கத்தம் ஃபாத்திஹா - ஒரு வழிகேடு உங்களை நரகத்தில் சேர்த்துவிடும்

அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு

 ஒரு நபித்தோழர் மரணித்த அன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த நபித்தோழரின் வீட்டில் உணவு உண்டார்கள் என்று ஹதீஸ் உள்ளது; எனவே 3, 7, 10, 40 ஃபாத்திஹாக்கள் மற்றும் வருடப் பாத்திஹா ஓதி சாப்பாடு உண்ணலாம்; தவறில்லை என்று ஒருவர் கூறுகின்றார். இது சரியா?

இறந்தவரின் வீட்டில் போய் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாப்பிட்டதாக எந்த ஹதீசும் இல்லை. அல்லாஹ்வின் மீதும் அவனின் உண்மை தூதரின் மேலும் இட்டுக் கட்டும் இந்த வழிகேடர்கள் நாசமாகட்டும் .நிச்சயமாக இவை அனைத்துக்கும் இவர்கள் அல்லாஹ்விடம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ أَخْبَرَنَا ابْنُ إِدْرِيسَ أَخْبَرَنَا عَاصِمُ بْنُ كُلَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ رَجُلٍ مِنْ الْأَنْصَارِ قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جَنَازَةٍ فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ عَلَى الْقَبْرِ يُوصِي الْحَافِرَ أَوْسِعْ مِنْ قِبَلِ رِجْلَيْهِ أَوْسِعْ مِنْ قِبَلِ رَأْسِهِ فَلَمَّا رَجَعَ اسْتَقْبَلَهُ دَاعِي امْرَأَةٍ فَجَاءَ وَجِيءَ بِالطَّعَامِ فَوَضَعَ يَدَهُ ثُمَّ وَضَعَ الْقَوْمُ فَأَكَلُوا فَنَظَرَ آبَاؤُنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَلُوكُ لُقْمَةً فِي فَمِهِ ثُمَّ قَالَ أَجِدُ لَحْمَ شَاةٍ أُخِذَتْ بِغَيْرِ إِذْنِ أَهْلِهَا فَأَرْسَلَتْ الْمَرْأَةُ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَرْسَلْتُ إِلَى الْبَقِيعِ يَشْتَرِي لِي شَاةً فَلَمْ أَجِدْ فَأَرْسَلْتُ إِلَى جَارٍ لِي قَدْ اشْتَرَى شَاةً أَنْ

أَرْسِلْ إِلَيَّ بِهَا بِثَمَنِهَا فَلَمْ يُوجَدْ فَأَرْسَلْتُ إِلَى امْرَأَتِهِ فَأَرْسَلَتْ إِلَيَّ بِهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ 

عَلَيْهِ وَسَلَّمَ أَطْعِمِيهِ الْأُسَارَى

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு ஜனாஸாவுக்குச் சென்றிருந்தோம். அப்போது அவர்கள் கப்ருக்கருகில் இருந்து கொண்டு, 'இறந்தவரின் கால்மாட்டிலும், தலைமாட்டிலும் விசாலமாக்கிக் கொள்' என்று தோண்டக் கூடியவரிடம் அறிவுரை கூறிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் திரும்பும் பொழுது ஒரு பெண்ணின் அழைப்பாளர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார். உணவு கொண்டு வரப்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கைகளை அதில் வைத்தார்கள். மக்களும் வைத்தார்கள்; சாப்பிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு கவள உணவைத் தமது வாயில் மெல்லுவதை எங்களுடைய பெற்றோர் பார்த்தனர்.

பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'உரியவரின் அனுமதியின்றி எடுக்கப்பட்ட ஆட்டிறைச்சியை நான் சாப்பிடுகிறேன்' என்று கூறினார்கள். 'அல்லாஹ்வின் தூதரே! எனக்காக ஓர் ஆடு வாங்கி வரும்படி பகீஃ (சந்தை)க்கு ஆளனுப்பினேன். எனக்கு ஆடு கிடைக்கவில்லை. எனது அண்டை வீட்டுக்காரர் ஓர் ஆடு வாங்கியிருந்தார். அதன் கிரையத்தைப் பெற்று ஆட்டைத் தாருங்கள் என்று அவரிடம் ஆளனுப்பினேன். அவர் (வீட்டில்) இல்லை. அதனால் அவரது மனைவியிடம் கேட்டு ஆளனுப்பினேன். அவர் அந்த ஆட்டை அனுப்பி வைத்தார்' என்று அந்தப் பெண் பதில் சொல்லி அனுப்பினார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 'அதைக் கைதிகளுக்குச் சாப்பிடக் கொடு' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அன்சாரியைச் சேர்ந்த ஒரு மனிதர் நூல்: அபூதாவூத் 2894, பைஹகீ, தாரகுத்னீ .

ஒரு பெண் உணவு கொடுத்து அனுப்பினாள் என்று இந்த ஹதீஸில் கூறப்படுகின்றது. அந்தப் பெண் இறந்தவரின் மனைவி தான் என்று கூறி, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறந்த வீட்டில் சாப்பிட்டதாகக் கூறுகின்றனர்.

ஆனால் மேற்கண்ட ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உணவு கொடுத்தனுப்பிய பெண், இறந்தவரின் மனைவி என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இறந்தவரின் வீட்டிற்குச் சென்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாப்பிட்டார்கள் என்றும் இந்த ஹதீஸில் கூறப்படவில்லை .

அந்த ஹதீஸில் அவர்கள் திரும்பும் பொழுது ஒரு பெண்ணின் அழைப்பாளர் அழைத்ததாகவே கூறப்படுகிறது. எனவே இறந்தவரின் குடும்பத்துப் பெண்ணாக அவர் இருக்க முடியாது என்பது இதிலிருந்து உறுதியாகிறது.

حدثنا معاوية بن عمرو حدثنا أبو إسحاق عن زائدة عن عاصم بن كليب عن أبيه أن رجلا من الأنصار أخبره قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة فلما

رجعنا لقينا داعي امرأة من قريش فقال يا رسول الله إن فلانة تدعوك ومن معك إلى طعام فانصرف فانصرفنا معه فجلسنا مجالس الغلمان من آبائهم بين أيديهم ثم جيء بالطعام فوضع رسول الله صلى الله عليه وسلم يده ووضع القوم أيديهم ففطن له القوم وهو يلوك لقمته لا يجيزها فرفعوا أيديهم وغفلوا عنا ثم ذكروا فأخذوا بأيدينا فجعل الرجل يضرب اللقمة بيده حتى تسقط ثم أمسكوا بأيدينا ينظرون ما يصنع رسول الله صلى الله عليه وسلم فلفظها فألقاها فقال أجد لحم شاة أخذت بغير إذن أهلها فقامت المرأة فقالت يا رسول الله إنه كان في نفسي أن أجمعك ومن معك على طعام فأرسلت إلى البقيع فلم أجد شاة تباع وكان عامر بن أبي وقاص ابتاع شاة أمس من البقيع فأرسلت إليه أن ابتغي لي شاة في البقيع فلم توجد فذكر لي أنك اشتريت شاة فأرسل بها إلي فلم

يجده الرسول ووجد أهله فدفعوها إلى رسولي فقال رسول الله صلى الله عليه وسلم أطعموها الأسارى

அஹ்மத் (21471)

நூலின் அறிவிப்பில் நாங்கள் திரும்பிய போது குரைஷ் குலப் பெண்ணின் அழைப்பாளரைச் சந்தித்தோம் என்று கூறப்படுகிறது. ஜனாஸாவில் பங்கெடுத்து விட்டு திரும்பும் போது தான் குரைஷ் குலப் பெண் விருந்துக்கு அழைத்ததாகக் கூறப்படுகிறது.

எனவே இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு, இறந்தவரின் வீட்டில் போய் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாப்பிட்டார்கள் என்று கூறுவது அபாண்டமாகும்.ஒரு வாதத்திற்கு இதை ஏற்றுக் கொண்டாலும் 3ம் பாத்திஹா, 7ம் பாத்திஹா, 40ம் பாத்திஹா* என்று ஓதுவதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் இருக்கின்றது?

இது போன்று சம்பந்தமில்லாத ஆதாரங்களைக் கூறுவதிலிருந்தே இவை பித்அத் என்பதை அறிந்து கொள்ளலாம்.

மவ்லூது, கந்தூரி, ஃபாத்திஹா போன்றவற்றிற்காக உணவு தயாரிப்பவர்கள் அந்த உணவு முழுவதுமே பரக்கத் நிறைந்தது என்று கருதியே தயாரிக்கின்றார்கள். முழுஉணவையும் வைத்து மவ்லூது ஓதாமல் சிறிதளவு எடுத்து வைத்து ஓதினாலும் முழு உணவையும் தபர்ருக் என்றே கூறுவார்கள். அதற்கென்று தனிமகத்துவம் இருப்பதாகவே நினைக்கின்றார்கள் . மவ்லூது ஓதுபவர்கள் முழு உணவையும் எடுத்துவைத்து மவ்லூது ஓதாவிட்டாலும் அதை நேர்ச்சையாக எண்ணியே தயாரிப்பதால்அதைச் சாப்பிட கூடாது. ஒரு உணவில் இப்படிப்பட்ட தவறான நம்பிக்கை வைக்கப்படுமானால் அதைஉண்பது தடுக்கப்பட்டுவிடுகின்றது. மீறி இந்த உணவை உண்டால் இதில் புனிதம் இருப்பதாக மூடர்கள் நினைப்பதை நாம் ஆதரித்ததாக ஆகிவிடும். இந்த உணவு உங்களுக்கு மட்டுமல்ல வேறுயாருக்கும் ஆகுமானதல்ல. இந்த உணவு பூஜை செய்யப்பட்ட பொருட்களின் அந்தஸ்தை எட்டிவிடுகின்றது. தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ்அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை, ஆகியவற்றையே அவன் உங்களுக்குத்தடைசெய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன், நிகரற்ற அன்புடையவன். (அல்குர்ஆன் 2; : 173)

இந்த வசனத்தில் 'அறுக்கப்பட்டவை' என்று நாம் மொழிபெயர்த்துள்ள இடத்தில் அரபுமூலத்தில் 'உஹில்ல' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. “சப்தமிடப்பட்டவை” என்பது இதன் பொருள். அதாவது அல்லாஹ் அல்லாதவர்களின் பெயர் கூறப்பட்ட பொருட்களை உண்ணக்கூடாது என்பதையும் சேர்த்தே இந்த வசனம் கூறுகின்றது.

இந்த அடிப்படையில் சாமிக்குப் படைக்கப்பட்ட உணவுகள் மட்டுமின்றி, முஸ்லிம்கள் என்ற பெயரில் அவ்லியாக்களுக்காப் படைக்கப்பட்ட உணவுகளையும், புனிதம் இருப்பதாகக் கருதப்படும் உணவுகளையும் உண்ணக் கூடாது என்று கூறிவருகின்றோம்.

வரதட்சணை மற்றும் பெண்வீட்டாரிடமிருந்து தரப்படும் உணவு பூஜிக்கப்படுவதில்லை. அதில் புனிதம் இருப்பதாக யாரும் நம்பிக்கை வைப்பதும் இல்லை. மற்ற உணவுகளைப் போன்ற சாதாரண உணவு என்ற நம்பிக்கையில் அதுபரிமாறப்படுவதால் அதை உண்ணலாம் என்ற கூறுகின்றோம்.

பிறந்தநாள் கொண்டாடுதல், பெயர்சூட்டுதல், கத்னா செய்தல், கர்ப்பிணிப்பெண்ணுக்கு ஏழாவது மாதம் ஆனதும் பாகுச்சோறு ஆக்கி பகிர்தல், சிறுவர், சிறுமியர் குர்ஆனை முழுமையாக ஓதிமுடித்துவிட்டால் அதற்காக இனிப்பு கொடுத்துவிடுதல் போன்ற காரியங்களை முன்னிட்டு செய்யப்பட்ட தின்பண்டங்கள் மற்றும் உணவுகளை (அந்நிகழ்வில் கலந்து கொள்ளாமல்) அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டாலும் சாதரண உணவு என்ற அடிப்படையில் அதைப் பெற்றுக் கொள்ளலாம்.

சிறுவர், சிறுமியர் குர்ஆனை முழுமையாக ஓதிமுடித்துவிட்டால் அதற்காக பாத்திஹா ஓதி இனிப்பு கொடுத்துவிடுதல், மரணித்தவர்க்காக 40 ஆம் நாள் ஃபாதிஹா ஓதி பெட்டிச்சோறு போடுதல், மரணித்தவர் வீட்டிற்குச் சென்றால் ஃபாத்திஹா ஓதுவதற்காக அங்கு வாழைப்பழம் கொடுத்தல் போன்றவை அந்த உணவிற்கு புனிதம் கருதி வழங்கப்படுவதால் இவற்றை அன்பளிப்பாகக் கொடுத்தாலும் உண்பது ஹராம் ஆகும்.


தல்கீன் மற்றும் கத்தம் ஒரு அறியாமையே:

ஒருவரை அடக்கம் செய்து முடித்தவுடன் அவரது தலைமாட்டில் இருந்து கொண்டு மோதினார் தல்கீன் என்ற பெயரில் எதையோ கூறுவர்.

'உன்னிடம் வானவர்கள் வருவார்கள். உன் இறைவன் யார் எனக் கேட்பார்கள். அல்லாஹ் என்று பதில் கூறு! உன் மார்க்கம் எது எனக் கேட்பார்கள். இஸ்லாம் என்று கூறு' என்று அரபு மொழியில் நீண்ட அறிவுரை கூறுவது தான் தல்கீன்.

ஒருவர் உயிருடன் இருக்கும் போது சொல்லிக் கொடுக்க வேண்டியதை இறந்த பின் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

 இப்படிச் சொல்லிக் கொடுத்து, அது இறந்தவருக்குக் கேட்டு, அவரும் இந்த விடையைச் சொல்ல முடியும் என்றால் இதை விட உச்ச கட்ட மடமை வேறு என்ன இருக்க முடியும்? இது போன்ற மூடத்தனத்தைத் தவிர்க்க வேண்டும்.

அடக்கம் செய்து முடித்தவுடன் அதன் அருகில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று கொண்டு (மக்களை நோக்கி)

'உங்கள் சகோதரருக்காகப் பாவமன்னிப்புத் தேடுங்கள். அவருக்காக உறுதிப்பாட்டைக் கேளுங்கள். ஏனெனில் அவர் இப்போது விசாரிக்கப்படுகிறார்' என்று கூறுவார்கள்.

 *அறிவிப்பவர்: உஸ்மான் பின் அஃப்பான் (ரலி). *நூல்: அபூ தாவூத் 2894, ஹாகிம் 1/370 பைஹகீ 4/56* 

எனவே மய்யித்திற்குச் சொல்லிக் கொடுக்கும் தல்கீனை ஒழித்துக்கட்டி அல்லாஹ்விடம் அவர் நல்ல முறையில் பதில் சொல்ல அனைவரும் துஆச் செய்ய வேண்டும்.

அது போலவே இறந்தவர் வீட்டில் எத்தனை பாத்திஹாக்கள்? குடும்பத்தில் எவரேனும் இறந்து விட்டால், மறுநாளிலிருந்து தொடங்கி விடும் பாத்திஹாக்களின் அணிவகுப்பு *. 3, 5, 7, 10, 15, 20, இப்படியே 40 ஆம் நாள் தடபுடலாகப் பெரிய பாத்திஹா. பிறகு 6 மாதம், 1 வருடம். பின்னர் வருடந்தோறும்.பாத்திஹாக்கள் ஓதி ஓதியே,* இருக்கின்ற பணத்தையெல்லாம் இழந்து கடனாளி ஆனவர் பலர். கையில் பணம் இல்லாவிட்டால் கடன் வாங்கியும், கடன் கிடைக்காவிட்டால் வட்டிக்கு வாங்கியும், பாத்திஹா ஓதும் முட்டாள்களை என்னவென்பது? இதனால் இம்மையிலும் நஷ்டம். மறுமையிலும் ஒரு பயனும் இல்லை.

 அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

 நமது அனுமதி இல்லாத ஒருகாரியத்தை எவரேனும் செய்தால், அது ரத்து செய்யப்படும். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதாரம். : புகாரி)

இந்த பாத்திஹாக்களின் மூலம் எத்தனையோ ஏழைகளுக்கு வயிறார உணவு கிடைக்கின்றதே, என்றும் இது நன்மை தானே என்றும் சிலர் கூறலாம், பசித்தவர்களுக்கு உணவளிப்பதில் புண்ணியம் உண்டு என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதை பாத்திஹா ஓதி தான் கொடுக்க வேண்டும் என்பதில்லை.

 பாத்திஹா ஓதி விருந்தளிப்பவர்கள் பெரும்பாலும் வசதி படைத்த உறவினர்களைத் தான் அழைக்கின்றனரே தவிர, பசியால் வாடும் ஏழைகளை மனமுவந்து அழைப்பதில்லை. விருந்து சமயத்தில் வரும் ஒரு சில ஏழைகளுக்கு-வேண்டா வெறுப்பாக- அதுவும் மிச்சம் மீதி இருந்தால் மட்டுமே கொடுக்கப்படுகின்றது. எனவே ஏழைக்கு உணவளிக்க பாத்திஹா ஓதுவதாகக் கூறுவது சுத்தப் பொய்யே.

பெற்றோர்கள் இறந்து விட்டால் ஓரிரு நாட்கள் மட்டும் நினைவு நாள் கொண்டாடி பாத்திஹா ஓதுவதில் அர்த்தமில்லை. தினமும் அவர்களுக்காக இறைவனிடம் பாவ மன்னிப்புக் கோர வேண்டும்.ஒவ்வொரு தொழுகையிலும், தமது பெற்றோர் மண்ணறை வேதனையிலிருந்து காப்பாற்றப் படவும், மறுமையில் நற்பேற்றை அடையவும், இறைவனிடம் இறைஞ்ச வேண்டும். இஸ்லாம் கூறும் இந்தப் பிரார்த்தனைக்கு எந்தச் செலவும் இல்லை.

அறியாமையால் செய்யும் கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப்போகட்டும் இன்ஷா அல்லாஹ். 


அல்லாஹுவே மிகவும் அறிந்தவன் 

ஜஸ்ஸக்கல்லாஹ் ஹைரன்

Previous Post Next Post