நன்றியுணர்வு: மகிழ்ச்சிக்கு குர்’ஆனிய தீர்வு

உலக செல்வங்கள் அனைத்தையும் பெற்றிருந்தும், குறை கூறிக்கொண்டிருக்கும் ஒருவரை எப்போதாவது சந்தித்திருக்கிறீர்களா?

ஏழ்மையில் உள்ள ஒரு குழந்தைக்கு யாராவது ஒரு பொம்மை கொடுத்தவுடன் அதன் முகத்தில் பொங்கும் மகிழ்ச்சியைப் பார்த்திருக்கிறீர்களா?

அப்படியிருந்தால், பொருட்கள் மட்டும் சந்தோஷத்தை அளிப்பதில்லை, நீங்கள் பார்த்தது அவற்றைப் பணிவுடனும், மகிழ்வுடனும் பெற்றுக் கொள்வதற்கு தயாரான மனநிலை மற்றும்   அசலான மகிழ்ச்சி.

குர்’ஆனில் அல்லாஹ் நன்றியுடன் இருக்கும்படி அறிவுரை கூறுவதுமல்லாமல், கட்டளையும் இடுகிறான்:

ஆகவே, நீங்கள் என்னை நினைவு கூறுங்கள்; நானும் உங்களை நினைவு கூறுவேன். இன்னும், நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள்; எனக்கு மாறு செய்யாதீர்கள்.. [அல் குர்’ஆன் 2:152]

நாம் அவனளிக்கும் வாழ்வாதரத்திற்காக நன்றியுடன் இருக்க வேண்டும். [2 :172], போரில் கிடைத்த வெற்றிக்காக  [3 :123], அவனுடைய மன்னிப்பிற்காக [2 :252], அவனுடைய வழிகாட்டுதலுக்காக [2 :185], வாக்களிக்கப்பட்டுள்ள மறுமை நற்கூலிகளுக்காக [3 :145], மேலும் எண்ணற்ற பல அருட்கொடைகளுக்காக.

அல்லாஹ் (சுபஹ்) ஒன்றைச் செய்யக் கட்டளையிட்டு, அதனால் நமக்கு மகிழ்ச்சிக்கு உத்திரவாதம் அளிக்கிறான் என்றால், அது நம்மீது அவனுக்குள்ள எல்லையில்லாத  அன்பை வெளிப்படுத்தக்கூடிய சக்தி வாய்ந்த அடையாளம்!

‘அல்ஹம்துலில்லாஹ்’ என்ற சொல்லுக்கு அற்புதமான பொருள், ‘எல்லா புகழும் நன்றியும் அல்லாஹ்வுக்கே உரியது’ என்பதாகும்.  ‘நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?’ என்ற சாதாரண கேள்விக்கு முஸ்லிம்கள் கூறும் பதில் இது.  இந்த வார்த்தையை உணர்வின்றி இயந்திரகதியில் சொல்லும்போது பெரும்பாலும் அதன் பொருள், ‘என்னுடைய காரியங்கள் மிகவும் சிரமமாக இருக்கின்றன, இருந்தாலும் நான் அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லித் தானே ஆக வேண்டும்.’ என்பதாகத்தான் இருக்க வேண்டும்.

இது மாதிரியான பதில் உண்மையில் நன்றியுணர்வை வெளிப்படுத்துவதில்லை.  மாறாக, நன்றியுணர்வோடு இருக்க வேண்டும் என்ற கடமையைப் பற்றிய காழ்ப்புணர்வாகத் தான் இருக்கும்.  ஆனால் உண்மையில், மிகக் கடுமையான சோதனை மிக்க சூழ்நிலையில் கூட நாம் நன்றி சொல்வதற்கு ஏதாவது இருக்கும்.  உதாரணமாக, நம்முடைய சோதனைகள் அவை இருக்க வேண்டிய அளவு அத்தனை கடினமாக இல்லை என்பது.  அல்லாஹ் (சுபஹ்) நம்மை இன்னும் சிறந்த மனிதர்களாக்குவதற்காக சோதனைகளைக் கொடும் அளவிற்கு நம் மீது அன்பு வைத்திருக்கிறான் என்பதை எண்ணி நன்றியுடன் இருக்க வேண்டும்.  வாழ்வில் மிகச் சிறிய விஷயங்களான, வலிகள், நோய், உழைப்பு, பண நெருக்கடி இவற்றிற்கெல்லாம் கூட நாம் நன்றி செலுத்த வேண்டும்.

பொருள் சார்ந்த மோகம் மனிதகுலத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதை வெல்ல வேண்டுமென்றால், நாம் கடுமையான ஆன்மீகப் பயிற்சி மற்றும் அல்லாஹ்வை நினைவு கூருதல் மூலமாகத் தான் அதை அடைய முடியும்.  ‘மற்றவர்களைப் போல் நாமும் இருக்க வேண்டும்’ என்ற கடுமையான அழுத்தத்தினால், நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை, அல்லாஹ்வின் தயாள குணத்தினால் மட்டும் பெற்ற பணத்தை, நமக்கு உண்மையிலேயே தேவையில்லாதவற்றை மற்றவர்களைக் கவர வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக வாங்கும் பழக்கத்திலிருந்து இதன் மூலம் தான் நாம் விடுபட முடியும்.  மேலும், இந்த நுகர்வோர் பொருட்களை நாம் வாங்கினாலும் அந்த சந்தோஷம் குறுகிய காலத்திற்குத் தான் இருக்கும்.  வேறொருவர் அதை விடச் சிறந்த பொருளை வாங்குவதைப் பார்த்தவுடன் அந்த மகிழ்ச்சி மறைந்து விடும்.

நம் வாழ்வின் எல்லா அம்சங்களிலும் நன்றியுணர்வை வளர்த்துக் கொள்வதோடு, தொழுகையில் நமக்குக் கிடைக்கக்கூடிய அருமையான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, எல்லாவற்றையும் நிறுத்தி விட்டு, நன்றியுணர்வின் மகிழ்ச்சி அலைகள் நம்மை சூழ்ந்து கொள்ள அனுமதிப்போம்.

உங்களுடைய மனமும், இதயமும் திறந்து, ஒளி பெற்று, ஊட்டம் பெறட்டும்.  ஆமீன்.
Previous Post Next Post