بسم الله الرحمن الرحیم
இக்ரிமா (رحمه الله) அவர்கள் கூறியதாவது:
இஸ்லாத்திலிருந்து வெளியேறிய சிலரை கலீஃபா அலீ (رضی الله عنه) அவர்கள் எரித்து(விடுமாறு உத்தர)விட்டார்கள். இந்த செய்தி இப்னு அப்பாஸ் (رضی الله عنه) அவர்களுக்கு எட்டியது.
அப்போது இப்னு அப்பாஸ் (رضی الله عنه) அவர்கள், "நானாக இருந்திருந்தால் அவர்களை நெருப்பால் எரித்திருக்கமாட்டேன். ஏனென்றால், அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள், 'அல்லாஹ் அளிக்கின்ற (நெருப்பாலான) வேதனையை அளித்து (யாரையும்) தண்டிக்காதீர்கள்' என்று கூறியுள்ளார்கள்.
மாறாக, அவர்களுக்கு நான் மரண தண்டனையே அளித்திருப்பேன். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள், 'யார் தமது மார்க்கத்தை மாற்றிக்கொண்டாரோ அவருக்கு மரண தண்டனை அளியுங்கள்' என்றே கூறியுள்ளார்கள்", என்றார்கள்.
இச்செய்தி அலீ (رضی الله عنه) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், (இது, முன்பே தமக்குத் தெரியாமல் போய்விட்டதே என வருத்தப்பட்டார்கள்.) "இப்னு அப்பாஸுடைய தாயின் மகனுக்கு (இப்னு அப்பாஸுக்கு) கேடுதான்" என்று (அவர்களைப் புகழ்ந்து) கூறினார்கள்.
ஆதாரம்: முஸ்னது அஹ்மத் - 1775
அலீ (رضی الله عنه) அவர்கள் காலத்தில் சிலர் இஸ்லாத்திலிருந்து வெளியேறி, இஸ்லாத்திற்கும் அரசுக்கும் எதிரான காரியங்களில் ஈடுபட்டுவந்தனர். அதற்காக அந்நிய சக்திகளிடமிருந்து கையூற்று பெற்றுவந்தனர். அவர்களிடம் அலீ (رضی الله عنه) அவர்கள் ஆளனுப்பி அவர்களின் தேவைகளை நிறைவேற்றியபின், இஸ்லாத்திற்கு திரும்புமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்கள்.
ஆனால், அந்த மக்கள் இஸ்லாத்திற்குத் திரும்ப மறுப்புத் தெரிவித்ததுடன் தொடர்ந்து தமது நிலைப்பாட்டிலேயே நீடித்தனர். எனவே, அலீ (رضی الله عنه) அவர்கள் பெரிய பள்ளம் ஒன்றை தோண்டச் செய்தார்கள். பின்னர், அந்த மக்களை அழைத்துவரச் சொல்லி அவர்கள் அனைவரையும் சிரச்சேதம் செய்து அந்ப் பள்ளத்தில் தள்ளினார்கள். பின்னர், அதில் விரகுகளைப் போட்டுக் கொளுத்திவிடச் சொன்னார்கள். (தப்ரானீ)
அலீ (رضی الله عنه) அவர்களால் நெருப்பு வைத்து எரித்துவிடுமாறு உத்தரவிடப்பட்டவர்கள் ராஃபிளாக்களில் ஒரு பிரிவினர் ஆவர் என்றும் கூறப்படுகிறது. அவர்கள் 'சபாயிகள்' எனப்பட்டனர். அலீ (رضی الله عنه) அவர்கள்மீது அளவு கடந்த பக்தி கொண்டிருந்த அவர்கள் அலீ (رضی الله عنه) அவர்களிடம் தெய்வீகம் இருப்பதாக வாதிட்டனர். அவர்களின் முன்னோடி, அப்துல்லா பின் சபா எனப்படும் யூதன் ஆவான். அவன் இஸ்லாத்தை ஏற்றதாக நடித்து இப்படியொரு குழப்பத்தை உருவாக்கினான். (அல்மிலல் வந்நிஹல்)
இந்தக் கோட்பாட்டாளர்களை அலீ (رضی الله عنه) அவர்கள் பலமுறை அழைத்து எச்சரிக்கை செய்தும் தருந்தாததால் அவர்களைத் தீயிட்டுக் கொளுத்துமாறு கட்டளையிட்டார்கள். (துஹ்ஃபத்துல் அஹ்வதீ, ஃபத்ஹுல் பாரீ)