- மவ்லவி. அப்பாஸ் அலி MISC - முன்னாள் ததஜ ஆய்வாளர்-
மூசா தன் சமூகத்தாரிடம் என் சமூகமே நீங்கள் காளைக் கன்றை (கடவுகளாக) எடுத்துக்கொண்டதின் மூலம் உங்களுக்கு நீங்களே அநீதியிழைத்துக்கொண்டீர்கள். எனவே உங்களை நீங்களே கொலை செய்து உங்களைப் படைத்தவனிடம் பாவமன்னிப்புத் தேடிக்கொள்ளுங்கள். இதுவே உங்களைப் படைத்தவனிடம் உங்களுக்கு சிறந்தது எனக் கூறினார். இதன்பின் அவன் உங்களை மன்னித்தான். நிச்சயமாக அவன் மன்னிப்பவனாகவும் கருணையாளனாகவும் இருக்கிறான். அல்குர்ஆன் (2:54)
மூசா ( அலை) அவர்கள் இறைவனிடம் தவ்ராத்தை வாங்குவதற்காக சென்றார்கள். தன் சமூகத்தாரை நபி ஹாரூன் (அலை) அவர்களின் பொறுப்பில் விட்டுவிட்டுச் சென்றார்கள். மூசா(அலை) அவர்கள் சென்ற பின் இஸ்ரவேலர்கள் காளைக் கன்றை வணங்க ஆரம்பித்தனர்.
இதன்பின் மூசா (அலை) அவர்கள் இஸ்ரவேலர்களிடம் உங்களை நீங்களே கொலைசெய்யுங்கள் எனக் கூறியதாக மேற்கண்ட வசனம் கூறுகிறது. இந்த வசனத்தின் நேரடிப் பொருளையும் இதற்கு இஸ்லாமிய அறிஞர்கள் அளித்த சரியான விளக்கத்தையும் சகோதரர் பீஜே அவர்கள் நிராகரித்துள்ளார். இத்துடன் இதற்கு அவர் சுயமாக வேறு ஒரு விளக்கத்தை அளித்துள்ளார்.
உண்மையில் சகோதரர் பீஜே அவர்களின் விளக்கம் தான் குர்ஆனுக்கு எதிராகவும் நகைப்பிற்குரியதாகவும் உள்ளது. இதை இக்கட்டுரையில் விரிவாக அறிந்துகொள்வோம்.
பீஜே அவர்களின் தவறான சுய விளக்கம்
தற்கொலை செய்யக் கட்டளையா?
உங்களையே கொன்று விடுங்கள் என்று மூஸா நபியவர்கள் கூறிய செய்தி 2:54 வது வசனத்தில் இடம் பெற்றுள்ளது. இதை நேரடிப் பொருளில் பெரும்பாலான விரிவுரையாளர்கள் விளங்கியுள்ளனர்.காளைச் சிற்பத்தைக் கடவுளாக ஆக்கியதற்காக மூஸா நபியின் சமுதாயம் தம்மைத் தாமே கொன்று விட வேண்டும் என்று மூஸா நபி கட்டளையிட்டதாக அந்த விரிவுரையாளர்கள் கூறுகின்றனர்.தமது சமுதாயத்தினர் ஏகத்துவக் கொள்கைக்கு எதிராக நடந்து கொண்டதை மூஸா நபியவர்கள் கண்ட பின் கடுமையாகக் கோபம் கொண்டார்கள். தமது கையில் உள்ள வேதத்தையே அவர்கள் கீழே போடும் அளவுக்கு அவர்களின் கோபம் இருந்தது. மேலும் தமது சகோதரரும், சக நபியுமான ஹாரூனைப் பிடித்து இழுத்து அடிக்கும் அளவுக்கு அந்தக் கோபம் இருந்தது. (பார்க்க: திருக்குர்ஆன் 7:150)இவ்வாறு கடுமையாகக் கோபம் கொண்ட நிலையில் "செத்துத் தொலையுங்கள்' என்று கூறுவது மனிதரின் இயல்பாக உள்ளது. "மரணித்து விடுங்கள்' என்ற பொருளை நினைத்துக் கொண்டு இவ்வாறு கூறுவதில்லை. கோபத்தை வெளிப்படுத்தவே இவ்வாறு கூறுகிறோம்.மூஸா நபியின் இந்தக் கூற்றையும் இவ்வாறே நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இது தான் ஏற்புடையதாக உள்ளது. ஏனெனில் தற்கொலை செய்து கொள்ளுமாறு இறைத் தூதர்கள் கட்டளையிட்டிருக்க முடியாது.
பொதுவாக மனிதனுக்கு கோபம் வரும் போது செத்துத் தொலை என்று அவன் கூறுவதுண்டு. இந்த அடிப்படையில் தான் மூசா (அலை) அவர்களும் கோபத்தில் தன்னை அறியாமல் வார்த்தையின் பொருளை நாடாமல் செத்துத் தொலையுங்கள் எனக் கூறியதாக இவர் வாதிடுகிறார். சகோதரர் இங்கே மிகப் பெரிய இரண்டு தவறுகளை செய்கிறார்.
1. உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளுங்கள் என்றால் தற்கொலை செய்துகொள்ளுங்கள் என்பதே இதன் நேரடிப் பொருள் என அவர் விளக்கம் தருகிறார். இவ்வாறே பெரும்பாலான இஸ்லாமிய அறிஞர்கள் விளக்கம் கொடுத்துள்ளார்கள் என்றும் கூறுகிறார். இது முதல் தவறாகும்.
2. மூசா (அலை) அவர்கள் நடைமுறைப்படுத்தும் நோக்கமின்றி கோபத்தில் உளறினார்கள் என்று இவர் சுய விளக்கம் தருகிறார். இவ்வாறு சில இஸ்லாமிய அறிஞர்கள் கூறியுள்ளதாகவும் குறிப்பிடுகிறார். இது இரண்டாவது தவறாகும்.
உங்களை நீங்களே கொலை செய்துகொள்ளுங்கள்
இஸ்ரவேல் இனத்தில் காளைக் கன்றை வணங்கி தடம்புரண்டவர்களும் இருந்தனர். இந்த இணைவைப்பில் ஈடுபடாமல் அல்லாஹ்வை மட்டுமே வணங்குவோம் என்ற கொள்கை உறுதியுடையோரும் இருந்தனர். இந்நிலையில் இஸ்ரவேல் இனத்தாரைப் பார்த்து உங்களை நீங்களே கொலை செய்யுங்கள் என்றால் உங்களில் இப்பாவத்தை செய்தவர்களை இப்பாவத்தைச் செய்யாதவர்கள் கொல்லுங்கள் என்பதே இதன் நேரடிப் பொருளாகும்.
இது தற்கொலை அல்ல. அல்லாஹ்விற்கு இணைவைக்கும் பெரும்பாவத்தை செய்தவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய தண்டனையும் பாவத்திற்கான பரிகாரமும் ஆகும். இனி இதுபோன்ற காரியத்தை இஸ்ரவேலர்கள் எப்போதும் செய்யக்கூடாது என்பதற்கு அல்லாஹ்வின் எச்சரிக்கையாகும். இங்குற்றத்தை செய்தவர்களுக்கு இறைவன் இதையே பாவமன்னிப்பாக ஆக்கினான்.
அல்லாஹ் இஸ்ரவேலர்களுக்காக கடலை இரண்டாக பிளந்து அவர்களை காப்பாற்றினான். அவர்களின் எதிரி ஃபிர்அவ்னையும் அனது படையினரையும் கடலுக்குள் மூழ்கடித்தான். இதனால் கொத்தடிமைகளாக இருந்த இஸ்ரவேலர்களுக்கு சுதந்நதிரம் கிடைத்தது. இதற்குப் பிறகு இவர்கள் அல்லாஹ்விற்கு இணைகற்பித்ததால் இறைவன் இதை தண்டனைக்குரிய கடும் குற்றமாக கருதினான். எனவே ஒருவர் மற்றவரை கொலை செய்யுமாறு கூறினான்.
விபச்சாரம் கொலை போன்ற குற்றங்களுக்கு இஸ்லாம் மரணதண்டனையை விதித்துள்ளது. இக்குற்றத்தை செய்தவர்கள் மனம்வருந்துவதுடன் இத்தண்டனைகளை ஏற்றுக்கொண்டு மரணித்தால் இதுவே அவர்களின் பாவத்திற்கு பரிகாரமாகிவிடுகிறது. அல்லாஹ் இதன் மூலம் அவர்களின் பாவங்களை மன்னிக்கிறான்.
உங்களை நீங்களே கொலைசெய்துகொள்ளுங்கள் என்ற வாசகத்தை மேலோட்டமாக பார்த்துவிட்டு இவ்வசனம் தற்கொலை செய்யச் சொல்வதாக சகோதரர் பீஜே தவறாகப் புரிந்துவிட்டார்.
தனியொரு இனத்தைப்பார்த்து உங்களுக்கு நீங்களே உதவிக்கொள்ளுங்கள் என்றால் அந்த இனத்தில் இயலாதவர்களுக்கு இயன்றவர்கள் உதவி செய்யுமாறு சொல்லப்படுகிறது என்று அறிந்துகொள்கிறோம். இந்த அடிப்படையில் அல்லாஹ் குர்ஆனில் பல இடங்களில் பேசியுள்ளான். பின்வரும் வசனங்களிலிருந்து இதை அறியலாம்.
உங்கள் இரத்தங்களை நீங்கள் ஓட்டக்கூடாது. உங்களை நீங்களே உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றக்கூடாது என உங்களிடம் நாம் உடன்படிக்கை வாங்கியதை நினைத்துப்பாருங்கள். பின்னர் நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள். இதற்கு நீங்களே சாட்சிகளாவீர்கள். இதன்பின் உங்களை நீங்களே கொன்நீர்கள். உங்களில் ஒருபிரிவினரை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றினீர்கள். அவர்களுக்கு எதிராக வரம்புமீறி பாவமான முறையில் உதவிக்கொண்டீர்கள். அல்குர்ஆன் (2:85)
இந்த வசனத்தில் அல்லாஹ் இஸ்ரவேலர்களைப் பார்த்துப் பேசுகிறான். உங்களை நீங்களே கொலைசெய்யக்கூடாது என்றால் உங்களில் ஒருவர் மற்றவரை கொல்லக்கூடாது என்று விளங்கிக்கொள்கிறோம். தற்கொலை செய்வதைப் பற்றி இவ்வசனம் பேசுவதாக அறிவுள்ள யாரும் கூறமாட்டார்கள்.
உங்களில் இருந்தே உங்களிடம் ஒரு தூதர் வந்துவிட்டார். நீங்கள் சிரமப்படுவது அவருக்கு பாரமானதாகும். உங்கள் மீது அக்கரையுள்ளவர். இறைநம்பிக்கையாளர்களிடம் இரக்கமுள்ளவர். கருணையாளர். அல்குர்ஆன் (9 128)
உங்களில் இருந்து ஒரு தூதர் என்றால் உங்கள் இனத்தில் இருந்து ஒரு தூதர் வந்துவிட்டார் என்பதாகும்.
உங்களை நீங்களே குறைகூற வேண்டாம். ஒருவர் மற்றவருக்கு பட்டப்பெயர் சூட்டாதீர்கள். இறைநம்பிக்கைகொண்ட பிறகு தீயபெயர்களை சூட்டுவது பாவமாகும். திருந்திக்கொள்ளாதவர்களே அநீதியிழைத்தவர்கள். அல்குர்ஆன் (4911)
ஒரு தனிமனிதன் தன்னைப் பற்றி குறைகூறுவதைப் பற்றி இவ்வசனம் பேசவில்லை. மாறாக இஸ்லாமிய சமூகத்தில் ஒருவர் மற்றவரை குறைபேசக்கூடாது எனஅல்லாஹ் கூறுகிறான். முஸ்லிம்கள் அனைவரும் ஒரே கூட்டம் என்பதால் உங்களை நீங்கள் குறைகூறக்கூடாது என்பது போன்ற வார்த்தைப் பிரயோகம் குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
எனவே காளைக்கன்றை வணங்காதவர்கள் அதை வணங்கியவரைக் கொல்லுங்கள் என்பதே சரியான விளக்கம் ஆகும். இந்த விளக்கத்தையே பெரும்பாலான இஸ்லாமிய அறிஞர்கள் கூறியுள்ளனர். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் இவ்வாறே விளக்கம் அளித்துள்ளனர்.
இஸ்ரவேலர்கள் காளைக் கன்றை வணங்கியபோது அது தவறு என்பதை உணர்ந்த பலர் அவர்களை தடுக்காமல் இருந்தனர். சமுதாயத்தில் பிரிவினை ஏற்படக்கூடாது எனக் கருதினர். தீமையை தடுக்க வேண்டிய நேரத்தில் இவ்வாறு நாம் சிந்திக்கக்கூடாது. உறவினரானாலும் நெருங்கியவரானாலும் இணைவைத்தால் அவர்களை நாம் நேசிக்கக் கூடாது என்பதை உணர்த்துவதற்காகவும் அல்லாஹ் இவ்வாறு கட்டளையிட்டான் என சில அறிஞர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
அந்த சமூகத்தில் குற்றமிழைத்தவர்கள் ஒவ்வொருவரும் தன்னைத் தானே கொலை செய்துகொள்ள வேண்டும் எனமூசா (அலை) அவர்கள் கூறினார்கள் என்று வைத்துக்கொண்டாலும் இதை மார்க்கம் தடைசெய்துள்ள தற்கொலையுடன் ஒப்பிட முடியாது. தற்கொலை என்பது ஒரு மனிதன் தன் விருப்பத்தின் படி தன் உயிரை தானே போக்கிக்கொள்வதாகும். அல்லாஹ் இந்த அதிகாரத்தை யாருக்கும் வழங்கவில்லை என்பதால் இது மார்க்கத்தில் தடைசெய்யப்பட்ட அம்சமாகும்.
ஆனால் நாம் செய்த பாவத்திற்கு பரிகாரமாக நம் உயிரை நாமே போக்கிக்கொள்ள வேண்டும் என அல்லாஹ்வே இறைத்தூதர் மூலம் கட்டளையிட்டால் அப்போது அதற்கு கட்டுப்படுவதுதான் நல்லடியார்களின் பண்பாகும். இவ்வாறு மரணித்தவர்கள் அல்லாஹ்விடத்தில் பாவிகளாக கருதப்படமாட்டார்கள். மாறாக பாவங்கள் மன்னிக்கப்பட்டு சஹீதுகளாக சொர்க்கத்திற்குச் செல்வார்கள்.
இணைவைப்பின் அபாயத்தை இஸ்ரவேலர்களுக்கு உணர்த்துவதற்காகவே இவ்வாறு அல்லாஹ் முதலில் உத்தரவிட்டான். பின்பு மன்னித்தான் என நம்பினாலும் இதை மார்க்கத்தில் தடைசெய்யப்பட்ட தற்கொலையுடன் ஒப்பிட இயலாது.
இந்தக் கட்டளை இன்று நமக்கு சொல்லப்படவில்லை. நமக்கு முன்னர் வாழ்ந்த ஒரு சமூகத்திற்கு அல்லாஹ் கூறினான் என்பதுடன் நாம் நிறுத்திக்கொள்ள வேண்டும். எனவே தற்போது இதுபற்றி நாம் அதிகம் தர்க்கம் செய்ய வேண்டியத் தேவையில்லை.
வசனம் நிராகரித்த வியாக்கியானம்
மூசா தன் சமூகத்தாரிடம் என் சமூகமே நீங்கள் காளைக் கன்றை (கடவுகளாக) எடுத்துக்கொண்டதின் மூலம் உங்களுக்கு நீங்களே அநீதியிழைத்துக்கொண்டீர்கள். எனவே உங்களை நீங்களே கொலை செய்து உங்களைப் படைத்தவனிடம் பாவமன்னிப்புத் தேடிக்கொள்ளுங்கள். இதுவே உங்களைப் படைத்தவனிடம் உங்களுக்கு சிறந்தது எனக் கூறினார். இதன்பின் அவன் உங்களை மன்னித்தான். நிச்சயமாக அவன் மன்னிப்பவனாகவும் கருணையாளனாகவும் இருக்கிறான். அல்குர்ஆன் (2:54)
உங்களை நீங்களே கொலை செய்யுங்கள் என மூசா(அலை) அவர்கள் கூறியது செத்துத் தொலையுங்கள் என கோபத்தில் அவர்கள் தவறுதலாக கூறிய வார்த்தை என சகோதரர் இதற்கு வியாக்கியானம் தருகிறார். இந்த வியாக்கியானத்தை இதே வசனம் நிராகரிக்கின்றது.
1. உங்களை நீங்கள் கொலை செய்யுங்கள் என்ற கட்டளைக்கு முன்னால் மூசா (அலை) அவர்கள் உங்களுக்கு நீங்களே அநீதியிழைத்துக்கொண்டீர்கள் என்றும் எனவே உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள் என்றும் கூறுகிறார்கள். இவ்விரண்டு வாசகங்களும் கோபத்தில் உளறியது அல்ல, இதன் பிறகே உங்களை நீங்கள் கொலைசெய்யுங்கள் எனக் கூறுகிறார்கள். மூசா (அலை) அவர்கள் நிதானமாக பொருளை உணர்ந்து பேசிய வார்த்தையாகவே குர்ஆன் இதைக் குறிப்பிடுகிறது.
2. மேலும் இஸ்ரவேலர்களின் பாவமன்னிப்புக்கான வழியை மூசா (அலை) அவர்கள் இங்கே கற்றுத்தருகிறார்கள். பாவத்திற்கான பரிகாரத்தை கூறும் நேரத்தில் மூசா(அலை) அவர்கள் கோபப்பட்டார்கள் என்றும் தவறுதலாக கூறினார்கள் என்றும் கூற முடியாது.
3. உங்களை நீங்களே கொலைசெய்யுங்கள் என்ற கட்டளைக்குப் பின் இதுவே உங்களுக்கு உங்கள் இறைவனிடம் சிறந்தது என மூசா (அலை) கூறுகிறார்கள். கொலைசெய்வதை இறைவன் விரும்புகிறான். இதையே உங்கள் பாவங்களுக்கு பரிகாரமாக ஆக்கியுள்ளான் எனமூசா (அலை) அவர்கள் கூறுகிறார்கள். கோபத்தில் தவறுதலாகக் கூறிய வார்த்தை என்றால் இறைவன் அதை விரும்புவானா? தவறிழைத்தவர்களுக்கு இதை பரிகாரமாக கூறுவானா?
4. சகோதரர் பீஜே தன்னுடைய தவறான சுய விளக்கத்தை சில இஸ்லாமிய அறிஞர்களும் கூறியுள்ளதாக குறிப்பிடுகிறார். ஆனால் நாம் அறிந்தவரை எந்த இஸ்லாமிய அறிஞரும் இவ்விளக்கத்தைக் கூறவில்லை. இவர் மட்டுமே இதைக் கூறியுள்ளார்.
மூசா (அலை) அவர்கள் இஸ்ரவேலர்களிடம் உங்களை நீங்களே கொலை செய்யுங்கள் எனக் கூறினார்கள் என்ற இந்தத் தகவல் குர்ஆனில் இடம்பெற்றிருப்பதால் சகோதரர் பீஜே அவர்களால் பகிரங்கமாக இதை மறுக்க முடியவில்லை. எனவே வியாக்கியானம் கொடுத்து கருத்தை மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
ஆனால் இதே தகவல் புகாரி முஸ்லிம் போன்ற ஹதீஸ் நூற்களில் நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஹதீஸாக பதிவு செய்யப்பட்டிருந்தால் இவரது வழமைப்படி இந்த செய்தி குர்ஆனுடன் மோதுகிறது. தற்கொலை செய்யுமாறு மூசா(அலை) அவர்கள் எப்படி ஏவியிருப்பார்கள்? என்று பலக் கேள்விகளைக் கேட்டு சம்பந்தமில்லாத குர்ஆன் வசனங்களை கொண்டுவந்து அவற்றுடன் இந்த ஹதீஸை மோதவிட்டு இந்த செய்தி என்றைக்கோ மறுக்கப்பட்டிருக்கும். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
நம்மால் அனைத்தையும் அறிந்துவிட முடியாது. மார்க்க விசயமாக இருந்தாலும் அதில் நம்மிடமும் சறுகல்கள் நிச்சயம் ஏற்படும். மற்ற அறிஞர்களின் கருத்துக்களுக்கும் நாம் முக்கியத்துவம் கொடுத்து ஆய்வு செய்ய வேண்டும் என்ற உண்மையை சகோதரர் பீஜே அவர்கள் முதலில் உணரவேண்டும்.
தன் அறிவுக்குப் பட்டதே மார்க்கம். தன் அறிவுக்கு எட்டாதது குர்ஆனாக இருந்தாலும் ஹதீஸாக இருந்தாலும் அது மார்க்கமல்ல என்ற வழிகேடான சிந்தனையிலிருந்து அவர் மீள வேண்டும்.
குர்ஆன் ஹதீஸில் சொல்லப்பட்ட ஒரு விசயம் நமக்கு தவறாகத் தெரிந்தால் நமது சிந்தனையில் கோளாறு என்றே நாம் முடிவெடுக்க வேண்டும். இதைச் செய்யாமல் மார்க்கத்தில் சொல்லப்பட்ட விசயத்தை குறைகண்டு நாம் மறுப்பது தெளிவான வழிகேடாகும். இவ்வாறு மறுக்கக்கூடியவர்கள் தங்களது மறுப்பை நியாயப்படுத்த எவ்வளவு அழகான வாதங்களை வைத்தாலும் சரியே. குர்ஆன் வசனங்களை ஆயுதமாக எடுத்துக்கொண்டு வாதிட்டாலும் சரியே.
மேற்கண்ட வசனத்திற்கு சகோதரர் பீஜே அவர்கள் கொடுத்த தவறான விளக்கம் இந்த படிப்பினையை நமக்கு உணர்த்துகிறது. சகோதரர் தனது தவறைத் திருத்திக் கொண்டு அவரை தக்லீத் செய்யும் அப்பாவி மக்களுக்கு சரியான வழியை காட்ட வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு.