பிக்ஹ் துறையினருக்கம் ஹதீஸ் துறையினருக்கும் இடையில் நபிகளார் சுன்னா - நூல் விமர்சனம்


அஷ்ஷெய்க் முஹம்மது அல் கஸ்ஸாலி அவர்கள் “அஸ்ஸுன்னா, அந்நபவிய்யா பைய அஹ்லில் பிக்ஹி வஅஹ்லில் ஹதீஸ்” என்ற பெயரில் அரபியில் ஒரு நூலை எழுதினார். இதனை ஜாமிஆ நளீமிய்யாவின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம். எப். ஸைனுல் ஹுஸைன் ((நளீமி) M.A (Cey) அவர்கள் அழகுற தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

பிக்ஹ் துறையினருக்கும், ஹதீஸ் துறையினருக்கும் மத்தியில் “நபிகளாரின் சுன்னா” என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்ட இந்நூலில் சுன்னாவிற்கு மாற்றமான பல செய்திகளும், நபித்தோழர்கள், தாபிஈன்கள், ஹதீஸ் துறை இமாம்கள் போன்றோர்களைக் குறைகூறக்கூடிய அம்சங்களும் நிறைந்துள்ளன. அத்துடன் பல நபிமொழிகளும்; மறுக்கப்பட்டுள்ளன.

இந்நூல் அரபியில் வெளியிடப்பட்ட போதே பலத்த சர்ச்சைகள் எழுந்ததுடன் மறுப்புக்களும் வெளிவந்தன. இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டதன் மூலம் மாற்றுக் கருத்தைப் பதிவு செய்யும் கட்டாயத்தை ஏற்படுத்திவிட்டனர்.

சர்வதேச வலைப்பின்னலை உடைய அமைப்புக்கள் தமது முகாம் சார்ந்த அறிஞர்களது ஆக்கங்களை தாய்மொழிக்கு மாற்றும் போது தாம் வாழும் சூழல் சமூகத்திற்கு இது தேவைதானா? என்பதை ஒருகணம் சிந்தித்துப் பார்ப்பது அவசியமாகும்.

அந்த அறிஞர்கள் வாழ்ந்த சூழல், சந்தித்த சவால்கள், சமூகப் பிரச்சினைக்கு ஏற்ப அவர்கள் எழுதிய சில ஆக்கங்கள் எமது சமூக சூழலுக்கு அவசியமற்றதாகவும், அவசியம் தவிர்க்கப்பட வேண்டியதாகவும் கூட இருக்கலாம்.

குறிப்பாக முஹம்மத் அல் கஸ்ஸாலி போன்ற அறிஞர்கள் தாம் சார்ந்த சமூகத்திற்கு ஒத்துப் போகும் விதத்தில் கருத்துக்களை முன்வைக்கும் போக்குடையவர்களாவர். இவர்கள் முன்வைத்த சில தீர்வுகள் எமது சமூகத்திற்கு மட்டுமல்ல சுன்னாவுக்குக் கூட முரண்பட்டவைகளாக இருப்பது தவிர்க்க முடியாததாகும்.

சுன்னா மீதும், ஹதீஸ் துறை அறிஞர்கள் மீதும் கொண்ட அன்பினால் தான் இந்த விமர்சனம் எழுதப்படுகின்றது. இந்த ஆக்கம் இயக்க வேறுபாட்டிலோ, இயக்க வெறியினாலோ, காழ்ப்புணர்வினாலோ எழுந்தது அல்ல என்பதை உறுதியாகக் கூறுகின்றோம். ஷெய்க் கஸ்ஸாலியின் இதே அனுகுமுறையில் சில தவ்ஹீத் தரப்பினர் ஹதீஸ்களை மறுத்த போதும் நாம் அதை எதிர்த்தோம், எதிர்த்தும் வருகின்றோம். என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆசிரியர் பற்றிய அறிமுகம்:
ஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி அவர்கள் 1917.09.23 இல் எகிப்திலுள்ள “நக்லுல் இனப்” எனும் கிராமத்தில் இஸ்லாமியப் பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்தார்கள். 1999.03.10 இல் மரணித்தார்கள். இவர் பிறந்த ஊர் “முஹம்மது அப்துல்லாஹ், முஹம்மத் ஸல்தூத்” போன்ற அறிஞர்களை ஈன்றெடுத்த பிரதேசமாகும். (மார்க்க அனுகுமுறையில் இவர்களுடனும் நமக்கு முரண்பாடு உள்ளது என்பது தனி விடயம்)

எகிப்தின் அல் அஸ்ஹரில் கற்ற ஷெய்க் அவர்களுக்கு இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் ஸ்தாபகர் “ஹஸனுல் பன்னா” அவர்களுடன் நெருக்கம் ஏற்பட்டது. அவரே இவரிடம் “அல் இஹ்வானுல் முஸ்லிமீன்” இதழில் கட்டுரை எழுதுமாறு வேண்டும் அளவுக்கு சிறந்த எழுத்தாற்றலைப் பெற்றிருந்தார். அரை நூற்றாண்டிற்கும் அதிகமான காலத்தைக் களப்பணியிலும், சமூகப் பணியிலும் கழித்த ஷெய்க் அவர்கள், 70 இற்கும் மேற்பட்ட நூற்களை எழுதியுள்ளார்கள். இவரது ஆக்கங்களில் “ஹுலுகுல் முஸ்லிம்” என்ற நூல் நான் விரும்பி வாசித்த நூலாகும்.

இஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாத்திற்கு எதிராக முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களுக்கும், கீழைத்தேய ஆய்வாளர்கள் இஸ்லாம், இஸ்லாமிய ஷரீஆ தொடர்பில் தொடுக்கும் வாதங்களுக்கும் பதில் கூறி இஸ்லாமிய நெறியைப் பாதுகாக்க முனைந்தவர். இவரது இஸ்லாமிய சேவைக்காக “மன்னர் பைஸல்” சர்வதேச விருதைப் பெற்றவர். தபீபுல் உம்மா (சமூகத்தின் நோய்களைத் தீர்க்கும்) வைத்தியர், அஸ்ருல் ஒஸ்தாத் (காலத்தின் போதகர்), மவ்கிஉல் பிக்ஹ் (சிந்தனைக் கூடம்) என்றெல்லாம் சிலாகித்துப் போற்றப்பட்டவர்.

ஜாமிஉல் அஸ்ஹர், ஜாமிஅதுல் மலிக் அப்துல் அஸீஸ், ஜாமிஅது உம்முல் குரா, ஜாமிஅது கதர் என பல பல்கலைக்கழகங்களில் பணியாற்றியவர். இவ்வளவு இருப்பினும் இவர் சிந்தனை ரீதியில் முஃதஸிலா சிந்தனைப் போக்கால் தாக்கப்பட்டவர். இந்த சிந்தனையால் தாக்கப்பட்ட “முஹம்மத் அப்துஹு” போன்ற அறிஞர்களுடன் ஒப்பிடும் போது இவர் பரவாயில்லை எனலாம்.

ஷெய்க் கஸ்ஸாலி அவர்கள் தனது கருத்துக்கு குர்ஆன், சுன்னாவில் பலமான ஆதாரம் இருந்தால் அந்த இடத்தில் குர்ஆன், சுன்னாவுடன் நின்று கொள்ளும் அதே வேளை தனது கருத்துக்கு மாற்றமாக ஹதீஸ் இருந்தால் அப்போது மட்டும் இமாம் அபூ ஹனீபா, இமாம் இப்னு ஹஸ்ம் போன்றவர்களது கருத்துக்குப் பின்னால் மறைந்திருந்து ஹதீஸை மறுக்கும் போக்கை இந்நூலில் பரவலாகக் காணலாம். இந்த ஆபத்தான போக்குக் குறித்தும், ஹதீஸ்களை மறுக்கும் விதம் குறித்தும் எச்சரிக்கை செய்வதற்காகவே இந்த விமர்சனத்தை விரிவாக சமூகத்திற்கு முன்வைக்க விளைகின்றோம்.

நூலின் தரம்:
நூல் தரமாகவும், நேர்த்தியாகவும் அச்சிடப்பட்டுள்ளது. நூலின் கட்டமைப்பு, எழுத்தமைப்பு அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளது. மொழிபெயர்ப்பாளரின் மொழிபெயர்க்கும் ஆற்றல் பாராட்டத்தக்கது. ஒரு மொழிபெயர்ப்பு நூலை வாசிக்கின்றோம் என்ற எண்ணமே எழாத அளவுக்கு தரமாக மொழியாக்கம் செய்துள்ளார் என்ற வகையில் அவரைப் பாராட்டலாம். அவர் தனது ஆற்றலை இதைவிடச் சிறந்த பணிக்கு இன்னும் அதிகமாகப் பயன்படுத்த அல்லாஹ் அருள் புரியட்டும்.

நூலாசிரியர் அஹ்லுல் பிக்ஹ், அஹ்லுல் ஹதீஸ் என்ற பதங்களை அடிக்கடி பயன் படுத்துகின்றார். நூலின் தலைப்பாகவும், இப்பதம் இடம்பெற்றுள்ளது. எனினும் ஒரு இடத்தில் கூட இந்தப் பதம் யாரைக் குறிக்கின்றது என்பது குறித்த விளக்கம் இடம்பெறவில்லை. இது நூலுக்குப் பெரும் குறையாகும். அவர் அனேக இடங்களில் அஹ்லுல் ஹதீஸினரை மட்டம் தட்டிப் பேசியுள்ளார். அவர் அஹ்லுல் ஹதீஸ் எனக் கூறுவது இவர்களைத்தான் எனத் தெளிவாகக் குறிப்பிட்டு மட்டம் தட்டியிருந்தால் மக்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டதை விட கூடுதல் குழப்பம் ஏற்பட்டுவிடும் என்பதற்காகத் தவிர்த்தாரோ என்னவோ!

நூல் நெடுகிலும் ஹதீஸ் ஆஹாத், ஹதீஸ் முதவாதிர், ழன்னி, கத்யீ, இஜ்மா, சுன்னா, ஆதத் போன்ற அறபுக் கலைச் சொற்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. அறபு மொழியில் அவர் எழுதியதால் இந்தக் கலைச் சொற்களுக்கு விளக்கம் தேவையில்லை என அவர் கருதியிருக்கலாம். இருப்பினும் மொழிபெயர்ப்பாளர் கலைச்சொல் விளக்கக் குறிப்பொன்றை இணைத்திருக்கலாம். நூலின் ஆரம்பத்தில் பிஸ்மியோ, ஸலவாத்தோ இடம்பெறாமையும் ஒரு குறையாகவே தென்பட்டாலும் நூலாசிரியரும், மொழிபெயர்ப்பாளரும் பிஸ்மி கூறியே பணியை ஆரம்பித்திருப்பர் என்று நல்லெண்ணம் வைக்கலாம்.

01. நூலின் பீடிகை:

நூலாசிரியர் பீடிகைப் பகுதியில் பின்வருமாறு கூறுகின்றார்.
“நான் இந்த நூலில் வெளியிட்டுள்ள தீர்ப்புக்களுக்கான பொறுப்பை தனியாகச் சுமந்து கொள்ளவும், இவற்றுக்கு எதிராகக் கிளர்ந்தெழக்கூடிய எதிர்ப்புக்களை தனித்து நின்று முகம் கொடுக்கவும் நாடினேன். (பக்கம்-02)

நூலாசிரியரின் இந்தக் கூற்று எதை உணர்த்துகின்றது! இந்நூலில் மக்கள் கிளர்ந்தெழத் தக்க கூற்றுக்கள் உள்ளதைத்தானே உறுதி செய்கின்றது? இதற்கு எதிர்ப்பு வரும். அந்த எதிர்ப்பை நானே எதிர்கொள்கின்றேன்” என்கிறார். அப்படியிருக்க இந்த நூலை ஏன் தமிழ் பேசும் சமூகத்திற்கு இறக்குமதி செய்ய வேண்டும்? இதைத் தவிர்த்திருக்கலாமல்லவா?

இந்நூலில் மொழிபெயர்ப்பாளர் “மொழிபெயர்ப்பாளர் உரை” என்ற பகுதியில்,
“இந்நூலிலும் அவர் பெரும்பான்மை அறிஞர்களுடன் முரண்படும் வகையில் சில கருத்துக்களை எழுதியுள்ளார். இதனால்தான் இந்த நூல் மூல மொழியில் வெளிவந்த போது மக்கள் மத்தியில் அதிர்வலைகள் ஏற்பட்டன. இந்நூலிலுள்ள சில கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடில்லை…..” (பக்கம்-13) என்று குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலான அறிஞர்களுடன் முரண்படக் கூடிய, மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தக் கூடிய மொழிபெயர்ப்பாளருக்குக் கூட உடன்பாடில்லா கருத்ததுக்கள் அடங்கிய நூலை எதற்காகத் தமிழ் உலகுக்குக் கொடுக்க வேண்டும்?

ஷெய்க் அவர்களை தமிழ் பேசும் சமூகம் அறிந்து கொள்ள வேண்டும் என்றால் சர்ச்சைகளை ஏற்படுத்தாத அவரது வேறு ஆக்கங்களை மொழி பெயர்த்திருக்கலாமல்லவா? மொழிபெயர்ப்பாளர் ஷெய்க் கஸ்ஸாலி அவர்கள் பெரும்பான்மை அறிஞர்களுடன் முரண்படும் வகையில் கருத்துக் கூறியிருப்பதாகக் கூறுகின்றார்.

நூலாசிரியர் கூறுவதைக் கவனியுங்கள்,
“நான் எனக்கென ஒரு கருத்து இருந்தாலும் முரண்பாடுகளையும், புற நடைகளையும் வெறுக்கின்றேன் என்பதை அல்லாஹ் அறிவான். நான் (ஜமாஅத்) சமூகத்துடன் இனைந்து செல்லவே விரும்புகின்றேன். சமூகத்தின் ஒற்றுமையைப் பாதுகாக்கும் நோக்கில் எனக்கு திருப்தியான கருத்தையும் விட்டுக்கொடுப்பேன்” (பக்கம்- 57)

தனது கருத்தையும் முரண்படக் கூடாது என்பதற்காக விட்டுக் கொடுப்பதாகக் கூறுகின்றார், புற நடைகளை வெறுப்பதாகக் கூறுகின்றார். இருப்பினும் அனேக அறிஞர்களுக்கு புற நடையிலான கருத்துக்களைத் தான் அவர் இந்நூலில் முன்வைத்துள்ளார். இதற்கு மொழிபெயர்ப்பாளரின் கூற்றே நிதர்சனமான சாட்சியாகும். “இசை கேட்டல்” போன்ற சாதாரண விடயத்தில் கூட ஷெய்க் அவர்கள் தனது கருத்தை சமூக ஒற்றுமைக்கும், முரண்பாடுகளைக் களைவதற்குமாக விட்டுக் கொடுக்கவில்லை என்பதைத்தான் நூல் நிரூபிக்கின்றது. இத்தகைய ஒரு நூல் சமூகத்திற்குத் தேவையா? என்பது சிந்திக்கத்தக்கதாகும்.

02. ஸஹாபாக்கள் மீதான விமர்சனம்
இந்த நூலாசிரியர் நவீன காலப் பேரறிஞர்களுள் ஒருவராகக் மதிக்கப்படுகின்றார். இருப்பினும், ஸஹாபாக்கள், ஹதீஸ்துறை அறிஞர்கள் குறித்த அவரது கூற்றுக்கள் விமர்சனத்திற்குரியதாகும். இவரது இத்தகைய கூற்றுக்கள்தான் இந்த விமர்சனக் கட்டுரைக்கான முக்கிய தூண்டுதலாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நபித்தோழர்களைக் குறை கூறுபவர்களை வெறுப்பதென்பது சுவனம் செல்லும் கூட்டத்தின் குணப் பண்புகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

உமர்(ரழி) குறித்த விமர்சனம்:
“தனது குடும்பத்தார் அழுவதால் மையத்து வேதனைக்குள்ளாக்கப் படுகின்றது” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்ற கருத்துப்பட உமர்(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இது குறித்து ஆயிஷா(ரழி) அவர்கள் குறிப்படும் போது அல்லாஹ் அவருக்கு அருள் புரியட்டும். அவர் பொய்யுரைக்கவில்லை. எனினும் மறந்துள்ளார் அல்லது தவறிழைத்துள்ளார். இறந்தவர்களுக்காக அழுவதால் மையத்துத் தண்டிக்கப்படுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறவில்லை. இவர்களோ அழுகிறார்கள், அவரோ தண்டிக்கப்படுகின்றார் என்ற சூழ்நிலையைத்தான் குறிப்பிட்டார்கள் என விளக்கினார்கள்.

(குறிப்பு: உமர்(ரழி) அவர்களது அறிவிப்பை ஷெய்க் கஸ்ஸாலி மட்டுமன்றி தவ்ஹீத் வட்டாரத்தில் சிலரும் மறுக்கின்றனர். ஷெய்க் கஸ்ஸாலி அவர்கள் மறுக்கும் ஹதீஸ்கள் பற்றி விளக்கும் போது இது குறித்த உண்மை நிலை விரிவாக விளக்கப்படும். இன்ஷா அல்லாஹ்)

நூலாசிரியர் இது குறித்த தகவல்களை நூலில் 19-21 வரையான பக்கங்களில் குறிப்பிட்டு விட்டு,
“உமரது அந்தஸ்திலுள்ள அறிவிப்பாளர் கூட பிழை விடுவது அசாத்தியமானதல்ல…” (பக்:22) என்று குறிப்பிடுகின்றார்.

இவர் கூறுகின்ற குற்றச்சாட்டை விட்டும் உமர்(ரழி) அவர்கள் பரிசுத்தமானவர்கள் என்பதை பின்னர் நாம் தெளிவுபடுத்துவோம். உமர் போன்ற பெரியவர்களே ஹதீஸ்களை அறிவிக்கும் போது பிழை விடுவார்கள் என்ற கருத்தைப் பதிவு செய்வதன் நோக்கம் என்ன? இது ஏற்படுத்தும் சந்தேகம் அனைத்து ஹதீஸ்களையும் பாதிக்குமல்லவா? ஸஹாபாக்களில் ஏற்படும் சந்தேகம் புனித குர்ஆனில் கூட ஐயத்தை ஏற்படுத்துமல்லவா?

இந்த அறிவிப்பு விடயத்தில் உமர்(ரழி) அவர்களைக் குறை கூறியவர் இந்த ஹதீஸைப் பதிவு செய்த ஹதீஸ் நூல் அறிஞர்களையும் குறைகாண்கின்றார்.

ஆயிஷா(ரழி) அவர்களால் மறுதலிக்கப்பட்ட இந்த ஹதீஸ் ஆதாரபூர்வமான ஹதீஸ் கிரந்தங்களில் இன்றும் பதிவாகியுள்ளது. அது மட்டுமல்ல இப்னு ஸஃத் அவரது “அத்தபகாதுல் குப்ரா” என்ற நூலில் வேறுபட்ட சில அறிவிப்பாளர் வரிசைகளினூடாக இந்த ஹதீஸை மீட்டி மீட்டிக் குறிப்பிட்டுள்ளார். (பக்:19)

ஆயிஷா(ரழி) அவர்கள் குர்ஆன் வசனத்தை ஆதாரம் காட்டி மறுத்த பின்னரும் அவர்களால் மறுக்கப்பட்ட ஹதீஸ்களைப் பதிவு செய்தவர்களைக் குறை காண்கின்றார். அவ்வாறு அவரால் குறை காணப்படுபவர்களில் இப்னு ஸஃத் ஒருவர். மற்றவர்கள் யார் தெரியுமா? இமாம்களான புஹாரி(ரஹ்), முஸ்லிம(ரஹ்);, அஹ்மத்(ரஹ்), இப்னு அபீiஷபா(ரஹ்) மற்றும் பல அறிஞர்கள்!.. ஆயிஷா(ரழி) மறுத்த பின்வரும் மறுக்கப்பட்ட ஹதீஸைப் பதிந்துவிட்டார்களாம்.

ஹப்பாப் இப்னுல் அரத்(ரழி) பற்றிய விமர்சனம்
இவர் ஆரம்ப கால ஸஹாபியாவார். இஸ்லாத்திற்காகப் பல சிரமங்களைத் தாங்கியவர். இவர் ஒரு ஹதீஸை அறிவிக்கின்றார். இந்த ஹதீஸ் ஷெய்க் கஸ்ஸாலியின் சிந்தனைக்கு எட்டவில்லை. இந்த ஹதீஸ் குறித்து விமர்சிக்கும் போது ஷெய்க் கஸ்ஸாலி கூறும் வார்த்தையைக் கவனியுங்கள்.
ஹப்பாப்(ரழி) நோய்வாய்ப்பட்டிருந்த போது உலகப் பொருட்களை அபசகுணமாகவே பார்த்தார். இதன் காரணமாகவே அவர் அப்படிச் சொன்னார் என்றே அவரது மேற்குறிப்பிட்ட கூற்றை நோக்கவேண்டியுள்ளது. (பக்கம்: 128)

உமர்(ரழி) பற்றிக் கூறிய கூற்றை விட இது சற்றுக் கடின வார்த்தையும், குழப்பம் நிறைந்த கூற்றுமாகும். ஒரு நபித்தோழர் நோயின் போது ஹதீஸ் என்ற பெயரில் உளறினார் என்று கூறவருகின்றார். நபித்தோழர்கள் இப்படி நடந்து கொண்டார்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விட்டால் ஹதீஸ்களுக்கு உரிய பெறுமானம் இல்லாது போய்விடும். ஒவ்வொருவரும் அவரவருக்குப் பிடிக்காத செய்திகளையும், புரிய முடியாத கூற்றுக்களையும் நபித்தோழர்களின் தனிப்பட்ட கருத்துஎன்றும் உளரல் என்றும் ஒதுக்கித்தள்ள ஆரம்பித்துவிடுவர். இதைத்தான் இவர்கள் விரும்புகின்றனரா?

ஸல்மான்(ரழி) அவர்கள் பற்றிய விமர்சனம்:
ஸல்மான்(ரழி) அவர்கள் சிறந்ததொரு நபித்தோழர். நபி(ஸல்) அவர்கள் ஸல்மான் என்னைச் சேர்ந்தவர் எனக் கூறும் அளவிற்கு சிறப்புப் பெற்றவர். இவரது ஆலோசனைப் பிரகாரம் தான் “அஹ்ஸாப்” போரின் போது நபி(ஸல்) அவர்கள் அகழி தோண்டி தற்காப்பு ஏற்பாட்டைச் செய்தார்கள். இவர் ஒரு ஹதீஸை அறிவிக்கின்றார். ஷெய்க் கஸ்ஸாலி அவர்களது அறிவு ஒத்துக் கொள்ளவில்லை. இதோ அது குறித்து அவர் பேசும் போது,

ஸல்மான் கூறும் ஹதீஸ் அவரது தனிப்பட்ட உளக்கிடக்கையின் வெளிப்பாடாகும். அதனடிப்படையில் பொதுவான ஷரீஆ ஒன்றைப் பெற முடியாது. (பக்கம்: 169)
ஸலாமான்(ரழி) அவர்கள் தனிப்பட்ட கருத்தை ஹதீஸ் எனப் பொய்யாகப் புனைந்து ரைத்தார்களா?

 ஏன் இந்தக் குற்றச்சாட்டு?
நபி(ஸல்) அவர்கள் உலகப் பற்றற்ற தன்மை பற்றிப் பேசியுள்ளார்கள். அதே வேளை செல்வத்தைத் தேடுவதையும் வலியுறுத்தியுள்ளார்கள். அபூதர் அல் கிபாரி, ஸஅத் இப்னு ஆமிர் போன்ற சில நபித்தோழர்கள் உலகப் பற்றற்ற தன்மையில் அதிகப் பிடிப்புள்ளவர்களாக இருந்தார்கள். அவர்கள் கூறும் கூற்றுப்படி வாழமுடியாவிட்டால் விட்டுவிடுங்கள். ஒரு நபித்தோழர் நபியவர்கள் கூறினார்கள் என்று கூறும் போது இது அவரது தனிப்பட்ட கூற்று எனக் கூறுவது நபித்தோழர்களைப் பொய்ப்படுத்தும் குற்றச் செயல் அல்லவா? இந் நூலின் 16 ஆம் பக்கத்தில் நபியவர்கள் மீது பொய்யுரைப்பது மார்க்கத்தில் போலிகளை இணைக்கின்ற, அல்லாஹ்வின் மீது அபாண்டங்களைச் சுமத்துகின்ற குற்றச் செயல் என்றும் நரகத்திற்குப் போவதற்குரிய பாவம் என்றும் குறிப்பிடுகின்றார். ஹப்பாப்(ரழி) அவர்கள் நபியின் பெயரில் நோயில் உளறினார் என்கின்றார். ஸல்மான்(ரழி) தனிப்பட்ட உளக்கிடக்கையை ஹதீஸ் எனக் கூறினார் என்கின்றார். இந்த நபித்தோழர்களையும் நரகவாதியாக்க (நஊதுபில்லாஹ்) முனைகின்றாரா?

நபித்தோழர்கள் பற்றிய இந்தக் கூற்றுக்கள் சுன்னாவின் நம்பகத் தன்மையில் களங்கத்தை ஏற்படுத்துகின்றதல்லவா? இவர் தன்னையும் தான் சார்ந்த சிந்தனை முகாம், குறித்தும் சிலாகித்துப் பேசும் போது அல்லாஹ்வின் வஹியை உலகில் மேன்மைப் படுத்துவதற்கும் மனித இயல்புக்கு நீதி வழங்குவதற்கும் இன்னும் நாகரிகம், அதன் இரட்சகனுடன் தொடர்புபடுத்தப்பட்டு நேர்வழியில் நடைபோடுவதற்காகவும் போராடும் முன்னனி இஸ்லாமியப் படையினர். நாமே (பக்கம்: 05) எனப் பீற்றுகின்றார். ஆனால் அவரது இத்தகைய கூற்றுக்கள் வஹியின் ஒரு பகுதியாகிய சுன்னாவைக் களங்கப்படுத்தி அதன் நம்பகத் தன்மையில் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

03. இமாம்கள் மீதான விமர்சனம்:
ஹதீஸ் தொடர்பான விடயத்தில் மட்டுமன்றி, பிக்ஹ் சட்டம், உஸுலுல் பிக்ஹ், காயிதாக்கள் அடிப்படை விதிகள் பற்றிப் பேசும் போதும் பல இமாம்களையும் இவர் விமர்சிக்கத் தயங்கவில்லை. இதே போன்று ஹதீஸ்கலை இமாம்களையும் இவர் காயப்படுத்துவதில் பின்வாங்கவில்லை. இவரது மற்றும் பல குற்றம் சுமத்தும் கூற்றுக்களை அவதானியுங்கள்.

ஷெய்க் முஹம்மத் கஸ்ஸாலி அவர்கள் நபித்தோழர்களை மட்டுமன்றி ஹதீஸ்களை அறிவிக்கும் பல அறிவிப்பாளர்களையும், ஹதீஸ்களைப் பதிவு செய்த இமாம்களையும் கூட விமர்சிக்கத் தவறவில்லை. இந்த விமர்சனங்கள் சிலபோது கேலியும், கிண்டலும் நிறைந்ததாகக் கூட அமைந்துள்ளன.

ஹதீஸ் அறிவிப்பாளர்களில் இமாம் நாபிஃ(ரஹ்) அவர்கள் முக்கியமானவராவார். இவர் குறித்து “அல் இர்ஷாத்” என்ற நூலில்,

நாபிஃ(ரஹ்) அவர்கள் இல்மில் இமாமாவார்கள் அவர் ஏற்றுக் கொள்ளப்பட்டவர் என்பது ஏகோபித்த முடிவாகும். அவரின் அறிவிப்புக்கள் ஸஹீஹானதாகும் என்றெல்லாம் போற்றப்பட்டுள்ளது. இமாம் மாலிக்(ரஹ்) அவர்களது “ஸில்ஸிலதுல் தஹபிய்யா” தங்க அறிவிப்பாளர் தொடரில் ஒருவராக அவர் திகழ்கின்றார். இவர் பற்றி ஷெய்க் அவர்கள் குறிப்பிடும் போது,

இது நாபிஃ(ரஹ்) தவறு விட்ட முதலாவது சந்தர்ப்பம் அல்ல. இதைவிட மோசமான தவறொன்றை அவர் இழைத்துள்ளார்…… (பக்:150)

இமாம் நாபிஃ தனது கருத்துக்கு மாற்றமாக ஒரு ஹதீஸை அறிவித்ததற்காக அவர் மீது அத்து மீறிய முஹம்மத் அல்கஸ்ஸாலி வழங்கும் ஒரு அவதூறாகவே இதை நாம் கருத வேண்டியுள்ளது.
இமாம் நாபிஃ(ரஹ்) மூடலாக அறிவித்த ஒரு செய்தியை வைத்து அவர் பெண்களின் மலவாயிலில்; உறவு கொள்வது ஆகுமானது என அறிவிப்பதாக தவறான தகவல் ஒன்று பரவியது. இது குறித்து இமாம் நாபிஃ(ரஹ்) அவர்களே அவர் உயிர் வாழும் போதே மறுப்புக் கூறிவிட்டார்கள்.

இமாம் நாபிஃ(ரஹ்) அவர்களிடம் பெண்களின் மலவாயிலில் உறவு கொள்ளலாம் என நீங்கள் இப்னு உமர்(ரழி) வழியாகக் கூறுவதாக செய்தி பரவலாகப் பேசப்படுகின்றதே என அபூ நழ்ர் என்பவர் கேட்ட போது இமாம் நாபிஃ அவர்கள்,

“நிச்சயமாக அவர்கள் என்மீது பொய்யுரைக்கின்றனர் என்று கூறிவிட்டு பின்புறமாக இருந்து பிறப்புறுப்பில் உறவு கொள்வது குறித்துத்தான் (2:223) வசனம் அங்கீகரித்து அருளப்பட்டதாக விபரிக்கின்றார்கள். (ஆதா: தப்ஸீர் குர்தூபி, (பாகம்:3, பக்கம்:92) சுனன் நஸாயீ: 8978)

அன்று அவர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை அவரே மறுத்த பின்னர் மீண்டும் தூசுதட்டி இந்த நூற்றாண்டு மக்களுக்கு ஷெய்க் முஹம்மத் அல்கஸ்ஸாலி அவர்கள் எடுத்துக் கொடுத்துள்ளார்கள். இது நியாயமா?

மறுமை நாளில் அல்லாஹு தஆலா முஃமின்களிடம் ஒரு “சூறத்தில்” – உருவத்தில் – வருவான் என்ற கருத்தில் ஸஹீஹ் முஸ்லிமில்; ஹதீஸ் பதிவாகியுள்ளது. ஷெய்க் முஹம்மத் அல்கஸ்ஸாலி அவர்கள் இந்த ஹதீஸை மறுக்கிறார் அல்லது உருவம் என்பதற்குப் பண்பு என மாற்று விளக்கம் கொடுக்கின்றார். இது பற்றிப் பின்னர் நாம் அலசவுள்ளோம். இன்ஷா அல்லாஹ். இந்த ஹதீஸைப் பதிவு செய்த இமாம்களை அவர் விமர்சிக்கும் தவறான போக்குத்தான் இங்கே சுட்டிக்காட்டப்படுகின்றது என்பது கவனத்திற் கொள்ளப்படத்தக்கதாகும். இது பற்றி அவர்களும் கூறும் போது,

அல்லாஹ்வுக்கு உருவம் கற்பிக்கும் நோயாளர்களில் சிலர்தான் இதனை மக்கள் மத்தியில் பரப்புகின்றனர். உண்;மையான முஸ்லிமைப் பொறுத்தவரை இது போன்ற அறிவிப்புக்களை தன்னுடைய தூதர் கூறியதாக சொல்வதற்கு வெட்கப்படுவர். (பக்கம்: 186) என்று கூறுகின்றார்.

இந்த ஹதீஸை இமாம் முஸ்லிம்(ரஹ்) அவர்கள் பதிவு செய்துள்ளார்கள். நபி(ஸல்) அவர்கள் இதைக் கூறியதாக அபூ ஸஈதுல் குத்ரி(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஷெய்க் முஹம்மது அல்கஸ்ஸாலி அவர்கள் இத்தகைய அறிஞர்கள் மீது இரண்டு அபாண்டங்களைச் சுமத்துகின்றார்.

1. அல்லாஹ்வுக்கு உருவம் கற்பிக்கும் நோயாளிகள்.
2. உண்மையான முஸ்லிம் இல்லை.

இந்த ஹதீஸை இமாம் முஸ்லிம்(ரஹ்) அவர்கள் அறிவிப்பதாலோ என்னவோ உண்மையான முஸ்லிம் இந்தச் செய்தியை நபி(ஸல்) அவர்களுடன் இணைக்க வெட்கப்படுவார் என்று கிண்டலாகக் கூறுகின்றார். ஹதீஸ்களை அறிவிக்கும் விடயத்தில் அறிஞர் அவர்கள் அறிவிப்பாளர்களையும், ஹதீஸ்துறை அறிஞர்களையும் விமர்சிப்பதற்கான உதாரணங்களை இதுவரை கூறினோம். ஹதீஸ்களுக்கு விளக்கம் கூறும் அறிஞர்களையும் அவர்களது விளக்கம் தனது விளக்கத்திற்கு முரண்படும் போது விமர்சிக்கும் போக்கையும் இந்நூலில் வெளிப்படுத்தியுள்ளார்.

மூஸா(அலை) அவர்கள் தன்னிடம் (மனித உருவில்) வந்த வானவரது கண்ணைப் பழுதாக்கினார் என்ற ஹதீஸ் புஹாரி, முஸ்லிம் உட்பட ஆதாரபூர்வமான ஹதீஸ் கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஹதீஸை ஷெய்க் முஹம்மது அல் கஸ்ஸாலி மறுக்கின்றார். அத்துடன் இந்த ஹதீஸுக்கு அறிஞர்கள் அளித்த விளக்கங்களையும் மறுக்கின்றார். இது பற்றி அவர் கூறும் போது,

இந்த அறிவிப்பைப் பாதுகாக்க எடுக்கப்படும் இத்தகைய முயற்சிகள் அனைத்தும் தகுதியற்றவை. மேலும் அவை அங்கீகரிக்கப்பட முடியாத அற்பத்தனமான பாதுகாப்பாகும். (பக்கம்:40) என்று குறிப்பிடுகின்றார்.

இந்த ஹதீஸ் பற்றி விமர்சிக்கும் போது ஒரு இளைஞர் வந்து கேள்வி கேட்டதாகவும், தான் இந்த ஹதீஸ் பற்றி சிந்தித்துப் பார்த்ததாகவும், இது குறைபாடுடையது என்பதைக் கண்டு கொண்டதாகவும் ஷெய்க் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். இமாம்களான அஹ்மத், இப்னு குஸைமா, இமாம் மாஸிரி போன்ற பெரும் பெரும் மேதைகளெல்லாம் இந்த ஹதீஸ் ஸஹீஹானது என்றும், இதனை பித்அத் வாதிகள் மறுத்து வருவதாகவும் கூறுகின்றனர். இதே வேளை இந்த ஹதீஸை விளக்க அவர்கள் கூறிய தகவல்களைத்தான் ஷெய்க் அவர்கள் தகுதியற்றதென்றும், அற்பத்தனமானது என்றும் விமர்சிக்கின்றார்.

இதே வேளை ஹதீஸின் உள்ளடக்கத்தில் (மதனில்) உள்ள குறையைப் புலமைமிக்க வர்களால்தான் கண்டு பிடிக்க முடியும் என்றும் கூறுகின்றார். இது பற்றி அவர் குறிப்பிடும் போது,

“ஹதீஸின் மத்னில் இருக்கும் குறைபாட்டை (இல்லத்) புலமைமிக்க அறிஞர்கள் மட்டுமே கண்டு கொள்வர்….” (பக்கம்:40) என்று குறிப்பிடுவதன் மூலம் இந்த ஹதீஸை ஸஹீஹ் எனக் கூறிய இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல், இமாம் இப்னு குஸைமா மற்றுமுண்டான அறிஞர்களைப் புலமை அற்றவர்களாகவும், தன்னிடம் அவர்களிடம் இல்லாத அந்தப் புலமை ரொம்பவே இருப்பதாகவும் சித்தரிக்க முனைகின்றாரா என்ற கேள்வி எழுகின்றது.

பிக்ஹ் சட்டவிதிகளுடன் சம்பந்தப்பட்ட கருத்து வேறுபாடுகள் பற்றிப் பேசும் போது அறிஞரவர்கள் இதே பாணியைத்தான் கையாண்டுள்ளார்கள்.

குர்ஆனின் சட்டத்தை ஸுன்னா மாறுமா? இல்லையா? என்பது குறித்து அறிஞர்களுக்கு மத்தியில் அபிப்பிராய பேதம் இருக்கின்றது. அறிஞர்களான ஹஸ்ஸான் இப்னு அதீய்யா, அஹ்மத் இப்னு ஹஸ்ம், குர்தூபி போன்ற அறிஞர்கள் சுன்னா குர்ஆனின் சட்டத்தில் மாற்றத்தை உண்டாக்கும் என்ற கருத்தில் இருக்கின்றனர். ஷெய்க் அவர்கள் இதற்கு மாற்றுக் கருத்தில் இருக்கின்றார்கள். மாற்றுக் கருத்தில் இருப்பதில் எமக்கு ஆட்சேபனையில்லை. ஆனால் இது பற்றிக் கூறும் போது,
சுன்னா அல் குர்ஆனின் சட்டத்தை இரத்துச் செய்யும் அல்லது மாற்றும் என்று யாராவது கூறினால் அது வீண் பிரம்மையாகும். (பக்கம்:172)

அப்படியாயின் மேற்குறிப்பிட்ட அறிஞர்களெல்லாம் வீண்பிரம்மைக்கு உட்பட்டவர்களா?
பொதுவான பிக்ஹ் சட்டம் பற்றிப் பேசும் போதும் அறிஞர் அவர்கள் இத்தகைய தாக்குதலைத்தான் கையாளுகின்றார்கள்.

கன்னிப் பெண்ணாயினும், விதவைப் பெண்ணாயினும் அவரவர் சம்மதம் பெற்றே திருமணம் செய்விக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் விதியாகும். பல்வேறுபட்ட அறிவிப்புக்கள் இதை உறுதி செய்கின்றன. இது குறித்து ஷெய்க் அவர்கள் (பக்கம்:46-47) ஆதாரங்களின் அடிப்படையில் பேசுகின்றார். இதில் அறிஞர் அவர்களின் கருத்தே சரியானது என்பதிலும் எமக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஒருவரை திருமணம் பண்ணுமாறு கூறிப் பெண்களை நிர்ப்பந்தித்துத் திருமணம் செய்விக்க முடியாது. இதற்கு மாற்றமாக தந்தைக்குக் கன்னிப் பெண்ணை நிர்ப்பந்தித்துத் திருமணம் செய்விக்கும் உரிமை இருப்பதாக சில அறிஞர்கள் கூறியுள்ளனர். இது தவறான கூற்றாகும் என்பதுதான் எமது நிலைப்பாடாகும். எனினும் இது பற்றி ஷெய்க் அவர்கள் விவாதிக்க முனையும் போதும் முடிவாகக் கூறும் கூற்றுத்தான் எமக்கு ஆச்சர்யத்தைத் தருகின்றது. இது பற்றிய கருத்தைத் துவங்கும் முன்னர் “சில சட்ட ஞானத்தையும், அறிவிப்புக்களையும் விட்டுவிட்டு சில சட்டங்களைச் சொல்லியிருப்பதைப் பார்க்கின்ற போது எமக்கு ஆச்சர்யம் மேலிடுகின்றது” (பக்கம்:46) என்று கூறிவிட்டே தொடர்கிறார்.

இவ்வாறிருந்தும் கூட தந்தைக்கு அவரது வயது வந்த மகளை அவள் விரும்பாதவனுக்கு நிர்ப்பந்தமாகத் திருமணம் செய்து கொடுப்பதை ஷாபி மத்ஹபினரும், ஹன்பலி மத்ஹபினரும் அனுமதித்துன்னனர்.

இக் கண்ணோட்டம் பெண்களை இழிவு படுத்தல் பாரம்பரியத்துடன் இணங்கிச் செல்வதாகவே நான் கருதுகின்றேன். (பக்கம்:47) என்று குறிப்பிடுகின்றார்.

பெண்களை அவள் விரும்பாதவனுக்கு நிர்ப்பந்தித்து திருமணம் செய்து கொடுக்கலாம் என்பது தவறான கருத்து எனக் கூறுவதை நாம் குறைகாணவில்லை. இந்தக் கூற்றைக் கூறியவர்களின் கூற்றைத் தவறான இஜ்திஹாத் அதுவாகும். இருப்பினும் இக் கூற்றைக் கூறியவர்கள் பெண்ணை இழிவுபடுத்தும் ஆணாதிக்கச் சிந்தனையின் தாக்கத்தால்தான் இப்படிக் கூறினார்கள் என்ற கருத்தைப் பதிவு செய்வதை அங்கீகரிக்க முடியாதுள்ளது.

இந்த ஆணாதிக்கச் சிந்தனையுடையவர்கள் யார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
மதீனாவின் ஏழு முக்கிய சட்ட அறிஞர்களில் இருவராகிய இமாம் அல் காஸிம் மற்றும் ஸாலிம் இமாம் ஆமிர் அஸ்ஸஹ்பி, இப்னு அபீலைலா, இமாம் அல்லைத், இமாம்களான மாலிக், ஷாபிஈ, அஹமத் இவர்கள்தான் பெண்மையை இழிவுபடுத்தும் ஆணாதிக்கச் சிந்தனையின் விளைவால் கருத்து வெளியிட்டவர்கள் என அஷ;ஷெய்க் கஸ்ஸாலி கூறுகின்றார்.

இவ்வாறு இமாம்களை விமர்சித்தவர் அடுத்த பந்தியிலேயே திருமணத்திற்கான வலி தொடர்பில் சுன்னாவுக்கு மாற்றமான கருத்தை முன்வைக்கின்றார். அறிவிப்புக்களுக்கு மாற்றமான கருத்தை முன்வைப்பது குறித்து ஆச்சர்யப்பட்டவர் “வலீ” விஷயத்தில் அறிவிப்புக்களுக்கு மாற்றமாகப் பேசுகின்றார். இது குறித்து நாம் தனித் தலைப்பில் விபரிக்கவுள்ளோம்.

04. ஹதீஸ் துறையினர் பற்றிய விமர்சனம்:
அஷ்ஷய்க் அவர்களின் இந்த நூலை நிதானமாக வாசித்து வந்தால் அனேக இடங்களில் ஹதீஸ்துறை அறிஞர்களைக் குறை கூறுவதைக் காணலாம். பிக்ஹ் துறையினருக்கும், ஹதீஸ் துறையினருக்கும் மத்தியில் நபிகளாரின் சுன்னா என இரு சாராருக்கும் மத்தியில் தீர்ப்புக் கூறும் நீதிபதியாகத் தன்னை ஆக்கிக் கொண்ட அறிஞர் அவர்கள், ஓரிரு இடங்களில் நியாயமான, நடுநிலையான கருத்தை முன்வைத்தாலும் பல இடங்களில் பிக்ஹ் துறையினரை உயர்த்தி ஹதீஸ் துறையினரை மட்டம் தட்டுவதைக் காணலாம். இதற்கான சில உதாரணங்களைக் கீழே தருகின்றோம்.

ஆண்கள் கொல்லப்பட்டால் வழங்கப்படுகின்ற தண்டப் பணத்தின் அரைப்பகுதியே பெண் கொலை செய்யப்பட்டால் வழங்கப்பட வேண்டும் என்று அஹ்லுல் ஹதீஸ் பிரிவினர் கூறுகின்றனர். இவர்களின் மோசமான சிந்தனையையும், நடத்தையையும் புலமை பெற்ற அறிஞர்கள் மறுதலிக்கின்றனர்.(பக்கம்-24)

வாழ்க்கையின் அனைத்து விடயங்களையும் முழுமையாக உள்ளடக்கிய இஸ்லாத்தில் ஹதீஸ் அறிவிப்புக்கள் எத்தகைய அந்தஸ்தைப் பெறுகின்றன என்பது பற்றிய தெளிவில்லாமல் அவர்கள் அவற்றையே முழுமுதல் ஆதாரமாகக் கொள்கின்றனர். (பக்கம்-29)

அல் குர்ஆனின் சொற்களின் பக்கமும், அதன் கருத்துக்களின் பக்கமும் கவனத்தை ஈர்க்கவே நாம் வேட்கை கொண்டுள்ளோம். அஹ்லுல் ஹதீஸைச் சார்ந்த அதிகமானோர் இவற்றிலிருந்து திரையிடப்பட்டவர்களாகவே உள்ளனர். அவர்கள் வேறு சோலிகளில் மூழ்கியிருப்பதால் வஹியிலிருந்து அறிவருந்துவது அவர்களால் இயலாமற் போயுள்ளது. (பக்கம்-32)

உண்மையில் இரு சாராரும் ஒருவர் அடுத்தவர் பால் பரஸ்பரத் தேவையுடை யோராவே உள்ளனர். ஸுன்னா இல்லாமல் பிக்ஹ் இல்லைளூ பிக்ஹ் இல்லாமல் ஸுன்னா இல்லை. இவை இரண்டின் ஒத்துழைப்பின் மூலமே இஸ்லாத்தின் மகத்துவம் பூரணத்துவம் அடைகின்றது.

அவர்களில் ஒரு சாரார் தம்மிடம் இருப்பது மாத்திரம் போதுமானது என இறுமாப்புக் கொள்கின்ற போது சோதனை உருவாகின்றது. பிடிவாதத்தினாலும், அறிவீனத்தினாலும் இச் சோதனை விஷ்வரூபம் எடுக்கின்றது. (பக்கம்-33)

ஹதீஸ் துறையில் ஈடுபடும் சிலர் அல் குர்ஆனை ஆராய்ந்து பார்ப்பதையும் அதன் அண்மிய மற்றும் சேய்மையான கருத்துக்களை விளங்கிக் கொள்வதையும் கஷ்டமாகக் கருதுகின்றனர். அதே நேரம் ஹதீஸொன்றை செவிமடுத்து அதிலிருந்து சட்டம் பெறுவதை அவர்கள் இலகுவாகக் கருதுகின்றனர். இதனால்தான் நாட்டுக்கும், மக்களுக்கும் துரதிஷ்டம் பீடித்துள்ளது. (பக்கம்-35)

யாருக்கு இஸ்லாமிய சட்ட ஞானம் இல்லையோ அவர்கள் தம்மால் விளங்கிக் கொள்ள முடியாத ஹதீஸின் மூலம் அல்லது விளங்ககிக் கொண்ட ஆனால் அல் குர்ஆனின் வெளிப்படையான கருத்துக்கு முரணாக அமைந்த ஹதீஸ் மூலம் இஸ்லாத்திற்கு சேதம் ஏற்படுத்தாமல் வாயை மூடிக் கொண்டிருப்பதே கடமையாகும். (பக்கம்-75)

“பெண்கள் ஐங்காலக் கூட்டுத் தொழுகை எதிலும் கலந்து கொள்வது விரும்பத்தக்கதல்ல எனக் கூறுகின்ற பிறிதொரு ஹதீஸும் மக்கள் மத்தியில் பரவியுள்ளது. அதுமட்டுமன்றி பெண் வீட்டில் தொழுவதற்கு நாடினால் தனிமையான ஒதுக்குப் புறத்தை அவர் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும் எனவும் அந்த ஹதீஸ் வேண்டுகின்றது. இதன்படி அவள் அறையில் தொழுவதை விட மறைவிடத்தில் தொழுவது சிறந்தது. ஒளியில் தொழுவதை விட இருளில் தொழுவது சிறந்தது!

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் இதற்குப் பின்னால் அல்லாஹ்வின் தூதரில் முதவாதிரான நடைமுறை சுன்னாக்களை மறைக்கப் பார்க்கிறார். (பக்கம்-78)

சட்ட அறிஞர்களிடத்தில் ஏற்புடைய நம்பத்தகுந்த விடயங்களாக கருதப்படுகின்றவைக்கு முரணாக முஹத்திஸ்கள் அறிவிப்புச் செய்பவற்றைக் கண்டு சட்ட அறிஞர்கள் நிச்சயமாக திடுக்கமடைவர். (பக்கம்-81)

ஹதீஸ்துறையில் ஆதாரமில்லாதவற்றை எடுத்துக் கொண்டு மார்க்கம் என்ற மைதானத்திற்குள் துழைந்து அவற்றை சந்தைப் படுத்துகின்றவர் போலி நாணயங்களை எடுத்துக் கொண்டு சந்தைக்குப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு செல்பவரைப் போலாகும். காவல் துறையினர் அவரைப் பிடித்து கையில் விலங்கிட்டால் அவர் தன்னையே நொந்து கொள்ளட்டும். (பக்கம்-82,83)

அவ்வாறே ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் மற்றும் அறிவிப்புக்களாக இருந்தாலும் அவற்றின் சரியான கருத்தை விளங்கிக் கொள்ள வேண்டும் எனவும் இஸ்லாமிய இயக்கங்களை நாம் கேட்டுக் கொள்கின்றோம். பிக்ஹ் துறை இமாம்களே அக்கலையில் எசமான்கள். (பக்கம்-82)

அவற்றை இமாம்களான இப்னு ஹன்பலோ இப்னு தைமிய்யாவோ அல்லது வேறு எவர் குறிப்பிட்டிருந்தாரும் சரியே! (பக்கம்-144)

வேட்டைப் பல் உள்ள வேட்டைப் பிராணிகள் அனைத்தையும் சாப்பிடுவது ஹராமாகும் என்ற ஹதீஸ் ஸஹீஹ் முஸ்லிமில் பதிவாகியுள்ளது. இதற்கு விளக்கமளிக்கையில், அல் குர்ஆன் பற்றி அறியாமை மிக மோசமான நிலையை அடைந்திருப்பதை நான் கண்டேன்.இந்த ஹதீஸ் மதீனாவில் வைத்து கூறப்பட்டதாக ஹதீஸ் விளக்கவுரையாளர் பொய்யாக வாதிடுகின்றார். (பக்கம்-148)

இந்த அறிவிப்பில் நம்பகத்தன்மை ஆட்டம் காணும் நிலையிலிருந்தும் கூட அஹ்லுல் ஹதீஸினர் மார்க்கம் பற்றிய குறைஞானம் காரணமாக அதனை மக்கள் மத்தியில் சந்தைப்படுத்துகின்றனர். (பக்கம்-150)

பிக்ஹ்துறை சார்ந்த அறிஞர்களே இஸ்லாம் பற்றிப் பேசுவர். தேனின் மீது ஈ மொய்ப்பது போல நம்பகமானவற்றுடன் போலியானவையும் கலந்துள்ள ஹதீஸ் நூல்களிலுள்ள அறிவிப்புகளுக்கு அவர்களே விளக்கம் கூறினர்.
ஆரம்ப காலம் முதல் பிக்ஹ்துறை அறிஞர்களே இஸ்லாத்தின் பெயரால் பேசுபவர்களாக இருந்தனர். நபித்துவப் பாரம்பரியம் பற்றி நன்கறிந்தவர்களாகவும் அவர்களே இருந்தனர். (பக்கம்-161,162)

அஹ்லுல் ஹதீஸைச் சேர்ந்த குறையுடையோர் ஹதீஸின் யதார்த்த நிலையையும் அது காட்டும் கருத்துக்களையும் அறியாத நிலையில் அதனைக் கண்டு கொண்டு பின்னர் முழு மார்க்கத்தையும் அதில் தேய்த்தெடுக்கின்றனர். (பக்கம்-188)

இது உபரி விவகாரங்களை உறுதிப்படுத்துவதில் மார்க்கப் பற்றுள்ள சிலரது வரம்பு மீறிய செயலாக இருக்க முடியும். பிக்ஹ் துறை அறிஞர்கள் இவ்வாறான நடத்தையினால் களங்கப்படாதவர்கள், தூய்மையானவர்கள். (பக்கம் – 137)

இவ்வாறு நூல் நெடுகிலும் காணப்படும் குத்தல், குறைத்து மதிப்பிடல் போன்ற வார்த்தைகளைக் கவனிக்கும் போது ஷெய்க் முஹம்மத் அல்கஸ்ஸாலி அவர்கள், தான் விளங்கிக் கொண்டதற்கு மாற்றமான கருத்தில் இருப்பவர்களைத் தரக்குறைவாகவே நோக்குவதாகத் தென்படுகின்றது. இது அவரது பொதுவான போதனைக்கே முரண்படுவதைக் காணலாம். இந் நூலில் பக்கம்-09 இல் பிக்ஹ் கருத்தில் தனது கருத்துக்கு மாற்றமான கருத்தைக் கொண்டவர்களை மூடர்களாகப் பர்க்கும் பார்வையை அறிஞர் அவர்கள் விமர்சிக்கின்றார்கள். நாமும் இதில் அறிஞர் அவர்களுடன் உடன்படுகின்றோம். இவ்வாறு போதித்த அறிஞர் அவர்களே தனது கருத்துக்கு மாறுபட்டவர்களைத் தரக்குறைவாக விமர்சிக்கலாமா?

“அஹ்லாக் இல்லாத பிக்ஹில் எந்தப் பெறுமானமும் இல்லை. (நூல்: இஸ்லாமிய சமூகம் இன்றும் எதிர்காலமும் ஒரு மீள்பார்வையும் எழுச்சிக்கான இங்கே அஹ்லாக் நிபந்தனைகளையும் (பக்கம்:24) பண்பாடு இல்லாத பிக்ஹினால் பயன்பாடு இல்லை எனப் போதித்த அறிஞர் அவர்களே தனக்கு முன்னர் இஸ்லாத்திற்காக சேவை செய்த அறிஞர்களைப் பண்பாடு இல்லாமல் குறை கூறலாமா? ஷெய்க் அல்கஸ்ஸாலி அவர்களின் “ஹுலுகுல் முஸ்லிம்” நூலை முறையாக வாசித்த எவரும் இந் நூலை வாசிக்கும் போது முஸ்லிமின் பாண்பாடுகள் பற்றி இவ்வளவு அழகான நூலை எழுதிய ஒரு அறிஞரா இப்படி பண்பாடு இல்லாமல் எழுதுகின்றார் என்ற ஆச்சர்யத்திற்குள்ளாவது தவிர்க்கமுடியாததாகும்.

ஷெய்க் அவர்கள் தன்னை பிக்ஹ்துறை அறிஞராக இனம் காட்டிக் கொள்கின்றார். எனவே, சாதாரண பிக்ஹ்துறை விடயங்களில் இந் நூலில் அவர்கள் விட்டுள்ள சில தவறுகளைத் தொட்டுக் காட்டுவது கட்டாயமாகின்றது.

வலி (பெண் தரப்பில் பொறுப்பானவர்) இல்லாத திருமணம்.

திருமணம் நடக்கும் போது பெண் தரப்பில் வலியொருவர் அவசியமாகும். பெண்ணின் தந்தை அல்லது அதையொத்த ஒரு உறவினர் மணமகனிடம் சட்டபூர்வமாக ஈஜாப் கூறி திருமணத்தினை நடாத்தி வைப்பர். ஹனபி மத்ஹபில் வலி அவசியமில்லை என்ற சட்டம் இருக்கிறது. குடும்பத்தின் அனுமதியில்லாமல் காதலித்து வீட்டை விட்டு ஓடிச் செல்லும் இளம் ஜோடிகள் தமது திருமணத்தை இந்த அடிப்படையில்தான் செய்கின்றனர். திருமணப் பதிவாளர்கள் இவர்களிடம் ஆயிரக் கணக்கில் பணத்தைக் கறந்துவிட்டு ஹனபி மத்ஹபின் அடிப்படையில் வலி (பெண் தரப்பில் பொறுப்பாளர்) இல்லாமல் திருமணம் நடந்ததாகப் பதிந்து விடுகின்றனர். ஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி அவர்கள் இந்த நூலிலும் அவரது ஏனைய நூல்களிலும் திருமணத்திற்கு பெண் தரப்பி;ல் வலி அவசியமில்லை என்ற கருத்தை முன்வைப்பதுடன் “வலி” அவசியம் எனக் கூறும் ஹதீஸ்களையும் மறுக்கின்றனர். இந்த நூலில் இது தொடர்பாகப் பேசும் போது,

“ஹனபீக்கள் அல் குர்ஆனின் வெளிப்படையான கருத்தை செயற்படுத்தும் வகையில் பெண்கள் திருமண ஒப்பந்தத்தை அவர்களாகவே செய்து கொள்வதற்கு அனுமதி அளித்துள்ளனர் என நாம் ஏலவே குறிப்பிட்டுள்ளோம்” (பக்கம்:47) பெண்களின் சம்மதமின்றி நிர்ப்பந்தித்து திருமணம் செய்விப்பது கூடாதென்பதை நிரூபிப்பதற்காக ஹதீஸ்களை ஆதாரம் காட்டிய அறிஞர் அவர்கள் “வலி” விடயமாகப் பேசும் போது ஹதீஸ்களைக் கண்டு கொள்ளலாமல் கருத்துத் தெரிவிக்கின்றார். அத்துடன் மற்றுமொரு இடத்தில் இதை நியாயப்படுத்தும் போது அதிசயமானதொரு வாதத்தையும் முன்வைக்கின்றார்.

குறிப்பிட்ட சட்டமொன்றை நிர்ணயிப்பதில் முஸ்லிம் சட்ட அறிஞர்களது கருத்துக்களில் வேறுபட்டவையாக இருந்தால் அவற்றில் மக்களது பாரம்பரியங்களுக்கு மிக நெருக்கமான சட்டத்தைத் தெரிவு செய்வது எமது கடமையாகும்.

ஐரோப்பாவில் பெண் தனது கணவனை சுயமாகவே தேர்ந்தெடுக்கிறாள். அதில் அவள் தனது ஆளுமையை ஒரு போதும் விட்டுக் கொடுப்பதில்லை. இந்நிலையில் நாம் ஐரோப்பியர்களது பழக்க வழக்கங்களுக்கு நெருக்கமானதாக விளங்கும் இமாம் அபூஹனீபாவின் கருத்தை விட்டுவிட்டு இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளுடன் சேர்ந்து மாலிக்கினதோ அல்லது இப்னு ஹன்பலினதோ கருத்தை அவர்கள் மீது திணிப்பது எமது பணியாக இருக்கக் கூடாது. அவர்களுக்கு அறிமுகமான கருத்து இருக்கும் போது ஆச்சரியமான கருத்தை அவர்கள் மீது திணிப்பது அவர்களைக் கஷ்டப்படுத்துவதாகவும், அல்லாஹ்வின் பாதையை விட்டு அவர்களைத் தடுப்பதாகவும் அமையும். (பக்கம்:74-75)

திருமணத்தின் போது பெண் தரப்பில் பொறுப்பாளர் அவசியமா? இல்லையா? என்பதை ஹதீஸை வைத்து தீர்மாணிக்கத் தவறிய அறிஞர் அவர்கள், ஐரோப்பியப் பெண்களின் வழக்கத்தை அடிப்படையையாகக் கொண்டு தீர்மானமெடுப்பது ஆச்சரியமாக இல்லையா? இத்தகைய சிந்தனையுடைய அறிஞர்களின் கருத்துக்களை ஒரு பிரதேசத்திலிருந்து அடுத்த பிரதேசத்திற்கு எடுத்துச் செல்வதைத் தவிர்ப்பது அவசியமாகும். ஏனெனில், இவர்கள் தாம் வாழும் சமூக சூழலை அவதானித்து அதற்குத் தேவையான கருத்துக்களைத்தான் முன்வைக்கின்றனர்.

தாடி வைத்தல், இசை, ஆடை விவகாரம் தொடர்பில் இவர்கள் முன்வைக்கும் வாதங்கள் இதனை இன்னும் உறுதி செய்கின்றன. இசை, பாடல் ஆகுமானது என்ற தனது கருத்தை உறுதி செய்வதற்காக (பக்கம்:92-116) வரை 24 பக்கங்கள் எழுதிய அறிஞர் அவர்கள், வலி விடயத்தில் சில வரிகளை எழுதிவிட்டுத் தவிர்ந்து கொள்கின்றார்கள் என்றால் மனோ இச்சைக்கும், சுய கருத்தைத் தூக்கிப் பிடிப்பதற்கும் அளிக்கப்படும் முக்கியத்துவத்தைத்தான் இது உணர்த்துகின்றது.

தந்தை தன் மகளை நிர்ப்பந்தித்துத் திருமணம் செய்விக்கலாம் என்ற கருத்தை விமர்சிக்கும் போது “ஆணாதிக்க சிந்தனைப் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் முயற்சி” என விமர்சிக்க அறிஞர் அவர்களது இந்தக் கருத்தை ஐரோப்பாவின் அசிங்கமான கலாச்சாரத்தை முஸ்லிம் சமூகத்திற்குள் நுழைவிக்க எடுக்கப்படும் முயற்சி என நாம் விமர்சிக்கலாமா? அல்லது ஐரோப்பாவின் அடிவருடித்தனம் என்று கூறலாமா?

குர்ஆனின் வெளிப்படையான கருத்து, பெண் தனது திருமண ஒப்பந்தத்தை அவளாகவே செய்து கொள்வதற்கு அனுமதியளித்துள்ளது என்று ஷெய்க் கூறுகின்றார். இது தவறான வாதமாகும். அவர் எந்த ஆதாரங்களின் அடிப்படையில் இப்படிக் கூறுகின்றார். அது எந்த வகையில் தவறானது என்பதைப் புரிந்து கொள்வது அவசியமாகும். அதே வேளை இவர் கூறுவதற்கு மாற்றமாக குர்ஆன் அமைந்திருப்பதையும், ஹதீஸ்கள் தெளிவாக “வலி”யின் அவசியத்தை வலியுறுத்தியிருப்பதையும் வாசகர்கள் புரிந்து கொள்வது அவசியமாகும்.

“(மூன்றாம் முறையாக) அவளை அவன் விவாகரத்துச் செய்தால், அவள் வேறு கணவனை மணமுடிக்கும் வரை இவனுக்கு அவள் ஆகுமானவளாக மாட்டாள். அ(வ்விரண்டாம் கண)வன் இவளை விவாகரத்துச் செய்து (முதற் கணவரும், இவளும்) இருவரும் அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணமுடியும் என்று எண்ணினால், அவர்கள் இருவரும் (மணவாழ்விற்கு) மீள்வதில் குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும். அறிந்து கொள்கின்ற சமூகத்திற்கு அவன் இவற்றைத் தெளிவு படுத்துகின்றான்.” (2:230)

வேறு கணவனை அவள் மணமுடிக்கும் வரை என குர்ஆன் கூறுவதால் அவள் தானாகவே திருமணம் செய்து கொள்ளலாம் என்ற அடிப்படையில்தான் ஷெய்க் அவர்கள் “வலி” தேவையில்லை எனக் குர்ஆனின் வெளிப்படையான கருத்து கூறுவதாகக் கூறுகின்றார்.

உண்மையில் இந்த விடயத்தில் பயன் படுத்தப்பட்ட “தன்கிஹ” என்ற பதத்தின் அர்த்தம் திருமணம் அல்ல. உடலுறவு என்பதாகும். உடலுறவுக்கும் “நிகாஹ்” என்ற பதம் அரபியில் பயன்படுத்தப்படும். இந்த இடத்தில் உடலுறவு குறித்துத்தான் பேசப்படுகின்றது என்பது தெளிவாகவே கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த வாதம் வலுவற்றதாகும். மூன்று முறை தலாக் கூறப்பட்ட பெண் மீண்டும் அதே ஆணைத் திருமணம் செய்ய வேண்டுமென்றால் அந்தப் பெண் இன்னொருவரைத் திருமணம் செய்தால் மட்டும் போதாது. அவர்களுக்கு மத்தியில் உடலுறவும் நடந்து அவர்கள் இயல்பாகப் பிரிய வேண்டும் என்பது ஹதீஸ்களில் தொளிவாகக் கூறப்பட்டுள்ளது.

“நீங்கள் பெண்களை விவாகரத்து செய்து அவர்கள் தங்கள் (இத்தா)காலக் கெடுவின் எல்லையை நிறைவு செய்து (மீண்டும்) அவர்கள் தமக்குள் நல்ல முறையில் உடன்பட்டுக் கொண்டால் (அப்) பெண்கள் தங்களது கணவன்மார்களை (மறுமுறை) மண முடிப்பதை (பொறுப்புதாரிகளாகிய) நீங்கள் தடுக்க வேண்டாம். உங்களில் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொள்பவர் இதைக்கொண்டு உபதேசிக்கப்படுகிறார். இதுதான் உங்களுக்கு மிகத் தூய்மையானதும் பரிசுத்தமானதுமாகும். அல்லாஹ்தான் நன்கறிவான்ளூ நீங்களோ அறியமாட்டீர்கள்.” (2:232)

இந்த வசனத்திலும் திருமணம் பெண்களுடன் இணைத்துப் பேசப்படுவதால் பெண் தானே தனித்து நின்று தனது திருமணத்தை நடாத்திக் கொள்ளலாம் என்று வாதிடுகின்றனர். இதுவும் தவறாகும். இந்த வசனம் அருளப்பட்ட சந்தர்ப்பம் பெண்ணுக்கு “வலி” தேவை என்பதைத்தான் உறுதி செய்கின்றது. எனவேதான் இமாம் புஹாரி(ரஹ்) அவர்கள் பெண்ணுக்கு “வலி” அவசியம் என்ற பாடத்தை இடும் போது

“அவர்கள் திருமணம் செய்வதைத் தடுக்காதீர்கள்” நீங்கள் என்ற அல்லாஹ்வின் வார்த்தையை வைத்து “வலி இன்றி” திருமணம் இல்லை என்று கூறுபவர்கள் யார்? என்பது பற்றிய பாடம் எனத்தான் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

“மஃகல் இப்னு யசார் என்பவர் தனது சகோதரியை ஒருவருக்கு மணமுடித்துக் கொடுத்தார். அவர் அப்பெண்ணைத் தலாக் கூறினார். இத்தாக் காலம் முடிந்த பின்னர் மீண்டும் அப்பெண்ணை மணமுடிக்க மஃகலிடம் பேசினார். அந்தப் பெண்ணும் அவருடன் வாழ விரும்பினார். இருப்பினும் மஃகல் மறுத்தார். அப்போதுதான் இந்த வசனம் இறங்கியது” (புஹாரி:45-29)

இந்த சந்தர்ப்பத்தில் மஃகல் பாவித்த வாசகம் தெளிவாகவே ஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மஃகல் இப்னு யசார் கூறுகின்றார். “எனக்கு ஒரு சகோதரி இருந்தாள். என்னிடம் அவளைப்; பெண் கேட்டு (பலரும்) வந்தனர். எனது சாச்சாவின் மகன் ஒருவரும் வந்தார். நான் அவளை அவருக்கு மணமுடித்துக் கொடுத்தேன். அவர் அவளை தலாக் (ரஜயி) கூறினார். அவளது இத்தாக் காலம் முடிந்த பின்னர் அவளை என்னிடம் பெண் கேட்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது இவர் வந்து மீண்டும் திருமணம் முடித்துத் தருமாறு கோரினார். அதற்கு நான் அல்லாஹ்வின் மீது சத்தியமாக அவளை உனக்கு ஒரு போதும் மணமுடித்துத் தரமாட்டேன் என்று கூறினேன்” (ஆதாரம்: அபூதாவூத்)

இந்த ஹதீஸ் பெண்தரப்பில் வலியின் அவசியத்தைத்தான் வலியுறுத்துகின்றது. குர்ஆனின் வெளிப்படையான கருத்தைத் தவறாக விளங்கிக் கொண்டு ஹதீஸ்களை மறுப்பதென்பது எவ்வளவு ஆபத்தான போக்கு என்பதைச் சற்று நிதானமாகச் சிந்தித்துப்பாருங்கள்.

“வேதத்தில் ஒரு பகுதியை நம்பிக்கை கொண்டு, மறு பகுதியை நிராகரிக்கின்றீர்களா? உங்களில் இவ்வாறு செய்வோருக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறு கூலி இல்லை. மறுமையில் அவர்கள் கடுமையான வேதனையின் பால் மீட்டப்படுவார்கள். நீங்கள் செய்பவை பற்றி அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை” (2:85).

வேதத்தின் ஒரு பகுதியை ஏற்று மறு பகுதியை மறுப்பது பாரிய குற்றமல்லவா? குர்ஆனில் மணமுடித்தல் என்ற சொல் பெண்ணுடன் தொடர்புபடுத்திப் பயன்படுத்தப்பட்டிருப்பதை வைத்து இத்தகைய தவறான முடிவை எடுத்தவர்கள் பின்வரும் குர்ஆன் வசனங்களின் வார்த்தைப் பிரயோகத்தைச் சற்று அவதானிக்கக் கூடாதா?

“இணைவைக்கும் பெண்களை அவர்கள் நம்பிக்கை கொள்ளும்வரை மணமுடிக்காதீர்கள். முஃமினான அடிமைப்பெண், உங்களைக் கவரக்கூடிய இணைவைக்கும் பெண்ணை விடச் சிறந்தவளாவாள். இன்னும், இணைவைக்கும் ஆண்களை அவர்கள் நம்பிக்கைகொள்ளும் வரை (உங்கள் பெண்களுக்கு) மணமுடித்து வைக்காதீர்கள். உங்களைக் கவரக்கூடிய இணைவைக்கும் ஆணை விட, முஃமினான அடிமை மேலானவனாவான். அவர்கள் நரகத்தின் பால் அழைக்கின்றனர். ஆனால், அல்லாஹ்வோ தனது நாட்டப்படி மன்னிப்பின்பாலும் சுவர்க்கத்தின் பாலும் அழைக்கின்றான். இன்னும் மனிதர்கள் நல்லுபதேசம் பெறும் பொருட்டு தனது வசனங்களை அவர்களுக்கு அவன் தெளிவுபடுத்துகின்றான்.” (2:221)

என்று ஆண்களைப் பார்த்து அல்லாஹ் பேசுகின்றான். அதாவது முஷ்ரிக்கான பெண்களை நீங்கள் மணக்காதீர்கள் எனத் தடைவிதிக்கின்றனர்.

இதே தடை பெண்களுக்கும் போடப்படுகின்றது. அப்படித் தடுக்கும் போது முஷ்ரிக்கான ஆண்களை நீங்கள் மணமுடிக்காதீர்கள் எனப் பெண்களிடம் பேசப்படவில்லை.

இணை வைக்கும் ஆண்களை (உங்கள் பெண்களுக்கு) மணமுடித்து வைக்காதீர்கள் என்ற கட்டளை பெண்களின் “வலீ” பொறுப்புதாரிகளுக்கு இடப்படுவதால் பெண்ணின் திருமணத்தின் போது அவளின் “வலி” (பொறுப்புதாரி) இருப்பது அவசியம் என்பது உணர்த்தப்படுகின்றது. ஐரோப்பியப் பெண்களின் ஆளுமையைக் காப்பதற்காக இத்தகைய வாசனங்களையெல்லாம் முதுகுக்குப் பின்னால் வீசிவிட முடியாது.

இந்த வசனத்தில் கூட ஆணுடன் திருமணம் இணைத்துப் பேசப்படுகின்றது. திருமணம் முடித்தல் என்பது பெண்ணுடன் இணைத்துப் பேசப்படவில்லை.

“நீர் எனக்கு எட்டு வருடங்கள் கூலியாளராக இருக்கவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் எனது இவ்விரு புதல்விகளில் ஒருத்தியை உமக்கு நான் திருமணம் முடித்துத்தர விரும்புகின்றேன். நீர் பத்தாகப் பூர்த்தி செய்தால், அது உன் விருப்பத்தைச் சார்ந்தது. உம்மைச் சிரமப்படுத்த நான் விரும்பவில்லை. “இன்ஷா அல்லாஹ்” (அல்லாஹ் நாடினால்) என்னை நல்லவர்களில் நீர் கண்டுகொள்வீர் என அவர் கூறினார்” (28:27)

இங்கும் தந்தை பொறுப்பாக இருந்து திருமணம் முடித்துத்தருகின்றேன் என்று கூறப்படுவது கவனிக்கத்தக்கதாகும். இவ்வாறு இருக்கும் போது குர்ஆனின் வெளிப்படையான கருத்து “வலி” தேவையில்லை. பெண் தனது திருமணத்தைத் தானே நடத்திக் கொள்ளலாம் என இருக்கின்றது என்று கூறுவது எவ்வளவு தூரம் பாரதூரமானது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதே வேளை நபிமொழிகளும் “வலி”யின் அவசியத்தை வலியுறுத்துகின்றன.

“வலி இன்றி” திருமணம் இல்லை என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூ மூஸா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (திர்மிதி:1101, அபூதாவுத்: 2087) இந்த ஹதீஸை ஷெய்க் அல்பானி ஸஹீஹானது என்று கூறுகின்றார்கள். இதே ஹதீஸ் ஆயிஷா(ரலி) அவர்கள் மூலமாகவும் அபூபுர்தா(ரலி) மூலமாகவும் அறிவிக்கப்படுவதையும் காணலாம். ஸஹாபாக்களின் அறிஞர்களான உமர்(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி), அபூஹுறைரா(ரலி) போன்றவர்களும் தாயிஈன்களில் உள்ள பிக்ஹ்துறை அறிஞர்களான ஸயித் இப்னுல் முஸையப், ஹஸனுல் பஸரி, ஹுரைஹ் மற்றும் இப்றாஹீம் அந்நகயீ, உமர் இப்னு அப்துல் அஸீஸ் போன்றவர்கள் வாயிலாகவும் இந்தக் கருத்து உறுதி செய்யப்பட்டுள்ளதாக இமாம் திர்மிதி(ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள். (பார்க்க: சுனன் திர்மிதி) ஐரோப்பியப் பெண்களின் இயல்புக்காக இவர்கள் கூறிய சரியான கூற்றை விட்டுவிட வேண்டுமா?

இவர்கள் தமது பிள்ளைகள், சகோதரிகள் இவ்வாறு தனிப்பட்ட முடிவில் திருமணம் செய்து கொள்வதை அங்கீகரிப்பார்களா? பிள்ளையைப் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கியவர்கள் ஆரம்பப் பாடசாலைக்குச் செல்வது, குர்ஆன் மத்ரஸாவிற்குச் செல்வது போன்ற விடயங்களைக் கூட மகிழ்வுடன் கொண்டாடியவர்களுக்கு தமது மகளின் திருமணம் நடந்து முடிந்த பின்னர்தான் தெரியவரும் என்றால் அதை எப்படி நியாயப்படுத்துவது?

காதலித்து வீட்டை விட்டும் ஓடிச் செல்கின்றவர்கள்தான் இந்தச் சட்டத்தை தமக்குச் சாதாகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்த சட்டத்தை ஐரோப்பியர்களுக்கு ஏற்றது, பெண்ணுரிமைக்கு ஏற்றது, குர்ஆனின் வெளிப்படையான கருத்துக்கு இயைந்து செல்லக்கூடியது என்ற காரணங்களைக் கூறி இலங்கை சமூகத்திற்கும் அறிமுகம் செய்ய வேண்டுமா? இஸ்லாத்தின் சரியான கருத்தை முன்வைப்பது, அதிலும் குறிப்பாக பெண்ணின் பாதுகாப்பிற்கும், ஒழுக்கத்திற்கும் துணையாக இருக்கக்கூடிய கருத்தை முன்வைப்பது ஐரோப்பியர்களை இஸ்லாத்திற்கு வருவதை விட்டும் தடுக்கின்றது. என்று கூறி மார்க்கத்திற்கு முரணானதை மார்க்கம் என்று அறிமுகப்படுத்தலாமா?

ஷேய்க் கஸ்ஸாலி அவர்களிடம் ஹனபி மத்ஹபின் தாக்கம் இருப்பதையும், ஷாபிஈ, ஹன்பலி மத்ஹபுகள் மீது வெறுப்பு இருப்பதையும் இவரது கூற்றுக்கள் தெளிவுபடுத்துவதைக் காணலாம். மற்றும் பல இடங்களில் அவர் ஹனபி மத்ஹபை முற்படுத்துவதைக் காணலாம். அதற்கான மற்றுமொரு உதாரணத்தை நோக்குவோம்

குத்பாவின்போது தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுகை தொழுதல்
இமாம் குத்பாப் பிரசங்கம் செய்து கொண்டிருக்கும் போது மஸ்ஜிதுக்குள் நுழைபவர் தஹிய்யதுல் மஸ்ஜித் தொழ வேண்டும் எனக் கோருகின்ற ஹதீஸ் வந்துள்ள போதிலும் ஹனபீக்களும், மாலிக்கினரும் குத்பாப் பிரசங்கத்தின் போது தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுவது (மக்ரூஹ்) வெறுக்கத்தக்கது என்று கூறுகின்றனர். இதற்கான காரணம் குறித்து நான் சிந்தித்துப் பார்த்தேன். (பக்கம் 25)

இவ்வாறு கூறி ஹதீஸிற்கு முரணாக வந்த ஹனபீ, மாலிகீ மத்ஹபின் கூற்றை நியாயப்படுத்த முனைகின்றார். ஹதீஸிற்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தைப் பர்த்தீர்களா? ஹதீஸ் ஸஹீஹானதாக இருந்தால் அதுதான் எனது மத்ஹபு எனக் கூறிய அபூஹனீபா இமாமே இதை அங்கீகரிப்பாரா?

“அனைவரின் கூற்றுக்களும் ஏற்றுக் கொள்ளவும்படலாம், மறுக்கவும்படலாம். இந்தக் கப்ரில் அடக்கப்பட்டிருக்கும் நபி(ஸல்) அவர்களது கூற்றுக்கள் மறுக்கப்படமாட்டாது” எனக் கூறிய மாலிக் இமாமாவது இந்தப் போக்கை சரி காண்பார்களா?

குத்பா நடக்கும் போது பள்ளிக்குள் நுழைபவர் தஹிய்யதுல் மஸ்ஜித் தொழக்கூடாது என்ற தனது கருத்துக்கு வலு சேர்ப்பதற்காகப் அஷ்ஷேய்க் கஸ்ஸாலி தனது நூலில் பின்வருமாறு வாதிடுகின்றார்.

நபி(ஸல்) அவர்கள் மிம்பரில் அதிகமாக குர்ஆன் வசனங்களைத்தான் ஓதியிருப்பார்கள். நபி(ஸல்) அவர்கள் குர்ஆன் வசனங்களை ஓதும் போது அமைதியாக இருந்து அதன் கருத்துக்களை அவதானிப்பது அனைவர் மீதும் கடமையாகும். இதனை விட்டு விட்டு ஒருவர் தொழுகையிலோ அல்லது குர்ஆன் பாராயணத்திலோ ஈடுபடுவார் என்பது அசாத்தியமானதாகும் என்று கூறுகின்றார்.
இமாம் குத்பா ஓதும் போது அவர் குர்ஆனை ஓதினாலோ வேறு விபரங்களை குத்பாவில் விளக்கப்படுத்தினாலோ அந்த நேரத்தில் ஜும்ஆவுக்குச் சென்றவர் தொழுவது, குர்ஆன் ஓதுவது போன்றவற்றில் ஈடுபடமாட்டார். ஆனால் அப்போதுதான் பள்ளிக்குள் வந்து சேர்பவர் தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுவதைத் தடுப்பதற்கு இதில் என்ன வாதம் இருக்கின்றது?

தனது கூற்றுக்கு வலுச்சேர்க்கப் பின்வரும் வசனத்தை ஆதாரமாக ஷேய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி காட்டுகின்றார்.

“அல்குர்ஆன் ஓதப்பட்டால் நீங்கள் அருள் செய்யப்படும் பொருட்டு அதற்குச் செவிசாய்த்து, மௌனமாக இருங்கள்.” (7:204)

ஒரு இமாம் குத்பா ஓதுகின்றார். அவர் வழமையாக குத்பாவில் குர்ஆன் வசனங்களை ஓதாமல் கதைகளையும், கப்ஸாக்களையும், வரலாறுக்களையும் கூறுவதுதான் வழமை என்று வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஜும்ஆவுக்கு வந்தவர்கள் சும்மா கதைகளைக் கேட்பதை விட இரண்டு ரக்அத்துக்கள் எழுந்து தொழுதால் நன்மை கிடைக்கும் என்று எழுந்து தொழலாமா? அதை ஷேய்க் சரி காண்பாரா? குத்பா நடக்கும் போது மௌனமாக இருந்து அதைக் கேட்க வேண்டும் என்பதற்கும் குர்ஆன் ஓதப்படுவதற்கும் எந்த சம்பந்தமுமில்லை. இமாம் குத்பா உரை நிகழ்த்தும் போது மஸ்ஜிதுக்குள் வருபவர் இரண்டு ரக்அத்துக்கள் தொழ வேண்டும் என்ற சுன்னாவை மறுப்பதற்கு இப்படி சுற்றி வளைக்க வேண்டியதில்லை.

ஜும்ஆவில் குர்ஆன் ஓதப்பட்டதோ, இல்லையோ குத்பா செய்யப்படும் போது மௌனமாக இருந்து அதை செவியேற்க வேண்டும். பேசக்கூடாது என்பதெல்லாம் ஹதீஸ்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதே ஹதீஸ்கள்தான் மஸ்ஜிதுக்குள் இமாம் குத்பா ஓதும் போது நுழைபவர் இரண்டு ரக்அத்துக்கள் தொழ வேண்டும் என்று கூறுகின்றது. இந்த ஹதீஸிற்கு மாற்றமாக இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களோ அல்லது மாலிக் இமாமோ கூறியிருந்தால் அதை நியாயப்படுத்துவதற்காக இப்படி சுற்றி வளைத்திருக்க வேண்டியதில்லை.

இவர் குறிப்பிட்டுள்ள 7:204 ஆம் வசனம் தொழுகையில் குர்ஆன் ஓதப்படும் போது மௌனமாக இருப்பது பற்றி அருளப்பட்ட வசனமாகும். நாம் ஒரு பஸ்ஸில் பயணிக்கின்றோம். அங்கே கிராத் சீடியொன்று போடப்பட்டிருக்கின்றது. இப்போது பஸ்ஸில் பயணிக்கின்ற எவரும் பேசக் கூடாது என்று சட்டம் கூறுவார்களா? குர்ஆன் ஓதப்பட்டால் பேசக் கூடாதென்பதைப் பொதுச்சட்டமாக எடுக்கலாமா?

அப்படியே இவர்கள் கூறுவது போல் அந்த வசனம் ஜும்ஆ குத்பா உரை குறித்து அருளப்பட்டிருந்தால் கூட அது பொதுச்சட்டமாக இருக்கும். இமாம் குத்பா ஓதும் போது மஸ்ஜிதுக்குள் நுழைபவர் இரண்டு ரக்அத்துக்கள் தொழாமல் இருக்கக் கூடாது என்பது ஹதீஸில் வந்துள்ளதால் தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுகை அந்தப் பொதுச்சட்டத்திலிருந்து விதிவிலக்குப் பெற்றதாக இருக்கும். உஸுலுல் பிக்ஹ் படித்தவர்களுக்கு இது புரியாத அம்சம் அல்ல.

இந்த இடத்தில் ஹதீஸை மறுக்க முடியாத நிலையில் ஷேய்க் கஸ்ஸாலி தொழுமாறு ஏவும் ஹதீஸ் குறித்து வலுவில்லாத வாதமொன்றை முன்வைக்கின்றார்.

குத்பாப் பிரசங்கத்தைச் செவிமடுப்பதே சுன்னாவாக இருந்துள்ளது என்பது தெளிவாகின்றது. தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுகையைத் தொழுமாறு ஏவுகின்ற ஹதீஸைப் பொருத்தவரையில் அது குறிப்பிட்ட ஒரு மனிதரோடு மாத்திரம் சுருங்கியதாகும். குத்பாப் பிரசங்கத்தின் போது தொழுவதையும், கதைப்பதையும் செயல் ரீதியான சுன்னா தடுத்தே வந்துள்ளது……. (பக்கம்: 26)
ஷேய்க் அவர்கள் தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுகை பற்றி வந்துள்ள ஹதீஸ் குறித்த நபருக்கு மட்டும் கூறப்பட்டதாகும் என்று கூறுவது தவறாகும். ஒரு இமாமின் கூற்றை நியாயப்படுத்துவதற்காக இப்படியெல்லாம் வலிந்து பொருள் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

இது குறித்து வந்துள்ள ஹதீஸ்களைப் பார்க்கும் போது ஒரு சாதாரண பொதுமகன் கூட இது ஒரு குறிப்பிட்ட தனி நபருக்கு மட்டுமுரியதல்ல என்பதை இலகுவாகப் புரிந்து கொள்ள முடிகின்றது.
“உங்களில் ஒருவர் மஸ்ஜிதுக்கு வந்தால் அவர் அமர்வதற்கு முன்னர் இரண்டு ரக்அத்துக்கள் தொழட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (அறி: அபூகதாதா(ரலி), ஆதாராம்: அபூதாவூத்-467)
இந்த நபிமொழி பொதுவாகவே தஹிய்யதுல் மஸ்ஜித் பற்றிப் பேசுகின்றது. ஜாபிர் இப்னு அப்துல்லாஹ்(ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் இமாம் குத்பா ஓதும் போது வந்தாலும் தஹிய்யதுல் மஸ்ஜித் தொழ வேண்டும் என்று கூறுகின்றது.

“உங்களில் ஒருவர் இமாம் குத்பா ஓதும் போது மஸ்ஜிதுக்கு வந்தால் அவர் அமர்வதற்கு முன்னர் இரண்டு ரக்அத்துக்கள் தொழுது கொள்ளட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.”
(அறி: ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் அதாரம்: இப்னு குஸைமா- 1831)

இங்கே பொதுவாகவே ஏவப்பட்டிருக்கும் போது அது ஒரு தனி நபருக்கு மட்டும் உரிய ஏவல் என்று எப்படிக் கூற முடியும்?

பின்வரும் நிகழ்வையொட்டித்தான் ஷேய்க் கஸ்ஸாலி, இமாம் குத்பா ஓதும் போது மஸ்ஜிதுக்கு வருபவர் தஹிய்யதுல் மஸ்ஜித் தொழ வேண்டும் என்ற ஹதீஸ் ஒரு தனி நபருக்குரியது என்று கூறுகின்றார். அந்த நிகழ்வை முழுமையாகப் பார்த்தால் ஷேய்க் அவர்களின் கூற்று எவ்வளவு தவறானது என்பதை இலகுவாகப் புரிந்து கொள்ளலாம்.

ஜாபிர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
“அவர்கள் நபி(ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை ஜும்ஆ உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது சுலைக் அல் கதபானி(ல) பள்ளிக்கு வந்து அமர்ந்தார்கள். அவருக்கு நபி(ஸல்) அவர்கள் “சுலைக்கே! எழுந்து இரண்டு ரக்அத்துக்கள் தொழுவீராக!” என்று கூறினார்கள். பின்னர் உங்களில் ஒருவர் இமாம் குத்பா ஓதும் போது மஸ்ஜிதுக்கு வந்தால் இரண்டு ரக்அத்துக்கள் தொழுது கொள்ளட்டும் என்று கூறினார்கள். ” (இப்னு குஸைமா: 1835)

எனவே, இமாம் குத்பா ஓதும் போது மஸ்ஜிதுக்கு வருபவர் இலேசான இரண்டு ரக்அத்துக்கள் தொழுவது சுன்னாவாகும். இதற்கு மாற்றமாக ஷேய்க் அவர்கள் செயல் ரீதியான சுன்னா தொழுவதைத் தடுத்து வந்ததாகக் கூறுகின்றார். நபி(ஸல்) அவர்களின் பொதுவான ஏவலை நனி நபருக்குரியது என்று கூறுகின்றார். குர்ஆன் ஓதும் போது செவி தாழ்த்திக் கேட்க வேண்டும் என்ற குர்ஆன் வசனத்தை வைத்துத் தான் தொழக் கூடாது என்று ஷேய்க் கூறுகின்றார். தொழுமாறு கூறும் ஹதீஸையும் பொருத்தமற்ற காரணம் கூறி மறுக்கின்றார். இவர் கூறும் அந்த மனிதர் மட்டும் நபி(ஸல்) அவர்கள் குர்ஆன் ஓதும் போது கேட்கத் தேவையில்லாதவராக எப்படி மாறினார் என ஷேய்க்தான் கூற வேண்டும்.

குத்பாப் பிரசங்கத்தின் போது தொழப்படும் தொழுகையை இமாம் மாலிக் ஏற்றுக் கொள்ளப்படாத (பாதிலான) தொழுகை எனக் குறிப்பிடுகின்றார். இதற்காக ஆதாரபூர்வமான சுன்னாவுக்கு எதிரானவர் என முஅத்தாவின் ஆசிரியர் குற்றம் சாட்டப்படுவார் என்று நான் நினைக்கவில்லை. (பக்கம்: 26) என்று ஷேய்க் கஸ்ஸாலி கூறுகின்றார்.

இமாம் மாலிக்(ரஹ்) அவர்கள் குத்பாவின் போது “தஹிய்யதுல் மஸ்ஜித்” தொழுவதை பாதிலானது என்று கூறியிருந்தால் அவர் ஸஹீஹான ஹதீஸுக்கு எதிரானவர் என்றும் கூறமாட்டோம். இவர் இப்படிக் கூறிவிட்டாரே என்பதற்காக ஸஹீஹான ஹதீஸையும் விட்டுவிடவும் மாட்டோம். இமாம் மாலிக்(ரஹ்) இஜ்திஹாதில் தவறு விட்டுவிட்டார். அல்லாஹ் அவருக்கு ஒரு நற்கூலியை வழங்குவான். அவர் குற்றம் பிடிக்கப்படமாட்டார் என்போம். ஷேய்க் கஸ்ஸாலி அவர்கள் புஹாரி, முஸ்லிம் போன்ற அறிஞர்கள் ஆயிஷா(ரழி) அவர்கள் மறுத்த ஹதீஸ்களைத் தமது ஏடுகளில் எழுதியுள்ளார்கள் என்று குறை கூறியது போன்று இவர்கள் குறை கூறப்படமாட்டார்கள்.

குர்ஆன், சுன்னா என்ற அடிப்படைகளை மீறிச் செல்பவர் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் இது போன்ற சாதாரண விடயங்களில் கூட தவறு விடுவதென்பது தவிர்க்க முடியாதது என்பதையே ஷேய்க் கஸ்ஸாலி விட்ட தவறுகள் உணர்த்துகின்றன.

உண்ட பின்னர் விரல்களைச் சூப்புவது அறியாமைக் கால நடவடிக்கையா?

உணவு உண்ட பின்னர் கை விரல்களைச் சூப்புவது சுன்னத்தாகும். ஷேய்க் கஸ்ஸாலி அவர்கள் இதனை அறபிகளின் பழக்கவழக்கம் என்றும் இது ஜாஹிலிய்யாக் காலப் பழக்கவழக்கம் என்றும் குறை கூறும் அதே நேரம் இந்த நடத்தை இஸ்லாத்தை விட்டும் மக்களைத் தடுக்கும் நடவடிக்கையாக அமைந்துள்ளது என்றும் கூறுகின்றார். இதோ அவர் கூறுவதைக் கவனியுங்கள்.
“…… அறபிகள் தமது கைகளினால் உண்ணக் கூடியவர்களாக இருந்தனர். அது அவர்களது வழக்கமாகும். கையினால் உண்னும் ஒருவர் தனது விரல்களை நக்கிக் கொள்வதில் ஆச்சரியமில்லை. ஆனால் இவ் வழக்கத்தை மார்க்கமாக ஆக்குவதற்கு எந்த அடிப்படையும் இல்லை.” (பக்கம்: 122)

அறபிகளின் வழக்கம் எல்லாம் மார்க்கமாகாது என்பதில் எமக்கு உடன்பாடுள்ளது. அறபிகளின் வழக்கத்தில் எதையாவது நபி(ஸல்) அவர்கள் ஏவினார்கள் என்றால் அது “ஆதத்” வழக்காறு என்ற கட்டத்தைத் தாண்டி இபாதத் “வணக்கமாக” மாறிவிடும். குறைந்தபட்சம் நபி(ஸல்) அவர்கள் முன்னிலையில் பிறர் செய்ய நபி(ஸல்) அவர்கள் அதைத் தடுக்கவில்லை என்றால் அது மார்க்க அங்கீகாரத்தைப் பெற்றதாக மாறிவிடும். ஆனால், உணவு உண்டவர் கைவிரல்களைச் சூப்புமாறு நபி(ஸல்) அவர்கள் ஏவியுள்ளார்கள். விரல் சூப்பும் பழக்கத்தை மார்க்கமாக்க எந்த அடிப்படையும் இல்லையென ஷேய்க் கஸ்ஸாலி கூறியது அப்பட்டமான பொய்யாகும்.

“உங்களில் ஒருவர் உண்டால் தனது விரல்களைத் தான் சூப்பாமல் அல்லது பிறருக்கு சூப்பக் கொடுக்காமல் துடைக்க வேண்டாம் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (அறி: இப்னு அப்பாஸ்(ரலி), ஆதா: புஹாரி: 5456 – முஸ்லிம்: 129, 2031, 130)

நபி(ஸல்) அவர்கள் ஏவிய ஒன்றை மார்க்கமாக ஆக்குவதற்கு எந்த அடிப்படையும் இல்லை என்கின்றார்.
“நபி(ஸல்) அவர்கள் மூன்று விரல்களால் சாப்பிடுவார்கள். கையைத் துடைப்பதற்கு முன்னர் சூப்பிக் கொள்வார்கள் என கஃப் இப்னு மாலிக்(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.” (முஸ்லிம்: 2032)
நபி(ஸல்) அவர்கள் செய்ததொன்றை மார்க்கமாக ஆக்குவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்கின்றார். நபி(ஸல்) அவர்கள் விரல் சூப்புவது பற்றி ஏவும் போது மார்க்கக் காரணத்தைக் கூறியே ஏவுகின்றார்கள்.

“(உங்களில் ஒருவர் உணவு உண்டால்) தனது விரல்களைச் சூப்புவதற்கு முன்னர் கையைத் துடைக்க வேண்டாம். அவரது எந்த உணவில் பரகத் இருக்கிறது என்பதை அவர் அறியமாட்டார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி). ஆதாரம்: முஸ்லிம்-2033)

நபி(ஸல்) அவர்களது சொல், செயல், அங்கீகாரம் அனைத்தும் அடங்கிய இந்த சுன்னா குறித்து ஷேய்க் கஸ்ஸாலி கூறுவதைக் கவனியுங்கள்.

“…… விரல்களை நக்குவதில் கூடிய கரிசனை காட்டுதல் போன்ற விடயங்களைக் கட்டாயப்படுத்தினால் அவை வருந்திச் செய்யும் செயல்களாகும். மேலும் அவை இஸ்லாத்துக்கும் அதன் தூதுக்கும் தீங்கிழைப்பதாகும். முஸ்லிம்கள் குறித்து மட்டரகமான வதந்திகள் பரவுவதற்கும் அவை வழி செய்யும்.” (பக்கம்: 123)

(குறிப்பு: தரையில் அமர்ந்துதான் உண்ண வேண்டும். கரண்டியைப் பயன்படுத்தி உண்ணக் கூடாது போன்ற கருத்துக்களை ஷேய்க் அவர்கள் கண்டிக்கின்றார்கள். இதில் அவருடன் எமக்கு முரண்பாடில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளவும்)

இந்தப் பகுதியை ஷேய்க் அவர்கள் முடிக்கும் போது குறிப்பிடும் வார்த்தைகள் அருவறுப்பானவையாகும்.

“ஏகத்துவத்தின் பாலான அழைப்பு அறபிகளின் நடத்தைகளிலும் பாலான அதிலும் அவர்களது அறியாமைக் கால நடவடிக்கைகளின் பாலான அழைப்பாக மாறிவிட்டதா? பாமரத்தானமாக நாட்டுப்புற இந்நடத்தைகள் அல்லாஹ்வின் பாதையை விட்டு மக்களைத் தடுக்கும் தடையாக அமைந்துள்ளன.” (பக்கம்:123)

விரல் சூப்புவது அறபிகளின் நடத்தையாம். அதுவும் அறியாமைக் கால நடத்தையாம். அதுவும் பாமரத்தனமான நாட்டுப் புற நடத்தையாம். இஸ்லாத்தின் பால் மக்கள் வருவதைத் தடுக்கும் நடத்தையாம். நபி(ஸல்) அவர்கள் செய்த, செய்யுமாறு ஏவிய ஒரு சுன்னத்தை இப்படியெல்லாம் விமர்சிக்கும் துணிவு எங்கிருந்து வந்ததோ நாம் அறியோம்! நபி(ஸல்) அவர்கள் இவரது பார்வையில் பாமரத்தனமான, நாட்டுப்புற அறபியாக மாறிவிட்டார்! சுன்னாவை உரிய முறையில் மதிக்காத போக்குத்தான் இத்தகைய தீய சிந்தனைகளை உருவாக்குகின்றது. ஷேய்க் அவர்களின் இத்தகைய விமர்சனங்கள்தான் இது பற்றிய தெளிவை மக்களுக்கு வழங்கும் கட்டாயத்திற்கு எம்மை உள்ளாக்கியது.

மாதவிடாய்தான் காரணமா?

பெண்களின் சாட்சியம் பற்றி ஷேய்க் அவர்கள் கூறும் போது பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
“ஆணின் சாட்சியத்தில் அரைப் பங்கே பெண்ணின் சாட்சியம் என்பது யாவரும் அறிந்த விடயமாகும். பெண்ணுக்கு மறதி ஏற்படலாம் அல்லது அல்லது குழப்பம் ஏற்படலாம் அல்லது ஐயம் ஏற்படலாம் என அல் குர்ஆன் அதற்குக் காரணம் சொல்கின்றது. அவளுடன் மற்றுமொரு பெண் இருக்கின்ற போது சத்தியத்தை முழுமையாக ஒப்புவிப்பதற்கு ஒருவருக்கொருவர் ஒத்துழைத்துக் கொள்ளலாம்.

இவ்விடயம் குறித்து ஆராய்ந்து பார்த்தேன். பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்படுகின்ற போது அவள் நோயாளியைப் போல மாறுகின்றாள் என்பதைத் தெரிந்து கொண்டேன். அதன் போது அவளது சுபாவம் மாற்றமடைகின்றது. உயிர் நிலை உறுப்புக்களின் சீரற்ற இயக்கத்தினால் கலவர நிலைக்கு ஆட்படுகின்றாள். சாட்சி சொல்லும் போது சீரான ஸ்திர நிலையிலிருப்பது அவசியமாகும்.

“உங்களுடைய ஆண்களிலிருந்தும் இரு சாட்சியங்களை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள். அவ்வாறு இருவரும் ஆண்களாக இல்லாதிருந்தால் சாட்சியாளர்களில் நீங்கள் பொருந்தக் கூடியவர்களில் ஓர் ஆணும், இரு பெண்களும் சாட்சியாகக்கப்பட வேண்டும். அவ்விருவரில் ஒருவர் மறந்துவிடலாம். அப்போது அவ்விருவரில் ஒருத்தி மற்றவளுக்கு நினைவுபடுத்துவாள்” (அல் பகறா:282) என்ற வசனத்தின் இரகசியம் அதுதான்.

இவ்விவகாரத்தை இந்த வரையரையுடன் நிறுத்திக் கொள்வது கடமையாகும்.” (பக்கம்: 84-85)
ஒரு காரணத்துக்காக சட்டம் கூறப்பட்டால் அந்தக் காரணம் நீங்கிவிட்டால் சட்டமும் நீங்கிவிடும் என்பது பொதுவான விதியாகும். இரண்டு பெண்களின் சாட்சியம் ஒரு ஆணின் சாட்சியத்திற்கு சமனானது எனக் குர்ஆன் குறிப்பிடுகின்றது. இதற்கான காரணம் குறித்து அறிந்தாலோ அல்லது அறியாவிட்டாலோ இதுதான் சட்டம். காரணம் குறித்து ஆய்வு செய்பவர்கள் இதுதான் இதற்குக் காரணம் என்று அடித்துக் கூற முடியாது.

இங்கே ஷெய்க் அவர்கள் ஒரு காரணத்தைச் சிந்தித்துக் கூறுகின்றார். இவ்விவகாரத்தை இந்த வரையரையுடன் நிறுத்திக் கொள்வது கடமையாகும் என்றும் கூறுகின்றார். உதாரணத்திற்கு, ஒரு பிரச்சினை தொடர்பில் ஒரு பெண் தனித்து சாட்சியம் கூறுகின்றாள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது ஒரு பெண்ணின் சாட்சி பாதி சாட்சியாகத்தான் கணிக்கப்படும். இன்னொரு பெண்ணும் உன்னுடன் சாட்சிக்கு வந்தால்தான் அது ஒரு சாட்சியாகக் கணிக்கப்படும் என்று அவளிடம் கூறப்படுகின்றது. உடனே அவள் “இல்லை இல்லை இப்போது நான் மாதத் தீட்டுடன் இல்லை சுத்தமாக இருக்கிறேன். எனவே, எனது சாட்சி பாதி சாட்சியாகாது என்று கூறினால். ஷேய்க் கஸ்ஸாலி அவர்கள் வாதத்தை ஏற்பவர்களின் நிலை என்னவென்று சிந்தித்துப் பாருங்கள்? மேலே குறிப்பிட்ட 2:282 வசனத்தின் கருத்தை மீற நேரிடுமல்லவா?

பெண்ணின் சாட்சியத்தைக் குர்ஆன் பாதி சாட்சியாகக் கூறுகின்றது என்றால் பெண்ணிடம் காணப்படும் மாறாத ஒரு குணத்திற்காக அப்படிக் கூறியிருக்கலாம் அல்லது காரணமே இல்லாமல் கூறியிருந்தால் கூட “ஆமன்னா”, “ஸல்லம்னா” நம்பினோம், ஏற்றுக் கொண்டோம் என ஏற்றுக் கொள்வதுதான் வழியாகும். ஆய்வு செய்வதில் தவறில்லை. இதுதான் காரணம் என்று நாமாக அடித்துக் கூற முடியாது. ஆனால் ஷேய்க் அவர்கள் தன்னை அஹ்லுல் பிக்ஹ் ஆக அடையாளப்படுத்துகின்றார். எனினும் பிக்ஹ் துறையில் அவர் பல தவறுகளை விட்டுள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காவே இதனை இங்கு குறிப்பிட்டோம்.

ஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி அவர்கள் தன்னை பிக்ஹ் துறை அறிஞராக இனங்காட்டிக் கொள்கின்றார். இந்த அடிப்படையில் அவர் பிக்ஹ் தொடர்பான விடயங்களில் இந்த நூலில் விட்ட சில தவறுகளை இனம் காட்டி வருகின்றோம்.

இசை தொடர்பான நிலைப்பாடு:

இந்தப் பகுதியில் இது தொடர்பாக வெளியிட்டுள்ள கருத்து தவறானது என்று நிறுவுவதை விட அவர் இதில் மாற்றுக் கருத்து உடையவர்களை எப்படிப் பார்க்கிறார் என்பது அவசியம் அறிந்திருக்க வேண்டியதாகும்.

பாடல் என்ற தலைப்பில் இசை தொடர்பாக 92-116 பக்கம் வரை எழுதியுள்ளார். நல்ல பாடல் அனுமதிக்கப்பட்டது என்பதில் அபிப்பிராயப் பேதம் இல்லை. இசை தொடர்பில்தான் சர்ச்சையே இருக்கிறது. எனவே இந்தப் பகுதிக்குப் பாடல் எனத் தலைப்பிடுவதை விட இசை எனத் தலைப்பிடுவதே பொருத்தமானதாகும்.

இசை தொடர்பில் வரும் அனைத்து அறிவிப்புக்களையும் ஷெய்க் அவர்கள் பலவீனமானவையாகக் காண்கின்றார். பலவீனமான அறிவிப்புகள் சட்டம் இயற்ற தகுதியற்றவை என்றும் விபரிக்கின்றார். இதிலும் எமக்கு மாற்றுக் கருத்து இல்லை. இதைக் கூறிவிட்டு,

“இதனால்தான் நாம் எமது தலைமுறையினர் பொருட்படுத்தாது விட்ட சில விடயங்களுக்காக பொதுமக்கள் இன்று கொதித்தெழுவதைப் பார்க்கின்றோம்.” (பக்:93) என்று குறிப்பிடுகின்றார்.

இதன் மூலம் இசைபற்றி பாமர மக்கள் சிலர் இன்று கொதித்தெழுகின்றனர். ஆரம்ப கால அறிஞர்களிடம் இது ஒரு பிரச்சினையாக இருந்ததில்லை என சித்தரிக்க முற்படுகின்றார். ஆனால் ஆரம்பகால அறிஞர்களில் ழாஹிரி மத்ஹபைச் சேர்ந்த அறிஞர் இப்னு ஹஸ்ம்(ரஹ்) மற்றும் வழிகெட்ட சூபிகள் சிலரைத் தவிர அங்கீகரிக்கத்தக்க அறிஞர்கள் எவரும் இசையை ஹலாலாகக் கருதவில்லை.

“பலவீனமான ஹதீஸ்கள் மக்கள் மத்தியில் பரவியமையே அவர்கள் ஆரம்பகால சான்றோர்களின் நெறியை விட்டும் தூரமாவதற்குக் காரணமாகும் என்பதை எம்மால் அவதானிக்க முடியுமாயுள்ளது.” (பக்:93)

இந்தக் கூற்றின் மூலம் ஆரம்பகால அறிஞர்களிடம் இது ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை. பலவீனமான ஹதீஸ்களை தூக்கிப் பிடிப்பவர்களே இது குறித்து குழம்பிக் கொண்டிருக்கின்றனர் என்ற மனப்பதிவை ஏற்படுத்த முயன்றுள்ளார். இசை தொடர்பான அவரது தவறான நிலைப்பாடு இந்தப் பகுதி பூராக பிரதிபலிக்கின்றது. பின்வரும் உரையாடலைப் பாருங்கள்.

ஷஃபான் மாதத்து நடுப்பகுதி இரவை எகிப்தில் மக்கள் கொண்டாடுகின்றனர். அந்த இரவுக்கு பொதுமக்கள் கொடுக்கும் அந்தஸ்தும் கண்ணியமும் உண்மையில் அதற்குக் கிடையாது. மத்திய கிழக்கு அறிஞர்களில் ஒருவரான சகோதரருடன் நான் கதைத்துக் கொண்டிருக்கும் போது “புனையப்பட்ட மற்றும் பலவீனமான ஹதீஸ்களுக்கு உங்களிடத்தில் சிறந்த சந்தை வாய்ப்புக்கள் உள்ளனவே” என்று கூறினார். “உங்களிடத்திலும் அவ்வாறான சந்தை இருப்பதுதான் கவலைக்குரியது” என்று நான் சொன்னேன். “நம்பகமான ஹதீஸ்களை சந்தைப்படுத்துவதிலும் பிக்ஹ் சட்டங்களை வெளிப்படுத்துவதிலும் நாங்கள் மிகக் கவனமாகவே நடந்து கொள்கின்றோம்” என அவர் கூறினார்.

“பாடல் ஹராம் என்ற வகையில் வந்திருக்கும் ஹதீஸ்களை விட ஷஃபான் மாத நடு இரவு பற்றி வந்திருக்கும் ஹதீஸ்கள் நம்பகமானவை என நினைக்கின்றேன்” என்று சிரித்துக் கொண்டே மிக விரைவாக நான் பதிலளித்தேன்.”

இதன் மூலம் இசை ஹராம் என்ற கருத்தை உடையவர்கள் போலியான ஹதீஸ்களில்தான் தொங்கிக் கொண்டிருக்கின்றனர் என்ற மனப்பதிவை ஆழமாகப் பதியச் செய்கின்றனர்.

பின்னர் அவரைப் பார்த்து இந்த விடயம் தொடர்பாக இப்னு ஹஸ்ம் கூறியுள்ளதை நாம் இருவரும் சேர்ந்து வாசித்துப் பார்ப்போம் வாருங்கள். பிறகு என்ன செய்வதென்று நீங்கள் யோசித்துப் பாருங்கள். (பக்: 97) இவ்வாறு கூறினாராம்.

இசை தொடர்பாக அறிஞர்கள் என்ன கூறியிருக்கிறார்கள் என்று ஆய்வு செய்து பார்ப்போம் என இவர் அவரை அழைத்திருந்தால் நடுநிலையான சிந்தனையாளராக நாம் இவரை மதிக்கலாம். இசை தொடர்பில் இப்னு ஹஸ்ம் அனைவருக்கும் மாற்றமான கருத்தில் இருக்கின்றார். தனது கருத்துக்கு சாதகமானதை மட்டும் எடுத்து வாசித்துப் பார்ப்போம் என்கின்றார். பிறகு என்ன செய்வதென்று நீங்கள் சிந்தித்துப் பாருங்கள் எனக் கூறி இது தொடர்பில் தனது முடிவுக்கு மாற்றமாக நான் சிந்திக்கத் தயார் இல்லை என்பதையும் தெளிவுபடுத்துகின்றார். இது ஒரு பக்கச்சார்புச் சிந்தனையாகப் படுகின்றது. தனக்கு சார்பான அறிஞரை மட்டும் ஏன் அவர் தேர்ந்தெடுக்க வேண்டும்?

இவ்வாறு கூறியவர் இப்னு ஹஸ்ம் அவர்களது கூற்றுக்களை முன்வந்து இசை ஹராம் என்று வந்திருக்கக்கூடிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானது என்ற கருத்தை நிறுவ முற்படுகின்றார். இசை தொடர்பில் பல ஹதீஸ்களும் பவவீனமானவை என்பது உண்மையே. இருப்பினும் ஸஹீஹான ஹதீஸே இல்லையென்று கூறிவிட முடியாது.

“அப்துர் ரஹ்மான் பின் ஃஙனம் அல் அஷ்அரீ(ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.
“ஆமிர் (ரழி) அவர்கள் அல்லது அபூ மாலிக் அல் அஷ்அரீ (ரழி) அவர்கள் என்னிடம் கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் என்னிடம் பொய் சொல்லவில்லை. (அவர்கள் கூறியதாவது)
நான் நபி(ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன், என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபச்சாரம், மது, பட்டு, இசைக் கருவிகள் ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவிக்காகச்) செல்வான். அப்போது அவர்கள் “நாளை எங்களிடம் வா!” என்று கூறுவார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்கள் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்து விடுவான். (எஞ்சிய) மற்றவர்களைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் மறுமை நாள்வரை உருமாற்றி விடுவான்.” (புஹாரி: 5590)

இந்த ஹதீஸ் புஹாரியில் இடம்பெற்றுள்ளது. இமாம் இப்னு ஹஸ்ம்(ரஹ்) இந்த ஹதீஸ் குறித்து விமர்சனம் செய்துள்ளார்கள்.

“இமாம் புஹாரி முஅல்லகாக பதிவு செய்திருக்கும் ஹதீஸ்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டவையாகும். ஏனெனில் இவற்றில் மிகப் பெரும்பாலானவை இணைந்த அறிவிப்பாளர் வரிசைகளைக் கொண்டவையாகும். இருந்தபோதும் இப்னு ஹஸ்ம் கூறுகின்றார், “இங்கு அறிவிப்பாளர் வரிசை துண்டிக்கப்பட்டுள்ளது. ஹதீஸின் அறிவிப்பாளரான ஸதகா பின் காலிதிற்கும் புஹாரிக்கும் இடையில் அறிவிப்பாளர் வரிசை துண்டிக்கப்பட்டுள்ளது.” (பக்: 102)

இமாம் இப்னு ஹஸ்ம் கூறக்கூடிய இக்கூற்றை ஹதீஸ்கலை அறிஞர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்த ஹதீஸ் ஸஹீஹானது. ஸஹீஹ் என்பதற்குரிய ஷர்த்தான அறிவிப்பாளர் தொடர் இணைந்தது என இமாம் இப்னு ஸலாஹ் கூறுகின்றார்.

இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) இப்னு ஹஸ்ம் அவர்களது கூற்றை மறுப்பதுடன் இவர் கூறும் அறிவிப்பாளர் அல்லாத மற்றும் பல அறிவிப்பாளர் தொடருடன் இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகின்றார்கள். இந்த ஹதீஸ் ஸஹீஹானது. அதில் குறைவு எந்த வழியிலும் இல்லையென தக்லீகுல் தஃலீக் என்ற நூலில் விபரிக்கின்றார்கள். இவ்வாறே இமாம் இப்னுல் கையும் (ரஹ்) அவர்களும் தமது தஹ்தீபில் இப்னு ஹஸ்மின் கூற்றுக்கு மறுப்புக் கூறியுள்ளதுடன் ஆறு வழிகளில் இந்த ஹதீஸ் ஸஹீஹானது என நிறுவுகின்றார்கள். இவ்வாறே இமாம் இப்னு ஹிப்பான் (ரஹ்) மற்றும் அல் ஈராக்கி (ரஹ்), இமாம்களான நவவி, இப்னு தைமிய்யா (ரஹ்) போன்றோரும் இந்த ஹதீஸ் ஸஹீஹானது என்பதை உறுதி செய்துள்ளனர். இது குறித்து அறிஞர் நாஸிருத்தீன் அல்பானி (ரஹ்) அவர்கள் “தஹ்ரீமு ஆலாதுத் தர்ப்” என்ற நூல் மூலம் இப்னு ஹஸ்ம் (ரஹ்) மற்றும் அவரை தக்லீத் பண்ணுபவர்களுக்கான மறுப்பாகத் தனி நூலையே வெளியிட்டுள்ளார்கள். இப்னு ஹஸ்மின் கூற்று தவறானது என்பது குறித்து விரிவாக இந்த நூல் பேசுகின்றது. 182 பக்கங்களைக் கொண்ட இந்நூல் இசை குறித்த ஷெய்க் கஸ்ஸாலி அவர்களின் கூற்றுக்கு மிக விரிவான பதிலாக அமைந்துள்ளது.

இமாம் இப்னு ஹஸ்மின் கூற்றில் ஷெய்க் அவர்களுக்கே முழு நம்பிக்கை இல்லை போலும். அதனால்தான் அவர் மாற்று விளக்கம் ஒன்றைக் கூறுகின்றார். அது அதைவிட ஆச்சர்யமாகும்.
நாங்கள் கூறுகின்றோம் சிலவேளை இமாம் புஹாரி இங்கு கூறப்பட்ட தோற்றத்தில் அனைத்துப் பகுதிகளையும் அதாவது மது, பாட்டு, பாவகாரியம் என அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான விழாவை நாடியிருக்கலாம். (பக்: 102)

அதாவது இந்த ஹதீஸ் ஸஹீஹ் என்றாலும் பாட்டுக்காக அவர்கள் அறிவிக்கப்பட்டிருக்க மாட்டார்கள். மது, பாட்டு, பாவகாரியம் அனைத்தும் ஒரு சேர நடந்தால்தான் அவர்கள் அழிக்கப்பட முடியும் என்று கூற வருகின்றார்.

“எனது சமூகத்தில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபச்சாரம், பாட்டு, மது, இசைக் கருவிகள் ஆகியவற்றை ஹலாலாக்குவார்கள்” என்று இந்த ஹதீஸில் இடம்பெற்றுள்ளது. (புஹாரி: 5590, 5268)

அவர்கள் ஹலாலாக்குவார்கள் என்றால் மார்க்கத்தில் அது ஹராமாக இருந்தேயாக வேண்டும். மார்க்கத்தில் தடுக்கப்பட்ட பாடல், இசை, மது, விபச்சாரம் என்பவற்றை அவர்கள் ஹலாலாக்குவதால் கண்டிக்கப்படுகின்றனர். ஹதீஸின் வாசகமே இசைக் கருவிகள் தடுக்கப்பட்டுள்ளது, அதை ஆகுமானது எனக் கூறக்கூடிய வழிகெட்ட கூட்டங்கள் உருவாகும் என்றுதானே கூறுகின்றது. ஷெய்க் முஹம்மது அல்கஸ்ஸாலி அவர்களும் அவரைப் பின்பற்றுபவர்களும் தங்களையும் ஏன் அந்தக் கூட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும்.

ஷெய்க் கஸ்ஸாலி அவர்கள் இமாம் புஹாரி மீது கூறிய கூற்று கற்பனையும், ஆதாரத்திற்கு முரண்பட்டதும், தனது கருத்தை நியாயப்படுத்துவதற்காகக் கூறிய அவதூறுமாகும்.

இசை குறித்து முழுமையாக விளக்குவது இந்தப் பகுதியின் நோக்கம் அல்ல. இருப்பினும் இசை குறித்த மற்றும் சில ஹதீஸ்களை இங்கே உதாரணத்திற்காகத் தருகின்றேன்.

“நாஃபிவு (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள். ஒரு ஆட்டிடையனின் குழலோசை இப்னு உமர் (ரழி) அவர்களின் காதில் விழுந்தது. அப்போது அவர்கள் தம் இரு காதுகளிலும் விரலை வைத்துக் கொண்டு அந்தப் பாதையை விட்டுவிட்டு (வேறொரு பாதையின் பக்கம்) வாகனத்தைத் திருப்பினார்கள்.
அவர்கள் “(அந்தச் சப்தம்) உனக்குக் கேட்கிறதா?” என்று வினவினார்கள். அதற்கு நான் ஆம்! என்றேன். பிறகு, “எனக்குக் கேட்கவில்லை” என்று நான் கூறினேன். கைகளை (காதிலிருந்து) எடுத்துவிட்டு மறுபடியும் அதே பாதைக்கு வாகனத்தைத் திருப்பினார்கள்.

“அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஒரு ஆட்டிடையனின் குழலோசையைக் கேட்டபோது அவர்கள் இதைப் போன்று செய்ததை நான் பார்த்தேன்” என்று கூறினார்கள்.” (அஹ்மத்: 4307)

“அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் உங்களுக்கு மதுவையும், சூதாட்டத்தையும், மத்தளத்தையும் தடை செய்துள்ளான். போதையூட்டக்கூடிய அனைத்தும் தடை செய்யப்பட்டவையாகும்.” (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரழி), ஆதாரம்: அஹ்மத்: 2494)

எனவே, இசை ஹராமானது என்பதுதான் ஆரம்பகால அறிஞர்களின் உறுதியான முடிவாகும். மக்கள் இசையில் மூழ்கியுள்ளனர் அல்லது அதைவிட்டும் யாராலும் தப்பிக்கொள்ள முடியாது என்பதற்காக ஹராமை ஹலாலாக்க முடியாது. அல்லது ஹதீஸின் பெயரிலோ, தஃவாவின் பெயரிலோ இந்தத் தவறைச் செய்யவும் முடியாது. இசை கூடாது என்ற இஸ்லாமிய அறிஞர்களின் சரியான கருத்தை அறிஞர் முஹம்மத் அல் கஸ்ஸாலி அவர்கள் “குறுகிய வட்டத்திற்குள் அமைந்த நாட்டுப்புறச் சட்டமாகப் பார்க்கிறார். இதே அவர் கூறும் இந்த நீண்ட சம்பவத்தைப் படித்துப்பாருங்கள்.

பாடலா? இசையா?

எனது நினைவுக்கு வருகின்றது. நான் மக்கதுல் முகர்ரமாவில் ஆசிரியராக இருந்தபோது ஒருநாள் பிரச்சினைகளினால் வீட்டில் துவண்டு போய் உட்கார்ந்திருந்தேன். ஏதாவதொன்றின் மூலம் கவலைகளை மறப்போம் என எனக்குள் சொல்லிக் கொண்டேன். வானொலியைத் திறந்தேன். அதில் எனக்குப் பிடித்தமான பாடல் ஒன்று ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. மகிழ்ச்சியைத் தந்தது. பாடலின் சில வரிகள்தான் சென்றிருக்கும் அதற்குள்ளால் ஒரு மாணவன் வந்து கதவைத் தட்டினார். அவரது ஆய்வுக் கட்டுரைக்கு நான் மேற்பார்வையாளராக இருந்தேன்.

அவரின் முன்நிலையில் பாடலைக் கேட்க முடியும் என எனக்குத் தோன்றியது. ஆனால், அவரோ வானொலியை நிறுத்தும்படி கூறினார்.

அவரை மதிக்கும் வகையில் அவரது விருப்பத்தை நிறைவேற்றினேன். பாடலின் சில வரிகளை நானாகப் பாடிப் பூர்த்தி செய்தேன்.

இருளின் தோழனே
நீ எம்மை அழைக்கும் இருள் எங்கே?
அல்லாஹ்வின் ஒளிதான் என்னுடைய
உள்ளத்தில் இருக்கிறது.
நான் காண்பதெல்லாம் ஒளிமயமானதாகவே உள்ளது. . .
“இது என்ன?” என மாணவர் சப்தமிட்டார். நான் அவருக்குக் கூறினேன், “ஒவ்வொருவரும் படைப்பினங்களில் அவரது லைலாவையே பாடுகின்றனர். ஆனால், நானோ வேறொன்றை நாடுகின்றேன். பாடல் அனைத்தும் ஹராம் என்று உங்களுக்குத் தெரியாதா?” என அவர்கள் கேட்டார். “எனக்குத் தெரியாதே!” என்று அவருக்கு நான் கூறினேன்.

பின்னர் நான் அவரை நோக்கி கடுமையாகக் கூறினேன், “இஸ்லாம் உங்களுக்கு மட்டும் சொந்தமான பிராந்திய மார்க்கமல்ல. உங்களிடமுள்ள குறுகிய வட்டத்திற்குள் அமைந்த நாட்டுப்புறத்து சட்டமாகும். அதனை இஸ்லாத்துடன் ஒரு தட்டில் போடுகின்றீர்கள். அதுமட்டுமன்றி, இதில் ஒன்றை விட்டு மற்றொன்றைப் பிரிக்க முடியாது என நீங்கள் கூறுகின்றீர்கள். இதனால் இஸ்லாத்தின் தட்டு பறந்துவிடப் போகின்றது. மக்கள் அதனை விட்டும் திரும்பி விடுவர். இது அல்லாஹ்வின் தூதிற்கும், வழிகாட்டலுக்கும் செய்யும் பெரும் துரோகமாகும்.”

பாடல் ஹராம், இசை கூடாது என்ற கூற்று குறுகிய வட்டத்திற்குள் அமைந்த நாட்டுப்புறச் சட்டமாம். அப்படியென்றால் இசை ஹராம் என்று கூறிய பிக்ஹ்துறை அறிஞர்கள் எல்லோரும் குறுகிய வட்டத்திற்குள் சிக்குண்டவர்களா? அவர்கள் அறிவாற்றல் அற்ற நாட்டுப்புற பாமரர்களா?

விமர்சன ஆக்கம்: அஷ்ஷெய்க் S H M இஸ்மாயில் ஸலபி
Previous Post Next Post