இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (பத்ருப் போரில் கொல்லப்பட்ட இறை நிராகரிப்பாளர்கள் போடப்பட்டிருந்த) பத்ரின் பாழடைந்த கிணற்றுக்கருகில் நபி(ஸல்) அவர்கள் நின்று, “உங்கள் இறைவன் உங்களுக்கு வாக்களித்ததை உண்மையானதாக பெற்றுக் கொண்டீர்களா?” என்று கேட்டார்கள். அப்போது நபியவர்களிடம், மரணித்தவர்களையா அழைத்து பேசுகிறீர்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “நீங்கள் அவர்களை விட நன்றாக செவியேற்பவர்கள் அல்ல. ஆனாலும் அவர்களால் பதிலளிக்க முடியாது” என்றார்கள்.
(புகாரி 1370).
இந்த ஹதீஸின் படி பத்ரில் கொல்லப்பட்டு கிணற்றில் வீசப்பட்டிருந்த நிராகரிப்பாளர்கள் நபியின் பேச்சை செவியேற்றுள்ளார்கள் என்று புரிய முடிகிறது.
ஆனாலும் அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் நபி(ஸல்) இப்படி கூறியதை எவ்வாறு புரிய வேண்டுமென்பதை கீழ்வருமாறு விளக்கினார்கள்:
நபி (ஸல்) அவர்கள், 'நான் அவர்களுக்கு கூறியதெல்லாம் சத்தியம் என்று இப்போது இவர்கள் அறிகிறார்கள்' என்றுதான் கூறினார்கள். ஏனென்றால் “நிச்சயமாக நீர் மரித்தோரை கேட்கும் படிச் செய்ய முடியாது” (அல் குர்ஆன்: 27: 80 ) என்று அல்லாஹு தஆலா கூறுகிறான்.
(புகாரி 1371)
மனிதர் இறந்து விட்டால் பேசுதல், பார்த்தல் உள்ளிட்ட எல்லா ஆற்றலும் இல்லாமல் போகிறது என்ற அடிப்படையிலேயே அன்னை ஆயிஷா அவர்கள் மேற்கண்ட விளக்கத்தை கூறியுள்ளார்கள். இதன்படி அவர்களின் விளக்கம் சரியே!
ஆயினும் வேறு சிலர் விளக்கம் சொல்லும் போது, கொல்லப்பட்டு கிணற்றில் போடப்பட்ட அவர்களை அல்லாஹ் அப்போதைக்கு செவியேற்கும்படி செய்தான் என்று கூறுகிறார்கள். இது குறித்த ஹதீஸ்:
அபூதல்ஹா (ரலி) அவர்கள் கூறியதாவது:
பத்ர் போர் (நடந்து முடிந்த) நாளன்று நபி (ஸல்) அவர்கள், குறைஷித் தலைவர்களில் இருபத்து நான்கு பேர்(களின் சடலங்)களை பத்ருடைய கிணறுகளில் அசுத்தமானதும், அசுத்தப்படுத்தக் கூடியதுமான (கற்களால் உட்சுவர் எடுக்கப்பட்ட) கிணறு ஒன்றில் தூக்கிப் போடுமாறு உத்தரவிட்டார்கள். (எதிரிக்) கூட்டத்தார் எவரிடமாவது நபி(ஸல்) அவர்கள் போரிட்டு வெற்றி கண்டால் (போரிட்ட இடத்திலுள்ள) திறந்த வெளியில் மூன்று நாட்கள் தங்கிச் செல்வது அவர்களது வழக்கமாக இருந்தது.
பத்ர் முடிந்த மூன்றாம் நாள் தம்முடைய வாகன(மான ஒட்டக)த்தின் மீது அதன் சிவிகையை (ஏற்றி)க் கட்டுமாறு நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். ஆகவே, அதன் மீது அதன் சிவிகை கட்டப்பட்டது. பிறகு நபி (ஸல்) அவர்கள் (புறப்பட்டுச்) சென்றார்கள். அவர்களுடைய தோழர்களும் அவர்களைப் பின்தொடர்ந்தனர்.
நபி(ஸல்) அவர்கள் தமது தேவை ஏதோ ஒன்றுக்காகச் செல்கிறார்கள் என்றே நாங்கள் நினைத்தோம். இறுதியில், அந்த (குறைஷித் தலைவர்கள் போடப்பட்டிருந்த) கிணற்றருகில் நபியவர்கள் நின்றார்கள். (கிணற்றோரம் நின்றிருந்த) நபி(ஸல்) அவர்கள், (அதில் எறியப்பட்டிருந்த) அவர்களுடைய பெயர்களையும், அவர்களுடைய தந்தையரின் பெயர்களையும் குறிப்பிட்டு, “இன்ன மனிதரின் மகன் இன்ன மனிதரே! இன்ன மனிதரின் மகன் இன்ன மனிதரே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நீங்கள் கீழ்ப்படிந்து நடந்திருந்தால் (இப்போது அது) உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் தானே! ஏனெனில், எங்களுடைய இறைவன் எங்களுக்கு வாக்களித்த (நன்மை)தனை உண்மை என்றே நாங்கள் கண்டுகொண்டோம். உங்களுக்கு உங்களுடைய இறைவன் வாக்களித்த (தண்டனை)தனை உண்மையானதுதான் என்று நீங்கள் கண்டுகொண்டீர்களா?” என்று கேட்டார்கள்.
உடனே (அருகிலிருந்த) உமர்(ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “என்னுடைய உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! நான் கூறுவதை (கிணற்றில் உள்ள) இவர்களைவிட நன்கு செவியுறுபவர்களாக நீங்கள் இல்லை” என்று கூறினார்கள்.
(இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான) க(த்)தாதா(ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
அவர்களை இழிவுபடுத்தி சிறுமைப்படுத்தி தண்டிப்பதற்காகவும், அவர்கள் (தமக்கு நேர்ந்துவிட்ட) இழப்பை எண்ணி வருந்துவதற்காகவும் நபி(ஸல்) அவர்களின் சொல்லைச் செவியேற்கச் செய்யும் முகமாக (அந்த நேரத்தில் மட்டும் அவர்களுக்கு) அல்லாஹ் உயிர் கொடுத்தான். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), (புகாரி 3976).
ஹதீஸின் இறுதியில் மேற்கண்ட விளக்கத்தை கூறும் கத்தாதா அவர்கள் இந்த ஹதீஸை அனஸ்(ரலி) அவர்களிடம் நேரடியாகக் கேட்ட தாபியீ ஆவார். இந்த விளக்கத்தைத் தான் அதிகமான அறிஞர்கள் கூறுகிறார்கள் என இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
(பத்ஹுல்பாரி)
கத்தாதாவின் இந்த விளக்கத்தை இப்னு உமர்(ரலி), அனஸ்(ரலி) ஆகிய இருவரின் அறிவிப்பிலும் இடம்பெறும் வாசகங்கள் வலுப்படுத்துகின்றன. அதாவது இரண்டு அறிவிப்பிலும், கொல்லப்பட்டு கிணற்றுக்குள் போடப்பட்டிருந்தவர்கள் செவியேற்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறு இரு கண்ணோட்டங்களின் படி இருவித விளக்கங்கள் சொல்லப்பட்டுள்ளன.
இங்கு நாம் இன்னொரு விஷயம் பற்றியும் பேச வேண்டும். முஸ்லிம்களுக்குள்ளே இருக்கும் வழிகேடர்கள் சிலர் இந்த ஹதீஸை வைத்து, இறந்து போன நல்லடியார்களிடம் துஆ செய்தால் அவர்கள் அந்த துஆவை செவியேற்பார்கள் என்று சொல்கிறார்கள். இது மிகப் பெரிய புரட்டலாகும். இந்த ஹதீஸை வைத்து, மரணித்த இறைமறுப்பாளர்கள் செவியேற்றார்கள் என்று விளக்கம் சொல்பவர்கள் நபியின் அந்தப் பேச்சை மட்டும் அப்போது அல்லாஹ் செவியேற்கச் செய்தான் என்றுதான் சொல்கிறார்கள். பொதுவாக பேசப்படுவதையெல்லாம் கேட்பார்கள் என்று சொல்லவில்லை.
பொதுவாக உயிர் கைப்பற்றப்பட்டு மரணம் ஏற்பட்டு விட்டால் உடல் செயல்படாது. மனிதன் மரணித்து விட்டால் கண் பார்க்காது, நாவு பேசாது, மூக்கு சுவாசிக்காது, கை பிடிக்காது, கால் நடக்காது, உடலுக்குள்ளிருக்கும் பாகங்களும் செயல்படாது. இதே நிலைதான் காதுக்கும் என்று புரிந்து கொண்டால் குழப்பமிருக்காது.
கைப்பற்றப்படும் உயிர் அல்லாஹ்வின் நாட்டப்படி சில விஷயங்களை உணரும்படி செய்யப்படும். இந்த அடிப்படையிலேயே இறந்தவரை அடக்கம் செய்த பின் திரும்பிச் செல்பவர்களின் காலடி சப்தத்தை அடக்கம் செய்யப்பட்டவர் செவியேற்பார் என்ற ஹதீஸையும் புரிந்து கொள்ள வேண்டும்.
அந்த ஹதீஸ்:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஓர் அடியானது உடலைக் கப்ரில் அடக்கம் செய்துவிட்டு, அவனுடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் செருப்பின் ஓசையை மய்யித் செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து முஹம்மத் எனும் இந்த மனிதரைப் - பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?' எனக் கேட்பர். அதற்கவன் 'இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்' என்பான். பிறகு '(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்' என்று அவனிடம் கூறப்பட்டதும் அவன் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பான். நிராகரிப்பவனாகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும், 'எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்' என்பான். அப்போது அவனிடம் 'நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனுடைய இரண்டு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் கத்துவான்.' அனஸ்(ரலி) அறிவித்தார்
ஸஹீஹ் புகாரி : 1338.
இந்த ஹதீஸில், கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவர் திரும்பிச் செல்லும் அவரின் தோழர்களுடைய செருப்பின் ஓசையை செவியேற்பார் என்று கூறப்பட்டுள்ளது. உலகில் வாழ்பவர்களுடனான தொடர்பு அறவே இல்லாமல் போகிறது என்பதை அவர் உணரும் விதமாக செருப்பின் ஓசை அவருக்கு எடுத்துக் காட்டப்படுகிறது. வானவர்கள் எப்படி அவரை எழுப்பி உட்கார வைக்கிறார்கள் என்பதை எதார்த்தமாகவே அவருடைய உடலை உட்கார வைப்பதாக நாம் புரிந்து கொள்வதில்லையோ அவ்வாறே புரிந்து கொள்ள வேண்டும்.
-அப்துர் ரஹ்மான் மன்பஈ