நபித்தோழர்களின் விளக்கம்

-அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

அல்குர்ஆனும் சுன்னாவுமே இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரமாகும். இஸ்லாத்தின் கொள்கை, கோட்பாடுகளையும் வணக்க வழிபாட்டு முறைகளையும் இஸ்லாம் போற்றும் பண்பாடுகளையும் குர்ஆன், சுன்னாவிலிருந்தே நாம் பெற வேண்டும். குர்ஆனும் சுன்னாவுமே இஸ்லாத்தின் மூலாதாரங்கள் என்பதில் பெரும்பாலும் எல்லா முஸ்லிம்களும் ஒன்றுபடுகின்றனர். கவாரிஜ்கள், முஃதஸிலாக்கள் போன்ற வழிகேடர்களும் இதே நிலைப்பாட்டில்தான் இருந்தனர். நவீன கால வழிகேடர்களும் இதே கருத்தைத்தான் வலியுறுத்தி வருகின்றனர். காதியாணிகள், வஹ்ததுல் வுஜூத் பேசுவோர் ஏன், ஷிஆக்கள் கூட இந்தக் கருத்தைக் கூறுகின்றனர். குர்ஆன், சுன்னாவை அவரவர் சிந்தனைக்கும், மனோ இச்சைக்கும் ஏற்ப விளக்கி இவர்கள் தாமும் வழிகெடுவதுடன் மக்களையும் வழிகெடுக்கின்றனர்.

தமது மனோ இச்சைக்கும் வழிகெட்ட சிந்தனைகளுக்கும் ஏற்ப குர்ஆனையும் சுன்னாவையும் வளைத்து விளக்கம் கொடுத்துவிட்டு தமது வழிகெட்ட சிந்தனைக்கு குர்ஆன், சுன்னா என்ற முத்திரை (லேபல்) ஒட்டி விற்பனை செய்து வருகின்றனர். உண்மையில் குர்ஆன், சுன்னாவின் சரியான முறையான விளக்கத்தை நாம் எப்படி, எங்கிருந்து பெற்றுக் கொள்ள முடியும் என்பது பற்றி சிந்திப்பது காலத்தின் கட்டாயமாகும். குர்ஆனையும், சுன்னாவையும் தத்தமது இயக்கம் சொல்வது போல் புரிந்து கொள்வதா? அல்லது யாரோ ஒரு தனி மனிதர் சொல்வது போல் புரிந்து கொள்வதா? அல்லது குர்ஆனையும், சுன்னாவையும் எனக்கு விளங்கியது போல் நான் புரிந்து கொள்வேன். உனக்கு விரும்பியது போல் நீ விளங்கிக் கொண்டு அமல் செய்யலாம் என தான்தோன்றித்தனமாக செயற்படுவதா? அல்லது குர்ஆன், சுன்னாவை நபித்தோழர்கள் விளங்கியது போல் விளங்கி அமல் செய்வதா? இதில் எது பாதுகாப்பானது என்றால், குர்ஆன், சுன்னாவை நபித்தோழர்கள் எப்படிப் புரிந்து நடைமுறைப்படுத்தினார்களோ அந்த அடிப்படையில் புரிந்து அமல் செய்வதுதான் பாதுகாப்பானது, நேர்வழிக்கு உகந்தது என்பதை உறுதியாகக் கூறலாம்.

1. நபியவர்கள் விளக்கியுள்ளார்கள்:

‘தெளிவான சான்றுகளையும், வேத நூல்களையும் கொண்டு (அனுப்பினோம். அவ்வாறே) மனிதர்களுக்கு இறக்கப்பட்டதை நீர் அவர்களுக்குத் தெளிவுபடுத்து வதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் நாம் உமக்கு இவ்வேதத்தை இறக்கினோம்.’ (16:44)

மக்களுக்கு அருளப்பட்டதை அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வேதத்தை உமக்கு அருளினேன் என அல்லாஹ் கூறுகின்றான். வேதத்தை விளக்குவது நபியின் பணியாகும். நபி(ச) அவர்கள் தனது பணியைக் குறைவின்றி நிறைவாகவே நிறைவேற்றினார்கள் என நம்புவது ஈமானின் அடிப்படையாகும். அப்படியென்றால் நபியவர்கள் யாருக்கு இதை விளக்கப்படுத்தினார்கள்? நபித்தோழர் களுக்குத்தான் விளக்கப்படுத்தினார்கள். அல்லாஹ்வால் அனுப்பப்ட்ட தூதர் விளக்கியும் நபித்தோழர்கள் சரியாக, முறையாக புரிந்து கொள்ளவில்லை என்றால் நபியவர்கள் தனது பணியைச் சரியாகச் செய்யவில்லை என்று நபி மீது குறை கூறுவதாகாதா? அல்லது தனது வேதத்தை விளங்க வைக்க அல்லாஹ் பொருத்தமற்ற ஒருவரைத் தெரிவு செய்துவிட்டான் என அல்லாஹ்வைக் குறை காண்பதாகாதா? நபியவர்கள் சரியாகத்தான் போதித்தார்கள். ஆனால், அவரிடம் படித்த யாரும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று கூறினால் அப்போது கூட வேதத்தைப் புரிய வைத்தல் என்ற பணியை நபி(ச) சரியாக செய்யவில்லை என்று குறை கூறுவதாக அமைந்துவிடுமல்லவா?

வழிகேடர்கள் சிலர் தாம் சொன்ன புதிய கருத்துக்கள் சிலவற்றை நியாயப்படுத்து வதற்காக நபித்தோழர்கள் போதிய விளக்கமற்றவர்கள் என்ற விஷக் கருத்தை விதைத்து வருகின்றனர். இதன் விபரீதத்தை உணராத மக்களும் இத்தகைய வழிகேடர்களை நியாயப்படுத்தி வருகின்றனர். வழிகெட்ட இந்தத் தலைவர்களைப் பாதுகாக்க முனைப வர்கள் அல்லாஹ்வையும் அல்லாஹ்வின் தூதரின் தூதுத்துவப் பணியையுமே குறை காண்கின்றனர்.

02
‘(உரிய முறையில் தொழ முடியாது என) நீங்கள் அஞ்சினால் நடந்தவர்களாகவோ, அல்லது வாகனித்தவர்களாகவோ (தொழுது கொள்ளுங்கள்.) நீங்கள் அச்சம் தீர்ந்தவர்களாகிவிட்டால் நீங்கள் அறியாமல் இருந்தவற்றை அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தந்ததைப் போன்று அவனை(த் தொழுது) நினைவு கூருங்கள்.’ (2:239)

அச்சமான சூழ்நிலையில் தொழும் விதம் பற்றி இந்த வசனம் பேசுகின்றது. அச்சம் தீர்ந்துவிட்டால் அல்லாஹ் எப்படித் தொழ வேண்டும் என்று உங்களுக்குக் கற்பித்தானோ அவ்வாறு தொழுங்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான். தொழுவது எப்படி என்று அல்லாஹ்வின் தூதர் மூலம் நபித்தோழர் களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது. இதையே அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தந்த முறையில் தொழுங்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான்.

தொழுவது எப்படி என்பதை நபியவர்கள் நபித்தோழர்களுக்குத்தான் கற்றுக் கொடுத்தார்கள். அப்படி அவர்கள் கற்றுக் கொண்ட விதம் சரியானது என்று இந்த வசனத்தின் மூலம் அல்லாஹ் உறுதி செய்கின்றான். இப்படி அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட்ட அவர்களிடமிருந்து வணக்க வழிபாடுகளை எந்த அடிப்படையில் பெயல்படுத்துவது என்பதற்கான விளக்கத்தைப் பெறுவது சிலருக்கு வில்லங்கமாகத் தெரிகின்றது என்றால் அவர்கள் விஷமத்தனம் கொண்டவர்கள் என்பது புரிகின்றதல்லவா?

03. நபியால் பயிற்றுவிக்கப்பட்டவர்கள்:

‘நம்பிக்கையாளர்களுக்கு அவர்களில் இருந்தே ஒரு தூதரை அனுப்பியபோது, அல்லாஹ் அவர்கள் மீது நிச்சயமாகப் பேருபகாரம் புரிந்துவிட்டான். அவர், அவர் களுக்கு அவனது வசனங்களை ஓதிக்காட்டி, அவர்களைப் பரிசுத்தப்படுத்தி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார். அவர்கள் இதற்கு முன் தெளிவான வழிகேட்டிலேயே இருந்தனர்.’ (3:164)

‘அவன்தான் (எழுத்தறிவற்ற) உம்மிகளிடம் அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பினான். அவனது வசனங்களை அவர் அவர்களுக்கு ஓதிக் காட்டி, அவர்களைப் பரிசுத்தப்படுத்துவார். மேலும், வேதத்தை யும், ஞானத்தையும் அவர்களுக்கு அவர் கற்றுக் கொடுப்பார். அவர்களோ இதற்கு முன் தெளிவான வழிகேட்டிலேயே இருந்தனர்.’ (62:2)

நபி(ச) அவர்கள் நபித்தோழர்களுக்கு குர்ஆனையும், சுன்னாவையும் கற்றுக் கொடுத்ததாகவும் குர்ஆன், சுன்னாவின் அடிப்படையில் அவர்களைப் பயிற்றுவித்து பரிசுத்தப் படுத்தியதாக அல்லாஹ் கூறுகின்றான். நபியவர்களிடம் குர்ஆனையும், சுன்னாவையும் கற்ற நபித்தோழர்கள் குர்ஆனையும், சுன்னாவையும் சரியாகப் புரியவில்லையா? எங்களைப் போல அவர்கள் வெறுமனே கற்கவில்லை. கற்றதை உரிய முறையில் நடைமுறைப்படுத்தினார்கள். அதன் அடிப்படையில் அவர்களைப் பயிற்றுவித்து நபியவர்கள் பரிசுத்தப்படுத்தியுமுள்ளார்கள். அப்படியிருக்கும் போது குர்ஆன், சுன்னாவின் போதனையை அவர்கள் புரியாமல் இருந்தார்கள், ஷpர்க்கைக் கூட அவர்கள் முறையாக விளங்காமல் இருந்தார்கள் என்று ஒருவன் கூறினால் அல்லாஹ்வின் தூதரை விட தான் இஸ்லாத்தை சரியாகவும் முறையாகவும் கற்பிப்பதாக வாதிடுகின்றான் என்பதுதானே அர்த்தம்!

04.    தெளிவான பாதையில் இருந்தவர்கள்:

”இதுவே எனது பாதை. நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான சான்றின் அடிப்படையில் அல்லாஹ்வின் பால் அழைக்கின்றோம். அல்லாஹ் தூய்மை யானவன். இன்னும், நான் இணைவைப்பாளர்களில் உள்ளவனல்ல’ என்று (நபியே!) நீர் கூறுவீராக!’ (12:108)

நானும் என்னைப் பின்பற்றுகின்றவர் களும் தெளிவான அத்தாட்சியில் இருப்பதாக நபி(ச) அவர்களைக் கூறுமாறு அல்லாஹ் சொல்கின்றான். என்னைப் பின்பற்றுகின்றவர் கள் என்று அன்று நபி(ச) அவர்கள் ஸஹாபாக்களையே கூறினார்கள். நபி(ச) அவர்களும் அவர்களது தோழர்களும் இருந்த அந்த பாதைதான் நேர்வழி, தெளிவான அத்தாட்சி. அந்தப் பாதையில் செல்லும் போதே நாமும் தெளிவான அத்தாட்சியில் இருப்பதாக இருக்கும். இந்த அடிப்படையில் குர்ஆன், சுன்னாவை நபித்தோழர்கள் புரிந்து அமல் செய்த விதத்தில் செயற்படுவதுதான் தெளிவான பாதை என்பது புரிகின்றதல்லவா?

05. முஃமின்கள் சென்ற பாதை:

    ‘யார் தனக்கு நேர்வழி தெளிவான பின்னரும் இத்தூதருடன் முரண்பட்டு, நம்பிக்கை கொண்டோரின் வழி அல்லாததைப் பின்பற்றுகின்றானோ அவன் செல்லும் வழியிலேயே அவனைச் செல்லவிட்டு, அவனை நாம் நரகத்தில் நுழைவிப்போம். செல்லுமிடத்தில் அது மிகக் கெட்டதாகும்.’ (4:115)

நேர்வழி தெளிவானதன் பின்னரும் நபிக்கு முரண்பட்டு, இது தொடர்பில் முஃமின்கள் என்ன பாதையில் சென்றார்களோ அந்தப் பாதையில் செல்லாமல் வேறு பாதையில் செல்பவனை போகின்ற வழியிலேயே போகவிட்டு நரகத்தில் சேர்ப்பதாக அல்லாஹ் கூறுகின்றான்.

நபிவழிக்கு முரணாக அல்லது நபித்தோழர்கள் ஏகோபித்திருந்த வழிமுறைக்கு மாற்றமாகச் செல்வது நரகத்திற்குச் செல்லும் வழியாகவே இருக்கும். இப்படித் தவறான வழியில் செல்பவர்களை அல்லாஹ்வும் அப்படியே செல்ல விட்டுவிடுவான் என்றும் கூறுகின்றது.
‘எனவே, என்னையும் இச்செய்தியைப் பொய்ப்பிப்பவனையும் விட்டு விடுவீராக! அவர்கள் அறியாதவாறு அவர்களைப் படிப் படியாக நாம்  பிடிப்போம்.’ (68:44)

”எனது சமூகத்தினரே! நிச்சயமாக நான் உங்களிடம் (அனுப்பப்பட்ட) அல்லாஹ்வின் தூதர் என்பதை நீங்கள் அறிந்திருந்தும் ஏன் என்னை நோவினை செய்கின்றீர்கள்?’ என மூஸா தன் சமூகத்தாரிடம் கேட்டதை (நபியே! நீர் எண்ணிப்பார்ப்பீராக!) அவர்கள் (சத்தியத்தை விட்டும்) விலகிச் சென்ற போது, அல்லாஹ்வும் அவர்களது உள்ளங்களை விலகச்செய்தான். அல்லாஹ் பாவிகளான இக்கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.’ (61:5)

தவறான வழியில் செல்லும் இத்தகைய வழிகேடர்களுக்கு உலகத்தில் கிடைக்கும் வெற்றிகள் மகிழ்ச்சிக்குரியவை அல்ல என இந்த வசனங்கள் எச்சரிக்கை செய்கின்றன.

06.    அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப் பட்டவர்கள்:

‘மேலும், முஹாஜிர்கள் மற்றும் அன்ஸாரிகளில் (ஈமான் கொள்வதில்) முதலாமவர்களாக முந்திக் கொண்டோரையும், அவர்களை நற்செயல்களில் பின்பற்றி யோரையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டனர். அவன் அவர்களுக்குச் சுவனச் சோலைகளைத் தயார் செய்து வைத்துள்ளான். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றியாகும்.’ (9:100)

நபித்தோழர்கள் அல்லாஹ்வால் பொருந்திக் கொள்ளப்பட்டவர்கள் என்று இந்த வசனமும் இது போன்ற மற்றும் பல வசனங்களும் கூறுகின்றன. அல்லாஹ்வின் ‘ரிழா’ – திருப் பொருத்;தத்தைப் பெற்றவர்கள் சென்ற வழியில் செல்வது வருத்தம் தரும் வழிமுறையாக இருக்காதல்லவா?

07.    சுவனத்திற்குரியவர்கள்:

‘வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்கே இருக்க, அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் செலவு செய்யாமல் இருப்பதற்கு உங்களுக்கு என்ன நேர்ந்தது? (மக்கா) வெற்றிக்கு முன்னர் செலவிட்டோருக்கும் போரிட்டோருக்கும் உங்களில் எவரும் சமமாகமாட்டார்கள். அவர்கள் அதற்குப் பின் செலவிட்டோரையும் போரிட்டோரையும் விட, மகத்தான அந்தஸ்துக்குரியோராவர். அல்லாஹ் அனைவருக்கும் நன்மையையே வாக்களித்திருக்கின்றான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.’ (57:10)

மக்கா வெற்றிக்கு முன்னர் இஸ்லாத்தை ஏற்று தியாகம் செய்த நபித்தோழர்களையும் பின்னர் ஏற்றவர்களையும் அந்தஸ்தில் மாறுபட்டவர்கள் என்று இந்த வசனம் கூறினாலும், இவ்விரு சாராருக்கும் அல்லாஹ் சுவனத்தை வாக்களிப்பதாகக் கூறுகின்றான். மற்றும் பல குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் ஸஹாபாக்களை சுவனத்திற்குச் சொந்தக்காரர்கள் என்று கூறுகின்றது. சுவனத்துக்குரியவர்கள் என்று கூறப்பட்டவர்கள் சென்ற வழி என்பது நரகத்திற்குச் செல்லும் வழியாக இருக்க வாய்ப்பு இல்லை அல்லவா?

08. நம்பிக்கையாளர்கள்:

‘நம்பிக்கையாளர்களில் உம்மைப் பின் பற்றுவோருக்கு உமது (பணிவெனும்) இறக்கையைத் தாழ்த்துவீராக!’ (26:215)

அல்குர்ஆனின் பல வசனங்கள் நபித்தோழர்களை முஃமின்களே! என்று விழித்துப் பேசுகின்றது. முஃமின்கள் என்று பறை சாட்டுகின்றது. அவர்கள் ஈமான் கொள்ள வேண்டிய விடயங்களை முறையாக விளங்கி உரிய முறையில் நம்பி இருந்ததாலேயே அவர்கள் முஃமின்கள் என அல்லாஹ்வினால் அழைக்கப்பட்டனர். அவர்கள் முஃமின்கள் என்பது உறுதியானால் அவர்கள் சென்ற வழி ஈமானுக்குரிய வழியாக இருக்குமே தவிர குப்ருக்குரிய வழியாக இருக்காது என்பது உறுதியாகின்றது.

09.
‘முஹம்மத் அல்லாஹ்வின் தூதராவார். மேலும், அவருடன் இருப்போர் நிராகரிப்பாளர்கள் மீது கடுமையான வர்களாகவும், தமக்கிடையே கருணையுடையோராகவும் இருக்கின்றனர். அல்லாஹ்வின் பொருத்தத்தையும், அருட்கொடையையும் நாடி, ரூகூஃ செய்பவர்களாகவும், சுஜூது செய்பவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர். அவர்களது அடையாளம் அவர்களது முகங்களிலுள்ள சுஜூதின் அடையாளமாகும். இதுவே தவ்றாத்தில் அவர்களுக்குரிய உதாரணமாகும்.’ (48:29)

நபித்தோழர்களின் தொழுகை, பண்பு, அவர்களின் தூய்மையான உள்ளம் அனைத்தையும் இந்த வசனத்தில் அல்லாஹ் புகழ்கின்றான். அவர்கள் அல்லாஹ்வின் திருப்திக்காகச் செயற்பட்ட கூட்டத்தினர் என்று அல்லாஹ் சிலாகித்துக் கூறுகின்றான். இப்படி அல்லாஹ்வால் சிலாகித்துக் கூறப்பட்டவர்கள் சென்ற வழியை விட்டு விட்டு சுய நலனுக்காகவும், சுயவிருப்பு வெறுப்புக்காகவும் மார்க்கக் கருத்துக்களைக் கக்கி வருகின்றவர் கள், இல்லாத பிரச்சினைகளை உண்டு பண்ணுகின்றவர்கள், இருக்கும் பிரச்சினையை பூதாகரமாக்குகின்றவர்கள், இயக்கத்திற்கும் தனக்குப் பின்னாலும் ஆள் சேர்ப்பதற்காக பிரச்சினைகளை முடுக்கி விடுபவர்கள், தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மக்களை பலிக்கடா ஆக்குபவர்கள் செல்லும் வழியை நம்பிப் போவது ஆபத்தானதல்லவா?

10.    அவர்கள் ஈமான் கொண்டது போல் ஈமான் கொள்வோம்!:

‘(நம்பிக்கை கொண்டோரே!) நீங்கள் எவற்றைக் கொண்டு நம்பிக்கை கொண்டீர்களோ, அதே போன்று அவர்களும் நம்பிக்கை கொண்டால், நிச்சயமாக அவர்கள் நேர்வழி பெறுவர். அவர்கள் புறக்கணித்தால், அவர்கள் முரண்பாட்டிலேயே இருப்பர். எனவே, அவர்கள் விடயத்தில் உமக்கு அல்லாஹ்வே போதுமானவன். அவன் (யாவற்றையும்) செவியுறுபவன்ளூ நன்கறிந்தவன்.’ (2:137)

இந்த வசனம் நேரடியாக நபியவர்களையும் நபித்தோழர்களையும் விழித்தே பேசுகின்றது. நபித்தோழர்கள் ஈமான் கொண்டது போல் ஈமான் கொள்வதே நேர்வழி பெறுவதற்கான வழியாகும். அவர்கள் எதை ஈமான் கொண்டார்களோ அதை ஈமான் கொண்டால் போதும் என்றிருந்தால் நீங்கள் ஈமான் கொண்டதை அவர்களும் ஈமான் கொண்டால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள் என்று அல்லாஹ் கூறியிருப்பான். அப்படிக் கூறாமல் நீங்கள் ஈமான் கொண்டது போல் அவர்களும் ஈமான் கொண்டால் நேர்வழி பெறுவார்கள் என்று கூறுவதன் மூலம் ஈமான் கொள்ளும் விடயத்திற்கும், முறைக்கும் நபித்தோழர்கள் முன்மாதிரியாக திகழ்கின்றார்கள் என்பது உறுதியாகின்றது.

எனவே, குர்ஆன், சுன்னாவை நபித்தோழர்கள் எப்படி விளங்கி செயற்படுத்தி வந்தார்களோ அந்த வழி நின்று புரிந்து செயற்படுவதுதான் நேர்வழி! வழிகேட்டில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கான ஒரே வழி என்பதை உறுதியாக அறிந்து அந்த வழியில் செயற்பட அன்பாய் அழைக்கின்றோம்..
أحدث أقدم