நல்ல மாற்றத்தில் ஏற்பட்ட தீய மாற்றம்

மிகச் சிறிது காலத்திற்கு முன்பு வரை கூட தமிழக முஸ்லிம் பெண்களிடம் ஹிஜாப் பற்றிய சரியான விழிப்பணர்வு இல்லாதிருந்தது.

சில பகுதிகளில் வெள்ளை வேட்டியை சேலைக்கு மேல் சுற்றிக் கொள்வதே இஸ்லாமிய ஹிஜாபாக இருந்தது. இன்னும் சில பகுதிகளில் சேலையோடு வெளியில் நடமாடுகிற வழக்கம் இருந்தது. மற்ற மதப் பெண்களிலிருந்து வித்தியாசப்படும் விதத்தில் தலையில் முக்காடாகப் போட்டுக் கொள்வார்கள். வேறு சில பகுதிகளில் அந்த வித்தியாசமும் இல்லாமலிருந்தது.

பெண்கள் அந்நிய ஆடவர் முன் தங்களின் அலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது என்பது பற்றி பேசும் திருக்குர்ஆனின் வசனத்தின் ஒரு பகுதியில் “தங்கள் முந்தானைகளை தங்களின் மேல் சட்டைகள் மீது போட்டுக் கொள்ளட்டும்.” [அல்குர்ஆன் 24:31] என்று அல்லாஹ் கூறுகிறான்.

மேல் சட்டை நெஞ்சுப் பகுதியை மறைத்திருந்தாலும் அதன் மீது கூடுதலாக முந்தானையை தொங்க விட வேண்டும் என்ற அல்லாஹ்வின் உத்தரவில் இருக்கும் நோக்கத்தையும் நியாயத்தையும் கவனிக்க வேண்டும்.
மேலும் அதே வசனத்தில் இன்னொரு பகுதியில், "தங்களது அலங்காரத்தில் தாம் மறைத்திருப்பது அறியப்படுவதற்காகத் தம் கால்களை அடி(த்து நட)க்க வேண்டாம்.” என்று கூறுகிறான்.

ஒரு பெண் நடக்கும்போது ஏற்படுகிற சப்தத்தால் கூட அந்நிய ஆணின் கவனம் திருப்பப்படலாம். அதனால் பெண்கள் தங்கள் கால்களை மண்ணில் அடித்து நடக்க வேண்டாம் என்று அல்லாஹ் கூறுவதிலிருந்து ஒரு பெண் அந்நிய ஆணின் கவனத்தை எந்த வகையிலும் தன் பக்கம் திருப்பிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்பதைப் புரிகிறோம்.

மார்க்க அறிவு பரவி, இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் அணியும் ஹிஜாப் முறையை தொலைக்காட்சி வழியாக காணவும் செய்த நம் தமிழக முஸ்லிம் பெண்களிடத்தில் ஹிஜாப் முறையில் விழிப்புணர்வு ஏற்பட்டது.

பரவலாக எல்லாப் பகுதிகளிலும் அபாயா என்று அரபியில் குறிப்பிடப்படும் முழுமையான கருப்பு நிற அங்கியை அணிகிற நடைமுறை ஏற்பட்டது.

இப்போது கண்ணையும் கருத்தையும் கவர்கிற விவாதத்தில் பூ வேலைப்பாடுகளுடனும் விதவிதமான டிசைன்களுடனும் அபாயா அணியும் பழக்கம் பரவிக் கொண்டிருக்கிறது.

இது இந்த ஹிஜாப் ஏற்ப்படுத்தப்பட்ட நோக்கத்திற்கே மாற்றமாக உள்ளதை கவனிக்க வேண்டும். உள்ளே உடலை முழுமையாக மறைக்கிற உடை அணிந்திருந்தாலும் அவற்றிலுள்ள பிறர் கவனத்தைக் கவரும் நிறங்களும், டிசைன்களும் அந்நிய ஆண்களின் பார்வையில் பட்டு அவர்களின் கவனத்தைத் திருப்பிவிடக் கூடாது என்கிற நோக்கத்தில் தான் முழுமையான கருப்பு அபாயா அந்த ஆடைகளுக்கு மேல் அணியப்படுகிறது.

அப்படியிருக்கையில் அந்த கருப்பு அபாயாக்களிலேயே கண்ணைக் கவரும் டிசைன்களும் பூ வேலைப்பாடுகளும் செய்யப்பட்டால் அந்த ஆடை உருவாக்கப்பட்டதன் நோக்கத்தையே சிதைப்பதாக இல்லையா?

இதில் கவனம் செலுத்தாமல் இத்தகைய புர்காக்களை அணியும் சகோதரிகளுக்கு ஒரு கேள்வி!: ஒரு பெண் தன் உடலை மறைக்க வேண்டிய அளவுக்கு முழுமையாக மறைக்கும் ஆடையை அணிந்திருக்கிறாள். ஆனால் அது இறுக்கமாக உள்ளது. அதனால் அவளது உடல் பாகங்களில் பலப் பகுதிகள் பார்ப்பவர்களுக்கு கவர்ச்சியாகத் தெரிகிறது. இப்படிப்பட்ட ஆடை அணிந்துகொண்டு அப்பெண் வெளியில் நடமாடுவதை சரி என்று சொல்கிறீர்களா?

தவறு என்று தான் சொல்வீர்கள்! அந்த உடை உடலை மறைத்தாலும் அந்நிய ஆண்களின் கவனத்தைத் திருப்புகிற விதத்தில் அமைந்துள்ளது என்பீர்கள். அப்படியானால் அதே காரணம் இந்த கவர்சிகர புர்காக்களை அணிவதிலும் உள்ளது என்பதால் இவற்றை அணிவதைப் புறக்கணிக்க வேண்டும்.
பெண்களின் முழுமையான ஆடை முறையும், வெளியில் அவர்கள் நடமாடுவதற்கான ஒழுங்குமுறையும் அந்நிய ஆடவர்களின் கவனத்தைத் திருப்பக் கூடாது என்பதற்காகவே நம் சத்திய இஸ்லாத்தில் வகுக்கப்பட்டுள்ளன. அதற்க்கு ஆதாரமாக பல குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் உள்ளன.

“...பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்னில் எவனுடைய உள்ளத்தில் (பாவம் எனும்) நோய் இருக்கிறதோ அவன் (உங்கள் மீது தவறான) ஆசை கொள்வான். மேலும் நீங்கள் நல்ல பேச்சையே பேசுங்கள்.” (அல்குர்ஆன் 33:32)

பேசும் பேச்சை குழைந்தும் நளினமாகவும் பேசி அந்நிய ஆணின் கவனத்தை திருப்பக் கூடாது என்று பெண்களுக்கான கூடுதல் ஒழுக்கத்தை அல்லாஹ் கற்றுக் கொடுக்கிறான்.

ஆக எந்த விதத்திலும் ஒரு பெண்ணின் நடை, உடை, பாவனை அன்னிய ஆணின் கவனத்தை ஈர்க்கக் கூடாது. இந்த அடிப்படையில், இப்போது நம் பெண்களிடம் பரவி வரும் கவர்சிகர புர்காக்கள் அணியும் நடைமுறை அறவே ஒழிக்கப்பட வேண்டும்!
நல்ல மாற்றத்தில் ஏற்பட்டுள்ள இந்த தீய மாற்றத்தை நம் சகோதரிகள் கைவிடுவதுடன் அதனை எதிர்க்கவும் வேண்டும்.
 
-M. அப்துர்ரஹ்மான் மன்பஈ.,MA.,M.phil 
أحدث أقدم