அன்னை ஆயிஷாவுடன் நபியவர்களின் திருமணம் ஓர் ஆய்வு

மக்களில் பலர் நபியவர்களின் மதிப்பைச் சீர்குலைப்பதற்காக அவர்களின் திருமணத்தை விமர்சிக்கிறார்கள். அன்னைஆயிஷா(ரலி) அவர்கள் ஆறு வயது சிறுமியாக இருக்கும்போதே நபியவர்கள் அவர்களை மணமுடித்துக் கொண்டதைச் சுட்டிக்காட்டி அவர்களை ஒரு காமுகராக சித்தரிக்கிறார்கள்.
 
 
திருமண வயது குறித்து இஸ்லாமியச் சட்டம்:

இஸ்லாமிய மார்க்கத்தில் திருமண வயது என்று எதுவும் வரையறுக்கப்படவில்லை. ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் அவர் பருவமடைந்தவுடனே திருமணத்திற்குத் தகுதியானவராக ஆகிவிடுகிறார். திருமண உடன்படிக்கை (நிக்காஹ்) எந்த வயதிலும் செய்யப்படலாம். ஆனால் இல்லற உறவைத் தொடங்குவது என்பது பருவம் அடைந்த பிறகுதான்.
 
எப்போது ஒருவர் பருவமடைகிறார்?

பொதுவாக 8 முதல்13 வயதுக்குள் பெண்கள் பருவமடைகிறார்கள் என்றாலும், சிலருக்கு இதில் விரைவோ தாமதமோ ஏற்படுவதும் உண்டு. அது ஒவ்வொருவரின் உடல்வாகைப் பொறுத்தது. சிலருக்கு மார்பகம் வளர்ச்சி பத்து வயதில் இருந்தாலும், பதினான்கு வயதில்தான் பருவமடைவார்கள். அதைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. ஒவ்வொருவரும் படிப்படியாக பருவத்தை எட்டிவிடுவார்கள்.
 
பருவம் அடைகிற வயதில் வேறுபாடு இருந்தாலும், பொதுவாக பெண்கள் விரைவாகவே பருவத்தை எய்துகிறார்கள். 

பெண்கள் குறித்த பிரபல நூல்களை எழுதியவர்கள், “இதற்கு நாட்டின் அல்லது வாழ்விடத்தின் தட்பவெப்பநிலை பிரதான காரணமாக இருக்கிறது. மாதவிடாய் சுழற்சிக்காக மட்டுமின்றி, பருவமடைதலுக்கான பால் உறுப்புகள் வளர்ச்சி அடையவும்தட்பவெப்பத்திற்குப்பங்குள்ளது” என்கிறார்கள்.(Herman H. Ploss, Max Bartels and Paul Bartels, Woman, Volume I, Lord & Bransby, 1988, page 563.)
 
பெண்கள் பருவமடைதல்:

ஆஸ்திரேலிய அரசின் பொதுமக்கள் நலவாழ்வு அமைப்பு கூறுகிறது: பருவமடையப் போவதைக் காட்டும் முதல் அடையாளம் எழுச்சிமிக்க வளர்ச்சிதான். நீங்கள் உயரமாக வளர்வீர்கள். உங்கள் மார்பகம் வளர்ச்சி பெறும். மறைவிடத்திலும் அக்குளிலும் முடிகள் வளரத் தொடங்கும். இது பத்து முதல்  பதினான்கு வயதுக்குள் இருக்கலாம். சிலருக்கு இதைவிட முன்போ பின்போ இருக்கவும் வாய்ப்புண்டு. (http://www.population.health.wa.gov.au/Communicable/Resources/2107%20PubertyinGirls.pdf)
 
மெட்லைன்ப்ளஸ் எனும் மருத்துவக் களஞ்சியம் கூறுவதாவது: பருவவயதை எட்டுவதற்கு முன்பே பருவமடைவதற்குக் காரணம் உடம்பின் வளர்ச்சிதான். (பருவமடைதல் என்பது உடம்பின் இனப்பெருக்க உறுப்புகள் இயக்கம் பெறுவதே. இது வாழ்வின் ஒரு கட்டம்.) வழக்கமாக பையன்கள் சுமார்13 முதல்15 வயதுக்குள்ளும், சிறுமிகள்9 முதல்16 வயதுக்குள்ளும் பருவத்தை எட்டுகிறார்கள். (http://www.nlm.nih.gov/medlineplus/ency/article/001168.htm)
 
சிறுமிகள் எட்டு வயதுக்கு முன்பே பருவமடைகிறார்கள் எனில் அதற்குப் பின்வரும் காரணங்கள் இருக்கலாம்: மார்பக வளர்ச்சி, மறைவிடத்திலும் அக்குளிலும் முடிவளர்தல், பிறப்புறுப்பின் மேற்புறப் பகுதி வளர்ச்சி, முதல் மாதவிடாய்.
 
ஆயிஷா(ரலி) அவர்கள் பருவமடைந்த பின்பே இல்லற வாழ்வைத் தொடங்கினார்கள். காரன் ஆர்ம்ஸ்ட்ரான்ங் தாம் எழுதிய முஹம்மதின் வரலாறு எனும் நூலில் குறிப்பிடுகிறார்: ஆயிஷா தமது மிகச்சிறிய வயதில் தம் பெற்றோர் வீட்டிலேயே தங்கினார். அவரது இல்லற வாழ்க்கை தொடங்கியது அவர்பருவமடைந்த பின்புதான் என்று தபரீ கூறுகிறார். (பக்கம்157)
 
ஆக, ஒரு சிறுமி 8 முதல் 14 வயதுக்குள் முதல் மாதவிடாயை அடைவார். இதிலிருந்து எல்லாச் சிறுமிகளும் 14 அல்லது 15 வயதில்தான் பருவமடைவார்கள் என்றில்லை என ஆகிறது. ஆயிஷாவின் விஷயத்தில் அவரது பருவமடைதல் எட்டு வயதில் ஆரம்பித்துள்ளது. ஒன்பது வயதை அடைந்தபோது அவருக்கு மாதவிடாய் ஏற்படத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் அவர் ஓர் இளம் பெண்ணாக மாறிவிடுகிறார். அவரால் குழந்தை பெற்றெடுக்கவும் முடியும். அவர் சிறுமி அல்ல என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.
 
ஆதாரம்: நமக்குக் கிடைத்துள்ள தகவல்களைக் கவனிக்கும்போது அவர் பருவமடைகிற நிலைகளை அடைந்துகொண்டிருக்கிறார் என்பது உறுதியாகிறது. நவீன அறிவியல் பருவமடைகிறவருக்கு முடி உதிரும் என்கிறது. இதை அப்படியே நாம் பின்வரும் ஹதீஸில் காண்கிறோம்: ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஆறு வயதுடையவளாக இருந்த போது நபி (ஸல்) அவர்கள் என்னை மணந்து கொண்டார்கள். பிறகு நாங்கள் மதீனா வந்து ஹாரிஸ் பின் கஸ்ரஜ் குலத்தாரிடம் தங்கினோம். எனக்குக் காய்ச்சல் கண்டு விடவே என் முடிகள் உதிர்ந்து விழுந்தன. பிறகு என் முடி வளர்ந்து அதிகமாகிவிட்டது. (ஸஹீஹுல் புகாரீ 3894)
 
சிறுமிகளில் 5 முதல் 9 வயதுக்குள் குழந்தை பெற்றெடுத்தோர்

மிகச் சிறிய வயதில் பருவமடைந்த பெண்களை இங்கு உதாரணங்களாகப் பார்ப்போம். லினாமெடினா எனும் சிறுமி குழந்தை பெற்றெடுத்துள்ளார். அப்போது அவருக்கு5 வயதும்7 மாதங்கள், 21 நாள்கள். விக்கிபீடியா களஞ்சியம் கூறுகிறது: லினாமெடினாவுக்கு ஐந்து வயதும்7 மாதங்களும்21 நாள்களும் ஆகின்றன. (அவர்பெருவில்1933 செப்டம்பர் 27 இல்பிறந்தவர்.) மருத்துவ வரலாற்றில் இவர்தாம் மிகச் சிறிய வயதில் தாயானவர். இந்த உலக சாதனையை இவருக்கு அடுத்து இன்னொருவரும் ரஷ்யாவில் செய்திருக்கிறார்.(http://en.wikipedia.org/wiki/Lina_Medina)
 
தாய் நாட்டைச் சேர்ந்த ஒன்பது வயதுப் பெண்ணும் குழந்தை பெற்றெடுத்த செய்தி நியூ ஸ்ட்ரைட்ஸ் டைம்ஸ் நாளிதழில்10/3/2001 அன்று வெளியாகியுள்ளது.
 
இன்றைய உலகில் இப்போதும் எத்தனையோ நாடுகளில் மிகச் சிறிய வயதில் பெண்கள் திருமணம் செய்துகொள்கின்றனர். இவ்வாறிருக்க 1400 வருடங்களுக்கு முன்பு ஒருவர் ஒன்பது வயதுப் பெண்ணுடன் வாழ்க்கை நடத்தியதைக் காட்டி அவர் குழந்தை சித்திரவதை செய்தவர் என்று குற்றம்சாட்டுவது எப்படி சரியாகும்? மேற்கண்ட செய்தியில் ஒன்பது வயதுச் சிறுமி குழந்தையும் பெற்றெடுத்துள்ளாள். (அவளின் கணவரைக் கொடூரமானவராக சித்தரிப்பது சரியா?)
 
ஆயிஷா (ரலி) அவர்களின் பெற்றோர் தங்கள் சுயவிருப்பப்படி தம் மகளை நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு மணமுடித்துள்ளார்கள். இப்புவியிலேயே மிகச் சிறந்த ஒருவருக்கு மனைவியாக தங்கள் மகள் இருப்பதைப் பற்றி அவர்களுக்குப் பெருமிதமும் இருந்திருக்கிறது.
 
இளம் தாய்மார்களின் பட்டியல்

http://en.wikipedia.org/wiki/List_of_youngest_birth_mothers
 
நபியவர்களின் திருமணங்கள் ஒரு பார்வை:

நபியவர்களின் வாழ்க்கையையும் அவர்களுடைய திருமணங்களையும் குறித்து சற்று ஆராய்வோம்.
 
மனைவியரின் பெயர்கள்.
திருமணத்தின்போது அவர்களது வயது.
குறிப்புகள்.

கதீஜா பின்த் குவைலித்
40
இரு முறை விதவையானவர்

சவ்தா பின்த் ஜம்ஆ
50
விதவை

ஆயிஷா பின்த் அபூபக்ர்
9
9 வயதில் நபியுடன் இல்லறத்தைத் தொடங்கியவர்

ஹஃப்ஸா பின்த் உமர்
22
விதவை

ஸைனப் பின்த் குஸைமா
30
விவாகரத்தானவர்

உம்மு சலமா பின்த் அபூஉமையா
26
விதவை

ஸைனப் பின்த் ஜஹ்ஷ்
38
விதவை

ஜுவைரிய்யா பின்த் ஹாரிஸ்
20
விதவை

உம்மு ஹபீபா பின்த் அபூசுஃப்யான்
36
விதவை

மாரியா கிஃப்திய்யா பின்த் ஷமூன்
17
-
ஸஃபிய்யா பின்த் ஹுயை
17
விதவை

ருஹைனா பின்த் உம்ரூ
-
-

மைமூனா பின்த் ஹாரிஸ்
36
விதவை
 
நபியவர்கள் கதீஜாவைத் திருமணம் செய்யும்போது கதீஜாவுக்கு 40 வயதும், நபியவர்களுக்கு 25 வயதுமாக இருந்தது. ஆண்களுக்கு இவ்வயதில் பாலுணர்ச்சி மிகுதியாக இருக்கும் என்றபோதும் கதீஜா மரணிக்கும் வரை நபியவர்கள் யாரையும் திருமணம் செய்யவில்லை. அடுத்து, ஆயிஷாவைத் தவிர எந்தக் கன்னிப்பெண்ணையும் அவர்கள் மணக்கவில்லை. மற்றவர்கள் அனைவரும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர்களாகவோ, விதவைகளாகவோ இருந்தார்கள்.இதிலிருந்து எதிரிகளின் ஒரு குற்றச்சாட்டு தகர்ந்துவிடுகிறது. நபியவர்கள் தமது உடல் இச்சைக்காகவே அத்தகைய திருமணங்களைச் செய்தார்கள் என்பது அடிப்படையற்ற விமர்சனம் என்றாகிறது. அவர்கள் உண்மையில் அந்த நோக்கத்துடன் செய்திருந்தால் அனைத்து மனைவியரையுமே கன்னிப்பெண்களாகவும் அழகானவர்களாகவும் தேர்வு செய்திருப்பார்கள்.
 
அவர்களின் மனைவியர் அனைவரும் முதிர் விதவைகள் (ஆயிஷா தவிர)

மேற்கண்ட அட்டவணை நபியவர்கள் ஒரு குழந்தை காமுகர் அல்ல என்பதையும் உறுதிசெய்கிறது. அது உண்மையாக இருந்திருந்தால், ஆயிஷாவை அவர்கள் ஆறு வயதில் மணமுடித்தவுடனே தாம்பத்ய உறவைத் தொடங்கியிருப்பார்கள். மேலும், 4 முதல் 7 வரையுள்ள சிறுமிகளையே மணந்திருப்பார்கள். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவே இல்லை.
 
நபியவர்கள் ஆயிஷாவை ஆறு வயதில் மணந்தார்களா?

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலிருந்து தெரிய வருவது என்னவெனில், நபியவர்கள் ஆயிஷாவை ஆறு வயதில் திருமணம் செய்துவிட்டு, ஒன்பது வயதில்தான் தாம்பத்ய உறவைத் தொடங்கினார்கள் என்பதே.
 
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:நான் ஆறு வயதுடையவளாக இருந்த போது நபி (ஸல்) அவர்கள் என்னை மணந்து கொண்டார்கள். பிறகு நாங்கள் மதீனா வந்து ஹாரிஸ் பின் கஸ்ரஜ் குலத்தாரிடம் தங்கினோம். எனக்குக் காய்ச்சல் கண்டு விடவே என் முடிகள் உதிர்ந்து விழுந்தன. பிறகு என் முடி வளர்ந்து அதிகமாகி விட்டது. நான் என் தோழிகள் சிலருடன் ஊஞ்சலாடிக் கொண்டிருந்த போது என் தாயார் உம்மு ரூமான் (ரலி) அவர்கள் என்னிடம் வந்து என்னைச் சத்தம் போட்டு அழைத்தார்கள். நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் என்னிடம் எதை நாடி வந்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. அவர்கள் என் கையைப் பிடித்து (அழைத்துச் சென்று) வீட்டின் கதவருகே என்னை நிறுத்திவிட்டார்கள். நான் (வேகமாக வந்ததால்) எனக்கு மூச்சிறைக்கத் தொடங்கிடவே, அவர்கள் சிறிது தண்ணீரை எடுத்து என் முகத்தையும் தலையையும் துடைத்துப் பிறகு என்னை வீட்டினுள் கொண்டு சென்றார்கள். அங்கு வீட்டில் சில அன்சாரிப் பெண்கள் இருந்தார்கள். அவர்கள், "நன்மையுடனும் அருள்வளத்துடனும் வருக! (அல்லாஹ்வின்) நற்பேறு உண்டாகட்டும்'' என்று (வாழ்த்துக்) கூறினர். உடனே என் தாய் என்னை அப்பெண்களிடம் ஒப்படைக்க, அவர்கள் என்னை அலங்கரித்து (வீடுகூடுவதற்காகத் தயார்படுத்தி) விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முற்பகல் வேளையில் திடீரென வந்தார்கள். அவர்களிடம் அப்பெண்கள் என்னை ஒப்படைத்தனர். நான் அன்று ஒன்பது வயதுடையவளாக இருந்தேன். (ஸஹீஹுல் புகாரீ 3894)
 
உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு (ஹிஜ்ரத் செய்து) வெளியேறுவதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்பு கதீஜா (ரலி) அவர்கள் இறப்பெய்திவிட்டார்கள். அதன் பின் நபி (ஸல்) அவர்கள் இரண்டு ஆண்டுகள் அல்லது கிட்டத்தட்ட இரண்டாண்டுகள் (மக்காவில்) தங்கியிருந்தார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் ஆறுவயதுடையவர்களாயிருக்கும் போது அவர்களை மணந்து கொண்டார்கள். பிறகு ஆயிஷா (ரலி) அவர்கள் ஒன்பது வயதுடையவர்களாக இருக்கும்போது அவர்களுடன் நபி (ஸல்) அவர்கள் வீடு கூடினார்கள். (ஸஹீஹுல் புகாரீ 3896)
 
மற்றோர் அறிவிப்பு: நான் ஆறு வயதுடையவளாய் இருந்த போது என்னை நபி (ஸல்) அவர்கள் மணந்து கொண்டார்கள். எனக்கு ஒன்பது வயதான போது என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். நான் அவர்களுடன் ஒன்பது வருடங்கள் (மனைவியாக) வாழ்ந்தேன். (ஸஹீஹுல் புகாரீ 5133)
 
மற்றோர் அறிவிப்பு: நான் ஏழு வயதுடையவளாக இருந்தபோது, நபி (ஸல்) அவர்கள் என்னை மணந்து கொண்டார்கள். நான் (பருவமடைந்து) ஒன்பது வயதுடையவளாக இருந்தபோது, அவர்களிடம் அனுப்பிவைக்கப்பட்டேன். அப்போது விளையாட்டுப் பொம்மைகள் என்னுடன் இருந்தன. நான் பதினெட்டு வயதுடையவளாக இருந்தபோது, நபி (ஸல்) அவர்கள் என்னை விட்டு இறந்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 2780)
 
இல்லறம் தொடங்கிய போது ஆயிஷாவின் வயது:

ஒருவர் முதலில் இங்கு புரிந்து கொள்ளவேண்டியது, 1400 வருடங்களுக்கு முன்பு சிறுவயது திருமணங்கள் வழக்கமானவை. இக்காலத்தில் போல் அல்ல. அரபுகள் சிறுமிகளைத் திருமணம் செய்து கொள்வதை அக்காலத்தில் சிறு வயதுப் பெண்களைத் திருமணம் செய்வதாகவே பார்த்தார்கள். காலங்கள் மாறியதால் பார்வைகள் மாறியுள்ளன.
 
வரலாற்று உண்மை என்னவெனில், 9 முதல் 14 வயது வரையான சிறுமிகளை ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்ரிக்காவிலும் மணமுடிப்பது வழக்கில் உள்ளது. இன்னும் சொல்லப்போனால் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை அமெரிக்காவிலும் இத்தகைய திருமணங்கள் இருந்துள்ளன.எனினும், எந்த வரலாற்று ஆய்வாளரும் இப்படித் திருமணம் செய்த மக்களை தகாத காரியங்கள் செய்தவர்களாக வாதிக்கவில்லை. உண்மையில் யாராவது அப்படிச் சொன்னால் அவர்களைத்தாம் ஆணவக்காரர்களாக, புத்தியற்றவர்களாக, கெட்டவர்களாக வரலாற்றாளர்கள் கூறுவார்கள்.
 
ஆயிஷா (ரலி) அவர்களைச் சிறு வயதில் மணந்ததைப் பற்றி அக்காலத்தில் வாழ்ந்த எவருமே குறை கூறியதில்லை. அப்படி எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் ஆயிஷாவை மணமுடித்துத் தர அவர்களது தந்தை அபூபக்ர் விரும்பியதும், அன்றைய சமுதாய மக்களும் அதை வரவேற்று மகிழ்ந்ததுமாகத்தான் ஆதாரங்கள் உள்ளன.
 
நபியவர்கள் ஆயிஷாவை மணந்தது குறித்து மக்கள் அறிந்தே இருந்தார்கள். ஆறு வயதில் திருமணம் நடந்துவிட்டாலும் ஒன்பதில்தான் அவர்கள் இல்லற வாழ்வைத் தொடங்கினார்கள் என்பதையும் அறிந்திருந்தார்கள். அதற்குக் காரணம் ஆயிஷா பருவமடைகிற வயதை ஒன்பதில்தான் அடைந்தார்கள் என்பதாகும். இஸ்லாமியச் சட்டப்படி அச்சமயம் ஆயிஷா ஓர் இளம்பெண்ணாகத் திருமண வாழ்வுக்குத் தயாரானவர்களாக இருந்தார்கள்.
 
நபியவர்கள் உடல் இச்சைக்காக திருமணம் செய்யவில்லை:

நபியவர்கள் ஆயிஷாவை மணமுடிப்பது குறித்து ஒரு கனவு கண்டார்கள். ஸஹீஹுல் புகாரீ ஹதீஸ் தொகுப்பில் அச்செய்தி பதிவாகியுள்ளது.
 
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:"நான் உன்னைக் கனவில் இரு முறை கண்டேன். உன்னைப் பட்டுத்துணியின் துண்டு ஒன்றில் (முக்காடிட்டபடி) கண்டேன். எவரோ, "இது உங்கள் மனைவிதான்; (முக்காட்டை) நீக்கிப்பாருங்கள்' என்று கூற, (நானும் அவ்வாறே பார்த்தேன்.) அது நீயாகவே இருக்கக் கண்டேன். அப்போது நான், "இது (நீ எனக்கு மனைவியாவது) அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (விதிக்கப்பட்டு) உள்ளதெனில் அதை அவன் நடத்தி வைப்பான்' என்று சொல்லிக் கொண்டேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். (புகாரீ 3895)
 
இத்திருமணம் நபியவர்களின் சுயமுடிவு அல்ல. கவ்லா பின்த் ஹகீம்(ரலி) எனும் பெண்மணி நபியவர்கள் தமது நெருங்கிய தோழரின் உறவைப் பலப்படுத்திக்கொள்ள இவ்வாறு திருமணம் செய்துகொள்ளும்படி ஆலோசனை கூறினார்கள். அபூபக்ர் அஸ்ஸித்க் அவர்களை விட நபியவர்களின் நெருங்கிய தோழர் இல்லை. இஸ்லாமிய வரலாற்றில் அவர் மிக மிக முக்கியமானவர். நபியவர்களின் இறப்புக்குப் பின் அவரே முதல் கலீஃபாவாக இருந்தார். ஆயிஷா(ரலி) அவர்கள் அபூபக்ரின் மகளாவார்.
 
தமது தோழர் தம்மிடம் பெண் கேட்டது அபூபக்ருக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியையே தந்தது. அதன் மூலம் தம் நட்பை மேலும் பலப்படுத்திக்கொண்டார்.
 
இங்கு இன்னொரு விஷயத்தைச் சொல்லியாக வேண்டும். நபியவர்கள் பெண் கேட்பதற்கு முன், ஆயிஷாவை ஜுபைர் இப்னு முத்இம் அவர்களுக்குப் பேசி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அபூபக்ர் இஸ்லாமைத் தழுவியிருந்ததின் காரணமாக ஜுபைரின் பெற்றோர்கள் அந்தத் திருமணப் பேச்சை முறித்துக்கொண்டார்கள். இதிலிருந்து அக்காலத்தில் இப்படி சிறு வயதுத் திருமணங்கள் நடப்பது சாதாரணம் என்றும், எவருமே இதை ஒரு தவறாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் தெரிய வருகிறது. இத்திருமணத்தின் மூலம் ஆயிஷா அவர்கள் நபியவர்களின் வாழ்வில் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்தார்கள்.
 
அரபுகளின் பொதுவான வழக்கம்:

இத்திருமண முறைகள் அரபுகளின் பொதுவான வழக்கத்தில் இருந்தன.
இமாம் ஷாஃபிஈ கூறினார்கள்: நான் யமன் தேசத்தில் தங்கியிருந்தபோது அங்குள்ள சிறுமிகள் அதிகமானோர் ஒன்பது வயதிலேயே முதல் மாதவிடாயை அடைவதுண்டு. (சியர் அஃலாமுல் நுபலா பாகம் 10, பக்கம் 91)
இமாம் பைஹகீ அவர்களும் இமாம் ஷாஃபிஈ அவர்களின் வார்த்தைகளை அறிவித்துள்ளார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: நான் (யமனில் உள்ள) சன்ஆ நகரில் ஒரு பாட்டியைக் கண்டேன். அவருடைய வயது 21 ஆகும். அவர் ஒன்பது வயதில் பருவமடைந்து பத்து வயதில் குழந்தையும் பெற்றுவிட்டார். (சுனன் அல்பைஹகீ அல்குப்றா 1/319)
 
இப்னு உகைல் மற்றும் உஃபத் அல்மஹ்ல்பை ஆகியோரிடமிருந்து இப்னுல் ஜவ்ஸி அறிவிக்கிறார்கள். அப்பாத் இப்னு அப்பாத் அல்முஹ்லபி கூறுகிறார்கள்: முஹ்லபா கூட்டத்துப் பெண் ஒருவர் பதினெட்டு வயதிலேயே பாட்டியானதை நான் கண்டிருக்கிறேன். அவர் ஒன்பது வயதில் தமக்கு மகளைப் பெற்றார். அவருடைய மகளும் ஒன்பது வயதில் ஒரு மகளைப் பெற்றெடுத்தார். ஆக, பதினெட்டு வயதில் இவர் பாட்டியாகிவிட்டார். (தஹ்கீக் ஃபீ அஹாதீஸ் அல்கிலாஃப், பாகம் 2, பக்கம் 267)
 
கிறித்துவப்புனிதர்கள், அரசர்கள், கனவான்கள் ஆகியோரின் திருமணங்கள்:

ஆண்கள் திருமணம் செய்ய 14 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். பெண்களுக்கு12 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். இல்லையெனில் அவர்களின் திருமணம் செல்லாது. (விதிவிலக்காக இதற்கும் கீழான வயதில் அவர்கள் பருவமடைந்திருந்தால் தவிர).. திருச்சபை மரபுப்படி இந்தச்சட்டம் இங்கிலாந்து, ஸ்பெய்ன், போர்த்துகீஸ், கிரீஸ் மற்றும் ஆஸ்ட்ரியா ஆகிய இடங்களில் நடைமுறையில் இருக்கும். அமெரிக்காவின் சிலபகுதிகளிலும் திருச்சபை மரபுப்படி14 மற்றும்12 வயது சட்டம் நடைமுறையில் உண்டு. மற்றவர்கள் இந்த வயதை அதிகப்படுத்திவிட்டார்கள். (Catholic Encyclopedia, http://www.newadvent.org/cathen/01206c.htm)
 
கத்தோலிக்க களஞ்சியம் இன்னும் கூறுகிறது:
பொதுவான சட்டப்படி ஒருவர் திருமணத்திற்குத் தகுதியான வயதை அடைவது14 வயதிலாகும். இது ஆண்களுக்கு. பெண்கள் எனில் பன்னிரண்டு வயதாகும். 12 மற்றும்14 வயதுகள் ஒப்புக்கொள்ளப்பட்டவை ஆகும். ஏழுவயதிற்கும் கீழே திருமணங்கள் நடந்தால் அவை ஆண், பெண் இருசாராருக்குமே செல்லாததாகும். ஆனால் ஏழு முதல் பன்னிரண்டு (பெண்ணுக்கும்), ஏழு முதல் பதினான்கு (ஆணுக்கும்) என அங்கீகரிக்கப்பட்ட வயதை அடையும் முன்பு திருமணம் செய்தால் அது சரியான முறையல்ல. எனினும் அத்திருமணங்கள் செல்லாததாகிவிடாது. (Catholic Encyclopedia, http://www.newadvent.org/cathen/09691b.htm)
 
பன்னிரண்டு வயதுதான் பெண்ணுக்குரிய வரம்பு என்றாலும் கிறித்துவ தந்தைகள் தங்கள் மகள்களுக்கு அதற்கும் முன்பாகவும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
 
மத்திய காலகிறித்துவர்கள் தங்கள் பெண்கள் திருமணம் செய்வதற்குக் குறைந்தபட்ச வயது வரம்பாக பன்னிரண்டையே பின்பற்றினார்கள். ஆனாலும் இதுமுடிவான வயது வரம்பாக இருக்கவில்லை. கத்தோலிக்க சபை அதிகாரிகள் தர்க்க ரீதியாகவும் இந்த வயது வரம்பைத் தளர்த்தியிருக்கிறார்கள். அதாவது, இயற்கையில் ஒரு குழந்தையின் உடல்வாகு விரைவில் பருவமடைந்து தாம்பத்யத்திற்குத் தகுதியானதாக ஆகியிருந்தால், அப்போது வயதைப் பொருட்படுத்தத் தேவையில்லை என்றனர். கத்தோலிக்க அறிஞர் ஒருவர், “ஒரு சிறுவன் பதினான்கு வயதை அடையும் முன்பே அவன் பருவமடைந்திருப்பது உறுதியானால், அல்லது ஒரு சிறுமி பன்னிரண்டு வயதை அடையும்முன்பே பருவமடைந்திருந்தால், அவர்கள் திருமணம் செய்வது திருப்தியளிக்குமானால், அப்போது இருசாராரும் செய்கின்ற திருமணம் செல்லத்தக்கதே” என்கிறார்.(Mark E. Pietrzyk, http://www.internationalorder.org/scandal_response.html)
 
யூதச்சட்டம் போலவே கிறித்துவச் சட்டமும் திருமணம் செய்வதற்கான குறைந்தபட்ச வயதையும், திருமணம் செல்லுபடியாவதற்கான குறைந்தபட்ச வயதையும் வேறுபடுத்தியுள்ளது. பன்னிரண்டு வயதில் ஒரு பெண் சுயமாகத் தன் திருமணத்தைக் குறித்து முடிவு செய்யலாம். ஆனால் அதற்கு முந்தி ஏழுவயதிலிருந்து என்றால், அப்போது அவளுடைய தந்தை அத்திருமணத்தை முடிவு செய்யலாம். அவளின் அனுமதியைக் கேட்கத் தேவையில்லை. திருமணம் செல்லுபடியாவதற்கான குறைந்தபட்ச வயது ஏழில் இருந்து தொடங்குகிறது. 
 
புனிதர் அகஸ்டின்(கி.பி.354-439): 

கிறித்துவ இறையியல் கோட்பாட்டை உருவாக்கியதில் பெரும்பங்கு புனிதர் அகஸ்டினுக்கு உண்டு. அவர் ஒரு பத்து வயது பெண்ணுடன் திருமண ஒப்பந்தம் செய்து கொண்டார். அப்போது அவருக்கு 31 வயதாகியிருந்தது. அப்பெண்ணின் உடல் முதிர்ச்சி அடைவதற்காக இரண்டு வருடங்கள் அவர் காத்திருந்தார். பிறகு அவள் புனிதர் அகஸ்டினிடம் பன்னிரண்டு வயதில் குடும்ப வாழ்வைத் தொடங்கினாள். கிறித்துவர்களால் மிகவும் புனிதப்படுத்தப்படும் அகஸ்டினே ஒரு பத்து வயது சிறுமியை மணந்திருக்கும்போது, எப்படி கிறித்துவர்கள் நபி முஹம்மது ஆயிஷாவைத் திருமணம் செய்ததைத் தாக்கிப் பேசுகிறார்கள்? http://www.internationalorder.org/scandal_response.html

புனிதர் அக்னஸ்: 

இப்பெண்மணி கிறித்துவ உலகில் மிகப்பிரபலம். கற்புக்கரசி என்று இவரைப் போற்றுவர். இவருக்குத் திருமணம் நடந்தபோது பன்னிரண்டு வயதுக்கும் கீழ் இருந்தார். ஒரு விதத்தில் ஆயிஷாவின் வயதுக்குச் சமமான வயதில் இவரின் திருமணம் நடந்தது. உண்மை இவ்வாறிருக்க முஸ்லிம்களின் விவகாரத்தில் எப்படித்தான் கிறித்துவர்களால் மூக்கு நுழைக்க முடிகிறது?

டொமஸ்டிக் சர்ச் டாட்காம் (Domestic-Church.com) கூறுகிறது: அக்னஸ் எனும் பெயருக்கு கிரேக்க மொழியில் கற்பு அல்லது தூய்மை என்றும், இலத்தீன் மொழியில் ஆட்டுக்குட்டி அல்லது பாதிக்கப்பட்டவர் என்றும் பொருள். அக்னஸை தூய்மைக்குக் காவல் பெண்ணாக திருச்சபை கருதுகிறது. ஆரம்பக்காலத்தில், அதாவதுகி.பி. 303 மார்ச் கால கட்டத்தில், தியோகிளிடேன் என்கிற மன்னன் கிறித்துவர்களை நசுக்கி அடக்குமுறை செய்தான். அவனால் கொல்லப்பட்டார் அக்னஸ். அவர் இறக்கும்போது பன்னிரண்டு அல்லது பதிமூன்று வயதுதான். (வயதில் கருத்து வேறுபாடும் உண்டு.) அவ்வளவு சிறிய வயதிலும் அக்னஸின் அழகும் செல்வமும் ரோம் நகர சீமான்களை மிகவும் கவர்ந்து ஈர்த்தது. அவர்கள் அவரைத் திருமணம் செய்துகொள்ள போட்டியிட்டார்கள்.(http://www.domestic-church.com/CONTENT.DCC/19980101/SAINTS/STAGNES.HTM)

ஆன்டெக்ஸை சேர்ந்த புனிதர் எட்விங்: 

அநாதைகளின் காப்பாளராக கிறித்துவர்கள் மிகவும் போற்றுவது புனிதர் எட்விஙை. இப்பெண்மணி சிலேசியாவை ஆண்ட முதலாம் ஹென்ரிக்குப் பன்னிரண்டு வயதில் திருமணம் செய்விக்கப்பட்டார்.
காஸ்கியாவைச் சேர்ந்த புனிதர் ரிட்டா: ஆதரவற்றவர்களின் காப்பாளராகக் கிறித்துவர்கள் போற்றும் இப்பெண்ணுக்குப் பன்னிரண்டு வயதில் பவ்லாமன்சினி என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.
இயேசுவின் சிலுவை மரணத்தின்போது இருந்தவராகச் சொல்லப்படும் புனிதர்மேரிக்குப் பதிமூன்று வயதில் திருமணம் நடந்துள்ளது.
போர்த்துகீஸைச் சேர்ந்த புனிதர் எலிசபெத். இப்பெண்மணியைப் புனிதர் பிரான்சிஸ் உடைய மூன்றாம் கட்டளையின் காப்பாளர் என்பர். இவருக்குப் பன்னிரண்டு வயதில் திருமணம் நடந்துள்ளது.
 
இன்னும் பல உதாரணங்களும் இவ்வாறே அமைந்துள்ளன.

இரண்டாம் ரிச்சர்ட், இவர் தமது முப்பது வயதில் ஃபிரென்சு இளவரசி இசபெல்லாவை மணந்தார். அப்போது இசபெல்லாவுக்கு வயது ஏழுதான். http://en.wikipedia.org/wiki/Isabella_of_Valois

மிலனின் டச்சசும், சாவாயின் பையின்காவும் பதிமூன்று வயதில் திருமணம் செய்துகொண்டார்கள்.http://www.academia.edu/990174/Medieval_Marriage

தியோடோரா காம்னினா தமது பதிமூன்று வயதில் தம்மை விட இரண்டு மடங்கு வயதான மன்னர் மூன்றாம் பால்ட்வின்னை மணந்துகொண்டார். http://www.academia.edu/990174/Medieval_Marriage
மன்னர் முதலாம் அட்ரோனிகஸ்பைசாந்திய பேரரசின் மாமன்னர். அவர் தமது அறுபத்து நான்காம் வயதில் ஃபிரான்சைச் சேர்ந்த பன்னிரண்டு வயது அக்னஸைத் திருமணம் செய்தார். http://www.academia.edu/990174/Medieval_Marriage

போர்த்துகீஸைச் சேர்ந்த மன்னர் டெனிஸ் பன்னிரண்டு வயதான புனிதர் எலிசபேத்தை மணந்தார்.

இமோலா மற்றும் மோர்லியின் அரசர் கிரோலாமோ ரியாரியோ ஒன்பது வயதான கேட்டரின் ஸ்போர்சாவை மணந்தார்.

நவர்ரியின் மூன்றாம் ஜென்னி பதிமூன்றாம் வயதில் திருமணம் செய்துகொண்டவர். http://en.wikipedia.org/wiki/Jeanne_d'Albret

கியோவன்னி ஸ்போர்சா பதிமூன்று வயதான லுக்ரேசியா போர்கியாவை மணந்துகொண்டார். http://en.wikipedia.org/wiki/Giovanni_Sforza

நார்வேயைச் சேர்ந்த மன்னர் ஆறாம் ஹாகன் பத்து வயதான ராணி மார்கரேட்டை மணந்தார். http://en.wikipedia.org/wiki/Margaret_I_of_Denmark

எஸ்ஸெக்ஸைச் சேர்ந்த கவுன்ட் அக்னிசுக்கு மூன்று வயதிலேயே நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது. பன்னிரண்டு வயதில் திருமணம் நடந்தது. அப்போது மணமகனின் வயது சுமார் ஐம்பதாகும். http://en.wikipedia.org/wiki/Isabella_of_Angoul%C3%AAme

வேல்ஸ் நகரைச் சேர்ந்த இளவரசர் எட்வர்ட், ஃபிரென்ச் மன்னரின் மகள் இசபெல்லாவை மணந்தார். இசபெல்லாவுக்கு அப்போது வயது ஏழு.

இரண்டாம் ரோமனஸ் நான்கு வயதே ஆன பெர்த்தாவை மணந்துகொண்டார். பெர்த்தா இத்தாலியின் இளவரசியாவாள்.

செர்பியாவின் ஆட்சியாளர் ஸ்டீஃபன் மிலுட்டின் ஐந்தே வயதான சைமோனிஸ் என்ற சிறுமியை மணந்துகொண்டார். இச்சிறுமி பேரரசர் இரண்டாம் அன்ட்ரோனிக்ஸ் உடைய மகள். இவரை மணக்கும்போது ஸ்டீஃபனின் வயது ஐம்பதாகும்.

முதலாம் எட்வர்ட் ஒன்பது வயதான எலினாரை மணந்துகொண்டார்.

ஸ்ரெவ்ஸ்பரி சேர்ந்த ரிச்சர்ட், இவர் மன்னர் நான்காம் எட்வர்டின் மகன், நார்ஃபோல்க்கைச் சேர்ந்த ஐந்து வயதான அன்னி மவ்பிரேயை மணந்துகொண்டார். http://en.wikipedia.org/wiki/Richard_of_Shrewsbury,_1st_Duke_of_York

மேரி ஸ்டீவார்ட் தமது ஆறு வயதில் எட்டாம் ஹென்ரியைத் திருமணம் செய்துகொண்டார். http://en.wikipedia.org/wiki/Mary,_Queen_of_Scots
 
இன்னும் பல உதாரணங்களும் உண்டு.
 
நபியவர்களின் திருமணம் குறித்து அக்காலத்து எதிரிகளின் மனநிலை

குறைஷிகள் நபியவர்களைத் தாக்குவதற்கான எந்தச் சந்தர்ப்பத்தையும் வீணடிக்காதவர்களாக இருந்தவர்கள். இத்திருமணத்தை அவர்கள் தங்களுக்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பாகப் பயன்படுத்தி பலவழிகளில் அவர்களை நோகடித்திருக்கலாம். விமர்சனங்களால் கொட்டித் தீர்த்திருக்கலாம். ஆனால் அவர்களோ இத்திருமணத்தை எவ்விதத்திலும் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை. சொல்லப்போனால் ஆயிஷாவை நபியவர்கள் பெண்கேட்டுள்ளார்கள் என்று அறியவந்தபோது அதனை எதிர்பார்த்தவர்களாகவே எடுத்துக்கொண்டார்கள். 
 
நபியவர்களை மணமுடித்துக்கொண்டது குறித்து ஆயிஷா ஒருக்காலும் அதிருப்தி அடையவில்லை

ஆயிஷா(ரலி) அவர்களால் ஆயிரக்கணக்கான அறிவிப்புகள் வரலாற்றில் பதிவாகியுள்ளன. அவற்றில் ஓர் ஆச்சரியமான விஷயம் என்னவெனில், ஒரேஓர் அறிவிப்பில்கூட நபியவர்களைத் திருமணம்செய்துகொண்டது குறித்து அவர்கள் அதிருப்தியாக எதையும் சொல்லவில்லை. இதிலிருந்து அவர்களுக்கு இத்திருமணம் குறித்து எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை என்று தெரிகிறது. உண்மை என்னவெனில், ஆயிஷாவின் பல அறிவிப்புகள் வாயிலாக அவர்கள் நபியவர்களை மிகவும் நேசித்து வாழ்ந்ததை அறிய முடிகிறது. எந்தளவு என்றால், மற்ற மனைவியர்கள் நபியவர்களுக்கு அருகில் இருந்த நேரங்களில் ஆயிஷா ரோஷம்கொண்டார் எனும் அளவுக்கு அவர்களின் நேசம் இருந்திருக்கிறது. இத்திருமணத்தால் அவர்கள் எல்லையில்லா மகிழ்ச்சியில் இருந்தார்கள் என்பதற்கு இந்த ஆதாரம் போதாதா? அவர்களுக்கே இது பிரச்சினை அல்ல எனும்போது மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை?
 
ஆயிஷாவுக்கு இத்திருமணத்தில் மிகப்பெரிய திருப்தி இருந்தது. நபியவர்களிடமிருந்து இஸ்லாமை அதிகம் கற்றுக்கொண்டு அதற்கு மிகச்சிறந்த பக்கபலமாக இருந்தார். அவரது காலத்தில் ஏராளமான பெண்களுக்கும் ஆண்களுக்கும் அவரொருமகத்தான ஆசிரியையாக விளங்கினார். அவரது பெற்றோர்கள் இத்திருமணத்தில் பூரணதிருப்தி அடைந்தார்கள். நபியவர்களின் காலத்தில் அவருடைய தோழர்களோ, எதிரிகளோ, யாராக இருந்தாலும் ஒருவர்கூட இத்திருமணத்தைக் கண்டு ஆச்சரியமோ, ஆட்சேபனையோ வெளிப்படுத்தவில்லை. 
 
திருமணத்திற்குப் பின்னே உள்ள மகத்தான
ஞானம்:

நபிமுஹம்மது(ஸல்) அவர்களைத் தமது சிறுவயதில் திருமணம் செய்து கொண்டதின் மூலம் நபியின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு நேரடிசாட்சியாக ஆயிஷா அமைந்தார்கள். தாம் கண்ட விஷயங்களைத் தமது அடுத்த தலைமுறைக்கு அறிவித்தார்கள். சிறுவயதில் தான்மக்களுக்கு அதிக நினைவாற்றல் இருக்கும். கிரகிக்கும் ஆற்றலும் மகத்தான அளவில் இருக்கும். ஆயிஷா(ரலி) அவர்கள் நபியவர்களின் இறப்புக்குப் பின் சுமார் 46 வருடங்கள் உயிருடன் இருந்தார்கள். இக்காலம் முழுதும் மக்களுக்கு இஸ்லாமிய மார்க்க விஷயங்களைக் கற்றுக்கொடுத்தார்கள். குறிப்பாக, குடும்ப மற்றும் திருமண வாழ்க்கை தொடர்பான விஷயங்களைக் கற்பித்தார்கள்.
 
ஆன்மிக முறையிலும் நிஜவாழ்வில் நெருக்கமாக மனைவியாக வாழ்ந்த முறையிலும் நபியவர்களிடமிருந்து பலவிஷயங்களை ஆயிஷா அறிவித்துச்சென்றுள்ளார்கள். அவை எல்லா முஸ்லிம்களுக்கும், குறிப்பாக பெண்களுக்கும் எல்லாக்காலங்களிலும் சிறந்த முன்மாதிரியாக அமைந்திருக்கின்றன. அவர் மிகச்சிறந்த அறிவுஜீவியாக இருந்ததால், ஆன்மிகப்போதனை செய்யும் பெண்ணாகவும் அறிஞராகவும் ஆனார். அவருடைய திறமைகள் நபியவர்களின் மார்க்கப்பணிக்கு உதவியாக அமைந்து, இஸ்லாமை மேலோங்கச் செய்தது. ஆயிஷா(ரலி) அவர்கள் இறைநம்பிக்கையாளர்களின் அன்னை எனும் உயர்தகுதியைப் பெற்று, மனைவியருக்கும் தாய்மாருக்கும் சிறந்த முன்மாதிரியாக அமைந்தார்கள். அதுமட்டுமின்றி, குர்ஆனுக்கு விரிவுரையாளராகவும், நபிமொழிகளையும் இஸ்லாமியச் சட்டங்களையும் விளக்குபவராகவும் வாழ்ந்தார்கள்.
 
குறைந்தது 2210 நபிவழிச் செய்திகளையாவது அவர்கள் அறிவித்துள்ளார்கள். அவை முஸ்லிம்களுக்கு நபியவர்களின் தினசரி வாழ்வையும் பழக்கவழக்கங்களையும் தெளிவுபடுத்துகின்றன. இதன் மூலம் நபியவர்களது வழிமுறை (சுன்னா) பாதுகாக்கப்பட்டுள்ளது. அவர் வழியாக உள்ள ஹதீஸ்கள் கிடைக்காமல் போயிருந்தால், இஸ்லாமைப் புரிந்துகொள்வதற்கான ஹதீஸ் கல்வியில் பாதி அழிந்திருக்கும் என்கின்றனர் இஸ்லாமிய அறிஞர்கள்.
 
ஆயிஷா எப்போதுமே சத்தியத்திற்கு ஆதரவாய் நின்றார்கள். இஸ்லாமைப் பலருக்கும் கற்றுக் கொடுத்தார்கள். இஸ்லாமியச் சட்டங்கள் பலவற்றுக்கு, குறிப்பாக பெண்களுக்கான சட்டங்கள் பலவற்றுக்கு அவர்களின் அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமானதாய் அமைந்துள்ளன.
 
ஓர் ஆசிரியை எனும் நிலையில் அவர்களின் பேச்சு மிகத் தெளிவானதாகவும் தாக்கமுள்ளதாகவும் இருந்தன. அஹ்னஃப் எனும் தபிஈ கூறுகிறார்: “நான் அபூபக்ர், உமர், உஸ்மான், அலீ மற்றும் இன்றைய நாள் வரையான கலீஃபாக்கள் வரை அனைவரது பேச்சையும் கேட்டிருக்கிறேன். ஆனால் ஆயிஷா(ரலி) அவர்களின் வாயிலிருந்து வெளியான பேச்சைவிட மிகஆழமான, தெளிவான, அழகான பேச்சை யாரிடமிருந்தும் கேட்டதில்லை.”
 
அபூமூசா அல்அஷ்அரீ(ரலி) அவர்கள் நபியவர்கள் கூறியதாக கூறுகிறார்கள்: மற்ற பெண்களைக் காட்டிலும் ஆயிஷாவுக்குள்ள சிறப்பு என்பது மற்ற உணவுகளைக் காட்டிலும் (இறைச்சியும் ரொட்டியும் கலந்தமைந்த) ஸரீதுக்குரிய சிறப்பைப் போன்றதாகும். ஆண்களில் பலர் முழுமை அடைந்துள்ளார்கள். ஆனால் பெண்களில் இம்றானின் மகள் மர்யம், ஃபிர்அவ்னுடைய மனைவி ஆசியா ஆகியோரே முழுமை அடைந்தவர்கள். (மற்றோர் அறிவிப்பில் கதீஜா(ரலி) அவர்களையும் குறிப்பிட்டு வந்துள்ளது.) ஸஹீஹுல் புகாரீயின் அறிவிப்பு இது.
 
மூசா இப்னு தல்ஹா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நான் ஆயிஷாவை விட மிகவும் நேர்த்தியாகப் பேசுகிற ஒருவரைக் கண்டதில்லை. (முஸ்தத்ரகுல்ஹாகிம்)
 
இந்த ஆதாரங்கள் நபியவர்களும் ஆயிஷாவும் திருமணம் செய்து கொண்டது இறைநாட்டம் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. நபியின் தனிப்பட்ட நாட்டம் இல்லை. அல்லாஹ்வின் நாட்டம் அது. அதை ஆயிஷாவும் கூறுகிறார்கள்: நபியவர்கள் என்னிடம், "நான் உன்னைக் கனவில் இரு முறை கண்டேன். உன்னைப் பட்டுத்துணியின் துண்டு ஒன்றில் (முக்காடிட்டபடி) கண்டேன். எவரோ, "இது உங்கள் மனைவிதான்; (முக்காட்டை) நீக்கிப்பாருங்கள்' என்று கூற, (நானும் அவ்வாறே பார்த்தேன்.) அது நீயாகவே இருக்கக் கண்டேன். அப்போது நான், "இது (நீ எனக்கு மனைவியாவது) அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (விதிக்கப்பட்டு) உள்ளதெனில் அதை அவன் நடத்தி வைப்பான்' என்று சொல்லிக் கொண்டேன்'' என்று கூறினார்கள். (புகாரீ 3895)
 
இன்று ஒருவரிடம், “எதில் ஆயிஷா பிரபலம்? ஆயிஷாவின் சிறப்பம்சம் என்ன? அழகா? செல்வமா?” என்று கேட்டால், உடனே “அல்ல, அவரது மார்க்க அறிவுதான்” என்பார். இதிலிருந்தே தெரியவில்லையா, இத்திருமணம் இறைநாட்டத்தின் அடிப்படையில் நடந்துள்ளது என்பது?
 
யூத, கிறித்துவ மதங்களில் திருமணவயது:

மக்கள் யூதமதத்தைக் கவனித்தால், அங்கு மூன்று வயது சிறுமியைத் திருமணம் செய்வதும் அனுமதிக்கப்பட்டதை அறிந்துகொள்வார்கள்.
 
யூத இணையதளம் Jewfaq.org கூறுகிறது: யூதச்சட்டப்படி குறைந்தபட்ச திருமண வயது என்பது பையன்களுக்கு13 வயதாகவும், சிறுமிகளுக்கு12 வயதாகவும் உள்ளது. எனினும், நிச்சயதார்த்தம் இவ்வயதுக்கு முன்பே கூட செய்யப்பட்டதை மத்திய காலகட்டத்தில் காண்கிறோம்.(http://www.jewfaq.org/marriage.htm)
 
பன்னிரண்டு வயது ஏறத்தாழ பருவமடைகிற வயதாகும். யூதச்சட்டப்படி இந்த வயதில் திருமணம் செய்வது அனுமதிக்கப்பட்டது மட்டுமல்ல, ஆர்வமூட்டப்பட்டதும்கூட. தங்கள் மகள்கள் பருவமடைந்தவுடனே விரைவில் திருமணம் செய்து வைக்குமாறு தந்தைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. யூத அறிஞர்கள் பலர் ஒரு பெண் பருவமடைந்தவுடனே தாமதமின்றி திருமணம் செய்து வைக்குமாறு கூறுகிறார்கள்.
 
யூத என்சைக்ளோபீடியா கூறுகிறது: நேர்மறையாகப் பார்க்கும் போது ரப்பீகளின் விளக்கப்படி பைபிளில் வரும் முதல் கட்டளை மனிதகுல விருத்தியைப் பற்றியதாகும். (ஆதியாகமம்1.28) இதன் மூலம் இஸ்ரவேலர் ஒவ்வொருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்வது கடமையாகும்... சிலர் குழந்தைகள் பருவமடைந்தவுடனே விரைவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்கிறார்கள். (http://www.jewishencyclopedia.com/view.jsp?letter=M&artid=216)
 
மிகச் சிறிய குழந்தையாக இருக்கும்போது கூட திருமணம் செய்துகொள்கிற முறையை தல்மூதும் அனுமதித்துள்ளது. பின்வரும் வரிகளை வாசியுங்கள்: சன்ஹென்ரின் உடைய 55வது கட்டளையில், “மூன்று வருடங்களும் ஒரு நாளும் அடைந்த சிறுமியை அவளுடன் உடல்சேர்க்கை செய்வதின் மூலம் திருமணம் செய்யலாம்” என்று கூறப்படுகிறது. சன்ஹென்ரின் 54வது கட்டளையில், “ஒன்பது வயதுக்கும் குறைவான ஒரு குழந்தையுடன் உடல்சேர்க்கை செய்வது அதற்கும் அதிகமான வயதுடைய பெண்ணுடன் செய்வது போன்றாகாது” என்று கூறப்படுகிறது.
 
தம்மூதில் கதொபோத்தின் 11வது கட்டளையில், “ஒரு பருவமடைந்த ஆணுக்கும் ஒரு சிறுமிக்கும் இடையே நடக்கும் உடல்சேர்க்கை என்பது சாதாரணமானதுதான்” எனப்படுகிறது. இன்னும் சயீது ரபி ஜோசஃப் எழுதுகிறார்: மூன்று வருடங்களும் ஒரு நாளும் ஆகிவிட்ட சிறுமி உடலுறவுக்குத் தகுதியானவளே.
 
நாம் இத்துடன் மார்க் இ. பிட்ரிஸ்க் உடைய வார்த்தைகளால் இதை முடிக்கிறோம்: தல்மூது சட்டப்படி திருமணத்திற்கான பரிந்துரைக்கப்பட்ட வயது என்பது பெண்களுக்குப் பன்னிரண்டாகவும், ஆண்களுக்குப் பதிமூன்றாகவும் உள்ளது. இதற்கும் குறைந்த வயதுகளில் திருமணம் செய்வது பொதுவாக விரும்பத்தகாததாக இருக்கிறது. எனினும், ஒரு தந்தை தமது மகளின் மிகச் சிறிய வயதிலேயே நிச்சயதார்த்தம் செய்துவைப்பதும், அதை முடிவுக்குக் கொண்டு வந்து இல்லற வாழ்வைத் தொடங்குவதற்கு உடலுறவு அனுமதிக்கப்பட்ட விஷயமாகவும் அமைந்துள்ளது. நிச்சயதார்த்தத்தை முடித்து வைக்கின்ற உடலுறவுக்கான வயதின் வரம்பு அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் மிகவும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தல்மூதுப்படி, “மூன்று வருடங்களும் ஒரு நாளும் ஆகிவிட்ட சிறுமியை உடலுறவின் மூலம் திருமண ஒப்பந்தம் செய்துகொள்ளலாம்.” (Mark E. Pietrzyk, http://www.internationalorder.org/scandal_response.html)
 
ஆக, யூத மதத்தில் மூன்று வயது நிரம்பிய பெண் குழந்தையிடம் உடலுறவு வைத்துக்கொள்வது விநோதமான விஷயமல்ல. இந்நிலையில் அவர்கள் எப்படி ஒன்பது வயதான பெண்ணை நபி முஹம்மது (ஸல்) திருமணம் செய்துகொண்டதை விமர்சிக்கிறார்கள்?
 
இந்து மதத்தில் திருமண வயது
இந்து மதத்தில் மனுஸ்மிருதி எனும் மதச்சட்ட சாசனம் இருக்கிறது. அதில் நாம் வாசிக்கிறோம்: ஒரு பெண்ணை அவள் பருவமடைவதற்கு முன்பே திருமணம் செய்துகொடுத்துவிட வேண்டும். (கவுதமா 18-21)
 
தமது மகள் ஓடிப்போய்விடுவாள் என்று பயப்படுகிற தந்தை, அவள் பருவமடையும் முன்பே திருமணம் செய்துவைக்கட்டும். பருவமடைந்த பின்பும் தமது மகளை அவர் வீட்டில் வைத்திருந்தால், அவர் பாவத்தில்தான் இருக்கிறார். (வசிஷ்டா 17.70)
 
மகள் ஓடிவிடுவாள் என்றால் தந்தை அவளைத் திருமணம் செய்துவைக்கட்டும். நல்ல பண்புகள் கொண்டவனும் கற்பின் சத்தியத்தை முறிக்காதவனுமான அல்லது நல்ல பண்புகளில் குறையுள்ளவனுக்கும் கூட அவர் திருமணம் செய்துவைக்கட்டும். அவள் பருவமடைந்த பின்பும் தமது வீட்டில் அவர் வைத்திருக்க வேண்டாம். (போதயனா 4.1.11) (Manu IX, 88;      http://www.payer.de/dharmashastra/dharmash083.htm)
 
மதம் மற்றும் ஒழுக்கங்கள் பற்றிய களஞ்சியம்(Encyclopedia of Religion and Ethics) கூறுகிறது: தமது மகள் பருவமடைந்த பின்பும் அவளை வீட்டில் வைத்துக்கொண்டு திருமணம் செய்துவைக்காமல் இருப்பது ஓர் இந்து தந்தைக்குப் பாவமாகும். இதனால் அப்பெண் ஒரு சூத்திரனை (தாழ்ந்த சாதிக்காரனை) கைப்பிடித்துச் சென்றுவிடுவாள் என்ற நிலை உணரப்படுகிறது. அத்தகைய திருமணம் செய்து கணவரைப் பெறுவது இழிவானதாகக் கருதப்படும். மனுவின் ஸ்மிருதியில் கணவரின் வயது முப்பது அல்லது இருபத்து நான்காகவும், மனைவியின் வயது பன்னிரண்டு அல்லது எட்டாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிற்காலத்தில் எழுதப்பட்ட பிரகஸ்பதியிலும் மகாபாரதத்தின் ஒரு போதனைப் பகுதியிலும் மனைவியின் வயது பத்து மற்றும் ஏழாக எழுதப்பட்டுள்ளது. பின்னர் அதையே இன்னும் குறைத்து நான்கு முதல் ஆறு என்றும் எட்டு என்றும் உச்சபட்ச வரம்பு நிர்ணயமானது. இவற்றுக்கு அபரிமிதமான ஆதாரங்கள் உண்டு.. (Encyclopedia of Religion and Ethics, p.450,
 
இஸ்லாம் கூறும் திருமண வயது
இஸ்லாம் திருமண வயதைப் பருவமடைவதில் முடிவுசெய்கிறது. காரணம், இதுவே குழந்தைத்தனத்திற்கும் வயதுவந்த நிலைக்கும் இடையில் இயற்கையான வித்தியாசத்தைக் காட்டுகிறது. மாதவிடாய் ஒரு பெண்ணை அவள் குழந்தை பெற்றெடுக்கும் தகுதியுடையவளாகக் காட்டுகிறது. இதற்குரிய வயது நாட்டுக்கு நாடு மாறுபாடும். இதை வெளிப்படையாக உணர முடிகிறது. யாரும் தீர்ப்பளிக்கிற விஷயம் அல்ல.
 
இஸ்லாமியச் சட்டம் முன்கூட்டிய ஒப்பந்தத்தின் மூலம் சில வருடங்கள் முன்பே திருமணம் செய்துகொள்வதை அனுமதிக்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், திருமணப் பேச்சுவார்த்தை நடந்து ஒப்பந்தம் செய்யப்படும். ஆனால் அதைச் செயல்படுத்துவது பிற்காலத்தில்தான் என்று முடிவாகியிருக்கும். ஆக, திருமண ஒப்பந்தம் எழுதப்பட்ட பிறகும் பெண்ணை அவளது கணவரிடம் ஒப்படைக்கமாட்டார்கள். அதற்குப் பல வருடங்களும் ஆகலாம். அதாவது, ஒரு தந்தை தனது முதிர்ச்சியற்ற மகளை ஒரு மனிதருக்கு மணமுடித்துக் கொடுப்பார். ஆனால் அப்பெண் பருவமடைந்த பின்பே கணவரிடம் இல்லறத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்.
 
இஸ்லாமியச் சட்டப்படி ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்குச் சில நிபந்தனைகள் (ஷரூத் அந்நிஃபாள்) உண்டு. திருமணத்திற்குப் பிந்திய இல்லற வாழ்க்கையைத் தொடங்குவதற்கு இரண்டு சாராருக்கும் போதுமான முதிர்ச்சி இருப்பது அவசியம். இந்நிபந்தனை நிறைவேறவில்லை எனில் திருமணம் தொடர்ந்து பேச்சுரீதியான ஒப்பந்தத்தில் மட்டும் இருக்கும். நடைமுறையில் இருக்காது. அதாவது, பெண் முதிர்ச்சி அடையும் வரை இல்லற வாழ்க்கை தாமதப்படுத்தப்படும்.
 
நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மற்றும் ஆயிஷா (ரலி) அவர்களின் திருமண ஒப்பந்தம் நடந்தபோது ஆயிஷா பக்குவப்படாத, முதிர்ச்சியற்றவராக இருந்தார். எனவே அவர் பருவமடைந்த பின்பே திருமண வாழ்க்கை தொடங்கியது. அதனால்தான் அவர் அதுவரை தம் தந்தை வீட்டிலே மூன்று வருடங்கள் தங்கியிருந்தார்.    
 
யூத, கிறித்துவச் சட்டங்கள் போல இஸ்லாமியச் சட்டத்திலும் தம்பதியர் தாம்பத்ய வாழ்க்கையைத் தொடங்கியவுடனே திருமணம் இறுதிநிலைக்கு வந்துவிடுகிறது. (அதற்கு முன்பு வரை அது ஒப்பந்தமாக மட்டுமே இருக்கும்.) சில முஸ்லிம்கள் திருமணத்திற்கான வயது ஒன்பது அல்லது முதல் மாதவிடாய் வந்த பிறகு என்று நினைக்கிறார்கள். இஸ்லாமியச் சட்டப்படி இது தவறான அபிப்ராயமாகும். உண்மையில் இஸ்லாம் திருமணத்திற்கு என்று குறைந்தபட்ச வயது எதையும் நிர்ணயிக்கவில்லை.
 
இதில் மிக எளிய விதி ஒன்றைத்தான் இஸ்லாமியச் சட்டம் கடைப்பிடிக்கிறது. அது:
ஒரு மனிதர் தமது மனைவி உடலுறவுக்குத் தகுதியானவளாக ஆகியிருக்கும் நிலையில், அது அவளுக்கு எந்தத் தீங்கையும் கொண்டு வராது என்றால், அவர் அவளிடம் எப்போது வேண்டுமானாலும் எந்த முறையிலும் சேரலாம்.
 
இது மிகவும் அழகான, எல்லாச் சட்டங்களையும் உள்ளடக்கிய விதியாகும். இதனை இஸ்லாமிய அறிஞர்கள் ஏகோபித்து ஏற்றுள்ளார்கள்.
 
யூத வேதத்தில்:

தம்மூது (யூத வேதம்) கூறுகிறது: ஒருவர் தம் மகள் பருவமடைந்தவுடன் விரைவில் மணமுடித்துத் தந்துவிடட்டும். அது ஒருவரின் அடிமைக்குத் திருமணம் செய்துகொடுப்பதாகவும் அமையலாம். (தல்மூது, பெசகிம் 113)
 
 
சிந்திக்க வேண்டியவை:

இந்த எல்லாக் குறிப்புகளும் குற்றச்சாட்டுக்குத் தக்க பதில்களாக உள்ளன.
 
 நபியவர்களின் திருமணம் குறித்து எந்த எதிரியும் அவர்களது காலத்தில் விமர்சிக்காதது ஏன்? அத்திருமணம் தவறு என்றிருந்தால் நிச்சயம் அவர்கள் இதைக் குறித்து பேசாமல் விட்டிருப்பார்களா? ஆனால் ஒரு முறை கூட அவர்கள் இதைக் குறித்து எதிர்மறையாகப் பேசியதில்லை.
 
ஆயிஷா (ரலி) அவர்களின் காலத்துப் பெண்கள் ஆயிஷாவுக்கு அமைந்ததைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தது ஏன்? அத்திருமணம் சரியல்ல என்றிருந்தால் அக்காலத்துப் பெண்கள் ஆயிஷாவின் நிலை எண்ணி வருத்தப்பட்டிருப்பார்கள். மகிழ்ந்திருக்கமாட்டார்கள். இதிலிருந்தே அத்திருமணத்தில் ஒரு பிரச்சினையும் இல்லை என்பது உறுதியாகிறது.
 
ஆயிஷாவுக்கு அத்திருமணத்தில் அதிருப்தி இருந்ததாக ஒரே ஒரு செய்தி கூட அவர் மூலமாக இல்லையே ஏன்? அவர் பாதிக்கப்பட்டவராக இருந்திருந்தால் ஒரு தகவலாவது அவரின் வழியாகப் பதிவாகியிருக்குமே? அவரிடமாவது அப்படிப்பட்ட எந்த அடையாளமேனும் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லையே? அவரோ இஸ்லாமிய மார்க்கத்தின் மகத்தான அறிஞராக, தலைவியாக ஆகியுள்ளார். ஆண்களுக்குக் கூட இஸ்லாமைப் போதித்திருக்கிறார். திருமணத்தால் பாதிக்கப்பட்டவரின் நிலை இப்படித்தான் இருக்குமா?
 
ஆயிஷா ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணாக இருந்திருந்தால், ஏன் நபி முஹம்மதை அவ்வளவு நேசித்திருக்கிறார்? அவரின் நேசத்தில் ரோஷம் கொள்கிற அளவு நேசித்திருக்கிறார் என்றால் அது ஏன்? இதுதான் ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணின் நிலையா?
 
முடிவுரை

குழந்தை மணத்தைச் சில நாடுகள் 16 வயதில் சட்டப்படி செல்லுபடியாக்கியுள்ளது. இன்னும் சில நாடுகளில் அதற்கு முன்பேயும் செல்லுபடியாக உள்ளது. ஆக, ஒரு நாட்டில் நீங்கள் குழந்தை மணம் செய்து சித்திரவதை செய்பவராகவும், மற்றொரு நாட்டில் அப்படிப்பட்டவர் அல்ல என்றும் முடிவு செய்யப்படும். இது சரியா? எதைக்கொண்டு எது சரி என்று முடிவு செய்வது? முஹம்மது நபியவர்கள் 1400 வருடங்களுக்கு முந்திய சமுதாயம் ஒன்றில் வாழ்ந்தார்கள். நமது இன்றைய காலத்தையும் அளவுகோல்களையும் கொண்டு அவர்களின் செயல்பாடு குறித்து தீர்ப்பளிக்க கூடாது. அந்தத் தீர்ப்பு தவறாகவும் அறிவற்றதாகவும் ஆகிவிடும்.
ஓர் ஒழுக்கவிதியை கவனத்தில்கொள்ள வேண்டும். ஒரு திருமணத்திலும் உடற்சேர்க்கையிலும் தீங்கு இருக்குமெனில், அச்சமயம் ஒருவர் அக்காரியத்தில் இறங்கக் கூடாது. ஆனால் எந்தத் தீங்கும் இல்லையெனில் ஒருவர் தமது விருப்பப்படியும் தேர்வுப்படியும் ஒருவரைத் திருமணம் செய்துகொள்வது தவறல்ல.
நீங்கள், “எப்படி அத்திருமணத்தைச் சரியென்று தெரிந்துகொள்வது?” என்று கேட்கலாம். அதைப் பொறுத்தவரை வெளிப்படையான அடையாளங்களைக் கண்டுவிடுவோம். உடலும் மனமும் முதிர்ச்சி அடைந்த நிலையைப் பார்ப்போம். அவர்களுக்குள் அதில் பொருத்தம் இருக்கும் எனில், அவர்கள் அந்த உறவைத் தொடர்வதில் அவர்களுக்கு உரிமை உண்டு.
நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மனிதகுலம் அனைத்துக்கும், எல்லாவிதக் கலாசார மக்களுக்கும் மிக மகத்தான உதாரணமாவார்கள். அவர்கள் ஓர் இறைத்தூதர். மகத்தான இறைத்தூதராக இருந்தது மட்டுமின்றி, ஓர் ஆட்சித்தலைவராக, ஆசிரியராக, இராணுவத் தளபதியாக, அண்டை வீட்டாராக, தோழராக வாழ்ந்து சென்றார்கள். குடும்ப வாழ்க்கை என்பது இவற்றில் மிகவும் முக்கியமான அம்சமாகும். நபியவர்கள் இதிலும் மகத்தான முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினார்கள். ஒரு கணவராகவும், தந்தையாகவும் வாழ்ந்து காட்டினார்கள். மேற்கத்திய உலகில் எத்தனையோ குடும்பங்கள் சிதைந்துகொண்டிருக்கின்றன. அவற்றுக்குரிய தீர்வுகளை நபியவர்களின் வாழ்க்கையிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
அல்லாஹ் கூறுகிறான்:‘சத்தியம் வந்தது; அசத்தியம் மறைந்தது. நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்” என்று நபியே கூறுவீராக. (அல்குர்ஆன் 17.81)
 
ஆதாரக்குறிப்புகள்

1. http://www.answering-christianity.com/aisha.htm
2. http://www.answering-christianity.com/sami_zaatri/aisha_and_prophet_Muhammad ﷺ.htm
3. http://www.answering-christianity.com/childbrides_rebuttal.htm
4. http://muslim-responses.com/Marriage_with_Aisha/Marriage_with_Aisha_
5. http://www.islamic-awareness.org/Polemics/aishah.html
6. http://www.iol.ie/~afifi/BICNews/Sabeel/sabeel6.htm
7. http://www.call-to-monotheism.com/why_did_prophet_muhammed_marry_aisha_at_a_young_age__is_that_morally_right__what_about_paedophilia___by_dan_1988
8. http://forums.almaghrib.org/showthread.php?t=64727
9. http://www.letmeturnthetables.com/2008/07/why-prophet-muhammad-married-aisha-when.html
10. http://www.ummaland.com/blog/927/defending-the-marriage-of-our-beloved-prophet-muhammad-s-a-w-s-with-our-bel/
11. http://www.ebnmaryam.com/vb/t196253-3.html
أحدث أقدم