மீலாதுன் நபி கொண்டாட்டமும் அது குறித்த மார்க்கத்தின் நிலைப்பாடும்

بسم الله الرحمن الرحيم

அல்லாஹுத்தஆலா மனிதர்களை இவ்வுலகில் படைத்ததன் நோக்கம் அவனை வணங்குவதற்கேயாகும். அவன் அல்குர்ஆனிலே பின்வருமாறு கூறுகின்றான்: நான் ஜின்களையும் மனிதர்களையும் என்னை அவர்கள் வணங்குவதற்காகவே அன்றிபடைக்கவில்லை.

-     அத்தாரியாத்: 56

ஆகவே, ஓர் அடியான் இபாதத்களைச் செய்வதன் மூலம் அல்லாஹ்வுடைய திருப்பொருத்தத்தை அவன் அடைந்து கொள்கின்றான்.

வணக்கம் என்பதை நாம் விரும்பியவாறு செய்ய முடியாது. மாறாக அல்லாஹ்வும் அவனது தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் காட்டித்தந்த பிரகாரமே நாம் செய்யும் வணக்க வழிபாடுகள் அமையப்பெற்றிருக்க வேண்டும்.

யார் எமது மார்க்கத்தில் இல்லாத ஒரு செயலைச் செய்கிறாரோ அது நிராகரிக்கப்பட்டதாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

-     புஹாரீ, முஸ்லிம்

ஆனால், இன்று அதிகமான மனிதர்கள் வணக்கம் என்ற பெயரில் அதிகமான பித்அத்களை உருவாக்கியுள்ளார்கள். அவற்றில் ஒன்றே அதிகமானவர்களால் கொண்டாடப்படக்கூடிய மீலாதுன் நபி கொண்டாட்டமாகும்.

ஆகவே, இந்தக் கொண்டாட்டம் குறித்து மார்க்கத்தின் நிலைப்பாடு என்ன? என்பதைப் பற்றி உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என ஆசைப்படுகின்றோம்.

1.    முஸ்லிம்களுக்கு மார்க்க அடிப்படையில் கொண்டாடுவதற்கு அனுமதிக்கப்பட்ட தினங்கள் எவை?

மார்க்க அடிப்படையில் முஸ்லிம்களுக்கு மூன்று பெருநாட்கள் மாத்திரமே காணப்படுகின்றன. நான்காவதாக ஒரு நாளைக் கொண்டாடுவதற்கு எவ்வித ஆதாரமும் காணப்படவில்லை.

முதலாவது நாள்: வெள்ளிக்கிழமை தினம்.

ஆதாரம்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் கூறினார்கள்: நிச்சயமாக இது அல்லாஹ் முஸ்லிம்களுக்கு ஏற்படுத்திய ஒரு பெருநாள் தினமாகும். எனவே, யார் ஜும்ஆவுக்கு வருகின்றாரோ அவர் குளித்துக் கொள்ளட்டும்.

-     ஸஹீஹ் இப்னுமாஜா

இரண்டாவது மற்றும் மூன்றாவது நாட்கள்: நோன்புப் பெருநாளும் ஹஜ்ஜுப் பெருநாளுமாகும்.

ஆதாரம்: அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவுக்கு வந்தார்கள். மக்களுக்கு விளையாடக்கூடிய இரண்டு நாட்கள் இருந்தன. அதற்கு அவர்கள் இந்த இரண்டு தினங்களும் என்ன? என்று வினவினார்கள். அதற்கு அம்மக்கள் ஜாஹிலிய்யாக் காலத்தில் நாம் இவ்விருதினங்களிலும் விளையாடக்கூடியவர்களாக இருந்தோம் எனக் கூறினார்கள். அதற்கு நிச்சயமாக அல்லாஹ் இவ்விரண்டு தினங்களுக்குப் பகரமாக இவ்விரண்டைவிடவும் சிறந்த வேறொன்றை உங்களுக்குப் பகரமாக்கியுள்ளான். அவைகள் தான் ஹஜ்ஜுப் பெருநாளும் நோன்புப் பெருநாளுமாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

- ஸஹீஹ் அபீதாவூத்

2.    பிறந்த நாள் கொண்டாடுவது குறித்து மார்க்கத் தீர்ப்பு என்ன?

எவருடைய பிறந்தநாளாக இருந்தாலும் அத்தினத்தைக் கொண்டாடுவது பித்அத்தாகும். இதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. மேலும், இவ்வாறு பிறந்த நாள் கொண்டாடுவது யஹூதிகளுக்கும் நஸாராக்களுக்கும் ஒப்பான ஒரு செயலாகும். நபிமார்களுடைய பிறந்த நாளாக இருந்தாலும் அதனை எமக்கு கொண்டாட முடியாது. அது எமது இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிறந்த தினமாக இருந்தாலும் சரியே! யார் வணக்கம் என்ற அடிப்படையில் பிறந்த நாளைக் கொண்டாடுகிறாரோ அது பித்அத்தாகும். யார் நல்ல விடயம் எனக்கருதி இதனைக் கொண்டாடுகிறாரோ அது யஹூதிகளுக்கும் நஸாராக்களுக்கும் ஒப்பான ஒரு செயலாகும்.

3.    மீலாதுன் நபி கொண்டாட்டம் எப்பொழுது உருவாகியது?

முதலாவதாக இந்த பித்அத்தை உருவாக்கியவர்கள் நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த பாதிமிய்யூன்களாவார்கள். இவர்கள் அடிப்படையில் யஹூதிகளைச் சார்ந்தவர்களாவார்கள். இவர்களில் அல்முஇஸ் லிதீனில்லாஹ் அல்அபீதீ அல்மங்ரிபீ என்பவனே முதலாவதாக இதனை உருவாக்கினான். ஹிஜ்ரி 361ம் ஆண்டு ஷவ்வால் மாதம் மொரோக்கோவில் இருந்து இவன் எகிப்திற்கு புறப்பட்டான். ஹிஜ்ரி 362ம் ஆண்டு எகிப்தை வந்தடைந்த இவன் அங்கு இந்த பித்அத்தை உருவாக்கினான்.

4.    நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்தது ரபீஉல் அவ்வல் பிறை       12 இலா?

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த தினம் ரபீஉல் அவ்வல் பிறை 12 என்பது உறுதியான ஒரு தகவல் அல்ல. மாறாக சில வரலாற்றாசிரியர்கள் அத்தினம் பிறை 9 இலாகும் என உறுதிப்படுத்தியுள்ளார்கள். இன்னும் சிலர் பிறை 8 இல் என்றும் இன்னும் சிலர் பிறை 10 இல் என்றும் கூறியுள்ளார்கள். வரலாற்றாசிரியர்களுக்கு மத்தியில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்தது எத்தினம் என்பதில் சுமார் ஏழு கருத்துக்கள் காணப்படுகின்றன. ஆகவே, வரலாற்று அடிப்படையில் இது உறுதியான ஒரு விடயம் அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

5.    மீலாத் விழா கொண்டாடுவது எவ்வாறு மார்க்கத்திற்கு முரணாக அமைகிறது?

மீலாத் விழா கொண்டாடுவது பலவகைகளிலும் மார்க்கத்திற்கு முரண்படுகின்றது. அவைகளில் சிலவற்றை நான் இங்கு குறிப்பிட்டுள்ளேன்.

1.    நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது பிறப்பைக் கொண்டாடுவது எந்தவித ஆதாரமும் இல்லாத ஒரு பித்அத்தாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: யார் எமது மார்க்கத்தில் இல்லாத ஒரு செயலைச் செய்கிறாரோ அது மார்க்கத்தில் நிராகரிக்கப்பட்டதாகும்.

-     புஹாரீ, முஸ்லிம்

அவர்கள் அவருடைய பிறந்த தினத்தை கொண்டாடுவதற்கு கட்டளை பிறப்பிக்கவுமில்லை, அவர்கள் அதனை நடைமுறைப்படுத்தவுமில்லை, அதனை அங்கீகரிக்கவுமில்லை.

மேலும், நேர்வழிபெற்ற நான்கு கலீபாக்களும் இத்தினத்தைக் கொண்டாடவில்லை. என்னுடைய வழிமுறையையும் நேர்வழிபெற்ற கலீபாக்களின் வழிமுறையையும் நீங்கள் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

- அபூதாவூத்

ஆகவே, இத்தினத்தைக் கொண்டாடுவதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது வழிமுறையிலும் ஸஹாபாக்களின் வழிமுறையிலும் எந்தவித ஆதாரத்தையும் நாம் காணமுடியாது. ஸஹாபாக்களுக்கு மார்க்கமாக இல்லாத ஒரு விடயம் எமக்கு மார்க்கமாக அமையாது.

2.    மீலாத் விழா கொண்டாடுவது வழிகெட்டவர்கள் உருவாக்கிய ஒன்றாகும். இந்த பித்அத்தை உருவாக்கியவர்கள் யார் என்பதை முன்பு குறிப்பிட்டிருக்கின்றேன். ஆகவே, இத்தினத்தை கொண்டாடுபவர்கள் அந்த வழிகெட்ட யஹூதிகளின் வழிமுறையையே பின்பற்றுகின்றார்கள் என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம். நான்காவது நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட இந்த பித்அத் பின்பு மறைக்கப்பட்டது. பின்பு ஏழாவது நூற்றாண்டில் ஈராக்கின் இர்பல் என்ற பிரதேசத்தின் அரசன் மீண்டும் இத்தினத்தை ஆடம்பரமாகக் கொண்டாடினான்.

3.    மீலாத் விழாவை கொண்டாடுபவர்கள் அவர்களை அறியாமலேயே பின்வரும் வசனத்தை பொய்ப்பிக்கின்றார்கள். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: இன்றைய தினம் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை நான் பரிபூரணப்படுத்திவிட்டேன்.

-     அல்மாஇதா: 3

மீலாத் கொண்டாட்டத்தை மார்க்கமாகக் கருதுபவர்கள் உண்மையிலேயே அவர்களை அறியாமலேயே இந்த வசனத்தைப் பொய்ப்பிக்கின்றார்கள். அல்லாஹ் மார்க்கத்தை பூர்த்தியாக்கிவிட்டான் என்பதை மேற்குறிப்பிடப்பட்ட வசனம் தெளிவுபடுத்துகின்றது. எனவே, பூர்த்தியாக்கப்பட்ட இம்மார்க்கத்தில் நபி பிறப்பைக் கொண்டாடுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

நபி பிறப்பைக் கொண்டாடுபவர்களிடம் நபி பிறப்பைக் கொண்டாடுவது மார்க்கத்தில் உள்ள ஓர் அம்சம் என்பது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குத் தெரியுமா? என்று கேளுங்கள். அதற்கவர்கள் ஆம் அல்லது இல்லை என்று கூறுவார்கள்.

அவர்கள் ஆம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அவருடைய பிறப்பைக் கொண்டாடுவது மார்க்கத்தில் உள்ளது என்பது தெரியும் என அவர்கள் கூறினால் அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மோசடியைக் கொண்டும் அறிவை மறைத்த குற்றத்தைக் கொண்டும் அவதூறு கூறிவிட்டார்கள். ஏனென்றால், இது மார்க்கத்தில் உள்ள ஓர் அம்சமாக இருந்தால் அதனை உம்மத்திற்கு அவர்கள் தெளிவுபடுத்தியிருப்பார்கள்.

அல்லது, அவர்கள் இல்லை. அவர்களுக்கு அவருடைய பிறப்பைக் கொண்டாடுவது மார்க்கத்தில் உள்ளது என்பது தெரியாது என அவர்கள் கூறினால் அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மடமையைக் கொண்டு வர்ணித்துவிட்டார்கள்.

ஆகவே, இது போன்ற கேள்விகளை முன்வைத்து அவர்களுடைய பித்அத்தை நாம் பித்அத் என்று நிரூபிக்கலாம்.

4.    நபி பிறப்பைக் கொண்டாடுவது நஸாராக்களுக்கு ஒப்பான ஒரு செயலாகும். ஏனென்றால், அவர்கள் அவர்களுடைய நபியாகக் கருதக்கூடிய ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிறந்த தினத்தை டிசம்பர் மாதம் 25ம் திகதி ஒவ்வொரு வருடமும் கொண்டாடுகின்றார்கள். அதேபோன்று யார் நபி பிறப்பைக் கொண்டாடுகின்றாரோ அவரும் அந்த நஸாராக்களுக்கு ஒப்பாகிவிட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு கூட்டத்திற்கு ஒப்பாகுவதைத் தடை செய்துள்ளார்கள்.

அவர்கள் ஒருமுறை கூறினார்கள்: நீங்கள் உங்களுக்கு முன்னால் இருந்தவர்களின் வழிமுறைகளை சாண் சாணாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கென்றால் அவர்கள் ஒரு உடும்புப் பொந்திற்குள் நுழைந்தால் நீங்களும் நுழைந்து விடுவீர்கள் அப்போது ஸஹாபாக்கள், அவர்கள் யஹூதிகளும் நஸாராக்களுமா? எனக் கேட்டார்கள். அதற்கவர்கள் அவர்களாக இருக்காவிட்டால் வேறுயாராக இருக்க முடியும்? என பதிலளித்தார்கள்.

-     புஹாரீ

இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யஹூதி, நஸாராக்களைப் பின்பற்றுவதைவிட்டும் தனது உம்மத்தைக் கடுமையாக எச்சரித்திருக்கின்றார்கள்.

5.    நபி பிறப்பைக் கொண்டாடுவது மார்க்கத்திற்கு முரணான பல அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.

முதலாவது: அதிகமான கஸீதாக்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எல்லை மீறிப் புகழ்ந்தவர்களாகப் பாடுகின்றார்கள். நஸாராக்கள் மர்யம் அலைஹஸ்ஸலாம் அவர்களின் மகனை எல்லை மீறிப் புகழ்ந்ததைப் போன்று என்னையும் நீங்கள் எல்லை மீறிப் புகழாதீர்கள். நான் அவனுடைய அடியானே. எனவே, நீங்கள் அல்லாஹ்வின் அடியான் என்றும் அவனுடைய தூதர் என்றும் கூறுங்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

-     புஹாரீ

இரண்டாவதாக: ஆண் பெண் கலப்பு, இசை நிகழ்ச்சி, மது அருந்துதல், புகைத்தல், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கொண்டு உதவி தேடுதல், வீண் விரயம் இது போன்ற இன்னும் பல அனாச்சாரங்கள் இந்த மீலாத் விழாவில் இடம்பெறுகின்றன.

முன்றாவதாக: இவர்களுடைய விழாவுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வருகை தருவதாக சிலர் நம்பிக்கை கொண்டுள்ளனர். அதன் காரணமாக அவருடைய பிறப்பைக் கூறும்போது அவர்கள் எழுந்து நிற்கின்றார்கள். உண்மையிலேயே அவர்கள் மறுமை நாளில் தான் எழுப்பப்படுவார்கள் என்ற அடிப்படை விடயத்தைக் கூட அறியாதவர்களாக இவர்கள் இருக்கின்றார்கள்.

எனவே, இந்த பித்அத்தைவிட்டு நாமனைவரும் தூரமாகி சிறந்த முஸ்லிம்களாக வாழ்வதற்கு எமக்கும் உங்களுக்கும் வல்ல அல்லாஹ் நல்லருள் பாலிப்பானாக!

- அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்
Previous Post Next Post