பால்‌ பிறரையும்‌ அழைப்பவருக்கு அல்லாஹ்‌ அருள்பாலிப்பானாக! ஏனெனில்‌, இப்புத்தகத்தில்‌ உள்ளவைகள்‌ அல்லாஹ்வும்‌, அவனது தூதரும்‌ காட்டித்தந்த மார்க்க விஷயங்களாகும்‌, எனவே, இப்புத்தகத்தில்‌கூறப்பட்டுள்ளவைகளுக்கு முரணாண விஷயங்களைப்‌ பின்பற்றுபவர்கள்‌ அல்லாஹ்வின்‌ மார்க்கத்தைப்‌ பின்பற்றுபவர்களல்லர்‌. மாறாக, அவனுடைய மார்க்கத்தைப்‌ புறக்கணிப்பவர்களாவர்‌..

(நூலாசிரியர்‌ இப்புத்தகத்தை குர்‌ஆன்‌ மற்றும்‌ ஹதீஸுடைய தரத்துக்கு உயர்த்தி, இதில்‌ கூறப்பட்டுள்ளவைகளைப்‌ புறக்கணிப்பவர் அல்லது அதில் சந்தேகம் கொள்பவர் நிராகரிப்பவர்‌ ஆகிவிடுவார்‌ என்று கூறுகிறார்‌. இது இந்நூலின்‌ குறைபாடுகளில்‌ ஒன்று. ஏனெனில்‌, அல்குர்‌ஆன்‌ மற்றும்‌ ஹதீஸ்‌ தவிர்ந்த எதையேனும்‌ புறக்கணிப்பவர்‌ இறை நிராகரிப்பவர்‌ ஆகிவிடுவதில்லை.)

அருள்மறை குர்‌ஆனில்‌ அல்லாஹ்‌ கூறியுள்ள அனைத்து விஷயங்களையும் ஒரு மனிதன்‌ நம்பிக்கை கொண்டு, அதில்‌ ஒரேயொரு எழுத்தில்‌ மாத்திரம்‌ சந்தேகம்‌ கொண்டாலும்‌, அவன்‌ அல்லாஹ்‌ கூறிய அனைத்தையும் புறக்கணித்தவன்‌ போலாவான்.

வணக்கத்திற்குரிய இறைவன்‌ அல்லாஹ்வைத்‌ தவிர வேறு யாரும்‌ இல்லை எனும்‌ கலிமாத்‌ தையிபாவைத்‌ தூய எண்ணத்துடன் மொழிய வேண்டும்‌. இல்லையெனில்‌ அதனை அல்லாஹ்‌ ஏற்றுக்‌ கொள்ள மாட்டான்‌.

இதுபோன்று நபிவழிகளை ஏற்றுக்‌ கொள்கின்ற ஒருவர்‌, அவைகளை முழுமையாக நம்பிக்கை கொள்ள வேண்டும்‌. நபிவழிகளில்‌ சிலவற்றை மாத்திரம்‌ ஏற்றுக்‌ கொண்டு, சிலவற்றைப்‌ புறக்கணிப்பவரும்‌ நபிகள்‌ நாயகத்தின்‌ மீது நம்பிக்கை கொண்டவரல்ல, மாறாக முழுமையாக நபி வழிகளைப்‌ புறக்கணித்தவர்‌ போலாவார்‌.

எனவே, குர்‌ஆன்‌, ஹதீஸ்‌ இரண்டையும்‌ பூரண மனத்திருப்தியுடன்‌ நம்பிக்கை கொள்ள வேண்டும்‌. மேலும்‌, மார்க்க விஷயங்களில்‌ விவாதித்தல்‌, சர்ச்சைகளில்‌ ஈடுபடுதல போன்றவற்றை விட்டும் விலகி விட வேண்டும்‌. இவ்வாறு மார்க்க விஷயங்களில்‌ விவாதம்‌ செய்வதும்‌, சர்ச்சைகளில்‌ ஈடுபடுவதும்‌ இஸ்லாமிய மார்க்கத்தில்‌ அனுமதிக்கப்பட்டதல்ல. நாம்‌ வாழுகின்ற இக்காலம்‌ ஹிஜ்ரி மூன்றாம்‌ நூற்றாண்டு மிகக்‌ கெட்டது. எனவே, குறிப்பாக இக்காலத்தில் அல்லாஹ்வை பயந்து வாழவேண்டும்

114. குழப்பம்‌ (ஃபித்னா) ஏற்பட்டுவிட்டால்‌ வீட்டில்‌ இருந்து விடுவதுடன்‌, அவ்வாறு ஏற்பட்டுள்ள இடத்தை விட்டும்‌ விலகி விட வேண்டும்‌. இவ்‌விஷயத்தில்‌ பிடிவாதம்‌ கொள்ளக்கூடாது. உலக விஷயங்களுக்காக முஸ்லிம்களுக்கிடையில்‌ ஏற்பட்ட அனைத்து சண்டை, சச்சரவுகளும்‌ (பித்னா) குழப்பங்களாகும்‌.

(பித்னா) குழப்பங்கள்‌ ஏற்படும்போதெல்லாம்‌ அதிகமதிகம்‌ ஈடு இணையற்ற அல்லாஹ்வைப்‌ பயந்து கொள்ளவேண்டும்‌. குழப்பங்களில்‌ கலந்து கொள்வதற்காக வெளியேறிச்சென்று சண்டையிடுதல்‌, பக்க சார்பாக நடந்து கொள்ளல்‌, குழப்பகாரப்பிரிவினரின்‌ நடவடிக்கைகளை விரும்புதல்‌ போன்ற. அனைத்தும்‌ தடைசெய்யப்பட்டதாகும்‌. ஏனெனில்‌, குழப்பத்தில்‌ இருப்பவர்களின்‌ நடவடிக்கைகள்‌ நன்மையாக இருப்பினும்‌ சரி, தீமையாக இருப்பினும்‌ சரி, அவற்றை எவரேனும்‌ விரும்பினால்‌ அவ்வாறு விரும்புபவரும்‌ குழப்பம்‌ விளைவித்தவரைப்‌ போன்றவராவார்‌. அல்லாஹ்வின்‌ திருப்தியைப்‌ பெறக்கூடிய காரியங்களில்‌ ஈடுபடுவதற்கு அவன்‌ நம்‌ அனைவருக்கும்‌ நல்லுதவி புரிவானாக! அவ்வாறே, அவனுக்கு மாறு செய்யக்கூடிய காரியங்களை விட்டும் நம் அனைவரையும் விலக்கியருள்வானாக.

115. வான சாஸ்த்திர கலைகளில் ஈடுபடுவதை தவிர்ந்து கொள்ள வேண்டும். தொழுகை போன்ற வணக்கவழிபாடுகளின் நேரக்கணிப்பிற்காக மட்டுமே இக்கலையை பயன்படுத்த முடியும். வேறு எதற்கும் இக்கலையை பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் இத்துறையில் ஈடுபடுவது இறை நிராகரிப்புக்கு வழிவகுக்கும்.

116. தத்துவக் கலைகளை படிப்பதையும், தத்துவக் கருத்துக்களைக் கூறி தர்க்கம்‌ புரிபவர்களுடன்‌ அமர்ந்திருப்பதையும்‌ தவிர்ந்து கொள்ள வேண்டும்‌.

117. ஹதீஸ்களையும்‌, அவற்றைப்‌ பின்பற்றுவோரையும்‌ பற்றிப்பிடித்துக்‌ கொள்ள வேண்டும்‌. (மார்க்க விஷயங்களில்‌), தெரியாதவைகளை, அவர்களிடமே கேட்க வேண்டும்‌. அவர்களுடன்‌ அமர்ந்திருந்து, அவர்களிடமே மார்க்க விஷயங்களைக் கற்றுக்‌ கொள்ளவேண்டும்.

118. இறைவனுக்கு அஞ்சுவதைவிடச்‌ சிறந்ததொரு வணக்கம்‌ இல்லை என்றே கூற வேண்டும்‌. மேலும்‌, அல்லாஹ்வுக்கு அஞ்சுதல்‌, அவனுக்கு மாறு செய்யும்‌ விஷயங்களில்‌ எச்சரிக்கையாக இருத்தல்‌, நற்செயலுக்கான கூலியை அல்லாஹ்விடமே ஆதரவு வைத்தல்‌, அல்லாஹ்வுக்கு வெட்கப்படுதல்‌ போன்ற அனைத்துமே மிகச்‌ சிறந்த இறைவணக்கங்களாகும்‌.

119. தவறான அன்பு, காதல்‌ போன்றவற்றின்பால்‌ அழைப்பவர்களுடனும்‌, அந்நியப்‌ பெண்களுடன்‌ தனித்திருப்பவர்களுடனும் பாதையோரங்களில்‌ வீணாக நேரத்தை வீணடிப்பவர்களுடனும்‌ கலந்திருப்பதைத் தவிர்ந்து, மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்‌. ஏனெனில்‌, இவர்கள்‌ அனைவரும்‌ வழிகேட்டிலேயே உள்ளனர்‌.

120. நிச்சயமாக எல்லாம்‌ வல்ல அல்லாஹ்‌ படைப்பினங்கள்‌ அனைத்தும்‌, தன்னை மாத்திரமே வணங்க வேண்டும்‌ என்று கட்டளையிட்டான்‌. பின்னர்‌ அவனது அருளின்‌ காரணமாக தான்‌ நாடியவர்களுக்கு இஸ்லாத்தின் பால்‌ நேர்வழி காட்டினான்‌.

121. நபித்தோழர்களான அலி(ரலி), முஆவியா(ரலி), ஆயிஷா(ரலி), தல்ஹா(ரலி), ஸுபைர்‌(ரலி) ஆகியோருக்கிடையில்‌ பிரச்சினைகள்‌ மற்றும்‌ குழப்பங்கள்‌ ஏற்பட்டன. இவர்களுடன்‌ ஏனைய சில நபித்தோர்களும்‌ கலந்து கொண்டனர்‌. எனினும்‌, இவர்களுக்கிடையில்‌ நடைபெற்ற யுத்தங்கள்‌ பற்றி எதுவும்‌ பேசாது நாவைப்‌ பேணிக்கொள்வதுடன்‌, அவை பற்றி விவாதத்தில்‌ ஈடுபடாமல்‌ இருப்பதும்‌ அவசியமாகும்‌. (இதுவே அஹ்லுஸ்‌ ஸுன்னா வல்‌ ஜமாஅத்தினரின்‌ நிலைப்பாடாகும்‌) ஏனெனில்‌, நபி(ஸல்‌) அவர்கள்‌ பின்வருமாறு கூறியுள்ளார்கள்‌: "எனது தோழர்கள்‌, மருமக்கள்‌, உறவினர்கள்‌ ஆகியோரைக்‌ குறை கூறுவதை நான்‌ உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறேன்‌.” மற்றொரு அறிவிப்பில்‌ “நிச்சயமாக பத்‌ரு ஸஹாபாக்களைப்பார்த்து நீங்கள்‌ விரும்பியதைச்‌ செய்யுங்கள் நிச்சயமாக நான்‌ உங்களை மன்னித்து விட்டேன்‌” என்று அல்லாஹ்‌ கூறியதாக நபி(ஸல்‌) அவர்கள்‌ நவின்றார்கள்‌. ”
(அறிவிப்பவர்‌: அலி பின்‌ அபீதாலிப்‌(ரலி), ஆதார நூற்கள்‌: புகாரி 4274, முஸ்லிம்‌- 2494),

122. ஒரு மனிதன்‌ தனக்குச்‌ சொந்தமான எந்த ஒரு பொருளையும்‌, மனம்‌ விரும்பிக்கொடுத்தாலேயன்றி, அது பிறருக்கு ஹலால்‌ ஆகமாட்டாது. எனவே, ஒரு மனிதனுடைய கையில்‌ இருக்கின்ற பொருள்‌, அது விலக்கப்பட்டதாக இருந்தாலும்‌ கூட, அவனுடைய அனுமதியின்றி அதனை எடுக்கக்‌ கூடாது. ஏனெனில்‌, அம்மனிதன்‌ தான்‌ கைவசம்‌ வைத்துக் கொண்டிருக்கின்ற பொருள்‌ ஹராமானது. இது தனக்குச்‌ சொந்தமானதல்ல! என்று உணரும்போது, குறித்த பொருளை, அப்பொருளின்‌ உரிமையாளருக்குத்‌ திருப்பி ஒப்படைத்துவிட்டு, அல்லாஹ்விடம்‌ பாவமன்னிப்புச்‌ செய்து, செய்த தவறிலிருந்து மீண்டு விடக்கூடும்‌. அப்படி அவர்‌ பாவமன்னிப்புச்‌ செய்து விட்டால்‌, ஏற்கெனவே இவரிடமிருந்து அதனை எடுத்தவர்‌ விலக்கப்பட்டதை எடுத்தவராகிவிடுவார்‌.

123. இஸ்லாமிய மார்க்கத்தில்‌ அனுமதிக்கப்பட்ட ஹலாலான முறைகளில்‌ மாத்திரமே பொருளீட்டலில்‌ ஈடுபட முடியும்‌. ஒரு மனிதனிடம்‌ ஹராமான முறையில்‌ ஈட்டப்பட்ட பொருள்‌ மாத்திரம்‌ இருந்தால்‌ உயிரைக்‌ காப்பாற்றிக்‌ கொள்ளக்கூடிய அத்தியவசிய அளவுக்கு மாத்திரமே அதிலிருந்து பயன்படுத்த வேண்டும்‌. அதற்கு அதிகமான அளவைப்‌ பயன்படுத்தக்கூடாது. அதுபோல யாரும்‌, “நான்‌ உழைப்பதை விட்டுவிட்டு, மனிதர்களிடம்‌ கேட்டு அவர்கள்‌ தருவதை எடுத்து எனது தேவைகளை நிறைவு செய்து கொள்வேன்‌” என முடிவு செய்து பொருளீட்டாமல்‌ இருந்து விடக்கூடாது. ஏனெனில்‌, நம்‌ முன்னோர்களான நபித்‌ தோழர்களோ, இஸ்லாமிய அறிஞர்களோ இன்று வரை இவ்வாறு செய்யவில்லை. மேலும்‌ உமர்‌ பின்‌ அப்துல்‌ அஸீஸ்‌ (ரஹ்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌: 'ஒரு அற்பமான தொழிலில்‌ ஈடுபட்டேனும் உழைப்பது பிறரிடம்‌ யாசிப்பதைவிட மிகச்‌ சிறந்ததாகும்‌” (இப்னு அபித்‌ துன்யா: 327, கன்ஸுல்‌ உம்மால்‌ 4/122).

124. ஜமாஅத்துத்‌ தொழுகை நடத்துவதற்குத்‌ தகுதியான ஒருவரைப்‌ பின்தொடர்ந்து ஜமாஅத்தாக ஐவேளைத்‌ தொழுகைகளையும்‌ நிறைவேற்றுவது அனுமதிக்கப்பட்டதாகும்‌. எனினும்‌, இவ்வாறு தொழுகை நடத்தக்கூடிய இமாம்‌ ஜஹமிய்யாக்களில்‌ ஒருவராக இருந்தால்‌, அவரைப்‌ பின்‌ தொடர்ந்து தொழுவது கூடாது.

ஏனெனில் ஜஹமிய்யாக்கள் எனப்படுவோர் அல்லாஹ்வின் பண்புகளைப் புறக்கணித்து அவற்றை பாழ்படுத்தியோராவர். இவர்களைப்‌ பின்தொடர்ந்து தொழுதால்‌, அத்தொழுகையை மீட்டி மீண்டும்‌ தொழ வேண்டும்‌. எனினும்‌, ஜும்‌ஆத்‌ தொழுகையை நடத்துகின்ற இமாம்‌ ஜஹமிய்யாக்களில்‌ ஒருவராகவும்‌, அவரே ஆட்சி செய்யும்‌ தலைவராகவும்‌ இருந்தால்‌ அவரைப்‌ பின்தொடர்ந்து ஜும்‌ஆத்‌ தொழுகையை நிறைவேற்றிவிட்டு (பின்னர்‌) அத்தொழுகையை மீட்டித்‌ தொழவேண்டும்‌. எனினும்‌, ஜும்‌ஆத்‌ தொழுகையை நடத்தும்‌ ஒருவர்‌, அஹ்லுஸ்‌ ஸுன்னா வல்‌ ஜமாஅத்தைச்‌ சார்ந்தவராக இருந்து, அவரே ஆட்சி செய்யும்‌ தலைவராக இருந்தாலும்‌ அல்லது சாதாரண குடிமகனாக இருந்தாலும்‌ அவரைப்‌ பின்தொடர்ந்து தொழ வேண்டும்‌. அவ்வாறு தொழுத அத்தொழுகையை மீட்டித்‌தொழ வேண்டிய அவசியம்‌ இல்லை. 

125. நபி(ஸல்‌) அவர்கள்‌ ஆயிஷா(ரலி) அவர்களின்‌ வீட்டிலேயே அடக்கம்‌ செய்யப்பட்டுள்ளனர்‌. மேலும்‌, கலீபாக்களான அபூபக்கர்‌(ரலி), உமர்‌(ரலி) ஆகியோரும்‌ அதே இடத்தில் நபி(ஸல்‌) அவர்களுக்குப்‌ பக்கத்திலேயே அடக்கம்‌ செய்யப்பட்டுள்ளனர்‌. எனவே, நபி(ஸல்‌) அவர்களது அடக்கஸ்தலத்தை ஸியாரத்‌ செய்யும்‌ ஒருவர்‌ நபி(ஸல்‌) அவர்கள்‌ மீது ஸலாம்‌ சொல்லிவிட்டு, கலீபாக்கள்‌ இருவர்‌ மீதும்‌ ஸலாம்‌ சொல்வது வலியுறுத்தப்பட்ட ஸுன்னத்தாகும்‌.

126. நன்மையை ஏவித்‌ தீமையைத்‌ தடுப்பது அனைவர்‌ மீதும் கடமையாகும் எனினும் நன்மையை ஏவி தீமையை தடுக்கின்றபோது தான் கொலை செய்யப்படலாம் அல்லது அடித்துத்‌ துன்புறத்தப்படலாம்‌ என்ற பயம்‌ இருந்தால்‌ அத்தகையோரிடம்‌ சென்று நன்மையை ஏவி, தீமையைத்‌ தடுப்பது கடமையாகாது.

127. அல்லாஹ்வுடைய அடியார்கள்‌ அனைவர் மீதும்‌ ஸலாம்‌ சொல்வது, வலியுறுத்தப்பட்ட ஒரு ஸுன்னத்தாகும்‌.

128. இஸ்லாமிய மார்க்கத்தில்‌ அனுமதிக்கப்பட்ட காரணங்கள்‌ எதுவுமின்றி, ஜும்‌ஆத்‌ தொழுகையை விடுவோரும்‌, ஜமாஅத்‌தோடு பள்ளிவாசலில்‌ தொழுகையை நிறைவேற்றாதவரும்‌ பித்‌அத்காரர்கள்‌ ஆவார்கள்‌. அனுமதிக்கப்பட்ட பள்ளிவாசலுக்கு நடந்து செல்ல முடியாத அளவுக்கு நோய்‌ வாய்ப்பட்டிருத்தல்‌, அல்லது அநியாயக்கார காரணம்‌ என்பது ஆட்சியாளர்களின் அக்கிரமத்திற்கு அஞ்சுதல்‌ ஆகிய இரண்டுமாகும்‌. வேற காரணங்களுக்காகப்‌ பள்ளிவாசலுக்குச்‌ செல்லாமலிருக்க. அனுமதியில்லை.

129. ஒரு இமாமுக்குப்‌ பின்னால்‌ நின்று தொழுகையை நிறைவேற்றுகின்ற ஒருவர்‌, இமாமைப்‌ பின்பற்றாவிட்டால்‌ அவரது தொழுகை ஏற்றுக்‌ கொள்ளப்படமாட்டாது.

130. நன்மையை ஏவித்‌ தீமையைத்‌ தடுத்தல்‌ மூன்று படித்தரங்களைக்‌ கொண்டது. முதலாவது: அதிகாரமுள்ளவர்கள்‌ தமது கைகளினால்‌ தடுத்து நிறுத்த வேண்டும்‌. இரண்டாவது; அதிகாரமில்லாதவர்கள்‌ தமது நாவினால்‌ எடுத்துச்‌ சொல்லித்‌ தடை செய்ய வேண்டும்‌. மூன்றாவது: நாவினால்‌ எடுத்து சொல்லவும்‌ சக்தியற்றவர்கள்‌ பாவங்களை உள்ளத்தினால்‌ வெறுத்து ஒதுங்கிவிட வேண்டும்‌. எனினும்‌, இதற்காக வாளேந்திப்‌ போரிடுவது அனுமதிக்கப்பட்டதன்று.

131. சந்தேகத்தை ஏற்படுத்துகின்ற செயல்களில்‌ ஈடுபடாதவர்‌ குறைகள்‌ மறைக்கப்பட்டவர்‌ ஆவார்‌. குறைகள்‌ மறைக்கப்பட்ட வர்களைப்‌ பற்றிப்‌ பேசுவது தடைசெய்யப்பட்டதாகும்‌. ('அல்மஸ்தூரூன்‌” என்னும்‌ குறைகள்‌ மறைக்கபட்டவர்களைப்‌ பற்றிய மேலதிக விபரங்களைத்‌ தெரிந்து கொள்ள பார்க்க சரஹுத்‌ தஹாவியா பக்கம்‌ 531).

132. சிலர்‌ குர்‌ஆனிலும்‌, நபிவழியிலும்‌ இடம்பெறாத மறைவான விஷயங்கள்‌ பற்றிய ஞானம்‌ தம்மிடம் உள்ளதாக வாதிடுகின்றனர்‌. இது ஒரு (பித்‌அத்‌) நூதனம்‌ மட்டுமின்றி வழிகேடுமாகும்‌. எனவே, எவரும்‌ இந்த அறிவின்‌ அடிப்படையில்‌ அமல்‌ செய்யவோ, இதன்பால்‌ மக்களை அழைக்கவோ கூடாது.

133. ஒரு பெண் ‌தன்னைத்தானே ஒரு ஆணுக்கு அர்ப்பணம் ‌செய்தால்‌, அவள்‌ அவனுக்கு அனுமதிக்கப்பட்டவளாக மாட்டாள் இச்சந்தர்ப்பத்தில் அவன்‌, அவளுடன் உறவு கொண்டால் இருவருமே தண்டிக்கப்பட வேண்டியவர்களாவர். பெண்ணின்‌ வலீ எனப்படும்‌ பொறுப்பாளர்‌, (நீதமான) இரண்டு சாட்சியாளர்கள் தீர்மானிக்கப்பட்ட மஹர்‌ அனைத்தும்‌ அடங்கிய ஒப்பந்தத்தின்‌ மூலம்‌ மாத்திரமே ஒரு பெண்‌, அனுமதிக்கப்பட்டவள்‌ ஆவாள்‌.

134. எவரேனும்‌ ஸஹாபாக்களில்‌ ஒருவரையேனும்‌ குறைகூறினால்‌, அவர்‌ தீய வார்த்தை பேசுகின்றவரும்‌, தன்‌ மனோ இச்சைக்கு வழிப்பட்டவருமாவார்‌. ஏனெனில்‌, நபி(ஸல்‌) அவர்கள்‌, 'எனது தோழர்களைப்‌ பற்றிக்‌ கூறப்பட்டால்‌, உங்களது நாவுகளைப்‌ பேணிக்‌ கொள்ளுங்கள்‌' எனக்‌ கூறினார்கள்‌ (அறிவிப்பவர்‌: இப்னு மஸ்‌ஊத்‌ (ரலி), ஆதார நூல்‌: தபரானி, அல்‌-கபீர்‌ (10/243). அல்பானி, ஸில்ஸிலா: 34).

தனது மரணித்திற்குப்‌ பிறகு ஸஹாபாக்கள்‌ மத்தியில்‌ ஏற்படவிருந்த குழப்பங்கள்‌ பற்றி நபி(ஸல்‌) அவர்களுக்குத்‌ தெரிந்திருந்தும்‌ கூட, அவர்களின் ‌(ஸஹாபாக்களின் ) நன்மைகளை மாத்திரமே நபியவர்கள்‌ சொல்லிக்‌காட்டினார்கள்‌. மேலும்‌, நபி(ஸல்‌) அவர்கள்‌ (பின்வருமாறு) கூறினார்கள்‌:
'எனது தோழர்களைக்‌ (குறை கூறுவதை) விட்டுவிடுங்கள்‌” (நூல்‌: அல்‌-பஸ்ஸார்‌, கஷ்புல்‌ அஸ்தார்‌: 3-290). மேலும்‌ அவர்களது. நல்ல விஷயங்களை மாத்திரமே பேசுங்கள்‌” (அறிவிப்பவர்‌: கைஸமா பின்‌ ஸுலைமான்‌ நூல்‌: பழாஇலுஸ்‌ ஸஹாபா),

எனவே, ஸஹாபாக்கள்‌ மத்தியில்‌ ஏற்பட்ட குழப்பங்கள்‌, சண்டைகள்‌ பற்றிப்‌ பேசுவதோ, அவர்களைப்‌ பற்றித்‌ தெரியாத விஷயங்களைக்‌ கூறுவதோ கூடாது. மேலும்‌, பிறர்‌ ஸஹாபாக்களைக்‌ குறை கூறும்போது அதனைக்‌ கேட்டுக்கொண்டிருப்பதும்‌ அனுமதிக்கப்பட்டதல்ல. ஏனெனில், அவ்வாறு கேட்டுக்கொண்டு இருக்கின்றபோது ஈமான்‌ பாதிக்கப்படும்‌. 

135. ஒரு மனிதன்‌ ஹதீஸ்களைக்‌ குறை கூறினால்‌, அல்லது அவைகளைப்‌ புறக்கணித்தால்‌, அல்லது ஹதீஸ்களை விட்டுவிட்டு வேறு கருத்துக்களுக்கு முன்னுரிமை வழங்கினால்‌, அவர்‌ மனோ இச்சைக்கு வழிப்படுகின்ற 'பித்‌அத்‌' காரர்‌ ஆவார்‌. மேலும்‌, இவன்‌ ஈமானில்‌ குறைபாடுடையவனுமாவான்‌ என்பதில்‌ சந்தேகமில்லை.

136. நபி(ஸல்‌) அவர்கள்‌ மூலம்‌ அல்லாஹ்‌ கடமையாக்கிய கடமைகள்‌ எதுவும்‌ ஒரு ஆட்சியாளனின்‌ அக்கிரமத்தால்‌ பாழாகிவிடுவதுமில்லை; குறைந்து போவதுமில்லை. ஆட்சியாளனின்‌ அநீதியும்‌, அக்கிரமும்‌ அவரைச்சார்ந்த தனிப்பட்ட விஷயமாகும்‌. இந்நிலையில்‌ ஒரு இறைவிசுவாசி ஆட்சியாளருக்குக்‌
கட்டுப்படுவதும்‌, அல்லது ஆட்சியாளருடன்‌ இணைந்து ஈடுபடுவதும்‌ அல்லாஹ்‌ நாடினால்‌ பூரணமான தன்மைகளைப்‌ பெற்றுத்‌ தரும்‌ வணக்கங்களாகும்‌. அதாவது நல்லறங்களில்‌ ஜமாஅத்‌ தொழுகை, ஜிஹாத்‌ போன்ற கடமைகள்‌ அனைத்தும்‌ இமாமின்‌ அனுமதியுடன்‌ நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகளே! எனவே, எல்லாவகையான வணக்கவழிபாடுகளையும்‌ அவருடன்‌ சேர்ந்து நிறைவேற்ற வேண்டும்‌. மேலும்‌, ஒவ்வொரு மனிதனுக்கும்‌ அவரது எண்ணத்திற்கேற்ற கூலி கிடைக்கும்‌.

137. ஓரு மனிதன்‌ தனது ஆட்சித்‌ தலைவருக்காக (இஸ்லாமிய) ஆட்சியாளருக்கு எதிராக துஆ கேட்பது வழிகேடாகும்‌. இத்தகையவர் தனது மனோ இச்சையைப்‌ பின்பற்றுபவரே! ஆட்சியாளருக்கு சார்பாக அவரை நேர்வழி நடத்துமாறு துஆ கேட்பதே சிறந்ததாகும். இத்தகையவர் இன்ஷா அல்லாஹ் அஹ்லுஸ்‌ ஸுன்னத்‌ வல்‌ ஜமாஅத்தைச்‌ சார்ந்தவராவார்‌. ஏனெனில்‌, புழைல்‌ பின்‌ இயாழ்‌ (ரஹ்‌) அவர்கள்‌ “என்னுடைய துஆக்களில்‌ ஒரேயொரு துஆ தான்‌ ஏற்றுக்கொள்ளப்படும்‌ என்று நான்‌ அறிந்திருந்தால்‌, அதனை நான்‌ இமாம்‌ எனும்‌ ஆட்சித்தலைவருக்காகவே கேட்டிருப்பேன்‌” என்று கூறினார்கள்‌. அப்போது இதனைக்‌ கேட்டுக்கொண்டிருந்த அவரின்‌ தோழர்களில்‌ ஒருவரான அப்துஸ்‌ ஸமத்‌ பின்‌ ஸைத்‌ (ரஹ்‌) அவர்கள்‌, அதனுடைய விளக்கம்‌ என்ன? என்று புழைல்‌ பின்‌ இயாழ்‌ (ரஹ்‌) அவர்களிடம்‌ வினவினார்‌. அதற்கவர்‌, “ஒரு மனிதன்‌ தனக்கு மாத்திரம்‌ துஆக்கேட்டால்‌, அதனுடைய நன்மை அவருடன்‌ நின்றுவிடுகின்றது. அதனால்‌ பிறருக்கு எந்த நன்மையும்‌ கிடைக்காது. மாறாக ஒரு மனிதன்‌ தனது ஆட்சித்‌ தலைவருக்காக துஆச்‌ செய்து, அதன்‌ காரணமாக அந்த ஆட்சித்‌ தலைவர்‌ திருந்தினால்‌, அவரது சீர்‌திருத்தத்தின்‌ மூலம்‌ நாடும்‌, குடிமக்களும்‌ சீர்‌திருந்துவர்‌.”என்று பதிலுரைத்தார்கள்‌. எனவே, ஆட்சியாளர்கள்‌ அநியாயக்காரர்களாக இருந்தாலும்கூட இறைவனிடம்‌ அவர்களுக்கெதிராக பிரார்த்திக்கக்கூடாது. மாறாக, அவர்களுக்கு நேர்வழி கிடைக்குமாறு இறைவனிடம்‌ பிரார்த்திப்பது அவசியமாகும்‌. ஏனெனில்‌, ஆட்சியாளர்கள்‌ அநியாயக்காரர்களாக இருப்பின்‌, அவர்களது அநியாயங்‌களுக்கும்‌, அக்கிரமங்களுக்கும்‌ அவர்களே பொறுப்பாளியாவார்‌கள்‌. எனினும்‌, அவர்களில்‌ ஏற்படும்‌ சீர்திருத்தம்‌ அவர்களுக்கும்‌ ஏனைய சமூகத்திற்கும்‌ நன்மையை ஈட்டித்தரும்.‌ 

138. நபி(ஸல்‌) அவர்களின்‌ மனைவிமார்கள்‌ உம்மஹாதுல்‌ முஃமினீன்கள்‌ (முஃமின்களின்‌ தாய்மார்கள்‌) பற்றி நல்லவற்றையே வேண்டும்‌.

139. ஒரு மனிதன்‌ தன்‌ ஆட்சித்‌ தலைவருக்குக்‌ கட்டுப்பட்டு (முஸ்லிம்‌ ஜமாஅத்துடன்‌ சேர்ந்து) வாழ்வதுடன்‌, ஐவேளைத்‌ தொழுகைகளையும்‌ பள்ளிவாசலுக்குச்‌ சென்று ஜமாஅத்தாக ஆட்சியாளருடன்‌ அல்லது பிற மக்களுடன்‌ சேர்ந்து நிறைவேற்றினால்‌ இவர்‌ ஸுன்னத்‌ வல்‌ ஜமாஅத்தைச்‌ சார்ந்தவராவார் இன்ஷாஅல்லாஹ்‌‌.

மேலும்‌, ஒருவர்‌ ஆட்சித்‌ தலைவருக்கு (முழுமையாக) கட்டுப்பட்டவராக இருந்தாலும்கூட, இஸ்லாத்தில்‌ கடமையாக்கப்‌ பட்ட ஐவேளைத்‌ தொழுகைகளையும்‌ ஜமாஅத்தாக நிறைவேற்றாமல்‌ இவர்‌ அலட்சியம்‌ செய்தால்‌, மனோ இச்சைக்குக்‌ கட்டுப்பட்டவர்‌ ஆவார்‌.

140. அருள்மறை குர்‌ஆனினும்‌, நபிவழியிலும் அனுமதிக்கப்பட்டவை என்று தெளிவாக விவரித்துக்‌ கூறப்பட்டுள்ளவை ‘ஹலால்’‌ ஆகும் இவ்வாறே, இவை இரண்டிலும் தடுக்கப்பட்டவை என்று தெளிவாக விவரித்துக்‌ கூறப்பட்டுள்ளவை ‘ஹராம்‌' ஆகும்‌. இவை தவிர, அனுமதிக்கப்பட்டதா? அல்லது தடைசெய்யப்பட்டதா?' என்று தெளிவில்லாத, உள்ளத்தை உறுத்திக்‌ கொண்டிருக்கக்‌ கூடிய சில விஷயங்கள்‌ உள்ளன. இவை சந்தேகத்துக்கு இடம்பாடானவை. 

141. பிஅத்கள்‌, பெரும்பாவங்கள்‌ போன்றவற்றில்‌ பகிங்கரமாக ஈடுபடாதவர்கள்‌ விஷயத்தில்‌ மெளனமாக இருந்து விடவேண்டும்‌. எனினும் பகிரங்கமாக இவற்றில் ஈடுபடுவோரை அடையாளம் காட்டி, அவருடன்‌ சேர்ந்திருப்பதை விட்டும் பிறருக்கு எச்சரிக்கை செய்யவேண்டும்‌

142. முஷப்பிஹாக்கள்‌, நாஸிபிய்யா, ஜஹமிய்யா, றாபிழா, முஃதஸிலா, ஜபரிய்யா, கதரிய்யா போன்ற அனைத்தும்‌ கொள்கை ரீதியாக அஹ்லுஸ்‌ ஸுன்னத்‌ வல்‌ஜமா அத்தினருடன்‌ முரண்பட்டுக்‌ கொண்ட பிரிவுகளின்‌ பெயர்களாகும்‌. இவர்கள்‌ ஒவ்வொரு பிரிவினரும்‌ அஹ்லுஸ்‌ ஸுன்னத்‌ வல்‌ ஜமாஅத்தினரை வெவ்வேறு பெயர்கள்‌ மூலம்‌ அழைக்கின்றனர்‌. இவ்வகையில்‌ ஜஹமியாக்கள்‌ அவர்களை முஷப்பிஹாக்கள்‌ என்கின்றனர்‌. றாபிழாக்கள்‌ அவர்களை நாஸிபிய்யாக்கள்‌ என்கின்றனர்‌. முஃதஸிலாக்கள்‌ அவர்களை தெளஹீத்வாதிகள்‌ என்கின்றனர்‌ கதிரிய்யாக்கள் அவர்களை ஜபரிய்யாக்கள் என்கின்றனர். எனினும்‌, இந்தப்‌ பெயர்கள்‌: யாவும்‌ வழிகெட்ட பிரிவினைவாதிகளால்‌ இஸ்லாமிய உம்மத்தில்‌ ஏற்படுத்தப்பட்ட பிரிவுகளின்‌ புதிய பெயர்களாகும்‌. (மேற்கூறப்பட்ட பிரிவுகள்‌ பற்றிய மேலதிக விளக்கம்‌ பின்னிணைப்பில்‌ இடம்‌ பெற்றுள்ளது.)

143. இமாம்‌ அப்துல்லாஹ்‌ பின்‌ முபாரக் ‌(ரஹ்‌) அவர்கள்‌ பின்வருமாறு கூறியுள்ளார்கள்‌: 'கூபா (ஈராக்கின்‌ தென்பகுதி) வாசிகளிடம்‌ றாபிழாக்கள்‌ பற்றிக்‌ கேட்கக்‌ கூடாது. ஏனெனில்‌ இவர்களில்‌ பெரும்பாலானவர்கள்‌ றாபிழாக்களாவர்‌. மேலும்‌, ஷாம் ‌(பலஸ்தீன்‌, ஸிரியா, ஜோர்டான்‌, லெபனான்‌) தேசத்தவர்களிடம் ஜிஹாத்‌ பற்றிக்‌ கேட்கக்கூடாது. ஏனெனில் இவர்களில்‌ பெரும்பாலானவர்கள்‌ இமாமுக்கு (ஆட்சித்‌‌ தலைவருக்குக்‌) கட்டுப்படாதவர்களாவர்‌. மேலும்‌, பஸரா (ஈராக்‌) வாசிகளிடம்‌ கதரியாக்கள்‌ பற்றிக்‌ கேட்கக்கூடாது. இவர்களில்‌ பெரும்பாலானோர்‌ கதரியாக்களாவர்‌. மேலும்‌, குராஸான் ‌(ஈரான்‌) நாட்டைச் சார்ந்தவர்களிடம்‌ முர்ஜிஆக்கள்‌ பற்றிக்‌ கேட்கக்கூடாது ஏனெனில்‌, இவர்களில்‌ அதிகமானோர்‌ முர்ஜிஆக்களாவர்‌, அதே போன்று தங்கம்‌, வெள்ளி வியாபாரம்‌ பற்றி மக்காவாசிகளிடம்‌ கேட்கக்கூடாது. ஏனெனில்‌ மக்காவாசிகள்‌ இவ்வியாபாரத்திலேயே அதிகமாக ஈடுபடுபகின்றனர் மேலும்‌, மதீனாவாசிகளிடம்‌ இசை கேட்பது பற்றிக்‌ கேட்கக்கூடாது. ஏனெனில்‌, இவர்கள்‌ இசை கேட்பதை அனுமதிக்கின்றனர்.

144. ஸஹாபாக்களான அபூஹுரைரா (ரலி), அனஸ்‌ பின்‌ மாலிக்‌ (ரலி), உஸைத்‌ பின்‌ ஹுழைர் ‌(ரலி) போன்றோரை நேசிப்பவர்‌ அஹ்லுஸ்‌ ஸுன்னாவைச்‌ சார்ந்தவர்‌ ஆவர்‌. இன்ஷா அல்லாஹ்‌. மேலும்‌, (ஹிஜ்ரி 131ல்‌ மரணித்த) அய்யூப்‌ பின்‌ கைஸான்‌ (ரஹ்‌) அவர்கள்‌, (ஹிஜ்ரி 139ல்‌ மரணித்த) அப்துல்லாஹ்‌ பின்‌ அவ்ன்‌ (ரஹ்‌) அவர்கள்‌, (ஹிஜ்ரி 139ல்‌ மரணித்த) யூனுஸ்‌ பின்‌ உபைத்‌(ரஹ்‌) அவர்கள்‌, (ஹிஜ்ரி 192ல்‌ மரணித்த) அப்துல்லாஹ்‌ பின்‌ இத்ரீஸ்‌ அல்‌ அவ்தீ (ரஹ்‌) அவர்கள்‌, (ஹிஜ்ரி 104ல்‌ மரணித்த) ஆமிர்‌ பின்‌ ஷராஹீல்‌ அல்‌-ஷஅபீ (ரஹ்‌) அவர்கள், (ஹிஜ்ரி 159 ல்‌ மரணித்த) மாலிக்‌ பின்‌ மிஃவல் ‌(ரஹ்‌) அவர்கள்‌, (ஹிஜ்ரி 182ல்‌ மரணித்த) யஸீத்‌ பின்‌ ஸுரைஃ (ரஹ்‌) அவர்கள்‌, (ஹிஜ்ரி 196ல்‌ மரணித்த) முஆஸ்‌ பின்‌ முஆஸ்‌ (ரஹ்‌) அவர்கள்‌, (ஹிஜ்ரி 206ல்‌ மரணித்த) வஹப் பின்‌ ஜரீர்‌ (ரஹ்‌) அவர்கள், (ஹிஜ்ரி 167ல்‌ மரணித்த) ஹம்மாத்‌ பின்‌ ஸலமா (ரஹ்‌) அவர்கள்‌, (ஹிஜ்ரி 179ல்‌ மரணித்த) ஹம்மாத்‌ பிள்‌ ஸைத் ‌(ரஹ்‌) அவர்கள்‌, (ஹிஜ்ரி 179ல்‌ மரணித்த) மாலிக்‌ பின்‌ அனஸ்‌ (ரஹ்‌) அவர்கள்‌, (ஹிஜ்ரி 157ல்‌ மரணித்த) அப்துர்ரஹ்மான்‌ பின்‌ அம்ர்‌ அல்‌- அவ்ஸாஈ (ரஹ்‌) அவர்கள்‌, (ஹிஜ்ரி 160ல்‌ மரணித்த) ஸாஇதா பின்‌ குதாமா (ரஹ்‌) அவர்கள்‌, (ஹிஜ்ரி 241ல்‌ மரணித்த) அஹ்மத்‌ பின்‌ ஹம்பல் ‌(ரஹ்‌) அவர்கள்‌, (ஹிஜ்ரி 217ல்‌ மரணித்த) அல்ஹஜ்ஜாஜ்‌ பின்‌ அல்மின்ஹால் ‌(ரஹ்‌) அவர்கள்‌, (ஹிஜ்ரி 231ல்‌ மரணித்த) அஹ்மத்‌ பின்‌ நஸர்‌ (ரஹ்‌) போன்ற அனைவரும்‌ ஹிஜ்ரி மூன்றாம்‌ நூற்றாண்டின்‌ ஆரம்ப காலத்தில்‌ வாழ்ந்த அஹ்லுஸ்‌ ஸுன்னாவின்‌ இமாம்களாவர்‌. எனவே, இவர்கள்‌அனைவரையும்‌ பற்றி நல்லதையே எடுத்துக்கூறி, இவர்களது கருத்துக்களையும் எடுத்துரைப்பவர்கள் அஹ்லுஸ்‌ ஸுன்னா வல் ஜமாஅத்தை சேர்ந்தவர்களே.

145. அஹ்லுஸ்‌ ஸுன்னாவைச்‌ சார்ந்த ஒருவர்‌, பித்‌அத்காரனுடன்‌ (தோழமை கொண்டு) அமர்ந்திருக்கக்‌ கூடாது. இவ்வாறு அமர்ந்திருப்பவரைக்‌ கண்டால்‌, அவருடன்‌ உள்ளவர்‌, “பித்‌அத்காரர்‌” என்பதைக்கூறி, எச்சரிக்கை செய்ய வேண்டும்‌. அதன்‌ பின்னரும்‌ தொடர்ந்து பித்‌அத்காரனுடன்‌ தோழமை வைத்துக்கொண்டால்‌, இவரும்‌ மனோஇச்சைக்கு வழிப்படும் பித்‌அத்காரனாவான்‌.
146. சிலரிடம்‌ ஹதீஸ்கள்‌ எடுத்துக்‌ கூறப்பட்டால்‌, அவற்றைப்‌ புறக்கணித்துவிட்டு, அல்குர்‌ஆனிலிருந்து ஆதாரம்‌ கேட்பார்கள்‌. இத்தகையவர்கள்‌ இறை மறுப்பாளர்கள்‌ என்பதில்‌ சந்தேகமேயில்லை. இவர்களை விட்டும்‌ விலகி, ஒதுங்கிக்‌ கொள்வது அவசியமாகும்‌.

147. தமது மனோ இச்சைக்கு வழிப்படுகின்ற பிரிவினர்கள்‌ அனைவரும்‌ வழிகெட்டவர்களே! இவர்கள்‌ அனைவரும்‌ போராடப்பட வேண்டியவர்கள்‌! இவர்களிலும்‌ மிகக்‌ கெட்ட, முற்றிலும்‌ நிராகரிக்கின்ற வழிகேடர்கள்‌ நாபிழாக்கள்‌, முஃதஸிலாக்கள்‌, ஜஹமியாக்கள்‌ போன்றோரே. ஏனெனில்‌, இவர்கள்‌ அனைவரும்‌ அல்லாஹ்வின் பண்புகளை புறக்கணித்து அவற்றை பாழ்படுத்துவதுடன் இறை நிராகரிப்பின் பால் மக்களை திசை திருப்புபவர்களே (பார்க்க பின்னிணைப்பு)

148. ஸஹாபாக்களில்‌ ஒருவரையேனும்‌ குறைசொல்பவர்‌, மண்ணறையில்‌ இருக்கும்‌ நபி (ஸல்‌) அவர்களை நோவினை செய்தவராவார்‌.

149. பகிரங்கமாக சில பித்அத்துக்களில் ஈடுபடுவோர் விஷயத்தில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் இவர்கள் மறைமுகமாக பல பித்‌அத்களில்‌ ஈடுபடுகின்றவர்களாக இருக்கக்கூடும்‌. (பித்‌அத்காரர்களுக்கு உதாரணம்‌, அவர்கள்‌ தேளைப்‌ போன்றவர்கள்‌. தேள்‌ தனது உடலையும்‌, தலையையும்‌
மண்ணில்‌ புதைத்துக்கொண்டு, விஷமுள்ள கொடுக்கை மாத்திரம்‌ வெளியே நீட்டிக் கொண்டிருக்கும்‌. சந்தர்ப்பம்‌ வரும்போது விஷக்கொடுக்கால்‌ கொட்டிவிடும்‌. அவ்வாறே, பித்‌அத்காரர்கள்‌ மக்களிடையே நடமாடும்போது, தமது கொள்கையை மறைத்துக்கொண்டு உலாவருவார்கள்‌. சந்தர்ப்பம்‌ வரும்போது, தமது கருத்துக்களைப்‌ போதித்து விடுவார்கள்‌. (தபகாதுல்‌ ஹனாபிலா2: 44).

150. அஹ்லுஸ்‌ ஸுன்னா வல்‌ ஜமாஅத்தைச்‌ சார்ந்த ஒருவர்‌ பெரும் பாவங்களில்‌ ஈடுபடக்கூடியவராக, அநியாயக்காரராக, கெட்டவராக இருந்த போதும்கூட, அவருடன்‌ ஒருசேர அமர்ந்து உறவாடி, சேர்ந்து பழகலாம்‌. ஏனெனில்‌, அவருடைய பாவச்‌ செயல்களுக்கு அவரே பொறுப்பாவார்‌. அவரது பாவத்தின் காரணமாக அவருடன் சேர்ந்து பழகுபவர்களுக்கு எந்தப் பாதகமும்‌ ஏற்படுவதில்லை. மாறாக, மனோ இச்சைக்கு வழிப்படக்கூடிய பித்‌அத்காரர் ஒருவன்‌ முழு மூச்சாக வணக்க வழிபாடுகளில்‌ ஈடுபட்டுக்கொண்டும்‌, அவ்வாறான வணக்க வழிபாடுகளுக்கென்றே தன்னை அர்ப்பணம்‌ செய்து கொண்டாலும்‌, அவனுடன்‌ உறவாடவோ, தோழமை கொள்ளவோ கூடாது. மட்டுமன்றி, இத்தகையவர்களுடன்‌ பாதையில்‌ ஒன்றாக நடந்து செல்வதை விட்டும்‌ தவிர்ந்து கொள்ள வேண்டும்‌. ஏனெனில்‌, இவர்களுடன்‌ உறவு வைத்துக்‌ கொள்ளும்போது இவர்களுடைய வழிகெட்ட கொள்கைகள்‌, மற்றும்‌ சிந்தனைகளால்‌ கவரப்பட்டு, சேர்ந்து நடப்பவரும்‌ வழிகெட்டுவிட வாய்ப்பு இருக்கின்றது.

யூனுஸ்‌ பின்‌ உபைத் ‌(ரஹ்‌) அவர்கள்‌, தனது மகன்‌ மனோ இச்சையைப்‌ பின்பற்றுகின்றவனுடைய வீட்டிலிருந்து வெளியேறுவதைக்‌ கண்டார் அப்போது அவர்‌, “என்‌ அருமை மகனே! நீ எங்கிருந்து வருகிறாய்?” எனக் கேட்டார் அதற்கு அவரது மகன்‌, “நான்‌ இன்னாரிடமிருந்து (அம்ர்‌ பின்‌ உபைத்‌ என்பவரிடமிருந்து) வருகிறேன்‌” என்று பதிலுரைத்தார்‌. இதனைக்‌ கேட்ட அவரது தந்தை, 'எனதருமை மைந்தனே! அம்ர்‌ பின்‌ உபைத்‌ போன்ற பித்‌அத்காரர்களின்‌ வீட்டிலிருந்து நீ வெளியேறுவதை நான்‌ காண்பதைவிட, ஒரு விபச்சாரியின்‌ வீட்டிலிருந்து நீ வெளியேறுவதைக்‌ காண்பது எனக்கு விருப்பமானது. ஏனெனில்‌, மனோஇச்சைக்கு வழிப்பட்டு, பித்‌அத்தான செயல்களுடன்‌ நீ அல்லாஹ்வை சந்திப்பதைவிட களவு, விபச்சாரம்‌, மோசடி போன்ற பெரும்பாவங்கள்‌ புரிந்த நிலையில்‌ நீ அல்லாஹ்வைச்‌ சந்திப்பது எனக்கு விருப்பமானது” என்று கூறினார்கள்‌.

அதாவது, விபச்சாரி தனது விபச்சாரத்தால் ஒரு மனிதனை மார்க்கத்திலிருந்து வெளியேற்றிவிட முடியாது ஆனால்‌, ஒரு பித்‌அத்காரன்‌ தனது பித்‌அத்தான செயல்களின்‌ காரணமாக தானும் வழி கெட்டு பிற மனிதனையும் வழி கெடுத்து படிப்படியாக அம்மனிதனை மார்க்கத்திலிருந்து வெளியேற்றி அவரை நிராகரிப்பின்பால்‌ இட்டுச்செல்வான்‌ என்பதன்‌ காரணமாகவே, இங்கே யூனுஸ்‌ பின்‌ உபைத்‌ (ரஹ்‌) அவர்கள்‌ தனது மகனை கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளார்கள்‌. (ஆதார நூல்கள்‌: ஹில்யா 3 20, 21, தாரீஹ்‌ பக்தாத்‌ 12 172, 173, அல்‌ இபானல்‌ குப்ரா பக்கம்‌ 464),

151. நம்முடன்‌ சமகாலத்தில்‌ வாழ்பவர்களுடன்‌ மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்‌. நாம்‌ யாருடன்‌ அமாந்திருக்கின்றோம்‌, யாரிடம்‌ கல்வி கற்கிறோம்‌: யாருடன்‌ தோழமை கொண்டுள்ளோம்‌ போன்ற விஷயங்களை மிகக்‌ கவனமாகப்‌ பார்க்க வேண்டும்‌. ஏனெனில்‌, அல்லாஹ்வின்‌ அருளால்‌ நேர்வழி நடக்கின்றவர்களைத்‌ தவிர பெரும்பாலானோர்‌ மதம்‌ மாறிவிட்ட முர்த்தத்துகளைப்‌ போன்றே வாழ்கின்றனர்‌.

152. (ஹிஜ்ரி 240ல்‌ மரணித்த) இப்னு அபீ துஆத்‌ எனப்படும்‌ அஹ்மத்‌ பின்‌ பரஜ்‌ அல்‌-ஜஹமி (ஹிஜ்ரி 218ல்‌ மரணித்த) பிஷ்ர்‌ பின்‌ கியாஸ்‌ அலமிர்ரீஸி (ஹிஜ்ரி 218ல்‌ மரணித்த), ஸுமாமா பின்‌ அஷ்ரஸ்‌ அல்பஸரி, (ஹிஜ்ரி 227ல்‌ மரணித்த) அபுல்‌ ஹுதைல்‌ எனப்படும்‌ முஹம்மத்‌ பின்‌ அல்‌-ஹாதைல்‌ அல்பஸரி (ஹிஜ்ரி 227ல்‌ மரணித்த), ஹிஷாம்‌ பின்‌ அம்ர்‌ அல்பூதி போன்ற அனைவருமே (முஸ்லிம்‌ அறிஞர்களென வாதாடிக்‌ கொண்டு வாழ்ந்த) மதம்‌ மாறிய முர்தத்துகளாவர்‌. எனவே, இவர்களைப்‌ பற்றியும்‌, இவர்கள்‌ போதித்தவைகள்‌ பற்றியும்‌ எடுத்துக்கூறக்‌ கூடிய மனிதன்‌, அவர்களைச்‌ சார்ந்த பித்‌அத்காரனேயன்றி வேறில்லை. இவர்கள்‌ பற்றியோ, இவர்களைப்‌ பின்பற்றக்‌ கூடியவர்கள்‌ மற்றும்‌ இவர்களது ஆதரவாளர்கள்‌ போன்றோர்‌ பற்றியோ எடுத்துக்‌ கூறக்கூடியவர்களும்‌ பித்‌அத்காரர்களே எனவே, இவர்களது அந்தஸ்துகளை எடுத்துக்கூறி, இவர்கள்‌ எடுத்துக்‌ கூறியவற்றை சொல்லிக்காட்டும்‌ அனைவரையும்‌ விட்டு விலகி நடப்பது மிக அவசியமாகும்.

153. ஒருவருடைய ஈமானில் சந்தேகம் கொண்டு அவரைப் பரீட்சிப்பதற்காக அவரிடம்‌ கேள்வி கேட்பது பித்‌அத்‌ ஆகும்‌. எனினும்‌, ஹதீஸ்களை ஏற்றுக்‌ கொள்வதற்காக அறிவிப்பாளர்கள் பற்றி விசாரிப்பதும்‌, அவர்களிடம்‌ கேள்விகள்‌ கேட்டுப்‌ பரீட்சித்துப்‌ பார்ப்பதும்‌ அவசியமாகும்‌. (ஹிஜ்ரி 110ல்‌ மரணித்த) இமாம்‌ இப்னு ஸீரீன்‌ (ரஹ்‌) அவர்கள்‌ கூறுவதாவது: (அறிவிப்பாளர்களது நம்பகத்தன்மை, நேர்மை போன்றவற்றை ஆய்வு செய்து பார்க்கும்‌) ஹதீஸ்‌ கலை மார்க்கத்தின்‌ ஒரு பகுதியாகும்‌. எனவே, உங்களது மார்க்க விஷயங்களை (ஹதீஸ்களை) யாரிடம் இருந்து எடுக்கிறீர்கள் என்பதை ஆய்வு செய்துகொள்ளுங்கள்‌. (நூல்‌ முஸ்லிம்‌1: 41 முன்னுரை).

‌மற்றுமொரு செய்தி கீழ்வருமாறு இடம்‌ பெற்றுள்ளது. 'சாட்சி ஏற்றுக்‌ கொள்ளத்‌ தகுதியானவர்களிடமிருந்து மாத்திரமே ஹதீஸ்களை ஏற்றுக்‌ கொள்ள வேண்டும்‌. (நூல்‌: பஃதாதி: அல்‌-‌ கிபாயா 125).

எனவே, ஹதீஸ்களை அறிவிக்கின்ற ஒருவர்‌ அஹ்லுஸ்‌ஸுன்னாவைச்‌ சார்ந்தவராகவும்‌, நம்பிக்கை, நேர்மை உள்ளவராகவும் இருந்தால் மாத்திரமே அவர் அறிவிக்கின்ற செய்திகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். மேற்கூறப்பட்ட பண்புகளில்‌ ஒன்றையேனும்‌ ஒரு அறிவிப்பாளர்‌ இழக்கும்போது, அவருடைய செய்திகளை ஏற்றுக்‌ கொள்ளக் கூடாது. ஏனெனில், அவர்‌ நம்பகத்‌ தன்மையை இழந்தவராகவே கருதப்படுவார்‌.

154. சத்திய மார்க்கத்திலிருந்து தடம்‌ பிறழாமலிருக்கவும்‌, அஹ்லுஸ்‌ ஸுன்னத்‌ வல்‌ ஜமாஅத்தின்‌ கொள்கைகளில்‌ நிலையாக இருக்கவும்‌ விரும்புகின்ற ஒருவர்‌ கண்டிப்பாக தத்துவக் கலையில்‌ ஈடுபடாதிருக்கவேண்டும்‌. மேலும்‌, தத்துவம்‌ பேசுதல்‌ விவாதித்தல்‌, விதண்டாவாதங்களில்‌ ஈடுபடுதல்‌, ஒப்ப நோக்குதல் போன்ற செயல்களை மேற்கொள்வோருடன்‌ சேர்ந்திருத்தல்‌ கூடாது. ஏனெனில்‌, இவ்வாறான செயல்களில்‌ ஈடுபடுவோர்‌ பேசுவதைக்‌ கேட்டுக்‌ கொண்டிருப்பது கூட மனித உள்ளங்களில்‌ சந்தேகத்தை ஏற்படுத்தும்‌. இவ்வாறு சந்தேகம்‌ ஏற்படுவதுகூட அவர்களது கொள்கைகளை ஏற்றுக்‌ கொண்டதற்கு ஈடாகும்‌. இதனால்‌ ஈமான்‌ பறிபோக வாய்ப்புக்கள்‌ உள்ளன. இஸ்லாமிய உம்மத்தில்‌ இறை நிராகரிப்பு, பித்‌அத்கள்‌, நயவஞ்சகம்‌, மனோ இச்சைக்கு வழிப்படுதல் வழிகேடு என அனைத்து விதமான பாவங்களும் தலைவிரித்தாடுவதற்குக்‌ காரணம்‌, மார்க்க விஷயங்களில்‌ தத்துவம்‌ பேசியமை, விவாதித்தமை, விதண்டாவாதம்‌ புரிந்தமை, மார்க்க விஷயங்களை (தவறாக)நடைமுறைவாழ்வுடன்‌ ஒப்பு நோக்கியமை போன்ற தவறான வழிமுறைகளாகும்‌. மேற்கூறப்பட்ட அனைத்துமே பித்‌அத்துக்களதும்‌, சந்தேகங்களதும்‌, இறை நிராகரிப்பினதும்‌ வாயில்கள்‌ எனக்‌ கூறினால்‌ மிகையாகாது!

155. ஒவ்வொரு மனிதனும்‌ முழுமையாக அல்லாஹ்வை அஞ்சி நடக்க வேண்டும்‌. மேலும்‌, நபி (ஸல்‌) அவர்களுடைய வழிமுறைகள்‌, ஸஹாபாக்களின் முன்மாதிரிகள் ஆகியோரைப் பின்பற்றி நடக்க வேண்டும்‌. ஏனெனில்‌, மார்க்கம்‌ என்பது நபி (ஸல்‌) அவர்களையும்‌, ஸஹாபாக்களது முன்மாதிரிகளையும்‌ பின்பற்றுவதாகும்‌. 'ஸலபுஸ்ஸாலிஹீன்கள்‌' எனப்படும்‌ நேர்வழி நடந்த நம்‌ முன்னோர்கள்‌ நம்மைத்‌ தெளிவான முன்மாதிரியின்‌ மீதே விட்டுச்‌ சென்றுள்ளனர்‌. மாறாக, சந்தேகத்திலோ, குழப்பத்திலோ விட்டுச்‌ செல்லவில்லை. எனவே, அவர்களைப்‌ பின்பற்றுவதால்‌ மார்க்க விஷயங்களில்‌ ஈடேற்றமும்‌, மன நிம்மதியும்‌ கிடைக்கும்‌. மேலும்‌, நபி (ஸல்‌) அவர்களது வழிமுறைகளையும்‌, அவற்றை அறிவித்துத்‌ தந்த நபித்தோழர்களது வழிமுறைகளையும்‌ மீறி விடக்கூடாது. 

156. அல்குர்‌ஆன்‌, அல்ஹதீஸ்‌ இரண்டிலும்‌ இடம்பெற்றுள்ள முதஷாபிஹான செய்திகளை அவைகளின்‌ நேரடிப் பொருளுடன்‌ விசுவாசம்‌ கொள்ள வேண்டும்‌. அவைகளுக்கு மேலதிகமாக விளக்கம்‌ சொல்லக்கூடாது.

157. வழிகெட்டவர்களுடன்‌ பேசுகின்றபோது, அவர்களை மடக்குவதற்காக தந்திரங்களைக்‌ கையாள்வது தடை செய்யப்பட்டதாகும்‌. எனவே, இவ்வாறான சந்தர்ப்பங்களில்‌ மெளனமாக இருந்துவிட வேண்டும்‌. மாறாக நமக்கெதிராகச்‌ செயல்படுவதற்கு அவர்களுக்கு வழியமைத்துக்‌ கொடுக்கக்‌ கூடாது.

இமாம்‌ முஹம்மத்‌ பின்‌ ஸீரீன்‌(ரஹ்‌) அவர்கள்‌ தாபிஈன்களைச்‌ சேர்ந்த மிகப்‌ பிரபல்யமான அறிஞர்களில்‌ ஒருவர்‌. இவரது சிறப்பைப்‌ பற்றி அறியாதவர்களே இருக்க முடியாது. இவர்‌ பித்‌அத்வாதிகள்‌ எவருக்கும்‌ மார்க்க விஷயங்களில்‌ பதிலளிக்கமாட்டார்‌. அவ்வாறே, அவர்களில்‌ எவரிடமிருந்தும்‌ அல்குர்‌ஆன்‌ வசனங்களை செவிமடுக்கவும்‌ மாட்டார்‌. இது பற்றி அவரிடம்‌ வினவப்பட்டபோது, 'பித்‌அத்காரன்‌ 'குர்‌ஆன்‌ வசனத்தைத்‌ திரிபுபடுத்தி ஓதிவிடுவான்‌. அதனால்‌, எனது உள்ளத்தில்‌ சந்தேகம்‌ ஏற்பட்டுவிடுமோ என அஞ்சுகிறேன்‌ என்று பதிலளித்தார்‌.' (நூல்கள்‌: தாரமீ 1-91, லாலகாஈ: அஸ்ஸுன்னா 242).

158. (அல்லாஹ்வின்‌ பண்புகள்‌ பற்றிக்‌ கூறும்‌) நபிமொழிகளைக்‌ கேட்கின்றபோது சிலர்‌, தாம்‌ அல்லாஹ்வைத்‌ தூய்மைப்‌ படுத்துகிறோம்‌ என்று கூறிவிடுகின்றனர்‌. இவர்களே ஜஹமிய்யாக்கள்‌ ஆவர்‌. இவர்கள்‌, 'அல்லாஹ்வைத்‌ தூய்மைபடுத்துகிறோம்‌, படைப்புகளுடன்‌ அல்லாஹ்வை ஒப்பிடமாட்டோம்‌” என்ற வாசகங்களைப்‌ பயன்படுத்தி (இவைபற்றிக்‌ கூறும்‌) ஹதீஸ்களை மறுக்க முயல்கின்றனர்‌. மறுமையில்‌ முஃமின்கள்‌ அல்லாஹ்வைக்‌ காண்பார்கள்‌” (அறிவிப்பவர்‌:‌ ஜரீர்‌ பின்‌ அப்துல்லாஹ்‌ அல்பஜலி (ரலி), ஆதார நூல்‌: புஹாரி 554) 'இரவின்‌ கடைசிப்‌ பகுதியில்‌ அல்லாஹ் கீழ்வானத்துக்கு இறங்குகிறான்‌” (அறிவிப்பவர்‌: அபூஹுரைரா (ரலி), ஆதார நூல்‌: புஹாரி 1145) போன்ற ஹதீஸ்களை செவியுறுகின்றபோது, "இறங்குதல்‌" 'காணுதல்‌” போன்ற படைப்புகளிடம்‌ உள்ள பண்புகளுக்கு அல்லாஹ்வை ஒப்பிடாமல்‌, அவனை தாம் தூய்மைபடுத்துவதாகக்‌ கூறி இத்தகைய ஹதீஸ்களை மறுத்துரைக்கின்றனர்‌.

“அல்லாஹ்‌ ஓர்‌ இடத்திலிருந்து மற்றுமோர்‌ இடத்திற்கு இடம்‌ பெயர்வதை விட்டும்‌ தூய்மையானவன்‌” என்று கூறி அல்லாஹ்வை மகத்துவப்படுத்த முயலும் இவர்கள் அல்லாஹ்வை விடவும் அல்லாஹ்வின் பண்புகள் பற்றிய அறிவு தமக்கு உண்டு என எண்ணிக்கொண்டிருக்கிறார்கள் போலும். இத்தகையோர் பற்றி மிகவும் எச்சரிக்கையாக இருந்துவிட வேண்டும். அல்லாஹ்வின் திருநாமங்கள் பண்புகள் பற்றிய விஷயங்களில் இன்று அதிகமானவர்களின் நிலையும் இதுதான். எனவே இத்தகைய போக்குடையவர்கள் பற்றி பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்யவேண்டும்

159. இப்புத்தகத்தில் உள்ள விஷயங்களில் தெளிவில்லாதவைகளுக்கு விளக்கம்‌ கேட்கக்கூடியவர்‌ நேர்வழியைத்‌ தேடுபவரே! எனவே, அவருடன்‌ உரையாடி, அவற்றைத்‌ தெளிவுபடுத்தி அவருக்கு நேர்வழி காட்ட வேண்டும்‌. மாறாக, இதில்‌ கூறப்பட்டுள்ள , விஷயங்கள்‌ பற்றி விவாதிக்கவோ, தர்க்கம்‌ புரியவோ வருபவருடன்‌ எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்‌. ஏனெனில்‌, இதன்‌ மூலம்‌ விவாதித்தல்‌, தர்க்கம்‌ புரிதல்‌, வாதாடுதல்‌, சர்ச்சைகளில்‌ ஈடுபடுதல்‌, கோபப்படுதல் போன்றன இடம்பெற வாய்ப்புண்டு. இவை அனைத்தும்‌ நிச்சயமாக தடை செய்யப்பட்டவையாகும். மேலும் இவை சத்தியப் பாதையிலிருந்து மனிதனை திசைதிருப்பிவிடும். மேலும் நம் முன்னோர்களான இஸ்லாமிய அறிஞர்கள் மார்க்க தேதைகள்‌ போன்றோர்‌ வீண்‌ விவாதங்களிலோ, தர்க்கங்களிலோ ஈடுபட்டதாக எங்கும்‌ காண முடியவில்லை.

'இமாம்‌ ஹஸன்‌ அல்‌ பஸரீ(ரஹ்‌) பின்வருமாறு கூறியுள்ளார்கள்‌: உலமாக்கள்‌(அறிஞர்கள்‌) தம்மிடமுள்ள கல்வியை பரப்புவதற்காக தர்க்கங்களிலோ, விவாதங்களிலோ ஈடுபடவேண்டிய அவசியமில்லை. (அவர்கள்‌ குர்‌ஆனையும்‌, ஹதீஸையும்‌ மக்களுக்கு எடுத்துச்‌ சொல்கின்றபோது) அதனை மக்கள்‌ ஏற்றுக்‌ கொண்டால்‌ அல்லாஹ்வைப்‌ புகழ்வர்‌. அதேபோன்று அதனை மக்கள்‌ புறக்கணித்தாலும்‌ அல்லாஹ்வையே அவர்கள்‌ புகழ்வர்‌. (நூல்‌: இப்னு பத்தா அல்‌ இபானல்‌ குப்ரா: 611).

இமாம்‌ ஹஸன்‌ அல்‌ பஸரீ(ரஹ்‌) அவர்களிடம்‌ ஒரு மனிதர்‌ வந்தார்‌. 'சில மார்க்க விஷயங்கள்‌ பற்றி விவாதிப்பதற்காக தங்களிடம்‌ வந்துள்ளேன்‌' என்று அவர்‌ கூறினார்‌. அதற்கவர்கள்‌, நான்‌ எனது மார்க்க விஷயங்களில்‌ தெளிவாக இருக்கிறேன்‌. உங்களுக்கு மார்க்க விஷயங்களில்‌ தெளிவில்லாவிட்டால்‌ நீங்கள்‌ சென்று மார்க்கத்தைக்‌ கற்றுக்கொள்ளுங்கள்‌” என்று பதிலுரைத்தார்கள்‌. (நூல்‌: இப்னுபத்தா: அல்இபானல்‌ குப்ரா 386).

ஒருமுறை நபி (ஸல்‌) அவர்களின்‌ வீட்டுக்கு அருகாமையில்‌ சில ஸஹாபாக்கள்‌ உரையாடிக்கொண்டிருந்தார்கள்‌. அவர்களில் சிலர்‌, “அல்லாஹ்‌ இப்படிக்‌ கூறவில்லையா?” என்றனர். இதனை மறுத்த ஏனையோர்‌, 'அல்லாஹ்‌ இப்படிக்‌ கூறியிருப்பது உங்களுக்குத்‌ தெரியாதா?” என்றனர்‌. (இவ்வாறு கருத்து முரண்பட்டு தர்க்கித்துக் கொண்டனர்‌), இதனைக்‌ கேட்டுக்‌ கொண்டிருந்த நபி(ஸல்‌) அவர்கள்‌ கோபமுற்ற நிலையில்‌ தம்‌ வீட்டிலிருந்து வெளியே வந்து, 'இவ்வாறு (தர்க்கம்‌) செய்யும்படி நீங்கள்‌ ஏவப்பட்டுள்ளீர்களா? அல்லது இவ்வாறான செயல்களைக்‌ கொண்டு நான்‌ உங்களிடம் நபியாக அனுப்பப்பட்டுள்ளேனா? அல்லாஹ்வின்‌ வேதமான அல்குர்‌ஆனின்‌ சில வசனங்களைக்‌ கூறி, வேறு சில வசனங்களைப்‌ புறக்கணிக்கின்றீர்களே என்று கடிந்து கொண்டார்கள்‌. (நூற்கள்‌: அஹ்மத்‌ 2-195, 196, இப்னுமாஜா: 85).

மேற்குறிப்பிட்ட ஹதீஸிலிருந்து ஸஹாபாக்கள்‌ தர்க்கத்தில்‌ ஈடுபட்டதை நபி(ஸல்‌) அவர்கள்‌ தடை செய்துள்ளார்கள்‌ என்பது தெளிவாகிறது.

மேலும்‌, இப்னு உமர் ‌(ரலி) அவர்களும்‌, இமாம்‌ மாலிக்‌ பின்‌ அனஸ் ‌(ரஹ்‌) அவர்களும்‌ இவர்களது காலத்திற்கு முன்னரும்‌, பின்னரும்‌ வாழ்ந்த அனைத்து அறிஞர்களும்‌ விவாதம்‌ செய்வதை வெறுத்தது மட்டுமின்றி, அதில்‌ ஈடுபடுவதையும்‌ தவிர்ந்து கொண்டுள்ளார்கள்‌. (நூல்‌: ஸுனனுத்‌ தாரமி 1: 77).

ஒரு முஃமினைப்‌ பொறுத்தவரை மனிதர்கள்‌ கூறுகின்ற கருத்துக்களை விட, எல்லாம்‌ வல்ல அல்லாஹ்‌ கூறுகின்ற திருமறை வசனங்களே அவருக்குப்‌ போதுமானதாகும்‌. (தர்க்கிப்பது பற்றி பின்வருமாறு) அல்லாஹ்‌ கூறுகிறான்‌:

நிராகரிப்பவர்களைத்‌ தவிர, வேறு எவரும்‌ அல்லாஹ்வின்‌ வசனங்களைப்‌ பற்றித்‌ தர்க்கம்‌ செய்யமாட்டார்கள்‌.(அத்தியாயம் 40 ஸூரத்த்து‌ல்‌ முஃமின் 4வது வசனம்).

ஒரு மனிதர்‌ தர்க்கிக்கும்‌ நோக்கத்துடன் கலீபா உமர் ‌(ரலி), அவர்களிடம்‌ வந்து அருள்மறை குர்‌ஆனின்‌ 79வது அத்தியாயமான ‌அந்நாஸியாத்‌ அத்தியாயத்தில்‌ “இலேசாகக்‌ கழற்றுபவர்கள்‌ மீது சத்தியமாக” என்ற வசனத்தில்‌ இடம்பெற்றுள்ள 'இலேசாகக்‌ கழற்றுபவர்கள்‌ என்றால்‌ என்ன?” என்று கேட்டார்‌. அதற்கு "நீர்‌ தலை மழித்த கவாரிஜ்களைச்‌ சார்ந்தவராக இருந்தால்‌, உம்மைக்‌ கொலை செய்திருப்பேன்‌.” என்று பதில்‌ கூறினார்கள்‌ உமர்‌ (ரலி) அவர்கள்‌. (ஆதாரம்‌: தாரமி 1: 51, அல்‌ஆஜார்ர அலீ்‌ஷரீஆ: 73).

நபி(ஸல்‌)அவர்கள்‌ பின்வருமாறு நவின்றுள்ளார்கள்‌: 'ஒரு முஃமின்‌ தர்க்கம்‌ புரியமாட்டார்‌. மேலும்‌, தர்க்கத்தில் ஈடுபடுவோருக்கு மறுமையில் நான் சிபாரிசு செய்யவும் மாட்டேன். எனவே தர்க்கம் புரிவதை தவிர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில், இதனில் கிடைக்கின்ற நன்மைகள் குறைவானதே.” (ஆதாரம்‌: அல்தபரானி அல்கபீர்‌ 8:178, 179), (இச்செய்தி மிகவும்‌ பலவீனமானது. பார்க்க: அல்‌-ஹைஸமீ: மஜ்மஃ அல்ஸவாஇத்‌ 1-156, 7-259).

160. நபிவழி சார்ந்த அனைத்துக்‌ காரியங்களும்‌ ஒரு மனிதரிடம்‌ ஒன்று சேராதவரை அவரை முழுமையாக நபிவழியை ஏற்று நடப்பவர்‌ என்று கூற முடியாது. அதுபோன்று முழுமையாக நபிவழியைப்‌ பின்பற்றாதவரை அவரை அஹ்லுஸ்‌ ஸுன்னாவைச்‌ சார்ந்தவர்‌ என்றழைக்கவும்‌ முடியாது.

161. வழிகெட்ட 72 கூட்டத்தினருக்கும்‌ அடிப்படையாக அமைந்தது மனோ இச்சையைப்‌ பின்பற்றும்‌ வழிகெட்ட நான்கு கூட்டத்தினரே. அவர்கள்‌ அல்கதரிய்யா, அல்முர்ஜிஆ, அல்ஷீஈ, அல்கவாரிஜ்‌ ஆகியோராவர்‌. இந்நான்கு அடிப்படைப்‌ பிரிவினரிலிருந்தும்‌ பரிணாமம்‌ பெற்றவர்களே ஏனைய 72 கூட்டத்தினரும்‌. (நூல்‌: இப்னு பத்தா: அல்‌இபானா அல்குப்ரா: 278).

கலீபாக்களான அபூபக்ர் ‌(ரலி), உமர் ‌(ரலி), உஸ்மான்‌ (ரலி), அலி (ரலி) ஆகியோரை ஏனைய ஸஹாபாக்களை விட முதன்மைப்படுத்துபவர்களும்‌, ஏனைய ஸஹாபாக்கள்‌ அனைவரது விஷயத்திலும்‌ நல்லதையே பேசி, அவர்களுக்காக பிரார்த்தனை செய்பவர்களும்‌ ஷீஆக்களின்‌ வழிகேட்டிலிருந்து தம்மை முழுமையாகப்‌ பரிசுத்தப்படுத்திக்‌ கொண்டவராவார்‌.

ஈமான்‌ என்பது கலிமாவை நாவினால்‌ மொழிந்து, அதன்‌ அடிப்படையில்‌ அமல்‌ செய்வதாகும் இது, மனிதன்‌ நற்செயல்களில்‌ ஈடுபடும்போது அதிகரிக்கின்றது. பாவச்‌ செயல்களில்‌ ஈடுபடும்போது குறைந்து விடுகின்றது என நம்பிக்கை கொள்பவர் முர்ஜிஆக் களின் வழிகேடுகளிலிருந்து தம்மைப்‌ பாதுகாத்துக்‌கொண்டவராவார்‌. 

நல்லவர்‌, கெட்டவர்‌ என்ற பாரபட்சமின்றி அஹ்லுஸ்‌ ஸுன்னத்‌ வல்‌ ஜமாஅத்தினர்‌ எவருக்கும்‌ பின்னால்‌ (மஃமூமாகத்‌) தொழுவது கூடும்‌. மேலும்‌, இமாமுடன்‌ மாத்திரமே ஜிஹாத்‌ செல்லுபடியாகும்‌. இமாமுக்கு எதிராக வாளேந்திப்‌ போராடுவது, புரட்சி செய்வது (இஸ்லாத்தில்‌), தடைசெய்யப்பட்டுள்ளது என நம்புவதுடன்‌, இமாமுடைய சீர்திருத்தத்திற்காகப்‌ பிரார்த்தனை செய்வோர்‌ கவாரிஜ்களின்‌ வழிகேடுகளிலிருந்து தம்மைப்‌ பாதுகாத்துக்‌ கொண்டவராவார்‌.

நன்மை, தீமை அனைத்தும்‌. அல்லாஹ்‌ தீரமானித்தது போல நடைபெறுகின்றது. மேலும்‌, அல்லாஹ்‌ தான்‌ நாடியோரை நேர்வழி நடத்துகின்றான்‌. அதேபோன்று தான்‌ நாடியோரை வழிகேட்டில்‌ விட்டுவிடுகிறான்‌ என்று நம்புகின்றவர்‌ கதரியாக்களின்‌ வழிகேடுகளிலிருந்து தம்மை முழுமையாகப்‌ பாதுகாத்துக்‌ கொண்டவரும்‌, அஹ்லுஸ்‌ ஸுன்னாவைச்‌ சார்ந்தவரும்‌ ஆவார்‌.

162. "அலி (ரலி) அவர்கள்‌ மரணிக்கவில்லை: மேலும்‌ அவர்‌ உயிர்‌வாழ்கிறார்‌ மறுமை ஏற்பட முன்னர்‌ அவர்‌ மீண்டும்‌ இவ்வுலகத்திற்கு வருவார்‌' என சிலர்‌ நம்பியும்‌, கூறியும்‌ வருகின்றனர்‌. இஸ்லாமிய வரலாற்றில்‌ இவர்கள்‌ ரஜஇய்யாக்கள் என்று அழைக்கப்படுகின்றனர்‌. இக்கொள்கை இஸ்லாத்தில்‌
தோன்றிய பித்‌அத்‌ மட்டுமன்றி, மகத்தான இறைவனை நிராகரிப்பதுமாகும்‌. (மேலும்‌, ஹிஜ்ரி 120ஆம்‌ ஆண்டில்‌ மரணித்த) முஹம்மத்‌ பின்‌ அலி, (ஹிஜ்ரி 148ல்‌ மரணித்த) ஜஃபர்‌‌ பின்‌ முஹம்மத்‌, (ஹிஜ்ரி 183ல்‌ மரணித்த) மூஸா பின்‌ ஜஃபர் போன்ற அனைவரும்‌ மீண்டும்‌ இவ்வுலகிற்கு வருவார்கள்‌. இவர்களே இவ்வுலகின்‌ தலைமைத்துவத்திற்குத்‌ தகுதியானவர்கள்‌ இவர்கள்‌ அனவைருக்கும்‌ மறைவான விஷயங்கள்‌ பற்றிய ஞானம்‌ உண்டு” என்றும்‌ ரஜஇய்யாக்கள்‌ விசுவாசிக்கின்றனர்‌. எனவே, இத்தகைய கொள்கையுடையவர்‌களது விஷயத்தில்‌ மிக எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும்‌. ஏனெனில்‌, மேற்கூறப்பட்ட கொள்கைகள்‌, நம்பிக்கைகள்‌ அனைத்தும்‌ தெள்ளத்‌ தெளிவான இறை நிராகரிப்பாகும்‌. எனவே, இவைகளை நம்புபவர்களும்‌, இவற்றைக்‌ கூறுபவர்களும்‌ இறை நிராகரிப்போர்களாவர்‌.
163. 'இஸ்லாமிய அறிஞர்களான (ஹிஜ்ரி 169ல்‌ மரணித்த) தஃமா பின்‌ அம்ர்‌(ரஹ்‌) அவர்களும்‌, (ஹிஜ்ரி ல்‌ மரணித்த) ஸூப்யான்‌ பின் உயைனா் (ரஹ்‌) அவர்களும்‌ பின்வருமாறு கூறியுள்ளார்கள்‌. கலீபாக்களான உஸ்மான் ‌(ரலி), அலி (ரலி) ஆகியோரை  மாத்திரம்‌ கண்ணியப்படுத்துபவர்‌ சீஆக்களைச்‌ சேர்ந்தவரே! இவ்வாறு கூறுபவரை நேர்மையானவர்‌ என்று கருதுவது, அவருடன்‌ தோழமை கொள்வது அனைத்துமே தவிர்க்கப்பட வேண்டும்‌. மேலும்‌, உஸ்மான்‌ (ரலி) அவர்களை விட அலி (ரலி) அவர்களைச்‌ சிறப்பித்துக்‌ கூறுபவர்‌ ராபிழாக்களைச்‌ சேர்ந்தவராவார்‌. இத்தகையவர்‌ இறைத்தூதரின்‌ தோழர்களது அடிச்சுவட்டைப்‌ புறக்கணிப்பவர்‌ ஆவார்‌, ஸஹாபாக்கள்‌ அனைவரைவிடவும்‌ முதல்‌ நான்கு கலீபாக்களுக்கும்‌ முன்னுரிமை வழங்குவதுடன்‌, ஏனைய ஸஹாபாக்களுக்கும்‌. அல்லாஹ்வின்‌ அருள்‌ கிடைக்கவேண்டும்‌ என்றும்‌ பிரார்த்திக்க வேண்டும்‌. மேலும்‌ ஸஹாபாக்கள்‌ மத்தியில்‌ ஏற்பட்ட குழப்பங்கள்‌, தவறுகள்‌ விஷயத்தில்‌ மெளனமாக இருப்பது அவசியமாகும். இத்தகையோரே ஸஹாபாக்கள் விடயத்தில் நேர்வழி நடப்பவரும்‌, தடம்‌ பிறழாதவரும்‌ ஆவார்‌.

164. நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அவர்கள்‌ நபித்தோழர்களில்‌ பத்துப்பேருக்கு சுவனத்தைக்கொண்டு நன்மாராயம்‌ கூறியுள்ளார்கள்‌. 'இவர்கள்‌ அனைவரும்‌ சுவர்க்கம்‌ செல்வர்‌ அதில்‌ சந்தேகம்‌ இல்லை' என்று சாட்சி சொல்வது ஸுன்னத்தாகும்‌.

165. நபி(ஸல்‌) அவர்கள்‌ மீதும்‌ அவர்களுடைய குடும்பத்தவர்கள்‌ மீதும்‌ மாத்திரமே ஸலவாத்துச் சொல்ல வேண்டும்‌. (நபி(ஸல்‌) அவர்கள்‌ மீதும்‌, அவர்களது குடும்பத்தவர்‌ மீதும்‌ ஸலவாத்தும்‌, ஸலாமும்‌ சொல்வது போன்று ஏனைய நபிமார்கள்‌, ரசூல்மார்கள்‌, அனைவர்மீதும்‌ ஸலவாத்தும்‌, ஸலாமும்‌ சொல்லவேண்டும்‌).

166. கலீபா உஸ்மான்‌ (ரலி) அவர்கள்‌ அநியாயமாகக்‌ கொலை செய்யப்பட்டார்கள்‌. அவரைக்‌ கொலை செய்தவன்‌ அநியாயக்‌காரனேயாவான்‌.

167. இப்புத்தகத்தில்‌ தொகுத்துத்‌ தரப்பட்டுள்ள அனைத்து விஷயங்களையும்‌ ஏற்று, விசுவாசம் கொள்வதுடன் இந்நூலை (கொள்கை) வழிகாட்டியாகவும்‌ எடுத்துக்‌கொள்பவர்‌ அஹ்லுஸ்‌ ஸுன்னா வல்‌ ஜமாஅத்தைச் சேர்ந்தவர்‌ ஆவார். மேலும்‌, இந்நூலில்‌ கூறப்பட்டுள்ள ஒரு எழுத்திலேனும்‌ சந்தேகம் கொள்பவர்‌ அல்லது இந்நூலிலுள்ள ஒரு விஷயத்தையேனும் புறக்கணிப்பவர்‌ தனது மனோ இச்சைக்கு அடிமைப்பட்டவர் ஆவார் ‌.

(நூலாசிரியர்‌ தாம்‌ இந்நூலில்‌ தொகுத்து வழங்கியுள்ள எல்லா விஷயங்களையும்‌ அனைவரும்‌ ஏற்றுக்கொண்டு அவற்றை விசுவாசம்‌ கொள்ளவேண்டும்‌ என்றும்‌, இன்றேல்‌ அவர்‌ மார்க்கத்தைப்‌ புறக்கணித்தவர்‌ ஆகிவிடுகிறார்‌ என்றும் 112 மற்றும்‌ 167ஆம்‌ பத்திகளில்‌ குறிப்பிட்டுள்ளார்‌. எனினும்‌, அல்‌-குர்‌ஆன்‌, ஹதீஸ்‌ இரண்டையும்‌ தவிர வேறு எதனையும் பின்பற்றுமாறும்‌, விசுவாசம்‌ கொள்ளுமாறும் அல்லது வாழ்க்கை வழிகாட்டியாகக்‌ கொள்ளுமாறும்‌ யாரும்‌ கூற முடியாது. எனவே, குர்‌ஆன்‌, ஹதீஸை‌ புறக்கணித்தால் மாத்திரமே நிராகரிப்பவர்‌ ஆகிவிடுவார்‌. இந்நூல் உட்பட வேறு எந்த விஷயத்தையும்‌ புறக்கணிப்பதால்‌ யாரும்‌ நிராகரிப்பவர்‌ ஆகிவிடுவதில்லை. எனினும்‌, இந்நூலாசிரியர்‌ இவ்வாறு வலியுறுத்திக் கூறுவதற்கு இரண்டு காரணங்கள்‌ உள்ளன:

அ) இந்நூலில்‌ இடம்பெற்றுள்ள அனைத்து விஷயங்களும்‌ குர்‌ஆன்‌, ஹதீஸ்‌ ஆகிய மூலாதாரங்களில்‌ இருந்தும்‌ ஸஹாபாக்கள்‌, தாபிஈன்கள்‌ ஆகியோரின்‌ முன்மாதிரிகளிலிருந்தும்‌ இரத்தினச்‌ சுருக்கமாக நூலாசிரியர்‌ தொகுத்து வழங்கியவைகளே! (இதன்‌ விளக்கத்திற்கு 112ஆம்‌ பத்தியைப்‌பார்க்கவும்‌).

ஆ) வழிகெட்ட சிந்தனைகளும்‌, கொள்கைளும்‌ ஆட்சி பீடம்‌ ஏறியிருந்த காலத்தில்‌ மக்கள்‌ மத்தியில்‌ ஈமானைப்‌ பாதுகாக்கவும்‌, குர்‌ஆனும்‌, ஸுன்னாவும்‌ புறக்கணிக்கப் படாமல்‌ இருக்கவும்‌ இஸ்லாத்தின்‌ அடிப்படைகளை மிகச்சுருக்கமாகத்‌ தொகுத்து மக்களுக்கு வழங்க வேண்டிய பொறுப்பு நூலாசிரியர்‌ மீதிருந்தது. எனவேதான்‌ மிகச்‌ சுருக்கமாக அடிப்படை விஷயங்களைத்‌ தொகுத்து வழங்கிவிட்டு இப்படிக்‌ கூறியுள்ளார்‌. எனினும்‌, நூலாசிரியர்‌ இந்தக்‌ கருத்தைத்‌ தவிர்த்திருந்தால்‌ சிறப்பாக அமைந்திருக்கும்.‌ அல்லாஹ் மிக அறிந்தவன்).

168. ஒரு மனிதன்‌ அல்குர்‌ஆனில்‌ ஒரு எழுத்திலாவது சந்தேகம்‌ கொண்டால்‌ அல்லது அதனைப்‌ புறக்கணித்தால்‌ அவன்‌ மார்க்கத்தைப்‌ பொய்யாக்கியவனாகவே அல்லாஹ்வை சந்திப்பான்‌. நபி (ஸல்‌) அவர்களுடைய ஹதீஸ்களை சந்தேகம்‌ கொள்பவன்‌, மற்றும்‌ மறுப்பவனது நிலையும்‌ அவ்வாறே. எனவே, 'இவ்விஷயங்களில்‌ அல்லாஹ்வைப்‌ பயந்து கொள்வதுடன்‌, மிக எச்சரிக்கையுடன்‌ நடந்து கொள்ளவேண்டும்‌. மேலும்‌, ஈமானைப்‌ புதுப்பித்துக்கொள்ளவேண்டும்‌.

169. பாவ காரியங்களில்‌ - பெற்றோர்கள்‌ உட்பட படைப்புகளில்‌ யாருக்கும்‌ கட்டுப்படக்கூடாது. ஏனெனில்‌, அல்லாஹ்வுக்கு மாறுசெய்வதில்‌ அல்லாஹ்வின்‌ படைப்புகளுக்கு வழிப்படக்கூடாது. மேலும்‌, பாவமான காரியங்களில்‌ ஈடுபடும்‌. எவருக்கும்‌ ஒருபோதும்‌ உதவுதல்‌ கூடாது. அல்லாஹ்வைவிட அதிகமாக யாரையும்‌ நேசிக்கவும்‌ கூடாது. எனவே, மேற்கூறப்பட்ட பாவமான காரியங்களை அல்லாஹ்வுக்காக வெறுத்து நடப்பது நபிவழியாகும்‌.

170. பாவமன்னிப்புத் தேடுவது மனிதர்கள் மீது கடமையாகும். இது ஈமானின்‌ அடிப்படைகளில்‌ ஒன்று. எனவே, மனிதன் ‌தனது சிறிய, பெரிய பாவங்கள்‌ அனைத்திற்கும்‌ மகத்தான அல்லாஹ்விடத்தில்‌ பாவமன்னிப்புத்‌ தேடி மீள்வது கடமையாகும்‌.

171. நபி (ஸல்‌) அவர்களால்‌ சுவர்க்கத்தைக்‌ கொண்டு நற்செய்தி சொல்லப்பட்ட நபித்தோழர்களுக்குச்‌ சுவனம்‌ கிடைக்கும்‌ என்று சாட்சி சொல்லாதவர்‌ வழிகெட்ட பித்‌அத்காரர்‌ ஆவார்‌. மேலும்‌, அவர்‌ நபி(ஸல்‌) அவர்கள்‌ கூறிய செய்திகளில்‌ சந்தேகம்‌ கொண்டவர்‌ ஆவார்‌.

172. இமாம்‌ மாலிக்‌ பின்‌ அனஸ்‌(ரஹ்‌) அவர்கள்‌ பின்வருமாறு கூறியுள்ளார்கள்‌ “எவரேனும்‌ ஸுன்னாவை ஏற்று, அதன்வழி நடப்பதுடன் நபித்தோழர்களைக்‌ குறை கூறாமல்‌ (வாழ்ந்து) மரணித்தால்‌, அவர்‌ ஏனைய இபாதத்துக்களில்‌ அலட்சியம் செய்திருந்தாலும்‌ கூட, மறுமையில்‌ நபிமார்கள்‌, ஸித்திகீன்கள், ஷுஹதாக்கள்‌, ஸாலிஹீன்கள்‌ போன்றோருடன்‌ இருப்பார்‌".

(பிஷ்ர்‌ அல்ஹாபி என்ற பெயரில்‌ பிரபல்யமடைந்திருந்த (ஹிஜ்ரி 227ல்‌ மரணித்த இமாம்‌) பிஷ்ர்‌ அல்ஹாரிஸ்‌(ரஹ்‌) அவர்கள்‌ பின்வருமாறு கூறுகின்றார்‌ 'இஸ்லாம்‌ (குர்‌ஆன்‌) ஸுன்னாவையும்‌, ஸுன்னா குர்‌ஆனையும்‌ தெளிவுபடுத்துகின்றன'.

இமாம்‌ புழைல்‌ பின்‌ இயாழ்‌(ரஹ்‌) அவர்கள்‌ பிர்வருமாறு கூறியுள்ளார்கள்‌:

ஸுன்னத்துக்களை பின்பற்றுகின்ற அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்தைச்‌ சார்ந்த ஒரு மனிதரை நான்‌ கண்டால்‌, ஸஹாபாக்களில்‌ ஒருவரைக்‌ காண்பது போன்று உணர்கிறேன்‌. மாறாக, ஒரு பித்‌அத்காரனைக்‌ கண்டால்‌, நயவஞ்சகர்களில்‌ ஒருவனைக்‌ காண்பதுபோல்‌ உணர்கிறேன்‌.”

(ஹிஜ்ரி 139ல்‌ மரணித்த) யூனுஸ்‌ பின்‌ உபைத் ‌(ரஹ்‌) பின்வருமாறு கூறுகின்றார்கள்‌:

தற்காலத்தில்‌ நபிவழியின்‌ பக்கம்‌ மக்களை அழைக்கின்ற உண்மையாளர்களைக்‌ காண்பது அதிசயமாக இருக்கின்றது. அவ்வாறு அழைப்பவர்களின்‌ அழைப்பை ஏற்று நபி வழியின் பக்கம் திரும்பிடக் கூடியவர்களை காண்பது அதனினும்‌ அதிசயமானதே! (நூல்‌: அபூநுஐம்‌ 3:21)

(ஹிஜ்ரி 131ல்‌ மரணித்த) அப்துல்லாஹ்‌ இப்னு அவ்ன் ‌(ரஹ்‌) அவர்கள்‌ தனது மரணப்படுக்கையில்‌ இருந்துகொண்டு, 'ஸுன்னத்துக்களைப்‌ பற்றிப்பிடித்துக்‌ கொள்ளுங்கள்‌! ஸுன்னத்துக்களைப்‌ பற்றிப்‌ பிடித்துக்‌ கொள்ளுங்கள்‌! உங்களுக்கு பித்அத்தை விட்டும் எச்சரிக்கை செய்கின்றேன்‌” என்று மரணிக்கும்‌ வரை வஸிய்யத் ‌செய்தார்கள்‌.

இமாம்‌ அஹ்மத்‌ பின்‌ ஹம்பல்‌(ரஹ்‌) அவர்கள்‌ பின்வருமாறு கூறியுள்ளார்கள்‌:

"என்னுடைய தோழர்களில்‌ ஒருவர்‌ மரணித்தார்‌. என்னுடைய மற்றுமொரு தோழர்‌, மரணித்த தோழரைக்‌ கனவில்‌ கண்டார்‌. கனவில் தோன்றிய அவர் ஸுன்னாவை பற்றிப் பிடித்துக் கொள்ளுமாறு அஹ்மத்‌ பின்‌ ஹம்பல்‌ அவர்களிடம்‌ சொல்லி விடுங்கள்‌ ஏனெனில்‌ அல்லாஹ்‌ என்னிடம்‌ முதன்‌ முதலாக ஸுன்னா என்னும்‌ நபிவழியை பற்றியே விசாரித்தான‌”.

(ஹிஜ்ரி 90ல்‌ மரணித்த இமாம்‌) அபுல்‌ ஆலியா (எனப்படும்‌ - றுபைஃ பின்‌ மிஹ்ரான்‌) (ரஹ்‌) அவர்கள்‌ பின்வருமாறு கூறினார்‌:

எவரேனும் நபிவழியை பின்பற்றி பித்அத்ஆன காரியங்களில் ஈடுபடாமல்‌ மரணித்தால்‌, அவர்‌ சித்தீக்‌ (உண்மையாளர்‌) ஆவார்‌. மேலும் ஸுன்னாவை பிற்பற்றுவது நரகிலிருந்து பாதுகாக்கும்‌."

இமாம்‌ ஸுப்யான்‌ அல்ஸவ்ரீ(ரஹ்‌) அவர்கள்‌ பின்வருமாறு கூறினார்கள்‌:

'பித்‌அத்காரன்‌‌ பேசுவதைக்‌ கேட்டுக்கொண்டிருப்பவன் அல்லாஹ்வின் பாதுகாப்பிலருந்து வெளியேறி விடுகிறான் மேலும்‌, அவன்‌ பித்‌அத்களின்‌ மீதே சாட்டப்பட்டும்‌ விடுகிறான்‌” (தால்‌: அல்‌ இபானா அல்குப்ரா: 444).

(ஹிஜ்ரி 140ல்‌ மரணித்த) இமாம்‌ தாவூத்‌ பின்‌ அபீ ஹின்த்‌(ரஹ்‌). அவர்கள்‌பின்வருமாறு கூறியுள்ளார்கள்‌:

'அல்லாஹ்‌ இம்ரானின்‌ புதல்வர்‌ மூஸா(அலை) அவர்களை நோக்கி, 'பித்‌அத்காரர்களுடன்‌ நீங்கள்‌ உட்கார்ந்து இருக்க வேண்டாம்‌. ஏனெனில், நீங்கள்‌ அவர்களுடன்‌ இருக்கும்போது, அவர்கள்‌ பேசுகின்றவைகள்‌ உங்களது உள்ளத்தில்‌ சந்தேகத்தை ஏற்படுத்தும்‌. அது உங்களை நரக நெருப்பில்‌ தள்ளிவிடும்‌” என்று வஹி அறிவித்து இருந்தான்‌. (நூல்‌: இப்னு வழ்ழாஹ்‌: அல்பிதஃ)

இமாம்‌ புழைல்‌ பின்‌ இயாழ் ‌(ரஹ்‌) அவர்கள்‌ (பித்‌அத்காரர்களைப்‌ பற்றி) பின்வரும்‌ கருத்துக்களைக்‌ கூறியுள்ளார்கள்‌:

அ) பித்‌அத்காரனுடன்‌ உறவு வைத்துக்‌ கொண்டிருப்பவருக்கு: அல்லாஹ்‌ அறிவு ஞானத்தைக்‌ கொடுக்க மாட்டான்‌. (நூல்‌: அல்‌இபானா அல்குப்ரா: 439).

ஆ) பித்‌அத்காரனுடன்‌ உட்கார்ந்திருக்க வேண்டாம்‌! ஏனெனில்‌, அவனுடன்‌ உட்கார்ந்திருப்பவனுக்கு அல்லாஹ்வின்‌ சாபம் இறங்கிவிடும்‌ என்று அஞ்சுகிறேன்‌. (நூல்‌: அல்லாலகாஈ ஸுன்னா: 262).

இ) பித்‌அத்காரனை நேசிப்பவனின்‌ அறிவை இறைவன்‌ போக்கிவிடுகிறான்‌: மேலும்‌, அவனது உள்ளத்திலிருந்து ஈமானிய ஒளியையும்‌ நீக்கிவிடுகிறான்‌. (நூல்‌: இப்னுல்‌: ஜவ்ஸி - தல்பீஸ்‌இப்லீஸ்‌: 16).

ஈ) நீங்கள்‌ பாதையில்‌ நடந்து செல்லும்வேளை அங்கே பித்‌அத்காரனுடன்‌, எவரேனும்‌ அமர்ந்திருக்கக்‌ கண்டால்‌, (அப்பாதையில்‌ செல்லாது) மற்றொரு பாதையால்‌ சென்று விடுங்கள்‌. (நூல்‌: இப்னுல்‌ ஜவ்ஸி; தல்பீஸ்‌ இப்லீஸ்‌:16).

உ) பித்‌அத்காரனை கண்ணியப்படுத்தும்‌ ஒருவர்‌, இஸ்லாத்தின்‌ அடிப்படைகளைத்‌ தகர்ப்பதற்கு உதவி செய்தவர்‌ ஆவார்‌. மேலும்‌, பித்‌அத்காரனுடன்‌ சிரிப்பவர்‌ முஹம்மத்‌ (ஸல்‌) அவர்கள்‌ மீது அல்லாஹ்‌ இறக்கிவைத்த மார்க்கத்தை இழிவுபடுத்தியவராவார்‌. மேலும்‌, தனது மகளை பித்‌அத்காரனுக்குத்‌ திருமணம்‌ செய்துவைப்பவர்‌, தனது மகளுடான உறவைத்‌ துண்டித்துக்‌ கொண்டவர்‌ ஆவார்‌. மேலும்‌. ஒரு பித்‌அத்காரனுடைய ஜனாஸாவைத்‌ தொடர்ந்து செல்பவர்‌, திரும்பிவரும்வரை அல்லாஹ்வின்‌ சாபம்‌ அவருக்கு உண்டு. (நூல்‌: அபூநுஜம்‌: ஹில்யா: 8-103, இப்னுல்‌ ஜவ்ஸி: தல்பீஸ்‌ இப்லீஸ்‌: 16).

ஊ) நான்‌ ஒரு யூதனுடன்‌ அல்லது ஒரு கிறிஸ்தவனுடன் அமர்ந்து சாப்பிடுவேன்‌. எனினும்‌, ஒரு பித்‌அத்காரனுடன்‌ அமர்ந்து சாப்பிட மாட்டேன்‌. மேலும்‌, எனக்கும்‌ பித்‌அத்காரனுக்குமிடையில்‌ ஒரு இரும்புத்திரை காணப்படுவதை நான் விரும்புகிறேன்‌. (நூல்‌:லாலகாஈ: 1149)

௭) பித்‌அத்காரனுடன்‌ கோபித்துக்‌ கொண்டிருப்பவர்‌ குறைவாகவே அமல்கள் செய்தாலும்‌, அல்லாஹ்‌ அவரை மன்னிக்கிறான்‌. (நூல்‌: அபூநுஐம்‌: ஹில்யா: 8/103).

ஸுன்னாவைப்‌ பின்பற்றுகின்ற ஒருவர்‌ பித்‌அத்காரனுடன்‌ உறவாடுவது நயவஞ்சகமாகும்‌. (நூல்‌: அபூநுஐம்‌: ஹில்யா: 8:104). மேலும்‌, பித்‌அத்காரனை விரட்டி விடுபவருக்கு மிகவும் பயங்கரமான மறுமை நாளில் அல்லாஹ் அபயமளிக்கிறான். மேலும், பித்அத் காரனை இழிவுபடுத்துபவரை சுவனத்தில்‌ நூறு அந்தஸ்த்துக்கள்‌ உயர்த்துகிறான்‌. எனவே, நீங்கள்‌ ஒருபோதும்‌ அல்லாஹ்வின்‌ மார்க்கத்தில்‌ பித்‌அத்‌ (நூதனங்கள்‌) செய்பவராக இருந்துவிடாதீர்கள்‌.

அளவற்ற அருளாளன்‌, நிகரற்ற அன்பாளன்‌ இணையற்ற அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்‌.

பின்னிணைப்பு:

அஸ்லுஸ்‌ ஸுன்னத்‌ வல்‌ ஜமாஅத்தினர்:

இமாம்‌ நாஸிர்‌ அல்‌ ஸஃதி(ரஹ்‌) கூறுவதாவது: தெளஹீத்‌, இறைத்தாது, விதி, ஈமானின்‌ கடமைகள்‌ போன்ற விஷயங்களில்‌ நபி(ஸல்‌) அவர்களும்‌, நபித்தோழர்களும்‌ சில அடிப்படைகளைப்‌ பின்பற்றி நடந்துள்ளனர்‌. எனவே, பித்‌அத்துக்களில்‌ ஈடுபடாமல் அவர்கள்‌ பின்பற்றிய அதே அடிப்படைக்‌ கொள்கைளைப்‌ பேணி நடப்பவர்கள்‌ அனைவரும்‌ அஸ்லுஸ்‌ ஸுன்னத்‌ வல்‌ ஜமாஅத்தினர் ‌ஆவர்‌. (நூல்‌: அல்பதாவா அல்ஸஃதிய்யா: பக்கம்‌ 63).

இதுபற்றி பல அறிஞர்களும்‌ கூறியுள்ள கருத்துக்களை ஆராய்ந்து பார்க்கும்போது அல்குர்‌ஆன்‌, ஹதீஸ்‌, ஸஹாபாக்கள்‌ மத்தியில்‌ முரண்பாடில்லாத முன்மாதிரிகள்‌, இஜ்மாஃ ஆகிய அடிப்படைகளைப்‌ பின்பற்றி நடந்த நம்‌ முன்னோர்களும்‌, இன்றுவரை அவைகளைப்‌ பின்பற்றுகின்ற அனைவரும்‌ அஹ்லுஸ்‌ ஸுன்னா என்றழைக்கப்படுவர்‌. அவ்விஷயத்தில்‌ உலமாக்கள்‌, பாமரர்கள்‌ என்ற எந்த வேறுபாடும்‌ இல்லை. ஒரு மனிதன்‌ அஹ்லுஸ்‌ ஸுன்னாவைச்‌ சார்ந்தவர்‌ என்று சொல்வதற்கு அவரிடம்‌ மூன்று அடிப்படைகள்‌ இருக்க வேண்டும்‌. அவையாவன:
1) குர்‌ஆன்‌, ஹதீஸ்‌ பற்றிய அறிவு.
2) இவ்வறிவின்‌ அடிப்படையில்‌ அமல்‌ செய்தல்‌,
3) வழிகெட்ட கொள்கைகள்‌, பித்‌அத்துக்கள்‌ போன்றவற்றில்‌ ஈடுபடாதிருப்பதோடு, அவைகளில்‌ ஈடுபடுபவர்களிடமிருந்து விலகி இருத்தல்‌.

எனவே, நபிவழி, ஸஹாபாக்களின்‌ முன்மாதிரிகள்‌ போன்ற. இரண்டையும்‌ புறக்கணிப்பவர்களோ, பித்‌ அத்துக்களில்‌ ஈடுபடுபவர்களோ அஹ்லுஸ்‌ ஸுன்னா என்றழைக்கப்பட எந்த அருகதையும்‌ அற்றவர்களே! மேலும்‌, இவர்கள்‌ அஹ்லுஸ்‌ ஸுன்னாவின்‌ எல்லையிலிருந்து வெளியேறியவர்களாகவே கருதப்படுவர்‌. இது உலமாக்களின்‌ ஏகோபித்த முடிவாகும்‌. (இது பற்றிய இன்னும்‌ அதிகமான விபரம்‌ அறிந்து கொள்ள விரும்புவோர்‌. பார்க்க: கலாநிதி இப்ராஹீம்‌ அல்‌-ருஹைலீ அவர்கள்‌ எழுதிய மவ்கிபு.


ஜஹமிய்யாக்கள்‌:

ஜஹம்‌ பின்‌ ஸப்வான்‌ என்பவரைப்‌ பின்பற்றுகின்றவர்கள்‌ 'ஜஹமிய்யாக்கள்‌ எனப்படுவர்‌. ஜஹம்‌ பின்‌ ஸப்வான்‌ குராஸானில்‌ (ஈரான்‌) உள்ள திர்மித்‌ எனும்‌ பகுதியைச்‌ சேர்ந்தவர்‌. இவர்‌ சில தத்துவங்களையும்‌, சித்தாந்தங்களையும்‌ அடிப்படையாகக் கொண்டவர்‌. இவர்‌ அல்லாஹ்வைப்‌ பற்றியே அதிகமாகத்‌ தர்க்கம்‌ புரிந்துள்ளார்‌. இவருடைய அடிப்படைக்‌ கொள்கைகள்‌ கீழ்‌வருமாறு:
1.அருள்மறை குர்‌ஆன்‌படைக்கப்பட்டது என்ற நம்பிக்கை.
2. அல்லாஹ்‌ நபி மூஸா(அலை)
அவர்களுடன்‌ பேசவில்லை, அவன்‌ பேசவும்‌ மாட்டான்‌.
3. அல்லாஹ்வை (மறுமையில்‌) காணமுடியாது.
4. அல்லாஹ்‌ அர்ஷின் ‌மீது இல்லை என்பன போன்ற குர்‌ஆனுக்கும்‌ நபிவழிக்கும்‌ நேரடியாக முரண்படுகிற கருத்துக்களை உலகம் முழுவதும்‌ பரவச்‌ செய்ததன்‌ மூலம்‌ குர்‌ஆனுக்கும்‌ ஹதீஸுக்கும்‌ எதிராகப்‌ புரட்சி செய்ததுடன் அஹ்லுஸ் ஸுன்னத்‌ வல்‌ ஜமாஅத்தினரின்‌ கொள்கைகளையும்‌ எதிர்த்து வந்தார்‌. மேற்கூறப்பட்ட அம்சங்களுடன்‌, மேலும்‌ மூன்று முக்கியமான அடிப்படைக்‌ கொள்கைகளையும்‌ அறிமுகம்‌ செய்தார்‌. அவைகளாவன.

1. அல்லாஹ்வின்‌ இயல்புகள்‌, பண்புகள்‌ போன்றவற்றைப்‌ பாழ்படுத்துதல்‌. அதாவது, அல்லாஹ்வை பண்புகள்‌ கூறி வர்ணிப்பது அவனை படைப்புகளுக்கு ஒப்பாக்குவதாகும் என்ற தவறான கருத்தைச்‌ சொல்வது. இக்கருத்தை நிலைநிறுத்துவதற்காக அல்குர்‌ஆனிலும்‌, ஹதீஸிலும்‌
இடம்பெற்றுள்ள அல்லாஹ்வின்‌ பண்புகளை மறுத்துரைக்‌கின்றனர்.

2. நிர்ப்பந்தம்‌: மனிதன்‌ எதனையும்‌ தானாகச்‌ செய்ய முடியாது. ஏனெனில்‌, மனிதனுடைய எல்லாச்‌ செயல்களும்‌ அல்லாஹ்வின்‌ நிர்ப்பந்தத்தின்‌ அடிப்படையிலேயே நடைபெறுகின்றன. எனவே, மனிதன்‌ எதனையும்‌ தானாகச்‌ செய்கின்ற ஆற்றலையோ, தேர்வு செய்கின்ற சுதந்திரத்தையோ பெறமாட்டான்‌.

3. ஈமான் ‌என்பது ஒரு மனிதன்‌ அல்லாஹ்வைப்பற்றி‌ அறிந்து கொள்வதாகும்‌. எனவே, நாவினால்‌ அல்லாஹ்வைப்‌ புறக்கணிக்கின்ற ஒரு மனிதன்‌ இறை நிராகரிப்பாளாராக மாட்டான்‌. ஏனெனில்‌, ஒரு மனிதன்‌ அல்லாஹ்வைப்‌ புறக்கணிப்பதால்‌, அவனிடமிருந்து அல்லாஹ்வைப்‌ பற்றிய அறிவு நீங்கிவிடுவதில்லை. மேலும்‌, ஈமான்‌ என்பது குறையவும்‌ மாட்டாது. மேலும்‌, முஃமின்கள்‌ அனைவரும்‌ ஈமானில்‌ ஒரே தரத்தையுடையவர்களாவர்‌. ஈமானைப்‌ பொறுத்தவரை அவர்களிடையே ஏற்றத்தாழ்வு கிடையாது.

மேலே குறிப்பிடப்பட்ட மூன்று அடிப்படைகளுமே ஜஹமிய்யாக்களின்‌ வழிகேட்டுக்கு மிக முக்கியமான காரணங்களாக இருந்துள்ளன. ஜஹம்‌ பின்‌ ஸப்வானுக்கு இக்கொள்கை ஜஃத்‌ பின்‌ திர்ஹம்‌ மூலம்‌ கிடைத்தது. இவர்‌ தாபியீன்கள்‌ காலத்தில்‌ வாழ்ந்தவர்‌. மேற்கூறப்பட்ட கொள்கைகளால்‌ கவரப்பட்டு வழி கெட்டவர்களில்‌ ஒருவரான ஜஃத்‌ பின்‌ திர்ஹம்‌ ஹஜ்ஜுப்‌ பெருநாள்‌ தினத்தன்று ஈராக்கில்‌ வைத்துக்கொல்லப்பட்டார்‌. (அல்‌-தஹமீ மீஸானுல்‌ இஃதிதால்‌ 1:369).

இக்கொள்கையை முதலில் அறிமுகம் ‌ செய்தவர்‌ நபி(ஸல்‌) அவர்களுக்கு சூனியம்‌ செய்த லபீத்‌ பின்‌ அஃஸம்தான்‌ எனவும்‌ சில வரலாற்று ஆசிரியர்கள்‌ குறிப்பிடுகின்றனர்‌.

இமாம்‌ இப்னு தைமிய்யா (ரஹ்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌: ஜஹமிய்யாக்கள்‌ காபிர்கள்‌ என்பதே இமாம்‌ அஹ்மத்‌ பின்‌ ஹம்பல்‌ (ரஹ்‌) அவர்களதும்‌ அஹ்லுஸ்‌ ஸுன்னத்‌ வல்‌ஜமாஅத்தின்‌ அறிஞர்களதும்‌ கருத்தாகும்‌. (இப்னு தைமிய்யா: மஜ்மூ௨ பதாவா 12- 4) 

'ஜஹமிய்யாக்கள்‌ இறைநிராகரிப்பாளர்கள்‌ ஆவார்கள்‌! என லபுஸ்ஸாலிஹீன்களில்‌ 500 அறிஞர்கள்‌ தீர்ப்புக்‌ கூறியுள்ளதாக இமாம்‌ இப்னுல்‌ கையிம் ‌(ரஹ்‌) கூறுகின்றார்கள்‌. (இப்னுல்‌ கையிம்‌: நூனிய்யா 1:115)

ஜஹமிய்யாக்கள்‌ என்போர்‌ இன்று உலகத்தில்‌ இல்லை என்று சிலர்‌ கருதுகின்றனர்‌, ஜஹமிய்யாக்கள்‌ என்ற பெயரில்‌ இவர்கள்‌ காணப்படாவிடினும்‌, அவர்களது கொள்கைகளுடனும் கோட்பாடுகளுடனும்‌ வாழக்கூடிய மக்கள்‌ காணப்படுகின்றனர்‌. ஜஹமிய்யாக்களின்‌ கொள்கைகளையும்‌, கோட்பாடுகளையும்‌ முழுமையாக அஷாஇராக்களும்‌, முஃதஸிலாக்களும் பின்பற்றுகின்றனர்‌.
ஜமாலுத்தீன்‌ அல்காஸிமீ(ரஹ்‌) அவர்கள்‌, பின்வருமாறு கூறினார்கள்‌:

'ஜஹமிய்யாக்கள்‌ அழிந்துவிட்டனர்‌ என்று சிலர்‌ கருதுகின்றனர்‌. ஆனால்‌, முஃதஸிலாக்கள்‌ ஜஹமிய்யாக்களின்‌ ஒரு பிரிவினர்‌ ஆவர்‌. அதேபோன்று, அஷாஇராக்களும்‌, தமது கொள்கை கோட்பாடுகளில்‌ பெரும்பாலும் ஜஹமிய்யாக்களையே பின்பற்றுவர் என்கிற செய்தி, தர்க்கக்கலையில்‌ புலமையும்‌, ஜஹமிய்யாக்களின்‌ கொள்கைகள்‌ பற்றிய அறிவும்‌, ஸலபுஸ்ஸாலிஹீன்களின்‌ கருத்துக்களில்‌ நுணுக்கமும்‌ கொண்டவர்களுக்குத்‌ தெளிவாகத்‌ தெரியும்‌. (நூல்‌: அல்‌- காஸிமி: தாரீக்‌ அல்‌-ஜஹமிய்யா: பக்கம்‌:6) (றுஹைலீ மவகிஃபு அஹ்லிஸ்‌ ஸுன்னா 1:156). 


கவாரிஜ்கள்‌:

இஸ்லாமிய ஆட்சியாளருக்கு எதிராகப்புரட்சி செய்பவர்களே கவாரிஜ்கள்‌ என்றழைக்கப்படுகின்றனர்‌. நேர்வழி நடக்கின்ற ஆட்சியாளர்களுக்கு எதிராகப்‌ புரட்சிகளில்‌ ஈடுபடுவோரும்‌ இதில்‌ அடங்குவர்‌.

ஹிஜ்ரி 36 மற்றும்‌ 37ல்‌ நடைபெற்ற ஸிப்பீன்‌ யுத்தத்தை முடிவுக்குக்‌ கொண்டு வருவதற்காகப்‌ போரிட்ட இரு தரப்பினரும்‌ முடிவு செய்து, ஸஹாபாக்களான அபூ மூஸா அல்‌ அஷ்அரீ (ரலி), அம்ர்‌ பின்‌ அல்‌ஆஸ்‌ (ரலி) ஆகியோரை நடுவர்களாக நியமித்தனர்‌. ஆட்சியாளர்‌ அலி(ரலி) அவர்களின்‌ தரப்பிலிருந்த சிலர்‌ இதனை ஏற்றுக்கொள்ள மறுத்து, அவருக்கெதிராகக்‌ கிளர்ச்சி செய்தனர்‌. தம்‌ தரப்பிலுள்ள நியாயங்களைத்‌ தெளிவு படுத்துவதற்காக இவர்களுடன்‌ கலீபா பல அமர்வுகளை நடத்தினார்கள்‌. எனினும்‌, கிளர்ச்சியாளர்கள்‌ அலி(ரலி) அவர்களின்‌ தரப்பிலிருந்த நியாயங்களை ஏற்றுக்‌ கொள்ள மறுத்தனர்‌. இதன்‌ பின்னணியில்தான்‌ ஆட்சியாளர்‌ அலி(ரலி) அவர்களுக்கும்‌, இக்கிளர்ச்சியாளர்களுக்குமிடையில்‌ ஹிஜ்ரி 38 ஆம்‌ ஆண்டு நஹ்ரவான்‌ என்ற இடத்தில் யுத்தம் மூண்‌டது.

இஸ்லாமிய அரசியல்‌ வரலாற்றில்‌ இவர்கள்‌ ஹருரிய்யா, அல்ஷாராத்‌, அல்மாரிகா, அல்முஹக்கிமா போன்ற பெயர்களில்‌ பிரபலமாகியுள்ளனர்‌. இவர்களுக்குள்‌ இருபது உப பிரிவுகள்‌ உள்ளன. இப்பிரிவுகளில்‌ அல்முஹக்கிமா, அல்‌அஸாரிகா, அல்‌
நஜ்தாத்‌, அல்‌ ஸஆலிபா, அல்‌- இபாழிய்யா, அல்‌ ஸபரிய்யா ஆகிய பிரிவுகள்‌ முன்னணியில்‌ உள்ளன.

இவர்கள்‌ கலீபாக்களான உஸ்மான்‌(ரலி), அலி(ரலி), ஆகியோரையும்‌, ஜமல்‌ யுத்தத்தில்‌ கலந்துகொண்ட ஸஹாபாக்களையும்‌, ஸிப்பீன்‌ யுத்தத்தில்‌ நடுவர்களாக
நியமிக்கப்பட்ட இரு ஸஹாபாக்களையும்‌ இறை நிராகரிப்பாளர்கள்‌ என்று கூறுகின்றனர்‌. இது மட்டுமின்றி நடுவர்களாக நியமிக்கப்பட்ட இரு ஸஹாபாக்களையும்‌ ஏற்றுக்‌கொண்ட ஏனைய ஸஹாபாக்களையும்‌ இறை 'நிராகரிப்பாளர்கள்‌ என்றும்‌ கூறுகின்றனர்‌. அத்துடன்‌ ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ச்சியில்‌ ஈடுபடுவதைத்‌ தங்களது அடிப்படைக்‌ கோட்பாடாகக்‌ கொண்டுள்ளனர்‌. மேலும் பெரும்பாவங்களில்‌ ஈடுபடுவது, இறைநிராகரிப்பை ஏற்படுத்தும்‌ என்பதையும்‌ தங்களது அடிப்படைக்‌ கோட்பாடாகக்‌ கொண்டுள்ளனர்‌.

கவாரிஜ்கள்‌ இறை விசுவாசிகளா? அல்லது இறை 'இறைநிராகரிப்பாளர்களா? என்பது குறித்து: இஸ்லாமிய அறிஞர்களுக்கு மத்தியில்‌ கருத்து வேறுபாடுகள்‌ உள்ளன. கவாரிஜ்கள்‌ இறை நிராகரிப்பாளர்கள்‌ அல்ல என்பதே பெரும்பாலான இஸ்லாமிய அறிஞர்களால்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட்ட கருத்தும்‌, ஸஹாபாக்களின்‌ ஏகோபித்த முடிவுமாகும்‌. கலீபா அலி(ரலி) அவர்களோ, ஏனைய நபித்தோழர்களோ கவாரிஜ்களை இறை நிராகரிப்பாளர்கள்‌ என்று கூறவில்லை. இவர்கள்‌ முஸ்லிம்கள்‌, ஆனால்‌, எல்லை மீறிய அறியாயக்காரர்கள்‌ என்று மட்டுமே குறிப்பிடுகின்றனர்‌.
(கவாரிஜ்கள்‌ பற்றிய மேலதிக விபரங்களுக்கு பார்க்க:- இப்னு தைமிய்யா :மஜ்மூஉ பதாவா 3:279, 28:500, இப்னு ஹஜர்‌ :பத்ஹுல்‌ பாரீ 12:299, 3 அல்‌கல்லால்‌ அல்‌-ஸுன்னா 1:145) 


ஷீஆக்கள்:

ஷிஆக்கள்‌ யார்‌ என்பதில்‌ பல முரண்பாடான கருத்துக்கள்‌ இடம்பெற்றுள்ளன. இதற்குக்‌ காரணம்‌ ஆரம்பகாலம்‌ முதல்‌ இன்றைய காலம்வரை பல பிரிவினர்களாகப்‌ பிளவுபட்டு வருவதும்‌, அவர்களுடைய அடிப்படைகள்‌ நாளுக்கு நாள்‌ வித்தியாசப்படுவதும்‌ ஆகும்‌. இதனால்‌, ஷீஆக்கள்‌ என்றால்‌ இன்னார்தான்‌ என்பதை அடையாளம்‌ காட்ட முடியவில்லை.

ஷீஆக்கள்‌ பற்றிக்‌ கூறப்பட்டுள்ள கருத்துக்களில்‌ கீழ்‌ குறிப்பிடப்படும்‌ கருத்து மிகப்‌ பொருத்தமானதாகும்‌ என பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள்‌ கருதுகின்றனர்‌. நேர்வழி நடந்த கலீபாக்களான அபூபக்கர்‌(ரலி), உமர்‌(ரலி), உஸ்மான்‌(ரலி) ஆகியோரைவிட நபியவர்களுக்குப்‌ பின்‌ இஸ்லாமிய ஆட்சி நடத்துவதற்கு மிகத்‌ தகுதியானவர்‌ அலி(ரலி) அவர்களாவார்‌ எனவும்‌, தமக்குப்பின்னர்‌ ஆட்சிப்பொறுப்புக்குத் தகுதியானவர்‌ அலீ(ரலி) என ‌ நபி(ஸல்‌) அவர்கள்‌ வஸிய்யத்‌ செய்தார்கள்‌ எனவும்‌, மேலும்‌, அலீ(ரலி) அவர்களுக்குப்‌ பின்னர்‌ இஸ்லாமிய ஆட்சி முறைக்கு நபி(ஸல்‌) அவர்களின்‌ குடும்பத்தவர்களே தகுதியானவர்கள்‌ எனவும்‌,‌ அது தவிர ஏனைய ஆட்சி முறைகள்‌ அனைத்தும்‌ தவறானது எனவும் கருதுகின்றனர்‌. மேலும்‌, மேற்கூறப்பட்ட மூன்று கலீபாக்களையும்‌, ஏனைய ஸஹாபாப்‌ பெருமக்களையும்விட அலீ(ரலி) அவர்களே சிறப்புக்குரியவர்கள்‌ போன்ற கருத்துக்களுடனும்‌ "வாழ்பவர்கள்‌ ஷீஆக்கள்‌ என்றழைக்கப்படுவர்‌.

ஹிஜ்ரி 37ஆம்‌ ஆண்டு கலீபா அலி(ரலி), அவர்களுக்கும்‌, முஆவியா(ரலி) அவர்களுக்கும்‌ இடையில்‌ ஸிப்பீன்‌ யுத்தம்‌ நடைபெற்றது. இந்த நாளில்தான்‌ ஷீஆக்களின்‌ தோற்றம்‌ ஆரம்பமானது.

றாபிழாக்கள்‌ ஷீஆக்களிடையே பல பரிவினர்‌ உள்ளனர்‌. இவர்களுக்கிடையில்‌ எழுபது பிரிவுகள்‌ இருப்பதாகச்‌ சில வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்‌. (இவர்களில்‌ இஸ்லாத்தின்‌ எல்லையை விட்டு வெளியேறிய பிரிவினரும்‌ உள்ளனர்‌. இன்று உலகத்தில்‌ இவர்களில்‌ நான்கு மிகமுக்கிய பிரிவினர்கள்‌ உள்ளனர்‌. அப்பிரிவுகளின்‌ பெயர்கள்‌ பின்வருமாறு:

1. ஸபஇய்யாக்கள்‌
2. கைஸாஇய்யாக்கள்‌ 
3. ஸைதிய்யாக்கள்‌
4. றாபிழாக்கள்‌

(ருஹைலி: மவ்கிபு அஹ்லிஸ்‌ ஸுன்னா (1:40) (அல்‌ அவாஜி: பிரக்‌ முஆஸிரா 1:303).


றாபிழாக்கள்:

"றாபிழா என்ற வார்த்தை “றபழ” என்ற பதத்திலிருந்து வந்த சொல்லாகும்‌. இதன்‌ பொருள்‌ புறக்கணித்தல்‌” என்பதாகும்‌.

கலீபாக்களான அபூபக்கர்‌(ரலி), உமர்‌(ரலி) ஆகியோரின்‌ ஆட்சியைப்‌ புறக்கணித்தவர்களே றாபிழாக்கள்‌ என்றழைக்கப்பட்டனர்‌. இவர்கள்‌ 'இமாமிய்யாக்கள்‌” என்ற பெயரிலும்‌ அழைக்கப்படுவர்‌.

இமாம்‌ அப்துல்லாஹ் பின் அஹ்மத் (ரஹ்‌)அவர்கள்‌கூறுவதாவது:
எனது தந்‌தை (அஹ்மத்‌ பின்‌ ஹம்பல்‌) அவர்களிடம் றாபிழாக்கள் எனப்படுவோர்‌ யார்‌? என்று கேட்டேன் அதற்கவர்‌ “அபூபக்கர்‌(ரலி), உமர்‌(ரலி) ஆகியோரை சபிப்பவர்களே றாபிழாக்கள்‌ ஆவர்‌”. எனப்‌ பதிலுரைத்தார்‌.

றாபிழாக்களுக்கு மத்தியிலும்‌ பல பிரிவினர்‌ உள்ளனர்‌. அவர்கள்‌ மத்தியில்‌ 15 பிரிவினர்கள்‌ இருப்பதாகச்‌ சில அறிஞர்களும்‌, 20 பிரிவினர்கள்‌ இருப்பதாக வேறு சில அறிஞர்களும்‌ கருத்துத்‌ தெரிவிக்கின்றனர்‌.

“நபி(ஸல்‌) அவர்கள்‌ தனது மரணத்திற்குப்‌ பின்‌ அலி(ரலி) அவர்கள்தான்‌ அடுத்த ஆட்சியாளர்‌ என்பதைத்‌ தெளிவாகவும்‌, பகிரங்கமாகவும்‌ கூறியிருந்தார்கள்‌. எனினும்‌, நபி(ஸல்‌) அவர்கள்‌ மரணித்த பின்னர்‌ அலி (ரலி) அவர்களை ஆட்சித்‌ தலைவராக நியமிக்காது பெரும்பாலான. ஸஹாபாக்கள்‌ வழிகெட்டு விட்டனர்‌. ஏனெனில்‌, ஆட்சிப்‌ பொறுப்பானது (இமாமத்‌ என்பது) நபி (ஸல்‌) அவர்களால்‌ தெளிவாகச்‌ சொல்லப்பட்ட அடிப்படையிலேயே நடைபெற வேண்டும்‌. அதில்‌ மாற்றங்கள்‌ இடம்பெறக்‌ கூடாது. ஏனெனில்‌, இமாமத்‌ என்பது ஒரு இபாதத்‌ ஆகும்”‌ என்கிற கருத்துக்களை கொண்ட அனைவரும் ராபிழாக்களே.

றாபிழாக்களின்‌ மிகவும்‌ பிரசித்தி பெற்ற இமாம்களில்‌ ஒருவரான முபீத்‌ (முஹம்மது பின்‌ முஹம்மது, மரணம்‌ ஹிஜ்ரி 413) என்பவர்‌ “மறுமை நாள்‌ ஏற்படுவதற்கு முன்னர்‌, மரணித்தவர்களில்‌ அதிகமானோர்‌ உலகத்துக்கு மீண்டும்‌ திரும்பி வருவது நிச்சயம்‌ மேலும்‌, ஈமானில்‌ உயர்ந்த அந்தஸ்தைப்பெற்ற. அனைவரும்‌, குழப்பம்‌ விளைவிப்பதில்‌ உச்சகட்டத்தை அடைந்த அனைவரும்‌ தமது மரணத்திற்குப்‌ பின்‌ திரும்பி வருவர்‌” எனக்‌ கூறினார்‌. (அவாஇலுல்‌ மகாலாத்‌: 51, 95).

இதேபோன்று அல்லாஹ்வின்‌ பண்புகள்‌ விஷயத்தில்‌, இவர்கள்‌ இறைவனுக்கு 'பதாஅத்‌” எனும்‌ பண்பு உண்டென்று கூறகின்றனர்‌. 'பதாஅத்‌” என்பதற்கு இரு கருத்துக்கள்‌ உள்ளன:

அ) மறைந்திருந்த  பின்னர் தோன்றுதல்‌, 
ஆ) புதிய கருத்துத்‌ தோன்றுதல்‌.

எல்லாம்‌ வல்ல அல்லாஹ்வுக்கு எதுவுமே மறைந்து விடுவதில்லை.

அவ்வாறிருக்க, மறைந்திருந்த அல்லது தெரியாதிருந்த ஒரு விஷயம்‌ இறைவனுக்குப்‌ பின்னர்‌ தெரியவந்தது என்று எவ்வாறு கூறமுடியும்‌? அதுபோன்றே, இறைவனின்‌ அறிவு அனைத்தையும்‌ சூழ்ந்துகொண்டது. அவன்‌ ஞானம்‌ மிக்க மகத்தானவனாக இருக்கும்போது, புதியதோர்‌ விஷயம்‌ எவ்வாறு அவனுக்குத்‌ தோன்ற முடியும்‌? அவன் அறிவிலும், ஆற்றலிலும்‌ அனைத்திலுமே ஆரம்பமானவனாக இருக்கும்போது இவ்வாறு அவனுக்கு 'பதாஃ” உண்டென்று வேண்டுமென்றே கூறுவது இறைவன்‌ மீது அபாண்டம்‌ கூறுவதல்லவா?

மேலும்‌, றாபிழாக்கள்‌ இறைவன்‌ மீது 'பதாஃ' என்னும்‌ இப்பண்பு உண்டென்று கூறுவதைப்‌ புனித வணக்கமாகக்‌ கருதுகின்றனர்‌. இதுபோன்ற கருத்துக்களை விளங்குவதில்‌ அஹ்லுஸ்‌ ஸுன்னத்‌ வல்‌ ஜமாஅத்தினர்‌ தடம்‌ புரண்டு விட்டனர்‌ எனவும்‌ அஹ்லுஸ்‌ ஸுன்னத்‌ வல்‌ ஜமாஅத்‌' இமாம்களைப்‌ பற்றிக்‌ குறையும்‌ கூறுகின்றனர்‌.

மேற்கூறப்பட்டவைகள்‌ றாபிழாக்களுடைய அடிப்படைகளாகும்‌. மேற்கூறப்பட்ட அடிப்படைகள்‌ அனைத்திலும்‌ முஃதஸிலாக்கள்‌, கவாரிஜ்கள்‌, ஸைதிய்யாக்கள்‌, முர்ஜிஆக்கள்‌, அஹ்லுஸ்‌ ஸுன்னத்‌ வல்‌ ஜமாஅத்தினர்‌ ஆகிய அனைவரும்‌ முரண்பாடான
கருத்துக்களையே கொண்டுள்ளனர்‌. (அல்முபீத்‌: அவாதிலுல்‌ மகாலாத்‌ 48, 49).

முன்னோர்களான ஸலபுஸ்‌ ஸாலிஹீன்கள்‌ தமது நூற்களில்‌ றாபிழாக்களைக்‌ கண்டித்திருப்பதோடு மட்டுமின்றி, இவர்கள்தான்‌ மிக மோசமான பிரிவினர்கள்‌ என்றும்‌ அடையாளப்படுத்தி உள்ளனர்‌. மேலும்‌, 'இவர்களைப்‌ பற்றி எச்சரிக்கையும்‌ செய்துள்ளனர்‌.

'றாபிழாக்கள்‌ பற்றி இமாம்‌ இப்னு தைமிய்யா (ரஹ்‌) அவர்கள்‌ கூறுவதாவது:
இஸ்லாத்தில்‌ தோன்றியுள்ள அனைத்துப்‌ பிரிவினர்களிடமும்‌ பித்‌அத்களும்‌, வழிகேடுகளும்‌ காணப்படுகின்றன. எனினும்‌, அவர்களில்‌ எவரும்‌ ரீபிழாக்களைவிடக்‌ கெட்டவர்கள்‌ அல்லர்‌. மேலும்‌, அவர்களைவிட முட்டாள்களும்‌, பொய்யர்களும்‌. அநியாயக்காரர்களும்‌, பாவச்செயல்களில்‌ ஈடுபடுவோரும்‌ வேறு எவரும்‌ இல்லை இன்னும்‌, இறை நிராகரிப்பிற்கு மிக நெருக்கமானவர்களும்‌, ஈமானின்‌ அடிப்படைகளைவிட்டு மிகத் தூரமானவர்களும் இவர்களே

றாபிழாக்களும்‌, ஜஹமிய்யாக்களும்‌ நயவஞ்சகர்கள்‌ ஆவர்‌. அல்லது நபி(ஸல்‌) அவர்களது வழிமுறைகள்‌ பற்றித்‌ தெரியாத முட்டாள்கள்‌ ஆவர்‌. (இப்னு தைமிய்யா: மின்ஹாஜ்‌ அல்ஸான்னா 5 - 160)

றாபிழாக்கள்‌ இறை நிராகரிப்பாளர்களா? இல்லையா? என்பதில்‌ மார்க்க அறிஞர்கள்‌ மத்தியில்‌ கீழ்வரும்‌ கருத்துக்கள்‌ காணப்படுகின்றன.

(இமாம்‌ இப்னு தைமிய்யா(ரஹ்‌) அவர்கள்‌கூறுகின்றார்கள்‌:
'கவாரிஜ்கள்‌ இறை நிராகரிப்பாளர்களா? இல்லையா? என்பதில்‌ அனைவரும்‌ அறிந்த இருவிதமான கருத்துக்கள் உள்ளது போன்றே, இருவிதமான கருத்துக்கள்‌ ‌ றாபிழாக்கள்‌ விஷயத்திலும்‌ காணப்படுகின்றன. றாபிழாக்கள்‌ சொல்லக்கூடிய கருத்துக்கள்‌, நபி (ஸல்‌) அவர்களுடைய வழிமுறைக்கு முரணானதும்‌, நிராகரிப்பை ஏற்படுத்தக்‌ கூடியவைகளுமாகும்‌. மேலும்‌, அவர்களுடைய செயல்களும்‌, இறைநிராகரிப்பாளர்களின்‌ செயல்பாடுகளைப்‌ போன்று இறை மறுப்பை ஏற்படுத்துபவைகளாகும்‌. எனினும்‌, அவர்களில்‌ ஒரு தனி நபர்‌ குறித்து, இறை நிராகரிப்பாளன்‌ என்றும்‌, அவன்‌ நிரந்தர நரகவாசி என்றும்‌ மார்க்கத்‌ தீர்ப்பு வழங்குவதற்கு சில நிபந்தனைகள்‌ உள்ளன.”
நூல்‌: ௬ஹைலி: மவ்கிபு அஹ்லிஸ்ஸுன்னா (1-146), நாஸிர்‌ அல்‌ கிபாரி: உஸுல்‌‌ மத்ஹப்‌ அல்ஷீஆ (2-937).



முஃதஸிலாக்கள்:

முஃதஸிலா என்பது ‘இஃதிஸால்’ என்ற அரபுப் சொல்லிலிருந்து பிறந்த வார்த்தையாகும். இவ்வார்த்தைக்கு பிரிந்து செல்லுதல் ஒதுங்கிக் கொள்ளுதல் போன்ற கருத்துக்கள் உள்ளன. பரிபாஷையில்  முஃதஸிலா எனப்படுவோர்‌ ஹிஜ்ரி இரண்டாம்‌. நூற்றாண்டின்‌ ஆரம்பத்தில்‌
தோன்றிய ஒரு இஸ்லாமிய பிரிவினரைக்‌ குறிக்கும்‌.

இவர்கள்‌ அறிஞர்‌ ஹஸன்‌ அல்‌ பஸரீ(ரஹ்‌) அவர்களிடம்‌ கல்வி கற்று வந்தனர்‌. இந்நிலையில்‌ இமாம்‌ ஹஸன்‌ அல்பஸரீ அவர்களிடம்‌ ஒருவர்‌ வந்து பெரும்பாவிகள்‌ விஷயத்தில்‌ அஹ்லுஸ்‌ ஸுன்னாவின்‌ நிலைப்பாடு பற்றி வினா எழுப்பினார்‌. இமாம்‌ ஹஸன்‌ அல்‌-பஸரீ(ரஹ்‌) அவர்கள்‌ இக்கேள்விக்கு பதிலளிக்க முன்னர்‌, சபையில்‌ அமர்ந்திருந்த மாணவர்களில்‌ ஒருவரான வாஸில்‌ பின்‌ அதா (ஹிஜ்ரி 80ஆம்‌ ஆண்டு பிறந்து ஹிஜ்ரி 131ஆம்‌ ஆண்டு மரணித்தவர்‌) என்பவர்‌ குறுக்கிட்டு, 'பெரும்பாவிகள்‌ முஃமின்களுமல்ல; அதேநேரம்‌ காஃபிர்களும்‌ அல்ல ஈமான்‌, குஃப்ர்‌ இரண்டுக்கும்‌ இடைப்பட்ட நிலையில்‌ உள்ளனர்‌” எனப்‌ பதிலளித்தார்‌. இதனைக்‌ கேட்டுக்‌ கொண்டிருந்த இமாம்‌ ஹஸன்‌ அல்பஸரீ(ரஹ்‌). அவர்கள்‌ உடனடியாக வாஸில்‌ பின்‌ அதாவை தமது சபையிலிருந்து விரட்டிவிட்டார்‌. விரட்டிவிடப்பட்ட வாஸில்‌ பின்‌ அதாவும்‌, அவரது ஆதரவாளர்களும்‌ அப்பள்ளி வாசலின்‌ மற்றொரு மூலையில்‌ ஒதுங்கிக்‌ கொண்டனர்‌. மேலும்‌, தமக்கென்று சில அடிப்படைக்‌ கோட்பாடுகளையும்‌ உருவாக்கிக்கொண்டனர்‌.

இவ்வாறு, ஹிஜ்ரி 105ஆம்‌ ஆண்டுக்கும்‌ 110ஆம்‌ ஆண்டுக்கும்‌ இடைப்பட்ட காலத்தில்‌, பெரும்பாவிகள்‌ பற்றிய இஸ்லாத்தின்‌ நிலைப்பாட்டில்‌ ஏற்பட்ட சர்ச்சையின்‌ பின்னணியில்‌ உருவானவர்கள்‌ என்பதே மிகச்சரியான கருத்தாகும்‌. இவ்வாறு உருவான முஃதஸிலாக்கள்‌ சில கருத்துக்களை ஜஹமிய்யாக்களிடமிருந்தும்‌, இன்னும்‌ சில கருத்துக்களை கதரிய்யாக்களிடமிருந்தும்‌ எடுத்துக் கொண்டு, தமது கொள்கைகளை வகுத்துக்‌ கொண்டனர்‌.
அவைகளாவன:

1. தெளஹீத்‌: அல்லாஹ்வுக்குக்‌ கட்டாயம்‌ இருக்க வேண்டிய பண்புகள்‌, இருக்கக்கூடாத பண்புகள்‌ பற்றி ஆய்வு செய்வதையே முஃதஸிலாக்கள் தெளஹீத்‌ என்று கருதுகின்றனர்

மேலும்‌ அல்லாஹ்வுக்குப்‌ பண்புகள்‌ இருப்பதாக விசுவாசம்‌ கொள்வது, அவனுக்கு இணை, துணை, அவனுடன்‌ பல கடவுள்கள்‌ இருப்பதாக விசுவாசம்‌ கொள்வது போன்றதாகும்‌ என்கின்றனர்‌. முஃதஸிலாக்கள்‌ இவ்வாறுகூறி அல்லாஹ்வின்‌ பண்புகள்‌ அனைத்தையும்‌ மறுத்துரைகின்றனர்‌.

2. அத்ல்: அல்லாஹ்வின் செயல்கள் பற்றி ஆய்வு செய்வதற்கு இவர்கள்‌ இந்த வார்த்தையைப்‌ பயன்படுத்துகின்றனர்‌. அவனுடைய செயல்கள்‌ அனைத்தும்‌ அழகானவை. கெட்ட, நியாயமற்ற செயல்களை அல்லாஹ்‌ செய்வதில்லை. அவ்வாறு மனிதன்மீது அவைகளை விதியாக்கவும்‌ இல்லை. அவைகளைப்‌ பொருந்திக்‌ கொள்ளவும்‌ இல்லை. மனிதனுடைய செயல்கள்‌ அனைத்தையும்‌ மனிதன்‌ படைக்கிறானே தவிர, அல்லாஹ்‌ அவைகளைப்‌ படைக்கவோ, விதியாக்கவோ இல்லை. எனவே, அநியாயமான கெட்ட செயல்கள்‌ அனைத்தையும்‌ கற்பனை செய்தல்‌, பொருந்திக்‌ கொள்ளுதல்‌, படைத்தல்‌ போன்ற பண்புகள்‌ அனைத்திலிருந்தும்‌ அல்லாஹ்‌ பரிசுத்தமானவ்ன்‌ என்ற கருத்துக்களைக்‌ கூறுகின்றனர்‌. மேலும்‌, முஃதஸிலாக்களின்‌ தலைவர்களில்‌ ஒருவரான காழி அப்துல்‌ ஜப்பார்‌ என்பவர்‌, மனிதனின்‌ நடவடிக்கைகள்‌, எழும்புதல்‌, உட்காருதல்‌ போன்ற அனைத்தும்‌ மனிதனின்‌ புறத்திலிருந்து புதிதாக ஏற்படுபவைகள்‌. இவைகளைச்‌ செய்கின்ற ஆற்றலை மாத்திரமே அல்லாஹ்‌ மனிதனுக்கு வழங்கியுள்ளான்‌. எனவே, எவராவது மனிதனுடைய செயல்களை அல்லாஹ்‌ படைக்கிறான்‌ என்று கூறினால்‌, அவர்‌ பெரும்பாவம்‌ செய்தவராவார்‌” எனக்கூறுகின்றார்‌. (பார்க்க: பிரக்‌ அல்முஆஸிரா: 1175).

3. அல்வஃத்‌ - அல்வஈத்‌: முஃதஸிலாக்களின்‌ அறிஞர்களில்‌ ஒருவரான காழி அப்துல்‌ ஜப்பார்‌ கூறுவதாவது: வஃது என்பது ஒரு மனிதனுக்கு எதிர்காலத்தில் நன்மை செய்வதாக அல்லது அவருக்கு ஏற்படவிருக்கின்ற தீமையை தடை செய்வதாக கூறும் செய்தியாகும் மேலும் இச்செயலுக்கு அவர் தகுதியானவராகவோ, தகுதியற்றவராகவோ இருக்கலாம்‌.

அல்லாஹ்‌ சில கடமைகளை மனிதன் மீது விதியாக்கி, அவைகளை நிறைவேற்றுவோருக்கு வெகுமதிகளைத்‌ தருவதாகவும்‌ வாக்களித்துள்ளான்‌. எனவே, மனிதன்‌ தன்மீது விதியாக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றினால்‌ அல்லாஹ்‌ வாக்களித்த நற்கூலிக்கு உரித்தானவன்‌ ஆகிறான்‌. எனவே, அவன்‌ வாக்களித்த
நற்கூலியைக்கொடுத்து, தனது வாக்கை நிறைவேற்றுவது அல்லாஹ்வின் மீது கடமை. அவ்வாறு கொடுக்காவிடின்‌ அல்லாஹ்‌ கூலி கொடுக்காத அநியாயக்காரனாகவும்‌ ஆவான்‌ என்று முஃதஸிலாக்கள்‌ கூறுகின்றனர்‌. (இவர்கள்‌ கூறுவதுபோன்று வாக்கு மீறியவனாகவும்‌, மனிதன்‌ செய்த கடமைக்குக்‌ வாக்குக்கு மாறு செய்தல்‌, அநீதியிழைத்தல்‌ போன்றவற்றை விட்டும்‌ அல்லாஹ்‌ மிக்க பரிசுத்தமானவன்‌).

அல்வஈத்‌: அல்வஈத் ‌ என்பது, பெரும்பாவிகள்‌ தாம்‌ செய்த பாவங்களுக்கு பாவமன்னிப்புக்‌ கேட்காமல்‌ மரணித்தால்‌, அவ்வாறு மரணிப்பவர்களுக்கு அல்லாஹ்‌ வாக்களித்துள்ள தண்டனைகளை நிறைவேற்றுவது பற்றி ஆய்வு செய்வதையே முஃதஸிலாக்கள் ‌ அல்வஈத் என்கின்றன‌ர்‌.

பெரும்பாவிகள்‌ தாம்‌ புரிந்த பாவச்‌ செயல்களுக்குப்‌ பாவமன்னிப்புச்‌ செய்யாமல்‌ மரணித்தால்‌, இறைநிராகரிப்பாளர்‌களைப் போன்று இவர்களையும்‌ நரகத்தில்‌ போட்டுவிடுவான்‌. எனினும்‌, இறை நிராகரிப்பாளர்களுக்குக்‌ கொடுக்கப்படுகின்ற தண்டனையை விடக்‌ குறைவாகவே இவர்கள்‌ தண்டிக்கப்படுவர்‌. இதுவே பெரும்பாவம்‌ செய்பவர்களுக்கும்‌, காபிர்களுக்கும்‌ இடையிலுள்ள வித்தியாசமாகும்‌ என்று கூறுகின்றனர்‌. (பார்க்க: பிரக்‌ அல்முஆஸிரா).

4. ஈமானுக்கும்‌, இறைநிராகரிப்பிற்கும்‌ இடைப்பட்ட நிலை:- பெரும்பாவத்தில்‌ ஈடுபடுவோர்‌ முஃமின்களும்‌ அல்லர்‌. அதேவேளை அவர்கள்‌ காஃபிர்களுமல்லர்‌. இருசாராருக்கும்‌ இடைப்பட்ட 'ஃபாஸிக்‌' என்ற நிலையில்‌ உள்ளனர்‌. உலகத்தில்‌ இவர்கள்‌ 'ஃபாஸிக்‌' 'நெறிதவறியவர்‌' என்ற பெயரில்‌ அழைக்கப்படுவர்‌. அல்லாஹ்விடம்‌ பாவமன்னிப்புச்‌ செய்யாமல்‌ மரணித்தால்‌, மறுமையில்‌ காஃபிர்களுடன்‌ நிரந்தரமாக நரகத்தில்‌ தங்கிவிடுவர்‌.

 5. நன்மையை ஏவித்‌ தீமையைத்‌ தடைசெய்தல்‌: நன்மையை ஏவித்‌ தீமையைத்‌ தடைசெய்ய முன்வருகின்ற ஒவ்வொருவரும்‌ எது நன்மை, எது தீமை என்பதை ஆதாரத்துடன்‌ தெரிந்திருக்க வேண்டும்‌. இது ஃபர்ளு கிபாயா வகையைச்‌ சார்ந்த கடமைகளுள்‌ ஒன்று, எனவே, சிலர்‌ மாத்திரம்‌ இப்பணியில்‌ ஈடுபட்டால்‌ போதுமானது. ஏனையோர்‌ மீது எந்தக்குற்றமும்‌ இல்லை.

நன்மையை ஏவித்‌ தீமையைத்‌ தடுத்தல்‌ எனும்‌ நற்பணி பர்ளு கிபாயா என்பதே அனைத்து அஹ்லுஸ்‌ ஸான்னாவினதும்‌ கருத்தாகும்‌. ஆனால்‌, இதனை நடைமுறைப்படுத்துகின்றபோது கீழ்வரும்‌ அம்சங்களில்‌ அஹ்லுஸ்‌ ஸான்னாவினருக்கும்‌, மற்ற சாராருக்குமிடையில்‌ முரண்பாடுகள்‌ உள்ளன. அவைகளாவன:

அ) பாவங்களைத்‌ தடை செய்யும்‌' வழிமுறை.
ஆ)அநியாயக்கார ஆட்சியாளனுக்கு (அமீருக்கு) எதிராகப்‌ போராடுதல்‌.
இ) முஃமின்கள்‌, காஃபிர்கள்‌ என்ற
எந்தவித வேறுபாடுமின்றி தமக்குப்‌ பாதகமானவர்களுக்கு எதிராக ஆயுதம்‌ ஏந்திப்‌ போராடுதல்‌.

எனவே, மேற்கூறப்பட்ட ஐந்து வகையான அடிப்படைக்‌ கொள்கைகளையும்‌ நம்பி ஏற்றுக்கொள்பவர்கள்‌ முஃதஸிலாக்கள்‌ ஆவர்‌. மேற்படி ஐந்து அடிப்படைகளிலும்‌ அஹ்லுஸ்‌ ஸுன்னத்‌ வல்‌ ஐமாஅததினருடைய நிலைப்பாட்டிலிருந்து முரண்பட்டு விலகிக்கொண்டதால்‌ இவர்கள்‌ முஃதஸிலாக்கள்‌ என்று அழைக்கப்படுகின்றனர்‌.

மேலும்‌, முஃதஸிலாக்கள்‌ கீழ்வரும்‌ அம்சங்களிலும்‌ அஹ்லுஸ்‌ஸுன்னத்‌ வல்‌ ஜமாஅத்தினருடன்‌ முரண்படுகின்றனர்‌:

1. அல்லாஹ்‌ எல்லா இடத்திலும்‌ இருக்கின்றான்‌ என முஃதஸிலாக்களில்‌ பெரும்பாலானோர்‌ கருதுகின்றனர்‌. அவர்களில்‌ சிலர்‌ மாத்திரம்‌ 'அவன்‌ ஒரு இடத்திலும்‌ இல்லை: மாறாக, அவன்‌ தனது ஆரம்ப நிலையில்‌ இருக்கின்றான்
என்கின்றனர்‌.

2. அவன்‌ அர்ஷின்‌ மீது இல்லை மாறாக அர்ஷையும்‌ அவன் ஆக்கிரமித்து, அதிலும்‌ அவன்‌ ஆட்சி செய்கிறான்‌.

3. மனிதன்‌ தனது கண்களால்‌
அல்லாஹ்வை மறுமையில் காணமுடியாது.

4. அல்லாஹ்‌ பேச மாட்டான்‌ என்று சிலரும்‌, பேசுவான்‌ என்று வேறுசிலரும்‌ கருதுகின்றனர்‌.

5. அல்லாஹ்வுடைய பண்புகள்‌ அனைத்தையும்‌ மறுத்து, அவற்றை பாழ்படுத்துகின்றனர்‌.

6. மறுமையில்‌ நிகழவுள்ள ஷஃபாஅத்தை மறுக்கின்றனர்‌.

முஃதஸிலாக்கள்‌ கீழ்‌வரும் வெவ்‌வேறு
பெயர்களிலும்‌ இவ்‌ உலகில்‌ உள்ளனர்‌:
1) அஹ்லுல்‌ அதல்‌ வத்தெளஹீத்‌ 
2) அத்லிய்யா
3) அஹ்லுல்‌ ஹக்‌ 
4)அல்பிர்கதுல்‌ நாஜியா
5) அல்முனஸ்ஸிஹுன லில்லா 
6) அல்கதரிய்யா.
(நூல்‌: அவ்வாத்‌ அல்முஃதிக்‌: அல்முஃதஸிலா :22)


கதரிய்யாக்கள்‌:

கீழ்வரும்‌ கொள்கைகளை அடிப்படையாகக்‌ கொண்டோர்‌ கதரிய்யாக்கள்‌ எனப்படுவர்‌. அதாவது 'உலகில்‌ நடைபெறுகின்ற செயல்கள்‌ அனைத்தும்‌ அல்லாஹ்வின்‌ கற்பனைக்கோ அல்லது அவனது அறிவுக்கோ அப்பாற்பட்டதாகும்‌. மேலும, எல்லாச் செயல்களும்‌ நடைபெற்று முடிந்த பின்னரே அவன்‌ அவைகளைப்‌ பற்றி அறிந்து கொள்கிறான்‌' என்பவர்களே கதரிய்யாக்கள்‌ ஆவர்‌.

ஹிஜ்ரி 204ல்‌ மரணித்த இமாம்‌ ஷாபிஈ (ரஹ்‌) கூறினார்கள்‌:

செயல்கள்‌ நடைபெறாதவரை அவைகளை அல்லாஹ் அறியமாட்டான் என்பவர்‌ கதரிய்யாக்களைச்‌ சார்ந்தவராவார்‌”‌. (அல்லாலகாஈ 4:701).

ஹிஜ்ரி 204ல்‌ மரணித்த இமாம் அபூ ஸவ்ர்‌(ரஹ்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌:

மனிதனது செயல்களை(கருமங்களை) அல்லாஹ் படைக்கவில்லை. மேலும்‌, பாவச்‌ செயல்களை அல்லாஹ்‌ மனிதன்மீது விதியாக்கவோ, அவைகளைப்‌ படைக்கவோ மாட்டான்‌' என்று கூறுபவர்களே கதரிய்யாக்கள் எனப்படுவர்.

‘கதர்‌' என்னும்‌ அரபி வார்த்தைக்கு 'விதி' என்று பொருளாகும்‌. இதனடிப்படையில்‌ விதியை மறுப்பவர்களே கதரிய்யாக்கள்‌ என்றழைக்கப்‌ பட்டனர்‌.

ஸஹாபாக்களின்‌ இறுதிக்காலத்தில்‌ மஃபத்‌ அல்ஜுஹனி என்பவனால்‌ இக்கொள்கை உலகில்‌ முதன்முதலில்‌ அறிமுகம்‌ செய்யப்பட்டது. அப்போது. ஈராக்‌ நாட்டின்‌ பஸரா நகரத்தின் கவர்னராக இருந்த ஹஜ்ஜாஜ்‌ பின்‌ யூஸுப்‌ (ரஹ்‌) என்பவரால்‌ இவன் கொலை செய்யப்பட்டான்‌.

"இக்கொள்கை கிறிஸ்தவ மதத்தைச்‌ சார்ந்த ஸோஸான்‌ என்பவன்‌ வழியாகவே மஃபத்‌ அல்‌ஜுஹனிக்குக்‌ கிடைத்தது.

இமாம்‌ அவ்ஸாஈ(ரஹ்‌) அவர்கள்‌ கூறுவதாவது:
முதன்‌ முதலில்‌ விதியைப்‌ புறக்கணித்துப்‌ பேசியவன்‌ ஸோஸான்‌ என்பவனே. இவன்‌ ஈராக்‌ நாட்டைச்‌ சார்ந்த கிறிஸ்தவன்‌ ஆவான்‌. இவன்‌ இஸ்லாத்தைத்‌ தழுவி இஸ்லாத்தில்‌ சிறிது காலம்‌ இருந்துவிட்டு மீண்டும் மதம்மாறி கிறிஸ்தவ மதத்தில் இணைந்து கொண்டான்‌.

எனவே, ஸோஸான்‌ வழியாக இக்கொள்கை முறையே மஃபத்‌ அல்‌ஜுஹனி என்பவனுக்கும்‌, இவனிடமிருந்து டமஸ்கஸ்‌ நகரத்தைச்‌ சார்ந்த கயலான்‌ என்பவனுக்கும்‌ கிடைத்தது. பின்னர்‌ இக்கொள்கை பரிணாமம்‌ பெற்று உலகின்‌ பல நாடுகளிலும்‌ பரவ ஆரம்பித்தது. (அல்ஷரீஆ :243).

மேலும்‌, கதரிய்யாக்கள்‌ தோன்றிய ஆரம்பத்தில்‌ இருந்தே அவர்களது கொள்கைகள்‌ இரண்டாகும்‌. அவையாவன:

(1) செயல்கள்‌ (காரியங்கள்‌) நடைபெற முன்னர்‌, அல்லாஹ்‌ அவைகளைப்‌ பற்றி அறிய மாட்டான்‌.

(2) மனிதனின்‌ செயல்களை (கருமங்களை) மனிதன்‌ தானாகவே படைக்கிறான்‌.

இமாம்‌ அல்‌-குர்துபீ (ரஹ்‌) அவர்கள்‌ கூறுவதாவது:

இக்கொள்கை காலப்போக்கில்‌ அழிந்துவிட்டது. இன்று 'இக்கொள்கையைப்‌ பின்பற்றுபவர்கள்‌ இருப்பதாகத்‌ தெரியவில்லை.  இன்று உலகில்‌ உள்ள கதரிய்யாக்களைப்‌ பொறுத்தவரை, கருமங்கள்‌ நடைபெற முன்னால்‌ அல்லாஹ்‌ அவைகளைத்‌ தெரிந்து வைத்துள்ளான்‌ என்ற முதலாவது அடிப்படையில்‌ அஹ்லுஸ்‌ ஸுன்னாவுடன்‌ உடன்படுகின்றனர்‌. எனினும்‌, 'மனிதனுடைய செயல்கள்‌ இறைவனால்‌ கற்பிக்கப்பட்டு விட்டன. ஆனால்‌, அவைகள்‌ மனிதன்‌ புறத்திலிருந்து தனியாக நடைபெறுகின்றன. இறைவன்‌ அவைகளைப்‌ படைப்பதில்லை.' என்ற தமது கொள்கையில்‌ அஹ்லுஸ்‌ ஸுன்னாவுடன்‌ மாறுபடுகின்றனர்‌. இவர்கள்‌ ஆரம்ப காலத்தில்‌ இருந்த கதரிய்யாக்களைவிட கொள்கையில்‌ சிறிது தெளிவுடையவர்களாக இருந்தாலும்‌, அன்றைய கதரிய்யாக்களும்‌ ஆரம்பத்தில் உள்ளவர்களும்‌, இன்றைய கதரிய்யாக்களும்‌ அசத்தியத்திலேயே நிலைத்திருக்கின்றனர்

நம்‌ முன்னோர்களான ஸலபுஸ்ஸாலிஹீன்கள்‌, கதரிய்யாக்கள்‌ இறைநிராகரிப்பாளர்களா? அல்லது இறைவிசுவாசிகளா? என்பது பற்றிக்‌ கருத்துத்‌ தெரிவிக்கும்‌ போது, 'அல்லாஹ்விள்‌ அறிவைப் புறக்கணிப்பவர்கள்‌ இறைநிராகரிப்பாளர்களே எனினும்‌, மனிதனுடைய செயல்களை அல்லாஹ்‌ படைப்பதில்லை. அவைகள்‌ நடைபெற முன்னர்‌ அல்லாஹ்‌ அவற்றை அறிந்து வைத்திருக்கிறான்‌ என்போர்‌ இறை நிராகரிப்பாளர்களல்ல' என்கின்றனர்‌.

இமாம்‌ அஹ்மத்‌ பின்‌ ஹம்பல்‌(ரஹ்‌) அவர்களின்‌ புதல்வரான இமாம்‌ அப்துல்லாஹ்‌(ரஹ்‌) அவர்கள்‌ கூறுவதாவது: 'எனது தந்தையிடம்‌, கதரிய்யாக்கள்‌ இறை நிராகரிப்பாளர்களா?' என்று வினவப்பட்டது. அதற்கவர்கள்‌, நடைபெற இருக்கின்ற செயல்கள்‌ பற்றி அல்லாஹ்‌ அறியமாட்டான்‌' என்று கூறி அல்லாஹ்வுடைய அறிவைப்‌ புறக்கணித்தால்‌, அவர்கள்‌ இறை நிராகரிப்பாளர்களே! என்று பதிலுரைத்தார்கள்‌. (அல்‌-கல்லால்‌: அல்‌-ஸுன்னா :862)

இமாம்‌ மர்வஸீ (ரஹ்‌) அவர்கள்‌ கூறுவதாவது:
இமாம்‌ அஹ்மத்‌ பின்‌ ஹம்பல்‌ (ரஹ்‌) அவர்களிடம்‌ கதரிய்யாக்கள் பற்றிக்‌ கேட்டபோது, அல்லாஹ்வின்‌ அறிவைப்‌ புறக்கணிக்காதவர்கள்‌ இறை நிராகரிப்பாளர்களல்ல என்றார் (அல்கல்லால்‌:அல்ஸுன்னா: 871).
மேற்கூறப்பட்ட கருத்தை இமாம்‌ இப்னு தைமிய்யா(ரஹ்‌) அவர்கள்‌ கீழ்வருமாறு தெளிவுபடுத்துகிறார்கள்‌:

விஷயங்கள் நடைபெற முன்னர் அல்லாஹ் அறிய மாட்டான்‌; அவ்வாறான விஷயங்களை அவன்‌ லெளஹுல் மஹ்பூளில் பதிவு செய்து வைக்கவில்லை என்று கூறுபவர்கள் இறைநிராகரிப்பாளர்களே. என்றாலும்‌, விஷயங்கள்‌ நடைபெற முன்னர்‌, அல்லாஹ்‌ அவற்றை அறிந்து வைத்துள்ளான்‌. எனினும்‌ அவற்றை அல்லாஹ்‌ படைப்பதில்லை' என்று கூறுபவர்கள்‌ இறைநிராகரிப்பாளர்களல்ல. (மஜ்மூஃ அல்பதாவா: 3:352).

இமாம்‌ இப்னு ரஜப் ‌(ரஹ்‌) அவர்கள்‌ கூறுவதாவது: கதரிய்யாக்கள்‌ இறை நிராகரிப்பாளர்களா? இல்லையா? என்பதில்‌ மார்க்க அறிஞர்களின்‌ மத்தியில்‌ முரண்பட்ட கருத்துக்கள்‌ உள்ளன. இமாம்‌ ஷாபிஈ (ரஹ்‌), இமாம்‌ அஹ்மத்‌(ரஹ்‌) போன்றோர்‌ ‘அல்லாஹ்வின் அறிவை புறக்கணிப்பவர்கள்‌ இறைநிராகரிப்பாளர் ஆவர்‌' என்று தெளிவாகக்‌ கூறியுள்ளார்கள்‌ - என்கிறார்‌. (இப்னு ரஜப்‌: ஜாமிஉல்‌ உலூம்‌: பக்கம்‌: 26).

இஸ்லாமிய வரலாற்றில்‌ பிரபலமாக இருந்த கதரிய்யாக்கள்‌ மறைந்து விட்டனர்‌. எனினும்‌, முஃதஸிலாக்கள்‌ இவர்களது அடிப்படைக்‌ கொள்கைகளைப்‌ பின்பற்றுவதுடன்‌, 'இக்கொள்கைகளைப்‌ பாதுகாத்தும்‌ வருகின்றனர்‌. எனவேதான்‌, முஃதஸிலாக்கள்‌ கதரிய்யாக்கள்‌ என்ற பெயரிலும்‌ அழைக்கப்பட்டு வருகின்றனர்‌. (முஃதஸிலா: பக்கம்‌: 40).


ஜபரிய்யாக்கள்‌:

ஜபரிய்யாக்கள்‌ என்பவர்கள்‌ கொள்கை ரீதியாக வழிகெட்ட ஒரு பிரிவினர்‌. ஜபரிய்யா என்பது ஜபர்‌ என்ற வார்த்தையிலிருந்து வந்த சொல்லாகும்‌. இதன்‌ பொருள்‌ “இயலாமை” என்பதாகும்‌. அதாவது, ஒரு வேலையை நிறைவேற்ற (சக்தியில்லாத) ஒருவரை வற்புறுத்தி குறித்த வேலையை செய்ய வைப்பதைக்‌ குறிக்கும்‌. ஜபரிய்யாக்களது அடிப்படைக்‌ கொள்கைகள்‌ வருமாறு:

1. மனிதன்‌ தனது செயல்கள்‌ மீது நிர்ப்‌பந்திக்கப்பட்டவன்‌ ஆவான்‌. எனவே, மனிதன்‌ சுயமாக தனது விருப்பப்படி சிந்தித்து எதுவும்‌ செய்ய முடியாது.

2. மனிதனுடைய செயல்கள்‌ அனைத்தையும்‌ அல்லாஹ்‌ தானாகவே படைக்கின்றான்‌. அவைகளைச்‌ செய்வதில்‌ மனிதனுக்கு எந்தவிதப்‌ பங்கும்‌ கிடையாது. அதாவது, ஈமான்‌ கொள்ளுதல்‌, இறைவனை நிராகரித்தல்‌, பாவங்களில்‌ ஈடுபடுதல்‌ போன்ற மனிதனால் நிறைவேற்றப்படும் செயல்கள் அனைத்தையும் அல்லாஹவே செய்கிறான் இதில் மனிதனுக்கு எந்த வித தெரிவுச் சுதந்திரமும் கிடையாது. மனிதனின்‌ செயல்கள்‌ அனைத்தும்‌ ‘சிலேடை’ அடிப்படையில்தான்‌ மனிதனுடன்‌ சேர்த்துச்‌ சொல்லப்படுகின்றன. எனவே, மனிதன்‌ செய்தான்‌ என்பது வெறுமனே ஒரு சிலேடை வார்த்தையாகும்‌.

முஸ்லிம்களின்‌ மத்தியில்‌ முதன்‌ முதலில்‌ இக்கொள்கையை அறிமுகம்‌ செய்தவன்‌ ஜஃத்‌ பின்‌ திர்ஹம்‌ என்பவன்‌ ஆவான்‌. இக்கருத்து யூதர்கள்‌ வழியாகவே அவனுக்குக்‌ கிடைத்தது.

இக்கொள்கையைப்‌ பகிரங்கமாகச்‌ சொன்னவர்‌ அல்‌ஜஹம்‌ பின்‌ ஸப்வான்‌ என்பவரே. இவர்‌ ஜஃத்‌ பின்‌ திர்ஹம்‌ என்பவரின்‌ மாணவர்‌ என்பது இங்கு குறிப்பிடத்தக்கது எனவே இவ்வடிப்படையில்‌ பார்க்கும்போது மேற்படி இக்கொள்கையையும்‌ ஆரம்பத்தில்‌ அறிமுகம்‌ செய்தவர்கள்‌ ஜஹமிய்யாக்கள்‌ என்பது தெளிவாகிறது.

மனிதனின்‌ செயல்கள்‌ அனைத்தையும்‌
அல்லாஹ்வே படைக்கிறான்‌; எனினும்‌, அவை மனிதனின்‌ விருப்பு, வெறுப்பிற்கு ஏற்பவே நடைபெறுகின்றன. தனக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தைப்‌ பயன்படுத்தி நற்செயல்கள்‌ புரிவோர்‌ நன்மையடைவர்‌, பாவச்‌ செயல்களில்‌ ஈடுபடுவோரை, அவன்‌ நாடினால்‌ மன்னிப்பான்‌: அல்லது தண்டிப்பான்‌” என்பதே அஹ்லுஸ்‌ ஸுன்னாவினரின்‌ கொள்கையாகும்‌.


முர்ஜீஆக்கள்‌:

முர்ஜிஆ என்பது இர்ஜாஃ என்ற பத்த்திலிருந்து வந்த சொல்லாகும்‌. இதற்கு அறபு மொழியில்‌ பிற்படுத்துதல்‌, ஆதரவு வைத்தல் போன்ற கருத்துக்கள்‌ உள்ளன. (ஷஹ்ருஸ்தானி: அல்மிலல் வல்நிஹல் 139)

முர்ஜிஆக்கள்‌ என்போர்‌ யார்‌? என்பது பற்றி இமாம்‌ அஹ்மத்‌ பின்‌ ஹம்பல்‌ (ரஹ்‌) அவர்கள்‌ கூறுவதாவது: ஈமான்‌ என்பது கலிமாவை நாவினால்‌ மொழிவது மாத்திரமாகும்‌. மனிதர்கள்‌ மத்தியில்‌ ஈமானின்‌ தரத்தில்‌ வித்தியாசம்‌ கிடையாது. எனவே, மனிதர்கள்‌, நபிமார்கள்‌, மலக்குகள்‌ அனைவருடைய ஈமானும்‌ ஒரே தரத்தையுடையதாகும்‌. மேலும்‌, ஈமான்‌ கூடவோ, குறையவோ மாட்டாது. கலிமாவை தனது நாவினால்‌ மாத்திரம்‌ கூறி விசுவாசும்‌ கொண்டு மேலும்‌, எவரேனும்‌ (அமல்‌ செய்யாவிடினும்‌ கூட) அவர்‌ உண்மையான முஃமின்‌ ஆவார்‌.

மேலே சொல்லப்பட்ட கருத்துக்களையும்  கொள்கைகளையும் கொண்டோர்‌ முர்ஜிஆக்கள்‌ எனப்படுவர்‌."

மேற்கூறப்பட்ட முர்ஜிஆக்களது கருத்துக்களைப்‌ பார்க்கும்போது, ஈமானுக்கும்‌ அமலுக்கும்‌ இடையில்‌ எந்த உறவும்‌ இல்லை என்ற கருத்தை முர்ஜிஆக்கள்‌ கூறுகின்ற காரணத்தால், இறைநிராகரிப்பாளர்களுக்கு, தாம்‌ செய்த நல்லறங்கள்‌ பயனளிக்காதது போன்று முஃமின்களுக்கும் தமது ‌ பாவச் செயல்கள்‌ எந்தத்‌ தீங்கும்‌ செய்யாது என்று நம்பிக்கை கொள்வதே இவர்களது  கோட்பாடு என்பது புரிகின்றது.

இமாம்‌ இப்னு தைமிய்யா (ரஹ்‌) அவர்கள்‌ கூறுகின்றார்கள்‌: முர்ஜிஆக்கள் மூன்று வகைப்படுவர்‌.

ஈமான்‌ என்பது உள்ளத்தில்‌ இருக்கின்ற நம்பிக்கையாகும் என்போர்‌ முதலாம்‌ வகையினர்‌. இவர்களில்‌ ‌”பெரும்பாலானோர்‌, ஈமானுக்கும்‌, அமலுக்கும்‌ மிக நெருங்கிய தொடர்பு உண்டு என்கின்றனர்‌. எனினும்‌, மற்றும்‌ சிலர்‌, ஈமானுக்கும்‌, அமலுக்கும் எந்தத்‌ தொடர்பும்‌ இல்லை என்கின்றனர்‌. மேலே குறிப்பிட்ட இரண்டாவது கருத்தையே ஜஹம்‌ பின்‌ ஸப்வான்‌ என்பவனும்‌, அவனைப்‌ பின்பற்றியோரும்‌ ஏற்றுக்‌ கொண்டிருந்தனர்‌.

2. ஈமான்‌ என்பது கலிமாவை நாவினால்‌ மொழிவது மாத்திரமாகும்‌ என்ற கொள்கையை உடையோர்‌ இரண்டாவது வகையினர்‌. இவர்கள்‌ கராமிய்யாக்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

3. ஈமான்‌ என்பது கலிமாவை நாவினால்‌ மொழிந்து, அதனை உள்ளத்தால்‌ விசுவாசம்‌ கொள்வதை மட்டுமே குறிக்கும் என்போர்‌ மூன்றாவது வகையினர்‌. இவர்கள்‌ முர்ஜிஅதுல்‌ புகஹா என்று அழைக்கப்படுவர்‌.

முர்ஜிஆக்கள்‌ முஸ்லிம்களா?  அல்லது இறை 'நிராகரிப்பாளர்களா? என்ற நிலைப்பாட்டில்‌ கீழ்வரும்‌ கருத்துக்கள்‌ காணப்படுகின்றன:

இமாம்‌ இப்னுதைமிய்யா (ரஹ்‌) அவர்கள்‌ கூறுவதாவது: ..முர்ஜிஅதுல்‌ புகஹாக்கள் பற்றிய தீர்ப்பும்‌ அவ்வாறுதான்‌. இவர்களுடைய பித்அத்கள் புகஹாக்களுடைய பித்அத்களை‌ சார்ந்தவைகளே! அவை இறை நிராகரிப்பை ஏற்படுத்தக்‌ கூடியவைகளல்ல என்பதில்‌ மார்க்க அறிஞர்களுக்கிடையே கருத்து முரண்பாடுகள்‌ காணப்படவில்லை.

இவர்களுடைய பித்‌அத்துக்கள் இறை நிராகரிப்பை ஏற்படுத்தக்‌ கூடியவைகளே என சில மார்க்க அறிஞர்கள்‌ கருதுகின்றனர்‌. இது மிகவும்‌ தவறான கருத்தாகும்‌. 'அமல்கள்‌ ஈமான்‌ சார்ந்ததல்ல” என்கிற இவர்களது கருத்து குப்ரை ஏற்படுத்தக்‌ கூடியது என்று சில அறிஞர்கள்‌ கூறினர்‌. எனினும்‌, அமல்களை விட்டுவிடுதல்‌, அல்லது அலட்சியம்‌ செய்தல்‌ ஈமானின்‌ கடமையை விட்டுவிடுவதாகக்‌ கருதப்படுமே தவிர, ஈமானைப்‌ புறக்கணிப்பதாகக்‌ கருதப்படமாட்டாது.

முர்ஜிஆக்களில்‌ சிலர்‌ மறுமையில்‌ தண்டனை வழங்கப்படும்‌ என்கிற விஷயத்தைப்‌ புறக்கணிக்கின்றனர்‌. இன்னும்‌ சிலர்‌ ஆல்குர்‌ஆன்‌ வசனங்களும்‌, ஹதீஸ்களும்‌ யதார்த்தமாக நடைபெற முடியாத சில தண்டனைகளைக்‌ கூறி மனிதர்களை அச்சுறுத்துவதாகக்‌ கூறுகின்றனர்‌. இவ்வாறு மறுமையில்‌ வழங்கப்படும்‌ தண்டனையைப்‌ புறக்கணிக்கும்‌ கூட்டத்தினர்‌ இறை நிராகரிப்பாளர்களாவர்‌. (இப்னு தைமிய்யா: மஜ்மூ௨ல்‌ பதாவா 20-104)

மற்றொரு குறிப்பில்‌ இமாம்‌ இப்னு தைமிய்யா (ரஹ்‌) அவர்கள்‌ கீழ்வருமாறு; குறிப்பிடுகின்‌றார்:
'ஸலபுஸ்‌ ஸாலிஹின்களான ஆரம்பகால அறிஞர்களும்‌, ஏனைய உலமாக்களும்‌ முர்ஜிஆக்களை வன்மையாகக்‌ கண்டித்தும்‌, பித்‌அத்வாதிகள்‌ என விமர்சித்தும்‌ உள்ளனர்‌. எனினும்‌, அவர்களில்‌ எவரும்‌ முர்ஜிஆக்களை இறை நிராகரிப்பாளர்கள்‌ என்று கூறவில்லை. மேலும்‌, 'முர்ஜிஆக்கள்‌ இறைநிராகரிப்பாளர்கள்‌ அல்ல. இறைிசுவாசிகள்தான்‌”. என்பதில்‌ உலமாக்களுக்கிடையே கருத்து முரண்பாடு ஏற்படவும்‌ இல்லை.

முர்ஜிஆக்கள்‌ காஃபிர்களல்ல என்று இமாம்‌ அஹ்மத்‌ பின்‌ ஹம்பல்‌ (ரஹ்‌) அவர்கள்‌ மிகத்‌ தெளிவாகக்‌. கூறியுள்ளார்கள்‌. ஆனால்‌, அதற்கு அவர்களது நூதனமான செயல்கள்‌ இறை நிராகரிப்பை ஏற்படுத்துமா? இல்லையா மாற்றமாக முர்ஜிஆக்கள்‌ இறைநிராகரிப்பாளர்கள்‌ என்பதில்‌ உலமாக்களிடையே கருத்து முரண்பாடுகள்‌ உள்ளன” என இமாம்‌ அஹ்மத்‌ பின்‌ ஹம்பல்‌ (ரஹ்‌) அவர்கள்‌ கூறியுள்ளதாக சிலர்‌ கருத்துத்‌ தெரிவித்துள்ளனர்‌. இக்கருத்து முற்றிலும்‌ தவறாகும்‌.”
(இப்னு தைமிய்யா: மஜ்மூஃ அல்பதாவா: 7-507) (ருஹைலி: மவ்கிபு அஹ்லிஸ்‌ ஸுன்னா 1-151)


நவாஸிப்‌: 

இவர்கள்‌ நபி(ஸல்‌) அவர்களின்‌ குடுபத்தவர்களாகிய பனூஹாஷிம்‌, பனூமுத்தலிப்‌ கோத்திரத்தைச்‌ சார்ந்தவர்களை எதிர்ப்பர்‌. அவர்களைக்‌ குறைகூறி விமர்சனம்‌ செய்வர்‌. அவர்களை ஏசித்‌ திரிவர்‌. இவர்கள்‌ றாபிழாக்களுக்கு நேர்‌ முரணானவர்கள்‌. ஏனெனில்‌, றாபிழாக்கள்‌ நபித்‌ தோழர்களைத்‌ தம்‌ உள்ளத்தால்‌ வெறுத்து, தம்‌ நாவினால்‌ விமர்சிப்பர்‌. ஆனால்‌, நவாஸிப்களோ நபியவர்களின் ‌குடும்பத்தையே வெறுக்கின்றனர்‌. (இப்னு உஸைமீன்‌: ஷரஹ்‌ அல்வாஸிதிய்யா: 2:283).

இஸ்லாமிய வரலாற்றில்‌ தோன்றிய முஃதஸிலாக்கள்‌, ஜஹமியாக்கள்‌, முர்ஜிஆக்கள்‌ போன்று இவர்கள்‌ ஒரு தனிப்பிரிவினர்‌ அல்லர்‌. இவர்களுக்கென்று வேறுபட்ட கொள்கை, கோட்பாடுகள்‌ இல்லை. மாறாக, உமய்யா ஆட்சியின்‌ ஆரம்ப காலத்தில்‌ மேற்கூறப்பட்ட சிந்தனையோடு வாழ்ந்த சில தனி நபர்களே 'நவாஸிப்கள்‌ எனப்படுவர்‌. இதனால்தான்‌ வரலாற்றாசிரியர்கள்‌ யாரும்‌ நவாஸிப்கள்‌ பற்றி விரிவாக எதையும்‌ எழுதவில்லை.

(முற்றும்)
Previous Post Next Post