எழுதியவர்: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்
அகீதா என்பது ஒரு முஸ்லிமின் உள்ளத்தில் இருக்க வேண்டிய அத்தியவசியமான ஒரு பாடமாகும். எந்தவொரு உள்ளத்தில் அகீதாவுக்கு இடமில்லையோ அந்த உள்ளம் பாழாகி வெற்று உள்ளமாகவே அது காணப்படும். அகீதா என்பது ஒரு முஸ்லிம் நம்பிக்கை கொள்ள வேண்டிய விடயங்களை உரிய முறையில் தனது ஆழ்ந்த மனதில் நம்பிக்கை கொண்டு அதில் எவ்வித சந்தேகமும் கொள்ளாமல் அந்த நம்பிக்கையின் பிரகாரம் தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்வதைக் குறிக்கின்றது. அகீதா இல்லாத உள்ளத்தை உடையவர்கள் இவ்வுலகிலும் மறுமையிலும் பெரும் நஷ்டத்தையே எதிர்கொள்வர்கள்.
அகீதா இஸ்லாமியக் கல்வியிலும் இஸ்லாமிய அழைப்புப் பணியிலும் முக்கிய இடத்தை வகிக்கின்றது. ஒரு முஸ்லிம் தனது கல்வியை அகீதாவைக் கொண்டே ஆரம்பிக்கக் கடமைப்பட்டுள்ளான். மேலும், இஸ்லாத்தின் பால் அழைப்பு விடுப்பவர்கள் இந்த அகீதாவைக் கொண்டே தமது அழைப்புப் பிரச்சாரத்தை ஆரம்பிக்க வேண்டும். இதுவே நபிமார்கள், ஸஹாபாக்கள் எமக்குக் கற்றுத் தந்த வழிமுறையாகும்.
தமிழுலகில் அழைப்புப் பிரச்சாரம் மேற்கொள்கின்ற பலர் முக்கியத்துவம் வழங்க வேண்டிய இந்த அகீதாவை ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு ஆட்சியதிகாரம், சமூக ஒற்றுமை போன்ற அம்சங்களை முதன்மைப்படுத்தி பிரச்சாரம் செய்கின்றமை எம்மை கவலையடையச் செய்கின்றது. முஸ்லிம்கள் தலைமைப் பொறுப்பையும், சமூக ஒற்றுமையையும் தூய அகீதாவின்றி பெற்றுக்கொள்ள முடியாது என்பதை பலரும் விளங்கிக்கொள்ளத் தவறியுள்ளனர். மேலும், அரபு மத்ரஸாக்களை நடாத்தி வரும் பலர் மாணவர்களுக்கு அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினரின் அகீதா நூற்களைக் கற்பிக்காது வழிகேடர்களின் நூற்களை அவர்களது பாடத்திட்டத்தினுள் பொதித்திருக்கின்றனர். மறுமையின் வெற்றியை உறுதி செய்யும் அகீதாவுக்கு முன்னுரிமை வழங்காமல் பிக்ஹ், ஹதீஸ் ஆகிய துறைகளில் மாணவர்களுக்குப் பயிற்சி கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக தவ்ஹீத்வாதிகள் என தங்களை அடையாளம் காட்டிக் கொள்பவர்கள் இந்த தவ்ஹீத், அகீதாவுக்கு உரிய இடத்தை வழங்காமல் இதனை ஒரு புறத்தில் ஒதுக்கிவிட்டு விவாதம், பிக்ஹ் மஸாஇல்கள் ஆகிய துறைகளில் மகிழ்ச்சி கண்டு வருகின்றனர். கப்ரு வணக்கம், பித்அத்களுக்கு எதிராக ஆரம்ப காலங்களில் பிரச்சாரம் செய்த அழைப்பாளர்கள் பலரும் இன்று விவாதத்தையும் பிக்ஹ் மஸாஇல்களையும் முதன்மைப்படுத்தி அவைகளைக் கொண்டு மக்களிடத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
நபிமார்கள், நபித்தோழர்கள், ஸலபுஸ்ஸாலிஹீன்கள் தங்களது அழைப்புப் பணியை மேற்கொள்கின்ற விடயத்தில் அகீதாவை முற்படுத்தினார்கள் என்பதற்காக வேண்டி அவர்களது வழிமுறையிலே எமது தஃவாவையும் அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை விளங்கிக் கொண்ட நாம் எமது இந்தப் பள்ளிவாசலில் அகீதாப் பணியை அல்லாஹ்வின் உதவியுடன் திறம்படச் செய்து வருகின்றோம். மார்க்கத்தில் உள்ள ஏனைய அம்சங்களை விட அகீதாவுக்கு ஏன் நாம் முன்னுரிமை வழங்க வேண்டும்? என்பது பலருக்கும் புரியாத அம்சமாக இருக்கலாம். அதனைப் புரிய வைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். அகீதாவுக்கு ஏன் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதை சுருக்கமாக ஆதாரங்களுடன் இங்கு குறிப்பிடுகின்றோம்.
1. அகீதா மார்க்கத்தின் அடிப்படைக் கல்வியாகும். மேலும், இந்த மார்க்கத்தின் அத்திபாரமுமாகும்.
அத்திபாரமின்றி அமைக்கப்பட்ட வீடு எவ்வாறு உறுதியாக நிலைத்திருக்காதோ அதேபோன்று அகீதா இன்றி ஏனைய நற்காரியங்களில் உறுதித் தன்மை இருக்காது. அல்லாஹ் அல்குர்ஆனில் இதற்கு ஓர் அழகான உதாரணத்தைக் கூறுகின்றான்: “(நபியே!) தவ்ஹீத் கலிமா எனும் நல்ல வாக்கியத்திற்கு அல்லாஹ் எவ்வாறு உதாரணத்தைக் கூறுகிறான் என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா? வானளாவிய கிளைகளையும் ஆழப்பதிந்த வேரையும் உடைய ஒரு நல்ல மரத்திற்கு ஒப்பாக இருக்கிறது. அது இறைவனின் அருளைக்கொண்டு எக்காலத்திலும் கனிகளை அளித்துக்கொண்டே இருக்கிறது. மனிதர்கள் நல்லுணர்ச்சி பெறும் நோக்கில் அவர்களுக்கு அல்லாஹ் உதாரணம் ஆக்குறான். (குப்ரு, ஷிர்க்கான) கெட்ட வாக்கியத்திற்கு உதாரணம் பூமியில் இருந்த வேர்கள் அறுபட்டு நிற்கும் கெட்ட மரத்திற்கு ஒப்பாகும். அது நிலைத்திருக்காது”. (இப்றாஹீம்: 24,25,26)
உறுதித் தன்மையற்ற மரம் எவ்வாறு மனிதர்களுக்கு பயனளிக்காதோ, நிலைத்திருக்காதோ அவ்வாறே அகீதா இன்றி வாழும் முஸ்லிமிடத்திலும் எவ்விதப் பயனும் இருக்காது. அவன் இறுதியில் கைசேத்துக்கு ஆளாகுவான்.
2. நபிமார்கள், ஸஹாபாக்கள் அவர்களது அழைப்புப் பணியில் அகீதாவையே மக்களுக்கு முதலில் போதித்தனர்.
மனிதர்களைச் சீர்செய்யும் நோக்கில் அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட தூதர்கள் யாவரும் முதலில் அகீதாவைக் கொண்டே தங்களது தஃவாப் பணியை துவக்கி வைத்தார்கள். “எனது சமுதாயத்தினரே! நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள், அவனையன்றி உங்களுக்கு வேறு இறைவன் இல்லை” என்று நூஹ், ஹூத், ஸாலிஹ் அலைஹிமுஸ்ஸலாம் போன்ற நபிமார்கள் தங்களது அழைப்புப் பிரச்சாரத்தை ஆரம்பம் செய்து வைத்தனர்.
எங்களது நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் மக்காவில் பதிமூன்று வருடங்களாக மக்களுக்கு இந்த அகீதாவையே போதித்தார்கள். “எனது சமுதாயத்தினரே! நீங்கள் வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் அல்லாஹ்வையன்றி வேறு இரட்சகன் இல்லை என்று கூறுங்கள், நீங்கள் வெற்றி பெறுவீர்கள்” என்று மக்களிடம் கூறினார்கள். “பல கடவுள்களை இவர் ஒன்றாக ஆக்கிவிட்டாரா! நிச்சயமாக இது ஆச்சரியத்திற்குரிய விடயமேயாகும்” என்று குறைஷிக் காபிர்கள் கூறுமளவிற்கு அகீதாவை அந்த சமுதாயத்தில் அவர்கள் போதித்தார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஆத் இப்னு ஜபல் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை யமன் நாட்டுக்குப் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக வேண்டி அனுப்பி வைத்தார்கள். அந்த வேளையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரைப் பார்த்து: “முஆதே! நிச்சயமாக நீ வேதம் கொடுக்கப்பட்ட ஒரு சமுதாயத்தினரிடம் செல்கின்றாய். எனவே, நீ அவர்களை அழைக்கின்ற முதலாவது விடயம் வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் அல்லாஹ்வையன்றி வேறு இரட்சகன் இல்லை இன்னும், முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார் என்று அவர்கள் சான்று பகர்வதாக இருக்கட்டும்” என்று கூறி அனுப்பினார்கள். (முஸ்லிம்)
இவை யாவும் நபிமார்கள், ஸஹாபாக்கள் தங்களது அழைப்புப் பணியில் அகீதாவையே முற்படுத்தி வைத்தார்கள் என்பதற்கான சான்றுகளாகும். இந்த ஒரேயொரு நோக்கத்திற்காகவே அல்லாஹ் தூதர்களை அனுப்பினான் என்பது அல்குர்ஆன் சொல்லித் தரும் செய்தியாகும். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள். இன்னும், அவனையன்றி வணங்கப்படுபவற்றைத் தவிர்ந்து கொள்ளுங்கள் என்று கட்டளையிட்ட பிரகாரம் நாம் ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ஒரு தூதரை நிச்சயமாக அனுப்பினோம்”. (அந்நஹ்ல்:36)
3. அகீதாவை சரிவரக் கற்றுக்கொண்டவர்களே சோதனைகளின் போது உறுதியாக இருப்பார்கள்.
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “நலவைக் கொண்டும், தீங்கைக் கொண்டும் உங்களை நாம் சோதிப்போம்”. (அல்அன்பியா: 35)
அடியார்களைச் சோதிப்பது அல்லாஹ்வின் வழிமுறைகளில் ஒன்றாகக் காணப்படுகிறது. இந்த அல்லாஹ்வின் சோதனைகளில் வெற்றி பெறுபவர்கள் சரியான அகீதாவை உடைய மனிதர்களே என்பதில் ஐயமில்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “விசுவாசியுடைய விடயம் ஆச்சரியமாக இருக்கின்றது. அவனுடைய அனைத்து விடயங்களுமே நலவாக அமைந்திருக்கின்றன. அது ஒரு விசுவாசிக்கன்றி வேறு எவருக்கும் இல்லை. அவனுக்கு மகிழ்ச்சிகரமான காரியம் ஏற்பட்டால் அவன் நன்றி செலுத்துவான், அது அவனுக்கு நலவாக அமைந்துவிடுகின்றது. அவனுக்கு தீங்கு ஏற்பட்டால் அவன் பொறுமை செய்வான், அதுவும் அவனுக்கு நலவாக அமைந்துவிடுகின்றது”. (முஸ்லிம்)
சரியான அகீதாவைப் பெற்றவர்கள் நலவு ஏற்பட்டால் நன்றியுடையவர்களாகவும் தீங்கு ஏற்பட்டால் பொறுமைசாலிகளாகவும் இருப்பார்கள். சரியான அகீதாவைப் பெற்றவர்களேயன்றி வேறு எவரும் இவ்வாறு செயற்படமாட்டார்கள்.
அகீதாவை சரிவரப் பெற்றுக் கொண்ட நபித்தோழர்கள் சோதனைகளின் போது அவர்கள் உறுதியாக நின்றார்கள் என்பதற்குப் பின்வரும் அல்குர்ஆன் வசனங்கள் சிறந்த சான்றுகளாகும். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “உங்களுக்கு மேலிருந்தும், உங்களுக்குக் கீழிருந்தும் அவர்கள் உங்களிடம் (படையெடுத்து) வந்த போது (உங்களுடைய) இருதயங்கள் தொண்டை(க் குழி முடிச்சு)களை அடைந்து (நீங்கள் திணறி) அல்லாஹ்வைப் பற்றி பலவாறான எண்ணங்களை எண்ணிக் கொண்டிருந்த சமயம் (அல்லாஹ் உங்களுக்கு செய்த அருட்கொடையை நினைவு கூறுங்கள்.) அவ்விடத்தில் விசுவாசிகள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு இன்னும் கடுமையான அதிர்ச்சியினால் அதிர்ச்சிக்கப்பட்டார்கள்”. (அல்அஹ்ஸாப்: 10,11)
மேலும், அவன் கூறுகின்றான்: “அன்றியும் விசுவாசிகள் எதிரிகளின் கூட்டுப் படைகளைக் கண்டபோது இது தான், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எங்களுக்கு வாக்களித்ததாகும். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையே உரைத்தார்கள் என்று கூறினார்கள். இன்னும் அது அவர்களுடைய ஈமானையும், (இறைவனுக்கு) முற்றிலும் வழிபடுவதையும் அதிகப்படுத்தாமல் இருக்கவில்லை”. (அல்அஹ்ஸாப்: 22)
அஹ்ஸாப் போரின் போது நபித்தோழர்கள் எதிர்கொண்ட சோதனைகளையும் அவ்வேளையில் அவர்கள் கொண்ட உறுதித் தன்மையையும் இந்த வசனங்கள் எடுத்தியம்புகின்றன. சரியான அகீதாவைப் பெற்றுக் கொண்டமையே அவர்களது இந்த நிலைப்பாட்டுக்கு காரணமாகும். எனவே, சோதனைகளின் போது கொள்கையில் நிலைத்திருப்பவர்கள் சரியான அகீதாவை உடையவர்களே!
4. தூய அகீதாவைக் கற்றுக்கொண்டவர்களே பாவகாரியங்களிலிருந்து விலகியிருப்பார்கள்.
பாவகாரியங்களுக்கும் அகீதாவில் ஏற்படும் பலவீனத்திற்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. இன்று எமது முஸ்லிம்களிடம் வட்டி, விபச்சாரம், திருட்டு போன்ற பெரும்பாவங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றமை அவர்களது அகீதாவில் உள்ள பலவீனத்தையே வெளிப்படுத்துகிறது. எப்பொழுது ஓர் அடியான் தனது அகீதாவில் உறுதியாகச் செயற்படுகிறானோ அவன் பாவகாரியங்களிலிருந்து விலகியிருக்க அது அவனைத் தூண்டிவிடும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாவமான காரியங்களையும் அகீதாவின் பலவீனத்தையும் இணைத்தவாறு பின்வருமாறு கூறுகின்றார்கள்: “ஓர் அடியான் விசுவாசியாக இருக்கும்போது விபச்சாரம் செய்யமாட்டான். அவன் விசுவாசியாக இருக்கும்போது திருடமாட்டான். அவன் விசுவாசியாக இருக்கும்போது மது அருந்தமாட்டான். அவன் விசுவாசியாக இருக்கும்போது கொலை செய்யமாட்டான்”. (புஹாரி)
அகீதாவில் பலவீனமடைந்தவர்களே பெரும்பாவங்களில் ஈடுபடுவார்கள். தமது நம்பிக்கையில் உறுதியாக இருப்பவர்கள் பெரும்பாவங்களிலிருந்து விலகியிருப்பார்கள் என்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவுபடுத்தியிருக்கின்றார்கள்.
ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இரு புதல்வர்களின் சம்பவம் இதனை வலுப்படுத்துகின்றது. அவர்களுடைய இரு புதல்வர்களும் ஒரு குர்பானை நிறைவேற்றுகின்றார்கள். சரியான அகீதாவை உடைய புதல்வரின் குர்பானை அல்லாஹ் ஏற்றுக்கொண்டான். அடுத்தவருடைய குர்பானை அல்லாஹ் ஏற்க மறுத்தான். எனவே, அவர் கோபமடைந்தவராகத் தனது சகோதரனைப் பார்த்து “நான் நிச்சயமாக உம்மைக் கொலை செய்துவிடுவேன்” என்று கூறினார். அதற்கு அகீதாவைப் பெற்ற அந்த சகோதரர் பின்வருமாறு பதிலளிக்கிறார்: “அல்லாஹ் இறையச்சமுடையவர்களிடமிருந்தே ஏற்றுக்கொள்வான். என்னை கொலை செய்தவற்காக நீ உம்முடைய கரத்தை என் பக்கம் நீட்டினாலும் நான் எனது கையை உன்னைக் கொல்வதற்காக நீட்டமாட்டேன். ஏனென்றால், அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வை நான் அஞ்சிக்கொள்கிறேன்”. (அல்மாஇதா: 28)
சரியான அகீதா ஒரு முஸ்லிமைப் பாவமான காரியங்களிலிருந்து தடுத்துவிடுகிறது. அதன் காரணமாகவே அப்புதல்வர் தன்னைக் கொல்வதாகக் கூறிய சகோதரனைக் கொலை செய்து பாவத்தை தன்பக்கம் சேர்க்க விரும்பவில்லை.
5. அகீதாவைப் புரிந்து செயற்பட்டவர்களே மரண வேளையிலும் மறுமை வாழ்க்கையிலும் பாக்கியம் பெறுபவார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “எவர் அல்லாஹ்வுக்கு இணைவைக்காத நிலையில் மரணிக்கிறாரோ அவர் சுவனம் நுழைவார். எவர் அல்லாஹ்வுக்கு இணைவைத்த நிலையில் மரணிக்கிறாரோ அவர் நரகம் நுழைவார்”. (புஹாரி,முஸ்லிம்)
எவர் சரியான அகீதாவின் மூலம் தவ்ஹீதில் நிலைத்திருந்தவராக மரணிக்கிறாரோ அவருடைய ஒதுங்கும் தளம் சுவனமாகவும் மோசமான அகீதாவைப் பெற்று இணைவைப்பில் எவர் மரணிக்கிறாரோ அவருடைய இடம் நரகமாகவும் இருக்கும்.
அகீதாவை உடைய மனிதர்கள் மரண வேளையிலும் மகிழ்ச்சியுடன் இவ்வுலகை விட்டுப் பிரிவார்கள். அவர்களுக்குக் கவலையோ பயமோ இருக்காது. அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “எவர்கள் எங்களது இரட்சகன் அல்லாஹ்வேயாகும் என்று கூறி அதில் நிலைத்திருக்கின்றார்களோ அவர்களது (மரண வேளையில்) வானவர்கள் அவர்களிடம் இறங்குவார்கள். நீங்கள் பயப்பட வேண்டாம். மேலும், கவலை கொள்ள வேண்டாம். நீங்கள் வாக்களிக்கப்பட்ட சுவனபதியைக் கொண்டு நன்மாராயம் பெற்றுக்கொள்ளுங்கள். இவ்வுலகிலும் மறுமையிலும் நாமே உங்களது நேசர்களாக இருக்கின்றோம். சுவனத்திலே உங்கள் உள்ளங்கள் ஆசைப்படக்கூடியவைகள் யாவும் உங்களுக்கு இருக்கின்றன. அதில் நீங்கள் கேட்பவையெல்லாம் உங்களுக்கு கிடைக்கும். இது மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவனிடமிருந்துள்ள விருந்தாகும் என்று கூறுவார்கள்”. (புஸ்ஸிலத்: 30,31,32)
சரியான அகீதாவைப் பெற்று அதன்படி வாழ்ந்தவர்களின் மரண வேளை இவ்வாறே காணப்படும். அவர்கள் மரண வேளையிலும் மறுமை வாழ்க்கையிலும் மிக்க மகிழ்ச்சியை அனுபவிப்பார்கள். அகீதாவைப் பெறாமல் அதனைப் புறந்தள்ளி வைத்தவர்கள் இவ்வுலகிலும் மறுமையிலும் பெரும் தோல்வியையே சந்திப்பார்கள். எனவே, சரியான அகீதாவைக் கற்று அதற்கு முன்னுரிமை வழங்கி எமது அழைப்புப் பிரச்சாரத்தை மேற்கொள்வோமேயானால் முஸ்லிம்களுக்கு உதவி, வெற்றி, கண்ணியம், தலைமைப் பொறுப்பு ஆகியன அவர்களுக்கு முன்னால் வந்து நிற்கும். இன்ஷா அல்லாஹ்.