பெண்கள் மார்க்க தீர்ப்பு வழங்கலாமா?

(மௌலவியா சுமையா (ஷரயிய்யா)

பெண்கள் மார்க்க தீர்ப்பு வழங்குவது அனுமதியல்ல என்ற கருத்து இன்று சிலரால் சொல்லப்படுகிறது.. என்றாலும் அது ஒரு தவறான கருத்தாகும்.

ஏனென்றால் , அல்லாஹ் கூறுகிறான் ..
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إلَى الخَيْرِ وَيَاًمُرُونَ بِالمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ المُنكَرِ
மேலும்,உங்களில் ஒரு கூட்டத்தார்-அவர்கள் (மனிதர்களை) நன்மையின் பால் அழைக்கின்றவர்களாகவும், நல்லதைக்கொண்டு (மக்களை) ஏவுகின்றவர்களாகவும் , தீய செயல்களிலிருந்து (அவர்களை) விலக்குகின்றவர்களாகவும் இருக்கட்டும். (ஆலஇம்ரான்:104)

மேற்படி வசனத்தின் மூலம் அல்லாஹ் நன்மையை ஏவி, தீமையை தடுக்கும் ஒரு சமூதாயம் உலகில் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளான். அதிலும், இந்த உம்மத்தின் சிறப்பம்சமாகவும் இதனையே கூறிக்காட்டுகிறான்.

மனிதர்களுக்காக வெளியிறக்கப்பட்ட சமுதாயத்தில் நீங்கள் சிறந்தவர்களாக இருக்கிறீர்கள். (ஏனென்றால்,) நீங்கள் நன்மையை ஏவுகின்றீர்கள் ; தீமையை தடுக்கிறீர்கள் ; மேலும் அல்லாஹ்வை விசுவாசிக்கிறீர்கள் ..( ஆல இம்ரான் :110 )

இது போக, சூரத்துத்தௌபாவிலே, 71ஆம் வசனத்திலே அல்லாஹ் பின்வருமாறும் கூறிக் காட்டுகிறான்.
وَالْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ يَأمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ المُنكَرِ
விசுவாசம் கொண்ட ஆண்களும், விசுவாசம் கொண்ட பெண்களும் அவர்களில் சிலர் சிலருக்கு பொறுப்புதாரிகள். அவர்கள் (பிறரை) நன்மையை கொண்டு ஏவுகிறார்கள். தீமையை விட்டும் தடுக்கிறார்கள் …

ஆக , நன்மையை ஏவி தீமையை தடுப்பதென்பது ஆண், பெண் இருபாலாருக்கும் பொதுவான விடயமாகும். இதனால் தான் அல்லாஹ், அவர்களில் சிலர் சிலருக்கு பொறுப்புதாரிகள் என சுட்டிகாட்டுகிறான்.

அதே போன்று குறிப்பாக்கப் பட்டு வந்தவைகள் தவிர நபி(ஸல்) அவர்களினது பொதுவான ஏவலும் அவரது உம்மத்தின் இருபாலாருக்குமே!

இறை தூதர் (ஸல் ) அவர்கள் கூறுகிறார்கள் .; ‘ என்னை தொட்டு ஒரு வசனமாவது எத்திவையுங்கள் ..( சஹீஹுல் புகாரி )

என்றாலும், இறைதூதர்(ஸல்) அவர்களது காலத்தில் சட்டத்தீர்ப்புக்கும், மார்க்கவிளக்கங்களுக்கும் இறைத்தூதருக்கே தலைமை இடம் என்பதால், பெண்கள் இந்த பணியில் தம் பங்களிப்பை இதற்கென ஒரு பிரத்தியேக வடிவில் செய்யவில்லை. 

என்றாலும், ஆலோசனை வழங்கல், எதிரே நடக்கும் பாவங்களை தடுத்தல், நன்மையின் பால் தூண்டுவது என சில காரியங்களில் தம் பணியை முன்னெடுத்தே உள்ளார்கள்.

இறைதூதரின் மரணத்திற்கு பின் இந்தப்பணி பலவகையில் சிறந்ததாக மாறி, பெண்களின் கல்விப்புலமையால் பயனடைந்தவர்கள் பல்லாயிரம் பேர் என்பதற்கு வரலாறுகள் எமக்கு சான்று பகர்கின்றன.

முஸ்லிம்:1484 சபி’ஆ இப்னு ஹாரிஸ்
(1484) ، حَدَّثَنِي عُبَيْدُ اللهِ بْنُ عَبْدِ اللهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، أَنَّ أَبَاهُ كَتَبَ إِلَى عُمَرَ بْنِ عَبْدِ اللهِ بْنِ الْأَرْقَمِ الزُّهْرِيِّ، يَأْمُرُهُ أَنْ يَدْخُلَ عَلَى سُبَيْعَةَ بِنْتِ الْحَارِثِ الْأَسْلَمِيَّةِ، فَيَسْأَلَهَا عَنْ حَدِيثِهَا، وَعَمَّا قَالَ لَهَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ اسْتَفْتَتْهُ، فَكَتَبَ عُمَرُ بْنُ عَبْدِ اللهِ إِلَى عَبْدِ اللهِ بْنِ عُتْبَةَ يُخْبِرُهُ، أَنَّ سُبَيْعَةَ أَخْبَرَتْهُ
அப்துல்லாஹ் இப்னு உத்பா (ரஹ் ) அவர்கள் உமர் இப்னு அப்தில்லாஹ் அவர்களவில் கடிதம் எழுதி சுபைஆ பின்த் அல் ஹாரிஸ் (ரழி) அவர்களிடம் நுழைந்து அவரின் ஹதீஸை பற்றியும் அவர் (நபி ) அவர்களிடம் பத்வா கேட்ட வேளை அவருக்கு நபிகள் (ஸல் ) சொன்னது பற்றியும் (கேட்குமாறு ) ஏவினார் .. அப்போது சுபையா (தனக்கு சொன்னதாக ) அப்துல்லாஹ் இப்னு உத்பா (ரஹ்) உமர் (ரஹ் ) அவர்கள் பால் (பின்வருமாறு ) ஏவினார்கள் ..
(ஹதீஸின் சுருக்கம் )

இதே போல் உம்மு சலமா(ரழி) மற்றும் உம்மு அதிய்யா(ரழி) போன்றோர் இறைத்தூதரின் சொல்,செயல் போன்றவற்றை ஆண், பெண் விதிவிலக்கின்றி பல தடவைகள் பலருக்கு அறிவித்துள்ளனர் ..

இவர்களுக்குள் தனித்துவமாக பேசப்பட வேண்டிய ஒரு அறிவுச்சுடர் தான் அன்னை ஆஇஷா(ரழி) என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
இவரது அறிவுப்புலமையால் பிரயோசனம் அடைந்தவர்கள் ஆண்கள், பெண்கள் என எண்ணில் அடங்காதவர்கள் என்பது நாம் அறிந்ததே!

இமாம் ஸுஹ்ரி(ரஹ்) ஆஇஷா(ரழி) அவர்களைப்பற்றி பின்வருமாறு கூறிக்காட்டுகிறார்கள்.
“لو جمع علم عائشة إلى علم جميع أمهات المؤمنين وعلم جميع النساء لكان علم عائشة أفضله”
ஆஇஷா(ரழி) அவர்களது அறிவை, (ஏனைய) அனைத்து முஃமின்களின் தாய்மார்களினது அறிவோடும் அனைத்து பெண்களின் அறிவோடும் ஒன்று சேர்த்துப்பார்த்தால் ஆஇஷா’இனது அறிவு அவற்றிலே மிக சிறந்ததாக இருக்கும்.

மேலும் ஹிஷாம் இப்னு உர்வா (ரஹ்) ஆஇஷா(ரழி) அவர்களைப்பற்றி பின்வருமாறு கூறிக்காட்டுகிறார்கள்.
“مارأيت أحدا أعلم بفقه ولا طب ولا بشعر من عائشة”
பிக்ஹ், மருத்துவம், கவிதை போன்றவற்றிலே ஆஇஷா(ரழி) அவர்களை விட மிக அறிந்த ஒருவரை நான் பார்த்ததில்லை.
(தஹ்தீபுல் கமால் )

மேலும் மிஸி(ரஹ்) ஆஇஷா(ரழி) அவர்களைப்பற்றி பின்வருமாறு கூறிக்காட்டுகிறார்கள்.

அவர் அறியாத ஒன்றை அதைத்தேடி அறியும் வரை பிறரிடம் கேட்காதவராக இருந்தார். அதேபோல், இவர் நபி(ஸல்) அவர்களது ஹதீஸ்களை அறிவித்தவர்களில் அதிக ஹதீஸ்களை அறிவித்தவர்களின் பட்டியலில் காணப்படக்கூடியவராகவும் உள்ளார். 
இறைத்தூதர்களின்(ஸல்) அவர்களது மரணத்திற்கு பின், அல்லாஹ்வின் மார்க்கத்தை கற்றுக்கொள்ளல், அதை பரப்பல் போன்றவற்றிற்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்தார்.(தஹ்தீபுல் கமால் )

இன்னும் சஹாபாக்கள் ஏதாவது சிக்கல் படக் கூடிய சில மார்க்க சட்டங்களுக்கு ஆய்ஷா(ரழி) அவர்களிடம் வந்து தீர்ப்புக் கேட்டு தெளிவடைந்துள்ளார்கள் என்பதற்கு பல நிகழ்வுகள் சான்றாக இருக்கின்றது ..
இச்சான்றுகள் பெண்கள் மார்க்கத்தை கற்று, அதை பிறருக்கு பிரயோசனம் அளிக்கும் விதத்தில் உரிய சந்தர்ப்பத்தில் சமர்ப்பிப்பதற்கு மார்க்கம் தடை விதிக்கவில்லை என்பதை சொல்லிக் காட்டுகின்றது.

அதிலும், இறைத்தூதரின் உயர்ந்த சஹாபாக்கள் பலர் உயிரோடிருக்கும் சந்தர்ப்பத்திலே சஹாபா பெண்கள் தமக்கு தெரிந்ததை அவர்கள் மத்தியில் வெளிக்கொணர்ந்திருப்பதானது பெண்களுக்கு கல்வியை எத்தி வைப்பதற்கான சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டிருப்பது என்பதை மேலும் தெளிவுபடுத்துகிறது ..
.
அதே போல் அல்லாஹ் அல்குர்ஆனிலே சூரத்துல் அஹ்ஸாப் 32ஆம் வசனத்தில் “وَقُلْنَ قَوْلاً مَّعْروفاً -மேலும் நீங்கள் நன்மையான பேச்சையே பேசி விடுங்கள்” என்று நபி (ஸல் ) அவர்களின் மனைவிமார்களை விளித்து சொல்லியிருப்பதானது நளிவற்ற நல்ல (தெளிவான) வார்த்தையை பேச இறைவன் பெண்களுக்கு அனுமதி அளித்திருக்கிறான் என்பதை சுட்டிக்காட்டுகிறது.

எனவே, அறிவென்ற இந்த அமானிதம். இது
கிடைப்பது சிலருக்குத்தான். அல்லாஹ்வின் அருள் என்ற வடிவத்திலிருந்து அது சிலருக்கு கிடைக்கும் போது, மறுமை நெருங்கி அறிவீனர்கள் அதிகமாகும் இக்காலத்தில் அறிஞர்களான அவர்களது அறிவுகள் உலகுக்கு மிக அவசியமாகும். அது ஆணாகவோ பெண்ணாகவோ இருந்தாலும் சரியே!

அதுமட்டுமல்லாமல், அறிஞர்கள் இதை பர்ளுகிபாயா என்றும் சொல்கிறார்கள். அதாவது, சிலர் அதை செய்து விட்டால் மற்றவர்களை விட்டும் அந்த கடமை நீங்கிவிடும்.

எனவே அறிவுக்கென மக்கள் தாகிக்கும் சந்தர்ப்பத்தில், ஆணோ பெண்ணோ அறிவுள்ள யாரோ ஒருவர் அந்த தாகத்தை தீர்த்து வைப்பது அவசியத்திலும் அவசியமாகும்.

பெண்களை அறிவை எத்தி வைக்கும் பணியில் இருந்து ஒதுக்கிவிட நினைத்தோம் என்றால் வரலாற்றிலிருந்து நிறைய பொக்கிஷங்களை தூக்கிவிடவேண்டி ஏற்பட்டு விடும்.

தாபீ’ஈன்களிலிருந்து ஹதீஸ்கலையில் சிறந்து விளங்கிய பகீஹா அமாரா பின்த் அப்துர்ரஹ்மான், ஹப்ஸா பின்த் ஸீரீன் போன்ற புலமைபெற்ற ஹதீஸின் அறிவிப்பாளர்களெல்லாம் எமக்கு தேவையற்றவர்களாகி விடுவர். இவர்களிடமிருந்து உர்வா இப்னு ஹிஷாம் , அய்யூப் அஸ்சிக்தியாணி (ரஹ்) போன்ற மிகப்பெரும் ஹுப்பாள்கள் எல்லாம் ஹதீஸ்களை கேட்டுள்ளார்கள்.

அதே போன்று பெண்கள் மார்க்க தீர்ப்பு சொல்வதை தடுத்தால் இமாம் அஹ்மத் (ரஹ்) இன் முஸ்னத் என்ற கிதாபின் பிரதிகளை முழுவதுமாக அறிவித்து இந்த சமுதாயத்துக்கு மாபெரும் சேவையை ஆற்றிய சைனப் பின்த் மக்கீ(ரஹ்) , இமாம் கதீபுல் பக்தாதி (ரஹ்) போன்ற இமாம்களின் ஆசிரியையான பிரபல முஹத்திஸா கரீமா அல்மர்வசியா (ரஹ்) போன்றோர் ஹதீஸ் துறைக்கு ஆற்றிய சேவைகளை எல்லாம் இழக்க வேண்டியேற்படும் …

இன்னும் சொல்லப் போனால் முஜத்திதுல் ஹதீஸ் இமாம் அல்பானி(ரஹ்) அவர்களின் இரு பெண் வாரிசுகளான சகீனா பின்த் அல்பானி, ஹஸ்ஸானா பின்த் அல்பானி மேலும் இவர்கள் எழுதிய “அத்தலீல் இலா கிதபில்லாஹில்’ஜலீல்” இவையெல்லாம் தூக்கி வீசப்பட வேண்டிய ஒன்றாகி விடும்.

இது போன்று காலத்துக் காலம் ஆண்களில் இருந்து உலமாக்கள் இருக்கும் போதே பெண்கள் கல்வித்துறையை கற்றும் பிறருக்கு அதை எத்தி வைத்தும் இந்த மார்க்கத்திற்கு பெரும் சேவையாற்றி இருக்கிறார்கள் என்பது வரலாறு மறுக்க முடியாத ஒன்றாகும்..

ஆக , சொல்வது சரியாக இருந்தால் சீர்தூக்கி நடப்பதும், பிழையாக இருந்தால் தேவையற்று இருப்பதும் நடுநிலைவாதிக்கும் தெளிவான ஒரு மனிதனுக்கும் சிறந்த பண்பாகும்.

அல்லாஹ் நம்மனைவருக்கும் மார்க்கத்தில் விளக்கத்தை தருவானாக ..!!!
Previous Post Next Post