கிறிஸ்தவர்களுக்கு ஓர் அன்பு மடல்

அன்பின் கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளே!

இறைவனின் தீர்க்கதரிசி மோஸஸ் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பரிசுத்த வேதத்தில் இஸ்ரவேலர்கள் தமது மாற்றங்களைச் செய்து தமது சொந்த விருப்பு வெறுப்பை முற்படுத்தி இறைவேதத்தை திரித்துக் கூற முற்பட்டமையே மீண்டும் ஒரு புதிய வேதத்தை ஜீஸஸுக்கு இறைவன் அருளினான் என்பதனை எந்த ஒரு உண்மையான கிறிஸ்தவரும் மறுக்க முடியாது.

எல்லாம் வல்ல இறைவனிடம் இருந்து வேதம் கொடுக்கப்பட்ட சமூகமாகிய கிறிஸ்தவ சமுதாயத்தினர்களில் பலர், தங்களுக்கு அருளப்பட்ட வேதமும் பல மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது என்பதைப் பரவலாக ஏற்றுக் கொள்வதைக் காணமுடிகிறது!

இஸ்ரவேலர்கள் செய்த அதே தவறை, யூதர்களில் ஒருவராக இருந்த செயின்ட் பவுல் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறி ஜீஸஸ் கொண்டு வந்த புனித வேதத்தில் மாற்றங்களை மேற்கொண்டார் என்பது வரலாற்று உண்மையாகும். இப்படி இறைவனால் அருளப்பட்ட இரண்டு வேதங்களிலும் மாற்றங்கள் இடம்பெறவே, இறுதியாக இன்னும் ஒரு தூதரை உலகிற்கு தீர்க்க தரிசியாக அனுப்பி, அவருக்கு இறைவனால் அருளப்பட்ட வேதமே இறுதி வேதம் அல்லது இறுதி ஏற்பாடாகிய அல்-குர்ஆன் ஆகும்.

அல்-குர்ஆன் அருளப்படுவதற்கு முன் அருளப்பட்ட வேதங்களில் மேற்கொள்ளப்பட்ட அதே மாற்றங்களை, அல்-குர்ஆனில் மேற்கொள்ள முடியாது. ‘அல்-குர்ஆனை பாதுகாக்கும் உத்தரவாதம் தனக்கு உரியது’ என்று அதனை இறக்கியருளிய எல்லாம் வல்ல அல்லாஹ் அல்-குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.

‘நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.’ (அல்-குர்ஆன் 15:9)

மனித கையாடல்களுக்கு அப்பால் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்பட்ட பொது மறையாம் அல்-குர்ஆன் கிறிஸ்தவ சகோதரர்களுக்கு விடுக்கும் அழகிய அழைப்பை கிறிஸ்தவ உறவுகள் எப்போதேனும் செவியேற்றதுண்டா? இதோ, இறைவன் உங்களை அழைத்துப் பின்வருமாறு கூறுகின்றான்:

‘(நபியே! அவர்களிடம்), ‘வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்;. அவனுக்கு எவரையும் இணை வைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்’ எனக் கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்; ‘நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!’ என்று நீங்கள் கூறிவிடுங்கள்.’ (அல்-குர்ஆன் 3:64)

மேற்கண்ட வசனத்தின் மூலம்,

1) நம்மைப் படைத்த ஒரே இறைவனை வணங்குவோம்!

2) அவனுக்கு எந்த ஒன்றையும் இணையாக்காது இருப்போம்!

3) நம்மில் சிலர் சிலரை கடவுளாக ஆக்கிக் கொள்ளாமல் இருப்போம்!

என்ற இந்த மூன்று பொது அடிப்படைகளை நோக்கியே அல்-குர்ஆன் உங்களை அழைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த அழைப்பு உங்கள் வேதங்களுக்கோ அல்லது உங்கள் தீர்க்கதரிசிகளின் போதனைகளுக்குக்கோ அப்பாற்பட்டது கிடையாது. நீங்கள் ஆழமாக சிந்திப்பீர்கள் என்றால் இந்த அழைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை இலகுவாகப் புரிந்து கொள்வீர்கள்.

ஜீஸஸ் தேவன் கிடையாது!

ஜீஸஸ் ஒரு தீர்க்கதரிசி! அவர் கர்த்தரோ அல்லது தேவனோ ஆகிவிட முடியாது என்பதற்கு ஏராளமான ஆதாரங்களை உங்கள் வேதங்களிலே கண்டுகொள்வீர்கள். அல்-குர்ஆனும் இதனை தெள்ளத் தெளிவாக எடுத்து வைக்கின்றது.

ஜீஸஸின் அதிசய பிறப்பு மற்றும் அவர் நிகழ்த்திக் காட்டிய அதிசயங்கள், அவரை ஒரு போதும் இறை அந்தஸ்திற்கு உயர்திவிட முடியாது. அவருக்கு முன் வந்த தீர்க்கதரிசிகளும் நிறையவே அதிசயங்களை நிகழ்த்திக் காட்டினர் என்பது உள்ளங்கை நெல்லிக் கனியே! இயேசுவின் அதிசய செயல்களை தனது தேவனின் அனுமதியுடனே செய்தார் என்பதை எல்லாம் வல்ல இறைவன் இறுதி வேதமாகிய அல்-குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.

‘அப்பொழுது அல்லாஹ் கூறுவான்; ‘மர்யமுடைய மகன் ஈஸாவே நான் உம்மீதும், உம் தாயார் மீதும் அருளிய என் நிஃமத்தை (அருள் கொடையை) நினைவு கூறும்.

பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு உமக்கு உதவியளித்து, நீர் தொட்டிலிலும் (குழந்தைப் பருவத்திலும்), வாலிபப் பருவத்திலும் மனிதர்களிடம் பேசச் செய்ததையும்,

இன்னும் நான் உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுத்ததையும் (நினைத்துப் பாரும்).

இன்னும் நீர் களிமண்ணினால் என் உத்தரவைக் கொண்டு பறவை வடிவத்தைப் போலுண்டாக்கி அதில் நீர் ஊதியபோது அது என் உத்தரவைக் கொண்டு பறவையாகியதையும்,

இன்னும் என் உத்தரவைக் கொண்டு பிறவிக் குருடனையும், வெண் குஷ்டக்காரளையும் சுகப்படுத்தியதையும், (நினைத்துப் பாரும்).

இறந்தோரை என் உத்தரவைக் கொண்டு (உயிர்ப்பித்துக் கல்லறைகளிலிருந்து) வெளிப்படுத்தியதையும் (நினைத்துப் பாரும்).

அன்றியும் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்களில் நிராகரித்தவர்கள், ‘இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறு இல்லை’ என்று கூறியவேளை, அவர்கள் (உமக்குத் தீங்கு செய்யாதவாறு) நான் தடுத்து விட்டதையும் நினைத்துப் பாரும்.’

(அல்-குர்ஆன் 5:110)

ஆப்ரஹாம் யூதராகவோ, கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை!!

ஆப்ரஹாமை ஏற்றுக் கொள்ளாத எந்தக் கிறிஸ்தவரும் இருக்க முடியாது. இந்தத் தீர்க்க தரிசியை நாம் இப்ராஹீம் நபி என்று அழைப்போம். இவரின் உண்மை மார்க்கம் என்ன? என்பதைப் பற்றி அல்-குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது!

‘வேதத்தையுடையோரே! இப்ராஹீமைப் பற்றி (அவர் யூதரா, கிறிஸ்தவரா என்று வீணாக) ஏன் தர்க்கித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அவருக்குப் பின்னரேயன்றி தவ்ராத்தும், இன்ஜீலும் இறக்கப்படவில்லையே (இதைக்கூட) நீங்கள் விளங்கிக் கொள்ளவில்லையா?’

‘உங்களுக்குச் சிறிது ஞானம் இருந்த விஷயங்களில் (இதுவரை) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தீர்கள்; (அப்படியிருக்க) உங்களுக்குச் சிறிதுகூட ஞானம் இல்லாத விஷயங்களில் ஏன் விவாதம் செய்ய முற்படுகிறீர்கள்? அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.’

‘இப்ராஹீம் யூதராகவோ, அல்லது கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை. ஆனால் அவர் (அல்லாஹ்விடம்) முற்றிலும் (சரணடைந்த) நேர்மையான முஸ்லிமாக இருந்தார்;. அவர் முஷ்ரிக்குகளில் (இணைவைப்போரில்) ஒருவராக இருக்கவில்லை.’

(அல்-குர்ஆன் 3:65-67)

ஏக இறைவன் ஒருவன் மாத்திரமே வணங்கப்பட வேண்டும் என்பதை மிகத் தெளிவாக பல தியாகங்களுக்கு மத்தியில் பிரச்சாரம் செய்த நபி இப்ராஹீமை உங்களில் ஒருவராக ஆக்கிக் கொள்ள முடியாது! காரணம் அவர் கொண்டு வந்த ஏகத்துவத்திற்கு எதிராக நீங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். நபி இப்ராஹீம், நபி மூஸா, நபி ஈஸா (ஜீஸஸ்) ஆகிய அனைவரின் போதனைகளிலும் உள்ள பொதுத் தன்மை, ‘எல்லாம் வல்ல இறைவன் மாத்திரம் தான் வணங்கப்பட வேண்டும்’ என்ற ஏகத்துவ நாதமாகும்!

அப்படியாயின் எங்குத் தவறு நிகழ்ந்தது?

நீங்கள் உங்கள் மார்க்கத்தில் விட்ட தவறை அல்-குர்ஆனில் சுட்டிக்காட்டி உங்களை நேர்வழிக்கு எல்லாம் வல்ல இறைவன் அழைத்துக் கொண்டிருக்கின்றான். இந்த அழைப்புக்குச் செவிசாய்க்காவிட்டால் உங்களுக்கு அழிவு ஏற்படும் என்பதனையும் எச்சரிக்க இறைவன் மறக்கவில்லை.

‘யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்;

கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்;

இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்?’

‘அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்;

ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள்;

வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை –

அவன் அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன்.’ (அல்-குர்ஆன் 9:30,31)

இதற்கு மேலும் உங்களுக்கு அல்லாஹ்வின் மீது அபாண்டங்களை அள்ளி எறிய முடியது. நீங்கள் வணங்கிக் கொண்டிருக்கும் ஈஸா நபியின் தாய் மர்யம் அமையார் அவர்களின் பெயரிலே அருளப்பட்ட அத்தியாயத்தின் இறுதிப் பகுதியில் 88 முதல் 92 வது வசனம் வரை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.

‘இன்னும், ‘அர்ரஹ்மான் (தனக்கென) ஒரு குமாரனை எடுத்துக் கொண்டுள்ளான்’ என்று அவர்கள் கூறுகிறார்கள்.

‘நிச்சயமாக நீங்கள் அபாண்டமான (ஒரு கூற்றைக்) கொண்டு வந்திருக்கிறீர்கள். இவர்களின் இந்தக் கூற்றினால் (அல்லாஹ்வின் மீது சுமத்தும் வீணான அபாண்டத்தினால்) வானங்கள் வெடித்துஇ பூமி பிளந்துஇ மலைகள் சிதருண்டு விடும் போல் இருக்கின்றன.

அவர்கள் அர்ரஹ்மானுக்கு ஒரு குமாரன் உண்டென்று (வாதிட்டு) அழைக்கின்றனர். அல்லாஹ்வுக்கு ஒரு குமாரனை எடுத்துக் கொள்வதற்கு எந்த தேவையும் கிடையாது.’

அத்தியாயம்: 19 வசனம்: 88-92

அன்பின் கிறிஸ்தவ உறவுகளே! இறுதியாக இந்த உரையாடலை நன்கு அவதானியுங்கள்!

‘இன்னும், ‘மர்யமுடைய மகன் ஈஸாவே, ‘அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்’ என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?’ என்று அல்லாஹ் கேட்கும் போது அவர்,

‘நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை. அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய். என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய், உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன்;. நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்’ என்று அவர் கூறுவார்.’

‘நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி), ‘என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்’ என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை. மேலும், நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்;. அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய்’ (என்றும்)’

‘(இறைவா!) நீ அவர்களை வேதனைச் செய்தால் (தண்டிப்பதற்கு முற்றிலும் உரிமையுள்ள) உன்னுடைய அடியார்களாகவே நிச்சயமாக அவர்கள் இருக்கின்றனர். அன்றி, நீ அவர்களை மன்னித்து விடுவாயானால், நிச்சயமாக நீ தான்(யாவரையும்) மிகைத்தோனாகவும் ஞானமிக்கோனாகவும் இருக்கின்றாய்’ (என்றும் கூறுவார்).’

‘அப்போது அல்லாஹ், ‘இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு. அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள்; அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான். அல்லாஹ்வை அவர்களும் பொருந்திக் கொண்டார்கள் – இது மகத்தான பெரும் வெற்றியாகும்.’

‘வானங்களுடையவும், பூமியினுடையவும், அவற்றில் இருப்பவற்றின் ஆட்சியும் அல்லாஹ்வுக்கே சொந்தம்;. அவனே எல்லாப் பொருட்கள் மீது பேராற்றலுடையோன் ஆவான்.’

(அல்-குர்ஆன் 5:116-120)

ஏக இறைவனாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இருக்க முடியாது!

நோவா, ஆப்ரஹாம், மோஸஸ் ஆகிய இறைவனால் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகளின் வரிசையில் வந்த இன்னுமொரு தீர்க்கதரிசி தான் ஜீஸஸ் என்பவரும் ஆவார்! அந்த தீர்க்க தரிசிகளின் வரிசையில் இறுதியாக அனுப்பப்பட்டவரே முஹம்மது நபியாவார்.

அந்த இறுதித்தூதருக்கு அனுப்பட்டபட்ட வேதத்தில், வானங்கள், பூமி உட்பட அகிலங்கள் அனைத்தையும் படைத்து, அதிலுள்ளவைகள் அனைத்தையும் பரிபாலித்து வருபவன் ஏக இறைவனாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு யார் இருக்க முடியும்? என்று பல கேள்விகளை இறைவன் முன்வைக்கின்றான்!

‘அன்றியும், வானங்களையும் பூமியையும் படைத்து, உங்களுக்கு வானத்திலிருந்து மழையை இறக்கி வைப்பவன் யார்? பின்னர் அதைக் கொண்டு செழிப்பான தோட்டங்களை நாம் முளைக்கச் செய்கிறோம். அதன் மரங்களை முளைக்கச் செய்வது உங்களால் முடியாது. (அவ்வாறிருக்க) அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! ஆயினும் அவர்கள் (தம் கற்பனை தெய்வங்களை அல்லாஹ்வுக்கு) சமமாக்கும் மக்களாகவே இருக்கிறார்கள்.’

‘இந்தப் பூமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும், அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும்; அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும் இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர்.’

‘கஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்குப் பதில் கொடுத்து, அவன் துன்பத்தை நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (இல்லை) எனினும் (இவையெல்லாம் பற்றி) நீங்கள் சிந்தித்துப் பார்ப்பது மிகக் குறைவே யாகும்.’

‘கரையிலும் கடலிலுமுள்ள இருள்களில் உங்களை நேரான வழியில் செலுத்துபவன் யார்? மேலும், தன்னுடைய ‘ரஹ்மத்’ என்னும் அருள் மாரிக்கு முன்னே நன்மாராயம் (கூறுவன) ஆக காற்றுகளை அனுப்பி வைப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? – அவர்கள் இணை வைப்பவற்றைவிட அல்லாஹ் மிகவும் உயர்வானவன்.’

‘முதன் முதலில் படைப்பைத் துவங்குபவனும், பின்னர் அதனை மீண்டும் உண்டாக்கி வைப்பவனும் யார்? வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு ஆகாரம் அளிப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (நபியே!) நீர் கூறுவீராக: ‘நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், உங்களுடைய ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள்.’

(அல்-குர்ஆன் 27:60-64)

நாங்கள் உண்மையை மறைத்துக் கொண்டிருக்காமல் நமது சக்திக்கு உற்பட்ட வகையில் உங்களுக்கு எத்தி வைத்து விட்டோம். இதற்கு அல்லாஹ் சாட்சியாக இருக்கின்றான்!

நீங்கள் உண்மையாளர்களாக நடந்து கொண்டால் உங்களுக்கு நாளை மறுமை வாழ்வில் கிடைக்க இருக்கும் அருட்பாக்கியங்களையும் மேலே உள்ள வசனங்களில் எல்லாம் வல்ல அல்லாஹ் வாக்களிக்கின்றான். எனவே உண்மையாக நடந்து கொண்டு சத்தியத்தைப் பின்பற்றுவதா? அல்லது அசத்தியத்தைப் பின்பற்றி இறை சாபத்தை பெற்றுக் கொள்வதா? என்பதை தீர்மானிக்க வேண்டியவர்கள் நீங்களே!

எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக! ஆமீன்.

எம் றிஸ்கான் முஸ்தீன் மதனி.
அல்-கப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம்,
சவூதி அரேபியா.
Previous Post Next Post