-இஸ்மாயில் ஸலபி
இந்த உலகில் எவரும் பெறாத, இனியும் பெற முடியாத பல சிறப்புக்களை நபித்தோழர்களான ஸஹாபாக்கள் பெற்றுள்ளனர்.
நபி(ஸல்) அவர்களது நட்பு எனும் சிறப்பைப் பெற்றிருந்தனர். இதனை இனி யாரும் பெறமுடியாது. நபி(ஸல்) அவர்கள் மூலமாகவே நேரடியாக மார்க்கத்தை அறியும் அரிய வாய்ப்பைப் பெற்றனர். இனி இதை யாரும் பெற முடியாது.
வஹி இறங்குவதையும் அதன் அடையாளங்களையும் கண்களால் கண்டனர். இனி இதை யாரும் அடைய முடியாது. இவ்வாறு யாரும் பெறமுடியாத பெரும் பாக்கியத்திற்குரியவர்களாக அல்லாஹ்வே அவர்களைத் தேர்ந்தெடுத்தான்.
தனது நபியின் நண்பர்களாக தனது மார்க்கத்தின் உதவியாளர்களாக அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட சமூகமாக அவர்கள் இருப்பதே அவர்களின் சிறப்புக்களுக்கெல்லாம் மகுடமாகத் திகழ்கின்றது.
அவர்கள் அல்லாஹ்வினாலேயே ‘முஃமின்கள்’ என்றும், ‘நேர்வழி பெற்றவர்கள்’ என்றும், சிறந்த சமூகம் என்றும் சிலாகித்துப் போற்றப்பட்டவர்கள். ‘அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டதாக அறிவித்துவிட்ட’ பிறகு சிலர் அவர்ளைப் பொருந்திக் கொள்ள முடியாது என்று அடம் பிடிப்பது வழிகேட்டின் அடையாளம் என்றால் எள்ளளவும் சந்தேகமில்லை.
நபித்தோழர்களைக் குறை கூறுவதும், அவர்களைக் குறைத்து மதிப்பிடுவதும், அவர்களுக்கு மார்க்கம் தெரியாது, குர்ஆன் தெரியாது, ஹதீஸ் தெரியாது, உலகம் தெரியாது, விஞ்ஞானம் தெரியாது என்றெல்லாம் குத்திப் பேசுவதும், கிண்டலடிப்பதும் ஆணவத்தினதும், அறியாமையினதும், வழிகேட்டினதும் அடையாளமன்றி வேறில்வை
இஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாத்தை அழிப்பதற்குப் பல வழிகளைக் கைக்கொள்கின்றர். குர்ஆனை மறுக்கும் நிலைக்கு முஸ்லிம்களைக் கொண்டு வர வேண்டும். நேரடியாக குர்ஆனை மறுக்க வைக்க முடியாது. எனவே, ஹதீஸ்களை மறுக்கச் செய்வதால் குர்ஆன் செயல்படுத்தப்பட முடியாத புத்தகமாக மாறிவிடும். ஹதீஸ்களை மறுக்கும் நிலைக்கு முஸ்லிம்களைக் கொண்டு வருவதென்றால் ஹதீஸ்களை அறிவித்தவர்களையும், அவற்றைப் பதிவு செய்தவர்களையும் பற்றிய நம்பிக்கையீனத்தை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு செயற்பட்டனர். இந்த அடிப்படையில் தான் அதிகமான ஹதீஸ்களை அறிவித்த அபூஹுரைரா (ரழி) அவர்களை இஸ்லாத்தின எதிரிகள் அதிகமாக விமர்சித்தனர்.
இவ்வாறே குர்ஆனையும், ஹதீஸையும் மறுக்கும் மனநிலைக்கு முஸ்லிம்களைக் கொண்டு வர நினைத்தவர்களும் நபி(ஸல்) அவர்களது அந்தஸ்தைக் குறைக்க நினைத்தவர்களும் நேரடியாக நபி(ஸல்) அவர்களைக் குறைத்துப் பேசாமல் நபி(ஸல்) அவர்களது நண்பர்களைக் குறைத்துப் பேசுவதன் மூலம் நபி(ஸல்) அவர்களைக் கேவலப்படுத்த முயல்கின்றனர். இது குறித்து இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்(ரஹ்) அவர்கள் கூறுவதைப் பாருங்கள்.
‘இவர்கள் நபி(ஸல்) அவர்களைக் கேவலப்படுத்த நினைத்தனர். அது அவர்களுக்கு சாத்தியமற்றதாகி விட்டது. எனவே, அவரது தோழர்களைக் கேவலப்படுத்தினர். அதன் மூலம் நபி(ஸல்) அவர்களை கேவலப்படுத்தினர். நபி(ஸல்) நல்லவராக இருந்திருந்தால் அவரது தோழர்களும் நல்லவர்களாக இருந்திருப்பர் என்ற எண்ணத்தை ஏற்படுத்தினர்’ என விபரிக்கின்றார். (நூல்: அஸ்ஸாரிமுல் மஸ்லூல்)
மற்றுமொரு சந்தர்ப்பத்தில் ‘நபி(ஸல்) அவர்களது தோழர்களில் எவரைப்பற்றியாவது குறை கூறுபவனைக் கண்டால் அவனது இஸ்லாத்தில் சந்தேகம் கொள்’ என்று குறிப்பிட்டார்கள்.
இமாம் அபூ சுர்ஆ அர்ராஸி(ரஹ்) அவர்கள் இது பற்றிக் கூறும் போது ‘நபி(ஸல்) அவர்களது தோழர்களி;ல் ஒருவரையாவது குறை கூறுபவனைக் கண்டால் அவன் ‘ஸிந்தீக்’ என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஏனெனில் நபி(ஸல்) அவர்களின் தூதுத்துவமும், அவர்கள் கொண்டு வந்தவையும் சத்தியமாகும். அல் குர்ஆன் உண்மையாகும்ளூ சுன்னா உண்மையாகும் இவை அனைத்தையும் எம்மிடம் ஒப்படைத்தவர்கள் ஸஹாபாக்களாவார்கள். நபித்தோழர்களை குறை கூறும் இவர்கள் எமது சாட்சியாளர்களைக் காயப்படுத்துவதன் மூலம் (அவர்கள் ஒப்படைத்த குர்ஆனையும், சுன்னாவையும் பொய்யாக்க முனைகின்றனர். நபித்தோழர்களைக் காயப்படுத்துவதுதான் இவர்களது முதல் பணி. எனவே இவர்கள் ஸிந்தீக்குகளாவர்)’ எனக் குறிப்பிடுவது ஆழ்ந்து அவதானிக்கத்தக்கதாகும். (அல் கிபாயா பீ இல்மில் ரிவாயா லில் கதீப் அல் பக்தாதி 97, இஸாபா பீ தம்யீஸீஸ் ஸஹாபா 1/11)
எனவே, நபித்தோழர்களைக் குறை கூறுபவர்கள் இஸ்லாத்திற்கு எதிரான வேலையைச் செய்து கொண்டிருக்கின்றனர் என்பது உறுதியாகும். சில போது அது அவர்கள் திட்டமிட்டுச் செய்யும் சதியாக இருக்கலாம் அல்லது திட்டமிடாமலே செய்யும் செயலாக இருக்கலாம். எப்படி இருப்பினும் இது இஸ்லாத்திற்கு எதிரான ஒரு போக்கு என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இந்த உண்மையை உறுதியாக உள்ளத்தில் பதிவு செய்து கொண்டு தனது உற்ற நண்பர்கள் பற்றி உத்தம நபி உதிர்ந்த வார்த்தை முத்துக்களைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
01. ‘எனது தோழர்களை நீங்கள் குறை கூறாதீர்கள். உங்களில் ஒருவர் உஹது மலையளவு தங்கத்தைத் தர்மம் செய்தாலும் அவர்களில் ஒருவர் ஒரு கைப்பிடியான அல்லது அதில் அரைவாசி தர்மம் செய்த அந்தஸ்தை அடைய முடியாது’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறி: அபூஸயீதுல் குத்ரி(வ), அபூ ஹுரைரா(ரஹ்), ஆதாரம்: புஹாரி:3673, 3470 – முஸ்லிம்:221, 6651 – அபூதாவுத்: 4660, 4658 – திர்மிதி: 3861, இப்னுமாஜா: 161 – அஹ்மத்: 11516, 11079, 11095)
முஸ்லிம், அபூதாவூத் மற்றும் பல அறிவிப்புக்களில் நபி(ஸல்) அவர்கள் இதனை எனது உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது ஆணையாக என சத்தியமிட்டுக் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
எனது தோழர்களைக் குறை கூறாதீர்கள் என்ற இந்தக் கட்டளையை ஷியாக்கள் மிகத் தெளிவாகவே மீறினார்கள். அதே போன்று கவாரிஜ்கள், முஃதஸிலாக்கள், ஜஹ்மிய்யாக்கள் என்போரும் மீறினர். இன்று எம்மில் சிலரும் தமது பேச்சு, எழுத்து, சைக்கினை மூலமாகக் கூட நபித் தோழர்களுக்குக் குறை கூறும் குற்றத்தைச் செய்து வருகின்றனர்.
அவர்களிடம் புகழத்தக்க எவ்வளவு அம்சங்கள் இருக்கும் போது இந்த ஸஹாபிக்கு இது தெரியாது! அந்த ஸஹாபிக்கு அது தெரியாது என்று எழுதியும், பேசியும் வருகின்றனர். ‘எம்மை விட மோசமாக அவர்கள் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டு செத்தனர்’ என்றெல்லாம் வாய் கூசாமல் பேசுகின்றர், எழுதுகின்றனர். இது அத்தனையும் தவ்ஹீதின் பெயரால் நடக்கின்றது. குர்ஆனையும், ஹதீஸையும் உயிரிலும் மேலாக மதிப்பதாகக் கூறிக் கொள்ளும் ஒரு கூட்டம் இதையெல்லாம் சகித்துக் கொள்வதும் வேதனையாக உள்ளது.
ஏணி வைத்தாலும் இல்லையில்லை ஏவுகணை வைத்துச் சென்றாலும் அவர்களின் அந்தஸ்தை அடைய முடியாது என நபி(ஸல்) அவர்கள் சத்தியம் செய்து கூறும் போது அவர்கள் எங்களை விட மோசமாக நடந்து கொண்டனர். நமக்குள்ள ஆயிரம் கருத்து வேறுபாடு இருந்தாலும் அரிவால் எடுத்து வெட்டிக் கொள்ளவில்லை. வேண்டுமென்றால் சின்னச் சின்ன தள்ளு முள்ளு நடந்திருக்கும். அவர்கள் வாளை எடுத்து வெட்டிக்கிட்டு சாகவில்லையா? அலி பக்கம் இறந்தவர்களும், முஆவியா பக்கம் இறந்தவர்களும் ஸஹாபாக்கள் தானே! என நபித்தோழர்களை இழிவுபடுத்தி தவ்ஹீத் வாதியொருவர் பேசுகின்றார். அதைச் சரிகாணும் ஒரு கூட்டம் இருக்கின்றது. நபி(ஸல்) அவர்களது கட்டளையைத் தெளிவாக மீறும் இத்தகைய வழிகெட்ட போக்குக் குறித்து மிக விழிப்பாக இருக்க வேண்டும்.
02. ‘நாம் நபி(ச) அவர்களுடன் மஃரிபைத் தொழுதோம். பின்னர் இவ்வாறே இங்கிருந்த நபியுடன் இஷாவையும் தொழுதால் என்ன எனக் கூறி அவ்வாறே அமர்ந்திருந்தோம். எம்மிடம் வந்த நபி(ச) அவர்கள் (மஃரிப் முதல்) இங்கேதான் இருந்தீர்களா என்று கேட்டார்கள். அதற்கு நாம் ‘அல்லாஹ்வின் தூதரே உங்களுடன் மஃரிபைத் தொழுதோம். இஷாவையும் உங்களுடன் தொழும் வரை இங்கேயே அமர்ந்திருப்போம் என்று எமக்குள் உறுதி கொண்டோம்.’ என்று கூறினோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘நல்லது செய்தீர்கள்’ என்று கூறி வானத்தின் பக்கம் தன் தலையை உயர்த்தினார்கள். அவர்கள் அதிகமாக வானத்தைப் பார்ப்பவர்களாக இருந்தார்கள். பின்னர், நட்சத்திரங்கள் வானத்திற்குப் பாதுகாப்பாகும். நட்சத்திரங்கள் போய்விட்டால் வானத்திற்கு வாக்களிக்கப்பட்டது (அழிவு) வந்து விடும். நான் என் தோழர்களுக்குப் பாதுகாப்பாவேன். நான் போய்விட்டால் எனது தோழர்களுக்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும். எனது தோழர்கள் எனது உம்மத்துக்குப் பாதுகாப்பாவார்கள். அவர்கள் போய்விட்டால் எனது உம்மத்துக்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறி: அபூ புர்தா(ரழி), ஆதாரம்: முஸ்லிம்: 207, 6629 – அஹ்மத்: 19566, 19795 – இப்னுஹிப்பான்: 7249)
இந்த நபிமொழி நபித்தோழர்கள் இந்த உம்மத்துக்குப் பாதுகாவல் அரணாக இருக்கின்றார்கள் என்று கூறுகின்றது. நபித்தோழர்கள் என்ன கொள்கையில் இருந்தார்களோ அந்தக் கொள்கையில் இருப்பது வழிகெட்ட கூட்டங்களின் தவறான வழியில் விழாமல் இருக்க சரியான வழியாகும். ஆனால் இன்று சிலர் நபித்தோழர்களையே வழி தவறியவர்களாக சித்தரிக்கவும், நம்மை விட மார்க்க அறிவு குன்றியவர்களாகக் காட்டவும் கச்சை கட்டிக் களத்தில் இறங்கியுள்ளனர். அதுவும் தவ்ஹீதின் பெயரால் இந்த வழிகேடு முன்னெடுக்கப்படுவது ஆச்சர்யமானதும், கவலையுமான விடயமாகும்
03. ‘ஒரு காலம் வரும் அப்போது ஒரு கூட்டம் போர் புரியும். அவர்களைப் பார்த்து ரஸுல்(ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டவர்கள் யாராவது உங்களில் உள்ளனரா என்று கேட்கப்படும். அதற்கு ஆம் என்று பதிலளிக்கப்படும். அவர்களுக்கு வெற்றியளிக்கப்படும். பின்னரும் போர் நடக்கும். அப்போது நபியுடன் தோழமை கொண்டவர்களுடன் தோழமை கொண்டவர்கள் உங்களில் இருக்கின்றார்களா? என்று கேட்கப்படும். அதற்கு ஆம்! உள்ளனர் என பதிலளிக்கப்படும். அவர்களுக்கும் வெற்றியளிக்கப்படும்’ (அறி: அபூஸயீதுல் குத்ரி(ரழி), ஆதா: புஹாரி:3594, 3649, 3449 – முஸ்லிதுஸ் ஸிஹாபா: 33 – முஸ்லிம்: 208, 2532, 6630, 6631)
இந்த நபிமொழி நபித்தோழர்களினதும் அவர்களுடன் தோழமை கொண்ட தாபியீன்களினதும் சிறப்பைப் பற்றிப் பேசுகின்றது. அவர்களின் சிறப்பு காரணமாக முஸ்லிம்களுக்கு போரில் வெற்றி கிடைக்கும் என்று கூறுகின்றது. ஸஹீஹ் முஸ்லிமில் இடம்பெரும் அறிவிப்பில் நபித்தோழர்கள், அவர்களுடன் தோழமை கொண்ட தாபியீன்கள் அதாவது இரண்டாம் தலைமுறையுடன் மட்டும் இந்த சிறப்பு நின்றுவிடாமல் நான்காம் தலைமுறை வரை தொடரும் என்று கூறுகின்றது.
நபித்தோழர், அவர்களுடன் தோழமை கொண்ட தாபியீன்கள், தாபியீன்களைக் கண்ட தபஉத் தாபியீன்கள், அவர்களைக் கண்டவர்கள் என நான்கு தலைமுறை குறிப்பிடப்படுகின்றது. அதிலும் குறிப்பாக அவர்களில் ஒருவர் இருக்கும் வரை கூட அல்லாஹ்வின் இந்த உதவி தொடரும் என்ற கருத்தும் அதில் பதிவு செய்யப்படுகின்றது. (பார்க்க: முஸ்லிம்- 6631, 209, 2532)
இந்த ஹதீஸை இஸ்லாமிய வரலாறு உறுதி செய்கின்றது. இந்த ஹதீஸ் நபித்தோழர்களினதும் தாபியீன்கள், தபஉத் தாபியீன்களினதும் சிறப்பையும் உறுதி செய்கின்றது. இத்தகைய சிறப்புக் குரியவர்களை ஓரிரு வருடங்கள் மத்ரஸாவில் ஓதி கொஞ்சம் பேசவும், வாதிக்கவும் கற்றுக் கொண்ட சின்னப் பையன்கள் சிறுபுள்ளைத்தனமாக குறைத்துப் பேசுவதும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி விசாரிப்பதும் விசனமளிக்கும் நிகழ்ச்சியாகும்.
04. ‘எனது உம்மத்தில் சிறந்தவர்கள் எனது நூற்றாண்டில் வாழ்பவர்களாவர். பின்னர் அவர்கள் பின்பற்றியோர்கள். பின்னர் அவர்களைப் பின்பற்றியவர்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (அறி: இம்ரான் இப்னு ஹுஸைன் அப்துல்லாஹ்(ஸல்), ஆதாரம்: புஹாரி: 2651, 3650, 3651, 6428, 6429, 6658, 6695 – முஸ்லிம்: 210, 2533, 6632, 6636 – அபூதாவுத்: 4659, 4657)
இந்த அறிவிப்புக்களில் நபி(ஸல்) அவர்கள் தனது நூற்றாண்டுக்குப் பின்னர் இரண்டு நூற்றாண்டுகளைக் கூறினார்களா? அல்லது மூன்று நூற்றாண்டுகளைக் கூறினார்களா? என்பதிலே அறிவிப்பாளருக்கு ஐயம் ஏற்பட்டுள்ளது. மற்றும் சில ஹதீஸ்களில் மூன்று நூற்றாண்டுகளைக் கூறினார்களா? அல்லது நான்கு நூற்றாண்டுகளைக் கூறினார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எது எப்படியிருப்பினும் தாபியீன்கள், தபஉத் தாபியீன்களது காலம் வரை புகழப்பட்டுள்ளது என்பதில் கருத்து வேறுபாடில்லை. ஏற்கனவே போர் வெற்றி பற்றிக் கூறப்பட்ட அறிவிப்புக்களில் நான்காம் தலைமுறை வரை வெற்றி கிட்டும் என்று கூறப்பட்டிருப்பதும் கவனிக்கத்தக்கதாகும். முதல் மூன்று நூற்றாண்டுகளில் வாழ்ந்த நல்லவர்கள் அனைவரும் புகழப்படுவதை இந்த ஹதீஸ் உறுதி செய்கின்றது. இந்த வகையில் குர்ஆன், சுன்னாவுக்கு இந்தக் காலத்தில் வாழ்ந்த நல்லறிஞர்கள் வழங்கிய விளக்கத்திற்கு முன்னுரிமையளிப்பது அவசியமாகும்.
05. ‘உமர்(வ) அவர்கள் ஒருமுறை குத்பா ஓதும் போது நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு மத்தியில் எழுந்திருந்தது போன்று நான் உங்களுக்கு மத்தியில் எழுந்திருக்கின்றேன். எனது தோழர்கள் விடயத்தில் உங்களுக்கு நான் வஸியத் செய்கின்றேன். அதற்குப் பின்னர் அவர்களைத் தொடர்ந்து வருபவர்கள், அவர்களைத் தொடர்ந்து வருபவர்கள் விடயத்தில் நான் உங்களை வஸிய்யத் செய்கின்றேன் பிறகு பொய் பரவிவிடும்…..’ என்று கூறினார்கள். (அறி: இப்னு உமர்(ரழி), ஆதாரம்: திர்மிதி: 2165 – முஸ்தக்பர்: 387, நஸாஈ:9225)
நபி(ஸல்) அவர்களது இந்த வஸியத்தை அப்பட்டமாக மீறக்கூடிய வழிகெட்ட அமைப்புக்கள் விடயத்திலும் குர்ஆன், ஹதீஸ் பேசி இந்த வஸிய்யத் விடயத்தில் வரம்பு மீறும் கூட்டம் குறித்தும் விழிப்பாக இருந்து ஒவ்வொருவரும் அவரவர் ஈமானைப் பாதுகாத்துக் கொள்வது காலத்தின் கட்டாயமாகும்.