- அப்துல்லாஹ் உவைஸ் மீஸானி
பலதார திருமணத்தைப் பற்றிப் பேசும் போது சில இஸ்லாமிய சிந்தனையாளர்களால் தவறான கருத்தொன்று பிரச்சாரம் செய்யப்படுகின்றது.
மேற்குலகக் கலாச்சாரத் தாக்கத்தால் பலதாரத் திருமணத்தை ஒரு குறையாகக் காணும் சில முஸ்லிம்கள் இக்கருத்தை வரவேற்பதோடு அதுதான் அல்குர்ஆனின் கருத்து எனவும் பிரச்சாரம் செய்து வருவதனை அவதானிக்க முடிகின்றது.
தவறான பிரச்சாரம்
4ம் அத்தியாயத்தின் 3ம் வசனத்தில்
அல்குர்ஆன், பலதார திருமணத்தை அங்கீகரிப்பதற்கு, நீதமாக நடந்துகொள்வதை நிபந்தனையாக விதித்துள்ள அதே வேளை அதே அத்தியாயம் 129ல் எவ்வளவுதான் முயன்றாலும் நீதமாக நடந்துகொள்ள முடியாது என்றும் குறிப்பிடுகின்றது. எனவே பலதார திருமணம் நீதிக்கு எதிரானது என்பதே அத்தவறான வாதமாகும்.
விளக்கம்
மேற்கூறிய கருத்தை ஏற்றுக்கொண்டால் அதனால் பல விபரீத விளைவுகளே உண்டாகும். அதில் சிலவை இதோ
1- ஓரிடத்தில் நீதம் செலுத்த முடியுமானால் பலதார திருமணத்திற்கு அனுமதியளித்துவிட்டு மற்றொரு இடத்தில் நீதம் செலுத்த முடியாது எனக் கூறி அல்குர்ஆன் தனக்குத்தானே முரண்படுகின்றது எனக் கூற வரும்.
2- பலதார திருமணம் செய்த நபியவர்களும் நபித்தோழர்களும் நீதமற்றவர்கள் என்ற பொருள் ஏற்படும்.
அப்படியானால் சரியான புரிதல் என்ன?
முதலில் கூறப்படும் நீதமும் பின்னர் கூறப்படும் நீதமும் வெவ்வேறானவை எனப் புரிந்துகொண்டால் முரண்பாடு நீங்கிவிடும்.
பலதாரத் திருமணம் செய்தவர் மனைவிமார்களுக்கு மத்தியில் இரவில் தங்குதல், செலவளித்தல் போன்றவற்றில் நீதமாக நடக்க வேண்டும் என்பதையே முதல் வசனம் கூறுகின்றது.
உங்களால் எவ்வளவு முயன்றாலும் நீதமாக நடக்க முடியாது என்ற வசனம் எல்லா மனைவிமாருக்கு மத்தியிலும் அன்பிலும் உடலுறவிலும் ஒரே விதமாக உங்களால் நடந்துகொள்ளமுடியாது என்பதைக் கூறுகின்றது. ஏனெனில் எவ்வளவு முயன்றாலும் இந்த இரண்டும் மனிதனின் கட்டுப்பாட்டை மீறியவையாகும். இதனால்தான் குறித்த வசனத்தின் அடுத்த பகுதியில் ஒரேயடியாக சிலர் பக்கம் சாய்ந்து விட வேண்டாம் எனக் கூறி அன்பு குறைந்தவர்களுக்கு அநீதி இழைத்துவிட வேண்டாம் எனக் கூறுகின்றது.
இதனால்தான் நபியவர்கள் கூட தமது மனைவிமார்களில் ஆயிஷா ரழி அவர்கள் மீதே அதிக அன்பு வைத்திருந்தார்கள்.
இது நாமாக இம்முரண்பாட்டை நீக்குவதற்குக் கண்டுபிடித்த தத்துவமல்ல. மாறாக இந்த வசனங்களை அல்குர்ஆன் விரிவுரையாளர்கள் தொன்றுதொட்டு இவ்வாறுதான் புரிந்துவந்துள்ளனர். ஆனால் இவர்கள் இன்று கூறும் விளக்கம் எவ்வித அடிப்படையுமில்லாதது மாத்திரமின்றி மேலே நாம் சுட்டிக்காட்டிய விபரீத விளைவுகளையும் ஏற்படுத்தும்.
எனவே பலதாரத் திருமணத்தில் எவ்வளவு முயன்றாலும் நீதமாக நடக்க முடியாது என அல்குர்ஆன் கூறுகின்றது என பொத்தாம் பொதுவாகக் கூறி பலதாரத் திருமணம் தற்காலத்திற்கு உகந்ததல்ல எனக் கூறுவது அறியாமை மாத்திரமின்றி அறிவியல் சோசடியுமாகும்.
பலதாரத் திருமணத்திற்கு அனுமதியுண்டு என்பதற்காக அதனனத் துஷ்பிரயோகம் செய்து தனது இச்சையைத் தீர்ப்பதை எவ்விதத்திலும் அங்கீகரிக்க முடியாது. அனைத்து மனைவிமார்களையும் ஒரே விதமாக நடத்த வேண்டும். ஒருவரின் மீதுள்ள அன்பு மற்றவர்களைப் புறக்கணிப்பதற்கு வழிவகுக்கக் கூடாது.
இதனால் குடும்பங்கள் சீரழிவிலிருந்து பாதுகாக்கப்படுவதோடு பெண்களுக்கு பாதுகாப்புமே உண்டு. சிலரது தவறான அணுகுமுறைகளை வைத்து இச்சட்டத்தை நீக்க முயல்வது சில காவல்துறையினர் செய்யும் தவறுக்காக காவல் நிலையத்தையே இழுத்துமூடுமாறு வாதிடுவதற்குச் சமனாகும்.