-ARM. ரிஸ்வான் (ஷர்கி)
அல்லாஹ் இந்த சமூகத்திற்கென பிரத்தியேகமாக வழங்கிய அம்சங்களுள் தயம்மும் முக்கிய இடத்தைப் பெறுகிறது.
வுழூ செய்வதற்கு அல்லது கடமையான குளிப்பை நிறைவேற்றுவதற்கு நீரைப் பெற்றுக்கொள்ளாத போது, அல்லது நீர் இருந்தும் அதை பயன்படுத்த முடியாத சூழ்நிலைகளின் போது மாற்றீடாக அல்லாஹ் வழங்கிய ஏற்பாடே தயம்மும் ஆகும்.
தயம்மும் செய்கின்ற சூழ்நிலைகள் ஏற்பட்ட போதிலும் அதை நடைமுறைப்படுத்தாத பலர் சமூகத்தில் காணப்படுகிறார்கள். இதற்கு இரு காரணங்கள் உள்ளன :
1. தயம்மும் பற்றிய தெளிவின்மை
2. தயம்மும் செய்வதற்கு விருப்பமின்மை
தயம்மும் பற்றிய போதிய தெளிவு ஒருவருக்கு இல்லையெனில் அவர் அது தொடர்பில் தெளிவுபெற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.
ஆனால் தயம்மும் செய்வதற்கு விருப்பமற்ற மனோநிலை இருப்பதென்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். அதாவது தயம்மும் செய்வதனால் வுழூ செய்வது போன்ற திருப்தி ஏற்படுவதில்லை என்ற காரணத்தை கூறி தயம்மும் செய்யாமலே பலர் இருந்துவிடுகின்றனர். இத்தகையோர் பின்வருவனவற்றை கவனத்திற்கொள்ள வேண்டும் :
1. வுழூவையும் ஏனைய கடமைகளையும் விதியாக்கிய அல்லாஹ்தான் தயம்மும் என்ற கடமையையும் விதியாக்கியுள்ளான். வுழூ செய்யும் முறையை கற்றுத்தருகின்ற அதே வசனத் தொடரிலேயே தயம்மும் செய்வது பற்றியும் அல்லாஹ் குறிப்பிடுகிறான் :
'முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளை மஸ்ஹு செய்து கொள்ளுங்கள்; உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்); ..... உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் சுத்தமான பூமியின் மேற்பரப்பிலுள்ள (மண், மணல், பாறை போன்ற)வற்றின் உதவியுடன் தயம்மும் செய்து கொள்ளுங்கள்; (அதாவது) அதன் மூலமாக உங்கள் முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்; அல்லாஹ் உங்களை வருத்தக் கூடிய எந்த சிரமத்தையும் கொடுக்க விரும்பவில்லை - ஆனால் அவன் உங்களைத் தூய்மைப் படுத்தவும்; இன்னும் நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, தனது அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கவும் விரும்புகிறான் (5:6).
2. அனைத்து வணக்க வழிபாடுகளையும் கற்றுத் தந்த அல்லாஹ்வின் தூதர் அவர்கள் தயம்மும் செய்ய வேண்டிய சூழ்நிலைகளில் தானும் தயம்மும் செய்ததோடு, தயம்மும் செய்யும் முறையையும் தமது தோழர்களுக்கு கற்பித்திருக்கிறார்கள்.
3. தயம்மும் என்பது முன்னைய நபிமார்களின் சமூகங்களுக்கு வழங்கப்படாத, இந்த சமூகத்திற்கு மாத்திரம் அல்லாஹ்வால் வழங்கப்பட்ட ஒரு கடமையாகும். நமக்கென்றே விசேடமாக வழங்கப்பட்ட இக்கடமையை நாம் மிகவும் மன விருப்பத்தோடு, 'அல்லாஹ் எனக்கென்று மட்டும் தந்த அருட்கொடை' என்ற உணர்வோடு நிறைவேற்றிட வேண்டும். நபிகளார் கூறினார்கள் : 'எனக்கு முன்னர் (நபிமார்கள்) யாருக்கும் வழங்கப்படாத ஐந்து விடயங்கள் எனக்குக் வழங்கப்பட்டுள்ளன. எதிரிகளுக்கும் எனக்குமிடையில் ஒரு மாத காலம் பயணம் செய்யும் இடைவெளியிலிருந்தாலும் அவர்களின் உள்ளத்தில் பயம் ஏற்படுத்தப்படுவதன் மூலம் நான் உதவப்பட்டுள்ளேன். பூமி முழுவதும் சுத்தம் செய்யத்தக்கதாகவும் தொழுமிடமாகவும் எனக்கு ஆக்கப்பட்டுள்ளது. என்னுடைய சமுதாயத்தில் தொழுகையின் நேரத்தை அடைந்தவர் (தான் இருக்கும் இடத்தில்) தொழுது கொள்ளட்டும்!
போரில் கிடைக்கிற பொருட்கள் எனக்கு ஹலாலாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நபியும் தங்களின் சமூகத்திற்கு மட்டுமே நபியாக அனுப்பப்பட்டார்கள். ஆனால், நான் மனித இனம் முழுமைக்கும் நபியாக அனுப்பப்பட்டுள்ளேன். (மறுமையில் என்னுடைய சமூகத்துக்காக) சிபாரிசு செய்யும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளேன் (புஹாரி, முஸ்லிம்).
மேற்படி ஹதீஸில் நபியவர்கள் முன்னைய நபிமாருக்கு வழங்கப்படாத, தமக்கு மாத்திரம் வழங்கப்பட்ட ஐந்து சிறப்பம்சங்களுள் ஒன்றாக பூமி முழுவதும் சுத்தம் செய்யத்தக்கதாக (அதாவது தயம்மும் செய்தல்) ஆக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுகிறார்கள்.
4. தயம்மும் என்பது அல்லாஹ் நமக்களித்த மார்க்க ரீதியான சலுகையாகும்.
நபிகளார் ஒரு தடவை கூறினார்கள் : 'அல்லாஹ் வழங்கிய சலுகைகளை நடைமுறைப்படுத்துவதை அல்லாஹ் விரும்புகிறான்' (முஸ்னத் அஹ்மத்). தயம்மும் என்பது அல்லாஹ் தந்த சலுகை என்ற வகையில் தயம்மும் செய்யும் போது நாம் அல்லாஹ்வின் விருப்பத்துக்குரியவர்களாக மாறுகிறோம் என்பதை மேற்படி ஹதீஸ் உணர்த்துகிறது.
தயம்மும் கடமையாக்கப்பட்டதன் பின்னணி:
ஆஇஷா - றழியல்லாஹு அன்ஹா - அவர்களோடு தொடர்பான ஒரு நிகழ்வை காரணியாக்கி தயம்மும் என்ற கடமையை அல்லாஹ் இந்த சமூகத்துக்கு விதியாக்கினான்.
ஹி.06ம் ஆண்டு நடைபெற்ற பனுல் முஸ்தலக் போருக்காக நபியவர்களும் ஸஹாபாக்களும் புறப்பட்டுச்சென்ற வேளை இந் நிகழ்வு இடம்பெற்றது.
அன்னை அவர்களே இது குறித்து பின்வருமாறு அறிவிக்கிறார்கள் :
'நாங்கள் ஒரு பயணத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் சென்றோம். “பைதாஉ“ அல்லது “தாத்துல் ஜைஷ்“ என்ற இடத்தை வந்தடைந்ததும் என்னுடைய மாலை அறுந்து (தொலைந்து)விட்டது. அதைத்தேடுவதற்காக நபி அவர்களும் மற்றவர்களும் அந்த இடத்தில் தங்கினோம். நாங்கள் தங்கிய இடத்தில் தண்ணீர் இல்லை. அப்போது அபூ பக்ர் - றழியல்லாஹு அன்ஹு - அவர்களிடம் சிலர் வந்து, “(உங்கள் மகளான) ஆஇஷா செய்ததை நீங்கள் பார்த்தீர்களா? நபி அவர்களையும் மக்களையும் இங்கே தங்கச் செய்துவிட்டார். அவர்கள் தங்கிய இடத்திலும் தண்ணீர் இல்லை; அவர்களுடனும் தண்ணீர் எடுத்து வரவில்லை“ என்று முறையிட்டனர். அபூ பக்ர்(றழி) அவர்கள் (என்னருகே) வந்தபோது நபி அவர்கள் தங்களின் தலையை என்னுடைய மடி மீது வைத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். “நபிகளார் அவர்களையும் மக்களையும் தங்க வைத்துவிட்டாயே? அவர்கள் தங்கிய இடத்திலும் தண்ணீர் இல்லை; அவர்களிடமும் தண்ணீர் இல்லை“ என்று கூறினார்கள். அவர்கள் எதைச் சொல்ல அல்லாஹ் நாடினானோ அதையெல்லாம் சொல்லிவிட்டு, தங்களின் கையால் என்னுடைய இடுப்பில் குத்தினார்கள். நபி அவர்களின் தலை என் மடியின் மீது இருந்ததால் நான் அசையாது இருந்தேன். நபி அவர்கள் காலையில் விழித்தெழிந்தபோதும் தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது அல்லாஹ் தயம்மும் பற்றிய வசனத்தை அருளினான். எல்லோரும் தயம்மும் செய்தார்கள். இது பற்றிப் பின்னர் உஸைத் இப்னு ஹுளைர் - றழியல்லாஹு அன்ஹு - அவர்கள், “அபூ பக்ரின் குடும்பத்தாரே! உங்களின் மூலமாக ஏற்பட்ட பறக்கத்துக்களில் இது முதலாவதாக இல்லை. (இதற்கு முன்பும் உங்களின் மூலம் எத்தனையோ பறக்கத்துக்கள் ஏற்பட்டுள்ளன)" எனக் கூறினார். அப்போது நான் இருந்த ஒட்டகத்தை எழுப்பியபோது அதனடியில் (காணாமல் போன) என் மாலை கிடந்ததைக் கண்டோம்”.
(ஸஹீஹுல் புஹாரி).
வல்ல அல்லாஹ்தான் நிம்மதியான நிலையையும் தருகிறான்; நெருக்கடியான சூழலையும் உருவாக்குகிறான். நெருக்கடிகளை ஏற்படுத்தினாலும் இறுதியில் உள்ளங்கள் பூரிப்படையும் அளவுக்கு விடிவையும் தீர்வையும் தருவதும் அல்லாஹ்வின் நடைமுறைகளில் ஒன்றாகும்.
அவ்வகையில்தான் தயம்மும் கடமையாக்கப்பட்ட பின்னணியும் அமைந்திருந்தது. ஸஹாபாக்களெல்லாம் வெறுப்படையுமளவுக்கு சிறியதொரு நெருக்கடி நிலை உருவானது. ஆனாலும் அல்லாஹ் அதன் இறுதியில் மறுமை வரை தோன்றவிருக்கின்ற முழு சமூகத்துக்குமே ஆறுதல் தருகின்ற எளிமையான தீர்வொன்றை தயம்முமின் மூலம் ஏற்படுத்தினான். இதற்கு நபிகளாரின் பேரன்புக்குரிய மனைவி ஆஇஷா (றழி) அவர்களை பயன்படுத்தினான் என்பது அன்னை அவர்களுக்கு அல்லாஹ் அளித்த மாபெரும் கௌரவமாகும.
தயம்மும் செய்வதற்கான காரணிகள்:
தயம்மும் செய்வதற்கு பிரதானமாக இரு காரணிகள் காணப்படுகின்றன :
1) நீர் கிடைக்காமை
2) நீர் இருந்தும் அதை பயன்படுத்த முடியாமை
நீர் கிடைக்காமை:
ஒருவர் தனது சொந்த ஊரில் இருக்கும் போதோ, அல்லது பயணத்தில் இருக்கும் போதோ வுழூ செய்வதற்கோ, கடமையான குளிப்பை நிறைவேற்றுவதற்கோ நீரை பெற்றுக்கொள்ளாத போது தயம்மும் செய்யுமாறு இஸ்லாம் வழிகாட்டுகிறது. இதற்கான ஆதாரங்களாவன :
1. நபிகளார் கூறினார்கள் : '.... நீரை நாம் பெற்றுக்கொள்ள முடியாமற் போனால் மண் நமக்கு சுத்தம் செய்துகொள்வதற்காக தரப்பட்டுள்ளது' (முஸ்லிம், அஹ்மத்).
2. நபியவர்களும் ஸஹாபாக்களும் பிரயாணம் ஒன்றில் தொழுகையை நிறைவேற்றிக்கொண்டிருந்த போது ஒருவர் மாத்திரம் தொழாமல் ஒதுங்கியிருந்தார். அதற்கான காரணத்தை அவரிடம் வினவிய போது, தனக்கு குளிப்பு கடமையாகிவிட்டதாகவும் குளிப்பதற்கு தண்ணீர் கிடைக்கவில்லை என்பதால் தன்னால் தொழ முடியவில்லை என்பதாகவும் குறிப்பிட்டார். அப்போது நபியவர்கள் 'நீர் பூமியின் மேற்பரப்பிலுள்ளதை பயன்படுத்தி தயம்மும் செய்திருந்தால் அது உமக்கு போதுமாக இருந்திருக்குமே' என்று கூறினார்கள் (புஹாரி, முஸ்லிம்).
மேற்படி இரு ஹதீஸ்களும் இவை போன்ற வேறு பல ஹதீஸ்களும் தண்ணீர் கிடைக்காத போது தயம்மும் செய்ய முடியும் என்பதை நிரூபிக்கின்றன.
நீர் இருந்தும் அதை பயன்படுத்த முடியாமை:
நீர் இருந்தும் அதை பயன்படுத்த முடியாதிருத்தல் என்பது பல காரணங்களினால் ஏற்படலாம் :
அ) நோய் அல்லது உடலுறுப்புகளில் காயம் ஏற்பட்டிருந்து தண்ணீரை பயன்படுத்த முடியாத போது தயம்மும் செய்ய முடியும்.
1. 'நீங்கள் நோயாளிகளாகவோ, அல்லது பயணத்திலோ இருந்து... தண்ணீரை பெற்றுக்கொள்ளவில்லையாயின் தயம்மும் செய்துகொள்ளுங்கள்' (அல்குர்ஆன் 5:6).
2. ஜாபிர் (றழி) அவர்கள் கூறுகிறார்கள் : 'நாங்கள் ஒரு பயணம் மேற்கொண்டிருந்தோம். எங்களில் ஒருவர் கல்லில் தாக்குண்டு அவரது தலையில் காயம் ஏற்பட்டது. அன்றிரவு அவருக்கு குளிப்பு கடமையாகிவிட, தான் தயம்மும் செய்து தொழ முடியுமா என ஏனையோரிடம் கேட்ட போது அவர்கள் அவ்வாறு செய்ய முடியாது என கூறவே, அவர் குளித்தார். அதனால் மரணித்தும் போனார். பின்னர் நபியவர்களிடம் சென்று இது பற்றி கூறியதும் 'அவரை அவர்கள் கொன்றுவிட்டார்களே... அவர்களுக்கு ஒரு விடயம் தெரியாவிட்டால் பிறரிடம் கேட்டிருக்க கூடாதா? (தெரிந்தவர்களிம்) கேட்பதன் மூலமே அறவீனத்தை போக்க முடியும். அவர் தயம்மும் செய்திருந்தாலே அது அவருக்கு போதுமாக இருந்திருக்குமே' என்று கூறினார்கள் (அபூதாவூத், இப்னு மாஜஹ்). இந்த ஹதீஸ் அறிவிப்பு பலவீனமானதெனினும் வேறு வழிகளிலும் அறிவிக்கப்படுவதன் மூலம் ஆதாரபூர்வமானது என்ற தரத்தை அடைகிறது என ஹதீஸ்துறை அறிஞர்கள் கூறுகின்றனர் (பார்க்க : 'தமாமுல் மின்னா பீ பிக்ஹில் கிதாபி வஸஹீஹிஸ் ஸுன்னா', 1/122).
ஆ) கடுமையான குளிரின் காரணமாக தண்ணீரை பயன்படுத்த முடியாத போதும் தயம்மும் செய்ய முடியும். இதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக இருக்கிறது.
தாதுஸ் ஸலாஸில் எனும் யுத்தத்திற்கான படைத் தளபதியாக அம்ர் இப்னுல் ஆஸ் (றழி) அவர்கள் நபியவர்களால் அனுப்பப்பட்டிருந்தார்கள். அவர்கள் சென்ற பிரதேசமோ மிகக் குளிரான பிரதேசம். அவர்களுக்கு அன்றிரவு குளிப்பும் கடமையாகிவிட்டது. கடுமையான குளிரில் குளித்தால் தனக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ எனப் பயந்த அம்ர் (றழி) அவர்கள் குளிக்காமல் தயம்மும் செய்துவிட்டு ஸுப்ஹ் தொழுகையை நடத்தினார்கள். பின்னர் நபியவர்களிடம் சென்ற போது இது பற்றி கூறப்பட்டது. அப்போது நபியவர்கள் 'அம்ரே! குளிப்பு கடமையான நிலையில நீர் உமது தோழர்களுக்கு இமாமாக நின்று தொழுகை நடத்தினாயா?' என்று கேட்டார்கள். அப்போது அம்ர் (றழி) அவர்கள் 'அல்லாஹ்வின் தூதரே! 'உங்களை நீங்களே கொன்று விடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களோடு மிக இரக்கமுள்ளவனாக இருக்கிறான்' (4:29) என்ற அல்குர்ஆன் வசனத்தை நினைத்துப் பார்த்தேன். பின்னர் தயம்மும் செய்து தொழுகை நடாத்தினேன்' என்று கூறிய போது நபியவர்கள் சிரித்தார்கள். அவர்கள் எதுவும் கூறவில்லை (அபூதாவூத், அஹ்மத்).
நபியவர்கள் அம்ர் இப்னுல் ஆஸ் (றழி) அவர்களின் செயலை கண்டிக்காமல் விட்டமையானது அச்செயலை ஏற்று அங்கீகரித்தமைக்கு அடையாளமாகும்.
இவ்வாறே நீர் இருந்தும் அதை பயன்படுத்த முடியாமற் போகும் சூழ்நிலைகளாக அறிஞர்கள் பின்வரும் சந்தர்ப்பங்களை குறிப்பிடுகிறார்கள் :
1. பயணத்தின் போது அருகில் நீர் இருப்பதாக கேள்விப்பட்டு அதை தேடிச் செல்வதன் மூலம் தனது பயணப் பாதையையோ, பயணத் தோழர்களையோ தவற விட்டு விடுதல்
2. இருக்கின்ற நீரை பெற்றுக்கொள்ள முடியாதவாறு ஏதேனும் தடைகள், அச்சமான சூழல் காணப்படுதல்
3. நீர் இருக்கும் இடம் அருகில் இருந்தும் அவ்விடத்திற்கு நகர்ந்து செல்ல முடியாதவாறான நோய் ஏற்பட்டிருத்தல்.
இவை போன்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும் தயம்மும் செய்வதற்கு பின்வரும் அல்குர்ஆன் வசனத்தை அறிஞர்கள் ஆதாரமாக குறிப்பிடுகிறார்கள் :
'நீங்கள் நீரை பெற்றுக்கொள்ளவில்லையெனில் தயம்மும் செய்யுங்கள்' (5:6).
(பார்க்க : 'அல்முஹல்லா', 2:165, 'அல்முக்னீ', 1/229, 'தமாமுல் மின்னா பீ பிக்ஹில் கிதாபி வஸஹீஹிஸ் ஸுன்னா', 1/124)
எதில் தயம்மும் செய்வது?
தயம்மும் செய்வதற்கு எதை பயன்படுத்த வேண்டும் என்பது தொடர்பில் அறிஞர்களிடையே இரு நிலைப்பாடுகள் உள்ளன :
01. புழுதி மண்ணில் மட்டுமே தயம்மும் செய்ய வேண்டும். இந்நிலைப்பாட்டை இமாம் ஷாபிஈ, இமாம் அஹ்மத் (றஹிமஹுமல்லாஹ்) ஆகியோர் கொண்டுள்ளனர்.
02. பூமியின் மேற்பரப்பிலுள்ள, பூமியோடு சார்ந்த மண், மணல், களி, பாறை, கல் போன்ற அனைத்திலும் தயம்மும் செய்ய முடியும். இக் கருத்தை இமாம் அபூஹனீபா, இமாம் மாலிக், இமாம் அதாஃ, இமாம் அவ்ஸாஈ, இமாம் ஸுப்யானுத் தவ்ரீ (றஹிமஹுமுல்லாஹ்) உட்பட பலர் கொண்டிருக்கின்றனர். (பார்க்க : 'தமாமுல் மின்னா பீ பிக்ஹில் கிதாபி வஸஹீஹிஸ் ஸுன்னா', 1/124).
இவ்விரு கருத்துகளுள், இரண்டாவது கருத்தே ஆதார வலுக்கூடிய கருத்தாக அமைகிறது. இதற்கான ஆதாரங்களாவன :
1. 'நீங்கள் தண்ணீரை பெற்றுக்கொள்ளவில்லையாயின், சுத்தமான 'ஸஈதில்' தயம்மும் செய்யுங்கள்' என அலலாஹ் அல்குர்ஆனில் குறிப்பிடுகிறான்(5:6). இவ்வசனத்தில் 'ஸஈத்' என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறே தயம்மும் குறித்த சில ஹதீஸ்களிலும் 'ஸஈத்' எனும் பதம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
எடுத்துக்காட்டாக, நபியவர்களும் ஸஹாபாக்களும் மேற்கொண்ட ஒரு பயணத்தின் போது குளிப்புக் கடமையான நிலையில் தண்ணீரை பெற முடியாதிருந்த ஒரு ஸஹாபியை நோக்கி நபியவர்கள் 'ஸஈதை' பயன்படுத்தி தயம்மும் செய்திருந்தால் உமக்கு அது போதுமாக இருந்திருக்குமே' என்று கூறினார்கள் (புஹாரி, முஸ்லிம்).
மேற்படி அல்குர்ஆன் வசனத்திலும் ஹதீஸ்களிலும் பயன்படுத்தப்பட்டிருக்கும் 'ஸஈத்' என்ற சொல்லானது "புழுதி மண்ணை மட்டுமன்றி பூமியின் மேற்பரப்பிலுள்ள; பூமியோடு சார்ந்த மணல், கல், களி, பாறை போன்ற அனைத்தையும் குறிக்க பயன்படுத்தப்படும் சொல்' என பிரபல அறபு மொழி வல்லுநர்களான அல்அஸ்மஈ, அல்ஹலீல், தஃலப், இப்னுல் அஃராபீ, அஸ்ஸஜ்ஜாஜ், அபூஉபைதா உட்பட பலர் குறிப்பிடுகின்றனர் (பார்க்க : 'அஹ்காமுத் தயம்மும் : திராஸா பிக்ஹிய்யா முகாரனா', 1/474).
2. நபியவர்களும் ஸஹாபாக்களும் மணல், பாறை போன்றவற்றிலும் தயம்மும் செய்துள்ளார்கள்.
இமாம் இப்னுல் கையிம் (றஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :
'நபிகளார் அவர்கள் மேற்கொண்ட தபூக் யுத்தத்திற்கான பயணத்தின் போது தயம்மும் செய்திருக்கிறார்கள். மணல் பூமியாக இருந்த அப்பிரதேசத்துக்கு செல்லும் போது நபியவர்களோ, உடன் சென்ற ஸஹாபாக்களோ தயம்மும் செய்வதற்காக தம்மோடு புழுதி மண்ணை சுமந்து சென்றதாக எந்த சான்றும் இல்லை. அங்கிருந்த மணலிலும் பாறையிலும்தான் தயம்மும் செய்திருக்கிறார்கள். இவ்வாறே நபிகளார் வாழ்ந்த ஹிஜாஸ் பிரதேசமும் அதை அண்டியுள்ள பகுதிகளும் பெரும்பாலும் மணலும் பாறைகளும் நிறைந்தவையே. மிக அரிதாகவே புழுதி மண்ணை காண முடியும். இதை சிந்திக்கும் ஒருவர் நபியவர்கள் பாறை, மணல் போன்றவற்றிலும் தயம்மும் செய்துள்ளார்கள் என்று உறுதியான முடிவுக்கு வர முடியும்' (பார்க்க : 'ஸாதுல் மஆத்' , 1/193).
3. 'நபியவர்கள் ஒரு தடவை தயம்மும் செய்த போது கைகள் இரண்டையும் மண்ணில் அடித்த பின் தமது இரு கைகளிலும் ஊதினார்கள்' என அம்மார் (றழி) அவர்கள் கூறுகிறார்கள் (ஸஹீஹுல் புஹாரி).
ஊதுவதன் மூலம் புழுதி நீங்கிவிடும். புழுதி நிறைந்த மண்ணாகத்தான் இருக்க வேண்டுமென்றால் நபிகளார் கைகளில் ஊதியிருக்கமாட்டார்கள் (பார்க்க : 'அஷ்ஷர்ஹுல் மும்திஃ', 1/394).
மண், மணல், கல் போன்றவை மட்டுமன்றி, புழுதி என்பதும் பூமியோடு சார்ந்ததாகும். பூமியோடு சார்ந்த அனைத்திலும் தயம்மும் செய்ய முடியும் என்ற வகையில் புழுதி காணப்படும் இடங்களிலும் தயம்மும் செய்ய முடியும். எனவே சுவர், விரிப்பு, தரை போன்றவற்றில் படிந்துள்ள புழுதி மீதும் தயம்மும் செய்வது ஆகுமானது' என இந்நூற்றாண்டின் பேரறிஞர்களில் ஒருவரான அஷ்ஷெய்க் இப்னு உதைமீன் (றஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள் (பார்க்க : 'பதாவா அத் தஹாரா', பக் : 240).
இதே வேளை மண்ணில் தயம்மும் செய்யுமாறு சில ஹதீஸ்கள் குறிப்பிடுகின்றன.
உ-மாக, '(புழுதி)மண் சுத்தம் செய்யத்தக்கதாக நமக்கு ஆக்கப்பட்டுள்ளது' (முஸ்லிம்).
மேற்படி ஹதீஸில் புழுதி மண்ணை நபியவர்கள் குறிப்பிட்டிருந்தாலும் அதை மட்டுமே தயம்மும் செய்ய பயன்படுத்த வேண்டும் என்ற அர்த்தத்தில் குறிப்பிடவில்லை. புழுதி மண்ணும் அதில் அடங்கும் என்ற வகையில்தான் குறிப்பிட்டிருக்கிறார்கள். முன்னர் குறிப்பிட்ட ஏனைய ஹதீஸ்கள் இதற்கு சான்றாதாரமாக உள்ளன.
சுருங்கக் கூறின், தயம்மும் செய்வதற்கு புழுதி மண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்பது அவசியமல்ல; புழுதி மண்ணாயினும், புழுதி கலக்காத மணல், களி, பாறை, கல், புழுதி போன்றவையாயினும் அல்லது மழையில் நனைந்த மண்ணாயினும் அவற்றில் தயம்மும் செய்ய முடியும் என்பதையே மேற்படி ஆதாரங்கள் நிரூபிக்கின்றன. அல்லாஹு அஃலம்.
தயம்மும் செய்யும் முறை:
இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களான அல்குர்ஆனும் அஸ்ஸுன்னாவும் மிக எளிமையான தயம்மும் செய்யும் முறையை கற்றுத் தருகின்றன :
1. நிய்யத் வைத்தல்.
வணக்கங்கள் அனைத்திற்கும் நிய்யத் அவசியம் என்பதனால் தயம்முமின் போது நிய்யத் வைப்பதும் அவசியமாகும். நிய்யத் என்பது உள்ளம் சார்ந்த ஒரு வணக்கமாகும். எனவே தயம்மும் செய்வதாக மனதில் நினைத்தால் அதுவே நிய்யத் ஆகும். வாயினால் மொழிகின்ற எந்த வாசகங்களையும் அல்லாஹ்வோ, நபியவர்களோ நமக்குக் கற்றுத் தரவில்லை.
2. இரு உள்ளங்கைகளையும் சுத்தமான மண் அல்லது கல் அல்லது பாறை போன்றவற்றில் ஒரு தடவை அடித்தல்.
நபியவர்கள் அம்மார் (றழி) அவர்களுக்கு தயம்மும் செய்யும் முறையை கற்றுக்கொடுத்த போது 'உமது கையை பூமியில் அடிப்பது உமக்கு போதுமாகும்' என்று கூறினார்கள் (புஹாரி).
3. இரு கைகளிலும் மண் ஒட்டியிருந்தால் அதை ஊதி விடுதல் அல்லது இரு கைகளையும் தட்டிவிடுதல்.
கைகளில் ஊதி விடுதல் அல்லது இரு கைகளையும் தட்டிவிடுதல் ஆகிய இரு முறைகளும் ஸஹீஹுல் புஹாரியில் இடம்பெறும் அம்மார் (றழி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்களில் இடம்பெறுகின்றன.
4. இரு கைகளாலும் முகத்தில் தடவுதல்.
இது பற்றி அல்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது: 'உங்கள் முகங்களில் தடவுங்கள்' (5:6, 4:43 ) .
5. இரு கைகளின் மேற்புறங்களிலும் மணிக்கட்டு வரை தடவுதல்.
அல்குர்ஆன் கூறுகிறது : '...உங்கள் கைகளிலும் (தடவுங்கள்)' (5:6, 4:43).
இதுவே இஸ்லாம் சொல்லித் தரும் தயம்மும் செய்யும் முறையாகும்.
சிலர் தயம்முமை பிழையாக புரிந்து வைத்திருக்கிறார்கள். வுழூவினுடைய எந்த உறுப்பிலாவது காயம் இருந்தால் அந்த உறுப்பில் மண்ணால் தடவ வேண்டும் என்பதாக சிலர் புரிந்துவைத்திருக்கிறார்கள்.
அதாவது உதாரணமாக கரண்டைக் காலில் காயம் இருந்தால் அந்த இடத்தில் மண்ணால் தடவ வேண்டும் என்பதாக என்பதாகவும் தலையில் காயம் இருந்தால் தலையில் மண்ணால் தடவ வேண்டுமெனவும் சிலர் நினைத்திருக்கிறார்கள். இது மிகத் தவறாகும்.
தயம்முமின் உறுப்புகள் இரண்டுதான் :
1. முகம்
2. மணிக்கட்டு வரையான இரு கைகள்
வுழூவினுடைய எந்த உறுப்பில் காயங்கள் இருந்தாலும் இவ்விரண்டு உறுப்புகளிலும்தான் தயம்மும் செய்ய வேண்டும்.
கடமையான குளிப்புக்கு பதிலாக தயம்மும் செய்வதாயினும் இவ்விரண்டு உறுப்புகளில் மட்டுமே தயம்மும் செய்ய வேண்டும்.
முக்கிய குறிப்புகள் :
தயம்முமுடன் தொடர்பான சில முக்கிய குறிப்புகளை இப்பகுதியில் நோக்கலாம்.
குறிப்பு 01 :
தயம்மும் செய்யும் போது இரு தடவைகள் கைகளை பூமியில் அடிப்பதா? அல்லது ஒரு தடவை மாத்திரம் அடிப்பதா?
- தயம்மும் செய்யும் போது முகத்தில் தடவுவதற்காக ஒரு தடவையும் கைகளில் தடவுவதற்காக ஒரு தடவையும் என இரு தடவைகள் கைகளை மண்ணில் அடிக்கவேண்டுமென இமாம் ஷாபிஈ (றஹ்) போன்ற சில அறிஞர்கள் கூறுகின்றனர்.
அதே வேளை, முகத்துக்கும் கைகளுக்குமாக ஒரு தடவை மாத்திரமே கைகளை மண்ணில் அல்லது பூமியின் மேற்பரப்பில் அடிக்க வேண்டுமென இமாம் அஹ்மத், இமாம் அவ்ஸாஈ, இமாம் இஸ்ஹாக் இப்னு றாஹவைஹி (றஹிமஹுமுல்லாஹ்) முதலான பெரும்பாலான அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். (பார்க்க : 'தைஸீருல் அல்லாம்', 1/85).
இவ்விரு கருத்துகளுள் ஒரு தடவை மட்டும் கைகளை மண்ணில் அடிக்க வேண்டும் என்ற கருத்தே ஆதாரபூர்வமானதாகும். இதற்கான ஆதாரங்களாவன :
1. ஸஹீஹுல் புஹாரியில் பதிவாகியுள்ள ஆதாரபூர்வமான ஹதீஸில் அம்மார் (றழி) அவர்களுக்கு தயம்மும் செய்யும் முறை பற்றி கற்றுக்கொடுத்த போது 'நபியவர்கள் ஒரு தடவை கைகளை மண்ணில் அடித்தார்கள்' என்று தெளிவாகவே குறிப்பிடப்படுகிறது.
2. இரு தடவைகள் கைகளை அடிக்க வேண்டும் எனக் கூறும் அறிஞர்கள் பின்வரும் ஹதீஸை ஆதாரமாக குறிப்பிடுகிறார்கள் :
'தயம்மும் என்பது முகத்துக்கு ஒரு தடவையும் முழங்கை வரை கைகளுக்கு ஒரு தடவையும் என இரு தடவைகள் (கைகளை மண்ணில்) அடிப்பதாகும்' (தாரகுத்னீ).
ஆனாலும் இந்த ஹதீஸ் மிக பலவீனமானதாகும். இதை அறிவிக்கும் அறிவிப்பாளர்களில் ஒருவரான அலி இப்னு ழப்யான் என்பவர் ஹதீஸ் அறிவிப்பில் நிராகரிக்கப்பட வேண்டிய மிக பலவீனமான அறிவிப்பாளர் என ஹதீஸ்துறை மேதைகளான இமாம் இப்னு மஈன், இமாம் புஹாரி, இமாம் நஸாஈ, இமாம் அபூஸுர்ஆ (றஹிமஹுமுல்லாஹ்) உட்பட பலர் குறிப்பிடுகிறார்கள்.
வேறு ஒரு வழியாக அறிவிக்கப்படும் இதே கருத்தை தரும் ஹதீஸிலும் ஸுலைமான் இப்னு அர்கம், ஸுலைமான் இப்னு அபீதாவூத் ஆகிய ஆதாரமாக கொள்ள முடியாத இரு அறிவிப்பாளர்கள் இடம்பெறுவதால் அதுவும் பலவீனமான ஹதீஸ் என இமாம் பைஹகீ (றஹ்) போன்றோர் குறிப்பிடுகின்றனர் (பார்க்க : 'மின்ஹதுல் அல்லாம்' , 2/85).
இது தொடர்பில் பிரபல ஹதீஸ்துறை அறிஞரான இமாம் இப்னு அப்தில் பர் (றஹ்) அவர்கள் பின்வருமாறு முடிவுரை கூறுகிறார்கள் :
'தயம்மும் தொடர்பாக வந்த மிக அதிகமான ஹதீஸ்கள் ஒரு தடவை மாத்திரம் கைகளை அடிப்பதையே குறிப்பிடுகின்றன. இரு தடவைகள் அடிக்க வேண்டுமென குறிப்பிடுகின்ற அனைத்து ஹதீஸ்களும் பலவீனமானவையாகும்' (பார்க்க : 'நைலுல் அவ்தார்', 1/328).
எனவே, முகத்தில் தடவுவதற்காக கைகளை ஒரு தடவை பூமியில் அடித்தால் இரு கைகளில் தடவுவதற்கும் அதுவே போதுமானது என்பது தெளிவாகிறது.
குறிப்பு : 02
தயம்முமின் போது இரு கைககளிலும் தடவுகையில் முழங்கை வரை தடவ வேன்டும் என சில அறிஞர்கள் குறிப்பிடும் அதே வேளை, மணிக்கட்டுவரை மட்டுமே தடவ வேண்டும் என ஏனைய அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
மணிக்கட்டு வரை தடவ வேண்டும் என்பதே ஆதாரபூர்வமானதாகும்.
முழங்கை வரை தடவ வேண்டும் என்று கூறுவோர் குறிப்பு 01ல் (நேற்றைய தொடர்) குறிப்பிடப்பட்ட ஹதீஸை ஆதாரமாக காட்டுகின்றனர். அதில் 'முழங்கை வரை' என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் அந்த ஹதீஸ் மிகப் பலவீனமானது என்பது முன்னர் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு அம்மார் (றழி) அவர்கள் அறிவிக்கும் ஆதாரபூர்வமான ஹதீஸில் நபியவர்கள் மணிக்கட்டுவரைக்குமான இரு கைகளினதும் மேற்புறங்களின் மீது தடவினார்கள் என்றே பதிவாகியுள்ளது (ஸஹீஹுல் புஹாரி).
முழங்கை வரை தடவ வேண்டுமென கூறுவோர் அதற்கென ஒரு முறையை கூறுவார்கள். இது பற்றி இமாம் இப்னுல் கையிம் (றஹ்) (ஹி.691 - 751) அவர்கள் கூறும் கருத்து கவனிக்கத்தக்கதாகும் :
'தயம்மும் செய்யும் போது இரு கைகளிலும் தடவுகையில் முதலாவதாக இடது கை விரல்களின் உட்பகுதியை வலது கையின் ஆரம்பத்தில் வைத்து அப்படியே முழங்கை வரை தடவிக்கொண்டு சென்று பின்னர் இடது கையை வலது முழங்கையின் உட்புறமாக திருப்பி கொண்டு சென்று பெருவிரலில் விட வேண்டும் எனவும், இவ்வாறே இடது கையிலும் செயற்படுத்த வேண்டும் எனவும் கூறப்படும் முறையானது நபியவர்கள் செயற்படுத்தியதாகவோ அல்லது ஸஹாபாக்களுக்கு அவ்வாறு நபிகளார் கற்றுக்கொடுத்ததாகவோ எவ்வித ஆதாரமும் இல்லை. ஒரு வணக்கத்தின் செயல் முறையும் அதன் வடிவமும் நபியவர்களிடமிருந்தே வர வேண்டும்' (பார்க்க : 'ஸாதுல் மஆத்', 1/72).
குறிப்பு : 03
தயம்மும் என்பது வுழூவுக்கு பதிலாக செய்யப்படுவது மட்டுமன்றி, கடமையான குளிப்புக்கு பதிலாகவும் செய்யப்படுவதாகும். இதற்கு குர்ஆனும் ஸுன்னாவும் ஆதாரமாய் அமைகின்றன :
1. '... நீங்கள் நோயாளிகளாகவோ, அல்லது பிரயாணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரும் இயற்கைத் தேவையை நிறைவேற்றினால் அல்லது நீங்கள் குடும்ப உறவில் ஈடுபட்டிருந்தால் (உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்து கொள்ளுங்கள்...'(5:6)
2. அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் அவர்கள் என்னை ஒரு தேவை நிமித்தம் (படைப்பிரிவொன்றில்) அனுப்பிவைத்தார்கள். அப்(பயணத்தின்)போது எனக்கு குளிப்பு கடமையாகிவிட்டது. அப்போது எனக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. ஆகவே, நான் (குளிப்புக்கு பதிலாக தயம்மும் செய்வதற்காகப்) பிராணிகள் புரள்வதைப் போன்று மண்ணில் புரண்டேன். பிறகு (ஊர் திரும்பியதும்) நான் நபி அவர்களிடம் சென்று நடந்ததைச் சொன்னேன். அப்போது நபி 338. “ஒருவர் உமர்(ரலி) அவர்களிடம் வந்து “நான் குளிப்புக் கடமையானவனாக ஆகிவிட்டேன். தண்ணீர் கிடைக்கவில்லை. என்ன செய்யவேண்டும்?“ என்று கேட்டபோது, அங்கிருந்த அம்மார் இப்னு யாஸிர்(ரலி) உமர்(ரலி) அவர்களிடம், “நானும் நீங்களும் ஒரு பயணத்தில் சென்றோம். (அப்போது தண்ணீர் கிடைக்காததால்) நீங்கள் தொழவில்லை; நானோ மண்ணில் புரண்டுவிட்டுத் தொழுதேன். இந்நிகழ்ச்சியை நபி அவர்களிடம் நான் சொன்னபோது நபியவர்கள் தங்களின் இரண்டு கைகளையும் தரையில் அடித்து, அவற்றில் ஊதிவிட்டு அவ்விரு கைகளால் தங்களின் முகத்தையும் இரண்டு முன்கைகளையும் தடவிக் காண்பித்து 'இவ்வாறு செய்திருந்தால் அது உனக்குப் போதுமானதாக இருந்திருக்குமே' 'உங்களுடைய கரங்களால் இப்படிச் செய்திருந்தால் போதுமே!' என்று கூறினார்கள் (புஹாரி, முஸ்லிம்).
இது போன்று இன்னும் பல ஹதீஸ்கள் கடமையான குளிப்பை நிறைவேற்ற தண்ணீர் இல்லாத போது அல்லது தண்ணீர் இருந்தும் நோய், காயம், குளிர் போன்ற காரணங்களினால் அதை பயன்படுத்த முடியாத போது அதற்குப் பதிலாக தயம்மும் செய்ய முடியும் என்பதை நிரூபிக்கின்றன.
குறிப்பு : 04
தயம்மும் என்பது வுழூவுக்கும் கடமையான குளிப்புக்குமான பதிலீடு என்ற வகையில், ஒரு தடவை செய்த வுழூவின் மூலமும், ஒரு தடவை குளித்த கடமையான குளிப்பின் மூலமும் எத்தனை பர்ழ் தொழுகைகளையும் எத்தனை ஸுன்னத்தான தொழுகைகளையும் நிறைவேற்ற முடியும் என்பது போல், ஒரு தடவை செய்த தயம்முமின் மூலமாகவும் எத்தனை பர்ழுகளையும் எத்தனை ஸுன்னத்தான தொழுகைகளையும் நிறைவேற்ற முடியும் என்பதே சரியான கருத்தாகும்.
ஒரு தடவை செய்த தயம்முமின் மூலம் ஒரு பர்ழ் தொழுகையை மாத்திரமே நிறைவேற்ற முடியும் ; ஸுன்னத்தான தொழுகைக்கு செய்த தயம்முமின் மூலமாக பர்ழ் தொழுகையை தொழ முடியாது என்பன போன்ற கருத்துகள் சில அறிஞர்களிடம் காணப்படுகின்றன.
இந்த கருத்துக்கு அடிப்படையாக இருப்பது என்னவெனில், தயம்முமானது தண்ணீரைப் போன்று தொடக்கை நீக்க கூடியதா, அல்லது தொழுகை போன்ற கடமைகளை நிறைவேற்றுவதற்கான தற்காலிக ஏற்பாடா என்பதில் அறிஞர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடாகும்.
தயம்முமானது தண்ணீரைப் போன்று தொடக்கை நீக்குவது என்று கூறுவோர், ஒரு தயம்முமின் மூலம் எத்தனை பர்ழ் தொழுகைகளையும் எத்தனை ஸுன்னத்துகளையும் நிறைவேற்றலாம் என்று கூறுகின்றனர். இக்கருத்தை இமாம் அபூஹனீபா, இமாம் அஹ்மத் (ஒரு அறிவிப்பின் பிரகாரம்), இமாம் இப்னு தைமியா, இமாம் இப்னுல் ஜவ்ஸி (றஹிமஹுமுல்லாஹ்) கொண்டிருக்கின்றனர்.
தயம்முமானது தொடக்கு நீக்கி அல்ல, தொழுகைக்கான ஒரு (தற்காலிக) ஏற்பாடு மட்டுமே என்று கூறுவோர் ஒவ்வொரு தொழுகைக்கும் தயம்மும் செய்தாக வேண்டும் எனக் கூறுகின்றனர். இந்நிலைப்பாட்டை இமாம் மாலிக், இமாம் ஷாபிஈ, இமாம் அஹ்மத் (பிரபலமான அறிவிப்பு) (றஹிமஹுமுல்லாஹ்) ஆகியோர் கொண்டிருக்கின்றனர். (பார்க்க : 'தவ்ழீஹுல் அஹ்காம்', 1/436).
இக்கருத்துக்கு பின்வரும் ஹதீஸையும் ஆதாரமாக காட்டுகிறார்கள் :
'ஒருவர் ஒரு தயம்முமின் மூலம் ஒரு தொழுகையை நிறைவேற்றுவது ஸுன்னாவில் உள்ளதாகும். அடுத்த தொழுகைக்காக அவர் மீண்டும் தயம்மும் செய்வார்' என இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் கூறியதாக ஸுனனுத் தாரகுத்னீ, பைஹகீ ஆகிய நூல்களில் பதிவாகியுள்ளது.
ஆனால் இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்களில் ஒருவரான அல்ஹஸன் பின் இமாரா என்பவர் பலவீனமானவர் என இமாம் தாரகுத்னீ அவர்களே மேற்படி ஹதீஸின் கீழ் குறித்துவைத்துள்ளார்கள். இமாம் இப்னுல் மதீனீ, இமாம் ஷுஃபா போன்ற ஹதீஸ்துறை மேதைகள் ஒரு படி மேலே சென்று மேற்படி அறிவிப்பாளர் 'ஹதீஸ்களை இட்டுக்கட்டுபவர்' என குறிப்பிடுகிறார்கள். பிரபல ஹதீஸ் துறை அறிஞரான ஹாபிழ் இப்னு ஹஜர் (றஹ்) அவர்கள் இந்த ஹதீஸ் மிக பலவீனமானது என்று குறிப்பிடும் அதே வேளை இமாம் அல்பானி (றஹ்) அவர்கள் இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது என தீர்ப்பளித்துள்ளார் (பார்க்க : 'மின்ஹதுல் அல்லாம்' , 2/108).
இவ்விடயம் குறித்து ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமியா (றஹ்) அவர்கள் கூறும் கருத்து இங்கு குறிப்பிடதக்கதாகும் :
'தயம்மும் என்பது தண்ணீருக்கு பதிலாக நிறைவேற்றப்படுவதாகும்... எனவே, ஸுன்னத்தான தொழுகைக்காக செய்யப்பட்ட வுழூவின் மூலம் பர்ழ் தொழுகையையும் பர்ழ் தொழுகைக்காக செய்யப்பட்ட வுழூவின் மூலம் ஸுன்னத் தொழுகையையும் நிறைவேற்ற முடியும் என்பது போன்றே தயம்முமிற்கான சட்டமும் அமையும்... தண்ணீர் இல்லாத போது சுத்தம் செய்வதற்கான மாற்றீடாகவே அல்லாஹ் தயம்மும் என்ற ஏற்பாட்டை செய்துள்ளான். அல்லாஹ்வின் இந்த பரந்த ஏற்பாட்டை சுருக்குவது, முஸ்லிம்களுக்கு ஏற்படும் நெருக்கடியை நிவர்த்திப்பதற்காக அல்லாஹ் ஏற்படுத்திய தயம்மும் என்ற இந்த இலகுவான நடைமுறையை சிக்கல்தன்மைமிக்கதாக மாற்றுவது ஏற்கமுடியாத ஒன்றாகும்' (பார்க்க : 'அல்பதாவா', 21/436, 459).
குறிப்பு 05
தயம்மும் செய்த பின்னர் தண்ணீர் கிடைத்தல் தொடர்பான சட்டங்கள்
இதை பின்வருமாறு பிரித்து நோக்கலாம் :
1. தயம்மும் செய்து தொழுவதற்கு முன்னரே தண்ணீர் கிடைத்தல் :
நீர் கிடைக்காததன் காரணமாக தயம்மும் செய்து, தொழுவதற்கு முன்னர் தண்ணீர் கிடைத்துவிட்டால், தயம்மும் முறிந்துவிடும். தண்ணீரினால் வுழூ செய்தே தொழுகையை ஆரம்பிக்க வேண்டும். ஏனெனில் தண்ணீர் இருக்கும் போது தயம்மும் செல்லுபடியாகாது.
நபிகளார் கூறினார்கள் : 'ஒரு முஸ்லிம் பத்து வருடங்களாக தண்ணீரை பெற்றுக்கொள்ளாத போதிலும் சுத்தமான மண், மணல், கல் போன்றவை சுத்தம் செய்யத்தக்கவையாகும். ஆனால் தண்ணீரை பெற்றுவிட்டால் அல்லாஹ்வை பயந்து தனது உடலில் தண்ணீரை பயன்படுத்தவும். அதுவே நல்லதாகும்' (அஹ்மத், திர்மிதி, அபூதாவூத்).
2. தொழுதுகொண்டிருக்கும் போது நீர் கிடைத்தல் :
தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது மழை மூலமாகவோ, வேறு வழிகளிலோ நீர் கிடைத்தால் - என்ன செய்வது?
இதில் அறிஞர்களிடையே இரு நிலைப்பாடுகள் உள்ளன :
அ) தொழுதுகொண்டிருப்பவர் தொழுகையை இடைநிறுத்தத் தேவையில்லை, அவர் தண்ணீர் கிடைக்காததன் காரணமாக முறையாக தயம்மும் செய்து தனது கடமையை நிறைவேற்றியிருப்பதனால் தொழுகையை பூர்த்திசெய்வார்; மீண்டும் வுழூ செய்து தொழுகையை மீட்டத் தேவையில்லை.
ஆ) நீர் கிடைத்தவுடன் தயம்மும் முறிந்துவிடும் என்பதனால் தொழுகையை இடைநிறுத்திவிட்டு, வுழூ செய்து மீண்டும் தொழ வேண்டும். இக்கருத்தை ஷாபிஈ மற்றும் ஹம்பலி மத்ஹப் அறிஞர்கள் கூறுகின்றனர். பிற்கால அறிஞர்களான அல்லாமா அல்பானி (றஹ்), அல்லாமா இப்னு பாஸ் (றஹ்), அல்லாமா இப்னு உதைமீன் (றஹ்) ஆகியோரும் இக்கருத்தையே கொண்டிருக்கின்றனர். இதற்கும் மேலுள்ள ஹதீஸையே ஆதாரமாக குறிப்பிடுகின்றனர் :
'.... தண்ணீரை பெற்றுவிட்டால் அல்லாஹ்வை பயந்து தனது உடலில் தண்ணீரை பயன்படுத்தவும்...' (அஹ்மத், திர்மிதி, அபூதாவூத்).
(பார்க்க : 'அல்பிக்ஹுல் இஸ்லாமி வஅதில்லதுஹூ', 1/579, 580, 'பத்ஹு தில் ஜலாலி வல் இக்ராம்', 1/369).
3. குறித்த தொழுகையின் நேரம் முடிவடைவதற்கு முன் நீர் கிடைத்தல் :
குறித்த ஒரு தொழுகையின் நேரம் முடிவதற்குள் - அதாவது அடுத்த தொழுகையின் நேரம் வருவதற்கு முன் நீர் கிடைத்தால் - அவர் வுழூ செய்து தொழுகையை மீட்டி தொழுவது அவசியமில்லை; மீட்டித் தொழுதால் அதில் குற்றமுமில்லை. பின்வரும் ஹதீஸ் இதற்கு ஆதாரமாக அமைகிறது :
அபூஸஈத் அல்குத்ரீ (றழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'இரு மனிதர்கள் பயணம் மேற்கொண்டிருந்த போது தொழுகை நேரம் வந்தது. இருவரிடமும் தண்ணீர் இல்லாததால் இருவரும் தயம்மும் செய்து தொழுதார்கள். (தொழுது முடித்த) பின்னர் இருவருக்கும் தண்ணீர் கிடைத்தது. இருவரில் ஒருவர் வுழூ செய்து மீண்டும் அத்தொழுகையை தொழ, மற்றவரோ தொழாமல் இருந்து விட்டார். பின்னர் இருவரும் நபியவர்களிடம் வந்து விடயத்தை கூறினார்கள். அப்போது நபிகளார் தொழுகையை திரும்பத் தொழாதவரைப் பார்த்து, 'நீங்கள் ஸுன்னாவை சரியாக அடைந்துகொண்டீர்கள், உங்களது தொழுகையும் நிறைவேறிவிட்டது' என்று கூறினார்கள். (வுழூ செய்து) மீண்டும் தொழுதவரைப் பார்த்து, 'உங்களுக்கு இரண்டு கூலிகள் கிடைக்கும்' என்று கூறினார்கள் (அபூதாவூத், நஸாஈ).
மேற்படி ஹதீஸ் குறித்து சிறு விமர்சனம் இருந்தாலும் வேறு ஆதாரபூர்வமான அறிவிப்புகள், இப்னு உமர் (றழி) போன்ற ஸஹாபாக்கள் சிலரின் செயல்கள் இந்த ஹதீஸின் கருத்தை வலுப்படுத்துகின்றன (பார்க்க : 'மின்ஹதுல் அல்லாம்', 2/96).
4. குறித்த தொழுகையின் நேரம் முடிவடைந்த பின் நீர் கிடைத்தல் :
தயம்மும் செய்து தொழுத தொழுகையின் நேரம் கடந்து அடுத்த தொழுகையின் நேரம் வந்த பின்னரே நீர் கிடைத்தால் வுழூ செய்து மீண்டும் அந்த தொழுகையை மீட்டி தொழத் தேவையில்லை. இதில் அனைத்து அறிஞர்களும் ஏகோபித்த கருத்தை கொண்டிருக்கிறார்கள் (பார்க்க : 'அல்பிக்ஹுல் இஸ்லாமி வஅதில்லதுஹூ', 1/578).
குறிப்பு : 06
காயங்கள் மீது போடப்பட்ட கட்டுகள் (bandage, plaster) மீது தடவுதல் :
உடல் உறுப்புகளில் காயங்கள், நோவுகளுக்கு கட்டுகள் போடப்பட்டிருந்தால் வுழூ செய்யும் போது அல்லது குளிப்பை நிறைவேற்றும் போது அந்த கட்டுகள் மீது தண்ணீரால் தடவுதல் குறித்து அறிஞர்களிடையே பிரதானமாக மூன்று நிலைப்பாடுகள் உள்ளன :
1. வுழூவின் போதும் குளிப்பின் போதும் இத்தகைய கட்டுகள் மீது தண்ணீரால் தடவ வேண்டும். கட்டு போடப்படாத ஏனைய உறுப்புகளை கழுவ வேண்டும், தயம்மும் செய்யத் தேவையில்லை என்பது முதலாவது நிலைப்பாடு. இதுவே பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும்.
2. கட்டு போடப்படாத உறுப்புகளை மட்டும் வுழூவின் போதும் குளிப்பின் போதும் கழுவ வேண்டும்; கட்டுப் போடப்பட்ட உறுப்புகளை கழுவத் தேவையில்லை, தயம்மும் செய்யத் தேவையுமில்லை. அவற்றை அப்படியே விட்டுவிடலாம். ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான் : 'அல்லாஹ் எந்தவொரு ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி கஷ்டப்படுத்துவதில்லை' (2:286) என்ற வசனத்தை இத்தகையோர் ஆதாரமாக குறிப்பிடுகின்றனர். அத்தோடு குர்ஆனிலோ, ஆதாரபூர்வமான ஸுன்னாவிலோ கட்டுகள் மீது தடவுதல் குறித்து எதுவும் வரவில்லை என்பது இவ்வறிஞர்களின் கருத்தாகும். கட்டுகள் மீது தடவுதல் பற்றி ஒரு சில ஹதீஸ்கள் வந்திருந்தாலும் அவை அனைத்தும் ஆதாரமாக கொள்ள முடியாதளவு மிக பலவீனமானவையாகும் எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். (பார்க்க : 'தமாமுல் மின்னா பித் தஃலீகி அலா பிக்ஹிஸ் ஸுன்னா', 133 -135).
3. கட்டுகள் மீது தண்ணீரால் தடவுவதும் இல்லை, கட்டு போடப்படாத உறுப்புகளை கழுவ வேண்டியதுமில்லை. பதிலாக தயம்மும் செய்தால் போதுமானதாகும்.
மேற்படி கருத்துகளுள் மூன்றாவது கருத்தே ஆதார வலுக்கூடியதாக அமைகிறது. இதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக அமைகிறது :
பயணம் ஒன்றின் போது ஸஹாபி ஒருவர் கல்லில் தாக்குண்டு அவரது தலையில் காயம் ஏற்பட்டது. அன்றிரவு அவருக்கு குளிப்பு கடமையாகிவிட, தான் தயம்மும் செய்து தொழ முடியுமா என ஏனையோரிடம் கேட்ட போது அவர்கள் அவ்வாறு செய்ய முடியாது என கூறவே, அவர் குளித்தார். அதனால் மரணித்தும் போனார். பின்னர் நபியவர்களிடம் சென்று இது பற்றி கூறியதும் 'அவரை அவர்கள் கொன்றுவிட்டார்களே.... அவர் தயம்மும் செய்திருந்தாலே அது அவருக்கு போதுமாக இருந்திருக்குமே' என்று கூறினார்கள் (அபூதாவூத், இப்னு மாஜஹ்). இந்த ஹதீஸ் அறிவிப்பு பலவீனமானதெனினும் வேறு ஆதாரபூர்வமான வழிகளிலும் அறிவிக்கப்படுவதன் மூலம் ஆதாரபூர்வமானது என்ற தரத்தை அடைகிறது என ஹதீஸ்துறை அறிஞர்கள் கூறுகின்றனர் (பார்க்க : 'தமாமுல் மின்னா பீ பிக்ஹில் கிதாபி வஸஹீஹிஸ் ஸுன்னா', 1/122).
குறிப்பு : 07
வுழூவோ, தயம்முமோ செய்ய முடியாதவரின் நிலை:
வுழூவோ, தயம்முமோ செய்ய முடியாத நிலையில் இருப்பவர் நிர்ப்பந்த நிலைக்குள்ளானவராக கருதப்படுவதால் தொழுகை நேரம் வந்தவுடன் வுழூ, தயம்மும் செய்யாமலே தொழ வேண்டியது அவசியமாகும். ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான் : 'உங்களது சக்திக்குட்பட்ட வகையில் அல்லாஹ்வை பயந்துகொள்ளுங்கள்'
(64 : 16).
நிர்ப்பந்தமான சூழ்நிலையிலும் அல்லாஹ்வை பயந்து தொழுகையை நிறைவேற்றியிருப்பதால் அந்த தொழுகையை பின்னர் தண்ணீர் கிடைத்தவுடன் வுழூ செய்து மீட்டித் தொழ வேண்டிய அவசியமுமில்லை.
அல்லாஹு அஃலம்.
முடிவுரை
இத்துடன் நிறைவுபெறுகிறது. அல்ஹம்து லில்லாஹ். அல்லாஹ்வின் உதவியின்றி எக்காரியமும் நிறைவுபெறுவதில்லை. அவனது உன்னத மார்க்கத்துக்கான இச்சிறு பணியை நம்மிடமிருந்து ஏற்றுக்கொள்வானாக.