நரகத்திற்கு இட்டுச்செல்லும் நாகரீகம்..!


بسم الله الرحمن الرحيم

-ஹஸ்னா அன்சார் ஷரஇயா

இன்றைய காலகட்டத்தில் எமது ஒட்டு மொத்த மனித சமுதாயமும் நவீன உலகின் புதுமைகளை நோக்கி விரைந்து சென்று கொண்டிருக்கிறது .

அவைகளை அடியொட்டி பின்பற்ற வேண்டும் என்ற விடயத்தில் ஆர்வமுள்ளவர்களாகவும், அதுவே தங்களின் வாழ்க்கையின் இலட்சியம் போல் வாழ்பவர்களாகவும் முஸ்லிம்களும் உள்ளனர் என்பது கவலைக்குரிய விடயம் .. .

இதனால் அவர்களுக்கென்று அல்லாஹ்வால் வழங்கப்பட்ட நன்னடத்தைகள், செயற்பாடுகள் மற்றும் அவனுடைய அருள்கள், ஏன் அவனால் வழிகாட்டப்பட்ட நேர்வழியைக் கூட மாற்றிக்கொள்வதற்கு எம் சமுதாயம் தயாராகின்றது என்பதும் ஆச்சரியப்படவேண்டிய விடயமல்ல.

இவ்வாறான இவர்களின் மாற்றங்களுக்கும், புதுமைகளுக்கும் இவர்கள் சூட்டிய பெயர்தான் “நாகரீகம்” இதனாலோ என்னவோ இந்த நாகரீகத்தை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடி, அவனது நேர்வழியைத் தேடிச் செல்லும் மனிதர்களை “நாகரீகம் இல்லாதவன்” என்று இவர்கள் வாய் கூசாமல் சொல்லிக் கொள்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல் தன் உயிர் இந்த உலகை விட்டு பிரிவதற்கு முன் எவ்வாறெல்லாம் ஆடம்பரமான, நாகரீகமான வாழ்க்கையை வாழ முடியுமோ அவ்வாறு வாழ்ந்து இவ்வாழ்வை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையில் ஆளுக்காள் போட்டிபோட்டு; சண்டையிட்டு சுயநலத்திற்காக பிரிவுகளையும் பகைமைகளையும் உருவாக்க எம் சமூதாயம் தயாராகிவிட்டது.

இவ்வாறான இந்த மாற்றங்களினதும், புதுமைகளினதும் மையம் என்ன? இவை எங்கிருந்து ஆரம்பமானது? என்பதை எம்மில் பலர் சிந்திக்கத் தவறிவிட்டோம்.

ஆனால் சுமார் 1400 வருடங்களுக்கு முன்னர் எம் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இதைப் பற்றி முன்னெச்சரிக்கை செய்யத் தவறவில்லை:

உங்களுக்கு முன்னிருந்தவர்களின் வழிமுறைகளை நீங்கள் சாண் சாணாக, முழம் முழமாக பின்பற்றுவீர்கள் எந்த அளவுக்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் நுழைந்தால் கூட நீங்கள் அவர்களைப் பின்பற்றி நுழைவீர்கள். அதற்கு சஹாபாக்கள்: “அல்லாஹ்வின் தூதரே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையுமா (நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்)? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “வேறு யாரை” என்று கேட்டார்கள்.
(புகாரி – 7320)

எவர்களின் வாசனை கூட எம்மில் படக் கூடாது என எம் தூதர் (ஸல்) அவர்கள் எமக்கு எச்சரிக்கை செய்தார்களோ அந்த யூத கிறிஸ்தவர்களின் வழிமுறையைத் தான் இன்று நாகரீகம் என்ற பெயரில் நாம் எம் மத்தியில் அரங்கேற்றுகிறோம்.

மக்கள் சாரை சாரையாக புனித மார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளவதை தாங்கிக்கொள்ள முடியாத அந்த சமூகம் முஸ்லீம்களை இந்த மார்க்கத்தை விட்டும் திசை திருப்ப பல முயற்சிகளை மேற்கொண்டனர், பல சதி வலைகளை விரிக்கத்தொடங்கினர்.

நேரடியாக ஒரு முஸ்லிமிடம் சென்று “உன் மார்க்கத்தை விட்டு விடு , ஹிஜாபை கழற்று , இவ்வாறெல்லாம் கூறினால் எந்த முஸ்லிமையும் இஸ்லாத்தின் கலாச்சாரத்தை விட்டு திருப்ப முடியாது என அவர்கள் நன்றாகவே விளங்கியிருந்தனர்.

இதனால் தொலைக்காட்சி, தொலைபசி போன்ற சாதனங்களை அறிமுகப் படுத்தி சமூக வலயத்தலங்களினூடாக கொஞ்சம் கொஞ்சமாக முஸ்லீம்களின் இஸ்லாமிய சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தி இறை தூதரின் வழிமுறைகளை அநாகரிகமாகக் காட்டினர்.

அவர்கள் (யூத,கிறிஸ்தவர்கள்) காட்டிய கலாச்சாரங்கள், மேம்பாடுகள் நம்மில் அதிக தாக்கத்தை செலுத்தி அது முஸ்லிம் ஆண்கள், பெண்கள் , சிறார்கள் என அனைவரிலும் மேலும் முஸ்லிம் பாடசாலைகள் , வீடுகள் என அனைத்து இடங்களிலும் வெளிப்படத் தொடங்கின.

இன்று எமது பெண்கள் தன்னுடைய புருவம் கவர்ச்சியாக இல்லை என்று புருவங்களை சிரைக்கின்றனர், பற்கள் அழகாக இல்லை என்று பற்களை கூர்மையாக்குகிறார்கள், ஒட்டு முடி வைக்கின்றனர், இவ்வாறு அல்லாஹ்வின் அழகான படைப்பில் கொஞ்சம் கொஞ்சமாக கையடிக்கத் தொடங்கிவிட்டனர்.

அதுமட்டுமல்லாமல் தன்னுடைய நிறமும் கூட ஏனையவர்களை கவர வேண்டும் என்பதற்காக இன்று புதிது புதிதாக வெளியிடப்படும் வயிட்னிங் கிரீம் (whitening cream) கள் பயன்படுத்தப்படுவது பெரும்பாலும் எமது முஸ்லீம்களின் வீடுகளில் தான் என்பதிலும் எவ்வித சந்தேகமுமில்லை.

“நான் அவர்களுக்கு ஏவுவேன் அப்போது அவர்கள் அல்லாஹ்வின் படைப்பை மாற்றுவார்கள்” என சைத்தான் அல்லாஹ்விடத்தில் சபதமிட்டது எங்களில் பலருக்கு மறக்கடிக்கப்பட்டதாக மாறியதே இதற்குக் காரணம்.

அதுமட்டுமல்லாமல் பெண்களின் மானத்தைப் பாதுகாப்பதற்காக அணியப்படும் ஆடைகளிலும் அவர்களது சூழ்ச்சியை உட்செலுத்த அவர்கள் தவறவில்லை.

ஒரு இஸ்லாமியப் பெண்ணின் சின்னமாகவும், அவளது மானத்தையும், கௌரவத்தையும் பாதுகாப்பதற்காகவும் எமது பெண்களுக்கு மத்தியில் அணியப்பட்டு வந்த ஹபாயா, பர்தாக்கள் இன்று அந்தப் பெண்ணையே ஒரு காட்சிப் பொருளாக மாற்றக்கூடிய ஒன்றாக மாறிவிட்டது.

அதை விட பரிதாபம் என்னவென்றால் “ இஸ்லாமிய ஹிஜாபை தூய்மையாக அணியும் முஸ்லிம் பெண்கள் சில ( அ) நாகரிக வாதிகளிளாலும் அறிவிலிகளாலும் தூற்றப்படுவதுதான் .

அத்தோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் தான் அணியும் ஷோல்(shole) மற்றவர்களை கவரக்கூடியதாக இருப்பதற்காக தங்களுடைய கொண்டைகளை ஒட்டகத்தின் திமில்களைப் போன்று உயர்த்திக்கட்டுவது தான் நாகரீகம் என்று அவர்களின் ஆழ்மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
صنفان من أهل النار لم أرهما قوم معهم سياط كأذناب البقر يضربون بها الناس ونساء كاسيات عاريات مميلات مائلات رؤوسهن كاسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها ليوجد من مسيرة كذا وكذا
இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அந்த இரு பிரிவினரையும் நான் பார்த்ததில்லை (முதலாவது பிரிவினர் யாரெனில்) மக்களில் சிலர் பசு மாட்டின் வாலைப் போன்ற சாட்டைகளை தம்மிடம் வைத்துக்கொண்டு, மக்களை அடிப்பார்கள். (இரண்டாவது பிரிவினர் யாரெனில்) மெல்லிய உடையணிந்து, தம் தோள்களைச் சாய்த்து நடந்து (அந்நிய ஆண்களின் கவனத்தை) தன் பால் ஈர்க்கக்கூடிய பெண்கள் ஆவர். அவர்களது தலை(முடி), கழுத்து நீண்ட ஒட்டகங்களின் (இரு பக்கம்) சாயக்கூடிய திமில்களைப் போன்றிருக்கும்.
அவர்கள் சொர்கத்தில் நுழையமாட்டார்கள், சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகரமாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு பயணத் தொலைவிலிருந்தே வீசிகொண்டிருக்கும். (முஸ்லிம் – 4316)

அன்பின் சகோதரிகளே !!! இறை தூதர் ( ஸல் ) அவர்கள் “சுவனத்தின் வாடையைக் கூட நுழைய மாட்டார்கள் “ என்ற பெண்களின் பட்டியலிலா வீழ்ந்து விட்டோம் ???? சற்று சிந்தியுங்கள். 
அல்லாஹ் பாதுகாப்பானாக.

இந்த மாற்றம் எங்களது இளைஞர்களையும் காவுகொள்ளாமல் விட்டுவிடவில்லை. சினிமா நடிகர்களையும், விளையாட்டு வீரர்களையும் முன்மாதிரிகளாக எடுத்துக்கொண்டு பேச்சு, நடவடிக்கை போன்ற அனைத்து விடயங்களிலும் தங்களை மாற்றிக்கொள்ள முனைந்துவிட்டனர்.

அதற்கு ஓர் சிறிய உதாரணம் தான் தங்களது தலை முடியை அலங்கரிப்பதற்காக முடியின் ஒரு பகுதியை விட்டு விட்டு மறு பகுதியை மட்டும் மளிக்கின்றனர்.

அதே போல் இறைதூதரின் வழிமுறைகளான தாடியை வளர விடுவது, கரண்டைக் கால் கீழ் ஆடை அணிவது போன்றவைகளை கேவலமாக நினைத்து பெஷன் ஆடையும் அணிந்து தாடியை சிரைக்கின்றனர். அல்லது கத்தரிக்கின்றனர் .

அதை விட அநியாயம் என்னவென்றால் இறை தூதரின் வழிகாட்டலான தாடி சில நாகரீக தாய்மார்களுக்கும் மனைவிமார்களுக்கும் வெறுப்பாகத் தெரிவது. இத்தகைய பெண்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அல்லாஹ், ரசூலால் எச்சரிக்கப்பட்டு, சுவனத்தின் வாடையைக் கூட நுகரமுடியாத அளவுக்கு எம்மை மாற்றக்கூடிய விடயங்களைத் தான் இன்று நாம் நாகரீகம் என்ற பெயரில் அரங்கேற்றி அதற்கு அடிமைகளாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

இவ்வாறான கெட்ட சூழ்ச்சிகளுக்கு நாம் அடிமையாகிப் போய், நரகவாதியின் செயல்களை செய்வதற்கு துணிந்து செல்வதற்கான முக்கிய காரணம் போதுமென்ற மனப்பாங்கு எங்களுக்குள் இல்லாமல் போனமையும் நரகத்தையும், அல்லாஹ்வின் தண்டனையைப் பற்றிய அச்சமின்மையும்தான்.

. “(வாழ்க்கை) வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாக போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும். (முஸ்லிம் – 6446)

என்ற அல்லாஹ்வின் தூதரின் கூற்றிற்கேற்ப, எவர் ஒருவர் தனக்கு அல்லாஹ் அருளியவற்றை முழு மனதோடு போதுமாக்கிக்கொண்டு நாகரீகம் என்ற பெயரில் உலாவருகின்ற அநாகரீகமான செயல்களை விட்டும் தூரமாகிக்கொள்கிறாரோ அவர் அல்லாஹ்வும், தூதரும் எச்சரித்த பாவமான பாதையில் செல்வதற்கு அவருடைய மனச்சாட்சியே அவருக்கு தடைக்கல்லாக அமையும்.

எனவே அல்லாஹ் அருளிய அருட்கொடைகள்: சொத்து, சுகம், ஆரோக்கியம் அனைத்தையும் முழு மனதோடு ஏற்றுக்கொண்டு, அவற்றை அல்லாஹ் ஏவியபடி ஹலாலான முறையில் அனுபவித்து, இந்த போலியான உலகின் அலங்காரத்திற்காக எந்த உறுப்பிலெல்லாம் கை வைத்தோமோ அதே உறுப்பே நாளை மறுமையில் எமக்கெதிராக சாட்சி சொல்லக்கூடிய கைசேதமான நிலைமையிலிருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்வோமாக!
أحدث أقدم