ஹதீஸ்களின் ஏற்றுக்கள்ளப்பட்ட தரங்களை ஸஹீஹ் வகையென்றும் ஹஸன் வகையென்றும் பிரிக்கின்ற வழக்கு இமாம் திர்மிதியின் மூலமே முதல் முதலாக அவரது ஸுனனுத் திர்மிதீ மூலம் அறிமுகத்திற்கு வந்தது. அதன் அர்த்தம் புதிதாக அவர் பலஹீனமான ஹதீஸின் ஒரு பகுதியை ஹஸன் வகையில் சேர்த்தார் என்பதல்ல. திர்மிதியின் காலத்திற்கு முற்பட்ட அறிஞர்கள் ஹஸன் தரமான ஹதீஸ் என பிரிக்காமல் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹதீஸ்களுக்கு ஸஹீஹ் என்று, இருவகையை அடக்கும் வகையில் பயன்படுத்தி வந்தார்கள்.
இவ்வாறான வகைப்படுத்தலில் ஒரு மேலதிக பயன் உண்டு. முரண்பாடான(சாத்) அறிவிப்புக்களின் பொழுது ஹஸன் தரத்திலான அறிவிப்பாளரிடம் தவறு ஏற்படுவதற்கான சாத்தியப்பாடு ஸஹீஹ் தரத்திலானவரை விட அதிகம் என்பதனால் இந்த வகைப்படுத்தல் முரண்பாடான நேரத்தில் அறிவிப்பாளரை அவசரமாக இனங்காண வாய்ப்புக்களை ஏற்படுத்தியது. ஆரம்பகால அறிஞர்களுக்கு மத்தியில் அறிவிப்பாளர்கள் சரியாக இனங்காணப்பட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களுடைய அனைத்து ஹதீஸ்களுக்கும் ஸஹீஹ் என்ற ஒரே வார்த்தைப் பயன்பட்டதால் அறிவிப்பாளர் வரிசை பற்றிய அறிவில் விற்பன்னர்களுக்கு மட்டும்தான் தரத்தைப் பிரித்தறிய முடியுமாக இருந்ததே தவிர மற்றவர்களுக்கு அது கடினமானதாகவே இருக்கும். ஆனால் திர்மிதியால் பயன்படுத்தப்பட்டதாக வரலாற்றில் காணும் இந்த ஹஸன் என்ற பயன்பாடு இலகுபடுத்தலை ஏற்படுத்தியது எனலாம்.
இமாம் திர்மிதியின் ஹஸன் என்ற பயன்பாட்டை இரு வகைப்படுத்தலாம். ஹதீஸகலையில் அவை இரண்டும் தனிப்பெயர்களால் அழைக்கப்படுகின்றன.
1-ஹஸன் லிதாதிஹி(حسن لذاته)
2-ஹஸன் லிஙைரிஹி.(حسن لغيره)
அறிஞர்களில் ஒரு சிலர் ஹஸன் என்று சொன்னால் முதல் வகையை மட்டும் குறித்துப் பயன்படுத்துபவர்களும் இருக்கின்றனர். இரண்டாவது வகையை அவர்கள் ஹஸன் லிஙைரிஹி என்று சொல்லியே அழைப்பார்கள். இன்னுஞ் சில அறிஞர்கள் ஹஸன் என்று பயன்படுத்தினால் இரண்டையும் குறிக்கும் வகையில் பயன்படுத்துவார்கள். அவர்கள் ஹஸன் என்று சொன்னால் இரண்டு வகையில் எதுவாகவும் இருக்கலாம்.
எவ்வாறு தரம் பிரிப்பது:
(முஸ்லிமான உண்மையாளர் என நிரூபிக்கப்பட்ட) அறிவிப்பாளர்களின் மனனத்தை பலவகைப்படுத்தலாம்.
1-ஓரிரு தவறுகளைத் தவிர மற்றப்படி எல்லா வகையிலும் மனனத்தில் மலைகளாக இருக்கக் கூடிய தரம்.
2-தரமானவர் என்று சொல்லக் கூடிய அளவில் மனனத்தில் திறமையானவர்கள்.
3-சுட்டிக்காட்டும் அளவில் சில தவறுகளை விட்டுள்ளவர்கள்.
4-மனனத்தில் நிறையத் தவறுகள் விட்டமை பல வகையில் நிரூபிக்கப்பட்டவர்கள்.
5-குறிப்பிட்ட சில பிரபல்யமான செய்திகள் உற்பட பெரும்பாலான செய்திகளில் மோசமாகத் தவறு விட்டவர்கள். அறிவித்தாலே குழப்பிவிடுவார் என்ற தரத்தில் உள்ளவர்கள்.
இதில் ஆரம்ப 2 நிலையிலும் உள்ள அறிவிப்பாளர்களின் அறிவிப்புகளுக்கு ஸஹீஹ் என்றே அறிஞர்கள் பயன்படுத்துவார்கள். அதில் இருவகையினரின் அறிவிப்புக்களையும் பிரித்து நோக்கும் வகையில் தனித்தனியான வார்த்தைகளைப் பயன்படுத்துவதில்லை. ஆனாலும் அவர்களின் தர வேறுபாடுகள் முரண்பாடுகளின் பொழுது கருத்திற்கொள்ளப்படும். 3வது தரத்தில் உள்ளவர்களின் அறிவிப்புகளுக்கே ஹஸன் (லிதாதிஹீ) என்று அதிகமான அறிஞர்கள் பயன்படுத்துவார்கள்.
4காவது தரத்தில் உள்ளவர்களின் அறிவிப்பு லஈபானது. ஆனால் அதன் அர்த்தம் அவர் அறிவித்த செய்தி பொய் என்பதல்ல. அவரது மனன சக்தியில் பலஹீனமானவர் என்பதால் அவரின் அறிவிப்பில் அதிகமான சந்தேகங்கள் எழுவதுதான்.1- இவர் சொல்லும் அறிவிப்பாளர் வரிசை குறிப்பிட்ட ஹதீஸிற்குரியதுதானா? அல்லது மறதியால் மாற்றியறிவித்துள்ளாரா? 2-முறையாகத்தான் அறிவிப்பாளர் வரிசையை சொல்லியுள்ளார் என வைத்துக் கொண்டாலும் அறிவிக்கப் பயன்படும் வார்த்தைகளை முறையாகச் சொல்லியுள்ளாரா?(உதாரணம்: அவர் வழியாக எனக்குக் கிடைத்தது(அன்அனாஹ்) என்பதற்கும் அவரிடம் நான் கேட்டேன்(ஸமாஃ)என்பதற்கும் இடையில் பாரிய வேறுபாடு உண்டு) 3- நபித்தோழருடைய சொந்தக் கருத்தை (மவ்கூப்) நபிகளாரின் வார்த்தையாக(மர்பூஃ) அறிவித்துள்ளாரா? 4-…?5-…? என இன்னும் பல வகையான சந்தேகங்கள் இவரது அறிவிப்பில் எழுவதனால் அறிஞர்கள் இந்தத் தரத்திலுள்ளவர்களின் செய்தியை ஏற்பதில்லை. ஆனால் இந்த சந்தேகங்களை நீக்கும் வகையில் வேறு ஒரு அறிவிப்போ பல அறிவிப்போ கிடைத்தால் அறிஞர்கள் இந்த அறிவிப்பாளர் வரிசையை பலப்படுத்துவார்கள். உதாரணமாக:
‘யார் வேண்டுமென்று என்மீது இட்டுக் கட்டுகிறாறோ அவர் தன் நரகத்தில் தன் தங்குமிடத்தை ஆக்கிக்கொள்ளட்டும்’
இந்த செய்தி பல நம்பகமான அறிவிப்பாளர் வரிசைகள் மூலம் பதியப்பட்ட ஒன்று. ஆனால் இப்னு லஹீஆ வழியாகவும்(இடைக்காலத்தில் மனனத்தின் பலஹீனமானவர்) இந்த ஹதீஸை தபரானி அவர்கள் ‘துருகு ஹதீஸி மன் கதப அலய்ய’ என்ற நூலில் 62வது இலக்கத்திலே பதிவுசெய்துள்ளார். எனவே மனனத் தரமற்ற இவரின் இந்த அறிவிப்பாளர் வரிசை பலஹீனமானது. ஆனால் மனனக் குறைபாடுடையவரின் அறிவிப்பில் ஏற்படக் கூடிய அனைத்து சந்தேகங்களும் புகாரி முஸ்லிம் போன்ற கிரந்தங்களில் இடம் பெறும் ஏனைய நம்பகமிக்க அறிவிப்பாளர் வரிசைகளால் நீங்கிவிடுவதனால் இந்த அறிவிப்பாளர் வரிசை பலஹீனமானாலும் இவரின் அறிவிப்புக்கு அறிஞர்கள் ஸஹீஹ் (லிஙைரிஹி) என்று பயன்படுத்துவார்கள். அதாவது இன்னொரு வழியில் ஸஹீஹ் தரத்தை அடைந்த ஹதீஸ் என்பது இதன் அர்த்தம்.
இன்னொரு உதாரணத்தைப் பாருங்கள்:
‘வலீ இல்லாமல் திருமணம் இல்லை.’
இந்த ஹதீஸ் 17 இற்கும் மேற்பட்ட நபித்தோழர்கள் மூலம் அறிவிக்கப்படுகிறது. ஆனால் அதிகமான அறிஞர்களால் 16 நபித்தோழர்கள் வழியாக அறிவிக்கப்படும் செய்திகளும் மிக மிக பலஹீனமான நிராகரிக்கத் தக்க தரத்தில் இருப்பதாக விமரிசிக்கப்படுவதால் அதை விட்டுவிடுவோம். அவைகளை தனியாக ஆய்வு செய்வதென்றால் பல வாரங்கள் தேவை. ஆனால் 17 நபித் தோழர்களில் அபூ மூஸா அல் அஷ்அரீ வழியாக அறிவிக்கப்படும் அறிவிப்பு மாத்திரம் மதிக்கக் கூடிய(الاعتبار) வகையில் வந்த அறிவிப்பு. இந்த அறிவிப்பை 1-அபூ மூஸாவிடமிருந்து 2-அபூ புர்தா அறிவிக்கிறார். இவரிடமிருந்து. 3-அபூ இஸ்ஹாக் இந்த செய்தியை அறிவிக்கிறார். இவரிடமிருந்து பல நம்பகமான தரமானவர்கள் இந்த செய்தியை அறிவிக்கின்றனர். அவர்களின் அறிவிப்புக்களில் பல அறிப்புவிப்பு முறை முரண்பாடுகள் இருந்தாலும் ஒரு முடிவுக்கு வரலாம். இந்த செய்தியை அபூ இஸ்ஹாக் அபூ புர்தா வழியாக அவர் நபித்தோழர் அபூ மூஸா வழியாகக் கேட்டுள்ளார். அவர் நபிகளாரிடமிருந்து கேட்டுள்ளார். ஆனால் இந்த அறிவிப்பாளர் வரிசை பலஹீனமானது. காரணம் அபூ இஸ்ஹாக் அஸ்ஸபீஈ இடைக்காலத்தில் மனனத்தில் மிக பலஹீனமாகிப்போனவர். எனவே நான் ஆரம்பத்தில் சொன்னது போன்ற சந்தேகங்கள் இவரது அறிவிப்பிலும் எழும். இதனால் இந்த அறிவிப்பாளர் வரிசையை ஏற்க முடியாது.
எனினும் இந்த செய்தியை அபூ புர்தாவிடமிருந்து அபூ இஸ்ஹாக் அஸ்ஸபீஈ போன்று யூனுஸும் கேட்டுள்ளார்(யூனுஸிடமிருந்து அறிவிக்கும் வரிசைகளில் முரண்பாடுகளும் பலஹீனமும் இருந்தாலும் முடிவில் யூனுஸ் அறிவித்துள்ளார் என்ற முடிவுக்கு வரலாம்).ஆனால் யூனுஸ் மனனத்தில் பலஹீனமானவர்.(இவர் பற்றி குனூத் பற்றிய ஹதீஸில் விரிவாக எழுதியுள்ளோம்). எனவே இந்த அறிவிப்பிலும் நாம் ஆரம்பத்தில் சொன்னது போன்ற கேள்விகள் எழும். அப்படியிருந்தாலும் மனனத்தில் பலஹீனமான இருவரும் ஹதீஸின் வார்த்தைகளை ஒரே மாதிரி அறிவித்திருப்பதும் அறிவிப்பாளர் வரிசையை ஒரே மாதிரி அறிவித்திருப்பதும் எமது சந்தேகங்களை ஓரளவு நிவர்த்தி செய்து இந்த ஹதீஸின் அறிவிப்பிலும் அறிவிக்கும் முறையிலும் இவர்களது மனனப் பாதிப்பு ஏற்பட வில்லை என்ற நம்பிக்கையை ஓரளவு தருகிறது. ஒருவரது பலஹீனத்தை மற்றவருடைய அறிவிப்பு நிவர்த்தி செய்வதால் இந்த ஹதீஸிற்கு ஹஸன் (லிஙைரிஹி) என்று அறிஞர்கள் பயன்படுத்துவார்கள். அது மாத்திரமல்ல இந்த ஹதீஸை அபூ புர்தாவிடமிருந்து அபூ ஹுஸைன் என்ற பலமானவரும் அறிவித்துள்ளார். ஆனால் அவரது அறிவிப்பாளர் வரிசையிலே காலித் என்ற மனனத்தில் சிறிது பலஹீனமான ஒருவர் இடம்பெறுகிறார். ஆனாலும் 3 நம்பகமானவர்கள் மூலம் ஆனால் மனனத்தில் பலஹீனமானவர்கள் அறிவிக்கும் அறிவிப்பின் மூலம் கிடைத்த ஹதீஸின் வார்த்தை ஒன்றாக இருப்பது இந்த ஹதீஸை இவர்கள் முறையாக அறிவித்திருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது. எனவே இந்த ஹதீஸ் ஹஸன் (லிஙைரிஹி) என்ற வகுப்பில் உயர் இடத்தைப் பிடிக்கிறது. அதன் அர்த்தம் இந்த ஹதீஸ் பிற அறிவிப்பின் மூலம் ஹஸன் தரத்தை அடைந்தது என்பதுதான். ஆனால் இவைகள் அனைத்திற்கும் அறிஞர்கள் ஸஹீஹ் என்ற பயன்பாட்டையே ஆரம்பத்தில் பயன்படுத்தினார்கள். காரணம் ஒரு ஹதீஸின் செய்தி நிரூபிக்கப்படுகிறதா இல்லையா என்பதில் மாத்திரம்தான் அவர்களின் கவனம் இருந்ததுதான். அல்லாஹ் மிக அறிந்தவன்
- முஜாஹித் இப்னு ரஸீன்