முஜத்திதுஸ் ஸுன்னா அல்லாமா நாஸிருத்தீன் அல்பானி அவர்கள் பற்றிய சுருக்க அறிமுகம்.
முழுப்பெயர் ; அபூ அப்திர் ரஹ்மான் நாஸிருத்தீன் முஹம்மத் பின் நூஹ் பின் ஆதம் பின் நஜாதி அல் அல்பானி.
பிறப்பு ; அல்லாமா முஹம்மத் நாஸிருத்தீன் அல்பானி அவர்கள் ஹிஜ்ரி 1332 (1914)ல் அல்பேனியாவின் தலைநகரமான அஷ்கொடராவில் மார்க்கப்பற்றுள்ள, ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தார்கள்.
டமஸ்கஸை நோக்கிய ஹிஜ்ரத்; இஸ்தன்பூலிலே மார்க்கக் கல்வியைப் பூர்த்திசெய்த அவரது தந்தை அல்லாமா நூஹ் நஜாதி அல் அல்பானி, அவர்கள் அல்பேனியாவிலே சிறந்த மார்க்க அறிஞர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்கள், அல்பேனியாவில் வழிகெட்ட கொள்கைகள் மக்கள் மத்தியில் ஊடுருவ ஆரம்பித்த வேளையில் வெறுப்படைந்த நூஹ் நஜாதி அவர்கள் அல்லாமா அல்பானி அவர்களின் ஒன்பதாவது வயதினிலே தமது குடும்பத்தோடு சிரியாவின் தலைநகரான டமஸ்கஸிற்கு குடிபெயர்ந்து சென்றார்கள்.
கல்வி ; சிறுபராயம் முதல் கல்வியில் ஆர்வமும் தேட்டமும் கொண்ட அல்லாமா அல்பானி அவர்கள் டமஸ்கஸிலுள்ள பெரும் மார்க்க அறிஞர்களிடம் தமது ஆரம்பக் கல்வியைப் பூர்த்திசெய்தார்கள். பின்பு அல்குர்ஆனியக் கலைகள் , அரபு இலக்கணம், அரபு இலக்கியம் போன்றவற்றையும் ஹனபி சட்ட மரபினையும் பல்வேறுபட்ட அறிஞர்களிடமிருந்தும் தனது தந்தையிடமும் அறிஞர்களான தனது தந்தையின் நண்பர்களிடமிருந்தும் கற்றுக்கொண்டார்கள்.
குறிப்பாக முஹம்மத் ஸஈத் அல்புர்ஹானி, பஹ்ஜத் அல் அத்தார், இஸ்ஸுத்தீன் அத் தன்னூஹி, போன்ற மார்க்க அறிஞர்களிடம் கல்வி கற்றுள்ளார்கள்.
தொழில் ; ஆரம்பத்தில தச்சுத் தொழிலில் ஈடுபட்ட அவர்கள் பின் தனது தந்தையிடமிருந்து கடிகாரங்களை பழுதுபார்த்துத் திருத்தியமைக்கும் முறையையும் உத்திகளையும் கற்றுக் கொண்டார்கள். அதில் தேர்ச்சி பெற்று விளங்கிய அவர்கள் கடிகாரம் திருத்தும் ஒரு கடையை அமைத்து தனது குடும்ப செலவீனங்களுக்கான போதிய வருவாயையும் அதன் மூலமாக பெற்றுக் கொண்டார்கள்.
ஹதீஸ் துறை ஈடுபாடு ;
அல்லாமா அல்பானி அவர்கள் தனது இருபதாவது வயதிலே ஹதீஸ் துறை, அது சார்ந்த ஏனைய கலைகளிலும் தேர்ச்சி பெற்று விளங்கினார்கள். மிகுந்த சிரமத்திற்கும் கஷ்டத்திற்கும் மத்தியில் ஆய்வுகளை மேற்கொண்டார்கள். அவரது ஆய்வுகளுக்கான நூல்களைப் பெற்றுக்கொள்ள மிகவும் சிரமப்பட்டார்கள். தமக்கு தேவையான அவசியமான நூல்களை விலைக்குவாங்க அவரிடம் போதியளவு பணமில்லாத காரணத்தால் அவசியமான நூல்களை டமஸ்கஸின் பிரசித்தம் பெற்ற நூலகமான அல்மக்தபதுத் ழாஹிரிய்யா விலிருந்தும் சிலபோது புத்தக விற்பனையாளர்களிடமிருந்தும் கடனாகவும் இரவலாகவும் பெற்றுக்கொண்டார்கள்.
அல்மக்தபதுத் ழாஹிரிய்யா இமாமவர்களின் ஆர்வத்தைக் கண்டு அங்கு அவருக்காக பிரத்தியேக அறையொன்றை ஏற்பாடு செய்து கொடுத்தது. ஆரம்பித்தில் அங்கிருந்து கொண்டே தமது 22 ஆவது வயதினிலே அச்சூழலுக்குப் பொருத்தமான ஒரு நூலையும் மற்றொரு ஹதீஸ் நூலொன்றையும் என இரண்டு நூற்களை எழுதி வெளியிட்டார்கள்.
1- தஹ்தீருஸ் ஸாஜித் மின் இத்திஹாதில் குபூரி மஸாஜித.
2- அர்ரௌழுந் நழீர் பீ தர்தீபி வதஹ்ரீஜி முஃஜமித் தபராணி அஸ் ஸகீغர்.
இமாமவர்களின் பணி ;
இமாமவர்கள் தமது ஆய்வுகளினூடாக கண்மூடித்தனமான தக்லீத், மூட நம்பிக்கைகள், நூதன அனுஷ்டானங்கள், வழிகெட்ட சிந்தனைகள், ஜாஹிலிய்யத் சிந்தனைகள் அனைத்தையும் தகர்த்தெறிந்து அல்குர்ஆன் ஸுன்னாவை ஸலபுகளின் புரிதலோடு மக்களுக்கு தெளிவு படுத்தினார்கள். பாடசாலை மாணவர்களுக்கும் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கும் வாராந்தம் இரண்டு வகுப்புகளை ஆரம்பித்து அதிலே கொள்கை விளக்கம் , பிக்ஹ், மற்றும் உஸுலுல் ஹதீஸ் போன்ற பல்வேறு கலைகள் சார்ந்த அறிவையும் கற்றுக்கொடுத்தார்கள். ஹிஜ்ரி 1381 லிருந்து சஊதி அரேபியாவின் அல் ஜாமிஆ இஸ்லாமிய்யா மதீனா அல் முனவ்வரா பல்கலைக்கழகத்தில் மூன்று வருடங்கள் விரிவுரையாளராக பணி புரிந்தார்கள். அதுவல்லாது விரிவுரைகள் நிகழ்த்துவதற்காக எகிப்து, கடார், குவைத், ஐக்கிய அமீரகம், மொரோகோ, பலஸ்தீன், லப்னான், ஜோர்தான், இங்கிலாந்து, ஸ்பெய்ன்,அவுஸ்திரேலியா,ஜேர்மன் போன்ற பல்வேறு நாடுகளையும் தரிசித்துள்ளார்கள்.
மாணவர்கள் ;
இமாமவர்களின் மாணவர்களில் அறிஞர்களான அப்துர் ரஹ்மான் அல்பானி, ஸுஹைர் அஷ்ஷாவீஷ், இஸாம் அல் அத்தார், ஹம்தி அப்துல் மஜீத், கலாநிதி உமர் ஸுலைமான் அல்அஷ்கர், முக்பில் இப்னு ஹாதி அல்வாதிஈ, மஹ்மூத் மஹ்தி, முஹம்மத் ஈத் அப்பாஸீ, முஹம்மத் ஜமீல் ஸைனூ, போன்றோர் பிரசித்தமான மார்க்க அறிஞர்காளாகக் காணப்படுகின்றனர்.
குணங்கள் ;
ஸுன்னாவை முற்று முழுதாக பின்பற்றுவதிலும் பித்ஆக்களை எதிர்த்து போராடுவதிலும் முன்னின்று செயற்பட்டார்கள், அல்குர்ஆன் வசனங்களையோ கடுமையான எச்சரிக்கைகளை விடுக்கும் நபி மொழிகளை பார்த்தாலோ, கேட்டாலோ உடனே அதன்மூலம் தாக்கமடைந்து அழ ஆரம்பித்து விடுவார்கள . ஒவ்வொரு திங்கள், வியாழன் சுன்னத்தான நோன்பை தவறாது நோற்பவராகவும், ஹஜ், உம்ரா செய்வதில் மிகுந்த ஆர்வமுள்ளவராகவும் காணப்பட்டார்கள்.
இமாமவர்கள் எழுதிய அற்புதமான
நூற்களில் சில..
1- ஸில்ஸிலதுல் அஹாதீஸிஸ் ஸஹீஹா.
2- ஸில்ஸிலதுல் அஹாதீஸிழ் ழஈபா.
3- அஸ்ஸுபாப் பிஸ்ஸுன்னதில் முதஹ்ஹரா.
4- அஹாதீஸுல் இஸ்ரா வல் மிஃராஜ்.
5- அஹ்காமுல் ஜனாயிஸ்.
6- ஸிபது ஸலாதிந் நபிய்யி (ஸல்) மினத் தக்பீரி இலத் தஸ்லீம்.
7- ஸஹீஹுல் ஜாமிஇஸ் ஸகீர்.
8- ழஈபுல் ஜாமிஇஸ் ஸகீர்.
9- ஸஹீஹுஸ் ஸீரா அந்நபவிய்யா.
10- ஸஹீஹு அத் தர்கீப் வத் தர்ஹீப்.
11- ழஈபு அத் தர்கீப் வத் தர்ஹீப்.
12- ஜில்பாபுல் மர்அதில் முஸ்லிமா.
13- மன்ஸிலதுஸ் ஸுன்னா பில் இஸ்லாம்.
14- இர்வாஉல் கலீல்.
15- முஹ்தஸரு ஸஹீஹ் முஸ்லிம்,
16- தஹ்ரீஜு மிஷ்காதுல் மஸாபீஹ்.
17- அத்தௌஹீது அவ்வலன் யா துஆதல் இஸ்லாம்.
18- ஸஹீஹு அதபில் முப்ரத்
19- ழஈபு அதபில் முப்ரத்
20- தமாமுல் மின்னா
21- அத்தஃலீகாதுல் ஹஸ்ஸான் அலா ஸஹீஹி இப்னு ஹிப்பான்.
22- பழ்லுஸ் ஸலாதி அலந் நபிய்யி (ஸல்)
23- தஹ்ரீமி ஆலாதித் தர்பி.
24- ஷர்ஹு அல் அகீத்தித் தஹாவிய்யா.
25- பித்னதுத் தக்பீர்.
இமாமவர்கள் பற்றி அறிஞர்கள் ;
ஹதீஸ் துறையின் ஆழத்திற்கே சென்று அதனோடு உறவாடி காலங்களை கழித்த அவர்கள் அக்காலத்தின் ஒரு முஜத்தித் என பலராலும் பாராட்டப்பட்டுள்ளார்கள். நவீன கால முன்னோடி முஹத்திஸாகவும் இமாமவர்கள் அறிஞர்களால் மதிக்கப்படுகிறார்கள்.
அல்லாமா பின் பாஸ் அவர்கள் அல்பானி அவர்கள் ஹதீஸ் கலையின் நவீன கால முஜத்தித் என்பதாக பாராட்டியுள்ளார்கள்.
அல்லாமா ஸாலிஹ் அல் உதைமீன் அவர்கள் நவீன கால ஹதீஸ் கலை மாமேதை என்பதாக பாராட்டியுள்ளார்கள்.
அல்லாமா அலி தன்தாவி அவர்கள் என்னை விட அல்பானி அவர்கள் ஹதீஸ் கலையில் ஆழமான அறிவை பெற்றிருந்தார்கள், நான் அவரை அதிகமாகவே மதிக்கிறேன் என புகழ்ந்துரைத்துள்ளார்கள்.
அல்லாமா முஹிப்புத் தீன் அல் ஹதீப் அவர்கள் அல்பானி அவர்கள் தூய ஸுன்னாவை நோக்கிய அழைப்பாளராக செயல்பட்டார்கள்,அதனை உயிர்ப்பிக்கவே தனது வாழ் நாள் முழுவதையும் அர்ப்பணித்திருந்தார்கள், என கூறியுள்ளார்கள்.
சஊதி அரேபியாவின் மலிக் பைசல் சர்வதேச உயர் விருதையும் 1999 ம் ஆண்டு இமாமவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
இறப்பு ;
1999ஆம் ஆண்டு (ஹிஜ்ரி-1420) ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி சனிக்கிழமை அஸருடைய நேரத்தில் தனது 87ஆவது வயதில் இறையடி சேர்ந்தார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அதே நாள் இஷாவுடைய வேளையில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.
எங்களுடைய அன்புக்குரிய இமாமவர்களை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக சுவனத்தின் உயர்ந்த பதவியையும் அன்னாருக்கு வழங்குவானாக.
உசாத்துணைகள் ;
1- ஹயாதுல் அல்பானி வஆதாருஹு வதனாஉல் உலமா அலைஹி - முஹம்மத் இப்ராஹீம் அஷ்ஷைபானி.
2- அஹ்தாஸு முஸீثரா பீ ஹயாதிஸ் ஷைக் அல்லாமா அல்பானி - முஹம்மத் ஸாலிஹ் அல்முன்ஜித்.
3- ஸப்ஹாத் பைழா மின் ஹயாதில் அல்பானி - அதிய்யா அவ்தா.
4- அல் இமாம் அல்பானி துரூஸ் வமவாகிப் வஇபர் - முஹம்மத் பின் அப்துல்லாஹ் அஸ்ஸத்ஹான்.
5- அஃலாமுத் தஃவா - அப்துல்லாஹ் அல் உகைல்.
- அஷ்ஷெய்க் TM முபாரிஸ் ரஷாதி.