உண்மையான ஆலிம்களின் அடையாளங்கள்

بسم الله الرحمن الرحيم

மார்க்கத்தைப் படித்து அதனை மக்களுக்கு மத்தியில் எத்திவைப்பவர்கள் ஆலிம்கள் எனப்படுகின்றனர். இந்த ஆலிம்கள் மகத்தான இரண்டு பணிகளில் ஈடுபடுகின்றனர். முதலாவது அவர்கள் அல்லாஹ்வுடைய மார்க்கத்தைப் பாதுகாக்கின்றனர். அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனில் கூறுகின்றான்: நிச்சயமாக நாங்களே இந்த திக்ரான குர்ஆனை இறக்கி வைத்தோம். நாமே அதனை பாதுகாப்போம்.
-     அல்ஹிஜ்ர்: 9

இந்த வசனத்தில் அல்லாஹ் அல்குர்ஆனைப் பாதுகாப்பதாக வாக்களித்துள்ளான். அவன் பல வழிமுறைகளில் இந்தக் குர்ஆனைப் பாதுகாக்கின்றான். அவைகளில் ஒன்றே தீனைச் சுமந்த ஆலிம்களைக் கொண்டு அவன் இந்த குர்ஆனைப் பாதுகாக்கின்றான். எனவே, ஆலிம்கள் மகத்தான ஒரு பணியில் ஈடுபடக்கூடியவர்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

அவர்கள் மேற்கொள்ளக்கூடிய இரண்டாவது பணி நபிமார்கள் விட்டுச்சென்ற அழைப்புப் பணியை மறுமை நாள் வரைக்கும் தொடர்ந்து மேற்கொள்வதாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஆலிம்கள் நபிமார்களின் வாரிசுகளாவர். அவர்கள் தீனாரையோ திர்ஹத்தையோ அனந்தரச் சொத்தாக விட்டுச் செல்லவில்லை. மாறாக அவர்கள் அறிவையே அனந்தரச் சொத்தாக விட்டுச் சென்றுள்ளார்கள். எனவே, யார் அதை எடுத்துக்கொள்கிறாரோ அவர் நிரப்பமான ஒரு பங்கை எடுத்துவிட்டார்.
-     அபூதாவூத், அத்திர்மிதீ

நபிமார்கள் விட்டுச் சென்ற அந்த அறிவைச் சுமந்து அதனை மக்களுக்கு மத்தியில் பிரச்சாரம் செய்கின்ற ஒரு பொறுப்பை ஆலிம்கள் மேற்கொள்கின்றார்கள் என்பதை நாம் இந்த ஹதீஸிலிருந்து புரிந்துகொள்ளலாம். ஆகவே, மகத்தான இரு பணியை ஆலிம்கள் மேற்கொள்கின்றார்கள் என்பதை ஆலிம்கள் மறந்துவிடக்கூடாது.

அல்குர்ஆனையும் அஸ்ஸுன்னாவையும் நாம் பார்க்கின்றபோது ஆலிம்களுக்கென பல சிறப்புக்கள் கூறப்பட்டிருப்பதை நாம் கண்டு கொள்ளலாம். ஆனால், கவலைக்;குரிய விடயம் என்னவென்றால் ஆலிம்களின் சிறப்பைத் தெரிந்து வைக்கின்ற அதிகமானவர்கள் ஆலிம்களை எவ்வாறு அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்பதை அறியாமல் இருக்கின்றனர்.

அதிகமான முஸ்லிம்கள் ஆலிம்களை அடையாளம் கண்டுகொள்வதற்காக வேண்டி அவர்களுக்கென்று சில அடையாளங்களை உருவாக்கி அந்த அடிப்படையில் ஆலிம்களை தெரிந்து கொள்வதற்கு முற்படுகின்றனர். அந்த அடிப்படையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அடையாளத்தை வைத்து ஆலிம்களை அடையாளம் காண்கின்றனர்.

சிலர் பேச்சுத்திறமையுள்ளவர்களை உண்மையான ஆலிம்கள் என்று கருதுகின்றனர். ஒரு சிலர் மிம்பர்களிலும் பேச்சு மேடைகளிலும் கம்பீரமாகப் பேசுவார்களாயின் அவர்களது பேச்சில் கவர்ச்சி கொண்ட அதிகமானவர்கள் அவர்களை உண்மையான ஆலிம்கள் என்று நம்புகின்றனர். ஆனால், அந்த ஆலிம்கள் அல்குர்ஆனுக்கும் அஸ்ஸுன்னாவுக்கும் முரணாகப் பல இடங்களில் பேசியிருப்பார்கள் என்பதை யாரும் கவனத்தில் கொள்வதில்லை. பேச்சுத்திறமையை வைத்தே உண்மையான ஆலிம்களைத் தெரிந்து கொள்ளலாம் எனக்கூறுவது மிகவும் தவறான ஒன்றாகும்.

உண்மையில் குத்பாப் பிரசங்கத்திற்கு கம்பீரமான பேச்சுடையவர்களை அதிகமானவர்கள் எதிர்பார்க்கின்றனர். அதிகமானவர்களின் பேச்சு கம்பீரமானதாகக் காணப்படும். அவர்கள் சுன்னாவுக்கு மாற்றமாக குத்பாப் பிரசங்கத்தை நீட்டுவார்கள். ஆனால், மக்களிடம் அவருடைய பேச்சுத்திறமை காரணமாக அவர் ஓர் ஆலிம் என்று கண்டுகொள்ளப்படுவார்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்: நிச்சயமாக நீங்கள் தொழுகையை நீட்டுவதும் குத்பாவைச் சுருக்குவதுமான ஒரு காலத்தில் இருக்கின்றீர்கள். இக்காலத்தில் ஆலிம்கள் அதிகமாகவும் பேச்சாளர்கள் குறைவாகவும் இருக்கின்றார்கள். மேலும், மக்கள் மத்தியில் ஒரு காலம் வரும். அக்காலத்தில் தொழுகை சுருக்கமாகவும் குத்பா நீளமாகவும் இருக்கும். அக்காலத்தில் பேச்சாளர்கள் அதிகமாகவும் ஆலிம்கள் குறைவாகவும் இருப்பார்கள்.
-     ஸஹீஹு அதபில் முப்ரத்

இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் குறிப்பிட்ட காலம் தற்போதைய காலம் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். அதிகமான பள்ளிவாசல்களில் குத்பாப் பிரசங்கத்தை நீட்டுகின்றார்கள். தொழுகையை சுருக்கி விடுகின்றார்கள்.

இன்னும் சிலர் அனைத்து கேள்விகளுக்கும் விடையளிப்பவர்களே உண்மையான ஆலிம்கள் என்று கருதுகின்றனர். ஓர் ஆலிமுக்கு ஒரு கேள்விக்கான விடை தெரியாவிட்டால் அவர் ஒரு ஆலிம் அல்ல என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றனர்.

இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் ஒரு மனிதர் நாற்பது கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு கூறினார்கள். இமாமவர்கள் நான்கு கேள்விகளுக்கு மாத்திரமே பதிலளித்தார்கள். ஏனைய அனைத்துக் கேள்விகளுக்குமான விடைகள் அவருக்குத் தெரியாது என்று கூறினார்கள். அதற்கு அந்த மனிதர்: நான் தூரமான ஓர் இடத்திலிருந்து வந்திருக்கின்றேன். எனவே, நான் மனிதர்களுக்கு என்ன கூறுவது? எனக்கேட்டார். அதற்கு இமாமவர்கள்: நான் மாலிகிடம் கேட்டேன். அதற்கு அவர் எனக்குத் தெரியாது எனக்கூறினார் என்று நீ கூறிவிடு என்றார்கள்.

ஆகவே, அனைத்து விடயங்களையும் தெரிந்து வைத்திருப்பது ஆலிம்களின் அடையாளமல்ல என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

இன்னும் சிலர் முப்தீ, அல்உஸ்தாத், அஷ்ஷெய்ஹ், அல்அல்லாமா போன்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றவர்களை அவர்களுடைய பட்டத்தை வைத்து ஆலிம்கள் என்று கருதுகின்றனர். அல்குர்ஆன் மற்றும் அஸ்ஸுன்னாவின்படி அவர்களின் அழைப்புப்பணிகள் காணப்படுகின்றதா என்பதை அவர்கள் அறிய முற்படமாட்டார்கள். பெரும் பட்டங்களும் பதவிகளும் ஆலிம்களின் அடையாளங்கள் அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்னும் சிலர் யாரிடத்தில் அதிகமான புத்தகங்கள் உள்ள வாசிகசாலை இருக்கின்றதோ அவரை உண்மையான ஆலிம் எனக் கருதுகின்றனர். அதிகமான புத்தகங்களை வைத்து ஆலிம்களை அடையாளம் காணக்கூடாது. மாறாக அப்புத்தகங்களில் உள்ளவற்றை அவர்கள் நடைமுறைப்படுத்துகின்றார்களா? என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

இமாம் பர்பஹாரீ ரஹிமஹுல்லாஹ் கூறுகின்றார்: அதிகமான புத்தகங்களை வைத்திருப்பது உண்மையான அறிவல்ல. மாறாக, குறைவான புத்தகங்கள் இருந்தும் சுன்னாவைப் பின்பற்றுபவரே ஆலிமாவார். யார் குர்ஆனுக்கும் ஸுன்னாவுக்கும் மாறுசெய்கிறாரோ அவரிடம் அதிகமான புத்தகங்கள் காணப்படுமாயினும் அவர் பித்அத்வாதியாவார்.

இன்னும் சிலர் யாராவது ஒரு மத்ரஸாவில் அல்லது ஒரு இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் அறிவைக் கற்றால் அவரை ஆலிம் என்று கருதுகின்றனர். அவர் எந்த மத்ரஸாவில் படித்தார், எவரிடமிருந்து அறிவைப் பெற்றுள்ளார் என்பதை அறிய முற்படமாட்டார்கள்.

அஹ்லுஸ்ஸுன்னாவைச் சார்ந்தவர்களைத் தவிர ஏனையவர்களிடம் அறிவைப் பெற்றுக்கொள்ள முடியாது. இமாம் இப்னு ஸீரீன் ரஹிமஹுல்லாஹ் கூறுகின்றார்: நிச்சயமாக இந்த அறிவு மார்க்கமாகும். எனவே, உங்களுடைய தீனை நீங்கள் யாரிடமிருந்து எடுக்கின்றீர்கள் என்பதைப் பார்த்துக்கொள்ளுங்கள்.
-     முஸ்லிம் கிரந்தத்தின் முன்னுரை

இன்னும் பலர் தங்களுக்கு சார்பாக பத்வா வழங்கக்கூடியவர்களை மாத்திரம் ஆலிம்கள் என்று கருதுகின்றனர். அவர்களுக்குப் பாதகமாக பத்வா வழங்குபவர்களை தட்டிவிடுகின்றனர். மேலும், தனக்கு சார்பாக பத்வா வழங்குபவர்களை நாடிச்செல்கின்றனர்.

இதுபோன்ற இன்னும் பல அடையாளங்களை வைத்துக்கொண்டு தவறான நிலைப்பாட்டில் இருக்கின்றவர்களையெல்லாம் ஆலிம்கள் என்று மக்கள் இனம்கண்டு கொள்கின்றார்கள்.

அல்குர்ஆனும் அஸ்ஸுன்னாவும் உண்மையான ஆலிம்களின் அடையாளங்களை எங்களுக்கு விவரிக்கின்றன. உண்மையான ஆலிம்களை இனங்காண்பதற்காக வேண்டி அல்குர்ஆனும் அஸ்ஸுன்னாவும் கூறும் அடையாளங்களில் சிலவற்றை நான் இங்கு கூறுகின்றேன். அவைகளைக் கருத்தில் கொண்டு உண்மையான ஆலிம்களை இனம்கண்டு அவர்களிடம் அறிவைத் தேடிச்செல்ல நாம் முயற்சிக்க வேண்டும்.

முதலாவது அடையாளம்

ஆலிம்கள் எப்பொழுதும் அல்லாஹ்வை மாத்திரம் அஞ்சக்கூடியவர்களாக இருப்பார்கள். ஏனென்றால், அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அல்லாஹ்வை அவனுடைய அடியார்களில் அதிகம் அஞ்சக்கூடியவர்கள் ஆலிம்களாவார்கள். -     அல்பாதிர்: 28

உண்மையான ஆலிம்கள் அல்லாஹ்வை அஞ்சுபவர்களாக இருப்பார்கள் என்பதை இவ்வசனம் குறிப்பிடுகின்றது. ஆலிம்கள் அதிகமாக அல்லாஹ்வைப்பற்றி அறிந்து வைத்திருக்கின்றார்கள், அவனுடைய சுவனம் மற்றும் நரகத்தைப்பற்றி அறிந்து வைத்திருக்கின்றார்கள். அதனாலேயே அவர்கள் அல்லாஹ்வை அஞ்சுபவர்களாக இருக்கின்றார்கள்.

இன்று அதிகமான ஆலிம்கள் அல்லாஹ்வை அஞ்சாமல் இஸ்லாமிய அகீதாவிற்கு மாற்றமான வழிகேடர்களின் கொள்கைகளை மக்களுக்கு மத்தியில் பரப்புகின்றனர். அல்லாஹ்வை அஞ்சாமல் சத்தியத்தைத் தெரிந்தும் மக்களுக்கு அதனை மறைக்கின்றார்கள். அல்லாஹ்வை அஞ்சாமல் வியாபார நடவடிக்கைகளில் மோசடி செய்கின்றார்கள். அல்லாஹ்வை அஞ்சாமல் பெண்கள் விடயத்தில் மோசமான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள். இவ்வாறு ஒரு பட்டியலையே நாம் கூறலாம்.

எனவே, சமூகத்திற்கு முன்மாதிரியாகத் திகழக்கூடிய ஆலிம்கள் எப்பொழுதும் அல்லாஹ்வை அஞ்சுபவர்களா இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களிடமிருந்து மக்களுக்கு அல்லாஹ் பிரயோசனத்தை ஏற்படுத்துவான்.

இரண்டாவது அடையாளம்

ஆலிம்கள் அல்குர்ஆன் மற்றும் அஸ்ஸுன்னாவின் ஆதாரங்களைவிட தன் சுய புத்தியையும் ஏனைய மனிதர்களின் அபிப்ராயங்களையும் முற்படுத்தமாட்டார்கள்.

ஏனென்றால், அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: விசுவாசம் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மத்தியில் முந்திச் செல்லாதீர்கள். -     அல்ஹுஜுராத்: 1

மேலும், அவன் கூறுகின்றான்: அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தில் முடிவுசெய்துவிட்டால் தமது காரியத்தில் சுய அபிப்பிராயம் கொள்வதற்கு எந்த முஃமினான ஆணுக்கும் முஃமினான பெண்ணுக்கும் உரிமையில்லை. -     அல்அஹ்ஸாப்: 36

ஆகவே, உண்மையான ஆலிம்கள் இந்த இரு வசனங்களுக்கும் இதுபோன்ற ஏனைய வசனங்களுக்கும் கட்டுப்பட்டவர்களாக மார்க்க விடயங்களில் மக்களுக்கு பத்வா வழங்கும்போது அல்குர்ஆன் மற்றும் அஸ்ஸுன்னா அடிப்படையிலேயே அவர்கள் செயற்படுவார்கள். இவ்விரண்டிற்கும் முரணாக உள்ள எவருடைய தீர்ப்பையும் அவர்கள் சரி காணமாட்டார்கள்.

ஆனால், இன்று ஆலிம்கள் என்ற பெயரில் மக்களுக்கு மத்தியில் பிரச்சாரம் செய்யும் அதிகமானவர்கள் இந்த அடிப்படையை வைத்து அவர்களது அழைப்புப் பிரச்சாரத்தை மேற்கொள்ளாததால் மக்களுக்கு மத்தியில் வழிகேட்டையும் அசத்தியத்தையும் பரப்பி வருகின்றனர். மேலும், ஊரின் கண்ணியத்தையும் ஊர் வழமையையும் மூதாதையர்களின் வழிமுறையையும் முற்படுத்தி ஸுன்னாவை மறைக்கின்றவர்களையும் அதிகமாக இந்த சமூகத்தில் நாம் காணலாம். இது உண்மையான ஆலிம்களின் பண்பல்ல என்பதை மேற்குறிப்பிடப்பட்ட இரு வசனங்களும் தெளிவுபடுத்துகின்றன.

மூன்றாவது அடையாளம்

உண்மையான ஆலிம்கள் அவர்கள் மக்களுக்கு அறிவித்துக் கொடுக்கும் நல்ல விடயங்களையெல்லாம் அவர்களும் தங்களது வாழ்வில் நடைமுறைப்படுத்துவார்கள். மக்களுக்கு தடுத்த விடயங்களை அவர்களும் தவிர்ந்து கொள்வார்கள். இது உண்மையான ஆலிம்களின் பண்புகள் மாத்திரமின்றி நபிமார்களின் வழிமுறையுமாகும். நபிமார்கள் ஷிர்க்கை விட்டும் மக்களை எச்சரித்தார்கள். அவர்களும் அந்த ஷிர்க்கைச் செய்யவில்லை.

ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தமது கூட்டத்தாரிடம் பின்வருமாறு கூறினார்கள்: நான் எதை விட்டும் உங்களைத் தடுத்தேனோ அது விடயத்தில் உங்களுக்கு மாற்றம் செய்தவற்கு நான் விரும்பவில்லை. -     ஹூத்: 88

மக்களுக்குத் நபிமார்கள் தடுக்கும் விடயங்களை அவர்களும் தவிர்ந்து கொண்டார்கள் என்பதை இவ்வசனம் தெளிவுபடுத்துகின்றது. எனவே, அந்நபிமார்களின் வாரிசுகளாகிய ஆலிம்களும் இப்பண்பை உடையவர்களாக மாற வேண்டும்.

இன்று அதிகமான ஆலிம்கள் குத்பாப் பிரசங்கத்தில் தொழுகைகளைப்பற்றி உரையாற்றுகின்றார்கள். ஆனால், அவர்களை அஸர் தொழுகைக்கு காணமுடியாத ஒரு நிலை ஏற்படுகின்றது. வட்டி, களவு, பொய், ஏமாற்றுதல் போன்ற தீமைகளை மக்களுக்;கு எச்சரிக்கை செய்வார்கள். ஆனால் அவர்களுடைய வாழ்வில் இத்தீமைகள் அதிகமாகக் காணப்படுகின்றன.

அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்: விசுவாசம் கொண்டவர்களே! நீங்கள் செய்யாதவற்றை - பிறருக்கு செய்யுமாறு - ஏன் கூறுகின்றீர்கள். நீங்கள் செய்யாதவற்றை பிறருக்கு செய்யுமாறு கூறுவது அல்லாஹ்விடத்தில் வெறுப்பால் பெரிதாகிவிட்டது. -     அஸ்ஸப்: 1,2

பிறருக்கு நன்மையை ஏவக்கூடியவர்கள் தன் வாழ்வில் அதனை நடைமுறைப்படுத்த முயற்சிக்க வேண்டும். இல்லாவிடின் அல்லாஹ்வால் வெறுக்கப்பட்ட ஒருவராக அவர் கணிக்கப்படுகின்றார் என்பதை இவ்வசனம் தெளிவுபடுத்துகின்றது.

மேலும், அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நீங்கள் உங்களையே மறந்த நிலையில் மனிதர்களுக்கு நீங்கள் நன்மையை ஏவுகின்றீர்களா? நீங்களோ வேதத்தை ஓதிக்கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் சிந்தனை பெறமாட்டீர்களா? -     அல்பகறா: 44

எனவே, ஆலிம்களே! பிறருக்கு ஏவுகின்றவற்றை நீங்களும் உங்களது வாழ்வில் கடைபிடியுங்கள். பிறருக்கு தடுக்கின்றவற்றை நீங்களும் தவிர்ந்து கொள்ளுங்கள்.

நான்காவது அடையாளம்

உண்மையான ஆலிம்கள் அசத்தியம் மக்களுக்கு மத்தியில் பரப்பப்படும்போது வாய்மூடி இருக்க மாட்டார்கள். மாறாக, அதனை எதிர்ப்பார்கள். அந்த அசத்தியத்தை மக்களுக்கு மத்தியில் பரப்பியவர்களுக்கு மறுப்புத் தெரிவிப்பார்கள்.

நபிமார்கள் தமது சமுதாயத்தில் ஷிர்க்கை கண்டபோது அதனை எதிர்த்தார்கள். அந்த ஷிர்க்கைச் செய்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்கள்.

நபி லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது கூட்டத்தினரிடம் ஓரினச் சேர்க்கை எனும் மோசமான செயலைக் கண்ட போது அதனை எதிர்த்தார்கள். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: லூத்தையும் - நாம் தூதராக அனுப்பினோம் - அவர் தனது சமூகத்தாரிடம் அகிலத்தாரில் உங்களுக்கு முன்னர் எவரும் செய்யாத மானக்கேடானதை நீங்கள் செய்து கொண்டிருக்கின்றீர்களா? என்று கூறியதை - நபியே! நீர் எண்ணிப் பார்ப்பீராக! -     அல்அஃராப்: 80,81

அளவு நிறுவையில் மோசடி செய்யக்கூடியவர்களாகத் தனது கூட்டத்தைக் கண்ட ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவர்களை எச்சரித்தார்கள். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: மத்யன் வாசிகளுக்கு அவர்களது சகோதரர் ஷுஐபை - த் தூதராக அனுப்பினோம் - அவர் எனது சமூகத்தினரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள். அவனையன்றி  - உண்மையாக - வணங்கப்படத் தகுதியானவன் உங்களுக்கு வேறு யாரும் இல்லை. உங்கள் இரட்சகனிடமிருந்து தெளிவான சான்று நிச்சயமாக உங்களிடம் வந்துவிட்டது. எனவே, அளவையையும் நிறுவையையும் முழுமையாக நிறைவேற்றுங்கள். மனிதர்களுக்கு அவர்களின் பொருட்களை குறைத்து விடாதீர்கள். பூமியில் சீர்திருத்தம் ஏற்பட்ட பின்னர் அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள். நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் இதுதான் உங்களுக்கு மிகச் சிறந்ததாகும்.
-     அல்அஃராப்: 85

மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அசத்தியமான விடயங்களைக் காணும்போது அது குறித்து மௌனம் சாய்க்கவில்லை. இடது கையால் சாப்பிட்டுக்கொண்டிருந்த மனிதனை கண்டித்தார்கள். உண்ணாமல், தூங்காமல், திருமணம் முடிக்காமல் முழுமையாக வணக்க வழிபாடுகளில் ஈடுபட ஆயத்தமான ஸஹாபாக்களை கண்டித்தார்கள். தனது விருப்பத்திற்குரிய மனைவியாகிய ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களைக்கூட பல இடங்களில் கண்டித்திருக்கின்றார்கள்.

யஹூதிகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் வந்து அஸ்ஸாமு அலைக்கும் - உங்கள் மீது நாசம் உண்டாகட்டும் - என்று கூறினார்கள். அப்போது ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் உங்கள் மீதும் நாசம் உண்டாகட்டும், இன்னும் அல்லாஹ் உங்களை சபிப்பானாக, உங்கள் மீது கோபப்படுவானாக என்று கூறினார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிஷாவே நிதானமாக செயற்படுங்கள். மென்மையைப் பற்றிப்பிடியுங்கள். கலவரத்தையும் மோசமானவற்றையும் நான் உங்களுக்கு எச்சரிக்கின்றேன் என்றார்கள். -     புஹாரீ

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் ஒரு முறை ஸபிய்யா ரழியல்லாஹு அன்ஹா அவர்களை குட்டையானவள் என்று வர்ணித்தார்கள். அவர்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டிக்கும் முகமாக: நீ ஒரு வார்த்தையை மொழிந்தாய் அது கடல் நீருடன் கலக்கப்பட்டால்; கலந்து விடக்கூடியதாக இருக்கும் என்று கூறினார்கள். -     ஸஹீஹுத் திர்மிதீ

ஆகவே, நபிமார்கள் அசத்தியத்தைக் காணும் போது அதனை மறுத்துரைத்துள்ளார்கள் என்பதை இவ்வாதாரங்கள் தெளிவுபடுத்துகின்றன. அசத்தியத்தில் ஈடுபடுபவர்கள் தங்களது உறவினர்களாக இருந்தாலும் சரியே! இப்றாஹீம் மற்றும் நூஹ் அலைஹிமஸ்ஸலாம் அவர்களின் வரலாற்றைப் படிக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் இதனைப் புரிந்து கொள்ளலாம்.

அஷ்ஷெய்ஹ் பின் பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்: பெருமையடிப்பவன், பித்அத்வாதி, மடயன் ஆகியவர்கள் குறித்துப் பேசாமல் மௌனம் சாய்ப்பது ஆலிம்களுக்குக் கூடாது. ஏனென்றால் இது ஒரு மகத்தான தவறாகும். மேலும், தீங்குகளும் பித்அத்களும் பரவுவதற்கும் நலவுகள் மறைந்து குறைவதற்கும் ஸுன்னா மறைந்து விடுவதற்கும் உள்ள காரணங்களில் இது ஒன்றாகும். சத்தியத்தைப் பேசி அதன்பால் அழைப்பு விடுத்து அசத்தியத்தை மறுத்து அதனை எச்சரிப்பது ஆலிம்களின் மீது உள்ள கடமையாகும்.

வயோதிபர்களாக இருந்தாலும் அல்லது வாலியர்களாக இருந்தாலும் இதுவே ஆலிம்களின் கடமையாகும். அவர்கள் எங்கிருந்த போதிலும் மார்க்க ரீதியான ஆதாரங்களைக் கொண்டு சத்தியத்தைப் பரப்புவதும் அதிலே மக்களுக்கு ஆர்வமூட்டுவதும் அசத்தியிலிருந்து அவர்களை விரண்டோடச் செய்வதும் அதனை எச்சரிப்பதும் கடமையாகும். -     மஜ்மூஉ பதாவா அஷ்ஷெய்ஹ் பின் பாஸ்

நபிமார்களின் வாரிசுகளாகிய ஆலிம்கள் நபிமார்களின் பணியாகிய அசத்தியத்தை மறுத்துரைத்தலை அவர்களது அழைப்புப் பிரச்சாரத்திலும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

இமாம்களான இப்னு தைமியா, இப்னுல் கைய்யிம் ரஹிமஹுமல்லாஹ் நவீன காலத்தில் வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய அறிஞர்களான பின் பாஸ், அல்பானீ, இப்னு உஸைமீன், முக்பில் ரஹிமஹுமுல்லாஹ் ஸாலிஹ் அல்பவ்சான், ரபீஃ, அப்துல் முஹ்ஸின் அல்அப்பாத், யஹ்யா இப்னு அலீ அல்ஹஜூரி ஹபிழஹுமுல்லாஹ் போன்ற அறிஞர்களுடைய உரைகளையும் நூட்களையும் நாம் ஆராய்ந்து பார்த்தால் வழிகேடர்களால் பரப்பப்பட்ட அசத்தியத்தை மறுத்துரைக்காத எந்த ஒரு நூலையும் நாம் பார்க்க முடியாது, உரைகளையும் கேட்க முடியாது. முஸ்லிம்களை நச்சுக் கருத்துக்களில் இருந்து பாதுகாத்த பெரும் அறிஞர்களாக இவர்கள் காணப்படுகின்றார்கள்.

அசத்தியத்தை மறுத்துரைப்பவர்கள் பல இன்னல்களுக்கு ஆளாகுவார்கள். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அசத்தியத்தை மறுத்துரைக்காவிடின் நபிமார்களாகிய இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது சமூகத்தால் தூற்றப்பட்டிருக்க மாட்டார்கள். நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நைல் நதியைக் கடந்திருக்கமாட்டார்கள். ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கொலை செய்யப்படுவதற்காக துரத்தப்பட்டிருக்க மாட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு வெளியேற்றப்பட்டிருக்கவும் மாட்டார்கள்.

இமாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சிறையிலடைக்கப்பட்டார்கள். அவர்கள் விபச்சாரம் செய்யவுமில்லை, திருடவுமில்லை, கொலை செய்யவுமில்லை, கொள்ளையடிக்கவுமில்லை. மாறாக, அசத்தியத்தை எதிர்த்துப் பேசியதால் அவர்கள் சிறையிலடைக்கப்பட்டார்கள். ஆகவே, அசத்தியத்தை மறுத்துரைப்பவர்கள் இது குறித்து கவலையடைவதற்கு அவசியமில்லை.

ஐந்தாவது அடையாளம்

உண்மையான ஆலிம்கள் அவர்களது அழைப்புப்பணியின் மூலம் அல்லாஹ்வின் கூலியை மாத்திரம் எதிர்பார்ப்பார்கள். ஏனென்றால், அழைப்புப் பிரச்சாரம் என்பது ஒரு வணக்கமாகும். அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்: அவர்கள் மார்க்கத்தை அவனுக்கே தூய்மையாக்கியவர்களாகவே தவிர அல்லாஹ்வை வணங்குவதற்கு ஏவப்படவில்லை. -     அல்பய்யினா: 5

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே அமையும். -     புஹாரீ, முஸ்லிம்

அழைப்புப் பணியை அல்லாஹ்வுக்காக மாத்திரம் மேற்கொள்வது நபிமார்களின் வழிமுறை என்பதை அல்குர்ஆன் சித்தரிக்கின்றது. நபிமார்களான ஹூத், ஷுஐப், ஸாலிஹ், லூத் அலைஹிமுஸ்ஸலாம் ஆகியவர்கள் தம் சமூகத்திடம் கூறிய வார்த்தையை அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகின்றான்: அதற்காக வேண்டி நாம் உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. என்னுடைய கூலி அகிலத்தாரின் இரட்சகன் மீதே இருக்கின்றது. -     அஷ்ஷுஅரா: 145

அழைப்புப் பணியை பணம் சம்பாதிக்கவும், மக்களை தன்பக்கம் ஈர்த்தெடுக்கவும், அல்லது பெருமைக்காகவும் மேற்கொள்வது அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப்பட்ட அழைப்புப் பணியல்ல.

ஆறாவது அடையாளம்

உண்மையான ஆலிம்கள் மக்களை அல்லாஹ்வின்பால் அழைக்கின்ற விடயத்தில் மக்களின் பொருத்தத்தை கவனிக்க மாட்டார்கள். எது சத்தியமோ அதனை உரக்கக் கூறுவார்கள். எது அசத்தியமோ அதனை எதிர்த்துப் பேசுவார்கள். இதனால் மக்கள் வெறுப்படைகின்றார்களா? இல்லையா? மக்கள் தன்னைப் பொருந்திக் கொள்கிறார்களா? இல்லையா? என்பதைப் பார்க்கமாட்டார்கள்.

ஏனென்றால், மக்களின் பொருத்தம் பார்த்து பிரச்சாரம் செய்வது நபிமார்களின் அழைப்புப் பணியில் காணப்படவில்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழைப்புப் பணியை மேற்கொண்டபோது அவரது சமூகத்தில் இருந்த குறைஷிக் காபிர்கள் அவரைக் கடுமையாக எதிர்த்தனர். அவருடைய சிறிய தந்தையாகிய அபூதாலிபிடம் பலர் முறைப்பட்டனர். அவ்வாறிருந்தும் கூட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களுடைய பொருத்தத்தை நாடி அழைப்புப் பணியிலிருந்து விலகிக்கொள்ளவில்லை.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நபியே! நீங்கள் ஏவப்படுவதை பகிரங்கமாகச் சொல்லுங்கள். -     அல்ஹிஜ்ர்: 94

எனவே, அல்லாஹ்வின் கட்டளையின் பிரகாரம் அவர்கள் அவர்களுக்கு ஏவப்பட்டதையெல்லாம் பகிரங்கமாக எத்திவைத்தார்கள். சமூகத்தில் பிரிவினை உண்டாகும், என்னை அவர்கள் வெறுப்பார்கள் என்ற சிந்தனைப்போக்கு அவர்களிடத்தில் காணப்படவில்லை.

உண்மையிலேயே மனிதர்களின் விருப்பு வெறுப்பைக் கவனித்தே அழைப்புப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவிலிருந்து விரட்டப்பட்டிருக்க மாட்டார்கள். உண்மையான மார்க்கத்தை எவ்வித தயக்கமும் இன்றி அவர்கள் எத்திவைத்ததினாலே அவர்களுக்கு மக்காவை விட்டும் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

நபி ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது பிரச்சாரத்தை தன் சமூகத்திற்கு மத்தியில் எத்திவைத்தபோது அச்சமூகம் அவரைப் பார்த்து பின்வருமாறு கூறியது: ஸாலிஹே! இதற்கு முன்னர் நீர் எங்களிடத்தில் நம்பிக்கைக்குரியவராக இருந்தீர். எமது மூதாதையர்கள் வணங்கியதை நாம் வணங்குவதை விட்டும் எம்மை தடுக்கின்றீரா? -     ஹூத்: 62

தனக்கிருந்த மதிப்பைக்கூட கவனிக்காமல் நபி ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை எத்திவைத்தார்கள்.

எனவே, நபிமார்களின் வாரிசுகளாகிய ஆலிம்களும் இவ்வாறான ஒரு முறையிலேயே அவர்களுடைய அழைப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும். ஓர் உண்மையான ஆலிம் எவ்வாறு இருப்பார் என்பதைப் பல அல்குர்ஆன் ஆதாரங்களும் நபிமொழிகளும் தெளிவுபடுத்துகின்றன. அவைகளையும் கண்டறிந்து இங்கு குறிப்பிட்ட அடையாளங்களை முன்வைத்தும் நாம் ஆலிம்களை இனம்கண்டு அவர்களிடம் அறிவைக் கற்றுக்கொள்வது எமது கடமையாகும்.

-     அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்
Previous Post Next Post