பிறையை வைத்து மக்களை பாடாய்படுத்தும் தவ்ஹீத்வாதிகள்

1 - தமிழகத்திலும், இலங்கையிலும் வாழும் தவ்ஹீத்வாதிகள்,  ஒவ்வொரு வருடமும் ரமளான் பிறை & துல்ஹஜ் பிறையை வைத்து மக்களுக்கு மத்தியில்  பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். 

2 - மத்ஹபை பின்பற்றுபவர்கள் கூட எவ்வித குழப்பமும் இல்லாமல் நிம்மதியாக நோன்பையும், பெருநாளையும் கொண்டாடி வருகின்றனர். 
கன்னியாகுமரியில் பார்த்த பிறையை வைத்து பெருநாளை ஆரம்பிக்கும் மத்ஹப்களை ஆதரிக்கும் ஆலிம்களோ, பாமர மக்களோ கன்னியாக்குமரி, தமிழ்நாட்டில் தானே இருக்கிறது. தமிழகத்திலுள்ள பிற மாவட்டத்தினர் ஏன் நாம் பார்த்த பிறை ஏற்கவில்லை என்று பிரச்சனை பண்ணுவதில்லை.

 பிற மாவட்டத்தினரும்,  கன்னியாக்குமரியில் பார்த்த பிறையை எப்படி நாம் ஏற்காமல் போகலாம் என்று சண்டைக்கு வருவதில்லை. 

காரணம் பிறையை பற்றிய ஃபிக்ஹ் சட்டங்களை, அவர்கள் முறையாக அறிந்து வைத்துள்ளார்கள். اختلاف المطالع 
பற்றிய விபரங்களை அறிந்து உள்ளார்கள்.

ஆகவேதான் ஹாஜிகள் அரஃபாவில் கூடுவதை அறிந்திருந்தும் மறுநாள் அரஃபா நோன்பை நோற்பவர்கள், சத்தியத்தை அறிந்திருந்தும் மறுப்பவர்கள் என்று அறிவிலித்தனமாக பேசுவதில்லை.

3 - தவ்ஹீத்வாதிகளில் ஒரு கூட்டம், ஸுன்னா மற்றும் இஜ்மாவிற்கு மாற்றமாக ஹிஜ்ரா குரூப் என்ற பெயரில் ஒவ்வொரு வருடமும் ஃபித்னாவை ஆரம்பித்து வைப்பார்கள்.

4 - தவ்ஹீத்வாதிகளில் மற்றொரு கூட்டம் சர்வதேச பிறை என்ற பெயரில், சவூதி பிறையை பின்பற்றி, இஸ்லாத்தின் ஆறாவது தூணையும், ஃபர்ளான கடமையையும் நிறைவேற்றி விட்டோம் என்ற பூரிப்புடன், சவூதி பிறை அன்று நம் பகுதியில் நோன்பு வைப்பது ஹராம், நன்மை கிடைக்காது என்று ஃபித்னாவை பரப்புவார்கள்.

5 - ஊர் பிறையை பின்பற்றும் ஒரு கூட்டம், நம் பகுதியில் பார்த்த பிறை சாட்சியத்தை காஜி & பிறை கமிட்டி எப்படி மறுக்கலாம்? என்று பிரச்சனையை கிளப்பி, நாங்கள் பெருநாளை தனியாக தொழுகின்றோம் என்று தனித்து செயல்படுவர்.

6 - பிறையை தீர்மானிப்பத்தில் அதிகாரத்தில் உள்ளவர்கள் தவறிழைத்தால், அதனால் இபாதத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை நாம் முதலில் அறிந்திட வேண்டும்.

பிறை, நோன்பு மற்றும் பெருநாளை தீர்மானிப்பதற்கு அடிப்படையோ அல்லது நிபந்தனையோ அல்ல. அது வெறும் காரணி மட்டுமே. அதில் ஏற்படும் பிழையினால், இபாதத்திற்கு எந்த பாதிப்பும் வராது.

7 - நபி ஸல் அவர்கள் ரமளானின் 30 நோன்பை வைத்திருந்த நிலையில் பிறை கூட்டத்தினர் பகலில் வந்து, நேற்று பிறையை பார்த்து விட்டோம் என்ற சாட்சியத்தை ஏற்று, நபி ஸல் அவர்கள் நோன்பை விட மக்களுக்கு  கட்டளையிட்டார்கள். மறுநாள் ஷவ்வால் பிறை 2 ல் தான் ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகையை நபி ஸல் அவர்கள்  நிறைவேற்றினார்கள்.

பிறையை தீர்மானிப்பதில் தவறு ஏற்படவே கூடாது என்று மார்க்கத்தில் இருந்தால், அல்லாஹ் நபி ஸல் அவர்களுக்கு வணிகக் கூட்டம் பிறை பார்த்த அன்றே, அதனை வஹீ மூலம் தெரியப்படுத்தி இருப்பான். அவ்வாறு நபி ஸல் அவர்களுக்கு எந்த வஹீயும் வரவில்லை.

8 - அரஃபா நாளில், அரஃபாவில் தங்கவில்லை என்றால், ஹஜ் கடமையே நிறைவேறாது என்று மார்க்கம் கூறுகிறது.

அத்தகைய அரஃபா நாளை தீர்மானிப்பதில், மக்கள் தவறிழைத்து அரஃபா அல்லாத வேறு நாளில் அரஃபா என்று கருதி, அரஃபாவில் தங்கினாலும், அவர்களின் ஹஜ் நிறைவேறி விடும். ஹஜ்ஜிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அறிஞர்கள் தீர்ப்பளித்துள்ளார்கள்.

மார்க்கத்தில் விசாலத்தன்மை அளிக்கப்பட்ட பிறை விஷயத்தில், கடும்போக்கையும், ஃபித்னாவையும் ஏற்படுத்தி மக்களை சங்கடப்படுத்தாதீர்கள்.

அன்புடன்
ஹசன் அலீ உமரி

أحدث أقدم