முஹர்ரம் மாதம் மற்றும் ஆஷுரா நோன்பு

முஹர்ரம் மாதம் புனிதமான 4 மாதங்களில் ஒரு மாதமாகும். ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதமாகும். அல்லாஹ்வின் மாதம் என நபியவர்கள் கூறிய மாதமாகும்.

1- முஹர்ரம் மாத நோன்பின் சிறப்பு:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளான் மாத நோன்புக்கு அடுத்தபடியாகச் சிறந்த நோன்பு யாதெனில், அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாத நோன்பாகும். கடமையாக்கப்பட்ட தொழுகைக்கு அடுத்தபடியாகச் சிறந்த தொழுகை, இரவுத் தொழுகை (தஹஜ்ஜுத்) ஆகும். (இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஸ்லிம் 2157).

2- ஒரு வருட சிறு பாவங்களுக்குப் பரிகாரமாகும்:

அபூகத்தாதா அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
"ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது) நாளில் நோன்பு நோற்பது குறித்து வினவப்பட்டது. அதற்கு "அது கடந்த ஆண்டின் பாவப்பரிகாரமாகும்" என நபியவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் 2152). ஹதீஸின் ஒரு பகுதி.

3- ஆரம்பத்தில் நபியவர்கள் நோற்குமாறு கட்டளையிட்ட நோன்பு:

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அறியாமைக் காலத்தில் குறைஷியர் ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்றுவந்தனர். ரமளான் நோன்பு கடமையாக்கப் படும் வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் ஆஷூரா நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள்; (ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்ட) பின்னர் ‘‘(ஆஷூரா நாளின் நோன்பை) நோற்க விரும்புபவர் அதை நோற்கட்டும்! விட்டுவிட விரும்புபவர் அதை விட்டுவிடட்டும்!” எனக் கூறினார்கள். (புஹாரி 1893).

ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டு வந்தார்கள்; அந்நோன்பை நோற்குமாறு எங்களை ஊக்குவிக்கவும் செய்வார்கள். அந்த நாளில் (நாங்கள் நோன்பு நோற்கிறோமா என) எங்களைக் கவனித்தும் வந்தார்கள். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டபோது, (ஆஷூரா நோன்பு நோற்குமாறு) எங்களுக்குக் கட்டளையிடவுமில்லை; எங்களுக்குத் தடைவிதிக்கவுமில்லை; அந்த நாளில் எங்களைக் கவனிக்கவுமில்லை. (முஸ்லிம் 2080).

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா (முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாள்) நோன்பு நோற்றார்கள். அதில் நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளை யிட்டார்கள். ரமளான் நோன்பு கடமை யாக்கப்பட்டதும் ஆஷூரா நோன்பு (கட்டாயம் என்பது) கைவிடப்பட்டது. (புஹாரி 1892).

4- அறியாமை காலத்தில் நோற்கப்பட்ட நோன்பு:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் முஹர்ரம் பத்தாவது நாள் (ஆஷூரா) குறித்துப் பேசப்பட்டது. அப்போது, "அது, அறியாமைக் காலத்தார் நோன்பு நோற்ற தினமாகும். உங்களில் அன்றையதினம் நோன்பு நோற்க விரும்புகின்றவர் நோன்பு நோற்கட்டும்! விரும்பாதவர் நோன்பை விட்டுவிடட்டும்!" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் 2073).

5- கஃபாவுக்கு புதிய திரைச்சீலை மாற்றப்படும் நாளாக இருந்தது:

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ரமளான் நோன்பு கடமையாக்கப்படு வதற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாளில்) நோன்பு நோற்றுவந்தார்கள். அதுதான் கஅபாவுக் குப் புதிய திரைச்சீலை போர்த்தப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமளான் நோன்பைக் கடமையாக்கியபோது, “யார் ஆஷூரா நோன்பு நோற்க விரும்பு கிறாரோ அவர் அதை நோற்றுக்கொள்ளட்டும்! யார் அதை விட்டுவிட விரும்பு கிறாரோ அவர் அதை விட்டுவிடட்டும்!” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி 1592).

6- அறிவிப்பாளர் மூலம் அறிவிக்கப்பட்டது:

சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளன்று ஒருவரை அனுப்பி, ‘‘(இன்று) சாப்பிட்டுவிட்டவர் (இரவுவரை தமது நோன்பை) ‘முழுமை யாக்கட்டும்!› அல்லது ‘நோற்கட்டும்!› சாப்பிடாமல் இருப்பவர் (நோன்பைத் தொடரட்டும்) சாப்பிட வேண்டாம்!” என்று மக்களுக்கு அறிவிக்கச் செய்தார்கள். (புஹாரி 1924).

7- சிறுவர்களையும் நோன்பு நோற்க வைத்தார்கள்:

ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் முஹர்ரம் பத்தாம் நாள் (ஆஷூரா தினத்தன்று) காலையில் (மதீனா புறநகரங்களில் உள்ள) அன்சாரி களின் கிராமங்களுக்கு ஆளனுப்பி, ‘‘(இன்று) யார் நோன்பு நோற்காதவராகக் காலைப் பொழுதை அடைந்துவிட்டாரோ அவர் இன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்தை (நோன்பிருந்து) நிறைவு செய்யட் டும்! யார் நோன்பாளியாகக் காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் நோன் பைத் தொடரட்டும்!” என்று அறிவிக்கச் செய்தார்கள்.
நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம்; எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்கச் செய்வோம். கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் (தயார்) செய்து, அவர்களில் ஒருவன் (பசியால்) உணவு கேட்டு அழும்போது நோன்பு துறக்கும் நேரம் வரும்வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம். (புஹாரி 1960).

8- நபியவர்கள் சிறப்பித்து நோற்ற ஒரு நோன்பு:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: "ஆஷூரா எனும் இந்த (முஹர்ரம் பத்தாம்) நாளையும் ரமளான் எனும் இந்த மாதத்தையும் தவிர, வேறெதையும் ஏனையவற்றைவிடச் சிறப்பாகத் தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை." (புஹாரி 2006).

9- மூஸா அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் விதமாக நோற்ற நோன்பு:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மதீனா நகருக்கு வந்தபோது யூதர்கள் ஒரு நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள் லி அதாவது ஆஷூராவுடைய (முஹர்ரம் 10ஆவது) நாளில் (யூதர்கள்) நோன்பு நோற்றுவந்ததை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்லி யூதர்கள், ‘‘இது மாபெரும் நாள். மூசா (அலை) அவர்களை இந்த நாளில்தான் அல்லாஹ் காப்பாற்றினான்; ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். ஆகவே, மூசா (அலை) அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் நோன்பு நோற்றார்கள்” என்று சொன்னார்கள்.
நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் அவர்களைவிட மூசா அவர்களுக்கு மிக நெருக்கமானவன்” என்று கூறிவிட்டு, அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, தம் தோழர்களுக்கும் (கூடுதலான) நோன்பு நோற்கும்படி ஆணையிட்டார்கள். (புஹாரி 3397).

10- ஆஷுரா நோன்பின் படித்தரங்கள்:

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாள் என்பது அறியாமைக் காலத்தில் குறைஷியர் நோன்பு நோற்கின்ற நாளாக இருந்துவந்தது. நபி (ஸல்) அவர்களும் அந்த நாளில் நோன்பு நோற்று வந்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்குச் சென்ற போது அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்கும்படி (முஸ்லிம் களுக்கு) உத்தரவுமிட்டார்கள். ரமளான் (நோன்பின் கட்டளை) வந்தபோது ஆஷூரா தினம், விரும்பி யவர்கள் நோன்பு நோற்கவும் செய்யலாம்; விரும்பாதவர்கள் நோன்பு நோற்காமலும் இருக்கலாம் என்ற நிலைக்கு வந்து விட்டது. (புஹாரி 3831).

11- முஹர்ரம் 9வது நாள் நோன்பு நோற்றல்:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்கும்) கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?" என்று வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம்" என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள். (முஸ்லிம் 2088).

குறிப்பு: புஹாரி மற்றும் முஸ்லிமில் இடம் பெறும் செய்திகள் ரஹ்மத் பதிப்பக தமிழாக்கத்திலிருந்து.

நட்புடன்
அஸ்ஹர் யூஸுப்ஃ ஸீலானி
أحدث أقدم